இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் செய்துகொள்வது நல்லதா? பெற்றோர் பார்த்த ஆணையோ பெண்ணையோ மணப்பது நல்லதா?-என்ற முக்கியமான கேள்விக்கான விடையைச் சொல்கிறார் சிவகுமார்.
காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதையுண்டாம்
கானமுண்டாம் சிற்ப முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே-
என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே காதலின் அவசியத்தை, சிறப்பை பாரதி கூறிவிட்டுப்போய்விட்டான். உடல் சேர்க்கையின் துவக்கம்தான் காதல் என்று வாதிட்டாலும் உடல் சேர்க்கை சில நிமிடங்களில் முடிந்துவிடக்கூடியது. கூடியதும் பிரியக்கூடியது. உடல் சேர்க்கைக்கு முந்தைய காதல் உயிர்ப்பானது. மனதை குதூகலம் அடையச்செய்யக்கூடியது. கலைகள் கற்பனைகள் விரிய அது உதவிசெய்யும்.
காதல் என்ற ஒன்று இல்லையென்றால் பிறவி பாலைவன வாழ்க்கையாகிவிடும். சங்க இலக்கியத்திலேயே கற்பு ஒழுக்கம், களவு ஒழுக்கம் என்று இரண்டு பிரிவுகள் இருந்திருக்கின்றன. பெற்றோர் பார்த்து மணந்துகொள்வது, திருமணத்திற்கு முன் சந்தித்து நட்பு கொண்டு அன்பு காட்டி அது காதலாகி இருமனங்கள் இணைந்தபின் பெற்றோருக்குத் தெரியாமலோ தெரிந்தோ திருமணத்தில் இணைவது.
ஆனால் நீண்ட நெடுங்காலம் பெற்றோர் பார்த்து நடத்திவைத்த திருமணங்களே நடந்திருக்கின்றன. இனவிருத்தி- வாரிசு உரிமைக் கொண்டாட குடும்பம் என்ற அமைப்பும் அதன் மூலம் குழந்தை பெறுதலும் நிகழ்ந்து வந்துள்ளன.
2500 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப அமைப்பு வேர்விடும் சூழலில் சாக்ரடீஸின் சீடன் பிளேட்டோ ஒரு தியரி கொண்டுவர முயற்சித்தான். அதாவது உலகில் வருங்காலத்தில் பிறப்போர் எல்லாம் அறிவாளிகள், அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பலசாலிகளாகப் பிறக்க ஒரு வழி இருக்கிறது.
அழகும் இளமையும் ஆரோக்கியமான உடலும் உள்ள பெண்களைத் தேர்வு செய்து, பொது இடத்தில் அவர்களைச் சேர்த்துப் பராமரித்து- தற்காலத்தில் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் மேதைகளை அந்தப் பெண்களுடன் கூட வைத்து குழந்தைப் பிறக்கச் செய்தால் உலகெங்கும் மேதைகளே நிறைந்திருப்பார்கள்.
கொசு உற்பத்தி செய்வதுபோல பூமிக்குப் பாரமாக மனிதக்கூட்டத்தை உற்பத்தி செய்வது வீண்வேலை என்று ஒரு யோசனை சொன்னான்.
அந்தக் கோரிக்கையைக் கேட்ட இன்னொரு அறிஞன், ‘எல்லாம் சரி; மேதைகளுக்குப் பிறப்பவர்கள் மேதைகளாக இருப்பார்கள். பாடகனுக்குப் பிறப்பவன் பாடகனாக வருவான். ஓவியனுக்குப் பிறந்தவன் ஓவியனாக வருவான். புத்திசாலிக்கு இன்னொரு புத்திசாலிதான் பிறப்பான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?’ என்று குறுக்குக் கேள்வி போட்டான்.
ஆசிரியர் பிள்ளை மக்காகவும், பலசாலிப்பிள்ளை நோஞ்சானாகவும் பிறக்க வாய்ப்பிருக்கிறதே என்றான்.
அப்படி ஒரு புண்ணியவான் பிளேட்டோ திட்டத்தை முறியடித்ததால் ஈ எறும்புக்குப் போட்டியாக நீங்களும் நானும் பிறந்து இன்று பூமிக்குப் பெரும் பாரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தனியுடைமை என்று தோன்றிய காலகட்டத்தில், இது என் நிலம், இது என் வீடு, இது என் மனைவி, இவர்கள் என் பிள்ளைகள் என்ற உணர்வுடன் பொதுச்சொத்துக்களை, பொது மகளிரைப் பிரித்து தன் உடைமை ஆக்கிக்கொண்டான் மனிதன்.
அன்று துவங்கியது- பெண் பார்த்து மணந்துகொள்வது- பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைப்பது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண் ஆதிக்கம் தொடர்ந்த காரணத்தால், மனைவியாக வந்தவளை, பல்வேறு கோணங்களில் கணவன் துன்புறுத்தி அடிமையாக வைத்திருந்திருக்கிறான்.
அவன் விருப்பமே முக்கியம். அவன் முடிவே இறுதியான முடிவு. அவன் உறவுகளே முதன்மையான உறவுகள் என்று பெண்ணின் உணர்வுகளைத் தீய்த்தே வைத்திருந்திருக்கிறான்.
அவன் மனைவி என்பதற்கு அடையாளமாக அவள் கழுத்தில் தாலி இருக்கும். இவள் கணவன் அவன் என்பதற்கு அவன் உடம்பில் எந்த அடையாளமும் இருக்காது.
திருமணமானதும் பெற்றோர் பாசம், உடன்பிறப்புக்களின் அன்பு, பிறந்த ஊரின் தொடர்பு, நண்பர்களின் சினேகம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அனைத்தையும் அவள் தியாகம் செய்துவிட்டு, கணவனோடு அவன் கொள்கைகளோடு, முரண்டு பிடிக்கும் அவன் பெற்றோர்கள், முசுடுகளான அவன் உடன்பிறப்புக்களோடு இவள் சமரசம் செய்துகொண்டு யார் மீதும் குற்றம் சுமத்தாது வாய் இருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் ஜடமாக வாழவேண்டும்.
போதாக்குறைக்கு படிப்பு வேறு கிடையாது. சுயமாக அவள் எதையும் சிந்திக்க முடியாது. திருமணம் செய்துகொடுத்ததோடு பெற்றவர்கள் கடமை முடிந்துவிட்டது. பிறந்த வீட்டு வாசல் நமக்கு மூடப்பட்டுவிட்டது என்ற உணர்வோடு வாழ்வு சாவு எதுவாக இருந்தாலும் புகுந்த வீட்டில்தான் அவளுக்கு இனி நடக்கவேண்டும்......இப்படித்தான் கடந்த ஐம்பது ஆண்டு காலம்வரை இந்தியப்பெண்களின் வாழ்க்கை நடந்துவந்திருக்கிறது. கேவலம் ஓட்டளிக்கும் உரிமையைக்கூட நாகரிகம் பேசும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, பிரான்சோ பெண்களுக்கு முதலில் கொடுக்கவில்லை. நியூசிலாந்துதான் கொடுத்தது.
இன்று உலகெங்கும் பெண்கள் கவனமாகப் படிக்கத்தொடங்கிவிட்டனர். கல்வியில் மட்டுமல்ல, பொது அறிவில், பிரச்சினைகளைக் கையாளுவதில், மனோவலிமையில் ஆண்களைவிடப் பலமடங்கு புத்திசாலிகளாக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். அன்று புலியுடன் மோத, சிங்கத்தைச் சீண்டிவிளையாட ஆணுக்கு உடல் பலம் தேவைப்பட்டது. இன்று அதே புலியை, சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த நவீன ரக துப்பாக்கி போதும். குறி பார்த்துச் சுட ஒரு குழந்தைக்கூடப் போதும். அறுபதாயிரம் அடி உயரத்தில் பறக்கும் ஆகாய விமானத்தை ஓட்ட உடல் பலம் தேவையில்லை. சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் உள்ள இருபது வயதுப்பெண் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.........
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம்-என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்- என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாரதி கண்ட கனவு நனவாகிவருகிறது.
ஆண் இனி பெண்ணை அடிமையாக்கி காலடியில் கிடத்த முடியாது. ‘கற்பு நிலை என்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’ என்று பாரதி பாடியபடி ‘நான் ஆண், என் இஷ்டப்படி 5, 6 சின்னவீடு வைத்துக்கொள்வேன். ஆனால் நீ எனக்குமட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும்’ என்று இனி வாதாட முடியாது. அப்படிச்செய்தால், ‘நீ எனக்கு மட்டுமே கணவனாக இரு; நான் உனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கிறேன்’ என்று கேட்கும் நிலை வந்துவிட்டது.
பெண்களுக்கு கல்வி கிடைத்துவிட்டது, வேலை கிடைத்துவிட்டது, கை நிறைய பணம் கிடைக்கிறது, சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் வந்துவிட்டது, தனியே உலகில் வாழ முடியும் என்ற தைரியம் வந்துவிட்டது-
இனிமேல் காதல் திருமணங்கள் நடைபெறவே எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது!
வீட்டுக்குள்ளேயே பெண்கள் அடைந்து கிடந்தால், பூப்பு நன்னீராட்டு விழா என்று ஒரு சடங்கு செய்து, ஊரைக்கூட்டி ‘என் மகள் இதோ திருமணத்துக்குத் தயாராகிவிட்டாள். பிள்ளை பெற்றவர்கள் 3, 4 ஆண்டுகள் கழித்துப் பெண் கேட்டுவரலாம். என்று தண்டோரா போடவேண்டி வந்தது.
இன்று 80 சதம் பெண்கள் படித்து முடித்து வேலைக்கும் போகிறார்கள். வேலைப்பார்க்கும் இடத்தில் பல தரப்பட்ட ஆண்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் இருக்கிறது. ஒரு நாளில் பெரும்பகுதி அந்த ஆண், அல்லது பெண்ணுடன் தொழில் செய்யும் சூழலில் தன் வருங்கால வாழ்க்கைக்கு ஏற்றவர் யார் என்று இருவருமே முடிவு செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
எனவே, பெற்றோர் பெண் தேடி, வரன் தேடி அலையும் அலைச்சல் இன்னும் 20 ஆண்டுகளுக்குப்பின் இருக்காது.
கல்வியும் பொருளாதாரமும் மேம்படுகிறபோது சாதி மத பேதம் அதன் வீரியத்தை இழந்துவிடும்.
இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த I.P.S, I.A.S அதிகாரிகள் உயர்ந்த சாதிப்பெண்களை, பெரும்பாலும் பிராமணப் பெண்களை கலப்புத்திருமணம் செய்திருக்கிறார்கள்.
இது வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் நிகழும்.
இன்று காதல் திருமணம் செய்பவர்கள் காதல் திருமண வாழ்க்கைக்கு முன்னோடிகள். அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது.
அல்ப காரணங்களுக்காக கோர்ட்டில் விவாகரத்து கேட்டு நிற்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்து, வெற்றிகரமாக வாழ்ந்து வருங்காலத்தில் காதல் திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும்.
யாரும் யாரையும் அடிமைப்படுத்த வேண்டாம். கணவன் திறமையை, கம்பீரத்தை, அன்பை மனைவி மதிக்கட்டும். மனைவியின் அழகை, அறிவை, அதிக சம்பாத்தியத்தை பெருந்தன்மையோடு கணவன் ஏற்று மதித்து அவளைக் கொண்டாடட்டும்.
என்னதான் படித்து எவ்வளவு சம்பாதித்தாலும் கணவனோடு வாழ்ந்திட, தன் கடந்த கால உறவுகளை, சந்தோஷங்களை துறந்து வரும் பெண் உண்மையில் ஒரு தியாகி!
அவளை நெஞ்சில் வைத்துக் கொண்டாட வேண்டியது ஒரு யோக்கியமான ஆணின் கடமை.
3 comments :
Very practical approach & presented it very well...fantastic guideline for new generation especially the bottom line....
regards
vasanthi babu
வருகைக்கு நன்றி.தாங்கள் சொல்லியிருப்பதுபோல் கடைசி வரி பிரமாதம்.
this is what happened in my life. 20 years passed. still i am happy. satisfied. kudos to my husband. Shri Sivakumar expressed the views in the right way.- lalithambal
Post a Comment