Wednesday, March 21, 2018

போய்வாருங்கள் நடராஜன்சார்............!


ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்குமத்தின் ஆசிரியர் ‘பராசக்தி என்று வரும். பராசக்தி என்பது முரசொலி மாறனின் புனைப்பெயர். முரசொலி மாறன் முரசொலி ஆசிரியராக இருந்தபடியே எம்பியாகவும், கலைஞருக்கு மனசாட்சியாகவும் இருந்தபடியால் துணை ஆசிரியராக இருந்த பாவைசந்திரன்தான் குங்குமம் பத்திரிகைப் பூராவையும் கவனித்துவந்தார்.

இந்த நிலையில் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக பாவைசந்திரன் குங்குமத்தைவிட்டு வெளியேறும் நிலைமை வந்தது. அது பாவைசந்திரனுக்கு ஒரு சோதனையான காலம். அப்போதுதான் இளம் மனைவியை வேறு பறிகொடுத்திருந்தார். அந்த சமயம்பார்த்து வேலையும் பறிபோய்விட்டதால் கையறுநிலை. என்ன செய்வாரோ என்றிருந்த நிலைமையில் ம.நடராஜன் கைகொடுக்கிறார் என்ற தகவல் வந்தது.

அதாவது ‘புதிய பார்வை என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதற்குத் துணை ஆசிரியராக பாவையை நியமிக்கிறார் என்பது செய்தி.

அந்தச் செய்தி உறுதியானதும் பாவை செய்த முதல்வேலை பெங்களூர் வந்து சுஜாதாவைச் சந்தித்து புதிய பார்வையில் ஒரு தொடர்கதை எழுதுவதற்கான உத்திரவாதத்தைப் பெற்றுப்போனது. ‘சின்னக்குயிலி என்ற தொடர்கதையை புதிய பார்வையில் எழுதினார் சுஜாதா. அப்போது சுஜாதா சொல்லியது ஞாபகம் இருக்கிறது. “பாவை கொஞ்சம் வித்தியாசம் பண்ணுவோம். வழக்கமாக ஜெயராஜைப் படம் போடச் சொல்வீர்கள். இந்தக் கதைக்கு ஷ்யாமைப் படம் போடச் சொல்லுங்கள். ஷ்யாம் படத்துடன் கதை வருவது வித்தியாசமாக இருக்கும்

ஷ்யாம் படத்துடன் வந்த முதல் தொடர்கதை இதுதான் எனலாம்.

இது நடைபெற்று சில காலம் சென்றபின்னர் பாவைசந்திரன் மறுபடியும் பெங்களூர் வந்தார்.

இந்தச் சமயம் புதிய பார்வையின் ஒரு இதழை ‘பெங்களூர் மலர் என்று கொண்டுவரப்போவதாகவும் அதற்காக தகவல்கள் திரட்டிப்போக வந்திருப்பதாகவும் சொன்னார்.

பாவைசந்திரன், அ.குமார், நான் மூவருமாக ஒரு மூன்றுநான்கு நாட்கள் பெங்களூரின் பல பகுதிகளுக்கும் சென்று நிறைய தகவல்கள், பேட்டிகள் எனச் செய்தோம். குழந்தை இயேசு ஆலயம், வாணிகணபதி பேட்டி, அப்போது விளையாட்டுச் சாம்பியனாக இருந்த அஸ்வினி பேட்டி என்று நிறைய செய்தோம்.

பாவை இன்னொரு அஸ்திரத்தையும் வைத்திருந்தார்.

அது கர்நாடகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த வீரப்ப மொய்லியின் பேட்டி.

அதாவது கர்நாடக முதல்வரை சுஜாதா பேட்டி காண்பது என்பது திட்டம். ‘எனக்கு அரசியல் கேள்விகள் எல்லாம் வராதுய்யா என்று சுஜாதா சற்றே பின்வாங்க, கடைசியில் நானும் சுஜாதாவும் பேட்டி காண்பது என்பதாக முடிவாகி அந்தப் பேட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

பெங்களூர் வேலைகள் அனைத்தும் நினைத்தபடி முடிந்துவிட, உடனிருந்து உதவி செய்த எனக்கும் அ.குமாருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பாவை நினைத்திருக்கக்கூடும். பாவைசந்திரன் வழக்கமாக பெங்களூருக்கு வந்தால் ஒரு நண்பரின் வீட்டில் தங்குவார். அவர் புகைப்படக் கலைஞர் யோகாவின் உறவினர். அவருக்கு பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் ஒரு பெரிய நகைக்கடை இருந்தது. மாலை எல்லா வேலைகளும் முடிந்தபின்னர் காரை அந்த நகைக்கடைக்கு விடச்சொன்னார் பாவைசந்திரன்.

அங்கே போனதும் கேட்லாக்கை எடுத்து என்னிடம் நீட்டி “இதில் எந்த டிசைன் என்பதை செலக்ட் செய்யுங்கஎன்றார். இதே போன்று அ.குமாரிடமும் நடந்தது. நாங்கள் செலக்ட் செய்து கொடுப்பதற்கு இடையில் சென்னைக்கு போன்போட்டு திரு நடராஜனிடம் அனுமதி வாங்கிக்கொண்டார். பாவையின் இந்தச் செய்கை எனக்குப் புதுமையாக இருந்தது. பத்திரிகை ஒன்றிற்காக பணியாற்றினால் தங்கநகை வாங்கித் தருவார்களா?

நான் தயங்கியபோது பாவைசந்திரன் சொன்னார். “நடராஜன்சார் அனுமதியுடன்தான் தர்றேன் வாங்கிக்கங்க

அதன்பிறகு சென்னைக்குப் போனதும் ‘பெங்களூரில் செய்த உதவிகளுக்காக நன்றி தெரிவித்து நடராஜனின் கையெழுத்திட்டு ஒரு நன்றிக் கடிதம் வந்தது. பச்சை மசியில் கையெழுத்திட்டிருந்தார் நடராஜன். குறிப்பிட்ட அந்த இதழ் வெளிவந்த பின்னர் நல்ல தொகைக்கான செக் ஒன்றும் அனுப்பிவைத்திருந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான துவந்த யுத்தம் பற்றிய செய்திகள் புலனாய்வுப் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன.

ஒரு நாள் நடராஜன் திடீரென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பத்திரிகையில் வந்திருந்தது. என்ன செய்வது என்ற குழப்பம் ஒருபுறமிருக்க வருத்தம் தெரிவித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைப்போம் என்று தோன்ற ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினேன்.

ஒரு பதினைந்து நாட்கள் சென்றிருக்கும். சிறையின் ஏகப்பட்ட முத்திரைகள் குத்தப்பட்டு ஒரு பதில் கடிதம் வந்திருந்தது. ‘தங்களின் கடிதம் பார்த்தேன். உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதனால் சிறையின் தொல்லைகள் எதுவும் தெரியாமல் நாட்களைக் கழிக்கமுடிகிறது. நிறையப் படிக்கிறேன். விரைவில் சந்திப்போம் என்பது போன்ற வரிகளில் எழுதியிருந்தார்.

அதைவிட ஆச்சரியம், கடிதம் பளபளவென்று அச்சிடப்பட்ட ஆர்ட் தாளில் முகப்பில் ஏதோ ஒரு இயற்கைப் படம்போட்ட வெளிநாட்டுக் கார்டாக அமைந்திருந்ததுதான்.

இதற்கிடையில் குமுதம் பால்யூ ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தார்.

நடராஜன் சசிகலா பற்றிய பேச்சு வந்தபோது நடராஜனைப் பற்றி மிகப்பெருமையாகப் பேசினார் பால்யூ. ‘அந்தப் பெண்ணும் சாதாரணமில்லை. ரொம்பவும் நல்ல குணம். வீட்டிற்குப் போனால் காப்பியும் சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு கர்ட்டனில் தன்னைப் பாதி மறைத்துக்கொண்டுதான் நின்று பேசும். அப்படிப்பட்ட பெண் இன்றைக்கு கமிஷனர், டிஜிபி இவங்களையெல்லாம் வீட்டிற்கே அழைத்து உத்தரவு போடுவதாக எல்லாம் கேள்விப்பட்டேன். ஆச்சரியமாக இருக்கிறது என்று சசிகலாவைப் பற்றிய தமது ஆச்சரியங்களைப் பகிர்ந்து கொண்டார்.

புதிய பார்வை பற்றிய பேச்சு வந்தது. அப்போதுதான் அந்த விஷயத்தைச் சொன்னார் பால்யூ. ‘புதிய பார்வை ஆரம்பித்து பாவையை நியமித்தது பெரிய விஷயமில்லை. கூடவே ‘தமிழரசிஎன்றொரு பத்திரிகை ஆரம்பித்து அதில் விக்கிரமனை ஆசிரியராகப் போட்டிருக்கிறார் பாருங்கள் அதுதான் பெரிய விஷயம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. நடராஜனுக்கும் சசிகலாவுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் திடீரென்று சென்னை வந்தபோது உடனடியாக அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. சில நாட்கள் தங்கியிருக்க தம்முடைய அமுதசுரபி அலுவலகத்திலேயே இடம் கொடுத்துத் தங்க வைத்தார் விக்கிரமன். புதிய பார்வை ஆரம்பிக்கும்போதே கூடவே தமிழரசி என்றொரு பத்திரிகையையும் ஆரம்பிக்கிறார். நேரே விக்கிரமனிடம்போய் தமிழரசியின் ஆசிரியராக வருமாறு கேட்கிறார் நடராஜன்.

மறுக்கிறார் விக்கிரமன். “நான் பல வருடங்களாக அமுதசுரபி ஆசிரியராக இருந்துவருகிறேன். உலகிலேயே இத்தனை வருடங்களுக்கு யாரும் ஒரே பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்ததில்லை. அதனால் இதனை விட்டுவிட்டு நான் வரமாட்டேன் என்கிறார்.

“உங்களை யார் அமுதசுரபியை விட்டுவிட்டு வரச்சொன்னது? என்கிறார் நடராஜன். “நீங்கள் பாட்டுக்கு அமுதசுரபியில் ஆசிரியராகத் தொடருங்கள். கூடவே தமிழரசியிலும் ஆசிரியராக இருங்கள். அமுதசுரபி மாதப் பத்திரிகைதானே? தமிழரசி வேலையை முடித்துவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அமுதசுரபிக்கு வேலைப் பார்த்தால் ஆயிற்று. உங்களின் ஒரே பிரச்சினை அமுதசுரபி நிர்வாகத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதுதானே? விடுங்கள்.... நான் அவர்களிடம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லுகிறேன்.

அன்றைய நிலையில் நடராஜன் கூப்பிட்டுப் பேசினால் யார் மாட்டேன் என்று சொல்லப்போகிறார்கள்?

அமுதசுரபி நிர்வாகமும் ஒப்புக்கொள்கிறது. விக்கிரமனும் ஒப்புக்கொள்கிறார். புதியபார்வை, தமிழரசி இரு பத்திரிகைகள் என்று முடிவாகிறது.

டிடிகே சாலையில் பூஜை போடப்பட்டு இரு பத்திரிகைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன.

இப்போதுதான் அந்த டுவிஸ்ட்.

பூஜை போட்டு முடிந்தவுடன் புத்தம்புதிய காரின் சாவி ஒன்றை விக்கிரமனுக்குப் பரிசளிக்கிறார் நடராஜன்.

இன்றைக்குக் கார் என்பது சகஜமாகிவிட்ட ஒன்று. மாதத்தவணை முறையில் நல்ல கம்பெனியில் வேலைப் பார்க்கும் யார் வேண்டுமானாலும் கார் வாங்கிவிடலாம். இன்றைய முக்கால்வாசிக் கார்கள் மாதத் தவணைக் கார்கள்தாம்.

அன்றைய நிலைமை அது இல்லை.

கார் என்பதே அதிசயம் என்றிருந்த காலகட்டத்தில் ஆரம்பத்தில் தமக்குச் செய்த உதவியை மறவாமல் மனதில் வைத்துக்கொண்டிருந்து தமக்கு ஒரு பெரிய வாழ்வு வந்தவுடன் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்திய மனித நேயப் பண்பு அது.

என்னுடைய மனதிற்குள் நடராஜன் நாற்காலி போட்டு உட்கார்ந்த நேரம் அதுதான்.

புதியபார்வை சரி; அது என்ன ‘தமிழரசி?

இந்தக் கேள்வியை அவரிடம் யாரோ கேட்டிருக்கிறார்கள்.

“உண்மையான ‘தமிழரசி சசிதானே? அடுத்து ஆளப்போவது சசிதான். அதனால்தான் தமிழரசின்னு பேரு வச்சி பத்திரிகை ஆரம்பிச்சிருக்கேன் – என்றாராம் நடராஜன்.

“ஜெயலலிதாவின் கோபத்திற்கு இந்தக் கமெண்டும் காரணமாக இருந்திருக்கலாம்”- என்று சொல்லிச் சிரித்தார் பால்யூ.

இதன்பிறகு ஒருநாள்.... சென்னை போயிருந்தபோது புதியபார்வை அலுவலகத்தில் பாவைசந்திரன் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.

“பாவை என்று இரைந்து கூப்பிட்டபடியே யாரோ கதவைத் திறந்தார்கள்.

நடராஜன் நின்று கொண்டிருந்தார்.

அறையில் இன்னொருவராக நான் இருப்பதைப் பார்த்ததும் “ஓ.. சாரி.. பாவை அப்புறமாக ஒரு ஐந்துநிமிஷம் என்னுடைய கேபின் வந்துட்டுப் போங்க என்று சொல்லிக் கதவை மூடிக்கொண்டார்.

“இருங்க.. இப்பவே போய்ப் பேசிட்டு வந்துர்றேன் என்று சொல்லி எழுந்துபோன பாவை, ஒரு பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். அப்படியா? போகும்போது வந்து பார்த்துட்டுப் போகச்சொல்லுங்கன்னு சொன்னாரு. போய்ப் பார்த்திருங்க என்றார்.

“இல்லை பாவை. நான் ஒரு மணிக்கு இங்கிருந்து கிளம்பியாகணும். ஒன்றரை மணிக்கு ஓரிடத்தில் மதிய சாப்பாட்டுக்கு எனக்காக காத்திருப்பாங்க. இங்கே போனால் நேரமாகிடும். நான் இன்னொரு நாளைக்கு வந்து நடராஜன்சாரைப் பார்க்கிறேன் என்றேன்.

நான் சொன்னதில் பாவைக்கு அவ்வளவு உடன்பாடில்லைஎன்பதை அவரது முகம் காட்டிற்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே போனின் இண்டர்காம் ஒலித்தது. அந்த முனையில் நடராஜன்தான் பேசினார்.

அதாவது, அன்றைக்கு மதிய உணவிற்காக எத்தனைப் பேருக்கு உணவு அனுப்பிவைக்க வேண்டுமென்று சசிகலா வினவியதாகவும் தற்சமயம் மூன்றுபேர் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என இன்னும் இரண்டுபேருக்கு எக்ஸ்ட்ராவாக- அதாவது ஐந்து பேருக்குத் தாம் சொல்லிவிட்டதாகவும் இன்றைக்கு ஸீஃபுட்தான் அனுப்புகிறார்கள் என்றும் சொல்லிப் போனை வைத்தார்.

“அவரு மதிய உணவுக்கும் சொல்லிட்டாராம். இருந்து சாப்பிட்டுட்டுப் போயிருங்க என்றார் பாவை.

‘போயஸ் கார்டனிலிருந்து அனுப்பப்படும் உணவை ருசி பார்க்கும் ஆர்வம் ஒரு புறம் இருந்தது என்றாலும் ஏற்கெனவே ஒப்பந்தமான ஒன்றைக் கேன்சல் செய்தல் ஆகாது என்பதால் அன்றைய தினத்தில் அவர்களுடன் மதிய உணவு அருந்த முடியவில்லை என்றுகூறி -

விடைபெற்றேன்.

இங்கே கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைக்கு முதல்வராயிருந்தவர் ஜெயலலிதா.

நடராஜனுக்கும் போயஸ்கார்டனுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எல்லாப் பத்திரிகைகளும் அறைகூவிக் கொண்டிருந்த காலம் அது.

ஆனால் மதிய உணவு போயஸ்கார்டனிலிருந்துதான் போகிறது.

மக்களுடன் சரியான கண்ணாமூச்சிதான் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார் ஜெயலலிதா.

ஆயிற்றா?  

இதற்குப் பின்னர் பாவை சந்திரன் புதிய தலைமுறையிலிருந்து ‘நமது எம்ஜிஆருக்குப் போய், பின்னர் அங்கிருந்து தினமணிக்கும் போய்விட்டார்.

நாம் நடராஜனுக்கு வருவோம்.

பேராசிரியர் ராமமூர்த்தி பெங்களூரில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முதல்வர். இவர் தமது மூத்த மகள் வில்வினிக்கு சென்னையின் பெரிய ஹோட்டல் ஒன்றில் திருமணம் வைத்திருந்தார். அந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மணமேடையின் 
படிக்கட்டுக்களில் ஏறிக்கொண்டிருந்தபோது இறங்கிக் கொண்டிருந்தவர் நடராஜன்.

படிக்கட்டில் வைத்துக் கைகுலுக்கிப் பேசியபோது “போங்க. போய் மணமக்களை ப்ளெஸ் பண்ணிட்டு வந்துருங்க. நான் கீழே காத்திருக்கேன் என்று சொல்லி இறங்கிப் போனார்.

மேடையின் எதிரில் எனக்காக நின்றுகொண்டிருந்தார்.

மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு புகைப்படம் எடுத்து இறங்குவதற்குள் நடிகர் சிவகுமார், அறிவுமதி, இலக்கியச் சுடர் ராமலிங்கம் என்று மேடையில் முக்கியஸ்தர்கள் குவிந்துவிட்டதால் உடனடியாக இறங்குவதற்குத் தாமதம் ஆகிவிட்டது.
மேடைக்குக் கீழே நின்றுகொண்டிருந்த நடராஜன் அவரைச் சுற்றிக் கூட்டம் கூடியவுடன் அவர்களுடன் பேசிக்கொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆக அப்போதும் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அடுத்து பெங்களூரில் அந்த வாய்ப்பு வந்தது. முள்ளிவாய்க்காலில் அவர் நினைவுச் சின்னம் எழுப்பி அது திறக்கப்படுவதற்குச் சிறிது நாட்கள் இருந்தபோது முள்ளிவாய்க்காலுக்காக நிதி திரட்டும் பொருட்டு பெங்களூரில் ம.நடராஜன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அழைப்பு வரவே நானும் போயிருந்தேன்.

பேசுபவர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லாவிட்டாலும் ‘ஓரிரு வார்த்தைகள் பேசுவார் என்று சொல்லி என்னை அழைத்தார்கள். மேடையில் இருப்பவர்களை விளித்து நான் பேசியபோது நான் சொன்ன ஒரு வாக்கியத்திற்கு கூட்டம் படபடவென்று கைத்தட்டிற்று.

மேடையில் பக்கத்திலிருந்தவரிடம் சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்த நடராஜன் நான் என்ன பேசினேன் என்று அடுத்த பக்கத்திலிருந்தவரைக் கேட்டார். 

நான் சொன்னது இதுதான்; “மற்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன்னர் ம.நடராஜனிடம் எனக்கொரு கேள்வி இருக்கிறது. நான் முதன் முதல் பார்த்த அன்றையிலிருந்து இன்றுவரைக்கும் ஒரே மாதிரியான தோற்றத்துடன்  இருக்கிறீர்களே...நடராஜன்சார் உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

ஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார் நடராஜன்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும் “நாம நேரா ஓட்டல் சாளுக்யாவிற்குப் போய்விடுவோம். பழ.நெடுமாறன், நடராஜன் இருவருமே அங்கேதான் தங்கியிருக்காங்க. இரண்டுபேரையும் கொண்டு விட்டுட்டு பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவோம் என்று சொன்னார் பேராசிரியர் ராமமூர்த்தி.

சாளுக்யாவுக்குச் சென்று ரிசப்ஷனிலேயே அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இங்கே இடைமறிப்பு வேறொரு வடிவில் வந்தது.

கார் டிரைவர் வந்து பின்புறம் நின்றார். “சார் உங்களைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு பிறகு வந்து புரொபசரை அவர் வீட்டில் விட்டுவிட்டுப் பிறகு நான் வீட்டிற்குப் போகவேண்டும். இப்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. உங்க வீட்டிற்குப் போவதற்கே நள்ளிரவு பன்னிரண்டு ஆகிவிடும். கொஞ்சம் இப்போதே வந்தீர்களென்றால் சௌகரியமாயிருக்கும் என்று கன்னடத்தில் சொன்னார்.
டிரைவர் சொல்வதன் நியாயம் கருதி அப்போதே நடராஜனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

சில நாட்களுக்கு முன்பு சசிகலா பரோலில் வந்து தமது கணவருடன் ஐந்து நாட்கள் தங்கியிருந்து திரும்பவும் பெங்களூர் திரும்பியிருந்த சில நாட்கள் கழித்து பேராசிரியர் ராமமூர்த்தி வீட்டிற்கு வந்திருந்தார். அவர் நடராஜனுடன் மிகவும் நெருக்கம் என்பது எனக்குத் தெரியும். நான் சொன்னேன். “சார் நடராஜன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கு. ஒரு நாள் சென்னை போய் அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பிறலாமே

ராமமூர்த்தி சொன்னார். “இல்லை அமுதவன், நான் சமீபத்தில் சென்னைக்குப் போயிருந்தேன். நடராஜனைப் போய்ப் பார்த்துவரலாமென்று வீட்டிற்குப் போனேன். வெளியாள் யாரையும் பார்க்கக் கூடாது நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும் என்று டாக்டர்களின் கடுமையான கண்டிஷன். அதனால் அவரைப் பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை. டாக்டர்கள் அனுமதி அளிக்கும்வரை இதுதான் நிலைமை. பெயர் எழுதிவைத்துவிட்டுப் போங்கள் என்றார்கள். ஸ்பீடி ரிக்கவரி எழுதிவிட்டு வந்துவிட்டேன். கண்டிஷன் தளர்ந்தவுடன் நாங்களே போன் செய்து கூப்பிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் கூப்பிடுவார்கள். அப்போது நாம் இருவரும் போகலாம் என்று சொன்னார்.

ராமமூர்த்தியிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. நடராஜன் கிளம்பிவிட்டார்.

போய்வாருங்கள் நடராஜன்சார்!