Monday, January 10, 2011

கடவுள் பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் நடிகர் சிவகுமார்


தமிழ்ச்சமூகம் கூர்ந்து கவனிக்கும் இன்றைய பிரபலங்களில் அப்துல் கலாமுக்கடுத்து பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து சிந்தனையாளராகவும் இலக்கியவாதியாகவும் தம்மை உருமாற்றிக்கொண்ட அவருடைய உரைகளும் எழுத்துக்களும் இன்று தமிழுலகில் மிகப்பிரசித்தமாக உலா வருகின்றன. அவர் பேச்சுக்களின் சிடிக்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் சிவகுமாரை மிகுந்த நம்பிக்கையுடன் கவனிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ‘கடவுள் இருக்கிறாரா? அவரை வணங்கினால் அருள் பாலிப்பாரா? என்ற கேள்விக்கு நடிகர் சிவகுமாரின் பதில் இங்கே;

கடவுள் மனிதனைப் படைத்தான். மனிதன் கடவுளைப் படைத்தான்-என்று இதை அழகாகச் சொல்லலாம். இங்கே, முதலில் கடவுள் என்பது இயற்கை என்று வைத்துக்கொண்டால், இயற்கை மனிதனை உருவாக்கியது. பின்னர் அந்த மனிதன் கடவுள் என்ற கற்பனை வடிவத்தை, அந்த இயற்கைக்குக் கொடுத்து-பல கடவுள் கதைகளை எழுதி, மக்களை நல்வழியில், நேர்வழியில், ஒழுக்க நெறியில் வாழ, வழிவகுத்தான்.

‘நன்று புராணங்கள் செய்தார்-அதில்

நல்ல கவிதை பலபல தந்தார்

கவிதை மிகநல்லதேனும்-அந்தக்

கதைகள் பொய்எனத் தெளிவுறக் கண்டோம்.

புவிதனில் வாழ்நெறிக்காட்டி-நன்மை

போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்-என்று பாரதி, கடவுள் கதைகள் உண்மையல்ல எனினும்-அந்தக் கதைவழி வாழ்வின் உயர் நெறியை, நாம் பெறுகிறோம் என்கிறான்.

· கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன் இரக்கமுள்ளவன் என்பது உண்மையானால், சுனாமி என்கிற ஆழிப்பேரலையை எழுப்பி, குஞ்சும் குளுவானுமாக குழந்தைகளிலிருந்து குடும்பத் தலைவன், தலைவி,ஆடு மாடு கோழி குஞ்சுகள் என்று பல்லாயிரக்கணக்கான உயிர்களை, ஒரே சுழற்றில் கடலுக்குள் அள்ளிப்போய் அவர்கள் கதையை முடித்திருப்பானா?

· குஜராத் பூகம்பத்தில் பல மாடிக்கட்டிடங்களில் பெரிசும் சிறிசுமாகப் பல அப்பாவி உயிர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிர்நீத்த கொடுமையை- இரக்கமுள்ள இறைவன் செய்வானா?

· இரண்டாம் உலகப்போரில் ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்களை ஒரே மனிதன்-இட்லர்- கொன்று குவிக்க, இறைவன் பார்த்துக்கொண்டிருந்தது ஏன்?

· முப்பதாயிரத்துக்கும் மேலான ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்து, லட்சக்கணக்கானோர் சாவின் விளிம்பில் தவிக்கும் நிலையை உருவாக்கிய ராஜபக்சே போன்ற கொடியவனை, இறைவன் படைத்தது ஏன்?

-இப்படி, பல்லாயிரக்கணக்கான கேள்விகளுக்கு எளிதில் பதில் சொல்லிவிட முடியாது.

‘கடவுள் என்று ஒருவன் இல்லையென்றாலும் அப்படி ஒருவனைக் கற்பித்து அவனிடத்தில் உன் வலியையும் வேதனையையும் சொல்லி அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர்.

தனக்கு வேண்டியவர்களுக்கு கடவுள் அருள் பாலிப்பது உண்மையென்றால் அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை ஆறுகால பூஜை செய்கிற அர்ச்சகர்தானே டாடா பிர்லா ஆகியிருக்க வேண்டும்......

பூஜை முடித்து தீபாராதனைத் தட்டை ஏந்தி நம்மிடம் வந்து “பார்த்துப் போடுங்கோ என்று ஏன் கேட்க வேண்டும்?

திருப்பதி மலை சென்று குடும்பமே மொட்டையடித்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில், திருமலை உச்சியிலிருந்து கார் கர்ணம் அடித்து பூண்டோடு அந்தக் குடும்பமே ஏன் அழிய வேண்டும்?

இதுபோன்ற கேள்விகளுக்கு யாரும் எளிதில் பதில் சொல்லிவிட முடியாது.

‘உடைத்த கல்லில் ஒரு பாதி சிலை-மறுபாதி படிக்கட்டு என்றால் இதில் எது கடவுள் என்று சித்தர்கள் கேட்கிறார்கள்.

சராசரி மனிதனால் கடவுளைக் கற்பனை செய்து வணங்கமுடியாது. அவனுக்குக் கதை வடிவில் ஒன்றைச்சொல்லி கற்சிலை வடிவில் கடவுளைக் காட்டினால் எளிதில் புரிந்துகொள்வான் என்பதற்காகவே புராணக்கதைகளையும், கோயில் கட்டி உள்ளே விக்கிரகத்தையும் நம் பெரியவர்கள் நிறுவினார்கள்.

கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்னுள்ளும் இருக்கிறான் உன்னுள்ளும் இருக்கிறான் என்பதை உணர்வதற்கு ஒரு வயதும் பக்குவமும் வேண்டும். எல்லாராலும் அதை எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியாது.

‘குடியிருக்க வீடு கும்பிட ஒரு கோயில் என்று எல்லாவற்றிலும் நம் முன்னோர் ஒரு ஒழுங்கு கடைப்பிடித்தனர்.

‘கடவுளிடத்திலே வேண்டுகோள் வைக்காதே என்கிறார் ஓஷோ.

உன்னைக் கேட்டுக்கொண்டு காலையில் சூரியன் உதிப்பதில்லை. உன்னைக் கேட்டுக்கொண்டு தென்றல் வீசுவதில்லை. உன்னைக் கேட்டுக்கொண்டு மரம் கனியும் நிழல் கொடுப்பதில்லை. உன்னைக் கேட்டுவிட்டு அவன் உன்னைப் படைக்கவில்லை. எப்போது உன்னைக் கேட்காமல் உன்னைப் படைத்தானோ, நீ சொல்லாமலே உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வான்........

உனக்கு விலையுயர்ந்த ஆடி(Audi)கார், ஒரு கோடி மதிப்புள்ள கார் தர- இறைவன் நினைத்திருப்பான். நீ அல்பத்தனமாக “அம்பாசிடர் கார் கொடு இறைவா என்று வேண்டாதே.

உனக்கு எஸ்டேட் ஒன்று பரிசாகத்தர அவன் முடிவு செய்திருப்பான். நீ “இருபது செண்ட் இடம் வீடு கட்ட வேண்டும் என்று கேட்காதே.

அப்படியென்றால் இறைவனிடத்தில் என்னதான் கேட்பது?

ஒன்றும் கேட்காதே. “அரிதான, அற்புதமான, பிறவிகளுள் உயர்ந்த மானுடப் பிறவி கொடுத்ததற்காக நன்றி நன்றி நன்றி இறைவா என்று மட்டும் சொல்.

கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள். கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் கடவுளைக் கும்பிடாமலேயே தொண்ணூற்றாறு வயதுவரை வாழ்ந்தாரே என்று கேட்கலாம்.

அவரையும் படைத்தது கடவுள்தானே..தன் குழந்தையைத் தானே எப்படி வெறுக்க முடியும்! பக்திமானைவிட பாமர மக்களைக் கடைத்தேற்ற வாழ்நாளை அர்ப்பணித்த தன் பிள்ளையை கடவுள் எப்படி வெறுக்க முடியும்?

அந்தப் பெரியாரே, “பக்தி தனிமனிதப் பிரச்சினை, ஒழுக்கம் சமுதாயப் பிரச்சினை. ஒரு மனிதன் ஒழுக்கசீலனாக வாழ்ந்தால் அவன் பக்திமானாக இருக்கத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்.

உயர்ந்த ஒழுக்கநெறியிலேயே ஆன்மிகம் சொல்லும் எல்லா விஷயங்களும் அடங்கிவிட்டன.

கடவுள் இருப்பதும் இல்லையென்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அன்றே பாடிவிட்டார்.

கடவுள் ஆன்மா என்று எதுவுமில்லை என்று புத்தர் கூறுகிறார். மாற்றமே உண்மை, நிலையானது என்று எதுவுமில்லை என்று சொல்லும்போது ஆன்மா மட்டும் நிலையானதாக எப்படி இருக்கமுடியும் என்று புத்தர் கேட்கிறார்.

சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நம் பெரியவர்கள், மனிதர்கள் ஒழுக்கசீலர்களாக உயர்ந்த நெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கியவைதான். இறந்த பின் இதே உடலோடு எங்கும் போகமுடியாது. இதே நினைவுகளோடு எங்கும் போக முடியாது.

பிறப்புக்கு முன்னால் நாம் என்னவாக இருந்தோம் இறந்தபின் எங்கு போகப்போகிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கவோ நிரூபிக்கவோ முடியாது.

‘பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன

உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே நடப்பது என்ன

எனக்கும் தெரியாது என்று கண்ணதாசனும் சொல்கிறான்.

எனவே, மனித நேயத்துடன், ஒழுக்கத்துடன் இம்மண்ணில் வாழும் வாழ்க்கையே சொர்க்க வாழ்வு. அன்பு, அகிம்சை, அறவழியில் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்து அனைத்து உயிரையும் சமமாக மதித்து, இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியைச் செய்வதே உயர்ந்த பக்தியின் அடையாளம்.

ஆயிரம் பகுத்தறிவு வாதம் செய்தாலும் ,ஆகாயவிமானம் வங்கக் கடலின் மேலே இருபதாயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது “எஞ்சினில் தீப்பற்றிக் கொண்டது இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் சிதறிக் கடலில் மூழ்கப் போகிறதுஎன்று விமானி சொன்னால், அந்த நேரத்தில் “இறைவா! எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று-என்று ஒருவன் வேண்டவில்லையென்றால் அவனே உண்மையான நாத்திகன்.

நெஞ்சில் வாங்கிய கத்திக்குத்து இதயத்தைத் துளைத்துவிட்டதா, நுரையீரலைத் துளைத்துவிட்டதா? என்று தெரியாத புரியாத நிலையில் ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழலில், மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடம்பில் கத்திவைக்கும் முன் “இறைவா! எப்படியாவது என்னைக் காப்பாற்று என்று குத்துப்பட்ட மனிதன் கும்பிடவில்லை என்றால் அந்த நாத்திகனை நாமும் கும்பிடலாம்.

நன்றி; ராணி வார இதழ்.

6 comments :

Mathiseelan said...

நல்ல கருத்துக்கள். தெளிவான விளக்கங்கள். திரு சிவகுமாரின் சிந்தனைகள் சரியான அலசல்களுடன் பயணித்திருக்கின்றன.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பயனுள்ள தகவல்கள்

அருமை....

Amudhavan said...

நன்றி மதிசீலன். எந்தவொரு விஷயத்தையும் சரியோ தவறோ சல்லடைப்போட்டு சலித்தெடுப்பது போல் அலசுவதுதான் சிவகுமாரின் பாணி. நமது கருத்துக்கள் மாறுபடலாம்.ஆனால் அவரின் அலசல்களும் அணுகுமுறையும் எனக்குப் பிடிக்கும்

Amudhavan said...

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி உலவு.

Kandumany Veluppillai Rudra said...

சிவகுமார் நல்ல நடிகர் மட்டுமல்ல,நல்ல படைப்பாளியுங்க்கூட என்பதை நிருபித்துள்ளார்.அவரின் கடவுள் பற்றிய வாதம் அருமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நெஞ்சில் வாங்கிய கத்திக்குத்து இதயத்தைத் துளைத்துவிட்டதா, நுரையீரலைத் துளைத்துவிட்டதா? என்று தெரியாத புரியாத நிலையில் ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழலில், மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடம்பில் கத்திவைக்கும் முன் “இறைவா! எப்படியாவது என்னைக் காப்பாற்று” என்று குத்துப்பட்ட மனிதன் கும்பிடவில்லை என்றால் அந்த நாத்திகனை நாமும் கும்பிடலாம்//
அருமையான கருத்துக்கள்.
மனதுக்குள் சாமிகும்பிடும்; மஞ்சள் துண்டுக்காரரை நினைத்து எழுதியதோ?

Post a Comment