Pages

Thursday, August 4, 2011

ஈழத்தமிழர்பிரச்சினை தீர்வு தொடர்பாக, பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் அரியதொரு பங்களிப்பு !



பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் திருவள்ளுவர் சிலை திறப்புக்குப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க செயலைச் செய்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான அரியதொரு செயலாகவே அதனை நினைக்கத்தோன்றுகிறது.

இலங்கைத்தமிழர் பிரச்சினை இன்றைக்கு உலக மக்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. ஐ.நா சம்பந்தப்பட்ட அறிக்கைகளாகட்டும், சேனல்-4ன் ஒளிபரப்புகளாகட்டும் தமிழர்களைத்தாண்டி மற்றவர்களையும் இதன்பால் கவனம் ஈர்க்கும்படிச்செய்திருக்கிறது. இன அழிப்பில் ஈடுபட்ட கொடுங்கோலர்களைப் போர்குற்றவாளிகளாக்கி சாட்சிக்கூண்டில் ஏற்றி விசாரித்து தக்க தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
அவலத்துக்கு ஆளாகி அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவும் அவர்களுடைய வாழ்விடங்களில் அவர்கள் சென்றுவாழ வகை செய்திடவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் செயல்கள் நடைபெறவேண்டியுள்ளன.

இதற்கடுத்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம், அவர்கள் தங்கள் வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ளப்போகிறார்கள், எங்கே அமைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதெல்லாம் உலகின் முன்னுள்ள கேள்விகள். இதற்கு பதிலளிக்கவேண்டிய கடமையும் கட்டாயமும் உலக மாந்தர் அனைவருக்குமே உள்ளது. யாருக்கு உள்ளதோ இல்லையோ அந்தத் தமிழர்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிய இந்திய அரசுக்கும் அதற்குத் துணைபோன மற்ற ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.

இதற்கான பணிகளை நிறைய ஆர்வலர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்புவது, பிரதமருக்கு அனுப்புவது என்றெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. ஈழத்தமிழர் பிரச்சினையைப் பற்றி நிறைய பேசித்தீர்த்துவிட்டோம். நிறைய பொதுக்கூட்டங்கள், மறியல்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என்று எந்தெந்த வகைகளில் முடியுமோ அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஆனாலும் ஒரு சின்னக்கீற்றளவுக்காவது வெளிச்சம் கிடைத்திருக்கிறதா என்பதைச் சொல்லமுடியவில்லை.

ஆனால் துவந்த முயற்சிகள் நின்றபாடில்லை. நிற்கவும் கூடாது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஈழப்பிரச்சினையை நாம் பல்வேறு தளங்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். பலருக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. சாதாரண மக்களுக்குப் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, மிகப்பெரும் அரசியல் தலைவர்களுக்கும் புரியவில்லை என்பது ஆச்சரியமான தகவல் மட்டுமல்ல, அவலமான தகவலும்கூட. ஈழ விவகாரம் தொடர்பாக செயற்படும் தலைவர் ஒருவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். அகில இந்தியக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரைச் சந்தித்து இலங்கைப்பிரச்சினையை நீங்கள் பாராளுமன்றத்தில் கையில் எடுக்கலாமே என்று கேட்டதற்கு அந்தத் தலைவர் சொன்னாராம்....”அங்கே என்ன நடக்குது? இங்கிருந்து போன தமிழர்கள் அங்கே போய் எங்களுக்குத் தனி நாடு குடுங்கன்னு கேட்டு போராட்டம் நடத்தினா எந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும்?” இந்த பதில் அந்த ஒரு தலைவர் மனதில் மட்டும் இருக்கிற ஒன்றில்லை. இந்தியாவிலுள்ள தொண்ணூற்றொன்பது சதவீத கட்சித்தலைவர்களின் மனதில் உள்ள பிம்பம் இதுதான். ஏன், தமிழர்களிலேயேகூட பலபேருக்கு இருக்கும் எண்ணம் இதுதான். யாருக்கும் உண்மை நிலைமை என்னவென்பது தெரியவில்லை. தெரிந்துகொள்ளவேண்டிய எண்ணம் இல்லை. அவசியமும் இல்லையென்பதாகவே அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘இங்கிருந்து போய்விட்டு தனிநாடு கேட்கிறார்கள். பிரபாகரன் ஒரு தீவிரவாதி. தீவிரவாதத்தை எக்காரணம் கொண்டும் ஆதரிக்கக்கூடாது’. அவ்வளவுதான், அவ்வளவேதான்!

இவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொல்ல சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை. பத்திரிகைகளில் திரித்துச்சொல்லப்படும் தகவல்கள் இவர்களை சரியான திசைநோக்கித் திருப்பும் வகையிலும் இல்லை. இவர்களாகவே சரியான நூல்களைத் தேடிச்சென்று படித்துத் தெரிந்துகொள்ளும் அவசியமும் ஆர்வமும் இவர்களுக்கு இல்லை. இத்தனை ஆண்டுகளாகவும் இப்படித்தான் இந்தப் பிரச்சினை பயணித்துக்கொண்டு இருக்கிறது.

இதனை மாற்றவேண்டும் என்ற சிந்தனை பெங்களூரிலே இரண்டுபேருக்கு வருகிறது. பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், செயலாளருமே அந்த இருவர். பெங்.தமிழ்ச்சங்கத்தின் தலைவரான திரு மீனாட்சி சுந்தரமும் திரு கோ.தாமோதரனும்
இதற்காக முனைகின்றனர்.




ஈழத்தமிழர்களின் தொன்மையான வரலாறு, ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுவரும் உரிமைகள், 60ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், ஈழப்போராளிகள் ஆயுதம் ஏந்திப்போராடவேண்டிய நிலை, இறுதிப்போரில் இலங்கை அரசும், ராணுவமும் செய்த போர்க்குற்றங்கள், ஈழம் குறித்த உலகத்தலைவர்களின் கருத்துக்கள் இவற்றை ஆவணப்படுத்தி தகுந்த ஆதாரங்களுடன் ஒரு ஆங்கில நூலை உருவாக்குவது என்றும் இந்த நூலை இந்தியாவிலுள்ள அத்தனைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அத்தனை முதல்வர்களுக்கும், அத்தனை தேசியக் கட்சித்தலைவர்கள் பத்திரிகையாளர்கள், விருதுபெற்ற எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், இனவிடுதலைக்காகப் போராடுபவர்கள் மற்றும் முக்கியப்பிரமுகர்கள் என்று அனைவருக்கும் வழங்குவது என்றும் அதன்மூலம் இவர்களிடம் பிரச்சினையின் அடித்தளத்தை- முக்கியமான ஆணிவேரை, மற்ற ஊடகங்களால் சரியாகச் சொல்லாமல் விடுபட்ட வரலாற்றைப் புரியவைப்பது என்றும் முடிவு செய்தனர்.

அதற்கான வரலாற்று ஆவணத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார் திரு மீனாட்சி சுந்தரம். மாதக்கணக்கில் உழைத்து பல்வேறு நூல்களிலிருந்தும், செய்திக்குறிப்புகளிலிருந்தும், நாளேடுகளிலிருந்தும், இணையத்திலிருந்தும் ஆவணங்களைத் தயார் செய்தார். தவறான அல்லது ஒருபக்கச்சார்பான வரலாறாகவோ, செய்தியாகவோ இருந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு ஒரு புத்தகத்தைத் தயாரித்தார். வரலாற்றைச் சொல்லும்போது அதில் தவறுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இவர்களுக்கு வேண்டிய புத்தகத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதுபோன்ற பழி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் , இரண்டு மூன்று வரலாற்றாசிரியர்கள் எழுதியவற்றிலிருந்து தொகுப்பை அப்படியே வைக்கிறார். இதுபோலவே மொத்தப் புத்தகத்தையும் பார்த்துப்பார்த்துத் தொகுத்திருக்கிறார் மீனாட்சிசுந்தரம்.

இதனை பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் சார்பாக வெளியிடுவதுடன் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் சென்று முக்கிய தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் சந்தித்து முடிந்தவரை நேரில் கொடுப்பது என்றும் மற்றவர்களுக்கு அஞ்சல்மூலம் அனுப்புவது என்றும் முடிவெடுத்து அதன்படியே ஆயிரம்படிகள்வரை எல்லாருக்கும் சேர்ப்பித்திருக்கிறார்கள்.

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி இவர்களுடைய இந்தப்பணியைக் கட்சிவித்தியாசம் பாராமல் எல்லாரும் வரவேற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. நெடுமாறன், திருமாவளவன், டி.கே.எஸ் இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, சற்குணம் போன்றவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் டெல்லியில் இவர்களுடைய பணிக்குத் தங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறார்.

தங்கபாலுதான் இந்தக்குழுவினரைப் பிரதமரிடம் கூட்டிச்சென்றிருக்கிறார். புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் ‘நான் நிச்சயம் கவனிக்கிறேன்.எனக்கு எப்போதுமே தமிழர்கள்மீது பரிவு உண்டு.தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று சொல்லியிருக்கிறார்.(மறுநாளே பாராளுமன்றத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை கொலைகாரகும்பல் வந்து அமர்ந்தது வேறு கதை)

சென்னையில் தலைநகர் தமிழ்ச்சங்கத்தில் வள்ளுவர் சிலையொன்றினை பெங்களூர்த்தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் வழங்க அதன் திறப்புவிழாவில் இந்த புத்தகத்தின் வெளியீட்டையும் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். புத்தகத்தை வெளியிட்ட வி.ஐ.டியின் வேந்தர் திரு.ஜி.விசுவநாதன் புத்தகத்தைப் பார்த்துவிட்டு வியந்துபோய் பாராட்டியதோடு ‘இவ்வளவு சிறப்பாகத் தொகுத்தமைக்காக என்னுடைய சார்பாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குகிறேன்’ என்று அறிவித்து அங்கேயே வழங்கியிருக்கிறார்.

இந்த புத்தகம் எந்த அளவு கவனிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அடையாளம், பிருந்தா காரத்தைச் சந்தித்து புத்தகத்தைத் தந்திருக்கிறார்கள்.”எங்கள் அலுவலகத்துக்கு வந்துவிட்டது. நான் நேற்றே பார்த்துவிட்டேன். நிச்சயம் நாங்கள் இதுபற்றி பாராளுமன்றத்தில் பேசுவோம்’ என்றிருக்கிறார். இவரது கணவர் காரத் புத்தகத்தைப் பாராட்டியதுடன் சங்கத்திற்கு தொலைபேசி செய்து மேலும் ஐம்பது புத்தகங்கள் அனுப்பிவைக்குமாறு கேட்டிருக்கிறார்.

தமிழர்களின் நிலைபற்றிப் பரிவுடன் பேசிய இன்னொரு தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான். ‘இலங்கைத்தமிழர் விவகாரம்பற்றி முழுசா புரிஞ்சிட்டிருக்கேன். மக்களிடம் பரப்ப நிச்சயம் முயற்சி செய்வேன்’ என்றிருக்கிறார். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த டெல்லியின் துணைமேயர் அனில் சர்மா மறுநாள் இந்தக்குழுவினர் உண்ணாவிரதம் இருந்த மேடைக்கே வந்து தமது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.


சங்கத்தைச்சேர்ந்த தலைவர் மீனாட்சி சுந்தரம், துணைத்தலைவர் ராசுமாறன், தி.கோ.தாமோதரன், மு.சம்பத், தமிழ்ச்செல்வி, கோபாலகிருஷ்ணன், அன்புநிதி, புண்ணியமூர்த்தி, தி.சு.தென்னவன், இயக்குநர் கணேசன், கோடீஸ்வரன், கண்ணன் ஆகியோர் டெல்லிக்குச்சென்று முடிந்தவரை பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புத்தகத்தைத் தந்து விளக்கியதோடல்லாமல் உலகத்தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த பட்டினிப்போராட்டத்திலும் கலந்துகொண்டு வந்திருக்கிறார்கள். இதுவன்றி இந்தியாவில் உள்ள அத்தனைக்கட்சித் தலைமை அலுவலகங்களுக்கும் நூலின் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு நாளேடுகளுக்கும் இதழ்களுக்கும்கூட அனுப்பப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட் சேனல்-4கைப் பார்த்துவிட்டு “எங்களின் அதிர்ச்சியை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறினாற்போல் தெரிகிறது. இவற்றை நடத்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்வகையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது.’’ என்று தமது கருத்தைப் பதிவு செய்தார். இத்தகு உணர்வை தமிழ்ச்சங்கத்தின் இந்த நூலும் ஏற்படுத்தும் என்று நிச்சயம் சொல்லலாம்.

தவிர, சேனல் 4-ன் நோக்கம் மறைக்கப்பட்ட உண்மைகளையும் கொடுமைகளையும் உலகத்தின்முன்னே வெளிச்சம்போட்டுக் காட்டுவது மட்டுமே. இந்த நூல் அதையும் தாண்டிப் பயணிக்கிறது...’தமிழ் ஈழம் ஒன்றே தமிழர்களுக்குத் தீர்வு. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் ஒரு தீர்வு என்பதெல்லாம் உலகை ஏமாற்றுவதற்கான சப்பைக்கட்டு வித்தைதான். ஒரு லட்சம் தமிழர்களை அதுவும் நிராயுதபாணிகளான அப்பாவிகளை உயிரோடு கொன்று குவித்துவிட்டு அதை நியாயப்படுத்திப்பேசும் ஒரு இனத்தோடு தமிழர்கள் எந்த நாளும் சேர்ந்துவாழ்வதென்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று’ என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லுகிறது இந்தப்பேரேடு.


இந்த நூலுக்கு இறுதி வடிவம் கொடுத்த சமயத்தில் தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் தாமோதரன் ஆகியோரிடம் நான் என்னுடைய யோசனையாக ஒன்றே ஒன்றைச் சொன்னேன்.”பாராளுமன்ற எம்பிகளிடமும், மற்ற ஆட்சியாளர்களிடமும் தரவேண்டும் என்பதற்காக ஒரு கெஜெட்டைப்போல் நூலைத் தயாரித்துவிடாதீர்கள். நல்ல தகவல்களுடனும் சரியான புள்ளிவிவரங்களுடனும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி வாங்கி வைத்துவிடுவார்கள். ஒருத்தரும் புரட்டிக்கூட பார்க்கமாட்டார்கள். பக்கத்துக்குப் பக்கம் பெட்டிச்செய்திகள், தகவல்கள், படங்கள் என்று வையுங்கள். முடிந்தால் கவிதைகளைச் சேருங்கள், இனஅழிப்பைக்குறிக்கும் ஓவியங்களைப் பகிருங்கள். படிக்கவே வேண்டாம், புத்தகத்தை ஒருமுறை புரட்டினாலேயே மொத்தமும் புரிந்துவிடவேண்டும். அப்படிப்பட்ட புகைப்படங்களை நிறையப்போடுங்கள்’’ என்று எனது யோசனையைத் தெரிவித்தேன். கூடவே
“பல்வேறு நூல்களிலிருந்தும் எடுத்தாள்வதுடன் இணையத்தில் சிலருடைய ஆக்கங்களையும் படித்துவிடுங்கள். அதிலிருந்து உங்களுக்கு ஒரு வடிவம் கிடைக்கலாம். பிளாக்குகளில் சில நல்ல கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக கீற்று நந்தன், ராஜநடராஜன், இக்பால்செல்வன், ரதி போன்றவர்களின் சில கட்டுரைகளைப் படித்துப்பாருங்கள்’’ என்றும் சொன்னேன். பெருமளவு இதனையொட்டி நூல் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இதில் எனக்கு நிறைவே.

ஈழப்பிரச்சினைக்காக மேற்கொள்ளவேண்டிய பணிகளும் பயணங்களும் நிறைய இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று; ஆனால் மிக முக்கியமான ஒன்று என்பதாகவே பெங்களூர்த்தமிழ்ச் சங்கத்தின் இந்தப்பணியைப் பற்றிச் சொல்லத்தோன்றுகிறது.

டிஸ்கி ; நண்பர்களே, என்னுடைய எந்தப்பதிவிற்கும் படித்துவிட்டீர்கள்தானே ஒரு ஓட்டுப்போட்டுவிட்டுப் போங்கள் என்று நான் இதுவரையிலும் கேட்டதில்லை. ஆனால் இந்தப்பதிவின் சமூக முக்கியம்குறித்து அதனை நான் கேட்கிறேன். ஏனெனில், இந்தத் தகவல் நிறையப்பேரைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.

இது தொடர்பாக பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தைத் தொடர்புகொள்ள நினைக்கிறவர்கள்
Bangalore Tamil Sangam, 59,Annaswamy Mudaliar Road, Bangalore-560 042 என்ற முகவரிக்கோ, தொலைபேசி;080-25510062; FAX; 044 25551357 அணுகலாம்.

8 comments:

  1. திரு மீனாட்சி சுந்தரம் திரு கோ.தாமோதரன் இருவரின் காலமறிந்து செய்த இந்த நல்ல செயலுக்காக ஈழததமிழர் நாம் நன்றீயை தெரிவித்து்க் கொள்கின்றோம். உங்கள் இருவரின் உண்ணத பணி தமிழர் வரலாற்றில் எழுதப்படும். நன்றிகள்

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. இந்த பக்கத்தை என் பிளாக்கில் லிங்க் கொடுத்துள்ளேன் . நன்றி
    http://manasaali.blogspot.com

    ReplyDelete
  4. ஆக்கபூர்வமான பெங்களுர் தமிழ் சங்கத்தின் இந்த முயற்சி மனதை நெகிழச்செய்கிறது.பெரும்பான்மையான தமிழ்நாட்டு தமிழர்களுக்கே இனவுணர்வோடு ஈழ்ப்பிரச்சனை பற்றிய புரிதல் இல்லை.அதை மக்களிடம் எடுத்து செல்லவும் ’ஒரு தரப்பான’ ஊடகங்களுக்கு ஆர்வமில்லை.ஆனால் அன்னா ஹஜாரே உண்ணாவிரதத்திற்கு என்னே ஒரு, முதல் பக்க முக்கியத்துவம்?ஆர்ப்பாட்டம்.இந்திய ஊடகங்களுக்கு. 50,000 தமிழர்களின் உயிரை ஒரிரு நாட்களில் சிங்களன் குடித்தபோது ஒரு பக்க மூலையில் செய்தியை போட்டுவிட்டு போய் விட்டார்கள்.ஒரு தலைவரின் துரோக அரசியல் நாடகமும் இங்கு நடந்தது.பின் எப்படி வடக்கத்தி அரசியல் தலைவர்களுக்கு இதில் அக்கரை வரும்.பிழைக்கப்போனவர்கள்தானே தமிழர்கள்?என்று கேட்ட தலைவர் எல்.கே. அத்வானி,கூறியது எம்.பிக்களை அழைத்து சென்ற பொன்.ராதாகிருஸ்ணனிடம்.இதை மேடை போட்டு சொன்னவர் தமிழருவி மணியன்.சரியா?இப்படி உள்ள நிலைமையில் பரந்துபட்ட அளவில் ஈழ்ப்பிரச்சனையை கொண்டு செல்ல அறிவுபூர்வமான முயற்சி ஏற்றுள்ள பெங்களூர் தமிழ்சங்கத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. தங்களுக்கு நன்றி மனசாலி.

    ReplyDelete
  6. சரியான கருத்தை சரியான முறையிலேயே சொல்லியிருக்கிறீர்கள் இளான். அத்வானி பெயரைக்குறிப்பிடவேண்டாம் என்றுதான் ஒரு தேசியத்தலைவர் என்றுமட்டும் குறிப்பிட்டேன். மற்ற விஷயங்களிலெல்லாம் அடிவரையிலும் முடிவரையிலும் சென்று மொத்த விவரங்களையும் கொண்டுவரும் பாரதிய ஜனதாவுக்கு இந்த விஷயத்தில் மட்டும் இங்கிருந்து யாராவது சென்று தகவல்களைச் சொன்னால்தான் விவகாரமே புரியுமோ? ராணுவ ரீதியான உதவிகள் பற்றியோ வெளியுறவுத்துறை மூலம் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் பற்றியோ ஒன்றுமே தெரியாதா இவர்களுக்கு? தெரியாது என்றே வைத்துக்கொள்வோம். அப்படியிருக்கும் பட்சத்தில், நாட்டை ஆளத் துடிதுடித்துக்கொண்டிருக்கிறார்களே அதற்குத்தகுதி உடையவர்கள் ஆவார்களா இவர்கள்? இந்திய ஊடகங்களும் சரி தமிழகத்தின் சில ஊடகங்களும் சரி இத்தனைப்பெரிய இன அழிப்பை ஒரு மனிதாபிமானக்கண்ணோட்டத்தோடுகூடப் பார்க்க மறுக்கும் மனிதர்களாகத்தானே இருக்கிறார்கள். அத்தனைக்கும் காரணம் இங்குள்ள தமிழன் இன ரீதியாகவும் சாதி ரீதியாகவும் கட்சிரீதியாகவும் பிரிந்துகிடப்பதுதான். இந்தப்பிளவை வைத்துக்கொண்டுதான் இன உணர்வு அழிப்பும் இன அழிப்பும் சுலபமாக நடந்துகொண்டு இருக்கிறது.
    தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  7. vanakkam thiru amudhavan avargale
    ellorukkum poiseravendiya padhivu
    nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  8. தங்களின் வருகைக்கு நன்றி சுரேந்திரன்.

    ReplyDelete