Saturday, July 17, 2010

தமிழுக்குக் கிடைத்த முதல் ஞானபீடம்

தமிழைச் செம்மொழி என்றெல்லாம் நாம் மட்டும்தான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மற்றவர்களும் பார்த்து வியக்கும் அங்கீகாரங்கள் மிகவும் குறைந்த அளவில்தான் நம்முடைய மொழிக்குக் கிடைத்திருக்கிறது. தமிழில் ஞானபீடம் இரண்டே இரண்டுமுறைதான் கிடைத்திருக்கிறது. ஒன்று அகிலனுக்கு; இன்னொன்று ஜெயகாந்தனுக்கு. கன்னடம் போன்ற மொழிகளெல்லாம்கூட ஏழுதடவை எட்டுத்தடவையெல்லாம் ஞானபீடப்பரிசை வென்றிருக்கின்றன. இம்மாதிரியான சிறப்புக்களையெல்லாம் கோட்டைவிட்டுவிட்டு நமக்குள்ளே பெருமை பேசிக் கைதட்டிக்கொண்டிருப்பதிலேயே நாம் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறோம்.

அகிலன் தமிழுக்கு முதன்முதலாக ஞானபீடம் பெற்ற அந்த அற்புதமான நாளில் அவருடன் இருந்தவர்களில் நானும் ஒருவன். அகிலனுடைய மகன் அகிலன் கண்ணனும் நானும் அவருடன் டெல்லி சென்றிருந்தோம், ஞானபீடம் பரிசு நிகழ்ச்சியை ஆனந்த விகடனில் கட்டுரையாக எழுதியிருந்தேன். அதனை 14.7.2010 விடகன் பொக்கிஷம் பகுதியில் மீண்டும் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். அந்தக் கட்டுரை இது;

ஞானபீடத்தில் தமிழ்
அகிலன் எழுதிய சித்திரப்பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்.” நாலரைக்கோடித் தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது. தமிழர்களிடமும் ஞானபீடம் அங்கீகாரம் பெற்று வானபீடம் அளவுக்குல்லவா உயர்ந்துவிட்டது!”


அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப்பரிசு தமிழுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக்குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். “பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூல் மிகச்சிறந்தது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற்காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக்களையும் சீர்தூக்கிப்பார்த்து அவருடைய மொத்தப் படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்" என்று குறிப்பிட்டார். “ பாரதத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றவர். 1975-ல் 'எங்கே போகிறோம்?' நாவலுக்கென ராஜாசர் அண்ணாமலைச் செட்டியாரின் பரிசைப் பெற்றவர்" என்றும் குறிப்பிட்டார்.

ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பரிசளிப்புவிழா நடைபெற்றது. ஒரு பேழையில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும்(இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய் அகிலனுக்கு வழங்கினார். "இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை" என்று 'ஞானபீடம் அகிலன்' குறிப்பிட்டார். அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு,”தமிழ் மிகவும் வளமான மொழி. இலக்கியச்செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளைவிடச் சிறந்த மொழி . இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால் இந்தியாவில் 60 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள்" என்று பிரதமர் ரொம்பவும் நாசுக்காக இந்திப் பிரச்சினையை நினைவுபடுத்தினார்.
"சித்திரப்பாவை இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்" என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்
இப்போது நினைத்துப்பார்க்கும்போது இன்னொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த பத்து நிமிடம் கழித்து கலைந்த தலையும் சவரம் செய்யப்படாத முகமுமாக வியர்த்து விறுவிறுக்க தோளில் ஒரு ஜோல்னாப்பையை மாட்டிக்கொண்டு அவசரம் அவசரமாக ஓடிவந்து என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்தார் ஒருவர்.”நிகழ்ச்சி ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார் இந்தியில்.
"இல்லை. இப்போதுதான் ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும்" என்றேன்.
"இன்னும் பிரதமர் பேசவில்லைதானே" என்றார்.
"இன்னும் இல்லை" என்றேன். 'ஸ்ஸ் அப்பாடா' என்று நிம்மதியாகி உட்கார்ந்தார். அதற்குள் அதிகாரிகள் ஓடிவந்து இரண்டாவது வரிசையிலிருந்த அவரை அதிக பட்ச மரியாதையுடன் முதல் வரிசைக்குக் கூட்டிச்சென்றார்கள்........அவர் அப்போதைய பீகார் முதல்வர் கர்பூரி தாகூர். அகிலனின் விழாவில் பங்கேற்பதற்காகவே தனி விமானம் மூலம் டெல்லிக்கு வந்திருந்தாராம் அவர். அகிலனின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படித்தே அந்த அளவு ரசிகராயிருந்திருக்கிறார் தாகூர்.
நம்முடைய ஆட்சியாளர்கள் இன்றைய எழுத்தாளர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதைப் பார்த்தோமானால் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறுவழியில்லை.

Friday, July 16, 2010

ஆக்டோபஸூக்கு ஒரு வேண்டுகோள்

நடந்துமுடிந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளின்போது நட்சத்திர வீரர்களை விடவும் ஜெர்மனியின் ஆக்டோபஸ் அதிகமான புகழையும் கவனத்தையும் ஈர்த்ததை சாதாரண விஷயமாகச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு போட்டியின் போதும் எந்த அணி வெற்றிபெறும் என்பதை மிகச்சரியாக கணித்தது அந்தக் கடல்வாழ் உயிரினம்.
இதற்கெல்லாம் அறிவியல் ரீதியான எந்தக் காரணத்தையும் சொல்வதற்கில்லை. பகுத்தறிவு இங்கே பயன்படாது. அதிகபட்சமாக இது தற்செயல் என்று சொல்லலாம்.ஆனால் இந்த விஷயத்தில் தற்செயல் என்ற சமாதானமும் எடுபடாது. ஏனெனில் தற்செயல்கள் ஏழுமுறை எட்டுமுறையெல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ஆக்டோபஸ்ஸைப் பொறுத்தவரை இம்மாதிரியான கணிப்புக்கள் இது முதல்முறை அல்லவென்றும் ஏற்கெனவே ஈரோ2008 போட்டிகளின்போதும் இதே போல அத்தனைப் போட்டிகளிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை மிகச்சரியாக அந்த ஆக்டோபஸ் கணித்ததாகவும் அந்தக் காரணத்தினால்தான் இப்போதும் அதன் கணிப்புகளை இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்தார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஆக, இது நிச்சயம் தற்செயல் நிகழ்வல்ல என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
இப்படிச்சொல்வதால் அந்த ஆக்டோபஸ் ஏதோ தெய்வத்தன்மை வாய்ந்தது அது ஒரு அபூர்வப் பிறவி என்றெல்லாம் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. அதே சமயம் அதெல்லாம் ஏமாற்றுவேலை எல்லாமே வெறும் புருடா என்கிறமாதிரியும் பிதற்றத் தேவையில்லை. அப்படிச்சொல்லவும் முடியாது. ஏனென்றால் அத்தனை நிகழ்வுகளும் ஏராளமான பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்கள் டி .வி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில்தான் எவ்வித ஒளிவுமறைவுமின்றி நடந்தது.
அப்படியானால் இந்த நிகழ்வை எந்த வகையில் சேர்க்கலாம்?
அறிவியல்ரீதியாக இதற்கு பதில் சொல்லமுடியாது. பகுத்தறிவு ரீதியிலும் இதற்கு நியாயமான பதில் இல்லை. சிலர் இதனை மதரீதியாக அணுகி தீவிரமான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். எல்லா விஷயங்களையும் எதற்காக மதரீதியாக அணுக வேண்டும் என்று புரியவில்லை. எல்லாவற்றையும் மதரீதியாக அணுகியதால்தான் மீளவே முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.
உலகில் நடக்கும் சில ஆச்சரியங்களுக்கு பதில் இல்லை. ஆச்சரியங்களை ஆச்சரியங்களாகவே பார்க்கவேண்டும். அதைவிட்டுவிட்டு தெய்வீகம் அது இதுவென்று கிளம்பினால் மூடநம்பிக்கைகள் வந்து புகுந்துகொண்டு முடைநாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். அல்லது பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் பிய்த்துப்போட்டு பிராண்டிக்கொண்டிருந்தால் இருக்கிற ரசனையும்போய் வாழ்க்கையே வறட்டுத்தனமாகிவிடும்.
அதனால் உலகில் பல்வேறு விஷயங்களுக்கும் இடமிருப்பதைப்போல் ஆச்சரியங்களுக்கும் இடமிருக்கின்றன. ஆச்சரியங்களையும் ரசிப்போம்-சில சமயங்களில் கேள்விகளே கேட்காமல். சர்க்கஸையும் மேஜிக்கையும் ரசிப்பதில்லையா அதுபோல் ரசிப்போம்.
இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

சில கணிப்புகளை அந்த ஆக்டோபஸ் மிகச்சரியாக கணித்திருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த ஆக்டோபஸ்ஸிடம் ஒரேயொரு கேள்வி. ஆக்டோபஸ் இனிமேல் ஜோசியம் சொல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்.
உலகத்தமிழர்கள் அத்தனைப்பேரிடமும் தொக்கிநிற்கும் அந்தக் கேள்விக்கான பதிலை யாராவது வாங்கித்தருவார்களா?

இதுதான் அந்தக் கேள்வி.
'பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?”