Monday, February 3, 2014

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் முடிவுகள் உணர்த்தும் பாடம்
                   
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் பேரபிமானம் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பவனிவருகிறது. அதன் முடிவுகள் எப்படித் தீர்மானிக்கப் படுகின்றன என்றும் பரிசுகள் எப்படி வழங்கப்படுகின்றன என்றும் நிறைய பாடபேதங்கள் வழங்கப்படுகின்றன. ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் முறையால் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்றும், அந்த லாபத்தில் எவ்வளவு சிறு பகுதியினை அவர்கள் பரிசுகளுக்காகச் செலவு செய்கிறார்கள் என்றும் நுணுகி ஆய்ந்து பல கட்டுரைகளும் பதிவுகளும் வந்திருக்கின்றன.

இன்றைய வியாபார யுகத்தில் எப்படியெல்லாம் மக்களிடமிருந்து பெரும்பணத்தை ஈர்த்து அதில் ஒரு சுண்டைக்காயளவு தொகையை மக்கள் பக்கமே வீசுவது என்ற நரகாசுர உத்திகள் எல்லாமே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டன. அதனால் ஏர்டெல்லோ ஏர்செல்லோ ஒரு அழைப்புக்கு எவ்வளவு பணம் பறிக்கிறார்கள், அதில் எவ்வளவு பணத்தை இதற்காகச் செலவழிக்கிறார்கள்?

பரிசுத் தொகையாக வீடு தரும் அந்த நிறுவனம் மக்களிடமிருந்து ஒரு அபார்ட்மெண்டுக்கு எவ்வளவு தொகையைப் பெறுகிறது?................ என்றெல்லாம் கணக்குப்போட்டு இந்த நிகழ்ச்சியைப் பேசுவது என்பது ஒரு வகை அரசியல்.

அதற்குள் நாம் போகவில்லை.

ஏனெனில் இதுபோன்ற செலவுகள் எதுவும் செய்யாமல் மொத்த லாபத்திலும் பங்குபோட்டு அதை மக்களுக்கே திருப்பித்தரும் விதமாக பணத்தைக் குறைத்துக்கொண்டு வீடு வழங்கும் திட்டத்தை எந்த ரியல் எஸ்டேட் நிறுவனமும் செய்யப்போவதில்லை.

அதுபோலவே நீங்கள் வேண்டிய மட்டும் பேசிக்கொள்ளுங்கள் நாங்கள் விளம்பரப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை மட்டும் பார்த்தால் போதும் மற்றபடி பேசுவதற்கான கட்டணத்தை நாங்கள் உங்களிடம் வசூலிக்கப்போவதில்லை என்று எந்தத் தொலைபேசி நிறுவனமும் சலுகைகளும் தரப்போவதில்லை.

அதனால் இதுபற்றிப் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை.

சூப்பர் சிங்கர் போன்ற  நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் நம்மிடமிருந்து பணத்திற்கான ஆட்டையைப் போடுகிறார்கள் என்பது தெரிந்தே அதுபோன்று செய்வினையாற்ற மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.கூடவே இந்த நிகழ்ச்சியின் முடிவுக்குத் தாங்களும் ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியுடனேயே அவர்கள் இதுபோன்ற போட்டிகளில் எல்லாம் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் மக்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது என்பதற்கான சான்றுகள் அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருந்தன. ‘கல்யாண ரிசப்ஷன் வச்சிருக்கீங்களா? அன்னைக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்குதேன்னு பார்த்தேன்’ என்று கூறிய பிரகஸ்பதிகளைப் பார்க்க முடிந்தது.

சேலத்தில் ஒரு பகுதியில் அந்த ஏரியா கேபிள் ஆப்பரேட்டர் எந்தக் காரணத்தினாலோ விஜய் டிவியை அந்தப் பகுதிக்கு வழங்காமல் போய்விட என்னுடைய நண்பரும் பேராசிரியருமான ஒருவர் அந்தக் கேபிள் டிவிக்காரரிடம் சண்டைப்போட்டு ‘நான் விஜய்டிவிக்கே கம்ப்ளெயிண்ட் செய்வேன்’ என்றெல்லாம் சொல்லி, அவர்கள் பகுதியில் விஜய்டிவியை மறுபடியும் கொண்டுவந்த சம்பவங்களெல்லாம் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்றன.

அந்த அளவுக்குப் பாப்புலர் ஷோக்களில் ஒன்றாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கலந்துகொண்டு ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பதின்மூன்று லட்சத்துச் சொச்சம் என்று அறிவித்தார்கள். ஓட்டளித்தவர்களே பதின்மூன்று லட்சத்துச் சொச்சம் என்றால் வீடுகளில் பார்வையாளர்களாக இருந்தவர்கள் எவ்வளவு என்பதை ஊகிக்க முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நான் பார்த்ததில்லை. ஒருநாளோ இரண்டு நாட்களோதான் பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சியின் காம்பியர்களான அந்த இளைஞரும், அந்தப் பெண்ணும் செய்த, மற்றும் பேசிய அலப்பறைகளைத் தாங்க முடியவில்லை. இறுதி நிகழ்ச்சியிலும் அந்த அலப்பறை கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் போட்டியாளர்களுக்காக கடைசிப் பாதி நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.

வெற்றிபெற்ற அந்தப் பையன் பாடிய அந்தப் பாடலிலிருந்து நிகழ்ச்சியைப் பார்க்க உட்கார்ந்தேன். பலே பாண்டியா படத்திலிருந்து ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று அந்த இளைஞன் ஆரம்பித்து பல்லவியை முடிப்பதற்குள்ளாகவே அவனுடைய வெற்றி தீர்மானமாகிவிட்டது என்றே தோன்றிற்று.

அத்தனை அருமையாக அற்புதமாக அசத்தலாகப் பாடினான் அந்த இளைஞன்.

பெயர் திவாகர் என்றார்கள்.

மொத்தக்கூட்டமும் வாயடைத்துப் போய் உட்காரும் வண்ணம் அத்தனைச் சிறப்பாக அந்தப் பாடலைப் பாடிமுடித்தபோது பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் எழுந்துநின்று கைத்தட்டினார்கள்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருமதி எஸ்.ஜானகி அவராகவே எழுந்து சென்று அந்த இளைஞனைக் கட்டிப்பிடித்து கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டு ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கியபோது மொத்தக்கூட்டமும் சிலிர்த்து அடங்கியது.

அந்தக் கணமே அந்தப்பையனின் வெற்றி தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் எல்லாருக்குமே தெரிந்துபோய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எப்போதுமே முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் அமைந்துவிடும்.

மக்களெல்லாம் ஒருவரை நியாயப்படி தேர்ந்தெடுத்து வைத்துக் காத்திருக்க, நீதிபதிகள் என்று உட்காரும் மகானுபாவர்கள் வேறு ஏதேதோ காரணம் சொல்லி வேறொருவரைத் தேர்வு செய்வார்கள்.

அல்லது அப்படித் தேர்வு செய்வதற்கான நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கும். பார்த்தவர்களும் ‘என்னமோ போ நமக்கென்ன வந்தது? அந்தப் பெண் - அல்லது ஆணுக்கு அதிர்ஷ்டமில்லை’ என்று போய்விடுவார்கள்.

ஆனால் இந்த நிகழ்வில் அப்படிச் சொல்வதற்கு இல்லை. நிச்சயம் அந்த இளைஞனுக்குத்தான் பரிசு வரவேண்டும் என்று டிவியில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமல்லாது அங்கே அந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்த பிரம்மாண்ட கூட்டமும் தீர்மானித்துவிட்டது.

தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே திவாகர், திவாகர் என்று சத்தமிடத் தொடங்கியிருந்தது கூட்டம்.

இந்த நிலையில் தீர்ப்பு மட்டும் வேறுமாதிரியாகப் போயிருக்குமானால் கூட்டத்தின் வெளிப்பாடு எப்படி இருந்திருக்கும் என்பதையும் சொல்வதற்கில்லை. கலவரம் கூட வெடித்திருக்கலாம். அத்தனை உணர்வுபூர்வமாக மொத்தக் கூட்டத்தையும் மாற்றியிருந்தது திவாகரின் பாடல்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பலேபாண்டியாவில் இடம்பெற்று இன்றுவரை பல லட்சக்கணக்கானவர்களின்  ஃபேவரிட் பாடலாக அமைந்திருக்கும் பாடல் அது. இந்தப் பாடல் சிவாஜி மற்றும் எம்.ஆர்.ராதாவின் அற்புதமான நடிப்பிலும் அதற்கேற்ற காட்சியமைப்பினாலும் புகழ்பெற்ற பாடல். இத்தனைக்கும் நகைச்சுவைதான் இந்தப் பாடலில் பிரதானம். இருந்தும் சிவாஜியும் எம்ஆர்.ராதாவும் சேர்ந்து தூள் கிளப்பியிருப்பார்கள். பாடல் துவங்கி முடியும்வரை இரண்டுபேருமே அட்டகாசப்படுத்தியிருப்பார்கள். இவர்களின் துவம்சம் ஒரு பக்கம் என்றால் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைகோர்ப்பும், கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் டிஎம்எஸ்ஸூம் மற்றவர்களும் அதனைப் பாடியிருக்கும் முறையும் எல்லாவற்றையும் தூக்கியடிக்கும் ஒன்றாக அமைந்துவிட்ட நேர்த்தி அது.

இந்தப் பாடல் பற்றி இரண்டு தகவல்கள் நினைவு வருகின்றன.

இந்தப் பாடல் தயாராகி சிவாஜியிடம் போட்டுக் காட்டப்பட்டபோது “என்னப்பா ஜதிகள், ஸ்வரங்கள் எல்லாம் அமர்க்களமா இருக்கே. உடனடியாய் இதைப் படமாக்கவேண்டாம். எனக்கு ஒரு இரண்டு நாட்கள் டைம் கொடுங்க. நான் மொத்தத்தையும் மனப்பாடம் பண்ணிடறேன். அப்படி மனப்பாடம் பண்ணி நடிச்சாதான் சரியா இருக்கும்” என்று சொல்லி ஜதி, ஸ்வரம் உட்பட மொத்தப் பாடலையும் மனப்பாடம் பண்ணிவிட்டுத்தான் நடிக்கவந்தாராம்.

இந்தச் செய்தி எம்ஆர் ராதாவுக்குப் போகிறது. “அண்ணே இப்படி சிவாஜி ஜதி, ஸ்வரங்கள்  எல்லாம் மனப்பாடம் செய்து நடிக்கப்போறாராம். நீங்கள் எப்படி ஈடு கொடுக்கப்போறீங்களோ பார்த்துக்கங்க” என்று சொன்னார்களாம்.

எத்தருக்கு எத்தரான எம்ஆர்.ராதா “அப்படியா சேதி? அவரு எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி நடிக்க வர்றாரா? அதுக்கு நான் ஈடு கொடுக்கணுமா? கொடுத்துட்டா போச்சு. எப்படி ஈடு கொடுக்கறேன்னு படப்பிடிப்பு சமயத்துல பார்த்துக்கோங்க” என்று தமக்கேயுரிய குரலிலும் பாணியிலும் பதில் சொன்னாராம்.

எல்லாரும் இவர் எப்படி சிவாஜிக்கு ஈடு கொடுக்கப்போகிறார் என்று பார்த்தவாறிருக்க கஷ்டமான வரிகளுக்கும், ஜதி ஸ்வரங்களுக்கும் எம்ஆர். ராதாவின் வாயசைப்பு எங்கெல்லாம் வரவேண்டுமோ அந்த இடத்திலெல்லாம் அவர் உணர்ச்சிவசப்பட்டுத் தலைகுனிந்து தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி கோமாளித்தனம் பண்ணுகிறமாதிரியான சேஷ்டையில் ஈடுபட்டு ஒரே அட்டகாசம் செய்ய படப்பிடிப்புக் குழுவினரும் சிவாஜியுமே ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

இப்படியாகப் பாடல் காட்சியும் அற்புதமாக அமைந்துவிட்டது என்று சொல்வார்கள்.

இந்தப் பாடல் பற்றிய வேறொரு நினைவும் உண்டு.

பெங்களூரில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கவியரசரைக் கூப்பிட்டிருந்தார்கள்.

ஏகப்பட்ட கூட்டம். இதோ வருகிறார், வந்துவிடுவார், வந்துவிட்டார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார்களே தவிர, நேரமாகிக் கொண்டே இருந்தது. அதுவரையிலும் ஏதோ ஒரு நாதஸ்வரக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்தது.  தில்லானா மோகனாம்பாள் படம் வெளியாகி நாதஸ்வரக் கச்சேரிகளுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்த நேரம் அது. கவிஞர் வரவில்லை என்ற காத்திருந்த கூட்டம் கொஞ்சம் பொறுமையில்லாமல்தான் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்தது.

இதோ கவிஞர் வந்துவிட்டார் என்ற தகவல் வந்தது.

உடனே வாசித்துக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு ‘நலம்தானா நலம்தானா’ பாடலை வாசிக்க ஆரம்பித்தார்கள். கவிஞரும் கைகுவித்தபடியே கூட்டத்திற்கு நடுவில் நடந்துவந்து எதிரில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அவர் உட்கார்ந்ததுதான் தாமதம். வாசித்துக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று நாதஸ்வரத்தில் துவங்கியதும் கூட்டத்தின் கைத்தட்டல் மண்டபத்தைப் பிளந்தது.

தம்மைப் புகழ்ந்து பாடினாலோ பேசினாலோ வழக்கமாய் எந்தவித முகபாவனையும் காட்டாத கண்ணதாசன் அன்றைக்கு அவராகவே சிரித்து நாதஸ்வரக் காரர்களைப் பார்த்து நன்றி என்று கையசைத்தது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற வரியையே சிவாஜியை மனதில் வைத்துத்தான் கவிஞர் எழுதினார் என்று சொல்வார்கள். சிவாஜி படங்களில் அவரை உயர்த்திப் பாடும் பாடல்களுக்கெல்லாம் பொதுவாக இடமிருப்பதில்லை. “அதெல்லாம் எதுக்கு? காரெக்டருக்கு ஏற்ப எழுதினாப் போதும்” என்று சிவாஜி சொல்லிவிடுவார் என்பார்கள். இன்றைக்கு முக்காலணா நடிகர்கள் எல்லாரும் தங்களுக்கென்று பஞ்ச் டயலாக் எழுதவைத்துப் பேசும் நிலைமையை நினைத்துப் பார்த்தோமானால்தான் அந்த மாபெரும் நடிகனின் இந்த மறுதலிப்பின் சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும்.

எம்ஜிஆரின் பாணி அதுவல்ல.

பாடல்களிலும் தனிப்பட்ட வசனங்களிலும் அவரைத் தனிப்பட்டுப் புகழ்கின்ற வரிகள் வேண்டும். அப்படி இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வது அவர் வழக்கம்.

சிவாஜி ரசிகர்களுக்கென்று அம்மாதிரியான வரிகளை சில இயக்குநர்கள் சிவாஜியின் விருப்பத்துக்கு மாறாகத்தான் படங்களில் அமைப்பார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. கவிஞரைப் பொறுத்தவரை அவரை இப்படி எழுது அப்படி எழுது என்றெல்லாம் நிர்ப்பந்தப் படுத்தி பாடல் எழுத வைக்கமுடியாது. ‘இந்தக் கதாநாயகரைப் புகழ்ந்து இப்படியெல்லாம் பாட்டு எழுதினால்தான் மறுபடி நம்மைக் கூப்பிடுவார்கள்’ என்ற நிலைமையும் கவிஞருக்குக் கிடையாது. அதனால் சிவாஜியைப் புகழும் இம்மாதிரியான ஒரு சில பாடல்கள் எல்லாம் மிக மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தாம் அன்றைக்கு இருந்தன.

அப்பிடிப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் இது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் சரி, பொதுவாக இந்த நிகழ்ச்சி முழுதுமே இடம்பெற்ற பாடல்களைப் பொறுத்தவரையிலும் சரி ஒரு முழுமையான இசை வட்டம் நிரம்பியிருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.

ஏனெனில் சமீபத்திய பத்திரிகை உலகிலும் சரி; குறிப்பாக இணைய உலகிலும் சரி தமிழ்த் திரை 
இசையை ஒரு குறிப்பிட்ட சின்னஞ்சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைத்துவிட முயற்சி செய்யும் ஒரு தவறான போக்கு பெருகிக்கொண்டு வருகிறது.

இசையை ஒரேயொரு மனிதருக்குள்ளே மட்டுமே பார்க்கிறார்கள்.

அவர் இசையமைத்தவை மட்டும்தான் பாடல்கள், அவருக்கு முன்பும் பாடல்கள் இல்லை, அவருக்குப் பின்பும் பாடல்கள் இல்லை என்றே மனதார நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையை அதீதமாய் வலியுறுத்துகிறார்கள். முரட்டுத்தனமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் மூலம் இத்தகைய கருத்துக்களை எப்படியாவது நிரந்தரமாக்கிவிடலாம் என்று நம்புகிறார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

இசை என்பதே ஒரு புண்ணிய உலகம். எத்தனையோ அறிஞர்களும் மேதைகளும் சேர்ந்து அதனை வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த முன்னோர்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம். அவர்களைப் போற்றி வணங்கிப் புகழ வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அவர்களைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், அல்லது அதுபற்றிய சிந்தனைகளே இல்லாமல், இதற்கு முன்னால் என்ன வந்திருக்கிறது என்பதைப் பார்க்காமல், நமக்கு எது பிடித்ததோ அதை மட்டுமே ரசித்தால் போதும், அதை மட்டுமே கொண்டாடினால் போதும் என்ற மனநிலை ஏற்புடையது அல்ல.

இந்த தனிப்பட்ட ரசிக மனப்பான்மை தவறானது அல்ல. ஆனால்-

ஒரு தனி மனித ரசிக மனப்பான்மைக்கு மட்டுமே உரியது இந்த ரசனை.

இந்த ரசனையை வைத்துக்கொண்டு மொத்த இசை உலகத்தையே கேவலப்படுத்துவதும், முன்னோர்கள் யாருமே இவருக்கு இணையானவர்கள் இல்லை என்று கூப்பாடு போடுவதும், இவர்தான் கடவுள், இவர்தான் இசையைப் படைத்தவர் என்று பிதற்றித் திரிவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

ஒரு காலத்தில் ‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’ என்று ஒரு கோஷம் இங்கே புகுத்தப்பட்டது. அத்தனை ஊடகங்களாலும் இந்த ஒற்றை வார்த்தை அத்தனை மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. அதனைத் திணிக்க ஊடகங்கள் மட்டுமின்றி தனிப்பட்ட மனிதர்களும் பணிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வலுவான அத்தனை அசுர சக்தியும் இதனை வலியுறுத்திற்று. என்ன ஆனது?

திடீரென்று ஒருநாள் அத்தனையும் அடித்து நொறுக்கப்பட்டன. எல்லாமே புஸ்வாணமாகப் போய்விட்டன.

வரலாறுகள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவதில்லை. மாற்றி அமைத்துவிடவும் முடியாது.

அவரவர்களும் அவரவர்களுக்குத் தேவையான புகழையும் பெருமையையும் பெற்றே தீருவர்.

சரி, இவர்களெல்லாம் அப்படிப் போற்றியும் புகழும் கொண்டாடும் அந்த இசையமைப்பாளர் போற்றுதலுக்கு உரியவர் இல்லையா?

அப்படியெல்லாம் அல்ல. அவரும் அவர் பங்கிற்கான சாதனைகளை நிறையவே செய்திருக்கிறார். அதற்குண்டான பெருமையை அவருக்குத் தாருங்கள். அதற்கான பணமும் புகழும் அவருக்குத் தேவைக்கு மீறியே வழங்கப்பட்டிருக்கின்றன. விஷயம் அது அல்ல. அவர் மட்டுமே இசையமைப்பாளர் அவரை மட்டுமே கொண்டாட வேண்டும் என்பதான செயல்பாடுகள்தாம் இதனையெல்லாம் எழுத வைக்கின்றன.

இசைக் கடல் மிகவும் பெரியது. அதனைச் சிறு சிமிழுக்குள் அடக்கி அதனையே தமிழ்கூறு நல்லுலகம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுப்பதை மட்டும்தான் வேண்டாம் என்கிறோம்.

நல்ல வேளையாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இம்மாதிரியான வலைகளுக்குள் மாட்டிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஜி.ராமனாதன் பாடல்களும் இங்கே பாடப்படுகின்றன, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களும் பாடப்படுகின்றன, எம்எஸ்வி பாடல்களும் போட்டிகளில் கலந்துகொள்கின்றன, கேவிமகாதேவனுக்கும் இங்கே இடமிருக்கின்றது, ஏம்எம் ராஜா பாடல்கள், இளையராஜா பாடல்கள், ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் என்று நன்றாகவே ஒரு சுற்று வலம்வருகிறார்கள். குட்டி ஏரியாவுக்குள் மாட்டிக்கொண்டு குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் அவஸ்தைகள் இங்கே இல்லை.

இந்த நிகழ்ச்சி இத்தனை லட்சக்கணக்கான மக்களைத் தன்பால் ஈர்த்து வைத்திருப்பதற்கான காரணம் இதுமட்டும்தான்.

இங்கே காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறுகின்றன,

மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பாடல்கள் இடம் பெறுகின்றன!

மக்கள் மனதில் நிலைத்திருக்கும் டி.ஆர்.மகாலிங்கம், டிஎம்எஸ். சீர்காழி. பிபிஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, எஸ்பிபி, எல்லாருமே இங்கே மதிக்கப்படுகிறார்கள்- நினைவுகூறப் படுகிறார்கள்.

மக்கள் தங்கள் பேரபிமானம் பெற்ற பாடல்கள்  பாடப்படும்பொழுது அந்தப் பாடலை முதன்முதலாகச் செவிமடுத்த அந்தக் காலத்திற்கே சிறிது நேரம் பயணப்பட்டுத் திரும்பி வருகிறார்கள். தங்கள் அபிமான சிவாஜியையும், எம்ஜிஆரையும், ஜெமினியையும், கமல், ரஜனியையும்-

அதுபோலவே வைஜயந்திமாலாவையும், பத்மினியையும், சாவித்திரியையும், சரோஜாதேவியையும், ஸ்ரீபிரியாவையும் ,ஸ்ரீதேவியையும் இன்றைய தமன்னாவையும், காஜலையும் நினைவில் கொண்டு வருகிறார்கள்.

கூடவே கண்ணதாசனையும் பட்டுக்கோட்டையாரையும், வாலியையும் வைரமுத்துவையும் நினைவுகூறுகிறவர்களும் உண்டு.

அதனால் இது ஒரு அற்புதமான மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அற்புதம்தான் இத்தனை லட்சம் பேரை அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியான ரசிகர்களாய் உருமாற்றியிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த அந்தப் பாடல் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலை வெற்றிபெற்ற திவாகர் இரண்டுபேருக்கான குரல்களுடனும் ஜதி மற்றும் ஸ்வரங்களுடனும் பாடுகிறார். செம்மையாகப் பாடுகிறார். அந்தப் பாடலுக்கு விழுந்த வாக்குகள் மட்டும் ஏழு லட்சத்துச் சொச்சம். மீதிப் பாடல்களுக்கு மிச்ச ஐந்து லட்சத்துச் சொச்சம் வாக்குகள் விழுகின்றன. ஆக பதின்மூன்று லட்சத்துச் சொச்சம் வாக்களித்த மக்களுக்கும் சரி, அவர்களின் குடும்பங்களுக்கும் சரி திரையிசைப் பாடல்கள் மீது எந்தவிதமான குறுகிய அப்ளிகேஷன்களோ பெயிண்டிங்குகளோ இல்லை. நல்ல பாடலா ரசிப்போம் என்ற மனப்பான்மை மட்டும்தான் அவர்களுக்கு.

இப்படியொரு நிலைமையை சரியான சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தித்தரும் விஜய்டிவிக்கு நமது பாராட்டுக்கள்.


ஒரு நல்ல பாடலை அற்புதமாகப் பாடி அபார்ட்மெண்ட் வென்ற திவாகர் என்ற ஏழை இளைஞன் திரையில் பெரிதாய் வலம்வர நமது வாழ்த்துக்கள்.

24 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

திவாகரின் திறமை மேலும் மேலும் உயர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

எனக்கு பிடித்த பாடல்களில்... அடிக்கடி கேட்கும் பாடல்களில்... இந்தப் பாடலை பார்க்கும் போதும், கேட்கும் போதும் மனதில் தோன்றுவதை சொல்ல வார்த்தைகள் இல்லை... அட...! அது மட்டுமா...? நால்வரின் நடிப்பும் - எத்தனை உணர்ச்சிகள்.... நவரசங்களையும் காணலாம்...

இப்போது பாடல் இல்லாமல் பதிவை என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை... ஆனால், இந்தப் பாடலை வைத்து, "ஏதேனும் ஒரு நல்லதொரு கட்டுரை எழுத முடியுமா...?" என்று நினைத்ததுண்டு... பல நாட்கள் கழித்து முடிந்தது...

நேரம் கிடைப்பின்...

இதோ காணொளியுடன் அந்த அற்புதமான பாடல் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Success-is-our-choice.html

Amudhavan said...

வாருங்கள் தனபாலன், தங்கள் வருகைக்கு நன்றி. தங்களின் இதே போன்ற கருத்தை, அல்லது இதே கருத்தை வேறு சில தளங்களிலும் பார்த்தேன். உங்களின் வலைப்பூவின் அந்தப் பதிவுக்கும் சென்று பார்க்கிறேன்.

Jayadev Das said...

திவாகர் சங்கீதம் [முறைப்படி] கற்காதவர் என்ற தகவல் ஏ .ஆர்.ரஹ்மான் சுற்றில் தெரிய வந்தது.

திவாகர் பாடலுக்கு சிவாஜி/ராதா எவ்வாறு நடித்தார்கள் என்ற நினைவலையில் துவங்கி, கண்ணதாசனில் போய் கடைசியாக உள்குத்தில் ஒரு ஞானியைத் தாக்கி புயல் கரையைக் கடந்திருக்கிறது............ வழக்கம்போலவே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.......... நன்றி.

கோமதி அரசு said...

திவாகர் மிக அருமையாக பாடினார்.
அவருடைய பேச்சும் மிக அருமையாக இருந்தது.
தன்னம்பிக்கை மிகுந்த பேச்சு.
அவர் பெற்றோர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய திவாகர் மேலும் மேலும் இசை உலகில் சாதனைகள் செய்ய வேண்டும்.
கலைஞ்சர் தொலைகாட்சியில் ஒரு சிறுவன் 'மாதவி பெண்மயிலால் தொகை விரித்தாள் 'என்ற பாடலை மிக அருமையாக பாடினான். திறமைகள் நிறைந்தகுழந்தைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் பதிவு மிக அருமை.

Amudhavan said...

Jayadev Das said...
\\திவாகர் பாடலுக்கு சிவாஜி/ராதா எவ்வாறு நடித்தார்கள் என்ற நினைவலையில் துவங்கி, கண்ணதாசனில் போய் கடைசியாக உள்குத்தில் ஒரு ஞானியைத் தாக்கி புயல் கரையைக் கடந்திருக்கிறது............\\

திவாகர் பாடலுக்கா? ஐயையோ அது டிஎம்எஸ் எல்லாம் கஷ்டப்பட்டுப் பாடியதுங்க. உங்கள் பதிலிலிருந்து அந்த இளைஞர் அத்தனைப் பிரமாதமாகப் பாடினார் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று என நினைவு அலைகள் போகும். அதற்கேற்ப நம்மிடம் விஷயங்களும் கருத்துக்களும் இருக்கவேண்டும். அப்படியிருக்கும்போது எல்லாவற்றையும் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.

எந்த உள்குத்தும் அல்ல; எந்த ஞானியையும் தாக்கவுமில்லை. இத்தனை மக்களைக் கவரும் இசையும் பாடல்களும் இன்னமும் ஜீவாதாரமாக இருக்க, ஒரு சின்ன குண்டுச்சட்டியை ஏன் உருவாக்குகிறீர்கள்? என்பது மட்டும்தான் என்னுடைய கேள்வி. வருகைக்கு நன்றி ஜெயதேவ்.

Amudhavan said...

கோமதி அரசு said...
\\அவர் பெற்றோர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய திவாகர் மேலும் மேலும் இசை உலகில் சாதனைகள் செய்ய வேண்டும்.
கலைஞ்சர் தொலைகாட்சியில் ஒரு சிறுவன் 'மாதவி பெண்மயிலால் தொகை விரித்தாள் 'என்ற பாடலை மிக அருமையாக பாடினான். திறமைகள் நிறைந்தகுழந்தைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\\

கோமதி அரசு அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் சொல்வது உண்மைதான். அந்த ஏழைப் பெற்றோர்களை அந்த இளைஞன் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது மனநிறைவைத் தந்தது.

நிறைய சின்னஞ்சிறுசுகள் அந்தக் காலத்தின் மிகக் கஷ்டமான பாடல்களைக்கூட மிக அருமையாகப் பாடுவதைக் கேட்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். அதே போன்றுதான் முன்பொருமுறை அபஸ்வரம் ராம்ஜி குழுவினரில் ஒரு சிறுவன் செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலை அற்புதமாகப் பாடியது பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் நினைவில் நிற்கிறது.

குட்டிபிசாசு said...

அமுதவன் ஐயா,
…அற்புதமான பாடலை ஞாபகப்படுத்தியதிற்கு நன்றி. பலே பாண்டியா படமே 20-22 நாட்களில் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 2 நாட்கள் பாடலுக்கு ஒத்திகை பார்க்க செலவிட்டிருப்பார்களா என்பது சந்தேகமே? சுவாரசியத்துக்காக சொல்லப்பட்டதாக இருக்கலாம். எம்.ஆர்.ராதா, சிவாஜி போன்ற மகாநடிகர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
நான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்க்கவில்லை. எதோ திவாகர் என்று இணையத்தில் பெயர் அடிபட்டது. அந்த நிகழ்ச்சிக்கு இத்தனை வரவேற்பு இருக்கும் என்று எண்ணவில்லை. மறு ஒலிபரப்பு செய்தால் பார்க்கலாம் என நினைக்கிறேன்- அதுவும் இந்த பதிவை படித்ததினால். பதிவின் இடையே காரமான கருத்துக்கள் சிலரின் அபிமானங்களை பதம் பார்க்கின்றன. இந்தியா என்றால் இந்திரா இந்திரா என்றால் இந்தியா என்ற கேலித்தனமான rhyme 70,80 களில் பிரபலமாக இருந்ததை நானும் அறிவேன். சில ஜால்ராக்களின் கோமாளித்தனமான கூச்சல் அது.அதே போலவே இ.என்றால் இ. என்று இசைத் துறையில் ஒருவருக்கு பட்டம் கட்டுவது தெரிந்தே செய்யப்படும் மோசடி. பதிவுக்கு நன்றி.

Amudhavan said...

குட்டிபிசாசு said...
\\பலே பாண்டியா படமே 20-22 நாட்களில் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 2 நாட்கள் பாடலுக்கு ஒத்திகை பார்க்க செலவிட்டிருப்பார்களா என்பது சந்தேகமே? சுவாரசியத்துக்காக சொல்லப்பட்டதாக இருக்கலாம். எம்.ஆர்.ராதா, சிவாஜி போன்ற மகாநடிகர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். \\
வாருங்கள் கு.பி. நீங்கள் சொல்வது சரிதான். பலே பாண்டியா படம் மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். சிவாஜி, எம்ஆர் ராதா போன்ற மகா நடிகர்களுக்கு இதெல்லாம் மிகவும் சாதாரணம் என்பதும் உண்மைதான். ஆனாலும் சிவாஜியைப் போன்றவர்கள் சிலவற்றில் காட்டும் அக்கறை அவர்களின் டெடிகேஷனைப் பறைசாற்றும். இப்போதுதான் விஜயகாந்த் பற்றிய ஒரு பதிவில் 'கலைஞரேகூட இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தயார்ப்படுத்திக்கொண்டும், குறிப்புகள் எடுத்துக்கொண்டும், அல்லது முழுமையாக எழுதிக்கொண்டும்தான் போய்ப் பேசுகிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். இது முழுக்க முழுக்க உண்மை.

சிவாஜி ஒரு பெரிய மகோன்னதக் கலைஞன் என்றாலும் சிலவற்றை "எங்கே சொல்லிக்காட்டு" என்று வசனம் சொல்லச் சொல்லிக் கேட்பார். சிலவற்றை 'நடித்துக்காட்டு' என்று இயக்குநரை நடித்துக்காட்டச் சொல்லி பிறகு நடிப்பார். சில பாடல்களைக் கேட்டுவிட்டு "இது இப்போது வேண்டாம். நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லித் தம்மைத் தயார்ப் படுத்திக்கொண்டு வருவார்.

சாந்தி படத்தின் பாடலான 'யார் இந்த நிலவு' பாடலைக்கூடக் கேட்டுவிட்டு "நாளை ஷீட்டிங் வைத்துக்கொள்ளலாம். நான் கொஞ்சம் தயார் ஆக வேண்டும்" என்று அவர் சொல்லிச் சென்றது பிரபலமான ஒரு செய்திதான். அதனால் இந்தப் பாடலுக்கும் அவர் இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Amudhavan said...

காரிகன் said...

\\பதிவின் இடையே காரமான கருத்துக்கள் சிலரின் அபிமானங்களை பதம் பார்க்கின்றன. இந்தியா என்றால் இந்திரா இந்திரா என்றால் இந்தியா என்ற கேலித்தனமான rhyme 70,80 களில் பிரபலமாக இருந்ததை நானும் அறிவேன். சில ஜால்ராக்களின் கோமாளித்தனமான கூச்சல் அது.அதே போலவே இ.என்றால் இ. என்று இசைத் துறையில் ஒருவருக்கு பட்டம் கட்டுவது தெரிந்தே செய்யப்படும் மோசடி\\

வாருங்கள் காரிகன், காரமான கருத்துக்கள் என்றா சொல்கிறீர்கள்? அதையும் soft தொனியில்தானே சொல்லியிருக்கிறேன். மக்களின் நினைவில் நீங்கா இடத்தைப் பெற்ற பாடல்கள் எப்போதும் நின்று நிலைக்கும் என்பதைத்தானே இம்மாதிரியான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அதற்கு மக்கள் ஆற்றியுள்ள எதிர்வினைகளும் எதைக் காட்டுகின்றன என்பதைத்தான் சுட்டியிருக்கிறேன்.

பத்திரிகைகளிலும் இணையத்திலும் 'இந்திராதான் இந்தியா' மாதிரியான கோஷம் வைக்கிறவர்கள் ஒரு இருநூறு பேர் என்றால் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ரசிக்கிறவர்கள், அதற்கு ஓட்டுப் போடுகிறவர்கள் பதின்மூன்று லட்சம் என்பது எதைக் காட்டுகிறது?

வேட்டைக்காரன் said...

மாடு எங்க சுத்துனாலும் கடைசீல அத மறக்காம தென்னை மரத்துல பிடிச்சு கட்டி வச்சிடறீங்க!

வர்மா said...

அட்டகாசமான பதிவு எங்கேயோ ஆரம்பித்து தமிழ் சினிமாவின் முக்கியமான பக்கங்கள் பலதைத் தொட்டுக்காட்டியுள்ளீர்கள். தமக்கு விருப்பமான சில இசை அமைப்பாளர்களின்பாடல்களுக்கு நடுவர்கள் சிலவேளை புள்ளிகளை அள்ளி வழங்குவது குறையாக உள்ளது.

Amudhavan said...


வேட்டைக்காரன் said...

\\மாடு எங்க சுத்துனாலும் கடைசீல அத மறக்காம தென்னை மரத்துல பிடிச்சு கட்டி வச்சிடறீங்க\\
வாங்க வேட்டைக்காரன், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Amudhavan said...

வர்மா said...
\\தமக்கு விருப்பமான சில இசை அமைப்பாளர்களின்பாடல்களுக்கு நடுவர்கள் சிலவேளை புள்ளிகளை அள்ளி வழங்குவது குறையாக உள்ளது. \\
வர்மா அவர்களே வாருங்கள். தங்களின் குற்றச்சாட்டு நியாயமானதுதான். நானும் ஒரு சில நிகழ்வில் பார்த்திருக்கிறேன். நடுவர்கள் என்ற பெயரில் உட்காருபவர்கள் செய்யும் அநீதிகள் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றுதான். அதுபற்றியும் பதிவில் குறிப்பிட்டுள்ளதாகவே நினைக்கிறேன். நன்றி!ஸ்ரீராம். said...

நான் அந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை. ஆனால் ஊடகங்கள் வாயிலாக இது பற்றி நிறையப் படித்து விட்டேன்.

நீயே உனக்கு என்றும்' பாடல் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யம். சாந்தி பாடல், அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடல் பற்றியெல்லாம் ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடல் விஷயம் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

சுவாரஸ்யமான பதிவு.

Amudhavan said...

நன்றி ஸ்ரீராம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு விரிவான ஆய்வு செய்திருக்கிறீர்கள் ஐயா!
.இறுதி சுற்று வரும்போது சூடு பிடித்து விட்டாலும் முந்தைய சீசன்களை விட வரவேற்பு குறைவுதான் என்று கருதுகிறேன். விஜய் டிவி பல்வேற தந்திரங்களை செய்து (ரகுமானை அழைத்தது உட்பட)செய்து நிலையை மாற்றியது.
இந்த நிகழ்ச்சியில் நான் கவனித்தவரை எம்.எஸ்.வி.,ராஜா ரகுமான் பாடல்களே அதிகம் பாடப் பட்டிருக்கின்றன. கர்நாடக சங்கீத சுற்று அமைந்தால் கே.வி.மகாதேவன் பாடல்கள் இடம் பெறுகின்றன. அதிகம் புகழ்பெறாத வி.குமார். போன்ற இசை அமைப்பாளர்களின் பாடல்கள் இடம் பெறுவதில்லை. ராஜேந்தர் சந்திரபோஸ், தேவா போன்றவர்கள் நல்ல பாடல்களை தந்திருந்தாலும் அவர்கள் பாடல்கள் பாடப் படுவதில்லை. ஏ,எம் ராஜாவின் பாடல்களும் மிகக் குறைவாகவே பாடப் பட்டன.பங்கு பெரும் அனைவருமே திற இசையில் வாய்ப்பு பெரும் நோக்கத்தில்தான் பாடுகின்றனர்.இசை அமைத்த பாடல்களின் விகிதாசார அடிப்படையில் பார்த்தால் ரகுமானின் பாடல்களே அதிகம் இருக்கும்.
ராஜ ரகுமான் எம்.எஸ்.வி இவர்களை வாய் வலிக்கும் அளவுக்கு புகழ்ந்து தள்ளும் நடுவர்கள். கே.வி மகாதேவனை அந்த அளவுக்குகண்டு கொள்வதில்லை. எப்படியோ அடுத்ததையும் ஆரம்பித்து விட்டார்கள்

ஜோதிஜி said...

வெளியீட்ட சில மணி நேரத்தில் இந்த பதிவை படித்தேன். பயணத்தில் இருந்த காரணத்தால் விமர்சனம் எழுத முடியவில்லை.

உங்கள் புத்தகத்தை படித்து முடித்ததும் உருவான தாக்கத்தைப் போல ஒரு விசயத்தைப் பற்றி எந்த அளவுக்கு எளிமையான முறையில், தெளிவாக எழுத முடியும் என்பதை இந்த பதிவு மூலம் உணர்ந்து கொண்டேன்.

நீங்கள் எழுத வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. தாக்கிக் கொண்டேயிருப்பவர்களின் வாயை மற்றும் அவர்களின் மற்றதை அடைக்க நீங்க எழுதித்தான் ஆகவேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள்.

Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

\\ஒரு விரிவான ஆய்வு செய்திருக்கிறீர்கள் ஐயா\\
முரளிதரன், இந்தப் பதிவிற்கான சின்னப் பின்னூட்டத்திலேயே விரிவான ஆய்வு இருப்பதைப் போன்ற தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்களே, அதற்கு உங்களுக்கு முதலில் பாராட்டுக்கள்.

\\இந்த நிகழ்ச்சியில் நான் கவனித்தவரை எம்.எஸ்.வி.,ராஜா ரகுமான் பாடல்களே அதிகம் பாடப் பட்டிருக்கின்றன. கர்நாடக சங்கீத சுற்று அமைந்தால் கே.வி.மகாதேவன் பாடல்கள் இடம் பெறுகின்றன. அதிகம் புகழ்பெறாத வி.குமார். போன்ற இசை அமைப்பாளர்களின் பாடல்கள் இடம் பெறுவதில்லை. ராஜேந்தர் சந்திரபோஸ், தேவா போன்றவர்கள் நல்ல பாடல்களை தந்திருந்தாலும் அவர்கள் பாடல்கள் பாடப் படுவதில்லை. ஏ,எம் ராஜாவின் பாடல்களும் மிகக் குறைவாகவே பாடப் பட்டன\\

நான் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தக் குறைபாடுகள் இருப்பதை நண்பர்களும் சொன்னார்கள். இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய குறைபாடுகளே. தவிர, அந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டும்தான் இந்தக் குறைகள் இருப்பதாக நான் கருதவில்லை. இசை என்று பேசப்படும், விவாதிக்கப்படும், எழுதப்படும் எல்லா இடங்களிலுமே இந்தக் குறைகள் நிச்சயம் இருக்கின்றன. இவையெல்லாமே தவிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கை. இசைக்குச் சின்ன சுற்றுவட்டம் இருக்கலாகாது. மிகப்பெரிய சாகரம்தான் இசை என்ற எண்ணம் வருதல் வேண்டும்.
கேவிமகாதேவனை இசைத்துறையைச் சார்ந்தவர்கள்கூட கண்டுகொள்வதில்லை என்ற உங்களின் ஆதங்கம் நியாயமானது மட்டுமில்லை, அந்தச் செயல் கண்டிக்கப்பட வேண்டியதும்கூட. சங்கராபரணம் படம் மூலம் மொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த அந்த மாபெரும் கலைஞனுக்கே இந்த நிலைமை என்றால் இன்னும் சில வருடங்களில் மற்றவர்களின் கதி என்ன என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
கர்நாடக இசையைப் பற்றி பேச்சு வந்தால் மட்டுமே கேவிமகாதேவனை நினைவு கூர்கிறார்கள் என்கிறீர்கள். நாட்டுப்புற இசைக்கும்கூட அவரை நினைவுகூர்ந்துதான் ஆகவேண்டும். ஏனெனில் தமிழ்த்திரையுலகில் நாட்டுப்புற இசையை நதியாக ஓடவிட்டவர் இளையராஜா என்றே பல பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனைச் செய்தவர் கேவிமகாதேவன்தான்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\நீங்கள் எழுத வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. தாக்கிக் கொண்டேயிருப்பவர்களின் வாயை மற்றும் அவர்களின் மற்றதை அடைக்க நீங்க எழுதித்தான் ஆகவேண்டும் என்பது என் அன்பு வேண்டுகோள். \\
வாங்க ஜோதிஜி நல்ல கோபத்தில் இருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. மற்றவர்களின் உழைப்பை, திறமையை, சாதனையை மூடி மறைக்கப்பார்க்காதீர்கள்.
தங்களின் உழைப்பின் மூலமும் அபாரமான திறமைகளின் மூலமும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு நிறைய சீதனங்களை நம் முன்னோர்கள் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த சீதனங்களையெல்லாம் ஒன்றுமே இல்லாததுபோல் அவற்றை முற்று முழுதாக மூடி மறைத்துவிட்டு தங்களுக்கு பிடித்த ஒன்றை மட்டுமே 'இதுமட்டும்தான் இசை' என்பதாக மக்களுக்குச் சொல்ல வருகின்றீர்களே அது தவறு இல்லையா என்று கேட்டால் இவர்களுக்குக் கோபம் வருகிறது.
இவர்கள் சொல்லும் இசையமைப்பாளர் மட்டும்தான் இசையின் கடவுள் என்று வைத்துக்கொண்டு இசையைத் தொடர ஆரம்பித்தால் எம்ஜிஆர் பாடல்கள், சிவாஜி பாடல்கள், டிஎம்எஸ் பாடல்கள், சீர்காழி பாடல்கள்,பி.சுசிலா பாடல்கள், எல்ஆர்ஈஸ்வரி பாடல்கள், பிபிஸ்ரீனிவாஸ் பாடல்கள், கண்ணதாசன் பாடல்கள், பட்டுக்கோட்டையார் பாடல்கள் இவை அத்தனையையும் இழக்க வேண்டியிருக்கும்.....இதெல்லாம் நியாயமா? என்ற கேள்வியை மட்டும்தான் நான் முன்வைக்கின்றேன்.

இந்தக் கேள்விகள் பலரையும் உயிர்ப்பிக்கச் செய்திருக்கின்றன என்பதுதான் ஒரே மகிழ்ச்சி.

Amudhavan said...

இங்கே ஒரு மூன்று பின்னூட்டங்களைத் தவிர்த்திருக்கிறேன். அந்தப் பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்காக அல்ல. அவற்றை யாரோ ஒரு அனானி 'அமுதவனின் மனசாட்சி' என்ற பெயரில் எழுதியிருப்பதால். என்னுடைய மனசாட்சிக்குப் புறம்பாக நான் எழுதுவதில்லை. வேறு மாதிரி தோன்றிற்று என்றால் நான் எழுதாமலேயே இருந்துவிட்டுப் போகிறேன். யாரோ ஒருவர் தமது கருத்தை என்னுடைய மனசாட்சியின் கருத்தாக இங்கே பந்தி வைக்கிறாராம். அவருடைய புத்திசாலித் தனத்திற்காக எல்லாரும் அவரை மெச்ச வேண்டுமாம். பரிதாபமாக இருக்கிறது.

ஜோதிஜி said...

Yuvanshankar Raja
Yuvanshankar Raja
@Raja_Yuvan
Follow
I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah

காரிகன் said...

Rahman effect?

காரிகன் said...


Mr.Amudhavan,
What an article! Just read this.

http://kuttipisasu.blogspot.in/2014/02/09022014.html?showComment=1392034846590#c3526286484098056169

Post a Comment