Thursday, April 21, 2016

திருமாவுக்கு ஒரு கேள்விதிருமாவளவன் ஆர்.கே.நகர் தொகுதியைக் கேட்டுப்பெற்று அங்கே ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு வசந்தி தேவியை வேட்பாளராகப் போட்டிருக்கிறார். ஆர்.கே.நகர் என்பது சென்ற டிசம்பரில் செம்பரம்பாக்கம் வெள்ளம் சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தபோது அதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு பகுதி.

என்னதான் ஊடகங்களும் குறிப்பாக டிவி சேனல்களும் அதன் அரசியல் விவாதங்களில் பங்கேற்கும் உலகின் நிகரற்ற சிந்தனைச் சிற்பிகளும், அந்த சிந்தனைச் சிற்பிகளுக்குத் தலைமைத் தாங்கும் நெறியாளர் என்ற பெயரில் உலவும் வெறியாளர்களும், ‘ ‘வெள்ளத்தையெல்லாம் மக்கள் மறந்துட்டாங்க; அதிலும் குறிப்பாக வெள்ளத்துக்குப் பிறகு செய்யப்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசின் கோக்கு மாக்கு நிறுவனங்கள் எல்லாமே பாராட்டு தெரிவித்திருக்கின்றன. அகில உலகமே பாராட்டுகிறது; அதிலும் குறிப்பாக அத்தனைப் பெரிய வெள்ளத்துக்குப் பிறகு எந்த விதமான தொற்றுநோயும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டதில் இந்த அரசின் மெச்சத்தகுந்த பணிகள் பாராட்டப்பட்டிருக்கின்றன’ என்று பலவாறாகவும் ஏதோ வெள்ளம் வந்தது இந்தப் பகுதி மக்கள் எல்லாரும் செய்த பூர்வ ஜென்ம பலன் என்பது போலவும் வெள்ளம் வராத பகுதிகளிலில் இருந்தவர்கள் எல்லாரும் வாழத்தகுதியே இல்லாத கழிசடைகள் என்பதுபோலவும் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வளவு எளிதாக அந்த சோகத்தைக் கடந்து செல்கிறவர்களாக இல்லை.

ஒரு வாழ்நாளில் தாங்கள் பார்க்கவிரும்பாத சோகத்தை நேரில் பார்த்தவர்கள் அவர்கள். இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எவ்வளவு மோசமான மனிதகுலத்திற்கும் இவ்வளவு கோரமான, கொடுமையான, சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என்று உளப்பூர்வமாக வேண்டிக்கொள்பவர்கள் அவர்கள். தங்களின் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தவர்கள் அவர்கள். அவர்களின் நிம்மதி, வாழ்வுக்கான ஆதாரம், வாழ்வின் மகிழ்ச்சி, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட அந்த நிகழ்வு தங்கள் வாழ்நாளில் ஏற்பட்டுவிட்ட ஒரு கொடுங்கனவு நினைத்து மறுகுகிறவர்கள் அவர்கள். 

அது, அந்த சோகம் ஒரு வாழ்நாள் அல்ல ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்கமுடியாத ஒரு சோகம் அது.

‘அந்த சோகம் ஒன்றுமே இல்லை. அது சாதாரணம்தான்’ என்று அந்த சோகத்தை ஒன்றுமில்லாததாக்கி, ‘நிவாரணப் பணிகளும் தொற்றுநோயும் ஏற்படாமல் காத்ததுதான் மிகப்பெரிய சாதனை – புண்ணியம்’ என்பதுபோல் பேசித்திரியும் மகாக் கனவான்கள் இந்த ஜென்மத்திலேயே எத்தனைப் பெரிய பாவங்களுக்கு அடிமையாகி எவ்வளவு பெரிய இடர்ப்பாடுகளைச் சந்திக்க இருக்கிறார்கள் என்பது அறம் சார்ந்த ஒரு விஷயம். ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரம் சொல்வது இவர்களுக்காகத்தான்.

இது ஒருபுறமிருக்க அந்த ஆர்.கே. நகரில் செம்பரம்பாக்கம் வெள்ளத்துக்குக் காரணமான ஜெயலலிதா தேர்தலில் நிற்கிறார். அவருக்கு எதிரான ஒரு வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் என்ற ஒரு வழக்கறிஞரை திமுக நிறுத்தியிருக்கிறது.

ஒரு பிரபலமான வேட்பாளரை இன்னொரு பிரபலமான வேட்பாளர்தான் வெற்றிபெற முடியும் என்பது நம் தேர்தல்களில் தேவையற்றது. இந்தியத் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக போற்றப்படவேண்டிய காமராஜரை பெ.சீனிவாசன் என்ற சாதாரண ஒரு இளைஞர்தான் 
தோற்கடித்தார். அண்ணாவை வென்ற பரிசுத்த நாடார் என்பவரை யாருக்கும் தெரியாது. 
ஜெயலலிதாவை பர்கூரில் தோற்கடித்த சுகவனம் யார் என்றே தெரியாத ஒரு வேட்பாளர்தான். உலகப் பெரு நடிகர்களில் ஒருவராக இருந்த சிவாஜிகணேசனைத் தோற்கடித்தவர் பெயரும் நூற்றில் இரண்டு பேருக்குக் கூடத் தெரியாது. 

அப்படியிருக்க ஜெயலலிதாவை ஆர்.கே.நகரில் தோற்கடிக்க யாரோ ஒரு வேட்பாளர் போதும்.

மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் கடைவிரித்திருக்கும் விஜயகாந்த் தலைமையை ஏற்ற தொண்டர்களான விடுதலைச் சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொகுதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ‘பதியம்’ போடுகிறார்கள். ‘டெல்லியின் கேஜ்ரிவால் ஷீலா தீக்ஷித்தைத் தோற்கடித்ததுபோல் இங்கேயும் ஜெயலலிதாவைத் தோற்கடிக்க ‘பிரபலமான’ ஒருவர் வேண்டாமா?’ என்கிறார்கள். 

சரி திருமாவளவன்தான் இங்கே போட்டியிடப்போகிறார் என்கிற சம்சயத்தை இரண்டு நாட்களுக்கு ஏற்படுத்துகின்ற யுக்தியாகத்தான் அவர்களைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு இருக்கிறது. 

இதோ, இன்றைக்கு வசந்திதேவிதான் வேட்பாளர் என்று அறிவித்திருக்கிறார்கள்.

வசந்திதேவி முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர். பெரிய கல்வியாளர். நல்ல பண்புகளும் திறமைகளும் கொண்டவர். மகளிர் ஆணையத் தலைவியாகவும் பதவி வகித்தவர். பல்வேறு தலைப்புகளில் காலச்சுவடு இதழில் பல நல்ல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தவர். ஜெயலலிதாவை எதிர்க்க மிகச்சிறந்த வேட்பாளர்.

எனக்கு ஒரேயொரு சந்தேகம்தான் தோன்றுகிறது.

ஜெயலலிதாவை ‘எதிர்க்க’ சிம்லாவே போதும் என்கிறபோது எதற்காக வசந்திதேவி? வசந்திதேவி எப்படியும் வெற்றிபெறப் போவதில்லை என்பது சிறுகுழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால் வசந்தி தேவியைக் களமிறக்குவதன்மூலம் படித்த மக்களிடையே, ஓரளவு விஷயம் தெரிந்த மக்களிடையே சிம்லாவுக்குப் போகக்கூடிய வாக்குகளைப் பிரிக்க முயல்வதுதான் வசந்திதேவியைக் களமிறக்கியிருப்பதன் ‘சூட்சுமம்’.

விடுதலைச் சிறுத்தைகள் வேறொரு வேட்பாளரைப் போட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய ஓட்டுக்களைவிடவும் ஐந்தாயிரம் ஆறாயிரம் ஓட்டுக்களை வசந்திதேவி நிச்சயம் அதிகம் பெறுவார். 

அந்த ‘அதிகபட்ச ஓட்டுக்கள்’ சிம்லாவுக்குப் போகாமல் இருப்பதற்கான யுக்திதான் இது.

ஆக ஜெயலலிதாவின் வெற்றியை எப்படியாவது ‘உறுதி செய்வது’ என்பதுதான் வசந்திதேவியைப் போட்டியிட வைப்பதன் ‘ரகசியம்’. 

அப்படியெல்லாம் இல்லை. திருமாவின் ராஜதந்திரம் இது. அவருடைய மிகச்சிறந்த அரசியல் சாதுர்யம், யுக்தி என்றெல்லாம் பேசப்படுமேயானால் - திருமா அவர்களுக்கு ஒரு கேள்வி. 

ஜெயலலிதாவை வெற்றிகொள்ள மிகச்சிறந்த வேட்பாளர் இவர்தான். இவர் சாதாரணமானவர் இல்லை. மிகத்தேர்ந்த கல்வியாளர். திறமைகள் அதிகம் வாய்க்கப்பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாங்கள் நிறுத்தியிருக்கிறோம் என்று திருமா சொல்வாரேயானால் அவரிடம் இந்தக் கேள்வி.

எனக்குத் திருமாவளவனைத் தெரியும். அவரது பகுத்தறிவு தெரியும். அரசியல் அறிவு தெரியும். இன்றைக்கு இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களிலும் –கலைஞரை விட்டுவிட்டுப் பார்த்தோமானால் - திருமா அளவுக்கு அரசியல் அறிவும் தெளிவும் ஆற்றலும் பெற்ற அரசியல் தலைவர்கள் யாரும் கிடையாது. அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. 

ஆகவே அவரிடம் இந்தக் கேள்வி-

எல்லாத் தகுதிகளும் திறமைகளும் பெற்ற வசந்திதேவியை வெறும் ஒற்றைத் தொகுதியில் வெற்றிபெற வைப்பதுமட்டும்தான் உங்கள் குறிக்கோளா?

அந்தம்மாவின் திறைமையை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?

ஆகவே இப்போதே ஒன்று செய்யுங்கள்.


எப்படியும் உங்கள் 'முதல்வர்' வேட்பாளர்மீது படித்தவர்களுக்கும் விவரம் அறிந்தவர்களுக்கும் நல்ல அபிப்ராயமில்லை. 

அவரும் பத்திரிகைக்காரர்களைக் கேவலமாகப் பேசுவதும் அவர்களிடம் நாக்கைத் துருத்திக்கொண்டு பாய்வதும் பொது இடங்களில் அருகில் இருப்பவர்களை கைநீட்டி அடிப்பதுமாக இருக்கிறார். 

ஆகவே அவரை மாற்றிவிட்டு நீங்கள் சொல்லியுள்ளபடி “அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்ற கல்வியாளரும் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவியை’ தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்” என்று சொல்லி அறிவியுங்கள். 

இதனைச் செய்வீர்களா திருமா? 

உங்கள் அரசியல் யுக்திக்கு அப்போது படித்தவர்கள் மத்தியில் எத்தனை ஆதரவு பெருகுகிறது என்பதை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள். 

அப்படியில்லாவிட்டால் இது ஜெயலலிதாவின் பி டீம் செய்கின்ற சில்லுண்டித் தனங்களில் ஒன்றாகப் போகக்கூடிய ஆபத்துதான் அதிகம்.

Tuesday, April 12, 2016

வைகோவும் கலைஞரும் ஒரு சம்பவமும்……..


வைகோ கலைஞரைப் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் இன்றைக்கு அரசியல் அரங்கில் மிகப் பெரிதாக விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன. விஷயம் எல்லை மீறிப் போவதற்கு முன்னால் அவர் அதற்கான மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார். ‘என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக இதனைக் கருதுகின்றேன்’ என்பதுபோல் ஒரு அறிவிப்பையும் அவர் செய்திருக்கிறார். ‘கலைஞர் என்னை நன்றாக அறிவார். எனக்குள் சாதி ரீதியிலான உணர்வுகள் எனக்கு இல்லையென்பதை அண்ணன் கலைஞர் நன்றாக அறிவார்’ என்று ஒரு வார்த்தையையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

வைகோ ஒரு தேர்ந்த அரசியல்வாதி. அரசியலில் நிறைய மேடு பள்ளங்களைப் பார்த்தவர். என்னமாதிரியான செய்கைக்கு என்னமாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை அறிந்தவர். ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவனை நாக்கில் நரம்பில்லாமல் தன்னுடைய இச்சைக்கு ஏற்ப வசைபாடிவிட்டுப் போனால் அதற்கு கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பதை அறியாதவரல்ல. ஏதோ ஒரு ஆத்திரத்தில் செய்வது அறியாமல், அல்லது -‘இன்றைக்குத்தான்

கலைஞரை எல்லாத் திசைகளிலும் போட்டு வறுத்தெடுக்கிறார்களே…………..

போகிறவன் வருகிறவன் எல்லாம் அவரை ஒரு ‘சாத்துச் சாத்திவிட்டுப் போவதுதான்’ தினசரி கடமை என்று எண்ணுகிறானே…………….

முளைத்து மூணு இலைகூட இல்லை, இன்னமும் முளைக்காதவன் எல்லாம் இஷ்டத்துக்கு அவரை வசைபாடுகிறானே……………..

யாருமே அதற்கு மறுப்புக்கூடச் சொல்வதில்லையே………

இப்படி இவரை கேவலமாகவும், படு கேவலமாகவும் பேசுவதுதான் இன்றைய தமிழக அரசியலின் பாலபாடம் என்பதாக ஒரு சித்தாந்தத்தைத்தான் இன்றைய ஊடகங்களும் குறிப்பாக இணைய தளமும் கட்டிஎழுப்பி இருக்கின்றனவே…..

ஆகவே நாமளும் அதற்கு உரமேற்றுவதுபோல் ஒன்றைச் சொல்லிவைப்போம். ஒன்றும் ஆகாது. எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்று  தன்னுள் இருந்த அத்தனை ஆத்திரத்தையும் அத்தனை அசிங்கத்தையும் ஒன்று சேர்த்ததுபோல் அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

நண்பர் ஒருவர் சொன்னதைப்போல் “அவர் ஒன்றும் அதனை வாய்தவறிச் சொன்னதாகத் தெரியவில்லை. நீங்கள் அந்த விடியோவைப் பாருங்கள்….. நிறுத்தி நிதானமாக உள்ளுக்குள் அசைபோட்டு அசைபோட்டு அனுபவித்து அனுபவித்து வார்த்தை ஜோடனைகளுடன் இலக்கிய நயம் குன்றிவிடக்கூடாது என்ற அக்கறையுடன்தான் சொல்லியிருக்கிறார் வைகோ” என்றார் அந்த நண்பர்.

வைகோ பேசியது காலையில்……… இந்தச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து மாலையில்தான் எல்லாருக்கும் போய்ச் சேருகிறது.

செய்தி போய்ச் சேர்ந்ததும் திமுக தொண்டன் கொதித்துப் போகிறான்.

எதிர்ப்பு நடத்த வெளியே வருகிறான்.

எதிர்ப்பின் வேகம் என்னவென்பதை ஒரு சிலரால் ஊகிக்க முடிகிறது. 

மதுரையிலும் திருநெல்வேலியிலும் வேறு சில இடங்களிலும் தீ வைக்கப்பட்டதுபோல் செய்தி பரவுகிறது. இணையதளங்களில் திரும்பத் திரும்ப பல்வேறு பதிவுகளில் வைகோவின் ‘அழகிய பேச்சு’ பகிரப்படுகிறது.

இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கி எப்படியெல்லாம் இந்த எதிர்ப்பு எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு வேகமாகப் பரவும் என்பது சாதாரணமாய் அரசியலை கவனிப்பவர்களுக்கே புரிகிறது.

இதன் வீச்சு எப்படியிருக்கும் என்பதையும், இந்த விபரீதம் எங்கேயெல்லாம் கொண்டுசென்று முடியும் என்பதையும், இது எப்படியெல்லாம் விபரீதம் எடுக்கும் என்பதையும்- புரியாதவரல்ல வைகோ.

பல தொலைக் காட்சிகள் இதுபற்றி விவாதிக்க ‘விவாத வீரர்களுக்கு’ அழைப்பு விடுத்து விட்டது என்ற செய்தியெல்லாம் அவரை எட்டுகிறது.

இது தேர்தல் நேரம்.

எந்தக் காற்று எப்படி வீசும் என்பதைக் கணிக்கவே முடியாத சூழலில் இந்த விபரீதத்திற்கு தன்னால் தாக்குப் பிடிக்கமுடியுமா என்று யோசிக்கிறார் அவர். ‘முடியாது’ என்பதை அவரது அனுபவம் உணர்த்துகிறது. நண்பர்களும் சொல்கிறார்கள்.

உணர்ந்ததும் உடனே மன்னிப்புக்கடிதம் என்ற பெயரில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு கடிதத்தை எழுதி வெளியிடுகிறார்.

கவனியுங்கள்.

காலையில் பேசிவிட்டு அடுத்த அரை மணி நேரத்திலோ, ஒரு மணி நேரத்திலோ ‘உணர்ந்து’ அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு எப்படியெல்லாம் எழப்போகிறது என்பதை உணர்ந்தபிறகுதான், எல்லாவிதமான கணக்குகளையும் போட்டுப் பார்த்து அதன் அடிப்படையில்தான் இந்த விபரீதத்தைச் சமாளிப்பது அவ்வளவு எளிதன்று என்பதைப் புரிந்தபிறகுதான்-

அன்றைய மாலையில் வருத்தமே தெரிவிக்கிறார்.

இந்த இடத்தில் வைகோவை விடவும் சும்மாவே அந்தரத்தில் ‘சம்மர்சால்ட் பல்டி’ அடித்த சில மேதாவிகள்தான் முக்கியம்.

‘இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து அரசியலில் நடந்துகொள்ளக்கூடாது’ என்பதை வைகோவுக்கு உணர்த்தவேண்டிய ‘தமிழகத்து அண்ணன்மார்கள்’ உடனடியாக வைகோவைப் ‘புகழ்ந்து’ கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆமாம், கருணாநிதியைக் காயப்படுத்தியதற்குப் பரிசாக வைகோவைப் ‘புகழ’ ஆரம்பித்துவிட்டார்கள்.

‘என்னுடைய ஐம்பத்திரண்டு கால அனுபவத்தில் இப்படி எந்த ஒரு தலைவரும் வருத்தம் தெரிவித்துப் பார்த்ததில்லை நான்’ என்கிறார் ஒரு ‘அண்ணன்’.

‘என்னுடைய ஐம்பதாண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன். நான் அரசியலை அன்றையிலிருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறேன். உடனடியாக மன்னிப்புக் கேட்ட ஒரு தலைவரை நான் பார்த்ததே இல்லை’ என்கிறார் இன்னொரு ‘அண்ணன்’.

‘என்னுடைய நாற்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில்……….’ என்று ஆரம்பித்து வைகோவைப் பாராட்ட துயிலெழுகிறார் மற்றொருவர்.

இவர்களுடைய ‘சமூக அக்கறை’ கண்டு மெய் சிலிர்க்கிறது.

தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் இத்தகைய ‘அற்புதமான அரசியல் நடுநிலை வழிகாட்டிகளை’ எப்படிக் கொண்டாட வேண்டும்  என்பதே புரிபடாமல் திண்டாடித் திணற வேண்டியிருக்கிறது.

கலைஞரை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு மிகமிக தரம்தாழ்ந்து பொதுவெளியில் பேசிக்கொண்டிருந்த சில ‘நடுநிலை மேதாவிகள்’ இந்தச் சந்தர்ப்பத்தையும் வைகோவைப் பாராட்ட கிடைத்த சந்தர்ப்பமாக உருமாற்றும் செப்படி வித்தைகள் எந்த மாநிலமும் காணாத ஒன்று.

இதுஒரு புறமிருக்க வைகோ என்பவர் எப்படிப்பட்ட மனிதர் என்று மனதில் நிலைபெற்றிருக்கும் சித்திரத்தை இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் உணர ஒரு சில அனுபவங்களோ அல்லது ஒரேயொரு அனுபவமோகூட போதுமானதாயிருக்கலாம். 

அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு. மே மாதம். இருபத்தைந்தாம் தேதி.

25 – 5 -1988.

இந்த நாளுக்கு தமிழகத்திலே ஒரு முக்கியத்துவம் உண்டு.

சில பேருடைய வாழ்க்கையிலே மிக அழுத்தமாகப் பதிந்துபோய்விட்ட நாட்களில் ஒன்று இந்த நாள்.

இந்த நாளைத் தமது வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான ஒரு நாளாகக் கருத வேண்டியவர் இளையராஜா.

ஏனெனில் அவருக்கு இசைஞானி பட்டம் மேற்கண்ட நாளில்தான் வழங்கப்பட்டது.

காரைக்குடியில் – கலைஞரால்!

இந்த நாள் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, எனக்கும் மறக்கமுடியாத நாளாகவே அமைந்துவிட்டது.
அதற்குக் காரணமும் இளையராஜாதான்.

இது இளையராஜாவுடனான அனுபவத்தைச் சொல்லும் கட்டுரை அல்ல என்பதனால் அந்த அனுபவத்தை வேறொரு நாளுக்குத் தள்ளிவைத்துவிட்டு இப்போது வைகோவுக்கு வருகிறேன்.

நடிகர் சிவகுமார் அவர்கள் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தபோது அவருக்கான வெளியூர் படப்பிடிப்பு எங்கே இருந்தாலும் ஒரு மூன்று நாட்களுக்கோ நான்கு நாட்களுக்கோ என்னையும் உடன் அழைத்துக்கொள்வார்.

அதேபோல சென்னையைத் தவிர வெளியூர்களில் அவர் கலந்துகொள்ளும் முக்கிய விழாக்கள் எதுவாக இருந்தபோதிலும் தவறாமல் என்னையும் அழைத்துக்கொள்வார். இது இன்றைக்கும் தொடர்கிறது.

அதேபோல எண்பத்தெட்டாம் வருடம் சிவகுமார் அவர்களிடமிருந்து அந்த இண்லாண்ட் லெட்டர் வந்திருந்தது. அப்போதெல்லாம் போன் இல்லை என்பதனால் கடிதப்போக்குவரத்துத்தான்.

‘மே மாதம் இருபத்தைந்தாம் தேதி புதன்கிழமை காரைக்குடியில் கலைஞர் தலைமையில் இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெறுகிறது. நண்பர் பழ கருப்பையா நடத்துகிறார். நானும் கலந்துகொள்கிறேன். நீங்கள் 25ம் தேதி காரைக்குடி வந்துவிட்டு மறுநாள் காலையிலேயே ஊருக்குத் திரும்பிவிடலாம்.அதற்கேற்ப புரோகிராம் அமைத்துக்கொண்டு வாருங்கள்’ – என்று எழுதியிருந்தார்.

எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஞானபீடம் பரிசுபெற்ற அகிலன் அவர்களின் இரண்டாவது மகன் ஜெகன்னாதனின் திருமண நிச்சயதார்த்தம் 24ம் தேதி புதுக்கோட்டையில். நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றுவிட்டு அங்கேயே தங்கி புதுக்கோட்டையிலிருந்து பக்கத்திலிருக்கும் காரைக்குடிக்கு மறுநாள் கிளம்பிப் போனோமென்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பவும் காரைக்குடியிலிருந்து 26ம் தேதி கிளம்பி அன்றைக்கே திருச்சியில் நடைபெறும் அகிலன் மகன் திருமணத்தில் பங்கேற்கலாம்.

விஷயத்தைக் குறிப்பிட்டு சிவகுமார் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். ‘மிக்க மகிழ்ச்சி. வாருங்கள். காரைக்குடியில் இறங்கி பழ கருப்பையா வீட்டிற்கு வந்துவிடுங்கள். அங்கே சந்திப்போம்’ என்று சுருக்கமாக பதில் போட்டிருந்தார்.

முதல் நாள் நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு மறுநாள் 25ம் தேதி காலையில் புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் காரைக்குடி சென்றோம். பஸ் நிலையத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கினோம். 

வெயில் பயங்கரமாகக் கொளுத்திக்கொண்டிருந்தது..

தெரு பூராவும் போஸ்டர்களும் பேனர்களுமாக சாலையே தெரியாத அளவு நிறைக்கப்பட்டிருந்தது. கலைஞரை வரவேற்று, இளையராஜாவை வரவேற்று, அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று அன்றைக்கே போக்குக்காட்டிக்கொண்டிருந்த விஜயகாந்த்தை வரவேற்று என்று ஏகப்பட்ட போஸ்டர்கள். 

பெயருக்கு இரண்டு பேனர்கள் சிவகுமாரை வரவேற்றும் வைக்கப்பட்டிருந்தன.

பழ கருப்பையா காரைக்குடியில் முக்கியமான புள்ளி என்பதனால் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை. பழ கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது ஏகப்பட்ட பிரமுகர்கள் சூழ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் அவர்.

அவரை ஏற்கெனவே எனக்குத் தெரியும். நண்பர் தமிழருவி மணியன் மூலம் பழ கருப்பையா ஏற்கெனவே பழக்கம் என்பதால் அறிமுகம் எதுவும் வேண்டியிருக்கவில்லை. பழ கருப்பையாவைச் சுற்றி ஏகப்பட்ட செட்டியார்கள் கூட்டம்.

எல்லாரும் தமிழகம் அறிந்த மிக முக்கியமான பிரமுகர்கள். தமிழண்ணல், ஆறு.அழகப்பன் தொடங்கி ஏகப்பட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் ஒருபக்கம், ப.சிதம்பரத்தின் அண்ணன் லட்சுமணன் தொடங்கி நான்கைந்து அரசியல் பிரமுகர்கள் மறுபக்கம், எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம் தொடங்கி ஏகப்பட்ட திரையுலகப் பிரபலங்கள் என்று அந்த இடமே அனைத்து ‘புகழ்பெற்ற செட்டியார்களால்’ நிரம்பி வழிந்தது.

“வாங்க வாங்க நீங்க வருவீங்கன்னு சிவகுமார் இப்பத்தான் சொன்னார். அவரும் இளையராஜாவும் பத்து நிமிஷம் முன்புதான் வந்தாங்க. இப்பதான் இதோ இங்க பக்கத்துலதான் தங்கியிருக்காங்க. நீங்க வேணும்னா சிற்றுண்டி சாப்பிட்டுட்டு அவங்க தங்கியிருக்கற இடத்துக்குப் போய்க்கலாம்” என்றார் பழ.கருப்பையா.

அதற்குள் அங்கிருந்த தெரிந்த முகங்களிடம் வணக்கம் தெரிவித்து இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு “இல்லை நாங்க டிபன் சாப்பிட்டுட்டோம். அவங்க தங்கியிருக்கற இடத்துக்குப் போகிறோம்” என்றேன்.

யாரோ ஒரு உறவினரைக் கூப்பிட்டு “சிவகுமாரும் இளையராஜாவும் மாமா வீட்ல இருக்காங்க. அங்க இவங்களைக் கூட்டிட்டு போய் விட்டுரு” என்று சொல்லி அவருடன் எங்களை அனுப்பி வைத்தார்.

அதே தெருவில் ஒரு ஏழெட்டு வீடு தள்ளி இருந்த இன்னுமொரு பிரமாண்டமான செட்டிநாட்டு மாளிகை அது. 

அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளுமே ஒன்று போலவே இருந்தன. அந்த வீடுதான் பழ கருப்பையாவின் மாமனார் வீடாம்.

எல்லா வீடுகளையும் போல அந்த வீடும் காலியாகத்தான் இருந்தது.

அதில்தான் சிவகுமாரும் இளையராஜாவும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். “கலைஞர், விஜயகாந்த் இவங்கெல்லாம் வந்துட்டாங்களா?” என்று உடன் வந்த நண்பரை விசாரித்தேன்.

“கலைஞர் ஐயா மாலைதான் வர்றாங்க. திருச்சியில் ஏதோ பெரிய திருமணம். கலைஞர்தான் நடத்தி வைக்கிறார். அதை முடிச்சுட்டு அங்கிருந்து நேராக இங்கே வர்றார். விஜயகாந்தும் மனோரமாவும் வந்துட்டாங்க. அவங்களை ஓட்டல்ல தங்க வைச்சிருக்கோம். சிவகுமார் சாரும் இளையராஜா சாரும் ஓட்டல் வேணாம் வீடுகள்ளயே தங்கிக்கறோம்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் இங்க அவங்களைத் தங்க வச்சிருக்கு” என்று நடைமுறை செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார் அந்த அன்பர்.

அதற்குள் வீடு வந்துவிட பிரமாண்டமான மாளிகை போலிருந்த அந்த வீட்டிற்குள் போனோம். நடு ஹாலில் அமர்ந்து சிவகுமாரும் இளையராஜாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“வாங்கய்யா வாங்க. நாங்க வந்தே ஒரு பத்து நிமிடம்தான் ஆகுது. அதற்குள் வந்துட்டீங்களே” என்றபடியே வரவேற்றார் சிவகுமார்.

இருவருக்கும் வணக்கம் சொன்னோம்.

சிவகுமார் மட்டும் பதில் வணக்கம் சொன்னார்.

எங்களைக் கூட்டிவந்தவர் எங்களுக்கும் இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டுவிட்டு பவ்வியத்துடன் விடைபெற்றுக் கொண்டார்.

சிவகுமார், இளையராஜா அவர்களுடன் நான் மற்றும் என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு இரண்டு மணிநேரம் பல்வேறு செய்திகளையும் பேசியபடியே இருந்தோம்.

மீண்டும் ஒரு நினைவூட்டல்.

இளையராஜா அவர்களுடனான அனுபவங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுத இருப்பதால் வைகோ அவர்களைப் பற்றிய செய்திக்கு நேராக வந்துவிடுகிறேன்.

எங்களைப் பகல் உணவிற்கு அழைத்துச் செல்வதற்காக பழ கருப்பையா வீட்டிலிருந்து அன்பர் ஒருவர் வந்திருந்தார்.

அவருடன் நாங்கள் நால்வரும் சென்றோம்.

உணவு முடிந்தவுடன் “வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுங்கள். கலைஞர் சரியாக ஐந்து மணிக்கு வருவதாக இப்பத்தான் போனில் தகவல் வந்தது. நீங்க நாலரை மணிக்கு வந்துடுங்க. அப்பத்தான் சரியாக இருக்கும். கலைஞர் வந்ததும் டிபன் சாப்பிட்டுவிட்டு நேராக நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குப் போய்விடலாம். மைதானம் இங்கிருந்து சரியாக ஒரு நிமிடம்தான். அதோ பாருங்க அதான் மைதானம்” என்று கீழ்ப்புறமாக கையைக் காட்டினார் பழ கருப்பையா. அந்தப் பக்கம் பார்த்தபோது இரண்டொரு வீடுகள் தள்ளி தெரு முடிவடைந்து ஒரு பெரிய மைதானத்தின் நுழைவு தெரிந்தது.

“மைதானத்துக்கும் நடந்தே போய்விடலாமா?” என்று கேட்டார் சிவகுமார்.

“இல்லை இல்லை பிரபலங்கள் எல்லாம் நடந்து போகமுடியாது. மக்கள் விடமாட்டாங்க. இந்தப் பிரதான தெரு வழியாக சுற்றிக்கொண்டு காரில் வந்துரலாம். மத்தவங்க எல்லாம் நடந்தே நேராக மைதானம் வந்துவிடலாம். சுத்திக்கிட்டு வரவேண்டிய தேவை இல்லை” என்றார் பழ.கருப்பையா. மீண்டும் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்து நால்வரும் குளித்துத் தயாராக இருந்தோம்.

மறுபடியும் நாலரை மணிவாக்கில் பழ கருப்பையா வீட்டிற்கு எங்களைக் கூட்டிப்போக ஆள் வந்தது.

இப்போது பழ.கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது சிவகுமாரையும் இளையராஜாவையும் எழுந்து வந்து வரவேற்றவர் விஜயகாந்த். பழ கருப்பையாவின் வீடு இப்போது இன்னமும் அதிகப் பிரமுகர்களால் நிரம்பி வழிந்திருந்தது.

மதிய உணவு சமயத்திலேயே மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் உட்பட பலரும் வந்திருந்தனர். வீட்டின் உள்ளேயே பொதுக்கூட்டம் போடலாம் என்ற அளவிற்கு பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது அந்த இல்லம்.

ஒவ்வொருவரின் அறிமுகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்க வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய மக்கள் கூட்டம் பிரமுகர்களின் தரிசனத்திற்காக நிறைந்திருந்தது. வீட்டைச் சுற்றிலும் காவலர்கள் நின்றிருந்தார்கள். அதற்கிடையில் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த எக்கச்சக்க மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக வீட்டின் எல்லா சன்னல்களையும் மூடியிருந்தார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் ‘விஜயகாந்த் வாழ்க’ ‘விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம் எல்லாச் சத்தங்களையும் மீறி கேட்டுக்கொண்டே இருந்தது. கலைஞரின் வருகைக்காக எல்லாரும் காத்திருந்தோம்.

கலைஞரின் கார் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்ற செய்திகள் காவலர்கள் மூலம் அடிக்கடி சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது.

பத்து நிமிடம் சென்றிருக்கும். 

கலைஞர் இன்னமும் ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுவார் என்ற செய்தி சொல்லப்பட திடீரென்று ஒரு பரபரப்பு அங்கே தொற்றிக்கொண்டது. முக்கியமான பிரமுகர்கள் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்.

கலைஞர் உள்ளே வரவும், வந்து அமரவுமான இடங்களும் இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

திடீரென்று “கலைஞர் வாழ்க கலைஞர் வாழ்க” கோஷங்கள் காதைப் பிளக்க கலைஞரின் பரிவாரம் வந்து இறங்கிற்று. 

ஏழெட்டுக் கார்களில் கலைஞரும் அவருடன் வந்திருந்தவர்களும் இறங்கினர்.

கலைஞர், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, தென்னரசு, துரைமுருகன், வை.கோபால்சாமி, கோ.சி.மணி, ரகுமான் கான், செல்வேந்திரன் என்று ஏகப்பட்ட திமுக பிரபலங்கள் கலைஞரைத் தொடர்ந்து திபுதிபுவென்று வந்தனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பேராசிரியர் அன்பழகன் ஒருவரைத் தவிர அன்றைக்கு யார் யார் திமுகவில் முன்னணியில் இருந்தார்களோ, யாரெல்லாம் எம்பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருந்தார்களோ அவர்கள் அத்தனைப் பேரும் வந்திருந்தனர் என்றே சொல்லலாம்.

உள்ளே வந்ததும் அங்கிருந்தவர்கள் அத்தனைப் பேரையும் கலைஞருக்குப் பழ.கருப்பையா அறிமுகம் செய்துவைத்தார். அவர் அறிமுகம் முடிந்ததும் சிவகுமார் சினிமா தொடர்பானவர்களை அறிமுகம் செய்தார்.

அப்படியே உட்காருவது என்று முடிவானது.

நாற்காலிகள் இங்கேயும் அங்கேயுமாகப் போடப்பட எல்லாரும் அவரவர் நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.

கலைஞருடனேயே ஒட்டியபடி இருந்த வைகோ சட்டென்று “எனக்கு நாற்காலியெல்லாம் வேண்டாம்ப்பா. நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்” என்று சத்தமாகச் சொல்லியபடியே கலைஞரின் காலடியில் உட்கார்ந்துவிட்டார்.

“இல்லை இல்லை இதோ சேர் இருக்கு. இப்படி உட்காருங்க” என்று சொல்லி அவருக்கு நாற்காலி போடப்பட-

“எனக்கு வேணாம். வேணும்ங்கறவங்க சேர்ல உட்காருங்க. எனக்குத்  தலைவரின் காலடிதான் சொர்க்கம். நான் சொர்க்கத்தில் உட்கார்ந்துக்கறேன்” என்றபடியே நாற்காலி வேண்டாம் என்பதற்கடையாளமாக இரு கைகளையும் வேண்டாம் என்று அசைத்தார்.

பழ.கருப்பையா வீட்டில் ஏற்பாடுகளையெல்லாம் கவனித்தவர்கள் பதறிவிட்டனர். “இல்லை அண்ணே மேலே உட்காருங்க. இதோ நாற்காலி இதில் உட்காருங்க” என்றபடி யாரோ ஒரு திமுக பிரமுகர் அவருக்கு நாற்காலியை விட்டுக்கொடுத்தார்.

மாட்டேன் என்று மறுத்தார் வை.கோபால்சாமி.

“இல்லை இல்லை ஒருத்தர் மட்டும் அப்படி உட்கார்ந்தா சரிப்படாது. நீங்க மேல உட்காருங்க” என்று பலரும் அவருக்குச் சொன்னார்கள்.

“நாந்தான் சொல்றனே… என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்னு. நான் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன். எதுக்குஎன்னைத் தடுக்கறீங்க?” என்றார் அவர்.

“அப்ப எங்களுக்கெல்லாம் தலைவனின் காலடி சொர்க்கமில்லையா என்ன? நாங்க மேலே நாற்காலியில் உட்காரலை? சும்மா ‘டிராமா’ பண்ணாம எழுந்து மேலே உட்காருங்க” என்று யாரோ ஒரு திமுக பிரமுகர் சொன்னார்.

“நீங்க உட்கார்ந்துட்டீங்க இல்லை? சும்மா விட்டுருங்க. நான் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன்” என்றபடி தம்முடைய பேச்சை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்வதில் அக்கறையாக இருந்தார் வைகோ.

இவை எதையும் ‘கவனிக்காதவர் போன்ற’ பாவனையில் பக்கத்தில் அமர்ந்திருந்த மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கத்திடம் பேசுவதில் சுவாரஸ்யமாய் மூழ்கி இருந்தார் கலைஞர்.


கலைஞருக்கு அடுத்து மூன்றாவதாக உட்கார்ந்திருந்த ஒருவர் திடீரென்று எழுந்தார்.

“யோவ் கோபால்சாமி எந்திருய்யா. என்ன டிராமா பண்றியா? எல்லார் முன்னாடியும் ஷோ காட்றீயா? உனக்கு மட்டும்தான் தலைவரு… எங்களுக்கெல்லாம் தலைவரில்லையா? காலடி, சொர்க்கம்னு வசனமெல்லாம் பேசிக்கிட்டு? எந்திருச்சி மேலே உட்காரப்போறீயா இல்லையா?” என்றார் அதட்டலான குரலில்.

கடுமையானதொரு நிசப்தம் அங்கே சட்டென்று விழுந்தது.

ஒரேயொரு கணம்தான்.

மறுவார்த்தைக்கு இடமில்லாதபடி சட்டென்று எழுந்த வைகோ தமக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலியில் சென்று அமர்ந்தார்

வைகோவுக்கு ஒரு ‘அதட்டல்’ போட்டு அவரைத் தன்னிலைக்குக் கொண்டுவந்தவரும் தமது இடத்தில் அமர்ந்துகொண்டார்.

அந்த மனிதர் முரசொலி மாறன்.

வைகோவின் செய்கை அந்த இடத்தில் நடைபெற்ற ஒரு இயல்பான நிகழ்வாக இல்லாமல் ‘சீன் போடுவது’ என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் தோன்றிற்று. எத்தனைக் கூட்டங்கள் பார்த்தவர், எத்தனைப் பாராளுமன்றங்களைப் பார்த்தவர் எதற்காக எல்லார் முன்னிலையிலும் இத்தனைச் செயற்கையாக நடந்துகொள்கிறார் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருந்தது.

அவருடைய அந்தச் செய்கை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக விடுபட இயலவில்லை. இவர்களெல்லாம் வேடிக்கை மனிதர்களா, அல்லது காரியக்காரர்களா அல்லது போலி மனிதர்களா என்ற எண்ணம் சுற்றிச் சுழன்றபடியே இருந்தது. ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

முரசொலி மாறனின் கடமை அத்தோடு முடியவில்லை.

இளையராஜாவைப் பக்கத்தில் கூப்பிட்டு அமரவைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார் கலைஞர். அவர்களது உரையாடல்களைப் பாதிக்கும்விதமாக வெளியிலிருந்து விடாப்பிடியாக ஒரு கோஷம் ஒலித்தபடியே இருந்தது. அது ‘விஜயகாந்த் வாழ்க, விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம். உள்ளே இருந்தவர்கள் ‘நார்மலாக’ இருக்கமுடியாத அளவுக்கு அடிக்கடி பதம் பார்த்தபடி இருந்தது அந்தக் கோஷம்.  

ஒரு கட்டத்தில் அந்தக் கோஷங்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குப் போக………… இளையராஜாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டு முரசொலி மாறனை ஒரு பார்வைப் பார்த்தார் கலைஞர்.

அவ்வளவுதான்.

கலைஞரின் பார்வை என்ன ‘சொல்கிறது’ என்பதை உணர்ந்துகொண்ட முரசொலி மாறன் உடனடியாக எழுந்தார்.

விஜயகாந்தைப் பார்த்து “விஜயகாந்த் ஒரு நிமிஷம் இப்படி வாங்க” என்று சொல்லித் தனியாகக் கூட்டிப்போனார். அவரது முதுகில் கை வைத்தபடியே அவரிடம் என்னமோ பேசிவிட்டு மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டார்.

அவர் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ தெரியவில்லை. அவருடைய பேச்சில் என்ன மாயம் இருந்ததோ மகத்துவம் இருந்ததோ தெரியவில்லை.

பிரதான கதவைத் திறந்துகொண்டு வெளியில்போன விஜயகாந்த் அங்கிருந்த தமது ரசிகர்களிடம் எதையோ பேசினார். மீண்டும் உள்ளே வந்தார்.

என்ன ஆச்சரியம்……….. 

அத்தனை நேரமும் யாரையும் பேசவிடாமல், கேட்கவிடாமல், சும்மா உட்காரவிடாமல் செய்துகொண்டிருந்த வாழ்க கோஷமும், கூச்சல் குழப்பமும் சட்டென்று முடிவுக்கு வந்திருந்தது. 

அந்த இடத்தில் அந்த அளவு அமைதி குடிகொண்டு விட்டது.

சிறிது நேரம் சென்றது.

கலைஞரும் மற்றவர்களும் ஒவ்வொருவரிடமும் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஐயா ஒரு சின்ன சிற்றுண்டி சாப்பிட்டுரலாமா?” என்று கலைஞரிடம் கேட்டார் பழ.கருப்பையா. கலைஞர் எதிரில் இடம் சரிசெய்யப்பட்டு ஒரு குட்டி டேபிள் போடப்பட்டது.“அப்படியே பரிமார்றதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க உட்கார்ந்தபடியே சாப்பிடலாம்” என்றார்.

நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டார் கலைஞர்.

“எல்லாரோடவும் வரிசையில உட்கார்ந்துக்கறேன். அப்படியே எல்லாரும் ஒரே சமயத்துல சாப்பிட்டுரலாமே” என்றார்.

உடனடியாக பாய்களும் ஜமக்காளங்களும் விரிக்கப்பட்டு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுவதற்கு வரிசையாக மாணவர்கள் உட்காரவைக்கப்படுவார்களே அப்படி எல்லாரும் சுவரை ஒட்டி ஒரு வரிசை, எதிர்த்தாற்போல ஒரு வரிசை என்று நெடுகிலும் உட்கார்ந்துகொள்ள பணியாரம், அப்பம், போண்டா, பஜ்ஜி என்று பரிமாறப்பட்டது.

எல்லாருடனும் ஒன்றாய் தரையில் அமர்ந்து சாப்பிட்ட கலைஞர் ஏதோ பெயருக்கு சாப்பிட்டவர்போல எழுந்துகொண்டார். “நான் எழுந்துட்டேன்னு எல்லாரும் எழுந்துராதீங்க. உங்களுக்கெல்லாம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் சாப்பிட்டு எழுந்திருங்க” என்று சொல்லியபடியே ஒரு நாற்காலியில் அமர்ந்து தமக்கு வழங்கப்பட்ட காப்பியைப் பருகத் தொடங்கினார்.

இந்தக் காட்சி நிச்சயம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இத்தனை எளிமையாக எல்லோருடனும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு வேறு சில முதலமைச்சர்களும் தலைவர்களும் தயாராக இருப்பார்களா என்ற சிந்தனை நிச்சயம் இந்த இடத்தில் தேவை.

எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் காத்திருந்தவர்போல “நேரமாயிருச்சி. கிளம்பலாமா?” என்றார் கலைஞர்.

அதற்குள்ளாக மைதானத்தில் எத்தனைக் கூட்டம் வந்திருக்கிறது, இங்கே வராத மனோரமா போன்ற ஒரு சில பிரபலங்கள் மேடைக்கு நேரடியாக வந்துவிட்டார்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் காவலர்கள் மூலமாகச் சொல்லப்பட்டன.

முக்கியப் பிரமுகர்களும் மற்றவர்களும் கார்களில் ஏறிக்கொள்ள மற்ற பிரமுகர்களும் பிரபலங்களும் குறுநடை நடந்தபடியே மைதானத்தை அடைந்தோம். 

மைதானத்தில் பயங்கரக் கூட்டம்.

குறைந்தது ஐம்பதாயிரம் பேராவது இருந்தார்கள்.

முன்பு எப்போதோ ஒரு சமயம் அண்ணா கலைஞர் எல்லாரும் வந்திருந்தபோது இப்படியொரு கூட்டம் இங்கே கூடியிருந்தது எனவும், பின்னர் கவிஞர் கண்ணதாசன் காமராஜரைக் கூட்டிவந்து கூட்டம் போட்டபோது இந்த அளவுக்குக் கூடியிருந்தது எனவும் ‘அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் இத்தனைப் பெரிய கூட்டத்தை என் வாழ்நாளில் பார்க்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார் மைதானத்தின் எதிர் சாலையில் டீக்கடை வைத்திருந்த ஒருவர்.

நாங்கள் மைதானத்திற்குச் சென்று சேர்ந்தபிறகு சில நிமிடங்கள் கழித்துத்தான் கலைஞர், இளையராஜா சிவகுமார் விஜயகாந்த் போன்ற பிரபலங்களின் கார்கள் மேடையருகே வந்தன. மக்களின் ஆரவாரங்களுக்கிடையே கலைஞரும் மற்றவர்களும் மேடையேறினார்கள். எல்லாரும் மேடையில் நாற்காலிகளில் அமர வைக்கப்பட கலைஞர் மேடையின் நாற்புறமும் சென்று மக்களுக்குக் கையசைத்தபடி இருந்தார்.

நாங்கள் சிலர் மேடையின் ஒரு ஓரமாக நின்றுகொண்டோம்.

இங்கே மேடையில் யார்யாருக்கு எந்த நாற்காலி என்று பழ.கருப்பையா, முரசொலி மாறன் என்று இன்னும் சிலர் மற்றவர்களை அமர வைத்துக்கொண்டிருக்க “இங்கேயும் டிராமா பண்ணப்போறியா? பேசாமல் உன்னுடைய நாற்காலியில் உட்கார்” என்று முரசொலி மாறன் யாரிடமோ கோபமாகச் சொல்லிக்கொண்டிருந்ததும், ‘என்னுடைய தலைவன் காலடியில் உட்கார்ந்துக்கறேன்னு சொல்றேன். அதுக்கு விடமாட்டேங்கறீங்க’ என்று முரசொலி மாறனுக்கு யாரோ பதில் சொல்லிக்கொண்டிருந்ததும் கேட்டது.

மேடையில் கூட்டம் அதிகமாயிருந்ததால் பிரமுகர்கள் அமரும் இடத்தில் என்ன நடைபெற்றது என்பதும் யார் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.

பின்னர், விழா தொடங்கி நடைபெற்றதும், மனோரமா, தென்னரசு, கலைமணி, ஜி.கே.வெங்கடேஷ், தமிழண்ணல், வை.கோபால்சாமி ஆகியோர் மேடையில் பேசியதும் இவர்களைத் தொடர்ந்து சிவகுமார், விஜயகாந்த், இளையராஜா ஆகியோர் பேசியதும் கலைஞர் பேசும்போது இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தைத் தந்து பேசியதும் எல்லோருக்கும் தெரிந்த, பத்திரிகைகளில் செய்திகளாக வந்த நிகழ்வுகள்……

நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் கிளம்பிப் போனதும் பழ.கருப்பையா வீட்டில் தங்கியிருந்த நாங்கள் மட்டும் மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்று இரவு சிற்றுண்டியை முடித்துக்கொண்டு- நாங்கள் என்றால்- சிவகுமார், இளையராஜா, நான், என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மட்டும் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியதும், நடைபெற்ற கூட்டத்தைப் பற்றியும், பேசியவர்களின் பேச்சுக்கள் பற்றியும் இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட இசைஞானி பட்டம் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வதற்கு இரவு பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.

இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவிலும், அதிலும் குறிப்பாக ‘இசைஞானி’ பட்டம்  வழங்கப்பட்ட நிகழ்விலும் காலையிலிருந்து அவர் கூடவே தங்கியிருந்ததும், இரவு அதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றதும் மறுநாள் காலையில் அவருடனேயே காரில் கிளம்பி பாதிவழியில் இறங்கிக்கொண்டு நான் திருச்சி திரும்பியதும், அவர் மதுரை சென்றதும் இனிமையான நினைவுகள்…..

இளையராஜாவின் நினைவுகள் ஒருபுறமிருக்க, அன்றைய நிகழ்வுகளில் வைகோவின் செயல்பாடுகளும் மறக்க முடியாத பதிவுகளாக மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. 


அதுவும் அவர் கலைஞரைப் பற்றி அவ்வப்போது பேசுகின்ற பேச்சுக்கள் அத்தனையும் உடனடியாக எனக்கு எப்போதுமே காரைக்குடியில் பழ.கருப்பையா வீட்டில் நடைபெற்ற அந்த சம்பவத்தையும், அவர் சொன்ன ‘என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்’ வசனத்தையும் நினைவூட்டி விடுகின்றன.

அதுவும் தற்போது அவர் கலைஞரைப் பற்றிப் பேசிய பேச்சும் இந்த சம்பவத்தை மிக அதிகமாகவே நினைவூட்டிவிட்டன.

அத்தனை செயற்கையாக புகழ்பெற்ற ஒருவரால் நடந்துகொள்ளமுடியுமா என்பதும், போகிற போக்கில் என்னமாதிரியான டயலாக்குகளையும் சர்வ சாதாரணமாக ஒருவரால் அவிழ்த்துவிட முடியுமா என்பதும், எவ்வளவு பேர் இருந்தபோதிலும் அத்தனைப் போலித்தனமாக ஒருவரால் நடந்துகொள்ள முடியுமா என்பதுவும் இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே இருக்கிறது.

அந்தச் செயல்களின் மூலம் அவரது ‘கேரக்டர்’ எத்தகையது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ‘சீன் போட்டே ஜெயிப்பவர்கள்’ என்ற பட்டியல் ஒன்று தயார் செய்யலாம் போலிருக்கிறது.

நேரத்திற்கு ஏற்றாற்போல தங்களைக் காட்ட நினைக்கும் பச்சோந்திகள் மத்தியில் சமயமறிந்து, தலைவனின் குறிப்பறிந்து  செயல்படும் முரசொலி மாறன் போன்றவர்களின் ஆளுமையும் திறமையும்தான் கலைஞர் போன்றவர்களின் வெற்றிக்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.


ஒன்று மட்டும் நிச்சயம்…. கலைஞர் முரசொலி மாறனை இவ்வளவு விரைவாக இழந்தது அவருக்கு மிகப்பெரிய இழப்பு என்பது மட்டும் நிதர்சனம்.

Monday, February 15, 2016

பாண்டேக்களையும் ஹரிஹரன்களையும் கார்த்திகைச் செல்வன்களையும் பட்டி பார்க்கும் பழ.கருப்பையாக்கள், தமிழன் பிரசன்னாக்கள், சிவஜெயராஜன்கள், மனுஷ்ய புத்திரன்கள்……………………………….

சமீபத்தில் வினவு தளத்தில் ‘ரங்கராஜ் பாண்டேக்களைப் பட்டி பார்க்க பழ.கருப்பையாக்களால் முடியாது’ என்ற பெயரில் பதிவொன்று வந்திருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் பதிவு சரியானதுபோல் தோன்றினாலும் அந்த நேரலையையே திரும்பவும் போட்டுப் பார்த்தால் பழ.கருப்பையாவின் தாக்குதல்களுக்கு வினையாற்ற முடியாமல் ரங்கராஜ் பாண்டே சோர்ந்து போவதையும், முகம் சுருங்கிப்போய் உட்காருவதையும் ‘நான் எதுவும் உங்களைக் கேள்வி கேட்கப்போவதில்லை. நீங்களே பேசுங்கள்’ என்று ஜகா வாங்குவதையும் பார்க்கமுடியும்.
பழ.கருப்பையா ஏதோ அந்த நேரலைப் பிடிக்காமல் பாதியிலேயே எழுந்துபோவதுபோல் தோற்றம் கொண்டுவர அவர்கள் முயன்றிருந்தபோதிலும்- சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிமுடித்துவிட்டு, பேசவேண்டியதையெல்லாம் பேசி முடித்துவிட்டு, பாண்டே போன்றவர்களை என்னென்ன கேட்கமுடியுமோ அத்தனையும் கேட்டுவிட்டு, அவர்களை என்னென்ன விமரிசிக்க முடியுமோ அத்தனையையும் விமரிசித்துவிட்டு பழ.கருப்பையா கம்பீரமாக எழுந்து வருவதையும் பார்க்கமுடியும்.

‘அதிமுகவில் சென்ட்ரலைஸ்ட் ஊழல்னு சொல்றேன். அதுபற்றிப் பேசமாட்டேங்கறீங்க. அதன் ‘பில்லர் ஜெயலலிதா’ன்னு சொல்றேன். அது தொடர்பான பேச்சை வளர்க்க மாட்டேங்கறீங்க. என்னுடைய தொகுதியில் நடைபெற்ற மைதான விவகாரத்தையும், பர்மா பஜாரில் கழிவறைக் கட்டமுடியாமல் போனது பற்றியும் கவலைப்பட மாட்டேன்றீங்க. நான் எந்தக் கட்சியில் இருந்தேன் என்பதுதானா பெரிய விஷயம்? முக்கியமான விஷயம் என்னவோ அதுக்கு வாங்க. நான் இன்னமும் நூறு கட்சிகூடப் போவேன். அது வேறு விஷயம்’- என்று பொட்டில் அடித்தாற்போல் பேசினார் பழ.கருப்பையா.

பழ.கருப்பையா போன்ற இலக்கிய ஜாம்பவான்களுடனெல்லாம் ரங்கராஜ் பாண்டே போன்றவர்களின் விவாதத் திறமைகளெல்லாம் உறைபோடக் காணாது.

ரங்கராஜுக்கெல்லாம் மாஃபா பாண்டியராஜன்களும், பண்ருட்டி ராமச்சந்திரன்களும்தான் சரிப்பட்டு வருவார்கள் என்பதைப் பறைசாற்றிய நேரலை அது.

ரங்கராஜ் பாண்டே தன்னுடைய பேச்சில் அடிக்கடி ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதாவது, யாரைப் பேட்டி காணுகிறாரோ அவர் சொல்லுவதையெல்லாம் அப்படியே கேட்டுக்கொண்டு உட்கார மாட்டாராம்.

அப்படியிருந்தால் அது வந்திருப்பவர்களின் ‘உரை’ யாகிவிடுமாம்.

உரைக்கு இங்கே இடமில்லையாம்.

உரையாடல் நடத்துவதுதான் அவர்கள் நோக்கமாம்.

உண்மையில் மிகவும் நல்ல நோக்கம். அவர்கள் ‘அப்படிப்பட்ட’ உரையாடலை எல்லாரிடமும் நடத்துவதாக இருந்தால்.

ஆனால் ரங்கராஜ் பாண்டேக்களின் ‘நோக்கம்’ அதுவாக இல்லை. ‘வேறுமாதிரியானதாகவே’ இருக்கிறது.


 ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசுகிறவர்கள் என்ன சொன்னாலும் அது வெறும் உரையாகவே இருந்தாலும் பதினாலு மணிநேரத்திற்கும் கேட்டுக்கொண்டு இருப்பது; ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசுகிறவர்கள் எவராயிருந்தாலும் முதல் வார்த்தையிலேயே அதனை திசை திருப்பி அவர்களை மேற்கொண்டு ஒற்றை வார்த்தைக்கூடப் பேசவிடாமல் செய்து இவர்கள் கேட்கும் ‘ஙொப்புரானக் கேள்விக்கெல்லாம்’ அவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது………………


இதுதான் கேள்விக்கென்ன பதில் பகுதியிலும் நடக்கிறது;

நேருக்கு நேர் பகுதியிலும் நடக்கிறது.

புதிய தலைமுறையின் ஆயுத எழுத்து பகுதியிலும் நடக்கிறது.

அரசியல்வாதிகள் ‘உரை நிகழ்த்துவது’ எப்படி நேயர்களுக்கு சுவாரஸ்யம் தராதோ, அதைப் போலவே நெறியாளர்கள் வெறுமனே கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதும் நேயர்களுக்கு சுவாரஸ்யம் தராது என்பதை இந்த சேனல்களும் சரி - ‘நெறியாளர்களும்’ சரி -தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆயுத எழுத்து, நேருக்கு நேர் என்றெல்லாம் தலைப்பு வைத்துக்கொண்டு இவர்கள் யாராவது ஒருவரைக் கூப்பிட்டு வைத்துக் ‘குடைந்துகொண்டிருப்பதற்குப்’ பெயர்தான் செவ்வி அல்லது பேட்டி அல்லது நேர்காணல் என்றால் –

அதற்குபதில் ‘இன்றைக்கு நாங்கள் அதிமுகவைக் கேட்கிறோம்; இன்றைக்கு நாங்கள் திமுகவைக் கேட்கிறோம்’ என்று நிகழ்ச்சி வைத்து அங்கே பிரமுகர்களுக்கு பதில் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களின் போட்டோவை வைத்துவிட்டு ரங்கராஜ் பாண்டேவோ, ஹரிஹரனோ, கார்த்திகைச் செல்வனோ உட்கார்ந்து ஒரு மணி நேரத்திற்கும் சரமாரியாய்க் கேள்விகளை மட்டும் வீசிக்கொண்டே இருக்கலாம்.

ஆமாம் வெறும் கேள்விகளை மட்டும்……!

நிகழ்ச்சிக்கு ‘கேள்வி நேரம்’ என்று சூப்பரான தலைப்பும் வைக்கலாம்.

அப்படியில்லாமல் இவர்கள் நேரலை என்றும் விவாதங்கள் என்றும் வைத்துக்கொண்டு பலதரப்பட்டவர்களையும் கூப்பிட நினைத்தால் பழ.கருப்பையா அனுபவம் மட்டுமல்ல, அப்பாவு அனுபவமும், மனுஷ்யபுத்திரன் அனுபவமும் நேரத்தான் போகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் யார் ஆப்பு வைக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்தபடி இருந்தது நடந்தே விட்டது. ஆரம்பத்தில் இந்த விளையாட்டை இவர்கள் தினசரி தாங்கள் நடத்தும் விவாதங்களில் கடை பரப்புவார்கள்.

அதுவும் மாதக்கணக்கில் யாரும் கவனிக்கப்படாமலேயே ஓடிக்கொண்டிருந்தது.

அதனை திமுக சார்பில் முதலில் முறியடித்தவர் தமிழன் பிரசன்னா.

இந்த நெறியாளர்களின் பாச்சாவும் சரி; இவர்களுக்கான நிலைய வித்வான்களின் பாச்சாவும் சரி பிரசன்னாவிடம் பலிக்கவில்லை. இதுபற்றி நானே ஒரு பதிவும் எழுதியிருந்தேன்.

அந்தப் பதிவுக்கான எதிர்வினை பிரமாதமாக இருந்தது.

எல்லாரிடமும் ஒரு தெளிவு பிறந்தது.

இனி இந்த நெறியாளர் என்ற பெயரில் உட்காரும் நரியாளர்களின் குயுக்திகளுக்குப் பணிவதில்லை என்ற உணர்வு எல்லாரிடமும் வந்தது. குறிப்பாகத் திமுக சார்பாகப் பேசவந்தவர்களிடம் அதிகமாகவே வந்தது. தங்களுக்கான முறை வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர் சிவ ஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும், அப்பாவுவும்.

‘அதிமுக மீது தவறு என்கிறாயா? அதிமுக தவறு செய்தது என்று சொல். அதை விட்டுவிட்டு இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான் திமுக இதனைத் துவங்கி வைத்தது. அதிமுகவும் அதன் வழியே போய்க்கொண்டிருக்கிறது என்ற தொனியிலேயே பேசாதே’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

‘இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான்’ என்று மொடாக்குடியர்களைப்போல் பேசிப் பழகியவர்களின் சுருதி சற்றே இறங்க ஆரம்பித்தது.

நெறியாள ‘மகாப்பிரபுக்கள்’ கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கமாகப் பார்த்தபிறகுதான் அவர்களின் வழக்கமான டயலாக்குகளை அவிழ்க்க ஆரம்பித்தனர்.

ஏனெனில் இளையவர்களான சிவஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும் மாத்திரமல்ல அப்பாவுவும் இவர்களைப் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்தார். எல்லா விஷயங்களிலும் மிகவும் நிதானமாகவும் கண்ணியத்துடனும் பேசும் வழக்கறிஞர் கண்ணதாசனைப் போன்றவர்களின் கோபத்திற்கு இவர்கள் எப்போது ஆளாகப் போகிறார்களோ தெரியவில்லை.

‘எங்களைப் பேசவிடு; பேசிய பிறகு கேள்வி கேள். கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கு பதில் சொல்லத் துவங்குவதற்குள் மளமளவென்று பத்துப் பதினோரு கேள்விகள் கேட்டால் என்ன அர்த்தம்? அதிமுக சார்பாகப் பேசுபவர்களை நீ அப்படி மடக்குகிறாராயா?’ என்று நெறியாள ‘மகாப்பிரபுக்களைப்’ பார்த்து சிவஜெயராஜனும் அப்பாவுவும் கேட்க ‘மகாப் பிரபுக்கள்’ பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

‘சரி சொல்லுங்க’ என்று விட்டுக்கொடுத்து விட்டேற்றியாய் மவுனம் காத்தனர்.

திமுகவைக் கேள்வி கேட்கக் கூடாது என்பது அல்ல. கேள். தாராளமாகக் கேள். ஆனால் அதிமுக தவறு செய்தது என்பதைச் சொல்லும்போது ‘திமுக மட்டும் அதே தவறைச் செய்யவில்லையா?’ என்று கேட்டு அதிமுக செய்த தவறை நீர்த்துப் போனதாகக் காட்டி அதிமுகவின் அந்தத் தவறுக்கும் திமுக மீதே பழிபோட்டுத் தப்பிக்க வைப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி? என்ன கயவாளித்தனம் இது?

“இன்னமும் எத்தனை யுகங்களுக்கு இவன்கள் யார் எந்தத் தவறு செய்தாலும் உதயகுமார் மரணத்தையும், மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தையும், 2ஜி ஊழலையும் மட்டுமே சொல்லிக்கொண்டு எல்லா தவறுகளையும் நியாயப்படுத்திக்கொண்டே இருக்கப்போகிறான்கள்?” என்று கேட்டார் நண்பர் ஒருவர்.

அந்த நண்பருக்கு என்னிடம் பதில் இல்லை.

இந்தப் பெரிய சம்பவங்களை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

ஒரு விவாதத்தில் முத்துக்குமாரசாமி என்ற பொறியாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தவறு என்று சொல்லி வாதாட முன்வந்தபோது, உடனே அதனை இடை மறித்த ரங்கராஜ் “உங்களுக்கு சத்யநாராயணா என்பவர் திமுக ஆட்சியில் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனது தெரியுமா?” என்று கேட்டு இடை மறித்தபோதுதான் இந்த நெறியாள சண்டியர்கள் எந்தத் தவறையும் ‘நியாயப்படுத்தும்’ வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பதற்கு ‘மந்திரித்து விடப்பட்டிருக்கிறார்கள்’ என்ற உண்மை புரிந்தது.

ஆக நெறியாளர்களைப் பொறுத்தவரை தவறுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று மட்டுமே விரும்புகிறவர்கள் போலும்.

பல தவறுகள் நடைபெற்றன. அதனால்தான் அதற்கான தண்டனை திமுகவுக்கு வழங்கப்பட்டது.
திமுக தோற்கடிக்கப்பட்டது.

பல தவறுகளால் ஒரு கட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு அடுத்துவந்த அரசியல் கட்சி அதுபோன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொள்வதுதானே ஒரு அறம்சார்ந்த ஊடகத்தின் பணியாக இருக்கமுடியும்?

எந்தத் தவறு எங்கே நடந்தாலும் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி ‘இப்படியொரு தவறு நடந்ததனால்தானே அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அதே போன்ற தவறை நீ எப்படிச் செய்யலாம்? என்று கேள்வி எழுப்புவதுதானே நியாயத்தின் பால் நிற்கும் ஊடகம் செய்யவேண்டிய காரியம்?

அதிமுக அதுபோன்ற தவறுகளைச் செய்யும்போது கண்டிக்கவேண்டுமா? வேண்டாமா?

ஏதோ ஒரு பெயரில் கதாகாலாட்சேபம் உருவாக்கி கீர்த்தனாம்பரத்திலே திமுக இந்தத் தவறைச் செய்தது, ஜெயலலிதா வாழ்கவாழ்க; ஆதி காலத்திலே மு.க. இப்படியொரு தவறைச் செய்தார் ஜெயலலிதா வாழ்கவாழ்க; திரேதா யுகத்திலே கருணாநிதி இதே தவறைச் செய்தார், ஜெயலலிதா வாழ்கவாழ்க; போன ஆட்சியிலே திமுக இந்தத் தவறைச் செய்தது அம்மா வாழ்க வாழ்க; என்று பஜனைப் பாடிக்கொண்டிருப்பதற்குப் பெயர் ஊடக விவாதங்களா?

இந்த மகாப்பிரபுக்களின் சிந்தனையெல்லாம் வேறுவகைப் பட்டது.

யார் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள். அது எத்தனை யுகங்களுக்கு வேண்டுமானாலும் நடக்கட்டும்….. நீடிக்கட்டும்.


எப்படியாவது தோண்டி, எங்கிருந்தாவது துருவி ‘திமுக இதற்கு முன்னரே இதே போன்ற தவறைச் செய்திருக்கிறது’ என்பதை நாங்கள் நிரூபித்துவிடுகிறோம். அதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளன. அதற்கேற்ப பேசுவதற்குப் பழக்கப்பட்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.


நீங்கள் தவறுகளைத் தொடருங்கள்’ என்ற சித்தாந்தம் மட்டுமே இந்த சேனல்களின் பிழைப்பாக இருக்கிறது.

கலைஞரின் மீதான எதிர்ப்பும் வெறுப்பும் இவர்களிடம் எந்த அளவுக்குப் புரையோடிப்போய் இருக்கிறது என்பதற்கு சமீபத்திய  உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாம்.

ஒருவிழாவிலே ஜெயலலிதா ஒரு குட்டிக்கதையைச் சொன்னார். ஜெயலலிதா சொன்ன கதையை வைத்துக்கொண்டு ஸ்டாலினையும் கருணாநிதியையும் ஒருநாள் முழுக்க கேலியாகவும் கிண்டலாகவும் சித்தரித்து பிழைப்பை ஓட்டிவிட்டார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அடுத்து வந்தது குட்டிக்கதைக்கான பதில். பதில் சொன்னவர் கலைஞர்.

‘அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோல குட்டிக்கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்’ என்று ஜெயலலிதாவை லேசாக ஒரு தட்டுத்தட்டிவிட்டு ஆரம்பிக்கிறார் கலைஞர்.

‘எந்த பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்பமாட்டார். அது குடும்பம் நடத்தும், பிள்ளை பெற்றவர்களுக்குத் தெரியும்’ என்று எடுத்த எடுப்பில் ஒரு போடு போடுகிறார்.

‘அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். எப்படியோ அடித்த காற்றில் மேலே வந்து கோபுரக் கலசத்தில் ஒட்டிக்கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச் சொல்லத்தான் தெரியும்’ என்கிறார்.

இந்த இடத்தில் ஆரம்பித்து விடுகிறது. ரங்கராஜ் பாண்டேக்களுக்கு அஸ்தியில் ஜூரம்.

‘கலைஞர் 

ந்தக் கதையைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் இந்தக் கதைக்கு பதில் சொல்லாமல் ஒதுங்கியிருந்திருக்கலாம்; கவுரமாக இருந்திருக்கலாம்; தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஜெயலலிதாவை ஆப்பசைத்த குரங்கைப்போல் ஏமாறப்போவது நிச்சயம் என்கிறார்., ரத்தம் குடிக்கக் காத்திருக்கிறார் என்கிறார்……….’ இப்படியெல்லாம் அவ்வளவு கீழே போயிருக்கக் கூடாது. தன்னுடைய தரத்தை இவ்வளவு கீழே இறக்கியிருக்கக் கூடாது’ என்று எப்படி எப்படியோ விமர்சித்து கீழே விழுந்து அழுது புரள்கிறார் ரங்கராஜ்பாண்டே.


கலைஞர் தொடர்கிறார். ‘உண்மையில் கதை என்ன தெரியுமா? தந்தையும் மகனும் அன்போடும் பாசத்தோடும் இருப்பதையும் அரசியலை முழுமையாக நடத்துவதையும் கவனித்துவந்த எதிர்வீட்டுப் பெருமாட்டிக்குப் பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை. அந்த அம்மையாருக்குப் பிள்ளையும் கிடையாது. குட்டியும் கிடையாது. ஆனால் குடும்பமே எனக்கு இல்லையென்று சொல்லிக்கொண்டே ஊரிலே உள்ள சொத்துக்களையெல்லாம் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள படாத பாடு படுவார். மலைப்பிரதேசங்களில் எல்லாம் தேயிலை எஸ்டேட்டுகளை வாங்கிவைத்துக்கொண்டு நாடாறு மாதம் காடாறு மாதம் என்பதைப்போல் மாளிகையிலும், அரண்மனையிலும் ஓய்வெடுத்துக்கொண்டு காலம் தள்ளி வருபவருக்கு எதிர் வீட்டில் தந்தையும் மகனும் பாசத்தோடு இருப்பது பிடிக்குமா? அல்லது பொறுக்குமா? எப்போது தந்தை மகன் ஆகியோருக்குத் தகராறு வரும், பிளவு வரும், நாம் ரத்தம் குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர் வீட்டுச் சீமாட்டி ஆப்பசைத்த குரங்கைப்போல ஏமாறுவது நிச்சயம்.
கதையில் வரும் பேராசைப் பெருமாட்டியைப் பற்றித்தான் நான் இங்கே விளக்கினேன்.’ என்று கதையை முடித்திருக்கிறார். கலைஞரின் கதை முடிந்து விடுகிறது.

ரங்கராஜ் பாண்டேக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த பதில் வருமென்று ரங்கராஜ் பாண்டேக்களுக்கு மட்டுமல்ல, சாதாரண குப்பன் சுப்பன்களுக்கும் தெரியும்.

யாரோ எழுதிக்கொடுத்ததைப் படிக்கும் ஜெயலலிதாவே அவ்வளவு கிண்டலடிக்கிறார் என்றால், ‘சொந்தமாய்’ எழுதி பதிலளிக்கப்போகும் கலைஞரின் பதில் ஜெயலலிதாவை எப்படியெல்லாம் பதம் பார்க்கும் என்ற விஷயமும் முனியன்களுக்கும் தெரியும், முகேஷ்களுக்கும் தெரியும்.

தவிர கலைஞரின் எழுத்தைப் புரிந்தவர்களுக்கு அவர் எம்மாதிரி விஷயங்களுக்கு எம்மாதிரி எழுதுகிறவர் என்ற அடிப்படை சூட்சுமங்களும் புரியும்.

வாயைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு புத்தி சொல்லுவதை விட்டுவிட்டு-

கலைஞரைப் போல் கைதேர்ந்த ஒரு படைப்பாளிக்குப் பாடம் சொல்லவந்துவிட்டார்கள் இந்தப் பரப்புரை வியாபாரிகள்.

இப்போது மனுஷ்யபுத்திரன் விஷயத்திற்கு வருவோம்.

இந்த விஷயமும் இணையத்தில் இப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆசிரியராகவும், ஒரு கவிஞராகவும், தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு வெற்றிகரமான பங்கேற்பாளராகவும் தன்னை சமூகத்தில் நிரூபித்துக்கொண்டுவிட்ட பின்னர் தமக்கொரு அங்கீகாரம் தேடிக்கொள்வதற்காக ஒரு அரசியல் கட்சியில் இணைகிறார்.

அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் அவர் அரசியல் கட்சியில் இணைந்தார் என்பதற்காகவே அவரை தரக்குறைவாக விமர்சிப்பதும் பேசுவதும் கண்ணியத்திற்குரியதாக இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்துகொண்ட மனுஷ்யபுத்திரன் பழ.கருப்பையாவைப் போலவே ‘பட்டிபார்க்கும் வேலையை’ வெற்றிகரமாகச் செய்துவிட்டுப் போனார் என்பதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சில கட்சிகள் ஒன்றுசேர்ந்து வரப்போகும் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள்.

இவர்கள் ஒன்றும் நேற்றைக்குத் தொடங்கபட்ட புதிய இயக்கங்களோ புதிய கட்சிகளோ கிடையாது.
இந்த இயக்கத்தில் சகாயங்களோ குறைந்தபட்சம் புதிய சிந்தனைகளை விதைக்கும் சுப.உதயகுமார்களோ கூட இல்லை.

எல்லாரும் எல்லாக் கட்சிகளிலும் பழம் தின்று கொட்டைப்போட்ட பழைய நீர்த்துப்போன அரசியல்வாதிகள்தாம்.


இருக்கின்ற எல்லாக் கட்சிகளிலும் ஏதாவதொரு சமயத்திலோ பல சமயங்களிலோ கூட்டணி வைத்து எல்லாப் பந்திகளிலும் நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுந்து போனவர்கள்தாம்.

ஆனால் இவர்களை திடீரென்று ஆதரிக்கத் துவங்கியிருக்கின்றன இன்றைய ஊடகங்கள்.
காரணம் இவர்களுக்கு இருக்கும் சித்தாந்தம்தான்.

அதாவது திமுகவைப் போட்டுத் தாக்குவது.

அதிலும் எல்லா மகாப்பிரபுக்களைப் போலவும் அதிமுகவை ஒப்புக்காகவும், திமுகவை மரண அடி அடிக்கிறமாதிரியாக கடுமையாகவும்- மிகமிகக் கடுமையாகவும் விமர்சித்துத் திட்டித் தீர்ப்பது.

இந்தப் பாணி விவாதம் ஒன்றில் உட்காருகிறார் மனுஷ்யபுத்திரன்.

அந்த விவாதத்திலே மொத்தம் 4 பேர். மனுஷ்ய புத்திரனுக்கு கிட்டத்தட்ட நான்கு பேரின்- முன்னாள் எம்பி சுப்பராயன், ஆளூர் ஷாநவாஸ், ஷேக்தாவூத், ப.கோலப்பன் என்ற பத்திரிகையாளர் மற்றும் கார்த்திகைச் செல்வன் என்ற நான்குபேர்… அத்தனைப்பேருமே நேரடியாக அல்லது மறைமுகமாக ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்..

இவர்களுடைய கருத்துகளுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு மனுஷ்யபுத்திரனுக்கு மட்டுமே இருக்கிறது.

கார்த்திகைச் செல்வன் என்கிற ‘புதிய தலைமுறை’யின் நெறியாளர் ஆரம்பத்தில் நடுநிலையாளராகத் தமது தொழிலை ஆரம்பித்தாலும் இரண்டொரு நாட்களிலேயே வழக்கமான தமிழ்ச் சேனல்களுக்கேயுரிய நெறியாளராகத் தம்மைத் ‘தகவமைத்து’க் கொண்டுவிட்டவர்.
திமுக பிரதிநிதிகளைப் பேசவிடாமல் செய்வதும் ஒருவார்த்தைப் பேசத் துவங்குவதற்குள் பல நூறு கேள்விகள் கேட்பதுமாக இவரின் ‘முன்னோர்களிடமிருந்து’ மிகச் சுலபமாக ‘நெறியாளர் கலையைக்’ கற்றுத் தேர்ந்தவர்.

இத்தகைய அமைப்பில் இவர்கள் மனுஷ்யபுத்திரனை நோக்கி சரமாரிக் கேள்விகளை வீசி அவர் பதில் சொல்லாமல் தவித்துப்போகவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்களோ என்னவோ வழக்கம்போல் அவர்களின் ‘மூன்றரை ஆண்டுக்கால பாணியில்தான்’ விவாதத்தை ஆரம்பித்தனர்.

ஆனால் மனுஷ்யபுத்திரனின் ‘எதிர்கொள்ளல்’ வேறு மாதிரி அமைந்துவிட்டது. 

மக்கள்நலக்கூட்டணியினரையும் சரி, கார்த்திகைச் செல்வனையும் சரி போட்டுத் தாளித்து எடுத்துவிட்டார் மனுஷ்யபுத்திரன்.

இவர்களின் எந்தக் குறுக்கீட்டிற்கும் பலியாகவில்லை அவர். இவர் பேச அவர்களும் பேச இவரை எப்படியாவது வாயடைத்து உட்காரவைத்துவிட அவர்கள் செய்த முயற்சி இறுதிவரை பலிக்கவே இல்லை.

குழாயடிச் சண்டையில் இருவர் அல்லது மூவர் நால்வர் என்று பேசியபோதும் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதில் சளைக்காமல் இருந்து சாதித்தார் மனுஷ்யபுத்திரன். சில விஷயங்கள் புரிபடாமல் போய்விட்டனவே தவிர மற்றவர்களின் வாதங்களை விடவும் மனுஷ்யபுத்திரன் வாதங்கள் அதிகம் புரிந்தன.

இவருக்கும் ஆளூர் ஷாநவாஸுக்கும் நடந்த வாக்குவாதம்போல் தோன்றினாலும் மொத்த விஷயங்களையும் ஒருங்கிணைத்துத்தான் பதில் சொன்னார் மனுஷ்யபுத்திரன். (விவாத பங்கேற்பாளர்களில் ஆளூர் ஷாநவாஸைப் பற்றி எனக்கு வேறு நல்ல மதிப்பீடுகள் உள்ளன என்பது வேறு விஷயம்)

மனுஷ்யபுத்திரனின் பல வாதங்கள் சிந்தனைக்குரியவை. அவர் எடுத்துவைத்த ஆணித்தரமான வாதங்கள் சில;

1)‘அதிமுக தன் அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடி ஒளிகிறது.  அவர்கள் கட்சிகளிலிருந்து யாரையும் பதில் சொல்ல அனுப்பாமல் சில proxyகளை அனுப்புகிறது. மக்கள்நலக் கூட்டணியினருக்கும் அதிமுக பிராக்சிகளுக்கும் நாங்கள் தினமும் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?’

2)‘ஒரு ஆளும் கட்சியின் நாலரை ஆண்டுக்கால மக்கள் விரோதக் குற்றச் செயல்களைப் பேசவேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சியான திமுகவைக் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்ன?’

3)‘விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலைஞரை தலித்துகளின் கடவுள் என்றாரே எந்த உணர்வின் அடிப்படையில் அது சொல்லப்பட்டது?’

4)‘திமுகவின் சமூகநீதிக்கான போராட்டங்களை, சாதனைகளை அத்தனை எளிதில் நீங்கள் கடந்துசென்றுவிட முடியுமா?’

5)‘இன்று ம.ந.கூவை திடீர்ப் பாசத்துடன் ஆதரிக்கும் நடுநிலை ஊடகங்கள் எப்போதாவது விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களைக் கண்டுகொண்டதுண்டா? ம.ந.கூ மேல் ஏன் இந்த திடீர்ப் பாசம்?’

6)‘பாஜகவுக்கு ஒரு போலியான முக்கியத்துவத்தை ஊடகங்கள் உண்டாக்கி அதன் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று அணிகள் உருவாக்கப்பட்டதுபோல் இப்போதும் செயல்படவேண்டிய ரகசியமென்ன? அப்போது மூன்றாவது அணி அதிமுகவுக்கு ரகசியமாக உதவியதுபோல் இந்த அணியும் உதவும் என்பதுதானே?’

7)‘கடந்த காலம் முழுக்க மாறி மாறி கூட்டணி அமைத்தவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பு ஆட்சியில் பங்கு கேட்டு அதற்கான ரெஸ்பான்ஸ் இல்லையென்றதும் மாற்றத்திற்கான புதிய சக்தி என்பது யாரை ஏமாற்ற?’

8)‘மக்கள் நலன் சார்ந்து அப்படி இவர்கள் நடத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் என்னென்ன?’

9)‘மக்கள்நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் வாக்குவங்கி உள்ள கட்சி. இடதுசாரிகளுக்கோ வைக்கோவுக்கோ வாக்குவங்கி என்ன என்பது ஊரறிந்த ரகசியம்’ – என்ற மனுஷ்யபுத்திரனின் சரமாரியான கேள்விகள் அதிகம் கவனம் பெறவேண்டியவை.

மக்கள் நலக்கூட்டணியை ஒரு புறத்தில் வைப்போம்.

இது தேர்தல் காலம் என்பதால் வாக்கு வங்கி குறித்தும் பேசவேண்டியது அவசியமாகிறது.

அதாவது அதிமுக சென்ற நாடாளுமன்றத்தில் வாங்கிய அதே வாக்குகள் வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலிலும் அதிமுகவுக்கு வரும் என்ற ஒரு வாதத்தை ‘ஊடக மகாப்பிரபுக்கள்’ திரும்பத் திரும்ப முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வாதம் என்பது-

அதிமுக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகிதம் வாக்குகள் பெற்றன என்பது அவர்கள் கூற்று.

தேர்தல் வெற்றியையும், கோர்ட்டு தீர்ப்புகளையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றாக வேண்டிய சமூகத்தில் இருக்கிறவர்கள் நாம். அதிமுக வெற்றி பெற்ற கட்சி என்பதனால் 44 சதவிகிதம் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

இந்த 44 சதவிகிதம் எப்படி வந்தது?

அதாவது இந்தியா முழுமைக்கும் மோடி அலை வீசிற்று. மோடிதான் பிரதமர் என்ற எண்ணம் இந்தியா பூராவும் விதைக்கப்பட்டது.

அதனால் இந்தியா முழுமைக்குமான பெருவாரியான ஓட்டுக்கள் மோடிக்கு ஆதரவாக விழுந்தன.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வேறொரு சிந்தனைதான் பலமாக எழுப்பப்பட்டது.

பாஜகவுக்குத் தமிழகத்தில் வேர்கள் இல்லை. அதனால் மோடிக்கு ஆதரவான வாக்குகள் தமிழகத்தில் ‘வருவதற்கு’ வாய்ப்பில்லை. காங்கிரஸில் தகுந்த ஆள் இல்லை. அதனால் காங்கிரஸ் நாடாளுமன்றத்தேர்தலில் ‘கணக்கிலேயே’ இல்லை.

ஆகவே, வேறொரு சிந்தனையும், வேறொரு செயல்திட்டமும் இங்கே முன்வைக்கப்பட்டது.
 தேர்தல் முடிவுகளில் யாருக்கும் மெஜாரிடி கிடைக்காது.
 

எல்லாக் கட்சிகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் என்றுதான் வரும்.


அப்படி எல்லாக் கட்சிகளுக்கும் மெஜாரிடி இல்லாமல் போகும்போது தமிழகத்தின் அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று போகும் ஜெயலலிதாவைத்தான் மற்றவர்களும் பிரதமர் பதவிக்கு முன்நிறுத்துவார்கள் என்ற சிந்தனை இங்கே விதைக்கப்பட்டது.

ஆம் மிக வலுவாக விதைக்கப்பட்டது.

அப்படி ஒரு நிலைமை வந்தால் அதில் ஜெயலலிதா தம்மை ‘எப்படியாவது முன்னிறுத்திக் கொள்வார்’- என்றே தமிழன் நினைத்தான்.

அந்த சிந்தனையை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா தம்மைத் தாமே வேட்பாளராக நிறுத்திக்கொண்டார்.

‘அடுத்த பிரதமர் தான்தான்’ என்பதைப் போகுமிடங்களில் எல்லாம் சொல்லிவந்தார்.
‘எனக்கு ஓட்டுப் போடுங்கள் நான் பிரதமராக வருவேன்’ என்றார்.

அதிமுக பேச்சாளர்கள் அத்தனைப்பேரும் ‘அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்றே உரக்கக் கூவினர்.
இந்தக் கூவல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்படிப் பார்த்துக்கொண்டனர்.

முப்பத்தெட்டுப்பேர் அல்லது முப்பத்தொன்பது அதிமுகவினர் எம்பிக்களாக வந்தால் எப்படி ஒரு கட்சியின் தலைவர் பிரதமராக வரமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தேவேகௌடா உதாரணமாகக் காட்டப்பட்டார்.

இருபது சொச்சம் எம்பிக்களை வைத்துக்கொண்டிருந்த தேவேகௌடாவே –

இந்த ‘வே’ ஒரு முக்கியமான ‘வே’. ஆமாம், தேவேகௌடா’வே’ பிரதமர் ஆகும்போது

அம்மா ஆகமாட்டார்களா?

என்ற சிந்தனை தமிழனின் மனதில் மிக ஆழமாக விதைக்கப்பட்டது.

அதனால் ‘அடுத்த பிரதமர் ஒரு தமிழர்’ என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டான் தமிழன்.

அதிமுகவின் 44 சதவிகிதம் என்பது இப்படி வந்ததுதான். இதற்காக வந்ததுதான்.

ஆனால்-
மோடி தனி மெஜாரிடியில் வந்துவிட்டார் என்றதும் ‘அம்மா பிரதமர்’ என்ற செய்தியெல்லாம் மறக்கவைக்கப்பட்டது.

‘அப்படிச்சொல்லித்தான் 44 சத ஓட்டுக்கள் பெற்றார்’ என்ற விஷயம் மூழ்கடிக்கப்பட்டது. அவர்களுக்குத் ‘தேவையென்னவோ’ அதனை மட்டும் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.

ஆமாம்-

அதிமுகவின் ஓட்டுவங்கி 44 சதம் என்பதை மட்டுமே தூக்கி நிறுத்தினார்கள்.

ஏனையச் செய்திகள் மிகமிக சவுகரியமாக மறக்கடிக்கப்பட்டன.

இதுதான் தமிழகம்.

ஆகவே ‘44 சதவிகித ஓட்டு’ என்பது ‘ஒரு தமிழன் பிரதமராக வருவதற்கு’ என்று மக்களை நம்பவைத்தால் சுலபமாக வரக்கூடிய சதவிகிதம்தானே தவிர,


குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஓட்டுவங்கி அல்ல.

இதனை அறிவார்ந்த மகாப்பிரபுக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து மதுவிலக்கு விஷயம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் இருந்தது என்பதும் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மறுபடியும் மது கொண்டுவரப்பட்டது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் கருணாநிதியே மறுபடியும் மதுவிலக்கைக் கொண்டுவந்தார் என்ற விஷயத்தை மட்டும் மறந்துவிடுவார்கள் இந்த ‘நன்மக்கள்’.

அப்படி கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கை மறுபடியும் நீக்கியவர் மனிதப் புனிதரான எம்ஜிஆர் என்பது மட்டும் இவர்களுக்கு மிகச் சவுகரியமாய் மறந்துவிடும்.

இதனைச் சொல்லாமலேயேதான் இவர்கள் தங்கள் வாதங்களை வடிவமைத்துக்கொள்வார்கள்.

யாராவது இவர்களை அதுபற்றிக் கேட்டுவிட்டால் (கவனியுங்கள். ‘கேட்டால்’ மட்டுமே)”சரி அப்படியே இருக்கட்டுமே. எம்ஜிஆர் நீக்கிய மதுவிலக்கை கருணாநிதி திரும்பவும் ஆட்சிக்கு வந்தாரே அப்போது ஏன் கொண்டுவரக்கூடாது?” என்று எகத்தாளமான கேள்விகளை வீசுவார்களே தவிர எம்ஜிஆர் ஏன் நீக்கினார் என்ற சின்னஞ்சிறு கேள்வியைக்கூட இவர்கள் கேட்கமாட்டார்கள்.

இந்த நன்மக்களுக்கு சிறிதாவது அறவுணர்வு இருந்தால் கருணாநிதி கொண்டுவந்த மதுவிலக்கை எம்ஜிஆர் ஏன் நீக்கவேண்டும் என்பதுபற்றிக் கண்டித்துப் பேசிவிட்டு


– எம்ஜிஆர் மீது கண்டனக்கணைகளை வீசிவிட்டு-


கருணாநிதி திரும்பவும் நீக்கியிருக்கக்கூடாதா? என்றுதானே பேசவேண்டும்?

அந்த யோக்கியதையை எல்லாம் இந்த நன்மக்களிடம் எதிர்பார்க்கக்கூடாது.

இவர்களுடைய நோக்கம் கருணாநிதியைத் திட்டித்தீர்க்கவேண்டும் என்பதுதான்.

இந்த அரசாவது மதுவிலக்கைக் கொண்டுவரக்கூடாதா என்பது கேள்வி.

அதனைப் பாடலாகப் பாடிய கோவன் கைது செய்யப்படுகிறார். சசிபெருமாள் என்ற பெரியவர் இதற்காகவே செல்போன் டவரில் ஏறி உயிரை விடுகிறார். இத்தகு விஷயங்களுக்காக ஆட்சியிலிருக்கும் கட்சி கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டுமா இல்லையா?

இந்த இணையதள, தொலைக்காட்சி விவாத அரங்குகளை, பத்திரிகைகளைப் பொறுத்தவரை ‘இல்லை’ என்பதும் ‘கூடாது’ என்பதும்தான் பதில்.

இதற்காக குற்றம் சுமத்தப்பட வேண்டியவர் கருணாநிதி.

கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர் கருணாநிதி.

 ஏனெனில் அவர்தான் மதுவிலக்கைக் கொண்டுவந்தவர். ராஜாஜி சொல்லியும் ‘கேட்காதவர்.’

ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்களின் மிடாஸ் ஆலையிலிருந்துதானே எழுபத்தைந்து சதவிகிதம் மது வருகிறது என்பது ‘கேள்வி’ அல்ல.

கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் மதுபான தொழிற்சாலையிலிருந்து மது வருகிறதே அதை ‘முதலில்’ மூடச்சொல். என்பது இவர்களின் பதில்.

ஆளுங்கட்சி ‘மதுவிலக்கு’ கொண்டுவந்தால் கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்கள் என்ன காளப்பனுக்கும் கோலப்பனுக்கும் வேண்டப்பட்டவர்களுடையதாக இருந்தாலும் அந்தத் தொழிற்சாலையும் பாதிக்கப்படும்தானே?


அப்படி கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் தொழிற்சாலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாமே ஏன் அதனை ஆளுங்கட்சி செய்வதில்லை? என்பதுதானே கேள்வி.

அந்தக் கேள்வியெல்லாம் இந்த மலைவிழுங்கிகளுக்குத் தோன்றுவதில்லை.

அதுமட்டுமல்ல. இந்த ஆட்சியில் அது எத்தனைப் பேர் வேண்டுமானாலும் இருக்கட்டும் 
தற்கொலையோ கொலையோ அரசியல் சார்பாக நடைபெற்று விடுகிறது என்றால் உடனடியாக இவர்கள் உதயகுமார் பாடையைத் தூக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நடைபெற்றுவிட்ட சம்பவத்தை கண்டிக்கலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்ற தார்மிக சிந்தனையெல்லாம் அறவே கிடையாது. இவ்வளவு அக்கிரமங்கள் இந்த ஆட்சியிலே நடக்கலாமா என்ற சிந்தனையோ எண்ணமோ சுத்தமாகக் கிடையாது.

‘அன்றைக்கு உதயகுமாரைக் காவல்துறை அடித்துக்கொல்லவில்லையா, அவன் தன்னுடைய மகனே இல்லையென்று அவன் தந்தையைச் சொல்லவைக்கவில்லையா?’ என்ற புலம்பல்தான் 

இவர்களுக்கு.  

மீண்டும் மீண்டும் உதயகுமார், உதயகுமார் உதயகுமார்தான்.

26.11.1980ம் ஆண்டு இவர்களின் வழிகாட்டி இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணாயாளராக இருந்த 
 சுப்பிரமணியப் பிள்ளையின் படுகொலை குறித்து இவர்களுக்குத் தெரியுமா என்றால் தெரியாது, 

தெரியாது, தெரியவே தெரியாது.

ஏனெனில் அது எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற படுகொலை.

அந்தப் படுகொலை தற்கொலை என்று பெயர் சூட்டப்பட்டதெல்லாம் இந்த இணைய மொண்ணைகளுக்குத் தெரியாது. உதயகுமாரை மட்டும்தான் தெரியும்.

அந்தச் சம்பவம் குறித்தும், படுகொலை குறித்தும் நீதிபதி பால் தலைமையில் கமிஷன் போடப்பட்டதும் அவர் கொடுத்த அறிக்கையில் இருந்த வாசகங்களும் பாண்டேக்களுக்கும், ஹரன்களுக்கும் செல்வன்களுக்கும் தெரியாது. ஆனால் ‘விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர் கருணாநிதி’ என்று சர்க்காரியா கமிஷன் சொன்னது மட்டும் இணயப் பரமேஸ்வரன்களுக்கும், ஸ்மார்ட்போன் மகாவிஷ்ணுக்களுக்கும் விவாத கஜபதிகளுக்கும் தெரியும்.

உங்கள் மனதில் உள்ள அரசியல் வன்மங்களுக்காகப் பாதித்தகவல்களையும் அரைவேக்காட்டு சித்தாந்தங்களையும் பதிவுகளாக, தரவுகளாக, வரலாற்று உண்மைகள் போல் செப்பிடு வித்தைக் காட்டும் வாதங்களைப் பரப்பாதீர்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர திமுகவை விமர்சிக்காதீர்கள் என்று அல்ல. 


 திமுகவை மட்டும்  தவறுதலாக விமர்சித்து அதைவிட மோசமானவர்களை புனிதர் என்றும்  புடம்போட்ட தங்கம் என்றும் சொல்லி தவறானவர்களை ஆட்சியில் உட்காரவைத்து ஆரத்தி எடுத்துக்கொண்டிருக்காதீர்கள் என்றும்தான் சொல்கிறோம்.

ஊடக அறம் என்பதற்கு சிறிதாவது இடமளியுங்கள் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்.