Thursday, December 8, 2011

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டிய ஏழாம் அறிவின் வெற்றி


ஏழாம் அறிவு படத்தைப்பற்றிய பல்வேறு விஷயங்களும் பேசியாகிவிட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட படங்களில் ஒன்றாகவும் புகழைக்குவித்த படங்களில் ஒன்றாகவும் மட்டுமின்றி வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றிகளைப்பெற்ற படங்களில் ஒன்றாகவும் அமைந்துவிட்டது. ஒரு நடிகனுக்கு இதைவிடவும் என்ன தேவை? தமிழ்நாட்டைக் கடந்து வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பேசப்படும், அண்ணாந்து பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார் சூர்யா.

80-வருட தமிழ்த்திரைப்பட வரலாற்றில் வசூலில் மூன்றாவது இடம் என்கிறது விளம்பரம். ரஜினியின் எந்திரனுக்கும் சிவாஜிக்கும் பூஜைக்கு முன்னாலிருந்தே விளம்பரம் ஆரம்பித்துவிட்டார்கள். எந்திரன் படம் நடுவில் நின்றுபோக கலாநிதியுடன் கைகோர்த்ததில் மீண்டும் அசுர பலத்துடன் விளம்பர யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. சன் டிவியின் இரவு ஏழு மணிச் செய்தியில் இரண்டு நாட்கள் தலைப்புச் செய்தியே எந்திரன் என்றானது. தொண்டுக்கிழத்திலிருந்து வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைக்கூட நெட்டித்தள்ளிக்கொண்டு தியேட்டருக்குக் கொண்டுபோய் உட்கார வைக்குமளவுக்கு விளம்பரமோ விளம்பரம் என்று போட்டுத்தாக்கினார்கள்.

‘தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனும் எந்திரன் பார்க்காவிட்டால் மனிதப்பிறவியே அல்ல என்று குற்றமனப்பான்மையைத் தோற்றுவிக்கிற அளவுக்கு மூளைச்சலவை செய்கிறவிதமாக விளம்பர வியூகம் வகுக்கப்பட்டது. ரஜினி என்பவர் ஏதோ கலியுகம் காக்க வந்த கடவுள் என்பதுபோன்ற பிரமை உருவாக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.

ஏழாம் அறிவுக்கு இதுபோன்ற பில்டப்புகள் ஏதும் கிடையாது. ‘போதி தர்மன் காஞ்சிபுரத்திலிருந்து போனவன் என்ற வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்லப்பட்டு – சாதாரணமாக மற்ற எல்லா சூர்யா படங்களுக்கும் செய்யப்படும் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு இந்தப் படம் வெளியானது. ‘இந்தப் படத்துல நீங்க என்ன எதிர்பார்க்கறீங்களோ அதைவிட எல்லாமே மேலே மேலே மேலே என்ற ஏ.ஆர்.முருகதாஸின் ஆர்வக்கோளாறான வாசகம் மட்டுமே கொஞ்சம் அதிகப்படியான வாசகம். உண்மையில் அவர் அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லியிருக்காவிட்டால் இந்தப்படம் இன்னமும் அதிகமான பரபரப்பை உண்டுபண்ணியிருக்கவும் கூடும். இப்படி ஒரு சராசரியான விளம்பரத்துடன் வெளியான இந்தப்படம் வசூலில் இத்தனைப்பெரிய சாதனை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் இதுதான் முதன்மையான சாதனை என்றே சொல்லத்தோன்றுகிறது.

முருகதாஸ் - பாதி தர்மன்.

சூர்யா - பாதி தர்மன்....இரண்டும் சேர்ந்தால் முழுமையான போதி தர்மன்!

இந்தப்படத்தை ஒரு சராசரிப்படமாகப் பார்க்கத்தோன்றவில்லை. கலை உணர்வுகளையும் வர்த்தக சமன்பாடுகளையும் தாண்டி ஒரு இனத்துக்கான சில சேதிகளை, தான் வாழும் சமுதாயத்துக்குச் சில குறிப்புகளைச் சொல்ல வேண்டுமென்று இயக்குநர் நினைத்திருக்கிறார். ஒரு படைப்பாளியின் ‘இந்தப் பார்வை படத்தில் மிக அழுத்தம் திருத்தமாகப் பதிந்திருக்கிறது.

பாடல் காட்சிகளையும் வேறு சில சினிமாத்தன காட்சிகளையும் தவிர்த்திருக்கலாமென்று தோன்றுகிறது. ஆனால் ஒரு திரைப்படமென்பது ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை ரசிக்கும் ஒரு சாதாரண ரசிகனை விட்டு முற்றிலுமாக விலகிப்போய்விடுவதற்கில்லை. தவிர இப்படி நினைக்க வைப்பதே ஒரு வித்தியாசமான படத்தின் சாதனைதான். எந்தப் படத்தில் வழக்கமான விஷயங்களைத் தவிர்த்த சில உன்னதமான கூறுகள் இருக்கின்றனவோ அப்போதுதான் இப்படியெல்லாம் நினைக்கத்தோன்றும்.

படத்தின் பல இடங்களில் நாம் வேறொரு மொழிப்படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. தமிழ் சினிமா உலகப்படங்களை நோக்கி நகர்கின்ற அடையாளமாக இதனை நாம் கொள்ளலாம்.

நடிப்பின் மூலம் பல்வேறு உயரங்களைத் தொட்ட சூர்யா இந்தப் படத்தில் உடல்மொழி மூலம் மற்ற நடிகர்கள் போட்டிக்கு வர முடியாத மிகமிக உயரத்தில் போய் நின்றுகொள்கிறார்.

வேறு எந்த நடிகருக்கும் வராத சில அற்புத பாவங்கள் மின்னல் வெட்டுப்போல நடிகர் திலகத்தின் பார்வையில் தெறித்து விழும்-

அந்தச் சில கீற்றுக்கள், சூர்யாவின் கண்களில் தெறித்து விழுவது ஒரு இனிய ஆச்சரியம்.

உடம்பை முறுக்கேற்றி வைரம் பாய்ந்த கட்டையாய்த் தோற்றம் தருவது வேறு நடிகர்கள் முயற்சித்தாலும் சாத்தியமே. ஆனால் கனிவும் சாந்தமும் கருணையும் தரும் தோற்றத்திற்கும் பார்வைக்கும் முகத்தில் தெரியும் அந்த தெய்வக்களை தேஜஸுக்கும் இயற்கையாய் அமையும் சில வரங்கள் தேவை. அந்த வரம் சூர்யாவுக்கு அமைந்திருக்கிறது.

ரௌத்ரம் காட்டும் முகம் சூர்யாவுக்கானது-

கனிவும் சாந்தமும் கருணையும் காட்டும் முகம் கந்தன் கருணையில் முருகனாக வருபவருக்கானது.

உண்மையில் கட்டபொம்மன் எப்படி இருந்திருப்பான் என்பது தெரியாது. ஆனால் கட்டபொம்மன் என்றால் சிவாஜி, கர்ணன் என்றால் சிவாஜி – என்பதுபோல் போதிதர்மன் என்றால் சூர்யா என்ற பிம்பம் அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவிட்டது!

இனிமேல் இதனை மாற்றுவதற்கில்லை.

போதிதர்மன் தமிழனா தெலுங்கனா கன்னடனா களப்பிரனா பிரஞ்சுக்காரனா ஆப்பிரிக்கனா என்பது பற்றியெல்லாம் வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். முடிந்த முடிவான வரலாற்றுச் செய்திகள் இங்கே எதுவுமே இல்லை. கனகச்சித்தனும் கல்லுகப்பித்தனும் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் சொன்னால், யார் சொன்னது? அவர்கள் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னொருவர் சொல்லுவார். அவர்கள் தமிழர்களே அல்ல தெலுங்கர்கள் என்று இன்னொருவர் ஓடிவருவார். தெலுங்கர் அல்ல; கன்னடக்காரர் என்பார் மற்றவர். எதற்கு வம்பு?

நம் கண் முன்னால் நடக்கும் எத்தனையோ விஷயங்களுக்கான பூர்வாங்கமே நமக்குத் தெரிவதில்லை. பத்திரிகைகளில் வரும் எத்தனையோ சம்பவங்களின் மர்மங்கள் கடைசிவரை விளங்குவதும் இல்லை, விளக்கப்படுவதும் இல்லை.நேற்றைக்கு நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைக்கூட ஒவ்வொரு ஊடகம் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைச் சொல்லித்தான் முன்வைக்கின்றன. ராஜிவ் காந்தி கொலையின் மர்ம முடிச்சுக்களையே அறுதியிட்டுக் கூறமுடியாமல் ஆளுக்கொன்றாய்ச்சொல்லி அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும்போது 1600 ஆண்டுகளுக்கு முந்தைய சரியான தகவல்களுக்கு எங்கிருந்து போவது?

அப்படியே போதிதர்மன் தமிழன் இல்லையென்றாலும் அவன் காஞ்சிபுரத்திலிருந்து போனவன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. உலக சமுதாயத்திற்கு நல்லது செய்த ஒருவனை நம்மவனாகக் கொண்டாடுவதில் என்ன தவறு?

எம்ஜிஆரை நாம் நம்மவராக ஏற்றுக்கொள்ளவில்லையா?

ரஜினியை உச்சிக்கு மேல் வைத்து உயர்த்தவில்லையா?

முருகதாஸும் சூர்யாவும் போதிதர்மனைத் தமிழனாக ‘ஏற்றுக்கொண்டே இந்தப் படைப்பை ஆக்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் தமக்குக் கிடைத்த ஒரு தகவலை வைத்து நல்லதொரு படைப்பைக் கொடுக்க முனைந்திருக்கிறார். அந்த படைப்புக்குத் தன்னுடைய பங்களிப்பைத் தன்னால் முடிந்த அளவு மட்டுமின்றி மற்றவர்கள் பார்த்து வியக்குமளவுக்கு ஒரு கலைஞனாக நின்று சாதித்துக் காட்டியிருக்கிறார் சூர்யா.

கராத்தே பயிலும் தம்முடைய மாணவர்களை “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் இது நம்முடைய குருநாதரின் படம்என்று சொல்லி கராத்தே ஆசிரியர்கள் அனுப்பிவைக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்பொழுதுதான் படத்தின் தாக்கமும் சூர்யாவின் உழைப்பிற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் தெரியவருகிறது.

சங்க காலத்திலிருந்து இதுவரை வேறு யாராவது தமிழனோ தமிழ் மன்னனோ குறிப்பிட்டுச் சொல்லும்படி கிடைக்கின்றானா யாருடைய வாழ்க்கையாவது சொல்லாமல் விடுபட்டுப்போயிருக்கிறதா, ஏதாவது ஒரு சிறு குறிப்பாவது கிடைக்கிறதா என்பதாக தமிழ் இலக்கியத்தையும் தமிழர்களின் வரலாற்றையும் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிறையப்பேரைத் தேடச் செய்திருக்கிறது இந்தப் படம்.

வணிகரீதியான வெற்றியை விடவும் இந்தத் தாக்கம்தான் இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி என்று சொல்லலாம்.