சமீபத்தில் வினவு தளத்தில் ‘ரங்கராஜ் பாண்டேக்களைப் பட்டி பார்க்க
பழ.கருப்பையாக்களால் முடியாது’ என்ற பெயரில் பதிவொன்று வந்திருந்தது. மேலோட்டமாகப்
பார்த்தால் இந்தப் பதிவு சரியானதுபோல் தோன்றினாலும் அந்த நேரலையையே திரும்பவும் போட்டுப்
பார்த்தால் பழ.கருப்பையாவின் தாக்குதல்களுக்கு வினையாற்ற முடியாமல் ரங்கராஜ் பாண்டே
சோர்ந்து போவதையும், முகம் சுருங்கிப்போய் உட்காருவதையும் ‘நான் எதுவும் உங்களைக் கேள்வி
கேட்கப்போவதில்லை. நீங்களே பேசுங்கள்’ என்று ஜகா வாங்குவதையும் பார்க்கமுடியும்.

பழ.கருப்பையா ஏதோ அந்த நேரலைப் பிடிக்காமல் பாதியிலேயே எழுந்துபோவதுபோல்
தோற்றம் கொண்டுவர அவர்கள் முயன்றிருந்தபோதிலும்- சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிமுடித்துவிட்டு,
பேசவேண்டியதையெல்லாம் பேசி முடித்துவிட்டு, பாண்டே போன்றவர்களை என்னென்ன கேட்கமுடியுமோ
அத்தனையும் கேட்டுவிட்டு, அவர்களை என்னென்ன விமரிசிக்க முடியுமோ அத்தனையையும் விமரிசித்துவிட்டு
பழ.கருப்பையா கம்பீரமாக எழுந்து வருவதையும் பார்க்கமுடியும்.
‘அதிமுகவில் சென்ட்ரலைஸ்ட் ஊழல்னு சொல்றேன். அதுபற்றிப் பேசமாட்டேங்கறீங்க.
அதன் ‘பில்லர் ஜெயலலிதா’ன்னு சொல்றேன். அது தொடர்பான பேச்சை வளர்க்க மாட்டேங்கறீங்க.
என்னுடைய தொகுதியில் நடைபெற்ற மைதான விவகாரத்தையும், பர்மா பஜாரில் கழிவறைக் கட்டமுடியாமல்
போனது பற்றியும் கவலைப்பட மாட்டேன்றீங்க. நான் எந்தக் கட்சியில் இருந்தேன் என்பதுதானா
பெரிய விஷயம்? முக்கியமான விஷயம் என்னவோ அதுக்கு வாங்க. நான் இன்னமும் நூறு கட்சிகூடப்
போவேன். அது வேறு விஷயம்’- என்று பொட்டில் அடித்தாற்போல் பேசினார் பழ.கருப்பையா.
பழ.கருப்பையா போன்ற இலக்கிய ஜாம்பவான்களுடனெல்லாம் ரங்கராஜ்
பாண்டே போன்றவர்களின் விவாதத் திறமைகளெல்லாம் உறைபோடக் காணாது.
ரங்கராஜுக்கெல்லாம் மாஃபா பாண்டியராஜன்களும், பண்ருட்டி ராமச்சந்திரன்களும்தான்
சரிப்பட்டு வருவார்கள் என்பதைப் பறைசாற்றிய நேரலை அது.
ரங்கராஜ் பாண்டே தன்னுடைய பேச்சில் அடிக்கடி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
அதாவது, யாரைப் பேட்டி காணுகிறாரோ அவர் சொல்லுவதையெல்லாம் அப்படியே கேட்டுக்கொண்டு
உட்கார மாட்டாராம்.
அப்படியிருந்தால் அது வந்திருப்பவர்களின் ‘உரை’ யாகிவிடுமாம்.
உரைக்கு இங்கே இடமில்லையாம்.
உரையாடல் நடத்துவதுதான் அவர்கள் நோக்கமாம்.
உண்மையில் மிகவும் நல்ல நோக்கம். அவர்கள் ‘அப்படிப்பட்ட’ உரையாடலை
எல்லாரிடமும் நடத்துவதாக இருந்தால்.
ஆனால் ரங்கராஜ் பாண்டேக்களின் ‘நோக்கம்’ அதுவாக இல்லை. ‘வேறுமாதிரியானதாகவே’
இருக்கிறது.
ஜெயலலிதாவை ஆதரித்துப்
பேசுகிறவர்கள் என்ன சொன்னாலும் அது வெறும் உரையாகவே இருந்தாலும் பதினாலு மணிநேரத்திற்கும்
கேட்டுக்கொண்டு இருப்பது; ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசுகிறவர்கள் எவராயிருந்தாலும் முதல்
வார்த்தையிலேயே அதனை திசை திருப்பி அவர்களை மேற்கொண்டு ஒற்றை வார்த்தைக்கூடப் பேசவிடாமல்
செய்து இவர்கள் கேட்கும் ‘ஙொப்புரானக் கேள்விக்கெல்லாம்’ அவர்கள் பதில் சொல்லவேண்டும்
என்று எதிர்பார்ப்பது………………
இதுதான் கேள்விக்கென்ன பதில் பகுதியிலும் நடக்கிறது;
நேருக்கு நேர் பகுதியிலும் நடக்கிறது.
புதிய தலைமுறையின் ஆயுத எழுத்து பகுதியிலும் நடக்கிறது.
அரசியல்வாதிகள் ‘உரை நிகழ்த்துவது’ எப்படி நேயர்களுக்கு சுவாரஸ்யம்
தராதோ, அதைப் போலவே நெறியாளர்கள் வெறுமனே கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதும்
நேயர்களுக்கு சுவாரஸ்யம் தராது என்பதை இந்த சேனல்களும் சரி - ‘நெறியாளர்களும்’ சரி
-தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆயுத எழுத்து, நேருக்கு நேர் என்றெல்லாம் தலைப்பு வைத்துக்கொண்டு
இவர்கள் யாராவது ஒருவரைக் கூப்பிட்டு வைத்துக் ‘குடைந்துகொண்டிருப்பதற்குப்’ பெயர்தான்
செவ்வி அல்லது பேட்டி அல்லது நேர்காணல் என்றால் –
அதற்குபதில் ‘இன்றைக்கு நாங்கள் அதிமுகவைக் கேட்கிறோம்; இன்றைக்கு
நாங்கள் திமுகவைக் கேட்கிறோம்’ என்று நிகழ்ச்சி வைத்து அங்கே பிரமுகர்களுக்கு பதில்
சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களின் போட்டோவை வைத்துவிட்டு ரங்கராஜ் பாண்டேவோ, ஹரிஹரனோ,
கார்த்திகைச் செல்வனோ உட்கார்ந்து ஒரு மணி நேரத்திற்கும் சரமாரியாய்க் கேள்விகளை மட்டும்
வீசிக்கொண்டே இருக்கலாம்.
ஆமாம் வெறும் கேள்விகளை மட்டும்……!
நிகழ்ச்சிக்கு ‘கேள்வி நேரம்’ என்று சூப்பரான தலைப்பும் வைக்கலாம்.
அப்படியில்லாமல் இவர்கள் நேரலை என்றும் விவாதங்கள் என்றும் வைத்துக்கொண்டு
பலதரப்பட்டவர்களையும் கூப்பிட நினைத்தால் பழ.கருப்பையா அனுபவம் மட்டுமல்ல, அப்பாவு
அனுபவமும், மனுஷ்யபுத்திரன் அனுபவமும் நேரத்தான் போகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்.
இவர்களுக்கெல்லாம் யார் ஆப்பு வைக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்தபடி
இருந்தது நடந்தே விட்டது. ஆரம்பத்தில் இந்த விளையாட்டை இவர்கள் தினசரி தாங்கள் நடத்தும்
விவாதங்களில் கடை பரப்புவார்கள்.
அதுவும் மாதக்கணக்கில் யாரும் கவனிக்கப்படாமலேயே ஓடிக்கொண்டிருந்தது.
இந்த நெறியாளர்களின் பாச்சாவும் சரி; இவர்களுக்கான நிலைய வித்வான்களின்
பாச்சாவும் சரி பிரசன்னாவிடம் பலிக்கவில்லை. இதுபற்றி நானே ஒரு பதிவும் எழுதியிருந்தேன்.
அந்தப் பதிவுக்கான எதிர்வினை பிரமாதமாக இருந்தது.
எல்லாரிடமும் ஒரு தெளிவு பிறந்தது.
இனி இந்த நெறியாளர் என்ற பெயரில் உட்காரும் நரியாளர்களின் குயுக்திகளுக்குப்
பணிவதில்லை என்ற உணர்வு எல்லாரிடமும் வந்தது. குறிப்பாகத் திமுக சார்பாகப் பேசவந்தவர்களிடம்
அதிகமாகவே வந்தது. தங்களுக்கான முறை வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர் சிவ
ஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும், அப்பாவுவும்.
‘அதிமுக மீது தவறு என்கிறாயா? அதிமுக தவறு செய்தது என்று சொல்.
அதை விட்டுவிட்டு இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான் திமுக இதனைத் துவங்கி வைத்தது.
அதிமுகவும் அதன் வழியே போய்க்கொண்டிருக்கிறது என்ற தொனியிலேயே பேசாதே’ என்று திட்டவட்டமாகத்
தெரிவித்தனர்.
‘இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான்’ என்று மொடாக்குடியர்களைப்போல்
பேசிப் பழகியவர்களின் சுருதி சற்றே இறங்க ஆரம்பித்தது.
நெறியாள ‘மகாப்பிரபுக்கள்’ கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கமாகப்
பார்த்தபிறகுதான் அவர்களின் வழக்கமான டயலாக்குகளை அவிழ்க்க ஆரம்பித்தனர்.
ஏனெனில் இளையவர்களான சிவஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும் மாத்திரமல்ல
அப்பாவுவும் இவர்களைப் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்தார். எல்லா விஷயங்களிலும் மிகவும் நிதானமாகவும் கண்ணியத்துடனும் பேசும் வழக்கறிஞர் கண்ணதாசனைப் போன்றவர்களின் கோபத்திற்கு இவர்கள் எப்போது ஆளாகப் போகிறார்களோ தெரியவில்லை.
‘எங்களைப் பேசவிடு; பேசிய பிறகு கேள்வி கேள். கேள்வியைக் கேட்டுவிட்டு
அதற்கு பதில் சொல்லத் துவங்குவதற்குள் மளமளவென்று பத்துப் பதினோரு கேள்விகள் கேட்டால்
என்ன அர்த்தம்? அதிமுக சார்பாகப் பேசுபவர்களை நீ அப்படி மடக்குகிறாராயா?’ என்று நெறியாள
‘மகாப்பிரபுக்களைப்’ பார்த்து சிவஜெயராஜனும் அப்பாவுவும் கேட்க ‘மகாப் பிரபுக்கள்’
பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
‘சரி சொல்லுங்க’ என்று விட்டுக்கொடுத்து விட்டேற்றியாய் மவுனம்
காத்தனர்.
திமுகவைக் கேள்வி கேட்கக் கூடாது என்பது அல்ல. கேள். தாராளமாகக்
கேள். ஆனால் அதிமுக தவறு செய்தது என்பதைச் சொல்லும்போது ‘திமுக மட்டும் அதே தவறைச்
செய்யவில்லையா?’ என்று கேட்டு அதிமுக செய்த தவறை நீர்த்துப் போனதாகக் காட்டி அதிமுகவின்
அந்தத் தவறுக்கும் திமுக மீதே பழிபோட்டுத் தப்பிக்க வைப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி?
என்ன கயவாளித்தனம் இது?
“இன்னமும் எத்தனை யுகங்களுக்கு இவன்கள் யார் எந்தத் தவறு செய்தாலும்
உதயகுமார் மரணத்தையும், மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தையும், 2ஜி ஊழலையும் மட்டுமே
சொல்லிக்கொண்டு எல்லா தவறுகளையும் நியாயப்படுத்திக்கொண்டே இருக்கப்போகிறான்கள்?” என்று
கேட்டார் நண்பர் ஒருவர்.
அந்த நண்பருக்கு என்னிடம் பதில் இல்லை.
இந்தப் பெரிய சம்பவங்களை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.
ஒரு விவாதத்தில் முத்துக்குமாரசாமி என்ற பொறியாளர் ரயில்முன்
பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தவறு என்று சொல்லி வாதாட முன்வந்தபோது,
உடனே அதனை இடை மறித்த ரங்கராஜ் “உங்களுக்கு சத்யநாராயணா என்பவர் திமுக ஆட்சியில் தற்கொலை
செய்துகொண்டு செத்துப்போனது தெரியுமா?” என்று கேட்டு இடை மறித்தபோதுதான் இந்த நெறியாள
சண்டியர்கள் எந்தத் தவறையும் ‘நியாயப்படுத்தும்’ வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பதற்கு
‘மந்திரித்து விடப்பட்டிருக்கிறார்கள்’ என்ற உண்மை புரிந்தது.

பல தவறுகள் நடைபெற்றன. அதனால்தான் அதற்கான தண்டனை திமுகவுக்கு
வழங்கப்பட்டது.
திமுக தோற்கடிக்கப்பட்டது.
பல தவறுகளால் ஒரு கட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு அடுத்துவந்த
அரசியல் கட்சி அதுபோன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொள்வதுதானே
ஒரு அறம்சார்ந்த ஊடகத்தின் பணியாக இருக்கமுடியும்?
எந்தத் தவறு எங்கே நடந்தாலும் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி
‘இப்படியொரு தவறு நடந்ததனால்தானே அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அதே போன்ற தவறை நீ
எப்படிச் செய்யலாம்? என்று கேள்வி எழுப்புவதுதானே நியாயத்தின் பால் நிற்கும் ஊடகம்
செய்யவேண்டிய காரியம்?
அதிமுக அதுபோன்ற தவறுகளைச் செய்யும்போது கண்டிக்கவேண்டுமா? வேண்டாமா?
ஏதோ ஒரு பெயரில் கதாகாலாட்சேபம் உருவாக்கி கீர்த்தனாம்பரத்திலே
திமுக இந்தத் தவறைச் செய்தது, ஜெயலலிதா வாழ்கவாழ்க; ஆதி காலத்திலே மு.க. இப்படியொரு
தவறைச் செய்தார் ஜெயலலிதா வாழ்கவாழ்க; திரேதா யுகத்திலே கருணாநிதி இதே தவறைச் செய்தார்,
ஜெயலலிதா வாழ்கவாழ்க; போன ஆட்சியிலே திமுக இந்தத் தவறைச் செய்தது அம்மா வாழ்க வாழ்க;
என்று பஜனைப் பாடிக்கொண்டிருப்பதற்குப் பெயர் ஊடக விவாதங்களா?
இந்த மகாப்பிரபுக்களின் சிந்தனையெல்லாம் வேறுவகைப் பட்டது.
யார் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள். அது எத்தனை யுகங்களுக்கு
வேண்டுமானாலும் நடக்கட்டும்….. நீடிக்கட்டும்.
எப்படியாவது தோண்டி, எங்கிருந்தாவது துருவி ‘திமுக இதற்கு முன்னரே
இதே போன்ற தவறைச் செய்திருக்கிறது’ என்பதை நாங்கள் நிரூபித்துவிடுகிறோம். அதற்கான தரவுகள்
எங்களிடம் உள்ளன. அதற்கேற்ப பேசுவதற்குப் பழக்கப்பட்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.
நீங்கள் தவறுகளைத் தொடருங்கள்’ என்ற சித்தாந்தம் மட்டுமே இந்த
சேனல்களின் பிழைப்பாக இருக்கிறது.
கலைஞரின் மீதான எதிர்ப்பும் வெறுப்பும் இவர்களிடம் எந்த அளவுக்குப்
புரையோடிப்போய் இருக்கிறது என்பதற்கு சமீபத்திய
உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாம்.
ஒருவிழாவிலே ஜெயலலிதா ஒரு குட்டிக்கதையைச் சொன்னார். ஜெயலலிதா
சொன்ன கதையை வைத்துக்கொண்டு ஸ்டாலினையும் கருணாநிதியையும் ஒருநாள் முழுக்க கேலியாகவும்
கிண்டலாகவும் சித்தரித்து பிழைப்பை ஓட்டிவிட்டார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அடுத்து வந்தது குட்டிக்கதைக்கான பதில். பதில் சொன்னவர் கலைஞர்.
‘அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோல குட்டிக்கதைகளைக்
கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்’ என்று ஜெயலலிதாவை லேசாக ஒரு
தட்டுத்தட்டிவிட்டு ஆரம்பிக்கிறார் கலைஞர்.
‘எந்த பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை
விரும்பமாட்டார். அது குடும்பம் நடத்தும், பிள்ளை பெற்றவர்களுக்குத் தெரியும்’ என்று
எடுத்த எடுப்பில் ஒரு போடு போடுகிறார்.
‘அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து படிப்படியாக மேலே
வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். எப்படியோ அடித்த காற்றில் மேலே வந்து கோபுரக்
கலசத்தில் ஒட்டிக்கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச் சொல்லத்தான் தெரியும்’ என்கிறார்.
இந்த இடத்தில் ஆரம்பித்து விடுகிறது. ரங்கராஜ் பாண்டேக்களுக்கு
அஸ்தியில் ஜூரம்.
இந்தக் கதையைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் இந்தக்
கதைக்கு பதில் சொல்லாமல் ஒதுங்கியிருந்திருக்கலாம்; கவுரமாக இருந்திருக்கலாம்; தன்னைத்
தரம் தாழ்த்திக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஜெயலலிதாவை ஆப்பசைத்த குரங்கைப்போல் ஏமாறப்போவது
நிச்சயம் என்கிறார்., ரத்தம் குடிக்கக் காத்திருக்கிறார் என்கிறார்……….’ இப்படியெல்லாம்
அவ்வளவு கீழே போயிருக்கக் கூடாது. தன்னுடைய தரத்தை இவ்வளவு கீழே இறக்கியிருக்கக் கூடாது’
என்று எப்படி எப்படியோ விமர்சித்து கீழே விழுந்து அழுது புரள்கிறார் ரங்கராஜ்பாண்டே.
கலைஞர் தொடர்கிறார். ‘உண்மையில் கதை என்ன தெரியுமா? தந்தையும்
மகனும் அன்போடும் பாசத்தோடும் இருப்பதையும் அரசியலை முழுமையாக நடத்துவதையும் கவனித்துவந்த
எதிர்வீட்டுப் பெருமாட்டிக்குப் பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை. அந்த அம்மையாருக்குப்
பிள்ளையும் கிடையாது. குட்டியும் கிடையாது. ஆனால் குடும்பமே எனக்கு இல்லையென்று சொல்லிக்கொண்டே
ஊரிலே உள்ள சொத்துக்களையெல்லாம் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள படாத பாடு படுவார். மலைப்பிரதேசங்களில்
எல்லாம் தேயிலை எஸ்டேட்டுகளை வாங்கிவைத்துக்கொண்டு நாடாறு மாதம் காடாறு மாதம் என்பதைப்போல்
மாளிகையிலும், அரண்மனையிலும் ஓய்வெடுத்துக்கொண்டு காலம் தள்ளி வருபவருக்கு எதிர் வீட்டில்
தந்தையும் மகனும் பாசத்தோடு இருப்பது பிடிக்குமா? அல்லது பொறுக்குமா? எப்போது தந்தை
மகன் ஆகியோருக்குத் தகராறு வரும், பிளவு வரும், நாம் ரத்தம் குடிக்கலாம் என்று காத்திருக்கும்
எதிர் வீட்டுச் சீமாட்டி ஆப்பசைத்த குரங்கைப்போல ஏமாறுவது நிச்சயம்.
கதையில் வரும் பேராசைப் பெருமாட்டியைப் பற்றித்தான் நான் இங்கே
விளக்கினேன்.’ என்று கதையை முடித்திருக்கிறார். கலைஞரின் கதை முடிந்து விடுகிறது.
ரங்கராஜ் பாண்டேக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த பதில் வருமென்று ரங்கராஜ் பாண்டேக்களுக்கு மட்டுமல்ல, சாதாரண
குப்பன் சுப்பன்களுக்கும் தெரியும்.
யாரோ எழுதிக்கொடுத்ததைப் படிக்கும் ஜெயலலிதாவே அவ்வளவு கிண்டலடிக்கிறார்
என்றால், ‘சொந்தமாய்’ எழுதி பதிலளிக்கப்போகும் கலைஞரின் பதில் ஜெயலலிதாவை எப்படியெல்லாம்
பதம் பார்க்கும் என்ற விஷயமும் முனியன்களுக்கும் தெரியும், முகேஷ்களுக்கும் தெரியும்.
தவிர கலைஞரின் எழுத்தைப் புரிந்தவர்களுக்கு அவர் எம்மாதிரி விஷயங்களுக்கு
எம்மாதிரி எழுதுகிறவர் என்ற அடிப்படை சூட்சுமங்களும் புரியும்.
வாயைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு
புத்தி சொல்லுவதை விட்டுவிட்டு-
கலைஞரைப் போல் கைதேர்ந்த ஒரு படைப்பாளிக்குப் பாடம் சொல்லவந்துவிட்டார்கள்
இந்தப் பரப்புரை வியாபாரிகள்.
இந்த விஷயமும் இணையத்தில் இப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆசிரியராகவும், ஒரு கவிஞராகவும், தொலைக்காட்சி
விவாதங்களில் ஒரு வெற்றிகரமான பங்கேற்பாளராகவும் தன்னை சமூகத்தில் நிரூபித்துக்கொண்டுவிட்ட
பின்னர் தமக்கொரு அங்கீகாரம் தேடிக்கொள்வதற்காக ஒரு அரசியல் கட்சியில் இணைகிறார்.
அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் அவர் அரசியல் கட்சியில் இணைந்தார் என்பதற்காகவே அவரை தரக்குறைவாக
விமர்சிப்பதும் பேசுவதும் கண்ணியத்திற்குரியதாக இல்லை.
சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்துகொண்ட
மனுஷ்யபுத்திரன் பழ.கருப்பையாவைப் போலவே ‘பட்டிபார்க்கும் வேலையை’ வெற்றிகரமாகச் செய்துவிட்டுப்
போனார் என்பதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சில கட்சிகள் ஒன்றுசேர்ந்து
வரப்போகும் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள்.
இவர்கள் ஒன்றும் நேற்றைக்குத் தொடங்கபட்ட புதிய இயக்கங்களோ புதிய
கட்சிகளோ கிடையாது.
இந்த இயக்கத்தில் சகாயங்களோ குறைந்தபட்சம் புதிய சிந்தனைகளை
விதைக்கும் சுப.உதயகுமார்களோ கூட இல்லை.
எல்லாரும் எல்லாக் கட்சிகளிலும் பழம் தின்று கொட்டைப்போட்ட பழைய
நீர்த்துப்போன அரசியல்வாதிகள்தாம்.
இருக்கின்ற எல்லாக் கட்சிகளிலும் ஏதாவதொரு சமயத்திலோ பல சமயங்களிலோ
கூட்டணி வைத்து எல்லாப் பந்திகளிலும் நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுந்து போனவர்கள்தாம்.
ஆனால் இவர்களை திடீரென்று ஆதரிக்கத் துவங்கியிருக்கின்றன இன்றைய
ஊடகங்கள்.
காரணம் இவர்களுக்கு இருக்கும் சித்தாந்தம்தான்.
அதாவது திமுகவைப் போட்டுத் தாக்குவது.
அதிலும் எல்லா மகாப்பிரபுக்களைப் போலவும் அதிமுகவை ஒப்புக்காகவும்,
திமுகவை மரண அடி அடிக்கிறமாதிரியாக கடுமையாகவும்- மிகமிகக் கடுமையாகவும் விமர்சித்துத்
திட்டித் தீர்ப்பது.
அந்த விவாதத்திலே மொத்தம் 4 பேர். மனுஷ்ய புத்திரனுக்கு கிட்டத்தட்ட
நான்கு பேரின்- முன்னாள் எம்பி சுப்பராயன், ஆளூர் ஷாநவாஸ், ஷேக்தாவூத், ப.கோலப்பன்
என்ற பத்திரிகையாளர் மற்றும் கார்த்திகைச் செல்வன் என்ற நான்குபேர்… அத்தனைப்பேருமே
நேரடியாக அல்லது மறைமுகமாக ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்..
இவர்களுடைய கருத்துகளுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு மனுஷ்யபுத்திரனுக்கு
மட்டுமே இருக்கிறது.

திமுக பிரதிநிதிகளைப் பேசவிடாமல் செய்வதும் ஒருவார்த்தைப் பேசத்
துவங்குவதற்குள் பல நூறு கேள்விகள் கேட்பதுமாக இவரின் ‘முன்னோர்களிடமிருந்து’ மிகச்
சுலபமாக ‘நெறியாளர் கலையைக்’ கற்றுத் தேர்ந்தவர்.
இத்தகைய அமைப்பில் இவர்கள் மனுஷ்யபுத்திரனை நோக்கி சரமாரிக்
கேள்விகளை வீசி அவர் பதில் சொல்லாமல் தவித்துப்போகவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்களோ
என்னவோ வழக்கம்போல் அவர்களின் ‘மூன்றரை ஆண்டுக்கால பாணியில்தான்’ விவாதத்தை ஆரம்பித்தனர்.
ஆனால் மனுஷ்யபுத்திரனின் ‘எதிர்கொள்ளல்’ வேறு மாதிரி அமைந்துவிட்டது.
மக்கள்நலக்கூட்டணியினரையும் சரி, கார்த்திகைச் செல்வனையும் சரி போட்டுத் தாளித்து எடுத்துவிட்டார்
மனுஷ்யபுத்திரன்.
இவர்களின் எந்தக் குறுக்கீட்டிற்கும் பலியாகவில்லை அவர். இவர்
பேச அவர்களும் பேச இவரை எப்படியாவது வாயடைத்து உட்காரவைத்துவிட அவர்கள் செய்த முயற்சி
இறுதிவரை பலிக்கவே இல்லை.
குழாயடிச் சண்டையில் இருவர் அல்லது மூவர் நால்வர் என்று பேசியபோதும்
தமது கருத்துக்களைத் தெரிவிப்பதில் சளைக்காமல் இருந்து சாதித்தார் மனுஷ்யபுத்திரன்.
சில விஷயங்கள் புரிபடாமல் போய்விட்டனவே தவிர மற்றவர்களின் வாதங்களை விடவும் மனுஷ்யபுத்திரன்
வாதங்கள் அதிகம் புரிந்தன.
இவருக்கும் ஆளூர் ஷாநவாஸுக்கும் நடந்த வாக்குவாதம்போல் தோன்றினாலும்
மொத்த விஷயங்களையும் ஒருங்கிணைத்துத்தான் பதில் சொன்னார் மனுஷ்யபுத்திரன். (விவாத பங்கேற்பாளர்களில்
ஆளூர் ஷாநவாஸைப் பற்றி எனக்கு வேறு நல்ல மதிப்பீடுகள் உள்ளன என்பது வேறு விஷயம்)
மனுஷ்யபுத்திரனின் பல வாதங்கள் சிந்தனைக்குரியவை. அவர் எடுத்துவைத்த
ஆணித்தரமான வாதங்கள் சில;
1)‘அதிமுக தன் அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க
முடியாமல் ஓடி ஒளிகிறது. அவர்கள் கட்சிகளிலிருந்து
யாரையும் பதில் சொல்ல அனுப்பாமல் சில proxyகளை அனுப்புகிறது. மக்கள்நலக் கூட்டணியினருக்கும்
அதிமுக பிராக்சிகளுக்கும் நாங்கள் தினமும் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?’
2)‘ஒரு ஆளும் கட்சியின் நாலரை ஆண்டுக்கால மக்கள் விரோதக் குற்றச்
செயல்களைப் பேசவேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சியான திமுகவைக் குறிவைத்துத் தாக்குவதன்
நோக்கம் என்ன?’
3)‘விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலைஞரை
தலித்துகளின் கடவுள் என்றாரே எந்த உணர்வின் அடிப்படையில் அது சொல்லப்பட்டது?’
4)‘திமுகவின் சமூகநீதிக்கான போராட்டங்களை, சாதனைகளை அத்தனை எளிதில்
நீங்கள் கடந்துசென்றுவிட முடியுமா?’
5)‘இன்று ம.ந.கூவை திடீர்ப் பாசத்துடன் ஆதரிக்கும் நடுநிலை ஊடகங்கள்
எப்போதாவது விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களைக் கண்டுகொண்டதுண்டா?
ம.ந.கூ மேல் ஏன் இந்த திடீர்ப் பாசம்?’
6)‘பாஜகவுக்கு ஒரு போலியான முக்கியத்துவத்தை ஊடகங்கள் உண்டாக்கி
அதன் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று அணிகள் உருவாக்கப்பட்டதுபோல் இப்போதும்
செயல்படவேண்டிய ரகசியமென்ன? அப்போது மூன்றாவது அணி அதிமுகவுக்கு ரகசியமாக உதவியதுபோல்
இந்த அணியும் உதவும் என்பதுதானே?’
7)‘கடந்த காலம் முழுக்க மாறி மாறி கூட்டணி அமைத்தவர்கள் ஆறு
மாதத்திற்கு முன்பு ஆட்சியில் பங்கு கேட்டு அதற்கான ரெஸ்பான்ஸ் இல்லையென்றதும் மாற்றத்திற்கான
புதிய சக்தி என்பது யாரை ஏமாற்ற?’
8)‘மக்கள் நலன் சார்ந்து அப்படி இவர்கள் நடத்தி பெரும் தாக்கத்தை
ஏற்படுத்திய போராட்டங்கள் என்னென்ன?’
9)‘மக்கள்நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்
வாக்குவங்கி உள்ள கட்சி. இடதுசாரிகளுக்கோ வைக்கோவுக்கோ வாக்குவங்கி என்ன என்பது ஊரறிந்த
ரகசியம்’ – என்ற மனுஷ்யபுத்திரனின் சரமாரியான கேள்விகள் அதிகம் கவனம் பெறவேண்டியவை.
மக்கள் நலக்கூட்டணியை ஒரு புறத்தில் வைப்போம்.
அதாவது அதிமுக சென்ற நாடாளுமன்றத்தில் வாங்கிய அதே வாக்குகள்
வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலிலும் அதிமுகவுக்கு வரும் என்ற ஒரு வாதத்தை ‘ஊடக மகாப்பிரபுக்கள்’
திரும்பத் திரும்ப முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வாதம் என்பது-
அதிமுக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகிதம் வாக்குகள்
பெற்றன என்பது அவர்கள் கூற்று.
தேர்தல் வெற்றியையும், கோர்ட்டு தீர்ப்புகளையும் கண்களை மூடிக்கொண்டு
ஏற்றாக வேண்டிய சமூகத்தில் இருக்கிறவர்கள் நாம். அதிமுக வெற்றி பெற்ற கட்சி என்பதனால்
44 சதவிகிதம் என்பதை ஏற்றுக்கொள்வோம்.
இந்த 44 சதவிகிதம் எப்படி வந்தது?
அதாவது இந்தியா முழுமைக்கும் மோடி அலை வீசிற்று. மோடிதான் பிரதமர்
என்ற எண்ணம் இந்தியா பூராவும் விதைக்கப்பட்டது.
அதனால் இந்தியா முழுமைக்குமான பெருவாரியான ஓட்டுக்கள் மோடிக்கு
ஆதரவாக விழுந்தன.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வேறொரு சிந்தனைதான் பலமாக எழுப்பப்பட்டது.
பாஜகவுக்குத் தமிழகத்தில் வேர்கள் இல்லை. அதனால் மோடிக்கு ஆதரவான
வாக்குகள் தமிழகத்தில் ‘வருவதற்கு’ வாய்ப்பில்லை. காங்கிரஸில் தகுந்த ஆள் இல்லை. அதனால்
காங்கிரஸ் நாடாளுமன்றத்தேர்தலில் ‘கணக்கிலேயே’ இல்லை.
ஆகவே, வேறொரு சிந்தனையும், வேறொரு செயல்திட்டமும் இங்கே முன்வைக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளில்
யாருக்கும் மெஜாரிடி கிடைக்காது.
அப்படி எல்லாக் கட்சிகளுக்கும் மெஜாரிடி இல்லாமல் போகும்போது
தமிழகத்தின் அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று போகும் ஜெயலலிதாவைத்தான் மற்றவர்களும்
பிரதமர் பதவிக்கு முன்நிறுத்துவார்கள் என்ற சிந்தனை இங்கே விதைக்கப்பட்டது.
ஆம் மிக வலுவாக விதைக்கப்பட்டது.
அப்படி ஒரு நிலைமை வந்தால் அதில் ஜெயலலிதா தம்மை ‘எப்படியாவது
முன்னிறுத்திக் கொள்வார்’- என்றே தமிழன் நினைத்தான்.
அந்த சிந்தனையை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா
தம்மைத் தாமே வேட்பாளராக நிறுத்திக்கொண்டார்.
‘அடுத்த பிரதமர் தான்தான்’ என்பதைப் போகுமிடங்களில் எல்லாம்
சொல்லிவந்தார்.
‘எனக்கு ஓட்டுப் போடுங்கள் நான் பிரதமராக வருவேன்’ என்றார்.
அதிமுக பேச்சாளர்கள் அத்தனைப்பேரும் ‘அம்மாதான் அடுத்த பிரதமர்’
என்றே உரக்கக் கூவினர்.
இந்தக் கூவல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்படிப் பார்த்துக்கொண்டனர்.
முப்பத்தெட்டுப்பேர் அல்லது முப்பத்தொன்பது அதிமுகவினர் எம்பிக்களாக
வந்தால் எப்படி ஒரு கட்சியின் தலைவர் பிரதமராக வரமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு தேவேகௌடா உதாரணமாகக் காட்டப்பட்டார்.
இருபது சொச்சம் எம்பிக்களை வைத்துக்கொண்டிருந்த தேவேகௌடாவே
–
இந்த ‘வே’ ஒரு முக்கியமான ‘வே’. ஆமாம், தேவேகௌடா’வே’ பிரதமர்
ஆகும்போது
அம்மா ஆகமாட்டார்களா?
என்ற சிந்தனை தமிழனின் மனதில் மிக ஆழமாக விதைக்கப்பட்டது.
அதனால் ‘அடுத்த பிரதமர் ஒரு தமிழர்’ என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு
அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டான் தமிழன்.
அதிமுகவின் 44 சதவிகிதம் என்பது இப்படி வந்ததுதான். இதற்காக
வந்ததுதான்.
ஆனால்-
மோடி தனி மெஜாரிடியில் வந்துவிட்டார் என்றதும் ‘அம்மா பிரதமர்’
என்ற செய்தியெல்லாம் மறக்கவைக்கப்பட்டது.
‘அப்படிச்சொல்லித்தான் 44 சத ஓட்டுக்கள் பெற்றார்’ என்ற விஷயம்
மூழ்கடிக்கப்பட்டது. அவர்களுக்குத் ‘தேவையென்னவோ’ அதனை மட்டும் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.
ஆமாம்-
அதிமுகவின் ஓட்டுவங்கி 44 சதம் என்பதை மட்டுமே தூக்கி நிறுத்தினார்கள்.
ஏனையச் செய்திகள் மிகமிக சவுகரியமாக மறக்கடிக்கப்பட்டன.
இதுதான் தமிழகம்.
ஆகவே ‘44 சதவிகித ஓட்டு’ என்பது ‘ஒரு தமிழன் பிரதமராக வருவதற்கு’
என்று மக்களை நம்பவைத்தால் சுலபமாக வரக்கூடிய சதவிகிதம்தானே தவிர,
குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஓட்டுவங்கி அல்ல.
இதனை அறிவார்ந்த மகாப்பிரபுக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து மதுவிலக்கு விஷயம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் இருந்தது
என்பதும் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மறுபடியும் மது கொண்டுவரப்பட்டது என்பதும் எல்லாருக்கும்
தெரியும். ஆனால் கருணாநிதியே மறுபடியும் மதுவிலக்கைக் கொண்டுவந்தார் என்ற விஷயத்தை
மட்டும் மறந்துவிடுவார்கள் இந்த ‘நன்மக்கள்’.
அப்படி கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கை மறுபடியும்
நீக்கியவர் மனிதப் புனிதரான எம்ஜிஆர் என்பது மட்டும் இவர்களுக்கு மிகச் சவுகரியமாய்
மறந்துவிடும்.
இதனைச் சொல்லாமலேயேதான் இவர்கள் தங்கள் வாதங்களை வடிவமைத்துக்கொள்வார்கள்.
யாராவது இவர்களை அதுபற்றிக் கேட்டுவிட்டால் (கவனியுங்கள். ‘கேட்டால்’
மட்டுமே)”சரி அப்படியே இருக்கட்டுமே. எம்ஜிஆர் நீக்கிய மதுவிலக்கை கருணாநிதி திரும்பவும்
ஆட்சிக்கு வந்தாரே அப்போது ஏன் கொண்டுவரக்கூடாது?” என்று எகத்தாளமான கேள்விகளை வீசுவார்களே
தவிர எம்ஜிஆர் ஏன் நீக்கினார் என்ற சின்னஞ்சிறு கேள்வியைக்கூட இவர்கள் கேட்கமாட்டார்கள்.
இந்த நன்மக்களுக்கு சிறிதாவது அறவுணர்வு இருந்தால் கருணாநிதி
கொண்டுவந்த மதுவிலக்கை எம்ஜிஆர் ஏன் நீக்கவேண்டும் என்பதுபற்றிக் கண்டித்துப் பேசிவிட்டு
– எம்ஜிஆர் மீது கண்டனக்கணைகளை வீசிவிட்டு-
கருணாநிதி திரும்பவும் நீக்கியிருக்கக்கூடாதா? என்றுதானே பேசவேண்டும்?
அந்த யோக்கியதையை எல்லாம் இந்த நன்மக்களிடம் எதிர்பார்க்கக்கூடாது.
இவர்களுடைய நோக்கம் கருணாநிதியைத் திட்டித்தீர்க்கவேண்டும் என்பதுதான்.
இந்த அரசாவது மதுவிலக்கைக் கொண்டுவரக்கூடாதா என்பது கேள்வி.
அதனைப் பாடலாகப் பாடிய கோவன் கைது செய்யப்படுகிறார். சசிபெருமாள்
என்ற பெரியவர் இதற்காகவே செல்போன் டவரில் ஏறி உயிரை விடுகிறார். இத்தகு விஷயங்களுக்காக
ஆட்சியிலிருக்கும் கட்சி கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டுமா இல்லையா?
இந்த இணையதள, தொலைக்காட்சி விவாத அரங்குகளை, பத்திரிகைகளைப்
பொறுத்தவரை ‘இல்லை’ என்பதும் ‘கூடாது’ என்பதும்தான் பதில்.
இதற்காக குற்றம் சுமத்தப்பட வேண்டியவர் கருணாநிதி.
கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர் கருணாநிதி.
ஏனெனில் அவர்தான் மதுவிலக்கைக் கொண்டுவந்தவர். ராஜாஜி சொல்லியும்
‘கேட்காதவர்.’

கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் மதுபான தொழிற்சாலையிலிருந்து
மது வருகிறதே அதை ‘முதலில்’ மூடச்சொல். என்பது இவர்களின் பதில்.
ஆளுங்கட்சி ‘மதுவிலக்கு’ கொண்டுவந்தால் கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்கள்
என்ன காளப்பனுக்கும் கோலப்பனுக்கும் வேண்டப்பட்டவர்களுடையதாக இருந்தாலும் அந்தத் தொழிற்சாலையும்
பாதிக்கப்படும்தானே?
அப்படி கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் தொழிற்சாலைகளுக்கும்
பாதிப்பு ஏற்படுத்தலாமே ஏன் அதனை ஆளுங்கட்சி செய்வதில்லை? என்பதுதானே கேள்வி.
அந்தக் கேள்வியெல்லாம் இந்த மலைவிழுங்கிகளுக்குத் தோன்றுவதில்லை.
அதுமட்டுமல்ல. இந்த ஆட்சியில் அது எத்தனைப் பேர் வேண்டுமானாலும்
இருக்கட்டும்
தற்கொலையோ கொலையோ அரசியல் சார்பாக நடைபெற்று விடுகிறது என்றால் உடனடியாக
இவர்கள் உதயகுமார் பாடையைத் தூக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
நடைபெற்றுவிட்ட சம்பவத்தை கண்டிக்கலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்
என்ற தார்மிக சிந்தனையெல்லாம் அறவே கிடையாது. இவ்வளவு அக்கிரமங்கள் இந்த ஆட்சியிலே
நடக்கலாமா என்ற சிந்தனையோ எண்ணமோ சுத்தமாகக் கிடையாது.
‘அன்றைக்கு உதயகுமாரைக் காவல்துறை அடித்துக்கொல்லவில்லையா, அவன்
தன்னுடைய மகனே இல்லையென்று அவன் தந்தையைச் சொல்லவைக்கவில்லையா?’ என்ற புலம்பல்தான்
இவர்களுக்கு.
மீண்டும் மீண்டும் உதயகுமார், உதயகுமார் உதயகுமார்தான்.
26.11.1980ம் ஆண்டு இவர்களின் வழிகாட்டி இதயதெய்வம் பொன்மனச்செம்மல்
எம்ஜிஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி
ஆணாயாளராக இருந்த
சுப்பிரமணியப் பிள்ளையின் படுகொலை குறித்து இவர்களுக்குத் தெரியுமா
என்றால் தெரியாது,
தெரியாது, தெரியவே தெரியாது.
ஏனெனில் அது எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற படுகொலை.
அந்தப் படுகொலை தற்கொலை என்று பெயர் சூட்டப்பட்டதெல்லாம் இந்த
இணைய மொண்ணைகளுக்குத் தெரியாது. உதயகுமாரை மட்டும்தான் தெரியும்.
அந்தச் சம்பவம் குறித்தும், படுகொலை குறித்தும் நீதிபதி பால்
தலைமையில் கமிஷன் போடப்பட்டதும் அவர் கொடுத்த அறிக்கையில் இருந்த வாசகங்களும் பாண்டேக்களுக்கும்,
ஹரன்களுக்கும் செல்வன்களுக்கும் தெரியாது. ஆனால் ‘விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர் கருணாநிதி’
என்று சர்க்காரியா கமிஷன் சொன்னது மட்டும் இணயப் பரமேஸ்வரன்களுக்கும், ஸ்மார்ட்போன்
மகாவிஷ்ணுக்களுக்கும் விவாத கஜபதிகளுக்கும் தெரியும்.
உங்கள் மனதில் உள்ள அரசியல் வன்மங்களுக்காகப் பாதித்தகவல்களையும்
அரைவேக்காட்டு சித்தாந்தங்களையும் பதிவுகளாக, தரவுகளாக, வரலாற்று உண்மைகள் போல் செப்பிடு
வித்தைக் காட்டும் வாதங்களைப் பரப்பாதீர்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர திமுகவை விமர்சிக்காதீர்கள்
என்று அல்ல.
திமுகவை மட்டும் தவறுதலாக
விமர்சித்து அதைவிட மோசமானவர்களை புனிதர் என்றும்
புடம்போட்ட தங்கம் என்றும் சொல்லி தவறானவர்களை ஆட்சியில் உட்காரவைத்து ஆரத்தி
எடுத்துக்கொண்டிருக்காதீர்கள் என்றும்தான் சொல்கிறோம்.
ஊடக அறம் என்பதற்கு சிறிதாவது இடமளியுங்கள் என்பதுதான் ஒரேயொரு
வேண்டுகோள்.