Monday, April 11, 2011

கலைஞரா...? ஜெயலலிதாவா...?


தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கலைஞரா ஜெயலலிதாவா என்ற கேள்வி நான்குபுறமும் தகித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்களும் வலைத்தளங்களும் தெளிவான இறுதியான முடிவை எடுத்துவிட்டு அதனைப் பெருங்குரலில் பரப்பிக்கொண்டும் இருக்கின்றன. ‘கலைஞர் உடனடியாகத் தோற்கடிக்கப்பட்டு ஜெயலலிதா உடனடியாக அரியணை ஏறியாகவேண்டும்’ என்ற முடிவை தொண்ணூறு சதம் ஊடகங்களும், தொண்ணூற்றொன்பது சதம் வலைப்பூக்களும் பேரொலியாக உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கின்றன.

கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களாக ஈழ விவகாரத்தில் அவர் நடந்துகொண்டவிதம், ஸ்பெக்ட்ரம் விவகாரம், குடும்ப ஆதிக்கம் என்ற மூன்று விஷயங்கள் பிரதானமாக வைக்கப்படுகின்றன.

இலவசங்களை அள்ளிக்கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும், ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டு தேர்தல்களில் வெல்கிறார் என்பதும் இவர்மீது வைக்கப்படும் மேலும் சில குற்றச்சாட்டுகள்.
வெளிப்படையாகப் பார்க்கும்போது இவை அத்தனையுமே தவறுகள்தாம் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதே சமயம் ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றத்துடிக்கும் அறிவுஜீவிகள் அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்கு எந்த வலுவான காரணத்தையும் கூறுவதாக இல்லை. கருணாநிதி தோற்கடிக்கப்படவேண்டும், ஜெயலலிதா அரியணை ஏற வேண்டும் என்பதுமட்டும்தான் அவர்களுடைய வாதமும் எதிர்பார்ப்பும். இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கலைஞர் மீது இவர்கள் இப்போது சொல்லும் ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம் போன்ற காரணங்கள் இல்லாமல் இருந்திருந்தால்கூட இவர்கள் ‘கருணாநிதி தோற்கவேண்டும்’ என்ற வாதத்தை முழக்கமாக்கிக்கொண்டு வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்களில் ஒரேயொரு பிரிவினர்தான் புதிதாகச் சேர்ந்திருப்பவர்கள்.
எதிர்ப்பாளர்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம்.

1) இன மத துவேஷம் காரணமாக கருணாநிதியை எப்போதுமே எதிர்ப்பவர்கள்....சோ ராமசாமி, குருமூர்த்தி, இந்து, தினமலர், ராமகோபாலன் போன்றவர்கள் இதில் அடக்கம்.

2) எம்ஜிஆரின் ஏகாதிபத்திய ரசிகத்தன்மைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட ரசிகர்கள், அரசியல் மற்றும் கட்சி சார்ந்தவர்களும் இதில் அடக்கம்.

3) தமிழ் உணர்வில் ஈர்க்கப்பட்டு அண்ணா, கலைஞர் என்று நெஞ்சில் வைத்திருந்து..பின்னர் பிரபாகரன் விசுவரூபம் எடுத்ததும் தங்களின் தலைவனாக பிரபாகரனை வரித்துக்கொண்டவர்கள்... இவர்கள்தாம் புதிய பிரிவினர்.

4) தினசரிகளையும் செய்திச்சேனல்களையும் பார்த்து தங்களுக்கான பொதுவாழ்வு மற்றும் அரசியல் கூர்மைகளை தினசரி பெறுகிறவர்கள்.. என்று இந்த நான்கு விதத்தினர்தாம் கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இவர்களில் முதல் இரண்டு வகையினர் எந்தக் காரணத்திற்காகவும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்கிறவர்கள் அல்ல. தாங்கள் சார்ந்த அரசியல் பற்று காரணமாகவும், எம்ஜிஆர் மீதுள்ள அதீதமான மோகம் காரணமாகவும் கடைசி வரைக்கும் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்ஜிஆரின் விசுவாசிகளாகவும்தாம் இரண்டாவது வகையினர் எப்போதுமே இருப்பார்கள்.

இவர்களில் முதல்வகையினரின் எதிர்ப்பும் ஆற்றலும்தாம் விபரீதமானவை. தாங்கள் நினைத்ததை மக்களிடம் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும், மக்களையோ ஒட்டுமொத்த சமுதாயத்தையோ தங்களின் இசைவுக்கு ஏற்ப எப்படியெல்லாம் திசைதிருப்ப வேண்டும் என்பதும் இவர்களுக்குக் கைவந்த கலை. அரசியலமைப்பு ஆட்சித்துறை அதிகார மையங்கள் சட்டத்துறை ஊடகங்கள் என்று மக்களை ஆட்டுவிக்கும் அத்தனைத் துறைகளும் இவர்கள் கைவசம் இருப்பதால் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளும் வல்லமை இவர்களுக்கு அபரிமிதமாக உண்டு.

கருணாநிதிக்கு எதிரான மிகப்பெரிய கரும்புள்ளியாய் ஆ.ராசாவை மக்களுக்கு இன்றைக்கு காட்டியிருப்பதில் இவர்களின் பங்கு மிகப்பெரியது. ராசா குற்றமற்றவர் என்றோ, ஸ்பெக்ட்ரமில் ஊழல் நடக்கவில்லையென்றோ சொல்லவரவில்லை. அல்லது இன்றைய அமைச்சர்களில்- அமைச்சர்கள் என்றால் நமது மாநிலத்தில் இருக்கிறவர்கள் மட்டுமல்ல; மத்தியிலே ஆளுகிறவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் ஆளும் அமைச்சர்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் ஒரேயொரு வார்த்தைதான் சொல்லமுடியும். எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதையின் தலைப்பு ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடர்கள் அல்ல;’ ராசா அகப்பட்டுக் கொண்டார் அவ்வளவுதான்!

இந்தியாவில் உள்ள பரிசுத்தவான்களின் அத்தனைத் துப்பாக்கிகளும் இன்றைக்கு ராசாவை நோக்கியும் கருணாநிதியை நோக்கியும் திருப்பப்பட்டுவிட்டன. இதில் அரைவேக்காட்டுத்தன புத்திகொண்ட காங்கிரஸ்காரனின் கைங்கர்யம் வேறு.

சோ போன்றவர்கள் கருணாநிதியை எதிர்ப்பது ஒன்றும் புதிதல்ல. சோவுக்கு அதிமேதாவி என்றதொரு பிம்பம் இருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் தமிழகத்து அரசியலைப்பற்றிக் கருத்துச்சொல்லும் மேதையாக இன்றைக்கும் சோவைத்தான் கருதுகிறார்கள். சோவை விட ஆழமாகவும் அழகாகவும் கருத்துரைக்க எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவிட்ட நட்பு அல்லது வேறுசில தொடர்புகள் காரணமாக இன்றைக்கும் சோவைத்தான் ஆங்கில ஊடகங்கள் நாடுகின்றன. கருணாநிதி எதிர்ப்பை விட்டுவிடுவோம். இவற்றில் ஒரேயொரு முறைகூட தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனம் என்றவற்றைச் சார்ந்தோ அல்லது தமிழனுக்கு ஆதரவான ஒற்றை வார்த்தையையோகூட சோ இதுவரை தவறியும்கூட உச்சரித்ததில்லை.

கருணாநிதி பற்றிக் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவரது அறிவுக்கூர்மை குறித்தோ, அரசியலில் அவருக்கிருக்கும் ராஜதந்திரம் குறித்தோ, அவரது இலக்கிய மேதைமை குறித்தோ, படைப்பாற்றலில் அவருக்கிருக்கும் திறமை குறித்தோ எவரும் வியக்கவே செய்வர். இந்த விஷயங்களில் யாரையும் அவருக்கிணையாகச் சொல்வதற்கில்லை. ஆனால் சோ போன்றவர்கள் இப்படிப்பட்ட கருணாநிதியைக் கொச்சைப்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளும் விஷயம் மிகவும் அற்பமான ஒன்று.

எப்போது பார்த்தாலும் அல்லது அடிக்கடி இவரே ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வார். ‘கருணாநிதியைவிட ஜெயலலிதா எந்த வகையில் மேலானவர்? அல்லது சிறந்தவர்?’ என்பது
கேள்வி.

இந்தக் கேள்விக்கு சோ சொல்லும் பதில்-‘கருணாநிதிக்கு ஆங்கிலம் தெரியாது. ஜெயலலிதாவுக்கு மிக நன்றாக ஆங்கிலம் தெரியும். எனவே இந்த வகையில் கருணாநிதியைவிட ஜெயலலிதா எவ்வளவோ மேலானவர்.’

இதைவிட அபத்தமான ஒரு பதிலை அற்பபுத்தி படைத்தவன்கூடச் சொல்லமாட்டான். நீண்ட காலத்துக்குச் சோ இந்த பதிலையே சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் சொல்லுவதில்லை. ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அதிகமில்லாமல் இருந்தபோது சொன்ன பதில் இது. இப்போதெல்லாம் கருணாநிதி வீட்டுச் சின்ன குழந்தைகள் எல்லாம்கூட ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டனர். நம்முடைய வீட்டிலும் பிள்ளைகள் எல்லாம் சோவைவிட நல்ல ஆங்கிலம் பேசுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொதுவாழ்க்கையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மிக அழகிய ஆங்கிலம், ஜெயலலிதாவை விடவும் அழகாகப் பேசுகிறார். வடக்கத்திய ஊடகங்கள் அடிக்கடி ஜெயந்தி நடராஜன் ஆங்கிலத்தில் பேசும் பேச்சுக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டதும் இனிமேல் இந்தப் பருப்பு வேகாது என்ற எண்ணத்தில் இந்த பதிலைத் தவிர்த்துவிட்டார் சோ.

இது என்னவிதமான ஆங்கில மோகம் என்னவிதமான அடிமைத்தனம் என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய சுற்றுப்பயணத்துக்கு வந்தார். பத்திரிகைகள் எல்லாம் சார்லஸ் வருகையைப்பற்றி அதிகமான செய்திகளை வெளியிட்டன. உடனே வந்ததே கோபம் சோவுக்கு. பேனாவைத் திறந்து கொட்டித் தீர்த்துவிட்டார். ‘இன்னமும் இவர்களுக்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சியின் மோகமும் அடிமைத்தனமும் போகவேயில்லை. அவர்கள் விட்டுச்சென்ற மிச்சங்களைக் கட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கும் அடிமைகளாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். எப்போதுதான் இவர்களுக்கெல்லாம் புத்திவருமோ?’ என்றெல்லாம் போட்டுக்காய்ச்சி எடுத்திருந்தார். பரவாயில்லையே மனிதர் பல விஷயங்களில் ஒருபக்கச் சார்புடன் இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களில் சரியான வாதங்களையே முன்வைக்கிறாரே என்று தோன்றிற்று.

அடுத்து வந்தது கிரிக்கெட் மேட்ச் சீசன்...அடாடா அதே இங்கிலாந்து நம்மிடம் விட்டுச்சென்ற அந்த ஆட்டத்தை சிலாகித்தும் அதற்குத்தான் பரம ரசிகராக இருந்து அந்த ஆட்டத்துக்கும் ஆட்டக்காரர்களுக்கும் துதிபாடுவதையும் ஆரம்பித்தார் பாருங்கள்..அப்போதுதான் இந்த மனிதரின் மனதிலும் படிந்துவிட்டிருந்த ஆங்கிலேய மோகமும் அடிமைத்தனத்தின் எச்சங்களும் பல்லையிளித்தன. இவர் கருத்துப்படி கருணாநிதியைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்தான் நாட்டை ஆள தகுதியானவர் என்றால் ஜெயலலிதாவைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்த சிறுமிகள் ஒவ்வொரு கான்வென்டிலும் நூறுபேராவது தேறுவார்கள்.
சோவைப்பற்றி இந்த அளவுக்கு இங்கே எடுத்துக்கொண்டு விமர்சிப்பதற்கு காரணம் பல தேர்தல்களின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் தம்மை வரித்துக்கொண்டு செயல்படுவதும், பல சமயங்களில் அவை செயல்வடிவமும் பெற்றுவிடுவதாலும்தான்.

இதோ, இந்தமுறைகூட கருணாநிதியின் அணியை எதிர்த்து எம்மாதிரி அணி அமையவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக சோ தான் இருந்திருக்கிறார். ஜெயலலிதா அணியில் பெரும்பாடுபட்டு விஜயகாந்த்தைக் கொண்டுபோய்ச் சேர்த்ததிலும் இரண்டு கம்யூனிஸ்டுகளைக் கொண்டுவந்து சேர்த்ததிலும் சோவின் பங்கு கணிசமானது.

விஜயகாந்த்தின் இன்றைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது சோ அவரை அறியாமலேயே தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் செய்திருக்கிறாரோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.
எம்ஜிஆரைப்பற்றி விரிவாகப்பேசாமல் சிறு குறிப்புடன் நிறுத்திக்கொள்வோம். எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியிலே இருக்கும் பிம்பம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அவர்
ஏழைப்பங்காளன் என்பதும் கொடைவள்ளல் என்பதும் வாரிவாரி வழங்குபவர் என்பதும்தான். இதுபற்றிய விரிவான விவாதங்களைப் பிறிதொரு சமயத்தில் வைத்துக்கொள்வோம். அதனால்தான் அவர் ஆட்சிக்கு வந்ததும் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்டு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த இலவச மதிய உணவு திட்டத்தை மறுபடியும் கொண்டுவந்தார். அதுவும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற செய்தி முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டு எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாக மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த இலவச உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்த பிறகு வந்த தேர்தல்களில் அவர் கட்சிக்கான ஓட்டு கணிசமாக உயர்ந்தது. கூடவே, அவர் ஆட்சிபுரிந்த சமயங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மக்களுக்குப் பணமும் இலவசங்களும் தாராளமாக வழங்கப்பட்டன. இவையெல்லாவற்றையும் அந்த நாட்களின் தினசரிகளைப் படித்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். லட்டுக்குள் மூக்குத்தி, எவர்சில்வர் குடங்கள் என்றெல்லாம் அப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்ட தகவல்கள் அத்தனையும் அன்றைய பத்திரிகைகளில் பிரசித்தம். அல்லது ஜூனியர் விகடன் பழைய இதழ்களின் கோப்புக்களைப் பார்த்தாலும் தெரிந்துகொள்ளலாம். ஆக, இதெல்லாம் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது மாத்திரமின்றி மக்களின் மன இயல்பும் அவர்களின் எதிர்பார்ப்பும் இதுதான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தன.

வெறும் கொள்கை, கோட்பாடு, தமிழர்க்கான உரிமைகள், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் என்று மட்டுமே பேசியும் எழுதியும் இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதைக் கலைஞர் புரிந்துகொண்ட தருணம் இதுவே. பேச்சைக்கேட்டுவிட்டு, உடன்பிறப்புக்கான கடிதத்தைப் படித்துவிட்டு ஓட்டுப்போட்ட காலம் மலை ஏறிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டார் அவர். இலவசங்களை எடுத்துவிட்டார். ஸ்டாலின் மூலம் மகளிர் அணியினருக்குப் போய்ச்சேரவேண்டிய பலன்களை முடுக்கிவிட்டார்.

மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ, வள்ளலாரின் வாரிசுகளோ இல்லை. கொஞ்சம் முரட்டுத்தன அரசியலுக்குப் பெயர்போனவர்கள். இவரகளின் கையிலிருக்கும் மதுரையை மீட்க வேண்டும் என்ன செய்யலாம்? அனுப்பு அழகிரியை அங்கே...என்று முடிவெடுத்து அழகிரியை அங்கே அனுப்பிவைக்கிறார்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரை அந்தப் பிடிகளிலிருந்து முழுவதுமாக மீட்கப்படுகிறது. முற்றாக அழகிரியின் கைகளுக்குள் வருகிறது.

அரசியல் வரலாற்றில் இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல;

சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல. சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.

ஆக, இலவசங்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் மற்ற அரசியல்வாதிகளைப்போன்றே இத்தனைக்காலமும் அரசியல் நடத்திக்கொண்டிருந்த கலைஞரை இலவசங்களை நோக்கித் தள்ளியதும்,
முரட்டுத்தனம் காட்டித்தான் மதுரையில் அரசியல் நடத்த முடியும் வேறுவழியில்லை என்பதும் காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இவற்றிற்கான பங்களிப்பு கணிசமாக எம்ஜிஆரின் அரசியலுக்கும் அவர் காலத்தில் கலைஞர் பெற்ற தொடர்ச்சியான தோல்விகளுக்கும் இருக்கிறது.

அடுத்து, இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் குறித்து எந்தத் தமிழனும் அவரைப் பாராட்டமாட்டான். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவரும் மத்திய அரசும் நடந்துகொண்ட விதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதற்காக இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் போக்கையும் நியாயப்படுத்த முடியாது.

இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் நியாயமற்றது என்று சொல்லும் அதே நேரத்தில் வேறு சில விஷயங்களையும் கவனிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இலங்கை விவகாரம் ஒன்றிற்காக மட்டுமே அவர் இரண்டுமுறை ஆட்சியை விட்டு இறங்கியிருக்கிறார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. அப்படி ஆட்சியை அவர் பறிகொடுத்த சமயத்தில் அவர் பின்னால் அத்தனைத் தமிழ் சமூகமும் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்பதும் அவருக்குப்பின்னால் ஒரே குரலில் அணிசேரவில்லை என்பதையும் சௌகரியமாக மறந்துவிடக்கூடாது.

இலங்கை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே தனித்தனிக் குழுக்களாகப் போராளிக்குழுக்கள் தமிழகம் வந்து ஆதரவு திரட்டியபோது யார்யார் எந்தெந்தத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்களோ அவரவர் அந்தந்தத் தலைவர்களுடனேயே நட்பைத் தொடர்ந்தார்கள். அப்படித்தான் முகுந்தனும், பாலகுமாரும், சிறீசபாரத்தினமும், பத்மநாபாவும், பிரபாகரனும் வெவ்வேறு தலைவர்களுடன்தான் நட்பு பூண்டார்கள். பின்னாளில் இவர்களில் பிரபாகரன் மட்டுமே வானளாவிய வலிமையுடன் உயர்ந்து நின்றார். ஆனால் பிரபாகரன் ஆரம்பத்திலேயே எம்ஜிஆருடன் நட்புகொண்டுவிட்ட காரணத்தால் கலைஞரைப் பிரபாகரன் புறக்கணித்ததும், பிரபாகரனைக் கலைஞர் புறக்கணித்ததும் மாறி மாறி நடந்தது.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் நிலைகள் மாறியபோது பிரபாகரனுடனான கலைஞரின் தொடர்புகளோ அல்லது கலைஞருடனான பிரபாகரனின் தொடர்புகளோ நிச்சயம் மறுபரிசீலனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்ததாகத் தகவல்கள் இல்லை. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு. பிரபாகரனுக்கு வேண்டியவர்களாக இங்கு இருந்த சில தலைவர்களும் கலைஞருக்கும் பிரபாகரனுக்கும் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அல்லது பிரபாகரன் தரப்பில் வெளிநாடுகளில் இருந்தாவது கலைஞரிடம் ஒரு நல்ல நட்பைப் பேணியிருக்கவேண்டும். அதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அதனைத்தொடர்ந்து ராஜிவ் காந்தியின் மரணம். குற்றவாளிகள் யாரோ பழி என்னவோ கலைஞர் தலையில் விழுந்தது. தேர்தல் முடிவு என்னவென்றால் 234 தொகுதிகளில் திமுகவுக்கு ஒரேயொரு இடம்.

என்ன செய்யலாம் கருணாநிதி?

ராஜிவ் மரணத்தின் தாக்கமெல்லாம் குறைந்து இலங்கையில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருக்கும் நிலைமைகள் இருந்தபோது மறுபடி கலைஞர் இங்கே ஆட்சிபீடம் ஏறினார். அதன்பிறகாவது பிரபாகரனுக்கும் கலைஞருக்கும் நல்லதொரு தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். அதற்குபதில் அவருக்கும் இவருக்குமான ego clash ஐ உருவாக்கிவிட்டு இரண்டுபேருக்கும் எவ்விதமான புரிதலும் ஏற்படாமல் இங்குள்ள தலைவர்கள் சிலர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தொடர்ந்து வந்துவிட்டது முள்ளிவாய்க்கால். விளைவுகள் இத்தனை மோசமாக இருக்கும் என்பதை கருணாநிதியே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தம்முடைய கடிதங்களுக்கோ, அல்லது ‘உண்ணாவிரதத்துக்கோ’ மத்திய அரசு செவி சாய்க்கும் என்றுதான் நினைத்தார் அவர். இலங்கை விவகாரத்தில் இவருடைய வார்த்தைகளுக்கு சல்லிக்காசு மரியாதையும் இல்லை என்ற அதிர்ச்சியான பதிலைத்தான் ‘சென்ட்ரல்’ இவருக்குத் தெரிவித்தது. இவர் கையில் இருந்தது ஒரேயொரு அஸ்திரம்தான். மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் கோரக்கொடுமைகள் நின்றிருக்குமோ இல்லையோ, இவரது பெயர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அதன் தொடர்ச்சியாக இங்கிருக்கும் எதிர்க்கட்சியுடன் சேர்ந்துகொண்டு தன்னையும் தன்குடும்பத்தையும் படுத்தப்போகும் பாட்டை அவர் யோசித்துப் பார்த்திருக்கவேண்டும். மத்திய அரசுடன் ஒத்துப்போய்விடுவது என்ற தவறான முடிவுக்குத்தான் அவரால் வரமுடிந்தது.

சகோதர யுத்தம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்ற பலவீனமான காரணத்தைச் சொல்லத்தொடங்கினார். முரசொலியை நாள்தவறாமல் அறுபது வருடங்களுக்கும் மேலாகப்படித்துக்கொண்டிருக்கும் கடைநிலை உடன்பிறப்புக்கூட இதை ஒப்புக்கொள்ளமாட்டான் என்று அவருக்கே தெரியும்.

அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ஒருமுறை சொன்னார். “நான் சூழ்நிலைகளின் கைதி” என்று. இன்று அது இவருக்குத்தான் நூறு சதம் பொருந்துகிறது.

இலவசங்கள், இலங்கைப் பிரச்சினைக்கடுத்து குடும்ப ஆதிக்கம் என்ற ஒன்றும் கருணாநிதிக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கில் அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாம் மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டோமானால் அங்கு அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் எல்லாரும் டீக்கடையோ அல்லது பெட்டிக்கடையோதான் வைத்திருக்கிறார்கள். அசாமிலும் குஜராத்திலும் அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் மூட்டை தூக்கித்தான் பிழைக்கிறார்கள். இங்கே கர்நாடகத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் எல்லோரும் கட்டடம் கட்டும் இடத்தில் கொல்லத்து வேலைதான் செய்கிறார்கள். இவ்வளவு ஏன்? ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த தம்பிதுரை, செங்கோட்டையன், பன்னீர்செல்வம், வளர்மதி, மதுசூதனன் இன்னபிறரும் அவர்களது உறவினர்களும் தினக்கூலிக்குத்தான் வேலைப்பார்க்கிறார்கள். கருணாநிதி குடும்பம் மட்டும்தான் ஆட்சியை உபயோகித்து கோடிகளில் புரள்கிறார்கள்.....

உண்மை என்னவென்று பார்த்தோமானால் சாதாரண ரத்தத்தின் ரத்தங்களெல்லாம் மிகப்பெரிய ‘கல்வித்தந்தைகளாக’ உருமாற்றம் கொண்டது எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் ஏகப்பட்ட கல்வித்தந்தைகள் உருவாகி நாடெங்கும் கல்விக்கோவில்களைப் பெருக்கினார்கள். மணல் ராஜாக்கள் உருவானார்கள். அந்த பிசினஸ் இந்த பிசினஸ் என்று கல்லா கட்டினார்கள். இவையெல்லாம் பொதுமக்களின் விவாதத்திற்கு வராத விஷயங்கள். ஆனால் சினிமா என்பது அப்படியல்ல. சினிமா என்பதும் பத்திரிகை என்பதும் சேனல்கள் என்பதும் பொதுமக்களின் கண்முன்னாடியே இருக்கின்ற விஷயங்கள். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனைப்பேரும் இதே தொழிலில் இறங்கியதும், ஒவ்வொரு படத்துக்கும் கதாநாயகனுடனும் கதாநாயகியுடனும் சேனலில் தோன்றி பேட்டி கொடுத்ததுவும் இன்று இவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருக்கிறது அவ்வளவுதான்.

மற்றபடி உறவினர்களின் ஆதிக்கம் என்பது என்னதான் இருந்தாலும் வளர்ப்பு மகன் திருமணத்தை மைசூர் தசரா ஊர்வலம் போல் நடத்திக்காட்டினாரே ஜெயலலிதா அப்படியெல்லாம் தறிகெட்டுப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாகவே இருக்கிறோம். (அதிலும் அந்தத் திருமணத்தின்போது உலகப்புகழ்பெற்ற அந்த மகாநடிகன் சிவாஜிகணேசன் எழுந்து நின்று ஜெயலலிதாவைப் பார்த்து முதுகு வளைந்து ஒரு கூழைக்கும்பிடு போடும் போட்டோவைப் பார்த்து-அந்த மனிதனுக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்திய ஜெயலலிதாவை நினைத்து நெஞ்சுபிளக்காத சிவாஜி ரசிகர்கள் இருக்கமுடியாது.)

இப்போது தேர்தல்!

கலைஞரின் தவறுகள் தெரிகின்றன. சரி கலைஞரைத் தோற்கடித்துவிடுவோம். ஆனால் அவருக்குப்பதில் யார்? என்பதைச் சொல்லவேண்டிய கடமையும் கட்டாயமும் இருக்கிறது.
கலைஞரைத் தோற்கடித்த இடத்திற்கு எளிமையும் பண்புமாய் இந்த நாட்களிலும் வலம்வரும் தலைவர் நல்லகண்ணு வருவாரா?

எம்எல்ஏக்களிலேயே இவர்போல் யாரும் இவ்வளவு எளிமையாய் இருந்ததில்லை. சட்டமன்ற விடுதியைக் காலி செய்யும்போது ஒரு காட்டன் பையில் வேட்டியையும் சட்டையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் நன்மாறன் என்று இன்னொரு கம்யூ. உறுப்பினரைப்பற்றி பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அந்த நன்மாறன் வருவாரா?

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை உலகிலுள்ள தொண்ணூறு சதம் தமிழர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரே தமிழகத் தலைவர் ஐயா நெடுமாறன். அந்த நெடுமாறன் வருவாரா?
இல்லை. ஜெயலலிதாதானே வருவார்?

கலைஞருடைய தகுதிகள், பெருமைகள், திறமை, பழுத்த அனுபவம், ஞானம், ஆளுமை, இலக்கியத் தேர்ச்சி தேசத்தலைவர்களிடையே அவருக்கிருக்கும் நன்மதிப்பு, அவருக்கே உரித்தான ராஜதந்திரம் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்தால் மக்களோடு மக்களாக அவர்கள் பிரச்சினைகளுக்கு ஏற்ப அவர்களின் ஏற்றத்தாழ்வில் பங்கு பெறும் தலைவராக அவர் இருப்பாரா மாட்டாரா என்பதை முடிவு செய்பவர்களாகவே மக்கள் இருக்கவேண்டும். பதினான்கு வயதுமுதல் மக்களோடு மக்களாகவே அவர் இருக்கிறார். ஸ்டாலினும் அழகிரியும்கூட மக்களுக்கு எந்த நேரமும் கிடைக்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதனைப் படித்துக்கொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும், அல்லது இதனை எழுதும் நான் வேண்டுமானாலும் எப்போது நினைத்தாலும் கலைஞரையோ அல்லது ஸ்டாலினையோ அழகிரியையோ, பேராசிரியர் அன்பழகனையோ சென்று சந்தித்துவிட முடியும்.

ஜெயலலிதாவை அப்படிச்சென்று சந்திப்பது சாத்தியமா?

குறைந்தபட்ச மனிதப்பண்புகளோ, தனிமனித நாகரிகமோ அவரிடம் காணக்கிடைக்கிறதா?
மற்ற மக்கள் தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளை உட்காரவைத்துப் பேசும் மனப்பான்மை அவரிடம் சாத்தியமா?

சாத்தியமில்லையெனில் அப்படிப்பட்ட ‘மக்கள்தலைவர்’ மக்களுக்கு எதற்கு? அவர்பாட்டுக்கு ராஜவாழ்க்கை வாழ்வதற்கும், அவரது கோபதாபங்களுக்கு ஏற்ப எல்லாரையும் தண்டிப்பதற்கும், பந்தாடுவதற்கும் மட்டுமே முதல்மந்திரி பதவி என்பது ஜனநாயகத்திற்கு இழுக்கு அல்லவா?

எல்லாம் போகட்டும்.. தோல்விக்குப்பின்னர் தன்னுடைய போக்குகளை அவர் கொஞ்சமேனும் மாற்றிக்கொண்டிருக்கிறாரா?

வைகோ போன்ற ஒரு தலைவனை அவர் நடத்தியவிதம் அரசியல் பண்புகளுக்கு உகந்ததுதானா? ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவியாகவாவது கடந்த ஐந்தாண்டுகளில் அவர் நடந்துகொண்டிருக்கிறாரா?

நாம் எப்படியாவது ராஜயோக சுபவாழ்க்கை நடத்திக்கொண்டு ஜாலியாக இருப்போம். கொடநாட்டில் குளுகுளு பிரதேசத்தில் மொத்தநாட்களைக் கழிப்போம். சட்டமன்றத்துக்குப் போகவேண்டியதில்லை. மக்கள் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தவேண்டியதில்லை. தேர்தல் சமயத்தில் சென்னைக்குப்போய் ஒரு பிரச்சாரவண்டியில் ஏறிக்கொண்டு ஒரு ரவுண்ட் அடித்து எழுதிவைத்த அட்டைகளை வாசித்துக்காட்டிவிட்டு வந்தோமானால் பதவிக்கு வந்துவிடலாம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ராஜவாழ்க்கை மற்றும் எதிர்த்தவர்களைப் பந்தாடுவதற்கு வாய்ப்பு உறுதி என்று அந்த அம்மையார் நினைத்தால் அது தப்பு என்று உணர்த்தும் கடமை தமிழ்மக்களுக்கு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு விஷயம், கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஜெயலலிதா மாறுவதற்கான எந்த அறிகுறியும் அவர் செயற்பாடுகளில் இல்லை.

47 comments :

Prakash said...

Very Good Write Up

Amudhavan said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி பிரகாஷ்.

En Parvaiyil Tamil Nadu said...

பா.ம.க வேட்பாளர் படங்கள் & விவரங்கள்



இங்கே காண்க:


http://pmkmla.blogspot.com/


http://pmkmla.blogspot.com/2011/03/2011.html


http://arulgreen.blogspot.com/

VJR said...

பின்னிட்டீங்க. வாழ்த்துக்கள்.

ராஜேஷ், திருச்சி said...

Kalainjar better than Jayalalitha

Robin said...

//ஒரு விஷயம், கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஜெயலலிதா மாறுவதற்கான எந்த அறிகுறியும் அவர் செயற்பாடுகளில் இல்லை.// உண்மைதான்.

Amudhavan said...

வருகைக்கு நன்றி விஜேஆர்.

Amudhavan said...

நன்றி ராஜேஷ்

Amudhavan said...

இந்த ஒரு விஷயம்தான் நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டுகிறது ராபின். தங்கள் வருகைக்கு நன்றி.

அருள் said...

கலைஞருக்கு மாற்று செயலலிதாவா?

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்"

மனசாட்சி உள்ளோரே சிந்திப்பீர்.

Rathnavel Natarajan said...

நல்ல விரிவான நிறைய செய்திகள் அடங்கிய பதிவு. நன்கு உழைத்து எழுதியிருக்கிறீர்கள்.
நமது மக்களுக்கு மறதி அதிகம். மக்கள் மனசு மதில் மேல் பூனையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

படித்துறை பாண்டி said...

இந்த சோ(மாரி) அதிமேதாவி அங்குராசுவை எல்லாம் தமிழ் நாட்டை விட்டே தொரத்தணும்ப்ப..

அருள் said...

மிக நேர்மையான கணிப்பு.

பாராட்டுகள், நன்றி.

பல ஊடகங்கள் தமிழ்நாட்டில் ஜெ. ஆதரவு அலை வீசுவது போன்று எழுதிவருகின்றன. எப்படி யோசித்து பார்த்தாலும் அதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை. மக்கள் எதற்காக ஜெ'வுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு காரணத்தையும் என்னால் கண்டறியமுடியவில்லை.

Amudhavan said...

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ரத்னவேல் அவர்களே. பூனை நல்ல திசையை நோக்கியே குதிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Amudhavan said...

சோவை தமிழ்நாட்டைவிட்டே துரத்துவது எல்லாம் நம் கையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சோவைப்பற்றிப் புரிந்துகொண்டு நாம் எச்சரிக்கையாயிருப்பது முடியும்தானே!

Amudhavan said...

வருகைக்கு நன்றி அருள்.தங்களின் அழகான விமரிசனங்களைப் பல தளங்களில் படித்திருக்கிறேன். கையில் சரியான புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு தர்க்கரீதியான வாதங்களை வைத்து வாதம்புரிவதில் வலைத்தளங்களில் காணக்கிடைக்கும் மிகச்சிலரில் நீங்களும் ஒருவர் என்ற வகையில் உங்கள் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும் வாழ்த்துக்கள்.

Amudhavan said...

மேலே தங்களின் பெயர் விடுபட்டுப்போய்விட்டது சம்மில். தங்களின் வருகைக்கு நன்றி.

koodalindia said...

mikavum arumai

Amudhavan said...

நன்றி கூடல் இண்டியா.

Mathiseelan said...

ஜெயலலிதாவை விடவும் ஜெயந்திநடராஜன் மிக அழகாக ஆங்கிலம் பேசுகிறார் என்பதும், மிக அழகாக வாதங்களை முன்வைக்கிறார் என்ற உங்கள் அப்சர்வேஷனும் மிகவும் துல்லியமான ஒன்று. ஜெயந்தி நடராஜன் ஆங்கிலம் பேசும் முறையை ஊடகங்களில் மிகவும் ரசித்திருக்கிறேன்.

Mathiseelan said...

ஜெயலலிதா எழுதிவைத்த அட்டைகளைப் படிப்பதும் படித்ததும் எடுத்துக்கீழே போடுவதும் ஜோஸ்யக்காரக் கிளியைத்தான் நினைவு படுத்துகிறது. கிளி படிக்காமல் எடுத்துக்கீழே போடுகிறது என்பதுதான் வித்தியாசம். எப்படியோ கிளி கொடநாட்டில் ஓய்வெடுக்கப்போய்விட்டால் நல்லது.

Unknown said...

well said

marsjk said...

nice article. I had a good opinion on Gurumuruthy and after his statement on list of beneficiaries in Swiss account for which Mr. Advani had to seek an apology I realise how people manipulate. Even media like NDTV only manages news items to influence the public. Manasu valikuthu. Recently Mr Sivakumar spoke of how goverment sponsored Alcohol selling affects youth I am of the opinion that there needs to be a stong social study and devise methodologies to make public live a happy life with modest understanding for each other. I appreciate your analytical writing on the day prior to voting

Amudhavan said...

தங்களின் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி மதிசீலன். தங்களின் கிளி உவமையை ரசித்தேன். நல்ல குறும்பு ரசனை உங்களுக்கு.

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி இசை.

Amudhavan said...

marsjk தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. சிவகுமார் போன்ற நல்ல சிந்தனையுள்ள பிரபலங்கள் செலுத்தும் திசையில் இளைஞர்கூட்டம் பயணிக்க ஆரம்பித்தால்தான் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்தும். தங்கள் பாராட்டுக்களுக்கும் நன்றி.

Anonymous said...

ஒரு முற்றும் முழுதான தற்கால தமிழக அரசியல் சூழலை தளமாகக் கொண்டு, தி.மு.க மற்றும் கருணாநிதி பற்றிய அலசல். நான்கு வகை தி.மு.க எதிர்ப்பாளர்களை பிரித்துக் காட்டியது நூறு சதவிகிதம் உண்மை. இந்தப் பதிவை கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன். தமிழ் மணத்தில் ஒரு ஓட்டும் போட்டுவிட்டேன். பாராட்டுக்கள்.

Amudhavan said...

தங்களின் அழகிய விமரிசனத்திற்கும் தங்களின் ஓட்டிற்கும் என்னுடைய நன்றி கொக்கரக்கோ.(இந்த ஓட்டு விவகாரம்தான் நமக்கு இன்னமும் புரியலைங்கோ)

suvanappiriyan said...

சிறந்த பதிவு

R.S.KRISHNAMURTHY said...

எண்ணற்ற நடுநிலையான (’கட்சி சார்பற்ற’ என்று பொருள் கொள்க) என் போன்றவர்கள் அடிக்கடி யோசிப்பதையெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் வருத்தமும்! ஒரு நல்ல மாறுதல் கிடைக்க இன்னமும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ! பாவம் நம் சந்ததிகள்! இத்தருணத்தில் என்னுடைய கருத்தொன்றையும் முன்வைக்க வேண்டும். இரு கழகங்களின் ஆட்சியில் நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் பெருத்த அவமானமாக நான் உணர்ந்தது, தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் பதட்டமானவை, சிறப்புப் பாதுகாப்புக்கு உரியவை என்று அறிவித்த போதுதான். நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் - நம்பிக்கைதானே வாழ்க்கை!

அ.வெற்றிவேல் said...

மிக நல்ல பதிவு என் கட்டுரையைவிட ஆழமான அலசல். மிக முக்கியமாகப் பார்க்க வேண்டியது ///கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஜெயலலிதா மாறுவதற்கான எந்த அறிகுறியும் அவர் செயற்பாடுகளில் இல்லை// இதுதான் உண்மை.. யாரும் நெருங்காமல் ஒரு இடத்தில் இருந்து கொண்டு இருப்பவர்களுக்கு எப்படி கிராம மக்களின் ந்லவாழ்வு கண்ணில் படும்.. அதன் விளைவுதான் அதிமுக ஆதரவு செய்தி நிறுவனங்களே சொல்லும் படி கிராம மக்களின் ஒட்டு வங்கி திமுகவிற்கும் சென்னை போன்ற நகரங்களின் ஒட்டு வங்கி அதிமுகவிற்கும் மாறியுள்ளது.. அது கூட இணையத்தில் அரசியல் கற்றுள்ள சிலரால் ஏற்பட்டுள்ள மாயை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரலாம்..மிக அற்புதமான பதிவு

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஜெயலலிதா அணியில் பெரும்பாடுபட்டு விஜயகாந்த்தைக் கொண்டுபோய்ச் சேர்த்ததிலும் இரண்டு கம்யூனிஸ்டுகளைக் கொண்டுவந்து சேர்த்ததிலும் சோவின் பங்கு கணிசமானது.//

ஆனால் விஜயகாந்தை ஒரே மேடையில் ஏற்ற முடியவில்லை. பூச்சியை வேட்டிக்குள் விட்ட கதி!
நல்ல அலசல்.
இவர்கள் இருவருக்கும் மாற்றே இல்லையா? ஆனாலும் தொடர்ந்து திமுக இருப்பதால் அவர்கள்
இன்னும் பெரிய அளவில் ஊழல் செய்ய வாய்பளிப்பதாகாதா? காரணம் கோடிகோடியாகத் தேடியும்
திருப்திப் படுவதாகத் தெரியவில்லை.
அதனால் அதிமுக வருவதால் அவர்கள் உடனே ஊழல் செய்யத் தொடங்கமாட்டார்கள். ஒருவருடமாவது
தமிழ்நாடு மூச்சு விடட்டுமே!
எனினும் அம்மா வந்தால் ஐயா லுங்கியுடன் தெருவில்; ஐயோ கொல்லுறாங்க தான்....

Amudhavan said...

வாருங்கள் சுவனப்பிரியன்.தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

Amudhavan said...

எப்படி இருக்கிறீர்கள் ஆர்எஸ்கே? தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.தேர்தல் கமிஷன் பற்றி இந்த இடத்தில் வேண்டாம் என்பதற்காகத்தான் அதுபற்றிப் பேசவில்லை. மேலோட்டமாகப்பார்க்கும்போது தேர்தல் கமிஷன் நடந்துகொண்டவிதம் பாராட்டுக்குரியது என்பதுபோல் தோன்றினாலும் மாமியார் உடைத்தால் மண்குடம் வகையறாவாகத்தான் இருக்கிறது அவர்கள் போக்கு. கர்நாடகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் இந்தக் கெடுபிடியெல்லாம் காணவில்லை. தவிர, இதே கெடுபிடியை அவர்கள் வடநாட்டில் நடத்திவிடுவார்களா? மகாராஷ்டிரத்தில் நடத்திவிடுவார்களா? தென்னகத்தில் பிளாட்பாரம் டிக்கெட் வாங்காதவனையும் பிடிக்கும் பரிசோதகர்கள் வடநாட்டில் ரயிலில் டிக்கெட்டே இல்லாமல் காலகாலமாகப் பயணம் செய்யும் லட்சக்கணக்கானவர்களை என்ன செய்துவிட்டார்கள்? தென்னாட்டுக்காரன்-அதிலும் குறிப்பாகத் தமிழன் மட்டும் ஒழுங்கா இருக்கோணும். இல்லாட்டா பூச்சாண்டி நிச்சயம் பிடிச்சுக்குவான்...

Amudhavan said...

நன்றி வெற்றிவேல். தாங்கள் மனந்திறந்து பாராட்டியிருப்பது மகிழ்வளிக்கிறது. பொதுவாக எதையும் கொஞ்சம் நல்ல மனமிருந்தால் பாராட்டிவிடலாம்.ஆனால் 'என்னுடைய கட்டுரையைவிட ஆழமான அலசல்' என்று உங்களைப் பற்றிக்குறிப்பிட்டுக் கூறுகிறீர்களே அந்த அளவு பரந்த உள்ளம் அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்துவிடாது. தங்களின் நல்ல உள்ளத்திற்கும் அழகான விமரிசனத்திற்கும் மறுபடியும் என் நன்றி.

Amudhavan said...

வரவுக்கு நன்றி யோகன்.நீங்கள் சொல்லும் ஒரு வருட கியாரண்டியெல்லாம் இங்கே நிச்சயமில்லை. தப்பித்தவறி அந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தால் இரண்டே மாதங்களில் இப்போது ஜெயலலிதாவுக்குப் பரிந்து பேசியவர்களில் முக்கால்வாசிப்பேர் கலைஞரை தியாகியாக்கிவிடுவார்கள்.திரும்பத்திரும்ப ஏமாந்துபோனோமே என்று வருந்தவே செய்வார்கள்.

vijayan said...

அமுதவன் அவர்களே தாங்கள் சினம் காக்க,கருணாநிதிக்கு மாற்று ஜெயலலிதா என்ற சோகத்தை தவிர கருணாநிதி அழிய வேண்டிய சக்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தங்களின் எழுத்தினால் மனம் கவரப்பட்ட நான் தாங்கள் தருக்கத்தில் இவளவு சோனியாக இருப்பீர் என்று எண்ணியது இல்லை.நானும் உங்களைபோல பெங்களூர் வாசி தான், மனசாட்சியுடன் சொல்லுங்கள் கர்நாடகத்தின் அரசியலில் இவ்வளவு கலாசார சீரழிவு உண்டா.அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொடங்கி திருச்சி கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் என்று எத்தனை ஆயிரம் ரௌடி தனங்கள்.மடியில் கனமில்லைஎன்றால் தேர்தல் கமிசன் மேல் ஏன் இவ்வளவு காண்டு. மாபெரும் தலைவர்களையெல்லாம் எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்தது.பிராமண எதிர்ப்பு, வடவ எதிர்ப்பு என்றெல்லாம் பாமர கட்சி தொண்டனை தூண்டுவது,பின்னர் தனக்கு வேண்டுமென்றால் ராஜாஜியோடும்,பிஜேபி யோடும்,இந்திராவோடும் சேர்ந்து கொள்வது,இவையெல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்குதான் என்பதை யாரை நம்ப சொல்கிறீர்.அவைகள் பாஷையில் சொல்வதானால் ,"யாராவது புடவை கட்டிய புத்திசாலியிடம் சொல்லுங்கள்.

சிந்திப்பவன் said...

அமுதவன்,

நீங்கள் ஜெயாவைப்பற்றி சொல்லியிருக்கும் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
I agree with you totally.

So தி.மு கவும் வேண்டாம் அ தி மு க வும் வேண்டாம் என்று நீங்கள் எழுதியிருந்தால் எனக்கு உங்கள் நோக்கில் எந்த ஐயமும் வந்திருக்காது.

ஆனால் கீழ்கண்ட விஷயங்கள் என்னை சிந்திக்க வைக்கின்றன

1.ஜெயா மு.க பற்றிய ஒப்பீட்டில் அனாவசியமாக சோ பற்றி நிறைய எழுதியிருப்பது.மேலும்
//சோவை தமிழ்நாட்டைவிட்டே துரத்துவது எல்லாம் நம் கையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சோவைப்பற்றிப் புரிந்துகொண்டு நாம் எச்சரிக்கையாயிருப்பது முடியும்தானே! // என்று ஒரு பின்னூட்டத்திற்கு பதில் இடுகை

2.மிக சாதுர்யமாக இடையிடையே...
//கலைஞருடைய தகுதிகள், பெருமைகள், திறமை, பழுத்த அனுபவம், ஞானம், ஆளுமை, இலக்கியத் தேர்ச்சி தேசத்தலைவர்களிடையே அவருக்கிருக்கும் நன்மதிப்பு, அவருக்கே உரித்தான ராஜதந்திரம் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.//

என்றும்

//ஒரு விஷயம், கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.//

என்றும் கவர்ச்சியான பொய்களை தூவியிருப்பது.


இவற்றைவைத்து பார்க்கும்போது

எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை
அவாளுக்கு ஒரு கண் போகவேண்டும் என்ற மனப்பான்மை மேலோங்கி இருப்பது போல தெரிகிறது.

இந்த ஒரு சக்திதான் மு.க வை கடந்த 50 ஆண்டுகளாக அவர் செய்குற்றங்கள் அனைத்தையும் ஒரு கனத்த போர்வையாக மறைத்து,அவா ஒழிய வேண்டும் என்றால் இவர் ஒருத்தர் தான் கதி என்று பல தமிழக வாக்காளர்களை தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுக்க செய்துள்ளது.

"வாய்மையே வெல்லும்"
என்பதை மு க
முதலில்
"வாய் மெய்யை" வெல்லும்
என மாற்றி
இப்போ முடிவாக
"கயமையே வெல்லும்" என்று மாற்றி
தமிழகத்தின் பெருமையை உயர்த்தி விட்டார்.

உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்.

Amudhavan said...

திரு விஜயன் அவர்களே உங்கள் கோபம் எதன்மீது என்று எனக்குப்புரியவில்லை. கருணாநிதி செய்த தவறுகள் பற்றி பதிவில் விமரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் தவறுகள் பற்றி அவ்வளவு விரிவாகப்போகவில்லை. விரிவாகப்போனால் நிறைய சொல்லவேண்டியிருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் இல்லை,ஆதரிக்கவும் இல்லை என்ற கோணத்தில் ஒரு அலசலை மற்றவர்கள் சிந்தனை செலுத்தாத சில கோணங்களில் அணுகியிருக்கிறேன். இது பலபேருக்குப் பிடித்திருக்கிறது என்பதை இங்குள்ள மறுமொழிகளும் நிறைய தொலைபேசி அழைப்புக்களும் சொல்கின்றன. நான் கண்ணதாசன் படித்தவன். 'போற்றுபவர் போற்றட்டும்..' பாடல் நினைவு வருகிறதுதானே?

Amudhavan said...

புனைபெயரில் வந்திருக்கும் 'சிந்திப்பவன்' அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி. திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று போவதற்கு வழியில்லை என்பதெல்லாம் பதிவில் விரிவாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதி இல்லையென்றால் அடுத்த முதல்வராக நல்லகண்ணு வருவதற்கில்லை, நன்மாறன் வருவதற்கில்லை, இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க நெடுமாறன் வருவதற்கில்லை ஜெயலலிதாதான் வரமுடியும் என்னும்போது இருவரில் யார்? கலைஞரா..ஜெயலலிதாவா? என்ற கேள்வியுடன் தொடங்கப்பட்ட பதிவுதானே இது? பின்னர் எப்படி இரண்டுமே வேண்டாம் 49-0 போடுங்கள் என்றா சொல்லிக்கொண்டிருக்கமுடியும்?
சோ மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை.அவர் எழுத்துக்களை ரசிப்பவன்தான் நான். அவரது நகைச்சுவைப் பேச்சுக்களும் எழுத்துக்களும் எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது அரசியல் பார்வைகள் பற்றி எனக்கு கருத்துவேறுபாடுகள் உண்டு. பொதுவாக தமிழ், தமிழுணர்வு, தமிழ் இனம் என்று வரும்போது அவரது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இல்லை. தவிர, நீங்கள் என் பதிவை சரியாகப்படிக்கவில்லைபோல் தெரிகிறது. இங்கே சோவைப்பற்றி எதற்காக விரிவாகப்பேச நேர்ந்திருக்கிறது என்பதுபற்றி பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.தங்களின் மறுமொழிக்கு மறுபடியும் என் நன்றி.

Mathiseelan said...

யாருப்பா அது விஜயன்? ஜெயலலிதா ஒரு பச்சைமண்ணு ஒண்ணுமே தெரியாத பாப்பான்னு நெனைக்கிற அப்புராணியாய் இருப்பார் போலிருக்கே. ஜெயா ஆட்சியில நடந்த அட்டூழியங்களும் அக்கிரமங்களும் ஒண்ணுமே தெரியாதா இவருக்கு? பட்டியல் போட்டா பதிவுலகம் தாங்குமா? பெங்களூர்வாசியாம் இவரு.பெங்களூர்ல இம்மாதிரி கலாச்சாரசீரழிவுகளுக்கு இடம் உண்டான்னு கேட்கறாரு. நானும் முன்பு பெங்களூர்வாசியாய் இருந்தவன்தான். இம்மாதிரியான கலாச்சாரசீரழிவுகளுக்கெல்லாம் அங்கே இடம்கிடையாதுன்றது எனக்கும் தெரியும். ஒரு நடிகருடன் கதாநாயகியாய் நடித்ததற்காகவும் அந்த நடிகரின் மனம்கவர்ந்தவராய் இருந்ததற்காகவும் ஒரு முன்னாள் நடிகையை முதலமைச்சராக உட்கார வைப்பார்களா கர்நாடகத்துல? ரெண்டு பொம்பளைங்க குளிக்கிறதுக்காக மகாமக கொலைகள் நடந்ததுண்டா? வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்ததுண்டா? சுப்பிரமணியசாமிக்கு நடந்ததுபோல மகளிரணியைக்கூட்டி விமானநிலைய வரவேற்பு நடந்ததுண்டா? ஐஏஎஸ் பெண் அதிகாரி முகத்துல ஆசிட் வீச்சு நடந்ததுண்டா? கிடையாது. ஏனெனில் அங்கே கலாச்சார சீரழிவு கிடையாது. போகட்டும். இந்தப் பதிவுல அமுதவன் சரியான முறையில அவரது அலசலைச் செய்திருக்காரு. அதனால்தான் எத்தனையோ பதிவர்கள் ஒரே வார்த்தை பாராட்டுக்களை இங்கே பதிவிட்டிருக்கின்றனர். பின்னூட்டமிட்டவருக்கு கருணாநிதியைப் பிடிக்காதுபோல.. அதற்காக வெறுமனே கோபத்தைக்காட்டியிருக்காரு. அமுதவன் தொடரட்டும் உங்கள் பணி. 

கோவி.கண்ணன் said...

கழுசடைக்கு மாற்று கந்தல்துணியில்லை கழுசடைதான்னு சொல்லவற்றிங்களா ?

ஒண்ணும் புரியல, இதுக்குப் பதிலாக கருணாநிதியும் ஜெயாவும் ஒன்று போலத்தான் மாற்று என்று சொல்வதே அபத்தம் என்று எழுதி இருக்கலாமே.

என்னைப் போன்றவர்களைப் பொருத்த களவில் இரண்டும் கழுசடை தான், ஆனால் ஒரே கழுசடை தொடர்ந்து இருப்பது ஆபாத்து என்கிற நிலைப்பாடே.

//அருள் said...
கலைஞருக்கு மாற்று செயலலிதாவா?//

அருள், இதெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் பாமக ஆப்பு வாங்கும் முன்பே சொல்லி இருக்கலாம்ல.

Amudhavan said...

வாருங்கள் கோவி.கண்ணன்,கலைஞர் ஈழவிவகாரத்தில் நடந்துகொண்டவிதம்தான் அவரை உலகத்தமிழர்கள் மத்தியிலும் பதிவுலக எழுத்தாளர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவரை மூர்க்கத்துடன் எதிர்க்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த ஈழ எதிர்ப்பு மட்டுமே எல்லா விவகாரங்களிலும் பொருந்திவராது என்பதால் மீதி விஷயங்களையும் உபரியாகச் சேர்த்துக்கொண்டு முரட்டுத்தனமாக எதிர்க்கிறார்கள். அவரை எதிர்ப்பதோ அல்லது விமர்சிப்பதோ நியாயமானது என்றாலும் அவருக்கு மாற்று இவர்தான் என்று நியாயமான ஒருவரைக் காட்டியாகவேண்டும். அப்படியில்லாமல் இப்போதைக்கு இவர் ஒழிந்தால் போதும் அடுத்து என்ன என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற சிந்தனைப்போக்கு நிறையப் பதிவர்களுக்கு இருக்கிறது என்பது தெரியும். அதனை எல்லாரும் அப்படியே ஒப்புக்கொள்ளவேண்டும் என்பது அவசியமல்லவே. கலைஞர் சில விஷயங்களில் சரியில்லை என்பதற்காக அவரும் ஜெயலலிதாவும் ரன்றுதான் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட்டதாலேயே எல்லாரும் ஒன்றுதான் என்றாகிவிடுமா என்ன? 'பிரபாகரனைக் கைதுசெய்து கூட்டிவந்து தூக்கிலே போடவேண்டும்' என்று சொன்ன ஒருவரை ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் எப்படி ஆதரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அன்பு said...

தெளிவான கட்டுரை....

MOHAMED MOHIDEEN said...

மிக மிக அருமையான கட்டுரை. இதற்கெல்லாம் கலைஞரை எதிர்ப்பவர்கள் பதில் சொல்ல் மாட்டார்கள். இன்று கூட ஒரு சாமானியன், கலைஞரையோ, அழகிரியையோ, ஸ்டாலினையோ சந்த்தித்துவிட முடியும் என்பது 100க்கு 100 உண்மை. குடும்ப ஆதிக்கம் என்று சொல்லக்கூடியவர்கள், தங்கள் ஜெயா டிவியையும், கேப்டன் டிவியையும் உங்கள் கேபிள் மூலமாக ஒளிபரப்ப மாட்டோம் என்று மறுத்து விடுவதுதானே.

Amudhavan said...

வாருங்கள் அன்பு மிகவும் நன்றி.

Amudhavan said...

முஹமது மொஹிதீனுடைய வருகைக்கும் அழகிய மறுமொழிக்கும் நன்றி. கண்மூடித்தனமான எதிர்ப்பின் மூலமாகவும் கண்மூடித்தனமான ஆதரவின் மூலமாகவும்தானே பல்வேறு தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. கலைஞர் மறுபடியும் ஆட்சிக்குவருவதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. எப்படியும் சில மாதங்களில் ஆட்சியை ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு கலைஞர் வெறும் கட்சிப்பணிகளையும் இயக்கப்பணிகளையும் மட்டும் கவனிப்பதில் ஈடுபடலாம்.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பில் மிகச்சரியான தலைவராக வந்துகொண்டிருக்கிறார்.அவருடைய தலைமையில் நிறைய மாறுதல்களுடன் தமிழகம் நடைபோடும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம். அந்தப் பக்கத்தில் இப்படிச்சொல்லக்கூட யாரும் ஆட்கள் இல்லையே என்பதை ஏன் பலர் யோசிக்கக்கூட மாட்டேனென்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

Post a Comment