
அது நண்பர் பிரபாகரின் வீட்டிற்குப் பக்கத்து வீடு.
மிர்ஸாத் வந்திருக்கிறார் என்பதில் விசேஷமாக எந்தச் செய்தியும் இல்லைதான். ஆனால் அவர்
அடுத்துச் சொன்ன செய்தியில் விசேஷம் இருந்தது. “உங்களுக்கு எழுத்தாளர் தோப்பில் முகமது
மீரான் தெரியுமா? அவருடைய மகனாம் இவர். அவரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்றார்.
தோப்பில் முகமது
மீரானை நான் நிறையப் படித்திருக்கிறேன். குறிப்பாக முகமதியர்களின் தமிழக கடலோர வாழ்க்கையின்
ஆழத்தினை மிக அருமையாகச் சொல்லியிருப்பவர் தோப்பில். அவருடைய மலையாளம் கலந்து மணக்கும் தமிழ் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இன்னமும் சொல்ல வேண்டுமெனில் முகமதியர்களின் வாழ்க்கையை நிறையப்பேர் படம் பிடித்திருக்கிறார்கள்.
ஆனால் தோப்பிலின் எழுத்துக்களில் இருந்த ஆழம் மற்ற எழுத்துக்களில் இல்லை. அதனால்தான்
தோப்பிலுக்கு சாகித்ய அகாதமியிலிருந்து அத்தனை விருதுகளும் கிடைத்திருக்கின்றன. தமிழக
அரசு விருது, தமிழ்நாடு முற்போக்கு சங்க எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, லில்லி தெய்வ சிகாமணி விருது, அமுதன் அடிகள்
இலக்கிய விருது என்று எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
அவர் கன்னியாகுமரி
மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் பிறந்தவராதலால் கடலோர
கிராமங்களை மிக யதார்த்தமாய் அவரது கதைகளில் வார்த்திருக்கிறார்.. ஆகவே அத்தனைப் பெரிய
எழுத்தாளரைச் சென்று சந்திக்கும் பேற்றினைப் பெற்றிருக்கிறோம் என்ற எண்ணத்தில் “அவரும்
வந்திருக்கிறாரா?” என்று கேட்டதற்கு “இல்லை. அவர் வரவில்லை. ஆனால் வருவாராம். தற்சமயம்
மிர்ஸாதும் அவரது குடும்பமும் மட்டும்தான் வந்திருக்கிறார்கள்” என்றார்.
“சரி, அவருடைய
அப்பா வந்தால் சொல்லுங்கள். நான் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லியிருந்தேன்.
சில மாதங்கள் சென்றன.
திடீரென்று ஒரு நாள் “தோப்பில் வந்திருக்கிறார். அப்பா வந்திருப்பதாக மிர்ஸாத் உங்களிடம்
சொல்லச் சொன்னார்” என்றார். சென்று பார்ப்பதற்காக இரண்டொரு நாட்கள் குறித்தேன். ஏனோ
அவை அத்தனையும் சரியாக அமையவில்லை.
வரச்சொன்னேன்.
சரியாக ஏழு மணி
அளவில் மிர்ஸாதுடன் டூ வீலரில் வந்து இறங்கினார் தோப்பில்.
பளீரென்ற முகம்.
செக்கச் சிவந்த நிறம். ஆனால் சராசரியை விடவும் சற்றே குள்ளம்………………….
வந்து உட்கார்ந்தவர்
ஏதோ பல காலம் நட்பிலிருந்தவர்போல பேச ஆரம்பித்துவிட்டார். இத்தனைப் புகழ் பெற்ற பெரிய
மனிதரிடம் கொஞ்சம் கூட அலட்டல் இல்லை. அத்தனை எழுதியிருக்கிறோமே, சாகித்ய அகாதமியெல்லாம்
வாங்கியிருக்கிறோமே என்ற கர்வமெல்லாம் இல்லை. சர்வ சாதாரண மனிதரைப் போல களங்கமில்லாமல்
பழகினார் தோப்பில்.
அவரது எழுத்துக்கள்,
அவர் எழுதிய சூழ்நிலைகள், அவர் பெற்ற விருதுகள் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தபோது அவர்
என்னைப் பற்றியும், என்னுடைய குடும்பம் பற்றியும், நான் எழுத ஆரம்பித்த காலம் பற்றியும்,
எழுத்தாளர் சாவி பற்றியும் தெரிந்து கொள்வதில்தான் மிகவும் ஆர்வம் காட்டினார்.
நான் எழுத்தாளர்
அகிலன் அவர்களுடன் நெருங்கிப் பழகியவன். அகிலனுடைய சித்தரப்பாவை நாவலுக்காக ஞானபீடம்
பெற்றபோது அவருடைய மகன் கண்ணனுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். அந்த விஷயங்களையெல்லாம்
மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். “முகம் மட்டும்தான்
வேறு. மற்றபடி உங்களுடைய தோற்றம், நடவடிக்கை, பேசுகின்ற பாணி எல்லாமே அகிலன்தான். நீங்கள்
அகிலனை மிக அதிகமாக நினைவு படுத்துகிறீர்கள்” என்றேன்.
“நானும் அகிலன்
ஐயாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன கோணத்தில் பார்த்ததில்லை” என்று சிரித்தார்.
சிப்ஸையும் மிக்சரையும்
தவிர்த்துவிட்டு காப்பி மட்டுமே பருகினார். “நான் நாளைக்கு ஊருக்குக் கிளம்புகிறேன்.
என்னைப் பார்க்க நீங்கள் வருகிறேன் என்று சொன்னீர்களாம். அதில் ஒரு தடவை என்னால்தான்
முடியாமல் போய்விட்டது. நாளை மறுநாள் நான் ஊருக்குக் கிளம்புகிறேன். அதனால்தான் நானே
உங்களை வந்து பார்த்துவிடலாம் என்பதற்காக வந்தேன்” என்றார். அவரது பண்பு என்னை வியக்க
வைத்தது.
ஒரு கடலோர கிராமத்தின்
கதை, கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, துறைமுகம், அஞ்சுவண்ணம், அனந்த சயனம் காலனி ஆகிய
நூல்கள் நேரடியாக இவரது பேனாவிலிருந்து வந்தவை. மலையாளத்திலிருந்து நிறைய படைப்புக்களை
மொழி பெயர்த்திருக்கிறார். பல பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாட நூல்களாக
வைத்திருக்கிறார்கள். அத்தனைச் சிறப்புகளைக் கொண்டவர் இத்தனை எளிமையாக நடந்துகொண்டது
வியப்பாக இருந்தது.
அதன்பிறகு ஒருமுறை
கன்னியாகுமரி செல்ல நேர்ந்தது. அப்போது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்த திரு
கோ. தாமோதரனும் நானும் கன்னியாகுமரி சென்றிருந்தோம். அங்கிருந்த காப்பிக்காடு என்ற
இடத்தில் தொல்காப்பியம் தந்த தொல்காப்பியருக்கு சிலை எடுக்கவும் மணிமண்டபம் கட்டவும்
சில தமிழறிஞர்கள் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். (உண்மையில் இந்தக் காரியத்தைத்
தமிழ்நாடு அரசுதான் செய்திருக்க வேண்டும்.) அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அப்படியே
தோப்பில் முகமது மீரானைச் சென்று சந்தித்துவிட்டு வரலாமா என்று யோசித்தேன். ஏனெனில்
காப்பிக்காட்டைத் தொடர்ந்துதான் தேங்காய்ப் பட்டினம் இருந்தது. அங்கிருந்த ஒரு தமிழறிஞரிடம்
விசாரித்ததற்கு “உண்மைதான். ஆனால் தோப்பில் இப்போது அங்கே இல்லை. அவர் நாகர் கோவிலிலோ
திருநெல்வேலியிலோ மகன் வீட்டிலோ மகள் வீட்டிலோ தங்கியிருப்பதாக அறிகிறேன்” என்றார்.
அதன்பிறகு மிர்ஸாதிடமும்
சரியான தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மிர்ஸாதும்
அரபு நாடுகளில் வேலை பார்த்துக்கொண்டு பெங்களூரைக் காலி பண்ணிக்கொண்டு சென்றுவிட்டார்.
அவரைப் போலவே பண்புள்ளம் கொண்ட மிர்ஸாதின் நண்பர் சித்தார்த்துடனும் எப்போதாவதுதான்
தொடர்பு கொள்ள முடிந்தது.
இப்போது தோப்பிலின்
மறைவை ஒட்டித்தான் மிர்ஸாதைத் தொடர்பு கொண்டேன். தமது அப்பாவின் பண்பு நலன்களில் கொஞ்சமும்
குறைந்தவர் இல்லை மிர்ஸாத். மிக மிக அருமையான மனிதர்.
தற்சமயம் அவரது
மூத்த மகன் வீட்டில் நெல்லையில் உள்ள வீரபாகு நகரில் வசித்துவந்தார் தோப்பில் என்ற
செய்தியை அறிய முடிகிறது. அவர் இறந்த செய்தி கேட்டவுடன் வைகோ உடனடியாக வீட்டிற்கு வந்தார்
என்ற தகவலையும் வைகோவும் தோப்பிலும் முப்பது நாற்பது வருட நண்பர்கள் என்றும் சொன்னார்
மிர்ஸாத். ஸ்டாலின் கனிமொழி தொடங்கி அத்தனைப் பெரிய தலைவர்களும் தோப்பில் மீரான் மறைவுக்கு
அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளும் மிக விரிவான செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
‘தமிழ் இந்து’ ஞாயிறன்று ஒரு முழுப்பக்கத்தையே தோப்பிலுக்கு ஒதுக்கியிருந்தது.
எத்தனைப் பெரிய
அஞ்சலிகளுக்கும் உரியவர்தான் தோப்பில் முகமது மீரான்.
Hey very nice blog!
ReplyDeleteI am truly grateful to the holder of this website
ReplyDeletewho has shared this wonderful piece of writing
at here.