Monday, September 26, 2011

நீல்கிரீஸும் பில்லியர்ட்ஸும் சென்னியப்பனும்



குமுதம் பால்யூ வானதி சோமு ஆகியோர் திடீரென்று வீட்டிற்கு வந்தனர். “கிளம்புங்கள் நீல்கிரீஸ் சென்னியப்பனைச் சந்திக்கப்போகவேண்டும் என்றனர். அது தொண்ணூறுகளின் இறுதி. இன்னமும் சில வருடங்களில் புகழ்பெற்ற நீல்கிரீஸ் நிறுவனம் தன்னுடைய நூறாவது ஆண்டினைக் கொண்டாடவிருக்கின்றது. அதனையொட்டி நீல்கிரீஸ் சேர்மன் சென்னியப்பனின் வாழ்க்கை வரலாற்றை வானதிபதிப்பகம் சார்பில் கொண்டுவரலாம். சென்னியப்பனின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததுதானே நீல்கிரீஸின் வரலாறு என்றனர். உடனடியாகக் கிளம்பினோம்.

பெங்களூர் என்றாலேயே பிரிகேட் ரோடு; பிரிகேட் ரோடு என்றாலேயே நீல்கிரீஸ் என்ற நினைவுகளை பெங்களூரில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட எல்லாருமே அறிவர். உங்களுக்குத் தெரியுமா? இப்போது நாடெங்கும், ஏன் உலகெங்கும் Mall கலாச்சாரம் நிறைந்திருக்கிறதே, departmental stores என்ற பல்துறை அங்காடி எனப்படும் கருத்துரு (concept) நீக்கமற நிறைந்திருக்கிறதே- அந்தக் கருத்தோட்டத்தை முதன்முதலாக பெங்களூருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே கொண்டுவந்தது நீல்கிரீஸ்தான், சென்னியப்பன்தான். சென்னியப்பன் அவர்களின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கிளிலிருந்து கொண்டுவந்த சிந்தனைதான் அது.

நீல்கிரீஸ் மட்டுமல்ல, பெங்களூரில் பில்லியர்ட்ஸைக் கொண்டுவந்து பிரபலப்படுத்தியவரும் சென்னியப்பன்தான். முதன்முதலில் பில்லியர்ட்ஸை நீல்கிரீஸின் மாடியில்தான் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார் அவர். இங்கே அவருடன் உற்சாகமாக பில்லியர்ட்ஸ் ஆடிய பிரபலங்களில் ஒருவர் முன்னாள் கர்நாடக முதல்வர் குண்டுராவ்.

தமிழ் பத்திரிகையாளர்களுடனும் இலக்கியவாதிகளுடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்தவர் சென்னியப்பன். ஆசிரியர் சாவி அவர்களுடன் நெருங்கிய தொடர்பு; அதனால் சாவி பெங்களூர் வரும்போதெல்லாம் ‘நீல்கிரிஸ் நெஸ்டில்தான் தங்குவார், சென்னியப்பனின் விருந்தினராகத்தான் இருப்பார். சாவியிடம் சொல்லி கலைஞரை ஒருமுறை நீல்கிரீஸுக்கு வரவழைத்திருந்தாராம் சென்னியப்பன். அப்போது கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சர். அங்காடியைச் சுற்றிப்பார்த்த கலைஞரிடம் தமது தந்தையார் ஊட்டியில் தபால் ஊழியராக வேலைப்பார்த்துவந்தபோது அப்போதிருந்த வெள்ளைக்கார துரைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும்விதமாக முதலில் பால் வெண்ணெய் நெய் என்று ஆரம்பித்து அடுத்ததாக பேக்கரி அயிட்டங்களுக்கு வந்தோம். என்று தாம் வளர்ந்தவிதத்தைச் சொல்லியிருக்கிறார். அப்போது கலைஞர் பளிச்சென்று அடித்த கமெண்ட் “ஓ, தபாலில் ஆரம்பித்ததுதான் பாலில் வந்து நின்றிருக்கிறதோ!” கலைஞரின் இந்த கமெண்ட்டைச் சொல்லிச் சொல்லி ரசிப்பார் சென்னியப்பன்.

சாவி அவர்களின்மூலம் முன்பே அறிமுகம் கிடைத்தபோதிலும் நெருங்கிப்பழகும் வாய்ப்பு இந்த நூல் தயாரிக்கும் சமயங்களில்தான் கிடைத்தது. அவருடைய மனதைப்போலவே வெள்ளைச்சீருடை. மென்மையான குணம். அதிர்ந்து பேசாத தன்மை. சுத்தம் சுத்தம் சுத்தம்,. எல்லாவற்றிலும் ஒழுங்கு ஒழுங்கு ஒழுங்கு- இதுதான் சென்னியப்பன்! இத்தனை சாதுவான எளிமையான மென்மையான மனிதரா இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளுகிறார் என்ற ஆச்சரியம்தான் முதல் சந்திப்பிலேயே ஏற்பட்டது.

‘தன்வாழ்க்கைஎன்று சொல்லப்படும் அந்த சுயசரிதத் தயாரிப்பின்போது பலமுறை அவரைச் சந்திக்கவேண்டியிருந்தது. நீல்கிரீஸின் கடைக்கோடியில் ஒரு சிறிய நாற்காலியில் அமர்ந்து மொத்தத்தையும் கவனித்துக்கொண்டிருப்பார். அங்காடியில் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும். சிலரைத்தவிர யாருக்கும் ‘அவர்தான் இவர் என்பது தெரியாது. “இத்தனைப் பெரிய அளவில் நீல்கிரீஸை வளர்த்தெடுத்ததற்கான ‘தொழில் ரகசியம் என்னவென்று கேட்டேன். “வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்திசெய்வது என்பதுதான் எல்லா வியாபாரிகளும் சொல்லும் தொழில் மந்திரம். அதைப் பணியாளர்கள் செய்வார்கள் என்று இருக்கக்கூடாது. உதாரணமாக யாரோ ஒருவர் வந்து “கடலைமாவு எங்கே இருக்கு?” என்று கேட்கிறார்கள் என்றால் “அதோ பாருங்கள் அந்த ஷெல்ஃபில் இரண்டாவது வரிசையில் இருக்கு என்று சொல்லக்கூடாது. எழுந்து சென்று அதை எடுத்து அவர்கள் கையில் கொடுப்பேன். இதுதான் நான் கடைப்பிடித்துவரும் தொழில்தர்மம் என்றார்.

ஒரு சமயம் அங்காடிக்குள்ளிருந்த அவருடன் பேசிக்கொண்டே அவருடைய அறைக்குச் செல்வதற்காக அவருடன் நடந்தபடி லிப்ட் அருகில் வந்தோம். நீல்கிரீஸ் முகப்பில் இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது.நீங்க லிப்டில் வாங்க. நான் படிவழியே நடந்து மேலே வந்துர்றேன் என்றார் சென்னியப்பன். அவருக்கு அப்போது எண்பதைத் தாண்டிய வயது. நானோ பல மடங்கு சிறியவன்.

“ஏன் லிப்டில் ஏறுவதில்லையா? என்றேன்.

அவர் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது.’’இல்லை லிப்ட் வாடிக்கையாளர்களின் உபயோகத்துக்குப் போடப்பட்டதுதானே? நான் உபயோகிக்கும் சமயத்தில் யாராவது காத்திருந்தால் அவர்களுக்குத் தடைப்பட்டுப் போய்விடும் இல்லையா? என்றார். தொடர்ந்து “மாடிப்படியில் ஏறும்போது ஓரத்தில் ஏறவோ இறங்கவோ மாட்டேன். படிகளின் மத்தியில் பிடிப்பில்லாமல்தான் ஏறுவேன்-இறங்குவேன். இது உடற்பயிற்சிக்காக அல்ல; எல்லாருமே பிடியைப் பற்றியபடியேதானே ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருப்பார்கள். நாம் பிடியைப் பற்றிக்கொண்டு ஏறவோ இறங்கவோ செய்யும்போது எதிரில் வருகிறவர்கள் தடை ஏற்பட்டுத் திணறிவிடுவார்கள் இல்லையா? என்றார். ஒன்று புரிந்தது. பெரிய மனிதர்கள் யாரும் சும்மா வந்துவிடுவதில்லை.

புத்தகம் தயாராகும்வரை தினமும் ஒரு தடவையாவது தொலைபேசியில் பேசிவிடுவார். இன்னைக்கு பீரோவுல தேடிட்டிருந்தேன். ஒரு காகிதம் கிடைச்சுது. அனுப்பி வைக்கிறேன். பாருங்க, அவசியம் சேர்த்துக்கங்க என்பார். உதவியாளர் கொண்டுவந்து தரும் உறையைப் பிரித்தால் தொட்டாலேயே உதிர்ந்து விழும் அளவில் பழுப்பு நிறக்காகிதம் 1938 லோ 1940 லோ செலவு எழுதிவைத்த குறிப்புடன் இருக்கும். அரையணா காலணா தொடங்கி ஆயிரம் லட்சம் கோடி என்று செலவு செய்ததும் வரவு கொண்டதும் அவரிடம் இருக்கும். “ஒரு ரூபாய் வரவையும் சரி செலவையும் சரி அது பற்றிய குறிப்பு இல்லாமல் இதுவரைக்கும் பயன்படுத்தியதே இல்லை என்பார்.

‘நீல்கிரீஸை ஆரம்பித்து இத்தனைப் பிரபலப்படுத்தியிருக்கிறீர்கள். இதில் பெரிய சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள்?என்ற கேள்விக்கு அவர் சொன்னார். “அப்போதெல்லாம் எங்கள் சொந்த ஊரில் அங்கங்கே நிறைய மாடுகள் எல்லா வீடுகளிலும் வைத்திருப்பார்கள். இவர்கள் எல்லாரிடமிருந்தும் பாலைக் கறந்து வாங்கி ஒன்று திரட்டி அதனை டெய்ரி வடிவில் கொண்டு வந்தோம். பின்னர் ஒரு கட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுமைக்குமே எங்களின் பால் டெய்ரி வீட்டுக்கு வீடு செய்யப்படும் ஒரு மிகப்பெரிய பிசினஸாகவே மாறிற்று. நிறைய குடும்பங்களுக்கு இதனால் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. இது ஒன்று; இரண்டாவது மிக முக்கியமானது. வெள்ளைக்காரனின் காலத்திலிருந்து இங்கே பிரெட் புழக்கத்திற்கு வந்தது. ஆனாலும் மக்கள் மத்தியில் பிரெட் என்பது யாருக்கும் காய்ச்சல் வந்தால் சாப்பிடவேண்டியது என்கிற எண்ணம்தான் இருந்தது. ஆஸ்பத்திரிகளில் கொடுக்கப்படும் நோயாளிகளுக்கான ஒரு உணவு என்கிற மனப்பான்மைதான் இருந்தது. அவர்களிடம் இருந்த இந்த எண்ணத்தை மாற்றுவது சுலபமான காரியமாக இருக்கவில்லை. மிகப்பெரும்பாடுபட்டு மக்களிடமிருந்த இந்த எண்ணத்தை மாற்றினோம். அது ஒரு பெரிய கருத்துப்புரட்சி என்றே சொல்லலாம். நீல்கிரீஸின் இந்த சாதனை எங்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது இதனை மாற்ற நாங்கள் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. இந்த எண்ண மாறுதல் எங்களுக்கு மட்டுமல்லாமல் பேக்கரி தொழில் புரியும் அத்தனைப் பேருக்குமே பயன்படுகிற ஒன்றாக மாறியதை நீல்கிரீஸின் சாதனை என்று தாராளமாகச் சொல்வேன்

ஒவ்வொரு சின்னச்சின்ன சம்பவத்தையும் டைரியாக எழுதி வைத்திருந்தார். அவ்வளவையும் படித்துத் தொகுத்து ‘உழைப்பும் உயர்வும்- என்ற புத்தகம் வருவதற்கு ஏற்ப அவரிடம் தந்தேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. நீல்கிரிஸின் கிஃட் ஹாம்பர் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். இரண்டொரு மாதங்கள் கழித்து அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. “உங்க வீடு எங்க இருக்கு? வழி சொல்லுங்க என்றார்.

“ஐயா நீங்க எதுக்கு என்னுடைய வீட்டுக்கு வர்றீங்க? நானே வந்து சந்திக்கிறேன் என்றேன்.

“இல்லை இல்லை நான் வரணும். ஏன் வரக்கூடாதா? என்று கேட்டுச் சிரித்தார்.

“நீங்க வர்றீங்கன்னா அது பெரிய விஷயம். எனக்கு மிகவும் பெருமை என்று சொல்லி விலாசம் சொன்னேன். “போன் பண்ணிட்டு இந்த வாரத்திலேயே வர்றேன் என்றார்.ஆனால் வரவில்லை. ஒரு இரண்டொரு மாதம் கழிந்தது. சரி அவராகவே போன் செய்யட்டும் என்று நானும் இருந்துவிட்டேன். ஒரு நாள் திடீரென்று அவரிடமிருந்து போன். குரல் மிகவும் நைந்து போயிருந்தது. “உங்கள்ட்ட பேசின அடுத்த நாளே வயித்துல பெரிய பிராப்ளம். திடீர்னு வெளிநாடு போயிட்டேன். அங்கே ஆபரேஷன் முடிந்து இப்பதான் பெங்களூர் திரும்பியிருக்கேன். என்று சொல்லி உடல்நலம் பற்றிய செய்திகளைச் சொன்னார். நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். உடல் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தது.

கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தொலைபேசி வந்தது. “நம்ம புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்து பத்திரிகையின் துணை ஆசிரியரே மொழிபெயர்ப்பைச் செய்கிறார். என்ற தகவல் சொன்னார். ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அங்கே சென்றிருந்தபோது வீரப்ப மொய்லியிடம் “தமிழில் என்னுடைய புத்தகம் தொகுத்து எழுதியவர் இவர்தான் என்று அறிமுகம் செய்துவைத்தார்.

அதன்பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படவில்லை. இரண்டொருமுறை தொலைபேசியில் பேச நேர்ந்ததோடு சரி. ஒரு நாள் காலை பத்துமணி இருக்கும். அவரிடமிருந்து போன் வந்தது. “வணக்கம் எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்தார். அவர் குரலில் வழக்கமான உற்சாகம் இல்லை. முன்பொருமுறை உடல்நலமில்லாதபோது பேசினாரே அந்த அளவுக்கு நைந்துபோயிருந்தது குரல். “ஐயா உடல்நலமில்லையா?” என்றேன் பதட்டத்துடன்.

“நீங்க பத்திரிகைப் பார்க்கலையா இன்னும்? என்றார்.

“இல்லைங்களே என்றேன்.

“பெங்களூர் நீல்கிரீஸை வித்துட்டோம். பெருவாரியான பங்குகள் கைமாறிவிட்டன. மிகச்சிறிய அளவிலான பங்கை மட்டுமே வைச்சிருக்கோம். டைம்ஸ் பாருங்க முழுமையாகப் போட்டிருக்காங்க என்றார். நீல்கிரீஸை விற்க நேர்ந்த காரணத்தை தழுதழுத்த குரலில் சுருக்கமாகச் சொன்னார். “நஷ்டமெல்லாம் ஒண்ணுமில்லை. இனிமேல் முன்னை அளவுக்கு கவனிக்கமுடியாது. நம்ம காலத்துக்குப் பிறகு ஏதாவது நேர்வதற்கு முன்னேயே இப்போதே எல்லாருக்கும் செட்டில் செய்துவிடுவது நல்லதில்லையா? என்று ஒரு சராசரிக் குடும்பத்தலைவர் போல் அவர் கேட்டபோது நெஞ்சை என்னமோ பிசைந்தது.’’ரெண்டு மூணுநாள் விட்டுட்டு நீங்க நேர்ல வாங்க பேசுவோம் என்றார்.

அதன்பிறகு ஒரேயொருமுறை அவரிடம் தொலைபேசியில் பேசினேன். “இந்த வீட்டையும் இடிச்சு கட்டணும். அதுவரை ஹெச்செஸ்ஸார் லேஅவுட்டில் கொஞ்ச நாட்களுக்கு இருப்போம். நான் அந்த விலாசம் தருகிறேன்.அப்புறமா வாங்க என்றார். அவரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏனோ அதன்பிறகு இதோ இந்நாள்வரையிலும் கிடைக்காமலேயே போய்விட்டது. நீல்கிரீஸ் சென்னியப்பன் மறைந்துவிட்டார் என்கின்றன பத்திரிகைகள்.

சில மனிதர்களை நாம் மட்டுமல்ல சரித்திரத்தாலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. பெங்களூர் நகரம் இருக்கிறமட்டிலும் பிரிகேட் ரோட்டையும் நீல்கிரீஸையும் யாராலும் மறந்துவிடமுடியுமா என்ன? நீல்கிரீஸ் என்றாலேயே சென்னியப்பன் ஐயா நினைவு வருவதையும் யாராலும் மறந்துவிட முடியுமா என்ன!

13 comments :

Anonymous said...

1970 -களில் பெங்களுரு வந்து செட்டில் ஆன தமிழர்கள் வாழ்வில் நில்கிரீஸ் ஒருபிரிக்கமுடியாத அம்சம்.ரெக்ஸ்-இல் படம் பார்த்துவிட்டு நில்கிரீஸ் ரெஸ்டாரென்ட் -இல் டிபன் சாப்பிடுவது,ப்ரிகேடை ரவுண்ட் அடிப்பது என்பது 90 வரை எங்களுக்கு எழுதபடாத சட்டம்.it கம்பனிகளும்,மால்களும்,அபரிமிதமான வடநாட்டு கும்பல்களும் எங்கள் பழைய பெங்களுரை காணாமல் செய்துவிட்டன.சில வருடங்களுக்கு முன் டெக்கான் ஹெரால்டில் வெளிநாட்டு கம்பெனி ஒன்று நில்கிரிஷை வாங்கியதாக செய்தி படித்தபோது சொந்த வாழ்வில் ஏற்பட்ட கஷ்டம் போல் மனசு கனத்தது.

Anonymous said...

1970 -களில் பெங்களுரு வந்து செட்டில் ஆன தமிழர்கள் வாழ்வில் நில்கிரீஸ் ஒருபிரிக்கமுடியாத அம்சம்.ரெக்ஸ்-இல் படம் பார்த்துவிட்டு நில்கிரீஸ் ரெஸ்டாரென்ட் -இல் டிபன் சாப்பிடுவது,ப்ரிகேடை ரவுண்ட் அடிப்பது என்பது 90 வரை எங்களுக்கு எழுதபடாத சட்டம்.it கம்பனிகளும்,மால்களும்,அபரிமிதமான வடநாட்டு கும்பல்களும் எங்கள் பழைய பெங்களுரை காணாமல் செய்துவிட்டன.சில வருடங்களுக்கு முன் டெக்கான் ஹெரால்டில் வெளிநாட்டு கம்பெனி ஒன்று நில்கிரிஷை வாங்கியதாக செய்தி படித்தபோது சொந்த வாழ்வில் ஏற்பட்ட கஷ்டம் போல் மனசு கனத்தது.

- vijayan-

R.S.KRISHNAMURTHY said...

அறுபதுகளில் பெங்களூர் பிழைப்பிற்காக வந்தபோது, நீல்கிரிஸ் ஸ்தாபனம், கீழ்த் தளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முன்னால் டிபார்ட்மெண்ட் ஸ்டோராகவும், பின்னால் காபிஷாப் பாகவும் இருந்தது! ஒரு மிக ருசியான ஜாப்பனீஸ் கேக், ஒரு வெஜ்.பப், சிகரமாக ஸ்ட்ராங் காபி இத்தனையும் ஒரு ரூபாய் 25 பைசாவில்! இவற்றின் விலைகள் காலப்போக்கில் ஏறிய போதிலும், தரத்தில் என்றுமே குறைந்ததில்லை! என் போன்ற அப்போதைய பெரும்பாலான வாடிக்கையாளர்களின் நண்பர், திரு.சென்னியப்பன்.அதிர்ந்து பேசாத மனிதர்.இமாலயச் சாதனை புரிந்திருந்த போதும் முடிவில் மனக் கசப்போடு இறந்தார் என்பதைக் கேட்க மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. RIP, நண்பர் சென்னியப்பன் அவர்களே!

Amudhavan said...

ஆமாம் விஜயன்,தங்களின் உணர்வுகள் உண்மைதான். நீல்கிரீஸ் கைமாறியபோது ஏற்பட்ட உணர்வு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டதுபோல் இருந்தது என்பது ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்ட அனுபவமே. மறுபடி அவர்களின் குடும்பமே அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ளப்போகிறார்கள் என்றும் ஒரு செய்தி படித்தேன். எத்தனை தூரம் உண்மையென்று தெரியவில்லை. பார்க்கலாம். தங்கள் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

உங்களைப்போன்ற ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள்தாம் நீல்கிரீஸின் பலம். நீல்கிரீஸுக்கு அந்தக் காலத்திலிருந்து வந்து செல்பவர்கள் எல்லாம் ஏதோ தங்களுக்குரிய சொந்த இடத்திற்கு வந்து செல்வதைப்போல் உணர்வார்கள்.மரியாதையும் தரமும்தாம் அவர்களின் நிரந்தர மந்திரம். நன்றி ஆர்எஸ்கே.

Ganpat said...

மிகவும் அருமையான இதயபூர்வமான பதிவு.பல இடங்கள் நெகிழ வைத்தது.நன்றி திரு அமுதவன்.

Amudhavan said...

வெற்றி பெற்ற மனிதர் என்பதைத்தாண்டி நிறைகுடமாக வாழ்ந்த ஒருவர் திரு சென்னியப்பன் அவர்கள். இன்றைய சமூகத்திற்கு அவர் விட்டுச் சென்றிருப்பவை நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது. நன்றி கண்பத்.

BalHanuman said...

அன்புள்ள அமுதவன்,

மனத்தை நெகிழ வைத்த உங்களது இந்தப் பதிவை எனது தளத்தில் மறு பதிவு செய்துள்ளேன்...

உங்களை எனது அபிமான எழுத்தாளர் சுஜாதாவின் நண்பராக ஏற்கனவே பரிச்சயம் உண்டு.

Amudhavan said...

தங்களுக்கு நன்றி பால்ஹனுமன்.தங்களது தளத்தின் விலாசம் தாங்களேன்.

BalHanuman said...

அன்புள்ள அமுதவன்,

இதோ எனது தளத்தின் முகவரி...

http://balhanuman.wordpress.com/category/amudhavan/

Amudhavan said...

தங்கள் பதிவுகளைப் படித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி.

aarokiyam-anandham said...

sir please visit my blogspot www.aarokiyam-anandham.blogspot.com and comment on it. we visited ur blogspot and found many useful and important informations. best wishes - rathiloganathan

Amudhavan said...

தங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. நிறைய தகவல்களை அனுபவத்தாலும் தேடலாலும் தந்திருக்கிறீர்கள்.தங்களின் எண்ணமும் வாழும் முறைகளும் பரவலாகப்பரவட்டும். வாழ்த்துக்கள் ரதி.

Post a Comment