Sunday, March 23, 2014

ஜெயலலிதாவின் வாக்குவங்கி அப்படியே இருக்கிறதா?



ஜெயலலிதா இந்தத் தேர்தலில் எந்தப் பெரிய கட்சியின் துணையுமில்லாமல் போட்டியிட்டவுடன் பத்திரிகைகள் உட்பட எல்லாருக்குமே ‘என்ன இருந்தாலும் ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்குவரும்?’ என்ற எண்ணம்தான் வந்தது. தவிர, சில இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவங்களும் இருப்பதால் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் அந்த ஃபார்முலாபடியே வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அம்மையாருக்கு இருக்கக்கூடும். பத்திரிகைகளும் அதேபோல நினைக்கவும் கூடும்.

இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்ற ஃபார்முலா என்பது இப்போதைய தலைமுறைக்கு ‘திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா’ என்று சொல்லப்பட்டு அதன் முழுப்பெருமையும் அழகிரிக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் இத்தகைய ஃபார்முலாக்களின் பிதாமகன் திருவாளர் எம்ஜிஆர் அவர்கள்தாம். அவர் ஆட்சியிலிருந்த காலத்தில் நடைபெற்ற மருங்காபுரி தேர்தல் தொடங்கி எல்லா இடைத்தேர்தல்களிலும் அவர் கையாண்டு வெற்றிகண்ட உத்திகளைத்தாம் அழகிரியும் கொஞ்சம் பிரமாண்ட அளவில் கையாண்டார்.

எம்ஜிஆர் தமது ஆட்சியின்போது எவர்சில்வர் ஸ்டீல் குடங்களையும், காமாட்சி விளக்குகளையும், மூக்குத்திகளையும் கொடுத்து அன்றைய எதிர்க்கட்சிகளையெல்லாம் திக்குமுக்காட வைத்தார்.
அப்போதிருந்த மக்கள் மனநிலை அதனைக் கொண்டாடவே செய்தது. ‘என்ன இருந்தாலும் வாத்தியார் வாத்தியார்தான். அவருடைய கொடையுள்ளம் யாருக்கு வரும்?’ என்றேதான் அந்த நாட்களில் இந்த நிகழ்வுகள் பார்க்கப்பட்டன. தேர்தல் ஆணையமும் இன்றைய அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருந்தபடியால் எம்ஜிஆருக்கு அன்றைக்குத் தாம் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு மிகவும் வசதியும் வாய்ப்புக்களும் இருந்தன. 

அழகிரி அதனைத்தான் தொடர்ந்தார்………………. கலைஞர் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் மக்களுக்கு பணம் மற்றும் கொடைகள் என்று ஏதோ தருகிறார் என்பதே சற்று வித்தியாசமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் ‘கலைஞருக்கு மக்களிடமிருந்து வாங்கித்தான் பழக்கமே தவிர கொடுத்துப் பழக்கமில்லை’ என்ற ஒரு சொல்லாடலும் எப்படியோ மக்கள் மத்தியில் இன்னமும் புழங்கித்தான் வருகிறது.

மதுரையில் காலூன்றிய அழகிரி இந்த சித்தாந்தத்தை அப்படியே உடைத்துப் போட்டார். அழகிரியை நம்பிப் போகிறவர்களை அழகிரி கைவிடமாட்டார் என்ற எண்ணத்தை மக்களிடம் அவர் எப்படியோ ஏற்படுத்தினார். அதனால்தான் ‘மதுரை என்பது எம்ஜிஆரின் கோட்டை’ என்று முப்பது வருடங்களாக வழங்கிவந்த பெயரைச் சில ஆண்டுகளிலேயே மாற்றிக்காட்டினார் அழகிரி. அதனைத் தொடர்ந்து வந்தவைதாம் திமுக ஆட்சியில் அழகிரியிடம் இடைத் தேர்தல்களை ஒப்படைத்து விட்டால் வெற்றி நிச்சயம் என்ற நிலைமை.

இந்த சித்தாந்தத்தை அப்படியே பற்றிக்கொண்ட ஜெயலலிதா தாமும் எதிர்கொண்ட இடைத்தேர்தல்களில் தமது அமைச்சர்களை வைத்துக்கொண்டு அழகிரி ஃபார்முலாவையே பயன்படுத்தினார். பத்திரிகைகளும் ஜெயலலிதாவின் எல்லாத் தவறுகளுக்கும் முட்டுக்கொடுப்பது போலவே ஏற்காட்டில் திருமங்கலம் ஃபார்முலாதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்றே எழுதின. இதன் பிதாமகர் எம்ஜிஆர்தான் என்பதை மறந்துபோயும் எந்தப் பத்திரிகையும் குறிப்பிட்டுவிடவில்லை.

சரி இப்போதைய அரசியல் விவாதங்களில் ‘ஓட்டுக்குப் பணம் வழங்கும் இந்தச் செயல்’ பற்றிக் குறிப்பிட விரும்புவர்கள் ‘ஏற்காடு ஃபார்முலா’ என்று குறிப்பிடுகிறார்களா என்றால் கிடையாது. அப்படிச் சொன்னால் ஜெவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே. அதனால் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்றே சொல்லித் தப்பித்துக் கொள்கின்றனர்.

திருமங்கலம் ஃபார்முலாவோ ஏற்காடு ஃபார்முலாவோ என்ன இழவாவது இருந்துவிட்டுப் போகட்டும்.

இந்த நாடாளுமன்றத்தில் இதையே முழுமையாகச் செய்து ஓட்டு வாங்கிவிடமுடியுமா என்றால் முடியாது. ஏனெனில் ஒரே ஒரு தொகுதியில் செய்து பார்க்கும் குயுக்தியை மொத்தத் தமிழ்நாட்டிற்கும் பரவலாகச் செய்வது சாத்தியமில்லை. அதனால் ஓட்டுவங்கியைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

ஓட்டு வங்கி என்று பார்த்தால் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத்தாம் சொல்லும் விதத்தில் ஓட்டு வங்கி இருந்தது. காங்கிரஸின் ஓட்டு வங்கியை அந்தக் கட்சியும் அதன் தலைவர்களும் விடாப்பிடியாக ஒற்றுமையாக நின்று ஒழித்துக்கட்டி விட்டனர். பின்னர் அந்த ஓட்டுவங்கி அப்படி இப்படி அலைந்து பாமகவுக்குக் கொஞ்சம், அந்தக் கட்சிக்குக் கொஞ்சம் இந்தக் கட்சிக்குக் கொஞ்சம் என்பதாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

வந்தாரய்யா விஜயகாந்த்.

ஒரு கணிசமான ஓட்டுவங்கியை கறுப்பு எம்ஜிஆர், திமுக அதிமுகவுக்கு மாற்று, நான் வந்தால் உங்கள் வீட்டு வாசலுக்கே ரேஷன் பொருட்கள் என்று என்னென்னமோ சொல்லி ஓரளவு திரட்டி வைத்திருந்தார்.

சென்ற தேர்தலில் ஸ்டாலினுக்குக்கூடக் கிடைக்காத எதிர்க்கட்சித்தலைவர் பதவி லட்டு மாதிரி வந்து வாய்த்தது.

என்னவெல்லாம் செய்திருக்கவேண்டும் அந்த மனிதர்?

ஒன்றுமே இல்லை.

இதோ இப்போதைய தேர்தலில்கூட கூட்டணி அமைப்பதற்குள் குழம்பித் தவித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பதையே கொத்து பரோட்டாவாக்கிக் குதறிப்போட்டுவிட்டார். ஓரளவு படித்தவர்களின் நம்பிக்கையை எல்லாம் அடித்து நொறுக்கி சூரசம்ஹாரம் பண்ணிவிட்டுத்தான் கூட்டணியே போட்டார். அதனால் அவருடைய வாக்குவங்கி என்பது போன தேர்தலில் இருந்தபடியே இன்றைக்கும் இருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஜெயலலிதா எதற்கும் பயப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இது மட்டுமே மிகப்பெரிய தகுதி என்றும் சொல்வதற்கில்லை. ‘அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை’ என்பதையும் நாம் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சென்ற தேர்தலில் கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம், முஸ்லிம்களின் ஒரு பிரிவு, இவற்றோடு விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்துத்தான் அத்தனை ஓட்டுக்களை அவரால் பெற முடிந்தது.
இன்றைக்கு இந்தக் கட்சிகளெல்லாம் இல்லை.

முஸ்லிம்களின் ஓட்டுக்கள் இல்லை.

கம்யூனிஸ்டுகளின் ஓட்டுக்கள் இல்லை.

புதிய தமிழகம் கட்சியினரின் ஓட்டுக்கள் இல்லை.

மிகப்பெரிய பலமாக இருந்த தேமுதிகவின் ஓட்டுக்கள் இல்லை.

எத்தனைக் குறைச்சலாகப் போட்டாலும் இவையெல்லாம் சேர்ந்து ஒரு ஐந்து சதவிகிதம்தான் என்றாலும்

-அந்த ஐந்து சதவிகித ஓட்டுக்கள் இன்றைக்கு அதிமுகவிற்கு இல்லை.

அதுமட்டுமல்ல; சென்ற தேர்தலில் நேரடிக் கூட்டணி இல்லையென்ற போதிலும் பாஜக சிந்தனைக் கொண்ட அத்தனைப்பேரின் ஓட்டுக்களும் ஜெயலலிதாவிற்குக் கிடைத்தன.

இன்றைக்கு அந்த ஓட்டுக்களும் இல்லை.

புதிய வாக்காளர்கள் தொகை இந்தத் தேர்தலில் நிறைய இருக்கிறது.

இந்தப் புதிய வாக்காளர்களும் சரி,

சென்ற தேர்தலில் முதல்முறையாக ஓட்டுப்போட்ட புதிய வாக்காளர்களும் சரி தங்கள் வாக்குகளை அதிமுகவுக்குத்தாம் போட்டார்கள்.

இப்போது அதனை எதிர்பார்ப்பதற்கில்லை.

புதிய வாக்காளர்கள் நிறையப்பேர் மோடிக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள்.

அவர்களில் ஒரு கணிசமான சதவிகிதம்பேர் கேஜ்ரிவால் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
பாரதிய ஜனதா சித்தாந்தம் கொண்ட நிறையப்பேர் தங்கள் வாக்குகளை எப்போதுமே ஜெயலலிதாவுக்குத்தாம் போடுவார்கள்.

வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் குறிப்பாக பிராமணர்கள் தங்கள் வாக்குகளை என்றென்றும் ஜெயலலிதாவுக்குத்தான் போடுவார்கள்.

இப்போது அவர்களுக்கே அவர்களுக்கென்று கட்சியும் சின்னமும் ‘கேண்டிடேட்டும்’ பிரதம வேட்பாளரும் கிடைத்துவிட்ட பிறகு அவர்கள் எதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்கப்போகிறார்கள்?
ஆக இத்தனைப் பேரின் வாக்குவங்கியைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஓட்டுவங்கி என்பது எத்தனை வலுவானது என்று தெரியவில்லை.

யார் எங்களிடமிருந்து பிரிந்து போனாலும் அதுபற்றிக் கவலை இல்லை. எங்களிடம் இருக்கும் ஓட்டுக்களே போதும் என்று அதிமுகவினர் மார் தட்டுவதற்கு அவர்களிடம் என்ன அறுபது சதவிகிதமும் எழுபது சதவிகிதமும் கொண்ட வாக்குவங்கியா இருக்கிறது?

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் சதவிகிதத்தின் வித்தியாசமே இரண்டோ மூன்றோதானே?

தவிர அதிமுகவின் வாக்குவங்கியை அதிகரிக்கச் செய்யுமாறு அவர் ஆட்சிக்கு வந்து எந்த செயற்கரிய செயலையும் செய்ததாகவும் தெரியவில்லை. புதிய சட்டமன்றக் கட்டடத்தை மருத்துவமனையாக்கியது, அண்ணா நூலகத்தை அகற்ற நினைத்தது, வந்ததும் வராததுமாக பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பாடத்திட்டம் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு வீட்டுக்கு விரட்டியது, இரண்டு மணி நேரமிருந்த மின்வெட்டை பதினெட்டு மணி நேரமாக்கியது என்று தொடர்ந்து செய்த அனர்த்தங்களில் நம்பி வாக்களித்த நடுத்தட்டு வர்க்கத்தினரின் வாக்குகளிலும் கணிசமான பகுதியை அல்லவா இழந்திருப்பார்?

அசட்டுத் துணிச்சல் மட்டுமே பிரதமர் நாற்காலியில் ஒருவரைத் தூக்கிப்போய் 

உட்காரவைத்துவிடுமா என்ன!

27 comments :

குறும்பன் said...

ஜெயலலிதா பண்ணிய பெரும் முட்டாள்தனம் பொதுவுடமை கட்சிகளை கூட்டணியில் இருந்து விரட்டியது. அவர்களுக்கு பெரும் வாக்கு வங்கி இல்லைதான் ஆனால் அவர்களின் வாக்கு 2 ~3 % இருக்கும் மற்ற கட்சிகள் கூட்டணி இல்லாத போது அதை இழந்தது பெரும் இழப்பு. இடைத்தேர்தல் உத்தி பொதுத்தேர்தலுக்கு பயன்படாது. பல எளிய மக்களுக்கு எதிரான திட்டங்களால் உறுதியாக அதிமுக 1 ~2 % வாக்கு வங்கியை இழந்திருக்கும். ஜால்ராக்களின் சத்தத்தை நம்புவது கெடுதல். கூட்டி வந்த கூட்டம் போடும் சத்தத்தையும், காசுக்கு வந்த கூட்டத்தை பார்த்து ஏமாறுவதும் நல்லதல்ல.

தருமி said...

கட்டுரை உண்மையாக இருந்தால் நலமே!
//புதிய சட்டமன்றக் கட்டடத்தை மருத்துவமனையாக்கியது, // இந்த ஒரு காரணம் எனக்குப் போதும்-அக்கட்சி தோற்க ....

தி.தமிழ் இளங்கோ said...


தான் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையை விட. தான் சொன்னதைக் கேட்கும் மத்திய அரசு இருக்கவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் ஆசை. அதனால்தான் அவர் இந்த தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை. பாஜகவின் செல்லப் பிள்ளை அ.தி.மு.க. ஜெயலலிதாவிற்காகத்தான் பா.ஜ.க தனது கூட்டணியை இவ்வள்வு நாள் இழுத்தது. தேர்தலுக்குப் பின் அவர் மோடியை ப்கிங்கரமாக ஆதரிப்பார். எனவே இப்போதைய அவருடைய குறிக்கோள் அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. எப்படியும் தமிழ்நாட்டில் குறைந்தது 25 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.

Jayadev Das said...


\\சென்ற தேர்தலில் ஸ்டாலினுக்குக்கூடக் கிடைக்காத எதிர்க்கட்சித்தலைவர் பதவி லட்டு மாதிரி வந்து வாய்த்தது.\\ சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் கூட்டணியால் தான் அம்மாவுக்கு அத்தனை சீட்டுகள் கிடைத்தன , மேலும் விஜயகாந்தக்கும் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. அதையடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதை நினைத்து இந்த தேர்தலை அம்மையார் தனித்து சந்திக்க முடிவெடுத்திருந்தால் அம்மையார் தப்புக் கணக்கு போட்டுவிட்டார் என்றே அர்த்தம். விஜயகாந்தின் 9% வாக்குகள் எந்த பக்கம் போகிறது என்பது தேர்தல் முடிவுகளையே புரட்டிப் போடும் என்றாலும் தமிழகத்தில் ஆதரவே இல்லாத பா.ஜ.க வுடன் போடும் கூட்டால் அது எதற்கும் பிரயோஜனப் படுமா என்பது தான் புரியவில்லை.

\\புதிய சட்டமன்றக் கட்டடத்தை மருத்துவமனையாக்கியது, அண்ணா நூலகத்தை அகற்ற நினைத்தது, வந்ததும் வராததுமாக பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பாடத்திட்டம் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு வீட்டுக்கு விரட்டியது, இரண்டு மணி நேரமிருந்த மின்வெட்டை பதினெட்டு மணி நேரமாக்கியது \\ இவற்றோடு பீச்சில் சும்மா கொண்டிருந்த சிவாஜி சிலையை பிடுங்கி எரிந்தது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Amudhavan said...

குறும்பன் said...
\\இடைத்தேர்தல் உத்தி பொதுத்தேர்தலுக்கு பயன்படாது. பல எளிய மக்களுக்கு எதிரான திட்டங்களால் உறுதியாக அதிமுக 1 ~2 % வாக்கு வங்கியை இழந்திருக்கும். ஜால்ராக்களின் சத்தத்தை நம்புவது கெடுதல். கூட்டி வந்த கூட்டம் போடும் சத்தத்தையும், காசுக்கு வந்த கூட்டத்தை பார்த்து ஏமாறுவதும் நல்லதல்ல. \\

இதையேதான் நானும் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறேன். வருகைக்கு நன்றி குறும்பன்.

Amudhavan said...

தருமி said...
//புதிய சட்டமன்றக் கட்டடத்தை மருத்துவமனையாக்கியது, // இந்த ஒரு காரணம் எனக்குப் போதும்-அக்கட்சி தோற்க ..

உங்களின் இந்த ஒரு வார்த்தைப் போதும் அவருடைய ஆட்சியைப் பற்றி விமர்சிக்க....

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\தான் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையை விட. தான் சொன்னதைக் கேட்கும் மத்திய அரசு இருக்கவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் ஆசை. அதனால்தான் அவர் இந்த தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை.\\

அவருடைய ஆசைகளைத் தாண்டி சில வழக்குகளும் இருக்கின்றன. அவற்றையும் கணித்தே அவர் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

Amudhavan said...

Jayadev Das said...
\\இவற்றோடு பீச்சில் சும்மா கொண்டிருந்த சிவாஜி சிலையை பிடுங்கி எரிந்தது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். \\
நீங்கள் நெற்றி அடியாகத்தான் அடிப்பீர்கள் என்பது புரிகிறது.

வவ்வால் said...

அமுதவன் சார்,

முந்தையப்பதிவில் பின்னூட்டமிடும்போதே இப்பதிவையும் படித்துவிட்டே கருத்து சொன்னேன், எனவே இப்பதிவின் சாரம்சம் சார்ந்தே அக்கருத்து.

தனியா இப்போது அலசலாம்,

//இப்போது அவர்களுக்கே அவர்களுக்கென்று கட்சியும் சின்னமும் ‘கேண்டிடேட்டும்’ பிரதம வேட்பாளரும் கிடைத்துவிட்ட பிறகு அவர்கள் எதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்கப்போகிறார்கள்?
ஆக இத்தனைப் பேரின் வாக்குவங்கியைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஓட்டுவங்கி என்பது எத்தனை வலுவானது என்று தெரியவில்லை.//

பிஜேபிக்கான பிராமண வாக்கு வங்கி என்பது வெகு சொற்பமே ,அம்மையாருக்கு இத்தனை நாளாக அவர்கள் ஓட்டுப்போட்டதால் எல்லாம் வெற்றிப்பெற்றுவிடவில்லை,அவை ஒரு கூடுதல் ஓட்டுக்களே.

எனவே அம்மையாருக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டாலும் இழப்பில்லை.

//யார் எங்களிடமிருந்து பிரிந்து போனாலும் அதுபற்றிக் கவலை இல்லை. எங்களிடம் இருக்கும் ஓட்டுக்களே போதும் என்று அதிமுகவினர் மார் தட்டுவதற்கு அவர்களிடம் என்ன அறுபது சதவிகிதமும் எழுபது சதவிகிதமும் கொண்ட வாக்குவங்கியா இருக்கிறது?

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் சதவிகிதத்தின் வித்தியாசமே இரண்டோ மூன்றோதானே?

தவிர அதிமுகவின் வாக்குவங்கியை அதிகரிக்கச் செய்யுமாறு அவர் ஆட்சிக்கு வந்து எந்த செயற்கரிய செயலையும் செய்ததாகவும் தெரியவில்லை//

திமுகவுக்கும்.அதிமுகவிற்கும் கொஞ்சம் தான் வித்தியாசம், ஆனால் திமுகவிற்கும் இம்முறை பெரிய கூட்டணி இல்லை, மேலும் அவர்களும் "தங்கள் நற்பெயரை' வளர்த்துக்கொள்ளவில்லை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொண்டுள்ளார்கள்.

அதிமுக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளவில்லை, ஆனால் இருந்ததை குறைத்துக்கொள்ளவில்லை என அம்மையார் நினைக்கிறார்.

ஒரு தேர்தலில் வெற்றிப்பெற 50-60% வாக்கெல்லாம் தேவையில்லை, போட்டியிடுபவர்களை விட கொஞ்சம் கூடுதலாக வாங்க முடிஞ்சாலே போதுமே, எனவே தனது செல்வாக்கை அதிகரிக்கவில்லை எனினும்,அடுத்தவங்க செல்வாக்கு அதிகரிக்காமல் ,வலுவான கூட்டணி அமையாமல் செய்து விட்டாரே :-))

#//இரண்டு மணி நேரமிருந்த மின்வெட்டை பதினெட்டு மணி நேரமாக்கியது என்று தொடர்ந்து செய்த அனர்த்தங்களில் நம்பி வாக்களித்த நடுத்தட்டு வர்க்கத்தினரின் வாக்குகளிலும் கணிசமான பகுதியை அல்லவா இழந்திருப்பார்?//

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மின்வெட்டு இல்லையே?

இன்னமும் மின் வெட்டு என எப்படி சொல்றிங்கனு தெரியலை, நான் வசிப்பது "கிராம பஞ்சாயத்து" பகுதி , இங்கு 15 நிமிடம் போல கட் ஆகும்,அவ்வப்போது தான்.

இதே ஏரியாவில் 2-3 வருடம் முன்னர் 12 மணி நேரம் மின்வெட்டு இருந்தது, திமுக ஆட்சியில் 2மணி நேரம் மின் வெட்டு என்பது யர் சொன்னதோ?

மின் வெட்டு நிலையைப்பொறுத்த வரையில் , அம்மையாரின் முதல் ஆண்டில் அதிகம் இருந்தது உண்மை,தற்சமயம் இல்லை என்பதும் உண்மை.

மின் வெட்டு நிலைகள் குறித்து ஒரு சிலப்பதிவுகள் எழுதியுள்ளேன் ,சுட்டி பின்னர் தேடி அளிக்கிறேன்.

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி....

# கூட்டணி வாக்கு வங்கி என்பது ஒரு மாயை.

எந்த கூட்டணியின் வாக்கும் ,சக கூட்டாளிக்கு அப்படியே இடம் மாறுவதில்லை, அதிகபட்சம் 50% தான் போகும்.

அப்படி கூட்டணி வாக்குகள் எல்லாம் கிடைதிருக்குமானால்,கடந்த தேர்தலில் பா.மக போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோற்றே இருக்க மாட்டார்கள்.

திமுகவினர் கூட்டணி கட்சி என்றாலும் கட்டம் கட்டி பாமகவை அப்போது ஒதுக்கினார்கள்,அதனால் தான் முதுகில் குத்திவிட்டார்கள் என டொக்டர் பொலம்பினார்.

அப்புறம் ஏன் கூட்டணி வைக்கிறாங்க ,முதல் காரணம் தேர்தல் செலவை கவனிக்க, ரெண்டாவது "வலுவான" கூட்டணி என நம்ப வைத்தால் தான் கட்சிச்சார்பற்ற நடுநிலை வாக்களர்கள் ஓட்டு கிடைக்கும்.

உண்மையில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதே "எந்த பக்கமும்" சேராத" நடுநிலை வாக்காளர்கள் தான். வின்னிங் மார்ஜின் அவங்க ஓட்டுக்களே.அவங்க மனநிலை தேர்தல் நாளன்று கூட மாறும்.

இம்முறை எதிரணிக்கூட்டணி எதுக்குமே "வலுவான கூட்டணி" என்ற இமேஜ் இல்லை. எல்லாருக்கும் சுமார் மூஞ்சி தான் :-))

எனவ்வே அம்மையார் ஏர்க்காடு ஃபார்முலாவில் பாதியை செயல்ப்படுத்தினாலே போதும், தமிழகம் முழுக்க செய்ய முடியும் ,எனவே வெற்றி என கணக்கு போட்டாங்க.

வேலை எல்லாம் தேர்தல் தேதி ஆரம்பிச்சதும் சத்தம் போடாமல் நடக்குது சார், எங்க ஏரியாவில தார் ரோடு புதுசா பளபளக்குது ,சந்துல எல்லாம் ஜல்லி கொட்டிட்டாங்க அவ்வ்.

சுமார் 10-15 வருசமா ரோடே இல்லாத புதிய புறநகர் குடியிருப்புகளில் எல்லாம் தார் ரோடு பளபளக்குது , எதிர்க்கட்சிக்காரங்க ,தேர்தல் விதிமீறல்னு கூட வாய தொறக்கலையே :-))

இணையத்தில மட்டுமே அரசியல் அறிமுகம் ஆனவர்கள், அக்கம் பக்கம் என்ன நடக்குதுனு தெரியாம "காரிலேயே" பவனி வருபவர்கல் சொல்லும் அனுமானங்களை வைத்தெல்லாம் முடிவுக்கு வராதிங்க.

நாம டாஸ்மாக் முதல் ரேஷன் கடை வரைக்கும் அடிக்கடி போயி வர சராசரி விளிம்புநிலை மனிதன்.

உண்மையிலே எனக்கு என்ன ஆச்சர்யம்னா மக்கள் இப்பவும் மஞ்சத்துண்டை விட அம்மையாரை பத்தி நல்லவிதமாக சொல்லுறாங்க, என்ன செஞ்சாங்கனு கேட்டால் , மஞ்சத்துண்டு அளவுக்கு ஒன்னும் சுருட்டலையேனு சொல்லுறாங்க அவ்வ்!

இம்மூன்றாண்டுகளில் அம்மையார் பெருசா சாதிக்கலை என்றாலும் பெருசா "வெளியில் தெரிவது போல அள்ளவும் இல்லை.

மேலும் எங்க ஏரியாவில திமுக பஞ்சாயத்து ,கவுன்சிலர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை, ஏகப்பட்ட கொலை, பொறம்போக்கு ஆக்ரமிப்புனு இப்பவும் செய்றாங்க.

சில நாட்களுக்கு முன்னர் பெருமாள் என்பவர் ,ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவரை பட்டப்பகலில் கூடுவாஞ்சேரியில் வெட்டிக்கொன்றார்கள். எல்லாம் மஞ்சத்துண்டு ஆளுங்க தான் அவ்வ்!

கடந்த 5 ஆண்டுகளில் ஊரப்பாக்கம் பஞ்சாயத்து தலைவர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் அவ்வ்!

வவ்வால் said...

கொலைக்களமாகும் புறநகர் பகுதிகள்,

ஊரப்பாக்கம் கொலை வரலாறு!

மேனகா என்ற பெண் பஞ்சாயத்து தலைவர் அலுவலகத்திலேயே வெட்டிக்கொல்லப்பட்டார்.

வெட்டியது .ஜி.என்.ஆர் குமார் என்ற துணைத்தலைவர்.பின்னர் அவரே தலைவரானார்.

பின்னர் இன்னொரு கொலை, பாலாஜி என்ற கவுன்சிலர் போட்டிக்கு வந்தார்(ரியல் எஸ்டேட்டில்) என வெட்டினார்.

இரு ஆண்டுகளில் அவரை ரோட்டில் ஓட விட்டு நாட்டு வெடிகுண்டு வீசியும்,வெட்டியும் கொன்றார்கள். செய்ததன் பின்னால் இருந்தவர்கள் பெருமாள். மற்றும் பாலாஜி தரப்பு ஆதரவாளர்கள் என பேச்சு.

சில நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் கூடுவாஞ்சேரியில் வெட்டிக்கொல்லப்பட்டார் அவ்வ்!

இப்படி பல கொலைகள் நடக்க காரணம் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியாகும். ரியல் எஸ்டேட்டில் இன்னமும் ஆட்டம் போடுவது மஞ்சத்துண்டு கோஷ்டிகளே அவ்வ்.

ஒரு இடத்தில பிரச்சினைனா உடனே ஆஜராகி நான் தீர்க்கிறேன் என உள்ள புகுந்து ஆட்டைய போட்ருவாங்க, பொறம்போக்கு எடத்த எல்லாம் பினாமி பேருல பட்டாப்போட்டு விக்குறாங்க.

அங்கே உருவாகும் புதிய நகர்கள், அடுக்கங்கள் எல்லாத்துக்கும் பர்சண்டேஜில் கமிஷன் கட்டாயம்.

சென்னை புறநகரில் ஒவ்வொரு கவுன்சிலருமே கோடிஷ்வரன்கள், அடிப்பொடிகள் கூட ஸ்கார்ப்பியோ ,இன்னோவா தான் அவ்வ்!

இப்போ வெட்டப்பட்டவருக்கு சுமார் 150 வீடுகள் இருக்கு மாத வாடகையே பல லட்சங்களில் நிலையான வருமானம் , எங்க ஏரியா பொன்னு விளையிற பூமி சதுர அடிக்கு 3000-4000 தான் ரொம்ப சீப் :-))

Umesh Srinivasan said...

# அசட்டுத் துணிச்சல் மட்டுமே பிரதமர் நாற்காலியில் ஒருவரைத் தூக்கிப்போய்

உட்காரவைத்துவிடுமா என்ன!

# உட்கார வேணா வைக்கும், ஆனா நிலைக்க வைக்காது !

Amudhavan said...

வாங்க வவ்வால், எல்லா விஷயங்களிலும் கிடைக்கிற அத்தனைத் திசைகளிலும் பறந்து திரிந்து சகலத்தையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டு மேயும் நீங்கள் கிட்டத்தட்ட 'ஜெ.வின் பார்வையிலேயே' மட்டும் இந்தத் தேர்தலை அணுகுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி எப்படி அமைய வேண்டும் என்பதையே ஜெவின் மூவ்கள்தாம் முடிவு செய்தன என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது.
இப்போது காங்கிரஸ் என்பது களத்தில் இருந்தாலும் 'இல்லையென்று' ஆகிவிட்டபிறகு அடுத்து இருக்கும் பெரிய ஓட்டுவங்கியான விஜயகாந்த் தேர்தல் மூவ்கள் படியும் ராஜதந்திரத்தை முன்வைத்துமா இந்தக் கூட்டணியின் முடிவுக்குக் கடைசியில் வந்தார் என்று நினைக்கிறீர்கள்?
திமுகவிடம் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதும் இவர்கள் என்ன தெரிவித்தார்கள் என்பதும் அப்படிப்பட்ட மூடுமந்திர ரகசியமா என்ன?
பிறகு பாரதிய ஜனதாவுடன் எப்படிக் கூட்டணி சேர்ந்தார் என்பதும்கூட எல்லாருக்கும் தெரிந்ததுதானே?
இந்த விஷயங்களில் ஜெ போட்ட முட்டுக்கட்டைதான் என்ன?
விஜயகாந்தும் திமுகவும் கூட்டணியில் வரமுடியாமல் போனது ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது கிடைக்கும் அதிர்ஷ்டங்களில் ஒன்று என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர இதில் அவர் செய்த சாதுர்யம்தான் என்ன?
சென்ற தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்ததற்கு எந்தெந்த ஓட்டுக்கள் காரணமாக இருந்தனவோ அவற்றில் நிறைய ஓட்டுக்கள் அவரை விட்டுக் கழன்றிருக்கின்றன என்பதுதான் நான் சொல்ல வருவது.
திமுகவுக்கு சாதகமான ஒரு விஷயமாக நான் நினைப்பது ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம். அதிலும் முக்கால்வாசியும் இளைஞர்கள். அவரும் இப்போது நன்றாகப் பேசத்துவங்கிவிட்டார்.
எல்லாக் கட்சிகளிலுமே 'சுமார் மூஞ்சிகள்'தாம் என்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். விஷயம் என்னவென்றால் ஜெவின் 'மூஞ்சியும்' இப்போது அப்படியொன்றும் பளிச்சென்று இல்லையென்பதுதான்.

Amudhavan said...

Umesh Srinivasan said...


\\# உட்கார வேணா வைக்கும், ஆனா நிலைக்க வைக்காது !\\

அப்படியே தப்பித்தவறி உட்கார்ந்துவிட்டால் அதிகாரிகள் வர்க்கம், ஊடக வர்க்கம், நீதித்துறை மூன்று பெரிய வர்க்கங்களும் அவரை எந்த அளவுக்குக் காப்பாற்ற முடியுமோ அந்த அளவுக்குக் காப்பாற்றும். அதையும் தாண்டி அவர் மேலும் மேலும் மோசமாக நடந்துகொண்டு அவராகவே கீழே விழுந்தால்தான் உண்டு.

Anonymous said...

//வாங்க வவ்வால், எல்லா விஷயங்களிலும் கிடைக்கிற அத்தனைத் திசைகளிலும் பறந்து திரிந்து சகலத்தையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டு மேயும் நீங்கள் கிட்டத்தட்ட 'ஜெ.வின் பார்வையிலேயே' மட்டும் இந்தத் தேர்தலை அணுகுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்.//

அமுதவன் சார்,
I agree with you and your post.

நான் நேரடியாகவே சொல்லிடுறேன். வவ்வால் நம்ம ஆளு. ஒன்னும் தப்ப எடுத்துக்க மாட்டார்.

இந்த விஷயத்தில வவ்வால் கொஞ்சம் ஜெ. க்கு சொம்பு தூக்குறது மாதிரி தெரியுது. ஆனாலும் மற்ற எல்லா விஷயத்திலும் Mr. Perfect ஆக இருப்பதால், நாம் அவர மன்னிச்சு விட்டிடுவோம்.

வவ்வால்,
ங்ன்னா, ஏதோ தெரியாம வாய் தவறி சொல்லிட்டேன். அதனால இந்த தம்பிய கொஞ்சம் மன்னிச்சி விட்டுருங்க. இதுக்காக இன்னும் ஒரு 3 பக்கத்துக்கு கம்மெண்டு எழுதுற அளவுக்கு நான் ஒன்னும் worth இல்லீங்க்ணா.

வவ்வால் said...

அமுதவன் சார்,

//ஜெ.வின் பார்வையிலேயே' மட்டும் இந்தத் தேர்தலை அணுகுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்.//

என்ன இப்படி முடிவு கட்டிடீங்க?

ஆனால் நீங்க எப்படி நினைத்து சொன்னீர்களோ தெரியாது, நான் அரசியல் நோக்கில் பார்க்கும் போது சில "பேராமீட்டர்களை" கணக்கில் எடுப்பது வழக்கம், அப்படி பார்க்கும் போது அம்மையார் "முன்னுக்கு" வருகிறார்,எனவே அதனை சொல்வதால் அப்படி நினைக்க வைக்கிறது போலும்.

விருப்பு வெறுப்பற்ற முறையில் "சில அளவுக்கோள்களை" மட்டுமே பார்க்கிறேன் , அதனால் இன்னாருக்கு சப்போர்ட் என்பதல்ல.

இம்முறை தேர்தலை பொறுத்த வரையில் முன் தயாரிப்பில் , மற்றும் சில முடிவுகளை உடனே எடுப்பதில் அம்மையார் "ஸ்கோர்" செய்துவிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அவர்கள் சிறப்பான ஆட்சி வழங்கினார்கள் ,சிறந்த தலைவர் என்றெல்லாம் நான் 'கருதவில்லை".

//ஓட்டுவங்கியான விஜயகாந்த் தேர்தல் மூவ்கள் படியும் ராஜதந்திரத்தை முன்வைத்துமா இந்தக் கூட்டணியின் முடிவுக்குக் கடைசியில் வந்தார் என்று நினைக்கிறீர்கள்?//

வி.காந்த் எதன் அடிப்படையில் முடிவெடுத்து கூட்டணி வைத்தார் என்பதற்கு சில பல காரணங்களை கூற முடியும்.

ஆனால் எதனை வைத்து திமுக உடன் சேரத்தயங்கினார், சேர்வதை தவிர்த்தார் என்பதை எளிதாக சொல்ல முடியும்.

பொதுவாக ஒரு லாஜிக் உண்டு ,நடக்க வாய்ப்புள்ளதை கணக்கில் எடுப்பது ஒரு வகை,இன்னொரு வகை நடக்க வாய்ப்பு இல்லை என முடிவெடுத்து ,கழித்து கட்டி செய்வது இதனை "டிடெக்‌ஷன்" மெத்தட் என்பார்கள்.

வி.காந்த திமுக உடன் சேர்வது "தேவையில்லாத" நடக்க வேண்டாம் என நினைத்த ஒரு " நிகழ் தகவு",எனவே அவர்களுடன் அணி அமைக்க முயல்வதை முடிந்தவரையில் தவிர்த்தார் என்பதே உண்மை.

முதல் காரணம் , கல்யாண மண்டப இடிப்பை முன் வைத்து திமுகவை எதிர்த்து தான் அரசியல் இயக்கமே ஆரம்பித்தார்.

கடந்த பல காலமாக அதனை வைத்து விமர்சித்து விட்டு ,அவரோடு மீண்டும் கூட்டணி வைத்தால் " பொருந்தாக்கூட்டணி" ஆகிவிடும் என்பதை உணர்ந்திருந்தார்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை,நண்பனும் இல்லைனு கூட்டணி வைக்கலாம்,ஆனால் அது ஒரே அடியாக நம்பகத்தன்மையை பாதிக்கும் என்பதை ,வி.காந்த் உணர்ந்திருந்தார் என்பதே உண்மை.

அடுத்தது அவரது உண்மையான இலக்கு 2016 சட்ட மன்ற தேர்தல், அதற்கு திமுக கூட்டணியில் சேர்ந்தால் முட்டுக்கட்டை தான் வரும்.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் இரு துருவ அரசியலே உள்ளது, இதில் அ.திமுகவை காலி செய்வது விட்டு ஒரு துருவமாக மாறுவதற்கு உள்ள வாய்ப்பை விட திமுகவை இடப்பெயர்த்து விட்டு அங்கு வி.காந்த் வருவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

காரணம் மஞ்சத்துண்டின் வயோதிக நிலை, வாரிசு சண்டை என எதிர்காலத்தில் பலவீனமாகும் வாய்ப்பு திமுகவிற்கு அதிகம் உள்ளது.

வி.காந்திற்கு அரசியல் தெரியலைனு பொதுவாக குற்றம் சொல்லப்பட்டாலும் , இது போல சில எதிர்கால முடிவுகளில் உறுதியான பார்வை இருக்கு என்றே நம்பத்தோன்றுகிறது.

எனவே வி.காந்த் திமுக பக்கம் போய் , அவர்களை பலமாக்க விரும்பவில்லை, அதே சமயம் முடிந்த அளவுக்கு வாக்குகளை வாங்கவும், தேர்தல் செலவுகளை சமாளிக்கவும் பிஜேப்பியை பயன்ப்படுத்திக்கொண்டுள்ளார்.

இத்தேர்தலில் வெற்றி என்பதை விட "காசு செலவழிக்காமல்" கடந்தாலே போதும் என்ற மனநிலை :-))

# திமுக எந்தளவுக்கு கொள்கை ரீதியாக பலவீனமாகியுள்ளது என்றால் 'கழற்றிவிடப்பட்ட" கம்யூனிஸ்ட்கள் கூட திமுகவினை வேண்டாம் என ஒதுக்கும் அளவுக்கு என்றால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

//அதிர்ஷ்டங்களில் ஒன்று என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர இதில் அவர் செய்த சாதுர்யம்தான் என்ன?//

நீங்க சொன்ன அதிஷ்டமும் ஒன்றாக இருக்கலாம், "luck favours the brave" என்பார்கள்!

இப்படி ஆகும் என ஒரு கணிப்பில் செய்தார்கள்,அப்படியே ஆயிற்று ,காக்கா உட்கார பனம்பழம்!

தொடரும்....

வவ்வால் said...

தொடர்ச்சி...

//சென்ற தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்ததற்கு எந்தெந்த ஓட்டுக்கள் காரணமாக இருந்தனவோ அவற்றில் நிறைய ஓட்டுக்கள் அவரை விட்டுக் கழன்றிருக்கின்றன என்பதுதான் நான் சொல்ல வருவது.//

உண்மை!

ஆனால் கழன்ற ஓட்டுக்கள் எல்லாம் "ஒரே குடையின் கீழ் திரளாமல்" பார்த்துக்கொண்டது அம்மையாரின் கைங்கர்யம் அல்லது அதிஷ்டம் எனலாம் :-))

அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று , திமுக பக்கம் போனால் வி.காந்தின் எம்.எல்.ஏக்களை உடனே அணி மாற வைக்கப்போவதாகவும் ,பொறியியல் கல்லூரிக்கு சிக்கல் வரும் என்றும் "தகவல் பரிமாறப்பட்டதாம்".

ஒரு ஸ்கூப் நியூஸ் சொல்கிறேன் , மாமண்டூர் அருகே முன்னர் இ.எஸ்.ஏழுமலை பொறியியல் கல்லூரி என ஒன்று இருந்தது, கல்கி சாமியார் போல ஒரு சாமியார் தான் நடத்தினார் ,பின்னர் கொலை வழக்கில் சிக்கவே "கல்லூரியை மூடிவிட்டு எங்கே எனத்தெரியாமல் காணாமலே போய்விட்டார்.

அப்பழைய கல்லூரியின் இடம் இப்போ யாரிடம் இருக்கு என்ற கேள்வியின் பின்னால் சில மர்மங்கள் இருக்கு, வருங்காலத்தில் செய்தியானால் 'ஹி..ஹி எனது தீர்க்க தரிசனத்தினை நினைவு கூறவும்!

#//விஷயம் என்னவென்றால் ஜெவின் 'மூஞ்சியும்' இப்போது அப்படியொன்றும் பளிச்சென்று இல்லையென்பதுதான்.//

சுமார் மூஞ்சி என்றாலும் அரசு எந்திரம் கையில் இருப்பதால் "சூப்பர் மூஞ்சாக" புரொஜெக்ட் செய்வார்கள் :-))

அம்மையார் பக்கமும் "ஓட்டுக்கூட்டணி" இல்லை அதே போல திமுக பக்கமும் ஓட்டுக்கூட்டணி சேராமல் பார்த்துக்கொண்டாச்சு, இப்போ "one to one battle" நிலைமை, மற்ற கூட்டணிகள் எல்லாம் தனிக்கிரகமா நிற்பதால் "முடிவில்" மாறுதலை உருவாக்காது.

இரு திராவிட பெருச்சாளிகளில் யார் மிக அதிக இடங்களை கைப்பற்றுவது என்பதே போட்டி. அனேகமாக காற்று அம்மையாருக்கே சாதகமாக வீசுகின்றது. அப்படியே மெயின்டைன் செய்து கப்பலை ஓட்டினால் "30" இடங்கள் வரையில் கிடைக்க கூடும்.

எந்த வித திடீர் திருப்பம் "அனுதாப அலை" என இல்லாமல் தேர்தல் நடக்குமானால் "அம்மையாரே அதிக இடங்களை" கைப்பற்றுவார்.

மேற்கண்டதை "தேர்தல் முடிவு" வந்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்வோம், அது வரையில் நாம இருப்போம்னு நம்பிக்கை வைப்போம் :-))

Unknown said...

அம்மையார் & மஞ்சத்துண்டின்..

வவ்வால் கொஞ்சம் ஜெ. க்கு சொம்பு தூக்குறது மாதிரி தெரியுது

காரிகன் said...

வவ்வால் தன் நிலையை தெளிவாக சொல்லிவிட்ட போதிலும் விடாமல் அவர் மீது அரசியல் சாயம் பூசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். (அரசியல் விஷயம் என்பதால் ஒரு அரசியல்வாதியின் tone.).எந்த விஷயத்திலும் தனக்கு தோன்றுவதை ஒருவர் சொன்னால் அதில் எதோ சார்பு நிலை இருக்கத்தானே செய்யும்? இதில் என்ன தவறு?. வவ்வால் நீங்கள் தொடருங்கள்...

வவ்வால் said...

காரிகன்,

நல்ல நேரத்தில் வந்தீங்க, ஆதரவுக்கு நன்றி!

இந்த "சொம்பு"பின்னூட்டங்களை முன்னரே பார்த்தேன் ,சரி இன்னும் கொஞ்சம் வெயிட் செய்வோம், இப்போ தான் ரெண்டு சொம்பு கொடுத்திருக்காங்க, வெயிட் செய்தால் நெறைய சொம்பு தேறினாலும் தேறும் ,அப்படியே அள்ளிக்கிட்டு போய் ஜம்னாலால் சேட் கடையில எடைக்கு போட்டால், குவாட்டர் கீட்டர் வாங்கலாம்னு பார்த்தேன் அவ்வ்!

யே யப்பா ராசாக்களா ,கொடுக்கிறது தான் கொடுக்கிறீங்க , வெள்ளி சொம்பா கொடுங்க , பித்தாள சொம்புக்கு பைசா அதிகம் கிடைக்காது :-))

# நம்ம ஊரின் சாபக்கேடே வகைதொகை இல்லாம முத்திரைய குத்தித்தள்ளுவாங்க அவ்வ்!

ராசா பாட்டு நல்லா இல்லைனு சொல்லிட்டா ,நீ ரஹ்மான் ரசிகன்! ரஹ்மான் பாட்டு நல்லா இல்லை சொல்லிட்டா நீ ராசா ரசிகன் ,ஏனய்யா எம்.எஸ்வி , இல்லை ஹாரிஸ் ரசிகனா இருக்கக்கூடாதானு கூட யோசிக்க மாட்டாங்க அவ்வ்!

இன்றைய அரசியல் நிலையில் "முன்னணி வகிக்கும்" அணியை ஏன் அப்படி முன்னணி நிலை உருவாச்சு என அலசி சொன்னால், அம்மையாரு என்னம்மோ எனக்கு மாச சம்பளம் கொடுக்கிறாப்போலவே பேசுறாய்ங்க அவ்வ்!

இதுக்கே இப்படி சொல்லுறாய்ங்களே ,அகில இந்திய அளவில் காங்கிரசை விட பிஜேபி அணி தான் முன்னணியில் இருக்கு , ஆட்சி புடிக்குதோ இல்லையோ ,காங்க்கிரசை விட கூடுதல் இடங்கள் பிஜேபிக்கு உறுதி, அதை சொன்னால் என்னை ஆர்.எஸ்.எஸ் இல் சேர்த்து காவிக்கோவணமே கட்டிருவாய்ங்களோ அவ்வ்!

தேர்தல் முடியிற வரையில் எதாவது மலைக்குகையில போய் அஞ்ஞாத வாசம் செய்யலாமானு பார்க்கிரேன் அவ்வ்!

குட்டிபிசாசு said...

அமுதவன் ஐயா,

தற்போது நாளேடுகளில் ஜெயாவின் தேர்தல் முன்னெடுப்புகளை பெரிய அளவில் புகழ்ந்து கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றை விமர்சிக்கும்விதமாக தங்களின் கட்டுரை உள்ளது நல்லதொரு மாற்றுப்பார்வை. ஆனால் அதேசமயம், வவ்வால் சொன்னதுபோல, தற்போது தேர்தல்களத்தில் என்னதான் கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும் எல்லோரும் கிட்டத்தட்ட தனியாகவே நிற்கிறார்கள். திமுகவின் உட்கட்சிக் குழப்பங்களால், அது பலகீனமாக உள்ளது, காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும் தனித்து நின்று சாதனைகள் பல செய்ய உள்ளார்கள். தேமுதிகவும் கணிசமாக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. கூட்டணி என்றாலும் மதிமுக, பாமக ஓட்டுகள் கூட அவர்களுக்கு வர வாய்ப்பில்லை. பாஜக கூட்டணிக்கு முஸ்லீம் ஓட்டு கிடைக்காது. அவ்வகையில் இச்சூழ்நிலை ஜெயாவிற்கு அனுகூலமாகவே இருக்கும்.

// புதிய வாக்காளர்கள் நிறையப்பேர் மோடிக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள்.

அவர்களில் ஒரு கணிசமான சதவிகிதம்பேர் கேஜ்ரிவால் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.//

இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அப்படி நடந்தால் பெரு நகரங்களான சென்னை, பெங்களூரு போன்ற ஏ சென்டர்களில் நடக்கலாம். நீங்கள் மேல்தட்டு மக்களை கணக்கில் வைத்தே பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். அவர்கள் ஓட்டு கூட போடமாட்டார்கள். இணையத்தில் புழங்குபவர்களில் ஓட்டுபோடுபவர்கள் என்று பார்த்தால் 20% சதவிகிதம் என்பதே பெரிய விஷயம்.

// முஸ்லிம்களின் ஓட்டுக்கள் இல்லை.

கம்யூனிஸ்டுகளின் ஓட்டுக்கள் இல்லை.

புதிய தமிழகம் கட்சியினரின் ஓட்டுக்கள் இல்லை.

மிகப்பெரிய பலமாக இருந்த தேமுதிகவின் ஓட்டுக்கள் இல்லை.
அந்த ஐந்து சதவிகித ஓட்டுக்கள் இன்றைக்கு அதிமுகவிற்கு இல்லை. //

இந்த 5% சதவிகித ஓட்டிற்கு 40 தொகுதிகளில், அவர்கள் கேட்கும் 10-15 தொகுதிகளாவது கொடுக்கவேண்டிவரும்.

// வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால் குறிப்பாக பிராமணர்கள் தங்கள் வாக்குகளை என்றென்றும் ஜெயலலிதாவுக்குத்தான் போடுவார்கள்.

இப்போது அவர்களுக்கே அவர்களுக்கென்று கட்சியும் சின்னமும் ‘கேண்டிடேட்டும்’ பிரதம வேட்பாளரும் கிடைத்துவிட்ட பிறகு அவர்கள் எதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்கப்போகிறார்கள்?//

இவ்வளவு அப்பாவிகளாக அவர்கள் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. அதிமுக ஜெயித்தால் எப்படியும் பாஜக கூட்டணிக்குத் தான் போகப்போகிறது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

குட்டிபிசாசு said...

//இந்த விஷயத்தில வவ்வால் கொஞ்சம் ஜெ. க்கு சொம்பு தூக்குறது மாதிரி தெரியுது. ஆனாலும் மற்ற எல்லா விஷயத்திலும் Mr. Perfect ஆக இருப்பதால், நாம் அவர மன்னிச்சு விட்டிடுவோம்.//

ஏலியன்,

நான் சொன்ன கருத்தைப் பார்த்து என்னையும் சொம்பு தூக்குவதாக சொல்லிடப் போரிங்க. நான் ஜெயாவை ஆதரிக்கவில்லை, அவர் ஜெயிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தான் சொல்கிறேன்.

Anonymous said...

வாங்க குட்டி பிசாசு,

ஹி..ஹி..ஹி.....
உங்கள் கருத்துதான் என் கருத்தும்.
மக்களுக்கு வேறு வழியில்லை என்பதால், மஞ்சள் காமாலையை விட sorry மஞ்சள் துண்டை விட இலையே better என்று மக்கள் இலைக்கு தான் வாக்களிப்பார்கள். ஒரு தமிழ் நாட்டு குடிமகனாக நானும் மஞ்சளை விட இலை better என்று தான் சொல்வேன்.
தன் திறமையினால் ஜெ. ஜெயிக்கப்போகிறார் என்பதை விட, வேறு choice இல்லாததால் அவர் ஜெயிக்கப் போகிறார் என்பது தான் என் கருத்து.

[[[எனவே தனது செல்வாக்கை அதிகரிக்கவில்லை எனினும்,அடுத்தவங்க செல்வாக்கு அதிகரிக்காமல் ,வலுவான கூட்டணி அமையாமல் செய்து விட்டாரே :-]]]

தன் திறமையினால் தான் எதிரிகளை எல்லாம் வீழ்த்தி அவர் ஜெயிக்கப் போகிறார் என்று வவ்வால் கூறுகிறார்.
மேற்கண்ட இந்த வாக்கியத்தினால் தான் நான் அப்படி சும்மா ஜாலிக்காக சொன்னேன். மற்றபடி முத்திரையெல்லாம் குத்தவில்லை. வவ்வால் எப்பக்கமும் சாராத நடுநிலைவாதி தான். இது எனக்கு நன்றாக தெரியும்.

வவ்வால் said...

வேற்றுகிரகம்,

//தன் திறமையினால் தான் எதிரிகளை எல்லாம் வீழ்த்தி அவர் ஜெயிக்கப் போகிறார் என்று வவ்வால் கூறுகிறார்.
மேற்கண்ட இந்த வாக்கியத்தினால் தான் நான் அப்படி சும்மா ஜாலிக்காக சொன்னேன்//

ஜாலியா சொல்வீரய்யா சொல்வீர்,ஏன் சொல்ல மாட்டீர்?

தேமுதிக, பாமக,காங்கிரஸ் கூட்டணி அமையும் (தேர்தல் நிதிக்காக இக்கூட்டணி) அதனுடன் திமுக சேரும் என்பதான நிலை உருவாச்சு, 3 பேர் விடுதலைப்பிரச்சினையில் காங்கிரஸ் உளறி சொதப்பவே , அப்படி ஒரு கூட்டணி அமையவில்லை. இதற்கு காரணம் அம்மையாரின் அறிக்கை தானே?

இம்முறை வலுவான கூட்டணி எப்பக்கமும் இல்லை என்ற நிலையில் ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தினை வைத்து தேர்தல் காலத்தில் சில "வசதிகளை" மக்களுக்கு செய்து நல்லப்பேர் வாங்கிடலாம்னு திட்டம்.

ஆங்காங்கே அரசின் மூலம் பல திட்டங்களை அவசரமாக செய்து வருகிறார்கள்,இவ்வசதி மற்றக்கட்சிகளுக்கு இல்லையே?

என்னைப்பொறுத்த வரையில் அம்மையார் ஒரு பரிசோதனை செய்துப்பார்க்க இந்நாடாளுமன்றத்தேர்தலை பயன்ப்படுத்திக்கொள்கிறார்.

நெறைய இடம் கிடைச்சால் லாபம், இல்லையா ,இம்முறை கிடைத்த பாடத்தினை வைத்து அடுத்து சட்டமன்றத்துக்கு கூட்டணி வைக்கலாம்.

# திமுகவின் நம்பகத்தன்மை 'மற்ற அரசியல் இயக்கங்களிடையே மிகவும் சரிந்து விட்டது.

பல கட்சிகளுக்கும் தூது விட்டும் ,திமுகவினை கண்டுக்கொள்ளவில்லை.

கடைசியாக கழட்டிவிடப்பட்ட கம்யூனிஸ்ட்கள் கூட திமுகவினை கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் திமுக பக்கம் போனால் தலா 2 எம்பி சீட் கொடுத்திருப்பார் மஞ்சத்துண்டு,ஆனால் போகலையே,ஏன்?

இம்முறை திமுகவினை மக்கள் விரும்பினார்களோ இல்லையோ மற்ற அரசியல் இயக்கங்கள் விரும்பவில்லை.

# என்னைப்பொறுத்தவரையில் ஒரு பார்வையாளானாகவே கருத்தினை சொல்லி இருக்கிறேன், நடுநிலை என அறிந்தால் ,நன்றி!

இதுக்கு முன்னர் ரெண்டு ,முறை தான் ஓட்டே போட்டிருக்கேன் ,ரெண்டு முறையும் சுயேட்சைக்கே போட்டேன் ,அம்புட்டு கடுப்பு அரசியல் கட்சிங்க மீது அவ்வ்!

இம்முறை நோட்டா போடலாம்னு பார்க்கிறேன்!

Anonymous said...

//இம்முறை நோட்டா போடலாம்னு பார்க்கிறேன்! //

தலைவரே,
நானும் இந்த வாட்டி நோட்டா வோட்டு தான் போடப்போறேன் (95%). ஒரு 5% ஆம் ஆத்மிக்கு போடலாமான்னு ஒரு யோசனையும் இருக்கு.

ஜோதிஜி said...

தனியாகத்தான் ஒரு பதிவாக எழுத வேண்டும் போல் இந்த அருமையான ஆக்கம் பல சிந்தனைகளை தூண்டியது.

ஒற்றை வரியில் சொல்லப்போனால்

இந்தம்மாவின் கட்சி ஜெயிக்க வேண்டும். ஆனால் இழுபறியில் செத்து சுண்ணாம்பாகி வெல்வோமா? தோற்று விட்டோமோ? என்ற பயத்தை உருவாக்கி ப. சிதம்பரம் போல.

திமுக மறுபடியும் மேலே வந்தால் கொஞ்சூண்டு நம்பிக்கை உள்ள (அப்பாற்பட்ட சக்தி ஏதோவொன்று இருப்பதாக உள்ளே) நம்பிக்கையும் என்னில் இருந்து கழன்று போய்விடும். என் எண்ணம் மாறிவிடும்.

A Simple Man said...

@Amudhavan, @ Vavval,
is there any changes in view in the past 2 weeks ?!

Post a Comment