பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொல்கிறார்.
அது பற்றிய கேள்வியும் பதிலும்;
கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல்வதில்லையே..நீங்களாவது விளக்குவீர்களா?
ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமியிலேயே பேரின்பம். காமக்கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப்பிய பாரதத்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம்.
குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டோமென்று கருதமுடியாது.
ஆணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு. ஆண் செயல்படுபவன்; பெண் அதை பெற்றுக்கொள்பவள்.
எத்தனை நதி பெருக்கடுத்தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக்கட்டைகளைப் போட்டாலும் வேள்வி நெருப்பு அணையாது. அவ்வளவு வீரியமானது பெண்களுடைய செக்ஸ் உணர்வு.
சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று ஆகாயத்திலும் அடுக்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன் ஜாலம் செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க முடியாது.
மனதாலும் உடலாலும் ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.
ராமாயணத்தில் கௌதம முனிவன் மனைவி அகலிகையிடம் தேவேந்திரன் மாறுவேடத்தில் வந்து கூடுவான். தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில நொடிகளில் இதுவேறு ஆடவன் என்று புரிந்துவிடுகிறது. இருந்தாலும் போகட்டும் என்று அனுமதித்துவிட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்துவிட்டான் என்று கதை போகும்.
டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகையின் உணர்வை உறுதிப்படுத்துகிறார். எவ்வளவுதான் ஒரு பெண் மனதளவிலும் உடல்வழியாகவும் முரண்டுபிடித்தாலும், ஒரு காமுகனின் பலாத்காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு ஏற்றுக்கொள்கிறது. மனதை உணர்ச்சி தற்காலிகமாக வென்றுவிடுகிறது. சில கணம் உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை வெல்லும்போது நடந்துவிட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை என்கிறார்.
மனித உடம்பை இரண்டாகப்பிரித்து மேல்பகுதி சுத்தமானது, கீழ்ப்பகுதி அசுத்தமானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று பிள்ளைகளிடம் சொல்லித்தராதீர்கள் என்கிறான் ஓஷோ. உடல் முழுமையானது. வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவேண்டுமென்றால் ஆசனவாய் சுத்தமாக இருக்கவேண்டும். ஆசனவாயில் அடைப்பு ஏற்பட்டால் துர்நாற்றம் மேலே கிளம்பி சிறுகுடல், இரைப்பை, உணவுக்குழாய் வழி வாயிலே புகுந்து வெளியேறும்.
ஆசனவாய் சிறுநீர்த்தாரை இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சிறுவனோ சிறுமியோ சிறுநீர்க் கழித்தபின் அதிலே தேங்கும் உப்பின் காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது விரலால் சொறியவே செய்யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந்தைகளை அதட்டாதீர்கள், மிரட்டாதீர்கள்.
சிறுநீர் மற்றும் மலம் கழித்தபின் அந்தப்பகுதிகளைச் சுத்தமாகக் கழுவப் பழக்கிவிடுங்கள். அதைவிடுத்து, வீண் மிரட்டல் விடுப்பதால் தன் உடம்பில் உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று-தீண்டத்தகாதது என்று அந்தச் சிறுவன் அல்லது சிறுமி மனதிலே எண்ணம் படிய, அவர்கள் வளர்ந்து திருமணம் செய்து முதலிரவில் சந்திக்கும்போது ஏதோ கெட்ட காரியம் செய்கிறோம்-பாவ காரியம் செய்கிறோம் என்று பயந்தே கூடுகிறார்கள். அதனால் பிறக்கும் குழந்தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது.
ஒரு வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்தவுடன் செக்ஸ் பற்றிய விஷயத்தையும், பிறப்பு உறுப்புக்களின் பயன்பாட்டையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்கிறான் ஓஷோ.
‘மனிதனுக்கு இயற்கையில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று கீழ்வயிற்றுப்பசி. இரண்டு பசிக்கும் முறையாகத் தீனி போடாவிட்டால் அடங்காது’ என்கிறார் கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு நாட்கள் அவளுடன் கூடிக்குலவி ருசி பழக்கிவிட்டு துபாய்க்கு நீ வேலைப்பார்க்கப் போய்விட்டால் அவள் கதி என்ன ஆகும்?
ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறுமையாக இருக்கும்?
இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?
ராமகிருஷ்ண பரமஹம்சர் வணக்கத்திற்குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண்டியே திருமணம் செய்துகொண்டார். சாரதா தேவிக்கும் அவருக்கும் இருபத்தியிரண்டு வயது வித்தியாசம். தன் மனைவியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர் பார்த்தார். அவரது பக்தியை சாரதா அம்மையாரும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.அவர்கள் தெய்வீகத்தம்பதிகள்.
இன்று ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை மணந்து, செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன ஆகும் ? யோசியுங்கள்!
பூப்படைந்து ஆறு ஆண்டுகளில் செக்ஸ் உணர்ச்சிப்பொங்கிப் பிரவாகமெடுக்கும் வயதில் அவளை நீ ‘அம்பாள் வடிவம் நெருங்காதே’ என்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.
திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனையோடு, இருபது ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக்கூடாது.
‘அதே சமயம் இனவிருத்திக்காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை நெருங்கக் கூடாது’ என்கிற காந்திஜி தத்துவத்தைக் கடைப்பிடித்து, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும் உறவு தவிர்த்து வாழ்வதும் அவசியமில்லை.
முழுமையான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒருமித்து திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ளவர்கள், ஆண்மை இழந்தவர்கள் கூட, ஒரு பெண்ணுக்கு மனதளவில் செக்ஸ் இன்பம் அனுபவித்த திருப்தியைக் கொடுக்கமுடியும்.
விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ்ஸில் அழைத்துப் போங்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும்போது குளிரில் பற்கள் தடதடக்கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவிக்குப் போட்டுவிடுங்கள்.
அதிகாலை ஆள்மறைக்கும் மேகமண்டலத்தில், மயிர்க்கூச்செரியும் குளிரில், தொட்டபெட்டா சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி சூடான வேர்க்கடலைக் கொரியுங்கள். நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து ‘பெடல் போட்டில்’ ஐஸ்கிரீம் சாப்பிட்டவாறு ஒரு மணிநேரம் சவாரி செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் வரிசையாக மட்டக்குதிரைகள் நிற்கும். ஒரு குதிரையில் மனைவியை ஏற்றிவிட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். பகல் விருந்துக்குப்பின் மேட்னி காட்சி. இரவு கதகதக்கும் ஹோட்டல் அறையில், நடுங்கிக்கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து படுத்துக்கொள்ளுங்கள். எழுபத்தைந்து விகித சந்தோஷத்தை அவள் அனுபவித்திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம்தான்.
ஆணைப்பொறுத்தவரை செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக்காரன்தான். அடுப்பை மூட்டாமலேயே, தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றிவிடுகிற புத்திசாலி இவன். சில சமயம் தோசைக்கல், 50 தோசைகளை வேக வைக்கும் அளவு சூடாக இருக்கும்போது இவன் அரைக்கரண்டி மாவை மட்டும் ஊற்றுவான்.
பெண்களை நெருங்காமலேயே இருந்துவிடுவது உத்தமம். அவர்களை ஆட்டத்திற்குத் தயாராக்கிவிட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இயற்கையிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு.
அதிக செக்ஸ் பசி உள்ள மனைவிக்கு கையாலாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போதுதான் ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ கதை நிகழும்.
50 ஆண்டுகள் மணமொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் நிலையில், உச்சம் தொட்ட இன்பத்தை- ஐந்து அல்லது ஆறு முறை அனுபவித்திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.
ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கிவிடுவான்
அல்லது அவள் உச்சம் தொடும்போது இவன் ஓய்ந்திருப்பான்!
உடல் பலத்தைப் பயன்படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதைவிட, சாதுர்யத்தைக் கடைப்பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ்விப்பது எளிது.
பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைவதே. அது தெய்வ நிலை.
உலகை மறந்த அற்புதக் கணம்!
அந்தக் கணங்களில்தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக் கணவனும் தன் மனைவியிடம் இன்று நீ சந்தோஷமாய் இருந்தாயா என்று கேட்பதில்லை. பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவுகளில், மயக்க நிலை முனகல்களில் வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.
டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.
இந்த லட்சணத்தில் விலைமாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கிவந்து வீட்டிலிருக்கும் மனைவிக்கும் அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் அந்த எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணியவான்களும் உண்டு.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்றுதான் பெண்கள் திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போடவேண்டும். ஆண் சனிக்கிழமை குளிக்கவேண்டும் என்று வகுத்து வைத்தனர்.
தலையில் குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம்பெல்லாம் பூசிவிடும்போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப்பகுதிக்கு வந்துவிடுகிறது. அன்று மனைவியைக் கூடும்போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவதால் மறுநாள் உடல் அசதி கூடுதலாக இருக்கும்.
குடித்துவிட்டு உறவுவைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். மது, ‘உடல் இன்ப வேட்கையை அதிகப்படுத்திவிட்டு, செயல்பாட்டைக் குறைத்துவிடும்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று படித்தவர்கள்கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க்கின்றனர். காலையில் எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்றுண்டி தயாரித்து, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, ஊட்டிவிட்டு யூனிஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு, கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணாதிக்கம் மிக்க மேனேஜரிடம் அநியாயமாகத் திட்டுவாங்கி, மாலைவரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து, பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கையில் சாய்பவள்-
உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சியளிக்க வேண்டும்- தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?
ஓய்ந்து களைத்து உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.
இன்றைய வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. இருவரும் வேலைப் பார்க்கிறார்கள். பெரும்பகுதி அலுவலகத்திலும் பஸ் பயணத்திலுமே கழிந்துவிடுகின்றன. மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று பற்றாக்குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷனாகவே இருக்கிறோம்.
கணவன் மனைவி வாரத்தில் கடைசி ஒருநாளாவது வீட்டைவிட்டு எங்காவது வெளியில் சென்றுவர வேண்டும். வசதி இல்லாதவர்களுக்கு சென்னையில் கடற்கரை இருக்கிறது. பாம்புப் பண்ணை, மிருகக் காட்சி சாலை இருக்கின்றன. வெளியூர் தம்பதிக்கு இருக்கவே இருக்கிறது சினிமா. அதைவிட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயில். இப்படி அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு நாளையாவது ஒதுக்குங்கள்.
கணவன் மனைவியரிடையே விரிசல் ஏற்பட புறக்காரணங்களைவிட, உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தியே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து வாழவேண்டும்
போகப்பொருளாக- துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண்களை நினைப்பதை நாம் மறந்து, அவளும் நம்மைப்போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு, ஆசாபாசம் அவளுக்கும் உண்டு. அவளில்லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக்கிவிட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள் பெண். நம் வெற்றிக்குத் துணை நிற்பவள் பெண். நம் வயோதிகக் காலத்தில் பாசத்தைப் பொழிபவள் பெண்....என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.
நன்றி ; ராணி வார இதழ்.
24 comments :
துளியும் விகல்பமில்லாத அருமையான படப்பிடிப்பு. சிவகுமாரின் ஆழ்ந்த சிந்தனைகள் நிரம்பிய கட்டுரைகளை எங்களுக்குப் படிக்கத் தரும் அமுதவனுக்கும் நன்றி.
ராஜகம்பீரத்தின் வருகைக்கு நன்றி. சிவகுமார் கட்டுரை வரிசையில் தற்போது இந்தக் கட்டுரையுடன் சிறிய இடைவேளை. பிறகொரு சமயத்தில் சந்திக்கலாம் என்கிறார் சிவகுமார்.
அருமையான கட்டுரை.
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3510.html வைகோ இப்போது என்ன செய்கிறார் ?
//துளியும் விகல்பமில்லாத அருமையான படப்பிடிப்பு.//
வழிமொழிகிறேன். கட்டுரை மிக மிக அருமை.
வாருங்கள் சேக்காளி. தங்கள் வருகைக்கு நன்றி.
வாருங்கள் நிலவு. தங்கள் தளத்தில் வைகோ கட்டுரையைப் படித்துப்பார்க்கிறேன்.
வாருங்கள் அரபுத்தமிழன், தங்களின் பாராட்டுக்களுக்கு சிவகுமார் சார்பாக நன்றி.
எந்தவொரு விஷயத்தையும் ஆழமாகவும் நுட்பமாகவும் சொல்வதற்கு அரிய அனுபவங்களும் கரைகடந்த ஞானமும் வேண்டும். இவையிரண்டும் கைவரப்பெற்ற அண்ணன் சிவகுமார் பாலியல் பற்றிய விஷயத்தையும் ஒரு நிபுணருக்கேயுரிய முறையில் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். தமிழுக்கு இது ஒரு முக்கியமான கட்டுரை என்றே நினைக்கிறேன்.
ஆமாம் மதிசீலன் சரியாகச்சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் விமர்சன வரிகளுடன் நானும் உடன்படுகிறேன். தமிழில் இது ஒரு முக்கியமான கட்டுரையாகத்தான் எனக்கும் படுகிறது.
This article of Sri.Sivakumar is a must read for all adults. He brings out lucidly that sex is much more than being taken for granted to derive pleasure for a few moments. He also explains at length about how mentally strong women are when they experience hard and difficult times as opposed to men who in times of distress, breathe anger and gets into depression.Women deserve respect every way. What a wonderful way of communicating this message! Thanks to Sri.Sivakumar.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
பகிர்வுக்கு மிக்க நன்றியுங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
சர்க்கரை நோய் பற்றிய உங்கள் விகடன் புத்தகம் என் உறவினர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது...நன்றி. நீங்கள் தான் அது என்று, நீங்கள் என் பதிவில் பின்னூட்டமிட்டபோது தெரியவில்லை..சாரி சார்!
நன்றி செங்கோவி..இணையத்தில் சந்திப்போம்.
சூப்பர்
வாருங்கள் ஸ்ரீதர் மிகவும் நன்றி.
excellent article and ueful blogs
வருகைக்கு நன்றி சசி.
உண்மையிலேயே அருமையான கட்டுரை...
ஓஷோவின் ஒரு பகுதியை தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிவக்குமாரும் ஓஷோவாகிறார்...
வருகைக்கு நன்றி அனானிமஸ்.
great
நன்றாக இருக்கிறது
really nice .. please mail me all articles of shivakumar sir ,, way2mailkalpana@gmail.com is my id sir..
Post a Comment