Wednesday, April 23, 2014

இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் சூர்யா சிறப்பிதழ்




இந்தியா டுடே நடிகர் சூர்யாவைப் பற்றிய சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதி. இன்றைய தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி, கமலஹாசன் இவர்களுக்கு அடுத்து ஒரு நடிகரின் நடிப்பாற்றலுக்கு சிறப்பிதழ் வெளியிட்டுப் பேச முடியும் என்றால் அது 
சூர்யாவுக்கு மட்டுமே முடியும்.

காரணம், அதற்கான ‘சரக்கு’ சூர்யாவிடம் மட்டும்தான் உள்ளது. இதையே அகில இந்திய ரீதியில் வெளியிட முடியுமானால் ஆமீர்கானுக்கு       மட்டும்தான் வெளியிடமுடியும் என்று நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம் இப்போது தமிழில் இயங்கிவரும் வார மாத இதழ்களில் இத்தனை உயர்தரத்தில் பளபளவென்று ஆர்ட் காகிதத்தில் இவ்வளவு பெரிய வடிவமைப்பில் சிறப்பிதழ் வெளியிடுவதென்பதும் இந்தியா டுடேக்கு மட்டும்தான் சாத்தியம் என்றே நினைக்கிறேன்.

மலரை ஒரு புரட்டுப் புரட்டுவோம்.

முதலாவது கட்டுரையே ராஜன் குறை என்பவரின் கட்டுரை. ‘அசத்தல் நாயகன்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கொஞ்சம் மலையாள நெடி அடித்தாலும், ‘கேரளாவில் மம்முட்டியும் மோகன்லாலும் ஏற்று நடிக்கக்கூடிய பாத்திரங்களைப் பரிசீலித்தாலேயே சூர்யா போன்ற திறன்மிகு நடிகர்களுக்குப் பல வாய்ப்புகள் புலப்படலாம்’ என்று கருத்து கந்தசாமியாய் அதிகப்பிரசங்கித்தனம் காட்டியபோதும் அது ஒரு நல்ல கட்டுரை.

குறிப்பாக ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை சூர்யா ஆரம்பித்து மிக மிகப் பரபரப்புடன் வெற்றிகரமாகநடத்திச் சென்று முடித்தபின்னர் அதன் அடுத்த தொடர்ச்சியை நடிகர் பிரகாஷ்ராஜ் ஏற்று நடத்துகிறார். அதில் ஒரு நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யா கலந்துகொள்ள வருகிறார். அப்போது பிரகாஷ்ராஜ் சூர்யாவைச் சீண்டும் விதமாக ஒரு கேள்வி கேட்கிறார். “சிங்கம் படத்தில் ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று ஒரு வசனம் பேசுவீர்களே…சிங்கம்-2 படத்தில் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார்.

அதில் ஒரு சிறிய எள்ளல் இருந்தது. சூர்யாவைத் தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்யவில்லை. அத்தகைய வசனங்களைப் பேசும் கதாநாயகப் பாத்திரம் குறித்த கிண்டல் லேசாக இருந்தது.
சூர்யா பதிலுக்கு முகத்தை மிகவும் சீரியசாக வைத்துக்கொண்டு “பாஞ்சு அடிச்சா பத்து டன் எடைடா” என்பது போல ஏதோ ஒரு பஞ்ச் டயலாக்கை பதிலாகச் சொன்னார். அவர் சொன்ன விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதைக் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.
பஞ்ச் டயலாக் பற்றிய பிரகாஷ்ராஜின் கிண்டலுக்கு மிகவும் சீரியசாகவும் பணிவாகவும் பதில் சொன்னார் சூர்யா. அவர் கிண்டலைப் புரிந்துகொண்ட தொனியும் அதில் இருந்தது. இருந்தாலும் இது என்னுடைய தொழில் என்று உணர்த்தும் தொனியும் இருந்தது. அதைப் பார்த்தபோது மிகவும் குறிப்பிடத்தகுந்த தருணம் இது என்று தோன்றியது.


இரா நரசிம்மனின் ‘சூர்யா எனும் மனிதன்’ கட்டுரை ‘சிவகுமாரின் மகன் என்றாலும் சூர்யா வாரிசு நடிகராக வளர்ந்திருக்கவில்லை. முதல் வாய்ப்பும் சரி, அதன்பின் கிடைத்த வெற்றிகளும் சரி அவரது முயற்சியால் கிடைத்தவைதாம். ஆனால் தந்தை சிவகுமாரிடம் இருந்து அவர் அருங்குணங்களை வரித்துக் கொண்டுள்ளார்’- என்பது சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல அழகான கச்சிதமான படப்பிடிப்பு.

இயக்குனர் பாலாவின் ‘என் தம்பி’ கட்டுரை மிகச்சிறியதே என்றபோதிலும் அருமையான கட்டுரை. முடிந்தவரை அவர் ‘எல்லாவற்றையுமே’ சொல்லிவிட்டார் எனலாம். கொஞ்சம் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் போகும் பாலா ‘நான் விரும்பிய பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைத்தவர் சிவகுமார் சார். அதனால் அண்ணனாக சூர்யா விரும்பிய பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நானும் என்னளவில் முன் நின்றேன். வாழ்க்கையில் அவனுக்குக் கிடைத்த பெரிய வரம் அந்தப் பெண்தான் என்று சொல்வேன். அவ்வளவு அன்பான அக்கறையான மனுஷி’ என்று சொல்லும் பாலா கூடவே இன்னொன்றையும் குறிப்பிடுகிறார்.

‘நான் யார் முன்னாலும் தயங்காமல் சிகரெட் பிடிப்பவன். ஆனால் சூர்யா முன்னால் ஒரு சிகரெட் முடித்துவிட்டு அடுத்த சிகரெட்டை எடுத்தாலே அவன் முகம் வாடிவிடும்’ என்று சொல்லி சூர்யா முன்னால் சிகரெட் பிடிக்கத் தயங்குவதாகக் கூறும் இடத்தில் நிச்சயம் சூர்யா அடைந்திருக்கும் மரியாதைகள் வரையறுக்கப்படுகின்றன.

‘சூர்யா எனும் வளர்பிறை’- என்ற ஆர்.எஸ். அந்தணன் கட்டுரை நல்ல அலசல். முக்கியமான ஒவ்வொரு திருப்பம் ஏற்படுத்திய படங்களையும் அலசிக்கொண்டே வருகிறார் அந்தணன். அவரது முத்திரை இந்த இடத்தில் அழகாக விழுந்திருக்கிறது. ‘ஒவ்வொரு படத்தின் வெற்றிக்குப் பின்னாலும் சூர்யாவின் நடிப்பு மட்டுமல்ல; அதைத் தாண்டிய உழைப்பும் இருந்தது’

இயக்குனர் ஹரியின் கட்டுரையும் ‘நான் உதவி இயக்குனராக இருந்தபோதே சூர்யாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்ற பாசக் குறிப்புடனேயே ஆரம்பிக்கிறது. ‘ஒரு நடிகர் என்பதைத் தாண்டி படப்பிடிப்புத் தளத்தில் எல்லாருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்’ என்று ஹரி சொல்லும் தகவல் முக்கியமானது.

எத்தனைச் சிறப்பான நடிப்பாலும் ஏற்படுத்த முடியாத உயர்வை மக்கள் மனதில் சடாரென்று ஏற்படுத்திவிடக்கூடிய வார்த்தை இது.

இம்மாதிரியான வார்த்தைகள்தாமே எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் அத்தனை உயர்ந்த சிம்மாசனத்தை ஏற்படுத்தித் தந்தது………….

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பார்க்கறியா?” என்ற வசனத்தை வெறியுடன் அவர் பேசிய விதத்தாலேயே அந்த வசனம் பெரும் புகழ் பெற்றது’ – என்பது ஹரியின் வார்த்தைகள். அது எவ்வளவு உண்மை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்தப் படம் வேறொரு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது அதில் நடித்த கதாநாயகர் அதே வசனத்தின் மொழிபெயர்ப்பை ஒரு விழாவில் சொல்லிக்காட்டியபோது அது கொஞ்சம்கூட எடுபடாமல் தொய்ந்து துவண்டு போனதையும் சேர்த்துப் பார்த்திருந்தால்தான் ஹரியின் இந்தக்கூற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

சிறப்பிதழ் என்று கொண்டுவந்துவிட்டு அதில் அந்தக் கதாநாயகனின் நேர்காணல் இல்லாவிட்டால் எப்படி?

சூர்யாவின் நேர்காணல் சூர்யா தன்னை முழுவதும் உணர்ந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்ற, மனம் திறந்து ஆத்மார்த்தமாகப் பேசும் நேர்காணலாகவே உள்ளது.

‘ஹீரோவாக இருப்பவர்கள் அர்னால்டாக இருந்தாலும் ஜாக்கிசானாக இருந்தாலும் அதைத் தேர்வு செய்கிறவர்கள்தான் முழுமையான நடிகனாக இருக்க முடிகிறது’ என்பதில் ஆரம்பித்து-

‘நீ உன்னை விரும்பத் தொடங்கினால் எல்லாரும் உன்னை விரும்புவார்கள்’ என்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்………’என்று தொடர்ந்து-

மணவாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது ‘நான் என் குடும்பத்தை விட்டோ ஊரை விட்டோ அங்கு போகவில்லை; எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஜோ தான் இங்கே வந்திருக்கிறார்’- என்ற வார்த்தைகளில் மணவாழ்க்கைப் பற்றிய ஈகோக்களைச் சிதறடிக்கும் புரிதல் தனக்கு இருப்பதை வெளிப்படுத்தி-

‘இன்றைக்கும்  விஜய் சாருக்கும்  அஜீத் சாருக்கும் பெரிய வியாபாரம், பெரிய ஓபனிங் இருக்கின்றன’ என்பதை மரியாதையுடன் சொல்லி ‘எனக்கான ஆசீர்வாதம் எனக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் கிடைத்திருக்கிறார்கள்’- என்கிற முத்தாய்ப்பில் முடித்திருப்பது அருமை!

சி.முருகேஷ்பாபுவின் கட்டுரை மற்றவர்கள் பேசினதையே பேசினாலும் ‘மற்ற நாயகர்களின் படங்களில் ஒரு காட்சியில் தோன்றுவதற்கு எந்த ஹீரோ அழைக்கப்படுகிறாரோ அவருக்குத்தான் திரையுலகில் தனி மரியாதை இருப்பதாக அர்த்தம்’ என்று சொல்லி சூர்யாவுக்கான முக்கியமான பிம்பத்தை வெளிப்படுத்துகிறது.

சூர்யாவின் தம்பி கார்த்தியுடையது எப்போதுமே open talk வகையறாதான். எல்லாவற்றையுமே போட்டு உடைத்துவிடுவார். அந்தப் பாணி இதிலும் தொடர்கிறது.

‘அதன்பின் எல்லாவற்றையுமே கத்துக்க ஆரம்பிச்சார். இதனால் talent என்று எதுவுமே கிடையாது. எல்லாமே கற்றுக்கொள்ளக்கூடியவை என்பதற்கு அண்ணன்தான் சிறந்த உதாரணம்’ என்கிறார்.

‘எதுவும் தெரியாமல் உள்ளே வந்தாலும் வந்தபிறகு அயராத பயிற்சிகள் மூலம் பிறரைவிடச் சிறப்பாகச் செய்யமுடியும் என்று நிரூபித்தார்’………..

.’தொடர்ந்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாலும் போகப் போக அப்படியே எல்லாம் மாறி எனக்கு அவர் குட்டி அப்பாவாக மாறிவிட்டார்.’

‘தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவரை இன்றைக்கு எப்படி எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது’ என்று தொடர்கின்றன கார்த்தியின் கலக்கல்கள்.

அடுத்து கார்த்தி முக்கியமான ஒரு விஷயத்தைத் தொடுகிறார்.

ஒரே வீட்டில் இருக்கும் இருவருக்கும் ஈகோ வரும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அந்தக் கேள்வியை எழுப்பித் தெளிவான ஒரு பதிலைச் சொல்கிறார். “அப்பா அடிக்கடி சிவாஜிசார் குடும்பத்தை உதாரணமாகச் சொல்லி ‘அவர்களைப் போல நீங்களும் ஒன்றாக இருக்கவேண்டும்’ என்று சொல்லுவார். பொதுவாக அடுத்த தலைமுறைகள் வரும்போது இடைவெளிகள் வரும் என்பார்கள். ஆனால் எங்கள் அப்பா அடிக்கடி சொல்கிறமாதிரி எங்களுக்கும் குழந்தைகள் பிறந்த பிறகும் நாங்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்கத்தான் வீடு கட்டிக்கொண்டிருக்கிறோம். பொதுவாக அண்ணன் தம்பிகளுக்குள் ஒத்துப்போகாததற்குப் படிப்பு, வருமானம், மனைவி இப்படிப் பல காரணங்கள் இருக்கும். ஆனால் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. ஒவ்வொரு சொந்தமும் வருகிறபோது நெருக்கம் அதிகரித்துக்கொண்டுதானிருக்கிறது.” என்பது கார்த்தியின் அசத்தலான பதில்.

ஷஷாங்கன் எழுதியிருக்கும் கட்டுரையும் சூர்யா ஏற்று நடித்த பாத்திரங்களைப் பற்றிய ஒரு ஆழமான அலசல்தான். ‘முழுமையான கலைஞன்’ என்பது கட்டுரையின் தலைப்பு. ‘இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை கதாநாயக நடிகர் என்றால் அவருக்கு நடனம் ஆடவும் சண்டைபோடவும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நாயக நடிகர்களுக்கான முக்கிய தகுதிப் பட்டியல் இதுதான். கூடவே நகைச்சுவையாக நடிக்கவும் தெரிந்திருந்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கலாம். இத்தனைத் தகுதிகளையும் ஒருங்கே பெற்ற தமிழ் நடிகர்கள் மிகக் குறைவு. அவர்களில் முக்கியமானவர் சூர்யா’ என்ற ஆலாபனையுடன் ஆரம்பமாகிறது அவர் கட்டுரை.

 நந்தா. பிதாமகன், காக்க காக்க, மாற்றான் என்று ஆரம்பித்து வாரணம் ஆயிரம், ஆறு, சிங்கம் என்று அவருடைய வெற்றிக்குக் காரணமான எல்லா பாத்திரங்களைப் பற்றியும் அலசுகிறார் கட்டுரையாசிரியர். 

சூர்யாவின் வெற்றிக்குக் காரணமாயிருக்கும் நுணுக்கமான விஷயம் எது என்பதை அவர் இப்படிச் சொல்கிறார். “கனமான பாத்திரப் படைப்புக்களுடன் காத்திரமான திரைக்கதையையும் உரவாக்குவதில் நிபுணரான ராம்கோபால் வர்மா இயக்கிய ரக்த சரித்ரா பாலிவுட்டுக்கு ஒரு திறமையான தென்னிந்திய நடிகனை அடையாளம் காட்டியது. சூர்யாவின் சக்திமிக்க ஒளிரும் கண்கள்தான் அவரைத் தனது படத்தில் நடிக்கவைக்க முக்கிய காரணம் என்று ராம் கோபால் வர்மா கூறியது சாதாரணமான வார்த்தைகள் அல்ல’- என்பவர்,

ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார். ‘சூர்யாவின் நடிப்புக்குத் தீனி போடும் படமாக அமைந்தது ஏழாம் அறிவு. அதில் போதி தர்மராக சூர்யா நடித்த காட்சிகள் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்னர் யாருமே முயற்சி செய்யாதவை. உடலை வருத்திக்கொண்டு மிகச் சிறப்பான நடிப்பை ஒரு தவம் போல் வெளிப்படுத்தக்கூடிய மிகச்சில நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை இப்படத்தின் மூலம் பெற்றார் சூர்யா’ என்பவர் ‘காதல் காட்சி முதல் சண்டைக்காட்சி வரை முழு ஈடுபாட்டுடன் நடிப்பதில் சூர்யாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு’ என்று பொதுமைப் படுத்திவிட்டு கஜினிக்கு வருகிறார்.
“இவ்வளவு இருந்தாலும் மிகவும் ஸ்டைலான, இரக்கமுள்ள தொழிலதிபராக அவர் நடித்த கஜினிதான் சூர்யாவின் வணிக மதிப்பை உச்சத்துக்குக் கொண்டுசென்ற படம் என்று சொல்லலாம். வித்தியாசமான சிகையலங்காரம், உடலெங்கும் பச்சை குத்தப்பட்ட வார்த்தைகள், சிக்ஸ்பேக் உடல் என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் சூர்யா. ‘சுட்டும் விழிச்சுடரே’ பாடலில் அசினுடன் அவர் ஆடிய ஸ்டைல் நடனம், மிக நிதானமான, அழகான முகபாவனைகள் ஆகியவை ரசிக்கவைத்தன. சண்டைக் காட்சிகளில் நரம்பு புடைக்க அவர் காட்டிய வேகம் அசர வைத்தது. படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் இதழோரம் மிதந்த மென்சிரிப்புடன் ரசிகர்களைக் கவர்ந்தார் சூர்யா’ என்று அழகாக வர்ணிக்கிறார் ஷஷாங்கன்.

எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ள ‘நாயகிகளின் நாயகன்’ என்ற கட்டுரை சிவாஜிகணேசன் பத்மினி, எம்ஜிஆர் சரோஜாதேவி, ஜெமினிகணேசன் சாவித்திரி, கமல்ஹாசன் ஸ்ரீதேவி, ரஜனிகாந்த் ஸ்ரீப்ரியா, பிரபு குஷ்பு, விஜய் த்ரிஷா, அஜித் ஷாலினி என்று திரையுலகில் வெற்றிகரமாகப் பவனிவந்த திரையுலக ஜோடிகளைப் பற்றிப் பேசுகிறது. 

சூர்யா ஜோதிகா ஜோடியை வைத்து ஆரம்பிக்கும் கட்டுரை சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சிம்ரன், பிறகு வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா வேடத்தில் வரும் சூர்யாவுக்கு ஜோடியாக முதிர் கன்னி வேடத்தில் நடித்ததைக் குறிப்பிடுகிறது.  பின்னர் லைலா, ஸ்நேகா, த்ரிஷா, பூமிகா, அசின், சமீரா ரெட்டி, தமன்னா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, ஹன்சிகா, காஜல் அகர்வால் என்று ஒருவர் விடாமல் அத்தனைப் பேரையும் அலசும் கட்டுரையாசிரியர் கடைசியில் இப்படி நிறைவு செய்கிறார். “சூர்யாவுடன் இதுவரை பணியாற்றிய நாயகியர் அனைவரும் அவர் மீதும் அவரது நடிப்பாற்றல் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார்கள். சூர்யாவுடன் எப்படியாவது ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் நாயகிகளின் எண்ணிக்கையும் அதிகம். சூர்யா எனும் நட்சத்திர நாயகனின் படத்தின் வெற்றிச் சாத்தியங்களும் அதில் நடித்தால் சுய முன்னேற்றத்துக்கு உதவும் என்ற தொழில் காரணங்களும் மட்டுமே இதற்குக் காரணமல்ல. தொழிலில் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு, தொழில் பக்தி, கண்ணியமான நடத்தை, பெண்களை மதிக்கும் இயல்பு, சக பணியாளர்கள் மீதான அக்கறை ஆகியவற்றாலும் இந்த நாயகியரைக் கவர்ந்துள்ளார் சூர்யா.’ என்று முடிக்கிறார்.

நடிகைகள் லைலாவும் பூமிகாவும் சூர்யாவுடன் நடித்த அனுபவங்கள் பற்றிப் பேசுகிறார்கள். “சூர்யாகிட்ட பிடிச்ச விஷயம் என்னன்னு ஜோ கிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க டீசென்ஸின்னு பதில் சொன்னாங்க.” என்கிறார் லைலா.

குணச்சித்திர நடிகரான மோகன்ராம் சூர்யாவைப் பற்றிக் கணிக்கிறார். “அவருடைய தந்தையைப் போல் அவரிடமும் விரும்பத் தக்க பண்புகள் அதிகம் உள்ளன. கொங்குநாட்டுப் பாரம்பரியத்திலிருந்து வரும் மரியாதை, விருந்தோம்பல் என்று அனைத்தும் கலந்த கலவை சூர்யா என்று சொன்னால் அது மிகையல்ல. ஒரு நடிகரிடம் இருக்கவேண்டிய சுயவிமர்சனத்தை, தேடலை, நெருப்பை எப்போதும் அவர் கண்களில் நாம் காணமுடியும். என் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாகட்டும், வேறு ஏதாவது பொதுவிழாவாகட்டும் எங்கு என்னைப் பார்த்தாலும் தேடிவந்து வணக்கம் சொல்லுவது சூர்யா ஜோதிகா தம்பதியினரின் பழக்கம்.’ – என்பவர் நிறையப்பேரால் விமர்சிக்கப்படும் விஷயமான சூர்யா தொலைக்காட்சியில் தோன்றுவது பற்றியும் சொல்கிறார்.- 

“பாலிவுட்டின் நாயகர்களைப்போல் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இதைத் தன் சந்தை மதிப்பு அற்புதமாக இருக்கும்போது செய்தார் என்பது அவரது தொலைநோக்குச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டு. அவர் தொலைக்காட்சியை சினிமாவுக்குப் பயன்படும் கருவியாகக் கருதுகிறார், எதிரியாக அல்ல; இதில் ஷாருக்கான், ஆமீர்கான், அமிதாப் பச்சன் ஆகியோர் பட்டியலில் சூர்யாவின் பெயரும் இருப்பது தமிழர்களான நமக்கெல்லாம் பெருமை” என்கிறார் மோகன்ராம்.

அதிரடி வில்லனான நடிகர் ராதா ரவி சூர்யா பற்றிக் குறிப்பிடும்போது “காமெடியிலும் சூர்யா கலக்குகிறார். அவர் காமெடிக் காட்சிகளிலும் கொஞ்சம் சீரியஸாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அதுதான் நல்லது. ஒரு ஹீரோ அப்படித்தான் காமெடி பண்ணவேண்டும். சீரியஸாக, டிக்னிஃபைடாக இருக்கவேண்டும். பஃபூன்தனமான காமெடிகள் காமெடியன்களுக்குத்தான் பொருந்தும்” என்பவர்-

“முன்பெல்லாம் நான் சொல்வேன். பெற்றால் ஒரு பிள்ளை பெறவேண்டும். அதுவும் சூர்யாவைப் போல் பெறவேண்டும் என்று. இப்போது அப்படிச் சொல்லமுடியாது. சிவகுமார் பெற்ற இன்னொரு பிள்ளையும் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். புராணத்தில் அண்ணன் தம்பியான விநாயகரும் முருகனும் மாம்பழத்துக்காக சண்டைப் போட்டுக்கொண்டார்கள் என்று வருகிறது.இந்த அண்ணன்தம்பிகள் அந்த மாம்பழத்தைக்கூட அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளவேண்டும். கடைசிவரை ஒற்றுமையாக இருக்கவேண்டும்” என்று வாழ்த்திமுடிக்கிறார் ராதாரவி.

சூர்யாவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்திக்கொண்ட கா.வெற்றிவேல் அதுபற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்காக சூர்யாவையும் ஜோதிகாவையும் ஒருங்கிணைத்து சூர்யா ஜோதிகாவைக் கேள்விகள் கேட்டுக் கலந்துரையாடல் செய்கிறமாதிரியான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு சூர்யாவை அணுகுகிறார்.

சூர்யா தயார்.

ஜோதிகா படப்பிடிப்பில் இருக்கிறார். 

“ஜோதிகா ஷூட்டிங்கில் இருந்து வர நேரமானதால் அவர் வீட்டிலேயே படப்பிடிப்பை வைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. நானும் சூர்யாவும் அவருடைய வீட்டிலிருந்தே காரில் ஜோதிகாவின் வீட்டிற்குச் சென்றோம்.
கொஞ்சம் தயக்கத்துடனேயே சூர்யா அந்த வீட்டிற்கு வந்தார்.

அவர் ஜோதிகா வீட்டிற்குச் செல்வது அதுதான் முதல்முறை என தெரிந்தது.

அப்போது பின்னாளில் அவர் அதே வீட்டிற்கு மாப்பிள்ளையாகப் போவார் என்று அவரும் நினைத்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்” என்று அந்த அபூர்வத் தருணத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறார் வெற்றிவேல்.

இத்தனை இருக்கும் அந்தச் சிறப்பிதழில் சூர்யாவின் தந்தை சிவகுமாரின் கட்டுரை இல்லாமல் இருக்குமா? இருக்கிறது.

முதல் வரியிலேயே தம்முடைய முத்திரையுடன் ஆரம்பிக்கிறார் சிவகுமார். “ இன்றைக்குக் காலையில் நாட்குறிப்பு எழுதும்போது சூர்யா மும்பை சென்று வந்தான் என்று எழுதுவதா வந்தார் என்று எழுதுவதா என்று ஒரு கணம் குழம்பினேன்” – தன்னைவிட அதிகமான உயரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு விஐபி மகனை, ஒரு விஐபி அப்பாவால் இதைவிடவும் சிறப்பாக அடையாளப்படுத்திவிட முடியாது.

இரண்டுபேரும் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தார்கள் என்பதைக் கோடி காட்டும்போது ‘அவர்கள் பிறந்ததிலிருந்தே சினிமாவுக்குள் வந்துவிடக்கூடாது என்று நினைத்துத்தான் வளர்த்தோம். இது தவறான துறை என்று அர்த்தமல்ல. இதில் போராடி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதில் வந்துவிடாது………..’ என்று குறிப்பிடுகிறார்.

‘இங்கு நூறுபேர் வந்தால் மூன்றுபேர் தாக்குப்பிடிக்க முடியும். அவ்வளவு ரிஸ்க்கான துறை இது’- என்கிறார்.

‘சிவகுமாரின் அடையாளத்தோடு வந்ததாக வெளியிலிருப்பவர்கள் சொல்லலாம். ஆனால் அவன் சுயம்பு. அவனாகவே உருவானான். சூர்யா என்கிற நடிகனின் வெற்றிக்கு ஒரு புள்ளியளவுகூட நாங்கள் உரிமை கொண்டாடமுடியாது’

‘மணிரத்தினம் எனக்கு இருநூறு சதவீதம் நம்பிக்கை இருக்கிறது கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். 

ஆனால் அவனிடம் அப்படி ஏதோ இருப்பதாக நான் நினைத்ததே இல்லை.  இன்னும் சொல்லப்போனால் இவனை நாங்கள் மைனஸில்தான் வைத்திருந்தோம். சின்னவன் நன்றாக வருவான். இவன் ஒரு பையனாக இருப்பான் என்றுதான் நினைத்தோம்.

அவங்கம்மாவுக்கு மட்டும் அவ்வப்போது கனவு வரும்.

ஒரு படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது  ஹீரோ வருகிற நேரத்தில் என் மகன் வர்ற மாதிரியே இருக்கு என்று சொல்லியிருக்கிறாள்’ என்று ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்றைத் தெரிவிக்கிறார்.

‘பட்டினிகிடந்து செத்தவர்களைவிட அதிகமாகச் சாப்பிட்டு அது செரிக்காமல் செத்துப் போனவர்கள் உண்டு’

‘உலகில் நிரந்தரம் என்பது எளிமை. அதனைச் சொல்லி வளர்த்தோம். எளிமை எல்லாரையும் அனுசரித்துப்போகும் பண்பு, போன்றவற்றை நாங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம்…..’

 ‘கொஞ்சம் பணம் உன்னைக் காப்பாற்றும். நிறையப் பணத்தை நீ காப்பாற்ற முடியாது’

‘ஒருவரை நீ துரத்தும்போது இருக்கிற சந்தோஷம் உன்னை ஒருவன் துரத்தும்போது இருக்காது. எங்கே நம்மைப் பிடித்துவிடுவானோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும்’

‘இப்போது சிவகுமார் இலட்சுமியின் மகன் என்கிற பகுதி குறைவாகவும், சூர்யா என்கிற நடிகனின் பகுதி அதைவிடப் பன்மடங்கு அதிகமாகவும் ஆகிவிட்டது.’

‘அவனுடைய வெற்றியைப் பார்த்து நான் புளகாங்கிதம் அடைந்து கொண்டாடுவதில்லை. காரணம்  இப்போது அவன் வாழ்க்கையை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறான். இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று நான் சொல்வேன்’

‘புகழ் எப்போது வேண்டுமானாலும் உன்னைத் தூக்கிப் போட்டுவிடும். அதனால் எப்போதுமே எளிமையாக இருக்கவேண்டும்’

‘புகழ் நிரந்தரமல்ல. பொருள் நிரந்தரமல்ல. இமயமலை உச்சியில் கொடி நாட்டலாம். அங்கு குடியிருக்கமுடியாது.’

-இவை சிவகுமாரின் கட்டுரையிலிருந்து தெறிக்கும் முத்துக்கள்.

எந்தவிஷயமாயிருந்தாலும் தமது கருத்தை சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு போகாமல் நடைபெற்ற சம்பவம் ஒன்றைத் தமது வாதங்களுக்கு சான்று காட்டி முடிப்பது சிவகுமார் வழக்கம்.
அவர் பாணியில் அழுத்தமான சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுக் கட்டுரையை நிறைவு செய்கிறார் சிவகுமார்……….

‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நடிகர்கள் நாடாளலாம் என்பதை நீரூபித்தவர் எம்ஜிஆர். அவருக்குப் பிறகு அம்மாதிரி இன்னும் யாரும் வரவில்லை. அவர் அமெரிக்கா சிகிச்சை முடிந்து வந்த நேரத்தில் அக்னிசாட்சி படவிழாவுக்கு அழைத்தோம். மருத்துவர்கள் வேண்டாம் என்கின்றனர். திரைத்துறையினரைப் பார்க்கலாம் என்ற ஆவலில் அவர் வர விரும்புகிறார். அரைமணி நேரத்துக்குமேல் இருக்கக்கூடாது என்கிற நிபந்தனையோடு அவரை அனுமதித்தார்கள்.

விழா தொடங்கி அரை மணி நேரத்தில் போகலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்போதும், இருங்கபோகலாம் என்று சொல்லி அமர்ந்திருக்கிறார் எம்ஜிஆர்.

அவர் பேசத் தொடங்கும்போது அந்த அரங்கத்துக்குள் ரஜினி நுழைகிறார்.
மொத்தக் கூட்டமும் அப்படியே திரும்பி ரஜினியைப் பார்க்கிறது.

தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை இதுதான் நிதர்சனம்’.- என்று முடிகிறது சிவகுமார் கட்டுரை.

இந்தியா டுடேயின் குறிப்பிடத்தக்க இதழாக இந்த இதழைச் சொல்லலாம்.

30 comments :

வவ்வால் said...

அமுதவன் சார்,

சூர்யா அட்டைப்பட இந்தியா டுடே ரொம்ப முன்னரே கடையில் பார்த்த நினைவு, இப்போ வேற வந்திருக்கா?

ஹாலிவுட் ஆக்டர் காலின் ஃபேரல் ஒருப்படத்தில் வந்த கெட் அப் போல இருக்குனு, இதை வச்சு ஒருப்பதிவு எழுதலாம்னு கூட நினைச்சேன். அனேகமா கதையே அதாக்கூட இருக்குமோனு ஒரு டவுட்டு அவ்வ்.

சிவக்குமார் குடும்ப தகவல்னா உங்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்துடுதே :-))

# சினிமா எக்ஸ்பிரஸ் ரேஞ்சில கட்டுரைகள் எல்லாம் இருக்கும் போல தெரியுது.

#//சுட்டும் விழிச்சுடரே’ பாடலில் அசினுடன் அவர் ஆடிய ஸ்டைல் நடனம்,//

ஹி...ஹி ஒருப்படம் போட்டிருக்கலாம் ஏன் இந்த கஞ்சத்தனம்?

# வழக்கமான உங்க எழுத்து நடையில், இந்தியா டுடேவை சுருக்கமாக படிக்க வச்சிட்டிங்க :-))

# உங்க கட்டுரை எதுவும் போடலையா? அதைப்பத்தி செய்திக்காணோம்?

#//அவர் பேசத் தொடங்கும்போது அந்த அரங்கத்துக்குள் ரஜினி நுழைகிறார்.
மொத்தக் கூட்டமும் அப்படியே திரும்பி ரஜினியைப் பார்க்கிறது.

தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை இதுதான் நிதர்சனம்’.- என்று முடிகிறது சிவகுமார் கட்டுரை.//

இதே போல எம்சிஆர் கூட ஒரு அனுபவம் சொல்லி இருக்கார், ஆரம்பத்துல ஒரு ஹீரோ பிரபலமாக இருந்த போது ,மக்கள் அவரை சூழ்ந்துக்கிட்டாங்கனு,பின்னர் அலங்கார் தியேட்டரில் எம்சிஆர் ஹீரோவா நடிச்ச படம் பாக்க போனப்போது அந்த ஹீரோவக்கண்டுக்க ஆளேயில்லை, ஆனால் எல்லாம் எம்சிஆரை சூழ்ந்துக்கிட்டாங்க, மக்கள் இப்படித்தான் என ,அவரது வாழ்க்கை வரலாறோ(நான் ஏன் பிரந்தேன்) எதுலவோ சொல்லி இருப்பார்.

#முன்ன மாதிரி இந்தியா டுடேய் புக்கு இல்லை ,ரொம்ப சவ சவனு இருக்குனு வாங்குறதேயில்லை, தேர்தல் நேரமாச்சேனு ரெண்டு தடவை வாங்கினேன், அதுக்கு பேசாம தினமலரையே படிச்சிக்கலாம் போல இருக்கு கட்டுரைகள் எல்லாம் அவ்வ்!

எஸ்.குருமூர்த்தி எப்படி நீலகிரியில் சொதப்பினார்னு ஒரு பக்கத்துல எழுதியிருப்பது செய்தித்தாள்:இல் வந்தளவுக்கு கூட இல்லை,அந்தளவுக்கு இருக்கு அவ்வ்!

வவ்வால் said...

//சிவக்குமார் குடும்ப தகவல்னா உங்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்துடுதே :-))//

என்பது ,

//சிவக்குமார் அவர்கள் குடும்ப தகவல்னா உங்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்துடுதே :-))//

என வந்திருக்க வேண்டும்!

திண்டுக்கல் தனபாலன் said...

சிவகுமாரின் கட்டுரை முத்துக்கள் ஒவ்வொன்றும் சிறப்பு...

அகரம் பவுண்டேஷன் பற்றி....???

Amudhavan said...

வவ்வால் said...
\\ஹாலிவுட் ஆக்டர் காலின் ஃபேரல் ஒருப்படத்தில் வந்த கெட் அப் போல இருக்குனு, இதை வச்சு ஒருப்பதிவு எழுதலாம்னு கூட நினைச்சேன். அனேகமா கதையே அதாக்கூட இருக்குமோனு ஒரு டவுட்டு அவ்வ்.\\

வாங்க வவ்வால், உங்கள் கண்களிலிருந்து எதுவுமே தப்பாது போல. அல்லது இம்மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டுமே காணக்கிடைக்குமா?

\\சிவக்குமார் குடும்ப தகவல்னா உங்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்துடுதே :-))\\

உற்சாகம் வருவது என்னமோ உண்மைதான். ஆனால் அத்தனையையும் பொதுவெளியில் வெளிப்படுத்துவதில்லை. எழுத எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் நானே பெரும்பாலானவற்றைத் தவிர்த்துவிடுவேன். சிலவற்றை எழுதலாமா என்று கேட்கும்போது "அதெல்லாம் எதுக்கு? வேணாமே" என்று தவிர்த்துவிடுவார் சிவகுமார் சார்.

\\# சினிமா எக்ஸ்பிரஸ் ரேஞ்சில கட்டுரைகள் எல்லாம் இருக்கும் போல தெரியுது.\\

தமிழில் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தானே? சினிமா விஷயங்கள் என்றால் பேசும்படம் பாணி என்ற ஒன்று இருந்தது. பிறகு பொம்மை வந்து வடிவமைப்பிலும் அச்சுக்கோர்ப்பிலும், பிரமாத வண்ணப்படங்களிலும் தூள் கிளப்பியது. விஷயங்கள் என்று பார்க்கும்போது பிலிமாலயா மட்டும்தான் வித்தியாசம் காட்டிற்று. வல்லபன் மறைந்தபிறகு அந்த இடம் காலியாகவேதான் உள்ளது. ஒரு சில இதழ்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் வெகுஜனப் பார்வைக்கு வந்ததாகத் தெரியவில்லை.

\\# உங்க கட்டுரை எதுவும் போடலையா? அதைப்பத்தி செய்திக்காணோம்?\\

இல்லை. அவங்க ஏதோ தனி க்ரூப்பாகச் செயல்படுகிறார்கள் போலிருக்கிறது. நம்மிடம் கேட்கவில்லை.

\\இதே போல எம்சிஆர் கூட ஒரு அனுபவம் சொல்லி இருக்கார், \\

நானும் படித்த நினைவு இருக்கிறது. ஒரு கட்டுரையை வைத்துக்கொண்டு எத்தனை விஷயங்களைக் கொண்டுவருகிறீர்கள் பாருங்கள். ஒன்றொடு ஒன்று, அதோடு இன்னொன்று என்று சங்கிலிபோல் கோர்த்துக்கொண்டே போவது அபார ஞாபக சக்திக்கான நல்ல வழிமுறை என்பது உண்மை. அது உங்களிடம் இருப்பது உங்கள் பின்னூட்டங்களில் மட்டுமல்ல; பதிவுகளிலும் வெளிப்படுகிறது.

#//சுட்டும் விழிச்சுடரே’ பாடலில் அசினுடன் அவர் ஆடிய ஸ்டைல் நடனம்,//

\\ஹி...ஹி ஒருப்படம் போட்டிருக்கலாம் ஏன் இந்த கஞ்சத்தனம்?\\

படம் போடவில்லையே தவிர, இந்த வரிகளை தட்டச்சு செய்தபோது உங்களை நினைத்துக்கொண்டே தட்டச்சினேன் என்பது உண்மை.




Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...
\\சிவகுமாரின் கட்டுரை முத்துக்கள் ஒவ்வொன்றும் சிறப்பு...

அகரம் பவுண்டேஷன் பற்றி....???\\

வாங்க தனபாலன் நன்றி. அந்த மலரில் இருந்த விஷயங்கள் பற்றி மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். அகரம் பவுண்டேஷன் பற்றி அதில் பெரிதாகக் குறிப்பு எதுவும் இல்லை.

Unknown said...

SUPER ; AMUDAVAN; THANKS

Amudhavan said...

Meena Narayanan said...

\\SUPER ; AMUDAVAN; THANKS\\

வருகைக்கு நன்றி மீனா.

Blogging at 32 - I'm the Glad One! said...

அருமையான கட்டுரை. நேரில் இந்தியா டுடே வாசித்த நிறைவு :) இயக்குனர் பாலா கட்டுரை ஒரு கலைஞனுக்கு படைப்பாளியின் மிகச்சிறந்த கவுரவம். எவ்வளவோ சீரியசான கேரக்டர்களில் சூர்யா நடித்திருந்தாலும் மாயாவி/பிதாமகன் கேரக்டர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்தவை.
சூரியா- உயரம் உடலில் அல்ல உள்ளத்தில் நிரூபித்தவர். எனக்கு தெரிந்து என்னுடைய பல நண்பர்களின் கனவு அகரத்துடன் இணைய வேண்டுமென்பது.


\\பிலிமாலயா மட்டும்தான் வித்தியாசம் காட்டிற்று. வல்லபன் மறைந்தபிறகு அந்த இடம் காலியாகவேதான் உள்ளது. ஒரு சில இதழ்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் வெகுஜனப் பார்வைக்கு வந்ததாகத் தெரியவில்லை//
காரணம் இன்று சினிமா பத்திரிகைகள் அனைத்தும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் அநேகமான சினிமா பத்திரிகைகள்/இணையங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு(புகைப்பட/ஒளிப்பதிவாளர்/நிருபர்கள்) சம்பளம் தருவதில்லை. மாறாக முதலாளிகள் சொல்லி விடுகின்றனர் நீங்கள் படப்பிடிப்பு தளங்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கவர் வாங்கிகொள்ளுங்கள். அந்த கவரில் வரும் வருமானத்தில் தான் இவர்கள் வண்டிகள்(டூவீலர்,குடும்பம்) ஓடுகின்றன. ஆகவே செய்திகளின் முக்கியத்துவம் குறைந்து விடுகின்றது.

Jayadev Das said...

"இந்தியா டுடே" ஒன்றிரண்டு முறை படிக்க முயற்சித்திருக்கிறேன், எளிய நடை இல்லை, விட்டுவிட்டேன். பின்னர் ஓரு போதும் அதை படித்ததில்லை.

\\இவன் ஒரு பையனாக இருப்பான் என்றுதான் நினைத்தோம். \\ இந்த வாக்கியம் முழுமையடைய வில்லை ஏதோ மிஸ் ஆகிறது..............

குட்டிபிசாசு said...

நந்தாவில் நல்ல நடிக்கவும், மௌனம்பேசியதே படத்தில் நன்றாக ஆடவும் தொடங்கினார். இன்றைய தமிழ் சினிமாவில் நீளமான தமிழ் வசனம் பேசி நடிக்கக்கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

ஆனால் இவர் தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுவது சரியில்லை என நினைக்கிறேன். இது சில சமயம் மக்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். அமிர்கானும் ஷாருக்கானும் காலம் போன கலைஞர்கள், அவர்களுடைய படங்கள் இரண்டு-மூன்று வருடங்களுக்கு ஒன்று என வருகின்றன. சூர்யா அப்படியில்லை, வருடத்திற்கு ஒன்றுிரண்டு படங்கள் நடித்துவிடுகிறார்.

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Amudhavan said...

Amudhavan Pakkam said...

\\அருமையான கட்டுரை. நேரில் இந்தியா டுடே வாசித்த நிறைவு :) இயக்குனர் பாலா கட்டுரை ஒரு கலைஞனுக்கு படைப்பாளியின் மிகச்சிறந்த கவுரவம். எவ்வளவோ சீரியசான கேரக்டர்களில் சூர்யா நடித்திருந்தாலும் மாயாவி/பிதாமகன் கேரக்டர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்தவை.
சூரியா- உயரம் உடலில் அல்ல உள்ளத்தில் நிரூபித்தவர். எனக்கு தெரிந்து என்னுடைய பல நண்பர்களின் கனவு அகரத்துடன் இணைய வேண்டுமென்பது.\\

வாங்க நண்பரே, உங்க பாராட்டுக்கு நன்றி. அது ஒரு புறமிருக்க உங்களுக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா? நீங்கள் இதைவிடவும் நல்ல ஒரு பெயரை வைத்துக்கொண்டு செயல்படுங்களேன். இந்தப் பெயரை வைத்துக்கொண்டு வரும்போது நீங்கள் நல்லவரா இல்லை கெட்டவரா என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே.

Amudhavan said...


Jayadev Das said...

\\இவன் ஒரு பையனாக இருப்பான் என்றுதான் நினைத்தோம். \\ இந்த வாக்கியம் முழுமையடைய வில்லை ஏதோ மிஸ் ஆகிறது..............

இருக்கலாம். பத்திரிகைகள் சிலவற்றை எடிட் செய்யும்போது சில வரிகள் அல்லது வார்த்தைகள் விடுபட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.

Amudhavan said...

குட்டிபிசாசு said...

\\நந்தாவில் நல்ல நடிக்கவும், மௌனம்பேசியதே படத்தில் நன்றாக ஆடவும் தொடங்கினார். இன்றைய தமிழ் சினிமாவில் நீளமான தமிழ் வசனம் பேசி நடிக்கக்கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

ஆனால் இவர் தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுவது சரியில்லை என நினைக்கிறேன். இது சில சமயம் மக்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். அமிர்கானும் ஷாருக்கானும் காலம் போன கலைஞர்கள், அவர்களுடைய படங்கள் இரண்டு-மூன்று வருடங்களுக்கு ஒன்று என வருகின்றன. சூர்யா அப்படியில்லை, வருடத்திற்கு ஒன்றுிரண்டு படங்கள் நடித்துவிடுகிறார்\\

வாங்க குட்டிப்பிசாசு, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இந்தப் பகுதியை திரு சிவகுமாரோ அல்லது சூர்யாவோ படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் உங்கள் கருத்துக்கள் அவர்களிடம் நேரடியாகவே சென்று சேர்வது இயலும்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

# மீ ஒலி அலையாச்சே தப்புமா?

# // "அதெல்லாம் எதுக்கு? வேணாமே" என்று தவிர்த்துவிடுவார் சிவகுமார் சார்.//

விளம்பரம் வேண்டாம்னு நினைப்பது ,ஆச்சர்யமானது,நன்று!

#//பேசும்படம் பாணி என்ற ஒன்று இருந்தது. பிறகு பொம்மை வந்து வடிவமைப்பிலும் அச்சுக்கோர்ப்பிலும், பிரமாத வண்ணப்படங்களிலும் தூள் கிளப்பியது. விஷயங்கள் என்று பார்க்கும்போது பிலிமாலயா மட்டும்தான் வித்தியாசம் காட்டிற்று. வல்லபன் மறைந்தபிறகு அந்த இடம் காலியாகவேதான் உள்ளது. ஒரு சில இதழ்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் வெகுஜனப் பார்வைக்கு வந்ததாகத் தெரியவில்லை.//

கொஞ்ச காலம் முன்னர் வரையில் கூட பழைய புத்தகக்கடையில் கண்ணில் பட்டால் இவற்றை எல்லாம் வாங்குவதுண்டு,இப்போலாம் அங்கு "வேற பலான பலான புத்தகங்கள் தான் கிடைக்குது அவ்வ்!

ஜெமினி சினிமா என்று கூட இதழ் ,நல்லா இருக்கும், அது தான் அப்போதைக்கு டாப் சினிமா இதழ் என நினைக்கிறேன்.

இப்போ தமிழ் சினிமா பத்திரிக்கைகள் எல்லாமே "பிட்டுப்பத்திரிக்கையா" ஆகிடுச்சு அவ்வ்!

#//அதோடு இன்னொன்று என்று சங்கிலிபோல் கோர்த்துக்கொண்டே போவது அபார ஞாபக சக்திக்கான நல்ல வழிமுறை என்பது உண்மை. //

இப்படி உங்கள போல யாராவது எழுதினா தான் நியாபகம் கிளர்கிறது இல்லைனா கொறட்டை தான் விடும் :-))

#//படம் போடவில்லையே தவிர, இந்த வரிகளை தட்டச்சு செய்தபோது உங்களை நினைத்துக்கொண்டே தட்டச்சினேன் என்பது உண்மை.//

ஹி...ஹி...ஹி! நன்றி!
------------

குட்டிப்பிசாசு,

//ஆனால் இவர் தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுவது சரியில்லை என நினைக்கிறேன். இது சில சமயம் மக்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும்//

தமிழ் கலாச்சாரம் அப்படியிருக்கு அவ்வ்!

ஆனால் விளம்பரப்படங்களில் நடிப்பது 'திரைப்படத்தினை" விட அதிக வருவாய் தருகிறதாம்!

தமிழ்நாட்டுக்கு வெளியில் ,அதிக டிமாண்ட் விளம்பரத்துக்கு இருக்கும் நடிகரையே "மார்க்கெட் உள்ள நடிகர்/நடிகை என மதிப்பிடுகிறார்கள்.

# ஆதிக்காலத்திலேயே சூப்பர் ஸ்டார் கேம்பா கோலா அல்லது டபுள் செவன் என்ற குளிர்ப்பான விளம்பரத்தில் நடிச்சார் , குடிக்கிறாப்போல போட்டுவுக்கு போஸ் கொடுப்பது தான் அப்போதைய விளம்பரம் அவ்வ்! ,அப்போ இப்படி சொல்லித்தான் மேற்கொண்டு நடிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க, சூப்பர் ஸ்டார் நடிச்ச ஒரே விளம்பரம் அதுவாக தான் இருக்கும்.

பொறுத்தமான பிராடெக்ட்டில் நடிக்கலாம் ,அதுவும் பொய்யான வாக்குறுதிகள் கொடுக்காமல் நடிக்கணும், இந்த எண்னை தடவினா சொட்டை மண்டையில முடி வளரும் ,இதைக்குடிச்சா ஒலிம்பிக்கில் கோல்ட் மெடல் வாங்கலாம்னு சொல்லி விக்கிறது தான் சரியல்ல!

வவ்வால் said...

பாகவதரே,

//\\இவன் ஒரு பையனாக இருப்பான் என்றுதான் நினைத்தோம். \\ இந்த வாக்கியம் முழுமையடைய வில்லை ஏதோ மிஸ் ஆகிறது...//

கலைவாரிசாக வரமாட்டார் ,குடும்ப பையனாக இருப்பார்னு நினைச்சேனு சொல்ல வருவதாக தான் எனக்கு புரிஞ்சது.

marsjk said...

Nice article as always

Umesh Srinivasan said...

நல்ல ஆய்வுக்கட்டுரை # எல்லாத்தரப்பினருக்கும் பிடிக்கும் நடிகர் சூர்யா என்பது மிகப்பெரிய ப்ளஸ். எங்கள் குடும்பத்தின் அபிமான நடிகர் என்று சொல்லவும் வேண்டுமா?

Amudhavan said...

marsjk said...

\\ Nice article as always\\

marsjk யின் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

Umesh Srinivasan said...

\\ நல்ல ஆய்வுக்கட்டுரை # எல்லாத்தரப்பினருக்கும் பிடிக்கும் நடிகர் சூர்யா என்பது மிகப்பெரிய ப்ளஸ். எங்கள் குடும்பத்தின் அபிமான நடிகர் என்று சொல்லவும் வேண்டுமா?\\

சந்தோஷம், தங்களின் கருத்துரைக்கு நன்றி.

ஜோதிஜி said...

யாரோ ஒரு புண்ணிய ஆத்மா இந்த பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டுருக்கே?

இது போன்ற புகழ்பாடும் கட்டுரைகளை என்றுமே நான் விரும்புவதில்லை. குறிப்பாக ஒரு இதழ் முழுக்க ஒரு நடிகரைப் பற்றி இந்த அளவுக்கு நுணுக்காக கக்கூஸ் முதல் கக்கா போனது வரைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் யார் உயரத்தில் இருக்கின்றார்களோ அவரைப் பற்றி எழுதி கல்லா கட்டிக் கொள்வது குறிப்பிட்ட சில பத்திரிக்கைகளின் வாடிக்கை. நான் பார்த்த வரைக்கும் குமுதம் இந்த விசயத்தில் நம்பர் 1.

அருந்ததி ராய், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், வெளியே தெரியாமல் கிராமத்திற்குள் இருந்து கொண்டே சாதித்த பலரைப் பற்றி இது போன்ற தனி மலராக வரும் போது சமூகத்தின் உள்ள அத்தனை ஓட்டைகள் நல்லது கெட்டது என பலவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பத்திரிக்கைகள் டிரை மேட்டர் லிஸ்ட் ல் அதைக் கொண்டு போய் விடும். வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே திரைப்பட நட்சத்திரங்களை வைத்து மாங்கு மாங்குவென்று எழுதி கல்லா கட்டுகின்றார்கள். குறிப்பாக நீங்க சொல்வது போல பல பத்திரிக்கைகளில் ஒரு குரூப்பாக இருந்து கொண்டு குறிப்பிட்ட நபர்களை வைத்துக் கொண்டு தான் பல பத்திரிக்கைகள் கட்டுரைகள் எழுதுகின்றார்கள்.

அப்புறம் நீங்க சொன்ன மாதிரி சூர்யாவின் தொடக்க நிலை முதல் இன்று வரையிலும் அவரின் கிராப் உயரத்தை உன்னிப்பாக ஆச்சரியமாக கவனித்துக் கொண்டு வருகின்றது. நிதானமான வளர்ச்சி. முழுக்க முழுக்க அப்பாவின் வளர்ப்பு ஒவ்வொரு இடத்திலும் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பல குழந்தைகள் சூர்யாவின் ரசிகர் என்று சொல்லும் போதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். எனக்கு சூர்யாவை விட நடிகர் கார்த்திக்கை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நம் குடும்பத்தில் உள்ள ஒரு பையன் போலவே அவரை ரொம்ப பிடிக்கும். அவர் சூர்யாவை விட மேலே வருவார் என்று மனதில் கணித்துள்ளேன்.

குட்டிபிசாசு said...

வவ்வால்,

//தமிழ் கலாச்சாரம் அப்படியிருக்கு அவ்வ்!

ஆனால் விளம்பரப்படங்களில் நடிப்பது 'திரைப்படத்தினை" விட அதிக வருவாய் தருகிறதாம்!

தமிழ்நாட்டுக்கு வெளியில் ,அதிக டிமாண்ட் விளம்பரத்துக்கு இருக்கும் நடிகரையே "மார்க்கெட் உள்ள நடிகர்/நடிகை என மதிப்பிடுகிறார்கள்.//

பண வருவாய் அடிப்படையில் பார்த்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், விளம்பரங்களில் தோன்றுவது லாபமாக இருக்கலாம்.

//# ஆதிக்காலத்திலேயே சூப்பர் ஸ்டார் கேம்பா கோலா அல்லது டபுள் செவன் என்ற குளிர்ப்பான விளம்பரத்தில் நடிச்சார் , குடிக்கிறாப்போல போட்டுவுக்கு போஸ் கொடுப்பது தான் அப்போதைய விளம்பரம் அவ்வ்! //

போட்டோவிற்கு போஸ் கொடுப்பதை நான் இங்கு கணக்கில் கொள்ளவில்லை. அப்படிப் பார்த்தால், நடிகர்கள் ஜூஸ்கடையில் கூல்ட்ரிங்கோடு, சலூன்கடையில் முடியைக் கோதுபோல், பெட்டிகடையில் வாயில் பீடியோடு திரும்பும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பார்கள்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said..
\\பல குழந்தைகள் சூர்யாவின் ரசிகர் என்று சொல்லும் போதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். எனக்கு சூர்யாவை விட நடிகர் கார்த்திக்கை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நம் குடும்பத்தில் உள்ள ஒரு பையன் போலவே அவரை ரொம்ப பிடிக்கும். அவர் சூர்யாவை விட மேலே வருவார் என்று மனதில் கணித்துள்ளேன்.\\

உங்கள் கணிப்புக்கு நன்றி. கார்த்தி நேரில் மட்டுமல்ல படங்களிலும் மிக யதார்த்தமாக இருப்பதனால் பலருக்குச் சட்டென்று பிடித்துப்போவது இயல்பானதுதான்.

சூர்யாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திற்கும் அவர் காட்டுகின்ற டெடிகேஷனும், அவர் மேற்கொள்ளும் சிரமங்களும் அத்தனைச் சாதாரணமானதல்ல என்பதை மட்டும் இங்கே குறிப்பிட்டுக்கொள்ளுகின்றேன்.

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

saamaaniyan said...

நடிகர் சூர்யாவின் படங்களை பார்க்கும் போதெல்லாம் நான் நினைத்து அச்சரியப்படும் விசயம் அவரது cinema graph !

அவரின் முதல் படமான நேருக்கு நேரை பார்த்தபோது பாவம் சிவகுமாரின் மகன் ( ! ) என பரிதாபபடும்படியாக இருந்த சூர்யாவின் தோற்றம் நந்தாவுக்கு பிறகு வேறு ஒரு அவதாரம் எடுத்தது அதற்கு முன் யாருமே நினைத்துபார்த்திருக்க முடியாத ஒன்றாகதான் எனக்கு தோன்றுகிறது ! அதுவரையில் தேமே என கேமராவுக்கு முன்னால் நிற்பாரோ என தோன்றுபடியான அவரது நடிப்பு, நடிப்பு என்ற கலையின் முழு பரிமாணத்தை தொட்டது அதற்கு பிறகுதான் !

அதே போல பிதாமகன் ! லேசான சோகம் இழையோடும் சூர்யாவின் முகபாவனையில் படு கலகலப்பான நவரச, நகைச்சுவை தோன்ற ஆரம்பித்தது இந்த படத்துக்கு பிறகுதான். இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் பாலா என்றாலும் அதன் பிறகு தன் திறமைகளை வளர்த்துகொண்டு வெற்றிகளையும் தக்கவைத்துகொண்டதற்கு சூர்யாவின் அர்பணிப்பே காரணம்.

நடிகர் சிவகுமாரின் " இது ராஜபாட்டை அல்ல " நூலை படித்தபோது, தமிழ் நினிமாவில் அவர் இருந்திருக்க வேண்டிய உயரம் இன்னும் அதிகம் என நினைத்ததுண்டு ! தன் தந்தைக்குமான இடத்தையும் சேர்த்து சூர்யா வென்றுவிட்டார் என்றே தோன்றுகிறது !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

காரிகன் said...

(விழா தொடங்கி அரை மணி நேரத்தில் போகலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்போதும், இருங்கபோகலாம் என்று சொல்லி அமர்ந்திருக்கிறார் எம்ஜிஆர்.அவர் பேசத் தொடங்கும்போது அந்த அரங்கத்துக்குள் ரஜினி நுழைகிறார்.மொத்தக் கூட்டமும் அப்படியே திரும்பி ரஜினியைப் பார்க்கிறது.
தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை இதுதான் நிதர்சனம்’.- )

அமுதவன் அவர்களே,

கருணாநிதி பேசிய கூட்டம் ஒன்றில் எம் ஜி ஆர் இதுபோல தாமதமாக வர, மொத்தக்கூட்டமும் அவரைப் பார்த்தைக் கண்டு கருணாநிதிக்கு எம் ஜி ஆரைப் பற்றிய வேறு சிந்தனைகள் தோன்றியதாக படித்திருக்கிறேன். இருவர் படத்திலும் மணிரத்னம் இந்தக் காட்சியை வைத்திருப்பார். பொதுவாக எம் ஜி ஆர் கூட்டங்களுக்கு வேண்டுமென்றே தாமதமாகத்தான் செல்வார் என்று கூட சொல்வார்கள். எம் ஜி ஆருக்கு ரஜினி மூலம் இந்த வரலாறு திரும்பியதைப் போலவே ரஜினிக்கும் விஜய் அல்லது அஜித் மூலம் மீண்டும் இதே சக்கரம் சுழலலாம்.

Amudhavan said...

saamaaniyan saam said...
\\நடிகர் சிவகுமாரின் " இது ராஜபாட்டை அல்ல " நூலை படித்தபோது, தமிழ் நினிமாவில் அவர் இருந்திருக்க வேண்டிய உயரம் இன்னும் அதிகம் என நினைத்ததுண்டு ! தன் தந்தைக்குமான இடத்தையும் சேர்த்து சூர்யா வென்றுவிட்டார் என்றே தோன்றுகிறது !\\

சரியான துல்லியமான கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள், நன்றி சாம்.
என்னுடைய சில பழைய பதிவுகளில் திரை இசைப் பற்றிய அலசல்கள் உள்ளன. அதையும் ஒரு கண்ணோட்டம் விடுங்களேன்.

Amudhavan said...

காரிகன் said...
\\கருணாநிதி பேசிய கூட்டம் ஒன்றில் எம் ஜி ஆர் இதுபோல தாமதமாக வர, மொத்தக்கூட்டமும் அவரைப் பார்த்தைக் கண்டு கருணாநிதிக்கு எம் ஜி ஆரைப் பற்றிய வேறு சிந்தனைகள் தோன்றியதாக படித்திருக்கிறேன்.\\

அதற்கும் முன்னால் ஒரு மாநாட்டில் அண்ணா பேசிக்கொண்டிருந்தபோது நுழைந்ததுதான் இந்தப் பழக்கத்தின் ஆரம்பம் என்று தெரியவருகிறது. இந்தவகை முட்டல் மோதல்களை அவர் நிறையவே செய்திருக்கிறார் என்றுதான் செய்திகள் சொல்கின்றன.
'மோடி அவராகவே என்னைச் சந்திக்கவேண்டும், தேநீர் அருந்தவேண்டும் என்று கேட்டதனால்தான் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டேன்' -ரஜனிகாந்தின் இந்தவகைப் பேட்டிகளையும் நாம் இந்த வரிசையில்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது.

குறும்பன் said...

திரை உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் சூர்யா, கார்த்தி இருவரும். சிறந்த நடிப்புத்திறமை உள்ள தமிழ் நடிகர்கள் என்றால் இருவரை சொல்லலாம் சூர்யா, விக்ரம். (கமலை தவிர்த்து)

சார்லஸ் said...

அமுதவன் சார்

கட்டுரை அருமை . சூர்யாவிற்கு என்ன...அழகாய் இருக்கிறார் ...அற்புதமாய் நடிக்கிறார் .. உயர்ந்து கொண்டே செல்கிறார் ..உன்னத இடத்தை அடைவார் . ஆனால் எம். ஜி. ஆர் , ரஜினி , விஜய் போல சினிமா அரசியல் செய்யத் தெரியாது . அஜித் போல கலை விழாக்களில் 'தலை ' காட்டாமல் இருக்கத் தெரியாது . விருது இல்லாத மேடைகளில் கூட சக நடிகரோடு மேடை ஏறாமல் இருக்கத் தெரியாது . மற்ற நடிகர் எல்லாம் நான் பி. இ ,நான் எம்.பி. ஏ என்று சொல்லிக் கொள்ளும்போது நான் ஏழாம் வகுப்பில் பெயில் என்று வெகுளியாக வெளிப்படுத்தாமல் இருக்கத் தெரியாது . ஆனால் மக்களுக்கு தெரிகிறது ..அவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல ..நல்ல மனிதரும் கூட என்று!

Post a Comment