Sunday, September 4, 2016

அன்னை தெரசா ‘செயிண்ட் தெரசா’ ஆனார். ‘செயிண்ட்’ என்றால் என்ன?


உலக மக்களில் பெரும்பாலானோருக்கு – அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்களுக்கு-  நம்முடைய வாழுங்காலத்திலேயே, சிறிது காலத்திற்கு முன்பு நம் முன்னே ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒருவரை புனிதர் என்று, ஆங்கிலத்தில் செயிண்ட் (Saint) என்று வழங்கப்படும் வாய்ப்பைப் பார்க்கக் கொடுத்துவைத்தவர்களாக இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராவுக்கும் அதிலும் எத்தனை காலத்திற்கு இந்த பூமிப்பந்து 

இருக்கப்போகின்றதோ அத்தனைக் காலத்திற்கும் ‘அன்னை தெரசா’ ‘செயிண்ட் தெரசா’ என்றுதான் இதற்குமேல் வழங்கப்படப் போகிறார். 

இது கால காலத்திற்கும் யுகயுகாந்திரங்களுக்கும் இருக்கப்போகும், வழங்கப்போகும், வழிபடப்போகும் ஒரு பட்டமாக, ஒரு நிலையாக 
இருக்கப்போகிறது என்பதுதான் இதிலுள்ள விசேஷம்.

வாழுங்காலத்திலேயே ‘மகாத்மாவாக’ வாழ்ந்த எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம். இலக்கியத்திலும் வரலாறுகளிலும் மக்கள் மனங்களிலும் அவர்கள் நின்று நிலைத்துவிடுவதைப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றிய புத்தகங்களும், கட்டுரைகளும், நிறையப் படித்திருக்கிறோம். இலக்கியக் கூட்டங்களிலும், பட்டி மன்றங்களிலும் அவர்களின் புகழ்பாடக் கேட்டிருக்கிறோம். மனிதப் புனிதர் என்று நாமும் எத்தனையோ பேரைப் பெயர் சொல்லிக் கொண்டாடியிருக்கிறோம்.


இதற்கெல்லாம் மேம்பட்ட ஒன்று இந்தப் புனிதர் பட்டம்.

நாம் கொண்டாடுகின்ற மற்ற புனிதர்களுக்கும் இந்தப் ‘புனிதருக்கும்’ வேறுபாடு என்னவெனில் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டம். 

அதாவது இந்திய தேசத்தை எடுத்துக்கொண்டால் நாம் என்னதான் கூட்டங்களிலும் ஏடுகளிலும் நூல்களிலும் பேசினாலும் எழுதினாலும் பாராளுமன்றத்தால் ‘அங்கீகரிக்கப்பட்டது’ என்றால் என்ன ஒரு தனி முக்கியத்துவம் கிடைக்குமோ, அதுபோன்ற ஒரு முக்கியத்துவம் வாடிகனில் இருக்கும் திருச்சபை மூலம் மதர் தெரசாவுக்குக் கிடைத்திருக்கிறது.

இனிமேல் உலகம் உள்ள அளவுக்கும் உலகம் முழுமைக்கும் காலங்களைக் கடந்தும் இதே அளவு மரியாதையுடனும் இதே அளவு முக்கியத்துவத்துடனும் இதே அளவு பக்தியுடனும் (இது அதிகரிக்கவும் வாய்ப்புண்டு) நீடித்து நிலைக்கப்போகிறது.

என்ன அது அப்படிப்பட்ட அங்கீகாரம்? அப்படியென்ன முக்கியத்துவம்? இத்தனைக் காலமும் கிடைத்துக்கொண்டிருந்த அங்கீகாரத்தைத் தாண்டி அப்படியென்ன புதிய அங்கீகாரம் அன்னை தெரசாவுக்குக் கிடைத்திருக்கிறது? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். பெரும்பாலும் தொண்ணூறு சதவிகிதத்தினருக்கு இதுபற்றிய புரிதல் நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.

அன்னை தெரசாவுக்கு அவர்கள் வாழுங்காலத்திலேயே மிகப்பெரிய மரியாதைகள் கிடைத்துக்கொண்டிருந்தன என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். 120க்கும் மேற்பட்ட நாடுகளில் அவருடைய துறவறச் சேவைகளுக்கான கிளைகள் உள்ளன; உலகத் தலைவர்கள் இந்தியா வரும்போது டெல்லியில் குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் சந்தித்துவிட்டு கல்கத்தா போய்(ஆமாம் அப்போதெல்லாம் கொல்கொத்தா இல்லை, கல்கத்தாதான்) அன்னை தெரசாவையும் சந்தித்துவிட்டுத்தான் செல்வார்கள்.

வாழும்போதே உலகின் அத்தனை விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. உலகின் பெரிய விருதாக மதிக்கப்படும் நோபெல் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. உலகத்தலைவர்களின் அத்தனை அரசு இல்லங்களும் மதர் தெரசாவின் காலடிகள் படுவதற்காக காத்திருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு அங்கீகாரமா இப்போது வழங்கப்பட்டிருப்பது? என்பதுதான் முக்கியமான கேள்வி.


பதில் ‘ஆம்’ என்பதுதான். 


நாலரை அடிகள் மட்டுமே உயரம் கொண்ட ஒரு பெண்மணி மொத்த உலகையும் தம்முடைய கருணையால் கட்டிப்போட்டிருந்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல; பத்திரிகைகள் சொல்வதையும் பேச்சாளர்கள் சொல்தையும் விட்டுவிடுவோம். பெங்களூரில் எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. நகரின் மிகப்பெரிய புகழ்பெற்ற ஆர்க்கிடெக்டுகளில் ஒருவர். அன்னை தெரசா உயிருடன் இருந்த காலத்தில் ‘இப்படிப் பேசுகிறார்களே, இப்படிப் புகழ்கிறார்களே, அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் பார்த்துவரலாம்’ என்று கல்கத்தாவுக்கு நேரில் சென்று வந்தவர் சொன்னதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

“அந்த இடத்தையெல்லாம் போய்ப் பார்த்ததும் எனக்கே இந்த உலகத்தின் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. ஐயோ, சாதாரண நாற்றத்தைக்கூடத் தாங்கமுடியாமல் நாம் எப்படியெல்லாம் அந்த இடங்களையும் அந்தச் சூழல்களையும் தவிர்க்கிறோம் தெரியுமா?

எத்தனை விலை உயர்ந்த செண்ட்டுகளையும் ஸ்ப்ரேக்களையும் அடித்துக்கொண்டு வேடம் போட்டுக்கொண்டிருக்கிறோம் தெரியுமா?

ஒரு சின்ன நாற்றத்துக்கே மூக்கைப் பொத்திக்கொண்டு காத தூரம் ஓடுகிறோம் தெரியுமா?

அவங்க அப்படியே துர்நாற்றமடிக்கும் மனிதர்களைத் தூக்கி மடிமேல் வைத்துக்கொள்கிறார்கள்;

சீழ்வடியும் காயங்களைக் கொஞ்சமும் முகம் சுளிக்காமல், மூக்கில் துணியைக்கூட கட்டிக்கொள்ளாமல் கழுவித் துடைக்கிறார்கள்.

மலத்தையும் மூத்திரத்தையும் கைகளில் வாரி சுத்தம் செய்கிறார்கள்.

வியாதியஸ்தர்களைத் தோளில் சாய்த்துப் படுக்கவைத்துத் தூங்கவைக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழுநோயாளிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்………

ஐயோ, அதையெல்லாம் நினைத்தால் தூக்கம் பறிபோய் விடுகிறது. நான் கல்கத்தாவில் அதையெல்லாம் பார்த்துவிட்டு வந்து பலநாட்கள் சாப்பிடவே பிடிக்காமல் இருந்தேன்” என்றார். அவர் சொன்னபோது அவரின் உடம்பு துடித்தது. கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு கேவிக் கேவி அழுதார் அவர்.

இதுதான் அன்னை தெரசா. 

தம்மை அவ்வப்போது வந்து வாட்டிவதைத்த நோயைக்கூட அவர் சாதாரண நகைச்சுவைப் போலத்தான் சொல்வாராம். அவருக்கு அவ்வப்போது இதய வலி வருமாம். அதற்கென பேஸ்மேக்கர் கருவி பொருத்தியிருப்பாராம். ‘என்னுடைய நெருங்கிய நண்பர் இப்போது என்னைப் பார்க்க வந்திருக்கிறார்’ என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னாரென்றால் அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது என்று அர்த்தமாம்.

விமானத்தில் ஏறி வேறொரு இடத்திற்கு மதர் போகிறார் என்றால் எல்லாரும் இறங்கி வந்தபிறகும் அவர் மட்டும் வரமாட்டாராம். ஏனெனில் அவருக்கு விமானப் பணிப்பெண்களிடமும் பணியாளர்களிடமும் வேலையிருக்கிறது.

விமானத்தில் பயணிகள் சாப்பிட்டு மீதம் வைத்ததை, எவற்றையெல்லாம் குப்பையில் கொட்ட வேண்டுமென்று நினைப்பார்களோ அவற்றில் கெட்டுப்போகாத பொருட்களையெல்லாம் சேகரித்து தன்னுடன் கொண்டு போகும் பெரிய பிளாஸ்டிக் பையொன்றில் போட்டு எடுத்துக்கொண்டு வருவது நிரந்தரக் காட்சி.

அவர் அடுத்துச் செல்லப்போகும் ஆசிரமங்களில் இருப்பவர்களுக்கான உணவு அது.

சரி; இப்போது விஷயத்திற்கு வருவோம். இவ்வளவு நாட்களும் மனிதப் புனிதராயிருந்தவருக்கு வாடிகன் திருச்சபை அளித்திருக்கும் அங்கீகாரம் என்னென்ன? 

1)   முதலாவதாக அவருடைய புகைப்படங்கள் இவ்வளவு நாட்களும் சாதாரணமாக இருந்திருக்கும். இனிமேல் மதர் தெரசாவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போடப்பட்டிருக்கும். ஆரா (Aura) என்று சொல்லப்படும் ஒளிவட்டம் இது.

2)   மனிதர்கள் எல்லாருக்கும் இந்த ஆரா உண்டு. நல்லவர்களுக்கு இந்த ஒளிவட்டம் உடம்பைச் சுற்றிலும் மற்றவர்களை விடவும் கொஞ்சம் அதிகம் இருக்கும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் இன்னமும் அதிகமாக இருக்கும். ஆனால் கடவுள்களுக்கும் கடவுளுக்கு நெருக்கமாக வைத்து மதிக்கப்படுபவர்களுக்கும் மட்டும்தான் தலையைச் சுற்றிலும்கூட ஒளிவட்டம் இருக்கும். திருச்சபையால் புனிதர் என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் அவருடைய படத்துடன் இந்த ஒளிவட்டம் நிரந்தரமாகிவிடும்.

3)   ஒருவர் எத்தனை தான் புகழப்பட்டாலும், போற்றப்பட்டாலும், மனிதப் புனிதர் என்று திரும்பத் திரும்ப பேசப்பட்டாலும் அவர்கள் பெயரில் கோவில்கள் இருக்காது. இருப்பதற்கு வாய்ப்பில்லை.

செயிண்ட் என்று அங்கீகாரம் பெற்றவர்கள் பெயரில்தான் கோவில்கள் உருவாக்க வழியிருக்கிறது. செயிண்ட் தாமஸ் சர்ச், செயிண்ட் செபாஸ்டியன் சர்ச், செயிண்ட் பால்ஸ் சர்ச் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? இனிமேல் செயிண்ட் தெரசா பெயரில் கோவில்கள் உருவாக்கப்படும்- அதாவது உலகமெங்கிலும்.

4)   இனிமேல் மதர் செயிண்ட் தெரசா பெயரில் (இப்படித்தான் அழைக்கப்படுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கெனவே புனிதரான தெரசாக்கள் இருக்கிறார்கள். செயிண்டு தெரசா ஸ்கூல், செயிண்ட் தெரசா கான்வெண்ட் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?) பிரார்த்தனைகள் உருவாக்கப்படும். ஜெபங்கள் உருவாக்கப்படும். அந்தோனியார் ஜெபங்கள், அந்தோனியார் பிரார்த்தனைகள் என்றெல்லாம் வழங்கப்படுவதுபோல் அன்னை பெயரிலும் பிரார்த்தனைகள் உருவாக்கப்படும்.

5)   கோவில், ஜெபம், பிரார்த்தனைகள் என்றெல்லாம் வந்துவிட்ட பிறகு வருடந்தோறும் திருநாள், கொடியேற்றம், தேர்பவனி என்பதெல்லாம் துவங்கப்படும்.

6)   பதுவைப் பதியரான அர்ச் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்- என்று சொல்கிற மாதிரி ‘வாழ்நாளெல்லாம் தொழுநோயாளிகளுக்காகப் பாடுபட்ட அன்னை தெரசாவே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்’ என்கிற மாதிரியான பிரார்த்தனைகள் உருவாக்கப்படும்.

இவ்வளவு நாட்களும் நம்மில் ஒருவராக இருந்த ஒருவரை இறைவனுக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அங்கீகரித்த ஒரு நிலைப்பாடுதான் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்ட புனிதர் பட்டம்.
1