Tuesday, June 14, 2011

ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் கண்ணதாசனும்.......!


முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அந்தப் பாடலுக்கான விளக்கத்தை மிக விரிவாகவும் விடாப்பிடியாகவும் அடிக்கோடிட்டுச் சொல்லுவது போன்ற தொனியிலும் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடல் விவகாரம் எப்போதோ நடந்து முடிந்த ஒன்று. இன்னமும் சொல்லப்போனால் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ கூட ஆகியிருக்கலாம். கடந்த சட்டமன்ற நிகழ்வுகளின்போது என்றைக்கோ ஒருநாள் சட்டமன்றத்திற்கு வந்த ஜெயலலிதா இந்தப் பாடலையும் குறிப்பிட்டுப் பேசிவிட்டு உடனடியாக சபையைவிட்டு வெளியேறினார் என்பது அன்றைய பத்திரிகைகளின் செய்தி. அவர் போனபிறகு அவர் பேச்சைப்பற்றிக் குறிப்பிட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி “இந்தப் பாடலில் எம்ஜிஆர் பாடியிருப்பது என்னைப்பற்றித்தான் ஏனென்றால் ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்றுதான் அவர் பாடியிருக்கிறார். தலைவி என்று பாடவில்லை.” என்று வழக்கம்போல் அவருக்கேயுரிய பாணியில் பதில் சொல்லியிருந்தார்.

கலைஞரின் பாணியே இப்படிப்பட்டதுதான். பேசுபவர்களின் வார்த்தைகளை வைத்தே அதில் லேசாக சிரக்கம்பம் செய்து சமத்காரமாகச் சொல்லும் பதில்கள் சம்பந்தப் பட்டவர்களின் வாயை அடைக்கும்விதமாகவும் சுற்றியிருப்பவர்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்ற விதமாகவும் இருக்கும். இந்தப் பாணியில் வேறொரு ஆபத்தும் உண்டு. சமயங்களில் ஆபாசத்தைத் தொட்டுவிடவும் செய்யும். கலைஞர் பதில்களிலேயே இப்படியும் நடந்திருக்கிறது. நல்ல வேளை இந்த விஷயத்தில் ஆபாசமெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கான அவருடைய பதில் இத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஏன் வருடங்களே ஆகியும் சம்பந்தப்பட்டவரின் மனதில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி இவ்வளவு நாட்கள் ஆனபிறகும் அவர் அந்த விஷயத்தை அப்படியே மனதிற்குள் பத்திரமாய் வைத்திருந்து சட்டமன்றத்திலே வந்து அதனை வெளிப்படுத்துகிற அளவுக்கு அவரைப் பாதித்திருக்கிறது என்பது இங்கே முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

என்ன பாடல், என்ன விவகாரம் என்பதை முதல்வர் ஜெயலலிதா வார்த்தைகளிலேயே பார்க்கலாம்............´´இதே சட்டமன்றப் பேரவையில் கடந்த 5 ஆண்டுக்காலத்தில் ஒருமுறை நான் இங்கே பேசியபோது எம்ஜிஆரின் பாடல்வரிகளைக் குறிப்பிட்டேன். ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று நான் சொல்லிவிட்டு அதன் பிறகு நான் வெறியேறிவிட்டேன். நான் சென்றபிறகு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இந்தப் பாடல் எம்ஜிஆர் பாடியது தன்னைத்தான். ஏனென்றால் ஒரு தலைவி இருக்கிறாள் என்று சொல்லவில்லை. ஒரு தலைவன் இருக்கிறான் என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆகவே, ஜெயலலிதாவை அவர் குறிப்பிடவில்லை என்று அவர் சொன்னார். நான் வெளியே சென்றபிறகுதான் இதைக் கேள்விப்பட்டேன். அதற்கு பதிலளித்து ஒரு அறிக்கை வெளியிட்டேன். புரட்சித்தலைவர் என்னைப் பார்த்து ‘திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ’ என்று பாடியிருக்கிறார். ஆகவே அதில் என்னைத்தான் குறிப்பிடுகிறார். அவருடைய அரசியல் வாரிசு நான்தான் என்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டியிருக்கிறார் என்று நான் பதிலடி கொடுத்தேன்.

ஆனால் இது கருணாநிதிக்குப் பிடிக்கவில்லை. இப்படி புத்திசாலித்தனமாகச் சொன்னதற்கு உடனடியாக ஜெயலலிதா பதிலடி கொடுத்துவிட்டாரே என்று அனைத்துப் பத்திரிகைகளையும் மிரட்டி, இந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்று கட்டாயப்படுத்தி, என்னுடைய அறிக்கை எந்தப் பத்திரிகையிலும் வெளியிடப்படவில்லை என்பதுதான் உண்மை.” என்று பேசியிருக்கிறார்.

ஜெயலலிதா பேச்சின் இரண்டாவது பகுதி எந்தளவு உண்மை என்பது நமக்குத் தெரியாது. அது தேவையும் இல்லை. ஏனெனில் உப்புச்சப்பில்லாத இப்படியொரு அறிக்கையை வெளியிடுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளும் அறிவுகூட இல்லாமல்தான் பத்திரிகையாசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் இங்கே யோசிக்கப்படவேண்டிய விஷயம்தான். இந்த ஒரு அறிக்கையை வெளியிடக்கூடாது என்பதற்கே பத்திரிகை ஆசிரியர்களெல்லாம் மிரட்டப்பட்டார்கள் என்றால் நாளொரு மேனியும் ‘அங்கே விளக்கு எரியவில்லை அதற்காகப் போராட்டம்; இங்கே குழாயில் தண்ணி வரவில்லை அதற்காகப் போராட்டம்’ என்றெல்லாம் தினந்தோறும் எல்லாப்பத்திரிகைகளிலும் இவரது அறிக்கைகள் வந்துகொண்டிருந்ததன் மர்மம் என்னவென்பதும் புரியவில்லை. இதையெல்லாம் கருணாநிதி மிரட்டி நிறுத்தவில்லையா என்பதும் புரியவில்லை. போகட்டும், விஷயத்திற்கு வருவோம்.

ஜெயலலிதா குறிப்பிட்ட பாடல் ‘பணத்தோட்டம்’ படத்தில் வருகிறது. பணத்தோட்டம் படத்தில் வந்த ‘ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா’ என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்ற பாடல் இது. பணத்தோட்டம் படம் வெளியான ஆண்டு 1963. சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.வேலுமணி தயாரித்த இந்தப் படத்தின் இயக்குநர்;கே.சங்கர். கதை பி.எஸ்.ராமையாவுடையது. வசனம் பா.சு.மணி. நடித்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி. இசை;விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இத்தனை விவரம் எதற்காகவென்றால் இந்தக் குழுவினர் தயாரித்த அந்தப் படத்தின் பாடலில், பின்னால் எப்போதோ வரப்போகிற ஜெயலலிதா பற்றியோ அல்லது கருணாநிதி பற்றியோ தலைவர் என்ற அடைமொழியுடன் சங்கேத தகவல்கள் சொல்லப்பட்டிருக்குமா என்பதற்கான சந்தேகம்தான்.

இன்னமும் சொல்லப்போனால் இந்தப் படத்தின் இன்னொரு பாடலும் மிகவும் புகழ்பெற்ற பாடல்தான். (அந்தக் காலத்திலெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து கண்ணதாசன் எழுதுகிறார் என்றாலேயே அத்தனைப் பாடல்களும் அமுதகானமாக,புகழ்பெற்ற பாடலாக இருந்ததுதானே அற்புதம்!) ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா’ என்ற பாடல் ஒன்று இருக்கிறது. இந்தப் பாடலிலே கவிஞர் கண்ணதாசனின் குறும்பு தெரியும் என்று சொல்வார்கள். பாடலின் இடையில் ‘பாடுவது கவியா இல்லை பாரிவள்ளல் மகனா’ என்று ஒரு வரி வரும். கண்ணதாசனுடைய நுட்பம் இதுதான். ரொம்பவும் soft ஆகத்தான் மற்றவர்களைப் புகழ்வார். இலைமறை காயாகத்தான் மற்றவர் பற்றிய புறவியல் அறிமுகம் வரும். நேரடியாக முகத்துக்கு நேராக பாராட்டுவது அவர் பாடல்களில் கிடையாது. அதெல்லாம் வாலி வந்தபிறகு ஆரம்பித்துவைக்கப்பட்டவைதாம் அப்பட்டமான புகழுரைகள். கண்ணதாசனில் அது கிடையாது. அடுத்த வரி வரும் பாருங்கள்....’சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?’ என்று! சேரனுக்கு உறவு என்று எம்ஜிஆரை விளிப்பதில் கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் என்பது புரிகிறதா? எம்ஜிஆருடைய படத்தில் அவர் நடிக்கும் பாடலிலேயே இப்படி எழுதும் தைரியம் கவிஞரைத்தவிர யாருக்கு வரும்? என்று கேட்பார்கள். இந்தப் பாடலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரின் அரசியல் கோட்பாடுகளுக்கேற்ப அவர் பற்றிய மக்களுக்கான பிம்பத்தை பாடல்கள் மூலம் சொல்லும் பாணி இங்கே இந்தப் பாடலில்தான் ஆரம்பித்துவைக்கப்படுகிறது, கண்ணதாசனால்! பிற்பாடு இதுவே ஒரு அப்பட்டமான பிரச்சாரமாக அவருடைய கடைசிப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்வரை பல்வேறு கவிஞர்களாலும் தொடரப்படுகிறது. இதற்குத் தலைமை தாங்கியவர் வாலி.

மறுபடியும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலுக்கு வருவோம். இந்தப் பாடலை எனக்காகத்தான் எம்ஜிஆர் பாடியிருக்கிறார் என்று ஜெயலலிதா சொல்ல, இல்லையில்லை அதில் ஒரு தலைவன் இருக்கிறான் என்று சொல்லியிருப்பதால் அவர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என்று கலைஞர் சொல்ல இரண்டுமே செம காமெடியாய் இருக்கிறது. அவர்கள் இருவருமே இந்த இடத்தில் பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்பதை மறந்துவிட்டார்கள்.

ஒரு விஷயத்தை எல்லாரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். எம்ஜிஆர் படமோ, சிவாஜி படமோ, ஜெமினி கணேசன் படமோ யாருடைய படமாக இருந்தாலும் ஒரு படத்தில் கண்ணதாசன் பாடல் எழுதுகிறார் என்றால் முதலில் அது அவருடைய பாட்டு. அப்புறம்தான் அதில் நடிக்கும் நடிகர்களின் பாட்டு. ‘மாலைஇட்ட மங்கை’ படத்தின் வெற்றியும், அந்தப் படத்தில் வந்த ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலும், ‘எங்கள் திராவிடப்பொன்னாடே’ பாடலும் அவருக்குக் கொடுத்த கௌரவம் அது. இந்த இரண்டு பாடல்களுமே ஒரு கதாநாயகனுக்குரிய இடத்தை அன்றையிலிருந்தே கண்ணதாசனுக்கு வழங்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் கட்சி என்பதைத் தாண்டி கல்லூரிகளின் தமிழ் அமைப்புகளுக்கும், இலக்கிய விழாக்களுக்கும் தமிழகமெங்கும் நடைபோட ஆரம்பித்துவிட்டார் கண்ணதாசன். அவருடைய முப்பதாவது வயதிலேயே தமிழகத்தில் மட்டுமின்றி தமிழர் வாழ்ந்த பிறபகுதிகளிலிருந்த இலக்கிய அமைப்புகளும் அவரைக்கூப்பிட்டுக் கொண்டாடியிருக்கின்றன. பெங்களூரில் உள்ள டெலிபோன் தொழிற்சாலை 50-களில் தமிழ் மன்றத்தையே அவரைக்கூப்பிட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறது என்கிற செய்திகளெல்லாம் காணக்கிடைக்கின்றன.

கண்ணதாசனின் இத்தனைப் பரவலான புகழுக்கும் ஆளுமைக்கும் காரணம் அவருக்கிருந்த பன்முகத்தன்மைதான். அவர் வெறும் கவிஞராக மட்டும் இருக்கவில்லை. அரசியல்வாதியாக, இலக்கியவாதியாக, பெரிய பேச்சாளராக, திமுகவிலிருந்து ஒரு பெரிய பிளவை ஏற்படுத்திப் பிரியும் மறைமுக அரசியல் தலைவராக, எழுத்தாளராக, வசனகர்த்தாவாக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை முதலாளியாக, திரைப்பட நடிகராக, திரைப்படத் தயாரிப்பாளராக என்று சகல துறைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். வேலை பார்த்த பத்திரிகைகள்போக, முல்லை, தென்றல், கடிதம், கண்ணதாசன் என்ற நான்கு பத்திரிகைகளை அவரே ஆரம்பித்து நடத்தியிருக்கிறார். இவையெல்லாம் போக, இறுதியில் ஆன்மிக இலக்கியவாதியாக அவர் தோற்றம் கொண்டதும் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதி உலகிலுள்ள அத்தனைத் தமிழர்களின் வீடுகளிலும் நுழைந்ததும் வரலாறு.

ஆகவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர், சிவாஜி, எம்ஜிஆர் என்ற ஆளுமைகளுக்கு என்ன இடமோ அந்த இடத்தில் இருப்பவர்தான் கண்ணதாசன். வேண்டுமானால் ஒரு பத்துவருடங்களின் குமுதம் ஆனந்தவிகடன் பத்திரிகைகளை எடுத்துப் புரட்டிப்பாருங்கள். ஒரு மூன்று அல்லது நான்கு இதழ்களுக்கு ஒருமுறையாவது கண்ணதாசனைப்பற்றிய செய்தியோ புகைப்படமோ வராமல் இருக்காது. அந்த அளவு தமிழக மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட பெயர் கண்ணதாசனுடையது.

எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்துவிட்டாரென்றதும் இங்கே பல்வேறு பிம்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அவைகளில் ஒன்றுதான் திரைப்பட உலகிலும் எம்ஜிஆர்தான் முதன்மையானவராக இருந்தார் என்பது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அன்றைய நிலையில் எம்ஜிஆரின் படங்கள் வசூலில் கொஞ்சம் அதிகமான பணத்தை வசூலித்தன என்பதைத்தவிர தரத்தின் அடிப்படையில் திரையுலகில் முதன்மையாக மதிக்கப்பட்டவர் சிவாஜிதான். தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல இந்தியத் திரையுலகமும் சிவாஜியைத்தான் அதிகமாக மதித்தது. ஆங்கிலப்பத்திரிகைகளும், வெளிநாட்டுப் பத்திரிகைகளும்கூட சிவாஜியைத்தான் புகழ்ந்தன. வசூல் நிலையிலும்கூட மிகச்சிறிய வித்தியாசம்தான் இருக்கும் இருவரது படங்களுக்கும். பாமர மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தவர் எம்ஜிஆர். படித்தவர்களின் ஆதரவு சிவாஜிக்கு என்கிற நிலைமைதான் இருந்தது.

சிவாஜி ரசிகர்கள் மிகவே தெளிவாக இருப்பார்கள். அவரது படங்களில் வந்த புகழ்பெற்ற பாடல்களான ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ போனால் போகட்டும் போடா, சட்டி சுட்டதடா கைவிட்டதடா, ஆறுமனமே ஆறு, ஏன்பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, நான் என்ன சொல்லிவிட்டேன்- போன்ற எந்தப் பாடலாயிருந்தாலும் அது கவிஞரின் பாடல் என்றுதான் சொல்வார்களே தவிர, சிவாஜி பாடல்கள் என்று சொல்லமாட்டார்கள்.

எம்ஜிஆர் பாடலுக்கும் படித்தவர்கள் மத்தியில் அப்படித்தான் பெயர் உண்டு. ‘தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’ என்பது முதலில் பட்டுக்கோட்டையின் பாடல். அப்புறம்தான் அது எம்ஜிஆர் பாடல். அதே போல்தான் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்பது முதலில் கண்ணதாசன் பாடல். அப்புறம்தான் அது எம்ஜிஆர் பாடல். அச்சம் என்பது மடமையடா என்பது முதலில் கண்ணதாசன் பாடல். அப்புறம்தான் அது எம்ஜிஆர் பாடல். அதேபோல்தான், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது முதலில் கண்ணதாசன் பாடல், அப்புறம்தான் எம்ஜிஆர் பாடல். இதுதான் படித்தவர்களின் கருத்து. பாமர மக்களுக்கு வேண்டுமானால் இந்த வித்தியாசம் தெரியாமல் திரையில் வரும் எல்லாமே எம்ஜிஆர் பாடல் என்று அவர்கள் நினைக்கலாம்.

ஆனால்-

அன்றைய நிலையில் எம்ஜிஆர் படப்பாடல்களையும் பிரித்தறியும் வித்தியாசம்கூட நிறையப்பேர் மத்தியில் இருந்தது. எம்ஜிஆரின் படங்களில் வந்ததாகவே இருந்தாலும் இது பட்டுக்கோட்டை பாடல், இது கண்ணதாசன் பாடல் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
கண்ணதாசனுடைய சுபாவம் அந்தக் காலத்திலேயே நிறையப்பேரிடம் சண்டைப்பிடித்துக்கொள்ளும் சுபாவமாக இருந்திருக்கிறது. சிவாஜிக்கும் அவருக்கும் தகராறு. எம்ஜிஆருக்கும் அவருக்கும் தகராறு என்கிற காலகட்டங்கள் நிறைய இருந்திருக்கின்றன. சிவாஜி ஆரம்ப காலத்தில் தகராறு ஏற்பட்டபொழுது தமது படங்களுக்கு கண்ணதாசன் எழுதவேண்டாம் என்று தீர்மானித்த காலங்கள் உண்டு. ஆனால் மிகக் குறைவான நாட்கள்தாம் அவை. சிவாஜியின் குணம் மற்றும் அன்றைய வணிகரீதியான எதிர்பார்ப்புகள் இவற்றுக்கேற்ப தமது படங்களுக்கு மறுபடியும் கண்ணதாசனே எழுதவேண்டும் என்று பணித்தார் சிவாஜி. அது கடைசிவரை தொடர்ந்தது.

எம்ஜிஆருடைய மனநிலை வேறுமாதிரியானது. தமக்குப் பிடிக்கவில்லையென்றால் தமது படத்தில் மட்டுமல்ல வேறுபடங்களிலும் இருக்கக்கூடாது என்று செயல்படும் மனநிலை அவருடையது. அவருடைய பிம்பத்தைச் சிதறவைக்கும் இம்மாதிரியான விஷயங்களைப் பேசும் பதிவல்ல இது என்பதனால் இந்த ஒரு வரியோடு அடுத்த கட்டத்துக்குச் செல்வோம். தமக்குப் பிடிக்கவில்லையென்றபோதும் வேறு வழியில்லாமல் இயக்குநருக்காகவோ, அல்லது தயாரிப்பாளருக்காகவோ அல்லது வணிக நிர்ப்பந்தங்களுக்காகவோ கண்ணதாசனை எம்ஜிஆர் ‘பொறுத்துக்கொண்ட’ சம்பவங்களும் உண்டு. அதன் பிறகுதான் அவர் கண்ணதாசனுக்குப் போட்டியாக வாலியைக் கொண்டுவந்தார். பிறகு வாலியுடனும்கூட மனக்குறை ஏற்பட்டபோதுதான் புதுமைப்பித்தனையும் நா.காமராசனையும் ஆதரித்தார். இவ்வளவும் கடந்து ஆட்சிக்கு வந்தபின்னர் அந்த நாட்களில் தம்மை மிகத்தீவிரமாகத் தாக்கி எழுதிக்கொண்டிருந்த கண்ணதாசனை அரசவைக்கவிஞராக எம்ஜிஆர் நியமித்தார். கவிஞரே வேண்டாம் என்றபோதும் ‘இல்லை இது உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பதவி. நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்று சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்தார். எம்ஜிஆர் ஏன் இப்படிச் செய்தார் என்பதெல்லாம் அரசியல் சூட்சுமங்கள் அடங்கிய விஷயம். ஆனால் கண்ணதாசனைத் தவிர்க்கமுடிவதில்லை என்பதுதான் இங்கே கருத்தில் கொள்ளப்படவேண்டியது.

எம்ஜிஆர் தம்மைப்பற்றிய விஷயங்களிலும் தம்முடைய இமேஜ் பற்றிய விஷயங்களிலும் எவ்வளவு கவனமாக இருப்பார் என்பது எல்லாருக்கும் தெரிந்த ரகசியம்தான். எனவே, தம்முடைய படத்திற்கு கண்ணதாசன் வேண்டாம் என்று எம்ஜிஆர் முடிவெடுப்பதற்கான இன்னொரு காரணமே தம்முடைய படமாகவே இருந்தாலும் கண்ணதாசன் எழுதினால் அது ‘கண்ணதாசன் பாட்டு’ என்றுதான் ஆகிவிடுகிறது! அதுவே வேறு யார் எழுதினாலும் அதற்கு ‘எம்ஜிஆர் பாட்டு’ என்ற லேபிள் கிடைக்கிறது என்பதற்காகத்தான்!

இந்தப் பின்புலத்தில் இன்னொரு பாடலைப் பற்றியும் இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. பாசம் படத்தில் ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்றொரு பாடல் வரும். மிக சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் ஒரு இளைஞனுக்கேயுரிய வேகத்துடனும் மலர்ச்சியுடனும் இயற்கை வெளிகளில் எம்ஜிஆர் பாடி ஆடிக்கொண்டு வரும் பாடல் அது. ஒரு எம்ஜிஆர் ரசிகனுக்கு மிகவும் உவப்பான காட்சியாய் அது படம்பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆர் நடிப்பும் இசையும் கண்ணதாசன் வரிகளுமாக பார்க்கிறவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும் பாடலாக அது இருக்கும். அந்தப் பாடலின் வரிகள் இவை;

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக-அன்னை
மடியை விரித்தாள் எனக்காக.... ஆஹா, எம்ஜிஆருக்கேற்ற அருமையான வரிகள் என்றுதானே தெரிகின்றன? சரணம் வருகிறது பாருங்கள்-

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகைப் பதித்த மணிமகுடம்
குயில்கள் வாழும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்......

ஆரம்ப காலத்தில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் கொஞ்சம் இலக்கியப்பரிச்சயம் எல்லாம் ஏற்பட்டபிறகு இந்தப் பாடலைக்கேட்ட மாத்திரத்தில் தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில் தவழும் நிலவும் தங்கரதமும் தாரகைப்பதிக்கப்பட்ட மணிமகுடமும் குயில்கள் வாழும் கலைக்கூடமும் ஒரு கவிஞனுக்கு மட்டுமே சொந்தமான கற்பனை வடிவம். பாரதி காணிநிலம் வேண்டும் என்று ஆசைப்பட்டதுபோல் கவியரசரின் ஆசைக்கனவு இந்த வடிவம். அதனை அடுத்த வரியில் தெளிவாகவே சொல்கிறார் கவிஞர்- இவை அத்தனையும் கொண்டது ‘எனது அரசாங்கம்’ என்று!

எம்ஜிஆரை அந்தக் கதாபாத்திரத்தில் இயற்கையை வர்ணிக்கும் நாயகனாக உருவகித்துப் பாடல் புனையப்பட்டிருக்கிறது அதனால் அப்படிச்சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரும் பூசிமெழுக முடியாது. ஏனெனில் எம்ஜிஆர் படங்களில் அதற்கெல்லாம் இடமில்லை. அது எம்ஜிஆரின் voice – ஆகத்தான் இருக்குமே தவிர வேறு யாருடைய வாய்ஸுக்கும் அங்கே இடமில்லை. அப்படி எதையும் அனுமதிக்க மாட்டார் எம்ஜிஆர். ஏனெனில் வசனம் பாடல்வரிகள் உட்பட யாவும் எம்ஜிஆரால் ஒப்புதல் தரப்பட்டே படமாக்கப்படும். அப்படிப் படமாக்கப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இதுவும். விஷயம் என்னவென்றால் தன்னுடைய பாடலில் தன்னுடைய ‘ஆளுமையை’ நிலைநிறுத்தும் வலிமையும் கம்பீரமும் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.

1970-களில் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் கவிஞரைச் சந்தித்தபோது இந்தப் பாடல் பற்றிக்கேட்டேன். “எம்ஜிஆர் பாடும் பாடலில் நீங்கள் உங்களைப்பற்றிப் பாடிக்காட்டியிருக்கிறீர்களே இது எப்படி சாத்தியமாயிற்று? அவர் எப்படி இதனை அனுமதித்தார்?” என்றேன்.

கவிஞர் சிரித்தார். “அதெல்லாம் பாடவேண்டியதுதான். என்னுடைய பாடல்கள்ள எம்ஜிஆர் இதை மாற்று அதை மாற்றுன்னெல்லாம் சொல்லமாட்டார். ஆனா இந்தப் பாட்டுல இருக்கிற இந்த விஷயத்தை ரொம்பப்பேர் கவனிக்கலை. நீங்க கவனிச்சிருக்கீங்க” என்றார்.
ஆக, படத்தில் யார் பாடும் பாடலாக வந்தாலும் அங்கே முதலில் கண்ணதாசன்தான் நிற்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலும் அந்த வகையானதுதான். வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் நிறைய பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இன்னமும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களை அதிகமாக எழுதியவரே இவர் மட்டும்தான். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, வாழநினைத்தால் வாழலாம், மயக்கமா கலக்கமா, அச்சம் என்பது மடமையடா, உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால், எங்களுக்கும் காலம்வரும் என்று நிறையப் பாடல்கள் உள்ளன. இதில் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது வாழ்க்கையின் பிரச்சினைகளை ஒரு அலட்சியமான மனநிலையில் எதிர்கொள்ளச் சொல்லித்தரும் பாடல். இந்தப் பாடலின் நீட்சிதான் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்ற பாடல். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலில் ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்ற வரிகளை கண்ணதாசன் இறைவனைக் குறிப்பிட்டே சொல்கிறார். திமுகவில் இருந்தவரை நாத்திக வாதம் பேசிய போதிலும் இறைவன் பற்றிய சிந்தனை அவருக்குள் இருந்தது என்பதை அவரே பல சமயங்களில் சொல்லியிருக்கிறார். கடவுள் பற்றிய சிந்தனை கருக்கொண்டிருந்த காலத்தில்தான் ‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்- அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்’ என்று பாடினார்.
இந்தப் பாடலும் மிகத்தெளிவாகவே இருக்கிறது.
‘பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!’ என்கிறார்.

தத்துவார்த்தமாக இறைவனை முன்னிறுத்தும் பாணியைத்தான் அவருடைய நிறையப் பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். பின்னாலே தெரிவது அடிச்சுவடு..அதாவது நீ நடந்துவந்த பாதை, அதையும் கவனத்தில் வைத்துக்கொள..முன்னாலே இருப்பது ‘அவன் வீடு’ என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்..நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு என்கிறார். இந்த விளக்கத்துடன் பார்த்தோமானால் சுலபமாக கவிஞர் சொல்லவருவது புரியும். இறைவனைக் குறிப்பிட்டுத்தான் ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’என்று பாடுகிறார். இந்த வரிகளை மறந்துவிட்டு அந்தப்பாடலில் உள்ள ஆரம்ப வரிகளை வைத்துக்கொண்டு இத்தனை வருடங்கள் ஆனபின்பும் அது என்னைத்தான் குறிக்கிறது என்கிறார் ஜெயலலிதா. இல்லையில்லை என்னைத்தான் குறிக்கிறது என்கிறார் கருணாநிதி.

அதைவிடவும் வேடிக்கை வேறொரு பாடலில் ‘திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ’ என்று எம்ஜிஆர் பாடுகிறாராம். ஆகவே கண்ணதாசனின் ‘இந்த’ வரிகள் தன்னைத்தான் குறிக்குமாம். சொல்கிறார் தமிழக முதல்வர்.

இல்லாத ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு எதற்காக இப்படி வாதாடுகிறார்கள் என்பது புரியவில்லை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலைச்சொல்லி அதுபோல் நான் எதுபற்றியும் கவலைப்படுவதில்லை என்ற அர்த்தத்தில் முதல்வர் பேசியிருப்பாரேயானால் நாம் இங்கே எழுதுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் தம்மைப்பற்றித்தான் அந்தப் பாடல் என்று சொல்லுவதில்தான் சிக்கல். அதுவும் சட்டமன்றத்திலேயே விடாப்பிடியாக பிடிவாதமாகப் பேசுகிறார். ஒன்றும் புரியவில்லை-

நல்லவேளை, ‘பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா’ என்று சரோஜாதேவியைப் பார்த்துப் பாடியிருக்கிறார் எம்ஜிஆர். அதே எம்ஜிஆர் இன்னொரு படத்தில் ‘நான் பார்த்ததிலே இவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்’ என்று அதே சரோஜாதேவியைப் பார்த்துப் பாடுகிறார். அதே படத்தில் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்று இன்னொரு பாடலையும் பாடியிருக்கிறார். இதையெல்லாம் வைத்துக்கொண்டு அல்லது, இன்னமும் நிறையப் பாடல்வரிகளும் கிடைக்கக்கூடும் – சரோஜாதேவிக்கு! அவர் உடனடியாக “பாருங்கள் எம்ஜிஆர் என்னைத்தான் ராணி என்கிறார். பெண்ணரசி என்கிறார். அவருடைய பார்வை என்பக்கம்தான் என்றும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் பார்த்த பெண்களிலேயே என்னைத்தான் அழகி என்கிறார். அதுவும் ஒருமுறை இல்லாமல் இரண்டுமுறை ‘நல்ல அழகி என்பேன்;நல்ல அழகி என்பேன்’ என்கிறார். ஆகவே எம்ஜிஆரின் உண்மையான வாரிசு நான்தான்’ என்பதுபோன்று சரோஜாதேவி பித்துக்குளித்தனமான அறிக்கை எதுவும் தராமல் இருக்கிறாரே என்பதற்காகத் தமிழர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

வேறென்ன செய்ய.....?

21 comments :

பூங்குழலி said...

முதலில் இந்த விஷயத்திற்கு இத்தனை பெரிய பதிவு தேவையில்லை .எம் ஜி ஆர் படங்களின் பல பாடல்களில் இறைவன் ஒருவனே என்பதை அவர் ஏற்றுக் கொண்டது தெரியும் .திருவளர் செல்வியோ என்ற பாடலில் மனைவி என்ற பொருளில் தான் வரும் .ஜெவே கலைஞருக்கு பதில் தரத்தான் அவ்வாறு கூறினார் .அவர் சபையில் மேற்கோள் காட்டியது என்னவோ "இருட்டில் நீதி மறையட்டுமே " என்பதை தான்.அதில் வந்த இந்த வரி (தலைவன் இருக்கிறான் ) தான் பள்ளியில் இருக்கும் போது வந்தது என்றும் கூறினார் .

ஆனால் எம் ஜி ஆரின் பாடல்கள் எவரால் எழுதப்பட்டாலும் எம் ஜி ஆருடையதாகவே அறியப்பட்டன .

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு..

A.R.ராஜகோபாலன் said...

சார் அருமையான பதிவு
ஒரு உப்பு சப்பில்லாத இரு அரசியல் வாதிகளின் அரைவேக்காட்டுதனமான வாதத்தை கொண்டு , இத்தனை தகவல்களை தந்து அசத்தி இருக்கீங்க,
எம் ஜி ஆர் என்ற மாமனிதர் பின்னால் இருந்த ரகசியங்களையும் அப்படியே அப்பட்டமாய் பதிந்து இருக்கீங்க

நல்ல பதிவு
உங்கள் நடையில் தெரிகின்றது
கம்பீரம்

Rajakabiram said...

எல்லா விஷயங்களிலும் சண்டித்தனமான கருத்துக்களையே முன்வைக்கும் ஜெயலலிதா இந்தப் பாடல் விவகாரத்திலும் தனது சண்டித்தன கருத்துக்களையே முன்வைத்திருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது. அவருக்கு மிகச்சரியான வாதங்களால் பதிலளித்திருக்கிறீர்கள் அமுதவன். உண்மையில் கருணாநிதிதான் இந்தச் சாடலுக்கு பதிலளித்திருக்கவேண்டியவர். அவருக்கு சாவகாசமில்லையோ என்னவோ. ஆனால் நெத்தியடி பதிவு உங்களுடையது.

Unknown said...

//அவர்கள் இருவருமே இந்த இடத்தில் பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்பதை மறந்துவிட்டார்கள்.//


//ஆகவே எம்ஜிஆரின் உண்மையான வாரிசு நான்தான்’ என்பதுபோன்று சரோஜாதேவி பித்துக்குளித்தனமான அறிக்கை எதுவும் தராமல் இருக்கிறாரே என்பதற்காகத் தமிழர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்//

உழைப்பு மிகுந்த கட்டுரை அருமை! அருமை!

Amudhavan said...

தங்கள் வருக்கைக்கு நன்றி பூங்குழலி. //முதலில் இந்த விஷயத்திற்கு இத்தனைப் பெரிய பதிவு தேவையில்லை// கரெக்ட். ஆனால் இந்த அறிவுரையை நீங்கள் சொல்லியிருக்கவேண்டியது ஜெயலலிதாவுக்குத் தானே தவிர, எனக்கல்ல. அந்த அம்மையார்தான் எத்தனையோ மாதங்களுக்குமுன் அல்லது வருடங்களுக்குமுன் நடந்துமுடிந்த வாதத்திற்கான பதிலை மனதிற்குள்ளேயே வைத்துக் குமைந்துகொண்டிருந்து இப்போது முதல்வராக வந்ததும் அதே சட்டமன்றத்தில் யாரும் கேட்காமலேயே, இந்த வாதத்திற்கு அவசியமேயில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் இதை இழுத்துவைத்துக்கொண்டு நீண்டநேரம் பேசியிருக்கிறார்.
//அவர் சபையில் மேற்கோள் காட்டியது என்னவோ ‘இருட்டினில் நீதி மறையட்டுமே’ என்பதைத்தான். அதில் வந்த இந்த வரி(தலைவன் இருக்கிறான்) தான் பள்ளியில் இருக்கும்போது வந்தது என்றும் கூறினார்.// தவறு பூங்குழலி. இந்த வாதங்கள் அவர் பழைய நாட்களில் பேசியதாக இருக்கலாம். பதிவில் இருப்பது இம்முறை அவர் சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு பதிலளித்து ஆற்றிய உரை. தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்தது. இதில் அவர் தலைவன் தலைவி என்ற வார்த்தைகள்பற்றித்தான் கவலைப்படுகிறார்.
//ஆனால் எம்ஜிஆரின் பாடல்கள் எவரால் எழுதப்பட்டாலும் எம்ஜிஆருடையதாகவே அறியப்பட்டன// பதிவிலேயே இதற்கான விளக்கமும் பதிலும் தெளிவாகவே இருக்கின்றன. பாமர மக்களை அதிக ரசிகர்களாகக் கொண்டிருந்த எம்ஜிஆருடைய ரசிகர்கள் அப்படித்தான் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் படித்தவர்கள் அதிலும் இலக்கியம் படித்தவர்கள் தெளிவாகவே பிரித்து அறிவார்கள். இம்மாதிரி அபத்தமான மூடநம்பிக்கைகளை இன்னமும் வைத்திருக்காமல் பதிவுலகம் மூலமாகவாவது இவற்றையெல்லாம் நீக்க முயற்சிகள் செய்வோம். நன்றி.

Amudhavan said...

வருகைக்கு நன்றி மலிக்கா.

Amudhavan said...

தங்கள் வருகைக்கும் அழகிய விமர்சனத்திற்கும் நன்றி ஏஆர்ஆர்.

Amudhavan said...

உண்மைதான் ராஜகம்பீரம்,தங்கள் கருத்திற்கு நன்றி.

Amudhavan said...

உணர்ந்து பாராட்டியிருக்கும் யோவ் அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

Nice Post

Amudhavan said...

வருகைக்கு நன்றி கணேஷ்ராம்.

சிந்திப்பவன் said...

மிகவும் தெளிவான சிந்தனையை தூண்டும் பதிவு ..நன்றி,அமுதவன்.

அப்படியே,இதை எம்.ஜி.ஆர் பாட்டாக வைத்துக்கொண்டாலும்,இதில் வரும் தலைவன்
திரு.அண்ணாதுரையே குறிக்கும்.
நிச்சயமாக மு.க வையோ
ஜெயாவையோ இல்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உங்கள் பதிவுகளைப்படித்து வரும் எனக்கு ஒரு சந்தேகம்.

மு.கருணாநிதி,
ஒரு சுயநலவாதி,கயமை நிரம்பியவர் தமிழ்நாட்டிற்கும்,மக்களுக்கும்,
நேரடியாகவும் ,மறைமுகமாகவும் பல தீங்குகள் இழைத்தவர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகி விட்டது.

இந்த நிலையிலும் ஒருவர் மு.கருணாநிதியை நம்புகிறார்/ஆதரிக்கிறார் என்றால் ஒன்று,அவர் மிகவும் அப்பாவியாக இருக்கவேண்டும் அல்லது அவர் பார்ப்பன துவேஷியாக இருக்க வேண்டும்.

உங்கள் அரசியல் பதிவுகளை கூர்ந்து கவனித்தால் நீங்கள் மிக சாமர்த்தியமாக மு.கருணாநிதியை ஆதரிப்பது தெரியவரும்.I can say you have a soft corner for him despite all that is known about him.

நிச்சயமாக நீங்கள் அப்பாவி இல்லை என்று நான் நம்புகிறேன்.ஏதாவது மூன்றாவது காரணம் இருக்கிறதா?

சுருக்கமாக சொன்னால்,
"நான் ஏன் இன்னும் மு.க வை நம்புகிறேன்"
என்ற தலைப்பில் நீங்கள்
உங்கள் கருத்துக்களைப்பதிவிட்டால்
அது என்னைப்போன்றோருக்கு
உதவியாக இருக்கும்.

நன்றி வணக்கம்.

Amudhavan said...

வேறொரு பெயரில் வந்திருக்கும் 'சிந்திப்பவன்' அவர்களே, தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து என்னுடைய பதிவுகளைப் படித்து என்னைப்பற்றிய ஒரு அபிப்பிராயம் உங்களில் உருவாகியிருக்கிறது. தங்களின் அன்பிற்கும் அழகிய விமரிசனத்திற்கும் என்னுடைய நன்றி. என்னுடைய அரசியல் பதிவுகளைக் கூர்ந்து கவனித்தால் நான் 'மிக சாமர்த்தியமாக' மு.கருணாநிதியை ஆதரிப்பது தெரியவருவதாகக் கூறியிருக்கிறீர்கள்.
நான் ஒரு 'பார்ப்பன துவேஷியா' என்றும் கேட்டிருக்கிறீர்கள். நல்லது. நான் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிற்சாலை நிறுவனத்தில் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களே பிராமணர்கள்தாம். எழுத்துத் துறையிலும் என்னை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டவர் ஆசிரியர் சாவி அவர்கள்தாம். 70-ல் பெங்களூர் வந்ததிலிருந்து தம்முடைய மறைவுவரை மிகவும் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் திரு சுஜாதா அவர்கள்தாம். என்னை மிக விரும்பிய இன்னொருவர் திரு நா.பா அவர்கள். அதனால் நான் 'பிராமண துவேஷியாக' இருக்க வாய்ப்பே இல்லை.
இரண்டாவதாக கலைஞர் அவர்கள் ஈழ விவகாரத்தில் நடந்துகொண்டவிதம் யாராலும் மன்னிக்கவோ,ஒப்புக்கொள்ளவோ முடியாத ஒன்று.இதுபற்றிய தீவிரமான எனது கருத்துக்களால் என்மீது வருத்தம் கொண்ட திமுக நண்பர்களும் உண்டு. அவரது தோல்விக்கும் இன்றைய பரிதாப நிலைமைக்கும் ஈழ விவகாரத்தில் அவர் எடுத்த முடிவும் நடந்துகொண்ட விதமும்தாம் காரணம் என்றுதான் நான் நம்புகிறேன். மற்றபடி இன்றைய அரசியல்வாதிகளில் ஒரேயொரு ஊழல்வாதி இவரும் இவர் குடும்பமும் கனிமொழியும்தான் என்பதுபோல் சித்தரித்து இவரது தோல்விக்கான அடிப்படைக் காரணத்தை மொத்தமாக மூடி மறைக்கும் ஊடக சக்திகளிடம் நாம் ஏமாந்துவிடக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
காங்கிரஸை விட்டு வெளியேறுவதற்கு பயந்தே இந்த நிலைமைக்கு ஆளாகியிருப்பவர் அவர். சென்ற சில ஆண்டுகளாகவே அவரது 'ஆட்சி' நன்றாக இருந்தும் அவரது 'அரசியல்'சரியில்லை என்பதுதான் எனது கருத்து.இந்தக் கண்ணோட்டத்தில்தான் நான் அவரைப் பார்க்கமுடியும். அப்படியில்லாமல் அவ்வப்போது சூறாவளியாய் சுழன்றடித்து ஓயும் 'அரசியல் சுனாமி' கருத்துக்களில் நான் சிக்கிக்கொள்வதில்லை.
அவரை தரம்தாழ்ந்து காது கூசும்படியான வார்த்தைகளில் விமரிசிப்பவர்கள், தப்பித்தவறி அவர் வெற்றிபெற்றுவிட்டிருந்தால் இதே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார்களா என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
ஊடகங்களான பத்திரிகைகள், திரைப்படங்கள் போன்றவை சில 'கிளிஷே'க்களில் மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பது வழக்கம். இணையத்திலும் இம்மாதிரியான கிளிஷேக்கள் சில இருக்கின்றன. பதிவுலகம் இம்மாதிரியானவற்றிலிருந்து விடுபடவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தங்களுக்கு மீண்டும் என் நன்றி.

சிந்திப்பவன் said...

மீண்டும் உங்கள் அன்பான மறுமொழிக்கு நன்றி அமுதவன் அவர்களே.நீங்கள் வெறுமனே "நான் பார்ப்பன துவேஷி இல்லை" என்று சொல்லியிருந்தாலே போதுமானது. ஆனால் அதற்கு சான்றுகள் வேறு கொடுத்துள்ளீர்கள்.மிகவும் நேர்மையான,சுவாரசியமான பதிவாளராகிய உங்களிடம் மு.க என்ற அபஸ்வரம் ஒலிக்கிறதே என்ற ஆதங்கத்தில் எழுதிவிட்டேன்.உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.மன்னிக்கவும்.

என்னைப்பொறுத்தவரை கருணாநிதியை போன்ற ஒரு தீய சக்தி நம்மிடையே இருந்ததும் இல்லை! இனி இருக்கப்போவதும் இல்லை.!!இப்படி சொல்வதால் நான் காங்கிரஸ்,அதே தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகளை ஆதரிப்பவன் என நினைக்க வேண்டாம்.நம் அரசியல் அமைப்புப்படி யார் ஆட்சி செய்தாலும் ஊழல மறையாது.ஆனால் நம்மவர் சற்று ஸ்பெஷல்!

யார் செய்த புண்ணியமோ மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.
வந்திருந்தால் நம் கதி அதோ கதி தான்.ஒரு வேளை ஜெயா மாறவில்லைஎனில் அடுத்த முறை மு.க,ஜெயா தவிர வேறு யாரை வேண்டுமானாலும் ஆட்சியாளராக தேர்வு செய்யலாம்.

வணக்கம்!

Amudhavan said...

தங்கள் மறுமொழிக்கு பதிலாக என்ன சொல்லட்டும்? தற்சமயம் நன்றி மட்டும் சொல்லி மௌனம் காக்கிறேன்,வணக்கம்.

Ganpat said...

நன்றி...
மீண்டும் சந்திப்போம்.
வணக்கம்.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு டாப்னா

Amudhavan said...

தங்கள் வருக்கைக்கு நன்றி பூங்குழலி. //முதலில் இந்த விஷயத்திற்கு இத்தனைப் பெரிய பதிவு தேவையில்லை// கரெக்ட். ஆனால் இந்த அறிவுரையை நீங்கள் சொல்லியிருக்கவேண்டியது ஜெயலலிதாவுக்குத் தானே தவிர, எனக்கல்ல. அந்த அம்மையார்தான் எத்தனையோ மாதங்களுக்குமுன் அல்லது வருடங்களுக்குமுன் நடந்துமுடிந்த வாதத்திற்கான பதிலை மனதிற்குள்ளேயே வைத்துக் குமைந்துகொண்டிருந்து இப்போது முதல்வராக வந்ததும் அதே சட்டமன்றத்தில் யாரும் கேட்காமலேயே, இந்த வாதத்திற்கு அவசியமேயில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் இதை இழுத்துவைத்துக்கொண்டு நீண்டநேரம் பேசியிருக்கிறார்.

இது செம .. ஹா ஹா அம்மாவுக்கே ஆப்பா?

Amudhavan said...

வருகைக்கும் தங்கள் ஆமோதிப்பிற்கும் நன்றி சிபி.

raja said...

உங்களது பதிவுகள் பெரும்பாலும் படித்திருக்கிறேன். மிக அர்த்தப்பூர்வமானது சிலநேரங்களில் அழமாகவும் எழுதுகிறீர்கள் வாழ்த்துகள். உங்களது மின்னஞ்சல் அல்லது அலைபேசி எண் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் நலம்.

Amudhavan said...

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ராஜா. உங்களது மின்னஞ்சல் முகவரி தரவில்லையே. சரி, எனது மின்னஞ்சல் முகவரி இது;amudhavan6@gmail.com

Post a Comment