Tuesday, May 15, 2012

கண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு?

கண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அத்தனைப் பேருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய பாடல்களில் ஒன்று இது. இந்தப் பாடல்கூட முழுவதும் கண்ணதாசனால் எழுதப்பட்டது அல்ல. முக்கால்வாசிப் பாடலுக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதியார். கால்வாசிப் பாடல் மட்டும்தான் நம்முடைய கவிஞருடையது. பாரதியின் பாடலுக்குக் கவிஞரின் விளக்கம் இது என்றும் சொல்லலாம், பாரதியின் பாடலுக்கு இவர் செய்த பகடி என்றும் சொல்லலாம்.

பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடலைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் சிறப்புக்களைப் புகழ்ந்து போற்றி பாரதி பாடிய பாடல் அது. இன்னமும் பாரதியின் அந்தப் பாடல் வரிகளைச் சொல்லிச்சொல்லித்தான் நாம் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறோம். 

பல்வேறு இலக்கியக்கூட்டங்களில் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும் பேசுவதற்கு அந்தப் பாடலிலிருந்துதான் வரிகளைப் பெறுகிறோம். அந்தப் பாடலைக் கேட்ட கண்ணதாசனுக்கு ‘என்னடா இது பாரதி இப்படிப் பண்ணிவிட்டாரே என்று தோன்றியிருக்கலாம். எது எதையோ பெருமைகளாகச் சொல்கிறாரே நிஜ வாழ்க்கையில், நடைமுறையில் இவையெல்லாம் வேறாக இருக்கின்றனவே என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதனால் இவர் என்ன செய்கிறாரென்றால் பாரதி பாடிய அந்த வரிகளை அப்படியே வைத்துக்கொண்டு இரண்டாவது வரியில், மூன்றாவது வரியில் அல்லது ஈற்றடியில் தமது கருத்தைப் பாடலிலே பொதிந்து வைக்கிறார்.

செந்தமிழ் நாடு என்ற பாரதியார் பாடலுக்குப் புதுவுரைச் சொல்லவந்த கண்ணதாசன் தமது பாடலுக்குப் ‘புதிய தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டியிருக்கிறார். கேலியும் கிண்டலும் பரிகாசமும் எள்ளலும் கண்ணதாசனின் வரிகளில் விரவுகின்றன. அதைவிடவும் ‘நடைமுறை இதுவே என்பதுதான் கவிஞர் சொல்லவரும் சேதி.

பாடலைப் பார்ப்போம்.

முதலாவதாக பாரதியின் பாடல் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே....... என்று ஆரம்பிக்கிறது. இந்த வரியையே ஆட்சேபிக்கிறார் கண்ணதாசன்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு தேள்வந்து கொட்டுது காதினிலே.....என்று ஒரே போடாகப் போடுகிறார்.


அடுத்தது பாரதியின் வரி -‘எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.... என்று வீரத்தைப் பறை சாற்றுகிறது.
இங்கே அப்படியே ஒரு யூ டர்ன் அடிக்கிறார் கண்ணதாசன்.
தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்பதை விட்டுவிட்டு
‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே என்று நேரடியாக அரசியலுக்கு வருகிறார்....வந்தவர், ‘கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
இந்த ஒரு வரி விமரிசனத்தில் இங்கே நிறைய தலைகள் உருளக் காத்திருக்கின்றன. அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டோமானால்கூட பிரபலமான அமைச்சரவை என்று காமராஜருடைய அமைச்சரவையை மட்டும்தான் சொல்லமுடியும். 
அந்த அமைச்சரவையில் காமராஜர், கக்கன், மஜீத் போன்ற ஓரிருவரை மட்டுமே சிறப்பானவர்களாக உயர்த்திப் பிடிக்கமுடியும்.  
அதற்கு அடுத்த அமைச்சரவையில் அண்ணாவையும் சாதிக்பாட்சாவையும் மட்டுமே நல்ல அமைச்சர்களாகச் சொல்லமுடியும். 
கலைஞர் அமைச்சரவையிலும் மறுபடி சாதிக் பாட்சா மட்டுமே தனித்து நிற்கிறார்.


அடுத்து எம்ஜிஆர் அமைச்சரவை. இந்த அமைச்சரவையிலும் எந்த அமைச்சரையும் –கவனியுங்கள், எம்ஜிஆர் உட்பட எந்த அமைச்சரையும்- சிறப்பானவர்கள் பட்டியலில் வைக்கமுடியாது.


பிறகு ஜெயலலிதா அமைச்சரவை. எம்ஜிஆர் அமைச்சரவையிலேயே யாரும் தேறவில்லை என்னும்போது ஜெயலலிதா அமைச்சரவையில் சிறப்பானவர்களை எங்கே போய்த்தேடுவது? 


அதனால் கண்ணதாசன் சொல்வதுபோல ‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே- கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்ற விமரிசனம் அத்தனை அமைச்சர்களுக்கும் பொருந்தும். இதனை அப்படியே ஒப்புக்கொண்டு அடுத்த அடிக்குச் செல்வோம்.

காவிரி தென்பெண்ணைப் பாலாறு- தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பல ஓடத் –திரு
மேனி செழித்த தமிழ்நாடு..... என்பது பாரதியின் வரிகள்.


இதனைக் கண்ணதாசன் எப்படிச் சொல்கிறார் பார்ப்போம்.
‘காவிரி தென்பெண்ணைப் பாலாறு –தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பலவினிலும் –உயர்
வெள்ளை மணல்கொண்ட தமிழ்நாடு – எப்படி கவிஞர்?


அடுத்து பாரதியின் வரிகள்;
நீலத்திரைக்கட லோரத்திலே –நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.......


இந்த வரிகளை எப்படி எடுத்துக்கொள்கிறார் தெரியுமா கண்ணதாசன்?
‘நீலத் திரைக்கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு
அட, அட.. என்று பாராட்டத் தோன்றுகிறதா இல்லையா?


கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ் நாடு......இது பாரதியின் பாடல்.


இதனை மாற்றி எழுதவந்த கண்ணதாசன்,
‘கல்வி சிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். அவருடைய கோடரி அடுத்த வரியில்தான் இறங்குகிறது.
‘நல்ல பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு........ என்பது கண்ணதாசன்.


வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு –நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் –மணி
ஆரம்படைத்த  தமிழ்நாடு என்பது பாரதியின் பெருமிதம்.


இதனையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார் கண்ணதாசன்.
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளையெனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு....என்கிறார்.


‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு..... என்பது பாரதியின் பெருமை.


கண்ணதாசனின் பார்வையில் நடைமுறையில் இதுவும் நிஜமில்லையே என்கிற வருத்தம்.
‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி –அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு – என்று நடைமுறையைக் காட்சிப்படுத்துகிறார்.

‘விண்ணை யிடிக்கும் தலையிமயம் –எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் –சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு...என்கிறார் பாரதியார்.


அது கண்ணதாசனின் பார்வையில் இப்படி வருகிறது.
விண்ணை இடிக்கும் தலைஇமயம்-எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னை பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!

சரி இப்போது கவிஞரின் முழுப்பாடலையும் ஒருமுறைப் பார்த்துவிடலாமா?

செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!

காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!

நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!

கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!

சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!

விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!


இன்னமும் எத்தனை வருடங்களானாலும் அன்றன்றைய நிலைமைகளை அப்படியே கண்முன்பு நிறுத்தும்விதமாக பாடிச்சென்றிருக்கும் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்லுவது!

22 comments :

R.S.KRISHNAMURTHY said...

’படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று பிரகடனம் செய்த கண்ணதாசன், ’நல்ல பல்வித கேசுகள் பேப்பரிலே-வர பாரெங்கும் நாறும் தமிழ்நாடு’, ’தினம் தொன்னைபிடித்துத் தெருவினிலே - நல்ல சோற்றுக் கலையும் தமிழ்நாடு’ என்ற வரிகள் மூலம் தான் கடவுள் தான் என்பதை ஐயமற நிருபித்து விட்டாரே! கவிஞர், கவிஞர்தான்!

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!நலமா?

கற்பனைகளோடு நல்லெண்ணங்களையும் விதைக்க கற்றுக்கொடுப்பவனே கவிஞன் என்பேன்.அந்த விதத்தில் பாரதியார் கண்ணதாசனை விட வான் உயர்ந்து நிற்கிறார்.

இந்தப் பாடலை ஈயடிச்சான் காப்பியாக கவிதை பாட தெரியாத கண்ணதாசன் மனநிலையின் கருப்பு பக்கம் என்பேன்.தேசிய கீதத்தையும் கூட உல்டா செய்த கல்லூரிக்கால யதார்த்த கவிஞர்களை அறிவேன்.எனவே அதுவே கவிதையாகி விட முடியுமா?

Anonymous said...

நன்று

Amudhavan said...

நல்லது ஆர்எஸ்கே, தமிழகத்தின் இன்றைய யதார்த்த நிலையை விளக்கிய பாடல்களில் ஒன்று என்பதுதான் இந்தப் பாடலைப் பற்றிய எனது விமரிசனம். தங்கள் வருகைக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கவிதை பாட தெரியாத கண்ணதாசன்//-இன்று பாரதி இருந்தால் அவர் கூட மேற்கூறிய கூற்றை ஏற்கமாட்டார்.
இப்பாடலுக்காக பாராட்டியே இருப்பார்.

Amudhavan said...

வாருங்கள் நடராஜன். கற்பனைகளோடு நல்லெண்ணங்களையும் விதைக்க கற்றுக்கொடுப்பவனே கவிஞன் என்பேன்- என்ற உங்களின் கூற்றை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன். அதேபோல் கவிஞன் என்று மட்டுமே நிறுத்திவிடாமல் படைப்பாளிக்கும் அதே இலக்கணம் பொருந்தும். ஆனால் யதார்த்தத்தை விளக்கும் படைப்பாளி என்று வரும்போது இந்த இலக்கணத்திற்கு மாற்றாக நாம் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரையெல்லாம் பார்க்கவேண்டியிருக்கும். யதார்த்தத்தை முகத்தில் அறைந்ததுபோல் சொல்வதுதானே இவர்கள் பாணி. அதுபோன்றே யதார்த்தத்தை விளக்குபவனும் கவிஞன் என்றும் பார்க்கலாம்.
'அந்த விதத்தில் பாரதியார் கண்ணதாசனைவிட வான் உயர்ந்து நிற்கிறார்' என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அரைகுறைகள் சொல்வதுபோல் எனக்கு யாரைப் பிடிக்குமோ அவர்தான் எல்லாரைவிடவும் உயர்ந்தவர் என்று சொல்லும் பழக்கம் என்னிடம் இல்லை. நிச்சயம் கண்ணதாசன் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் அடுத்து வருபவர்தான்.
தேசியகீதத்தையும் உல்டா செய்துபாடுபவர்களையும் அறிவேன். ஏன், கண்ணதாசனின் எத்தனையோ பாடல்களை இன்றைக்கும் உல்டா செய்து பாடிக்கொண்டிருக்கிறார்களே.
பாரதி நல்ல விஷயங்களை மட்டுமே சிறப்பித்துச் சொல்லவேண்டும் என்பதற்காகப் பாடிச்சென்ற பாடல் இது. ஆனால் இன்றைய யதார்த்த நிலைமையைக் கண்ணதாசன் பாடல் காட்டுகிறது என்பதை மட்டும்தான் நான் சொல்லவந்தேன்.
கண்ணதாசனின் மிக ஆரம்பகால பாடல்களில் ஒன்றுதான் இது. மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காகக்கூட அவர் இதனைப் பாடியிருக்கலாம்.
இன்றைக்கும் அது பொருந்துகிறது என்பதுமட்டும்தான் நான் சொல்லவந்தது.

Amudhavan said...

நன்றி அனானிமஸ், பாராட்டத்தானே வருகிறீர்கள் அதனை உங்கள் பெயரிலேயே சொல்லலாமே.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!உங்கள் கருத்து விளக்கத்தில் எனக்கு மெத்த திருப்தி.விவாதிப்பதெற்கே நீங்கள் எனக்கு சந்தர்ப்பம் தர விடாமல் டிப்ளமெட்டிகாக என்னை கவிழ்த்து விட்டீர்கள்.காரணம் ஜெயகாந்தனின் சமூக கோபங்கள் என்ற ஒப்பீடு கொண்டு கண்ணதாசன் பாடலை நியாயப்படுத்தியுள்ளீர்கள்.

பாரதியை உயரத்தில் நிறுத்தியதற்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

முன்பை விட இப்பொழுது அனானிகள் பெரும்பாலும் நாகரீகமாகவே கருத்தை வெளியிடுவது வரவேற்க தக்க மாற்றம்.

மேலும் அனானிகளுக்கென்று தங்களை வெளிப்படுத்திக்கொள்ளக் கூட இயலாத சில நிர்பந்தங்கள் கூட இருக்கலாம்.

என்ன நல்ல அனானிகளே!நான் சொல்றது சரிதானே:)

Shan said...

அவரை விட இவர் வான் உயர்ந்து நிற்கிறார் என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்து. "மயக்கமா கலக்கமா" என்று நான் கலங்கி நின்றபோது என் கலக்கத்தை போக்கியவர் கவிஞர். "ஆண்டவன் கட்டளை ஆறு" என்று போதித்தவர். எனக்கு இதுபோல அனுபவங்கள் பாரதியின் கவிதைகளில் கிடைக்கவில்லை. ஆக எனக்கு கவிஞரே உயர்ந்து நிற்கிறார்.

பாரதியும் சரி கண்ணதாசனும் சரி தனிப்பட்ட வாழ்க்கையில் உதாரண மனிதர்கள் இல்லை. கவித்திறமையை எப்படி எடை போடுவது? அது அவரவரை பொறுத்தது. சிலருக்கு பாரதியை பிடிக்கலாம், சிலருக்கு கண்ணதாசனை, வேறு சிலருக்கு வேறொருவரை.

"கவிதை பாட தெரியாத கண்ணதாசன்" என்னத்தை சொல்வது? அது அவர் கருத்து. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம். நான் கூட "கவிதை பாட தெரியாத பாரதி" என்று சொல்லலாம். இது சுதந்திர நாடு. ஆனால் அமுதவன் வேறுபாடு இல்லாமல் என் கருத்தையும் பிரசுரிப்பார் என்று நம்புகிறேன்.

Shan said...

இந்த கவிதையை சமுதாய கோபம் என்று கூட எண்ணலாம். இதனால் அவருக்கு கவிதை பாட தெரியாது என்று சொல்வது அபத்தம்.

Amudhavan said...

ஆமாம் யோகன் பாரிஸ் உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். பாரதி இன்றிருந்தால் நிச்சயம் இந்தப் பாடலுக்காக கண்ணதாசனைக் கொண்டாடியிருப்பார்.

Amudhavan said...

வாருங்கள் ஷான், நீங்கள் உங்கள் கருத்தை மிக சுதந்திரமாகச் சொல்லலாமே. எதற்காகத் தயங்கிக்கொண்டே சொல்வது போன்ற பாவனை?
ராஜநடராஜன் ஏதோ ஒரு ஃப்ளோவில் அப்படியொரு வார்த்தைச் சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன். மற்றபடி பல நியாயமான கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்தான் அவர். அதனால் அந்த ஒரு வார்த்தையைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மற்றபடி கண்ணதாசனைப் போன்று அவ்வளவு விரைவாகக் கவிதை அல்லது பாடல் எழுதும் ஆற்றல்கொண்ட இன்னொரு கவிஞரைத் தமிழுலகம் இருபதாம் நூற்றாண்டில் கண்டதில்லை. இதற்கென ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
இந்தக் கவிதை சமுதாயத்தின் மீதான கோபம், சமுதாயத்தின் மீதான எள்ளல் இரண்டிற்கும் பொருந்தும்.
வேறுபாடு இல்லாமல் உங்கள் எண்ணம் இங்கே பிரதிபலிக்கப்பட்டிருப்பதில் நிறைவடைவீர்கள் என்று நினைக்கிறேன்.

Shan said...

எனது பின்னூட்டத்தை வெளியிட்டதற்கு மிக்க நன்றி அமுதவன். உண்மையில் பாரதி மகாகவி என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் என் போன்ற வெகு சிலர் திரைப்படப் பாடல்கள் மூலமே தமிழ் கவிதைகளை அறிந்த்திருக்கிறோம். அதற்கு காரணம் எங்களுக்கு நூல்கள் படிக்கும் பழக்கம் அதிகம் இல்லை. "சிந்து பைரவி" படத்தில் வரும் "மனதில் உறுதி வேண்டும்" பாடல் மூலமே எனக்கு பாரதியின் பாடல்கள் பிடிக்க ஆரம்பித்தது. பாடத்தில் படித்ததை வைத்து அல்ல. இசை அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான், கண்ணதாசன் பாடல்கள் என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தின என்று கூறினேனே தவிர அவை பாரதியின் பாடல்களை விட உயர்ந்த்தவை என்ற காரணத்தினால் அல்ல. அதே சமயம், கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார் என்ற காரணத்திற்காகவே அவரை மட்டம் தட்டுவதும் பாரதியை உச்சானிகொம்பில் தூக்கி வைப்பதும் நியாயம் ஆகாது. தமிழ் இலக்கியம் மிகவும் பெரிது; மிக விரிந்தது; பாரதிக்கோ கண்ணதாசனுக்கோ மட்டும் சொந்தமாகாது. அனைவருக்கும் இங்கு இடமுண்டு.

Amudhavan said...

கண்ணதாசனை எதிர்க்கவேண்டும் என்று நினைத்தவர்கள் அவர் திரைப்படப் பாடலாசிரியர்தானே என்று சொல்லிப்பார்த்தார்கள். அது எடுபடாமல் போகவே அவர் குடிப்பவர் குடிகாரர் என்று சொல்லிப்பார்த்தார்கள். அதுவும் எடுபடவில்லை. காலத்தைத் தாண்டி நிற்கிற மகாகவிஞனாக, மக்கள் இயல்பாக அவரது பாடல்களை முணுமுணுக்கிற கவிஞனாக, தங்கள் வாழ்வை ஏதோ ஒரு விதத்தில் பாதித்த ஒரு கவிஞனாக அவர் இன்று கொண்டாடப்படுகிறார்.
இவரை அறிந்துகொள்ள இவரைமட்டும் படித்தால் போதாது. பாரதியைப் படியுங்கள். கண்ணதாசனை மேலும் நன்றாக ரசிக்கலாம்.

ராஜ நடராஜன் said...

@Shan ! தாமதமாக மீண்டும் இங்கே வந்தேன்.நமக்கும் நிகராக நீண்ட பின்னூட்டம் போடுவதோடு விவாதிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்ச்சியடைந்தேன்.ஆனால் இரண்டாம் பின்னூட்டத்தில் கால்பந்து விளையாட்டில் சேம் சைடு கோல் என்று சொல்வது போல் நீங்களே உங்கள் அணிப்பக்கம் பந்தை நெட்டுக்குள் தள்ளி விட்டு விட்டீர்களே:)

இங்கே பேசப்படும் பொருள் ஒரு கவிதையின் மூலத்தை காப்பி அடித்த கண்ணதாசனின் மனநிலையே.நானும் கூட வடிவேலின் நகைச்சுவைகளை எங்கோ ரிபீட்டியிருக்கிறேன்.ஆனால் நான் வடிவேல் ஆகிவிட முடியுமா:)

இருவரின் மொத்த கவிதைகளையும் ஒப்பீடு செய்தால் கண்ணதாசன் எழிமையான மொழி நடைக்கு சொந்தக்காரர்.யாவரும் புரிந்து கொள்ள இயலும்.பாரதியோ புரட்சியான கருத்துக்கு சொந்தக்காரர்.கவிதையின் வரிகளை கொஞ்ச தியான மனத்தோடு உணரவேண்டிய வரிகள்.

கண்ணதாசனுக்கோ திரைப்படங்களுக்கு பாடல் நாலைந்து கொடுத்து விஸ்வநாதா வேண்டியதுக்கு மெட்டமைத்துக் கொள் என்ற பத்துப்பாடல்கள்.பாரதியோ காடு,மலை,ஆறு,குழந்தையென சுதந்திரக் காற்று.

உரைநடையில் வேண்டுமென்றால் கண்ணதாசன் பாரதியை முந்திக்கொள்ளலாம்.அவ்வளவே.

வந்தால் வருவேன்:)

Shan said...

ராஜ நடராஜன், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனது அனுபவத்தில் பாரதி இரசிகர்களிடம் இது போன்ற கருத்துக்கு காட்டமான பதில்களே வரும். ஆனால் நீங்கள் பாரதி வெறியர் அல்ல, உண்மையிலேயே பாரதியின் கவிதைகளை உணர்ந்து படித்து அதனால் பண்பட்டவர் என்று புரிகிறது. உங்களுடன் விவாதிப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

அடிப்படையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகளே. நம் தமிழ் இலக்கியங்களுக்கு வளம் சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வணக்கத்திற்குரியவர்களே. இவர் இதில் உயர்ந்தவரா இல்லை அவரா என்ற விவாதத்திற்கு நாம் நடுவர்களாக முடியுமா என்பதை விட அதற்கு அவசியம் இருக்கிறதா என்பதை முதலில் விவாதிக்க வேண்டும். இருவரும் உயர்ந்தவர்களே. இவர்களுக்கெல்லாம் பாட்டனார் ஒருவரும் இருக்கிறார்; அய்யன் வள்ளுவரே அவர். இவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

கண்ணதாசன் பாரதியிடம் இருந்து மட்டுமல்ல பட்டினத்தாரிடமும் இரவல் பெற்றிருக்கிறார் (உதாரணம்: "வீடு வரை உறவு"). அதனால் அவருக்கு சுயசிந்தனை இல்லை என்று அர்த்தமாகாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இரவல் பெற்று எளிய நடையில் பாமரனுக்கும் புரியும் வகையில் ஒரு படைப்பை தருவது தவறும் ஆகாது.

"சேம் சைடு கோல்" பற்றி கூறினீர்கள்:‍‍) நான் கண்ணதாசன் கட்சியுமல்ல பாரதி கட்சியுமல்ல. நான் தமிழ் கட்சி:) நீங்களும் தான் என்று நம்புகிறேன். கண்ணதாசன் ஒரு திரைப்பாடலாசிரியர் என்ற காரணத்தால் அவரது படைப்புகளை குறைத்து மதிப்பிடலாகாது என்பதே எனது கருத்து.

அமுதவன், நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே.

ராஜ நடராஜன் said...

Shan! வந்துட்டீங்களா! உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் என்று இல்லாமல் கூகிள் தேடலில் பாரதியார் புதுமைப்பெண்களாக இப்பொழுதும் ஈழத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பெண்களாக ஈழப்பெண்கள் இருப்பதை ஒப்புமைக்காக பாடலைத் தேடும் போது விஜய் தொலைக்காட்சியில் பாரதியார் ராப் பாடல் பாடிக்கொண்டிருந்ததை ரசித்து விட்டு தொடர் தேடலில் அமுதவன் சாரின் இந்த பதிவும் கூகிளில் இடம் பெற்றிருப்பதைக் காண நேர்ந்தது.க்ளிக் செய்தால் உங்கள் பின்னூட்டம் நினைவுக்கு வந்தது.

எனது பின்னூட்ட எதிர் விமர்சனம் ஒரு மூலப்பாடலையொட்டி யார் வேண்டுமென்றாலும் எசப்பாட்டு பாடி விடமுடியுமென்பதே.

பூங்காவில் உட்கார்ந்தால்தான் கவிதையே வரும் என்ற இப்போதைய நிலையில் கண்ணதாசனின் கவிதைகள் கூட எல்லா நிலையிலும் நினைத்தவுடன் பாடும் மனநிலை கண்ணதாசனுக்கும் கூட இல்லையென்பதே உண்மை.கண்ணதாசனின் பாடல் வரிகள்,விஸ்வநாதனின் இசை,சிவாஜி கணேசன் என்ற மகா நடிகனின் முகபாவங்கள்,பி.சுசிலா,டி.எம்.சௌந்திரராஜன் போன்றவர்களின் பங்கும் இருக்கின்றன எனபது என்னோட கருத்து.

ஆரோக்கியமான விவாதத்திற்காக வேண்டியே உங்களோடு மல்லுக்கட்ட நினைத்தேன்:) நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்தப்பாடலை நான் இதுவரை கேட்டதோ படித்ததோ இல்லை.

மகாகவி பாரதியார் பாடலுடன் போட்டி போட்டுக்கொண்டு இவர் எழுதியிருப்பது இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளது.

முண்டாசுக்கவிஞர் இதைப்படித்திருந்தால் கவிஞர் கண்ணதாசன் அவர்களைப் பாராட்டவே செய்வார் என்றும் தோன்றுகிறது.

ஒப்பீடு செய்து தாங்கள் இதை பதிவாக இட்டுள்ளது மிகச்சிறப்பாகவே உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

இன்று 08.02.2013 வலைச்சரத்தின் மூலம் வருகை தந்துள்ளேன். அதற்கும் என் வாழ்த்துகள்.

அன்புடன்
VGK

cheena (சீனா) said...

அன்பின் அமுதவ்ன் - பதிவு நன்று - அருமையான சிந்தனை - மறுமொழிகளில் பாரதியா கண்ணதாசனா - விவாதம் கண்டேன் - மே 2012ல் முடிந்த விவாதத்தினைத் தொடர மனமில்லை. ஆரோக்கியமான விவாதத்திற்காக மல்லுக்கட்ட நினைத்த ராஜ நடராஜனுக்கும் @Shan க்கும் தங்களூக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Amudhavan said...

இணைய உலகின் வைகோ அவர்களின் வருகைக்கு நன்றி. கண்ணதாசன் பற்றிய உங்களின் கருத்தேதான் என்னுடைய கருத்தும். வலைச்சரத்தின் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளமைக்கு மகிழ்ச்சி.

Amudhavan said...

சீனா ஐயா அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

Post a Comment