Pages

Thursday, May 19, 2011

கலைஞரின் தோல்வி-சில அடிப்படைக் காரணங்கள்



தமிழகத்தேர்தல் முடிவுகளைப் பத்திரிகைகளும் இணையத்துப் பதிவுலகமும் பிய்த்துப்போட்டு ஆய்ந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் திமுகவுக்கு மட்டுமல்ல; அதிமுகவுக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளே இவை. தமிழக வாக்காளன் இப்படித்தான் ஓட்டளிக்கப்போகிறான் என்பது தெரிந்திருந்தால் ஜெயலலிதா பத்துப்பதினைந்து நாட்கள் அலைந்து வேனுக்குள் உட்கார்ந்து பிரச்சாரம் செய்த சிரமத்தைக்கூட மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை. இன்னொரு அறிக்கையை மட்டும் கொடுத்துவிட்டுப் பேசாமல் ஓட்டு எண்ணுவதற்கு முந்தின நாள் மட்டுமே கொடநாட்டை விட்டு வந்திருந்தாலே போதுமானது. அப்போதும் இதே முடிவுதான் வந்திருக்கும்.

எந்த விஷயமாயிருந்தாலும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து உட்கார்ந்து கட்டுரை எழுதும் கலைஞரே இதுவரையிலும் ‘மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்’ என்ற ஒற்றை வரியைத்தாண்டி ஒன்றையும் சொல்லவில்லை. திமுகவின் எந்தத் தலைவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. கருத்து எதுவும் சொல்வதற்கு இல்லையா, அதிர்ந்து போயிருக்கிறார்களா, அல்லது கையறு நிலையில் இருக்கிறார்களா என்பது எதுவும் புரியவில்லை.

ஆனால், தமிழ் இன உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் மிகவும் மகிழ்ந்து கருத்துச்சொல்லியிருக்கிறார்கள். ‘ஈழத்தில் தமிழ்இன அழிப்பிற்குக் காரணமாயிருந்த காங்கிரசும் அந்தக் கட்சிக்குத் துணைபோன களவாணிகளான திமுகவும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். திமுகவை மிரட்டி அறுபத்துமூன்று இடங்களை வாங்கிய காங்கிரஸ் வெறும் ஐந்து இடங்களில்தான் வெற்றிபெற்றிருக்கிறது’ என்று உளம் மகிழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரியானதாகத் தோன்றினாலும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கும்போது இது வேறுமாதிரியானதாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

உண்மையில் காங்கிரஸ் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் வெற்றிபெற்றிருக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம்.

இந்த உண்மை நிச்சயம் சுடும். சுடுகிறது.

கலைஞர் என்ற பெயர் மக்கள் மத்தியில் தனியானதொரு இடத்தைப் பெற்றிருந்தது. இளைஞர்களுக்குப் பெரிதாக இவர் மீது அபிமானம் இல்லையென்ற போதிலும் கோபமோ வெறுப்போ இருந்ததில்லை. அதுவும் நடுநிலையாளர்கள் எப்போதுமே அவர் மீது மிகுந்த நல்லெண்ணமும் மரியாதையும் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.எல்லாமே ஈழ விவகாரத்தில் மாறிப்போயின. இவர் பெரிதாக எதையோ செய்வார் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் மனதில் தீயைக்கொட்டிய சம்பவம் உண்ணாவிரதக் காட்சிதான். சிதம்பரத்திடமிருந்து போன் வந்துவிட்டது, போரை நிறுத்த ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று அறிவித்துவிட்டு இவர் உண்ணாவிரதத்தை முடித்ததும் அதற்கடுத்து நடந்த சம்பவங்களும் அவருடைய நற்பெயரை நடுநிலை மக்களிடமிருந்து துடைத்துப்போட்டுவிட்டன. இதன் தாக்கம் உடனடியாய் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓரளவுக்கு மட்டுமே தெரிந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸூக்கு வேறுமாதிரியான திட்டங்கள் இருந்திருக்கவேண்டும். தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் இல்லாமல் போகவேண்டும் என்பது ராகுலின் திட்டமாக இருக்கலாம். அதற்கு முதலில் திமுகவைக் காலி செய்தாக வேண்டும். அதிமுகவை எப்போது வேண்டுமானாலும் தாங்கள் நினைத்தபடி கபளீகரம் செய்யலாம், அல்லது சுருட்டிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். ஆனால் திமுக என்பது அப்படியல்ல; அவ்வளவு எளிதில் அந்த இயக்கத்தை சாய்த்துவிட முடியாது. அரசியல் ரீதியாக அவ்வளவு சுலபமான காரியமல்ல அது. அதனால் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ள திமுகவைப் பதம் பார்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதைத் தீர்மானித்திருக்கலாம். நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது இதை நோக்கித்தான் டெல்லியில் இரண்டொரு வருடங்களாகவே காய் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அதனால் கலைஞருக்கு ஏகப்பட்ட பொறிகள் வைக்கப்பட்டன. இந்திய அரசியல்வாதிகளில் கைதேர்ந்த ராஜதந்திரி என்று மதிக்கப்படும் கலைஞர் இந்தப் பொறிகளில் தாமாகவே சென்று விழுந்த காட்சிகள் நிறையக் காணக்கிடைக்கின்றன. ஈழ விவகாரத்திலேயே தமிழினத்தலைவரின் இமேஜ் காணாமல் போய்விட்டதையும் அவர் அந்தக் காலத்தில் மொழிக்காகவும் இனத்துக்காகவும் போராடிய, லட்சக்கணக்கான மக்களைத் தமது எழுத்தாலும் பேச்சாலும் போராட்டத்துக்குத் தூண்டித் தமது பின்னால் அணிவகுக்கச் செய்யும் தானைத்தலைவராக இல்லாமல் போய்விட்டதையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டுவிட்டார்கள். அதனுடைய முதல் அறிகுறிதான் அமைச்சர் பதவி வாங்க டெல்லி சென்றவரைக் காத்திருக்கச்செய்து அதையெல்லாம் ஆங்கில ஊடகங்களில் வரச்செய்து கடைசிவரை சந்திக்கமுடியாது என்று சொல்லி அவமானப்படுத்தி அனுப்பி வைத்தது.


அதற்கடுத்து ஈழ விவகாரங்களிலும் சரி, ஒவ்வொரு முறையும் தமிழகத்து மீனவர்களை இலங்கைக் கடற்படை கொடூரமான முறையில் சுட்டு வீழ்த்தும்போதும் சரி இவரது வேண்டுகோள்களை சல்லிக்காசுக்குக்கூட மதிக்காமலேயே நடந்துகொண்டது டில்லி. இவரும் எல்லாப் போர்க்குணங்களையும் இழந்த நிலையில் ஈனஸ்வரத்தில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதையும், இனிமேல் இப்படி ஆகாது என்று அவர்கள் சொல்வதை நம்பி அடுத்த வேலையைப் பார்ப்பதையும் மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தார்- மக்களின் நம்பிக்கையைத் தாம் இழந்துகொண்டே வருகிறோம் என்பதை அறியாமலேயே!

அடுத்து வந்தது மிகமிக முக்கியமான விஷயம். மரணப்படுக்கையிலே இருந்த பார்வதி அம்மாள் சிகிச்சை வேண்டி தமிழகம் வந்தார். உண்மையில் கலைஞர் தமக்குக் கிடைத்த பொன்னான ஒரு சந்தர்ப்பமாக இதனைக் கருதியிருக்கவேண்டும். தாம் தெரிந்தோ தெரியாமலோ ஈழ விவகாரத்தில் நடந்துகொண்ட விதத்திற்குப் பிராயச்சித்தமாக நினைத்துச் செயல்பட்டிருக்க வேண்டும். சுயநினைவுகூட இல்லாமல் சிகிச்சை வேண்டித் தமிழகம் வந்த அந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பிய விதம் இருக்கிறதே மனித நேயம் உள்ள அத்தனை மக்களையும் பதறித்துடிக்கவைத்த சம்பவம் அது. விடுதலைப்புலிகளை ஆதரிக்காதவர்கள் கூட அனுதாபப்பட்ட விவகாரம் அது. ‘மத்திய அரசின் இலங்கைப் பற்றிய வெளிவிவகாரக்கொள்கை எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். நான் இதனை மனித நேயத்துடன்தான் அணுகுவேன். அவர்கள் இங்கே தாராளமாக சிகிச்சைப் பெறலாம்’ என்று மட்டும் அறிவித்திருந்தாரானால் தமிழ் உணர்வாளர்களின் வெறுப்பெல்லாம்கூட வடிந்துவிட்டிருக்கும். ‘இலங்கையிலிருந்து திரும்பும் அமைதிப்படையை வரவேற்கப்போகமாட்டேன்’ என்று அறிவித்தாரே அன்றைக்கு ஏற்பட்ட மரியாதைக்கு சற்றும் குறையாத மரியாதையை இந்த விவகாரத்திலும் பெற்றிருக்கலாம். தவிர இலங்கை விவகாரத்தில் நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் வரமாட்டேன் என்ற செய்தியை மத்திய அரசுக்கு அறிவிக்கும் செயலாகவும் இதனைச் செய்திருக்கலாம். ஆனால் மத்திய அரசாங்கத்தின் எண்ணத்திற்கு மாறாக மனிதநேயச் செயலைக்கூடச் செய்யமாட்டேன் என்று உணர்த்துவதில்தான் அவர் கவனமாக இருந்தார். மாற்றி மாற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் உணர்வாளர்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் பெண்களிடமும் மாறாத கோபத்தையும் வெறுப்பையும் இவர்மீது ஏற்படுத்தவே செய்தது .

ஈழ விவகாரம் பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது என்பது பொய்த்துப்போனது. இளைஞர்கள் அதுவும் ஐடி இளைஞர்கள் இவர்மீது மாறாத கோபத்தில் இருந்திருக்கின்றனர் என்பதைத் தேர்தல் முடிவுகளும் இணையத்தில் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களும் மெய்ப்பிக்கின்றன. இதற்கு ஆதரவாக ஒரு செய்தியை இங்கே குறிப்பிடவேண்டும். பெங்களூர் நகரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் ஐடியில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்தி. தேர்தலுக்கு முந்தைய தினம் பெங்களூர் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம். என்ன காரணம்? எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு ஓட்டுப்போடுவதற்காகப் புறப்பட்டிருந்தனர். கிடைக்கிற பஸ்ஸைப்பிடித்துப் போய்விடலாம் என்று சில்க்போர்டு அருகே மாலை ஐந்து மணிக்கு நின்றசிலருக்கு ஒரு பேருந்திலும் இடம் கிடைக்காமல் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சாட்டிலைட் பஸ்நிலையம் வந்து அங்கிருந்து ஏதோ பஸ்ஸை எப்படியோ பிடித்து ஊர்களுக்குச் சென்று திமுக அணிக்கு எதிராக ஓட்டுப்போட்டு வந்தார்களாம். போய் வந்த ஒருவர் சொன்னார். “அங்கே வந்திருந்த பலபேருக்கு தங்கள் தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்ற விஷயம்கூடத்தெரியாது. அவர்கள் விசாரித்துத் தெரிந்துகொண்டதெல்லாம் இங்கே திமுக அணியை எதிர்த்து நிற்பது யார்? அதிமுகவா அதன் கூட்டணியா என்பது மட்டும்தான். இந்த மொத்தக்கூட்டமும் இவர்களுடைய கைக்காசைச் செலவழித்துப்போய் திமுகவுக்கு எதிராக ஓட்டுப்போட்டுவிட்டு வந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.” புதிய வாக்காளர்களின் மற்றும் இளைஞர்களின் ஓட்டு நூறு சதவிகிதமும் கலைஞருக்கு எதிராகத் திரும்பியது இப்படித்தான்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் சாதாரண விஷயமல்ல என்பதை இவர் ஏன் கவனிக்கதவறினார் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஒரு லட்சத்து எழுப்பத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்றே தெரியவில்லை’ என்ற ஒரு வார்த்தை மந்திரம்போல் தமக்கு எதிராகச் சுழலப்போகிறது என்பதை அறியாதவராகவே இவர் நடந்துகொண்டார். அத்தனைப் பெரிய ஊழல் – அது எப்படியெல்லாம் தம்மையும் தமது குடும்பத்தையும் பின்னி வளைக்கப்போகிறது என்பதையோ அதில் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நடவடிக்கையையோ எதையுமே மேற்கொள்ளாமல் தம்மை எப்படியும் சோனியா காந்தி பாதுகாத்துவிடுவார் என்று வெள்ளந்தியாக நம்பிக்கொண்டிருந்ததையும் எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை.

‘என்ன செய்தாலும் இந்த மனிதர் ஒன்றும் சொல்லாமல் தாங்கிக்கொள்கிறாரப்பா; மிச்சமிருக்கிற எல்லாவற்றையும் தூக்கி இவர் மேலேயே போடு. நாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்’ என்பதுபோன்ற எண்ணத்தை மேலேயிருப்பவர்களுக்குத் தருவதுபோலவே எல்லாவற்றுக்கும் பேசாமல் இருந்தார்.

இவரது தற்காப்பு ஆயுதங்கள் ஒன்றுமே இல்லாமல் போய்க்கொண்டேயிருந்தன. கூட்டணியின் பிரதானக் கட்சியான காங்கிரஸ் இவருக்கான எதிர்ப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தீவிரமாகத் தொடங்கியது. மாநிலத்தலைவர்கள் மாறிமாறி இவரைக் கேவலமாகப் பேச ஆரம்பித்தனர். அத்தனையையும் மறுவார்த்தைப் பேசாமல் பொறுத்துக்கொண்டார் இவர். யுவராஜ் போன்ற ‘மக்கள் தலைவர்களை’ உருவாக்கி வசை பாட வைத்தார்கள். ‘ம்மா இந்தப் பையன் என்னை கேலி செய்யறாம்மா’ என்று அம்மாவிடம் முறையிடும் சின்னக்குழந்தைகள்போல் சோனியா காந்தியிடமும் குலாம்நபி ஆசாத்திடமும் முறையிட்டாரே தவிர ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட இவர் காட்டவில்லை. அவர்களும் இவர் சொன்னாரே என்பதற்காக ஒரு வாரம் பேசாமல் இருக்கச்சொல்வார்கள். மறுவாரமே இன்னொருவர் வசையை ஆரம்பிப்பார். தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கின்றவரையிலும் திட்டமிட்டு காங்கிரஸ் இதனைச் செய்தது. ‘பொறுமையின் சிகரம் கலைஞர்தான்’ என்ற பட்டத்தை வாங்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ அத்தனை வசைகளையும் பேசாமலேயே தாங்கிக்கொண்டார். ‘கலைஞர் மிகவும் பலகீனப்பட்டுவிட்டார்’ என்ற கருத்து மக்களிடம் வருவதை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோர்ட்டின் பிடி இறுகிக்கொண்டே வர தேர்தல் நெருங்கியது. ராசா உள்ளே போய்விட தயாளு அம்மாள், கனிமொழி என்று கிடுக்கிப்பிடி போடப்பட்டது. அறிவாலயத்தின் ஒரு தளத்தில் சிபிஐ விசாரணை இன்னொரு தளத்தில் தேர்தல் பேச்சு வார்த்தைகள் என்று காங்கிரஸின் பலே வியூகங்கள் கச்சிதமாக வகுக்கப்பட்டன. அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்வதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளப்படுகிறார் கலைஞர்.

காங்கிரஸின் நீக்குப்போக்குகளைத் தெரிந்த அவர் சீட்டுகள் விஷயத்தில் எப்படிக்கேட்பார்கள் என்பதை ஊகித்திருக்க முடியாதா என்ன, அதனால் அவர்களை முந்திக்கொண்டு மற்ற கட்சிகளை அழைத்து அவர்களே கேட்காத எண்ணிக்கையில் சீட்டுகளை வழங்கி அவர்களைத் திக்குமுக்காட வைத்து அனுப்புகிறார். ‘இருப்பதே குறைச்சல்தான். அதனால் அதிகம் கேட்காதீர்கள்’ என்று காங்கிரஸுக்கு சேதி சொல்லலாம் என்று இவர் நினைக்க இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏடாகூடமான எண்ணிக்கை ஒன்றைச் சொல்கிறது.

முடியாது என்று சிலிர்த்து எழுகிறார் கலைஞர். மத்திய அரசின் மந்திரிப்பதவிகள் ராஜினாமா என்று அறிவிக்கிறார். அத்தனை மந்திரிகளும் ராஜினாமாக்கடிதங்களுடன் டெல்லி போகிறார்கள் என்று அறிவிக்கிறார். வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவு என்று அறிவிக்கிறார். திடுக்கிட்டுப்போன திமுக தொண்டன் ‘அப்பாடா இத்தனை வருடங்களுக்குப் பிறகு தலைவர் இப்போதாவது சரியான முடிவை எடுத்தாரே’ என்று துடித்து எழுகிறான். தலைவர்னா தலைவர்தான் என்று கொண்டாடுகிறான். தலைவர் இந்த முடிவில் உறுதியா இருக்கணும். நிச்சயமா காங்கிரஸையும் ஜெயலலிதாவையும் எப்பாடு பட்டாவது தோற்கடித்துக்காட்டுவோம் என்று கூடிக்கூடிப்பேசுகிறான். நீண்ட நாட்களுக்குப்பிறகு திமுக தொண்டன் உணர்ச்சிவசப்பட்ட தருணம் அது.

மறுநாளே எல்லாமே புஸ்வாணமாகிறது. நெஞ்சை நிமிர்த்தி டெல்லி சென்றவர்கள் அங்கே “ம்ம் என்ன இதெல்லாம்?”என்ற ஒரேயொரு கேள்வி கேட்கப்பட, சர்வநாடியும் ஒடுங்க, கூனிக்குறுகி சலாம்போட்டுவிட்டு ராஜினாமாக் கடிதத்தைப் பாக்கெட்டிலிருந்தே எடுக்காமல் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்துவிட்டுத் திரும்பியபோது கலைஞர் முதல்முறையாக நிராயுதப்பாணியாக மக்கள் முன்னால் பரிதாபத்துக்குரியவராக நின்றார்.

உண்மையில் பதின்மூன்றாம் தேதி வந்த தேர்தல் முடிவின் முதல் பாகத்தின் ரிசல்ட் அன்றைக்கே வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கலைஞருடைய வீரம் வெளிப்படும் என்று கொஞ்சநஞ்சம் நம்பிக்கொண்டிருந்தவனெல்லாம் சுருண்டு விழுந்தது அன்றைக்குத்தான்.

குடும்ப ஆதிக்கம், விலைவாசி உயர்வு, மின்வெட்டுப் பிரச்சினை போன்ற இவையெல்லாம் பொதுவாகவே கருணாநிதியைப் பிடிக்காத ஊடகங்களும் மற்றவர்களும் முன்வைக்கும் வாதங்களாகத்தான் தோன்றுகிறது. ஏனெனில் இவற்றில் எதுவுமே தமிழகத்தை மட்டும் சார்ந்த பிரச்சினை அல்ல; நேரு, இந்திரா காந்தி, பெரோஸ்காந்தி, சஞ்சய்காந்தி, ராஜிவ்காந்தி, சோனியாகாந்தி, மேனகா காந்தி, வருண்காந்தி, ராகுல்காந்தி அவ்வப்போது பிரியங்கா காந்தி என்று மொத்த குடும்பமும் அரசியலில் இருப்பதை மக்கள் அனுமதித்துத்தான் வந்திருக்கிறார்கள்., வடநாட்டிலே வழிவழியாகப் பல குடும்பங்கள், கர்நாடகத்திலே தேவே கௌடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி, குமாரசாமியின் மனைவி என்று நான்குபேர் பதவியில்தான் இருக்கிறார்கள். இதோ இப்போது நடந்த இடைத்தேர்தலில்கூட ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகனும் அவருடைய அம்மாவும் ஒருசேர தேர்தலில் நின்று இருவருமே பெருவாரியான முறையில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். எடியூரப்பா முதல்வர், அவரது மகன் எம்.பி, இன்னொரு பெண் அமைச்சர் முதல்வருக்கு நட்பு ரீதியிலே உறவு.....என்று நிறைய குடும்பங்கள் கோலோச்சிக்கொண்டுதான் இருக்கின்றன. இவை எதுவுமே ஊடகங்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தாலும் ஒரேயொரு முறை செய்தி வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் கருணாநிதி விஷயத்தில் மட்டும் நாள்தோறும் போட்டுப்போட்டு மக்களை மறந்துவிடாமல் செய்வதை வாழ்க்கை நியதியாகவே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

தமிழகத்தில் எந்த அளவு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமான மின்வெட்டு கர்நாடகத்திலும் ஏன் பெங்களூரிலும்கூட இருக்கிறது. தற்சமயம் நிலைமை பரவாயில்லை, சில மாதங்கள் முன்புவரை ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் ஐந்து மணிநேரம்கூட மின்வெட்டு இருக்கும். அல்லது, ஐந்துமணி நேரம்தான் மின்சாரமே இருக்கும். காரணம் புதிதுபுதிதாக அத்தனைத் தொழிற்சாலைகள், வீட்டு உபயோகத்திற்கென அத்தனை மின்சாதனங்கள், தவிர இந்தியாவெங்கும் குவிந்திருக்கும் கோடிக்கணக்கான செல்போன்கள். இத்தனை செல்போன்களின் செயல்பாடுகளுக்கும் சார்ஜ் செய்துகொள்வதற்கும் மின்சாரத்திற்கு எங்கிருந்து போவது? மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துக்கொண்டே போக உற்பத்தி அதே அளவில்தான் இருக்கிறது. மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது சர்வதேசப்பிரச்சினை. ஆனால் எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் வீராசாமியும் கருணாநிதியும் மட்டுமே பலிகடாவாக்கப்பட்டனர். இங்கே கர்நாடகத்தில் மின்பற்றாக்குறையைப்பற்றிய சிந்தனைகள் விவாதத்திற்கும் ஆய்வுக்கும் ஊடகங்களால் வைக்கப்படுகிறதே தவிர எடியூரப்பாவைக் குறிபார்த்து வீழ்த்தும் ஆயுதமாக அதனைப் பயன்படுத்தவில்லை.

அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சொத்து சேர்த்தனர் என்ற விவகாரமும் அப்படித்தான். இன்றைய இந்தியாவில் டாட்டா சுமோவும் இன்னோவாவும் தம்மைச் சுற்றிலும் எந்நேரமும் ஒரு பத்துப்பேர் இல்லாத கவுன்சிலர் யாராவது இருக்கிறார்களா என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். சில தலைநகரங்களைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மாத வருமானமே ஒரு கோடிக்குக் குறையாமல் வருகிறது என்று புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது.

ஆகவே கருணாநிதியைத் தோற்கடிக்க மக்களுக்கு ஏற்பட்ட கோபத்துக்கான உண்மைக்காரணத்தை விட்டு மக்களை வேறுபக்கம் நகர்த்தி மாற்றுக்காரணங்கள்தாம் இவரை வீழ்த்தியிருக்கிறது என்று வாதங்களை முன்வைக்கும் அரசியலும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. ஈழ விவகாரத்தில் இவர் நடந்துகொண்ட விதம், முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது இவர்காட்டிய அசிரத்தை, மீனவர்களை அடுத்தடுத்து சிங்கள ராணுவத்தினர் சுட்டுக்கொன்றபோது இவர் கடிதங்கள் மட்டும் எழுதிவிட்டுப்பேசாமல் இருந்தது, இறுதியாக பார்வதி அம்மாள் விஷயத்தில் இவர் அடித்த பல்டிகள் என இளைஞர்களின் கோபம் இவர்மீது கட்டுக்கடங்காமல் திரும்பியபோது இந்த வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் இவருக்கு எதிராகத் திரட்டிப்போடவைக்கவேண்டும் என்று இவரை எந்நாளுமே வெறுக்கும் கூட்டம் வகையாகத் திட்டமிட்டு காய் நகர்த்திய செயல்கள்தாம் இத்தகு முடிவுகளுக்குக் காரணமாயிருக்கின்றன.

ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள், ஒரு பத்து சதவிகித ஓட்டு இளைஞர்களுடையதே. இன்னொரு ஐந்து முதல் பத்து சதவிகித ஓட்டு நடுநிலையாளர்களுடையது. ஆனால் கலைஞருக்கு எதிராகச் செயல்பட்ட ஊடகங்களும் சரி; வேறு சக்திகளும் சரி இவரை எதிர்ப்பதற்குக் காரணமாக மறந்துகூட தமிழ், இன உணர்வு, ஈழம், பார்வதிஅம்மாள் என்பது சார்ந்த எதையும் முன்வைக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் மிக சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்சாரவெட்டு, குடும்ப ஆதிக்கம், திரைப்படத்துறையில் ஆதிக்கம், ஊழல், ரியல் எஸ்டேட், ஆடம்பர விழாக்கள் போன்ற பொதுவான காரணங்களையே முன்வைத்து அதற்கான பரப்புரைகளை மட்டுமே தொடர்ச்சியாக அதுவும் மிகவும் தொடர்ச்சியாக செய்துகொண்டுவந்து அவர்கள் விரும்பிய முடிவுகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். அடிப்படையில் ஆதார சுருதியாக ஓடிக்கொண்டிருந்த காரணங்களை வெளிப்படுத்தாமலேயே கலைஞரின் இந்தத் தோல்வி கொண்டாடப்படுமேயானால் இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எந்தக் காரணத்துக்காக ஒரு ஆட்சியைப் பழிவாங்கவேண்டுமென்று காத்திருந்து லீவு போட்டுவிட்டு கைக்காசைச் செலவழித்துப்போய் ஓட்டைப் போட்டுவிட்டு வந்தார்களோ அந்தக் காரணம் ஒன்றுமேயில்லாமல் போய்விடக்கூடிய அபாயம் இருக்கிறது.

சரி, பதிவின் ஆரம்பத்தில் இது முழுக்க முழுக்க காங்கிரஸின் கணக்கு என்று சொல்லியிருந்ததைப் பார்ப்போம். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவைப் பார்த்தபின்னர்தான் இனிமேல் இந்தக் கட்சியை அரசியல் ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பது இந்திரா காந்தி குழுவினருக்குப் புரிந்தது. இதை வேறு வழியில் செய்யவேண்டும் என்ற சிந்தனையில் பிறந்ததுதான் திமுகவிலிருந்து எம்ஜிஆரைப் பிரித்தெடுத்து வேறு கட்சி அதுவும் அதே சாயல்கொண்ட கட்சி ஆரம்பிக்கவைத்தது; பின்னர் அந்தக் கட்சியுடன் கூட்டுவைத்து திமுகவை பலவீனப்படுத்தியது காங்கிரஸ் இயக்கம். கலைஞரையும் அவர் குடும்பத்தையும் கேவலமான முறையில் பலவீனப்படுத்தினார்கள். பின்னர் எம்ஜிஆர் அரசியலில் மிக வலிமையானவராக ஆனபின்னர் அவரைக் கலவரப்படுத்த திரும்பவும் கலைஞருடன் கூட்டுவைத்தார்கள். பஞ்சாபில் பிந்தரன்வாலேயை உருவாக்கிவிட்டுப் பின்னர் அவரையே எதிர்த்ததும், இங்கே பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் வளர்த்துவிட்டுவிட்டு பின்னர் தாங்கள் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லையென்றதும் கடுமையாக எதிர்க்கத்துவங்கியதும் காங்கிரஸுக்கு வழக்கம்தான்.
மம்தா விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. காங்கிரஸிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட துண்டுதான் திரிணமூல் காங்கிரஸ். அரசியல் பௌதீக விதிகளின்படி காங்கிரஸுக்கு எதிரான மனநிலை இருக்கும்போது காங்கிரஸுக்கு எதிராகத் துவங்கப்பட்ட கட்சி நிச்சயம் மக்களின் ஆதரவைப் பரபரப்பாகப் பெறும். நன்றாக வளர்கிறவரைக்கும் வளர்த்துவிட்டுப் பிறகு நாம் மேலாதிக்கம் செலுத்தலாம். அங்கங்கே அவர்களுக்குத் தெரியாமலேயே நிறையப் பொறிகள் வைக்கப்பட்டிருக்கும். பணிய மறுக்கும்போது நிச்சயம் மாட்டிவிட்டுக் கதையை முடித்துவிடலாம்.

இத்தனையும் செய்துவிட்டு காங்கிரஸுக்கு அதிகபட்ச சீட்டுக்களை வாங்கியதே எப்படியும் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறாது கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் அதிமுகவிடம் பேரம்பேசி அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற கணிப்புதான். அதுவும் குறிப்பாக அவர்கள் இளைஞர்களின் ஓட்டுக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இளைஞர்கள் அதுவும் கம்ப்யூட்டர் படித்த இளைஞர்கள் அடிப்படையைப் பற்றியோ வேர்களைப்பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாத கூட்டம். ஐபிஎல் கிரிக்கெட்டிற்கும், பப் கலாச்சாரத்திற்கும், மால்களுக்கும், இன்னோவேட்டிவ் தியேட்டர்களுக்கும், நவீன மோட்டார் சைக்கிள்களுக்கும் அடுத்ததுதான் குடும்பம், சமூகம் உட்பட மற்ற எல்லாமே அவர்களுக்கு. அவர்கள் எப்படியும் ஓட்டுப்போடவும் வரப்போவதில்லை என்று காங்கிரஸும் நினைத்தது; திமுகவும் நினைத்தது. இரண்டு கட்சிகளும் கவிழ்ந்துபோக இந்த நினைப்பு ஒரு மிகப்பெரிய காரணம்.

இலவசம் என்ற பெயரில் கிராம மக்களுக்கும் ஏழைகளுக்கும் சென்ற அரசு செய்த உதவிகள் ஏராளம். அவர்களும் அத்தனைச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு திமுகவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டுவதற்கில்லை. உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டால் அடித்தட்டு மக்களிடையே ஒரு வருடத்திற்குப் பத்துக்கும் குறைவான குடும்பங்கள் மட்டுமே முன்னேறிவந்தன. அந்தப் பத்துக்குடும்பங்களில்தான் அன்றாட வாழ்வுமுறையில் மாறுதல் வரும். கலர் டிவி, கியாஸ்டவ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் அந்தப் பத்துக் குடும்பங்களுக்குத்தான் வரும். மிக மெதுவான ஆமை வேக முன்னேற்றம்தான் இவர்களுக்கு. இவர்களுடைய அடிப்படைத் தேவையை மீறி பணம் கிடைத்தபோதும் மது அருந்தியும் வேறு வழிகளிலும் செலவு செய்துவிட்டு ஒரே விதமான வாழ்க்கையைத்தான் வாழ்வார்களேயன்றி தங்கள் வாழ்க்கைநிலையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களின் அத்தனைக் குடும்பங்களிலும் அதிரடியாக உள்ளே புகுந்து மிகப்பெரிய மாறுதலைச் செய்தது திமுக அரசாங்கம்.

இலவச காங்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்ததுவும், விவசாயக்கடனை ரத்து செய்ததுவும், இலவச மனைப்பட்டா வழங்கியதுவும், 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கியதுவும், மகளிர் சுய உதவிக்குழுவை முறைப்படி பயன் பெறுமாறு செய்ததுவும் நிச்சயம் எந்த அரசாங்கமும் இதுவரையிலும் செய்யாத பணிகளே. இதற்கு நன்றி காட்டாத மக்களைப் பாராட்டுவதற்கில்லை. அவரென்ன சொந்தப் பணத்திலிருந்தா செய்தார்? மக்களின் வரிப்பணத்திலிருந்துதானே செய்தார்? என்ற கேள்வி
தார்மிக நியாயமற்றது. எல்லா அரசுகள் செயல்படுவதும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான். அதனை எப்படி முறைப்படுத்தி மக்களுக்கே பயன்பெறுமாறு செய்கிறார்கள் என்பதில்தான் தலைவர்களின் திறமை வெளிப்படுகிறது.

இந்த விஷயத்தில் மக்கள் மனநிலையோடு எப்படி ஒத்துப்போக முடியவில்லையோ அதே போல கருத்துக்கணிப்புகள் விஷயத்திலும் மக்கள் மனநிலையோடு ஒத்துப்போக முடியவில்லை. எல்லா மாநிலங்களின் கருத்துக்கணிப்புகளும் சரியாக வந்துகொண்டிருக்க எப்போதுமே தமிழகம் பற்றிய கருத்துக்கணிப்புகள் மட்டும் தவறாகவே வரும். அல்லது பத்துக் கணிப்புகள் வந்தால் ஏதோ ஒன்று அல்லது இரண்டு கணிப்புகள்தாம் சரியானதாக இருக்கும். இதற்கும் மக்களைத்தான் குறை சொல்லத்தோன்றுகிறது.

என்ன காரணம் தெரியுமா? கருத்துக்கணிப்புகள் எல்லாமே மற்றவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று அந்த பதில்களிலிருந்து அவன் மன நிலையைக் கணித்துப்போடப்படும் ஒரு சாதாரண கணக்கு. தான் யாருக்கு ஓட்டளிக்கப்போகிறோம் என்பதையோ யாருக்கு ஓட்டளித்தோம் என்பதையோ சரியாகச் சொன்னால்தானே சரியான முடிவுகள் வரும்? இவன் பாட்டுக்கு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசினால் முடிவுகள் எப்படி சரியாகவரும்? கேட்பவனிடம் கள்ளத்தனமாக பதில் சொல்லிவிட்டு அவனை வேடிக்கைப் பார்ப்பதில் நம்ம ஆள் மிகவும் எக்ஸ்பர்ட்! ஆக, கணிப்புகள் கதி அதோ கதிதான்.

மக்களை அவ்வளவு சுலபமாக எடை போட்டுவிட முடியாது. அவர்கள் ஒவ்வொன்றையும் கவனித்து சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை அளிப்பார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இது மற்ற மாநிலத்தவருக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர, தமிழர்களுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. அப்படிப்பார்த்தால் 67-ல் காமராஜரையும் கக்கனையும் மஜீத்தையும் இன்னபிற எளிமையான தலைவர்களையும் தோற்கடித்திருப்பார்களா என்ன?

எமர்ஜென்சி கொடுமை இந்தியா பூராவிலும் இருந்தது. தமிழகம் மிக அவலமான முறையில் கொடுமைகளை அனுபவித்தது. பீகார் போன்ற படிப்பறிவு அதிகம் இல்லாத மாநிலங்கள்கூட காங்கிரஸைத் தோற்கடித்தது. ஆனால் தமிழகம் மட்டும் காங்கிரஸையும் அதனை ஆதரித்த எம்ஜிஆரையும் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தது.

சாதாரண நடிகர்களெல்லாம் நிறைய தடவை வென்றிருக்கிறார்கள். சிவாஜி கணேசனை ஒரு மரியாதைக்காகவாவது வெற்றிபெற வைத்திருக்கிறார்களா தமிழக மக்கள்?

இப்போதுகூட பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களைத் தோற்கடித்திருக்கலாமா?

ஆக, தமிழ்நாட்டு வாக்காளனும் சிலபல கருத்துருவாக்கங்களில் தொடர்ந்தாற்போல் இழுத்துச் செல்லப்பட்டு வாக்களிப்பவனாகத்தான் இருக்கிறானே தவிர புத்திசாலித்தனமாக வாக்களிப்பதில் முன்நிற்கிறான் என்பது தவறான வாதம்.

ஜெயலலிதாவுக்காக இங்கே நாடாளும் அதிர்ஷ்டம் எந்நேரமும் கைகட்டிக் காத்துக்கொண்டிருக்கிறது. ராஜிவ்காந்தி மரணத்தில் பயனடைந்தவர் ஜெயலலிதா. மூப்பனார் கலைஞர் மீது கொண்ட கோபத்துக்கு இரண்டாவது முறையாகப் பயனடைந்தவர் ஜெயலலிதா. இதோ இப்போது இளைய சமுதாயமும் நடுநிலை வாக்காளர்களும் கருணாநிதி மீது கொண்ட கோபத்துக்குப் பயனடைந்தவரும் ஜெயலலிதாவேதான்.

கலைஞர் மீதான எதிர்மறை எண்ணங்கள் மக்களிடையே எப்படி, எங்கிருந்து எழுந்து எப்படியெல்லாம் உருமாறி கிளைபரப்பி மொத்த வெறுப்பாக ஒன்று திரண்டு இப்போது பதவியைவிட்டு இறக்கியிருக்கிறது என்பதைத்தான் இங்கே அலசியிருக்கிறோம். இந்த எதிர்ப்புணர்வை ஊதி மிகப்பெரிதாக ஆக்கி இதற்கு வேறொரு வடிவம் கொடுத்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருப்பதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கு உண்டு. ஆதாரமான காரணத்தை மக்களுக்குக் காட்டாமல் வேறொரு திசைக்கு மக்களை மிக எளிதாக ஏமாற்றி கூட்டிச்செல்லும் வித்தையை ஊடகங்கள் இன்றைக்கு மிக சாமர்த்தியமாகச் செய்துவருகின்றன. கலைஞருடைய தோல்விக்கும் ஜெயலலிதாவின் வெற்றிக்கும் சூத்திரதாரிகளாய் சோ மாதிரி நபர்களை முன்னிறுத்தும் கைங்கரியமும் இன்று நடைபெறுகிறது. சோ வேண்டுமானால் ஷோ காட்டலாமே தவிர உண்மைகள் வேறுமாதிரியானவை என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றக்கட்டடத்தை மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறார். கருணாநிதி கட்டினார் என்பதற்காக மாற்றவேண்டும் என்று முடிவெடுத்தால் என்னென்ன ஆகும் என்பதை ஊகிக்க முடியவில்லை. கருணாநிதியால் வழங்கப்பட்ட எல்லா டிவிக்களையும் திரும்பப் பெறுவாரா?

எல்லா கியாஸ்டவ்களும் திரும்பப் பெறப்படுமா? விவசாயிகளுக்கு ரத்து செய்யப்பட்ட கடன்களைத் திரும்ப கட்டச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஆபரேஷன் செய்துகொண்டவர்களுக்கு அந்தத் தொகையை செலுத்தச்சொல்லி பில் அனுப்பப்படுமா? ஒன்றும் புரியவில்லை.

தமிழ்நாட்டு அரசியல் என்பது தாய விளையாட்டு போல் ஆகிவிட்டது. தாயக்கட்டைகளை உருட்டிப்போடும்போது சமயங்களில் என்ன விழும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. இன்னதுதான் விழ வேண்டும் என்று திட்டமிட்டு உருட்டவும் முடியாது. ஒரு சில அதிர்ஷ்டக்காரர்களுக்கு எவ்வித முயற்சிகளும் இல்லாமலேயே அதிர்ஷ்ட எண்கள் அடிக்கடி விழுவதுண்டு.

அதிர்ஷ்டக்காரர்கள் இளைய சமுதாயத்தினரை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

26 comments:

  1. காங்கிரஸ் திட்டம் இது என்று டிசம்பரில் நான் பதிவு ஒன்று போட்டேன். அதன் லிங்க் இதோ. அதன் அடி நாதமும் இதே! Great men think alike :-)

    http://eliyavai.blogspot.com/2010/12/blog-post_18.html

    ReplyDelete
  2. என்ன ஒரு அலசல்? நன்று.

    ReplyDelete
  3. தங்கள் பதிவைப் பார்த்தேன், டிசம்பரிலேயே மிகச்சரியாக கணித்திருக்கிறீர்கள். தொடர்ந்து எப்படிக் காய் நகர்த்தப்போகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. வருகைக்கு நன்றி பந்து.

    ReplyDelete
  4. அருமையான ,நடுநிலையான அலசல்
    பாராட்டுகள்

    ReplyDelete
  5. தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சார்வாகன்.

    ReplyDelete
  6. ரொம்ப சரி. எல்லாமே உண்மைதான். வேறென்ன சொல்ல முடியும்?

    ReplyDelete
  7. நன்றி கொக்கரக்கோ.

    ReplyDelete
  8. மிக நல்ல அலசல். இளைய சமுதாயம் மற்றும் நடுநிலையாளர்களின் ஆவேச எதிர்ப்பினையும் அதற்கான பலன்களையும் மாற்றுச் சக்தியினர் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம்தான் கண்களுக்குத் தெரிகிறது. இதற்குத் தீர்வு எதுவும் உங்கள் பதிவில் தென்படவில்லையே, என்ன செய்யலாம்......?

    ReplyDelete
  9. வாருங்கள் மதிசீலன்.இது ஒரு அலசல் மட்டும்தான். தீர்வு சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியே கேட்டு நடைமுறைப்படுத்திவிடப் போகிறார்களா என்ன.....

    ReplyDelete
  10. //இப்போதுகூட பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களைத் தோற்கடித்திருக்கலாமா?//

    முழுவதும் படித்து விட்டு இறுதியாக கருத்து தெரிவிக்கலாமென நினைத்தேன்.இங்கே வந்தவுடன் நீங்கள் சறுக்கி விட்டீர்கள்.அன்பழகனை எந்த கணக்கில் நீங்கள் எடுக்குறீர்கள்?இடித்துரைக்கா நட்பு.ஒப்புக்கு சப்பாணி பதவி இது தவிர இவரிடம் என்ன தகுதியை நீங்கள் எதிர்பார்த்து அன்பழகனை தோற்கடிக்கலாமா என்கிறீர்கள்?

    முன்னிலைப் படுத்திய ஸ்டாலினே ஆடிக்காத்து அம்மியாய் பறக்கும் போது அன்பழகன் எந்த மூலைக்கு?

    இணையத்தில் பாராளுமன்ற தேர்தல் துவங்கியே தி.மு.க வுக்கு எதிரான அலையே வீசி வந்தது.திருமங்கலம் பார்முலா,பணத்துக்கு ஓட்டு,அழகிரியின் அடாவடிகளில் வென்று விடலாம் என்ற தவறான பாராளுமன்ற தேர்தல் கணக்குகளும்,இலவசங்களும்,சில நல்ல திட்டங்களும் மக்களை முக்கியமாக கிராமப்புறம் தி.மு.க பக்கமே நிற்க வைக்குமென மதிப்பீடு செய்திருந்தார்கள்.

    தேர்தல் முடிவு யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

    மற்றபடி மொத்த பதிவும் நீண்ட ஆய்வோடு சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  11. இன்னுமொன்று சொல்ல மறந்து விட்டேன்.தேர்தல் முடிவுகளுக்கும் முன்பு உங்கள் பதிவின் மதிப்பீடுகளையும்,பதிவர் கொக்கரக்கோ என்பவரின் கருத்துக்களையும் படித்தேன்.

    தேர்தல் முடிவுக்குப் பின் மீண்டுமொரு முறை பார்வையிட வேண்டும் என நினைத்த பதிவுகள் இரண்டும்.

    ReplyDelete
  12. Move away from Congress

    All above the age of 75 to be removed from Party Posts

    Except Stalin & Alagiri no other family member to be in party posts.

    Family members of District Leaders should not be given preference.

    MK family need to reduce the presence in film industry (Domination)

    Same old faces should not be given Tickets, Chances to be given for others in the party.

    Cast equations on the ground need to be considered. This will remove the intra-party back stabbing

    ReplyDelete
  13. திமுகவின் மீதும் கலைஞர் மீதும் இப்போதுள்ள சூழல்களின் அடிப்படையில் மட்டுமே கருத்துச்சொல்ல வேண்டும் என்றால் உங்களின் பார்வையும் கருத்தும் சரிதான். ஆனால் பழைய வரலாறுகளையும் கொஞ்சம் நினைத்துப்பார்க்கும்போது பேராசிரியர் அன்பழகனையெல்லாம் இப்போதுள்ள கட்சிப்பிரதிநிதிகளில் ஒருவராகத்தான் கருதவேண்டும் என்று முடிவெடுத்தீர்களென்றால் நான் இங்கே சொல்வதற்கு ஒன்றுமில்லை. இனத்திற்கும் தமிழுக்கும் இவர்களெல்லாம் ஒன்றுமே பங்களிக்கவில்லையென்ற கருத்து பரவலாக இருக்கலாம். எனக்கும் அப்படியிருக்கவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கலாகாது. தங்களின் கருத்துக்களுக்கு நன்றி ராஜநடராஜன்.

    ReplyDelete
  14. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களெல்லாம் உண்மையிலேயே மிக நல்ல யோசனைகள் பிரகாஷ், கலைஞர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்க்கவேண்டும். உங்கள் கருத்துக்களைப் பல்வேறு பதிவுகளிலும் பார்க்கிறேன். நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  15. மறுமொழி என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப்பதற்காக மீண்டும் வந்தேன்.

    //சுதந்திர இந்தியாவில் துவக்கத்தில் தமிழகத்தில் காங்கிரஸின் கை ஓங்கியிருந்திருந்தால் நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையே மேலோங்கி முந்தைய கேரளத்து நக்ஸலிசம் பின் கம்யூனிஸம் என தமிழகத்திலும் பரவியிருக்கும்.அதன் பாதையை கல்வியென்று மாற்றியதில் காமராஜ் காங்கிரஸ்க்கும் சமூகம்,மொழி உணர்வாக திசை மாற்றியதில் திராவிட கழகங்களுக்கும் பங்குண்டு என்று நாணயத்தின் மறுபக்கத்தையும் சொல்லி வைப்போம்.//

    அடைப்பானில் சொல்லியவை எனது பதிவின் சில வரிகள்.தற்கால சூழலுக்கான எனது விமர்சனமல்ல.இடித்துரைக்கா நட்பு என்ற ஒற்றை வரியில் க.அன்பழகனை சொல்லியுள்ளேன்.

    பதிவின் கருத்து அடிப்படையிலேயே மறு கருத்தும் சொல்ல இயலும்.தி.மு.கவின் நீண்ட வரலாற்றில் தமிழகத்தின் மாற்றங்கள் பற்றி சொல்லும் பொது வேண்டுமென்றால் க.அன்பழகனின் பங்கு என்ன என்று வேண்டுமானால் சிலாகிக்கலாம்.எனவே இந்தப் பதிவைப் பொறுத்த வரை க.அன்பழகன் தோல்வி உங்கள் பக்க சார்பையே வெளிப்படுத்துகிறது.

    ReplyDelete
  16. வாருங்கள் நடராஜன், மொழி உணர்வு, இன உணர்வு, சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு, தமிழ்ப்பண்பு, கலாச்சாரம் இவற்றைப் பேணிப் பாதுகாக்கவேண்டுமென்பதில் அக்கறை, தமிழரின் வரலாற்றை,தமிழரின் பெருமையை சமூகத்துக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்ற எண்ணம்- இவற்றுடன் தாம் சார்ந்துள்ள இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகளை, பகுத்தறிவு வாதத்தைப் பரப்புவதில் உள்ள முனைப்பு இவற்றுடன் பொதுவாழ்வில் நல்ல நெறிகளுடனும் தெளிந்த சிந்தனைகளுடனும் பண்புடனும் வளைய வருபவர் பேராசிரியர் அன்பழகன்.
    அவரைச் சந்தித்துப் பேசிய இரண்டொரு சமயங்களில் பக்குவத்துடனும் ஆழ்ந்த அறிவுடனும் அவர் எடுத்துவைத்த வாதங்கள் அவர்மீது கொண்டிருந்த நன்மதிப்பை மேலும் அதிகரிக்கவே செய்தன.
    நான் திமுக சார்பானவன் அல்ல. எனக்குப் பிடித்த நான் நேசிக்கும் தலைவர் யார் என்பது நண்பர் தமிழருவி மணியன் போன்றவர்களுக்குத் தெரியும்.
    ஆனால் எல்லாரையும் கட்சிக்கண்ணோட்டத்தில்தான் பார்க்கவேண்டும் என்ற நினைப்புக்கு மாறுபட்டவன் நான். இருக்கின்ற மூத்த தலைவர்களில் பேராசிரியர் போன்றவர்கள் மிகவும் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
    இப்போது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருசில தலைவர்களையும் நோகடித்துவிட்டோமானால் இன்னமும் பல தலைமுறைகளுக்கு நமக்கு இவர்களைப்போன்ற தலைவர்கள் கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

    ReplyDelete
  17. பேராசிரியர் அன்பழகன் குறித்து அமுதவன் சொல்லியிருக்கும் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். உங்களுக்குப் பிடித்த தலைவர் காமராஜர் என்று சொல்லிவிட்டுப்போகவேண்டியதுதானே சார்,அதென்ன தமிழருவி மணியன் போன்றவர்களுக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதில் சூசகமாக எதுவும் இருக்கிறதா என்ன?

    ReplyDelete
  18. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மதிசீலன், பொதுவாக எனக்கு எப்போது காமராஜரைப்பற்றி நினைத்தாலும் கூடவே தமிழருவி மணியனையும் சேர்த்துத்தான் நினைக்கத்தோன்றும். அப்படியொரு சிந்தனைத்தொடராகத்தான் அந்த வரிகள் வந்திருக்கின்றன.

    ReplyDelete
  19. 'Absolute power corrupts absolutely’ என்கிற உண்மைக்கு இன்றைய உதாரணம் கலைஞர்.ஜெ வைப் போல வெளியே தெரியாத (காட்டாத?) ஆணவ, அலட்சியப் போக்கின் விளைவு இந்தத் தேர்தல் முடிவு.உங்கள் ஆய்வு எல்லாம் சரிதான். ஆனால், அதிமுகவை உருவாக்கியவர்கள், அதை எப்படியும் கைக்குள் போட்டுக்கொண்டு விடலாம் என்ற நோக்கத்துடன் இருந்த காலம் எம்ஜிஆர் வாழ்ந்த போது சாத்தியப்பட்டிருக்கலாம் (உ-ம்: பாரத ரத்னா). ஜெ இந்த விஷயத்தில் எல்லாரும் (பாரதப் பிரதமர் உள்பட) பயப்படும் டெரரிஸ்ட்! வாஜ்பேயியைக் கேளுங்கள்.

    ReplyDelete
  20. வாருங்கள் ஆர்எஸ்கே, மேலோட்டமாகப் பார்க்கும்போது உங்கள் கருத்து சரிதான்.எல்லாரும் 'வியக்கும்' ஜெயலலிதாவின் 'தைரியம்' பற்றி தனியானதொரு கட்டுரை எழுத எனக்கும் விருப்பம்தான். இப்போதல்ல பிறிதொரு சமயம் எழுதலாம்.

    ReplyDelete
  21. Fantastic analysis. Only today I came to your site. Great.

    ReplyDelete
  22. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி தமிழ், இனி அடிக்கடி வாருங்கள்.

    ReplyDelete
  23. இந்த அலசல் முழுமையானதல்ல. இதில் ஐடி இளைஞர்களின் பங்கு பற்றி குறிபிட்டுள்ளீர்கள் என்னைப் பொறுத்தவரை அவர்களது பங்களிப்பு என்பது கருத்தில் கொள்ளத்தக்கதல்ல.தமிழக மக்கள் மனதில் சமூக அக்கறை இன்னும் வளரவில்லை என்பதும், ஊழல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்பதையும்,ஈழத்தமிழர் பிரச்னைக்கும் ஓட்டெடுப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதையும் 2006லும் 2011லும் திமுகவின் ஒட்டு வங்கியின் இருப்பு மாறாது இருப்பதைக் கொண்டு அறியலாம்.

    இதில் 10 சதவீத ஓட்டுக்கள் கொண்ட தேமுதிகதான் இந்த தேர்தலின் கதாநாயகன்.அதைப் பற்றி நீங்கள் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை.மொத்தத்தில் தமிழன் எண்ணிக்கைக்குதான் பயன்படுகிறான். இதுகளை எவன் தெளிவாக கூட்டி கணக்கிட்டு கூட்டணி அமைக்கிறானோ அவன் ஜெயிக்கிறான். மற்றபடி இவனுக்காக ரொம்ப யோசிக்கத் தேவையில்லை.

    ReplyDelete
  24. தங்கள் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். நன்றி சந்துரு.

    ReplyDelete