Friday, March 5, 2010

ஒரு திரைப்படம் பார்க்க ஐந்து கைக்குட்டைகள்


பிரபலமான மனிதர்களில் இரண்டுவகை உண்டு. புகழ் பெற்ற பிரபலங்கள் ஒருவகை, அந்தப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாதம்பட்டி சிவகுமார். நடிகர் சத்யராஜுக்கு அண்ணன்முறை. “நான் இன்றைக்கு இந்த அளவு புகழ் பெற்றவனாக வந்திருக்கிறேன்னா அதுக்கு அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான் காரணம்" என்று சத்யராஜால் அடையாளம் காட்டப்படுபவர். விஜய், அஜீத், சூர்யா துவங்கி சிம்பு வரையிலும் இளைய தலைமுறையின் எந்தப் பெரிய நடிகர்கள் நடித்தாலும் எல்லாரின் படங்களிலும் காமெடியில் கலக்குபவர் நடிகர் சத்யன். அந்த சத்யனின் தந்தை இவர்.


கோயம்புத்தூர் பகுதியில் மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. எம்.என்.எஸ் என்றும் மாதம்பட்டிக்காரர் என்றும் அறியப்படுபவர். குறுநில மன்னர் பரம்பரை. ஒரு காலத்தில் ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரராயிருந்து பின்னர் அவ்வளவையும் விற்று நிறையப் படங்கள் எடுத்து (நினைவிருக்கிறதா? சின்னத்தம்பி பெரிய தம்பி) தற்போது விவசாயம் பார்க்கக் கூடிய அளவு மட்டும் நிலத்தை மட்டும் வைத்து நிர்வகித்து வருபவர்.
இவரது அன்புப் பட்டியல் மிகப்பெரியது. அந்த அன்புப் பட்டியலில் ஒருமுறை விழுந்து விட்டால் போதும். அவர்கள் விக்கித்துப் போகும் அளவுக்கு அன்பாலும் உபசரிப்பாலும் திக்குமுக்காடச் செய்துவிடுவார். அவர்களின் பிறந்த நாளை அவர்களுக்கே தெரியாமல் குறித்துவைத்துக் கொள்வார். பிறகு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் பெற்றவர்களிடமி ருந்தும் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் வாழ்த்து வருகிறதோ இல்லையோ முதல் வாழ்த்து இவரிடமிருந்து வந்துவிடும்.

மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …....எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர். “ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”
' நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்" என்கிறார்.

"சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா " என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.
இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக்ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.
எழுத்துக்களில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு மனம் பறிகொடுத்தவர். எந்த அளவு ஈடுபாடு எனில் எண்பதுகளின் மத்தியில் நான் கோவையில் இவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிப் பேசினோம். “ அவரைச் சந்திக்க வேண்டுமே ஏற்பாடு செய்ய முடியுமா ?” என்று கேட்டார்.
"அதற்கென்ன பெங்களூர் சென்றதும் ஏற்பாடு செய்கிறேன்" என்றேன். பெங்களூர் வந்ததும் சுஜாதாவிடம் சொன்னேன். “அழைத்து வாருங்களேன்" என்றார் சுஜாதா. மாதம்பட்டிக்காரருக்குத் தெரிவித்தேன் . அவ்வளவுதான். அடுத்த ஃபிளைட் பிடித்து பெங்களூர் வந்தார். சுஜாதாவைச் சந்தித்துப் பேசினார்.மறு ஃபிளைட்டில் கோயம்புத்தூர் திரும்பிவிட்டார்.
எண்பதுகளில் 'கிராமர் வெர்ஸஸ் கிராமர்' என்றொரு ஆங்கிலப்படம் வந்தது. பாசத்தைப் பிழிந்துதரும் படம். 'பாசமலர் அளவுக்கு மனதை உருக்குகிறது. படம் பார்த்து அழாமல் வரமுடியாது ' என்ற விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருந்த வெற்றிகரமான படம் அது. “இங்கே வர தாமதாகும்போல் தெரிகிறது. பெங்களூருக்குப் படம் வந்தால் தெரிவியுங்கள்" என்று கடிதம் போட்டிருந்தார் மாதம்பட்டி சிவகுமார். படம் பெங்களூர் வந்ததும் தெரிவித்தேன். அடுத்த நாளே காரை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்துவிட்டார் என்பது முக்கியமல்ல. படத்திற்குக் கிளம்பும்போது சூட்கேஸைத் திறந்து ஆறேழு கைக்குட்டைகளை எடுத்துக்கொண்டார். “எதுக்குசார் இவ்வளவு கைக்குட்டைகள் ?” என்றேன்.
"படம் ரொம்ப சோகமாயிருக்கும். நிறைய அழுகை வரும் என்றார்களே" என்றார்.
அந்த ரசனையுள்ள குழந்தை படத்தின் பல இடங்களில் கேவிக்கேவி அழுததை கலைக்க விரும்பாமல் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நல்ல ரசனை உள்ளவர்கள் தாம் ரசித்ததை அழகாக மற்றவர்களிடம் விவரிப்பதைக் கேட்பது ஒரு தனி அனுபவம். கண்ணதாசன் பாடல் எழுதிய நாளில் உடனிருந்து அதனை அனுபவித்த விவரத்தை இவர் சொல்வதைக் கேட்க வேண்டும். …....
"சிவகுமார் அண்ணன் நடிச்ச படம் 'சந்ததி'. அந்தப் படத்திற்கான ஒரு பாடல் கம்போசிங்கிற்
காக நானும் உடன் சென்றிருந்தேன். கவிதா ஓட்டல்ல கவிஞர் வந்து உட்கார்ராரு. நாங்கள்ளாம் அவர் முன்ன உட்கார்றோம். டைரக்டர் கதையைச் சொல்றாரு. நடிகர்கள் யார் யாருன்னு கேட்கறார் கவிஞர். பாட்டு எந்த சிச்சுவேஷன், இரவு எஃபெக்டா பகல் எஃபெக்டான்னு கேட்கறாரு. பாட்டு பிக்சரைஸ் பண்ணும்போது காட்சியில யார்யார் இருக்காங்கன்னு கேட்கறார். தொகையறா வேணுமா அல்லது பல்லவியிலிருந்தே ஆரம்பிச்சுரலாமான்னு கேட்கறார்.

அந்த சமயத்துல டைரக்டருக்கும் அவர் உதவியாளருக்கும் தொகையறா வேணுமா வேணாமான்னு சொல்லத்தெரியலை. “இல்ல இந்தப் பாட்டுக்குத் தொகையறா போட்டுக்கங்க" என்கிறார் கவிஞர். டைரக்டர் சரின்றாரு.
அதுக்குப் பிறகு ஒரு நிமிஷம்.......ஒரேயொரு நிமிஷம் டைரக்டர் சொன்ன கதையை மைண்ட்ல ஓட்டறார். அவருடைய உதவியாளரைப் பார்த்து "எழுதிக்க" என்கிறார்.
இறைவன் எழுதிய கடிதம் ஒன்று
கையினில் கிடைத்தது இன்று
அது கால்பக்கக் கடிதம்
ஆரம்பம் முடிந்து அந்திக்கு வருகின்றது-உண்மை
சந்திக்கு வருகின்றது
எழுதி முடித்ததும் டைரக்டர் பாட்டில் புற்றுநோய் வரணும் என்கிறார்.
"அது அவ்வளவு நல்லா இருக்காதே" என்கிறார் கவிஞர்.
"இல்லைங்க கதை அதுதான். கதாநாயகனுக்கு ப் புற்றுநோய். ரத்தப் புற்றுநோய். அவன் சாகப்போறான். அந்த வார்த்தைப் பாடலில் வரணும்" என்கிறார் டைரக்டர்.
அப்படியா என்று யோசிக்கிறார் கவிஞர். ஒரு நிமிடம்....ஒரே நிமிடம்தான்.
'என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன்
சந்ததியில் விருப்புற்று நோய் தந்தான் தந்தை
அப்போது புரியவில்லை ஆண்டவனின் வடிவம்
இப்போது வருகிறது இறைவனவன் கடிதம்-
அப்படின்னாரு. அப்படியே மலைச்சு மந்தரிச்ச மாதிரி உட்கார்ந்திருந்தோம். அந்தப் படத்தின் கதை என்னன்னா, வாடகைக்கு ஒரு விலைமாதைக் கொண்டுவந்து சந்ததிக்காக அவள் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது...பின்னர் அவளுக்குக் காசு கொடுத்து அவளை அனுப்பிவிடுவது. இவருக்கு யாரும் சொந்தத்துல பொண்ணுதர மாட்டாங்க. அதுக்காக வாடகைத் தாயார் அப்படின்றது கதை. வாடகைத்தாயா ஸ்ரீபிரியா நடிச்சிருந்தாங்க. இதைச் சொல்லி முடிச்சதுதான் தாமதம்.
'இரவுக்கு வாழ்ந்த பெண்களில் ஒருத்தி
உறவுக்கு வந்தது என்வீடு-அதில்
வரவுக்கு ஒன்றை வைத்த பின்னாலே
செலவில் முடிந்தது என் ஏடு
வேலியில் ஒருவன் தாலியில் ஒருத்தி
யார்கடன் முதலில் நான் கொடுப்பேன்-என்
வேஷத்தில் ஒருவன் பாசத்தில் பிறப்பான்
வானத்தில் இருந்தே நான் பார்ப்பேன்'
அப்படீன்னார்.அந்தக் கணம், அந்தக் கணத்தில் எழுதியது. ரூம் போட்டோ, நேரம் எடுத்துக்கொண்டோ, வீட்டுக்குப்போய் யோசிச்சோ எழுதியதில்லை. அப்போதே அந்த நேரத்திலேயே எழுதியது. டைரக்டர் புற்றுநோய் வரணும்னு சொன்னதுக்காக என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன், விருப்புற்று நோய்தந்தான் தந்தை என்று அற்புதமாக அந்தச் சொல்லை வரவழைத்தார். தொடர்ந்து-
ஒருதுளி நீரில் ஆறடி உருவம்
உலகினில் வந்தது அவனாலே
அந்த ஆறடி உருவம் ஆறடி நிலத்தில்
அடங்கப் போவதும் அவனாலே- என்று தொடர்ந்து எழுதி முடிக்கிறார். கேட்ட மாத்திரத்தில் கதையையும் காட்சியையும் சொன்ன மாத்திரத்தில் அருவிபோலக் கொட்டிமுடித்ததை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் சிலிர்க்குது" என்றார் மாதம்பட்டி சிவகுமார்.
கோவைத் தங்கங்களில் மாதம்பட்டியும் ஒன்று!

6 comments :

Anonymous said...

so interesting and new to read... this post is something different with Uniqueness.

R.S.KRISHNAMURTHY said...

திரு.மாதம்பட்டி சிவகுமார் அவர்களை ஓரிரு முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தும் பல காரணங்களால் நட்பைத் தொடர முடியவில்லை-நஷ்டம் எனக்குத்தான் என்பது தெரிந்திருந்தும். உங்களுக்கும் தெரிந்திருக்கும் - பழைய பாடல்களில் அவருக்கு இருந்த காதலாலே, இளையராஜா, ஜானகியின் (கீச்சுக்) குரலில் திரைப்பட்ங்களை ஆக்ரமித்துக் கொண்டிருந்த காலத்தில், பிரிந்திருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தியைச் சேர்த்து வைத்து, ஒரு படம் முழுவதும் டிஎம்எஸ்-சுசீலாவை (மட்டுமே) பாடவைத்து ஆனந்தப்பட்டவர் எம்என்எஸ்!

Cable சங்கர் said...

எனக்கும், அவரது மகன் சத்யனுக்கும் நல்ல நட்பு உருவாகியிருந்த சமயத்தில் எனக்கு மாதம்பட்டி சிவகுமார் அவர்களுடன் பழகும் சந்தர்பம் கிடைத்தது. நிறைய நாள் அவருடன் இரவு உணவு அருந்தியிருக்கிறேன். மிக அன்பான இயல்பான மனிதர்.. சினிமாவின்மேல் அளவு கடந்த காதல் கொண்டவர்.
அவர் சொன்ன ஒரு டயலாக்கை இன்னமும் நான் நிறைய பேரிடம் சொல்லிக் கொண்டுவருகிறேன்.

ஏன் சினிமா லேப்லேர்ந்து பிரிண்டை எடுக்கிறதுக்கு டெலிவரின்னு சொல்றாஙக் தெரியுமா..? புள்ளை பொறக்குற டெலிவரியும், இதுவும் ஒண்ணுதான். பொழச்சு வந்தா மறு ஜென்மன் என்றதுதான்.

அரசூரான் said...

அர்த்தமுள்ள பார்வையில் ஒர் அர்த்தமுள்ள பதிவு. கவியரசர் கண்ணதாசன் பல இடங்களில் இதை மிக அழகாக கையாண்டுள்ளார் - ஒரு துளி நீரில் ஆறடி உயரம் - அருமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கவிஞர் பற்றிய மிக அருமையான பதிவு.
சிறப்பான தங்கள் அனுபவப் பகிர்வு

Amudhavan said...

சிலருடன் பழகுவது உண்மையிலேயே சுவாரஸ்யமான அனுபவம். எம்.என்.எஸ் அத்தகையவர்களில் ஒருவர்.

நீங்கள்தான் அடிக்கடி வரப்போகிறீர்களே அப்போது பேசிக்கொள்வோம்.

அவருடன் உணவருந்தியிருக்கிறீர்கள் சரி;அரண்மனையொத்த மாதம்பட்டி வீட்டில் அருந்தியிருக்கிறீர்களா....வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்குமே

கவிஞரின் அசத்தல் ஒன்றா இரண்டா? இன்னொரு பாடலில் பெண்ணை 'புதுச்சீர் பெறுவாள் வண்ணத்தேனருவி ' என்றொரு வார்த்தையில் சொல்லியிருப்பார். அருவிக்கு வண்ணம் கிடையாது. வண்ணம் என்கிறார். அருவிக்குச் சுவை கிடையாது. தேன் என்கிறார். பெண்ணை அருவி என்று எந்தக்கவிஞனும் சொன்னதில்லை.சொல்கிறார்.உரை சொல்லப்புகுந்தால் கவிஞரின் பாடல்கள் புதையல்கள்தாம்.
நன்றி அரசூரான் அவர்களே!
நன்றி யோகன் பாரீஸ் அவர்களே!

Post a Comment