Monday, March 18, 2013

ஜெயலலிதாவும் சமஸ்கிருதப் புலிக்குட்டிகளும்.



தமிழக முதல்வர் ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று அங்குள்ள ஏழு புலிக்குட்டிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார்.

அர்ஜூனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று அவர் பாணியில் எல்லாப் புலிக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டியிருக்கிறார் அவர். தப்பித்தவறி ஒரேயொரு புலிக்குட்டிக்காவது தமிழில் பெயர் சூட்டியிருக்கவேண்டாமா? இத்தனைக்கும் அந்தப் புலிகள் அத்தனையும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கிடையில்தானே வாழப்போகின்றன…..! அதைப் பராமரிக்கப்போவதும் தமிழ் ஊழியர்கள்தானே? பின்னே எதற்காக அத்தனைப் புலிகளுக்கும் சமஸ்கிருதப்பெயர்கள்?

வேறொன்றுமில்லை அவர் மனதிலே என்ன இருக்கிறதோ அது வெளியில் வந்திருக்கிறது. உடனே “வீடுகளில் இம்மாதிரி பெயர்கள் வைப்பதில்லையா? நீரஜா என்றும் சதீஷ் என்றும் ஷைலஜா என்றும் பெயர்கள் வைப்பதில்லையா? நீ என்ன தூய தமிழ் ஆதரவாளனா நீ எழுதும் பதிவுகளில் தூய தமிழ்தான் எழுதுகிறாயா, வடமொழி கலந்து எழுதுவதில்லையா?’  என்றெல்லாம் மொக்கை கமெண்டுகளுடன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். தூய தமிழ் எனக்குப் பிடிக்குமே தவிர நான் தூய தமிழில் “மட்டுமே” எழுதுகிறவன் அல்ல. ஆனால் தனிப்பட்ட எனக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் வித்தியாசம் உண்டு. நான் செய்யும் தனிப்பட்ட செய்கைக்கும் ஒரு மாநில முதல்வரின் செயல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரு மாநிலத்தின் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழியைக் காப்பாற்றுகின்ற, மேலெடுத்துச் செல்லுகின்ற பொறுப்பும் கடமையும் ஒரு முதல்வருக்கு உண்டு.

இந்த விஷயத்தில் இதே இடத்தில் கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்கிற எண்ணத்தைப் புறந்தள்ள இயலவில்லை. ஒரு புலிக்குட்டிக்கு நிச்சயம் பழக்கதோஷத்தில் ‘உதயசூரியன்’ என்றோ அல்லது சூரியன் என்றோ பெயர் வைத்திருப்பார். மற்ற புலிகளுக்கு எல்லாம் மாதவி, பரிதி, எழில், பாண்டியன், செங்குட்டுவன்…என்று இப்படி நிச்சயம் தமிழ்ப்பெயர்களாகத்தான் வைத்திருப்பார். – இந்த எண்ணம் இந்த சிந்தனை அலைகள் நிச்சயம் கலைஞரிடம் இருக்கின்றன. இதுபோன்ற உணர்வுகளோ ‘தமிழ்ச்சிந்தனைகளோ’ ஜெயலலிதாவிடம் இல்லை.

இந்தக் கருத்துக்களைப் பொதுத்தளத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று பார்த்தோமானால் வைக்கக்கூடாது என்றுதான் நிறையப்பேர் அல்லது ஒரு சாரார் விரும்புகிறார்கள்.  ஜெயலலிதா என்றால் எதுவும் விமரிசனமே செய்யக்கூடாது. கருணாநிதி என்றால் எந்த விதத்திலும் அவரை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய கொள்கை.

கருணாநிதி என்னென்ன தவறுகள் செய்திருக்கிறார் என்பதைச் சொல்லிவிட்டு இப்போது சில சரியான முடிவுகளை எடுத்துச் செயல்பட ஆரம்பித்திருக்கிறார் இது சரியான பாதையாகத்தான் இருக்கிறது என்று எழுதினாலும் அதனை மிக நிர்தாட்சண்யமாக மறுக்கிறார்கள். முரட்டுத்தனமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

‘வைகோவும் சீமானும் இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்?’ என்கிற என்னுடைய முந்தைய பதிவில் கருணாநிதி செய்த தவறுகளை வரிசையாகச் சொல்லியிருந்தேன். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் இறுதி நாட்களில் அவர் நடந்துகொண்ட முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதைச் சொல்லிவிட்டு –

நடந்து முடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடு செய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இதையே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.
நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவதென்பது தவிர்க்க முடியாத ஒன்று –

என்பதைச் சொல்லி மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட இயக்கங்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே சில நிகழ்வுகளை நிகழ்த்த முடியும். கருணாநிதி அன்றைக்குத் தவறு செய்துவிட்டார் என்பதை மட்டுமே சொல்லி அந்தப் பெரிய இயக்கத்தைப் புறக்கணிக்கவேண்டாம். என்று என்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தேன்.
அதில் இப்படியும் எழுதியிருந்தேன்-

‘அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத்தமிழர்களிடம் அவர் சேர்த்து வைத்திருந்த புகழ் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்கமுடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்.’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.
இவ்வளவும் சொல்லிவிட்டு  அவர் தற்சமயம் மேற்கொண்டுள்ள இப்போதைய செயல்கள் பற்றிக்குறிப்பிட்டு ‘இந்த முறை இவ்வளவு தீவிரமான நிலைப்பாட்டை எடுத்த பின்னர் வேறு காரணங்களுக்காக அவர் மாறுவார் என்று சொல்வதற்கில்லை. அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது’ என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனாலும் இணைய நண்பர்களுக்கு ஒப்புதல் இல்லை. பெயரில்லாமல் வந்த ஒரு நண்பர் ‘You are a complete DMK supporter. I can”t expect neutral views from your writing. Good luck and Good bye” என்று எழுதியிருந்தார்.

திரு அழகர் ராஜா கோவிந்த் என்ற நண்பர் You are a good writer but its not enough for this generation என்றிருக்கிறார்.

ஆரம்பத்தில் அந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களில் வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லிவந்த நான் ஒரு கட்டத்தில் பதில் சொல்வதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் என்னுடைய கருத்துக்களுக்கு வேண்டுமானால் நான் அரண் அமைத்துக்கொள்ள முடியுமே தவிர கலைஞரைக் காப்பாற்றுவது என்னுடைய வேலை அல்ல; ஒவ்வொருவரும் வண்டி வண்டியாய் அவர் மீது குரோதம் வைத்துக்கொண்டு அதனை வந்து இங்கே கருத்துக்களாகக் கொட்டும்போது  அவருடைய ஆதரவாளர்கள்தாம் அவர்களுடைய தலைவரை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும். நான் என்னுடைய கருத்துக்களை எழுதிவிட்டேனே தவிர அவரை defend பண்ணுவது என்னுடைய வேலை அல்ல.

சில நண்பர்கள் மிக ஆபாசமாகவே கருத்துச் சொல்லியிருந்தார்கள். ஆபாசங்களுக்காக அவற்றை வெளியிடவில்லை.

ஆனால் நான் என்ன சொல்லவந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு நிறையப்பேர் பாராட்டி எழுதியிருந்தார்கள். திரு ராஜநடராஜன், திரு வவ்வால் உட்பட பலர் சரியான தீர்வுகளைச் சொல்லியிருந்தார்கள்.

குறிப்பாக பதிவர் செந்தழல் ரவி சரியான கருத்துக்களை முன்வைத்திருந்தார். ‘திடீர் குபீர் தமிழ் இன உணர்வாளர்களுக்கும் அவர்களின் உணர்ச்சிமயமான வார்த்தை மாய்மாலங்களுக்கு மயங்கி அரை மயக்கத்தில் இருந்து கருத்திடுபவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இதைத்தான்……………’ என்று ஆரம்பித்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சிந்தனைக்கு மட்டுமல்ல அதைத்தொடர்ந்த செயல்பாட்டுக்கும் உரியன.

மற்றொரு பெயரில்லாத நண்பர் பிரபாரனின் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய கருணாநிதியின் செயலைக் குறிப்பிட்டு மிகக் கோபமான வார்த்தைகளில் கருத்து தெரிவித்திருந்தார். பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய சம்பவத்தைப்பற்றியெல்லாம் ஏற்கேனவே வேறு பதிவுகளில் எழுதிவிட்டதனால் இங்கே குறிப்பிடவில்லை. அவ்வளவுதான்.

ஒன்றுமட்டும் புரிகிறது.

இணையத்தில் ‘நியாய அநியாயங்களுக்கென்று’ தனியான டிக்ஷனரி இருக்கிறது. நடுநிலை என்பதற்கும் தனியான அளவுகோல்கள் உள்ளன.

இங்கே நியாயம் என்பது பிரபலத்துக்குப் பிரபலம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிரபலத்துக்கும் குழுக்கள் இருக்கின்றன. சிலபேருக்கு நிறைய இருக்கிறார்கள். சிலருக்கு மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

ரஜினியைப் பற்றி இங்கே பேசக்கூடாது. விமரிசிக்கக்கூடாது.

இசையமைப்பில் ஏ.ஆர்.ரகுமான் உலகமெலாம் புகழ்பெற்று ஆஸ்கார் வாங்கினபோதிலும் இசை என்றால் இளையராஜாதான் என்பதற்கு மாற்றாக இங்கே பேசக்கூடாது.

தமிழ்ப்பட இயக்குநர்கள் என்றால் ‘கணக்கு’ மணிரத்தினத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஸ்ரீதர் பீம்சிங் பாலச்சந்தர் எல்லாம் இயக்குநர்களே இல்லை. வேண்டுமானால் ரொம்ப யோசனைக்குப் பின்னர் பாரதிராஜாவை ஒரு ஓரத்தில் சேர்த்துக்கொள்வோம்.

அதேபோல ஒளிப்பதிவாளர்கள் என்றால் ‘கணக்கு’ ஸ்ரீராமிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. வின்சென்ட்டெல்லாம் இங்கே பட்டியலிலேயே இல்லை. (வின்சென்ட் என்பது யார்? கடலை வியாபாரம் செய்துகொண்டிருந்தாரா?)

தமிழ் எழுத்தாளர்கள் மூன்றுபேர்தான். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன். வேண்டுமானால் ஒரு ஓரத்தில் சுந்தர ராமசாமியைச் சேர்த்துக்கொள்ளலாம்.(அதுகூட காலச்சுவடு பத்திரிகை வந்துகொண்டிருப்பதால்தான். இதில் இன்னொரு வேடிக்கை, காலச்சுவடுக்கென்று ஒரு ‘கணக்கு’ இருக்கிறது. அதன்படி தமிழின் படைப்பாளிகள் மூன்று பேர்தாம். 1) பாரதி, 2)புதுமைப்பித்தன், 3)சுந்தர ராமசாமி)

இதுபோல ஒவ்வொரு துறையிலும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தாண்டித்தான் இங்கே கருத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது வெளிவரும் பத்திரிகைகளும் இதுபோல்தான் இருக்கின்றன. காரணம் என்னவென்றால் இன்றைய இளைஞன் தான்எங்கிருந்து பயணம் தொடங்குகிறானோ அங்கிருந்து மட்டுமே எல்லாவற்றிலும் தன்னுடைய கணக்கைத் தொடங்குகிறான். அதற்கு முந்தைய சாதனையாளர்களை அவன் கணக்கிலேயே வைத்துக்கொள்வதில்லை. இது அவனுடைய ரசனைக்கு வேண்டுமானால் சரியானதாய் இருக்கலாம். ஆனால் வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் இது என்பது அவனுக்குப் புரிவதே இல்லை.

சாதாரணமாகத் தெரிந்திருக்கவேண்டிய குறைந்தபட்ச (அறிவு என்பது பெரிய வார்த்தை) குறிப்புகள்கூட அவனுக்குத் தெரிவதில்லை என்பதை இன்றைய இளைஞர்களிடம் நான்கைந்து பொதுவான கேள்விகள் கேட்டாலேயே தெரிந்துவிடுகிறது. டிவியில் வரும் சில நிகழ்ச்சிகள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன. பியூசி படித்த ஒரு மாணவனுக்கு அண்ணா உட்பட நான்கு தலைவர்களின் பெயரைப்போட்டு அதில் காஞ்சிபுரம் யார் பிறந்த ஊர்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்த இளைஞனுக்கு பதில் தெரியவில்லை. கடைசியில் அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம் என்ற விவரத்தைச் சொல்லி அண்ணா யார் தெரியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டபோது “அவர் பேரைக் கேட்டிருக்கேன். யார்னு தெரியாது” என்று அந்த இளைஞன் சொன்னதை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நிறையப்பேர் பார்த்திருக்கக்கூடும்.

 இப்போது வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் சரி, இமான் அண்ணாச்சி(அந்த நிகழ்ச்சியின் தரம் எப்படி என்பது வேறு விஷயம்) நடத்தும் நிகழ்ச்சிகளிலும் சரி நம்முடைய தமிழ் இளைஞர்களின் பொது அறிவுக்குறிப்புக்கள் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பொதுவாக இத்தகைய இளைஞர்கள்தாம் இணையங்களில் வலம்வரப்போகிறார்கள். முந்தைய தலைமுறைக்கு இணையத்துடன் தொடர்பு கிடையாது. அப்படியே இருந்தாலும் ‘படிப்பதோடு’ நின்றுவிடுகிறார்கள். இணையத்தில் ‘எழுதும்’ ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு சதவிகிதம் இருந்தாலேயே அதிகம். இதனால்தான் இணையம் பயன்படுத்தும் நிறையப்பேருக்கு சிவாஜிகணேசன் என்றால் அவர் வெறும் ஓவர் ஆக்டிங் செய்த ஒரு நடிகர்; கத்திக்கத்திப் பேசிய ஒரு நடிகர் என்பதற்கு மேல் ஒன்றும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை.

இவர்கள் என்ன கருத்து வைத்திருக்கிறார்களோ அதனை ஒட்டியே எல்லாரும் எழுதவேண்டும். அதனை ஒட்டியே பேச வேண்டும் அதனை ஒட்டியே செயல்பட வேண்டும் என்ற கருத்து மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது.

தமிழ் வலைப்பூக்களில் திரும்பத்திரும்ப எழுதப்படும் ஒரு கருத்து ‘இசை என்றால் இளையராஜா’ என்பது. தமிழ்த்திரை இசை என்பதே இளையராஜாவிலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது என்றே இவர்களில் இன்னமும் பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. நான் ஒரேயொரு கேள்வியைத்தான் முன்வைத்தேன். அந்தக் கேள்விக்கு இதுவரையிலும் இளையராஜாவின் ரசிகர்கள் யாருமே உரிய பதிலைச் சொல்லவேயில்லை என்பதுதான் பரிதாபம்

நான் வைத்த கேள்வி இதுதான்.
1) 
  தமிழில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள்
2)   பி.சுசீலாவின் பாடல்கள்
3)   கண்ணதாசன் பாடல்கள்
4)   சிவாஜிகணேசன் பாடல்கள்
5)   எம்ஜிஆர் பாடல்கள்
6)   சந்திரபாபு பாடல்கள்
7)   பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்
8)   எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள்
9)   சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
10)  டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்
11)  வாலி பாடல்கள் ……………………இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் ………இப்படியெல்லாம் வகைப் பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியே’ இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?

என்ன பேசுகிறீர்கள்?

இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?
இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசன், டிஎம்எஸ், பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப்பாடல்?

பேசுவதற்கு வாய்கூச வேண்டாமா?

இளைஞர்களுக்கு இந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்’
-  
  இதுதான் நான் வைத்த கருத்து, கேள்வி. 
-     
-    இதுவரையிலும் யாரிடமிருந்தும் முறையான பதில் வரவில்லை.

கருத்து எழுதும் பெரும்பாலான இளைஞர்கள் எந்த சிந்தனையோட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவேண்டித்தான் இந்த உதாரணத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

நண்பர் மணிசேகர் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘உலகத்திலே ஒற்றுமைப் படுத்த முடியாத இனம் தமிழினம்தானா? எத்தனை வேறுபாடுகள் தலைவர்களிடையில்……….?’என்று தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார் அவர்.

தலைவர்களை விடுங்கள். இங்கே கருத்துத் தெரிவிப்பவர்களில்தாம் எத்தனை வகை தெரியுமா?

கருணாநிதியை எதிர்ப்பவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், வைகோவை ஆதரிக்கிறவர்கள், சீமானை ஆதரிக்கிறவர்கள், இருவரையும் எதிர்ப்பவர்கள், பிரபாகரனை ஆதரிப்பவர்கள், பிரபாகரனை எதிர்ப்பவர்கள் மேதகு தேசியத்தலைவர் என்று சொல்கிறவர்கள், பிரபாகரனால்தான் இத்தனைப் பெரிய அழிவு பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று சொல்கிறவர்கள்………………எங்கிருந்துவரும் கருத்தொற்றுமை? 


ஒரு விஷயம் தெரியுமா?

ஒரு ஓட்டலுக்கு ஐந்தாறு நண்பர்கள் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். காபியும் டிபனும் தேவை. ஆறு பிளேட் இட்லி. ஆறு காபி. என்று சொல்லிவிடமுடிகிறதா?

ஒருத்தருக்குப் பொங்கல், இன்னொருத்தருக்கு இட்லி வடை, ஒருத்தருக்கு தோசை, மற்றவருக்குப் பூரி கிழங்கு, வேறொருவருக்கு மசால் தோசை, இன்னொருத்தருக்கு வெறும் இட்லி. இதாவது போகட்டும். அவரவருக்கு வேண்டியதை தேர்வு செய்துகொள்ளலாம்.

இப்போது காபி முறை. வெறுமனே ஆறு காபி என்று சொல்லமுடிகிறதா என்று பாருங்கள்.

ஒருத்தருக்கு சர்க்கரை இல்லாமல். இன்னொருத்தருக்கு பாதி சர்க்கரை. ஒருத்தருக்கு டிகாக்ஷன் அதிகமாய். மற்றவருக்கு கொஞ்சம் லைட்டாய். இன்னொருத்தருக்கு ஒன் பை டூ. அடுத்தவருக்கு பாலே சேர்க்காமல்……….. ஒரு சாதாரண காபியிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை எங்கிருந்து வரப்போகிறது?

காபிக்கும் மசால்தோசைக்கும் வராவிட்டால் போகிறது. இனப்படுகொலை நடக்கிறது என்னும்போது அதனைத் தடுத்துநிறுத்த எல்லாரும் ஒன்று சேரும் விஷயத்தில்கூடவா கருத்தொற்றுமை ஏற்படக்கூடாது? என்பதுதான் நமது ஆதங்கம்.

நான் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல் இலங்கை விவகாரத்தில் தவறுசெய்யாத தலைவர்கள் கிடையாது. ஒரு பிரபல கவிஞர் சொன்னதுபோல் “ஈழ விவகாரத்தில் எல்லாருடைய கைகளிலும் கறை படிந்துதான் இருக்கிறது”

ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல் ‘பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என்று சொல்லி பிரபாகரனை தவறாக வழிநடத்தியது வைகோவின் மிக தவறான சொதப்பல் என்பதை யாரும் பேசினாதாகத் தெரியவில்லையே. இதனை எரிக் சோல்கம்மே சொல்லியிருக்கிறார்’

இவற்றுக்கெல்லாம் பதிலே தேடாமல் வெறும் கருணாநிதியைப் போட்டுத் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டுமே அடையப்போகும்  பலன் என்ன என்பது தெரியவில்லை.
அதே சமயம் ஜெயலலிதாவைப் பாராட்டியும் புகழ்ந்தும் நான் ஏற்கெனவே எழுதியிருக்கும் சில பதிவுகளை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதாகவே தெரியவில்லை. ‘தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா’ என்ற பதிவிலும் இன்னும் சில இடங்களிலும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து எழுதவேண்டும் என்று தோன்றியபோதெல்லாம் புகழ்ந்தும் பாராட்டியும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கவியரசர் கண்ணதாசன் விஷயத்திலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் விஷயத்திலும் கலைஞர் நடந்துகொண்ட விஷயங்களை, தற்காலத் தமிழ் இலக்கியவாதிகள் விஷயத்தில் அவர் நடந்துகொண்ட விஷயங்களை எப்போதுமே எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது?

ஈழ மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தலைவர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. டெல்லித் தலைவர்களை விட்டுவிட்டுத் தமிழகத் தலைவர்களை எடுத்துக்கொண்டாலும் அனைவருமே கலைஞருக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஒற்றைத் தீர்மானத்தில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர அங்கு நடக்கும் அவலத்தைத் தடுக்க எதுவும் சிந்திப்பதுபோல் தெரியவில்லை.

மாணவர்களின் போராட்டம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. இதனை யார் எப்போது எப்படி ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி.

மாநில அரசும் மத்திய அரசும் இதனை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பார்கள். அதனையும் தாண்டி போராட்டம் தீவிரமானால் இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் முனைவார்கள்.

பாவம் பத்திரிகையாளர்களும் பதிவர்களும்! 


இரு அரசுகளின் இந்தச் செயல்களுக்கு கருணாநிதியைக் குறைசொல்லத்தான் இவர்களால் முடியாது.

44 comments :

Anonymous said...

கருணாநிதி தனது சொந்த மகனுக்கு ஸ்டாலின் என்ற பெயர் வைக்க காரணம் ???
ஸ்டாலின் தமிழ் பெயரா ?? அல்லது தமிழ் பெயர் கிடைக்கவேயில்லையா ?

Anonymous said...

"‘உதயசூரியன்’"

உதய சூரியனாவது தமிழ் பெயரா ???

அதெல்லாம் போகட்டும் கருணாநிதியாவது தமிழ் பெயரா ?????

ஹிஹிஹி முதலில் கருணாவுக்கு ஒரு தமிழ் பெயரை சூட்டுங்கள் அதற்க்கு அப்புறம் புலிக்கு வருவோம்

Anonymous said...

கருணா செய்த அந்த தவறை விட
போருக்கு பின் நடந்த கொடூர சம்பவங்களுக்கு
"மழை ஓய்ந்து விட்டது தூவானம் அடிக்கின்றது " என்று தனது அடுக்கு மொழி புலமையை காட்டியதை எப்படி நியாயப்படுத்துவது ?

Amudhavan said...

ஸ்டாலின் என்ற பெயரை ஏன் வைத்தார் என்பதைத்தான் ஆயிரம் முறை சொல்லியிருக்கிறாரே.

Amudhavan said...

உதயசூரியன் தமிழ்ப்பெயர் இல்லைதான். பழக்கதோஷத்தில் ஒரு பெயராக அதை வைத்துவிடுவார் என்பதைத்தான் சொல்லியிருக்கிறேனே.

Amudhavan said...

கருணாநிதிக்கு நாம் எதற்கு தமிழ்ப்பெயர் சூட்டுவது? அவர்தான் மாறன், கரிகாலன் என்றெல்லாம் நிறைய புனைப்பெயர்கள் வைத்துக்கொண்டு எழுதிவருகிறாரே.

Amudhavan said...

கருணாநிதியின் முள்ளிவாய்க்கால் நாட்களிலான செயல்பாடுகளை எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை நண்பரே.

Unknown said...

உணர்வுகளோ ‘தமிழ்ச்சிந்தனைகளோ’ ஜெயலலிதாவிடம் இல்லை.

காரிகன் said...

இங்கே நியாயம் என்பது பிரபலத்துக்குப் பிரபலம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிரபலத்துக்கும் குழுக்கள் இருக்கின்றன. சிலபேருக்கு நிறைய இருக்கிறார்கள். சிலருக்கு மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

ரஜினியைப் பற்றி இங்கே பேசக்கூடாது. விமரிசிக்கக்கூடாது.

இசையமைப்பில் ஏ.ஆர்.ரகுமான் உலகமெலாம் புகழ்பெற்று ஆஸ்கார் வாங்கினபோதிலும் இசை என்றால் இளையராஜாதான் என்பதற்கு மாற்றாக இங்கே பேசக்கூடாது.

தமிழ்ப்பட இயக்குநர்கள் என்றால் ‘கணக்கு’ மணிரத்தினத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஸ்ரீதர் பீம்சிங் பாலச்சந்தர் எல்லாம் இயக்குநர்களே இல்லை. வேண்டுமானால் ரொம்ப யோசனைக்குப் பின்னர் பாரதிராஜாவை ஒரு ஓரத்தில் சேர்த்துக்கொள்வோம்.

அதேபோல ஒளிப்பதிவாளர்கள் என்றால் ‘கணக்கு’ ஸ்ரீராமிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. வின்சென்ட்டெல்லாம் இங்கே பட்டியலிலேயே இல்லை. (வின்சென்ட் என்பது யார்? கடலை வியாபாரம் செய்துகொண்டிருந்தாரா?)

தமிழ் எழுத்தாளர்கள் மூன்றுபேர்தான். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன். வேண்டுமானால் ஒரு ஓரத்தில் சுந்தர ராமசாமியைச் சேர்த்துக்கொள்ளலாம்.(அதுகூட காலச்சுவடு பத்திரிகை வந்துகொண்டிருப்பதால்தான்.

திரு அமுதவனுக்கு, மாறுபட்ட கருத்துகள் உண்டு என்ற எண்ணமே இங்கே இணையத்தில் எழுதும் பலருக்கு புரிவதில்லை. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு கருணாநிதியை நீங்கள் விமர்சித்ததும் தெரியும் ஜெயலலிதாவை பாராட்டியதும் தெரியும். கருணாநிதியின் தற்போதைய நிலைப்பாடு அவரின் உள்ளத்திலிருந்து வந்ததா அல்லது இது மற்றொரு வேஷமா என்பது சிறிது நாட்களில் தெரிந்துவிடும்.உங்களின் மேற்கூறிய கருத்துக்கள் உண்மையானவை. அதிலும் ரஜினியை விமர்சிக்கக்கூடாது என்று ஒரு எழுதப்படாத சட்டமே ஊடகங்களில் நிலவுவதாக உணர்கிறேன். அதே போலவே இளையராஜா. இந்த ஒரு சார்பான கருத்து திணிப்பு நிறையவே இருக்கிறது இங்கு. அதே போல எழுத்தாளர் சுஜாதாவையும் பலர் எதிர்மறையாக விமர்சிப்பது இல்லை.

monica said...

அருமையான பதிவு.இப்போதய இளைஞர்களுக்கு சரித்திர அறிவு பூஜ்யம்.

Anonymous said...

நாய்க்குட்டிகளுக்கு ஜிம்மி, டைகர் ன்னு ஆங்கிலத்துல பேர் வைக்கிறதை வன்மையா கண்டிச்சு ஒரு பதிவு போடுங்க.

Anonymous said...

கருணாநிதிக்கு பதிவுலகில் இருந்த ஆதரவு ஈழ இறுதிப்போரில் இருந்து தான் குறைந்தது. அதற்கு முன் எல்லோரும் செயாவைத்தான் உண்டு இல்லை என்று எழுதினார்கள். அவரை திட்டினால் செயா ஆதரவு என்று எண்ணாதிர்கள். கருணாநிதியின் துரோகத்தை பதிவர்கள் மன்னிக்கத் தயாரில்லை. செயாவுக்கு தமிழ் உணர்வு இல்லை என்பது தெரியும்.

-கருணாநிதியை நம்பி ஏமாந்த ஒரு பதிவர். (கருணாநிதியின் தமிழ் புலமையை யாரும் மறுக்முடியாது அதற்காக அவரின் துரோகங்கள் மன்னிக்கப்படாது)

Amudhavan said...

வாருங்கள் குருநாதன், அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

Amudhavan said...

காரிகன் தங்கள் வரவு நீண்டநாட்களுக்குப்பின் அமைந்திருக்கிறது. இந்த இணையதள தமிழ் 'கிளிஷே'க்களையும் மாற்றித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும். இப்போதே பலபேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் இந்த இளையராஜா பற்றிய கருத்துக்கள் இருக்கின்றனவே அபத்தத்திலும் அபத்தம். ஒருவர் எழுதுகிறார் 'வாத்தியங்களை எங்கெங்கே வாசிக்கவேண்டும் என்பதும் எந்தெந்த வாத்தியங்களை எங்கெங்கே வாசிக்கவேண்டும் என்பதும் இசைஞானிக்கு மட்டும்தான் தெரியும். அதுபோல எந்த வாத்தியமும் இல்லாமல் எப்போது நிறுத்தவேண்டும் என்பதும் அவருக்கு மட்டும்தான் தெரியும்'
'தாலாட்டு என்றால் அவர்மட்டும்தானே நினைவு வருகிறார்! அவருக்கு இணையாக தாலாட்டு பாடல்கள் போட்டவர்கள் இங்கே யாரிருக்கிறார்கள்?'
இதுபோன்று இன்னமும் ஏகப்பட்ட அளவுக்கு உளறிக்கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏதோ தனக்குத்தேவையான லாகிரி வஸ்துவை வாயில் போட்டுக்கொண்டு தான் மட்டுமே அந்த போதைக்கு அடிமையாகி தலை சுழன்றுபோய்க் கிடப்பது அவர்கள் விருப்பம். இந்த நிலையில் அவர்களுக்கு வேறு எந்த விஷயமும் எட்டப்போவதில்லை. ஆனால் அவர்களுடைய அந்த கிறக்கத்தைப் பொதுவெளியில் வைத்து அதற்கு முன்னிருந்த சான்றோர்களையும் சாதனையாளர்களையும் விற்பன்னர்களையும் அவமானப்படுத்தும் லைசென்சை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? என்பதுதான் கேள்வி.

சில நேரங்களில் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி எதற்காக நம் நேரத்தை வீணடிக்கவேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படியே விட்டுவிட்டால் இது சாஸ்வதமாகிப் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது.

நம் இருவர் தவிர இன்னமும் சில நண்பர்கள் எழுத ஆரம்பித்தபிறகுதான் இவர்களின் உளறல்கள் 'ஓரளவு' குறைந்திருக்கிறது என்பதையும் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நாம் போகவேண்டிய தூரம் இன்னமும் நிறைய இருக்கிறது.

Amudhavan said...

வாருங்கள் ஜிங்லிபிங்லி. அது என்ன இப்படியொரு வித்தியாசமான பெயர்!

Amudhavan said...

அனானிமஸ், என்னுடைய நண்பர் வீட்டில் தமது நாய்களுக்கு சிகப்பி, வெள்ளையன், கருப்பன் என்று பெயர் வைத்திருக்கிறார். இன்னொரு நண்பர் அழகி என்று பெயர் வைத்திருக்கிறார். இதைப் பாராட்டி வேண்டுமானால் ஒரு பதிவு எழுதலாம்.

Amudhavan said...

அனானிமஸ், கருணாநிதியைத் திட்டினால் செயா ஆதரவு என்று நினைக்கவேண்டாம் என்கிறீர்கள். இங்கே நூற்றுக்குநூறு அந்தப் பாணி அரசியல்தானே நடந்துகொண்டிருக்கிறது.
இதோ தீவிரமான மாணவர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 120 கல்லூரிகளில் போராட்டத் தீ கனன்று கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எப்படி எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அடுத்த கட்டப்போராட்டங்கள் இங்கே வடிவு கொள்ளும்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நன்றி!

அரசியல்பற்றி எழுதினாலே இந்த வம்பு வந்துவிடும், சாயம் பூச பலர் வருவாங்க.

கலைஞரிடம் கவர்ந்த விடயம் தமிழ் தான், நீங்க சொன்னார்ப்போல பேர் வச்சிருப்பார் தான்.

விதவை என்ற சொல்லில் கூட பொட்டு(புள்ளி) இல்லையே என்ற கேள்விக்கு கைம்பெண் என்ற சொல்லில் ஒரு பொட்டுக்கு இருப்பொட்டு இருக்கிறதே என டைமிங்கா போட்டு தாக்குவார் கலைஞர்.

ஆனால் கலைஞருக்கு தமிழ் வேண்டும், தமிழன் வேண்டாம் என்ற நிலைக்கு போனப்பின் ஏனோ மனம் ரசிக்க மாட்டேன் என்கிறது.

# ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் அக்கால கருப்பு வெள்ளை ஒளி ஓவியர், அவரைப்பற்றி விவரம் தெரியாது ,பின்னர் தேடிப்படித்து தெரிந்துக்கொண்டேன்,அதன் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம் பார்த்தப்பொழுது தான் கருப்பு வெள்ளை காலத்திலேயே கலக்கியவர் என புரிந்தது.

// ‘இசை என்றால் இளையராஜா’ என்பது. தமிழ்த்திரை இசை என்பதே இளையராஜாவிலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது என்றே இவர்களில் இன்னமும் பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் //

கடந்த காலம் பற்றி தெரியாமலே இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

ஏ.எம்.ராஜாவே ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்தவர்னு பலருக்கும் தெரிவதில்லை, தேன் நிலவு,கல்யாணாப்பரிசு எல்லாம் ஏ.எம் ராஜாவே இசை.

அவர் கொஞ்சம் முன் கோபி என்பதால் அனுசரித்து போகாமல் வீணாகப்போயிட்டார்னு படித்திருக்கிறேன்.

நீங்க இசை என்றால் ராஜாவிலிருந்து தான் ஆரம்பிக்கிறதா எனக்கேட்டுக்கிட்டு இருக்கிங்க இப்போ பலருக்கு ரஹ்மானில் இருந்து தான் இசையே ஆரம்பிக்குது :-))

ரஹ்மானைப்பற்றி எதாவது சொன்னீங்க ,கொரவளையப்ப்புடிச்சு கடிச்சிறுவாங்க :-))

Vaasagan said...

நீர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் 'ஒருவன் திரும்ப திரும்ப கொலை செய்வான் ஆனால் ஒவ்வருதடவையும் அவனிடம் நீ செய்தது கொலை என்று மட்டும் சொல்லி அவனை மன்னித்து விடவேண்டும்'
கருணாநிதி செய்தது மன்னிக்க முடியாத துரோகம்..வரலாற்று பிழை.....
எத்தினை ஜென்மம் எடுத்தாலும் அழிக்க முடியாது.

Amudhavan said...

வவ்வால் அவர்களே நீங்கள் சொன்னது சரிதான். கலைஞரின் தமிழைத்தான் எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். தவிர, இந்த வயதிலும் ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் சுறுசுறுப்புடன் இருப்பது. இப்போதுகூட விடியற்காலை நான்கு மணிக்கும் ஐந்துமணிக்கும் எழுந்து கொள்கிறார் என்று கேள்விப்பட்டேன். காங்கிரஸூடன் சேர்ந்துகொண்டு அவர் செய்த தவறுகள்தாம் அவரின் புகழை பாதாளத்துக்குக் கொண்டுசென்று விட்டன.

வின்சென்ட்டின் பயணம் ஸ்ரீதரின் தேன்நிலவு படத்திலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது என்று நினைக்கிறேன். வண்ணப்படங்களில்கூட பிரமாதப் படுத்தியிருப்பார் அவர். ஒன்றுமில்லை காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை படங்களின் பாடல் காட்சிகளை கவனியுங்கள். ஒவ்வொரு பிரேமையும் அப்படியே கழற்றி சட்டம்போட்டு வீட்டில் மாட்டிவைத்துக்கொள்ளலாம் போல ஒரு ஓவிய எஃபக்ட் கொண்டுவந்திருப்பார் பாருங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.

ஏ.எம்.ராஜா மிக அருமையான பாடகர், இசையமைப்பாளர். பொதுவாகத் திரையுலகில் ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறினார் என்றாலேயே அவரை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். நமக்குப் போட்டியாக வந்துவிட்டான் என்ற நினைப்புதான் இசையமைப்பாளர்களுக்கு முன்நிற்கும். கல்யாணப்பரிசும், தேன்நிலவும் தந்த மிகப்பெரிய இசைவெற்றிகளுக்குப் பின்னர் ஸ்ரீதர்கூட அடுத்த நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கு விஸ்வநாதன்-ராம மூர்த்தியிடம் வந்துவிட்டார். இளையராஜாவிடம் ஏ.எம்.ராஜாவே பலமுறை போய் வாய்ப்புக்கேட்டும்- கூப்பிடுகிறேன், கூப்பிடுகிறேன் என்று சொல்லியே இளையராஜா தட்டிக்கழித்துவிட்டார் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

நேற்றைய இளைஞன் இசையென்றால் இளையராஜாவிடமிருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்வதும் இன்றைய இளைஞன் ரகுமானிலிருந்து ஆரம்பிக்கிறது என்று சொல்வதும் நாளைய இளைஞன் ஜி.வி.பிரகாஷிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று சொல்லப்போகும் அபாயமும் இருக்கிறது என்பதனால்தான் இளையராஜா ரசிகர்களிடம் இந்தப் போங்காட்டம் வேண்டாம் என்கிறேன்.
மிகப்பெரிய சாதனையாளர்களை நீ மதிக்கவில்லையென்றால் ஒரு சாதாரண சாதனையாளன் உன்னை மதிக்கமாட்டான். அதுவும் இல்லாமல் ஒரு மிகமிகச் சாதாரணன் உன்னை இடறிவிட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பான் என்பதுதான் இயற்கை.

பல பெரிய தலைவர்களை மதிக்காமல் பல முக்கிய சாதனையாளர்களை அங்கீகரிக்காமல் கேலி பேசியும் நைச்சியமாய்த் தட்டிக்கழித்தும் வந்ததனால்தான் கலைஞர் இன்றைக்கு மிகமிக சாதாரணர்களால் இடறிவிடப் படுகிறார் என்பதும் அலைக்கழிக்கப் படுகிறார் என்பதும் நடக்கிறது என்பதே என்னுடைய அபிப்பிராயம்.

Amudhavan said...

வாசகன், நீங்கள் சொல்வது சரிதான். அதைப்பற்றித்தான் இங்கே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறோமே.

காரிகன் said...

வவ்வால் அமுதவனின் தளத்திற்கு வருவது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். முன்னர் ஒரு பதிவில் அவரும் நானும் எங்கள் பெயர் காரணமாக முட்டிக்கொண்டது நினைவிருக்கிறது. அதன் பின் அவர் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். எந்த தலைப்பை பற்றியும் ரொம்ப நுணுக்கமாகவும் ஆதாரங்களுடனும் நிறைய அவர் எழுதுவது குறித்து எனக்கு வியப்பு வருவதுண்டு. இதே போலவே தருமி அவர்களின் பதிவுகளும் நன்றாகவே இருக்கும். உங்கள் தளத்திற்கு இது போன்று இணையத்தில் நாகரீகமாக கருத்துக்களை சொல்லும் பலர் வரவேண்டும் என்பதே என் விருப்பம். நான் முன்பே ஒரு முறை சொன்னது போல உங்களின் தளத்தில் நல்ல தமிழையும் ஆரோக்கியமான விவாதங்களையும் படிக்க முடிகிறது. இசையை பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் தகவல் நான் (இளையராஜாவுக்கு எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்பது நன்றாக தெரியும் போன்ற "அபூர்வ" துணுக்குகள்) எங்கோ படித்ததாக ஞாபகம். இதையும் விட இளையராஜாவின் இயற்பியல் என்று ஒரு பதிவு இங்கே இருக்கிறது. இளையராஜாவுக்கே தெரியாத பல இசை நுணுக்கங்களை அந்த பதிவர் வரிக்கு வரி எழுதி நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு செல்வார். வவ்வால் சொன்னது போலன்றி ரகுமான் விசிறிகளை விட இளையராஜாவின் அபிமானிகளே அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். இப்படி எழுத ஆரம்பிக்கும் போதே இன்னும் எழுத தோன்றுகிறது. இருந்தும் இந்த பதிவின் நோக்கம் அரசியல் என்பதால் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன். பின்னர் "ராஜா ராஜாதான்" கும்பலிலிருந்து யாராவது திடீரெனெ குதித்து மீசையை முறுக்கலாம்.

குட்டிபிசாசு said...

ஐயா,

…கருணாநிதி மீதான வெறுப்பு வைகோ,சீமான் போன்றவர்களால் அதிகமாக்கப்பட்டது உண்மையே. ஈழத்தமிழர்கள் மத்தியில் கருணாநிதிதான் முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குக் காரணம் என பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும், நடந்த படுகொலையை யாராலும் தடுத்திருக்க முடியாது. தோற்கவில்லை, வீழ்ந்தாலும் விதையாவோம் என வெட்டியாக பேசி வீணாகப்போனது தான் மிச்சம்.

…இளையராஜா கூட ஏ.எம்.ராஜாவின் இசைக்குழுவில் சிலகாலம் கிட்டார் வாசித்தார் என கேள்விபட்டிருக்கிறேன். இளையராஜாவின் இசை எனக்குப் பிடிக்கும். ஆனால் தானே பாடல் எழுதுவது, தனக்குப் பொருந்தாத பாடல்களைப் பாடிக் கெடுப்பது என சில அபத்தங்கள் அவரிடம் உள்ளன.

…தற்போது தாங்கள் சொன்னது போல ஒரு பரப்புரை செய்யப்படுகிறது. ஏதோ இப்போது இருக்கும் சிலரால் தான் தமிழ் சினிமாத்துறையே புதுமை அடைந்தது என. உலகப்படம் என எதையோ பார்த்துவிட்டு, படம் எடுப்பது எப்படி என சிலர் பாடம் எடுக்கின்றார்கள். வசதியில்லாத காலத்தில் அவர்கள் எப்படி படம் எடுத்திருப்பார்கள். எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள்.

…வின்சென்ட் அவர்கள் அவருடைய காலத்தில் பல புதுமைகள் செய்தவர். உதாரணமாக சொன்னது நீதானா... பாடலில் காமிரா ஊஞ்சலின் கீழ் சென்று மேலெழும்பும். இது அக்காலத்தில் முற்றிலும் புதுமையானது.

Amudhavan said...

காரிகன், நுணுக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் மட்டுமல்ல வெளியேவராத பல ரகசியத்தகவல்களையும் இணையத்தில் கொண்டுவந்து கொட்டுகிறவராக இருக்கிறார் திரு வவ்வால். இதனால்தான் திரு ராஜநடராஜன் நீங்கள் உளவுத்துறையில் இருக்கிறீர்களா என்று அவர் தளத்தில் வவ்வாலைக் கேட்டிருக்கிறார். இவற்றையெல்லாம் தாண்டி எனக்கு அவரிடம் பிடித்தது அவர் தமக்கென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தனி ஸ்டைல். இது அவருடைய பதிவுகளை விடவும் அவர் போடும் பின்னூட்டங்களில் அதிகமாகப் பளிச்சிடுகிறது என்றே தோன்றுகிறது.
இந்த இளையராஜா ரசிகர்கூட்டம் செய்யும் அலப்பறைகளினால் அவருடைய நல்ல பாடல்களைக்கூட ரசிக்கமுடியாமல் அவரை அடிக்கடி விமர்சிக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. அவரது ரசிகர்கள் மீசையை முறுக்கிக்கொண்டு வந்தாலும் சரி; அப்படியே சும்மா வந்தாலும் சரி நியாயமெனப்பட்டதைச் சொல்லியே தீருவோம்.

Amudhavan said...

வாருங்கள் குட்டிப்பிசாசு, இலங்கை விவகாரத்தில் கருணாநிதி மீது மட்டும் தவறில்லை எல்லார் மீதும்தான் தவறிருக்கிறது என்பதைத்தான் நானும் என்னுடைய பதிவுகளில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதை அப்படியே ஒட்டுமொத்தமாக கருணாநிதிக்கு எதிராக மட்டுமே திருப்பும் அரசியலைத்தான் நான் கோடிட்டுக் காட்டுகிறேன்.
திரைப்படங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு சரியே. எல்லாமே ஏதோ இவர்கள் காலத்தில் இவர்களால்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று ஏற்படுத்தப்படுகின்ற பிம்பத்தை உடைக்கும் வேலைதான் நம்முடையதாக இருக்கப்போகிறது. இருக்கவேண்டும்.
நீங்கள் நினைவுபடுத்தியிருக்கும் வின்சென்ட்டின் அந்தக் காட்சி மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று என்பது நினைவில் இருக்கிறது.

ஒளிப்பதிவுத் துறையில் மார்க்கஸ் பார்ட்லேயின் ஒளிப்பதிவும் நிபுணத்துவம் வாய்ந்தது. அவர் ஒரு ஆஸ்திரேலியர் என்று நினைக்கிறேன். செம்மீன் கூட அவருடைய ஒளிப்பதிவில் வந்த படம் என்றுதான் ஞாபகம்.

app_engine said...

தமிழ்த்திரை இசை குறித்து 90-களின் பிற்பகுதி தொடங்கி இன்று வரை - ஏறத்தாழ 15-க்கும் அதிகமான ஆண்டுகள் இன்டர்நெட்டில் படித்தும், எழுதியும், விமர்சித்தும், விவாதித்தும் வரும் ஒரு தீவிர தமிழ்த்திரை இசை விசிறி என்ற முறையில் "இளையராஜா விசிறிகள்" பற்றிய உங்களது கண்டனத்துக்கு மறுப்பு எழுத வேண்டியது என் கடமை!

உங்களது கூற்றில் சற்றும் உண்மை இல்லை!

இன்டர்நெட்டில் முதன் முதல் தமிழ்த்திரை இசைக்கென்று தொடங்கப்பட்ட தளம் tfmpage.com என்பதே. அங்கே போய்ப்பாருங்கள், எந்த அளவுக்கு இளையராஜா விமர்சிக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு முன்பிருந்தோர் எவ்வளவு மதிப்புடன் கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று உங்கள் கண்கள் திறக்க இது உதவும்!

தற்சமயம் இந்தத்தளம் mayyam.com என்ற புதிய பெயரில், லட்சத்துக்கும் அதிக உறுப்பினர்களுடன் நடந்து வருகிறது, பழைய இசையும், ராசா ரஹ்மான் இசையும், புதிய இசையும் எல்லாம் புகழவும், விமர்சிக்கவும் படுவதை நீங்கள் காண முடியும்.

எடுத்துக்காட்டாக, சாகுமுன் ஒரு ஆள் கட்டாயம் கேட்டிருக்க வேண்டிய ஆயிரம் பாடல்கள் என்ற இழையில் எத்தனை எத்தனை பழைய பாடல்கள் பட்டியலில் உள்ளன என்று கவனியுங்கள்:

http://www.mayyam.com/talk/showthread.php?8718-1000-songs-to-hear-before-you-die

ஆதலினால், ராசா மட்டும் தான் புகழப்படுகிறார் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கொஞ்சம் நிறுத்துங்கள் ஐயா!

app_engine said...

தமிழ்த்திரை இசை குறித்து 90-களின் பிற்பகுதி தொடங்கி இன்று வரை - ஏறத்தாழ 15-க்கும் அதிகமான ஆண்டுகள் இன்டர்நெட்டில் படித்தும், எழுதியும், விமர்சித்தும், விவாதித்தும் வரும் ஒரு தீவிர தமிழ்த்திரை இசை விசிறி என்ற முறையில் "இளையராஜா விசிறிகள்" பற்றிய உங்களது கண்டனத்துக்கு மறுப்பு எழுத வேண்டியது என் கடமை!

உங்களது கூற்றில் சற்றும் உண்மை இல்லை!

இன்டர்நெட்டில் முதன் முதல் தமிழ்த்திரை இசைக்கென்று தொடங்கப்பட்ட தளம் tfmpage.com என்பதே. அங்கே போய்ப்பாருங்கள், எந்த அளவுக்கு இளையராஜா விமர்சிக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு முன்பிருந்தோர் எவ்வளவு மதிப்புடன் கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று உங்கள் கண்கள் திறக்க இது உதவும்!

தற்சமயம் இந்தத்தளம் mayyam.com என்ற புதிய பெயரில், லட்சத்துக்கும் அதிக உறுப்பினர்களுடன் நடந்து வருகிறது, பழைய இசையும், ராசா ரஹ்மான் இசையும், புதிய இசையும் எல்லாம் புகழவும், விமர்சிக்கவும் படுவதை நீங்கள் காண முடியும்.

எடுத்துக்காட்டாக, சாகுமுன் ஒரு ஆள் கட்டாயம் கேட்டிருக்க வேண்டிய ஆயிரம் பாடல்கள் என்ற இழையில் எத்தனை எத்தனை பழைய பாடல்கள் பட்டியலில் உள்ளன என்று கவனியுங்கள்:

http://www.mayyam.com/talk/showthread.php?8718-1000-songs-to-hear-before-you-die

ஆதலினால், ராசா மட்டும் தான் புகழப்படுகிறார் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கொஞ்சம் நிறுத்துங்கள் ஐயா!

Amudhavan said...

மய்யம் டாட்காமைப் பார்ப்பதும் அங்கே இளையராஜா விமர்சிக்கப்பட்டிருப்பதும், இளையராஜாவுக்கு முன்பிருந்தோர் அங்கே மிகமிக மதிப்புடன் கவனிக்கப்படுவதையும் படித்துவிட்டு எனக்கு கண்கள் திறப்பதும் கருத்து பிறப்பதும் அப்புறம் இருக்கட்டும். இங்கே மய்யம் டாட்காமில் என்ன சொல்லப்படுகிறதோ அந்தக் கணிப்புப்படிதான் இளையராஜா மொத்தப் பதிவுலகில் கொண்டாடப்படுகிறாரா என்பது பார்க்கப்படவேண்டும்.

ஒன்றுமேயில்லாத உருப்படாத பாடல்களையெல்லாம் ஆகா ஓகோவென்று கொண்டாடுவதும் அவர்தானே எங்கள் ஆதர்சம் அவர்தானே எங்கள் இசைக்கடவுள் அவருக்கு இணையாக இங்கே யாரிருக்கிறார்கள் என்றெல்லாம் அபத்தமாக வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பதிவுகளையெல்லாம் நீங்கள் படிப்பதில்லை போலிருக்கிறது.

இத்தகைய பதிவுகள்தாம் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.அதுவும் சரம்சரமாக.

குமுதத்தில் அவரது கேள்விபதில்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சில கேள்விகளை மட்டும் படித்துப்பாருங்கள். அவரைச் 'சும்மாவே' எப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.மற்ற பல நல்ல கேள்விகளைக் கேட்டவர்களைப் பிடித்துப்பிய்த்து எறிந்துவிடும் ராஜா இத்தகைய சொறிந்துவிடும் கேள்விகளுக்கு ஒன்றுமே சொல்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்கிற தொனியில் பதில் சொல்லியிருப்பதும் தெரியும்.

திரும்பவும் சொல்கிறேன்,ராஜா என்ற ஒரு நல்ல இசையமைப்பாளர்மீது எனக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரது இசையை நானும் ரசிப்பது உண்டு.ஆனால் அவரால்தான் திரைஇசையே உருவானது, அவருக்கு இணை இங்கே யாருமில்லை என்ற கோணத்தில் அபத்தங்கள் பரப்பப்படுவதை(மய்யம் டாட்காமைத் தவிர)ஏற்பதற்கில்லை.

ஒன்றும் வேண்டாம் 'என்னுயிர் ராசா' என்ற படத்தில் இளையராஜா இசையில் அமைந்த 'காட்டுக்குருவிச் சத்தம் காதுல விழுந்துச்சோ'பாடலை நேற்று இரவு கேட்டேன்.உயிரை உருக்கிவிட்டது என்று ஒரு பதிவு போடுங்கள்.'ஐயோ அந்த இசையனுபவத்தை நீங்களும் அனுபவிச்சீங்களா? அதை அனுபவிக்கக் கொடுத்துவைத்திருக்கணுமே.ராஜாவுக்கு இணை இங்கே யாரிருக்கிறார்கள்? என்ற பாணியில் எத்தனைப் பின்னூட்டம் வருகிறது என்று பாருங்கள்.

தங்களின் தமிழ்த்தீவிர இசைப்பற்றுக்கு எனது பாராட்டுக்கள்.

Anonymous said...

ஐயா வணக்கம்
ஒரு தனி நபரோ, ஒரு தனி ரசிக வட்டமோ அவர்களுக்கு பிடித்த இசையோ எழுத்தோ பற்றி சிலாகிதால், அதை ஏன் பேசவில்லை இதை ஏன் என எதிர்க்கவோ புலம்பவோ என்ன இருக்கிறது?. மற்ற ரசிகர்களும் மற்ற வட்டங்களும் ஏன் செய்யவில்லை என்று தான் கேட்க வேண்டும்.

தனக்கு இசை கடவுள் என்று தான் சொல்கிறார்கள், நமக்கும் எல்லோருக்கும் சேர்த்து அல்ல. தமிழில் இதுதான் சிறந்தது என்று குறிப்பிட்டு சொன்னால் தான் கேட்க முடியும். நமக்காக அப்படி தோன்றினால் அதற்க்கு யார் பொறுப்பு?. ராஜா ரசிகர்கள் என்ன தமிழ் இசை துறையா நடத்துகிறார்கள், மற்ற அணைத்து இசையும் ஆய்ந்து பேச?. ஒருவர் தன் பதிவை தான் எழுதவோ எழுதாமல் இருக்கவோ முடியும், மற்றவர்கள் என்ன எழுது கிறார்கள் என்பதை எப்படி மாற்ற முடியும்? இத்தனை பதிவு ஏன் வருகிறது என்று கேட்டல் என்ன சொல்ல?

நீங்கள் சொல்வது எல்லா வட்டத்திலும் நிழ்கிறது. ஒரு சினிமாகாரர்கள் நடத்திய விழாவில் பராசக்திக்கு முன் படமே வராதது போல் பேசினார்கள். அதற்க்கு என்ன செய்ய?.

app_engine said...

உங்கள் கண் திறக்க வேண்டும் என்றெல்லாம் கங்கணம் கட்டவில்லை :)

===quote===

பேசுவதற்கு வாய்கூச வேண்டாமா?

இளைஞர்களுக்கு இந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்’
-
இதுதான் நான் வைத்த கருத்து, கேள்வி.
-
- இதுவரையிலும் யாரிடமிருந்தும் முறையான பதில் வரவில்லை.
=== end-quote===

என்றெல்லாம் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் அல்லவா? அதற்கு பதிலாகத்தான் வலையுலகின் முதல் தமிழ்த்திரையிசை விவாத மையமான tfmpage.com / the hub பற்றி சொன்னேன்.

இதற்குப்பின் உயர் தரத்துடன் தமிழ்த்திரை இசைக்காக நடத்தப்பட்ட தளம் dhool.com

இங்கே நாள்தோறும் பதித்துப்பரவசப்பட்ட பாடல்களின் பட்டியல் இங்கே: (இத்தனைக்கும் இதன் உரிமையாளர் ஒரு தீவிர ராசா விசிறி)

http://www.dhool.com/sotd2/all.php

நான் பார்த்தவரை வலைப்பூக்களிலும் (blogs) ராசாவை விமர்சித்து எழுதுவோரின் எண்ணிக்கை குறைவொன்றுமில்லை! ஐயம் இருந்தால் சொல்லுங்கள் நிறைய சுட்டி தருகிறேன் :)

மற்றபடி எந்த ஒரு கலைஞருக்கும் "ஆஹா-ஓகோ- உலகின் முதல்-அப்படியா-இப்படியா" என்று புகழ் பாடுவோர் இருக்கத்தான் செய்வார்கள்.

அதையெல்லாம் சட்டை செய்வதும் பொருமுவதும் உடல் நலத்துக்குக் கேடு :)

Amudhavan said...

அனானிமஸ், என்னுடைய பதிவுகளில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதையெல்லாம் நீங்கள் முழுமையாகப் படிக்கவில்லை போலிருக்கிறது. படித்துவிட்டு வந்து பேசுங்கள் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. அப்படியெல்லாம் வற்புறுத்துவதோ வாதாடுவதோ எனது நோக்கமும் கிடையாது. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கெல்லாம் அவற்றிலேயே அல்லது அவற்றுக்கான பின்னூட்டங்களிலேயே பதில்கள் இருக்கின்றன.
தனிப்பட்ட ஒருவர் தனிப்பட்ட முறையில் சொல்லுகின்ற கருத்துக்களுக்கு யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. ஆட்சேபிக்கவும் முடியாது. பொதுவான தளத்தில் பொதுக்கருத்தை ஏற்படுத்துகின்ற முறையில் சொல்லுகின்ற விஷயங்களுக்காகத்தான் இங்கே இதுபோன்ற விவாதங்கள் எல்லாம் நடைபெறுகின்றன.
அவர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் நமக்கு இப்படித் தோன்றினால் அதற்கு யார் பொறுப்பு? என்பதெல்லாம் நல்ல கேள்விகள்.
அவர்களுடைய கூட்டத்துக்கு அல்லது அவர்களுடைய குழுமத்திற்கு மட்டும்தான் 'அவர்கள்' அப்படிச் சொல்லிக்கொள்வார்கள் என்றால் நமக்கும் அதில் ஆட்சேபணை இல்லைதான்.
இசை என்றால் இளையராஜாதான் என்பதுபோன்ற பொதுக்கருத்தை உருவாக்க இணையத்திலும் வெளியிலும் எத்தனைப்பெரிய லாபி உழைக்கிறது என்ற விவரமெல்லாம் தெரிந்தால் நீங்கள் இப்படிப் பேசமாட்டீர்கள். போகட்டும்.
இது வெறும் அவர்களுடைய கருத்து நமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி இதுபோல் கருத்துத் தெரிவிக்கும் அத்தனைப்பேரையும் ஒரே மூட்டையாகக் கட்டித் தூக்கி எங்கேயோ வீசுகிறீர்கள். இனி அவர்கள் பாடு ;உங்கள் பாடு.

Amudhavan said...

||மற்றபடி எந்த ஒரு கலைஞருக்கும் "ஆஹா-ஓகோ- உலகின் முதல்-அப்படியா-இப்படியா" என்று புகழ் பாடுவோர் இருக்கத்தான் செய்வார்கள்.

அதையெல்லாம் சட்டை செய்வதும் பொருமுவதும் உடல் நலத்துக்குக் கேடு :)||
அப்படி ஒருவருக்கு தப்பும்தவறுமாகப் பொதுவெளியில் வந்து கூக்குரலிடும்போது அவர்களுக்கு சில உண்மைகளையும் இதற்கு முன்னால் இதே துறையில் மிகப்பெரும் சாதனைப்புரிந்த சாதனையாளர்களையும் சுட்டிக்காட்டுவதைச் செய்வதற்கும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.
இத்தகைய தெளிவூட்டல்களுக்காகப் பொருமுவதும் நொந்துகொள்வதும்கூட உடல்நலத்துக்குக் கேடுதான் நண்பரே.

app_engine said...

நீங்கள் வெறும் "தெளிவூட்டல்" மட்டும் செய்திருந்தால் நான் பதிலே போட்டிருக்க மாட்டேன். "வாழ்க, வளர்க" என்று நினைத்துக்கொண்டு போயிருப்பேன் :) அதில் பொரும என்ன இருக்கிறது? நல்ல செயல் தானே :)

"வாய் கூசவில்லையா, என் கருத்துக்கு பதில் சொல்ல ஒருத்தனும் இல்லையா, எங்கே ராசா விசிறிகள்" என்றெல்லாம் சவால் விட்டதால் தான் உமக்கு சில இணையத்தளங்களின் விவரமெல்லாம் கொடுத்து இங்கே எழுத நேர்ந்தது.

ஆயிற்று, உமது சவாலுக்கு சில முக்கிய ஆதாரங்களுடன் விடை கொடுத்தாயிற்று. என் கடமை முடிந்தது :)

நேரம் கிடைத்தால் கங்கை அமரன் பற்றி (கவனிக்கவும்: இளையராசா அல்ல, அவரோடு சண்டை போட்டுப்பிரிந்திருக்கும் தம்பி) நான் எழுதுவதை இங்கே பாருங்கள் :

http://ilayaraja.forumms.net/t80-gangai-amaran-thread-for-song56

(இது இளையராசாவுக்கே என்று உள்ள தளம் என்றாலும் எல்லார் பற்றியும் தாராளமாகப்பேசலாம் !

ஒரு லாபியும் கீபியும் கிடையாது :) )

காரிகன் said...

பெயரிலேயே நேடிவிடி சிலர் திரு அமுதவனின் கருத்துக்கு வேறு சாயம் பூச முற்படுவது நன்றாகவே தெரிகிறது. அவர்களின் நோக்கம் இளையராஜாவை மட்டுமே நாம் பாராட்டி பேச வேண்டும் மற்ற யாரையும் எந்த காரணம் கொண்டும் புகழ்ந்து எழுதி விட கூடாது என்பதே. இதை அவர்கள் எவ்வளவு நாகரீகமாக சொன்னாலும் படிப்பவர்களுக்கு இது மிக தெளிவாகவே புரிந்துவிடுகிறது. எத்தனை லிங்க் கொடுத்தாலும் அவர்களின் எண்ணம் இதுவே. எனவே அவர்களோடு வீண் விவாதம் செய்வது முட்டாள்தனமானது என்பது என்னுடைய கருத்து. அமுதவன் அவர்கள் இதற்கு மேல் இந்த ராஜா அடிவருடிகளுக்கு பதில் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. (நானாக இருந்தால் இவர்களை அப்போதே அலட்சியம் செய்திருப்பேன்). ராஜாவை கடவுள் அளவுக்கு கண்மண் தெரியாமல் புகழ ஒரு சிண்டிகேட் போன்ற அமைப்பே இணையத்தில் இயங்கிவருகிறது. இது போன்ற மலிவான இசை என்றால் என்னவென்றே புரியாத பலருக்கு ராஜா மட்டுமே ஒரு பெரிய இசைஞானி. இவர்களுக்கு அன்னக்கிளி படமே முதல் தமிழ் படம். பதினாறு வயதினிலே படமே முதல் நாட்டுப்புற இசையை கொண்டு வந்த படம்.இளையராஜாவுக்கு முன் யாருமே இசையை மக்கள் நேசிக்கும் அளவுக்கு கொடுக்கவில்லை என்று நம்பும் இவர்களை கண்டு நாம் பரிதாப படவேண்டும். இசையை விமர்சிக்க பாபநாசம் சிவன் முதல்கொண்டு அதன் பின் வந்த பல இசை மேதைகளின் பாடல்களை கேட்டு விட்டு பின்னர் உங்கள் கருத்தை எழுதவது நலமாக இருக்கும். சொல்லப்போனால் இளயராஜா எ எம் ராஜா, கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், டி கே ராமாமூர்த்தி, வி குமார், போன்ற இசை அமைப்பாளர்களை விட பல படிகள் கீழே இருப்பவர்தான். இவரகளை எல்லாம் முழுதும் கேட்ட பிறகு ராஜா விசிறிகள் ஊளை இட்டால் நன்று.

காரிகன் said...

"பெயரிலேயே நேடிவிடி இல்லாத சிலர்" என்று என் பின்னூட்டத்தின் முதல் வரியை படிக்கவும். தவறுக்கு எனது மன்னிப்பை கோருகிறேன்

Amudhavan said...

வாருங்கள் காரிகன், சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனைச் சொன்னாலும் விவாதத்தை செந்தில் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடிக்கு ஈடாகக் கொண்டுவரத்தான் பார்க்கிறார்கள். நேர்மையான கேள்விகளுக்கும் வெளிப்படையாக முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கும் பதில் இல்லை.

மதிமாறன் அவரது தளத்தில் எஸ்.ஜானகி பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தப் பதிவிலும் இளையராஜாவை முன்னிட்டு இதே போன்ற கயமை. அந்தப் பதிவிலும் சில கேள்விகள் எழுப்பியுள்ளேன். முடிந்தால் படியுங்கள். நன்றி.

காரிகன் said...

தற்போதுதான் உங்களின் பின்னூட்டத்தை மதிமாறனின் தளத்தில் வாசித்தேன். எனக்கு மதிமாறனின் பதிவுகளை படிக்கும்பொழுதெல்லாம் தாறுமாறாக ஆவேசம் வருவதுண்டு. பல சமயங்களில் அவருக்கு பின்னூட்டம் போட்டும் ஏனோ பதிலே வருவதில்லை. இளையராஜாவை தூக்கி பிடிக்கும் பெரியார் கொள்கை பேசும் ஒரு முரண்பாடான பதிவர் மதிமாறன் . காசிமேடு மன்னாரு என்பவர் மதிமாறனின் பதிவுகளில் தவறாமல் இடம் பிடிப்பவர். இருவரும் ஒருவர் தானோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இருவரும் ஒரே கோட்டில் நின்று கொண்டிருப்பவர்கள்.

Amudhavan said...

காரிகன் அவர்களே எனக்கும் உங்களைப் போலவேதான் சந்தேகம். இந்த காசிமேடு மன்னாரு என்பவரும் மதிமாறனும் ஒருவரேதானா என்று. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

எனக்கு இன்னமும் இந்த இணையத்தின் உள்விவகாரங்கள் தெரியாது. பதிவுகளுக்கு எப்படி ஓட்டுப்போடுவது எதற்காக ஓட்டுப்போடுவது என்பவற்றுடன் ஒரு திரட்டியில் ஒரே பதிவை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பதிவேற்ற முடியுமா என்பதும் தெரியாது. அப்படிப் பதிவேற்றக்கூடாது என்றுதான் இப்போதும் நினைத்திருக்கிறேன். அப்படியே பதிவேற்றுவதாக இருந்தாலும் மீள்பதிவு என்ற அறிவிப்புடன் பதிவேற்றலாம் என்றே நினைத்திருக்கிறேன்.இது இப்படியிருக்க மதிமாறனின் எஸ்.ஜானகி பற்றிய பதிவு முதலில் தமிழ்மணத்தில் வந்தது. படித்துப் பார்த்ததும் சில கேள்விகள் பிறந்தன. அதனை அந்தப் பதிவிலேயே கேட்கலாமா என்று நினைத்து சரி வேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டேன்.

மறுநாள் அந்தப் பதிவுக்கு ஏதேனும் பின்னூட்டங்கள் வந்துள்ளனவா என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக அவர் தளத்திற்குச் சென்றேன். எந்தப் பின்னூட்டமும் இல்லாமல் சாதாரணமாக இருந்தது.
சரி நாமாவது கேட்டுவைப்போம் என்று அந்தப் பின்னூட்டத்தைப் போட்டேன். அவர் என்ன பதில் எழுதியிருக்கிறார் என்று பார்ப்பதற்காக அடுத்தநாள் போகலாம் என்று பார்ப்பதற்குள் என்னுடைய பதிலுடன் மீண்டும் அதே பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார் மதிமாறன்.

ஒருநாள் முழுக்க தமிழ்மணப்பதிவுத் திரட்டியில் இருந்தது அந்தப் பதிவு. இப்போதும் மறுமொழிகள் எதுவும் வரவில்லை. சரி அவராவது ஏதாவது எழுதுவார் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. பேசாமலிருந்துவிட்டேன். இப்போது பார்த்தால் காசிமேடு மன்னாரு என்று 'ஒருவருடைய' பதில். ஒன்று காசிமேடு மன்னாரு இவராகவே இருக்கவேண்டும். அல்லது இவரது நண்பர்களில் யாராவது இருக்கவேண்டும். யாராவது இருந்துவிட்டுப் போகட்டும். என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

Amudhavan said...

மறுபடியும் ஏதோ மருள் வந்தவர்கள் பேசுவது போன்ற பிதற்றல்கள்தாம். 'இசைஞானியின் அளவுக்கு இசைத்துறையில் உலக அளவிலேகூட யாரையுமே நம் இசைஞானியோடு ஒப்பிட முடியாது'
அட, அதுதான் அந்த ரகசியக் கருமம் என்னவென்றுதானே கேட்கிறோம். அப்படி ஏதாவது இருந்தால் நமக்கும் அதனைச் சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே.

'பட்டாபிராமன் அளவுக்கு இசைத்துறையில் யாரையுமே உலக அளவிலேகூட நம் பட்டாபிராமனுடன் ஒப்பிடமுடியாது' என்றுதானே நம்முடைய ஏகாம்பரமும் சொல்கிறார்.

'எங்களின் நாற்பது ஆண்டுகளுக்கு மேலான இசை அனுபவத்தில் எங்களின் ஒருமித்த முடிவும் கருத்தும் இது'
என்னமாதிரியான 'இசைத்துறைக்கான ஐநா சபையின்' டிக்ளரேஷன். கேள்விப்பட்டிருக்கிறீர்களா இம்மாதிரியான காமெடிகளையெல்லாம்?
'தமிழர்கள் இத்தரணியில்...' என்று ஆரம்பித்து இன்னொரு பிதற்றல்.
பொதுவாகவே இவர்களுக்கு இளையராஜாவைத் தூக்கிப்பிடிக்க வேறு எதுவும் கிடைக்கவில்லையெனில் அவர் தமிழர் என்ற லேபிளைக் கொண்டுவந்து அவர்மீது ஒட்டிவிட்டு அகமகிழ்ந்து போகிறார்கள்.
இவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அம்பேத்கரையும் பெரியாரையும் கொண்டாடுவார்களாம். அவர்களுக்குத் தமிழர் என்ற லேபிள் கிடையாது

(அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் மீது நான் மிகப்பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன். அது வேறு விஷயம். சென்றவாரம்கூட அம்பேத்கருடைய ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினேன்)

இளையராஜாவைத் தூக்கிப்பிடிக்க மட்டும் தமிழர் என்ற லேபிளாம். இளையராஜாவே தம்மைத் தமிழர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டது கிடையாது. ஒருமுறை அவரிடம் இதுபற்றிக்கேட்டபோது 'நான் இந்தியன் என்றுகூட சொல்லிக்கொள்ளமாட்டேன்.அதையும் தாண்டி நான் உலக மானுடன்' என்றார்.(எவ்வூரு சென்றாலும் அது நம்நாட்டைப் போலவருமா? என்று பாடுவது வேறுவிஷயம்)
தவிர இளையராஜா இதுவரை எத்தனைத் 'தமிழ்ப்பாடகர்களை' அறிமுகப்படுத்திவைத்திருக்கிறார் என்ற கணக்கை யாராவது சொன்னார்களென்றால் நன்றாயிருக்கும்.
இவர்கள் பெரியார் பக்தர்கள். அவர் பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார். கேட்டதற்கு பெரியார் நாத்திகர். நான் ஆத்திகன். அது முரண்பாடில்லையா? என்று கேட்டார். இவர்களுக்கு அதில் தவறேதும் தெரியாது.
ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் கட்டித்தருவது, திருவண்ணாமலை ஆசிரமத்துக்கான பணிகள், ரமணரைப் பற்றிய பக்தி, பாமாலைகள் என்று இவர்களின் அரசியல் நெறிகளுக்கு மாறாகச் செயல்படுவார் ராஜா. இந்த பக்தர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களாம்.
பிராமணியத்துக்கு இவர்கள் எதிர்ப்பாளர்களாம்.ஆனால் இளையராஜா பிராமணியத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வதை இவர்கள் கண்டுகொள்ளமாட்டார்களாம். வருடந்தோறும் நவராத்திரி என்ற ஒரு 'நாத்திகத்திருவிழா'வின்போது அந்த ஒன்பது நாட்களும் கர்நாடக சங்கீத வித்வான்களான பிரபல பிராமண வித்வான்களை அழைத்து இவரது வீட்டில் இசைக்கச்சேரிகள் நடத்தி அவர்களுக்குப் பெருந்தொகைகளைத் தந்து அனுப்பும் வழக்கம் இவரிடம் உண்டாம். இந்த பகுத்தறிவுப் பாசறை வீரர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திராட்டில் விட்டுவிடுவார்களாம். அவர் இசைஞானி இல்லையா இசைக்கு மொழியேது என்று பேசாமல் இருந்துவிடுவார்களாம்.இதுபோல ரொம்ப ரொம்ப காமெடிகள் இவர்கள் வசம் உள்ளன.
பார்ப்போம் இன்னமும் என்னென்ன கிளம்பிவருகிறது என்று.

வவ்வால் said...

காரிகன்,

பழசெல்லாம் நியாபகம் வச்சிருக்கீங்களே :-))

ஹி..ஹி நான் எப்பொழுதும் சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லிவிடுவதால் ஏதோ வம்பாக பேசுவது போல இருக்கும்,ஆனால் வன்மம் இருக்காது.

தங்களின் மேலான அபிப்பிராயத்திற்கு மிக்க நன்றி!.

-----------

அமுதவன் சார்,

தங்களின் மேலான எண்ணங்களுக்கு மிக்க நன்றி! நீங்க எனது பின்னூட்டங்கள் முதல் கவனிப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி,அதே சமயம் இனிமே நாமும் கவனமாக கருத்து சொல்ல வேண்டும்னு ஒரு மணியும் மண்டைக்குள்ள அடிக்குது :-))

காரிகன் said...

முரண்பட்டு பேசுவதில் இளையராஜாவுக்கு இணையே கிடையாது. ஒரு முறை நானே இசை அமைக்கும்போது வேறு யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பார். பிறகு எனக்கு இந்த இசை மட்டும்தான் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என் இசை காலம் காலமாக வாழும் என்றும் சொல்வார். சிம்பனி அமைக்க வெறும் எட்டு நொடிகள் போதும் என்று ஒரு மகா உண்மையை சொல்லி புல்லரிக்க வைத்தவர் தானே இவர். இளையராஜா பத்தாயிரத்திற்கும் மேலே பாடல்கள் போட்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அவற்றை வடிகட்டினால் ஒரு பாதி கோப்பை நிரம்பலாம். இதுதான் நிதர்சனம்.

காரிகன் said...

அமுதவன் அவர்களுக்கு, முதல் முறையாக இசை பற்றிய ஒரு பதிவு என் தளத்தில் எழுதி இருக்கிறேன். நேரமிருப்பின் வருகை தரவும். பின் குறிப்பு; உங்கள் பின்னூட்டம் அவசியம்.
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/04/blog-post.html

Anonymous said...

தமிழ் நாட்டில் தமிழில் புலிக்குட்டிகள்ளு பெயர் வைத்தால் " தமிழ் புலி" என்று யாராவது கிளப்பிவிட்டால் என்ன செய்வது என்று சிந்தித்திருப்பாரோ. தமிழில் பெயர் வைத்திருக்கலாம், ஆனால் சோதிடர் சொல்வதைத் தானே ஆள்பவர்கள் செய்வர், ஆகையால் சோதிட சிகாமணிகளின் பரிந்துரையில் சமஸ்கிருதம் வாழுதுயோய். :

Amudhavan said...

நிரஞ்சன் தம்பி, நீங்கள் சொல்வதுபோலவும்கூட இருக்கலாம்.

Post a Comment