Saturday, November 16, 2013

ஊதாப்பூ இனிமேல் கண் சிமிட்டாது.புஷ்பா தங்கதுரை மறைந்துவிட்டார்.

இந்த வருட தினமணி தீபாவளி மலரில் வாழும் மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் எழுதிய சில கட்டுரைகள் வந்துள்ளன. தி.க.சி பற்றி பழ நெடுமாறனும், ஜெயகாந்தனைப் பற்றி கவிஞர் வைரமுத்துவும், அசோகமித்திரனைப் பற்றி ஞாநியும், இந்திரா பார்த்தசாரதியைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணனும், கு.சின்னப்ப பாரதியைப் பற்றி ஸ்டாலின் குணசேகரனும் எழுதியிருக்கிறார்கள். அந்த வரிசையில் எழுத்தாளர் விக்கிரமனைப் பற்றி புஷ்பா தங்கதுரை எழுதியிருந்தார். புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வரும் மாதநாவல்களையும் தொடர்கதைகளையும் படிக்கமாட்டேன். ஆனால் சிறுகதைகளோ வேறு கட்டுரைகளோ என்றால் உடனே படித்துவிடுவேன். அதுவும் அவரது இயற்பெயரான ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஏதாவது வந்திருந்தால் உடனே உடனே படித்துவிடுவேன்.

அதுபோல்தான் இந்த மலரிலும் இந்தக் கட்டுரைக் கண்ணில் பட்டதும் உடனடியாகப் படித்தேன். எழுத்தாளர் விக்கிரமனைப் பற்றிச் சொல்ல வந்தவர்….’இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது எனது கஷ்ட காலத்தில் விக்கிரமனைச் சந்தித்திருக்கிறேன். அவரிடம் என்னைப் பற்றிய செய்திகளைக் கூற அவர் எனக்கு ஒரு ரூபாய் கொடுத்ததாக நினைவு’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இம்மாதிரியான சின்னச்சின்ன உதவிகளைக்கூட மறக்காமல் நினைவுகூறும் பண்பு புஷ்பா தங்கதுரையிடம் உண்டு. சாவி பற்றி அப்படித்தான் பேசுவார். “எவ்வளவோ எழுதி எழுதிக் குவித்திருக்கிறேன். ஆனால் சாவி போன்று பப்ளிசிடியும் பணமும் கொடுத்துப் பார்த்துக்கொள்கிறவர்கள் யாரும் இல்லை. இப்ப என்னமாதிரி பப்ளிசிடி என்கிறீர்கள்? கல்லூரிகள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் புஷ்பா தங்கதுரை என்பது யாரென்று தெரியாது. ஆனால் அந்தப் பெயருக்கு அப்படியொரு கிரேஸ். பத்திரிகை ஆபீஸுக்கு வந்து குவியும் கடிதங்களைப் பார்த்தா மலைச்சுப் போயிருவீங்க. நான்தான் புஷ்பா தங்கதுரை என்பது வெளில யாருக்கும் தெரியாது. என்னை முழுமையாய் மறைத்துக்கொண்டுதான் உலவ வேண்டியிருக்கிறது” என்பார்.

அவர் சொன்னதை அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலை கவனத்தில் கொண்டு பார்க்கும்போதுதான் அதன் உண்மையும் தீவிரமும் புரியும்.

சுஜாதா மிகவும் பரபரப்புடன் புகழ் பெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. கூடவே இன்னொரு டிராக்கில் புஷ்பா தங்கதுரை என்ற பெயருக்கு பயங்கர கிரேஸை உருவாக்கிக்கொண்டிருந்தார் சாவி. எல்லாம் திடீரென்று நிகழ்ந்ததுபோல்தான் ஆரம்பிக்கப்பட்டது.

தினமணி கதிரின் இரண்டுபக்க அளவுக்கு கோபுலு வரைந்த பெரிய சித்திரம். எல்லாரும் குனிந்து எதையோ அல்லது யாரையோ பார்த்துக்கொண்டிருக்கிறமாதிரி.

அவர்களின் தலையும் தோள்பட்டையும் கைகளும் மட்டும்தான் தெரியும். அதனுடன் கூடிய சிறுகதை ஒன்று. ‘அப்பாவி சுண்டுவுக்கு ‘அதெல்லாம்’ தெரியும்’ என்று தலைப்பு. 

எழுதியவர் பெயர் புஷ்பா தங்கதுரை.

கதையைப் படித்தால் சின்னத்தம்பி ரேஞ்சுக்கு ஒரு அப்பாவி. எல்லாராலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய ஒரு பையன். ஆனால் ‘அந்த’ விஷயத்தில் மட்டும்  அவன் கில்லாடிதான் என்கிறமாதிரியான கதையமைப்பு. புஷ்பா தங்கதுரை என்ற பெயரின் அறிமுகம் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒரு கல் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது என்று அடுத்த வாரம் இன்னொரு சிறுகதை. இப்படியே வாரம் ஒரு சிறுகதை. அதற்கேற்ப பார்த்தவுடன் கவனத்தைக் கவர்கிற அளவில் பெரிய பெரிய சித்திரங்கள். வாசகர் கடிதம் பகுதியில் இந்தச் சிறுகதைகளுக்கான எதிர்வினைகள். Talk of the town என்பார்களே அதுபோல் மொத்த தமிழ்நாட்டையும் ‘யார் இந்த புஷ்பா தங்கதுரை?’ என்று சில வாரங்களிலேயே பேச வைத்துவிட்டார் சாவி. எங்கும் எல்லா இடத்திலும் இதே பேச்சாகத்தான் இருந்தது. அன்றைக்கு வாரப் பத்திரிகைகள் படிக்கிறவர்கள் அத்தனைப்பேர் கவனமும் இந்த ஒரு புள்ளியில் குவிய ஆரம்பித்து விட்டது.

இந்த சிறுகதைகளைத் தொடர்ந்து சிவப்பு விளக்கு பேசுகிறது என்ற பெயரில் பம்பாய் சென்று சிவப்பு விளக்கு பகுதியில் வாழும் பெண்களைப் பற்றிய கதைகள். இந்தக் கதைகளும் பெருமளவில் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பின. ஆனால் புஷ்பா தங்கதுரை என்ற பெயர் செக்ஸ் விஷயங்களைப் பரவலாக எழுதும் ஒரு எழுத்தாளர் என்பதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டது.

நான் அப்போதுதான் எழுத்துத்துறையில் ஓரளவு கவனம் ஈர்க்க ஆரம்பித்த நேரம். என்னுடைய தொழிற்சாலையில் இருந்த வாசக நண்பர்கள் நான் வேலைப் பார்க்கும் செக்ஷன் தேடிவந்து வேறுவிஷயங்கள் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள். “சார் இந்தப் புஷ்பா தங்கதுரைன்றது யாரு சார்?”

கொஞ்ச நாட்களுக்கு ஒரு ராணுவ ரகசியம்போல்தான் இந்தப் பெயரைப் பாதுகாத்துவைத்திருந்தார்கள்.

சென்னையில் சில நண்பர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். கடைசியில் டெல்லியிலிருந்த நகைச்சுவை எழுத்தாளர் அகஸ்தியனுக்குக் கடிதம் எழுதி விஷயம் தெரிந்துகொண்டேன்.

ஒருநாள் சுஜாதாவிடம் இது பற்றிய பேச்சு வந்தது. அப்போது சுஜாதா சிரித்துக்கொண்டே சொன்னது நினைவில் இருக்கிறது “என்னய்யா அது? கொஞ்சப் பேரு நான்தான் அந்தப் பெயரிலும் எழுதுகிறேனா என்று சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க. என்னையே சிலபேர் நீங்க தானா சார் அது?ன்னு கேட்கறாங்க”.

“சார் அந்த சிறுகதைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா அவருடைய நடை ரொம்ப அழகா இருக்கு” என்றேன் சுஜாதாவிடம்.

“வேணுகோபாலனை நீங்க வெறும் புஷ்பா தங்கதுரையாப் பார்க்காதீங்க. தமிழ் இலக்கியங்களை ரொம்ப ஆழமா தீவிரமாப் படிச்சவர் அவர். சமஸ்கிருதத்துல ரொம்பவும் புலமை உண்டு. வைணவ இலக்கியங்கள்ள ஈடுபாடு அதிகம். மணிக்கொடியிலதான் எழுத ஆரம்பிச்சார்னு நினைக்கிறேன். ரொம்பப் பெரிய நிறைய விஷயங்கள் உள்ள ஆளு. அவரை வச்சு ஒரு பெரிய மேஜிக் பண்ணப்போறேன்ற மாதிரி சாவி சொல்லிட்டிருந்தார். ஆரம்பிச்சுட்டார்னு நினைக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.

சாவி செய்த மேஜிக் மிகப்பெரிய அளவிலேயே பத்திரிகை உலகிலும் வாசகப் பரப்பிலும் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது. அந்தப் பரபரப்பின் போதேயே புஷ்பா தங்கதுரை எழுதும் தொடர்கதை என்ற அறிவிப்பும் தினமணி கதிரில் வெளியானது.

‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ என்பது தொடர்கதையின் தலைப்பு. தலைப்பே கவிதை பேச பத்திரிகையின் விற்பனை பல மடங்கு எகிறியது. ‘யார் இந்த புஷ்பா தங்கதுரை?’ என்ற கேள்வி சகல விதத்திலும் சுழன்றடிக்க “யார் இந்த புஷ்பா தங்கதுரை என்பதை தயவுசெய்து சொல்வீர்களா? தெரிந்துகொள்ளாவிட்டால் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருக்கிறது’ என்று ஒரு அவசரக் கடிதம் ஒன்று எழுதினார் ஒரு பிரபலம்.

அந்தப் பிரபலம் அந்த நாட்களில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த பிரபல நடிகை ஸ்ரீவித்யா.ஸ்ரீவேணுகோபாலன்தான் என்று அவருக்குப் பதில் எழுதிப்போட, உடனடியாக அவரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. ‘அவரை நான் சந்திக்கவேண்டும். ஏற்பாடு செய்ய முடியுமா?’

ஆரம்பத்தில் கமலஹாசனும் இதுபற்றிக் கேட்டார். “புஷ்பா தங்கதுரைங்கறது ஸ்ரீவேணுகோபாலன்தானா? கன்ஃபர்ம்டா? அவர்தான்னு தெரியவந்தது, கன்ஃபர்ம் பண்ணிக்கத்தான் கேட்கறேன்”

இத்தனைக் களேபரங்கள் அவருக்காக நடைபெற்றுக்கொண்டிருக்க தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருந்தார் புஷ்பா தங்கதுரை என்ற வேணுகோபாலன்.

அதற்கு முன்னமேயே ‘நீ நான் நிலா’ என்ற தொடர்கதை மூலம் என்னைக் கவர்ந்த எழுத்தாளராகியிருந்தார் அவர். அந்தத் தொடர்கதை தினமணி கதிரில் வந்து முடிந்தபோது அவரைப் பாராட்டி நான் எழுதியிருந்த கடிதத்திற்கு பதில் போட்டிருந்தார். அந்த பதிலிலேயே அவர் குறிப்பிட்டிருந்தது ‘சென்னைப் பக்கம் வர நேர்ந்தால் தெரிவியுங்கள். நாம் சந்திப்போம்’
ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது தொடருக்குப் பிறகு அந்த நாவலுக்கு மக்கள் மத்தியில் எழுந்திருந்த பரபரப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய திரைப்படத்துறை அந்த நாவலைப் படமாக்க விழைந்தது. கமலஹாசன் சுஜாதா ஆகியோர் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் படமாக வந்தது. இந்த நாவலிலிருந்து புஷ்பா தங்கதுரைக்குச் சித்திரம் வரையும் பொறுப்பு கவர்ச்சி ஓவியர் ஜெயராஜூக்குப் போய்விட்டது என்று நினைக்கிறேன். அதற்கடுத்து புஷ்பா தங்கதுரை என்ற பெயர் தீயாய்ப் பற்றிக்கொள்ள எல்லாப் பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு புஷ்பா தங்கதுரை எழுத்துக்களை வாங்கிப் போட ஆரம்பித்தார்கள்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் புஷ்பா தங்கதுரை என்ற பெயருக்கும் அதற்கான கதையின் சித்திரத்திரங்களிலும் இருந்த செக்ஸ் அப்பீல் அவரது கதைகளிலோ எழுத்துக்களிலோ இருக்கவில்லை. மெல்லிய போர்னோவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் படிக்கிறவர்களிடம் இருந்ததே தவிர கதைகளில் போர்னோவும் இல்லை ஒன்றும் இல்லை. புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வந்தவை பூராவும் துப்பறியும் கதைகள்தானே தவிர செக்ஸ் கதைகள் அல்ல. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் “சார் ‘நீ நான் நிலா’ மாதிரியான கதைகள் எப்போது எழுதுவீர்கள்?” என்றே கேட்டுக்கொண்டிருப்பேன். நீ நான் நிலாவுக்கு அடுத்து ‘நந்தா என் நிலா’ என்றொரு தொடர்கதை எழுதினார். “இந்தக் கதை அந்த அளவுக்கு இல்லை” என்று அபிப்பிராயம் சொன்னபோது “உண்மைதான் எனக்கே தெரியுது. ஆனால் இந்தக் கதைக்குக் கிடைத்த வரவேற்பும் விளம்பரமும் நீ நான் நிலாவுக்கு இல்லையே” என்றார்.

மிகமிக மென்மையான சுபாவம். அதிர்ந்துகூடப் பேசமாட்டார். எப்போது பார்த்தாலும் அப்போதுதான் குளித்துவிட்டுத் தலை துவட்டிக்கொண்டு வந்து நிற்கிறமாதிரியான தோற்றம். மெல்லிய சுருளுடன் புசுபுசுவென்ற தலைமுடி. சாம்பல் நிறத்தில் பூனைக்கண்கள். சிரித்தமுகம். அடிப்பாகத்திலிருந்து மூக்கை உள்ளங்கையால் மேல்நோக்கி அழுத்தித் துடைத்துக்கொண்டேயிருப்பார் அடிக்கடி. அது ஒன்றுதான் பார்ப்பதற்குக் கஷ்டமாயிருக்கும். “ஏன் சார் இப்படிப் பண்றீங்க? இந்த மேனரிசத்தை விடமுடியலையா?” என்றேன். ஒருமுறை.

“நானும் முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். விடமுடியலை. சரி தொலையட்டும்னு விட்டுட்டேன்” என்று சிரித்தார்.

அளவெடுத்த சுருக்கமான வார்த்தைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதுவார். பெரும்பாலும் கார்டுகள்தாம். ‘நாளை பெங்களூர் வருகிறேன். சேஷாத்ரிபுரத்தில் சாவியுடன் வந்திருந்தபோது தங்கிய அதே ஓட்டல். முடிந்தால் சந்தியுங்களேன்’ என்று ஒருமுறை எழுதியிருந்தார். மறுநாள் ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். டிபன் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டே சேஷாத்ரிபுரத்திலிருந்து மல்லேஸ்வரம் வரைக்கும் நடந்து சென்று வந்தோம். அவர் தனிமையில்தான் வசித்து வந்தார். 

பேச்சலர் லைஃப் என்றுதான் சொன்னார்கள். ஒருமுறை திருமணம் பற்றிக் கேட்டேன். “ஒய்ஃபைத் தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் கிடைக்கலை. எங்காவது பார்த்தா சொல்லுங்க” என்றார். 

அதிலிருந்து அவரது திருமண வாழ்க்கைப் பற்றி அவரிடம் எதுவும் பேசியதில்லை.
சென்னை சென்றிருந்தபோது ஒருமுறை கே.கே.நகரிலிருந்த அவரது வீட்டைத் தேடினோம்  நானும் அகிலன் கண்ணனும். எத்தனைத் தேடியும் விலாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு கடைக்குச் சென்று போன் பண்ணியபோது இப்போது எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டார். கடையின் அடையாளத்தைச் சொன்னதும் “அங்கேயே இருங்க இதோ வந்துர்றேன்” என்றவர் சற்று நேரத்திலேயே வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீடு முழுக்கக் குப்பையும் கூளமுமாக இறைந்து கிடந்தன புத்தகங்கள். “சார் ஏதாவது புத்தகம் தேடினீங்களா?” என்றேன். “அதெல்லாம் இல்லை. சாதாரணமாகவே இப்படித்தான் இருக்கும். எப்பவாச்சும்தான் அடுக்கிவைப்பேன்” என்றார். 
 அவரது தாயாரிடம் அறிமுகப்படுத்தி காப்பி கொடுத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து வழியனுப்பி வைத்தார்.

ஒருமுறை ஏதோ ஒரு பத்திரிகையில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லும்போது “புஷ்பா தங்கதுரை அல்ல, ஸ்ரீவேணுகோபாலனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது நீ நான் நிலா, திருவரங்கன் உலா இரண்டும் தமிழின் முக்கியமான நூல்கள் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும்” என்று சொல்லியிருந்தேன். இதைச் சொல்லி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் சென்னையில் கலந்துகொண்டிருந்தபோது நிகழ்ச்சியிலிருந்து கிளம்பிக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் அருகில் வந்து “நீங்க சொல்லியிருந்தது பார்த்தேன். ரொம்ப தேங்ஸ்” என்று ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார்.

தனக்கு உரிய முக்கியத்துவம் தமிழ் இலக்கிய அரங்கில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் நிறையவே இருந்தது. அந்த ஆதங்கத்தினால்தான் அவர் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதவே துவங்கினார் என்று நினைக்கிறேன். ‘நல்ல எழுத்து எழுதும்போது கிடைக்கவேண்டிய முக்கியத்துவம் கிடைக்கலை. இப்ப செக்ஸ் எழுதறேன்னு ஆரம்பிச்சதும் மொத்த பத்திரிகைத் துறையும் வந்து குவியுது. இது ஒரு மாதிரி பழி வாங்கறதுன்னு வச்சுக்கங்களேன். உனக்கு என்ன வேணுமோ அதை நான் தர்றேன். நீ என்னிடம் வந்து விழு ஆட்டிடியூட்தான். வேலைக்கும் போய்க்கிட்டு இவ்வளவு எழுதறதுன்றது முடியலை. ரொம்ப சிரமமாத்தான் இருக்கு’ என்றார் ஒருமுறை.

அடுத்த சந்திப்பிலேயே அவருடைய இந்தக் கருத்திற்கு முழுவதும் மாறாகப் பேசத்தொடங்கியிருந்தார். “என்ன சார், நான் ஒண்ணும் பெரிசா செக்ஸ் எழுதவே இல்லை. எழுத ஆரம்பிச்சா தாங்காது நம்ம பத்திரிகைகள். ஏன் செக்ஸ் எழுதுவது கூடாதா என்ன? எதுக்காக இப்படி ஒரு ஹிப்போக்ரசித்தனம்? அவனவன் முக்காடு போட்டுக்கிட்டுத்தான் எல்லாத்தையும் செய்யணும்னு நினைக்கறான். இவனுக்கெல்லாம் செக்ஸ் வேண்டாமா? எழுத்தில் செக்ஸ் இருக்கக்கூடாதா? போர்னோ எழுதுகிறவன் எல்லாரும் மிக மட்டமான எழுத்தாளன்னு முத்திரைக் குத்தறான். மேல்நாட்டில் போர்னோ எழுதுகிற எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள் சார். மிகப்பெரிய எழுத்தாளனா அங்கே மதிக்கப்படுகிறவர்கள் எல்லாருமே போர்னோ எழுதுகிறவர்களே. அவங்களுக்கு அங்கே என்ன மரியாதை தெரியுமா? ஒவ்வொரு போர்னோ புத்தகங்களும் என்ன வருமானத்தை அவர்களுக்குத் தருகிறது என்று நினைக்கிறீர்கள். ஒவ்வொருவரும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இத்தனை டாலர்கள் என்று சம்பாதிக்கிறார்கள். அங்கே இம்மாதிரி எழுத்துக்களுக்கே பரிசுகள் எல்லாம் தருகிறார்கள். இங்கே நாம்தான் கொஞ்சூண்டு செக்ஸ் எழுதினாலே தரக்குறைவான எழுத்து என்று முத்திரைக் குத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார். (இப்போது இதே வாதங்களைத்தானே சாருநிவேதிதா சொல்லிக்கொண்டிருக்கிறார்!)

இது சம்பந்தமாய் அவர் எனக்கு ஒரு யோசனையும் சொன்னார். “பிளேபாய் வருகிறது இல்லையா? அந்தப் பத்திரிகையில் வரும் படங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மிக அருமையான பிரமாதமான எழுத்துக்களைக் கொண்டு வெளிவரும் பத்திரிகை அது. அதில் வரும் கட்டுரைகளும் பேட்டிகளும் பிரமாதமானவை. சில சிறுகதைகள் அற்புதமானவை. வருடந்தோறும் பிளேபாயில் வரும் சிறுகதைகளை மட்டும் தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் புத்தகம் போடுகிறார்கள். அந்த புத்தகம் கிடைத்தால் வாங்கிவிடுங்கள். அந்தக் கதைகளைப் படித்துப் பார்த்தீர்கள் என்றாலேயே எத்தனையோ புதிய பிளாட்டுகள் கிடைக்கும். சிறுகதைகளை அவர்கள் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுத்தும். ஒரு இளம் எழுத்தாளர் என்பதனால் உங்களுக்குச் சொல்கிறேன். பிளேபாய் சிறுகதைகள் கலெக்ஷனை வாங்கிவிடுங்கள்” அவர் சொன்னாரே என்பதற்காக நானும் பெங்களூரில் பல இடங்களில் தேடிவிட்டேன். ஒரு நாளும் அத்தகைய கலெக்ஷன் கிடைக்கவே இல்லை இதுவரைக்கும்.

ஜெயகாந்தன் எழுத்துக்களில் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்ததே தவிர ஜெயகாந்தன் நடந்துகொள்வதையும் அவரது சில பேச்சுக்களையும் எழுத்துக்களையும் கடுமையாகவே விமரிசிப்பார். ஒருமுறை இவரது எழுத்துக்களை ஜெயகாந்தன் மிக மோசமாக விமரிசித்துவிட மிகக் காட்டமாக அவருக்கு இவர் தொடுத்த வினாக்கள் அந்த சமயத்தில் மிகுந்த விவாதத்துக்குள்ளானது. ‘எழுத்தில் சமுதாய ஆன்மிகப்பார்வை வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன். சும்மா அர்த்தமில்லாமல் இப்படி ஏதாவது வார்த்தைகளைப் போட்டுத் தப்பிக்க வேண்டாம். தெரியாமல்தான் கேட்கிறேன். அதென்ன சமுதாய ஆன்மிகப்பார்வை? முதலில் அந்த வார்த்தைக்கு ஜெயகாந்தன் அர்த்தம் சொல்லட்டும்’ என்று கோபப்பட்டார் ஸ்ரீவேணுகோபாலன்.

தமிழ் இலக்கிய அரங்கில் அவருக்கான இடம் எது என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் இத்தனை வருடங்களும் அவருக்கென்று ஒரு இடம் இருந்தது என்பதுதான் முக்கியம். அவருக்கென்று பரந்ததொரு வாசகப்பரப்பு இருந்தது. அவர் பெயரைப் போட்டாலேயே பத்திரிகைகள் விற்பனை ஆயின. அவரை மட்டும் நம்பியே மாத நாவல்கள் ஆரம்பிக்கப்பட்டன. புகழ் வெளிச்சம் அவர் மீது எவ்வளவு இருந்தபோதிலும் அடக்கமும் பணிவுமாக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார் என்பதுதான் இன்றைய நிலையில் முக்கியம். பல லட்சக்கணக்கான வாசகர்கள் ஒரு முப்பது நாற்பது வருடங்களாகச் சலிக்காமல் அவரைப் படித்து வந்தார்கள் என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல.

ஆயிற்று. அவருடன் எந்தவிதத் தொடர்புமற்று பல வருடங்கள் ஓடிவிட்டன. சில நாட்களுக்கு முன்பு தினமணி தீபாவளி மலரில் அவருடைய கட்டுரையைப் பார்த்ததும்தான் அந்த எண்ணம் வந்தது. இவரைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டனவே. அடுத்தமுறை சென்னை செல்லும்போது சென்று பார்த்துப் பேசிவிட்டு வரலாம் என்று நினைத்தேன். சில நாட்களுக்குள் இப்படியொரு அதிர்ச்சி செய்தி. ‘புஷ்பா தங்கதுரை மறைந்துவிட்டார்.’

அனேகமாய் புஷ்பா தங்கதுரை எழுதிய கடைசி எழுத்து விக்கிரமனைப் பற்றியதாக இருக்கலாம். அதில் விக்கிரமன் குறித்து இப்படி எழுதியிருக்கிறார்.

“இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்’ என்று வைணவரது வாழ்த்தொளியுடன் அவரை வாழ்த்துகிறேன்”

இந்த வாழ்த்துக்கள், எழுதிய புஷ்பா தங்கதுரைக்குக் கிடைக்காமல் போய்விட்டதுதான் உலகின் சோகங்களில் ஒன்று.

39 comments :

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'இட்லி வடை'யில் எனது பின்னூட்டம்:

//Post a Comment On: IdlyVadai - இட்லிவடை
"புஷ்பா தங்கதுரை - அஞ்சலி"
7 Comments - Show Original Post
Collapse comments
1 – 7 of 7 NIZAMUDEEN said...
'புஷ்பா' மாத இதழ் மற்றும் லிட்டில் புஷ்பா' சிறுவர் மாத இதழ் ஆசிரியர் புஷ்பா தங்கதுரை அவர்களுக்கு என் அஞ்சலி.//

http://www.blogger.com/comment.g?blogID=5996041&postID=1969776825237715564

பால கணேஷ் said...

பழகுவதற்கு எளிய, பந்தா சிறிதும் இல்லாத மனிதர் ஸ்ரீவேணுகோபாலன். தினமணி கதிரில் அவர் புஷ்பா தங்கதுரையாக அவதாரமெடுத்ததுக் கலக்கியதும், பின் மாதநாவல்களின் பொற்காலத்தில் எழுதிக் குவித்ததும் தெரியும் எனக்கு என்றாலும் இவ்வளவு விரிவாகத் தெரியாது. அவர் இல்லாத பெரும் இழப்புதான்! (இந்தப் பதிவைப் படிக்கும்போதே பத்திரிகையுலகிற்கு சுறுசுறுப்பு இன்ஜெக்ஷன் போட சாவி ஸார் மாதிரி இன்னொரு பத்திரிகையாசிரியர் கிடைக்க மாட்டாரா என்று ஏக்கமும் கூடவே எழுகிறது)

கரந்தை ஜெயக்குமார் said...

சிறு வயதில் புஷ்பா தங்கதுரை அவர்களின் கதைகளை விரும்பிப் படித்திருக்கின்றேன். வேணுகோபால் என்ற பெயரில் சரித்திர கதைகளை எழுதுவதும் இவர்தான் என்பதை பல ஆண்டுகள் கடந்தே அறிந்தேன்.
ஆசிரியர் புஷ்பா தங்கதுரை அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Amudhavan said...

வாங்க நிஜாமுதின், புஷ்பா தங்கதுரை ஊதாப்பூ என்ற பெயரில் இதழொன்றுக்கு ஆசிரியராக இருந்தது தெரியும். புஷ்பா என்ற பெயரிலும் லிட்டில் புஷ்பா என்ற பெயரிலும் அவர் ஆசிரியராக இருந்து இதழ் நடத்தினாரா என்பது தெரியவில்லை.
தங்கள் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான் பாலகணேஷ், கொஞ்சம்கூட தலைக்கனமோ கர்வமோ இல்லாமல்தான் பழகுவார் அவர். எப்போதும் சிரித்த முகம்.
சாவிசார் பற்றிய உங்களின் ஏக்கமும் நூற்றுக்கு நூறு சரியே. இதுபற்றி அவரிடமே சொல்லியிருக்கிறேன்.'எழுத்தாளர்களுக்கு உங்களைப் போல் ஊக்கமும் உற்சாகமும் தந்த, தந்துவரும் பத்திரிகை ஆசிரியர் யாருமே இல்லை' என்று.
'அது அவங்களுக்கு மட்டுமா எனக்கும் கூடத்தானே பயனளிக்கிறது' என்று பெருந்தன்மையுடன் சொல்லிச் சிரிப்பார் அந்தப் பெருந்தகை.

Amudhavan said...

கரந்தை ஜெயகுமார், இன்றைய தினமணிக் கதிரில் தினமணி ஆசிரியர் திரு கே. வைத்தியநாதன் புஷ்பா தங்கதுரை மறைவு பற்றி ஏறக்குறைய நான்கு பக்க அளவுக்கு அற்புதமானதொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முடிந்தால் படித்துப் பாருங்கள். அதில் இன்னமும் நிறையத் தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

வவ்வால் said...

அமுதவன் சார்,

புஷ்பாதங்கதுரை (எ) ஶ்ரீவேணுகோபாலன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

//அனேகமாய் புஷ்பா தங்கதுரை எழுதிய கடைசி எழுத்து விக்கிரமனைப் பற்றியதாக இருக்கலாம். அதில் விக்கிரமன் குறித்து இப்படி எழுதியிருக்கிறார்.
//
கொஞ்ச நாள் முன்னர் அவருக்கு உடல்நலகுறைவு என பத்திரிக்கையில் செய்தி வந்தது, ரொம்ப நாளாகவே எழுதுவதையும் நிறுத்திவிட்டிருந்தார்.

# சுஜாதாவிற்கு இணையான எழுத்தாற்றல் உள்ளவர் ஆனால் நம்ம தமிழ்சமூகம் ஏனோ "கொஞ்சம் இறக்கீ வச்சே"பார்த்தது,அந்த ஆதங்கம் கண்டிப்பாக அவருக்கு இருந்திருக்கும்,அதனால் அப்படி சொல்லி இருக்கலாம்.

சிங்க் & லிங்க் கேரக்டர்கள் எல்லாம் மறக்க கூடியதே அல்ல, வழக்கமான காவல்துறை அதிகாரிகள் போல காட்டாமல் எழுதி இருப்பார்.

ஊதாப்பு கண்சிமிட்டுக்கிறது கதை எல்லாம் படித்துள்ளேன், ஊதாப்பூஎன்ற பெயரில் ஒரு மாத இதழ் கூட வந்தது,அதில் பெரும்பாலும் புஷ்பாதங்கதுரை கதைகள் மட்டுமே வரும்.வாசிக்கும் போது கிக் தரக்கூடியவை :-))

வேட்டையாடு விளையாடு படத்தின் "நாயகர்" பாத்திரம் "சிங்க்" பாத்திரத்தையே எனக்கு நினைவூட்டும். மேலும் அக்கதை போல ஒரு கதையும் எழுதியுள்ளார், பெயர் தான் மறந்துவிட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிற்றூர் ரயில் நிலையத்தில் மாட்டிக்கொண்ட ரயில் & பயணிகளை வைத்து ஒரு கதை அவரது வழக்கமான "செக்சி ரைட்டிங்" நடையில் இல்லாமல் துன்பியல் இலக்கியமாக எழுதி இருப்பார், ஒரு மட்டியா தன்மையுள்ள கதாபாத்திரம் தான் ஹீரோ, கடைசியில் தானே ரயிலை ஓட்டி அனைவரையும் காப்பாத்தும், எல்லாம் பாதுகாப்பா தப்பியவுடன் ,ஹீரோவை மறந்துவிட்டு கிளம்பிடுவார்கள் என அவல நகைச்சுவையுடன் முடித்திருப்பார்,அது போன்ற கதைகள் எழுதும் போது மட்டும் ஶ்ரீவேணுகோபாலனாக மாறிவிடுவார்!

#சிறப்பான நினைவேந்தலை வழங்கியுள்ளீர்கள்!

ஜோதிஜி said...

என்னுடைய எழுத்து வாசிப்பின் தொடக்கம் தமிழ்வாணன். அது அப்படியே படிப்படியாக நகர்ந்து கொண்டே வந்தது. புஷ்பா தங்கதுரை வந்த போது நிச்சயமாக அதில் உள்ள ஜெ. படமும் அதில் உள்ள கவர்ச்சிக்காக ஒளித்து வைத்து படித்த காலங்கள் இப்போது உங்கள் எழுத்தை வாசிக்க ஒவ்வொன்றாக நினைவில் வந்து போகின்றது.

இப்போது வலைதளம் கணினி என்று ஆயிரத்தெட்டு வசதிகள் வந்து, அதுவும் ஃபேஸ்புக் மூலம் நான்கு வரிகள் எழுதி அதில் ஒரு செய்தி சொல்லி புகழ் போதை உச்சத்திற்கு ஏறி நடு ராத்திரி வரைக்கும் உட்கார்ந்து எத்தனை லைக் என்று பார்த்து உன்மத்தம் கிறங்கி தொடர்ந்து எழுதுவதை விட்டு ஏதோ கிறுக்கி..............

நானும் பிரபல்யம் என்று உளறி, அதையே நம்பி, வாழ்க்கையை கோட்டை விட்டுக் கொண்டிருப்பவர்களை............

ஆனால் புஷ்பா தங்கதுரை காலத்தில் உள்ள கடுமையான உழைப்பு, கிடைக்காத அங்கீகாரம், விடாத முயற்சி, கிடைக்காத வருமானம், இதையே சார்ந்து வாழ்ந்தவர்கள் பெற்ற அவமானம் என்று ..............


பலமுறை நான் எழுதும் போதும், என் எழுத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகார விமர்சன எழுத்துக்களை படிக்கும் போது
நினைத்துக் கொள்வதுண்டு.

நமக்கு உருவாகும் மகிழ்ச்சியை நினைத்துக் கொண்டு..............தமிழ் எழுத்துலகில் உண்மையிலேயே பாடுபட்ட உழைத்த ஒவ்வொரு பழைய எழுத்தாளர்களையும் நினைத்துக் கொள்வதுண்டு.

இன்று நினைத்தவுடன் கணினி திறந்து பத்து வரிகள் எழுதி பதிவு என்ற பெயரில் போட்டு விட்டு எத்தனை எளிதாக நகர்ந்து விடுகின்றோம்..

தினந்தோறும் ஏதோவொரு வகையில் பழைய எழுத்தாளர்களை நினைத்துக் கொள்வதுண்டு.

Amudhavan said...

வவ்வால் said...
\\வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிற்றூர் ரயில் நிலையத்தில் மாட்டிக்கொண்ட ரயில் & பயணிகளை வைத்து ஒரு கதை அவரது வழக்கமான "செக்சி ரைட்டிங்" நடையில் இல்லாமல் துன்பியல் இலக்கியமாக எழுதி இருப்பார், ஒரு மட்டியா தன்மையுள்ள கதாபாத்திரம் தான் ஹீரோ, கடைசியில் தானே ரயிலை ஓட்டி அனைவரையும் காப்பாத்தும், எல்லாம் பாதுகாப்பா தப்பியவுடன் ,ஹீரோவை மறந்துவிட்டு கிளம்பிடுவார்கள் என அவல நகைச்சுவையுடன் முடித்திருப்பார்,அது போன்ற கதைகள் எழுதும் போது மட்டும் ஶ்ரீவேணுகோபாலனாக மாறிவிடுவார்!\\
சரியாக நினைவுகூர்ந்திருக்கிறீர்கள் வவ்வால், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் அவர் எழுதிய பாத்திரங்கள் நினைவில் இருக்கிறமாதிரியே, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதிய கதைகளின் பாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சான்றுகள் அவருடைய எழுத்தின் சாதனையையே காட்டுகிறது.

Amudhavan said...


ஜோதிஜி திருப்பூர் said...
\\இப்போது வலைதளம் கணினி என்று ஆயிரத்தெட்டு வசதிகள் வந்து, அதுவும் ஃபேஸ்புக் மூலம் நான்கு வரிகள் எழுதி அதில் ஒரு செய்தி சொல்லி புகழ் போதை உச்சத்திற்கு ஏறி நடு ராத்திரி வரைக்கும் உட்கார்ந்து எத்தனை லைக் என்று பார்த்து உன்மத்தம் கிறங்கி தொடர்ந்து எழுதுவதை விட்டு ஏதோ கிறுக்கி..............\\
\\நமக்கு உருவாகும் மகிழ்ச்சியை நினைத்துக் கொண்டு..............தமிழ் எழுத்துலகில் உண்மையிலேயே பாடுபட்ட உழைத்த ஒவ்வொரு பழைய எழுத்தாளர்களையும் நினைத்துக் கொள்வதுண்டு.\\

\\நானும் பிரபல்யம் என்று உளறி, அதையே நம்பி, வாழ்க்கையை கோட்டை விட்டுக் கொண்டிருப்பவர்களை............\\
\\தினந்தோறும் ஏதோவொரு வகையில் பழைய எழுத்தாளர்களை நினைத்துக் கொள்வதுண்டு.\\

இணைய தளத்தில் நீங்கள் சொல்லுவது போன்ற நிலைமைகள்தாம் நிறையவும் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி தமிழ் இணையம் என்பது வேறு தளத்தில் பயணிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது. இணையத்திலும் தங்கள் பங்களிப்பைச் சரியான முறையில் செய்கிறவர்களும், கடும் உழைப்புக்கு நடுவே இணையத்தில் இயங்குபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல்.

நீங்கள், வவ்வால், காரிகன், ஜெயதேவ், கரந்தை ஜெயக்குமார் போன்றவர்கள்(இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். சட்டென்று நினைவுக்கு வந்த பெயர்களை மட்டுமே இங்கே குறித்திருக்கிறேன்) ஒவ்வொரு பதிவுக்கும் பின்னணியில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிரமத்தை யோசித்துப் பார்க்கும்போது மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தொடரட்டும் உங்களின் சிரமத்துக்கு இடையேயான பணிகள்.

அருணா செல்வம் said...

புஷ்பா தங்கதுரையின் பல க்ரைம் நாவல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இங்கே பிரான்சுக்கு வந்தப்பிறகு படிக்கும் சந்தர்ப்பம் வாய்ததில்லை.
அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது. அவரைப்பற்றித் தகவல்களைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

Amudhavan said...

தங்கள் வருகைக்கு நன்றி அருணா செல்வம். நிறைய எழுதுங்கள்.

காரிகன் said...

அமுதவன்,
புஷ்பா தங்கதுரை பற்றிய உங்களின் பதிவு பல பழைய ஞாபகங்களை ஏற்படுத்திவிட்டது. சுஜாதா மாயையில் இருந்தபோது புஷ்பா தங்கதுரையின் கதைகளை நான் படித்திருக்கிறேன். என் வீட்டிலோ அவர் கதைகளுக்கு தடா என்பதால் அவ்வளவாக படிப்பதில்லை. இருந்தும் அவருடைய துப்பறியும் சிங் ஒரு வித்யாசமான நபர். கணேஷ்,விவேக் போலில்லாமல் அவர் கொஞ்சம் மேற்கத்திய பாணியில் துப்பறிவது எனக்கு பிடித்த ஒன்று. மேலும் புஷ்பா தன் கதைகளில் வரும் வசனங்களை அடைப்புக்குறிக்குள் போடாமல் ஒரு ஹைபென் (​​ -​) போட்டு எழுதுவது எனக்கு வெகு புதுமையாக தெரிந்தது. வசனங்களும் பெரும்பாலும் செயற்கையாக இல்லாமல் முடிந்தவரை இயல்பாகவே இருக்கும். என்ன கொஞ்சம் மஞ்சள் வாசம் இருக்கும். சுஜாதா மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? ஒரே சமயத்தில் துப்பறியும் கதைகளும் ஆன்மீக கட்டுரைகளும் எழுதிய ஆளுமை கொண்டவர். உங்கள் பதிவு அவரை பெருமைப்படுத்துகிறது. நீங்களும் ஒரு பத்திரிகை தொடர்புடையவர் என்பதால் அவரைப் பற்றி உங்களால் எந்தவிதமான மேற்பூச்சும் இல்லாமல் நியாயமாக எழுத முடிந்திருக்கின்றது. பலர் மறந்துவிட்ட ஒரு எழுத்தாளரை நீங்கள் நினைவு வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. பதிவுக்கு நன்றி.

Amudhavan said...


காரிகன் said...
\\துப்பறியும் சிங் ஒரு வித்யாசமான நபர். கணேஷ்,விவேக் போலில்லாமல் அவர் கொஞ்சம் மேற்கத்திய பாணியில் துப்பறிவது எனக்கு பிடித்த ஒன்று.\\

காரிகன் தங்களின் கருத்திற்கு நன்றி. சுஜாதாவின் புகழ்பெற்ற துப்பறியும் பாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த். படித்து நீண்ட நாட்களாகிவிட்டதால் விவேக் என்று சொல்லிவிட்டீர்கள். வசந்த் என்ற பெயரின்மீதிருந்த காதலாலும், சுஜாதாவின் மீதிருந்த அபிமானத்தாலும்தான் அப்போது பத்திரிகைத் துறையில் இருந்தவரும் இன்றைய இயக்குநருமான நண்பர் வசந்த் தம்முடைய ஒரிஜினல் பெயரைவிட்டு வசந்த் என்று பெயர் வைத்துக்கொண்டார்.

அன்றைக்கு புஷ்பா தங்கதுரை ஹைபென் போட்டு எழுதியது எல்லாருக்குமே புதுமைதான்.
ஒரு கதையைப் பாராவே விடாமல் அப்படியே தொடர்ச்சியாக கூட்ஸ் வண்டிமாதிரி இடைவெளியே இல்லாமல் எழுதியிருப்பார்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,(இந்த அவர்களே வை விட்டு விட்டு அமுதவன் என்றே அழைக்க தோன்றுகிறது. ஆனால் அது சற்று மரியாதை குறைவாக இருக்குமோ என சந்தேகிக்கிறேன்.)
80 களில் தமிழ் நாட்டில் இருந்தவர்களுக்கு கணேஷ் வசந்த் தெரியாமல் இருக்க முடியாது. கணேஷை மறந்தாலும் வசந்தை எப்படி விட முடியும்? எனக்கும் அந்தப் பெயரின் மீது ஒரு காலத்தில் ஒருவித மையல் இருந்தது.அதிலும் வசந்தை வஸந்த் என்று எழுதுவதையே அதிகம் விரும்புவேன். நான் விவேக் என்று சொன்னது ராஜேஷ் குமாரின் கதா நாயகனை. அப்பறம் பரத் என்று பட்டுக்கோட்டை பிரபாகர் ஒருவரை கொண்டுவந்தார். கிருஷ்ணா டா வின்சி என்பவர் சுஜாதாவின் க்ளோனிங் போலவே எழுதுவார். அவர் கூட ஆத்மா அல்லது ஆதித்யா என்று ஒரு கதாநாயகனை உருவாக்கி இருந்தார். சுபா நரேன் என்று ஒருத்தரை அறிமுகப்படுத்தினார். இதற்கெல்லாம் முன்னோடியாக சங்கர்லாலைப் படைத்த தமிழ்வாணனை நாம் பாராட்டியே ஆகவேண்டும். (80 கள் முழுவதும் மர்மக் கதைகள் படித்தே வளர்ந்த ஒரு தலைமுறையை சேர்ந்தவன் என்பதால் இதனை சொல்கிறேன்.) உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ எழுதுவதாக எனக்குப் படுகிறது. மன்னிக்கவும்.

Amudhavan said...

காரிகன், தேவனின் துப்பறியும் சாம்புவை மறந்துவிட்டீர்களே......என்னுடைய, பத்திரிகை படிக்கும் பழக்கமும் தமிழ்வாணன் காலத்திலிருந்துதான் தொடங்குகிறது என்றாலும் தேவன் என்ன எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும், அவருடைய சாதனைகளை அறிந்துகொள்வதற்காகவும் அங்கிருந்தே ஆரம்பித்தேன். அதற்கும் முன்னால் வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதியிருப்பதாகச் சொல்வார்கள். படித்துப் பார்க்கலாம் என்று ஆரம்பித்து விட்டுவிட்டேன்.
தமிழ்வாணன் சாதனைகள் சாதாரணமானதல்ல. எல்லாத்துறையிலும் வெற்றிகரமாக வலம் வந்தவர் அவர். சங்கர்லால், கத்திரிக்காய் பாத்திரங்களை எல்லாம் தமிழர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது. அப்புறம் அவரையே கதாநாயகனாக வைத்துத் தமிழ்வாணன் துப்பறியும்..... என்றும் எழுதினார் என்று நினைக்கிறேன். துப்பறியும் கதை எழுதுகிறவர்களும் அவரையெல்லாம் படிக்காமலும் பேனாவைத் தொட்டுவிட முடியாது.
பட்டுக்கோட்டை, சுபா போன்றவர்களெல்லாம் என்னுடைய நல்ல நண்பர்கள் என்றபோதிலும் அவர்களுடைய 'துப்பறியும் கதைகளை' நான் படித்தது கிடையாது.
அதுசரி.....இப்படி ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் அங்கேயே நின்றுகொண்டு 'பிடித்தவர்களை மட்டுமே' பாராட்டிக்கொண்டிருக்காமல் அங்கிருந்து நூல்பிடித்தாற்போல் முன்னால் சென்று அவர்களுக்கு முன்னால் சாதித்தவர்களையும் சொல்கிறோமே. இந்தக் 'குணம் இருக்கலாகாது' என்பதற்காகத் தானே நம் இருவரையும் இணையத்தில் ஒரு பெரிய குரூப்பே திட்டிக்கொண்டிருக்கிறது....

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
உண்மையில் துப்பறியும் சாம்புவை மறந்தேவிட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி. சாம்பு கூட டின்டின் கதையில் வரும் தாம்சன் அண்ட் தாம்ப்சன் கதைமாந்தர்களின் தழுவல் என்றே நினைக்கிறேன். அவர்களும் கேனத்தனமாக எதையாவது செய்துவிட்டு கடைசியில் ஒரு புதிரை விடுவிப்பார்கள். தமிழ்வாணன் சங்கர்லாளுக்குப் பிறகு தன்னையே ஒரு மிகப் பெரிய துப்பறிவாளராகக் கொண்டு நிறைய கதைகள் எழுதினார். அதில் சங்கர்லாலும் சில சமயங்களில் வந்து தமிழ்வாணனுக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார். தான் படைத்த கதாபாத்திரத்திற்க்கு முன்னே தமிழ்வானனே ரொம்பவும் பவ்யமாக காட்சியளிக்கும் வர்ணனைகளும் அந்த உரையாடலும் மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஜேம்ஸ் பாண்ட் பாணியில் தமிழ்வாணன் கதையை நகர்த்திக்கொண்டு போவார். ஒரு வித மனநிலை வேண்டும் அவர் கதைகளைப் படிப்பதற்கு.ஆபாசம் இல்லாமல் நன்றாகவே இருக்கும்.

."இப்படி ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் அங்கேயே நின்றுகொண்டு 'பிடித்தவர்களை மட்டுமே' பாராட்டிக்கொண்டிருக்காமல் அங்கிருந்து நூல்பிடித்தாற்போல் முன்னால் சென்று அவர்களுக்கு முன்னால் சாதித்தவர்களையும் சொல்கிறோமே. இந்தக் 'குணம் இருக்கலாகாது' என்பதற்காகத் தானே நம் இருவரையும் இணையத்தில் ஒரு பெரிய குரூப்பே திட்டிக்கொண்டிருக்கிறது...."

அவர்களின் பாரம்பரியம் அப்படி. சரித்திரம் படைத்தவர்களை பற்றிப் பேசினால் ஏகத்துக்கு சூடு ஏறுகிறது சிலருக்கு. பரிதாபம்தான். மாயையை விட்டு அவர்கள் விலகினாலும் மந்தையை விட்டு விலகமாட்டார்கள் என்று தோன்றுகிறது.

அப்பாதுரை said...

புஷ்பா தங்கதுரை கதைகளைப் படித்தில்லை. ஊதாப்பூ படம் பார்த்திருக்கிறேன், ஆனால் அறுவையான படமென்றே நினைத்தேன்.
உங்கள் கட்டுரை புஷ்பா தங்கதுரை எழுத்தைப் படிக்கச் சொல்கிறது. உணர்விலிருந்து வந்த அஞ்சலி.. படிக்கப் படிக்கப் புரிந்தது.

தேன் நிலா said...

புஷ்பா தங்கதுரை அவர்களின் எழுத்துக்களை வாசித்தனுபவத்தில் கூறுகிறேன்... என்றுமே அவருடைய படைப்புக்கள் வாழ்ந்துகொண்டே இருக்கும்...


+++++++++++++

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

aavee said...

அருமை..
உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.. வாழ்த்துகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புஷ்பா தங்கதுரை பற்றி இவ்வளவு விஷயங்களா? அருமையான கட்டுரை . ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். சுஜாதா அளவுக்கு அங்கீகாரம் கிடைக்காதது துரதிர்ஷ்டமே. ஆனாலும் நிறையப் பேர் ஸ்ரீ வேணுகோபலனைத் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
நன்றி அமுதவன் சார்

துரை செல்வராஜூ said...

வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன்!..

1980 களில் புஷ்பா தங்கதுரை அவர்களின் படைப்புகளில் லயிப்பதே சந்தோஷமாக இருக்கும். அவருடைய தனித்துவமான நடை மறக்க இயலாதது.

அவரைப் பற்றிய தகவல்களை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி ..

Amudhavan said...

நன்றி அப்பாதுரை.

Amudhavan said...

வாங்க சுப்புடு, நன்றி.

Amudhavan said...

நன்றி கோவை ஆவி, இப்போதுதான் வலைச்சரம் பார்த்தேன். மூன்று நாட்களாய் பிஎஸ்என்எல்லின் புண்ணியத்தில் இன்டர்நெட் இல்லை. இப்போதுதான் சரியானது. பாலகணேஷுக்கும் நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.

Amudhavan said...

வாங்க முரளிதரன், அவருடைய நீ-நான்-நிலா எழுபதுகளின் ஆரம்பத்தில் பிரமாதமாய் வசீகரித்த ஒன்று. திருவரங்கன் உலா அவரது உழைப்பிற்கும் திறமைக்கும் சான்று.

Amudhavan said...

துரை செல்வராஜூ said...

வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன்!..

\\1980 களில் புஷ்பா தங்கதுரை அவர்களின் படைப்புகளில் லயிப்பதே சந்தோஷமாக இருக்கும். அவருடைய தனித்துவமான நடை மறக்க இயலாதது.\\

வாங்க துரை, 80-களில் புஷ்பா தங்கதுரையின் படைப்புக்களில் லயிப்பதே சந்தோஷமான அனுபவம் என்ற உங்களின் கருத்துதான் பலருடையதும். தங்களின் வருகைக்கு நன்றி.

Ranjani Narayanan said...

ஸ்ரீவேணுகோபாலன் தான் புஷ்பா தங்கதுரை என்று அறிந்து எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி. மென்மையான காதலை சொல்லும் அவரால் எப்படி இந்த மாதிரி எழுத முடியும் என்ற வியப்பாக இருக்கும். எங்கள் வீட்டில் பு. த. கதை படிக்க தடை. உங்கள் அஞ்சலி பல பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. அந்தக் காலத்திற்குப் போய் வந்தேன்.

திருவரங்கன் உலாவின் தொடர்ச்சி மதுரா விஜயமும் நன்றாக இருக்கும்.

மிகச் சிறந்த மலரும் நினைவுகளுக்கு நன்றி, அமுதவன் ஸார்.

Amudhavan said...

தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி ரஞ்சனி நாராயணன், நீங்கள் மட்டுமல்ல, நிறையப்பேருக்கு- அதிலும் குறிப்பாக பல எழுத்தாளர்களுக்கு, புஷ்பா தங்கதுரைதான் ஸ்ரீவேணுகோபாலன் என்பதை அறிந்து அன்றைக்கு வியப்புதான்.
நீங்கள் ஒருவர்தான் திருவரங்கன் உலாவின் தொடர்ச்சியான மதுரா விஜயம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் குறிப்பிட மறந்துபோன விஷயம் அது. அதற்காகவும் உங்களுக்கு நன்றி.

பால கணேஷ் said...

அமுதவன் ஸார்... ரஞ்சனிம்மா சொல்லியிருக்கற மாதிரி திருவரங்கன் உலாவும் மதுராவிஜயமும் என்றும் மறக்க இயலாத படைப்புகள். ஆனால் எனக்கு அவற்றையெல்லாம் விட அதிகமாக ‘மோகவல்லி தூது’ பிடிக்கும். காதலையும் வீரத்தையும் அவர் எழுத்தில் படிக்கும்போது இப்போதும் உணர்ச்சிப் பிழம்பாகித்தான் விடுகிறேன்!
http://minnalvarigal.blogspot.com/2012/03/5.html

Amudhavan said...

நினைவு படுத்தியதற்கு நன்றி பாலகணேஷ். உங்கள் தளத்திற்கு வந்து நீங்கள் செய்திருக்கும் கதைச்சுருக்கத்தையும் படித்துவிட்டேன். எண்ணத்திலும் எழுத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தால்தான் இத்தனை நேர்த்தியான கதைச்சுருக்கம் செய்ய வரும்.
வெவ்வேறு பெயர்களில் எழுதும்போது அதிகபட்ச வித்தியாசம் காட்டி மிகப்பிரமாதமாக எழுதிய எழுத்துக்களுக்கு சொந்தக் காரராக ராகி.ரங்கராஜனையும் குறிப்பிடலாம்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

பதிவின் சரம் முடிஞ்சிடுச்சுனு நினைச்சேன் ,ஆனால் இன்னும் ஒடிக்கிட்டு இருக்கு போல!

நீங்களும் ,காரிகனும் சேர்ந்து ,பழைய கதையெல்லாம் கிளற ஆரம்பிச்சிட்டிங்க போல இருக்கே!

சங்கர்லாலுக்குலாம் முன்னாடி, தேவனின் சாம்புக்குலாம் முன்னாடி, வடுவூர் துரைசாமியங்காரின் "திகரம்பரசாமியார் துப்பறிகிறார்" கதைகள் இருக்கு :-))

அதுக்கு முன்னாடி யாருனு தெரியலை, தேடிப்பார்க்கனும்.

திகம்பரசாமியார் துப்பறியும் "மாயவிநோத மோகினி" நாவல் கூகுளாண்டவரின் புண்ணியத்தால் சமிபத்தில் (6 மாதம் முன்னர்) படிச்சேன் அவ்வ்!

கணேஷ் - வசந்த் , உருவாக்கமே எனக்கு என்னமொ ஆர்தர் கானன் டாயிலின் , ஷெர்லாக் ஹோம்ஸ்- டாக்டர் வாட்சன் அடிப்படையில் தான்னு தோனும்.

என்னுடைய கணிப்புப்படி, இந்திய ,தமிழக சூழலில் தனியார் துப்பறியும் நிபுணர்கள் "கதையெல்லாம் வேகாது" என முறைப்படி காவல் துறை நுண்புலன் பிரிவை சேர்ந்தவர்களையே துப்பறியும் நாயகர்களாக பயன்படுத்திக்கொண்டு லாஜிக்கை காப்பாற்றியவர் புஷ்பா தங்கதுரை தான் என்பேன்.

காரிகன் said...

வவ்வால்,
நீங்கள் சொல்வது மிக சரி. கணேஷ் வசந்த் போன்ற வகையறாக்கள் நம் தமிழுக்கு ஏற்புடையவர்கள் அல்ல. ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர் என்கிற ஆங்கில எழுத்தாளரின் பெர்ரி மேசன் (ஒரு லாயர்) அவரின் செகரட்டரி டெல்லா ஸ்ட்ரீட் என்ற கதாபாத்திரங்களை கணேஷ் வசந்த் என்று சுஜாதா காப்பி செய்தார். ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர் பற்றி எனது தந்தை சொல்வதுண்டு. கல்லூரிப் பருவத்தில் அவருடைய கதைகளை படிக்கக் கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. . அன்றே சுஜாதா மோகம் என்னை விட்டு அகன்றது.

Umesh Srinivasan said...

மாலைமதி,ராணிமுத்து போன்ற மாத நாவல்கள் சக்கை போடு போட்ட நாட்களில் புஷ்பா தங்கதுரையின் நாவல்களை, ஜெ.....யின் ஓவியங்களுடன் கிறங்கிப்படித்த (இவர் ஒரு பெண்ணென்று பல நாள் எண்ணியிருந்தேன்) ஞாபகங்கள் மறக்க முடியாதவை. அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

த. சீனிவாசன் said...

அன்புடையீர்,

தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில், பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான
ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான
Desktop,ebook readers like kindle, nook, mobiles, tablets with android,
iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள் support செய்யும் ebub, mobi, pdf போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள் அமையும்.

இதற்காக நாங்கள் [http://amudhavan.blogspot.com] உங்களது
வலைதளத்திலிருந்து பதிவுகளை
பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.

எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை
மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின்
பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை
"Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும்
உறுதியையும் அளிக்கிறோம்.

http://creativecommons.org/choose
இங்கே சென்று, தேவையான உரிமத்தை தெரிவு செய்க.


கீழ் காணும் பதிவில் உள்ளது போல ஒரு பதிவையும், widget or footer ஐயும்
சேர்த்து விட்டு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/


நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

e-mail : freetamilebooksteam@gmail.com
9841795468

எங்களைப் பற்றி : http://freetamilebooks.com/about-the-project/

Google Group : https://groups.google.com/forum/#!forum/freetamilebooks

FB : https://www.facebook.com/FreeTamilEbooks

G +: https://plus.google.com/communities/108817760492177970948

நன்றி.

ஸ்ரீனி

தி.தமிழ் இளங்கோ said...

தேவியர் இல்லம் மூலம் இங்கு வந்தேன். இன்றுதான் இந்த கட்டுரையைப் படித்தேன் அந்தக் கால வார இதழ்களை நினைவுபடுத்தியது உங்கள் கட்டுரை. புஷ்பா தங்கதுரை என்றாலே எனக்கு சாவி பத்திரிகையும், ஸ்ரீ வேணுகோபாலன் என்றால் ஆனந்த விகடனும் ஞாபகம் வருகிறது. இரண்டு பெயர்களிலும் எழுதுவது ஒருவரே என்று அப்போது நிறையபேருக்கு தெரியாது. அப்புறம்தான் தெரிந்தது.

இப்போது இருக்கும், வாசிப்பு பழக்கம் இல்லாத இளைய தலைமுறையினருக்கு இவரைத் தெரிய வாய்ப்பில்லை. புஷ்பா தங்கதுரைக்கு ஒரு நல்ல நினைவஞ்சலி செய்தீர்கள். நிறைய தகவல்கள். நன்றி!

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தங்களைப் போன்றவர்களின் பதிவுகளில் இளையதலைமுறை அவ்வளவாக சம்பந்தப்படாத - ஆனால் அவர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய பல விஷயங்களையும் அவ்வப்போது எழுதி வருகிறீர்கள். என்னுடைய சில முயற்சிகளும் அதனைச் சார்ந்தவைதாம். ஸ்ரீவேணுகோபாலனின் பல சிறுகதைகள் அபாரமானவை. அவை நூல் வடிவம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை.

தி.தமிழ் இளங்கோ said...

வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Ranjani Narayanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அமுதவன் ஸார்!

Post a Comment