Monday, July 2, 2012

சகுனி சொல்லும் சேதிகள்!


ஒரு படத்தைப் பற்றிய விமரிசனங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் படத்தின் ஓட்டமும் வசூலும்தாம் திரைப்படத்துறையில் ஒரு பிரபலத்தின் புகழை அல்லது செல்வாக்கை – அது நடிகராக இருந்தாலும் சரி, இயக்குநராக அல்லது இசையமைப்பாளராக யாராக இருந்தாலும், நிர்ணயிக்கின்ற விஷயங்களாக இருக்கின்றன.

நல்ல கதை, நல்ல படம் என்ற அளவுகோல்கள் மட்டுமே ஒரு படம் வெற்றிபெற போதுமானவை அல்ல. சுமாரான கதையோ மோசமான கதையோ, சுமாரான நடிப்போ மோசமான நடிப்போ அந்தப் படம் ஓடுவதைப் பொறுத்துத்தான் அந்தப் படத்தின் தலைவிதியும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தலைவிதியும் தீர்மானிக்கப்படுகின்றன. நல்ல கதை, நல்ல படம், நல்ல நடிப்பு என்பவை மட்டுமே ஒரு வெற்றிப்படத்திற்கான அளவுகோல்களாக இருந்திருந்தால் எம்ஜிஆர் ரஜினிகாந்த்தெல்லாம் இத்தனைக்காலம் தாக்குப்பிடித்து இருந்திருக்கவே முடியாது. எப்படியோ ஓடிவிடும் படங்கள் அந்த ஓட்டத்திற்கான வெற்றிக்குப் புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்து நாளடைவில் அவற்றையே வெற்றிக்கான அளவுகோல்களாகவும் தீர்மானித்து அவற்றை அங்கீகரித்தும்விடுகின்றன.

ஒரு கதாநாயகனின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் செல்வாக்கிற்கும் புகழிற்குமான காரணங்கள் மிகமிக எளிமையாக்கப்பட்டுவிட்டன. படம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை – படம் ஓடுகிறதா ஓடுவதற்கான விஷயங்கள் படத்தில் இருக்கின்றனவா என்பது மட்டுமே பார்க்கப்பட்டு போதுமான வசூலை அள்ளிக்குவிக்கிறதா அதுபோதும் அவன் வெற்றிக்கதாநாயகனாகப் பவனிவர என்கிற அளவுக்கு வந்துவிட்டது.

சகுனி விஷயமும் அப்படித்தான். படம் சரியில்லை, கதை சரியில்லை, படத்தில் லாஜிக் இல்லை ஒளிப்பதிவில் பிரமாதமில்லை என்றெல்லாம் விமரிசகர்கள் விழுந்து புரண்டுகொண்டிருக்க படம் பாட்டுக்குப் பிரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு கதாநாயகன் பெருமைப்பட்டுக்கொள்ள படத்தின் ஓட்டமும் இரண்டாவது அம்சம்தான்.
 முதல் அம்சம் என்ன தெரியுமா?
படத்தின் ரிலீஸ்.

ரிலீஸ்தான் முதல் அம்சம் என்கிற கோட்பாடு சமீப காலமாக நிறுவப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சகுனி ரிலீஸ் கார்த்தி மட்டுமல்ல, கார்த்தி நிலையில் இருக்கும் யாராக இருந்தாலும் முழுக்கப் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம்தான்.

ஒரு படம் 1154 தியேட்டர்களில் ரிலீஸ் என்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல; இதற்கு முந்தைய கணக்கின்படி, தமிழில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்தான் உலகம் முழுவதும் 2000 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட படம் என்று சொல்கிறார்கள். அதுதான் இதுவரையிலும் உள்ள ரிகார்ட். ஆனால் இங்கே எந்திரனின் பின்னணியைப் பார்க்கவேண்டும். தமிழில் சிவாஜி எம்ஜிஆருக்கடுத்து ஆகப்பெரும்நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் பார்க்கப்படுபவர் ரஜினிகாந்த். 

திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே நாற்பது வருடங்களைக் கடந்தவர். அந்த ரஜினி, உலக அழகி ஐஸ்வர்யாராய், பிரமாண்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் ஷங்கர், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இத்தனை படாபடா பின்புலங்களுடன் சன் டிவி என்ற வர்த்தக ராட்சசன் என்ற இத்தனையும் சேர்ந்துதான் எந்திரனின் பிரமாண்ட ரிலீஸுக்குக் காரணமாக அமைந்தன.
இங்கே இவையெல்லாம் ஒன்றுமேயில்லை.

கார்த்தி என்ற ஒரேயொரு சின்னப்பையன் கதாநாயகன், அவ்வளவுதான்!
இயக்குநர் சங்கர் தயாள் யாரென்றே தெரியாது. விகடன் மாணவப்பத்திரிகை நிருபராயிருந்து திரையுலகிற்கு வந்திருப்பவர் என்று சொல்கிறார்கள்.

கதாநாயகி ப்ரணிதாவுக்கும் எந்த அடையாளமும் இல்லை ஓரிரு கன்னடப் படங்களில் நடித்தவர் என்பதைத்தவிர.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேகமாக முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு இளம் இசையமைப்பாளர்.

சந்தானம் மட்டும்தான் ‘பேசப்படும் நடிகர்களில் ஒருவர். அதுவும் கவுண்டமணி வடிவேல் என்று யாரும் களத்தில் இல்லாததால் விவேக்கா சந்தானமா என்று வரும்போது ‘சந்தானமே இருக்கட்டும் என்று விநியோகஸ்தர்களால் சொல்லப்படும் ஒருவர்தானே தவிர விநியோகஸ்தர்களால் பிரமாதமாக விலைபேசப்படுபவர் அல்ல.

இப்படியொரு சர்வசாதாரணக் கூட்டணியுடன் களமிறங்கி தான் நடித்த ஆறாவது படமே ஆயிரத்து நூற்றைம்பத்து நான்கு தியேட்டர்களில் வெளியாகின்ற பெருமையுடன் வலம்வர கார்த்தியால் முடிகிறது எனும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

சகுனி - விமரிசன அளவுகோல்களுடன் பார்க்கும்போது கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிடும் அளவுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். சரியான திரைக்கதை இல்லை, படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் இல்லை, பாடல் காட்சிக்கு உடன் ஆட்டம்போடுவதற்கு ஒரு பெண் வேண்டும் என்பதைத்தவிர கதாநாயகிக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை, இது வெறும் ஒரு காமெடிப் படமா என்பது தெரியவில்லை, மிகப்பெரிய பிரமாண்டம் இல்லை, ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் இல்லை, இந்தப் படத்தை ஒரு நல்ல பொலிட்டிகல் திரில்லராகச் செய்திருக்கலாம் செய்யப்படவில்லை........இத்தனை ‘இல்லைகள்இருந்தபோதும் கணிசமான வசூலுடன் இந்தப் படம் ஓடுகிறது. 

என்ன காரணமாம்? படத்தைப் பார்த்துவந்த ஒரு பெண்மணி சொன்னார் “லாஜிக் அது இதெல்லாம் தெரியாதுங்க. படம் ஜாலியா ஓடுதுங்க. 

கார்த்தி சந்தானம் அடிக்கும் லூட்டி கலகலன்னு இருக்குதுங்க. அது போதும்
ஆக கார்த்தி மக்களின் மனதில் ஜாலியான படங்களுக்கான நம்பகமான ரசிக்கத்தக்க கதாநாயகன் என்ற அந்தஸ்தைப் பிடித்துவிட்டார். இங்கிருந்துதான் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் ஆரம்பிக்கிறது.

சூர்யாவை சாதாரணமாக எடைபோட முடியாது. மிகமிக அழுத்தக்காரராக இறுக்கமாக இருந்து எந்தச் சமயத்தில் எதில் எப்படி ஸ்கோர் செய்யவேண்டுமோ அப்படி இறங்கி அடிக்கும் களவீரராகத் தம்மை மாற்றிக்கொண்ட வித்தை அவருக்குத் தெரிந்திருக்கிறது. 

அதனால்தான் அமைதியாக இருந்து இருந்தாற்போலிருந்து திடீரென்று இறங்கி எந்த ஆட்டம் வேண்டுமானாலும் ஆட முடிகிறது அவரால். அதற்கான சூத்திரம் அவருக்குக் கைவந்த கலையாகியிருக்கிறது. 

அகரம் பவுண்டேஷனாகட்டும், போதிதர்மர் ஆகட்டும், கணிணி முன்னால் சூட்கோட் அணிந்து கோடிரூபாய்க்கான கேள்விகள் கேட்டுத் தமிழகத்தைக் கட்டிப்போடும் மாஸ்டராகட்டும் எந்த பிரம்மாண்டத்தையும் அவரால் சர்வசாதாரணமாகச் செய்துவிட்டுப் போய்விடமுடிகிறது. 

காரணம் சூர்யாவின் பாதை அவருக்குள்ளாக மிகத் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. ‘My steps are measured’ என்ற உறுதியான முடிவும் அவரால் எடுக்கப்பட்டுவிட்டது.

ஆனால் கார்த்தி விஷயத்தில் இதற்குமேல்தான் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற வரையறையை சகுனி நிர்ணயித்திருப்பதாகத்தான் தோன்றுகிறது.

ஏனெனில் ஆபத்தான சில சமயங்களில் நாமே எதிர்பாராத வெற்றிகள் நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்திவிடும். அதுபோன்ற ஒரு வெற்றிதான் இது என்பதாகத்தான் நினைக்கத்தோன்றுகிறது.

ஏனெனில் நிறைய ஓட்டைகளுடனான இந்தக் கப்பல் மிக வெற்றிகரமாகக் கரை சேர்ந்திருக்கிறது.


இனி நல்ல கப்பல்களை மட்டுமே கார்த்தி தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. சகுனி சொல்லும் சேதி இதுதான்.

1 comment :

ஜோதிஜி said...

தனிப்பட்ட முறையில் கார்த்திக் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் நபர். இந்த படமும் எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.

Post a Comment