Pages

Monday, January 14, 2013

லியோனியின் பட்டிமன்றமும் பாரதிதாசனும்


திருவிழா நாட்களில் எல்லா முக்கிய சேனல்களிலும் பட்டிமன்றம் என்பது தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகிவிட்டது. ஆரம்பித்த புதிதில் சன் டிவி ஆரம்பித்துவைத்த இந்தக் கலாச்சாரம் இப்போது எல்லா சேனல்களையும் பீடித்துவிட்ட நோயாகவே மாறிவிட்டது. எல்லா முக்கிய சேனல்களும் வானொலியின் நிலைய வித்துவான்கள்போல் பட்டிமன்றத்துக்கென்று சில நிரந்தர பேச்சாளர்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சன் டிவி சாலமன் பாப்பையாவை நிரந்தர வித்துவானாக வைத்துக்கொண்டிருப்பது போன்றே கலைஞர் டிவி திண்டுக்கல் லியோனியை நிரந்தர பட்டிமன்ற வித்துவானாக வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் தலைமையில்  சிலரைத் தவிர மற்ற பேச்சாளர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பார்கள். இந்தப் பொங்கலுக்கு அம்மாதிரி மாறிவந்த பேச்சாளர்களில் ஒருவர் அன்பு. இவர் பேராசிரியர் என்றும் ஏதோ கல்லூரிக்கு முதல்வர் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அவர் பேசும்போது பாரதிதாசனைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் ஒரு அற்புதமான தகவலைச் சொன்னார். அதாவது அண்ணா முதல்வராக இருந்தபோது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு ஒரு விழா எடுத்து பொற்கிழி வழங்கியதாகவும் அதனைப் பெறப்போகும் கவிஞரை அண்ணா “நான் என்னதான் நாட்டுக்கு முதல்வராக இருந்தாலும் நீங்கள் ஒரு பெரிய கவி. நான் கொடுக்கும் இந்தப் பொற்கிழியை வாங்குவதற்கு உங்கள் கரம் தாழ்ந்துபோகக்கூடாது. என்னுடைய கரம் கீழேபோகலாம். அதனால் இதனை நான் என் கையில் வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் கரத்தை மேல்நோக்கிக் கொண்டுவந்து அதனை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.”- என்பதாக ஒரு அரும்பெரும் தகவலைச் சொன்னார்.

கேட்டதும் தலை கிறுகிறுத்துப் போய்விட்டது. இந்தச் சம்பவம் எப்போது நடந்தது, அண்ணா எப்போது இப்படி சொன்னார், பாரதிதாசன் அதுபோன்று நடந்துகொண்டாரா……………. இப்படியொரு சம்பவம் எங்கு நடந்தது ஒன்றுமே புரியவில்லை.

காரணம் அண்ணா வெற்றிபெற்று முதல்வராக வந்தது 1967-ல். பாரதிதாசன் இறந்தது
1964-ல்.  


இன்னமும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தோராம் தேதி. அப்படியிருக்க இப்படியொரு சம்பவம் எப்படி நடந்தது என்பதே புரியவில்லை. ஒருவேளை திராவிட முன்னேற்ற கழகம் பாரதிதாசனை மட்டுமே தமிழின் ஆகச்சிறந்த ஒரே கவிஞராக உயர்த்திப் பிடித்ததனால் அண்ணா முதல்வராக வந்ததும் ‘நம்மை உயர்த்திப் பிடிச்ச ஆட்கள் ஆட்சிக்கு வந்துட்டாங்க. நாம இனிமேலும் மண்ணுக்குள்ளேயே புதைஞ்சி கிடக்கிறது நல்லதுக்கில்லை. போய் அவங்க கொடுக்கற மரியாதையை எல்லாம் ஏத்துக்கலாம்’ என்று நினைத்து எழுந்து வந்துவிட்டாரா என்பதும் தெரியவில்லை.

எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. அதுவும் பேசியது யாரோ ஒரு பொதுஜனம் என்றாலும் பரவாயில்லை.  கல்லூரியின் பேராசிரியர் தற்சமயம் முதல்வராகவும் பொறுப்பேற்றிருப்பவர் இப்படித் தப்பும் தவறுமாக ஒரு தகவலை அதுவும் நிறையப்பேர் பார்க்கும் ஒரு பண்டிகை நாளில் சொல்கிறார் என்றால் அதை எந்த வகையில் சேர்ப்பது என்பதே தெரியவில்லை. அத்தனையும் தவறு; பொய்யாய்ப் புனையப்பட்ட கதை என்பது அவருக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. இதனை அவர் எங்கே படித்தார் அல்லது யார் அவரிடம் சொன்னார்கள் அப்படியே யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் அதனை உலகம் முழுதும் ஒளிபரப்பாகும் ஒரு பெரிய டிவி சேனலில் சொல்லும்முன்பு சரிபார்த்துக்கொண்டாரா என்பதும் தெரியவில்லை. இப்படியொரு தவறான தகவலை அவர் சொல்லியபோது லியோனி அவரைத் திருத்தவில்லை. ஒருவேளை அடுத்த பேச்சாளரை அழைப்பதற்கு முன்பு இதுபற்றிய சரியான தகவலை லியோனி சொன்னாரா என்பதும் தெரியவில்லை(ஏனெனில் அதன் பிறகு அந்தச் சேனலைத் தொடரும் வாய்ப்பு இருக்கவில்லை).

சங்கடம் என்னவென்றால் தமிழ்நாட்டின் ஒரு கல்லூரி முதல்வர் நடக்காத ஒன்றை நடந்ததுபோலும் அதுவும் மிகவும் பெருமைக்குரிய சம்பவம் என்பதுபோலும் ஒரு பிரபல சேனலில் சொல்லுகின்றார். பல தகவல்கள் அறிந்த லியோனி போன்றவர்கள் அதனை மறுத்துத் திருத்தாமல் இருக்கிறார்கள்.

அதாவது பரவாயில்லை. அந்தப் பேச்சின் தொகுப்பு ஒன்றும் நேரலையல்ல. கலைஞர் டிவியின் ஆசிரியர் குழுவால் பார்க்கப்பட்டு செப்பனிடப்பட்டு எடிட் பண்ணப்பட்டுத்தான் ஒளிபரப்பாகிறது. அங்கிருந்த ஒருத்தருக்குக்கூடவா இத்தனைப் பெரிய தவறு தெரியவில்லை? சாதாரண அடிப்படைத் தகவல்கள்கூடத் தெரியாதவர்கள்தாம் இம்மாதிரி பட்டிமன்றப் பேச்சுக்கள் போன்றவற்றை எடிட் செய்யும் பொறுப்பில் உட்காருகிறார்களா? சில பகுதிகளை டிலீட் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றைத்தவிர அவர்களுக்கு வேறு எந்தத் தகவல்களும் தெரியாதா? அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றபோது பாரதிதாசன் உயிருடன் இருக்கவில்லை என்ற தகவல்கூடவா யாருக்கும் தெரியவில்லை? யார் என்ன சொன்னாலும் அதனைக் கொஞ்சம்கூடச் சரிபார்க்காமல் அப்படியே ஒளிபரப்பிவிடுவார்களா? பத்திரிகைகள் மற்றும் இம்மாதிரி ஊடகங்களில் இருப்போர் பொதுமக்களைவிடவும் மேலதிகத் தகவல்கள் தெரிந்து இருக்கும் காலமெல்லாம் மெதுவே 
மறைந்து வருகிறதா? வருத்தமாக இருக்கிறது.

இந்தப் பேராசிரியர்களெல்லாம் சங்க இலக்கியத்திலிருந்து நேரே அப்படியே சொய்ங் என்று இறங்கிவந்து அவர்கள் மையம் கொண்டு நிற்கும் இடமே பாரதிதாசன்தான். அப்படியே தமிழ் தமிழ் உணர்வு என்று பேசுபவர்க்கெல்லாம் ஆதர்சம் அறிஞர் அண்ணா. இவர்கள் இருவரையும் இணைத்து ஏதாவது சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் இந்தப் பேராசிரியர். யாரோ சொன்ன இந்த டுபாக்கூர் கதையை அவிழ்த்து விட்டுவிட்டார்.
உண்மையில் இப்படியொரு சம்பவம் பாரதியார் வாழ்வில் நடந்ததாகத்தான் சொல்வார்கள். அதுவும் அன்றைய ராமநாதபுரம் சேதுபதி பாரதிக்கு ஏதோ பொற்கிழி கொடுக்கப்போக “நீர் கொடுக்க நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய கை தாழாது. நீர் உம் கையில் வைத்துக்கொள்ளும். நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று பாரதி சொல்லி எடுத்துக்கொண்டதாகச் சொல்லப்படுவதுண்டு. இது ஒரு சம்பவம்.

பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி கொடுத்த சம்பவமும் நடைபெற்றது.
பாரதிதாசன் பிறந்த நாளுக்காக திமுகழகம் சார்பில் நிதி திரட்டப்பட்டு அதனை ஒரு விழாவில் அண்ணா அவரிடம் வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட பாரதிதாசன் அண்ணாவைப்பற்றியே மிக மோசமாக அந்த விழாவில் பேசப்போக அது அப்போது 


மிகப்பெரிய பரபரப்பாகிவிட்டது. திமுகவினரெல்லாம் பாரதிதாசன்மீது ஏகத்துக்கும் கடுப்பெய்திவிட அப்போது திமுகவிலிருந்த கண்ணதாசன் பாரதிதாசன் மீது செம கோபம் கொண்டு ‘குரல்கெட்ட குயிலே கேள்!’ என்ற தலைப்பில் பாரதிதாசனைக் கடுமையாகத் தாக்கி தென்றல் பத்திரிகையில் கவிதை எழுதப்போக அது இன்னமும் பரபரப்பாகிவிட்டது. (இந்தக் கவிதை கண்ணதாசனின் கவிதைத் தொகுதியில் இன்றும் காணக்கிடைக்கிறது) அதன்பிறகு அண்ணா தலையிட்டு பாரதிதாசன் மீது யாரும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று தடுக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இந்த விஷயங்களெல்லாம் அந்தப் பேராசிரியருக்குத் தெரியாது போலும். ஏதோ சொல்லவேண்டுமே என்பதற்காக எதையோ புனைகதையாகப் புனைந்து சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


இனிமேலாவது இதுபோன்ற பட்டிமன்றங்களில் பேச வருகின்றவர்கள் சரியான தகவல்களுடனும் பொறுப்புணர்வுடனும் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.


28 comments:

  1. leoni is a half baked intellectual who is hired
    by kalaignar tv to talk of ill of the present
    regime headed by JAYALAITHA.

    ReplyDelete
  2. இந்த சம்பவம் உண்மையில் நடந்தது தான். ஆனால் அண்ணா அப்போது முதலமைச்சர் கிடையாது. ரூ 25,000 நிதி திரட்டி பாவேந்தருக்கு விழா எடுத்து வழங்கினர். அந்த விழாவில் நிகழ்ந்த சம்பவம் தான் இது. லியோனி கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  3. இப்படித்தான் வித்துவான் லட்சுமணன் (?) தான் ஓட்டு போடும் வயதுக்கு வந்து முதலில் ஓட்டு போட்டது பேரறிஞர் அண்ணா முதல்வராக வர ஏதுவாகத்தான் எனக் கூறினார், இது விகடனில் வந்தது. அப்போது நான் விகடனுக்கு அனுப்பிய கடிதத்தில் கீழ்கண்ட பாயிண்டுகளை குறிப்பிட்டேன்.
    1. அண்ணா 1967-ல் முதல்வரானார், ஆனால் எம்.எல்.சியாக, எம்.எல்.ஏ. ஆக இல்லை.
    2. 1967-ல் தான் லட்சுமணன் 21 வயது பூர்த்தி செய்தாரா?

    விகடன் அக்கடிததைப் பிரசுரிக்கவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராக்வன்

    ReplyDelete
  4. கொடுப்பது வாங்குவது பற்றி ஏற்கனேவே இப்படி கதை உண்டு.அதை சூழ்நிலைக்கு ஏற்றார் போல் ரசிகர்களை கவர்வதற்காக ஆட்களை மாற்றிக் கொள்கிறார்கள்
    இது போன்று சொல்லப் படுபவை பெரும்பாலும் புனையப் பட்டவையே!

    ReplyDelete
  5. பெரியோர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களும், குட்டிக் கதைகளும் இவர்களது வண்டிக்கு அச்சாணியாகிறது. பக்கங்களை நிரப்ப யாரோ எழுதியதையும் செவிவழிச் செய்திகளையும் சற்றேனும் சரிபார்த்து பின் சொல்வது அவசியமே. இருட்டடிப்பு போல் திரித்தலும் தவறுதானே.சுட்டிய விதம் நன்று.

    ReplyDelete
  6. வாருங்கள் அனானிமஸ் இதுபோல் ஒவ்வொருவரும் ஒருத்தரைத் தங்களுக்கு சாதகமாகப் பேச தங்கள் சேனல்களில் வைத்திருக்கிறார்கள். ஜெயா டிவியைப் பாருங்கள் மொத்த செய்தியுமே வருடத்தின் அத்தனை நாட்களும் கலைஞருக்கு எதிரானதாகத்தானே இருக்கிறது. நான் அதனைக் குறிப்பிட வரவில்லை.சொல்லுகின்ற வரலாற்றுச் சம்பவங்கள் தவறானவையாக இருக்கக்கூடாது என்பதைத்தான் சொல்லியிருக்கின்றேன்.

    ReplyDelete
  7. வாருங்கள் விஜயகோபால் நீங்கள் நான் எழுதிய கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்காமல் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு விழா அண்ணா தலைமையில் நடந்ததையும் அதில் அண்ணாவைப் பற்றி பாரதிதாசன் என்ன பேசினார் என்பதையும் அதற்கு ஏற்பட்ட கொந்தளிப்பையும் அதற்கு மறுமொழியாக அப்போது திமுகவில் இருந்த கண்ணதாசன் பாரதிதாசனை எதிர்த்து கவிதை எழுதினார் என்பதையும் இந்தப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.
    தவிர லியோனி ஒன்றும் அதனை மிகைப்படுத்திச் சொல்லவில்லை.இந்த சம்பவத்தையே அன்பு என்ற பேராசிரியர்தான் சொன்னார். அதனை லியோனி திருத்தவில்லை என்பதைத்தான் நான் இங்கே சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  8. வாருங்கள் டோண்டு நீங்கள் அந்தக் காலத்திலிருந்தே சண்டைக்காரர்தான் போலும். ஆனால் தவறைத் திருத்தும் சண்டைக்காரராக இருந்திருக்கிறீர்கள். இப்போதும் அந்தவகை சண்டைக்காரர்தானா என்பதுதான் விவாதத்துக்குரியது.

    ReplyDelete
  9. வாருங்கள் துளசி கோபால், நன்றி.

    ReplyDelete
  10. புனையப்படுவது தவறல்ல முரளிதரன். கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா? ரோஜா பாடலைக் கேட்டுவிட்டு ஜவஹர்லால் நேரு ரகுமான் முதுகில் தட்டிப் பாராட்டினார் என்றெல்லாம் பேசினால் எப்படி?

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  12. வர வர லியோனி வாய்க்கு வந்ததை எல்லாம் உளற ஆரம்பித்து விட்டார்

    ReplyDelete
  13. அமுதவன் பேராசிரியர் அன்பு பேசியதாக எழுதியதில், " அண்ணா முதல்வராக இருந்த போது" என்ற சொற்களை நீக்கிவிட்டால், மற்றவை சரியாகின்றன. அஃதாவது அண்ணாத்துரை கனகசுப்புரத்தினத்திற்கு ஒரு மேடையில் பொற்கிழி வழங்கியது. எனவே திருவல்லிக்கேணி கோபாலசாமி சுவாமி சொல்லியது சரியாகத்தான் வருகிறது.

    பொதுமேடையில் கவிஞருக்கு அண்ணாத்துரை பொற்கிழி வழங்கியது உண்மையென்று அமுதவனே சொல்கிறார்.. அஃதைப்பற்றி அன்பு எங்கேயோ படித்திருக்கிறார். ஆனால் தெளிவாக நினைவுக்குக் கொண்டுவரவில்லை. சொல்லியிருக்கிறார். அவர் செய்த ஒரே பிழை, அண்ணா முதல்வராகவிருந்த போது என்பது மட்டுமே.

    நீங்கள் ஒரேயடியாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள். லியோனி அச்சம்பவத்தைப் பற்றி தெரிந்திருக்கவேண்டுமென்ற கட்டாயாமா? அவரென்ன அஸ்டாவதானியா?

    இரண்டாவது, பாரதியாரைப் பற்றிய சம்பவத்தைச் "சொல்லப்படுவதுண்"டு என்று எழுதியதால் நீங்கள் பிழைத்தீர்கள். இல்லாவிட்டால் உங்களுக்கெதிராக வேறோர் அமுதவன் பதில் போட்டு உணர்ச்சிவசப்பட்டு விடுவார். பாரதியார் கண்டிப்பாக ஒரு மன்னரிடம் போய் தன் தலைக்கனத்தைக் காட்டியிருக்க மாட்டார் என்பது அவர் வரலாற்றைப்படித்தோருக்குப் புரியும்.

    பட்டிமண்டபம் பண்டிகைக்கானது; மக்கள் ஆரவாரத்துடன் இரசித்து பொழுதைப்போக்க. மேடையில் பேசுவோர் நினைத்துநினைத்து பேசமுடியா. அவர்கள் பேச்சில் உட்பொருளும், சன்மார்க்கமும்தான் பார்க்கப்படவேண்டியவை.

    அதன்படி, பேராசிரியரின் பேச்சைக்கேட்டவர் தம்வீட்டுக்குக் கொண்டுசெல்வது எது?

    இது:

    தமிழர்கள் தமிழன்னைக்கு அணிசெய்தோரை தம்மைவிட உயர்தோராக வைப்பர் என்பதுவே.

    ReplyDelete
  14. பல பட்டிமன்றங்கள் இப்படித்தான் இருக்கின்றன. எதை வேண்டுமானாலும் பேசி கைதட்டல்கள் பெற யோசிக்கிறார்கள்.

    ReplyDelete
  15. வாருங்கள் cinema news இங்கே லியோனி தவறாகப் பேசினார் என்றோ உளறினார் என்றோ எதுவுமே சொல்லவில்லை.ஒரு தவறான செய்தியை அவர் திருத்தியிருக்கவேண்டாமா என்பது மட்டுமே இங்கே கேட்கப்பட்ட கேள்வி.

    ReplyDelete
  16. வாருங்கள் பெயரிலி ரொம்ப நன்றாகத்தான் அந்தப் பேராசிரியருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். ஒருவர் அதுவும் ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவர் உலகம் முழுதும் ஒளிபரப்பாகின்ற ஒரு தொலைக்காட்சியின் வாயிலாகப் பேச வரும்போது எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் தப்பும் தவறுமாகப் பேசலாம் அது வெறும் பண்டிகைக்கால களியாட்டம்தான் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கச் சொல்கிறீர்கள்.
    அதனைக் குறிப்பிட்டு எழுதினால் உணர்ச்சிவசப்பட்டு எழுதியதாகச் சொல்கிறீர்கள். இதில் உணர்ச்சிவசப்பட என்ன இருக்கிறது?
    அண்ணா முதல்வராக வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பேயே நம் சம காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் கவிஞர் மரணமடைந்துவிட்டார் என்ற செய்திகூட ஒரு பேராசிரியரை எட்டவில்லையா என்று கேட்பதில் என்ன உணர்ச்சிவசப்படல் இருக்கிறது?
    ஒரு பொதுஜனம் இப்படியெல்லாம் பேசலாம். பேராசிரியர் பேசலாமா.... என்றுகூட கேட்கக்கூடாதா?
    மேடையில் பேசுபவர்கள் நினைத்து நினைத்து பேசமுடியாது. அவர்கள் பேச்சின் உட்பொருளும் சன்மார்க்கமும்தான் பார்க்கப்படவேண்டியவை என்கிறீர்கள். உட்பொருள் சரி அது என்ன சன்மார்க்கம்? விளக்கினால் நன்றாயிருக்கும்.
    நானெல்லாம் நிறைய இலக்கியக்கூட்டங்கள் கலந்துகொண்டிருக்கிறேன். கிவாஜ, குன்றக்குடி அடிகளார்,திருக்குறள் முனுசாமி, அசஞா கவிஞர் போன்றவர்களின் நிறைய கூட்டங்களைக் கேட்டிருப்பதால் மக்கள் மத்தியில் பேசுபவர்கள் சரியாகப் பேசவேண்டும் என்று நினைத்திருப்பவன். அப்படி நினைப்பது சரியல்ல என்கிறீர்கள். என்ன முடிவுக்கு வருவது என்பதுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  17. உண்மைதான் நாகராஜ் நீங்கள் சொல்வதுபோல்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  18. பட்டிமன்றங்களில் பேசப்படும் விஷயங்களை கேட்டு ரசித்து விட்டு மறந்துவிட வேண்டுமே தவிர அதில் புலனாய்வு செய்யக்கூடாது என்று சிலர் சொல்வது வழக்கமானதுதான். கற்பனை கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இப்படி மோடிமஸ்தான் விளையாட்டு காட்டினால் இது சரியே. ஆனால் உண்மையாக இருந்த மனிதர்களை பற்றி சொல்லும் பொழுது இப்படி தவறாக கேட்ட சங்கதிகளை உளறுவதை நியாப்படுத்த முடியாது. பட்டிமன்றங்கள் என்கிற பெயரில் ஒரு அநாகரீக அரசியல் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது தற்போது. இதையும் விட லியோனியின் கூடாரத்தில் ஒரு பேராசிரியர் (என்று நினைக்கிறேன்) தமிழில் வரும் கேடு கெட்ட பாடல்களுக்கு புறநானூறு நெடுநல்வாடை ஆத்திசூடி போன்றவைகளிலிருந்து விளக்கம் கொடுத்து கேட்பவர்களை சிரிக்கவைப்பதாக எண்ணிக்கொள்வார். இதுவாவது பரவாயில்லை. விஷயம் தெரிந்த (என்று சொல்லப்படும்)சில பெரிய தலைகளே இப்படி வாய்க்கு வந்தபடி உளறுவதை தான் சகிக்க முடியவில்லை. கீழே உள்ளது இசை விமர்சகர் ஷாஜி எழுதியது திருவாளர் இளையராஜாவை பற்றி.

    சென்னை திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி நடத்திய விழாவில் இளையராஜா உரை நிகழ்த்தினார். அதில் அவர் பழம்பெரும் இந்தி இசையமைப்பாளர்களான ரோஷன் மற்றும் மதன் மோகனைப் பற்றி ஒரு கதை சொன்னார். "ரோஷனும் மதன் மோகனும் தம் வாழ்நாளில் சந்தித்துக் கொண்டதே இல்லை, ரோஷன் மறைந்தபோது அவருடைய உடலைப்பார்த்து கண்ணீர்விட்டபடி மதன் மோகன் சொன்னது 'இனி யாரோடு நான் போட்டியிடுவேன்?' என்று. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் தங்களது இசையால் ஒருவக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள்". எதை குறிப்பிடுவதற்க்காக இளையராஜா அம்மேடையில் இதை சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று உறுதியாகத் தெரியும், இந்தச் சம்பவம் உண்மையல்ல!
    ஷாஜியின் முழு கட்டுரையும் இங்கே உள்ளது.http://musicshaji.blogspot.in/2010/01/blog-post.html

    மக்களின் கை தட்டல் சில சமயங்களில் எத்தனை பொய்களை மேடை மீது அரங்கேற்றுகிறது?

    ReplyDelete
  19. IN THE PATTIMANDRAM THE SAME SPEAKER Mr ANBU HAS TOLD V O C AS V.O SUBRAMANIA SIVA INSTEAD OF V O CHIDAMBARAM PILLAI . IN KALAINGER T V PATTIMANDRAM BY LEONI IS CONDUCTED ONLY TO PRAISE KALAINGER AND ATTAK AMMA BY LEONI

    ReplyDelete
  20. சினிமா கலைஞர்களை கேலி பேசி பட்டிமன்றம் நடத்த தான் லியோனி லாயக்கு. அவருக்கு எந்த அளவு திராவிட அரசியல் தெரியும் என்று யாருக்கு தெரியும். உங்கள் அளவு ஞாபக சக்தியும், பேச்சில், எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. திராவிடர்கள் அரசியல் திருவிளையாடல்களில் இத்தகைய பொய்கள் நிறைய இருக்கும். பொய்யை தலைவர்களே பெருமையாக பேசும்போது - வழி வருபவர்கள் எப்படி இருப்பார்கள்.

    ReplyDelete
  21. குடுபத்துக்காக வாழ் நாள் முழுவதும் உழைத்துவிட்டு மக்களுக்காக உழைக்கிறோம்னு அரசியவியாதிங்க சொல்வது வழக்கம்தானே. அவங்க நடத்தும் தொலைக்காட்சியில் வரும் நிகழ்சிகள் மட்டும் உண்மையாகவா இருக்கப் போகிறது?!!

    ReplyDelete
  22. திரு காரிகன் அவர்களுக்கு...நீண்ட நாட்களுக்குப் பின்பு தங்களின் வருகை... நான் சொல்ல நினைத்த முக்கால்வாசி விஷயங்களை நீங்களே சொல்லிவிட்டீர்கள். நீங்கள் குறிப்பிடும் அந்தப் 'பேராசிரியர்' இரண்டொரு கூட்டத்தில் அப்படியெல்லாம் அலப்பறை பண்ணி நிறைய கைத்தட்டல் வாங்கி தொடர்ந்து அதே பாணியில் செய்ய நினைத்து எதுஎதையோ உளறப்போக கைத்தட்டல் குறைந்துபோய் இன்றைக்குப் பரிதாபமாக என்ன பேசினாலும் அது எடுபடாமல் தடுமாறுவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
    இளையராஜாவின் அந்தப் பேச்சை நானும் தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன். எதற்காக அதைச்சொன்னார் என்று எனக்கும் அன்றைக்குப் புரியவில்லை. ஷாஜி கட்டுரை இன்னமும் பார்க்கவில்லை. குமுதத்தில் மதன்மோகன் ரோஷன் சம்பவத்திற்கு ஏதாவது விளக்கம் தருகிறாரா பார்க்கலாம்.
    இளையராஜா என்றதும் நினைவு வருகிறது.நண்பர் ரியாஸ் அஹமது தம்முடைய வலைத்தளத்தில் 'இளையராஜாவின் காப்பியங்கள்'என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். இளையராஜாவின் சில தழுவல் டியூன்களை அதில் பதிந்திருந்தார். அதற்கு நான் ஒரு கமெண்ட் போட்டேன். வந்தது வம்பு. அங்கே போய் சில பேர் புரண்டு கொண்டிருப்பதோடு இங்கே என்னுடைய சம்பந்தா சம்பந்தமில்லாத பதிவுகளிலெல்லாம் வந்து ஆளாளுக்கு விழுந்து புரண்டு பிறாண்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சின்னச் சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருப்பது சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது.

    ReplyDelete
  23. அனானிமஸ் உங்கள் வருகைக்கு நன்றி. அந்தப் பேராசிரியர் லியோனி பட்டிமன்றத்தில் தொடர்ந்து வருகிறாரா என்ன? அப்படியானால் இனிமேல் தொடர்ந்து பார்க்கவேண்டியதுதான். இஷ்டத்திற்கு ஐயா அள்ளிவிடுவதைக் கேட்கமுடியுமே.

    ReplyDelete
  24. சிலரை கேலி பேசுவது என்ற பழக்கம் லியோனிக்கு இருப்பது உண்மைதான். ஆனால் இயல்பான நகைச்சுவை உணர்வு மற்றும் கோடிக்கணக்கான மக்களைச் சிரிக்கவைக்கும் கலைக்கும் லியோனி சொந்தக்காரர் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் கலைஞரைப் புகழ்கிறார் என்பதற்காக அவரிடமுள்ள திறமையைக் குறைத்து மதிப்பிட நான் தயாரில்லை.

    ReplyDelete
  25. வருகைக்கு நன்றி ஜெயதேவ் தாஸ். அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடாதா என்ற ஆதங்கம்தான்.

    ReplyDelete
  26. IN KALAIGNAR TV AND SUN TV PATTIMANRAMS ARE
    CONDUCTED ONLY TO PRAISE KALAIGNAR AND RIDICULE
    AMMA WHEREAS IN JAYA TV PATTIMANRAMS MOSTLY
    CONDUCTED BY MR GNANASAMBANDAN AND NELLAI KANNAN
    DO NOT TALK ILL OF KALAIGNAR AND THEY ARE
    MOSTLY INTERESTING BECAUSE OF THE CONTENTS ARE
    NON-POLITICAL IN NATURE.

    ReplyDelete
  27. அனானிமஸ் இங்கே எந்த சேனலில் யாருடைய பட்டிமன்றத்தில் ஜெயா பற்றியோ அல்லது கலைஞர் பற்றியோ தாக்குகிறார்கள் அல்லது போற்றுகிறார்கள் என்ற பிரச்சினைக்குள்ளேயே போகவில்லை. இங்கே பேசப்பட்டிருக்கும் பிரச்சினையே வேறு. தப்பும் தவறுமாக ஒரு வரலாற்றுப்பிழையை ஒரு பேராசிரியர் அதுவும் ஒரு கல்லூரியின் முதல்வர் பேசலாமா அதுவும் உலகம் பூராவும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் பேசலாமா என்பதுதான் இங்கே பேச எடுத்துக்கொண்ட பொருள். ஆனால் கருத்துச் சொல்ல வரும் நிறையப்பேர் லியோனி ஜெயலலிதாவைக் குறைசொல்கிறார் என்பதுபற்றியே கருத்துப் பதிந்து போகிறார்கள்.
    எந்தச் சேனலில் யார் யாரைப்பற்றி அதிகமாகப் புறம் பேசுகிறார்கள் என்பது பற்றி நாம் தனியாக வேறொரு பதிவில் வேண்டுமானால் விவாதிக்கலாம்.

    ReplyDelete