Sunday, April 19, 2015

மணிரத்தினத்தின் செல்லுலாய்ட் கவிதை - ஓ, காதல் கண்மணி!


மணிரத்தினத்திற்கு கண்மணி என்ற வார்த்தையின் மேல் எப்போதுமே ஒரு ஈர்ப்பு போலும். பல படங்களில் இந்த வார்த்தையைக் காதலின் மந்திரம்போல் பயன்படுத்தி வந்திருக்கிறார். ‘இருவர்’ படத்திலிருந்து இது தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ‘உன்னொடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரண வேளையிலும் மறவாது கண்மணியே’ – என்ற வார்த்தைப் பிரயோகத்தை அழுத்தமாகவே வைரமுத்துவின் துணையுடன் அந்தப் படத்தில் பயன்படுத்தி இருந்தார். இப்போது இந்தப் படத்தின் தலைப்பாக மட்டுமின்றி அவரது பேட்டிகளிலும் பாடல்களிலும் வசனங்களிலும் கண்மணி சுழன்று சுழன்று வருகிறது.

மணிரத்தினத்தின் அரசியல் தாக்கங்கள் பற்றித் தனியாக விவாதித்துக் கொள்வோம். அவர் தமது கருத்தாக என்ன சொல்லவருகிறார் என்பதுபற்றியும், சினிமா மீடியத்தைப் பயன்படுத்தி பல்வேறு முக்கியமான விஷயங்களில் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது பற்றியும் ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. தமது படைப்புக்களின் மூலம் அவர் சொல்ல நினைக்கும் ‘அரசியல் சித்தாந்தங்களில்’ கண்டிப்பாக எனக்கும் ஒப்புதல் இல்லை. அதிலும் குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும், இலங்கைப் பிரச்சினையிலும் தனிப்பட்ட ஏதாவது ஒரு குடும்பத்தையோ அல்லது தனிப்பட்ட ஒருவரையோ நிறுத்திவைத்து அவர்கள் இழப்பில் ஏற்படும் சோகங்களைக் கடைவிரித்துப் பெரிது படுத்தி அதனை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொதுப்புத்தியாக மடைமாற்றி அரசியல் பேசும் ‘வாதங்களை’ ஒப்புக்கொள்ள முடியாது.

பொதுத்தளத்தில் உருவாகும் ஒட்டுமொத்தக் கருத்திற்கு ஆதரவாக வேண்டுமானால் அதையொட்டிய தனிப்பட்டவர்களின் சோகங்களை, இழப்புக்களை அடையாளம் காட்டலாமே தவிர தனிப்பட்டவர்களின் சோகங்களை அடையாளப்படுத்தி பொதுத்தளத்தின் உணர்வுகளையே மட்டுப்போகச் செய்வது ஏற்புடையது அல்ல. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் இந்தவகை வாதங்களைத்தாம் ஊடகங்கள் பெரிதுபடுத்தி மக்கள் முன் வைத்து வருகின்றன.

இந்தவகையிலான வாதங்களை நாம் ஒப்புக்கொள்கிறோமா என்பது வேறு. ஒரு கலைஞனை அல்லது படைப்பாளரை எந்த நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம், போற்றுகிறோம் அல்லது புறம் தள்ளுகிறோம் என்பது வேறு.

திரையுலகைப் பொறுத்தவரை மணிரத்தினம் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். அவரது படங்களில் இருக்கும் கலை நேர்த்தி சாதாரணமான ஒன்றல்ல. அற்புதமானதொரு கதை சொல்லி. 

பாடல்களை உருவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் சரி, முழுமைப் பெற்ற பாடலாக திரையில் அவர் முன்வைக்கும் காட்சிகளும் சரி உயர்வான ரசனைகள் கொண்டவை.

படங்களில் அதிலும் குறிப்பாகப் பாடல்களில் ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதன்முதலில் தமிழுக்குக் காட்டியவர் ஸ்ரீதர். ‘ஈஸ்தடிக் சென்ஸ்’ என்றால் என்னவென்பதைக் காட்சிகள் மூலம் அவர்தான் முதன்முதலில் தமிழுக்கு உணர்த்தினார். பாடல் காட்சிகளில் ஒவ்வொரு ஃப்ரேமையும் தனித்தனியாகப் பிரதி எடுத்து வீட்டில் சட்டம் போட்டு மாட்டிவைத்துக்கொண்டால் தனிப்பட்ட ஓவியம் போன்று இருக்கும் என்பதுபோல் ஒரு புதிய அழகியல் வார்ப்படத்தைத் திரையில் செய்து காட்டியவர் அவர். (இவ்வகையிலான காட்சிகள் அவரது வெண்ணிற ஆடை படத்தின் ‘சித்திரமே சொல்லடி’ பாடலிலும் காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு படத்தின் பல பாடல்களிலும் காணலாம். கறுப்பு வெள்ளை ஓவியங்களை நெஞ்சில் ஓர் ஆலயம், தேன்நிலவு, சுமைதாங்கி என்று பல படங்களில் பார்க்கமுடியும்) வின்சென்டையும் அவருடைய உதவியாளர்களையும் வைத்துக்கொண்டு பல படங்களின் பாடல் காட்சிகளை உயிரோவியங்களாக வடித்துவைத்தவர் அவர்.

(“அவரைப் போல ஒரு பாடல் காட்சியாவது செய்ய வேண்டும் என்று என்னுடைய படங்களில் முயன்று பார்க்கிறேன். முழுமையாக வெற்றி பெற்றதாகச் சொல்லமுடியாது. ஆனால் நெஞ்சிருக்கும்வரை படத்தில் ‘முத்துக்களோ கண்கள்’ அந்தவகையில் நான் முயன்று பார்த்த பாடலாகச் சொல்லலாம். ஏனெனில் அதனைக் காட்சிப்படுத்திய வகையில் எனக்கு நிறைய சுதந்திரம் அளித்தார் ஸ்ரீதர். ஆனால் அவர் துணையுடன் செய்த பாடலாகத்தான் அதனையும் சொல்லமுடியும்” என்று ஒருமுறைச் சொன்னார் அவரது ஒன்றுவிட்ட தம்பியும் பிரபல இயக்குநருமான சி.வி.ராஜேந்திரன்.)

ஒரு படத்தைக் காட்சி காட்சியாக செதுக்கித்தரும் விற்பன்னர்களில் தமிழில் ஸ்ரீதருக்குப் பிறகு உடனடியாக யாரும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக இந்த வரிசையில் பார்த்தோமென்றால் ஸ்ரீதருக்குப் பின் வந்த இயக்குநர்களில் பாடல் காட்சிகளை ‘அழகுபடுத்திய’ முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்தினம்.

ஒரு நல்ல இயக்குநரை வெறும் ஒரு கதைசொல்லியாகவும், மெசேஜ் சொல்லும் ஒருவராகவும் மட்டுமே பார்க்கத் தொடங்கினால் சமுதாயத்திற்கான முதல் சிறந்த இயக்குநராக பராசக்தி படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சுவையும், அதற்குப் பிறகு கே.எஸ். கோபால கிருஷ்ணனையும், மல்லியம் ராஜகோபாலையும் மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

சினிமா என்றாலேயே ‘காட்சி அழகு’ என்பதைத் திரையில் காட்டிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு அடுத்தபடி மணிரத்தினம்தான். பாடலின் அழகு, பூக்களையும் கதாநாயகியையும் அழகாகக் காட்டுவது மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். கதை சொல்லும்போது அந்த உணர்வுக்கான சூழலைத் திரையில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் அதற்கான தாக்கங்களைக் காட்சிகள் வாயிலாகவும், நடிகர்களின் அசைவுகள், பாடல்கள் வாயிலாகவும், அதன் வரிகள், இசை வாயிலாகவும் பார்ப்பவனிடம் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு இருக்கிறது. இதனை அழகியல் பூர்வமாகச் சித்தரிக்கும் கலையும் திறமையும் எல்லா இயக்குநர்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. இந்தித் திரைப்படங்களில் இதனைப் பிரமாதமாகச் செய்தவர்களாக இயக்குநர்கள் சாந்தாராமையும், ராஜ்கபூரையும் சொல்வார்கள். தமிழில் ஸ்ரீதரையும் மணிரத்தினத்தையும்தாம் சொல்லவேண்டும்.

ஸ்ரீதர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறவராக மணிரத்தினம் இருக்கிறார்.
மணிரத்தினத்தின் அழகியல் வெளிப்பாடுகள் வெளிநாட்டுச் செவ்வியலைச் சார்ந்ததாக இருக்கிறது.

வெளிநாட்டுப் படங்களின் செவ்வியல் அழகுகளை  அப்படியே ஒத்தியெடுத்த மாதிரி பல காட்சிகளை அவருடைய படங்களில் பார்க்க முடியும்.

வெளிநாட்டுப் படங்களில் இருப்பதுபோலவே தன்னுடைய படங்களிலும் அதே அழகுகளைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு நல்ல படைப்பாளி அத்தனை எளிதாகப் புறம் தள்ளிவிட முடியாது. இத்தகைய எண்ணம் ஒரு ஒளிப்பதிவாளருக்கு எழலாம். எடிட்டருக்கு எழலாம். இசையமைப்பாளருக்கு எழலாம்.

வெளிநாடுகளில் சுற்றிப்பார்க்கச் செல்லும் பிரதமர் அங்கு தன்னை வியக்கவைத்த கட்டிடத்தையோ, நினைவுச் சின்னத்தையோ, பாலத்தையோ, ஏர்ப்போர்ட்டையோ- ஏதோ ஒன்றைத் தன்னுடைய நாட்டிற்கும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைப்பதை நாம் பாராட்டுகிறோமா இல்லையா?

அதனையே ஒரு கலைஞன் செய்யும்போது ‘அவன் காப்பியடிச்சுட்டான்’ என்ற குற்றச்சாட்டைத்தான் நாம் அவர் மீது வைக்கிறவர்களாக இருக்கிறோம்.

இந்த ஃபார்முலா தமது அதீதமான சொந்தத் திறமைகளை நிரூபித்துப் பின்னர் ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற அளவில் செயல்படும் திறமை மிகுந்த கலைஞர்களுக்குத்தாம் பொருந்துமே அல்லாமல், ஒவ்வொரு படத்திற்கும் தமக்கான அத்தனை சரக்குகளையும் கூசாமல் வெளிநாட்டுப் படங்களிலிருந்து உருவிக்கொண்டு வந்து கல்லாக்கட்டும் பேர்வழிகளுக்கெல்லாம் பொருந்தாது.

எத்தனைக் கலையழகுடன் தங்களுடைய படங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் ஒரு இயக்குநருக்கான அடையாளங்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் சொல்லவந்த ‘சேதிகளையும்’ தாண்டி அவர்களை அடையாளப்படுத்திக்கொண்டு அந்த அழகுகள் அவர்களின் பெயர் சொல்லும்.

மணிரத்தினம் படங்களில் பல்வேறு காட்சிகளிலும் காட்சித்தொகுப்புகளிலும் இந்த அழகுகளைக் காணலாம். குறிப்பாக பாடல் காட்சிகளை முத்துச்சரங்கள் போல் கோர்த்துத்தருகிறவர்களில் கை தேர்ந்தவர் மணிரத்தினம். இதனை அவருடைய முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’யிலிருந்தே(கன்னடம்) பார்க்கலாம்.

எல்லாம் சரி; ஆனால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இணைய சமுதாயம் மணிரத்தினத்தை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு விகடனில் வந்திருக்கும் மணிரத்தினத்தின் பேட்டிக்கான பின்னூட்டங்கள் சாட்சி.

இந்த வார விகடனில் மணிரத்தினத்தின் பேட்டி வந்திருக்கிறது.

அதே இதழில் இளையராஜாவின் பேட்டியும் வந்திருக்கிறது.

இளையராஜா ஜெயகாந்தனைப் பற்றிப் பேட்டியளித்திருக்கிறார்.

மணிரத்தினம் பொதுவாக அவரைப் பற்றியும் அவரது படங்கள் பற்றியும் பேசியிருக்கிறார். இங்கே பின்னூட்டம் இட வந்தவர்கள் அச்சுபிச்சுவென்று எத்தனைப் பொறுப்பற்று கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நேர்ந்தாலே இந்தச் சமூகம் என்ன காரணத்திற்காக ஒருவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது என்பதும் இன்னொருவரை என்ன காரணத்திற்காக மூர்க்கமாக முட்டித்தள்ளத் தயாராக இருக்கிறது என்பதும் புரிபடமாட்டேன் என்கிறது.

மணிரத்தினம் பேட்டிக்கு வந்திருக்கும் கருத்துக்களில் ஒரு சில;
1) 
  ‘God Father கதையை, காட்சிகளை பகல் நிலவு, நாயகன், சத்ரியன், அக்னி நட்சத்திரம் என பலமுறை கையாண்டவர். இப்போது தன் அலைபாயுதேவை மீண்டும் தழுவுகிறார்- வறட்சி’
2) 
  ‘இன்றைய ட்ரெண்டில் பாரதிராஜா, விக்கிரமன், பாசில், எழில், சசி, உதயகுமார், வசந்த், கே.எஸ்.ரவிகுமார், ஆகியோர் ஹிட் கொடுப்பது கடினம். இந்தப் படம் பிளாப் ஆனால் இந்த லிஸ்டில் இவரும் வருவார்’
3)   
‘இவர் copy paste king ஆச்சே. கதை சுடுறதுக்கு சொல்லியா தரணும்?’
4) 
  ‘நீங்க என்ன சொன்னாலும் உங்க படம் ஓடாது’
5) 
  ‘ஒவ்வொரு படத்துக்கும் ஓவரா பில்டப்பும் பீட்டரும் விடறீங்க. ஆனா படம் ஓட மாட்டேங்குது’
6) 
  ‘இவர் படத்தைத் தமிழர்கள் புறக்கணித்து பல வருடங்கள் ஆகிவிட்டது’
   
7) ‘தளபதி- பார்ட்-2? மூலக்கதை, திரைக்கதை, வசனம் மறுபடி வியாசரா?’
-இவை மணிரத்தினத்தின் பேட்டிக்கான சில பின்னூட்டக் கருத்துக்கள். இனி இளையராஜாவின் பேட்டிக்கான பின்னூட்டக் கருத்துக்களைப் பார்ப்போம்.

1) ‘இருவரும் தமிழின் இரண்டு கண்கள். அவர்களைப் பற்றி நாமே அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்’

2) ‘தமிழன்னையின் இரு செல்லக் குழந்தைகள். ஒன்று மற்றொன்றை உயர்த்துகிறது. அதனால் அதுவும் உயர்வு பெறுகிறது.’

3) ‘ஒரு சஹாப்தம் இன்னொரு சஹாப்தத்தை நினைவு கூர்கிறது’

4) ‘பெருமைக்குரிய ஒரு தமிழனைப் பற்றி பெருமைக்குரிய இன்னொரு தமிழன்’
-இவை இளையராஜா பேட்டிக்கு போடப்பட்டிருக்கும் கருத்துப் பின்னூட்டங்கள். இந்த இணைய சமூகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதே புரிபடவில்லை. இந்த வித்தியாசங்களை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு இப்போது ‘ஓ காதல் கண்மணி’க்கு வருவோம்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வந்திருக்கிறது. குறிப்பாக மணிரத்தினத்தின் சில தொடர் தோல்விகள் அவரை முடக்கிப்போட்டிருக்கும் என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். 
அந்தச் சோர்வும் முடக்கமும் துளிக்கூடத் தோன்றாவண்ணம் இளமைத்துள்ளலுடன் ஒரு படத்தை தைரியமாகத் தரமுடிவதற்கு அவருடைய கலை மேதைமையே காரணம்.

அவருடைய இலக்கு இன்றைய இளைய சமுதாயம். அவர்களைப் பற்றிய படத்தை அவர்களுக்காகவே எடுத்திருப்பதுபோல் அவர்களையே குறிவைத்து அடித்திருக்கிறார் மணிரத்தினம்.

அவர்களுடைய வாழ்க்கை, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள், வாழ்க்கையை அணுகும் முறைகள் எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிச் செல்கிறார்.

லிவிங் டுகெதர் என்று வாழ ஆரம்பிக்கும் ஒரு ஜோடி தங்களுக்கான அன்றாடச் சிக்கல்கள் வரும்போது அதனை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதையும் தாங்கள் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்திற்கு எந்த அளவு உதவியாயிருக்கிறார்கள் என்பதையும் அழகுபடச் சொல்கிறார்.

காதல் கண்மணி படத்தில் என்ன சொல்லவருகிறார் என்பதை மேற்கண்ட விகடன் பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “மில்லினியம் ஆரம்பிச்சப்ப இளைஞர்கள் ரெபெல் ஆனாங்க. ஒரு குட்டிப் புரட்சிக்காரன் மாதிரி. ஆனா அந்தப் புரட்சியெல்லாம் அவங்க அப்பா அம்மா குடும்பத்துக்கு எதிரா மட்டுமே இருந்தது. படிப்பு, வேலை, கல்யாணம்னு எல்லாமே குடும்பம் சொல்றதுக்கு எதிரா செய்யணும்னு தீர்மானவா இருந்தவங்களைப் பிரதிபலிச்சவர் ‘அலைபாயுதே’ மாதவன்.

இப்போ குடும்பத்தை மட்டும் எதிர்க்கலை. எல்லாருக்கும் எதிரா எல்லா விஷயங்களுக்கும் எதிரா புரட்சி பண்றாங்க.’நான் இப்படித்தான். என்னை யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது’ன்னு தன் செல்ஃபைத் தக்கவச்சுக்கற முயற்சி. செல்ஃபி தலைமுறை. சமூகத்தின் so called சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படக்கூடாதுங்கற ஒரே அஜெண்டா மட்டும்தான் அவங்களுக்கு. அவங்க வாழ்க்கையில் காதலுக்கு என்ன ரோல்? அதை மட்டும் படத்தில் பேசியிருக்கோம்” என்கிறார்.

மிக மிகக் கவனமாக கத்தி மேல் நடக்க வேண்டிய கதை.

காட்சிச் சித்தரிப்புகள் பல இடங்களில் ‘இது ரொம்பவும் ஓவரோ’ என்று தோன்றவைக்கிறது. 

நண்பனின் திருமண வைபவத்தின்போது சர்ச்சில் ஒரே வரிசையில் உட்கார்ந்துகொண்டு படத்தின் நாயகனும் நாயகியும் செல்போன் நம்பரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அங்கேயே செல்போனில் காதல் தொடங்குவதெல்லாம் டுபாக்கூர் கற்பனை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் எந்த சர்ச்சிலும் அப்படியெல்லாம் பூஜை நேரத்தில் பேசிக்கொண்டிருக்க அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் விட்டுவிட மாட்டார்கள். எழுந்து வெளியே போ என்று விரட்டிவிடுவார்கள். படத்தில் சின்ன முகச்சுழிப்புடன் அக்கம்பக்கதிலிருப்பவர்கள் ஸ்ரீராமுக்கு குளோசப்பில் முகத்தைக் காண்பிக்க காதலர்கள் பாட்டுக்குத் தங்கள் காதலை ஆரம்பித்துத் தொடர்வதாகக் காட்டப்படுகிறது. ஆனால் இம்மாதிரியான வேண்டாத விஷயங்கள் சொற்பம்தான்.

மும்பையும், மும்பைத் தெருக்களும், மின்சார ரயில்களும் மழையும் படத்தின் போக்கை 
முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. ஸ்ரீராம் தமது பங்கிற்கு அழகியலைச் சேர்த்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் தம்முடைய எல்லாப் பாடல்களையுமே சர்வதேச மோஸ்தரில்தான் போட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றிருக்கிறார் போல. எல்லாப் பாடல்களுமே சம்பிரதாய வடிவங்களிலிருந்து விலகிச்சென்றுதான் ஒலிக்கின்றன. அத்தனை இரைச்சல்களுக்கு மத்தியிலும் கொஞ்சூண்டு இசையையும் சேர்க்கிறார் என்பதுதான் ஒரே ஆறுதல். அரேபிய கஜல் பாணியில் அமீன் பாடும் பாடலும் மனதில் உட்கார்ந்துகொள்கிறது. ‘மலர்கள் கேட்டேன் வனத்தினைத் தந்தனை’ நம்முடைய பாணிக்கு ஏற்றதாக இருப்பதால் படத்தில் இன்னமும் முழுமையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவைக்கிறது.

கதாநாயகனும் கதாநாயகியும் முகத்தோடு முகம் வைத்து உரசிக்கொண்டிருப்பதும், ஒரு முகத்திற்கும் அடுத்த முகத்திற்கும் அங்குலம்கூட இடைவெளி இல்லாமல் இருப்பதும், முத்தமிட்டுக்கொள்வதும்தாம் மொத்தப் படத்தின் முக்கால்வாசி ஃப்ரேம்கள்.

இப்படி லிவிங் டுகெதரில் இருக்கும் காதல் ஜோடிகள் எத்தனை விரைவில் ஆஸ்பத்திரியின் கைனகாலஜி செக்ஷனுக்குப் போய் நிற்க நேரிடும் என்றும் அங்கே இருக்கும் சூழலைப் பார்த்து ஏற்படும் பதைபதைப்பும், அடிவயிற்றில் கவ்வுகின்ற பயத்தையும் பாசாங்குகள் எதுவும் இல்லாமல் சித்திரித்திருக்கிறார் இயக்குநர். கடைசியில் ஏற்படும் டுவிஸ்ட் மணிரத்தினம் டச்!
துல்கர் சல்மான் என்ற மம்முட்டி மகன் கதாநாயகனாக ஏற்றிருக்கும் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தமிழில் வலம்வர முடியுமா என்பதை இன்னமும் இரண்டொரு படங்கள் ஆனபிறகுதான் சொல்லமுடியும்.

கதாநாயகி நித்யா மேனன். பல இடங்களில் கொள்ளை அழகு. நடிப்பில் பல இடங்களில் கதாநாயகனையும் தாண்டி ஸ்கோர் பண்ணுகிறார். சில இடங்களில் காஜல் அகர்வாலையும் சில அசைவுகளில் மீனாவையும் நினைவு படுத்துகிறார். நித்யா மேனன் ஒரு பெரிய ‘ரவுண்டு’ வருவார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

ஒரு இளம் காதல் ஜோடி. அல்லது ஒரு இளம் கண்மணி ஜோடி……………. இவர்களுடன் இவர்களுக்கு இடம் தரும் வயதான பிரகாஷ்ராஜ், லீலா தாம்சன் ஜோடி. இவர்கள் இருவருக்குமான கணவன் மனைவி உறவு, பந்தம் பாசம் பிணைப்பு அத்தனையும் உறுத்தல் இல்லாமல் சொல்லப்படுகிறது. 

அத்தனை வயதிலும் ஒருவருக்கொருவர் எந்த அளவு பாசத்தால் பிணைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், ஒரு இணை ஜோடி சேர்வது என்பது வெறும் செக்சுக்காக மட்டுமே இல்லை என்பதையும் எந்தவிதக் குறியீடுகளும் வசனங்களும் இல்லாமல் அனாயாசமாய்ச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.


ஒரு சாதாரண ஒற்றை வரி சம்பவத்தை இருபது நிமிட பரபரப்புடன் கூடிய கிளைமாக்ஸாக மாற்றுவதற்கு மணிரத்தினம் போன்ற தேர்ந்த இயக்குநர்களால் மட்டுமே முடியும். லிவிங்டுகெதர் என்ற, இளைய தலைமுறையை வசீகரிக்கும் ஒரு மாயச்சுழல் மேல் இயல்பான தமது பார்வையை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் மணிரத்தினம்.

Saturday, April 4, 2015

பெண்கள் விரும்பும் பாடல்கள்

பெண்கள் விரும்பும் திரைப்படப் பாடல்கள் குறித்து ஒரு பெண்மணி எழுதிய கட்டுரை ஒன்று மார்ச் 2015 உயிர்மை இதழில் வந்துள்ளது. ‘கூட்டாளிகளின் குரல்கள்’ என்ற அந்தக் கட்டுரையை ஜா. தீபா என்பவர் எழுதியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே சரியான நிலையைத் தொடுகிறார் அந்தப் பெண்மணி. அவர் அந்தக் கட்டுரையை இப்படித் தொடங்குகிறார். ‘சில நேரங்களில் மனம் வெட்கம் அறிவதில்லை. பேருந்தில் யாரோ ஏதோ புத்தகத்தைப் படித்தால் அதற்கு என்ன? இறங்குவதற்குள் அது என்ன புத்தகம் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா? நிச்சயமாக. இதுபோன்ற அல்ப மனம்கூட இல்லாமல் எனக்கென்ன என்று இருந்துவிடுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது? அதனால் சில சமயங்களில் வாய்விட்டும் கேட்டுவிடுவதுண்டு. “அது என்ன புத்தகங்க?”

சமீபத்தில் இதுபோன்ற அல்பத்தனங்களில் இன்னொன்றும் கூட சேர்ந்துவிட்டிருக்கிறது. 

பேருந்துகளிலும் மின்சார ரயில்களிலும் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் காதுகளில் மாட்டியிருக்கிற ஹெட்ஃபோனில் அப்படி என்ன பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? இது சுவாரஸ்யமிக்க கேள்வியாகவே தோன்றுகிறது. ஏனெனில் சில பெண்கள் தங்களையும் அறியாமல் புன்னகைக்கிறார்கள். சிலர் தூங்கிவிழுகிறார்கள். இன்னும் சிலர் அவசரமாகப் பாடலை மாற்றுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்றுகொண்டு பயணம் செய்யும்போது ‘யதார்த்தமாக’ கண்கள் அவர்கள் செல்போனை கவனிக்கையில் சில வேளைகளில் கண்டுபிடித்தும் விடலாம். 

அப்படியானதொரு பார்வையில் ஒரு பெண் லயித்துக் கேட்டுக்கொண்டிருப்பது Hits of 60s என்பதாக அந்தப் பெண்ணின் மொபைல் திரை காட்டியது. 

என்னுடைய மேலான ஆச்சரியத்திற்குக் காரணம், அந்தப் பெண் இருபத்தைந்து வயதிற்குள்ளும், அதிநவீன உடையில் காணப்பட்டதும்தான். 

அந்தப் பெண்ணிற்கு இந்தப் பாடல்களை யார் அறிமுகம் செய்து வைத்திருப்பார்கள்? உலகளவில் வெளியாகிற சமகால இசை உடனுக்குடனே கிடைக்கிறபோது அவள் அந்தக் காலத்துப் பாடல்களை ஏன் கேட்க விரும்புகிறாள்?’ என்று இப்படிக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார் அவர்.

அதாவது இன்றைய மொத்த ஜனத்தொகையும், அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் அனைவருமே ‘ஒருவருடைய’ பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கின்றனர் என்றும் அனுபவிக்கின்றனர் என்றும், அவருடைய பாடல்களை மட்டுமே தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கின்றனர் என்றும் ஒரு தவறான பிம்பம் இங்கே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அல்லது கட்டமைக்கப்பட்டு வருகிறது.

‘அவருடைய’ பாடல்கள் மட்டுமே கேட்கத் தகுந்தவை என்றோ அல்லது அவருடைய பாடல்களுக்கு இணையாக இதுவரை எந்தப் பாடல்களும் வந்ததில்லை என்றோ, இனிமேலும் வரப்போவதில்லை என்றோ அந்தக் ‘கற்பிதம்’ தவறாக வலியுறுத்தப்படுகிறது.

அவருக்கு முன்பிருந்தே பாடல்கள் இருந்துவந்த போதிலும் அவையெல்லாம் துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன என்றும் அப்படித் துருப்பிடிக்க ஆரம்பித்தபோது வந்த இசைப்பிதா இவர்தானென்றும், துவண்டுகிடந்த இசையைத் தூக்கிப்பிடித்த மகான் இவர் ஒருவரே என்றும் கற்பிதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

இதற்கு நடுவே அந்த இசையமைப்பாளர் சிம்பொனி இசைக்கு முயற்சிக்க, ‘சிம்பொனி இசையமைத்த ஒரே இந்தியர், ஒரே ஆசியர்’ என்றெல்லாம் புகழ் மாலைகள் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன. 

‘இதுவரையிலும் பூலோகம் கண்டிருக்கவே முடியாத இசைப் படைப்பாளர்’ என்றும் ‘இப்படியொருவர் இதுவரையிலும் பிறந்ததே இல்லை’யென்றும் கொண்டாடினார்கள்.

பிறகு பார்த்தால் அவர் சிம்பொனி அமைக்க முயற்சித்தார் என்றும் அந்த முயற்சி கூடிவரவில்லை என்றும் வெற்றிபெறவில்லை என்றும் தகவல்கள் வந்தன. 

இந்தத் தகவல்களையெல்லாம் அறியாமலேயே அல்லது அறிந்துகொள்ள முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே தொடர்ந்து புகழ்மாலை சூட்டிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் இணைய உலகிலும் அச்சு ஊடகங்களிலுமாக உருவாகிவிட்டிருந்தது.

இசையை வைத்து இந்த அரசியல் உருவாகியிருந்ததே தவிர இதற்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை.

எல்லாத் துறைகளிலும் எத்தனையோ பகீரத முயற்சிகள் இங்கே காலந்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளும் அவற்றில் அடங்கும். அதற்கென்று பயிற்சிகள் பெறுவதும், காலத்தைச் செலவழிப்பதும், உடலை வருத்திக்கொள்வதும், சிந்தனையைச் செலுத்துவதும், திறமையைச் செலுத்துவதும் நடைபெறும்.

எல்லாமே அந்த விஷயம் வெற்றிபெற்றால்தான் பயன்தரும்.

அல்லாமல் ஏதோ காரணத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டால் அத்தனையும் விரயம் என்றுதான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அதற்கான முயற்சிகள் செய்ததாலேயே, அதனை அடைந்துவிட்டதாகவும், சாதித்துவிட்டதாகவும், வெற்றிபெற்றுவிட்டதாகவும் கருதவும் கூடாது. அதனை சாதனையாகச் சொல்லிக் கொண்டாடவும் கூடாது. இதுதான் உலக வழக்கம், மரபு, அடிப்படையான நேர்மை.

பட்டங்கள் பெற்று ஐஏஎஸ் தேர்வுக்கு பகீரத முயற்சிகள் செய்துவிட்டதனாலேயே ஒருவன் ஐஏஎஸ் என்று தன்னை அழைத்துக்கொள்ளக்கூடாது. முடியாது. அதற்கான மொத்தத் தேர்வுகளிலும் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் ஐஏஎஸ் என்று அழைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் இளையராஜா சிம்பொனிக்கு வாசித்ததையே சிம்பொனியில் சாதித்துவிட்டார் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

அது இல்லையென்று சுட்டிக்காட்டியதும் ‘அதற்கு முயற்சி செய்தாரா இல்லையா’ என்று காகிதக் கோபுரம் கட்டினார்கள். அதைவிடக் காமெடியாக ‘அவருக்கு அதற்கான திறமையும் தகுதியும் இருக்கிறதா இல்லையா?’ என்று கொனஷ்டைக் கேள்விகளை எழுப்பினார்கள்.

ஆக அவர்களின் எண்ணமெல்லாம் சிம்பொனி வெளிவந்ததா இல்லையா என்பது முக்கியமில்லை. அவர் சிம்பொனி இசையமைத்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை எவ்விதத் தடங்கல்களும் 
இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.

ஏனெனில் இணையத்தில் வருவதை அப்படியே நம்புவதற்கு இங்கே நிறைய ‘அப்பாவி ஆடுகள்’ தயாராக இருக்கின்றன.

சரி, ஜா. தீபாவின் கட்டுரையைத் தொடர்வோம். அவர் மேலும் சொல்கிறார்…………’பிடித்த பாடல்களைத் தரவிறக்கம் செய்து நினைத்த நேரத்தில் கேட்கும் வசதி அநேகமாய் அலைபேசி இருக்கும் எல்லாருக்குமே இருக்கிறது. அதே சமயம் தனக்கு விருப்பமான ஒரு பாடலைக் கேட்க எல்லாரும் காத்திருந்த காலம் என்று ஒன்றும் இருந்தது. அதிலும் வானொலியோ மின்சாரமோ கூட இல்லாத வீடுகளில் உள்ள பெண்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல்களை எப்படி எப்போது கேட்டிருப்பார்கள்?

திகட்டத் திகட்டப் பாடல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த ஏராளமான ஊடகங்கள் வந்தடைந்த காலத்திற்கு முன்பு மனம் விரும்பிய பாடல்கள் டீக்கடையிலோ, யார் வீட்டு வானொலியிலோ ஒலிபரப்பப்பட்டால் நின்று கேட்பதற்காக ஒரு டீயைச் சொல்லிவிட்டு ஊதி ஊதிக் குடிக்கும் வாய்ப்பும் சாக்குபோக்கும் ஆண்களுக்கு இருந்தது. அதே சமயம் பாடலைக் கேட்கவேண்டும்போல் இருந்தாலும் தவறாக யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எதையோ மறந்துவிட்டு யோசிப்பதுபோல நிற்பதுவும், தயங்குவதுபோல நடப்பதுவும் என பெண்களுக்கும் சில சாக்குப்போக்குகள் இருந்தன.

ஆனால் இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் பார்த்தால் மிகவும் பிடித்த ‘முல்லைமலர் மேலே’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘நீரோடும் வைகையிலே’ போன்ற பாடல்களைக் கேட்கவேண்டும் போல் இருந்தால் அப்போதைய காலகட்டத்துப் பெண்கள் என்ன செய்திருப்பார்கள்? அதற்கும் வழி வைத்திருந்தார்கள். அது கொஞ்சம் சுதந்திரமான வழிதான். யாரும் இல்லாத நேரங்களிலும், குழந்தையைத் தாலாட்டுகிறவகையிலும் அப்பாடல்களைப் பாடிப் பாடித் தீர்த்திருக்கிறார்கள்.’ – என்று நீள்கிறது கட்டுரை.

இந்தப் ‘பாடிப் பாடித் தீர்ப்பது’ என்பதுதான் பல பாடல்கள் அந்தக் காலம்தொட்டு இன்றைக்கு வரைக்கும் நீடித்துவிளங்குவதன் ரகசியம்.

இப்படிப் பாடித் தீர்ப்பதற்கு அந்தப் பாடலின் மெட்டும், பாடலின் வரிகளும் எளிமையாகவும் அதே சமயம் எல்லாருக்கும் புரியும் படியாகவும் இருக்கவேண்டியது அவசியம்.

புரிவது மட்டுமின்றி பாடலின் வரிகளிலும், மெட்டிலும் ஒரு வசீகரம் இருக்கவேண்டும். குறிப்பாக பாடலின் வரிகள் அழகைச் சுமந்ததாக இருக்கவேண்டியது அவசியம். 

இந்த வசீகரத்தை உணர்ந்து அதனை இலக்கியத்தரம் குன்றாமல் கொடுத்துப் புகழ் அடைந்தவர்களில் பெரும்புகழ் அடைந்தவர்தான் கண்ணதாசன். 

அதனால்தான் எத்தனையோ கவிஞர்கள் இருக்க இன்றைக்கும் மகா கவிஞராகக் கொண்டாடப்படுகிறார் அவர். அவரை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. பா வரிசைப் படங்களில் பாடல்கள் யாவும் காலங்களைத் தாண்டியும் நிற்பதற்குக் காரணம் அந்தப் பாட்டுவரிகளின் ஜீவன்தான்.

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கர்நாடகத்தில், அதிலும் பெங்களூரில் ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களை எல்லா மொழியினரும் கொண்டாடிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. (இன்றைக்கும் தமிழ்ப் படங்களைப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அதுவெறும் திரைப்படங்கள் பார்ப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது) அன்றைக்கெல்லாம் தங்கள் வாழ்க்கையைப் படங்களோடு இணைத்துப் பார்த்துக்கொண்டார்கள். பாடல் வரிகளில் ஆறுதலும் சுகமும் தேடினார்கள்.

அப்படித் தேடியவர்களுக்கு கண்ணதாசனின் பல தத்துவார்த்தப் பாடல்கள் பற்றுக்கோடுகளாக இருந்தன.

‘போனால் போகட்டும் போடா, வீடுவரை உறவு, சட்டிசுட்டதடா கை விட்டதடா, மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், ஆறுமனமே ஆறு, நினைக்கத் தெரிந்த மனமே, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஏன் பிறந்தாய் மகனே, பிறக்கும்போதும் அழுகின்றாய், அச்சம் என்பது மடமையடா, வந்தநாள் முதல் இந்தநாள் வரை, உடலுக்கு உயிர் காவல், வாழநினைத்தால் வாழலாம், உள்ளம் என்பது ஆமை, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, எங்கே நிம்மதி, அண்ணன் என்னடா தம்பி என்னடா, சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ போன்று எண்ணற்ற பாடல்கள்………..(வெறும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வந்த கண்ணதாசன் பாடல்கள் மட்டுமே இவை. மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் வந்த பாடல்களையெல்லாம் பட்டியலிட்டால் அது எங்கோ போய் நிற்கும்) 

இந்தத் தத்துவார்த்தப் பாடல்கள் இல்லாமல், காதல் பாடல்கள், காதல் தோல்விப்பாடல்கள், குடும்பம் பாசம் உறவு, சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் என்று மனிதர் ‘அடித்து ஆடாத’ துறையே இல்லை.

இவருடைய பல பாடல்களை சேகரித்து வைத்த கன்னட நண்பர்கள் உண்டு.

நான் பணியாற்றிக்கொண்டிருந்த பெரிய தொழிற்சாலையில் பணிபுரிந்த பல கன்னட நண்பர்கள் பாடல் ரிகார்டுகளை வாங்கி வீட்டில் வைத்து என்னைத் தேடிவந்து பல பாடல்களை சொல்லச்சொல்லிக் கன்னடத்தில் எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பல வார்த்தைகளுக்குக் கன்னடத்தில் அர்த்தமும் கேட்டு எழுதிக்கொள்வார்கள்.

கன்னடத்திரையுலகில் மிகப்பெரும் பாடலாசிரியராக ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் பாடல்கள் எழுதி மிகப்புகழ்பெற்ற கவிஞராக வலம்வந்த திரு ஆர்.என்.ஜெயகோபாலை ஒருமுறை ஒரு உணவுவேளையில் அவருடைய அண்ணன் வீட்டில் சந்திக்க நேர்ந்து இந்த விஷயத்தைச் சொன்னபோது “கண்ணதாசன்தானே சார் எங்களுக்கெல்லாம் கைடு” என்றார் ஒற்றை வரியில்.
பாடலின் வசீகரம் ஒருபுறமிருக்க காந்தம்போல் கவர்ந்திழுக்க வேண்டியது அந்தப் பாடலின் மெட்டு. மெட்டும் வரிகளும் கலந்து ஒரு அற்புதமான லயத்தில் இணைந்துவிட்டால் அந்தப் பாடல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும் உன்னத நிலைக்குச் சென்றுவிடும். எழுபது வரையிலான பாடல்கள் இன்றும் நிலைத்து நின்றிருப்பதன் சூட்சுமம் இதுதான்.

அப்படியில்லாமல் மெட்டுக்கள் சுமாராக இருக்க வரிகளை மட்டுமே நம்பி நிற்கும் பாடல்கள் காட்சியின் சிறப்புக்களை வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர மிக அருமையான பாடல் என்ற பட்டியலுக்கு வராது.

அதேபோல் வரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் வெறும் இசையை மட்டுமே நம்பி, வாத்தியங்களின் சத்தங்களுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் பாடல்களும்  கேட்பதற்கு வேண்டுமானால் வித்தியாசமாக இருந்து அந்த நேரத்திற்கான இன்பத்தைத் தரலாமே தவிர, கேட்பவர்களின் மனதில் படிந்திருந்து எந்தக் காலத்திலும் நின்று நிலைக்கும் வாய்ப்புக்களை மிகவும் குறைந்தே பெறமுடியும்.

வெற்றிபெற்ற பாடல்கள் என்பன வரிகளும் இசையும் அதிஅற்புதமாக ஒன்றிணைந்து முயங்கிக் கிடக்கும் பரவசநிலையை எய்திய வடிவம் என்பதே சாலவும் பொருந்தும். 

ஒரு பாடல் காலத்தைக் கடந்து நிற்பதற்கு அந்தப் பாடல் கேட்டவுடன் மனதில் பதிந்துவிட வேண்டும்.

அதன் வரிகள் மனதிற்குள் எழுத்துச் சித்திரங்களாக உருமாறி என்றென்றைக்கும் முணுமுணுப்பதற்குத் தோதாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வரிகளை முணுமுணுக்க வைக்க அதன் இசை, வரிகளுடன் இணைந்து கூடவே வருதல் வேண்டும்.

நம்மைப் பாடத்தூண்ட வேண்டும்.

அப்படிப் பாட முடியாதவர்கள் ‘ஐயோ யாராவது இந்தப் பாடலைப் பாட மாட்டார்களா? கேட்க வேண்டுமே’ என்ற ஆவலை மனதிற்குள் எழுப்புவதாக அமைந்திருக்க வேண்டும்.

இந்த நிலைகளைத் தாண்டி வாழ்க்கை அனுபவத்தில் அந்தப் பாடலின் வரிகளை பேச்சுவழக்கில் மக்கள் எடுத்துக்காட்டுக்களாக வழங்குவதாக இருத்தல் வேண்டும்.


இதையும் தாண்டி இலக்கிய அரங்குகளிலும் வாதப் பிரதிவாதங்களிலும் அந்தப் பாடல்கள் சொல்லப்படுபவையாக பேசப்படுபவையாக அமைந்திருத்தல் வேண்டும்.

 இப்படி அமைந்துவிட்டால் அந்தப் பாடல்கள் எத்தனை ஆண்டுகளை வேண்டுமானாலும் கடந்துநிற்கும் பாடல்களே. இப்படி அமைந்த பாடல்களால்தான் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரமும், கவியரசர் கண்ணதாசனும் வாலியும் மற்றும் சிலரும் இன்னமும் நினைக்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை அந்தக் கட்டுரையும் பேசுகிறது. அந்தப் பெண்மணி சொல்கிறார். “வரி பிசகாமல் இத்தனைப் பாடல்களையும் இதுபோன்ற பெண்கள் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்? சமையலறையில் இருந்தபடி எங்கிருந்தோ வரும் ஒரு பாடலின் வரியினைக் கேட்டுத் தேய்ந்த பின்னர் முணுமுணுத்தபடி அதனைத் தொடரும் அளவுக்கு எத்தனை தடவை அந்தப் பாடல்களைக் கேட்டிருப்பார்கள்? கேட்டது பாதி. படித்தது மீதி.

‘வரும்போது வேட்டைக்காரன் பாட்டுப் புஸ்தகம் வாங்கிட்டு  வாங்க’ என்று கணவனிடம் சொல்லியனுப்பும் பெண்கள் பலரும் இருந்தார்கள்.’ என்பவர் மறக்கமுடியாத ஒரு பெண்மணியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்………….

 ‘இப்படிப் பாடக் கற்றுக்கொண்ட ஒரு பாட்டியை எட்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்திருக்கிறேன். சேரன்மகாதேவியில் இருந்தார். அவருடைய குரல் வளத்திற்காகத் தெருவினரால் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது அவர் இருந்த வீடு. நீர்நிலைத் தொட்டிக்குக் கீழே இருக்கும் கால்பங்கான அறைதான் என்றாலும் அதுவும் வீடுதான். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். எழுந்ததும் பாட ஆரம்பித்துவிடுவார்.

எல்லாமே அக்மார்க் பழைய பாடல்கள்!

அதிலும் கல்யாணியும், சுபபந்துவராளியும் சண்முகப்பிரியாவும் பற்றியிழுக்கும் நீளமான பாடல்கள். ஒரு காலத்தில் மேடைப் பாடகியாக இருந்தவர் அவர்’ என்கிறார் ஜோ.தீபா.

பாட்டு வரிகள் இல்லாமல் பாடல்கள் என்றால் வெறும் இசை மட்டுமே போதும், பாடல் என்பதே வெறும் இசையால் ஆனதுதான்  என்ற எண்ணம் மேலை நாட்டுத் தாக்கத்தினால் உருவான ஒன்று. வாத்தியக்கருவிகளினால் உருவாகும் இசை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவமே. ஆனால் அந்த நாட்டு பிரம்மாண்ட வாத்திய இசைகளுடன் நம்முடைய வாத்தியக்கருவிகள் இசையை ஒப்பிடமுடியாது.

நம் நாட்டின் இசைக்கருவிகள் வேறு. மேலை நாட்டின் இசைக்கருவிகள் வேறு.

நம் நாட்டு இசைக்கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இசை இரு வடிவங்களைக் கொண்டது. ஒன்று கர்நாடகம், இந்துஸ்தானி என்ற மரபு ரீதியான இசை. அந்தக் காலத்தில் அரண்மனைப்போன்ற தர்பார் மண்டபங்களில் வாசிக்கப்பட்ட வாத்தியக்கருவிகளைக் கொண்டு இந்தவகையான இசை இசைக்கப்பட்டது.

மற்றொன்று நாட்டுப்புறப் பாடல்கள் வழியில் எளிய வாத்தியக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இசை. இதில் கொட்டாங்கச்சி, புல்லாங்குழல் முதல் எளிய மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தாங்களே தயாரித்துக்கொண்ட இசைக்கருவிகளை உபயோகித்து இசைக்கப்படும் இசை.

விஞ்ஞானத்திலும் நவீனத்திலும் நம்மை விட எப்போதுமே பல ஆண்டுகள் முன்னணியிலிருக்கும் மேலை நாட்டினர் பிரம்மாண்டமான இசைக்கருவிகளை உபயோகித்து அவர்களின் இசையை வடிவமைத்திருந்தனர்.

இந்த அத்தனை இசையையும் இணைக்கும் முயற்சிகளைத் திரைப்படங்கள் செய்தன.

ஆரம்ப காலத்து இசையமைப்பாளர்களான எஸ்விவெங்கட்ராமன் போன்றோர் கர்நாடக இசையை அடிப்படையாக வைத்தே இசையமைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஜி.ராமனாதன் போன்றவர்கள் இந்தியில் இசைக்கப்படும் வடிவத்தையும் சில ஆங்கிலப்பட இசைவடிவங்களையும் துணிந்து தமிழுக்குக் கொண்டுவந்தனர்.

இவரது பாணியைத் தொடர்ந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் மொத்த இசையின் பாணியையே மாற்றியமைக்கும் புரட்சியில் ஈடுபட்டனர். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை அத்தனையையும் எளிமைப்படுத்தி, பெரிதாக இசை ஞானம் இல்லாதவரையும் ஈர்க்கும் படியான, இசை தெரியாதவர்களும் முணுமுணுக்கும் படியான  எளிமையான அதே சமயம் இனிமையான இசையின் புதியதொரு வடிவத்தை உருவாக்கி மெல்லிசை என்று அழைக்கவும் செய்தனர். 

அந்த மெல்லிசைதான் இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அதனால்தான் அவர்கள் கண்ணதாசனால் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று அழைக்கவும் பட்டனர்.
இவர்கள் ஏற்படுத்திய பாணிதான் தமிழ்த்திரையுலகில் பல்வேறு மாறுதல்களையும் கடந்து இன்னமும் பல்வேறு இசையமைப்பாளர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இவர்களுக்குப் பின் வந்த அத்தனை இசையமைப்பாளர்களும் தொடர்ந்துகொண்டிருக்கும் பாணி இதுதான். இதுவேதான்.

இவர்களுடைய காலகட்டத்தில் இவர்களுக்குப் போட்டியாக, இணை ஓட்டத்தில் இவர்களுக்கு சமமாகவே வந்துகொண்டிருந்தவர் கே.வி.மகாதேவன்.

கே.வி.மகாதேவன் தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். மெல்லிசை ஒரு பக்கம் போய்க்கொண்டே இருக்க தமக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டார் அவர்.

அதுதான் நாட்டுப்புற இசை.

இன்றைய இளையதலைமுறை கருதிக்கொண்டிருப்பதுபோல் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசையைக் கொண்டுவந்தவர் இளையராஜா கிடையாது. கொண்டுவந்தவர் என்பது மட்டுமல்ல அதனை நிலைநிறுத்தியவரும் கே.வி.மகாதேவன்தான். மகாதேவன் வெற்றிகரமாகப் பவனிவந்துகொண்டிருந்த அதே பாணியை இ.ராவும் தொடர்ந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்..

ஏனெனில் கே.வி.எம் நாட்டுப்புற இசையில் போட்டிருக்கும் பாடல்கள் ஒன்றோ இரண்டோ அல்ல, நூற்றுக்கணக்கான பாடல்கள்.

நூற்றுக்கணக்கான பாடல்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதம் ஹிட் ரகம்தாம். ஒரு படத்தில் ஆறு அல்லது ஏழு பாடல்கள் என்றால் இரண்டு பாடல்கள் மெல்லிசை, இரு பாடல்கள் சுத்தமான கர்நாடக இசை, இரு பாடல்கள் நாட்டுப்புற இசை என்பதுபோல் ஒரு கணக்கு வைத்துக்கொள்வார் கேவிஎம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் பிரிவுக்குப் பின்னர் மொத்த இசையுலகமும் விஸ்வநாதனின் கைகளுக்குள் வந்துவிட்டது.

மற்றவர்களின் ராஜ்ஜியத்தில் இசையுலகம் வந்தபோது அவர்கள் செய்த  ஆடம்பர அட்டகாசங்களைப் போல் இல்லாமல், தம்மைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டுக்கொள்வதற்கு முயற்சிகள் ஏதும் செய்யாமல்  ‘தம் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று மட்டுமே இயங்கியவர் விஸ்வநாதன்.

அவருக்குப் பின்னால் வந்த இளையராஜா ஆரம்பித்து தேவா. ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் என்று இன்றைய ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் வரைக்கும் இசையில் அடிப்படையாக என்ன சாதித்திருக்கிறார்களோ அவற்றையெல்லாம் ஒற்றை மனிதராகவே சாதித்துவைத்துவிட்டுப் போயிருப்பவர் எம்எஸ்வி.

தொழில்நுட்ப ரீதியிலும் இதுவரையிலும் பயன்படுத்தாத, புதிதாக வந்திருக்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது என்றவகையிலும், பிற இசைகளைக் கோர்ப்பது, கலப்பது என்றவகையிலும், எக்கோ, ஸ்டீரியோ, டால்பி, டிஜிட்டல் என்று நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கின்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது என்றவகையிலும்தாம் இளையராஜாவோ, ரகுமானோ, ஹாரிஸ் ஜெயராஜோ இன்னபிற இசையமைப்பாளர்களோ புதிதாக ஏதாவது செய்யமுடிகிறதே தவிர, பாடல்களின் அடிப்படை விஷயங்களில் விஸ்வநாதனைத் தாண்டி இதுவரையிலும் யாராலும் எதுவும் செய்யவும் முடியவில்லை- செய்யப்போவதும் இல்லை என்பதும் உண்மை.

காரணம் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒவ்வொரு துறையிலும் இதுபோல் நிறைவான, அத்தனை சாதனைகளும் செய்துவிட்டுச் செல்லும்  பெருங்கலைஞர் ஒருவர் வருவார். தமிழின் அதிர்ஷ்டம் தமிழுக்கு – தமிழ்த்திரைத்துறைக்கு, அப்படி முக்கியமான மூன்று துறைகளுக்கு முக்கியமான மூன்று சாதனையாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.

ஒருவர் சிவாஜிகணேசன்

இன்னொருவர் கண்ணதாசன்,

மூன்றாமவர் எம்எஸ்விஸ்வநாதன்….

-இந்த மூன்று பெரும் சாதனையாளர்கள் போட்டுவிட்டுப் போயிருக்கும் ராஜபாட்டையில்தான் மற்றைய சாதனையாளர்கள் இன்றைக்கும் நடைபோட்டு அவரவர்களுடைய சாதனைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த மூன்று பேரின் சாதனைகளைத் தாண்டி ஏதாவது செய்யமுடியுமா என்றால் மேலோட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில மாறுதல்கள் செய்து வித்தியாசமாகத் தோன்றச் செய்ய முடியுமே தவிர அடிப்படையிலான பெரிய மாறுதல்கள் எதுவும் செய்துவிடமுடியாது.

செய்வதற்கும் ஒன்றும் இல்லை.

உதாரணத்திற்கு, திருக்குறளில் உள்ள கருத்துக்களைத் தாண்டி புதிதாக எந்தக் கருத்தும் சொல்லிவிடமுடியுமா என்ன? வேண்டுமானால் விஞ்ஞானம், சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர், ஐபாட் என்று இப்படி ஏதாவது சொல்லலாம்.

நான் சொல்லவந்தது அடிப்படை விஷயங்கள் பற்றி.

பாடல்களுக்கு உயிர்நாடி இனிமையான மெட்டு. அந்த மெட்டுக்களை எம்எஸ்வியைப் போல் அதிகமான அளவில் தமிழுக்குக் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.

அடிப்படையிலான வித்தியாசங்களையும் பாடல்களில் செய்துகாட்டியவர் அவர்.

கிளி பேசும் வார்த்தைகளோடு ஒரு பாடல் ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா?’ என்று சர்வர் சுந்தரம் படத்திலே ஒரு பாடல்-

பாரதியின் கனவுக்காட்சிகளோடு ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்றொரு ‘கை கொடுத்த தெய்வம்’ படப்பாடல்-

பச்சைவிளக்கில் ரயிலின் ஓட்டச் சத்தத்தைப் பின்னணியில் வைத்துப் பின்னப்பட்ட ‘கேள்வி பிறந்தது அன்று’ என்ற பாடல்  (இந்த மூன்று பாடல்களும் ராமமூர்த்தியுடன் இணைந்திருந்த சமயத்தில் போட்டது)-

ஸ்வரம் சொல்லச் சொல்ல ‘சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்துபார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி’ என்றொரு பாடல் –

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ என்று ஏகப்பட்ட மிமிக்ரி சத்தங்களுடன் ஒரு பாடல்-

‘இருமனம் கொண்ட திருமணவாளன்’ என்று அவர்கள் படத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு கதாநாயகன் வாயைத் திறக்காமல் வயிற்றிலிருந்து பேசும் வென்ட்ரிலோகிஸம் (ventriloquism) என்ற வகையில் பேசவைத்து ஒரு பாடல்……………….
 என்பது போல, பாடல்களின் இத்தகைய வடிவமெல்லாம் அதுவரை யாரும் சிந்தித்திராதது. 

திரைப்படத்துறையில் எந்த இசையமைப்பாளரும் யோசித்துப் பார்க்காத வடிவங்களில் அமைக்கப்பட்ட பாடல்கள் இவை.

இதுபோன்ற பாடல்களுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது.

இம்மாதிரியான சோதனைக் களத்தில் அமைந்த பாடல்களை வேறு எந்த இசையமைப்பாளராவது முயன்றாரென்றால் சோதனை முயற்சிகளில்தாம் கவனம் செலுத்துவார்களே தவிர மெட்டுக்களின் ‘இனிமையை’ அவர்களால் காப்பாற்ற முடியாது. 

ஆனால் விஸ்வநாதனைப் பொறுத்தவரை மெட்டுக்கள்தாம் முதலில். மற்றவையெல்லாம் அதன்பிறகுதான்.

சாதாரணப் பாடலோ சாதனை முயற்சி பாடலோ பாடல்களின் மெட்டுக்களில் இனிமை வழியும்.

அதனால்தான் அவருடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பாடல்கள் இனிமையாக இருக்கும். ஒரு ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமை இல்லாமல் ‘பேசுவதுபோன்று’ இருக்கும்.

மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை உள்நுழைந்து பார்த்தோமானால் (இவர்களில் அந்தக் காலத்து ஏ.எம்.ராஜாவையோ சுதர்சனம் போன்றவர்களையோ சேர்க்கவில்லை) ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமையுடன் இருக்கும். மற்ற பாடல்கள் எல்லாம் பல்லவியைத் தாண்டிவிட்டால் பல்லை இளிக்கும்.

வெறும் பல்லவிக்கு மட்டும் இசையமைத்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் ஓகே வாங்கிவிட்டு சரணத்தை எப்படியோ கொண்டுவந்து எப்படியோ இழுத்துக்கொண்டுபோய் எப்படியோ முடித்து வைப்பது என்ற பிசினஸ், போங்காட்டம் எல்லாம் இவரிடம் இல்லவே இல்லை. 

இதுதான் விஸ்வநாதன்!

அதனால்தான் உயிர்மை கட்டுரையில் அந்தப் பெண்மணி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு செய்தியையும் இங்கே கவனத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது.

அவர் சொல்கிறார் “ ஒரு பத்திரிகையில் வாசகி ஒருவர் இப்படி எழுதியிருந்தார். ‘என் கணவருக்கு ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலென்றால் உயிர். அடிக்கடி என்னைப் பாடச்சொல்லிக் கேட்பார். அவர் இறந்தபிறகும் அவரை நினைத்து தவம் போல ஒவ்வொரு இரவும் அந்தப் பாடலைப் பாடுகிறேன்’ என்று. நான் கவனித்ததில் பல பெண்களுக்குப் பிரியமாக இருந்திருக்கிறது இந்தப் பாடல். இதுபோன்று பெண்களின் விருப்பங்களுக்கு உரியவைகளாக இன்னும் அனேகப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. காதலின் உட்சரடுகளை மறைமுகமாகவும், அழகியலோடும் வெளிப்படுத்திய பாடல்களை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு அர்த்தப்படுத்திக்கொண்டு அதனோடவே வாழ்ந்தும் வருகிறார்கள்.’ என்று குறிப்பிடுகிறது கட்டுரை.

இம்மாதிரியான மொத்தத் தகவல்களையும் உண்மைகளையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கிவைத்துக் கொண்டாடும் மனநிலை அறிந்தோ அறியாமலோ இணையத்தில் ஒரு சிலரால் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. இதனை ஒரு கொள்கை போலவும் லட்சியப் பிடிப்பு போலவும் தொடர்ந்து செய்துவருகிறார்கள் சிலர்.

அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும், ஏதாவது சொல்லிக்கொண்டு போகட்டும் நமக்கென்ன வந்தது என்று இருந்துவிடுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதை ஆபத்தானது. மற்ற எல்லாரையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கி நிறுத்த வேண்டிய தேவை என்ன?

ஆயிரம் பொய்யைச் சொல்லி மற்றவர்களுக்கு அகழி தோண்டவேண்டிய அவசியம் என்ன?

சிம்பொனி அமைத்ததாகச் சொல்கிறார்கள்.

அதைவிடவும் கூடுதலாகக் கேட்கவே காதுகள் கூசும்படியான ஒரு பொய் என்னவென்றால் ‘இ.ரா தான் தமிழ்ப் பாடல்களை முதன்முதலாக கிராமங்களுக்கும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்றவர்’ என்பதாக ஒரு பச்சைப் புளுகைக் கொளுத்திப் போடுகிறார்கள்.

கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் ஒலிக்காத பாகவதர் பாடல்களா? எம்ஜிஆர் பாடல்களா?  சிவாஜி பாடல்களா? கண்ணதாசன் பாடல்களா? டிஎம்எஸ் பாடல்களா? பிபிஸ்ரீனிவாஸ் பாடல்களா? சீர்காழி பாடல்களா? சந்திரபாபு பாடல்களா? டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களா? பி.சுசீலா பாடல்களா? எல்.ஆர். ஈஸ்வரி பாடல்களா? கே.பி.சுந்தராம்பாள் பாடல்களா?

எந்தப் பாடல்கள் கிராமங்களில் ஒலிக்காமல் இருந்தது?

எந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவாமல் இருந்தது?

எந்தப் பாடல் கிராமத்தின் உயிர்நாடியைத் தொட்டு உலுக்காமல் இருந்தது?

பட்டிகளிலும் தொட்டிகளிலும் பரவிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றைப் பாடிப் பாடித்தானே தமிழ்ச்சமூகம் வளர்ந்திருக்கிறது?

ஐம்பதுகளிலிருந்து பட்டிதொட்டிகளில் நடைபெறும் வைபவங்களை ஒலிபெருக்கிகள்தானே கோலாகலக் கொண்டாட்ட அனுபவங்களாக மாற்றியமைத்தன….அந்த ஒலிபெருக்கிகளில் எல்லாம் ஒலித்தது என்ன?

ஊரின் நடுவே அரசாங்கம் அமைத்த ஒலிபெருக்கிகளில் மாலை வேளைகளில் ஒலித்த பாடல்கள் எந்தப் பாடல்கள்?

அல்லது, எந்தப் பாடல்களையும் கேட்காத செவிடர்களாகத்தான் எம் தமிழர்கள் 1976வரை இருந்தார்களா, அல்லது 1976 வரை தமிழகத்தில் தமிழர்களுக்குக் காதுகளே முளைக்கவில்லையா? 

அட மொண்ணைகளே, பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் பரவியதால்தானே ஐயா எம்ஜிஆர் என்ற ஒரு திரைப்பட நடிகருக்கு மிகப்பெரிய பிம்பம் ஏற்பட்டு பெரிய தலைவர்களில் ஒருவராய் உயர்ந்து தமிழக ஆட்சியையே பிடிக்கமுடிந்தது?

திரும்பத் திரும்ப பராசக்தி வசனத்தையும், மனோகரா வசனத்தையும் பட்டிகளும் தொட்டிகளும் கேட்டதால்தானே ஐயா கலைஞர் கருணாநிதி என்ற ஒருத்தர் ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்ற முடிந்தது?

யாரையோ பாராட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா பொய்களில் புரள்வது? இப்படியெல்லாம் பேச கொஞ்சம்கூட வெட்கமாய் இல்லையா உங்களுக்கு?

இன்னொரு புரட்டுவாதமும் இப்போது பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த எண்பத்தேழு வருடங்களாக உலகம் முழுவதும் திரைப்படங்களில் ஈடுபடுபவர்களின் உச்சபட்ச கனவே ஆஸ்கார் அவார்டைப் பெறுவது என்பதுதான்.

ஆஸ்கார் வென்றுவிட்டால் ஒரு திரைப்படக் கலைஞனுக்கு அதற்குமேல் எந்த அவார்டு பற்றியும் கவலை இருக்க நியாயமில்லை.

இப்படி உலகம் முழுமைக்கும் ஆஸ்கார் மீது இருக்கும் மதிப்பின் காரணமாகத்தான்  ‘என்னுடைய லட்சியம் எப்படியும் ஆஸ்கார் வெல்லுவதுதான்’ என்ற தனது கனவைப் பேட்டிகள் மூலமும் 
பேச்சுக்களாகவும் விடாமல் பதிவு செய்துவந்தார் கமல்ஹாசன்.

அவருக்கு இருந்த எண்ணற்ற ரசிகர்களின் காரணமாகவும், வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் அர்ப்பணிப்பின் காரணமாகவும், அவர் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாகவும் ஆஸ்கார் அவார்டு பெறும் முதல் தமிழர், ஏன் முதல் இந்தியர் கமல்ஹாசனாகத்தான் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பையும், பிரமையையும் அவருடைய பேட்டிகளும் பேச்சுக்களும் தமிழர்களிடம் ஏற்படுத்தவே செய்தன.

கமல்ஹாசனை அவரது ரசிகர்களும் பத்திரிகைகளும் ‘ஆஸ்கார் நாயகன்’ என்றும் ‘உலக நாயகன்’ என்றும் அழைக்கவும் ஆரம்பித்தனர்.

ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது அவர் தேர்ந்தெடுத்துச் செய்த பல படங்கள், வேடங்கள், அல்லது பாத்திரங்கள் ஏற்கெனவே வேறு அயல்நாட்டு மொழிப்படங்களில் மற்ற நடிகர்கள் ஏற்றுச் செய்ததாகவே இருந்தன.

சொந்தமாகச் செய்த சில வேடங்கள் அல்லது பாத்திரங்கள் ஆஸ்கார் படப் போட்டிகள் அளவுக்கு அவரைக் கூட்டிச் செல்வதாக இருக்கவில்லை. முடிந்தவரை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒன்றும் தேறாது என்ற முடிவுக்கு வந்தபின்னர் தம்முடைய நிலைமையை உணர்ந்த கமல்ஹாசன் திடீரென்று ஒரு பல்டி அடித்தார். 

‘ஆஸ்கார் அவார்டு என்பது அமெரிக்கப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு அவார்டு என்றும் ஆகவே அந்த அவார்டு பெறுவது காரியசாத்தியமில்லை என்றும் ஒரேயொருபிறமொழிப் படத்திற்குத்தான் ஆஸ்கார் அவார்டு வழங்கப்படுமென்பதால் அதிலொன்றும் தமக்குப் பெரிதான நாட்டமில்லை என்றும் தாம் ஆஸ்கார் அவார்டு பற்றிப் பேசவே இல்லையென்றும்’ ஒரே போடாகப் போட்டார்.

பாவம், அவருடைய ரசிகர்கள்தாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. 

அவன் ஆஸ்காரைக் கண்டானா, கியாஸ்காரைக் கண்டானா? ஆஸ்கார் என்ற சிந்தனையை அவனுடைய மண்டைக்குள் ஏற்றி வைத்ததே இவர்தானே?

சரி சகலகலா வல்லவனை சூப்பர்ஹிட் ஆக்கிய தனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று வாயை மூடிக்கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கிக்கொண்டான் ரசிகன். ஆஸ்கார் இந்த இடத்தில் நின்றுவிடவில்லை. அது வேறுமாதிரி தமிழனிடம் தொடர்ந்தது.

சிம்பொனிக்காரருக்கு ஆஸ்கார் பற்றிய சிந்தனைகள் இருந்திருக்குமா என்பது நமக்குத் தெரியவில்லை.


இந்தச் சமயத்தில்தான் ரோஜா என்ற ஒரேயொரு படத்தின் மூலம் அதுவரைத் தமிழில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு பெரிய இசையமைப்பாளரைச் சாய்த்துவிட்டு, இந்திக்கு நுழைந்து இந்திப்பாடல்கள் மூலம் மொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து, வந்தே மாதரம்- மா துஜே சலாம்…. (தாய்மண்ணே வணக்கம்) என்ற தேசபக்திப் பாடல் மூலம் திரைப்படத்தையும் தாண்டி அறுபது கோடி, எழுபது கோடி என்ற அளவில் மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கிறான் ஏ.ஆர்.ரகுமான் என்ற ஒரு தமிழ் இளைஞன்.

ஒட்டுமொத்த இந்தியாவும் கண்களை கசக்கிக்கொண்டு பார்க்கிறது அந்த இளைஞனை.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று வலம் வந்த அவனுடைய இசை சாம்ராஜ்யம் கடல்கடந்து பறக்கிறது.


ஆங்கிலப் படத்திற்கு இசையமைக்கிறான் என்ற செய்திகள் வருகின்றன.

வியப்பதா அண்ணாந்து பார்ப்பதா என்ற சிக்கல் தீருவதற்குள் –

இரண்டு கைகளில் இரண்டு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கிக்கொண்டு பணிவுடன் நிற்கிறான் அவன்!

மொத்த உலக நேயர்கள் அவ்வளவு பேரும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க ஆஸ்கார் மேடையிலே நின்று “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று தமிழ் உச்சரிக்கிறான்.

உடம்பு சிலிர்க்கிறது.

தமிழ்த்திரை இசையைப் புரட்டிப்போட்ட இசையமைப்பாளர் இந்த இளைஞன்தான் என்று யாரும் சொல்லவில்லை.

உலக இளைஞர்களெல்லாம் முணுமுணுப்பது இவர் பாடல்களைத்தாம் என்று யாரும் பரிவட்டம் கட்டவில்லை.

ஆனால் நம் மண்ணில் வேர் விட்ட ஒரு விருட்சம் உலக அரங்கை எட்டிப்பிடித்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆஸ்கார் என்பது திரைப்படங்களுக்கு மட்டுமானது. இசைக்கென்றே உலக அரங்கில் உச்சபட்ச பரிசொன்று இருக்கிறது. அதற்கு கிராம்மி அவார்ட் என்று பெயர் என்பதை எல்லாரும் அறிவதற்குள்ளாகவே-

இரண்டு கிராம்மி அவார்டுகளையும் கையிலேந்தி நிற்கும் அந்த இளைஞனை வியக்காமல் இருக்கமுடியுமா என்ன!

ஆனால் அந்த வியப்பும் மகிழ்ச்சியும் தமிழகத்தில் பலருக்கு ஒரு பெரிய வயிற்றெரிச்சலையே கிளப்பியிருக்கிறது என்பதுதான் சோகம்.

தமிழரான ஏ.ஆர். ரகுமான் உலக ரீதியில் புகழ் பெறுகிறார் எனும்போது வீறு கொண்டு எழுந்து பாராட்டவேண்டிய, கொண்டாட வேண்டிய, பெருமைப்பட வேண்டிய தமிழ் சமூகம் வயிறு காய்ந்து புழுத்துப் புழுங்குகிறது என்பது எத்தனைப் பெரிய அவமானம்………………..?

‘ஆஸ்கார் என்பது பெரிய பட்டமா? அதுவும் விலைக்கு வாங்கக்கூடிய பட்டம்தான்’ என்று எழுதித் தங்கள் ஆத்திரத்தையும் ஆசாபாசத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள் பலபேர்.

பணம் செலவழித்தால் எத்தனை ஆஸ்கார் வேண்டுமானாலும் வாங்கமுடியும் என்று உள்காயத்துக்கு வெளியிலிருந்தே பற்றுப் போடுகிறார்கள் சிலர்.

அந்த அகடமியில் உறுப்பினர்களாக உள்ள ஆறாயிரம் பேரின் இறுதி ஓட்டுக்கள்தாம் ஆஸ்காரைத் தீர்மானிக்கிறது என்பதனால் ஆஸ்கார் என்பது ஸ்ரீரங்கம் ஓட்டுக்கள் என்ற நினைப்புத்தான் பலபேருக்கு இருக்கிறது போலும். ஆஸ்கார் அகடமி உறுப்பினர்கள் எல்லாரும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற வாக்காளர்களா என்ன?

உலகமே கொண்டாடும் பெரிய பெரிய அமைப்புக்களில் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்ககூடும்தான்.

அது மிகப்பெரிய அமைப்பு என்பதனால் அந்த அமைப்பிற்கு எதிராக சில கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கும்தான்.

அப்படியொரு எதிர்ப்புக்கட்டுரையை எடுத்து சேமித்துவைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ஆஸ்கார் என்று பேசினாலேயே போதும் தயாராக வைத்துள்ள அந்தக் கட்டுரையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து காப்பிபேஸ்ட் செய்துவிட்டு மூச்சுவாங்க வேண்டியதுதான் சிலரின் இன்றைய வேலை.

இந்த இடத்தில் இது சம்பந்தமாய் ஒரேயொரு யோசனை சொல்லத்தோன்றுகிறது.

ஆஸ்கார் அவார்டு வாங்குவது அத்தனை சுலபம் என்பதும், காசு செலவழித்தால்
 வாங்கிவிடலாம் என்ற நிலைமையும் இருக்கும்போது எதற்காக இன்னமும் சும்மா இருக்கிறீர்கள்?
அதுதான் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறீர்களே ஆளுக்கு ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ போட்டு செலவழித்து உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளருக்கு அந்த அவார்டை ‘வாங்கிக்கொடுத்துவிட வேண்டியதுதானே’?

அல்லது, அவரே மிகப்பெரும் செல்வந்தர்தானே?

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சம்பாதித்தவர்தானே?

அதில் துளியுண்டு பணத்தை எடுத்து வீசியெறிந்து ஆஸ்கார் அவார்டை வாங்கிவிட்டு ‘இதோ பாருங்க இது ஒண்ணும் பெரிய அவார்டே இல்லை. தெரிஞ்சுக்கங்க’ என்று உலகிற்குக் காட்டவேண்டியதுதானே!

இப்படிச் செய்தால் நாமும் ஆஸ்கார் பற்றிய பெரிய பெரிய கற்பிதங்களை எல்லாம் விட்டுத் தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போகலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமான பல வேலைகளில் இறங்கித் தங்கள் ஆதங்கத்தைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்திவருகிறார்கள் சிலர்.

ஆஸ்கார் அவார்டு பாடல்கள் என்று இ.ராவின் பாடல்களை ஒவ்வொன்றாகத் தம்முடைய வலைப்பதிவில் போட ஆரம்பித்திருக்கிறார் ஒருவர். அவருடைய கூற்று என்னவென்றால் குறிப்பிட்ட அந்தப்  பாட்டு ‘போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவில்லை’ என்ற ஒரே காரணத்தினால்தான் அது ஆஸ்கார் பெறவில்லை. ஆனால் ஆஸ்கார் பெற முழுத்தகுதி உடையது இந்தப் பாடலும் அவர் குறிப்பிடவிருக்கும் மீதிப் பாடல்களும் என்பதாகும்.

வலைத்தளம் நடத்தும் என்னுடைய நண்பர் ஒருவர் “சார் இந்த ஐடியா நல்லாருக்கு. நான் ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதிவச்சிருக்கேன். பிரசுரத்துக்கு அனுப்பினதில் ஒரு பயலும் போடலை. அதுக்கென்ன, ‘நோபல் பரிசு பெறும் தகுதியுடைய கதைகள்’ என்று போட்டு தினந்தோறும் ஒரு பதிவு போட்டுக்கொண்டு வருகிறேனே” என்றார்.

இதாவது பரவாயில்லை. என்னுடைய பக்கத்து வீட்டுப் பையன் தோளில் கிடாரை மாட்டிக்கொண்டு திரிகிறவன் “சார் நான் கிடாரில் நிறையப் பாடல்கள் வாசித்து ரிகார்ட் பண்ணி வச்சிருக்கேன். உங்களிடம் தருகிறேன்….‘கிராம்மி அவார்டு பாடல்கள்’ என்று தினசரி ஒன்றாகப் போட்டுவருகிறீர்களா?” என்று கேட்டான்.

“இவையெல்லாம் மனப்பிறழ்வின் உச்சம். பேசாமல் இருங்கள்” என்று சொன்னேன்.

சரி போகட்டும்……………அந்தப் பெண்மணியின் கட்டுரைக்கு வருவோம். ‘இப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட எல்லை விரிவு படுத்தப்பட்டு ‘அடிரா அவளை…வெட்டுரா அவளை’…. ‘பொம்பளைங்களே இப்படித்தான்’…. ‘வேணாம் மச்சான் வேணாம்…… இந்தப் பொண்ணுங்க காதலு’ என்று கள்ள ஒப்பாரிகளை முன்வைக்கிறது இன்று. இந்தப் பாடல்களும் பெருமளவில் ரசிக்கப்படுகிறது என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதையெல்லாம் வாசிப்பதற்கு நல்லவேளை இப்போது பாட்டுப் புத்தகங்கள் பரவலாக விற்பனையாவதில்லை என்பதைத்தான் ஆறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று கட்டுரையை முடித்திருக்கிறார் அவர்.

பாட்டுப்புத்தகத்தின் தேவை ஏன் இல்லாமல் போனது என்பது பற்றி எழுதினால் அது இன்னொரு விவாதக்களத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.