Pages

Monday, August 8, 2011

ஈரோடு புத்தகத்திருவிழாவில் சிவகுமார்!





ஈரோட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக புத்தகத்திருவிழாவையும் ஆக்கிய பெருமை மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரனையே சேரும். தமிழர்கள் அனைவரும் நூல்களைப் படிக்கவேண்டும், அதுவும் மாணவச்செல்வங்கள் படிக்கும் காலத்திலிருந்தே சிந்தனைச்செல்வத்தைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பல்வேறு தளங்களில் முயற்சிகள் மேற்கொண்டு செயல்பட்டு வருகிறார் அவர். அதில் ஒன்றுதான் புத்தகத்திருவிழா. முதலில் சிறிதாக ஒரு மண்டபத்தில் ஆரம்பித்து இன்றைக்கு வருடந்தோறும் வ.உ.சி பூங்காவில் இருநூறுக்கு மேற்பட்ட ஸ்டால்களில் ஈரோட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் ஏன், பாலக்காட்டிலிருப்பவர்களும் வந்து செல்கிற அளவுக்கு அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமான ஒரு திருவிழாவாகவே மாற்றிக்காட்டியிருக்கிறார். புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் பிரபலங்களை வரவழைத்து தினந்தோறும் மிகச்சிறந்த சொற்பொழிவுகளை அரங்கேற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்..

ஸ்டாலின் குணசேகரனே ஒரு மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பதால் இவரது பேச்சே நல்லமுறையில் களைகட்டிவிடுகிறது. அடுத்துப்பேசவரும் சிறப்புப்பேச்சாளருக்கான எதிர்பார்ப்பை மக்கள் மனதில் சரியான விகிதத்தில் விதைக்கும் கலையை இவரது பேச்சு மிக எளிதாகச்செய்துவிடுகிறது.

இது ஏழாவது ஆண்டு. இந்த முறையும் பல்வேறு பிரபலங்கள். தமிழருவி மணியன், சுகிசிவம், குன்றக்குடி அடிகளார், தமிழச்சி தங்கபாண்டியன் என்று வரிசைகட்ட, ஞாயிரன்று நடிகர் சிவகுமாரின் சிறப்புச்சொற்பொழிவு.


சிவகுமார் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு – தவப்புதல்வர்கள்!

‘தவப்புதல்வர்கள்’ தலைப்பு என்றவுடன் அவருடைய தவப்புதல்வர்களான சூர்யா பற்றியும், கார்த்தி பற்றியும் பேசப்போகிறாரா என்று கேட்டார்களாம். சிவகுமார் பேசியது இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த, நாட்டுக்காக பாடுபட்ட தவப்புதல்வர்கள் பற்றி!
காந்தி, உத்தம்சிங், வாஞ்சிநாதன், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, ஓமந்தூர் ராமசாமிரெட்டியார், காமராஜர் ஆகிய தலைவர்களை அவர் பேசுபொருள்களாக எடுத்துக்கொண்டிருந்தார். அவர் எடுத்துக்கொண்டிருந்த தலைப்பும் சரி; அதன் விவரங்களும் சரி, எப்பேர்ப்பட்ட பேச்சாளர்களையும் கொஞ்சம் தயங்க வைக்கும். இது பற்றியெல்லாம் பேச என்ன இருக்கிறது... அல்லது இன்றைய அவசர உலகில் இவர்களைப்பற்றியெல்லாம் பேசினால் யார் கேட்கப்போகிறார்கள்?....கூட்டம் கலைந்துவிடும், அல்லது போதும் நிறுத்து என்று சலசலப்பு ஏற்படும். அதனால் கொஞ்சம் சுவாரசியமான தலைப்பாக எடுத்துக்கொண்டு உணர்ச்சி நகைச்சுவை கலகலப்பு என்று கலந்துகட்டி அடித்து கைத்தட்டலை அள்ளலாம் என்றுதான் தீர்மானிப்பார்கள். ஆனால் சிவகுமார் துணிந்து இந்தத் தலைப்பை எடுக்கிறார். மேடை மீது நிற்கிறார். ஆயிரக்கணக்கில் கூட்டம் அப்பிக்கிடக்கிறது. “என்னை முழுமையான பேச்சாளனாக்கியதே இந்த ஈரோட்டு புத்தகத்திருவிழா மேடைதான்” என்று ஆரம்பிக்கிறார்.


தாம் என்ன பேசப்போகிறோம் என்பதை லேசாகக் கோடிட்டுக்காட்டிவிட்டு நேரடியாக விஷயத்துக்குள் நுழைகிறார். ஒரேயொரு சின்ன சலசலப்புகூட இல்லாமல் ஒன்றரை மணி நேரத்துக்குக் கூட்டம் கட்டுண்டு கிடக்கிறது. ஏதோ ஒரு இறுக்கத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிரி, ஏதோ ஒரு தவறுசெய்துவிட்டு அதற்காக வருந்துவதுபோல் வாய்பேசாமல் கைகட்டி நிற்பதுமாதிரி அப்படியே திணறிப்போய் நிற்கிறது கூட்டம். இத்தனைக்கும் மைதானம் நிரம்பி வெளியிலிருந்த சாலைகளெல்லாம் நிறைந்து வழிந்த மக்கள்கூட்டம் முணுமுணுக்கக்கூட மறந்து கலைந்துசென்ற காட்சியைத்தான் பார்க்கமுடிந்தது.

அப்படி என்ன பேசினார் சிவகுமார்? மகாத்மாவின் மறைந்த பக்கங்களை எடுத்துக்கொண்டார். எந்த இடத்திலும் மகாத்மாவை பூஜிக்கவில்லை. பாரதி சொன்ன வாழ்கநீ எம்மான் பாடலைச் சொன்னதைத்தவிர. காந்தி ஒவ்வொரு நிகழ்வின்போதும் எப்படி நடந்துகொண்டார், கஸ்தூரிபாவுடன் எப்படி இருந்தார், கஸ்தூரிபாவை எப்படி நடத்தினார், செக்ஸ்பற்றி என்ன சொன்னார்(மனிதனுக்கு செக்ஸ் என்பது அத்தியாவசியமான ஒன்றல்ல என்கிறாராம் காந்தி), தெருநாய்களைப்பற்றி என்ன சொன்னார், பசுக்களை வெட்டுவதுபற்றி என்ன சொன்னார், ஜின்னாவின் பின்புலம், நவகாளி யாத்திரை, சுதந்திரம் பெற்ற அன்றைக்கு காந்தி எங்கிருந்தார், இந்து முஸ்லிம் கலவரம் என்றெல்லாம் வந்து காந்தி சுடப்படுவதுவரையிலும் சொல்லி உத்தம்சிங் பற்றி பேச ஆரம்பித்தார்.

உத்தம்சிங், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, ஓமந்தூர் ராமசாமிரெட்டியார் போன்றவர்களைப்பற்றி, நிறைய படிக்கிறவர்களுக்கே தெரியாத பலவிஷயங்கள் வந்துகொண்டேயிருந்தன. கையில் எந்த ஒரு சின்னக்குறிப்பும் வைத்துக்கொள்ளாமல் இந்த மனிதர் இத்தனைப்புள்ளிவிவரங்களை எப்படி இவ்வளவு சரமாரியாய் சொல்லுகிறார் என்ற பிரமிப்புதான் கேட்கிறவர்களுக்கு நிரம்பியிருந்தது. கடைசியாக காமராஜரைப்பற்றிப் பேசியவர் அவரது தன்மைகளையெல்லாம் சொல்லி ‘இதுபோன்ற மாமனிதர்கள் வாழ்ந்த நாட்டில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்கே சொன்ன அத்தனை மனிதர்களும் தங்களுக்கென்றோ தங்கள் குடும்பத்துக்கென்றோ எதையுமே சேர்த்துவைத்துக்கொள்ளாதவர்கள் என்பதுதான் முக்கியம்’ என்று சொல்லி நிறைவு செய்தார். அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவர்களாய் பாராட்டும் விதமாக கைத்தட்டலில் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து கலைந்தது கூட்டம்.
இத்தனை விஷயங்களைத் தொகுக்கவும் திரட்டவுமே மிகுந்த சிரமமாக இருந்திருக்குமே என்றேன். “ஆமாம் ராமாயணம் பேசுவதற்காக ஒரு வருடம் என்ன உழைப்பு தேவையாயிருந்ததோ அத்தனை உழைப்பை இருபதுநாட்களில் இந்தப்பேச்சுக்காக உழைக்க வேண்டி இருந்தது” என்றார் சிவகுமார்.

சிவகுமாரிடமிருந்து நிச்சயமாக இது வேறொரு புது அனுபவமே.

இப்படிப்பட்ட விஷயங்களை மக்கள்முன்னால் நின்று ஓங்கி உரைப்பதற்கான தகுதி, எப்பேற்பட்ட பொருளைப் பேசவந்தாலும் அதை எப்படிப்பேசுவது என்பதற்கான திறமை- இது இரண்டும் இருப்பதால்தான் இப்படியொரு உரையை இத்தனைப்பெரிய கூட்டத்தில் அவரால் ஆற்றமுடிகிறது. எப்படியும் இந்த உரை ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பப்படும். அவரது எல்லா உரைகளும் சிடிக்களாக வந்துவிடுகின்றன. அவருடைய சிடி தொகுப்புகள் வைத்திருப்போர்களுக்கு ‘வெரைட்டி’ கிடைப்பது நிச்சயம்.


சிவகுமாரின் அத்தனை முக்கியக்கூட்டங்களுக்கும் கோவையைச் சேர்ந்த சில பெரிய மனிதர்கள் தங்களின் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு ஆஜராகிவிடுவது வழக்கம். ராம்ராஜ் காட்டன்ஸ் நாகராஜ், சக்திமசாலா தம்பதியர் துரைசாமி- சாந்தி துரைசாமி, இயாகோவா சுப்பிரமணியம், கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் நடராஜன், சுமங்கலி அதிபர் சந்திரசேகரன், எம்பரர் பொன்னுசாமி, ஆடிட்டர் லோகநாதன், வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வர், வேணுகோபால், பீளமேடு பழனிச்சாமி, ஆல்ஃபா பழனி, கோவை ராமலிங்கம், சோமனூர்ஐயா சுப்பிரமணியம், வாத்தியார் குமாரசாமி, குமரேசன், கருப்பசாமி என்று ஒரு முன்வரிசைப் பட்டாளம் எப்போதும் கண்டிப்பாக இருக்கும். இந்தக்கூட்டத்திலும் அனைவரும் இருந்தனர். கூடவே திட்டக்கமிஷன் துணைத்தலைவர் குமாரவேலு, பத்மஸ்ரீ விருது வாங்கிய ஒரே ஆடிட்டரான மனோகர் சௌத்ரி ஆகியோரும் வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் இன்னொரு முக்கிய அம்சம் சக்தி மசாலா தம்பதியினர் செய்யும் புத்தகத்தொண்டு. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி அவற்றை இவர்களாகவே அரசுப்பள்ளிகளுக்கு எடுத்துச்சென்று அங்கே நூல்நிலையம் ஏற்படுத்தச்செய்து அதில் ஒரு நூலகரையும் இவர்களுடைய செலவிலேயே அமர்த்தி மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத்தூண்டி வருகிறார்களாம். இதனை மாவட்டம்தோறும் என்பது மாத்திரம் இல்லாமல் மாநிலம் முழுவதுமே நடத்தும் எண்ணமும் செயல்பாடும் உள்ளதாகவும் திருமதி சாந்தி துரைசாமி தெரிவித்தார்.

சக்தி மசாலா தம்பதியரும் சரி, ஸ்டாலின் குணசேகரனும் சரி இப்படியொரு புத்தகத்திருவிழாவை நடத்துவதிலும் அரங்க அமைப்புகளைப்பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். ஈரோட்டைப் பொறுத்தவரை அந்த அரங்க அமைப்புகள் மிகச்சிறந்தவையாக இருக்கலாம். ஆனால் புத்தகத்திருவிழா, அதிலும் அரங்க அமைப்புகள் என்பதுபற்றி பெருமைகொள்ள வேண்டுமென்றால் பெங்களூரில் இன்னும் சில தினங்களில் பேலஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தகத்திருவிழாவிற்கு ஒருநடை இவர்கள் வந்து செல்லலாம். அரங்கங்களை இன்னமும் சிறப்பாக அமைப்பதுபற்றிய ஒரு வடிவம் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கக்கூடும்.

13 comments:

  1. Best article to appreciate everyone who is involved in the effort. Its true that Thiru Sivakumar is a Genius and has excelled as an Orator - he has to complete more such tasks like speaking on Mahabaratham and also of Tamil Literature including silapthikaram and even about Savi and the works of Amuthavan. vallum manithargalai pesinal makkaluku oppitu parkum ennam innam milirum. as u said when you highlights the efforts of Sakthi group or the efforts of Stalin I will emulate myself better

    ReplyDelete
  2. மிகவும் நன்றி நண்பர் அமுதவன் அவர்களே.நீங்கள் விவரித்த விதம்,வழக்கம்போல,புல்லரிக்க வைத்தது.இந்த உரையை 15 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களும் கேட்டு பயனுற வேண்டும்.பிரபல இந்திய மொழிகளிலும் இது மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து இந்தியர்களையும் சென்றடைய வேண்டும்.இதன் ஒலித்தட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  3. ஐயா, திரு சிவகுமார் அவர்கள் இந்தியத்திருநாட்டின் தவப்புதல்வர்கள் பற்றிப்பேசியிருப்பது குறித்து விவரித்திருக்கிறீர்கள். என்னைப்பொறுத்தவரை இன்றைய நிலையில் மக்களுக்கு அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு என்னவிதமான சிந்தனைகள் தேவையோ அதனை மிகச்சரியாக விதைத்துவருகிறவர்களாக அப்துல்கலாமையும் திரு சிவகுமாரையும் மட்டுமே என்னால் இனம்காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய களத்தை எடுத்துக்கொண்டு தமது பேச்சாற்றல் மூலம் அளப்பரிய பணியைச் செய்துவருகிறார் சிவகுமார். அவரைப்பாராட்டுவதுடன் நில்லாமல் கொண்டாட வேண்டியதும் தமிழர்களது கடமை.

    ReplyDelete
  4. வருகை புரிந்திருக்கும் மார்ஸ்ஜேகே அவர்களுக்கு நன்றி. தங்களின் கருத்துக்கள் அருமையானவை. நீங்கள் எதிர்பார்ப்பதுபோலவே அவரது அடுத்த பெரிய சாதனை என்பது மகாபாரதமாகவே இருக்குமென்று தெரிகிறது. சிலப்பதிகாரம் மட்டுமின்றி திருக்குறள் சங்க இலக்கியம் பற்றியும் பேச தம்மைத் தயார் படுத்திவருகிறார் அவர். வெறும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது அவரது பாணி கிடையாது. எதிலாவது மூழ்கினாரென்றால் அதற்குள் முழுவதுமாகத்திளைத்து பசி பட்டினி மறந்து தமக்கு திருப்தி ஏற்படுகிறவரை அதற்குள்ளேயே மூழ்கி இருப்பது அவரது வழக்கம். அத்தனை முழுவதுமாக மூழ்கி வெளிவருவதனால்தான் ஒவ்வொருமுறையும் அவரால் விசேஷமாய்த் தம்மை நிரூபித்துக்கொள்ள முடிகிறது.தற்கால எழுத்தாளர்கள் பற்றி அவர் பேசுவாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் தங்கள் கருத்து நியாயமானதே.

    ReplyDelete
  5. வாருங்கள் கண்பத் தங்களின் விமரிசனத்திற்கு நன்றி. தங்களின் யோசனை நிறைவேறுமானால் மிக்க பயனுள்ளதாகவே இருக்கும்.

    ReplyDelete
  6. ராஜகம்பீரம் அவர்களே உங்கள் கருத்துக்களுடன் நானும் முழுமையாக உடன்படுகிறேன்.தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஆமாம் ஒரு சந்தேகம் உங்கள் பெயர் ராஜகம்பீரமா, ராஜகபீரமா?

    ReplyDelete
  7. என்னுடைய பெயர் ராஜகம்பீரம்தான் சார். ரெஜிஸ்டர் பண்ணும்போது எம் போட்டு செய்ததில் பதிவாகமாட்டேன் என்று அடம் பிடித்தது. எம்மை எடுத்ததும் டக்கென்று வந்துவிட்டது. அப்படியே இருக்கட்டுமென்று வைத்துக்கொண்டிருக்கிறேன்.நியூமராலஜி என்று நினைத்துவிட்டீர்களோ....

    ReplyDelete
  8. உண்மையிலேயே ஆச்சரியத்துக்குரிய பன்முக ஆளுமை கொண்ட அபூர்வ மனிதர்களில் திரு.சிவகுமார் அவர்களும் ஒருவர்.அவர் சிறந்த பேச்சாளர் என்பது தெரியும்.அவர் சிறந்த எழுத்தாளர் என்பதை சமீபத்தில் ராணி வார இதழில் வெளிவந்த தொடர் மூலம் அறிந்து கொண்டேன்.பல வகைகளில் மனிதன் பின் பற்ற வேண்டிய உதாரண புருக்ஷன் அவர்.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஆமாம் எளான், பன்முக ஆளுமை அல்ல, பன்முகப்பேராளுமைக்கு உரியவர் அவர். அவருடைய எழுத்துக்கு வயது ஐம்பதுக்குமேல் இருக்கும். ஏனெனில் சின்ன வயதிலிருந்தே டயரி எழுத ஆரம்பித்தவர் அவர். அவருடைய டயரி மட்டுமே பல்லாயிரம் கதைகள் பேசும்.தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  10. நான் கர்நாடக சங்கீத ரசிகன். அதிலேயே, சில பேரின் கச்சேரிக்குப் போனால் மட்டுமே நிச்சயம் நிறைவாக இருக்கும், உயர்ந்த தரமான சங்கீதமாக இருக்கும் என்ற உறுதியோடு, நம்பிக்கையோடு செல்லலாம் என்றறிந்து செல்பவன். திரு.சிவகுமாரின் மேடைப் பேச்சும் அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மேல்தட்டு நண்பர்களையும், சாதாரண மக்களையும் ஒருங்கே ஈர்த்துக்கொண்டு வருவதைக் கவனித்து வருகிறேன்.அதற்குக் காரணமான அவரின் உழைப்பு வியப்பை அளிக்கவில்லை! எதிலும் perfection தேடும் அவரின் பிறவிக்குணம் அது! என்றும் இப்பணியில் அவர் வாழ்க,வளர்க!

    ReplyDelete
  11. தங்களின் விமர்சன ஆலாபனைக்கு நன்றி ஆரெஸ்கே.

    ReplyDelete
  12. தாஙகள் கூறியபடி படித்துவிட்டேன். நேரடியாகப் பங்கு பெற்றாலன்றி இவ்வளவுதூரம் முழுப் பேச்சையும் பதிவு செய்ய முடியாது. படங்களும் அதனை உறுதிப்படுத்துகின்றன. சக்தி மசாலா தம்பதியரின் புத்தக சேவை குறித்த சிறப்பு அம்சத்தை என் வலைப்ப்பூவில் குறிப்புடன் மீள்பதிவு செய்துள்ளேன். தங்களது இரு புத்தகங்களையும் விரைவில் வாங்குவேன். நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
  13. வாருங்கள் சேதுபாலா, நான் நேரடியாகப் பங்குபெற்ற அனுபவத்தைத்தான் எழுதியுள்ளேன். சக்திமசாலா தம்பதியரின் சேவை நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. அதனால் தங்களின் மீள்பதிவும் அவசியமே. தங்களின் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete