
நடிகர் கார்த்தி திருமணத்தைப்பற்றி இதழ்களிலும் இணையதளங்களிலும் முழுமையான தகவல்கள் ஏற்கெனவே வந்துவிட்டன. முக்கியமான அத்தனைப் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுவிட்டன. புதிதாக இங்கே பகிர்வதற்கு ‘செய்திகள்’ என்ற அளவில் ஒன்றுமில்லை. ஆனாலும் பத்திரிகைச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட சில தகவல்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு.
முதலாவதாக இப்படியொரு திருமணத்தை நடத்த ஒரு நடிகருக்கு மிகுந்த தைரியம் வேண்டும். தைரியம் வேண்டுமோ இல்லையோ ‘மனம்’ வேண்டும். அந்த மனம் சிவகுமாருக்கு இருந்தது. நம்முடைய காலகட்டத்தில் நடந்த அத்தனை பிரபலங்களின் திருமணங்களும்- குறிப்பாக நடிக நடிகையரின் திருமணங்களும் ‘சுற்றமும் நட்பும் சூழ’ என்பது வெறும் பெயரளவுக்கு சம்பிரதாய அளவுக்குத்தான் இருக்கும். ஆனால் சிவகுமார் தமது இரண்டாவது மகனான கார்த்திக்கு நடத்திவைத்த திருமணத்தில் சுற்றமும் நட்பும் ‘ரத்தமும் சதையுமாக’ சூழ்ந்திருந்தது ஒரு முக்கியமான நிகழ்வு.
சிவகுமார் எப்போதுமே தம்மை மண்ணின் மைந்தராகவே வெளிப்படுத்துபவர். சென்னையில் இத்தனை ஆண்டுக்காலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறபோதிலும் இன்னமும் சூலூரில் உள்ள காசிக்கவுண்டன் புதூரின் மணத்தையும் காற்றையுமே சுவாசிக்கவும் நேசிக்கவும் செய்பவர்.
கிராமத்தையும் அதன் மக்களையும் சொந்தங்களையும் உறவுகளையும் அங்குள்ள நட்புகளையும் மனதளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் பேணிப்பாதுகாத்து வருபவர். அந்த மக்களோடு மக்களாக எப்போதுமே தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவர். அதனால் தம் வீட்டில் நடந்த முதல் இரண்டு திருமணங்களையுமே கூட கோவைப்பக்கம் நடத்த முடியவில்லையே என்ற மனக்குறை அவருக்கு இருந்தது உண்டு.
மகள் திருமணம் சென்னையில். ஏனெனில் மாப்பிள்ளை சென்னைக்காரர். அடுத்த திருமணம் சூர்யாவுடையது. ஜோதிகா மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் கோவையில் கொண்டுபோய் திருமணத்தை வைக்கமுடியாது. அதனால் கார்த்தியின் திருமணமாவது கோவைப்பக்கம் தங்களின் உறவுமுறை சூழ நடந்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் மருமகள் ரஞ்சனி கொடுமுடிக்கு அருகேயுள்ள குமாரசாமி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவராக இருக்கவும் தாம் ஆசைப்பட்டபடி இந்தத் திருமணத்தை கோவையில் நடத்த முடிவு செய்தார் அவர்.
எதையும் நுணுக்கமாகப் பார்த்துப்பார்த்து சின்னதொரு இடைவெளிகூட விட்டுவிடாமல் செய்வதுதான் சிவகுமாரின் இயல்பு. ஒரு சிற்பிக்கேயுரிய குணாதிசயம் இது. சாதாரணமாக ஒருவரை வீட்டிற்கு அழைத்தால்கூட அவர் தம்முடைய வீட்டுவாசலிலே வந்து இறங்கியதிலிருந்து மறுபடி புறப்பட்டுப்போகிறவரை ஒவ்வொரு வினாடியையும் கச்சிதமாக முடிவுசெய்து கவனித்துத்தான் அனுப்பிவைப்பார். சென்னைக்கு அழைக்கிறார் என்றால் பெங்களூரிலிருந்து கிளம்பி ரயிலில் வந்துகொண்டிருந்தால் குறிப்பிட்ட நேரம்பார்த்து போன்செய்வார். “வந்தாச்சா?” என்பார். ரயில் சரியாக பெரம்பூரில் நுழைந்துகொண்டிருக்கும். சிவகுமார் அனுப்பிய கார் சென்ட்ரலில் காத்துக்கொண்டிருக்கும். எப்போதுமே ஒரு மனிதரால் இப்படி நடந்துகொள்ளமுடியுமா என்பது ஆச்சரியம். ஆனால் அப்படித்தான் நடந்துகொள்வார் சிவகுமார். எதையுமே ஒரு ராணுவ ஒழுங்குடன் நடத்தித்தான் அவருக்குப் பழக்கம்.
இப்படிப்பட்டவர் தமது வீட்டுத் திருமணங்களை எப்படி நடத்துவார் என்பது தெரிந்த விஷயம்தான். மகள் பிருந்தா திருமணமும், சூர்யா திருமணமும் அத்தனைக் கச்சிதமாக நடந்தது. கார்த்தி திருமணமும் அதுபோலவேதான் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான். இந்தமுறை அவருக்குப் பக்கத்துணையாக சூர்யாவும் களத்தில் நின்றதால் இரண்டுபேரின் நிர்வாகத்தில் அத்தனையும் படு கச்சிதம்.
கோவையில் இத்தனைப் பிரபலமான நடிகர் ஒருவரின் திருமணம் சமீபத்தில் நடந்ததில்லை என்பதால் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஊரையே விழாக்கோலமாக்கியிருந்தனர்.
கொடீசியா அரங்கம் போகும் அவினாசி சாலை பூராவும் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் போஸ்டர்கள். ‘இந்திரனே சந்திரனே அடுத்த முதலமைச்சரே பிரதம மந்திரியே’ என்றெல்லாம் கோணங்கித்தனமாக வார்த்தைகளை வீணாக்காமல், வரையறை செய்யப்பட்ட வார்த்தைகளுடன் மட்டுமே வாழ்த்துக்கள் இருந்தன. அதிலும் அவினாசி மெயின் சாலையிலிருந்து கொடீசியா அரங்கம் செல்லும் சாலை முழுக்க தொடக்கத்திலிருந்தே இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் இதுவரை எந்த நடிகருடைய திருமணத்திற்கும் வைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். “இது என்ன திருமண விழாவா அல்லது மாநாடா என்ற சந்தேகம் வருமளவுக்கு கொண்டாடியிருக்கிறார்களே ரசிகப்பிள்ளைகள்” என்று தமது ஆச்சரியத்தைத் தெரிவித்தார் கவிஞர் அறிவுமதி.
திருமணத்திற்கு முதல்நாள் கோவையிலும் திருமண வரவேற்பு இருந்தது. வரவேற்பு மாலையில்தான் என்றபோதும் மதியமே அரங்கம் நிறைந்திருந்தது. இப்போதே இவ்வளவு கூட்டமா என்று வியந்தபோது திருமணத்திற்காக அழைக்கப்பட்ட உறவுகளும் ஊர்மக்களும் அத்தனை முன்னமேயே வந்துவிட்டிருந்தது தெரிந்தது. “பண்பாட்டு ரீதியான மண்சார்ந்த திருமணச்சடங்குகள் எல்லாம் முறைப்படி நடைபெறும். அதையெல்லாம் தவறவிடாமல் நீ வந்து பாருடா” என்று கவிஞர் அறிவுமதியிடம் சிவகுமார் சொல்லியிருந்ததால் முந்தைய தினம் காலையிலேயே தமது குடும்பத்துடன் வந்து இறங்கியிருந்தார் அறிவுமதி.
மதியம் மூன்றுமணிவாக்கிலேயே சடங்குகள் தொடங்கின. அரங்கம் பிரமாதமான அலங்கரிப்பில் கலைநயத்துடன் ஜொலித்தது. பசுமைப் போர்த்திய நுழைவாயிலிலிருந்து லட்சக்கணக்கான ரோஜா லில்லி மற்றும் ஆர்க்கிட் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமண்டபம்வரை அழகியல்சார்ந்த ஒரு பிரம்மாண்டம் ஆர்ப்பாட்டமின்றி வடிவமைக்கப்பட்டிருந்தது. மண்டப மத்தியில் தொங்கிய சரவிளக்கு போன்ற கிறிஸ்டல் ஜாலம் அற்புத உலகம் போன்ற தோற்றத்தைப் பரப்ப....இந்த உறுத்தாத பிரம்மாண்டத்தை உருவாக்கியவர் கலை இயக்குநர் சந்திரசேகர் என்றார்கள்.
பொதுவாக இப்போதெல்லாம் ரிசப்ஷன் என்றாலேயே ஏழரை அல்லது எட்டுமணிக்குத்தானே தொடங்கும்? ஐந்தரை மணிக்கெல்லாம் ரிசப்ஷன் ஆரம்பித்தாகிவிட்டது. பாலா, சத்யராஜ், மனோபாலா, கே.எஸ்.ரவிகுமார், ஹரி, ஜி.வி.பிரகாஷ்,சாலமன் பாப்பையா என்று ஆரம்பித்த விஐபி பட்டாளம் விரிந்துகொண்டே போக கூட்டம் அம்மியது. அறிவுமதியும் நானும் குடும்ப சமேதராய் சென்றிருந்தோம். சிவகுமார் உறவினர்களின் உதவியுடன் ஓரளவு முன்வரிசையில் உட்காரமுடிந்தது. வினாடிக்கு வினாடி கூட்டம் அதிகரித்துக்கொண்டே போக மேடையில் திருப்பதி போல ஜருகண்டி ஜருகண்டி சிஸ்டம் ஆரம்பித்தது. உறவினர்கள், தனியார் செக்யூரிடியினர், ஈவண்ட் மேனேஜ்மெண்டினர் ஆகியோர் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதில் முனைப்பாக இருந்தனர். காவல்துறையும் நிறுத்தப்பட்டிருந்தது. சிவகுமார் ஓரளவுக்குமேல் சமாளிக்கமுடியாமல் மேடையிலேயே ஒரு ஓரமாய் தம்முடைய சகோதரியுடன் அமர்ந்துகொண்டு பெருமிதத்துடன் நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்தார்.
சூர்யாதான் பாவம் விஐபிக்களை வரவேற்பதும் மேடையில் வந்திருக்கும் ரசிகர்களிடமிருந்து தப்பிப்பதுமாக சோர்வின்றி சுழன்றுகொண்டிருந்தார்.
மெல்லிசைக்குழுவினரின் வாத்திய இசை சூழலை சுவாரஸ்யமாக்கிக்கொண்டிருந்தது. சில பழைய பாடல்கள் தவிர்த்து மீதி அத்தனைப்பாடல்களையும் சிவகுமார் படத்திலிருந்து, சூர்யா படத்திலிருந்து, ஜோதிகா படத்திலிருந்து, கார்த்தி படத்திலிருந்து எடுத்துப் பாடினார்கள். அல்லது வாசித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது, புல்லாங்குழல் வாசித்தவர் ஒரு இசை வேள்வியையே அங்கே நடத்திக்காட்டினார். (இசைமேதை ஹரிபிரசாத் சவுராசியாவின் சீடர் என்று கேள்வி)
நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. மேடைப்பக்கம் போகலாம் என்று எடுத்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. விஐபிக்கள் பக்கமாகக்கூட போகமுடியாத அளவு நெரிசல். அடுத்த பக்கமோ கேட்கவே வேண்டாம். அந்த அளவு கூட்டம். “சரி நாம எதுக்கு மேடைக்குப் போகணும் உட்கார்ந்து அனைத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கலாம். நாளை வேண்டுமானால் மேடைப்பக்கம் போகலாம்” என்றார் அறிவுமதி. மேடையில் இருந்த சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. “என்ன வந்திருக்கிறீர்களா இல்லையா? அல்லது உள்ளே நுழைவதில் ஏதும் சிரமமா? எங்கே இருக்கிறீர்கள்?” என்றார். உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சொன்னதும் உதவியாளர் ஒருவரை அனுப்பிக்கூட்டிவரச் சொன்னார். மிகுந்த சிரமத்துடன் மேடைக்கு ஏறியும் மணமக்களைப் பார்க்கமுடியவில்லை. “சரி முதல்ல போய் சாப்பிட்டுட்டு வந்துருங்க. அப்புறம் பார்க்கலாம்” என்று கூறி அனுப்பிவைத்தார். மேலும் ஒரு இரண்டு மணிநேரம் அனைத்தையும் பரவசத்துடன் கவனித்துக்கொண்டிருந்துவிட்டு இரவு பதினோருமணி ஆனதும் ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம்.
மறுநாள் விடியற்காலை நாலரை மணிக்கே கார் வந்துவிட்டது. நாலேமுக்கால் மணிக்கெல்லாம் மண்டபத்தில் இருந்தோம். கொடீசியா வளாகத்தினுள் அந்த விடியற்காலை நேரத்தில் புல்தரையில் பார்த்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. நூற்றுக்கணக்கான பேர் புல்தரையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர்.
எல்லாரும் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள்.
இரவு வரவேற்பு நிகழ்ச்சி முடித்துக்கொண்டு முகூர்த்தத்தையும் பார்த்துவிட்டுக் கிளம்பலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். இவர்களையெல்லாம் வெறும் ரசிகக்கண்மணிகள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொச்சைப்படுத்திவிட முடியாது. உறவுக்கார திருமணத்தில் கலந்துகொள்ள ஊரிலிருந்து வந்தோம். சந்தோஷமாக கலந்துகொண்டுவிட்டுத் திரும்புவோம் என்ற எண்ணத்துடன் இருந்தவர்களாகத்தான் அவர்கள் தென்பட்டார்கள். சிவகுமாருடைய ஒன்றுவிட்ட சகோதரர் திரு குமரேசன் முந்தைய இரவு சொன்னார். “முகூர்த்தத்திற்கு இத்தனைக் கூட்டம் வராது. உறவினர்கள் நெருங்கிய நட்பு வட்டம் என்று ஒரு ஆயிரம்பேர் மட்டும்தான் வருவார்கள். குறைந்த அளவில்தான் அழைத்திருக்கிறோம்” என்று. அவருடைய வார்த்தைப் பொய்த்துப்போனது. ஆறுமணிக்கெல்லாம் மொத்த அரங்கம் நிறைந்து வழியத்தொடங்கியது.
பொழுது புலர்வதற்கு முன்னரே முதல் விஐபியாக குடும்பத்துடன் வந்து அமர்ந்தவர் நடிகர் பிரபு. அதன் பின்னர் திரையுலகப் பிரபலங்கள் வரிசைக்கட்டினர். முந்தைய தினத்தைப்போல ஆகிவிடக்கூடாது என்பதற்காக நாங்களும் அறிவுமதி குடும்பமும் திருமணம் முடிந்த கையோடு மேடைசென்று மணமக்களை வாழ்த்திவிட்டு அமர்ந்துகொண்டோம். பத்துமணிவரை கூட்டம் முண்டியடித்துக்கொண்டு இருந்தது.
பகல் பனிரெண்டு மணிக்கு ரசிகர்களுக்கான மதிய விருந்து ஆரம்பித்தது. நாலாயிரம்பேருக்கு உணவு என்று மேலோட்டமாக சொல்லப்பட்டிருந்தாலும் இரண்டுமடங்காக குவிந்திருந்தது ரசிகர் கூட்டம்.
இதனையெல்லாம் இங்கே இவ்வளவு விரிவாகச் சொல்லுவதற்குக் காரணம் இருக்கிறது.இந்த நிகழ்ச்சிகளெல்லாம் இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் இரண்டு நடிகர்கள் நடத்தும் பிரமாண்ட ஆடம்பரமான விழா.. அவர்களின் பகட்டையும் பணபலத்தையும் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகள் என்பதாக இல்லாமல், தாங்கள் யாரால் இந்த அளவு உயர்ந்தோமோ....இன்றைய நிலைமைக்கு வந்திருக்கிறோமோ அந்த மக்களையும் அந்த உறவுகளையும் அந்த ரசிகர்களையும் மறந்துவிடாமல் அவர்களையெல்லாம் அழைத்து தங்கள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கவைத்து அவர்களின் மனம் குளிரவும் வயிறு நிறையவும் உபசரித்து அனுப்பும் ஒரு வாய்ப்பாக இதனை சிவகுமார் குடும்பம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியம்.
பகல் விருந்து வெறும் ரசிகர்களுக்கு என்பதை முன்கூட்டிய பத்திரிகைச்செய்தியாக ஆக்காமல் கோவையும் அதன் சுற்றுப்புறங்களையும் சேர்ந்த ரசிகர்களுக்குப் போய்ச்சேரும் செய்தியாக மட்டுமே உருவாக்கி ஒரு நல்ல விருந்தோம்பலை அதிக விளம்பரமில்லாமல் நடத்தி முடித்தார்கள்.
இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இது நடிக-ரசிகர் மனோபாவத்துடன் நடத்தப்படாமல் ‘நாம எல்லாரும் உறவுக்காரர்களே’ என்ற மனோபாவத்துடன் மட்டுமே நடத்தப்பட்டது என்பதுதான். அதனால்தான் அரங்கு நிறைந்த நடிக நடிகையர்கள் இருந்தும் தப்பித்தவறிக்கூட ஒரேயொரு தள்ளுமுள்ளோ, கூச்சல்குழப்பமோ, ரசிகர்களின் அத்துமீறலோ இல்லாமல் ஒரு குடும்பவிழாவில் எப்படிக்கலந்து கொள்வார்களோ அதே மனோபாவத்துடனும் அதே ஒழுங்குமுறையுடனும் அத்தனை ரசிகர்களும் அவ்வளவு கட்டுப்பாடு கடைப்பிடித்தனர். இது மிகவும் இயல்பாகவே அங்கே நடந்தேறியது என்பதுதான் ஆச்சரியப்படத்தக்க ஒன்று.
முகூர்த்த அரங்கில் பல சுவாரஸ்யங்களைப் பார்க்க முடிந்தது. ஒரு வயதான அம்மாளை அவருடைய மகன் “வாம்மா போவோம் எனக்கு வேலைக்கு நேரமாவுது” என்று அழைத்துக் கொண்டிருந்தான். அந்த அம்மாளுக்கு வந்ததே கோபம்....”ஏண்டா நேத்து சாயந்திரம் உம்பொண்டாட்டிய அழைச்சிகிட்டு வந்துட்டு சாவகாசமா எல்லாத்தையும் பார்த்துட்டு நடுராத்திரிக்கில்லா வூடு வந்து சேர்ந்தே? இப்ப நான் மட்டும் உடனே உங்கூட வந்துரணுமா? நா வரமாட்டேன். கடேசிவரைக்கும் எல்லாம் பார்த்துட்டுதான் வருவேன். நீ வேலைக்கி போனா எனக்கென்ன, போவாட்டி எனக்கென்ன?” அந்த அம்மாள் பிடிவாதமாக கிளம்ப மறுத்துவிட அந்த இளைஞன் செய்வதறியாமல் பேசாமல் உட்கார்ந்துவிட்டான்.
திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னை லீ ராயல் மெரிடியன் நட்சத்திர விடுதியில் சென்னைக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி இருந்தது. இங்கு உறவு மற்றும் நட்பு வட்டத்தைச் சிறிதாக்கி வெறும் பிரபலங்களுக்கான வரவேற்பு விழாவாகவே இந்த நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது. பிரபலங்களில் முதலாவதாக வந்தவர் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு. அடுத்து வந்தவர் சோ. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் வருகிறார் என்பதற்காக ஏகப்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. மெட்டல் டிடக்டர், போலீஸ் நாய்கள், பெண் போலீஸ் என பரபரப்பு நிலவிக்கொண்டே இருந்தது. திரைப்பட பிரபலங்களைத்தொடர்ந்து அரசியல் தலைவர்களும் வந்துகொண்டே இருந்தனர். ஸ்டாலின், வைகோ, ஆர்எம்வீ, நெடுமாறன் என்று வந்துகொண்டே இருக்க.....முதல்வர் வரவில்லை என்பது இரவு ஒன்பதரை வாக்கில்தான் தெரியவந்தது.
வரவேற்பில் சைவம்தான் இருக்கும் என்று நினைத்திருக்க அசைவமும் இருந்தது ஆச்சரியமான ஒன்று. பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில் இம்மாதிரியான விருந்துகளெல்லாம் சுவையாக இருக்காது. ஆனால் இங்கே உணவும் மிகமிக நன்றாக இருந்தது விசேஷம். நிறைய அயிட்டங்கள் இருந்தன. மெனு ஜோதிகா தீர்மானித்தது என்றார்கள்.
இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் ரேவதி கிருஷ்ணாவின் வீணைக்கச்சேரி. வீணை காயத்ரிக்கு அடுத்து திரையிசைப்பாடல்களை இத்தனை அழகுடன் வாசிப்பவர் இவர் ஒருவராகத்தான் இருக்கவேண்டும்.
அடுத்த நாள் காலைதான், தா.பாண்டியன் பேச்சின் சர்ச்சை தொடர்பாகத்தான் முதல்வர் வரவில்லை என்பதாகச் செய்திகள் கசிந்தன. பதினொன்றரை மணிவாக்கில் முதல்வர் அலுவலகத்திலிருந்து செய்தி ; ‘மாலை ஆறு மணிக்கு சிவகுமார் வீட்டிற்கு முதல்வர் வருகிறார்’
முதல்வர் ஜெயலலிதா சிவகுமார் வீட்டிற்கு வந்ததும் மணமக்களை வாழ்த்திச்சென்றதும் எல்லாருக்கும் தெரிந்த செய்தி. ஏதோ காரணத்தால் திருமண விழாவுக்கு வரமுடியாமல் போய்விட்டாலும் வீடு தேடிவந்து வாழ்த்திச் சென்றது ஜெயலலிதாவின் பெருந்தன்மையாகவும் சிவகுமார் மீது கொண்டுள்ள நட்புக்கும் மதிப்புக்கும் அடையாளமாகவும் இருக்கலாம்.
கோவையில் நடந்த விழாவும் சரி; சென்னையில் நடந்த வரவேற்பும் சரி; ஒரு மாநில முதல்வர் வீடுதேடிவந்து வாழ்த்திச்சென்ற வைபவமும் சரி ஒன்றைத்தான் சுட்டுகிறது.
கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தோமென்றால் தமிழகத்தில் மிகவும் மரியாதைக்குரிய குடும்பமாக இருந்தது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பம்தான். மற்ற பிரபலங்களெல்லாம் தனிப்பட்ட முறையில் பிரபலமாக இருந்தார்களே தவிர அவர்கள் குடும்ப ரீதியாக பிரபலமாக இருந்ததில்லை. திரைப்பட முன்னணியினர் மட்டுமல்ல அரசியல்தலைவர்களின் குடும்பங்களும் இன்றைக்கு இந்தப் பட்டியலில் வரமுடியாது. ரொம்பவும் யோசித்தால் ஒரு ஐந்து குடும்பங்களை ‘இன்றைய மரியாதைக்குரிய குடும்பங்கள்’ என்று பட்டியலிடலாம்.
அப்படிப்பட்ட மரியாதைக்குரிய குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் நடந்த இனிமையான மகிழ்வான நிகழ்வு இது.