Saturday, December 20, 2014

வவ்வாலை எங்கே காணோம்?



நீண்ட நாட்களாகப் பதிவர் வவ்வாலை தமிழ் இணைய வெளியில் எங்கும் காணோம். அவருடைய தளமான ‘வவ்வால்- தலைகீழ் விவாதங்கள்’ தளம்கூட இந்த வருடம்(2014) ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதிக்குப் பிறகு எந்தவிதப் புதிய பதிவுகளும் இல்லாமல் வெறிச்சோடியே இருக்கிறது.

இம்மாதிரியான நீண்ட இடைவெளிகள் அவர் அவ்வப்போது எடுத்துக்கொள்வது உண்டுதான். ஆனால் பதிவுகள் இல்லாத நாட்களில்கூட அவருடைய காரசாரமான பின்னூட்டங்கள் இல்லாமல் போகாது.

தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதமெல்லாம் பார்க்கமாட்டார். பதிவுலகில் புகழ் பெற்றவர் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? ஆனால் அப்படி இருப்பதாக தங்களுக்குத் தாங்களாகவே நினைத்துக்கொண்டு சிலர் செய்யும் அலப்பறைகள் வேடிக்கையானவை), புதியவர் என்றெல்லாம் பார்க்கமாட்டார். நம்முடைய குழுவைச் சேர்ந்தவர்களா, இவர் நமக்குத் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் போடுகிறவரா, இவர் நம்மைப் பாராட்டி எழுதுகிறவரா என்பது போன்ற எந்தவித அளவுகோள்களையும் வைத்துக்கொள்ள மாட்டார். பதிவுகளைப் படிக்கும்போது தனக்கு எழுதவேண்டும் என்று தோன்றுகிறதா உடனடியாகத் தமது கருத்தைப் பதிவு செய்துவிடுவார். 

அந்தக் கருத்து பெரும்பாலும் இன்னொரு விவாதத்திற்கு  இழுத்துச் சென்றுவிடும் என்பது யதார்த்தம்.

ஆனால் அதுதான் இணைய தளத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விஷயமாக இருக்கும்.

இப்படிப்பட்டவர் கடந்த நான்கு மாதங்களாக இணைய தளத்தில் எங்கேயும் காணவில்லை. 

நெய்வேலி புத்தகச் சந்தையின்போது நெய்வேலி சென்று அவர் எழுதிய பதிவுதான் அவருடைய தளத்தில் இன்னமும் காட்சியளிக்கிறது. அதன்பிறகு என்னுடைய தளத்தில் சிவாஜிகணேசன் பற்றிய என்னுடைய கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சில பின்னூட்டங்கள் எழுதியிருந்தார்.

ஏற்கெனவே சில தளங்களில் அவரது கருத்துக்கள் பற்றி அறிந்திருந்ததனால் அவர் எம்ஜிஆர் ரசிகர் என்ற விஷயம் லேசுபாசாகத் தெரிந்திருந்தது. ‘சிவாஜி பற்றி எதிர்த்து எழுதுகிறீர்களா எழுதுங்கள். 
அதென்ன ‘சிவாசி’ என்றெழுதுவது? நீங்கள் அப்படியொன்றும் தனித்தமிழ் எழுதுகிற ஆசாமி இல்லை. அப்படியிருக்க சிவாஜியை சிவாசி என்றெழுதுவதன் மூலம் மட்டுமே அவருடைய மதிப்பைக் குறைத்துவிடுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்பதுபோல் பதில் எழுதினேன்.

மீண்டும் மீண்டும் சிவாசி என்றே எழுதிக்கொண்டிருந்தார்.

அவருக்கான சில பதில்களுக்குப் பிறகு, அந்தக் கட்டுரையை விதண்டாவாதங்களுக்கான ஒரு 
கட்டுரையாக மாற்றிவிட என்னுடைய மனம் ஒப்பதாததால் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கும் முன்னர் வவ்வாலின் பின்னூட்டத்திற்கு அனானிமஸ் பெயரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் பதில் எழுதியிருந்தார். வவ்வாலைப் பற்றி ரசக்குறைவான வார்த்தைகளும் அதில் இருந்தன. அத்தகைய வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களை நான் என் தளத்தில் வெளியிடுவதில்லை என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பதால் அந்தப் பின்னூட்டத்தை வெளியிடவில்லை.

அந்த நேரத்தில் எனக்கு பதிலளித்து வவ்வால் இன்னொரு பின்னூட்டமும் எழுதினார். ஏற்கெனவே ஒரு ‘அனானிமஸ்’ வரிசையில் இருக்கிறார். அதனையே வெளியிடவில்லை. இப்போது வவ்வாலின் பின்னூட்டமும் அந்த அனானிமஸ் சொல்லியுள்ள கருத்துக்களைப் பெருமளவு ஒட்டியதாகவே இருக்கிறது என்பதனால் இவை இரண்டையும் வெளியிட்டு புதியதொரு வேண்டாத விவாதத்தைத் தொடரக்கூடாது என்பதனால் வவ்வாலின் பின்னூட்டத்தையும் தவிர்த்துவிட்டேன். பதிவுக்குத் தொடர்பில்லாத அசிங்கம் பிடித்த பின்னூட்டங்கள் தவிர, இம்மாதிரியான பின்னூட்டங்களைத் தவிர்ப்பவன் நான் அல்ல. ஆனால் தேவை கருதியே இதனைத் தவிர்த்தேன்.

ஆனால் இதனால் எல்லாம் வவ்வால் போன்றவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்ற சிறுபிள்ளைத்தனமான நினைப்பும் எனக்கில்லை. ஆனால் அந்தப் பின்னூட்டங்களுக்குப் பிறகு அவரை எங்கேயுமே காணோம் என்பதுதான் வருத்தமாயிருக்கிறது.

அதன்பிறகு மற்றவர்களின் ஏதோ ஒன்றோ இரண்டோ பதிவுகளில் வவ்வாலின் ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே பார்த்ததாக ஞாபகம். அவைகூட வவ்வாலின் முத்திரை எதுவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாகவே இருந்தன.

அதன் பிறகு அவரை சுத்தமாக இணையவெளி எங்கும் காணோம்.

அவருடைய வழக்கமான எதிர்க்கருத்துக்களும், விவாதங்களும் இல்லாமல் தமிழ் இணையவெளி சற்றே போரடிக்கிறது என்பதும் உண்மைதான். தமிழ் இணையத்தில் சுவாரஸ்யமானவைகளே இந்தப் ‘பின்னூட்டங்கள்’ என்று சொல்லப்படும் எதிர்க்கருத்துக்கள்தாம்.

இவற்றைப் பின்னூட்டம் என்று சொல்லலாமா, அது சரியான பொருளாகுமா என்ற கேள்வியை சமீபத்தில் ஒரு பதிவர் எழுப்பியிருந்தார்.

உண்மைதான்.

எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது.

தமிழில் இணையவெளியை ஆரம்பித்து வடிவமைத்தவர்கள் இணையத்திற்கு என்று எல்லாமே வித்தியாசமாக இருக்கட்டுமே, கட்டுரை என்று சொல்லவேண்டாம், பதிவு என்று சொல்லலாம். கடிதம் என்றோ கருத்து என்றோ சொல்லவேண்டாம், பின்னூட்டம் என்று சொல்லுவோம் என்பதாக நினைத்து இந்த வடிவத்தைத் தமிழ் உலகின் முன்பு சமர்ப்பித்திருக்கக்கூடும்.

அந்த முன்னோடிகளுக்கு மதிப்பளித்து நாமும் அதனை அப்படியே தொடர்வோம் என்ற எண்ணத்தில்தான் நானும் பின்னூட்டம் என்றே குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் என்பது சரியான பொருள் தரவில்லையோ என்ற எண்ணம் சமீப காலமாக மிக அழுத்தமாகவே மனதில் இருக்கிறது. அதனால் தமிழ்ப்பெரியவர்கள் எல்லாரும் இணைந்து இதனை மாற்றினார்களென்றால் நாமும் மாறலாம். ஏனெனில் இணையத்தின் தளங்கள் வெவ்வேறானவை.

பலவிதமான எழுத்துக்களும் இணையத்தில் உலா வருகின்றன.

சமூக மற்றும் அரசியல் விவாதங்களில் வினவு தளத்தின் சாதனைகள் அசாதாரணமானவை.

சவுக்கு தளத்தை எந்த வரிசையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. ஆனால் சவுக்குசங்கரின் திறமையும் துணிச்சலும் சாதாரணமானதல்ல. யாருக்கும் அவ்வளவு எளிதாக அத்தனைத் துணிச்சல் வருவதற்கில்லை.

தம்முடைய கருத்தில் மிகவே உறுதியாக இருக்கும் இன்னொரு பதிவர் திரு வே.மதிமாறன்.

நேரடியாக ஆழமான கருத்துக்கள் கொண்ட சிறப்பான பதிவுகளை எழுதும் பதிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி, மூங்கில்காற்று டி.என்.முரளிதரன், தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார், ஸ்ரீராம் என்று அவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளமானது.

தாங்கள் உண்டு தங்களின் பதிவுகள் உண்டு என்று அப்புராணியாய் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் நிறைய.

தாங்கள் கொண்ட கருத்துக்களை முன்வைத்து சிறப்பாக வாதம் புரியும் பதிவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாக காரிகன், இக்பால் செல்வன், சுவனப்பிரியன், சார்வாகன் ஆகியோரைச் சொல்லலாம்.

தற்சமயம் பதிவுகளை நிறையவே குறைத்துவிட்டபோதிலும் வால்பையன் போன்றவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இவற்றில் எந்த வகையிலும் சேராமல் மிகப்பெரிய டாக்டராய் பணியாற்றிவந்தபோதிலும் அந்தச் சுவடு சிறிதுமின்றி ஏகப்பட்ட சேட்டையும் கலகமும் செய்யும் நம்பள்கியும் குறிப்பிடப்படவேண்டியவரே

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, வவ்வால் விஷயத்திற்கு வருவோம்.

வவ்வாலுக்கு இணையத்தில் நிறைய நண்பர்களும் வாசகர்களும் உண்டு.

அதுபோலவே நிறைய எதிரிகளும் உண்டு.

எதிர்க் கருத்துக்களை மற்றவர் மனம் நோகாமல் சொல்லலாம் என்கிற ஜாதியெல்லாம் இல்லை அவர். பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பதுதான் அவர் பாணி. சண்டைக்கு வருகிறாயா வா. நீயா நானா ஒரு கை பார்த்துவிடுவோம் என்பதுபோல்தான் விவாதங்களில் இறங்குவார். சில சில்லுண்டிகள் போல வெற்று அரட்டை அவரிடம் இல்லை.

ஏடா கூடமாக எழுதுவதற்கும் அவர் தயார். எவ்வளவுக்கு வேண்டுமானாலும் ‘இறங்கி ஆடும்’ பதிவர்கள் தமிழ் இணையத்தில் உண்டு. அவர்களில் இவரும் ஒருவர். விவாதங்களில் சூடு பறக்கும் என்பதோடு ஆபாச அர்ச்சனைகளுக்கும் இவர்கள் ரெடி.

ஆனால் இந்த இடத்தில்தான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது.

எத்தனை ஆபாச அர்ச்சனைகளுடன் இவர்கள் எழுதியபோதும் அடுத்த பதிவிலேயே ஒரு ஆழமான சப்ஜெக்டுடன் உலா வந்துவிடுவார்கள். ‘நான் யார் என்பது இந்தப் பதிவில் இருக்கிறது பார்த்துக்கொள்’ என்று சவால் விடுவதுபோல் இருக்கும் அந்தப் பதிவு. சாதாரண பதிவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு விவரங்களும் தகவல்களும் கொண்டு தமிழ்ப் பத்திரிகைகளில்கூட வரமுடியாத அளவுக்கான ஆழமான கட்டுரையாக அந்தப் பதிவு இருக்கும்.

இப்படிப்பட்ட பதிவர்கள் உலாவரும் இடமாகத்தான் தமிழ் இணையவெளி இருக்கிறது. இந்த வரிசையில் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர்களாக……... வவ்வால், வருண், ஜெயதேவ்தாஸ் ஆகியோரைச் சொல்லலாம்.

வவ்வால் இணையத்தில் தமக்கென்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர். தமிழ் எழுத்தாளர்களில் ராஜேந்திரகுமார் ‘ஙே’ என்ற எழுத்தை அடிக்கடிப் பயன்படுத்துவார். அப்படி வவ்வால் பயன்படுத்துவது ‘அவ்வ்’ என்ற எழுத்துக்கள். சில சமயம் இது ஒரு அடையாளம் என்பதையும் தாண்டி எரிச்சலைத் தரும் நிலைக்குப் போய்விடுவதும் உண்டு. (அவருடைய 
மீள்வருகையில் இதனை முழுக்கத் தவிர்ப்பார் என்று நம்பலாம்)

இன்னொன்று நடிகை அசின் புகைப்படங்கள். ஒவ்வொரு பதிவிலும் அசினின் விதவிதமான படங்களைத் தேடியெடுத்துப் போட்டுப் பதிவுகளைத் தொடங்குவார். (அந்தப் படங்களை அவரைத் தவிர வேறு யாரும் ரசிப்பார்களா என்பது தெரியவில்லை)

இவற்றையெல்லாம் அவரது சேட்டைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். ஏனெனில் அவரது பல பதிவுகள்……. சமீபத்துப் பதிவுகளைச் சொல்லவேண்டுமெனில் ‘கச்சத்தீவு மறைக்கப்பட்ட உண்மைகள்’, ‘தமிழ்நாட்டில் ஊர்ப்பெயர்கள் வந்தவிதம்’, ‘மலேசிய விமானம் என்ன ஆனது?’ மற்றும் நடந்துமுடிந்த தேர்தலில் ‘வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருந்ததா?’ என்பதுபோன்ற கட்டுரைகள் மிகுந்த உழைப்பையும் எழுதுகிறவருடைய  திறமையையும் பறை சாற்றுபவை.

அவருடைய பின்னூட்டப் பெட்டியில் ‘மட்டுறுப்பு’ வைக்கப்பட்டிருக்கிறது. அவரது இணைய நண்பர்களில் ஒருவரான திரு ராஜநடராஜன் (இவர் தற்சமயம் ‘Nat’ என்ற பெயரில் எழுதுகிறார்.) ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் 18-ம் தேதிவரைக்குமாக தொடர்ந்து ஒன்பது கருத்துரைகள் எழுதியிருக்கிறார். இவை அத்தனையும் வவ்வாலின் ‘கிளியரன்ஸிற்குப்’ பிறகே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே வவ்வால் ‘ஏதோ’ காரணத்தினாலேயே பதிவுலகில் இயங்காமல் இருக்கிறார் என்பது புரிகிறது.

சுறுசுறுப்பாக பின்னூட்டங்கள் இடும் ஏலியன் என்பவர் வவ்வாலைத் தமது குருவாகக் கொண்டாடுபவர். அவராவது வவ்வாலின் கனத்த மவுனம் குறித்து ஏதாவது கருத்துச் சொல்லியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.

எது எப்படியோ பறந்து வாருங்கள் வவ்வால்!

Thursday, November 20, 2014

பச்சிளம் குழந்தைகள் மரணமும், முத்தப் போராட்டமும்……………….



குழந்தைகள்……………..பச்சிளம் குழந்தைகள்………….சரியான சிகிச்சை தரப்படாமல் தர்மபுரியின் அரசாங்க ஆஸ்பத்திரியிலிருந்து தினசரி கொத்துக் கொத்தாக செத்துப்போய்க்கொண்டிருக்கும் செய்திகள் சில நாட்களாக நாள்தவறாமல் வந்துகொண்டே இருக்கின்றன.

ஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் தினசரி மெடல்களின் புள்ளிவிவரம் வருவதுபோல் நாள்தவறாமல் இத்தனைக் குழந்தைகள் மரணம் என்ற செய்தி வந்துகொண்டே இருக்கிறது. 

மாபெரும் அதிர்ச்சி மட்டுமல்ல தமிழகத்துக்கே அவமானமும் கேவலமும் தலைநிமிர முடியாத அளவுக்கு வெட்கமும் படத்தக்க செய்தி இது.
.
 ஆனால் இத்தனை ஆகியிருந்தும் இந்தச் செய்திக்கான அதிர்வுகளையோ, குறைந்தபட்சம் சில போராட்டங்களையோ, எழுந்திருக்கவேண்டிய சாதாரண எதிர்ப்பையோகூட பதிவு செய்யாமல் இருக்கிறது தமிழ்நாடு.

வேறு மாநிலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டிருந்தால் இந்த நேரம் அந்த மாநிலம் பற்றி எரிந்திருக்கும்.

இந்தியா முழுமைக்கும் ஊடகங்களால் குதறப்பட்டு அல்லோல கல்லோலம் பட்டிருக்கும்.

போராட்டங்கள் வெடித்திருக்கும்.

சமூக ஆர்வலர்களும், இளைய சமுதாயமும், மக்கள் நலம்பேணும் கட்சிகளும். குறிப்பாக மாணவர் படையும் திரண்டெழுந்து போராடியிருப்பார்கள்.

குறிப்பிட்ட மருத்துவமனையையும் அதில் பொறுப்பற்று இருந்தவர்களையும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக ஒரு வழி செய்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளும், ஆட்சியாளரும் எல்லாவற்றுக்கும் பொறுப்பான அரசாங்கமும், மருத்துவத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரும், குறிப்பாக முதல் அமைச்சரும் மக்கள் முன்னைலையில் விளக்கம் அளிக்க நின்றிருப்பார்கள்.

ஆனால் இங்கோ –

செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெத்தலைப் பாக்கு கணக்காக ஒரு சலனமும் இல்லாமல் கிடக்கிறது தமிழ்நாடு.

செய்திகளைப் படிக்கப் படிக்க மனம் பதறுகிறது.

14, 15 தேதிகளில் நாளொன்றுக்குத் தலா ஆறு குழந்தைகளாம்……….

மே மாதம் 400 குழந்தைகள் அட்மிட் ஆகியிருந்தனவாம். அதில் 35 குழந்தைகள் இறந்துபோயிருக்கின்றன.

ஜூன் மாதம் அட்மிட் ஆன குழந்தைகள் 325. இறந்துபோன குழந்தைகள் 45.

ஜூலை மாதம் அட்மிட் ஆன குழந்தைகள் ஏறக்குறைய 300. இறந்துபோன குழந்தைகள் 35.

ஒட்டுமொத்தமாக ஒரு கணக்கைச் சொல்லியிருக்கிறார் அந்த மருத்துவமனையின் டீன். 


அதாவது “இந்த ஆஸ்பத்திரியில் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 4000 குழந்தைகள் அட்மிட் ஆகின்றன. 

அவர்களில் 400 பேர்தானே இறந்திருக்கிறார்கள்?” என்று ஒரு சூப்பர் கேள்வியைக் கேட்டிருக்கிறார் அந்த பிரகஸ்பதி.

யாராவது இந்த மகானுபாவனுக்கு நோபல் பரிசு போன்ற எதையாவது வாங்கித்தாருங்கள்.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான் சில தலைவர்கள் வாய் திறந்திருக்கிறார்கள்.

கடுமையான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் கலைஞர்.

தமது பங்கிற்கு ‘விசாரணை நடத்தப்படவேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்’ என்று அறிக்கை விடுத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

தமிழிசை சவுந்தரராஜன் சிறிது விவரமாகப் பேசியிருக்கிறார். “தர்மபுரி ஆஸ்பத்திரியில் நிறைய பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. ஒரே நேரத்தில் குழந்தைகள் இறந்து இருப்பதை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நான் ஒரு டாக்டர். அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன மருத்துவ வசதிகள் இருக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததுதான் குழந்தைகள் இறப்பிற்குக் காரணம். ஆஸ்பத்திரியில் 400 பணியிடங்கள்கூட காலியாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

டீன் கூட இப்போதுதான் நியமித்தார்கள். பச்சிளங்குழந்தைகள் வார்டில் எத்தனை டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றினார்கள், என்னென்ன வசதிகள் இருந்தது என்பதை அரசு விளக்கவேண்டும். அங்கு எவ்வளவு மருந்து இருக்கிறது? குழந்தைகள் சிகிச்சைப் பெறுவதற்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அப்போதுதான் அது வெளிப்படையான விசாரணையாக இருக்கும்” என்பது தமிழிசை சவுந்தரராஜனின் அறிக்கை. 

இந்த அறிக்கைகள் ஒருபுறமிருக்க சில கேள்விகள் எழுகின்றன.

எந்த ஆஸ்பத்திரியிலும் இல்லாமல் இந்த ஆஸ்பத்திரியில் மட்டும் எதற்காக இப்படியொரு சிசுக்கொலைகள் நடந்திருக்கின்றன?

 ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 4000 குழந்தைகள் எதற்காக அட்மிட் ஆகவேண்டும்? அதற்கான சமூகக் காரணங்கள், அல்லது ஆரோக்கியக்குறைபாடு யாது?

அவர்களில் 400 குழந்தைகள் ஏன் சாகவேண்டும்?

அத்தனைக் கேவலமான, கொடூரமான நிலையிலா அரசாங்க ஆஸ்பத்திரிகள் இயங்குகின்றன?

சின்னஞ்சிறு பாலகர்களைக் காப்பாற்ற வக்கின்றி சாக விட்டுவிட்டு வல்லரசு நாடு என்றும், செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பினோம் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்வதில் ஏதாவது பெருமை இருக்கிறதா?

சட்டமன்றக் கட்டடம் என்று ஒன்றைக் கட்டினால் அதனைக்கூட நவீன ஆஸ்பத்திரியாய் மாற்றுவேன் என்று பேசித்திரியும் தமிழக அரசின் மக்கள் நலன் காக்கும் லட்சணம் இதுதானா?

சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் ஆட்சியாளருக்கும், மாநிலத்தை ஆளுகின்ற பொறுப்பிலிருப்பவர்களுக்கும் மனசாட்சி, மனிதாபிமானம், ஈவு, இரக்கம் போன்ற மனிதர்களுக்குத் தேவையான எந்த குணங்களும் கிடையாதா?

என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

எது எதற்கோ கொதிக்கும், குதிக்கும் இந்த நாட்டில் பச்சிளம் பாலகர்களைக் கொல்லும் அவலத்தைக் கேட்கக்கூட நாதியில்லையா?

எங்கோ டெல்லியில் குழந்தைகளைக் கொன்று பாதாளச் சாக்கடையில் எறிந்த ஒரு வழக்கு நடைபெற்றதே, சற்றேறக்குறைய அதுபோலல்லவா இருக்கிறது இதுவும்?

இதுபோல ஒரு சம்பவம் கர்நாடகத்திலோ கேரளத்திலோ நடந்திருந்தால் மக்கள் கொதித்தெழுந்து அந்தந்த மாநில முதல்வர்களை அடித்து விரட்டியிருப்பார்கள், ராஜினாமா செய்யவைத்திருப்பார்கள் இந்நேரம்.

தமிழ்நாடு குன்ஹாவை எதிர்த்துப் போராடிவிட்டு இப்போதுதான் சற்றே ஆசுவாசமாய் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது.

அடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாக இன்னமும் சில மாதங்களாவது தேவை.

அதுவும் ‘மக்களின் முதல்வர் கீர்த்திக்கு’ ஏதாவது ஆபத்து என்றால் மட்டுமே கிளர்ந்தெழ வேண்டியிருக்கும்.

பாலகர்களின் சாவுக்கெல்லாம் கிளர்ந்தெழுந்து போராடிக்கொண்டிருந்தால் தமிழனின் ‘மானம்’ என்னாவது?

இளைஞர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும்கூட இதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்கவேண்டிய தேவையில்லை. 

அவர்களுக்கு இதைவிடவும் முக்கியமான போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய கடமையும் அவசியமும் காத்திருக்கிறது.

அடுத்த முத்தப்போராட்டம் எப்போது, எங்கே?

அதுபற்றிய ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக்கில் எப்போதுவரும்?

அதற்கு எப்படித் தயாராவது? என்பதில் அவர்கள் பிசியாக இருக்கிறார்கள்.

அதனால் அவர்களை விட்டுவிடுவோம்.

இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், டாக்டர் கிருஷ்ணசாமி என்று ஏகப்பட்ட டாக்டர்கள், கட்சிகளின் தலைவர்களாகவே இருக்கிறார்கள்.

என்ன காரணத்தினால் இப்படியொரு அவலம் ஏற்பட்டது என்பதை அறிந்து அதனை மக்களுக்கு விளக்கி தேவைப்பட்டால் மக்களையும் சேர்த்துப் போராட்டம் நடத்தும் கடமை இவர்களுக்கு நிறையவே இருக்கிறது.

என்ன செய்யப்போகிறார்கள்?

பார்க்கலாம்..

Sunday, October 19, 2014

‘ஊடக அறிஞர்’ ஆவது எப்படி?



அறிஞர்கள் பலவகை

எழுத்து அறிஞர் ஆகலாம்

பேச்சு அறிஞர் ஆகலாம்

தொலைக்காட்சி அறிஞர் ஆகலாம்

விவாத அறிஞர் ஆகலாம்

பதிவுலக அறிஞர் ஆகலாம்

எந்த அறிஞராய் ஆவதும் சுலபம்தான்

சூத்திரங்கள் இரண்டு மட்டுமே.

‘கருணாநிதியைத் திட்டுவது
ஜெயலலிதாவைப் புகழ்வது’.

அந்தக் காலத்திலெல்லாம்-
‘புகழ்பெற்ற விவாதங்கள்’என்று 
எதையெதையோ சொல்வார்கள்

நேரு டிடிகே கிருஷ்ணமேனன்
பூபேஷ் குப்தா மதுலிமாயி……..
நடத்திய 
பாராளுமன்ற விவாதங்கள்…….

அண்ணாவும் கருணாநிதியும் –
கருத்திருமனும் வினாயகமும்
நடத்திய
சட்டமன்ற விவாதங்கள்………………

டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளையும் அண்ணாவும் நடத்திய
கம்பராமாயண விவாதங்கள்………..

கண்ணதாசனும் மபொசியும் நடத்திய
‘தமிழர் திருமணத்தில் தாலி’ பற்றிய விவாதங்கள்………

ஆறுமுக நாவலரும் வள்ளலாரும் நடத்திய
ஆன்மிக விவாதங்கள்……………..

எல்லாம் பழைய கதை!

இப்போதைய அவுட்டடி விவாதங்களுக்கு
தந்தியும், புதிய தலைமுறையும்தான் அப்பாடக்கர்கள்!

எதிர்முனையில் எத்தனைப்பெரிய
‘கொம்பன்கள்’ இருந்தாலும்
கவலை இல்லை.

அரசியலைக் கரைத்துக்குடித்த ஜித்தன்களைப் பற்றியும்
அக்கறை இல்லை

வெங்கட், ரங்கராஜ்பாண்டே, குணசேகரன், ஜென்ராம்,
இன்னோரன்ன ‘அறிஞர் பெருமக்களிடம்’-
அரசியல் கூஜாக்களின் எந்தப் பருப்பும் வேகாது.
எவ்வித வாதமும் தேறாது.

ஒன்று-

நீங்கள் பதில்சொல்லி முடிப்பதற்குள்-

எண்பது கிலோ மீட்டர் வேகத்தில்

குறுக்குசால் ஓட்டுவார்கள்.


மளமளவென்று வேறு தளத்தில்பேசி
உங்களை முற்றாக வழிமறித்து
வீழ்த்துவார்கள்
அல்லது-

‘இருங்க இப்ப ஷார்ட் பிரேக். ஒரு கமர்ஷியல் பிரேக்குக்கு அப்புறம் நாம்

தொடர்ந்து பேசலாம்’ என்று

வாயில் பதினைந்து கிலோ பெவிகாலைத் திணித்து

அமுக்கி 
வாயை ஒட்ட மூடி

மூலைக்குத் தள்ளி

மூட்டையோடு மூட்டையாகப் போட்டுத் தள்ளுவார்கள்
விவாதமாவது………………..புடலங்காயாவது………..!

அப்படியானால்
‘பேசவே முடியாதா?’ என்றால்
அதற்கென்றே சில ஆட்கள் இருப்பார்கள்.

‘ஏங்…… ஙேங்…… ஙேங்’ என்று பேச ஆரம்பிக்கவே பத்து நிமிஷம்
எடுத்துக்கொள்ளும்
மகானுபாவர்கள் எல்லாம்
இருக்கிறார்கள்

ஸ்டார்டிங் டிரபிள் ஸ்டால்வெர்ட்டுகள்…………….
தத்துப்பித்துத் தெனாவெட்டுகள்

இவர்களையெல்லாம்......
எத்தனை நேரம் வேண்டுமானாலும்
பேசவிட்டு அழகுபார்ப்பார்கள் 
இந்த ‘ஊடக அறிஞர்கள்’

‘பேச அனுமதிக்கணும்’ என்பதற்கான
அளவுகோல்
சாதாரணம்தான்-

போயஸ் கார்டனுக்கு ஜங் ஜக் போடணும்
கருணாநிதியைத் தூக்கிப்போட்டுப் பந்தாடணும்

விவாதக் களங்களுக்கான ‘பாதைகள்’ தெரியுமா உங்களுக்கு-

ஊடக அறிஞராக நீங்களும் ஆகவேண்டுமா?


பெரிய கம்பசூத்திரமெல்லாம் ஒன்றுமில்லை
சுலபம்தான்.

பத்திரிகைகளாகட்டும்
பதிவுலகம் ஆகட்டும்
அரசியல் நிலைமைகள் எப்படி அலசப்பட வேண்டும் என்ற
‘அடிப்படை ஞானம்’ உங்களுக்கு
முதலில் தெரிந்திருக்க வேண்டும்

2 ஜி பற்றிப் பேசுகிறாயா?
பேசு.
இரண்டு மணி நேரம் பேசு
கூடுதலாக இன்னொரு மணி நேரம் வேண்டுமா?
எடுத்துக்கோ.

‘கட்டுமரம்’ என்று பெயரிட்டு கருணாநிதியை இழுத்து வா.
மஞ்சப்பையுடன்-
ரயிலில் டிக்கெட் எடுக்காமல்
சென்னை வந்து இறங்கியவர் என்பதைச் சேர்த்துக்கொள்

‘விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் என்று சர்க்காரியாவே சொல்லிவிட்டார்’
என்ற பதத்தை மறந்துவிடாதே

கூடுமானவரை ‘மரியாதை’ தவிர்

அவன் இவன் என்று பேசு


தயாளுஅம்மாளை இழுத்துவந்து
காலில் போட்டு மிதி.

கனிமொழியைக் கண்ட கண்ட வார்த்தைகளால் ஏசு!

ஸ்டாலினுக்கு ஏதாவது வியாதி இருந்தால் அதைக் கண்டுபிடித்து எழுது

அழகிரியை மதுரை ரவுடி என்று சொல்

‘ஸ்டாலின் அழகிரி ரவுசைத் தீர்க்கவே
கட்டு மரத்துக்கு தாவு தீர்ந்து போகுது’ என்று சொல்

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர்? என்ற வார்த்தையை

நேரம் கிடைக்கும்போதெல்லாம்

சொல்லிக்கொண்டே இரு.

சகாயமோ நீதியரசர் சந்துருவோ
இப்போதைய அரசைப் பற்றி ஏதாவது விமர்சித்தால்
கண்டுகொள்ளாதே.

இப்போதைய அரசின் தவறுகளை ஊழல்களை
எப்படி மூடிமறைத்தும்
பிதுங்கி வெளியே வருகிறதா?

“ஜெயலலிதா ஆட்சியில்………………” என்று தொடங்கி
விமர்சிக்க வேண்டியிருக்கிறதா?

ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்…………..!

அப்படியே நில்லு.

ஒன் ஸ்டெப் பேக் போ.
பேசவந்த ‘பிளேட்டை’ மாற்று.

ஜெயலலிதா ஆட்சியில் என்று தொடங்குவதற்கு பதில்-


‘இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான்’ என்று துவங்கு

பிளேட்டை சரியாக திருப்பிப் போட்டிருக்கிறாயா என்பதில் கவனமாக இரு.


கருணாநிதி ஐந்துமுறை முதல்வராயிருந்திருப்பதால்
எல்லாச் சம்பவங்களுக்கும் உதாரணம் கிடைக்கும்

அந்த உதாரணங்களில் ஒன்றைத் தூக்கி
இங்கே போடு

“இந்தக் கருணாநிதி துவக்கிவைத்த இந்த ஊழல்
இப்போதுவரை
அதிகாரிகளாலும் ஆள்பவர்களாலும் தொடரப்படுகிறது.
எல்லாவற்றுக்கும்
கருணாநிதிதான் காரணம்” என்று பிட்டைப் போடு

திமுக செய்த தவறுக்கும் கருணாநிதியைத் திட்டு

அதிமுக செய்கிற தவறுக்கும் கருணாநிதியைத் திட்டு

முழு அறிஞராய் இந்நேரம் மாறி இருப்பாய்!

இப்போது உன்னை அழைத்துப் பேச 
அல்லது எழுதவைக்க
ஊடகக் களங்கள் ரெடி.

ஆரம்பி

ஆற அமர உட்கார்ந்து எழுதிக்கொண்டும்
பேசிக்கொண்டும்
இரு!

இந்தச் சமூகம் கெடுவதற்கென்றே ஏற்பட்ட சமூகம்தான்

புகுந்து விளையாடு.

-அமுதவன்.