பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம் ஒன்றை ஒரு வார இதழில் வாசிக்க நேர்ந்தது. படிப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் அனுபவம் அது. அந்த அனுபவம் இது;
‘சமீபத்தில் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லட்டுமா?....பெங்களூரில் எனது பழைய-சிறிய வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்திப் புதுப்பிக்க ஆறு லட்சம் ரூபாய் வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்தேன். அந்த வீட்டின் மதிப்பு பெங்களூர் நிலவரப்படி ரூ.25 லட்சம். அதை அடமானமாகக் காட்டியும், எனது சம்பளத்தில் இருந்து 60 மாதத் தவணையில் பிடித்துக்கொள்ளலாம் என்று எழுதிக்கொடுத்தும், முப்பது செக்குகளில்
கையொப்பமிட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தும்கூட,கிட்டத்தட்ட 10 முறை அலைந்தபின்பே கடனின் முதல் தவணை கிடைத்தது.
ஆனால் ஒவ்வொரு முறையும் பிரச்சினை என்னிடம்தான் இருந்தது...வங்கியிடமல்ல. வங்கியில் இருக்கும் நடைமுறைகள் அப்படி.
இதில், அவர்களுக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்ததை நான் அறிவேன். ஏன்.... எல்லாம் முடிந்த பின் அதே வங்கிக்கிளை ஒன்றை என்னை வைத்து ரிப்பன் வெட்டித் திறந்தார்கள்.
அப்போது நான் சொன்னது,’’இந்த வங்கியில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கும்.
ஏனெனில் என்னையே பலமுறை சோதித்தபின்தான் பணம் கொடுத்தார்கள். அதுவும் நான் வீட்டை உண்மையிலேயே அவர்களிடம் வரைபடத்தில் காட்டியபடிதான் கட்டுகிறேனா என்பதை பல கட்டங்களில் வந்து பார்த்துவிட்டு, நான்கு தவணையில் தொகையைக் கொடுத்தார்கள்.அப்படி இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய வங்கிகள் திவாலாகியும் இந்திய வங்கிகளில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கிறது.
இந்திய ஜனநாயகமும் வங்கியும் மிகவும் பலமானதே. என்ன...கொஞ்சம் பொறுமையுடனும் பொறுப்புடனும் அணுகவேண்டும்.”
இதனை வாசித்த போது ஒருபுறம் நெஞ்சு கனத்தது. நியாயமாகவும் நேர்மையாகவும் அணுகுகிறவர்களுக்கு வங்கிகளிடமிருந்தும், வேறு அரசு நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கின்ற அனுபவம் இதுதான். அவர்கள் எவ்வளவு பெரியவர்களாகவும் எத்தகைய சாதனையாளர்களாகவும் இருந்தாலும் சட்டதிட்டங்களையும், நிர்வாக நடைமுறைகளையும் சொல்லி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் அலுவலர் கொஞ்சம் மனசாட்சி உள்ளவராக இருந்தால் கூடுதலாக ஒரு அனுதாப வார்த்தையையும் சேர்த்து அனுப்பிவைப்பார்.’’என்ன பண்றது சார், உங்களுக்கே இந்த நிலைமை. ரொம்ப வருத்தமாயிருக்கு. நம்ம சட்டதிட்டங்கள் அப்படி. ஒண்ணும் பண்றதுக்கு இல்லை.’’
ஆனால் இந்தியா பூராவிலும் நகரங்களில் ஒரு அங்குலம் பாக்கியில்லாமல் வானளாவ உயர்ந்துகொண்டிருக்கிறதே கட்டிடங்கள் அவையெல்லாம் என்னவாம்? எந்த வணிக நிறுவனம், எந்த அபார்ட்மெண்ட், எந்த தொழில் நிறுவனம், எந்தக் கல்லூரி நிறுவனம், எந்தத் தனியார் நிறுவனம் சொந்தப் பணத்தில் எழுகிறது? எல்லாமே வங்கிக் கடனில் எழும் கட்டிடங்கள்தானே? அவையெல்லாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, வரைபடங்களுக்கு உட்பட்டு நியதி நெறிமுறைகளுக்கு உட்பட்டுக் கடன் பெற்றுக் கட்டப்படுபவைதானா?
வேடிக்கையாயிருக்கிறது....விஷயம் என்னவென்றால் நீதி நேர்மை நியாயம் என நமக்கென்று பிறப்பித்துக்கொண்ட நெறிமுறைகளுடன் வாழ நேரும்போதுதான் இம்மாதிரியான சோதனைகளையெல்லாம் சந்திக்க நேர்கிறது. இன்றைய உலகில் வெற்றிபெற்றவர்களாய் வாழ்வதற்கு வேறுமாதிரியான சட்டதிட்டங்களும் வழிமுறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. இதனை நடத்துவது ஜனநாயகம் அல்ல; பணநாயகம். பணநாயகத்தின் ஆட்சிக்குட்பட்டே இங்கு பல காரியங்கள் நடைபெறுகின்றன. அதில் சிக்கி அடிபடாமல் வெளியே வரும் அப்பாவி பொதுஜனம் வெகு சொற்பமே. இந்தப் பிரிவினர்க்குப் ‘பிழைக்கத்தெரியாதவர்கள்’ என்று பெயர்! இதற்கு அப்பாற்பட்ட ‘பிழைக்கத்தெரிந்த’ பொதுஜனம்தான் சுகபோகங்களுடன் வாழ்பவர்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்த வங்கிவிவகாரம் வீடு கட்டிய எனக்கும் ஏற்பட்டது. பல வங்கிகளில் சட்டதிட்டங்களைச் சொல்லியே திருப்பியனுப்பினார்கள். ஒரு கோரிக்கையை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு நிறைய சட்டப்பாயிண்டுகள் கிடைத்துவிடுகின்றன. நியாயப்படுத்துவதற்கு நம்மிடம்தான் சட்டக்குறிப்புகள் எதுவும் இருப்பதில்லை. நிலத்தை வாங்கிவைத்துக்கொண்டு வங்கிக்கடனுக்காக அலைந்துகொண்டிருந்தேன். என்னுடைய பரிதாப நிலையைப் பார்த்த நண்பரொருவர் சிரித்துவிட்டு “சார் இப்படியெல்லாம் நீங்களே போய் அணுகினால் எந்த வங்கியிலும் கடனெல்லாம் கொடுக்கமாட்டார்கள். அதற்கென்று ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகப் போனால்தான் நீங்கள் கடனெல்லாம் வாங்கமுடியும். வாங்க நான் கூட்டிப்போறேன்” என்று சொல்லி ஒரு ஏஜெண்டிடம் கூட்டிச்சென்றார்.
அவர் நான் வைத்திருந்த பத்திரங்களை எல்லாம் வாங்கிப்பார்த்தார். பிறகு கடனுக்கு வேண்டிய சான்றிதழ்கள் எவையெவை குறைந்திருக்கின்றன என்தைச்சொன்னார். பிறகு ‘அவையெல்லாம் உங்களுக்கு அரசாங்கத்திலோ கார்ப்பரேஷனிலோ கிடைக்காது. அவற்றெயெல்லாம் வேறு வழிகளில் வாங்க வேண்டும்’ என்றார். ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும்?” என்றார்.
“இருபது லட்சம்” என்றேன். என்னுடைய மகள் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுவதால் அவள் பெயரில் கடன் பெறுவதற்கான வாய்ப்பிருந்தது.
அந்த மனிதர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. நாம் அதிக பணத்தை எதிர்பார்க்கிறோமோ என்ற எண்ணம் எனக்குள் வந்தது.
“என்ன சார் இவ்வளவு கொறைச்சலா கேட்கறீங்க? உங்க மகள் சம்பளத்துக்கு இன்னமும் அதிகமாக நீங்கள் கேட்கலாம். ஒரு இருபத்தைந்து லட்சம் கேளுங்க” என்றார்.
“வேண்டாம். அப்புறம் நாங்கதானே கட்டணும்..இது கிடைச்சாலே போதும்” என்றேன்.
அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “உங்களுக்குத் தெரியாதுசார். வீடு கட்ட ஆரம்பிச்சா கடைசியிலதான் பயங்கரமா இழுத்துரும். அந்தச் சமயத்துல என்ன செய்வீங்க? இருப்பதஞ்சு போடறேன்” என்றார்.
கடன் கிடைப்பதே பெரிது என்றிருக்கும் இந்த நேரத்தில் இவர்பாட்டுக்கு இன்னமும் அதிகமாக வாங்கித்தருகிறேன் என்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு.
கொஞ்சம் தயங்கியபடியே “சரி” என்றேன்.
“எதுக்கும் இருபத்தாறாவே போடறேன்” என்றார். என்ன இப்படி வாரிக்கொடுக்கிறேன் என்கிறாரே என்று யோசித்தபோதுதான் அவர் பேசிய அடுத்த வார்த்தையின்போது அதற்கான சூட்சுமம் தெரிந்தது. “எத்தனை லட்சமோ அத்தனை லட்சத்துக்கும் நாலு பெர்சன்ட் கமிஷன் தந்துரணும். இந்த பத்திரங்களெல்லாம் ரெடிபண்ண இருப்பஞ்சாயிரம் தந்துரணும்” என்றார்.
“எல்லார்ட்டயும் ஐந்து பெர்சன்ட்தான் வாங்குறது..நண்பர் கூட்டிட்டு வந்திருக்காரே என்பதற்காக உங்களிடம் நாலு பெர்சன்ட்” என்றார். கூட்டிக்கழித்துப் பார்த்தபோது ஒண்ணேகால் லட்சம் வெறும் கமிஷனாகவே தரவேண்டும் என்பது புரிந்தது.
ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டேன். பலரிடமும் பேசிப்பார்த்தபோது இது சாதாரணம்தான் என்று புரிந்தது. கமிஷன் தொகை அங்கங்கே வேறுபடுகிறது என்பதுதான் வித்தியாசம். இந்த வரிசையில் இன்னொரு புரோக்கர் சொன்னதுதான் வியப்பின் உச்சம். எல்லாம் பேசிவிட்டு ‘எந்த வங்கி?’ என்றேன். “உங்களுக்கு எந்த வங்கி வேண்டுமோ அந்த வங்கியில் வாங்கித்தருகிறேன்” என்றார் கூலாக.
புரோக்கர் சமாச்சாரமே வேண்டாம் என்று தள்ளிப்போட்டு சில மாதங்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தொடர்பு ஏற்பட்டு கடனுக்கு வழி பிறந்தது.
கடன் கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா என்ன? வீட்டைக் கட்டிக்கொடுக்க நல்லதொரு காண்ட்ராக்டர் கிடைக்கவேண்டுமே! என்னுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால் என்னுடைய நெருங்கிய நட்பில் இருப்பவர் திரு. கோ.தாமோதரன். பெங்களூரின் குறிப்பிடத்தக்க காண்ட்ராக்டர்களில் ஒருவர். பெரிய தொழில் நிறுவனங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி, விஜய் மல்லய்யாவின் ஒரு கட்டிடம் என்று பல பெரிய பெரிய கட்டுமானங்களைக் கட்டியவர். ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்ற நிறைவில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பொதுச்சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்து தற்போது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று சத்தமில்லாமல் தமிழ்த்தொண்டு புரிந்துகொண்டிருப்பவர். இவரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி, ஆனாலும் கேட்டுவிட்டேன்.
“அட, அதுக்கென்ன தாராளமா கட்டித்தர்றேன்” என்று முன்வந்தார். முக்கிய விஷயம், ஒரேயொரு ஒற்றைப் பைசாகூட வாங்கவில்லை. தம்மிடமுள்ள ஆட்களை அனுப்பினார். அவர்களுக்கான கூலி, மற்றும் கட்டட வேலைக்கான பொருட்கள் வந்து இறங்கினால் அவற்றுக்கான விலை-அவ்வளவுதான். வாரத்திற்கு இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை என்று வந்து மேற்பார்வையிட்டு யோசனைகள் சொல்லி மொத்த வீட்டையும் முடித்துகொடுத்துவிட்டார்.
கணக்குப்போட்டுப் பார்த்த நண்பர்கள் எப்படியும் காண்ட்ராக்ட் விட்டிருந்தால் ஐந்துமுதல் ஆறு லட்சம்வரைக்கும் அதிகமாகியிருக்கும் என்று சொல்கின்றனர். இப்படி நல்ல மனம் கொண்ட நண்பர் ஒருவர் கிடைத்ததில் இலகுவாக அழகிய வீடு ஒன்று உருவாகிவிட்டது.
அடுத்தது புதுமனைப் புகுவிழா!
என்னுடைய திருமணத்திலிருந்து எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக்கொடுத்தவர் நடிகர் சிவகுமார். வாழ்க்கையில் சில அதிர்ஷ்டங்கள் கிடைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அப்படியொரு அதிர்ஷ்டம் சிவகுமார் அவர்களின் நட்பு. எந்த ஜென்மத்திலோ செய்த நற்பயன் அவருடைய நட்பாக இன்றும் தொடர்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே, புதுவீட்டை அவரும் திருமதி சிவகுமாரும் வந்திருந்து குத்துவிளக்கேற்றித் துவக்கிவைக்க வேண்டும் என்பது ஏற்கெனவே முடிவான ஒன்று.
அவர்களுடன் யார் வருவது?
நான் சொன்னேன்,’’சார் இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் பேராசைப் பிடித்தவன். எனக்கு சூர்யா, ஜோதிகா, குழந்தைகள், கார்த்தி, பிருந்தா, குழந்தைகள் என்று எல்லாரும் வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்றேன்.
சிவகுமார் சிரித்துவிட்டுச்சொன்னார்.’’அதெல்லாம் சரி, ஆனால் நடைமுறைக்கு அதெல்லாம் ஒத்துவரணுமான்னு பார்க்கணும். குட்டிக்குழந்தைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாது. சூர்யா கார்த்தியைப் பொறுத்தவரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்ந்தாற்போல வீட்டுல வச்சிப்பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. ஒருத்தர் இருந்தா இன்னொருத்தர் வெளில இருப்பாங்க. பார்க்கலாம்.. ரெண்டு பேர்ல யார் ஃப்ரீயாக இருக்காங்களோ அவங்களை மட்டும் கூட்டிவர்றேன். மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார்.
சூர்யாவா கார்த்தியா யார் வருவார்கள் என்ற சஸ்பென்ஸ் ஒருபுறம் இருக்க நாட்கள் நகர்ந்தன. செய்தியை வெளியில் கசிய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.. ஆனால் நிகழ்ச்சிக்கு அழைத்த அத்தனைப் பேரும் முதலில் கேட்ட கேள்வி “சிவகுமார் வருகிறாரா?” என்பதுதான். பூசிமெழுகினாற்போல் பதில் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தால் அவர்களின் அடுத்த கேள்வி-“சூர்யா வர்றாரா இல்லை கார்த்தி வர்றாரா?” என்பது.
மிக நெருங்கிய நட்பு வட்டத்தையும் உறவினர்களையும் மட்டுமே அழைப்பது மிக எளிமையாக நிகழ்ச்சியை நடத்துவது என்று முடிவானது. மூலிகைமணி டாக்டர் வெங்கடேசன் தமது கனவுத்திட்டமான ஷாங்ரீலாவை முழுமைப்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்.
கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு பெரிய மூலிகைப்பண்ணை, மூலிகைத்தொழிற்சாலை, காட்டேஜ்களுடன் கூடிய மருத்துவமனை என்று மிகப்பெரிய திட்டம். அதனை முடிப்பதில் தீவிரமாக இருந்தவரை என்னுடைய அழைப்பு தொடவும் “குடும்பத்துடன் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.
கவிஞர் அறிவுமதியை அழைக்க,” எந்த நிகழ்ச்சி இருந்தாலும் விட்டுட்டு பெங்களூருக்கு ஓடிவந்துருவேன்” என்றார்.
எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி. “காலையிலேயே வந்துர்றோம்” என்றார். தென்காசியைச் சேர்ந்த பிரபல மூட்டு எலும்பு சிகிச்சை சர்ஜன் டாக்டர் சந்திரன் ‘தவறாமல் கலந்துக்கறேன்’என்றார். தொழிலதிபர் ஈஸ்வர் “இப்பவே அட்டெண்டன்ஸ் போட்டுக்கங்க” என்றார். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் புதிய விளக்கம் எழுதுவதில் ஈடுபட்டிருக்கும் திரு கே.பத்மநாபன் ‘’ஞாயிற்றுக்கிழமைத்தானே எல்லோருமே வந்துர்றோம்” என்றார்.
மேலும் கோலார் தங்கவயல் சுரங்கத்தில் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்றவர் சேலம் ஜெயராமன், அவரும் அவருடைய நண்பர் பேராசிரியர் டாக்டர் ரமணிகோபாலும் சேலத்திலிருந்து காரிலேயே வந்துவிடுகிறோம் என்றனர்.
இரண்டு நாட்கள் இருக்கும்போது சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. அவரது உறவு அம்மாள் ஒருவர் மிகவும் உடல்நலிவுற்றிருப்பதால் கோவைக்குப் போகவேண்டியிருக்கிறது. “நானும் வீட்டம்மாவும் போகிறோம். அங்கிருந்து நாங்கள் எப்படியாவது பெங்களூர் வந்து கலந்துகொள்கிறோம். சூர்யாவையோ கார்த்தியையோ கோவை பெங்களூர் என்றெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாமற்போகலாம்” என்றார்.
அடுத்த தகவல் “அந்த அம்மாள் இப்போது கொஞ்சம் தேவலை. பிளைட் டிக்கெட் கான்சல் செய்துட்டோம். கோவை போறதாயிருந்தாலும் பெங்களூர் வருவதாயிருந்தாலும் காரிலேயே வந்து செல்வதாக ஏற்பாடு. சூர்யா வரலை.வெளியூர் சூட்டிங். கார்த்தியைக் கூட்டிவர்றேன்” என்றார்.
அடுத்த தகவல், “கார்த்தி வருவதும் சந்தேகம். அவனுக்கு முதுகு பிடிச்சிருக்கு. அத்தனை தூரம் கார்ல டிராவல் பண்ணமுடியுமான்னு தெரியலை. டாக்டர்ட்ட போயிருக்கான். டாக்டர், பயணம் பண்ணலாம்னு சொன்னால்தான் வருவான்” என்றார்.
இன்னொரு அரைமணி நேரம் கழித்து அவரிடமிருந்து வந்த குறுந்தகவல்-‘karthi is coming’ என்றது.
ஆக, நாங்கள் நினைத்தது போலவே சிவகுமாரும் திருமதி சிவகுமாரும் கார்த்தியுடன் வந்திருந்து அத்தனைப்பேரின் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் காரணமாயினர்.
வீட்டிற்கு ‘ஆனந்தம்’ என்று பெயர் வைத்திருந்தோம். அந்த உணர்வு எல்லாருக்கும் கிடைத்தது.
இந்தத் தகவல்களை வலைப்பூவில் எழுதுவதாக எண்ணம் எதுவும் இருக்கவில்லை. சொந்த விஷயங்களை கடைவிரிக்கக் கூடாது என்ற நினைப்பு எனக்கு உண்டு. ஆனால் இங்கே இதனை எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம்தான். வங்கிக் கடன்கள்பற்றி அப்பாவியாக அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களையொட்டி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றிற்று. அதனால்தான் நிகழ்ச்சி நடந்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே இதுபற்றி இங்கே எழுத நேர்ந்திருக்கிறது.
நேர்மையும் நாணயமுமாக நடந்துகொள்ள நினைக்கும் அத்தனைப்பேரையும் சட்டங்களைக்காட்டி நிராகரிக்கும் சமூக அமைப்புதான் பரவலாக இருக்கிறது. ‘இதெல்லாம் வேற ரூட்ல போய்ப் பண்ணிக்கணும்சார்’ என்ற பிழைக்கத்தெரிந்த மனிதர்களின் பஞ்ச் டயலாக்தான் இங்கே வெற்றிக்கான ஃபார்முலா.
கூடவே, வேறொரு கருத்தும் தோன்றியது. வலைப்பூவில் சமூகம் சார்ந்து நிறைய எழுதுகிறோம். நம்முடைய கோபங்களை, எரிச்சல்களைப் பகிர்ந்துகொள்கிறோம். ஆனால் மகிழ்ச்சியையும் நிறைவான தருணங்களையும் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் இது எனக்கானது மட்டுமே என்று கமுக்கமாக இருந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் மகிழ்ச்சி அலைகளையும் பரவச்செய்யலாமே என்று தோன்றிற்று.
எனவே பகிர்ந்துகொள்கிறேன்.