நான் எழுதி விகடன் பிரசுரம்
வெளியிட்டுள்ள சுஜாதாவைப் பற்றிய நூலான ‘என்றென்றும் சுஜாதா’ நூலுக்கு வந்திருக்கும்
மூன்று விமரிசனங்கள் இவை.
முதலில் புகழ்பெற்ற ஆங்கில
தினசரியான THE HINDU வில் வந்த விமரிசனம் இது.
இதனை இப்படி மொழிபெயர்க்கலாம்
என்று நினைக்கிறேன்.
‘சாதனையாளரான சுஜாதா மீது
தீவிர பற்றுகொண்ட வாசகர்களுக்கு சுஜாதாவின் படைப்புக்கள்
மட்டுமல்லாது அவரைப் பற்றிய
படைப்புக்களைப் படிப்பதிலும் தீவிர வேட்கை இருக்கும்.
அப்படிப்பட்ட வாசகர்களுக்கு இந்த
நூல் ஒரு விருந்து.
அமுதவனுடைய பேனாவின் மூலம்
அவரைப் பற்றிய படிமங்கள் அடுக்கடுக்காக வருகின்றன. சுஜாதாவுடன் நெருங்கிப் பழகும் அதிர்ஷ்டம்
பெற்ற ஒரு சிலரில் இந்த நூலின் ஆசிரியரும் ஒருவர். சுஜாதாவை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுபவர்களில்
ஒருவராக இருக்கும் இந்த நூலாசிரியர் தம்மை முன்னிருத்திச் சொல்லிவந்தாலும் எந்தவகையிலும் அது துருத்திக்கொண்டு நிற்பதாக இல்லை.
ம.செயின் (மணியம் செல்வனின்)
அட்டைப்படம் அசத்துகிறது.
****************** **************************** ******************
அடுத்து நடிகர் சிவகுமார்
அவர்களின் விமரிசனம்……………….
“மூன்று ஆண்டுகளாக மகாபாரதம்
படித்துக்கொண்டிருக்கிறேன். முழுதாகச் சமீபத்தில் ஒரே நாளில் படித்து முடித்த புத்தகம்
‘என்றென்றும் சுஜாதா’….
1970-களில் நட்புகொண்டு 20 ஆண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகி,
பாசாங்கு இல்லாத, தன் பலவீனங்கள்
மறைக்காத,
தற்பெருமை கிஞ்சித்தும்
பேசாத- ஒரு அறிவு ஜீவியை,
அனைவருடனும் சமமாகப் பழகும்
பண்பாளரை
– மீண்டும் உயிர்ப்பித்துக்
கொடுத்திருக்கிறது நண்பர் அமுதவனின் பேனா.
இந்தப் புத்தகத்தில் எந்த
வரிகளும் என் கண்ணில் படவில்லை. காட்சிகளாக அவை விரிகின்றன.
எழுத்து மூலமாகக் கூட ஒரு
மனிதரின் வாழ்க்கையைத் திரைப்படமாய்க் காட்டமுடியும் என்பதை நிரூபிக்கிறது இந்தப் புத்தகம்……………………..
ரத்தமும் சதையுமாக சுஜாதாவோடு
வாழ்ந்து பார்க்க உங்களுக்கு ஆசையா?
உடனே இந்தப் புத்தகத்தை
வாங்கிப் படியுங்கள்.
_ சிவகுமார்.
********************* **************** ************************
மூன்றாவதாக சித்த வைத்தியத்தின்
முன்னோடிகளில் ஒருவரும் இலக்கிய அறிஞருமான மூலிகை மணி டாக்டர் க. வேங்கடேசன் அவர்களின்
விமரிசனம்……..
அமுதவன் அவர்கள் எழுதியுள்ள ‘என்றென்றும் சுஜாதா’ நூலினைப் படித்தேன்.
நான் B.Sc படிக்கும்போது ஆங்கிலப்பாடத்தில் Bowell's Life of Johnson
என்ற கட்டுரையை நினைவுப்படுத்தியது போல் இந்நூல் அமைந்திருப்பதை
உணர்ந்தேன். ஆங்கிலப் பேரகராதியை தொகுத்தளித்த ஜான்சனின் வாழ்க்கையை
அருகிலிருந்து பார்த்துப் பரவசமடைந்த பாஸ்வெல் எனும் அவர் நண்பர் எழுதிய
ஜான்சனின் வாழ்க்கை வரலாறு அவ்வளவு சுவையானது. அகராதி எழுதிய அவ்வளவு பெரிய
மேதையை- ஒரு குழந்தையை போல் நம்முன் சித்தரித்துக்காண்பிப்பார் Boswell.
நவீன நாவல் உலகின் பிதாமகரான சுஜாதாவை பல ஆண்டுகள்
அருகிலிருந்து உரையாடி, Boswell-ஐ போல் அணுஅணுவாக ரசித்த அமுதவனின்
அனுபவங்களைச் சுருங்கச் சொல்லவேண்டுமானால், தில்லானா மோகனாம்பாள் படத்தில்
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ பாட்டில் வரும்.. ‘நவரசமும்..
மறைந்திருக்கும் முகத்தில்’ என்ற வரிக்கு நாட்டியப் பேரொளி பத்மினி, ஒரே
ஷாட்டில் வெளிப்படுத்தும் நவரச பாவங்களையும் அமுதவனின் ‘என்றென்னும்
சுஜாதா’ நூலில் உணரமுடிகிறது.
சுஜாதாவை பார்த்திராத அடுத்த தலைமுறையினர்க்கு இந்த நூல் அவரை ஒரு
குழந்தையாக, அறிவியல் அறிஞராக, நகைச்சுவை நண்பராக, எளிமையான மனிதராக,
பணத்திற்கு அடிமையாகாத நல்லவராக, இலக்கிய படைப்பாளியாக, சிறந்த விமர்சகராக,
கணினி வல்லுநராக, திரைப்பட க் கலைஞராக என்று பன்முகப் பண்பாளராக
வாழ்திருக்கின்றார் சுஜாதா’ என்பதை, இந்நூல் வழி அறிமுகப்படுத்துகிறார்
அமுதவன்.
சுஜாதாவின் முதலாண்டு நினைவு நாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்த
மத்திய அரசு ‘நினைவு அஞ்சல் தலை’ வெளியிட வேண்டும்” என்று வேண்டுகோள்
விடுத்திருந்தேன். எப்போது அது வரும் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய
முதலாண்டு நினைவு நாளில் ‘என்றென்றும் சுஜாதா’ என்ற மாபெரும் புகழஞ்சலியை
அமுதவன் அளித்துள்ளார்.
நன்றி அமுதவன் சார்!
என்றென்றும் மூலிகை மணத்துடன்,
விமரிசனம் எழுதிய THE
HINDU வைச் சேர்ந்த கீதா வெங்கட்ராமன் அவர்களுக்கும், திரு சிவகுமார் அவர்களுக்கும்,
மூலிகை மணி டாக்டர் வேங்கடேசன் அவர்களுக்கும் என் நன்றி.
விகடன் பிரசுர ஸ்டால்களில்
நூல் கிடைக்கும்
20 comments :
வாழ்த்துக்கள்! அமுதவன்!
ஒரு சகோதரன் வாழ்வில் வெற்றி பெறும்போது நம் மனது எவ்வளவு சந்தோசம் அடைகிறதோ, அதற்கு சிறிதும் குறைவில்ல்லாமல் இருக்கிறது இப்பொழுது--என் மனது!
வெற்றிகள் தொடர்கதையாக மேலும் வாழ்த்துக்கள்!
பதிவை மகுடம் ஏற்றுவதற்காக தமிழ்மணம் +1
நம்பள்கி said...
\\ஒரு சகோதரன் வாழ்வில் வெற்றி பெறும்போது நம் மனது எவ்வளவு சந்தோசம் அடைகிறதோ, அதற்கு சிறிதும் குறைவில்ல்லாமல் இருக்கிறது இப்பொழுது--என் மனது!
வெற்றிகள் தொடர்கதையாக மேலும் வாழ்த்துக்கள்! \\
வாருங்கள் டாக்டர், உங்கள் பதிவுகளில் நீங்கள் கொஞ்சம் 'அப்படி இப்படி' எழுதும்போது என்ன இது சமூகத்தில் இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் எழுதுகிறாரே என்று ஒரு எண்ணம் சட்டென்று தோன்றி மறையும். ஆனால், கள்ளங் கபடு இல்லாத ஒரு மனிதர் இவர் என்பதைத்தான் உங்களின் எழுத்தோட்டம் வெளிப்படுத்தும்.
இப்போது இத்தனை நல்ல மனதுடன் நீங்கள் பாராட்டியிருப்பது எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்வையும் நிறைவையும் தருகிறது. தங்களுக்கு என் நன்றி.
சுஜாதாவின் எழுத்தில் இருக்கும் வசீகரத்தையும் இளமையையும் உங்கள் எழுத்தில் காண முடிகிறது. நல்ல படைப்பு. சுஜாதா பற்றி பல அறிந்திராத தகவல்களை அறிந்தேன் உங்கள் புத்தகத்தின் மூலம். அவர் மீது எனக்கு முன்பு போல ஈர்ப்பு இல்லாவிட்டாலும் "ஏனென்றும் சுஜாதா" என்னை கவர்ந்தது. பாராட்டுக்கள்.
காரிகன் said...
\\ சுஜாதாவின் எழுத்தில் இருக்கும் வசீகரத்தையும் இளமையையும் உங்கள் எழுத்தில் காண முடிகிறது.\\
இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றபோதும் அன்பினால் சொல்லியிருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
தங்களின் என்றென்றும் சுஜாதா புத்தகத்தை ஏற்கெனவே படித்துவிட்டேன். இப்போது மூன்று விமரிசனங்களையும் பார்த்தேன். சிவகுமாரின் வார்த்தைகள் நறுக்குத் தெறித்தாற்போல் உள்ளன.
மூலிகைமணி டாக்டர் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம்' பாடலை உதாரணமாகச் சொல்லி விளக்கியிருக்கும் காட்சி ரசிக்கும் படி இருந்தது.
உங்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள்.
வாருங்கள் மதிசீலன், தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி. தங்களுக்கும் என்னுடைய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் ,இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
பாராட்டுக்கள்...
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
அமுதவன் சார்,
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
# இந்த முறை கண்டிப்பாக உங்க நூலை கைப்பற்றியே தீருவேன்,பொங்கல் முடிஞ்சதும் புத்தக சந்தையில் வேட்டை ஆரம்பம் :-))
# நூல் விமர்சனங்கள் நன்றாக வந்துள்ளன.
அருமையான விமர்சனங்கள் மூன்று. இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
The Hindu விமரிசனத்தின் மொழி பெயர்ப்பில் The cover portrait by ma.se is arresting என்பதற்கான மொழிபெயர்ப்பு 'ம.செ.வின் அட்டைப்படம் அசத்துகிறது' என்பதற்கு பதில் 'ம.செ.வின் அட்டைப்படம் வசப்படுத்துகிறது' என்பது சரியாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.
உங்களுடன் சுஜாதாவைச் சந்திக்க வந்திருந்தபோது அவர் சமீபத்தில் பார்த்துவந்த ஒரு ஆங்கிலப்படத்தைப் பற்றி அத்தனை விரிவாகவும் நுணுக்கமாகவும் சொல்லிக்கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது.
அ. பாண்டியன் , மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். வாலண்டியராக ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் சென்று வாழ்த்துக்கள் சொல்ல தனியொரு மனம் வேண்டும். அந்த விசால மனம் இருக்கும் இவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் கூட.
வவ்வால் said...
\\இந்த முறை கண்டிப்பாக உங்க நூலை கைப்பற்றியே தீருவேன்,பொங்கல் முடிஞ்சதும் புத்தக சந்தையில் வேட்டை ஆரம்பம்\\
வாங்க வவ்வால், சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடிந்து வந்துவிட்டீர்களா? புத்தகச்சந்தை உலா பற்றிய உங்கள் பதிவிற்காகவும் என்னுடைய புத்தகம் பற்றிய விமர்சனத்திற்காகவும் காத்திருக்கிறேன்.
Umesh Srinivasan said...
\\அருமையான விமர்சனங்கள் மூன்று\\
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உமேஷ்.
Mathiseelan said...
\\The Hindu விமரிசனத்தின் மொழி பெயர்ப்பில் The cover portrait by ma.se is arresting என்பதற்கான மொழிபெயர்ப்பு 'ம.செ.வின் அட்டைப்படம் அசத்துகிறது' என்பதற்கு பதில் 'ம.செ.வின் அட்டைப்படம் வசப்படுத்துகிறது' என்பது சரியாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.\\
உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான் மதிசீலன். ஆமாம் நீங்கள் பெங்களூர் வந்துவிட்டீர்களா அல்லது இன்னமும் பிசினஸ்டூரில்தான் இருக்கிறீர்களா?
நானும் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன், அது குறித்து பதிவிட வேண்டும், சூழ்நிலை காரணமாக தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது, விரைவில் எழுதிட அவா............!!
மேலும் தள்ளிப்போடாமல் எழுதிவிடுங்களேன். உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களும் விமரிசனங்களும்தாம் தேவையாக இருக்கின்றன.
விமர்சனம் செய்துள்ள இரு மனிதர்களுக்கும், பத்திரிக்கையும் முக்கியமானது. பெருமைபடக்கூடியதும் கூட. சமீபத்தில் நான் படித்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் என் எழுத்துப் பயணத்தின் தாக்கத்தை முழுமையாகவே மாற்றி விட்டது.
அப்போது வந்து கொண்டிருந்து ஜுனியர் போஸ்டில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அது. ஆனால் அதில் சொல்லியுள்ள ஒவ்வொரு டைரிக்குறிப்புகளும் இன்று படிக்க சுவராசியமாக உள்ளது என்பதை விட மாறிய சூழ்நிலையில் கூட ஒவ்வொன்றும் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு அழகாக ஆனந்தமாக உள்ளது என்பதே அவரின் எழுத்தின் மேல் ஏக்கம் வரவழைத்தது.
அவருடன் பழகிய நீங்களும் கொடுத்து வைத்தவர் தான். விகடன் பிரசுரம் பெரும்பாலும் தமிழ்நாட்டில் எல்லாஇடங்களில் கிடைக்கும். ஏற்கனவே நீங்க சொன்னவுடன் திருப்பூரில் உள்ள ஒரே புத்தக கடையில் கூட வந்து சேரவில்லை. இப்போது சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து வாங்கி வருகின்றேன் என்று சொல்லி உள்ளார்.
உங்கள் புத்தகமும் ரஞ்சனி நாராயணன் எழுதியுள்ள விவேகானந்தர் புத்தகமும் வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ளது.
வாழ்த்துகள்.
வாங்க ஜோதிஜி, எங்கே நீண்ட நாட்களாக இணையத்தில் காணோமே என்று பார்த்தேன். பொங்கல் விடுமுறையெல்லாம் கழிந்து வந்திருக்கிறீர்கள் போல. கற்றதும் பெற்றதும் முதலில் ஜூனியர்போஸ்டில் எழுத ஆரம்பித்துப் பின்னர் அதனை விகடனில் தொடர்ந்தார் என்று நினைக்கிறேன். கற்றதும் பெற்றதும் நூலில்கூட சிலவற்றையெல்லாம் எடிட் செய்துதான் வெளியிட்டிருக்கிறார்கள். மொத்த எழுத்துக்களும் வரவில்லை. சுஜாதாவின் சுவாரஸ்யங்களே சின்னச்சின்ன கிம்மிக்ஸ்கள்தாம். அவை விகடன் வெளியிட்டிருக்கும் நூல்களில் மிஸ்ஸிங்.
விகடன் நூல்கள் உடனடியாகக் கடைகளில் கிடைக்காமல் போனதற்கு சில நிர்வாகக் காரணங்கள் உண்டு. அவை இப்போது சரிசெய்யப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் குளறுபடிகள் நடைபெற்ற நேரத்தில் என்னுடைய புத்தகம் வந்துவிட்டதில் அந்தப் பாதிப்புக்கு இந்த நூலும் ஆளாகிவிட்டது.
புத்தகம் படித்து விமரிசனம் செய்யுங்கள் நன்றி.
Post a Comment