ஏழாம் அறிவு படத்தைப்பற்றிய பல்வேறு விஷயங்களும் பேசியாகிவிட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட படங்களில் ஒன்றாகவும் புகழைக்குவித்த படங்களில் ஒன்றாகவும் மட்டுமின்றி வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றிகளைப்பெற்ற படங்களில் ஒன்றாகவும் அமைந்துவிட்டது. ஒரு நடிகனுக்கு இதைவிடவும் என்ன தேவை? தமிழ்நாட்டைக் கடந்து வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பேசப்படும், அண்ணாந்து பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார் சூர்யா.
80-வருட தமிழ்த்திரைப்பட வரலாற்றில் வசூலில் மூன்றாவது இடம் என்கிறது விளம்பரம். ரஜினியின் எந்திரனுக்கும் சிவாஜிக்கும் பூஜைக்கு முன்னாலிருந்தே விளம்பரம் ஆரம்பித்துவிட்டார்கள். எந்திரன் படம் நடுவில் நின்றுபோக கலாநிதியுடன் கைகோர்த்ததில் மீண்டும் அசுர பலத்துடன் விளம்பர யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. சன் டிவியின் இரவு ஏழு மணிச் செய்தியில் இரண்டு நாட்கள் தலைப்புச் செய்தியே எந்திரன் என்றானது. தொண்டுக்கிழத்திலிருந்து வயிற்றுக்குள் இருக்கும் சிசுவைக்கூட நெட்டித்தள்ளிக்கொண்டு தியேட்டருக்குக் கொண்டுபோய் உட்கார வைக்குமளவுக்கு விளம்பரமோ விளம்பரம் என்று போட்டுத்தாக்கினார்கள்.
‘தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனும் எந்திரன் பார்க்காவிட்டால் மனிதப்பிறவியே அல்ல’ என்று குற்றமனப்பான்மையைத் தோற்றுவிக்கிற அளவுக்கு மூளைச்சலவை செய்கிறவிதமாக விளம்பர வியூகம் வகுக்கப்பட்டது. ரஜினி என்பவர் ஏதோ கலியுகம் காக்க வந்த கடவுள் என்பதுபோன்ற பிரமை உருவாக்கப்பட்டு படம் திரையிடப்பட்டது.
ஏழாம் அறிவுக்கு இதுபோன்ற பில்டப்புகள் ஏதும் கிடையாது. ‘போதி தர்மன் காஞ்சிபுரத்திலிருந்து போனவன்’ என்ற வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்லப்பட்டு – சாதாரணமாக மற்ற எல்லா சூர்யா படங்களுக்கும் செய்யப்படும் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு இந்தப் படம் வெளியானது. ‘இந்தப் படத்துல நீங்க என்ன எதிர்பார்க்கறீங்களோ அதைவிட எல்லாமே மேலே மேலே மேலே’ என்ற ஏ.ஆர்.முருகதாஸின் ஆர்வக்கோளாறான வாசகம் மட்டுமே கொஞ்சம் அதிகப்படியான வாசகம். உண்மையில் அவர் அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லியிருக்காவிட்டால் இந்தப்படம் இன்னமும் அதிகமான பரபரப்பை உண்டுபண்ணியிருக்கவும் கூடும். இப்படி ஒரு சராசரியான விளம்பரத்துடன் வெளியான இந்தப்படம் வசூலில் இத்தனைப்பெரிய சாதனை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் இதுதான் முதன்மையான சாதனை என்றே சொல்லத்தோன்றுகிறது.
முருகதாஸ் - பாதி தர்மன்.
சூர்யா - பாதி தர்மன்....இரண்டும் சேர்ந்தால் முழுமையான போதி தர்மன்!
இந்தப்படத்தை ஒரு சராசரிப்படமாகப் பார்க்கத்தோன்றவில்லை. கலை உணர்வுகளையும் வர்த்தக சமன்பாடுகளையும் தாண்டி ஒரு இனத்துக்கான சில சேதிகளை, தான் வாழும் சமுதாயத்துக்குச் சில குறிப்புகளைச் சொல்ல வேண்டுமென்று இயக்குநர் நினைத்திருக்கிறார். ஒரு படைப்பாளியின் ‘இந்தப்’ பார்வை படத்தில் மிக அழுத்தம் திருத்தமாகப் பதிந்திருக்கிறது.
பாடல் காட்சிகளையும் வேறு சில சினிமாத்தன காட்சிகளையும் தவிர்த்திருக்கலாமென்று தோன்றுகிறது. ஆனால் ஒரு திரைப்படமென்பது ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை ரசிக்கும் ஒரு சாதாரண ரசிகனை விட்டு முற்றிலுமாக விலகிப்போய்விடுவதற்கில்லை. தவிர இப்படி நினைக்க வைப்பதே ஒரு வித்தியாசமான படத்தின் சாதனைதான். எந்தப் படத்தில் வழக்கமான விஷயங்களைத் தவிர்த்த சில உன்னதமான கூறுகள் இருக்கின்றனவோ அப்போதுதான் இப்படியெல்லாம் நினைக்கத்தோன்றும்.
படத்தின் பல இடங்களில் நாம் வேறொரு மொழிப்படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. தமிழ் சினிமா உலகப்படங்களை நோக்கி நகர்கின்ற அடையாளமாக இதனை நாம் கொள்ளலாம்.
நடிப்பின் மூலம் பல்வேறு உயரங்களைத் தொட்ட சூர்யா இந்தப் படத்தில் உடல்மொழி மூலம் மற்ற நடிகர்கள் போட்டிக்கு வர முடியாத மிகமிக உயரத்தில் போய் நின்றுகொள்கிறார்.
வேறு எந்த நடிகருக்கும் வராத சில அற்புத பாவங்கள் மின்னல் வெட்டுப்போல நடிகர் திலகத்தின் பார்வையில் தெறித்து விழும்-
அந்தச் சில கீற்றுக்கள், சூர்யாவின் கண்களில் தெறித்து விழுவது ஒரு இனிய ஆச்சரியம்.
உடம்பை முறுக்கேற்றி வைரம் பாய்ந்த கட்டையாய்த் தோற்றம் தருவது வேறு நடிகர்கள் முயற்சித்தாலும் சாத்தியமே. ஆனால் கனிவும் சாந்தமும் கருணையும் தரும் தோற்றத்திற்கும் பார்வைக்கும் முகத்தில் தெரியும் அந்த தெய்வக்களை தேஜஸுக்கும் இயற்கையாய் அமையும் சில வரங்கள் தேவை. அந்த வரம் சூர்யாவுக்கு அமைந்திருக்கிறது.
ரௌத்ரம் காட்டும் முகம் சூர்யாவுக்கானது-
கனிவும் சாந்தமும் கருணையும் காட்டும் முகம் கந்தன் கருணையில் முருகனாக வருபவருக்கானது.
உண்மையில் கட்டபொம்மன் எப்படி இருந்திருப்பான் என்பது தெரியாது. ஆனால் கட்டபொம்மன் என்றால் சிவாஜி, கர்ணன் என்றால் சிவாஜி – என்பதுபோல் போதிதர்மன் என்றால் சூர்யா என்ற பிம்பம் அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவிட்டது!
இனிமேல் இதனை மாற்றுவதற்கில்லை.
போதிதர்மன் தமிழனா தெலுங்கனா கன்னடனா களப்பிரனா பிரஞ்சுக்காரனா ஆப்பிரிக்கனா என்பது பற்றியெல்லாம் வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். முடிந்த முடிவான வரலாற்றுச் செய்திகள் இங்கே எதுவுமே இல்லை. கனகச்சித்தனும் கல்லுகப்பித்தனும் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் சொன்னால், யார் சொன்னது? அவர்கள் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னொருவர் சொல்லுவார். அவர்கள் தமிழர்களே அல்ல தெலுங்கர்கள் என்று இன்னொருவர் ஓடிவருவார். தெலுங்கர் அல்ல; கன்னடக்காரர் என்பார் மற்றவர். எதற்கு வம்பு?
நம் கண் முன்னால் நடக்கும் எத்தனையோ விஷயங்களுக்கான பூர்வாங்கமே நமக்குத் தெரிவதில்லை. பத்திரிகைகளில் வரும் எத்தனையோ சம்பவங்களின் மர்மங்கள் கடைசிவரை விளங்குவதும் இல்லை, விளக்கப்படுவதும் இல்லை.நேற்றைக்கு நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைக்கூட ஒவ்வொரு ஊடகம் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைச் சொல்லித்தான் முன்வைக்கின்றன. ராஜிவ் காந்தி கொலையின் மர்ம முடிச்சுக்களையே அறுதியிட்டுக் கூறமுடியாமல் ஆளுக்கொன்றாய்ச்சொல்லி அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும்போது 1600 ஆண்டுகளுக்கு முந்தைய சரியான தகவல்களுக்கு எங்கிருந்து போவது?
அப்படியே போதிதர்மன் தமிழன் இல்லையென்றாலும் அவன் காஞ்சிபுரத்திலிருந்து போனவன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. உலக சமுதாயத்திற்கு நல்லது செய்த ஒருவனை நம்மவனாகக் கொண்டாடுவதில் என்ன தவறு?
எம்ஜிஆரை நாம் நம்மவராக ஏற்றுக்கொள்ளவில்லையா?
ரஜினியை உச்சிக்கு மேல் வைத்து உயர்த்தவில்லையா?
முருகதாஸும் சூர்யாவும் போதிதர்மனைத் தமிழனாக ‘ஏற்றுக்கொண்டே’ இந்தப் படைப்பை ஆக்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் தமக்குக் கிடைத்த ஒரு தகவலை வைத்து நல்லதொரு படைப்பைக் கொடுக்க முனைந்திருக்கிறார். அந்த படைப்புக்குத் தன்னுடைய பங்களிப்பைத் தன்னால் முடிந்த அளவு மட்டுமின்றி மற்றவர்கள் பார்த்து வியக்குமளவுக்கு ஒரு கலைஞனாக நின்று சாதித்துக் காட்டியிருக்கிறார் சூர்யா.
கராத்தே பயிலும் தம்முடைய மாணவர்களை “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் இது நம்முடைய குருநாதரின் படம்” என்று சொல்லி கராத்தே ஆசிரியர்கள் அனுப்பிவைக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்பொழுதுதான் படத்தின் தாக்கமும் சூர்யாவின் உழைப்பிற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் தெரியவருகிறது.
சங்க காலத்திலிருந்து இதுவரை வேறு யாராவது தமிழனோ தமிழ் மன்னனோ குறிப்பிட்டுச் சொல்லும்படி கிடைக்கின்றானா யாருடைய வாழ்க்கையாவது சொல்லாமல் விடுபட்டுப்போயிருக்கிறதா, ஏதாவது ஒரு சிறு குறிப்பாவது கிடைக்கிறதா என்பதாக தமிழ் இலக்கியத்தையும் தமிழர்களின் வரலாற்றையும் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிறையப்பேரைத் தேடச் செய்திருக்கிறது இந்தப் படம்.
வணிகரீதியான வெற்றியை விடவும் இந்தத் தாக்கம்தான் இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி என்று சொல்லலாம்.
34 comments :
Train ஒன்றில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த போது, Mr. டேவிட் ஆரோக்கியராஜ், LKG 'B' யை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கையையும் காலையும் தூக்கி தூக்கி சண்டை போடும் பாவங்கள் கொடுத்து- அவரது சஹ பிரயாணிகளை உற்சாகப் படுத்திக்கொண்டு வந்தார் Mr. டேவிட். "நா போதி தம்மன்" என்றார். "போதி தர்மர் யார்"? என்று கேட்டேன். "சூரியா" என்றார்!! இதை விட அந்த படத்தினுடைய வெற்றிக்கு என்ன வேண்டும்? 'தமிழ் மக்களுக்கு போதி தர்மர் யார் என்று தெரியவில்லையே' என்ற கவலைக்கே இனி இடமில்லை!
ஆனால் போதி தர்மரையும் தாண்டி- DNA reconstruction ... Genetic disorder ஐ குணப்படுத்த வாய்ப்புகள் உண்டு- போன்ற விஷயங்கள்-- யோசிக்க வைக்கிறது... அது மட்டும் முடியுமாக இருந்தால்...!!
ரொம்பவே நல்ல- நடுநிலையான கட்டுரை!
சார்! எனது பின்னூட்டம் போலவே உங்கள் பதிவும் தாமதமானதா!
தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கனும்ன்னு பார்த்த ஏழாம் அறிவு,வேலாயுதம் இரண்டில் ஏழாம் அறிவு வெற்றிப்படமே.
விஜய் அவங்க நோண்டுறாங்க,இவங்க கிள்ளுறாங்கன்னு சொல்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.
Super comedy boss
வாருங்கள் மாதங்கி, தங்களின் வருகைக்கு நன்றி. ரயில் அனுபவத்தை சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இது போன்ற தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதில் முருகதாஸும் சூர்யாவும் நிறையவே வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
வாருங்கள் நடராஜன், புதுவீட்டிற்கு குடிபுகுந்ததில் இந்த ஏரியாவில் நெட் தொடர்பு கிடைப்பதில் இத்தனைத் தாமதமாகப்போனதில் ஒன்றரை மாதங்களாக இணையத்துடன் தொடர்பே அறுபட்டுப்போயிருந்தது. இப்போது கிடைத்திருப்பதால் உங்களோடெல்லாம் தொடர்பு கொள்ளமுடிந்திருக்கிறது.இனி தொடர்வோம்,நன்றி.
ஆமாம் அனானிமஸ் உலகில் நிறைய விஷயங்கள் காமெடியானவைதாம்.
””””ஆனால் ஒரு திரைப்படமென்பது ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை ரசிக்கும் ஒரு சாதாரண ரசிகனை விட்டு முற்றிலுமாக விலகிப்போய்விடுவதற்கில்லை.’’’’’
அருமையான வார்த்தைகளைக் கொண்ட விமர்சனம் சார், தமிழ் மணத்தில் ஓட்டளித்து விட்டுத்தான் படிக்கவே தொடங்கினேன்.
அமுதவன் ஐயா,
உரையாடி நெடுநாட்கள் ஆகிவிட்டன நலந்தானே.மீண்டும் உங்கள் ஆய்வுபூர்வமான பதிவை படிக்க மகிழ்ச்சி.தொடருங்கள்.
வாழ்த்துக்களுடன்,
intha post super jaalraa...
தங்கள் அன்பிற்கும் வருகைக்கும் நன்றி ஏஆர்ஆர்.
வாருங்கள் கண்பத், தங்கள் அன்பிற்கு நன்றி. விரைவிலேயே நீங்கள் சொல்லியிருபதற்கேற்ப நிறைய தொடர்பு கொள்வோம்.
இருக்கட்டுமே கணேஷ் சில சரியான விஷயங்களுக்கான ஜால்ரா சத்தம்கூட ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்.
நீங்க என்ன சொல்ல வறீங்கனே கடைசி வரைக்கும் புரியல....
இதுவும் 7 ஆம் அறிவு விளம்பரமா? இல்லை நீங்க சூர்யாவுக்கு சொந்தக்காரரா???
நண்பரே உங்களுடைய பிரச்சினை என்னவென்பதுதான் தெரியவில்லை. இவ்வளவு தெளிவான தமிழில் எழுதியிருந்தும் உங்களுக்குப் புரியவில்லையென்றால் என்ன செய்யட்டும்? திறமை மட்டுமின்றி எந்த நிலைக்கும் சென்று உழைக்கத் தயாராக இருக்கும் சூர்யா போன்ற கலைஞனைப் பாராட்டுபவர் சொந்தக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் செய்வதற்கு ஒன்றுமில்லை.
///கராத்தே பயிலும் தம்முடைய மாணவர்களை “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் இது நம்முடைய குருநாதரின் படம்” என்று சொல்லி கராத்தே ஆசிரியர்கள் அனுப்பிவைக்கிறார்கள் ////
உண்மையில் ஆணித்தரமான வாக்கியம்... காரணம் சூர்யா அந்தப் பாத்திரத்திற்கு எடுத்த சிரத்தையையே மிகவும் ரசிக்கலாம்...
வருகைக்கு நன்றி சுதா.
சமீப காலமாக இணையத்தில் (குறிப்பாக வலைப் பக்கங்களில்) சிலாகிக்கப் பட்ட சில படங்கள் வசூலில் பின் தங்கியிருக்கின்றன (உதா: நந்தலாலா, ஆரண்ய காண்டம் போன்றவை); அதே போல், இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப் பட்ட படங்கள் (உதா: எந்திரன்) வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளன. அந்த trend இன்னமும் தொடர்கிறதோ?
பொதுவாக வலையில் திரைவிமர்சனங்கள், ஒருவர் ஒன்றை ஆரம்பித்து வைக்க மற்றவர் அதே கருத்தை வேறு மாதிரியாகத் தொடர்கிறார் என்ற, குற்றசாட்டுகளை சமீப காலமாக பெற்று வருகின்றன.
ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பொறுத்தவரை இது தான் நான் படித்த முதல் மாற்றுப் பார்வை.
நன்றிகள்.
வருகைக்கு நன்றி ஸ்ரீனிவாசன். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். இந்தப் படம் தேவையில்லாமலேயே நிறைய எதிர்ப்புகளைச் சமாளித்திருக்கிறது. அதே சமயம் தேவைப்பட்ட, கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரங்களும் பாராட்டுக்களும் கிடைக்காமலேயே போயிருக்கின்றன. அது ஒருபுறமிருக்க விமரிசனங்களும் பாராட்டுக்களும் ஒரு பக்கம் இருந்தபோதிலும் வணிகரீதியாக மிகப்பெரும் வெற்றியை அடையும்போது மீடியாக்களின் கவனம் மிக அதிகமாக அந்தப் படத்தின்மீது விழும். இந்தப் படத்திற்கு அதிலும் ஏதோ குறை என்றே தோன்றுகிறது. இதற்கான அரசியல் என்னவென்று புரியவில்லை. எது எப்படியோ முருகதாஸும், சூர்யாவும், உதயநிதியும் நினைத்த வெற்றிக்கு மேலேயே அடைந்திருக்கிறார்கள்.
unnmaya sollunga ethu 7am arivu vilambarama illa avanga kitta kasu ethachum vangitangala?
ஆமாம் மதன்குமார் உங்களை மாதிரி ஆட்களிடம் இந்தப் படத்தைக் கொண்டுசென்று சேர்க்கிறேன் என்று சொல்லி ஐந்து கோடி ரூபாய் வாங்கியிருக்கிறேன். திருப்திதானே?
போதி தருமன் தவிர படத்தில் ஒன்று இல்லை.. நல்ல திறனாய்வு.. .. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.
நானும் கொஞ்சம் லேட்தான். ஆனாலும் படத்தைப் பார்க்காமலே விட்டிருந்தால் ஒரு மிக நல்ல அனுபவத்தை இழந்திருப்பேன்! உங்கள் விமரிசனமும் விளக்கங்களும் சரியானவையே. கமர்ஷியல் பார்முலா என்ற சுழலில் சிக்கியிருக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நல்ல கருத்துள்ள படம் வெற்றியடைவதில் எரிச்சல் வருவதும் இயற்கைதான்! படத்திலே ஒரு வசனம் என் கவனத்தை ஈர்த்தது. நாயகி, நாயகனைப் பார்த்து ‘உன் காதலைத் தூக்கிக் குப்பையிலே போடு’என்கிறாள். அதையே மாற்றி, மதன்குமார் போன்றவர்களுக்கும் சொல்லிவிடலாம்.படத்திலே ஒரு இளைஞர் சொல்கிறார், பாருங்கள், ‘போதிதர்மனா, எங்க தாத்தா பேரே எனக்குத் தெரியாதுங்க’ என்று. இத்தகையவர்கள் இருக்கும் வரை கமர்ஷிய்ல் சினிமா அழியவே அழியாது, ஏழாம் அறிவு போன்ற பொக்கிஷங்கள் அரிதாகத்தான் கிடைக்கும்!
போதி தர்மன் தவிர படத்தில் ஒன்றும் இல்லை என்ற உங்கள் கருத்தில் எனக்கும் ஒப்புதல்தான். ஆனால் இந்த ஒற்றை வரி விமரிசனம்தான் இயக்குநரையும் கதாநாயகனையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் தெரியுமா, அவர்களுக்கு வேண்டியிருந்ததும் இதுதானே! இதை மட்டுமே செய்திருந்தால் ஒரு 25 நிமிட டாக்குமெண்டரியாய் மட்டுமே படம் முடிந்திருக்கும் என்பதனால்தானே அவர்கள் மற்ற விஷயங்களையும் உடன் சேர்த்திருக்கிறார்கள்.
உங்கள் வலைப்பக்கத்துக்கு வந்து பார்க்கிறேன். பார்த்துவிட்டு எழுதுகிறேன் ரிஷ்வன்.
தங்களின் தாமதமான ஆனால் அழகான விமர்சனத்துக்கு நன்றி ஆர்எஸ்கே.
http://kaatchippizhaithirai.blogspot.com/
ஏழாம் அறிவு திரைப்படத்தை பற்றிய வரலாற்றுப்பூர்வமான விமர்சனம் காட்சிப்பிழைதிரையில் (வலைதளமாகவும்) வருகிறது.
நல்ல ஆய்வு. நல்ல விமரிசனம். நல்ல ஆய்வுகள் எப்போதும் வரவேற்கப்படவேண்டியவையே. அடுத்த படத்தின்போது ஏஆர் முருகதாஸ் இன்னமும் கவனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஆய்வறிஞர்களிடமெல்லாம் போகாமல் தனக்குக் கிடைத்த தகவலை வைத்துக்கொண்டு அவர் நன்றாக எடுத்திருப்பதாகவே தோன்றுகிறது. போதி தர்மரைப் பற்றிய இத்தனை ஆய்வுகளைத் தூண்டிவிட்டிருப்பதே படத்திற்குக் கிடைத்த வெற்றிதான். வருகைக்கு நன்றி அனானிமஸ்.
நடிகர் திலகம் சிவாஜியோடு ஒப்பிடும் அளவுக்கு சூர்யா இதில் நடிக்க வில்லை என்றே நினைக்கிறேன். வெறும் உடல் பராக்கிரமத்திடனும் சண்டை வித்தைகளினாலுமே போதி தர்மன் பாத்திரம் படத்தில் நிலை நாட்டப்படுகிறது. இதில் சூர்யாவின் பங்கை விட இயக்குனரின் பங்கே அதிகம் இருக்கிறது. சூர்யாவின் முத்திரைமிகு நடிப்பு இன்னும் தமிழ் சினிமாவில் வரவில்லை என்பதே என் கருத்து. நடிப்பைப் பொறுத்த வரை அவர் இன்னும் ஒரு இயக்குனரின் நடிகரே! சொந்த சிந்தனைகளை அவர் நடிப்பில் இன்னும் செலுத்தவில்லை. சூர்யா மற்றும் விக்ரம் ஒரு பாத்திரத்தை இயக்குனரின் வழியிலோ அல்லது தனக்கு செய்யத் தெரிந்த ஒரு சாதாரண பரிமாணத்திலேயே வெளிப்படுத்துகிறார்கள். சிவாஜி, கமல் ஒரே பாத்திரத்தை பல பரிமாணங்களில் வெளிப்படுத்த தெரிந்தவர்கள். அதுவே சூர்யா விக்ரம் போன்றவர்களிடம் இருந்து சிவாஜி, கமல் வித்தியாசப்பட்டு நிற்கும் இடம். சூர்யாவின் உடலை ஏற்றி இறக்க எடுக்கும் உழைப்பு, வித்தைகளைக் கற்க மேற்கொள்ளும் முயற்சிகள், சிரத்தை போன்றவற்றைக் கண்டிப்பாக பாராட்டலாம். ஆனால் நடிப்பில் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இதையே தான் கமலும் வாரணம் ஆயிரம் படத்திற்காக சூர்யா விருது வாங்கும் போது கூறினார்!! சூர்யாவிற்கு நடிப்பில் இன்னும் நிறைய ஆராய்ச்சி வேண்டும். சூர்யாவும், அமுதவனும் இதை ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்....:)
அரவிந்த்
http://enathusindhanaigal.blogspot.com/
வாருங்கள் அரவிந்த், தங்களின் ஆரோக்கியமான விமரிசனத்துக்கு நன்றி. நான் எந்த இடத்திலும் சூர்யாவை நடிகர் திலகத்தோடு ஒப்பிடவில்லை. அவரோடு வேறு யாரையுமேகூட நான் ஒப்பிடமாட்டேன். 'வேறு எந்த நடிகருக்கும் வராத சில அற்புத பாவங்கள் மின்னல்வெட்டுப்போல நடிகர்திலகத்தின் பார்வையில் தெறித்துவிழும். அந்தச்சில கீற்றுக்கள்(கவனியுங்கள்,'அந்தச் சில கீற்றுக்கள்')சூர்யாவின் கண்களில் தெறித்துவிழுவது ஒரு இனிய ஆச்சரியம்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். இது சூர்யாவை நிச்சயம் நடிகர்திலகத்தோடு ஒப்பிடுவது ஆகாது. அதேபோல அவரின் ஏதோ ஒரு இழை சூர்யாவின் நடிப்பில் வெளிப்படுகிறது என்றுகூட சொல்லக்கூடாது என்பதெல்லாம் சர்வாதிகாரம் என்றே கருதுகின்றேன். கமல் பற்றியும் விக்ரம் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். கமலும்கூட ஒரு இயக்குநரின் நடிகரே. பாலசந்தரின் கைவண்ணத்திலும், பாரதிராஜாவின் கைவண்ணத்திலும்தான் பிரகாசிக்க ஆரம்பித்தவர் கமல்.அதற்குமுன்னால் ஒரு இருபது முப்பது படங்கள் கமலுடையது சாதாரணமாகத்தான் இருந்தன. சிவாஜி அப்படியல்ல;முதல் படத்திலேயே திரையுலகைப் புரட்டிப்போட்ட நடிகர் அவர்.
சூர்யா பயணப்படவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. வயதும் நிறைய இருக்கிறது. எந்த அளவக்குச்சென்றும் உழைக்கத் தயங்காதவர் அவர். அதேபோல தம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள எந்தவித சமரசமும் செய்துகொள்ளாத எந்த எல்லைகளுக்கும் சென்றுவரத் தயாராக இருப்பவர் அவர். அதனால் சூர்யா பற்றிய ஒரு கணிப்பை மேற்கொள்ள இது ஏற்ற நேரம் அல்ல. ஆனால் அவரது முயற்சிகளையும் தேடலையும் பாராட்ட வேண்டிய நேரம் இது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
அமுதவன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நண்பர் அமுதவனின் இந்த வலைத்தளம் மேன்மேலும் சிறப்பு பெற பிரார்த்திக்கிறேன்.
நன்றி கண்பத்,தங்களின் எண்ணம் நாளையிலிருந்தே நிறைவேறப்போகிறது. தங்களின் முன்யோசனையான விருப்பம் ஆச்சரிப்படுத்துகிறது. தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
சினிமா நடிகர்களுக்கெல்லாம் பதிவுகள் போடாதீர்கள். உங்கள் நேரம் பொன்னானது.
வருகைக்கு நன்றி passerby.
நல்லபதிவு,
சில வயித்தெரிச்சல் காரார்கள் இருக்கத்தான் செய்வார்கள், அதற்காக உண்மை இல்லை என்றாகிவிடுமா?
போதிதர்மன் ஒரு தமிழ் என்று சொல்வதற்கு எத்தனை எதிர்ப்பு அதுவும் தமிழில்?
வெக்கக்கேடு
Post a Comment