Wednesday, July 16, 2014

உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம்- ஜெர்மனியின் வெற்றியும் சில சிந்தனைகளும்…………………………. 
கால் பந்தாட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

ஜெர்மனிக்காரர்கள் கோப்பையைக் கையிலேந்திக் குதூகலித்துக் கொண்டாடிவிட்டார்கள். அர்ஜெண்டினாக்காரர்கள் அழுதார்களோ இல்லையோ பிரேசில் மக்கள் அழுதுத் தீர்த்துவிட்டார்கள். நெய்மார் இல்லாத பிரேசில் அணி ஏழு கோல் வாங்கித் தோற்ற அவலத்தை பிரேசில் எத்தனைக் கார்னிவல்கள் நடத்தினாலும் மறப்பதற்கில்லை.

பிரேசில் மட்டுமல்ல வேறு சில நாடுகளும் தங்களுடைய ஒற்றை நட்சத்திர வீரர்களை மட்டுமே நம்பி ஆடுகிறது என்பது ஒரு சோகம் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஏதோ காரணத்தினால் அணியில் விளையாடவில்லை என்றால் அந்த அணி நம்முடைய உயர்நிலைப் பள்ளி ஃபுட்பால் டீமை விடவும் மோசமான நிலைமைக்கு வந்துவிடுகிறது என்பது பரிதாபமாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் பல ஆட்டங்கள் நம்முடைய உள்ளூர் அணிகள் மோதும் ஆட்டங்களை விடவும் சுமாராகத்தான் இருந்தன என்பதும் கசப்பான உண்மையே.

ஜெர்மனி உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இருந்தது என்பது ஒரு புறமிருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட கால்பந்து விளையாட்டு என்பது பார்ப்பதற்கு ஒன்றும் பரவசம் தரும் ஒரு உற்சாகமான அனுபவம் என்று சொல்வதற்கில்லை. இன்னமும் சொல்லப்போனால் அவர்கள் ‘விளையாடுவதே’ இல்லை. மொத்த ஆட்டமும் வெறும் பாஸ்கள்தாம். யார் காலிலும் பந்து தங்குவதே இல்லை. ஃபுட் ஒர்க் என்பது அவர்களிடம் இல்லவே இல்லை. இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று எந்நேரமும் பந்தையும் எதிரணியினரையும் அலைக்கழித்துக் கொண்டே இருப்பதுதான் அவர்களது ஆடும் பாணி. ஆனால் எப்படி ஒவ்வொருவரிடமும் பந்தைக் கடத்துகிறார்கள், அடுத்து யாரிடம் கடத்தப்போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது அவர்களுடைய ஆட்டத்தின் சூட்சுமம். கூடவே குளோஸ் போன்ற ஒரு ஸ்ட்ரைக்கரை வைத்திருப்பதும் அவர்களுடைய அதிர்ஷ்டம். குளோஸ் ‘ஆடுகின்ற’ ஆட்டக்காரர் அல்ல; ‘அடிக்கின்ற’ ஸ்ட்ரைக்கர். அதனால்தான் குளோஸ் ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் என்ற இடத்தைப் பிடிக்கமுடியவில்லை. எங்கே இருப்பார் என்ன செய்துகொண்டிருப்பார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பந்து கோல் போஸ்ட் அருகில் போனவுடன் எங்கிருந்தோ எப்படியோ வந்து கோல் அடித்திருப்பார். அந்தவகையில் எதிரணியினருக்கு அவர் சிம்ம சொப்பனம். எப்படியோ கோல் அடித்து விடுவார் என்பது தெரிந்ததனால் இந்த ஆட்டங்களில் குளோஸையும் குறிவைத்து அடித்துத் துவைத்தார்கள்.
 
போட்டிகள் ஆரம்பித்த சமயத்தில் எப்போது ஆரம்பிக்கும்? தூக்கம் போனாலும் பரவாயில்லை. விடிய விடியக் கண்விழித்து எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றெல்லாம் காத்திருந்த நாட்கள் போய் ‘எப்படா முடியும்?’ என்று அலுப்புத் தர ஆரம்பித்துவிட்டது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும் கால்பந்தாட்டத்தின் விறுவிறுப்புக்கும் பரபரப்பிற்குமான உற்சாகமும் ஆர்வமும் உள்ளக்கிளர்ச்சியும் ஆரம்பத்து இரண்டொரு போட்டிகளிலேயே விடை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.

காரணம் கால்பந்தாட்டத்திற்கேயுரிய ‘உன்னதங்கள்’ எல்லாம் விடுபட்டுப்போய் விளையாட்டு என்றாலேயே அதிகபட்ச வன்முறைகள்……………….அடி, உதை, தலையை முட்டி மோதுவது, ஓடுகின்றபோது கால் கொடுத்து விழ வைப்பது, விழுந்தவன் மேலேயே விழுவது, மர்ம இடத்தைப் பார்த்து உதைப்பது….. என்பது போன்றே எல்லா ஆட்டங்களும் அமைந்திருந்தன.

கால்பந்தாட்டம் என்றாலேயே இம்மாதிரியான மெல்லிய வன்முறைகள் இயல்பானவைதாம். ஆனால் இவையெல்லாம் இவ்வளவு நாட்களும் இத்தனை ஆக்ரோஷமாகவும் இத்தனை மூர்க்கத்தனத்துடனும் இருந்ததில்லை. மனதிற்குள் ஏதோ வன்மம் கொண்டு எதிரியின் மீது மோதுவதுபோல் மோதுகிறார்கள். குழு அமைத்துக்கொண்டு ‘போட்டுத்தள்ளும்’ கூலிப்படையினர்போல் நட்சத்திர வீரர் மீது மோதி அவரை உண்டு இல்லையென்று ஆக்குகிறார்கள். கீழே போட்டு புரட்டித்தள்ளி துவம்சம் செய்கிறார்கள். இரண்டு எட்டுக்கு மேல் ஓடவிடாமல் கால் கொடுத்து விழவைத்து பந்தைக் கவர்ந்துகொண்டு ஓடுகிறார்கள்.

இவையெல்லாம் இத்தனை நாட்களும் இலை மறைவு காய் மறைவாக இருந்தன. இப்போதோ இதுதான் ஃபுட்பால். ஃபுட்பால் என்ற விளையாட்டே இப்படித்தான் என்று நினைக்குமளவுக்கு எல்லா ஆட்டங்களிலும் வன்முறை நீக்கமற நிறைந்து இருந்தது. முன்பெல்லாம் நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்களின் ஆட்டத்தைப் பார்ப்பதே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

அவர்கள் திறமையினாலும் தங்களுக்கேயுரிய தனிப்பட்ட நுணுக்கங்களாலும் பலபேருடைய கால்களுக்கிடையில் பந்தைக் கட் செய்து கொண்டு எதிர்க்க வருகிறவர்களையெல்லாம் சமாளித்து ஒற்றை ஆளாக பலரையும் தாண்டிச்சென்று கோலடிக்கும் காட்சி பார்க்கிறவர்களுக்கு ஒரு அற்புத அனுபவமாக இருக்கும். பார்ப்பவர்களை பரவசத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அந்த தனிப்பட்ட வீரரின் சாகசம் கண்களுக்குள்ளேயே நிற்கும். இப்போதைய மேட்சுகளில் அதற்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விட்டது.
 
ஒருத்தனைக் கட் செய்து பந்தை எடுப்பதற்குள் இரண்டு பேர் மேலே வந்து விழுகிறார்கள். அதையும் தாண்டி பந்தைத் தள்ளினால் மூன்றாமவன் இந்த வீரரின் கால்களுக்கிடையில் காலைக்கொடுத்துப் பின்னி விழவைக்கிறான். மஞ்சள் கார்டாவது, ரெட் கார்டாவது……….ஆட்டம் அதுபாட்டுக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறது.

இம்மாதிரியான வன்முறைகளெல்லாம் இல்லாத சமயத்தில் ‘வெறும் ஃபுட்பால் மட்டும்’ ஆடித் தன் திறமையை நிரூபித்தவர்தான் பீலே. அவர் அதிர்ஷ்டக்காரர். அவருக்கு ‘நீட்டான’ ஃபுட்பால் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் மலை போல இருந்தன.

அதற்கடுத்த பெரிய ஃபுட்பால் ஜாம்பவானாக மாரடோனா பெயரெடுத்த காலத்தில்தான் இம்மாதிரி வன்முறைகள் எல்லாம் வெளிப்படையாக ஆட்டங்களில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.

அதுவும்கூட நமக்கெல்லாம் டிவி வந்து உலக கால்பந்தாட்டப் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்த முதல் வருடமான 1994-ல் மாரடோனா ஆடியபோது அவருடைய அற்புத ஆட்டத்தை வியந்துபோய் பார்க்கமுடிந்தது.

அடுத்த 98-ம் ஆண்டிலிருந்துதான் வன்முறை இறக்குமதி செய்யப்பட்டது. பந்தை விட்டுவிட்டு ஆளை அடிப்பது என்கிற ரீதியில் ‘அடித்து ஆட’ ஆரம்பித்த உலகக்கோப்பையை 98-ம் ஆண்டின் போட்டிகள் உறுதி செய்தன.
 
அதே மாரடோனாவைச் சுற்றி எதிரணியைச் சேர்ந்த தடியர்கள் இரண்டுக்கு மூன்று பேர் இருப்பார்கள். மாரடோனாவிடம் பந்து வந்ததுதான் தாமதம். அவரை ஓடவிடாமல் அடிப்பது, கால்களுக்கிடையில் காலை நுழைத்து விழவைப்பது, பந்தை விட்டுவிட்டுக் கால்களின் மீது உதைப்பது என்ற அடாவடி ஆட்டம் இந்த ஆண்டிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது.

எத்தனைப்பேர் சேர்ந்து அடித்தாலும், காலை இடறவிட்டு விழவைத்தாலும் அப்படியே கரணம் அடித்து சுருண்டு கீழே விழுந்து அதே வேகத்தில் எழுந்து – அத்தனை அடிவாங்கி உருண்டையாக சுருண்டு விழுந்தபோதும் எக்காரணத்தைக்கொண்டும் பந்தை மட்டும் விடாமல் தன்னுடைய கால்களுக்கிடையிலேயே வைத்திருந்து உடனடியாக எழுந்து பந்தைத் தொடர்ந்து தள்ளிக்கொண்டு ஓடிய மாரடோனாவின் திறைமையைப் பார்த்து உலகம் வியந்தது.

மக்கள் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.

டிவியில் பார்த்தவர்கள் அந்தக் குள்ள மனிதனின் திறமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒரு மூன்று உலகப்போட்டிகள் மாரடோனாவை மட்டுமே மையம் கொண்டிருந்தன.

எங்கோ ஒரு சாதாரண சேரியில் பிறந்த மாரடோனா என்ற கால்பந்தாட்ட வீரன் உலகின் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கடவுளாகப் போற்றப்பட்டது இப்படித்தான்.

ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு என்றில்லாமல் அவன் தோன்றிய விளம்பரங்கள் ஒளிபரப்பாவதன் மூலம் (உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் 

மாரடோனாவின் ஏதாவது ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள்) ஒரு வினாடிக்கு இவ்வளவு என்று விலைபேசி அவனைக் கொண்டாடியது வர்த்தக உலகம்.

மாரடோனாவைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பெக்காம், ரொனால்டோ, கிறிஸ்டியானா ரொனால்டோ, மெஸ்ஸி என்று சாகச வீரர்களைக் கொண்டாட ஆரம்பித்தது உலகம்.

இந்த உலகக் கோப்பையிலும் மெஸ்ஸி, கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் புதிய வீரரான நெய்மார் ஆகியோரை நட்சத்திர அந்தஸ்துள்ள வீரர்களாகக் களம் இறக்கிற்று ஃபிபா.

நட்சத்திர வீரராக பெரிதும் பேசப்படும் ரொனால்டோ ஆடிய போர்ச்சுகல் அணி பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருடைய ஆட்டத்தை மேற்கொண்டு பார்க்கமுடியாமல் போய்விட்டது.

நெய்மாரை அடித்துத் துவைத்து படுக்கப்போட்டு ஸ்டிரெச்சரில் தூக்கிக்கொண்டுபோக வைத்துவிட்டார்கள். மேலே பறந்து எகிறி முதுகில் ஒருத்தன் விழுந்ததில் நெய்மாரின் முதுகெலும்பு முறிந்துபோய்விட்டது.
 
நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஓரளவுக்காவது மக்களுக்குப் பார்க்கக் கிடைத்தது மெஸ்ஸியின் ஆட்டத்தை மட்டும்தான். அதிலும் இதே பாணிதான். மெஸ்ஸியைச் சுற்றிலும் எந்நேரமும் மூன்று நான்கு பேர். மெஸ்ஸியிடம் பந்து வந்தாலேயே அடி உதை ஆரம்பிக்கப்பட்டு காலை விட்டு இடறி மெஸ்ஸியை விழவைக்கும்வரை விடுவதில்லை. (ஆனாலும் ஓரளவுக்காவது தன்னுடைய ஆட்டத் திறமைகளையும் நுணுக்கங்களையும் மெஸ்ஸி வெளிப்படுத்திய காட்சிகள் காணக் கிடைத்தது ஒரு சந்தோஷ அனுபவம் என்றுதான்  சொல்லவேண்டும்). இதே போக்கு எல்லா நட்சத்திர வீரரிடமும் காட்டப்பட, எந்தப் ‘பயபுள்ளையையும்’ ஆடவிடாமல் பார்த்துக்கொண்டார்கள் படுபாவிகள்.

இன்னொன்று- எல்லா நட்சத்திர வீரர்களுக்கும் எதிராகவே அத்தனை ரெஃபரிகளும் இருந்தார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களும் தெரியவில்லை.

இதனையும் மீறி உலகம் முழுக்கவும் இருநூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கால்பந்தாட்டக் கொண்டாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால் அது இந்த ஆட்டத்தின் மீது இருக்கும் அதீதக் கவர்ச்சியால்தான். களமிறங்கியிருக்கும் அத்தனை வீரர்களுமே அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாமல் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனித்துக்கொண்டிருக்கவும் செயல்படவும் செய்யும் கவர்ச்சி அது.

எந்த நேரத்தில் பந்து எப்படி வரும், யாரிடம் போகும், தலையால் முட்ட வேண்டுமா, காலால் தள்ள வேண்டுமா, கட் செய்வதா?, பாஸ் கொடுப்பதா? யாரிடம் கொடுப்பது? மார்பால் தடுக்க வேண்டுமா? தொலைதூரத்துக்கு உதைக்க வேண்டுமா? என்று எல்லாவற்றையும் அந்தந்த நொடிக்கு ஏற்பத் தீர்மானிக்க வேண்டிய விளையாட்டு இது. கொஞ்சம் ஏமாந்தாலும் தீர்ந்தது. எதிரி கோல் போட்டுவிட்டு இரண்டு கைகளையும் விரித்துப் பறவை மாதிரியான போஸில் மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பான்.

விளையாட்டு நடைபெறும் ஒன்றரை மணி நேரத்திலும் ஒரு வினாடி தவறாமல் சுவாரஸ்யம், விறுவிறுப்பு இரண்டிற்கும் பஞ்சம் வைக்காத ஒரே விளையாட்டு இதுதான்.

இந்த விளையாட்டை முற்றிலும் புறந்தள்ளி கிரிக்கெட்டுக்கு ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கிறதே இந்த தேசம் என்பது கவலைக்குரிய ஒன்றுதான். தொண்ணூறுக்கு முந்தைய நாட்களில் வெளியூர்ப் பயணங்களின்போது கண்களில் தென்படும் மைதானங்களில் எல்லாம் இரண்டு புறமும் ‘ப’வைக் கவிழ்த்து வைத்தமாதிரி கோல் போஸ்ட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.

பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது காலியாகக் கிடக்கும் அத்தனை மைதானங்களிலும் இத்தகைய கோல் போஸ்ட்டுகள் இருக்கும் அந்தக் காட்சியே பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும்.

 சிறுவர்களும் இளைஞர்களும் அணி சேர்ந்துகொண்டு ஓடியாடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். விளையாடும் அணி ஒன்பது, ஒன்பது என்று பதினெட்டுப் பேரோ, அல்லது பதினொன்று, பதினொன்று என்று இருபத்தியிரண்டு பேரோ- விளையாடும் அத்தனைப் பேருக்கும் நொடி தவறாமல் வேலை வைக்கும் விளையாட்டு இது. உடம்பையும் மனதையும் சுறுசுறுப்பாகவும் துடிதுடிப்பாகவும் வைத்திருப்பவன் மட்டுமே கால்பந்து ஆட முடியும்.

பெங்களூரில் முன்பெல்லாம் நிறைய கால்பந்து வீரர்கள் இருந்தார்கள். ஆஸ்டின் டவுன், டேனரி ரோடு, கன்ட்ரூப் போன்ற தமிழ்ப் பகுதிகளில் நிறைய இளைஞர்கள் அணிஅணியாக உருவாகிவந்தார்கள். நிறைய தொழிற்சாலைகள் இவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு கூடவே தங்களுக்கென்று கால்பந்தாட்ட அணிகளையும் வைத்திருந்தன. இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் சென்று ஆடி புகழ் சேர்த்து வருவார்கள் இந்த ஆட்ட வீரர்கள். எதிர்காலத்தில் எப்படியெல்லாமோ வந்திருக்கக்கூடும்……………………….

இதையெல்லாம் இல்லாமல் செய்துவிட்ட, கவிழ்த்துப் போட்ட பெருமை டிவிக்கே உண்டு. இந்தியாவில் டிவி வருவதற்கு முன்னால் கிரிக்கெட் இத்தனைப் ‘பாப்புலரான’ விளையாட்டாக இருக்கவில்லை. வர்த்தக பணமுதலைகளால் எந்தவிதமான மோசடி மாற்றங்களையும் ‘அங்கீகரிக்கப்பட்ட இலட்சிய மாற்றங்கள் போன்ற தோற்றத்தில்’ உருவாக்கிவிட முடியும் என்பதற்கு கிரிக்கெட்டும் ஒரு சான்று.

மேற்கத்திய நாடுகளிலிருந்து தேவையற்ற எதை எதையெல்லாமோ இறக்குமதி செய்யும் இந்தியன் விளையாட்டு விஷயத்தில் அந்த நாடுகளிலிருக்கும் ஃபுட்பால் வசீகரத்தை இறக்குமதி செய்யாததோடு, தன்னிடம் அதுவரை  இருந்த கொஞ்ச நஞ்ச ஈடுபாட்டையும் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தொலைத்துவிட்டு உட்கார்ந்தாலும் பரவாயில்லை. தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்துவிட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறான். உலக அளவில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இவன் பாட்டுக்கு ‘உலகக் கோப்பைக் கிரிக்கெட்’ என்று நாமகரணம் வேறு செய்துகொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

அந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் மூன்று நான்கு நாடுகள்தாம் ‘சொல்லிக்கொள்ளும்படியான’ நாடுகள். மற்றவையெல்லாம் சுண்டைக்காய் நாடுகள் அல்லது தீவுகள்…...

சரி கிரிக்கெட் எப்படி ஆடப்படுகிறது?

இரண்டு பேர் ஆடுகிறார்கள் ஒருவர் பந்து போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆறு பந்துகளில் இரண்டோ மூன்றோதான் அடிக்கப்படுகிறது. அதுவும் ஒன்றோ இரண்டோ மட்டும்தான் ஓங்கி அடிக்கப்படும் பந்து. மற்றதெல்லாம் தடுப்புக்கள்தாம்.

பந்தை ஒருவர் அடித்துவிட்டால் அந்த அணியைச் சேர்ந்த இரண்டுபேர் ‘மட்டுமே’ ஓடுவார்கள். மற்றவர்களெல்லாம் மைதானத்திலேயே இல்லையே, கேலரி ஓரமாக அல்லவா உட்கார்ந்திருப்பார்கள்…………..? பந்து தடுக்கப்பட்டாலோ அல்லது அடிக்கப்பட்டாலோ எதிரணியிலிருந்து ஒரே ஒருவர் மட்டும்தான் அந்தப் பந்தைப் பிடிப்பார். அல்லது பிடிக்க ஓடுவார். எடுத்து வீசும்போது பௌலிங் போட்டவர் அந்தப் பந்தைப் பிடித்து கிரீஸில் ஓடிக்கொண்டிருப்பவர்களை அவுட்டாக்க முடியுமா என்று பார்ப்பார்.

ஆக இருபத்திரண்டு பேர் ஆடும் ஆட்டத்தில் ஒரு சமயத்துக்கு மூன்று பேர் அல்லது நான்குபேர் மட்டுமே ‘செயல்படுகின்ற’ சோம்பேறி ஆட்டம் அது.

அந்த ஆட்டம் துடிப்பான இளைஞர்கள் ‘விளையாடுவதற்காக’ ஏற்பட்ட ஆட்டம் அல்ல; பொழுதுபோகாதவர்கள் ‘பார்த்துக்கொண்டிருப்பதற்காக’ உருவாக்கப்பட்ட ஆட்டம்.

அதனை- பல வகையிலும் இன்னமும் முன்னேறாத, தன்னுடைய அடிப்படைத் தேவைகளில் முப்பது சதவிகிதத்தைக்கூடப் பூர்த்தி செய்துகொள்ளாத, வறுமைக் கோட்டிற்குக் கீழே இருபத்தைந்து சதவிகிதம் மக்களைக் கொண்ட நூற்றுப்பனிரெண்டு கோடி மக்கள் கொண்ட இந்த தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்டமாக ஆக்கிய பெருமை வர்த்தக உலகத்தையே சேரும்.

இன்றைய இளைஞர்களின், பணக்கார மேல்தட்டு இளைஞர்களின் நவீன மோஸ்தரில் செலவழிக்கும் பணமும் நேரமும் கணிசமான பங்கு கிரிக்கெட்டிற்கும் போகிறது.

தன்னுடைய பாட்டிக்கோ தாத்தாவிற்கோ தெரு முனையிலிருக்கும் மருந்துக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மாத்திரைக்கூட வாங்கிவர நேரமில்லாதவன், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிக்கெட் வாங்க விடியற்காலையிலேயே சென்று மூன்று நான்கு மணி நேரம் கியூவில் நிற்பதையும், அரை நிக்கரும் கோக் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுமாக ஐந்து மணி நேரம் டிவி முன்னால் பழி கிடப்பதையும் சர்வ சாதாரணமாக வீட்டுக்கு வீடு பார்க்கமுடியும்.

இம்மாதிரியான இளைஞர்கள் மத்தியில் சின்னதொரு சலசலப்பையாவது இந்த உலகக் கோப்பைக் கால்பந்து ஏற்படுத்தியதா என்பது தெரியவில்லை.

இந்தக் கால்பந்து போட்டிகளின் இன்னொரு சுவாரஸ்யம் முன்கூட்டிய கணிப்புகள்.

யார் ஜெயிப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லும் கணிப்புகளைச் சென்ற கால்பந்தாட்டப் போட்டிகளின் போதேயே கணித்துச் சொல்லியிருந்தார் ஒரு ஜோசியர்.
 
இங்கே ஜோசியர் என்பது மனிதரில்லை. ஒரு ஆக்டோபஸ். பால் என்று அதற்குப் பெயர் வேறு சூட்டியிருந்தார்கள். ஒவ்வொரு பந்தயத்திற்கு முன்னாலும் ஆடப்போகின்ற அணிகளில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை ஓரளவிற்குக்கூட அல்ல; மிகத் துல்லியமாக கணித்துச் சொன்னது அந்த ஆக்டோபஸ். இறுதி ஆட்டம்வரை அந்தக் கணிப்பு பொய்க்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம்தான்.

கொஞ்ச நாட்களில் பால் என்ற அந்த ஆக்டோபஸ் செத்துப்போய்விட்டது. இந்தமுறை என்ன செய்வார்கள் என்று பார்த்தால் அந்த ஏமாற்றத்திற்கு இடமே வைக்காமல் எங்கிருந்தோ ஒரு யானையப் பிடித்து வந்திருந்தார்கள். அதற்கு நெல்லி என்று பெயராம். அந்த யானை கணிக்கிறது என்றார்கள். இதுவரை முப்பத்தேழு கணிப்புகளில் முப்பத்து மூன்று கணிப்புகள் அட்சர சுத்தம் என்றார்கள். பந்தயங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பேயே இறுதிக்கோப்பையை வெல்லப்போவது ஜெர்மனிதான் என்பதைச் சொல்லிவிட்டது நெல்லி.
 
நெல்லி போதாதென்று எங்கிருந்தோ ஒரு கரடியைப் பிடித்து வந்திருந்தார்கள்.  இரண்டு அல்லது மூன்று கோல் போஸ்ட்டுகளை அமைத்து அதில் விளையாடப்போகும் அணிகளைச் சார்ந்த நாடுகளின் கொடிகளைப் போர்த்தி எந்த அணி வெல்லப்போகிறது காட்டு என்று சொல்லும்போது அந்தக் கரடி, எந்த அணி வெல்லப்போகிறதோ அந்த அணியின் கொடி போர்த்தப்பட்ட கோல்போஸ்ட்டைப் போய் தாங்கிப்பிடித்துத் தொங்கியது ஒரு ஆச்சரியம்தான்.
 
 மூன்று நான்கு கோல் போஸ்ட்டுகளை அமைத்து அதில் ஆடுகின்ற நாட்டின் கொடிகளைப் போட்டுவைத்து எந்த நாடு வெற்றிபெறும் என்று குட்டியானையைக் கேட்டபோது ஒவ்வொரு முறையும் வெற்றிபெறும் அணி இதுதான் என்பதைச் சொல்லும்விதமாக தன்னுடைய காலின் அருகில் வைக்கப்படும் பந்தை அந்தக் கொடி போட்ட கோல் போஸ்ட்டுக்குக் கொண்டு சென்று தள்ளிய நெல்லியின் செய்கையும் ஒரு அதிசயம்தான்.

நான் கூட ஆரம்பத்தில் இதென்ன கூத்து, இதென்ன முட்டாள்தனம் என்றுதான் நினைத்தேன். இறுதி விளையாட்டு நடைபெற்றபோதுகூட நெல்லியும், கரடியும் சொல்லியதற்கேற்ப ஜெர்மனி வெற்றிபெறக்கூடாது. இந்த ஜோசியங்கள் பொய்க்கவேண்டும் என்பதற்காகவாவது அர்ஜெண்டினா வெற்றிபெற வேண்டும் என்றுகூட எதிர்பார்த்தேன்.

ஒன்றும் நடக்கவில்லை.

பகுத்தறிவுக்கெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.

அறிவுலகத்திற்கும் விஞ்ஞான உலகத்திற்கும் பதிலளிக்க முடியாதவாறு சில ஆச்சரியங்கள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உலகை சுவாரஸ்யமாக வைத்திருப்பது இத்தகைய ஆச்சரியங்கள் என்றே தோன்றுகிறது.

25 comments :

காரிகன் said...

அமுதவன் அவர்களே,

உலக கால்பந்து போட்டியை ரசித்துப் பார்த்தவன் என்ற முறையில் உங்களின் இந்தப் பதிவை அதே ரசிப்புடன் வாசித்தேன். கால்பந்தின் தற்போதைய வன்முறை விபரீதத்தை என்னால் முழுதும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் நான் மகுடம் சூடிய கால்பந்து வீரர்கள் விளையாடிய ஆட்டங்களை கண்டவனில்லை. எனவே இந்த வன்முறை எத்தனை தூரம் புரையோடிப் போயிருக்கிறது என்பதை உங்களின் எழுத்தின் மூலம் அடையாளம் கண்டுகொண்டேன்.

ஜெர்மனியின் ஆக்ரோஷ விளையாட்டுக்கு முன் அர்ஜென்டினாவின் அழகியல் கொண்ட சிறப்பான ஆட்டம் தோற்றுப்போனது வியப்பில்லைதான். மெஸ்ஸி யின் உலகத்தரமான விளையாட்டு பாராட்டப்படவேண்டிய ஒன்று.

கிரிக்கெட் என்ற வியாபாரத்திற்கு நம் நாடு செய்யும் முதல் மரியாதை மற்ற அனைத்து விளையாட்டுகளையும் ஏறக்குறைய அழித்தே விட்டது. நாமாவது கால்பந்து விளையாடுவதாவது? முதலில் இந்த கிரிக்கெட் என்ற சாபத்தை இருபது முப்பது வருடங்கள் தடை செய்தால் போதும். முடிந்தால் ஒழித்தே விடலாம் என்று கூட தோன்றுகிறது. கிரிக்கெட் என்ற அரசியல் இருக்கும்வரை நம் நாட்டில் எந்த விதமான விளையாட்டுகளிலும் முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை.

கால்பந்து திருவிழாவை மீண்டும் அசைபோடவைத்த உங்கள் பதிவுக்கு ஒரு பாராட்டு.

Jayadev Das said...

கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரர்களை விளையாடி ஜெயிக்க முடியாது என்று அவர்களை உடலியல் ரீதியாக தாக்கி ஆட்டத்தில் இருந்து வெளியேற செய்வது கோழைத்தனம். இதனால் நல்ல விளையாட்டை பார்க்கும் வாய்ப்பை இழக்கிறோம். ஒவ்வொரு முறையும் புதிய ஆட்டக்காரர்கள் நட்சத்திரங்களாவது தான் இதற்கு வழி!!

கிரிக்கெட் யாரால் ஆடப் பட்டது என்பதை பார்த்தால் ஒரு விஷயம் புரியும். [வரலாறு முக்கியம் அமைச்சரே!!]. இங்கிலாந்தில் வருடத்தில் ஓரிரு மதங்கள் மட்டுமே வெயில் வரும், நாள் முழுவதும் புல் தரையில் Sun bath எடுத்துக் கொண்டு படுத்துக் கிடப்பார்கள், அதில் சுகம் அவர்களுக்கு. அப்போது போரடிக்குமே, கிரிக்கெட் ஆடினார்கள். ஒரு நாள் முழுவதும் சீட்டாட்டம்/கேரம் மாதிரி ஆடிக் கொண்டே இருக்கலாம். ஆகவே தான் இது ஒரு சோம்பேறிகளின் ஆட்டம் என்கிறோம். [நம்மூர் வெயிலுக்கு இது தேவையா??!!] அது மட்டுமல்ல ஆடுபவர்களைக் கவனித்தால் எவனும் விளையாட்டு வீரன் மாட்டான், நம்மூர் மாமாக்கள் மாதிரி தொப்பையும், தொப்பியோடு out of shape ல் இருப்பானுங்க. கிழவனுங்க, ஓட முடியாதவனுங்க, PHYSICALLY UNFIT, இவனுங்க எல்லாம் சர்வதேச தர விளையாட்டு வீரர்களாக கருதப் படுவது கிரிக்கெட்டில் மட்டுமே சாத்தியம்.

கிரிக்கெட் தொலைக்காட்சியால் மட்டும் தான் மக்கள் இரசிக்கிறார்கள் என்பது தவறான கருத்து. தொலைக் காட்சி இல்லாத கால கட்டத்தில் வானொலியை போகுமிடமெல்லாம் காதில் வைத்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனை கேட்டவர்களை நீங்களே பார்த்திருப்பீர்கள். கிரிக்கெட் மோகம் என்பது இந்திய மக்களின் மனதில் இருக்கிறது அதை ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். ஏன் மோகம் என்பதை யாராலும் விளக்க முடியாது, ஏன் தமிழர்களுக்கு ரஜினி மேல் மோகம் என்பதை எவ்வாறு விளக்க முடியாதோ, அதே மாதிரி தான்.

ஒரு வேலை கால்பந்து ஹாக்கி மீது மக்கள் மோகம் கொண்டிருந்தால் நேரடி ஒளிபரப்பு PRIME TIME ல் தொலைக்காட்சியில் வந்திருக்கும், அந்த வீரர்கள் பைக்கின் பின் சீட்டில் நடிகைகள் உட்கார்ந்திருப்பார்கள், சொறி சிரங்கு கிரீமில் இருந்து, எஞ்சின் ஆயில் வரைக்கும் எல்லா விளம்பரங்களையும் அவர்கள் தோன்றியிருப்பார்கள்!!

உலக மேப்பில் புள்ளியாகத் தோன்றும் நாடுகள் விளையாடும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் பங்கு பெற இத்தனை கோடி ஜனத் தொகை கொண்ட நாட்டில் இருந்து தகுதியான பத்து பதினைந்து வீரகளை உருவாக்க முடியாதது வெட்கப் படவேண்டிய விஷயம்.

வருண் said...

Amudhavan Sir: (West) Germany is always my favorite team! I love their team work. This time, right from the round of sixteen I CORRECTLY picked the winners all the way to the end. We usually "gamble" when it comes to any big tournament. Let it be NFL superbowl or MLB world series or world cup football we always bet. The winner gets a lunch from the losers. How did I win? I had been lucky just like the Germans! Luck certainly play a role besides the talents. That's why Argentines missed their fantastic chances!

The goal by the "kid" Mario Goetze was BEAUTIFUL! What a pass! What a cross! He got the ball in his chest and did not wait for even touching the ground. Did not give a chance for defenders or the goal keeper!! Loved it as the favorite team scored at the perfect time!

வருண் said...

In the last world cup, Paul, the Octopus,picked correctly. May be this time the elephant and bear picked correctly too. But, there are some other animals picked the winner incorrectly too. I read a Dolphin picked Argentina as the winner. We don't pay much attention to the animals who picked incorrectly! That's all :)

Amudhavan said...

காரிகன் said...
\\ஜெர்மனியின் ஆக்ரோஷ விளையாட்டுக்கு முன் அர்ஜென்டினாவின் அழகியல் கொண்ட சிறப்பான ஆட்டம் தோற்றுப்போனது வியப்பில்லைதான். மெஸ்ஸி யின் உலகத்தரமான விளையாட்டு பாராட்டப்படவேண்டிய ஒன்று.\\

என்னுடைய கருத்தும் இதுதான். தனிப்பட்டவர்களுக்கான சிறப்புப் பரிசைப் பெற்ற மெஸ்ஸி முகத்தில் வாட்டத்துடன் அந்தப் பரிசை வாங்கியதைப் பார்த்தபோதும் அவரிடமுள்ள டீம் ஸ்பிரிட் அவரைப் பாராட்டவே வைக்கிறது.
மற்றபடி கிரிக்கெட்டைப் பற்றிய உங்கள் காரமான விமர்சனம் உங்களின் அஃக் மார்க் எழுத்துக்களுக்கே உரியது. நன்றி.

Amudhavan said...

Jayadev Das said...
\\கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரர்களை விளையாடி ஜெயிக்க முடியாது என்று அவர்களை உடலியல் ரீதியாக தாக்கி ஆட்டத்தில் இருந்து வெளியேற செய்வது கோழைத்தனம். இதனால் நல்ல விளையாட்டை பார்க்கும் வாய்ப்பை இழக்கிறோம். ஒவ்வொரு முறையும் புதிய ஆட்டக்காரர்கள் நட்சத்திரங்களாவது தான் இதற்கு வழி!!\\

கடைசி வரியில் உங்கள் யோசனை சூப்பர்.

\\ஒரு நாள் முழுவதும் சீட்டாட்டம்/கேரம் மாதிரி ஆடிக் கொண்டே இருக்கலாம். ஆகவே தான் இது ஒரு சோம்பேறிகளின் ஆட்டம் என்கிறோம். [நம்மூர் வெயிலுக்கு இது தேவையா??!!] அது மட்டுமல்ல ஆடுபவர்களைக் கவனித்தால் எவனும் விளையாட்டு வீரன் மாட்டான், நம்மூர் மாமாக்கள் மாதிரி தொப்பையும், தொப்பியோடு out of shape ல் இருப்பானுங்க. கிழவனுங்க, ஓட முடியாதவனுங்க, PHYSICALLY UNFIT, இவனுங்க எல்லாம் சர்வதேச தர விளையாட்டு வீரர்களாக கருதப் படுவது கிரிக்கெட்டில் மட்டுமே சாத்தியம்.\\
மெல்லிய நகைச்சுவையுடன் அடித்துத் தூள் கிளப்புவதுதான் உங்கள் பாணி. நல்ல அப்சர்வேஷன் (இது கிரிக்கெட்,ஃபுட்பால் பற்றிய பதிவு என்பதனால் சரளமாய் வந்துவிழும் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்காமல் எழுதுகிறேன்)

\\கிரிக்கெட் தொலைக்காட்சியால் மட்டும் தான் மக்கள் இரசிக்கிறார்கள் என்பது தவறான கருத்து. தொலைக் காட்சி இல்லாத கால கட்டத்தில் வானொலியை போகுமிடமெல்லாம் காதில் வைத்துக் கொண்டு கிரிக்கெட் வர்ணனை கேட்டவர்களை நீங்களே பார்த்திருப்பீர்கள்.\\
நீங்கள் சொல்வது உண்மைதான். வானொலி நாட்களில் யாரைப் பார்த்தாலும் காதில் டிரான்சிஸ்டரை வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது நிஜமே. நான் பணிபுரிந்த தொழிற்சாலையில் பணியே நடக்காது. ஆளுக்கு ஆள் காதில் ஹெட்போன்தான். அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் அதையேதான் செய்துகொண்டிருப்பார்கள். கிரிக்கெட் கேட்பவர்களைப் பிடிப்பதற்கென்றே அதிரடி செக்யூரிடிகள் திடீர் விசிட் அடிப்பார்கள் பணியிடங்களுக்கு......
இதையெல்லாம் தாண்டி இன்றைக்குப் பெண்கள் மத்தியிலெல்லாம் இருக்கும் கிரிக்கெட் மோகமெல்லாம் அன்றைக்குக் கிடையாது. அன்றைக்கு இருந்தது நாற்பது சதம் என்றால் இன்றைக்கு எண்பத்தெட்டு சதம். அதைத்தான் டிவி செய்தது.
\\அந்த வீரர்கள் பைக்கின் பின் சீட்டில் நடிகைகள் உட்கார்ந்திருப்பார்கள், சொறி சிரங்கு கிரீமில் இருந்து, எஞ்சின் ஆயில் வரைக்கும் எல்லா விளம்பரங்களையும் அவர்கள் தோன்றியிருப்பார்கள்!!\\
அடாடா கால்பந்து ஹாக்கி வீரர்களை ஒல்லிப்பிச்சான் மாடல்கள் சகிதம் சொறி சிறங்கு கிரீம்களுக்குப் பார்க்கமுடியாமல் போனது வருத்தத்திற்குரியதுதான்.

Amudhavan said...

வருண் said...
\\The goal by the "kid" Mario Goetze was BEAUTIFUL! What a pass! What a cross! He got the ball in his chest and did not wait for even touching the ground. Did not give a chance for defenders or the goal keeper!! Loved it as the favorite team scored at the perfect time! \\

உண்மைதான் வருண். நிச்சயமாகப் புகழப்பட வேண்டிய 'ஷாட்'தான் அது. அவருடைய அந்த அடி ஜெர்மனியை அடுத்த நான்காண்டுகளுக்கான சாம்பியனாய் உயர்த்திவிட்டது. எப்படியும் தடுத்திருக்கமுடியாத ஒரு கோல் அது.

\\But, there are some other animals picked the winner incorrectly too. I read a Dolphin picked Argentina as the winner. We don't pay much attention to the animals who picked incorrectly! That's all :) \\
ஆமாம் நானும் பார்த்தேன். எந்தெந்த ஜீவராசிகளையோ வைத்து நிறையப்பேர் முயற்சித்திருந்தார்கள். காகத்தைக்கூட யாரோ பயன்படுத்தியிருந்ததையும் பார்க்க முடிந்தது. ஆனால் ஆக்டோபஸ் முடிவுகளுக்கும் நெல்லியின் முடிவுகளுக்கும் நாம் 'ஒன்றுமே' சொல்ல முடியாது என்பதுதான் விஷயம்.
தவறான முடிவுகளைச் சொல்லும் ஜீவராசிகள் பற்றி நாம் கவனம் கொள்வதில்லை என்பது உண்மையே. கோல் போட்டவர்களைப் பற்றித்தானே பேசுகிறோம். அதைத்தானே கவனிக்கிறோம். மிஸ் செய்தவர்களைப் பற்றிப் பேசுவதில்லையே.

Anonymous said...

http://blogs.wsj.com/cio/2014/07/10/germanys-12th-man-at-the-world-cup-big-data/
German's used science as well, to secure the win. This is going to happen more and more in the future.

Ad that didn't expect the German win
http://www.theguardian.com/football/2014/jul/09/singapore-anti-gambling-ad-germany-world-cup

Amudhavan said...


Anonymous said...
\\German's used science as well, to secure the win. This is going to happen more and more in the future.\\
எங்கெங்கோ போய்ப் படித்துப் பார்க்கும் சிரமம் வைக்காமல் என்ன நுணுக்கம், என்ன விஞ்ஞானம் என்பதையும் நீங்களே சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

Anonymous said...

எதிர் அணி வீரர்கள், பந்துடன் எத்தனை நொடியில், திடலில் எங்கே நகர்கிறார்கள், என்பதை பல காணொளி மூலம் கணினி உதவியுடன் ஆராய்ந்து, ஜெர்மன் விரர்கள் செயல்பட்டார்கள்.
to quote the article.
//To gain a competitive edge, the team partnered with German software giant SAP AG to create a custom match analysis tool that collects and analyzes massive amounts of player performance data.

The tool, called Match Insights, analyzes video data from on-field cameras capable of capturing thousands of data points per second, including player position and speed. That data then goes into an SAP database that runs analytics and allows coaches to target performance metrics for specific players and give them feedback via their mobile devices.

A focus for the German team this year was speed, said Nicolas Jungkind, SAP’s head of soccer sponsorships. Using Match Insights, the team was able to analyze stats about average possession time and cut it down from 3.4 seconds to about 1.1 seconds, he said. The tool allowed them to identify and visualize the change and show it to coaches, players and scouts.//

This kind of approach is standard in successful multinational companies.
Both structured and unstructured data is (millions) analyzed to make everyday decisions. Next wave of opportunity for our students is to enter the field of Big Data Computing. May be it is already happening!

Anonymous said...

எதிர் அணி வீரர்கள், பந்துடன் எத்தனை நொடியில், திடலில் எங்கே நகர்கிறார்கள், என்பதை பல காணொளி மூலம் கணினி உதவியுடன் ஆராய்ந்து, ஜெர்மன் விரர்கள் செயல்பட்டார்கள்.
to quote the article.
//To gain a competitive edge, the team partnered with German software giant SAP AG to create a custom match analysis tool that collects and analyzes massive amounts of player performance data.

The tool, called Match Insights, analyzes video data from on-field cameras capable of capturing thousands of data points per second, including player position and speed. That data then goes into an SAP database that runs analytics and allows coaches to target performance metrics for specific players and give them feedback via their mobile devices.

A focus for the German team this year was speed, said Nicolas Jungkind, SAP’s head of soccer sponsorships. Using Match Insights, the team was able to analyze stats about average possession time and cut it down from 3.4 seconds to about 1.1 seconds, he said. The tool allowed them to identify and visualize the change and show it to coaches, players and scouts.//

This kind of approach is standard in successful multinational companies.
Both structured and unstructured data is (millions) analyzed to make everyday decisions. Next wave of opportunity for our students is to enter the field of Big Data Computing. May be it is already happening!

வவ்வால் said...

அமுதவன் சார் ,

உதைப்பந்தாட்ட உலகக்கோப்பை குறித்து சிறப்பான அலசலை தந்துள்ளீர்கள்!

உதைப்பந்து இப்பொழுதெல்லாம் அடி உதைப்பந்து தான் அவ்வ்!

# யானை,கரடி ஜோசியமெல்லாம் பத்தி சொன்னீங்க , ஆனால் வவ்வால் ஜோசியம் பத்தி சொல்லவேயில்லை, போட்டிக்கு முந்தைய நாள் நாம சொன்ன சோசியம் இது,

//இறுதியில் ஜெர்மனி வெற்றி பெரும் என யூகம் சொன்னால் கூட சண்டைக்கு வருவாங்களோ அவ்வ்

3:57 AM, July 13, 2014 Delete//

# //இன்னமும் சொல்லப்போனால் அவர்கள் ‘விளையாடுவதே’ இல்லை. மொத்த ஆட்டமும் வெறும் பாஸ்கள்தாம். யார் காலிலும் பந்து தங்குவதே இல்லை. ஃபுட் ஒர்க் என்பது அவர்களிடம் இல்லவே இல்லை. இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று எந்நேரமும் பந்தையும் எதிரணியினரையும் அலைக்கழித்துக் கொண்டே இருப்பதுதான் அவர்களது ஆடும் பாணி.//

இதுவும் ஒரு வகை ஆட்டப்பாணியே!

உண்மையில் இப்படி ஆடத்தான் அதிக டீம் கோ ஆர்டினேஷன் தேவை, ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பந்தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் எதிரணியை சோர்வடைய செய்து , பின்னர் தாக்குவார்கள்.

ஜெர்மனியின் மரியோ கோட்சா , சப்ஸ்டிடியூட்டாக இறங்கி கோல் அடித்தது தற்செயல் அல்ல, முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று, ஏன் எனில் கோட்சா ஒன்றும் சப்பையான ஆட்டக்காரர் அல்ல , இன்னும் சொல்லப்போனால் ஜெர்மனியின் அறிவிக்கப்படாத "ஸ்டார் ஆட்டக்காரர்" எனலாம், ஐரோப்பாவில் இரண்டாவது மிக அதிக விலை மதிப்புள்ள வீரர் , பேயர்ன் முனிச் ஆண்டுக்கு 37 மில்லியன் ஈரோக்கள் சம்பளம் கொடுக்கிறது , 18 வயதுக்குள்ளோருக்கான ஐரோப்பிய சாம்பியனில் கோல்டன் பாய் விருதெல்லாம் வாங்கியிருக்கார். ஜெர்மனி அணியிலேயே வேகமான மிட்ஃபீல்ட் வீரர் எனவும் பேரும் உண்டு.

அப்படியிருந்தும் ஏன் சப்ஸ்டிட்யூட்டாக இறக்கப்பட்டார் எனில் எதிரணி வீரர்கள் எல்லாம் களைத்துப்போன சூழலில் "ஃபிரெஷாக" அவரை அனுப்பினால் , அவரது வேகத்துக்கு மற்றவர்களால் ஈடுக்கொடுக்க முடியாது என்பதே, மேலும் அவருக்கு உலக அளவிலான ஆட்டங்களில் மிகப்பெரிய அனுபம் எல்லாம் இல்லை ,எனவே அளவோடு தேவையான இடங்களில் பயன்ப்படுத்திக்கொண்டது ஜெர்மனி.

மேலும் நட்சத்திர வீரர் என அறியப்பட்டால் அவரை "மார்க்" செய்து ஒன்றிரண்டு மார்க்கர்களை அவரை சுற்றி எப்பொழுதும் நிறுத்தி விடுவார்கள், அப்புறம் எங்கேயொருந்து கோலடிக்க அவ்வ்வ்.

# // ஃபுட் ஒர்க் என்பது அவர்களிடம் இல்லவே இல்லை//

காலில் பந்தை டிரிப்பிள் செய்து தட்டிக்கொன்டு ஓடி ஆடுவதை இப்பொழுதெல்லாம் பழைய பாணி ஆட்டம் என்கிறார்கள், எனவே பெரும்பாலும் அப்படி ஃபுட் ஒர்க் ஆட்டத்தினை பெரும்பாலும் ஐரோப்பிய கிளப்களில் பயிற்சி செய்ய பரிந்துரைப்பதேயில்லை, இப்பொழுதெல்லாம் "ஹிட் அன்ட் ரன் " வகையில் தான் பந்தை கடத்துகிறார்கள். இவ்வகையில் தான் வேகமாக பந்டை கடத்த முடியும்.

இந்த வித்தியாசம் பெரும்பாலும் ஐரோப்பிய அணிகளுக்கும் , தென் அமெரிக்க அணிகளுக்கும் இடையே எப்பவும் இருக்கும், தென் அமெரிக்க அணிகள் டிரெப்பிளிங்கை அதிகம் நம்புவார்கள், ஐரோப்பிய அணிகள் ஹிட் அண்ட் ரன் வகை, இதில் லாங்க் பாஸ் , ஷார்ட் பாஸ் என சில நாடுகள் ஸ்பெஷலைஸ் செய்துக்கொள்வதும் உண்டு.

பல்கேரியா அணி ஆடுறத பார்த்தால் கொஞ்சம் சிரிப்பாக்கூட இருக்கும், முழுக்க லான்க் பாஸ் தான், பெரும்பாலும் கோலுக்கு 100 அடிக்கு(சும்மா தோராயமா சொல்றேன் ,ஹாஃப் சைட் லைனுக்கு அந்தப்பக்கம் என சொல்லலாம்) அந்த பக்கம் இருந்துக்கொண்டு கூட கோல் அடிக்க பார்ப்பார்கள் அவ்வ்.

இப்போலாம் ஃபிபா கோப்பயை விட சேம்பியன்ஸ் லீக்ஸ் , இங்கிலீஷ் பிரிமியர் லீக், ,கோபா டி அமெரிக்கா போன்றவை முன்னிலை வகிக்க ஆரம்பித்துவிட்டன, எனவே உலக கோப்பை டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது எனவும் சொல்லலாம். இதனால் பெரும்பாலான வீரர்கள் உலக கோப்பையில் கடமைக்கு ஆடுகிறார்கள் என அயல்நாட்டு ஆங்கிலபத்திரிக்கைகளில் கிழிக்கிறார்கள் அவ்வ்!

# மாரடோனாவின் சிறப்பை பற்றி பழைய ஃபுட்பாலர் ஒருவர் பேட்டி படித்தேன் , பந்தை சுமார் 50 அடிக்கும் மேலாக உயரத்தில் அடித்து விட்டு , கீழ வரும் போது சரியாக காலில் வாங்கி மீண்டும் மேலே அனுப்புவாராம், அப்படியே தொடர்ச்சியாக அடிப்பாரம், இதென்ன பெரிய வித்தையானு எல்லாரும் அப்படி செய்ய முயற்சித்தார்களாம் யாராலும் மாரடோனா போல தொடர்ச்சியாக செய்யவே முடியலையாம், அப்போ தான் அவர் "ஸ்டார் ஃபுட்பாலார்" ஆக இருக்கார்னு புரிஞ்சிக்கிட்டாங்களாம்.

Amudhavan said...


Anonymous said...

\\எதிர் அணி வீரர்கள், பந்துடன் எத்தனை நொடியில், திடலில் எங்கே நகர்கிறார்கள், என்பதை பல காணொளி மூலம் கணினி உதவியுடன் ஆராய்ந்து, ஜெர்மன் விரர்கள் செயல்பட்டார்கள்.
to quote the article.\\

கோரிக்கைக்கேற்ப விஷயத்தை நகலெடுத்துத் தந்ததற்கு நன்றி அனானி.

Amudhavan said...

வவ்வால் said...
\\உதைப்பந்து இப்பொழுதெல்லாம் அடி உதைப்பந்து தான் அவ்வ்!\\
வாங்க வவ்வால், உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன். நிச்சயம் நமக்குத் தெரியாத பல்வேறு புதுப் புதுத் தகவல்களைச் சொல்வீர்கள் என்றெல்லாம் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்த்தது வீண்போகாத வண்ணம் நிறைய தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
மரியோ கோட்சா பற்றிய தகவல்களெல்லாம் உண்மையில் தெரியாது. வெறும் சப்ஸ்டிடியூட் என்று மட்டும்தான் நினைத்திருந்தேன்.
இதே பாணியில் அர்ஜெண்டினா அணியும் சிறந்த வீரர்களை எதிரணியனர் எல்லாரும் களைப்புற்ற நேரத்தில் களமிறக்கியிருக்கலாமே. செய்யவில்லையோ?

ஆனால் இந்த அடிஉதைப் பாணியை நிச்சயம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு பெரிய கம்பெனியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் போன் செய்து சொன்னார்.'மேட்ச் பார்க்கும்போது நான் என்ன நினைத்தேனோ அதையே எழுதியிருக்கிறீர்கள். நானும் ஃபுட்பால் பிளேயர்தான். கல்லூரியிலிருந்தே ஆடிக்கொண்டிருந்தேன். நான் ஆடும்போதெல்லாம் சும்மா கை பட்டாலேயே ஃபவுல் கொடுத்துவிடுவார்கள். இப்போது என்னமாய் அடித்துத் துவைக்கிறார்கள்....ரெஃபரி பாட்டுக்கு கண்டும் காணாமலும் ஓடிக்கொண்டே இருக்கிறான். மேட்ச் பார்க்கவே பிடிக்கவில்லை. பயங்கர வயலன்ஸ் இருந்தது.'

\\# யானை,கரடி ஜோசியமெல்லாம் பத்தி சொன்னீங்க , ஆனால் வவ்வால் ஜோசியம் பத்தி சொல்லவேயில்லை, போட்டிக்கு முந்தைய நாள் நாம சொன்ன சோசியம் இது,\\
புதிய பதிவு எதுவும் போட்டிருக்கிறீர்களா என்று உங்கள் தளத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த அன்றைய ஞாயிறு காலையில் உங்கள் 'சோசியத்தையும்' பார்த்தேன். அட, என்ன இது இவரும் நெல்லியைப்போலவே சொல்லி வைத்திருக்கிறாரே என்று நினைத்தேன். சரியாகவே பலித்துவிட்டது. குட்!

அது சரி, உங்களுடைய வாக்குப்பதிவு எந்திர முறைகேடுகள் பற்றிய பதிவின் சாராம்சம் தமிழக எதிர்க்கட்சிகளிடையே அமளிதுமளிப்பட்டதே கவனித்தீர்களா? அதுவும் டாக்டர் கிருஷ்ணசாமிதான் இந்த விவகாரத்தை முதலில் கையிலெடுத்தார். அப்புறம் ஸ்டாலின். பிறகு விஜயகாந்த், ராமதாஸ் என்று சேர்ந்துகொண்டார்கள். எல்லாரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் பதிவையும் தொட்டுக்கொண்டால் அவர்களுக்கு நிச்சயம் நிறைய தகவல்கள் கிடைத்திருக்கும். இதன் பின்னாலுள்ள அரசியல் என்னவோ தெரியவில்லை என்பதனால் நானும் பேசாமல் இருந்துவிட்டேன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

இப்படிலாம் வேற எதிர்ப்பார்க்கீங்களா ? எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப பின்னூட்டமிட இயன்றால் அதிஷ்டமே!!!

//இதே பாணியில் அர்ஜெண்டினா அணியும் சிறந்த வீரர்களை எதிரணியனர் எல்லாரும் களைப்புற்ற நேரத்தில் களமிறக்கியிருக்கலாமே. செய்யவில்லையோ?//

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது இந்திய அணி , சிம்ப்பாப்வே , கீன்யா போன்ற நாடுகளுடன் ஆடும் போது கூட சச்சினை உட்கார விடாமல் ஆட வைக்குமே அது போல தான் அர்ஜெண்டினா, பிரேசில் போன்றவற்றின் ஆட்ட யுக்தியும் அவ்வ்!

ஜெர்மனியை பொறுத்த வரையில் குளோஸ் போன்ற சீனியர்களை முன்னிருத்தி காட்டிக்கொண்டு , அதிகம் கவனம் ஈர்க்காமல் வளரும் இளைஞர்களை தாக்குதலுக்கு பயன்ப்படுத்திக்கொண்டது.

அடுத்த உலகக்கோப்பை வரையில் கோட்சா ஃபார்மில் இருந்தால் ஜெர்மனியின் ஸ்டார் ஆட்டக்காரர் ஆக களம் இறங்கக்கூடும்.

#// நானும் ஃபுட்பால் பிளேயர்தான். கல்லூரியிலிருந்தே ஆடிக்கொண்டிருந்தேன்//

உங்க இளமையின் ரகசியம் இப்போ புரியுது :-))

இப்பொழுது ரெஃப்ரிக்கள் அவன் அடிச்சா நீயும் அடிச்சிக்கோ ரெண்டு பேரையும் கண்டுக்கலைனு மாறிட்டாங்க அவ்வ்.

பெரும்பாலும் நட்சத்திர வீரர்கள் மீது கடுப்பாக இருக்க காரணம், நாம இவங்களுக்கு பயந்துட்டதா சொல்லிடுவாங்கனு , டபுள் ஸ்ட்ரிக்ட் ஆக தண்டித்து விடுகிறார்கள் :-))

# அனானி சொல்லியிருப்பது போல ஜெர்மனி செய்திருக்கலாம், ஆனால் அந்த யுக்தியை எல்லா நாடுகளுமே செய்கின்றன என்பது தான் உண்மை.

ஒவ்வொரு ஆட்டக்காரரின் வேகம், வலது, இடது என எக்காலில் அதிகம் கோல் அடிப்பார், கோல் அடிக்கும் போது பந்தின் வேகம் என எல்லாமே இப்போது அலசி காயப்போட்டு விடுகிறார்கள்.

இப்போ இந்த ஆட்டக்காரர் ஒரு முனையில் இருந்து 4 நொடியில் பந்தை எதிர் முனைக்கு கடத்துவார் , நீ 3 நொடியில் ஓடுனு ஒருத்தருக்கு கோச் சொல்லி தரத்தான் முடியும், ஆனால் 3 நொடியில் ஓடினால் தானே களத்துல சாதிக்க முடியும் ?

குதிரையை தண்ணி தொட்டி வரைக்கும் அழைத்து தான் செல்ல முடியும், குதிரை விரும்பினால் தான் தண்ணிய குடிக்கும், அதனை கட்டாயப்படுத்தி தண்ணி குடிக்க வைக்க முடியாதே அவ்வ்!

ஜெர்மனி போல எல்லா நாடுமே அலசி இருக்கும், ஆனால் ஜெர்மன் வீரர்களால் தான் திட்டமிட்டதை களத்தில் செயல்ப்படுத்த இயன்றிருக்கு, மற்றவர்களால் முடியலை எனவே தோல்வி!
------------

#//அட, என்ன இது இவரும் நெல்லியைப்போலவே சொல்லி வைத்திருக்கிறாரே என்று நினைத்தேன். சரியாகவே பலித்துவிட்டது. குட்!//

நன்றி!

விலங்குகளுக்கு ஏழாம் அறிவு இருக்கும் போல :-))

# //உங்களுடைய வாக்குப்பதிவு எந்திர முறைகேடுகள் பற்றிய பதிவின் சாராம்சம் தமிழக எதிர்க்கட்சிகளிடையே அமளிதுமளிப்பட்டதே கவனித்தீர்களா? //

கவனித்துக்கொண்டு தான் இருக்கேன் , தொடர்ச்சியை எழுதனும் என நினைத்து அப்படியே விட்டாச்சு மீண்டும் எழுதனும்.

அந்தப்பதிவை பல தரவுகள் கொடுத்து எழுதினப்போதும் , என்னை தான் அறிவுக்கெட்டப்பயனு சிலர் சொன்னாங்க, இப்போ இந்த அரசியல் தலைகளும் அதனையே சொல்லும் போது என்ன செய்வார்கள் :-))

நீங்களாவது நான் சொன்னதை நினைவில் வைத்திருந்து சொல்கிறீர்களே நன்றி!

இது போல உரமானிய ஊழலை கூட நாம தான் முதலில் கண்டுப்பிடித்து சொன்னோம் , அடுத்த வாரம் அம்மையார் அதன் சாரம்சமாகவே ஒரு அறிக்கை கூட விட்டார்கள் ஹி...ஹி எல்லாம் தற்செயலோ என்னமோ அவ்வ்!

என்ன ஒரு சுயப்பீத்தல் என சிரிப்பீங்களே அவ்வ்!

Umesh Srinivasan said...

1986ல் மாரடோனாவின் திறமையைக் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கண்டு களித்த பலரில் நானும் ஒருவன். அதன் பின்னர் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஜூன்-ஜூலை மாதங்களில் இந்த உலகக்கிண்ணப்பித்துப் பிடித்து சரியாகத் தூங்காமல் வீட்டில் திட்டு வாங்கிய சந்தர்ப்பங்கள் அனேகம். ஜெர்மனி வீரர்களில் பலர் ஒரே க்ளப் அணிக்கு ஆடுபவர்கள் ( பயேர்ன் மியுனிக், ஷால்கா) அதனால் ஒவ்வொருவர் பாணியையும் அறிந்து அதற்கேற்ப ஆட முடிந்தது. ஆர்ஜன்டீனா அணியினர் வெவ்வேறு அணிகளுக்கு ஆடுவதால் உலகக்கோப்பையிலேயே ஒன்றாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. மெஸ்ஸி, நேய்மார் எல்லாம் தனித்தீவாக ஆட இதுவும் ஒரு காரணம். கால்பந்து ஆட்டம் திறமைசாலிகளின் கையிலிருந்து மெதுவாகப் பலசாலிகளின் கைகளுக்கு மாறி விட்டது என்ன்மோ சோகம்.

Amudhavan said...

வவ்வால் said...
\\உரமானிய ஊழலை கூட நாம தான் முதலில் கண்டுப்பிடித்து சொன்னோம் , அடுத்த வாரம் அம்மையார் அதன் சாரம்சமாகவே ஒரு அறிக்கை கூட விட்டார்கள் ஹி...ஹி எல்லாம் தற்செயலோ என்னமோ அவ்வ்!\\

இவற்றையெல்லாம் தற்செயல் என்று சொல்வதற்கில்லை. நாம் என்னவோ சிலவற்றைச் சரியாகவேதான் செய்துகொண்டிருப்போம். சிலர் அதை எடுத்து ஆளுவார்கள். அங்கீகாரத்தை மட்டும் தரமாட்டார்கள். யாரோ எங்கோ தங்களுக்குத் தந்ததுபோலவும் அல்லது தாங்களாகவே தேடியலைந்து பிடித்துக்கொண்டு வந்ததுபோலவும் தோன்றுமாறு நடந்துகொள்வார்கள். இதையெல்லாம் நம் வாழ்க்கையில் நிறையப் பார்க்கலாம். கிடைக்கவேண்டிய அங்கீகாரங்கள் சரியான நேரத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போய்க்கொண்டே இருப்போம்.

Amudhavan said...

Umesh Srinivasan said...
\\மெஸ்ஸி, நேய்மார் எல்லாம் தனித்தீவாக ஆட இதுவும் ஒரு காரணம். கால்பந்து ஆட்டம் திறமைசாலிகளின் கையிலிருந்து மெதுவாகப் பலசாலிகளின் கைகளுக்கு மாறி விட்டது என்ன்மோ சோகம்.\\
மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் உமேஷ். கால்பந்து ஆட்டம் மட்டுமல்ல இன்னும் அநேக விஷயங்கள் அப்படித்தான். திறமைசாலிகளின் கைகளிலிருந்து பலசாலிகளின் கைகளுக்குத்தான் போய்விட்டன.
மெஸ்ஸி நெய்மாராவது தங்களின் சிறப்பான ஆட்டங்களுக்கு மத்தியில் மற்றவர்களுக்கு பாஸ் கொடுப்பது என்ற எண்ணத்துடன்தான் ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் வேறு சில ஆட்டக்காரர்கள் பாஸ் கொடுக்காமல் தாங்களே கோல் அடிக்கவேண்டும் என்பதற்காகவே தப்புத் தப்பாய் பந்தை அடித்துக்கொண்டிருந்தார்கள். அர்ஜெண்டினா தோல்வியடைய அதுவும் ஒரு காரணம்.

சார்லஸ் said...

அமுதவன் அவர்களுக்கு

நல்ல கட்டுரை . அழகாக எழுதி இருந்தீர்கள் . நானும் கால் பந்தாட்ட ரசிகன் என்ற முறையில் கட்டுரையை ரசித்தேன் .
1986 முதல் உலக கால் பந்தாட்டம் பார்த்துக் கொண்டு வருகிறேன் . மாரடோனாவின் ஆட்டம் , சில்லாச்சி ஆட்டம் ( அவர் யாரா .. இத்தாலி நாட்டு வீரர் ) எல்லாம் பார்த்து ரசித்திருக்கிறேன் . மாரடோனா ஆடும்போதும் எங்கே அவரை ஆட விட்டார்கள். காலை இடறி விடுவதே மூன்று பயல்கள் வேலையாக இருக்கும் . ஆனால் சோர்வடையவே மாட்டார். சண்டையிடவும் மாட்டார் . எழுந்து ஓடிக் கொண்டே இருப்பார்.
அப்போதெல்லாம் விளையாட்டில் வன்முறை அவ்வளவு இருக்காது . ஆனால் இப்போது பார்த்தால் தடுப்பு ஆட்டமும் வன்முறை ஆட்டாமுமாகவே இருக்கிறது . இதில் சிலர் அழகாக நடிக்கவும் செய்கிறார்கள் . இலேசாக கால் பட்டாலே கீழே விழுந்து புரண்டு தூக்கிக் கொண்டு செல்லும் அளவிற்கு வித்தை காண்பித்து மஞ்சள் கார்டு காட்ட வைத்துவிடுகிறார்கள் .

மெஸ்ஸி ஆட்டம் அருமை . அவர் போட்ட நான்கு கோல்களும் அற்புதம் . அதில் ஒரு ஷாட் .. ப்ரீ கிக் .. பந்து பறந்து வளைந்து உச்சியில் கோல் போஸ்ட் உரசி உள்ளே சென்றதே ..மறக்க முடியாது . அதே போல் நெதர்லாந்து அணியில் ஒரு 'மொட்டை ' வீரர் ஆட்டம் அபாரம் . வேகமான வீரர் . செமி பைனலில் அவர்களோடு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அர்ஜென்டினா ஜெயித்தது . ஆனால் பிரேசிலோடு ஜெர்மனி எளிதாய் ஜெயித்தது . அப்போதே முடிவாகி விட்டது . ஜெர்மனி ஜெயிக்கப் போகும் அணி என்று! இதிலே யானையும் பூனையும் சொல்லியா நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . கொடுமை

வருண் said...

மாரடோனா னா கால் பந்து விளையாடுவதில் "கடவுள்"னு சொல்வதை என்னால் ஏற்றுக்கவே முடியாது.

கால்ப் பந்து என்பது "டென்னிஸ் சிங்கிள்ஸ் கேம்" அல்ல! திறமையான ஒரு ஆட்டக்காரர் "க்ராண்ட் ஸ்லாம்" வெற்றி பெற! கால் பந்துக்கு தேவை டீம் வொர்க். தன்னலமில்லா ஆட்டம். அப்படி ஆடித்தான் ஜெர்மணி ப்ரசில்லையும் அர்ஜெண்டீனவையும் வீழ்த்திக் கோப்பையை கைப் பற்றியதே தவிர, அவர்கள் பலசாலிகள் என்பதால் அல்ல!

Let us keep in mind! பலசாலிகளுக்கு "ரெட் கார்ட்" பரிசு கிடைக்கும் அபாயம் இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ளுவோம்.

-------------------

1986 ல இங்கிலாந்து எதிராக் இவர் ஸ்கோர் பண்ணிய கோல் கையில் தட்டி ஸ்கோர் பண்ணியது என்பதை அவரே ஏற்றுக்கொண்டார்.

இதெல்லாம் ஒரு வெற்றியா என்ன???

-------------------------------

1990 ல ஜெர்மனிக்கு எதிராக ஆடும்போது அர்ஜெண்டினா 9 பேரை வைத்து ஆடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதற்கு காரணம் என்ன?

அன்று ஆளை அடித்து விளையாடியது அர்ஜெண்டினா என்பதே. 1990 இறுதி ஆட்டத்தில் மாரடோனா தலைமயில் ஆடிய அர்ஜெண்டீனாவிற்கு ரெண்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

When people double team or triple team a "good player" they do pay a price. Let us not forget that. It opens up some other player to be FREE!
So, the team which double team a player will be in trouble too. இருந்தும் அவர்கள் அந்த ரிஸ்க் எடுக்கிறார்கள்.

-------------------------

1994 ல அவர் ட்ரக் டெஸ்ட் பாஸ் பண்ணாதனால வெளியே தள்ளப் பட்டார்.


***WORLD CUP '94;After Second Test, Maradona Is Out of World Cup
By SAM HOWE VERHOVEK
Published: July 1, 1994

Email
Print

Diego Maradona, the Argentine superstar with a history of fabled play on the soccer field and drug use off it, was abruptly removed from World Cup play today because he had tested positive for five variants of ephedrine, a stimulant banned by soccer's international governing body.

The decision was announced at a news conference here six hours before Argentina played Bulgaria at the Cotton Bowl, losing 2-0. Maradona's appearance tonight would have been a record 22d World Cup appearance for the 33-year-old Maradona, the team captain. He almost single-handedly led his country to a World Cup championship in 1986 and sparked the team again four years later when Argentina reached the tournament's final game, losing to West Germany.

While his age and a 15-month suspension for cocaine use in 1991-92 had led many to predict that he would not be a major factor in this tournament, Maradona scored a goal and an assist in first-round victories over Greece and Nigeria, and showed some of his dazzling dribbling form of old.

The decision to remove Maradona from World Cup play was technically made by the Argentine soccer federation, which apparently spared itself any further sanctions with the action. FIFA, soccer's world governing body, said it would reserve a decision on any further punishment of Maradona until after the World Cup ends.***

மாரடோனாவை கடவுள் என்று சொல்லும் அவர் பரம ரசிகர்கள் எல்லாம் இதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை.:(

வவ்வால் said...

அமுதவன் சார்,

//இவற்றையெல்லாம் தற்செயல் என்று சொல்வதற்கில்லை. நாம் என்னவோ சிலவற்றைச் சரியாகவேதான் செய்துகொண்டிருப்போம். சிலர் அதை எடுத்து ஆளுவார்கள். அங்கீகாரத்தை மட்டும் தரமாட்டார்கள். யாரோ எங்கோ தங்களுக்குத் தந்ததுபோலவும் அல்லது தாங்களாகவே தேடியலைந்து பிடித்துக்கொண்டு வந்ததுபோலவும் தோன்றுமாறு நடந்துகொள்வார்கள். //

சரியா சொன்னீங்க, அப்படி சம்பந்தபட்டவர்களூக்கு முழு தகவல்களும் போய் கிடைச்சாலாவது சந்தோஷமே ஆனால் அரைகுறை தகவல்கள் தானே சர்வ வல்லமை படைத்தவர்களுக்கே கிடைக்குது அவ்வ்.

தமிழ் நாடு கிரிக்கெட் கவுண்சிலுக்கு சொந்தமான கிளப்பில் வேட்டிக்கட்டிக்கொண்டு போனது தொடர்பான சர்ச்சையில் கூட முதல்வராக இருப்பவர்களுக்கு சரியான தகவல்கள் கொடுக்கப்படவில்லை, மொத்தமாக எம்.ஏ.சிதம்பரம் (ப.சிதம்பரத்தின் தாய்மாமா தான் இவர்)ஸ்டேடியமே அரசு இடத்தில் தான் இருக்கு , குத்தகைக்கு விட்டிருக்காங்க , குத்தகை விதிப்படி கிரிக்கெட் தவிர வேற எதுக்கும் அவ்விடத்தினை பயன்ப்படுத்தக்கூடாது , அதாவது கிளப் ,பார் எல்லாம் கூடாது, அங்கு பார் 2003 இல் தான் கட்டியிருக்காங்க, அதுவே குத்தகை விதி மீறல்னு 2009 இல் வழக்கும் போடப்பட்டிருக்கு , அனுமதியில்லாமல் கட்டியதாக மூன்று பெவிலியன்களை கூட சென்னை மாநகராட்சி அப்போ சீல் வச்சது ,இன்னும் நிலுவையில் இருக்கும் போல அவ்வ்.

மௌலிவாக்கம் அடுக்கு மாடி இடிந்த பின் இது முக்கியமாக இருக்கலாம், மொத்த கிரிக்கெட் ஸ்டேடியமுமே எவ்வித அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டதாம் ,அனுமதி விவரம் பற்றி RTI போட்டு கேட்டு , அனுமதி எதுவும் கொடுக்காமல் கட்டியிருக்காங்கனு சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ என எல்லாம் பதிலும் சொல்லி இருக்கு அதன் அடிப்படையில் ஹைகோர்ட்டில் ஒருவர் 2009 இல் வழக்கு போட்டதில் அப்போதைய டி.என்சி.ஏ பிரசிடெண்ட் சீனிவாசன் மீது கிரிமினல் வழக்கு போட சொல்லி உயர் நீதிமன்றம் டைரக்‌ஷன் கொடுத்தும் இருக்கு(மஞ்சத்துண்டு ஆட்சி என்பதால் அப்போது அரசு கண்டுக்கொள்ளவில்லை) ,இவற்றீன் அடிப்படையிலேயே அக்கிளப்பை இழுத்து மூட தமிழக அரசால் முடியும், ஆனால் என்னமோ சட்ட திருத்தம் போடப்போறேன்னு அம்மையார் சொல்லிட்டு இருக்கான்க :-))

இதில் இன்னொரு இக்கு என்னனா 2015 உடன் கிரிக்கெட் சங்க குத்தகை முடியுது, நீட்டிக்காமல் மொத்த ஸ்டேடியத்தையுமே அரசு நினைத்தால் இடிக்க முடியும் அவ்வ் , மொத்த இடத்துக்கும் ஆண்டுக்கு 8 லட்சம் தான் குத்தகை தொகை, பரப்பு 18 ஏக்கர் , நகரின் மையப்பகுதியில் அம்புட்டு சல்லீசா இடம் கிடைக்குமா அவ்வ்.

சீனுவாசன் அவசரமாக வேட்டிக்கு தடைய நீக்குவோம்னு சொல்ல இதெல்லாம் கூட காரணம் :-))

வேட்டி சர்ச்சை சம்பந்தமாக பதிவு போடலாம்னு திரட்டினது பின்னூட்டமாக சொல்லிட்டேன், பதிவா போட முயற்சிக்கிறேன் :-))

Amudhavan said...

சார்லஸ் said...
\\ஆனால் பிரேசிலோடு ஜெர்மனி எளிதாய் ஜெயித்தது . அப்போதே முடிவாகி விட்டது . ஜெர்மனி ஜெயிக்கப் போகும் அணி என்று! இதிலே யானையும் பூனையும் சொல்லியா நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . கொடுமை \\

வாங்க சார்லஸ் நீங்க கால்பந்தாட்டம் பற்றியெல்லாம் அதுவும் ஒத்தக்கருத்துடன் பேசுகிறீர்கள் என்பதே சந்தோஷமாகத்தான் இருக்கிறது. கட்டக்கடைசியில் பிரேசிலோடு ஜெர்மனி வந்து அவர்களைப் போட்டுப் புரட்டி எடுத்தபோதேயே அல்லது அதற்கும் கொஞ்சம் முன்பேயே ஜெர்மனிதான் வெற்றிபெறும் என்பது கால்பந்தாட்ட ரசிகர்கள் எவராலும் ஊகிக்க முடிந்ததொரு முடிவுதான். ஆனால் கால்பந்தாட்டம் தொடங்குவதற்கு முன்பேயே யானையின் கணிப்பு வந்துவிட்டது.
யானையும் பூனையும் சொல்ல வேண்டியிருப்பது கொடுமை என்கிறீர்கள். இம்மாதிரி எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், திட்டலாம், நொந்துகொள்ளலாம். ஆனால் அத்தனைத் தெளிவான கணிப்புக்கள் என்பது ஆச்சரியம் அளிக்கும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது.

Amudhavan said...

வருண் said...
\\கால்ப் பந்து என்பது "டென்னிஸ் சிங்கிள்ஸ் கேம்" அல்ல! திறமையான ஒரு ஆட்டக்காரர் "க்ராண்ட் ஸ்லாம்" வெற்றி பெற! கால் பந்துக்கு தேவை டீம் வொர்க். தன்னலமில்லா ஆட்டம். \\

நீங்கள் சொல்வது உண்மைதான் வருண். ஆனால் அந்த டீம் ஒர்க்கிலும் தனியொரு மனிதன் சிறப்பாக இருப்பதும் மற்றவர்களை விட அதிக திறமைகளுடனும் நுணுக்கங்களுடனும் இருப்பது அந்த டீமுக்கு எந்தவிதத்திலும் பிரயோசனப் படுவதில்லை என்றா நினைக்கிறீர்கள்? ஒற்றை ஆளை வைத்தே பல டீம்களின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன?
மாரடோனா குறிப்பிட்ட கிளப்பில் சேர மறுத்துவிட்டபிறகுதானே அவர்மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளெல்லாம் வந்தன? ஃபிபாவின் அரசியல், பணம் கொழிக்கும் கிளப்புகளின் அரசியல் எத்தகையது என்பதெல்லாம் தெரிந்த விஷயங்கள் தாமே. ட்ரக் டெஸ்ட் விஷயங்களையும் தாண்டி அவர் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதை அவர் விளையாடிய ஜூனியர் மேட்ச்சுகளைப் பார்த்தாலேயே தெரியும். கறுப்பு வெள்ளை டிவி இருந்த சமயத்தில் நிறைய தடவை ஒளிபரப்பியிருக்கிறார்களே....

Amudhavan said...

வவ்வால் said...
\\சம்பந்தபட்டவர்களூக்கு முழு தகவல்களும் போய் கிடைச்சாலாவது சந்தோஷமே ஆனால் அரைகுறை தகவல்கள் தானே சர்வ வல்லமை படைத்தவர்களுக்கே கிடைக்குது\\
முழுத்தகவல்கள் கிடைக்கிற பல விஷயங்களில் எப்படி நடந்துகொள்கிறார்கள? அதையெல்லாம் பார்க்கப்போனால் நிறைய கேள்விகள் நமக்கு நாமே கேட்டுக்கொண்டு தத்தளித்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

ஜோதிஜி said...

நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்.

Post a Comment