Sunday, June 20, 2010

உலகத்தமிழ் மாநாட்டை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடாக மாற்றிய கலைஞரின் டெக்னிக்


தம்முடைய ஆட்சிக்காலத்தில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றைப் பிரமாதமாக நடத்தி முடித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்த கலைஞர் உலகத்தமிழ் மாநாடு நடத்தும் நிறுவனத் தலைவருக்கு கடிதம் எழுதுகிறார். தம்மைக் கலந்து ஆலோசிக்காமல் இவர் பாட்டுக்கு முடிவு செய்துவிட்டு மாதத்தையும் தேதியையும்கூட அறிவித்துவிட்டு ஒப்புக்காகத் தம்மை அணுகுகிறார்களே என்று அவருக்கு ஈகோ பிரச்சினை. முள்ளிவாய்க்கால் மரணங்களெல்லாம் இவர் மறுப்புச்சொல்ல காரணங்களாக இருந்ததா என்பது தெரியவில்லை. “குறுகியகால அவகாசத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது சாத்தியமில்லை" என்று நாலுவரி கடிதம் எழுதிவிட்டார். பாவம், அவருக்கு கலைஞரின் சித்துவிளையாட்டுக்களெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்துடன் சேப்டர் குளோஸ் என்பது அவர் கணக்கு. ஈழ ஆதரவாளர்கள்கூட கலைஞருக்கு சரியான மூக்குடைப்பு என்று மகிழ்வடைந்திருப்பார்கள். அடுத்த நாளே 'கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு' என்று அறிவிப்பு வர எல்லாரும் மிரண்டு அதிர்ந்ததுதான் மிச்சம். தாம் என்ன நினைக்கிறாரோ அதனை நடத்திமுடித்து விடுவதுதான் கலைஞரது அரசியல் பாணி. அதற்கென சதுரங்க காய்களை அவர்போல் நகர்த்தும் அரசியல் ராஜதந்திரம் அவர் தலைமுறை அரசியல் தலைவர்களில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

அந்த நாட்களில் எம்.ஆர். ராதாவைப் பற்றிச் சொல்வார்கள். குறிப்பிட்ட நாடகத்திற்குப் போலீஸ் தடை போட்டதும் பெயரை மட்டும் மாற்றிவைத்து விட்டு அதே நாடகத்தை நடத்திமுடிப்பார் என்று.கிட்டத்தட்ட அதே கதைதான் என்றாலும் கலைஞர் இதுபோன்ற 'நாடகத்தை' ஏற்கெனவே நடத்திமுடித்திருக்கிறார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
கவிஞர் வைரமுத்துவைப் பாராட்ட நினைத்த கலைஞர் அவருக்கு திடீரென்று 'கவியரசு' என்ற பட்டத்தைச் சூட்டுகிறார். இலக்கிய உலகம் திடுக்கிடுகிறது. ஏனெனில் கவியரசு என்பது கவிஞர் கண்ணதாசனுடைய பட்டம். தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர் என்றாலும் கவியரசு அல்லது கவியரசர் என்றாலும் அது கண்ணதாசனை மட்டுமே சுட்டும் பெயர் என்பதுதான் தமிழ் நிலம் ஏற்றுக்கொண்ட ஒரு பாடம். கம்பனுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள் பவனிவந்த போதிலும் கவியரசர் என்ற பெயரைக் கண்ணதாசனுக்குத்தான் சூட்டி மகிழ்ந்தது தமிழுலகம்.கண்ணதாசன் தமிழின் ஆளுமைகளில் ஒருவர். காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர்,நடிகர் திலகம் என்று தமிழின் நிரந்தர அடையாளங்களாக எப்படிச் சிலர் மாறினார்களோ அந்தவகை அடையாளங்களில் ஒருவராக மாறியிருப்பவர் கண்ணதாசன். கோடிக்கணக்கான மக்களின் நாக்குகளில் இன்றைக்கும் புழங்கும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் கண்ணதாசன். 'உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருபத்துநான்கு மணிநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்கள் இரண்டு பேருடையவை. ஒருவர் லதா மங்கேஷ்கர், அடுத்தவர் கண்ணதாசன்' என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. மற்ற கவிஞர்களின் பாடல்களை மனப்பாடம் செய்தால்தான் மனதில் நிற்கும். ஆனால் கண்ணதாசனின் பாடல்கள் கவனத்துடன் கேட்கவில்லையென்றாலும் எப்படியோ காதில்விழுந்து மனதில் அல்ல உதிரத்துடன் கலந்து நிற்கும் தன்மை கொண்டவை. அவர் மறைந்து இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனபிறகும்கூட அவருடைய அருகில் வருவதற்குக்கூட இன்னமும் யாரும் பிறக்கவில்லை என்ற நிலைமைதான் இருக்கிறது.இது ஒருபுறமிருக்க கவிஞருக்கும் கலைஞருக்கும் ஏதோ மனத்தாங்கல், ஏதோ பகை. இருவரும் நீண்ட நாட்கள் பேசிக்கொள்ளவில்லை என்றெல்லாம்கூடச் செய்திகள். ஆனாலும் இடையில் சில காலம் தவிர எப்போதுமே நிரந்தர முதல்வராக இருக்கும் கலைஞருக்கு தமிழின் இன்னொரு மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கண்ணதாசனை சமூக அளவில் புறக்கணிப்பதென்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. கண்ணதாசன் பற்றிய நிகழ்வுகளில் பங்கேற்பது தவிர்க்க முடியாத ஒன்றாகப்போகும் பொழுது கலைஞர் தமக்கேயுரிய நுண்ணறிவுடன் ஒரு உத்தியைக் கையாள்வார். 'கண்ணதாசா என் ஆருயிர் நண்பா' என்று ஆரம்பிப்பார். அவரும் இவரும் முதன்முதலாக சந்தித்தது, நட்பு கொண்டது, ஒன்றாகப் பயணித்தது, ஒன்றாக சாப்பிட்டது என்று எல்லாச்சம்பவங்களையும் மெலிதான நகைச்சுவையுடன் சொல்வார். கண்ணதாசனின் குழந்தைத்தனமான செய்கைகளை இவருக்கேயுரிய அங்கதச்சுவையுடன் சொல்லி கைத்தட்டலை அள்ளிக்கொள்வார். கேட்பவர்கள் கிறுகிறுத்துப் போயிருப்பார்கள். கூட்டம் முடிந்துவிடும். இந்தப் பேச்சிலுள்ள hidden agendaவைப் பார்த்தோமானால் கண்ணதாசனை உலகம் எதற்காகக் கொண்டாடுகிறதோ அதைப்பற்றி- அவரது படைப்பாக்கம் பற்றி ஒரேயொரு வரிகூட கலைஞர் பேசியிருக்கமாட்டார். ஆயிரக்கணக்கான கவிஞரின் பாடல்கள் பற்றியோ அவற்றின் தாக்கம் பற்றியோ அவரது எழுத்துக்கள் பற்றியோ ஒருவரிகூடப் பேசாமல் கலைஞரின் உரை கடந்து போயிருக்கும்.இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொண்டு இப்போது விவகாரத்திற்கு வருவோம்.
கண்ணதாசனை என்ன செய்யலாம் என்று கலைஞர் நினைத்தாரோ தெரியவில்லை.

திடீரென்று வைரமுத்துவுக்கு 'கவியரசர்' என்று பட்டம் சூட்டுகிறார். இலக்கிய உலகம் கொந்தளிக்கிறது. நாலாபுறமிருந்தும் எதிர்ப்புகள் வருகின்றன. எப்படி இப்படி? என்று அதிர்கிறது தமிழுலகம்.எல்லாத்திசைகளில் இருந்தும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுகின்றன. கண்டனக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. தீப்பிழம்புகளாய் எதிர்ப்பு அறிக்கைகள் சீறுகின்றன. சரி கலைஞர்தான் கொடுத்தார், வைரமுத்து எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? என்று கேள்விகள் வைரமுத்துவை நோக்கி வீசப்படுகின்றன. எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த வைரமுத்து நிலைமை கைமீறி போவதறிந்து மவுனம் கலைகிறார். "கவியரசு' பட்டத்தைக் கைவிடுகிறேன். நான் அதனைப் பயன்படுத்தப் போவதில்லை. அது கண்ணதாசனுக்கே உரியதாக இருக்கட்டும்" என்று அறிவிக்கிறார். விவகாரம் சுமுகமாய் முடிந்துவிட்டதறிந்து கண்ணதாசன் ரசிகர்களும் நிம்மதியடைகின்றனர். இந்த மொத்த விவகாரத்திற்கும் காரணகர்த்தாவாக இருந்த கலைஞர் கடைசிவரை மவுனமாகவே இருக்கிறார். அந்த மவுனத்தில் எத்தனைப் பெரிய ரகசியம் இருக்கிறது என்பது பாவப்பட்ட எந்த இலக்கிய ரசிகனுக்கும் புரியவில்லை. சில மாதங்கள் செல்கின்றன. இன்னொரு இலக்கிய விழா வருகிறது.வைரமுத்து கலந்துகொள்கிறார்.மறைத்து வைத்திருந்த அணுகுண்டை தம்முடைய வசீகரக்குரல் மூலம் வீசுகிறார் கலைஞர்.”தம்பி வைரமுத்துவுக்கு கவியரசர் என்ற பட்டத்தைத் தந்தேன். எதற்காகவோ அந்தப் பட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது. வைரமுத்துவும் எதிர்ப்பு காரணமாக அந்தப் பட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்து விட்டார்.எனவே இப்போது அவருக்கு வேறொரு பட்டம் தருகிறேன். கவியரசு இன்னொருவருடையதாகவே இருக்கட்டும்.இவரை இனிமேல் 'கவிப்பேரரசு' என்றழைப்போம்" அவனவனும் மூர்ச்சையடித்து விழாத குறை.அதிரடித் தாக்குதல் என்பார்களே அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தாக்குதல் இது. “கண்ணதாசனையா கவியரசு என்கிறீர்கள்? வாங்கிக்கங்கடா இதை" என்கிற மாதிரியான அட்டாக். இதன் 'உள்குத்து' புரியாத இலக்கிய உலகம் வைரமுத்துவைக் கவிப்பேரரசு என்று கூவிக்கொண்டிருக்கிறது.கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கலைஞர் என்றாலேயே அது முதல்வரைத்தான் குறிக்கும். அதுபோல் அறிஞர் என்றாலோ பேரறிஞர் என்றாலோ அது அண்ணாவைத்தான் குறிக்கும்.மக்கள் திலகம் என்றால் அது எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் என்றால் சிவாஜி என்பதுபோல் கவியரசர் என்றால் கண்ணதாசன் என்று தமிழ் சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டபிறகு அதனை மாற்ற நினைத்ததே கலைஞர் போன்ற ஒரு மாபெரும் மனிதர் செய்யக்கூடாத செயல். மீறிச்செய்கிறார். எதிர்ப்பு கிளம்புகிறது. இவ்வளவு எதிர்ப்பு கிளம்பி அந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் இடப்படுகிறது. அத்தோடு அதனைக் கைகழுவியிருக்கலாம். அதை வைத்துக்கொண்டே இன்னொரு பெரிய தவறுக்கு அடிகோலிவிட்டார் கலைஞர்.

அண்ணாவைப் பேரறிஞர் என்கிறோம். இப்போது வேறொரு அறிஞருக்கு அதே பேரறிஞர் பட்டத்தைக் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். எதிர்ப்பு கிளம்பும். உடனே "பேரறிஞர் என்று சொன்னதால்தானே எதிர்ப்பு வந்தது?இப்போது பெரும்பேரறிஞர் என்று அழைக்கிறேன்.” என்று ஒருவர் அறிவித்தால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? அது நியாயமாக இருக்குமா? அல்லது இன்னொருவருக்குக்'கலைஞர்'என்ற பட்டத்தை ஒருவர் வழங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். யாராவது சும்மா இருப்பார்களா? பயங்கர எதிர்ப்பு கிளம்பும். உடனே அப்படி அறிவித்தவர் 'கலைஞர் என்று சொன்னதால்தானே எதிர்ப்பு? இனிமேல் 'பெருங்கலைஞர்' என்று அழைக்கிறேன்" என்று பிரச்சினையை 'முடிவுக்குக் கொண்டுவருவதாக' அறிவித்தால் அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? கலைஞர் ஏற்றுக்கொள்வாரா? யாரால்தான் ஏற்க இயலும்? ஆனால் வைரமுத்து விவகாரத்தில் இதுதான் நடந்திருக்கிறது. கலைஞர் ஆட்சியிலிருப்பதாலும் வைரமுத்து கலைஞரின் அதிகார எல்லைக்குள்ளேயே வளைய வருவதாலும் பங்கமில்லாமல் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.ஆனால் ஒரு செம்மையான மரபு படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் களத்தில் தமது நுண்ணாற்றலால், ராஜதந்திர காய் நகர்த்துதல்களால் தாம் நினைத்ததை சாதித்து வரும் கலைஞரின் அதிரடி காய் நகர்த்தல்தான் இந்தச் செம்மொழி மாநாடும். கவியரசை உபயோகிக்கக் கூடாதா அப்படியென்றால் கவிப்பேரரசை உபயோகிக்கலாம்தானே என்று கண்ணதாசன் ஆதரவாளர்களுக்குக் கடுக்காய் கொடுத்த அதே பாணிதான் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த முடியாதா அப்படியானால் இதோ உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்திக் காட்டும் கலைஞரின் கைவண்ணம். இம்மாதிரி விஷயங்களில் கலைஞரின் சித்துவிளையாட்டுக்களை அடித்துக்கொள்ள ஆளில்லை.

8 comments :

துளசி கோபால் said...

அருமை. அத்தனையும் உண்மை.

Ajith Bsc MBA said...

கருணாநிதி என்ற பெயர் ஒன்றே போதும் தரம் எளிதில் விளங்கும்

Thenammai Lakshmanan said...

உண்மைதான் அமுதவன்.. கவியரசர் என்றால் அது கண்ணதாசன் மட்டுமே...

R.S.KRISHNAMURTHY said...

கலைஞர் புரிந்து வைத்திருக்கும் வாழ்க்கை ரகசியங்கள் சில: மனிதர்களுக்கு மறதி என்கிற ஒன்று இருக்கும் வரை எதையும் சொல்லி, செய்துகொண்டே போகலாம் என்பதும் மக்களின் ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற போக்கும்! இன்னொருவரும் ஏதேதோ செய்து பார்க்கிறார் பாருங்கள்; உயர்ந்த ‘கான்வெண்ட்’ கல்வி படித்த அவரின் பதவி ஆசையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதுபெரும் அரசியல் வாதியை ‘போடா, வாடா’ என்றழைக்காத குறையாக அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறாரே, அந்தக் கொடுமையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள், நண்பரே?!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

Amudhavan said...

1)நன்றி துளசி கோபால்
2)நன்றி அஜித்
3)நன்றி திருமதி தேனம்மை
4)அந்தக் கொடுமை பற்றியும் பேசுவோம் ஆர் எஸ்கே
5)தாங்கள் சொன்ன அருமை எனக்குப் பெருமை உலவு

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Amudhavan said...

என்னவொரு ஒற்றுமை பாருங்கள், உங்களின் ஒரு பதிவுக்கு நானும் ஓட்டளித்துள்ளேன்.நன்றி.

Post a Comment