Monday, December 10, 2012

இந்த நூற்றாண்டின் முதல் மகாகவி



இந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த முதல் மகாகவி பாரதிதான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனிப்பட்ட நடையில் உழன்று கொண்டிருந்த தமிழ்க்கவிதையைச் சட்டென்று திசைதிருப்பி இன்றைக்கு இருக்கின்ற - இனிமேல் இருக்கப்போகின்ற நவீன நடைக்கான ராஜபாட்டையை- மன்னிக்கவும் மக்களுக்கான பாட்டையைப் போட்டுக்கொடுத்த அற்புதன் அவன்தான். அவனுடைய காலம்வரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்ப்பாடல்கள் என்பதும் சங்க இலக்கியத்தின் நீட்சியாகத்தான் இருந்தது. அதன் மருட்சி நடை பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கித் திரும்பவில்லை. எந்தச் சாதாரணப் பாடலுக்கும் உரை சொல்வதற்கு ஒரு தமிழ் வித்துவானையோ தமிழ்ப்புலவரையோ தேடிப்போக வேண்டியிருந்தது. 

சில புலவர்களின் தமிழ் உரையை விளங்கிக்கொள்வதற்கு இன்னொரு உரை தேவையிருந்தது. இதே நிலைமை தொடர்ந்திருந்திருந்தால் தமிழ்க்கவிதைகள் அழிந்தே போயிருக்கும். வேகமாய் வந்துகொண்டிருந்த நவீனத்தின் காலம் ஒரு பாடலைப் புரிந்துகொள்ள யாரையோ தேடிப்போகவேண்டும் அவர்கள் விளக்கம் சொன்னார்களானால்தான் இலக்கியம் புரியும் என்ற 

நிலைமை தொடர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு உரை நடைக்கும் (அந்தக் காலத்திலே அதற்குப் பெயர் வியாசம்) ஒரு வித்துவானைத் தேடிக்கண்டுபிடித்து உரை சொல்லக்கேட்டு இலக்கியம் படித்திருக்கப் போகிறார்கள்? ‘குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்” என்று ஆரம்பித்தவுடன் “அண்ணே எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறமா வாரேன்” என்று எழுந்து போய்விட மாட்டார்களா? நம் காலத்து மொழிநடையில் கவிதை இருக்கவேண்டும் கரடு முரடான தமிழ் பேச்சுமொழிக்கும் சற்றே மேம்பட்ட ஒரு நடையில் இருக்கவேண்டும் ரொம்ப உயரத்தில் புரியாத மொழிநடையில் இருக்கக்கூடாது என்ற எண்ணம் பாரதி காலத்துக்குக் கொஞ்சம்  முன்னரே விதைக்கப்பட்டிருந்த போதிலும் அதனை வெற்றிகரமாகக் கையிலெடுத்து மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவன் பாரதிதான்.

இயல்பான மொழிநடை, உணர்ச்சிகரமான சொற்கள், தத்துவ விசாரம், ஆன்மிக ஞானம் பழையன சாடல் புதியன பேசல் புதுப்புது உத்திகள் அறநெறி பேணல் விடுதலை வேட்கை காதல், நாட்டுப்பற்று, மொழி உணர்வு, அழகியல், இயற்கையை நேசித்தல் என்று மக்களின் வெகு அருகில் வந்து நின்று இலக்கியம் பேசியவன் பாரதி. அதனால்தான் அவனை ஒரு மகாகவியாகவும் யுகபுருஷனாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

பாரதிக்கு அடுத்துவந்த பாரதிதாசன் பாரதி பாடாமல் விட்ட சில பகுதிகளையும் மாறிவரும் சமுதாயத்திற்குத் தேவையான உணர்வுகளையும் ஊட்டத்தொடங்கினான். தேசவிடுதலையை பாரதி பாடிச்சென்றுவிட ‘ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று தனக்கு முன்னோன் சொன்னதை 
தமிழ் இனப்புரட்சியாக கொண்டுவர பாடுபட்டவன் பாரதிதாசன்.

அடுத்துவந்த கண்ணதாசன் சங்க இலக்கியத்தின் மரபு சார்ந்த நீட்சியையே பாடுபொருள் ஆக்குகிறான். அவன் காலத்தில் இருந்த கவிஞர்களுக்கும் அவனுக்கு முன்பிருந்த கவிஞர்களுக்கும் கண்ணதாசனுக்கும் அதுதான் வித்தியாசம். சங்க இலக்கிய மரபு திரைஇசைப் பாடலாக உலா வர ஆரம்பிக்கிறது. அதற்கு அவனுக்கு அற்புதமாய் வாய்த்த இடம் திரைப்படத்துறை. ஏட்டில் படிப்பதுதான் இலக்கியம் என்றிருந்த காலகட்டம் மெதுவாக மாறுகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியால் மீடியா வானொலி இசைத்தட்டு டேப்ரிகார்டர், சி.டி, ஐபேட் என்று வகைவகையாக மாறி இசைவடிவத்தில் பாடல் வரப்போக ஏட்டில் படிக்காதவனையும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்று இதழில் தேன் தடவிப் பாடவைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் வெறும் சினிமாக்கவிஞன் தானே சினிமாப்பாட்டெல்லாம் இலக்கியமாகிவிடுமா? என்று இன்னமும் சிலபேர் முனகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட கவிஞன் அவன்.  மனித 
வாழ்க்கையின் அத்தனை நொடிகளையும் பாடிவைத்திருக்கும் ஒரே கவிஞன் அவன்தான்.
நாம் பாரதிக்கு வருவோம்.

ஒரு கவிஞன் எந்நாளும் நிலைத்து நிற்க அவன் வெறுமனே அழகியலைப் பாடிச்செல்லுபவனாகவோ தினசரி வாழ்க்கையைப் பதிவு செய்துவைத்துவிட்டுப் போகிறவனாகவோ மட்டும் இருந்தால் போதாது. அவன் ஒரு தத்துவ ஞானியாகவும் இருத்தல் வேண்டும். 

இப்போதெல்லாம் சில கவிஞர்கள் பாடல்களில் நிறைய புள்ளிவிவரம் சொல்லுகிறார்கள். இன்னும் சில கவிஞர்கள் என்சைக்ளோபீடியா விஷயங்களைச் சொல்லுகிறார்கள்.

“எறும்பு பற்றித் தெரியுமா நண்பர்களே உங்களுக்கு?

அதன் சின்னஞ்சிறு உருவத்துக்குப் பின்னே இருக்கும் மலைக்க வைக்கும் விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூச்சி இனத்தில் மிகுந்த அறிவு கொண்டது எறும்புதான் என்பது தெரியுமா?

எறும்புகளில் எட்டாயிரம் வகைகள் உண்டு

உடலை விடத் தலை பெரியதாக உள்ள உயிரினம் எறும்பு.

பிரிந்துபோன எறும்பு ஒன்று ஆறுமாதம் கழித்து வந்தாலும் மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டுகொள்ளும்.

எறும்புகள் வரிசையாக செல்லக் காரணம் அவை செல்லும்போது சுரக்கும் பியுமரோன் ப்யூமரிக் அமிலம்தான்

அவை மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும்……………”இப்படியெல்லாம் ‘கவிதை’ எழுதுகிறார்கள்.

இந்தக் கவிதை கவிதை அல்ல; தினமணியில் வந்த செய்தித் துணுக்குத்தான். இப்படி தினமணி தினத்தந்தி தினமலர் போன்ற பத்திரிகைகளின் சிறுவர் மலர்களிலும் பாப்பா மலர்களிலும் ஓராயிரம் தகவல்கள் வருகின்றன. அதனைத் தொகுத்து பாடல்களாகவும் கவிதைகளாகவும் சிறுபிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள். இந்த தகவல் துணுக்குகள் எல்லாம் தகவல் துணுக்குகளே. கவிதைகள் ஆகா.

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்றவன் பாரதி. தீ சுடும் என்பது தகவல். ‘தீ இனிது’ என்றானே அதுதான் கவிதை.

பாரதி பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் இவ்வார தினமணியின் தமிழ்மணி பகுதியில் வந்துள்ளது. அவற்றிலுள்ள சில பகுதிகளைப் பாருங்களேன்.

‘தம்பி- மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கின்றேன். 

நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலேயே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.

நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

தமிழ் – தமிழ் – தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை, புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்.

தம்பி – நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.

தமிழைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை!

தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி!

உள்ளமே உலகம்.

ஏறு! ஏறு! ஏறு!

மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணு.

பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி!

உனக்குச் சிறகுகள் தோன்றுக.

பறந்து போ! பற, பற!

மேலே மேலே மேலே!

தம்பி _ ‘தமிழ் நாடு வாழ்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக’ என்றெழுது. ‘அந்தப்  பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க’ என்றெழுது.

தமிழ் நாட்டிலே ஒரே ஜாதிதான் உண்டு!

அதன் பெயர் தமிழ் ஜாதி!

அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது!

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்வு செய்தோன் கண்ணைக் குத்திக்கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

தொழில்கள் தொழில்கள் தொழில்கள் என்று கூவு!

வியாபாரம் வளர்க, இயந்திரங்கள் பெருகுக, முயற்சிகள் ஓங்குக.

சங்கீதம், சிற்பம், இயந்திர நூல், பூமி நூல், வான நூல்…………இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் – 

இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி! சக்தி! சக்தி! – என்று பாடு!”

இவன்தான் பாரதி.

தினமணியில் ஞாயிறுதோறும் வரும் தமிழ்மணி இம்மாதிரியான முத்துக்களையெல்லாம் தேடியெடுத்து வாசகப்பரப்பில் வைக்கிறது. இப்படியொரு இலக்கியச்சேவையை இன்றைய நாளில் எந்தவொரு ஊடகமும் செய்வதில்லை என்பதைப் பார்க்கும்போதுதான் இதன் மேன்மை புரியவரும். கலாரசிகன் என்ற பெயரில் இந்தப் பகுதியைச் சிறப்பாகச் செய்துவரும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பாராட்டுக்குரியவர்.  

பாரதியை சரிவரப் படிக்காமலேயே அல்லது இனம்சார்ந்த விமர்சனத்தை அந்த மகாகவிஞன் மீது வைப்பதானாலேயே அவன்மீது சேற்றை வாரித்தூற்றும் சிலரை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அவன் ஆதங்கப்பட்டிருப்பதையெல்லாம் வசதியாகத் திரைப்போட்டு மறைத்த திராவிட சிந்தனையாளர்களையும் இந்த நேரத்தில் பரிதாபமாக நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இவர்களையெல்லாம் தாண்டிக்கொண்டுதான் மகாகவிகள் நிற்கிறார்கள்.

இமயத்தைவிடவும் அதைவிட உயரமாகவும் அவர்கள் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

2 comments :

kaialavuman said...

பாரதி பிறந்த தினத்தில் அவர் பற்றிய அருமையான பதிவு!
நன்றிகள்!!

Amudhavan said...

நன்றி வெங்கட்.

Post a Comment