Sunday, September 19, 2010

வைரமுத்துவின் சர்ச்சையைத் தூண்டும் பேச்சுக்கள்.


ந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கிறிஸ்தவர்களின் மனதைப் புண் படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. ரஜினியை வானளாவப் புகழும் உரிமை வைரமுத்துவுக்கு நிச்சயம் உண்டு. அதற்கான தேவைகள் அவருக்கு இருக்கலாம். அதற்காக அவர் வரம்பு தாண்டிய நிலையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் மனம்போன போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப்போகலாம் என்று நினைத்துப் பேசியிருப்பது இங்கிதமற்றதாகவே இருக்கிறது.
பிரச்சினையே, தன்னுடைய வழக்கமான விஜயகாந்த் பாணியில் புள்ளிவிவரங்களைச் சொல்லிப் பேச்சைத்தொடராமல் ரஜினிகாந்த் பாணியில் குட்டிக்கதை சொல்லிப்பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்று வைரமுத்து நினைத்ததுதான் ஏடாகூடமாகப் போய்விட்டது. ரஜினி பிரபலமானவர், மிகமிகப் பிரபலமானவர் என்று சொல்லவந்த வைரமுத்து இதற்காக அமிதாப் பச்சன், ஒபாமா என்று ஆரம்பித்து போப் ஆண்டவர்வரை அத்தனைப் பேரையும் இழுத்து அவர்களின் தலைகளையெல்லாம் உருட்டி அவர்களை ஒன்றுமில்லாமல் சாய்த்துவிட்டு இவர்கள் அத்தனைப்பேரையும் விட ரஜினி பிரபலமானவர் என்று முடிக்கிறார். இதற்கென அவர் தேர்ந்தெடுத்தது ஒரு குட்டிக்கதை. இந்தக் குட்டிக்கதையும் கூட இவரது சொந்தச் சரக்கு கிடையாது. ஏற்கெனவே வழங்கி வருகிற ஒன்றுதான். யாருக்காகச் சொல்கிறோமோ அவருடைய பெயரைச் செருகி மற்ற கதாபாத்திரங்களையெல்லாம் அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்ற வகை கதைதான் அது.
அமிதாப் பச்சனும் ரஜினியும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தார்களாம். அமிதாப்பை யாரென்று தெரியாததால் ரஜினியை மட்டும் தேநீருக்கு அழைத்தாராம் ஒபாமா. அமிதாப் ஆச்சரியத்தில் அதிர்ந்து போய்விட்டாராம். இதுவாவது பரவாயில்லை. அடுத்து அமிதாப்பும் ரஜினியும் வாடிகன் நகருக்குச் சென்றார்களாம். அங்கிருந்த போப் ஆண்டவர் ரஜினியை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு அவரை மட்டும் வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றாராம். அமிதாப் மயங்கிக் கீழே சரிந்துவிட்டாராம். அவர் மயங்கியதற்குக் காரணம் போப் ஆண்டவர் ரஜினியைத் தெரிந்து வைத்திருந்தது அல்ல, மாறாக அமிதாப் பக்கத்திலிருந்த ஒருவர் அமிதாப்பிடம் “மேடையில் நின்றிருப்பவர்களில் ஒருவர் ரஜினி. வெள்ளை ஆடையுடன் நிற்கிறாரே அவர் யார்?” என்று வினவியதுதானாம்.
இதுதான் வைரமுத்துவின் குட்டிக்கதை. போப் ஆண்டவரை இதைவிடவும் மோசமாக அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
ரஜினி என்ற தான் பாட்டெழுதும் படத்துக் கதாநாயகனைப் புகழ வேண்டும் என்பதற்காக உலகத்தலைவர்களெல்லாம் அனுமதி பெற்றுச்சென்று வணங்கும் ஒரு பெரியவரை –ஒரு மிகப்பெரிய மதத்தின் தலைவரை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா?
வைரமுத்துவுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை மட்டும்தானா?
இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுபோல் பதில் சொல்வாரெனில் வைரமுத்துவுக்கு ஒரு பணிவான கேள்வி.
இதே கதையை அமிதாப் என்ற கதாபாத்திரத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் கலைஞரைக் கதாபாத்திரமாக வைத்து இதே கதையைச் சொல்ல வைரமுத்து தயார்தானா?
அப்படி உருவாகும் இந்தக் கதையில் கலைஞர் பிரபலமானவரா, ரஜினி பிரபலமானவரா?
என்ன பைத்தியக்கார ஒப்புமைக் கதை இது?
இப்படியெல்லாம் அபத்தக்கதைகள் சொல்லக்கூடாது என்பதுகூடவா வைரமுத்துவுக்குத் தெரியாது?
போப் ஆண்டவரை வெவ்வேறு வகைகளில் அவமானப்படுத்திய பிரிட்னி ஸ்பியர்சும், மடோன்னாவும் பிற்பாடு மன்னிப்புக் கேட்ட கதைகளையெல்லாம் வைரமுத்து தெரிந்து வைத்திருக்கக் கூடும். தெரிந்தும் இம்மாதிரிக் கதையைச் சொன்னாரா என்பது தெரியவில்லை.
ஆனால் வைரமுத்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசுவது இது முதல் முறை அல்ல. கண்ணதாசனுக்கு அடுத்து இலக்கியச் சாரத்துடன் பாடல் எழுத வந்தவர் புலமைப்பித்தன். அவருக்கு அடுத்து புதுக்கவிதைப் பாசறையிலிருந்து கவனத்துக்குள்ளானவர் வைரமுத்து. கொஞ்சம் பிரபலமானதுமே “ நான் கண்ணதாசனைவிட உயரமானவன். ஏனெனில் நான் கண்ணதாசனின் தோள்மீது உட்கார்ந்திருக்கிறேன்” என்று பேசினார்.
“வைரமுத்து இப்படியெல்லாம் அபத்தமாக உளறக்கூடாது. அப்படியானால் பழனிபாரதி உன்னைவிட உயரமானவன். ஏனெனில் அவன் உன் தோள் மீது உட்கார்ந்திருக்கிறான்” என்று பதில் சொன்னார் ஒரு கவிஞர்.
சில நாட்கள் சென்றதும் “ இவ்வளவு நாட்கள் தமிழ் எனக்குச் சோறு போட்டது; இனிமேல் தமிழுக்கு நான் சோறு போடுவேன்” என்று பேசினார். தமிழ் அறிஞர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். பிறகு வருத்தம் தெரிவித்தார்.
பிறகு திடீரென்று, “ என்னை என்னுடைய மகன் கபிலன் மட்டும்தான் வெல்லமுடியும்” என்று பேசினார்.
பேசி முடிப்பதற்கு முன்பேயே கபிலன் என்ற வேறொரு கவிஞன் புறப்பட்டுவந்து “உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா?” என்ற பாட்டெழுதி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பினான். இன்றைக்கும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்து வைரமுத்துவை விடவும் அதிகமான நல்ல பாடல்களை எழுதிவருகிறான் அந்தக் கவிஞன்.
இதோ இப்போது போப் ஆண்டவர் பற்றிய பேச்சு. இன்னொரு சர்ச்சைக்கான திரியை வைரமுத்து கொளுத்திப் போட்டிருக்கிறார். என்ன சொல்லப்போகிறார் பார்ப்போம்.

Wednesday, September 1, 2010

செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்-ஒரு விமர்சனம்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரை முழுவதுமாகப் படித்துவிட்டேன். அறுநூறு ரூபாய் விலைக்கு நல்ல கனமான புத்தகம்.கன்னியாகுமரியில் கடலில் நிற்கும் வள்ளுவர் இங்கே அட்டையில் நிற்கிறார். மலரைத் திறந்ததும்....வேறு யார்? கலைஞர்தான். எழுதுகின்ற போஸில்..உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மையநோக்க விளக்கப் பாடல்..அதுவேதான். “தமிள் மொளி தமிள் மொளி ...........தமிள் மொளியாஆஆஆஆஆஆஆம்ம்ம்ம்” என்று கமலஹாசன் மகள் கத்துகின்ற ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தொடங்குகின்ற பாடல். தமிழின் இலக்கிய மேடைகளில் சொல்லப்படும் எல்லா வரிகளும் வருகின்றன. “கலாஜ் என்று அழைக்கப்படும் ஓவியம் பார்த்திருக்கிறோமே, அழகழகான வண்ணப்படங்களையெல்லாம் வெட்டியெடுத்து ஒரே இடத்தில் ஒட்டி வேறொரு உருவ ஓவியமாகச் செய்வது.. அதுபோல் இது கலாஜ் கவிதை. கலைஞர் கவிதையிலும் புதுமை செய்திருக்கிறார்” என்று சுபவீ இதற்கு விளக்கமளித்தார். ஆனால் தமிழ்ப்படங்களைக் கிண்டலடித்து ‘தமிழ்ப்படம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் “ஓ மஹ ஸீயா ஓ மஹ ஸீயா நாக்குமுக்க நாக்கா ஓ ஷகலாகா ஓ ரண்டகா” என்றொரு பாட்டு வரும்.
இன்றைய தமிழ்ப்பாடல்களில் வரும் இம்மாதிரியான இலக்கிய நயம் ததும்பும் செந்தமிழ் வரிகளையெல்லாம் தொகுத்து ஒரு பாடல் செய்திருப்பார்கள். அந்தப் பாடல் எதற்காகவோ நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இளமையான தமிழ்த்தாயை ஓவியர் மணியம் செல்வன் அழகாக வரைந்திருக்கிறார். அரசு சம்பிரதாயப்படி குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா காந்தி, கவர்னர், முதல்வர் எல்லாரும் வாழ்த்துச் செய்தி சொல்கிறார்கள். செம்மொழி அங்கீகாரம் கிடைத்த வரலாற்றைக் கலைஞர் சொல்லியிருக்கிறார்.
கலைஞரின் ஓ மஹ ஸீயா பாடலுக்கு – மன்னிக்கவும்-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பாடலுக்கு , கனிமொழி விளக்கம் தந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து செம்மொழித் தமிழ் பற்றிய சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. பரிதிமாற் கலைஞர், கால்டுவெல், ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டு, வா.செ. குழந்தைசாமி, ஜி.ஜான் சாமுவேல், இரா.குமரவேலன், ம.ர.பொ.குருசாமி, ப.மருதநாயகம், ஆகியோரின் கட்டுரைகள் ஒரு மொழிக்குச் செம்மொழி தகுதி கிடைப்பதற்கான தகுதிகளையும் அந்தத் தகுதி தமிழுக்கு இருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள். செம்மொழி மாநாடு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமானதிலிருந்து பெரிதும் பேசப்பட்ட தமிழறிஞர் கா.சிவத்தம்பியின் ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற கட்டுரையும் இருக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் கட்டுரையை வாசிக்கும்போதுதான் இவருக்குத் தேவைக்கும் அதிகமான விளம்பரம் கொடுக்கப்பட்டதோ என்ற ஐயம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
இதற்கடுத்து கவிதைகளின் அணிவகுப்பு துவங்குகிறது. அப்துல் ரகுமான், வாலி, வைரமுத்து துவங்கி முப்பத்து நான்கு கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். இன்றைய தமிழின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான அறிவுமதி தவிர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தவிர்க்கப்பட்டதற்கு ஒருவேளை செம்மொழி பற்றிய அவருடைய இந்தக் கவிதை காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
சென்ற இடமெல்லாம்
செருப்படி வாங்கி
உதடுகளில் குருதி கசிய
பேசப்படுவதால்
எம்மொழி
செம்மொழியாயிற்று.
மற்றபடி, இந்தக் கவிதைத் தொகுப்பில் சிறப்பான கவிதையாக எதையும் குறிப்பிட முடியவில்லை.
அடுத்தது கலையும் பண்பாடும் என்ற தலைப்பில் சில அரிய கட்டுரைகள் உள்ளன. கொங்குக் கலைவளம், நாடக உத்திகள், கொங்குநாட்டுச் செப்புத்திருமேனிகள், நாட்டுப்புறக் கலைகள், சங்க இலக்கியங்களில் விளையாட்டுக்கலை, நாடகக் கலையும் நிகழ்த்துகலையும் சிலப்பதிகாரமும், பழந்தமிழிசையும் இன்றைய இசையும், தமிழக ஆடற்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை என்று முயன்று அரிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட கட்டுரைகளாக இவற்றைச் சொல்லலாம்.
அடுத்தது தமிழும் சமயங்களும் பற்றிய கட்டுரைகள்... இதிலும் சில கட்டுரைகளில் முயன்று நல்ல தகவல்கள் தந்திருக்கிறார்கள். சைவம், வைணவம்.....இவற்றைத்தாண்டி, மடங்கள் வளர்த்த தமிழ் ,பௌத்தம், கிறிஸ்துவம், இசுலாமியம், சமணம் என்று வரிசையாக நிறைய கருத்தாக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. எஸ்.ஜெகத்ரட்சகன், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தவத்திரு ஊரன் அடிகளார் ஆகியோரின் கட்டுரைகள் நல்ல செறிவுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. தமிழுக்கு சமணத்தின் பங்குபற்றி முன்னாள் காவல்துறை அதிகாரி சு.ஸ்ரீபால் எழுதியுள்ள கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. கிறிஸ்தவத்தின் தமிழ்க்கொடை என்ற கட்டுரையில் முனைவர். சூ.இன்னாசி ஆச்சரியப்படும் அளவு தகவல்களைத் தந்திருக்கிறார். கட்டுரையை முடிக்கும்போது, “இவையெல்லாவற்றுக்கும் மேலாகக் கிறிஸ்தவர்களின் தமிழ்க்கொடை ஒன்று உள்ளது. அது வேறு எச்சமயத்திலும் காணப்படாத கொடையாகும். கிறிஸ்துவச் சமய வழிபாடுகளில் மட்டும்தான், தமிழகத்தில் எவ்விடத்தும், எக்கிறிஸ்துவப் பிரிவிடத்தும், எவ்வகை வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் , தாய்மொழியாம் தமிழிலேயே நடைபெறுவது என்பதாகும் எனலாம்” என்று முடிக்கிறார். முனைவர் க. நெடுஞ்செழியனின் ‘தமிழர் மெய்யியலில் இன்மை’ கட்டுரையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ‘ஆரியர் வருகைக்கு முற்பட்டதும் வேதங்களுக்கு மாறானதுமான சிந்தனை மரபு ஒன்று உண்டு’ என்று கூறி மெய்யியல் தென்னக மரபிற்கு மட்டுமே உரிய அதிலும் தமிழர்களுக்கு மட்டுமே உரிய கோட்பாடு’ என்று குறிக்கிறார்.
‘பாட்டும் படமும்’ என்ற தலைப்பில் சங்கத்தமிழ் வரிகளுக்குப் பிரபல ஓவியர்கள் படங்கள் வரைந்திருக்கிறார்கள். எல்லாருமே பிரபல வாரப்பத்திரிகைகளில் படங்கள் வரைகிற ஓவியர்கள். எம்மாதிரி பாத்திரங்கள் என்றாலும் ஒரேமாதிரி படம் வரையும் ராமு இதில் கொஞ்சம் வித்தியாசமாக வரைந்திருக்கிறார்.
அடுத்தது இலக்கியக் கட்டுரைகள். வெ. இறையன்புவின் ‘கம்பரும் உடலசைவு மொழிகளும்’ கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு நின்றுவிடுவது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் கோட்பாடு.

இவர்கள் கண்ணோட்டத்தில் தமிழின் இலக்கிய வளர்ச்சி என்பது பாரதிதாசனோடு முடிந்து போய்விடுகிறது. அதனால் கண்ணதாசனின் பெயர் தவறிப்போய்க்கூட வந்துவிடக்கூடாது என்பதில் திராவிடக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதிகள் மிகுந்த கவனமாயிருப்பது இந்த நூலிலும் தெரிகிறது. ஆனாலும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை. கவிஞர் சக்திக்கனல், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், க.திருநாவுக்கரசு ஆகியோர் கண்ணதாசனைக் குறிப்பிடுகின்றனர். ‘கவிஞரின் திரைப்பாடல் ஒவ்வொன்றும் காவியம்’ என்கிறார் சிற்பி.

பிரபல பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு ஓரத்தில் கட்டம் கட்டி இடம் ஒதுக்குவதுபோல ஒரு ஓரத்தில் ‘வாழ்க’ என்று தலைப்பில் கவிஞரின் ‘தமிழனெங்கிருந்தானேனும் தமிழனே பிறப்பால் நெஞ்சால் அமிழ்தெனும் மொழியின் பிள்ளை’ என்ற கவிதையின் ஒரு அடியை மட்டும் போட்டு வைத்திருக்கின்றனர். இதனை இங்கே இவ்வளவு விரிவாக குறிக்கக் காரணம் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணர்வில் கலந்துவிட்ட ஒரு கவிஞனைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
‘இலக்கணமும் மொழியியலும்’, ‘தொல்லியல்’, ‘ஆட்சித்தமிழ்’, ‘அறிவியல் தமிழ்’ ஆகிய தலைப்புக்களில் சில நல்ல கட்டுரைகள் உள்ளன.

சிந்துவெளித் தமிழ் எழுத்துக்கள், தமிழர்களின் பழங்காசுகள், தமிழ் மாந்தர் தோற்றம், தமிழக நில ஆய்வுகள், அரிக்கமேடு அகழாய்வு, கடல் ஆய்வுகள், அயல்நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள், பழம்பானைக் குறியீடுகளும் தமிழர் பண்பாடுகளும் என்ற வசீகரமான தலைப்புகளில் நிறைய ஏக்கப்பெருமூச்சுக்கள்தாம் உள்ளன.
அறிவியல் தமிழ்- தலைப்பிலான கட்டுரைகளும் மேலோட்டமான உணர்வில் மாநாட்டு மலருக்கு சீக்கிரம் எழுதித்தரவேண்டுமே என்ற அவசரத்துக்கு எழுதப்பட்டன போன்றே தெரிகின்றன.
முனைவர்கள் கே.பி.அறவாணன், ஏ.ராமசாமி, டி.என். ராமச்சந்திரன், என்.அருள், ஏ.தட்சணாமூர்த்தி, எம்.சோலயன், அமுத பாண்டியன் மற்றும் திரு எம்.எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இப்படியான கட்டுரைகளை இம்மாதிரி மலர்களில் எழுதுவதில் பெரிய அளவில் பயன்கள் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆங்கில ஊடகங்களில் இவர்களுடைய கட்டுரைகள் தமிழைப் பற்றியவை-திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கவேண்டும். கன்னடத்தைச் சேர்ந்த மொழி அறிஞர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் எப்படியேனும் அங்குள்ள ஆங்கிலப்பத்திரிகைகளில் ஊடுருவி கர்நாடகத்தைப் பற்றியும் கன்னடத்தைப் பற்றியும் எழுதிக்குவிக்கிறார்கள். சரக்கு கொஞ்சமாயிருந்தாலும் அடுத்தவனிடம் சென்று சத்தம்போடுவதைத் தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்த நம்ம ஆள் என்ன செய்கிறான் என்றால் இவனும் ஒரு ஆங்கிலேயனைப்போல் வேடம் போட ஆரம்பித்துவிடுகிறான். தமிழாவது, மண்ணாங்கட்டியாவது.......நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் கன்னடத்துக்கு ஏழு ஞானபீடப் பரிசுகள். தமிழுக்கு இரண்டே இரண்டு.
தமிழனுக்கு யாரைக்கொண்டாடுவது என்பதில் இடியாப்பச் சிக்கல். இந்த மலரையே எடுத்துக்கொண்டோமென்றால் இக்காலத்தமிழ் இலக்கியத்துக்கு என்ன இடம் என்று பார்த்தோமானால் ஒன்றுமே இல்லை. ‘படைப்பிலக்கியம்’ என்பது இவர்களுக்கு பராசக்தி, மனோகரா, ஓர் இரவு என்பதோடு நின்று விடுகிறது. கவிதைகளுக்கு வெறும் பாரதிதாசன். ஆயிற்றா? அச்சு ஊடகங்கள் வர ஆரம்பித்ததிலிருந்து தமிழை வீடுவீடாகக் கொண்டுசென்று வளர்த்தார்களே கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,நா.பா., ராகி.ரங்கராஜன், சாண்டில்யன், கோவி.மணிசேகரன் .........இவர்களுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விஞ்ஞானமும் ஆங்கிலமும் படித்த தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா அந்த வித்தக எழுத்தாளனுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..........கோடிக்கணக்கான மக்களைத் தன்னுடைய தமிழைப் பாடவைத்துக்கொண்டிருக்கும் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும்கூட எந்த சம்பந்தமும் இல்லை.
இவர்களைப் பற்றிய தனித்தனியான கட்டுரைகள் மலரில் அணிவகுத்திருக்க வேண்டாமா?
தமிழ் என்றால் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆரம்பித்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்களும் இலக்கிய மலர்களும் தயாரித்துக்கொண்டிருந்தால் தற்கால இலக்கியத்துக்குக் கொடுக்கப்படும் எந்தப் பரிசும் எந்த அங்கீகாரமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ன?
இப்போது புரிகிறதா வங்காளத்துக்கு ஐந்து ஞானபீடம், கன்னடத்துக்கு ஏழு, மற்ற பல மொழிகளுக்கு நான்கிற்கும் மேல்.

தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு. மாநாட்டைப்போலவே மலரையும் தற்காலப்படைப்பிலக்கியம் பற்றிய ஏதோ ஒரு கட்டுரையைப் பெயருக்குப்போட்டு மற்றபடி எந்த விவரமும் வந்துவிடாதபடிக்கு பத்திரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் சிவகுமாரும் சூர்யாவும் கபிலர் குறிப்பிட்ட நூறு மலர்களைக் கூட்டங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அந்த நூறு மலர்களின் அரிய புகைப்படங்களும் இந்த மலரில் இருக்கின்றன. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
மொத்தத்தில் மலர் கனக்கிறது. கூடவே இதயமும்....................