இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம்
ஊடகங்களில் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணர்கிறோம். ஊடகங்கள்
இத்தனை தூரம் முக்கியத்துவம் பெறாத காலத்தில் மறைந்த மிகப் பெரிய தலைவர்களின் மரணங்கள்
ஏற்படுத்தாத தாக்கத்தை கலாமின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பெரிதாகப் பரவிவிட்ட
ஊடகங்கள் மட்டும் காரணமில்லை என்பதும் அந்த ஊடகங்களின் இத்தனைப் பரபரப்பிற்கு ஈடாக
அவர் வாழ்ந்துவந்த வாழ்க்கை அவற்றுக்கு ஒரு தகவாக இருந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு
இல்லை.
கலாமைப் பற்றி உயர்வாகச் சித்தரித்து அவரது மேன்மைகளைப் புகழ்பாடி
வந்துகொண்டிருக்கும் நிலைத் தகவல்களும், பரப்புரைகளும், பதிவுகளும், கட்டுரைகளும்,
செய்திகளும், எண்ணவெளிப்பாடுகளும், சிந்தனைச் சிதறல்களும் ஒரு பக்கமிருக்க அவரை எதிர்த்து
வரும் பதிவுகளுக்கும், நிலைத்தகவல்களுக்கும், எதிர்த் தரப்புக் கேள்விக்கணைகளுக்கும்,
குத்திக் கிளறும் வாதங்களுக்கும்கூடக் குறைவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
‘மறைந்த ஒருவரைப் பற்றி அந்த மரணத்தின் சுவடுகூட நீங்காத சமயத்தில்,
அட இன்னமும் அவரது உடல்கூட அடக்கம் செய்யப்படாத நேரத்தில் இம்மாதிரியான எதிர்க்கருத்துக்களை
வைக்கலாமா?
நியாயம்தானா?
இவையெல்லாம் பண்பாடா? நாகரிகமா? ஒரு பொது கட்டுப்பாடு, கலாச்சாரம்கூடவா
இவர்களிடம் இல்லை?’ என்பதற்கெல்லாம் இங்கே பதில்கள் கிடையாது.
பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் சுய ஒழுக்கம் போன்றவற்றையெல்லாம்
எண்ணிப் பார்த்து செயல்படுபவர்கள் குறைந்துகொண்டு வரும் ஒரு காலகட்டம் இது.
‘கையில் எழுதுகோலோ அல்லது அதற்கு இணையான இணையமோ கிடைக்கிறதா
நான் எதுவேண்டுமானாலும் எழுதுவேன், எப்படி வேண்டுமானாலும் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பேன்,
என்னை யார் கேட்கமுடியும்?’ என்ற மனவோட்டமும் சிந்தனைத் திமிரும் கொண்ட காலகட்டம் இது.
இங்கே இப்படித்தான் எழுதுவார்கள், இப்படித்தான் செயல்படுவார்கள்…………
இப்படித்தான் நிலைத்தகவல்கள் போடுவார்கள்…………… இப்படித்தான் வினையாற்றுவார்கள்.
இவற்றுக்கெல்லாம் கலாமைப் போன்ற மாமனிதரைக் கூட ஆளாக்கிவிடலாமா
என்ற சிந்தனைத்தான் எஞ்சுகிறது!
இவர்கள் கலாமைப் பற்றி என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்
என்று பார்த்தோமானால் குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளின்போது வாய்மூடி மௌனியாக இருந்தார்,
ஈழத்தில் அத்தனைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது சின்ன வருத்தத்தையோ முனகலையோகூட
வெளிப்படுத்தவில்லை, கூடங்குளம் அணுஉலையை மூடச்சொல்லி நடைபெற்ற போராட்டத்திற்கு எதிர்வினையே
ஆற்றவில்லை என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இத்தகைய வாதங்களில் உண்மை இல்லாமலில்லை. நமக்கும்கூட இந்த விஷயங்களில்
கலாமுடைய கனத்த மௌனத்தில் சம்மதம் இல்லைதான்.
ஆனால் நிச்சயம் இந்த விஷயங்களை விவாதத்திற்குள்ளாக்கும் தருணம்
இதுவல்ல.
அவருடைய பூத உடல் அடக்கம் செய்யப்படுவதற்குள் அவருக்கெதிராக
எழுப்பப்படும் கலகக்குரல்கள் அருவெறுப்பையே ஏற்படுத்துகின்றன.
சின்னச்சின்ன குறுங்கத்திகளை மறைத்து வைத்துக்கொண்டு யார் கிடைத்தாலும்
அவர்களைக் குத்திக்கிழிப்பது மட்டுமே என்னுடைய பணி என்று செயல்படும் இணையச் செயல்பாட்டு
வீரர்கள் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள்.
பிறரைக் கீறுவதும் குத்திக்கிழிப்பதும் மட்டுமே இவர்களது வேலை.
வேறு எந்த வேலையும் இவர்களுக்குக் கிடையாது என்பதுமட்டுமல்ல எதுவும் தெரியாது என்பதையும்
சேர்ந்தே புரிந்துகொள்ள வேண்டும்.
மற்றவர்களை, அதுவும் பொதுவாழ்வில் தலைமை இடத்துக்கு ஒருவர் வந்துவிட்டாலேயே
‘நம்முடைய அட்டாக்கிற்கு இவர்களை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்று இவர்களாகவே முடிவு
செய்துகொள்கிறார்கள்.
இல்லாத ஊர் நியாயங்களை இவர்கள் சேகரித்துக் கொள்கிறார்கள்.
கடுமையான கேள்விக்கணைகளை வீசுகிறார்கள்.
எத்தனை அசிங்கமாக எழுதமுடியுமோ அத்தனை அசிங்கமாக எழுதித் தள்ளுகிறார்கள்.
கொஞ்சம்கூட மட்டு மரியாதை இன்றி வயதுக்கான மரியாதைக்கூட இல்லாமல் அமில வார்த்தைகளைக்
கொட்டுகிறார்கள். தங்களை யார் என்ன செய்துவிடமுடியும் என்பதும், தங்களைப் பற்றி யார்
என்ன எழுதிவிட முடியும் என்பதும் (இவர்களைப் பற்றி எழுத என்ன இருக்கப்போகிறது?) இவர்களுக்கான
பாதுகாப்பு அரண்.
இன்னொன்றைச் சொல்லவேண்டுமானால் இவர்களில் யாரும் படைப்பாளிகளாய்
இருக்கமாட்டார்கள். (ஒரு சிலரைத் தவிர) ஆகவே படைப்புக்கள் எழுதி தங்களை கவனிக்கவைக்க
முடியாது. ஆகவே இம்மாதிரியான அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதன்மூலம்
தங்கள்பால்
படிக்கிறவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாதா என்ற நப்பாசை இவர்களுக்கு உண்டு.
இப்படிச் சுற்றித்திரியும் ஆசாமிகள் இணையத்தில் எல்லாத் தளங்களிலும்
நிறையவே காணக்கிடைக்கிறார்கள்.
முதலில் அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும்.
குடியரசுத் தலைவராக வலிந்து திணிக்கப்பட்டவர் அவர். அவருக்கு நிச்சயம் சில
அரசியல் நிர்ப்பந்தங்கள் இருந்திருக்க வேண்டும்.
அரசியலில் யார் உள்ளே புகுந்தாலும் பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு
ஆட்பட்டுத்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கு ஆட்பட்டு
மௌனித்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குக்கூட அவர் ஆளாகியிருக்கக் கூடும். ஏனெனில் மேற்கண்ட
இக்கட்டான சூழல்கள் வராத காலத்திலேயே அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே
அவற்றிலுள்ள நிர்ப்பந்தங்களைப் பற்றித் தெரிந்துகொண்ட சிந்தனையாளரான அண்ணா தாம் ஏற்றுக்கொண்ட
முதல்வர் பதவி பற்றிக்குறிப்பிடும்பொழுது “தான் ஒரு சூழ்நிலைகளின் கைதி” என்று குறிப்பிட்டார்.
ஒரு சாதாரண முதலமைச்சர் பொறுப்புக்கே அப்படி அவர் கருத்துத்
தெரிவித்திருக்கும்போது ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் என்பவருக்கு எந்தவிதமான நிர்ப்பந்தங்கள்
இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
இப்படிச் சொன்னவுடன் ‘இவ்வளவையும் சகித்துக்கொண்டு ஏன் இருக்கவேண்டும்?
பிடிக்கவில்லையென்றால் பேசாமல் ராஜினாமா பண்ணிவிட்டுப் போயிருக்கவேண்டியதுதானே?’
என்று
கேட்கவும் செய்வார்கள். இதுபோன்ற அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் இங்கே பதில் சொல்லத்
தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இணையத்தின் சண்டப்பிரசண்டர்களின் ஆசை அபிலாஷைகளுக்கு
ஏற்ப எந்தத் தலைவனும் தன்னை வடிவமைத்துச் செயலாற்றிக்கொண்டிருக்க முடியாது. அப்படிச்
செயலாற்றவும் தேவையில்லை.
மறுபடியும் நினைவு கூறவேண்டும். ‘அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி
அல்ல!’
இங்கே ஒரு மனிதரின் தலைமைப் பண்பு என்பதும் அவரது ஆளுமைத் திறன்
என்பதும் பல்வேறு வகைகளில் வெளிப்படுகின்றன.
எத்தனையோ தலைவர்களை நாம் தினந்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பாரதப் பிரதமரிலிருந்து நம் வீட்டுத் தெருவிலிருக்கும் கார்ப்பரேஷன் கவுன்சிலர் வரைக்குமான
பலரையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
எல்லா விஷயங்களிலும் நூறு சதவிகிதம் ‘பர்ஃபெக்ட்டான’ ஆட்கள்
அல்லது தலைவர்கள் இங்கே யாருமே இல்லை என்பதும் அப்படி யாரும் இருக்கமுடியாது என்பதும்
நிதர்சனமான உண்மை.
அவ்வாறிருக்க இவர்கள் யாரை கல்லா கட்ட நினைக்கிறார்களோ அவர்களிடம்
மட்டும் நூறு சதவிகிதத்திற்கும் அதிகமான ‘பர்ஃபெக்ஷன்களை’ எதிர்பார்த்துக் கேள்விகள்
கேட்பார்கள். (அப்படிக் கேள்விகள் கேட்பவர்களிடம் ‘அந்தத் தகுதிகளில் நூற்றுக்கு ஒரு
சதவிகிதம் ஏன் அரை சதவிகிதமாவது கேட்பவர்களிடம் இருக்கிறதா?’ என்ற கேள்வி ஒருபுறமிருக்க)
“சரி, நீங்கள் சொல்லும் ஆளை விட்டுவிடுகிறோம். இவருக்கு மாற்றாக இங்கே யார் இருக்கிறார்கள்?
அவரை எனக்குக் காட்டு. நான் அவரைப் பின்பற்றுகிறேன்” என்று கேட்டுப்பாருங்கள்.
அவ்வளவுதான். ஆசாமிகள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.
சாதாரணத் தலைவர்களுக்கே இந்தக் கதி என்றால் கலாம்போன்ற ஒரு மாமனிதரை
நாம் எப்படி வரையறுக்க வேண்டும்?
இத்தனை உயரங்கள் தொட்ட எந்தத் தலைவருக்கும் இல்லாத பல அரிய உயர்குணங்கள்
கொண்டவர் அப்துல் கலாம்.
அவரிடமிருந்த தனிமனித நேயம் இங்கே எந்தத் தலைவனிடமும் இல்லை.
அவரிடமிருந்த உயர்குணங்கள் இங்கே எந்தப் பிரபலத்திடமும் இல்லை.
அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம் இங்கே எவரிடமும் இல்லை.
நீங்கள் கைகாட்ட முடிந்த யாரை விடவும் பண்புகளுக்கும் எளிமைக்கும்
சொந்தக்காரர் அவர்.
உலகின் அத்தனைத் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்த ஒரு நாட்டின்
உயர்ந்த குடிமகன் சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியையும், பள்ளிக்குப் போகும் ஏழைச்
சிறுமியையும் மதித்துத் தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்துப் பேசியதாய் எந்த
வரலாறும் இல்லை.
எளிமையிலும் எளிமையினராய், தன்னை மற்றவர்களின் அளவுக்கு இறக்கிக்கொண்டுதான்
அவர் மற்றவர்களிடம் பேசினார், பழகினார். இப்படி ஒரு உயர் பதவி வகித்தவரை இந்த ஜென்மத்தில்
மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் இந்த நாடு பார்க்கப்போவதில்லை.
ஜனாதிபதியாய் இருந்தபோதுகூட தம்மைச் சந்தித்தவர்கள் எத்தனை சாதாரணர்களாக
இருந்தபோதிலும் மரியாதை கொடுத்து “சார் சார்” என்றுதான் விளித்துப் பேசினார் என்பதை
எங்கு கொண்டுபோய் மறைக்கப்போகிறீர்கள்?
சாரு நிவேதிதா போன்ற சிலர் அவருடைய இலக்கியப் பரிச்சயத்தின்மீது
கேள்விகள் கேட்கிறார்கள். கலாமுக்குக் கூர்மையான இலக்கிய அபிப்பிராயங்கள் இல்லையாம்.
தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எவரென்று கேட்டால் அகிலன் கல்கி என்று சொல்லக்கூடிய
மொக்கையான இலக்கிய சிந்தனை உடையவராம். சிறந்த கவிஞர் வைரமுத்து என்பாராம். இந்த வகையில்
போகிறது அவரது சிந்தனை. இவருடைய கவலையெல்லாம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்
என்று கலாமிடம் கேட்டிருந்தால் அவர் “எனக்குப் பிடித்த எழுத்தாளர் நகுலன், மற்றும்
சாருநிவேதிதா. எனக்குப் பிடித்த கவிஞர் ஆத்மாநாம்” என்று சொல்லிவிட்டிருந்தால் கலாம்
கூர்மையான இலக்கிய ரசனை உடையவர் என்று ஏற்றுக்கொண்டிருப்பார் போலும்.(நல்ல வேளையாக
கலாம் தமிழின் அதி உன்னத ட்ரான்ஸ்கிரஸ்ஸிவ் வகை இலக்கியங்களைப் படிக்காதவராக இருந்திருக்கிறார்)
சாருநிவேதிதா சொல்கிற மாதிரியான இலக்கிய ரசனை கொண்டவர்கள் இங்கே
பொதுமக்களுக்காகவோ அல்லது தமிழுக்காகவோ சாதித்திருப்பது என்ன என்பதை வைத்துத்தான் இந்த
வெட்டிப்பேச்சு வீரர்களின் கருத்துக்களை அணுக வேண்டும்.
இவர் ஒரு விஞ்ஞானியே அல்ல; ஸ்கூட்டர் மெக்கானிக் போல ஏவுகணை
மெக்கானிக் என்று வேண்டுமானால் கலாமை ஒப்புக்கொள்ளலாம் என்கிறார் இன்னொரு அதிமேதாவி.
அறிவியல்துறை மெக்கானிக் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்
என்கிறார் இன்னொரு அதிபயங்கர மேதாவி.
கலாமின் சாதனைகளாக அவரே சொல்லிக்கொள்ள விரும்புவது அக்னி ராக்கெட்,
எஸ்எல்வி, மற்றும் அணுசக்தி. இவற்றைத் தாண்டி பாரமற்ற செயற்கைக் கால்கள், மற்றும் ஸ்டெண்ட்.
இவற்றையும் கடந்து சூரிய ஒளி மின்சாரம், காற்று மின்சாரம், மற்றும் அணுசக்தி மின்சாரம்
ஆகியவற்றில் தமது கவனத்தையும் சிந்தனையையும் செலுத்திவந்தவர் அவர். அவரை எதற்காக இந்த
அதிகப் பிரசங்கிகள் இவர்களின் வரையறைக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
கலாமையே ஒப்புக்கொள்ளாத அளவுக்கு இவர்கள் தங்களிடம் இத்தனை அரிய
பெரிய விஞ்ஞானப் புதையல்களையும் அறிவுப் புதையல்களையும் வைத்துக்கொண்டு ஏன்தான் பேசாமல்
இருக்கிறார்களோ தெரியவில்லை. இந்த ஞானவான்கள் எல்லாம் தங்கள் திருவாயைத் திறந்து ஏதாவது
மலர்ந்தருளினார்கள் என்றால் நிச்சயம் இந்தியா நாளைக்கே உலகின் முதன்மை நிலைக்குச் சென்றுவிடும்.
பெங்களூரில் சந்திரமௌலி என்றொருவர் இருந்தார். மெத்தப் படித்தவர்.
இந்திரா நகர் பகுதியில் ஒரு பெரிய ஓட்டலின் முதலாளி. இவர்களின் கேட்டரிங் மிகவும் புகழ்பெற்றது.
சந்திரமௌலியைச் சந்திக்கும்போதெல்லாம் கலாமின் அருமைப் பெருமைகள் குறித்து மிகவும்
சிலாகித்துப் பேசுவார்.
பெங்களூர் இஸ்ரோவுக்குக் கலாம் தலைவராக இருந்தபோது அவருக்கு
தினசரி உணவு கொடுக்கும் பணியினை மௌலி ஏற்றிருந்தாராம். அவருக்கு சித்திரான்னமும்(எலுமிச்சை
சாதம்) புளியோதரையும் அத்தனைப் பிடிக்கும் என்பார்.
அக்னிச் சிறகுகள் வந்தபோது “இதுஒரு சாதாரண கான்செப்ட் இல்லை.
இதனை ஒரு இயக்கம் ஆரம்பித்து இந்தியா பூராவுக்கும் கொண்டுசெல்ல இருக்கிறேன். இளைய தலைமுறை
மொத்தத்தையும் ஒன்றுதிரட்டி செயல்பட வைக்கப்போகும் உத்தமமான பெரிய திட்டத்திற்கான அடித்தளம்
இது” என்றிருக்கிறார் சந்திரமௌலி.
“அப்படியா ரொம்ப சந்தோஷம். நீங்க செய்யுங்க. ஆரம்ப விழாவை நானே
வந்து துவக்கி வைக்கிறேன். ஏன்னா உங்க கையில எத்தனை தரம் சாப்பிட்டிருக்கேன். அந்த
நன்றிக்கு இதுகூடச் செய்யாவிட்டால் எப்படி?” என்றிருக்கிறார் அன்றைய குடியரசுத் தலைவர்.
மௌலி ஆடிப்போய்விட்டார்.
எத்தனைப் பெரிய இடத்திலிருப்பவரிடம் இருந்து என்ன மாதிரியான
வார்த்தை!
இங்கே எந்தப் பிரபலம் அய்யா தான் ஏதோ ஒரு காலத்தில் காசு கொடுத்துச்
சாப்பிட்டவரிடம்
இப்படி ஒரு வார்த்தையைப் பகிர்ந்து கொள்வார்?
இப்படிப்பட்ட ஒரு மனிதரை நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதற்கு
எப்படி அய்யா உங்களுக்கெல்லாம் மனம் வருகிறது?
காலத்தின் கோலம் அக்னிச் சிறகுகளுக்கான ஆரம்ப முயற்சிகளில் இருந்தபோது
மௌலி திடீரென்று மாரடைப்பினால் காலமாகிவிட்டார்.
பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ‘ஜலவிஹார்’ என்றொரு குடியிருப்புப்
பகுதி இருக்கிறது.
ராணுவம் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகளுக்கான குடியிருப்புப்
பகுதி அது. என்னுடைய நண்பர் ஒருவரின் மாமா ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வு பெற்றதால்
அந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜலவிஹாருக்குச் சென்றுவந்த நண்பர்
அடுத்த நாள் பரபரப்பாக என்னைத் தேடி ஓடி வந்தார். “நேற்று ஜலவிஹாருக்குப் போய்வந்தேன்.
எங்க மாமா இருக்கும் ஃப்ளோரிலேயே நம்ம ஜனாதிபதி கலாமும் ஒரு வீடு வாங்கியிருக்காராம்.
இஸ்ரோ சீஃப்பாக இருந்ததால் கலாமுக்கும் அந்த இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இப்ப கலாம் ஜனாதிபதியாகிவிட்ட பிறகு டெல்லியில் கலாமைச் சந்தித்திருக்கிறார் கர்னல்.
“அந்த வீடு உங்களுக்கு எதுக்கு? அதனை விற்றுடுங்களேன்” என்றிருக்கிறார் கர்னல்.
“இல்லை இல்லை. அது என்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு.
நான் ரிடையராகிவிட்ட பிறகு பெங்களூர் வந்தால் எனக்குத் தங்க இடம் வேண்டுமே. தவிர அந்த
வீட்டை லோனுக்குத்தான் வாங்கியிருக்கிறேன். லோன் இன்னமும் முடியவில்லை. அதனால் வீட்டை
விற்கிற பேச்சு எழவில்லையே” என்றாராம்.
பல வருடங்களுக்கு முன்னால் திருவனந்தபுரத்திற்குச் சென்றுவந்த
அனுபவம் இருக்கிறது.
“திருவனந்தபுரத்தில் நமக்குப் பிடித்த நல்ல சாப்பாடு கிடைப்பது
சிரமம். அதனால் திருவனந்தபுரம் ஜங்ஷனில் இருக்கும் கேண்டீனுக்குப் போய்விடுங்கள். அங்கு
மட்டும்தான் தமிழ்நாட்டு ஸ்டைலில் நல்ல உணவு கிடைக்கும்” என்று நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.
அதன்படி ஜங்ஷன் ஓட்டலில் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களும் சென்று சாப்பிட்டு வந்தோம்.
கலாம் ஜனாதிபதியாகிவிட்ட பிறகு விகடனில் அவருடைய பேட்டி ஒன்று
வெளியாகியிருந்தது. அதில் இந்த ஜங்ஷன் ஓட்டல் பற்றிப் பேசுகிறார். “அந்த ஓட்டலில் நல்ல
சாப்பாடு கிடைக்கும்.
அதனால் மதியம் அங்கே சாப்பாட்டுக்குச் செல்வேன். நான் பணியாற்றிவந்த
விண்வெளி ஆய்வுக்கூடத்திலிருந்து அந்த ஓட்டல் இரண்டரைக் கிலோமீட்டர். தினசரி பகலில்
பொடி நடையாக நடந்துவந்து உணவருந்திவிட்டுப் பொடி நடையாக நடந்தே அலுவலகம் வந்துவிடுவேன்”
அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி பதவிகள் வகிப்பவர்களே அரசாங்கக்
கார்களையும் மற்ற சலுகைகளையும் எப்படி அனுபவிக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம். அத்தனை
உயர் பதவி வகித்தபோதும் அரசாங்க ஊர்தியைப் பயன்படுத்தாமல் தினசரி வெயிலில் நடந்தே வந்து
சாப்பிட்டுச் சென்ற அந்த மாமனிதரை இந்த உலகம் மிகச் சரியாகவே அங்கீகரித்திருக்கிறது
என்றே தோன்றுகிறது.
அப்துல் கலாம் தமது கனவுகள் நிறைவேறுவது இளைஞர்கள் கையில் அதுவும்
மாணவர் கையில்தான் உள்ளது என்பதை மிகத்தீவிரமாக நம்பினார். அதற்கான முயற்சிகளில் இறங்கியவர்
இதுவரை இரண்டு கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் என்று சொல்கிறது புள்ளிவிவரம்
ஒன்று.
நாட்டின் தென்கோடியிலிருக்கும் ஒரு காய்ந்துபோன பிரதேசமான ராமேஸ்வரத்தை
நோக்கி இன்றைக்கு இந்தியாவின் கவனம் முழுமையும் திரும்பியிருக்கிறது. அத்தனைத் தலைவர்களும்
ராமேஸ்வரத்தை நோக்கித் தங்களது தலையைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில்
மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் மாணவர் குலம் முழுக்கவும் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறது.
இதுதான் கலாமுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மற்றும் மரியாதை.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க எதிர்ப்புக் குரல்களும் இன்னொரு
பக்கம் வந்த வண்ணமே உள்ளன. எத்தனை நல்ல மனிதர்களையும் ஏதோ ஒரு இல்லாத காரணம் கண்டுபிடித்துப்
புறம் பேசுவது இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.
எப்படிப் பார்த்தாலும் பொதுக்கழிவறையில் எழுதும் மனப்பான்மை
கொண்டவர்களைத் திருத்தவும் முடியாது நிறுத்தவும்
முடியாது என்றுதான் தோன்றுகிறது.
44 comments :
People are people.We cannot to much about them.We need ignore them and move.
அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் சார்
யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. என்றாலும் இடம் பொருள் உண்டு.
மனுஷ்யபுத்திரனின் வாதத்தை கேட்டபோது சிரிப்புதான் வந்தது.
கலாம் எதையும் கண்டுபிடிக்கவில்லையாம் அதனால் அவர் விஞ்ஞானி இல்லையாம். இவர் எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விட்டார் . எடிசன் காலத்தோடு தனிப்பட்ட விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளின் காலம் முடிந்து விட்டது. இன்று ஆய்வுக் கூடங்கள் அனைத்தும் கூட்டு முயற்சியில்தான் இயங்குகின்றன. தனிப்பட்ட ஒருவர் கண்டுபிடிப்பின் பெருமையை அடைய முடியாது. எடிசன் போன்றவர்கள் கூட தன்னுடன் பணிபுரிந்தவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்தவற்றைக் கூட தனக்கே காப்புரிமை பெற்றுக் கொண்டார். அரசு விஞஞானக் கூடங்களில் பணியாற்றுபவர்களின் சாதனைகளும் கண்டுபிடிப்புகளின் பெருமை தனிப்பட்ட ஒருவர் உரிமை கொண்டாட முடியாது இதை அறியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த ஊடகங்கள் எந்த அடிப்படையில் அடிக்கடி அவரிடம் கருத்து கேட்கின்றன என்பது தெரியவில்லை
/// கையில் எழுதுகோலோ அல்லது அதற்கு இணையான இணையமோ கிடைக்கிறதா நான் எதுவேண்டுமானாலும் எழுதுவேன், எப்படி வேண்டுமானாலும் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பேன், என்னை யார் கேட்கமுடியும்?’ என்ற மனவோட்டமும் சிந்தனைத் திமிரும் கொண்ட காலகட்டம் இது. ///
நல்ல மனிதர் கலாமைப் பற்றிய, நேரம் காலம் தெரியாத சிலருடைய விமர்சனங்களுக்கு நல்ல பதில் உங்களது கட்டுரை.
கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, இவரை அன்று கடுமையாக விமர்சனம் செய்த அரசியல்வாதிகள் இன்றும் இருக்கிறார்கள்.
//// நாட்டின் தென்கோடியிலிருக்கும் ஒரு காய்ந்துபோன பிரதேசமான ராமேஸ்வரத்தை நோக்கி இன்றைக்கு இந்தியாவின் கவனம் முழுமையும் திரும்பியிருக்கிறது. அத்தனைத் தலைவர்களும் ராமேஸ்வரத்தை நோக்கித் தங்களது தலையைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். ///
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. அறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரது இறுதி ஊர்வலங்களுக்குப் பிறகு, அதிக மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம், டாக்டர் அப்துல் கலாம் அவர்களது இறுதி ஊர்வலமாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
\\முதலில் அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குடியரசுத் தலைவராக வலிந்து திணிக்கப்பட்டவர் அவர். \\
உண்மை..........100% உண்மை.
அவர் ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெறச் செய்திருக்கிறார். ஆனால் ஒரு ஜனாதிபதியாக எந்த சமூக/அரசியல் மாற்றத்தையும் அவரால் இந்த நாட்டுக்குச் செய்ய இயலவில்லை.
எம்.எஸ்.வி,கலாம் போன்றவர்களை தமிழகம் தந்ததற்கு தமிழனாக பெருமை அடையலாம்.பொக்ரான் கால சூழலையும்,அமெரிக்கா இந்தியா மீதான ஒவ்வாமை காலங்களையெல்லாம் இந்தியர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.அரசு சலுகைகள் இருந்தும் கூட இராணுவ மெஸ்ஸில் கௌரவம் பார்க்காமல் உறங்கிய மனிதர் கலாம்.
India 2020 - A vision for the new millennium பார்வையும் சிந்தனையும்,கல்லூரி,பள்ளிகள் என இளைய தலைமுறைகளின் கலந்துரையாடல்,கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே,யாவரும் கேளிர் என ஈரோப்பியன் யூனியன் உரை எனவும் முக்கியமாக நீங்கள் குறிப்பிடும் தனிமனித ஒழுக்கத்தையும்,எளிமையையும் கடைபிடித்தவர் கலாம்.
இன்றைக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனை வெல்லும் இலக்கியம் இன்னும் தமிழில் இல்லை.
***சாரு நிவேதிதா போன்ற சிலர் அவருடைய இலக்கியப் பரிச்சயத்தின்மீது கேள்விகள் கேட்கிறார்கள்.***
என்ன சார் நீங்க வேற..சாருவுக்கு அஸ்ட்ரானமியா தெரியும்? இல்லை அஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் தெரியுமா? இல்லைனா ராக்கட் சயண்ஸ் தெரியுமா? அதைப் பத்தியேல்லாம் அவர் விமர்சிக்க அல்லது கேள்விகள் எழுப்ப முடிய்மா என்ன? தனக்குத் தெரிந்ததைத்தானே கேட்ப்பாரு பாவம். இப்போ லக்லாமுக்கு தமிழ் இலக்கியம் தெரியாதுனே இருக்கட்டுமே, அதனால என்ன இப்போ? :)
எவனோ ஒரு தமிழ்நாட்டு எம் பி, இவரக் கால் பண்ணி ஒரு திருக்குறள் சொல்லுங்கனு கேட்டானாம். இந்தாளுக்கே நாலு திருக்குறள் ஒழுங்கா சொல்லத் தெரியாது.
இந்த இணையதள உலகில் இந்தாளைக் கால் பண்ணி ஒருத்தன் திருக்குறள் சொல்லச் சொன்னான்னா அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாதுனுதான் தோனுது. :)
சரி விடுங்க சார்! :) இதுபோல் ஒரு சிலர் தவிர பலரும் திரு கலாமை நல்லபடியாகத்தான் விமர்சித்துள்ளார்கள். அந்த வகையில எனக்கு சந்தோஷம்தான்.
கொஞ்சம் மயிலிறகால் தடவிக் கொடுத்தது போல இருப்பதாக எண்ணுகிறேன். நிறைய விசயங்களைப் பற்றி பேச வேண்டுமே? ஒரு பதிவு சமாச்சாரம் அளவுக்கு போய்விடும். என் பதிவில் இப்போது எழுத எண்ணமில்லாத காரணத்தால் கடந்த மூணு நாளில் கலாம் உருவாக்கிய தாக்கத்தை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். இடைவெளி விட்டு வருகின்றேன்.
// வேறு எந்த வேலையும் இவர்களுக்குக் கிடையாது என்பதுமட்டுமல்ல எதுவும் தெரியாது என்பதையும் சேர்ந்தே புரிந்துகொள்ள வேண்டும்... // இந்த புரிதல் ஒன்றே போதும்... எவ்விசயத்திலும் அரைகுறைகளை தவிர்த்தல் நமக்கு நலம்...
முடிவில் உள்ள கருத்து உட்பட பல கருத்தும் மனதிற்கு ஆறுதலைத் தந்தன... நன்றி ஐயா...
கலாம் அய்யா இறந்த செய்தி 27ந் தேதி மாலை அடுத்த அரை மணி நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது. அப்போது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்த 30ந் தேதி மதியம் வரைக்கும் அவர் குறித்த தகவல்கள், நேரிழைக் காட்சிகளைத் தொடர்ந்து கவனித்து வந்தேன். பல விமர்சனங்களைப் படித்தேன். பல ஆச்சரியங்களை உணர்ந்தேன்.
இந்தியாவின் ஒரு கடைக் கோடியில் பிறந்தவர் மற்றொரு கடைக் கோடியில் இறந்தார்.
பேராசிரியராகவே வாழ விரும்புகின்றேன் என்று சொன்னவர் இறக்கும் தருவாயில் கூட ஆசிரியராகத்தான் மறைந்தார்.
83 வயதில் அதிக உடல் உபாதைகள் இல்லாமல் வாழ்ந்தவர். அவர் கடை பிடித்த ஒழுக்க விதிகள் அவருக்குக் கடைசி வரைக்கும் உதவியது.
மேகலாயா போன்ற ஆக்ஸிஜன் குறைவாக உள்ள மலைப் பிரதேசங்களுக்குச் செல்ல முடிகின்ற அளவுக்குத் தான் எடுத்துக் கொண்ட பணியில் கண்ணும் கருத்தாக இருந்தவர். கொடுத்த வாக்குறுதிகளை உயிர் போல நினைத்தார்.
எந்த அவஸ்தைகளுமின்றி நொடிப் பொழுதில் அவருக்குக் கிடைத்த மரணம் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.
மத்திய அரசாங்கத்தின் நேரிடையான கட்டுப்பாட்டில் அவரின் மரண இறுதி நிகழ்வுகள் நடந்தேறியதால் திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட ஆச்சரியப்படத்தக்க வேகமான செயல்பாடுகள்.
கடைசிவரைக்கும் மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கம் சொல்வதைச் செய்ய வேண்டிய கட்டுப் பாட்டில் இருந்த காரணத்தால் அவருக்குக் கிடைத்த அற்புதமான இறுதி மரியாதை.
நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரு கடை நிலை பணியாளர் போல நடந்து ஒவ்வொரு நிகழ்வையும் செயல்படுத்திக் காட்டிய ஆச்சரியம். மற்றொருபுறம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அரசு எந்திரங்களை, ஒழுங்கமைத்த விதம்.
எங்கள் மாநிலத்தில் அவர் பணிபுரிந்தார் என்ற மேலான எண்ணத்தில் கர்நாடக மற்றும் கேரள முதல்வர்கள் காட்டிய அதீத மரியாதை மற்றும் கட்சி சார்பற்று மயானம் வரைக்கும் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.
நாடாளுமன்றமே ஸ்தம்பித்து இருக்கும் இப்போதைய சூழ்நிலையில் பிரதமர் நேரிடையாக வந்து அஞ்சலி செலுத்திய விதமும், அவர் கலாம் அவர்களின் சடலத்தைச் சுற்றி வந்து மரியாதை செலுத்திய விதமும் ஆச்சரியப்பட வைத்தது.
ஒரு அரசியல் தலைவர்கள் இறந்தால் மற்ற அரசியல் தலைவர்கள் தான் ஊடகங்களில் ஒப்பாரி வைப்பார்கள். ஆனால் இவரின் நினைவலைகளில் இஸ்ரோ தற்போதைய தலைவர், முன்னாள் தலைவர் முதல் சாதாரண ஆட்டோ காரர் வரைக்கும் பங்கெடுத்துக் கொண்டது.
காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மனது வைத்தால் எப்பேற்பட்ட நபரையும் ஹீரோ ஆக்க முடியும். ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து மக்களை ஆதரவைத் தேடிய போது அழைத்து வரக்கூடிய கூட்டம் தான் ஆதாயத்தை எதிர்பார்த்து வருகின்றது.
ஆனால் இயல்பாக மாணவர்கள் முதல் நடுத்தர வர்க்க மனிதர்களின் மனதில் கலாம் அவர்கள் சிம்மாசனமிட்டு இருந்த காரணத்தால் இராமநாதபுரம் பொட்டை வெயிலில் கூடிய கூட்டம் உணர்த்தியது.
கிறிஸ்துவத் தேவலாயங்களில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரார்த்தனைக் கூட்டத்தை நேரிலையில் பார்த்தேன். இராமேஸ்வரத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு இராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்து இருந்த ( கடைசி வரைக்கும் தொடர்ச்சியாக) உணவு ஏற்பாடுகளையும் பார்க்க முடிந்தது.
கலாம் அவர்கள் மேல் வைக்கப்படுகின்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள்.
1) அரசு பள்ளிக்கூடங்களில் அதிக அளவு அவர் பங்கேற்றதில்லை. தனியார் பள்ளிக்கூடங்களுக்கும், மேம்பட்ட நடுத்தரவர்க்கத்தினரின் பிரதிநிதியாகவே இருந்தார்.
(இவரைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அத்தனை அரசு சார்ந்த, சாராத நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் என்று எந்தவிதமான பாரபட்சம் காட்டாமல் கலந்து கொண்டார். இவர் கடைசி வரைக்கும் மூன்று நிலைகளில் செயல்பட்டார். ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்). இவரைப் போன்றவர்கள் தமிழ்நாடு அரசு தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரு வேளை நாங்கள் அவரை அழைத்தோம். அவர் வர விரும்பவில்லை என்று சொன்னதாக எந்த இடத்திலும் நான் படித்ததாக நினைவில்லை. தமிழ்நாடு அரசு பள்ளிக்கூட மாணவர்களிடம் உரையாற்ற வேண்டுமென்றால் பல புனித ஆத்மாக்களிடம் அனுமதி பெறுவது என்பது மேலோகம் போய்விட்டு வந்த அனுபவத்தையே கொடுக்கும். நான் கேள்விப்பட்ட பல சம்பவங்கள் என் நினைவுக்கு வந்து போகின்றது. திருப்பூர் ஜெவாபாய் அரசு பள்ளிக்கூட மாணவர்கள் (7000 பேர்கள் படிக்கின்றார்கள்) ஜனாதிபதி மாளிகையில் இவரைச் சந்தித்த நிகழ்வுகளை வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப் பாருங்கள். இவரின் பாரபட்ச தன்மை விளங்கும்.
2) தேச வளர்ச்சி என்ற பெயரில் அணு விஞ்ஞானம், ஏவுகணை, மீத்தேன், கூடங்குளம் போன்றவற்றுக்கு இவர் கொடுத்த ஆதரவு.
கடைசி வரைக்கும் இந்துத்துவ ஆதரவளராகவே செயல்பட்டார்.
குஜராத் படுகொலை, ஈழ இனப்படுகொலை போன்றவற்றுக்கு இவர் குரல் எழுப்பாத காரணம்?
(அரசு கட்டுப்பாட்டில் உள்ள பலவற்றில் நிகழும் வர்க்க பேதம், முரண்பாடுகள், உள் அரசியல் போன்றவற்றை உங்களால் எந்தக் காலத்திலும் ஜெயித்து வர முடியாது. இவரும் அடிபணிய வேண்டிய சூழலில் தான் வாழ்ந்தார். இதில் மறைக்க எதுவுமே இல்லை.
மேலும் இவர் ஒருவேளை தன்னிலை இஸ்லாமியராக முன்னிறுத்தி இருந்தால் இன்னும் பல அவமானகரமான விளைவுகளை இவர் சந்தித்து இருக்கக்கூடும்.
ஒரு விஞ்ஞானி ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் கருத்து சொல்ல வேண்டுமென்றால் அவர் அக்மார்க் அரசியல் தலைவராகத்தான் இருக்க வேண்டும். எத்தனை அரசியல் தலைவர்கள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நேர்மையான அறிக்கை கொடுக்கின்றார்கள்? மேலும் இவரின் நோக்கமென்பது கடைசி வரைக்கும் இளைய சமுதாயம் குறிப்பாக மாணவர்களின் எதிர்காலம் குறித்தே இருந்த காரணத்தால் அதைப் பற்றியே கவனம் செலுத்தினார். ஒரு வேளை பேசியிருந்தால் கூடச் சர்ச்சைகள் அதிகமாகச் சாக்கடைத்தனமான அறிவீலிகளைத் தினந்தோறும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கக்கூடும். இது போன்ற விசயங்களுக்குத்தான் நம் நாட்டில் நேர்ந்து விட்ட கொள்கைக் கொழுந்துகள் பலபேர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பேசிய காணத்தால் எத்தனை பிரச்சனைகள் இங்கு முடிவுக்கு வந்துள்ளது என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.
இவரின் ஒவ்வொரு பழக்கவழக்கமும் எந்த ஆதாயத்திற்காகவும் ஏற்படுத்திக் கொண்டதில்லை என்பதை அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நமக்கு உணர்த்தும். என் வழி, என் வாழ்க்கை, என் கொள்கை, என் லட்சியம், என் விருப்பம் என்று மகாத்மா காந்தி போலவே தன்னை வடிவமைத்துக் கொண்டார். உருவான விமர்சனங்களைக் கடைசி வரைக்கும் கண்டு கொள்ளவில்லை. அந்த அமைதி தான் இன்று கடைக்கோடி பேக்கரும்பு கிராமத்தில் கூடிய சர்வமதமும் சங்கமிக்கக் காரணமாக இருந்தது.
காந்தி ஜெயந்தி அன்று கூடக் கதவை மூடிக் கொண்டு உள்ளே பணிபுரியும் திருப்பூர் போன்ற இடங்களில் எந்த நிறுவனமும் செயல்படவில்லை. நான் பார்த்த வரைக்கும் இங்கே ஒரு கடைகள் கூடத் திறக்க வில்லை. இதே தான் தமிழ்நாடு முழுக்க. பல அரசியல்வாதிகளுக்குக் கிலியை உருவாக்கியிருக்கும். எம்.எஸ். உதயமூர்த்தி விதையைப் போட்டு விட்டுச் சென்றார். காலச்சூழலில் செடியாக மாறுவதற்கு முன்னால் அவர் மறைந்து விட்டார். இவர் செடியாக வளர்த்துள்ளார். இப்போதைய சூழலில் அதனை இளைஞர்களுக்கு மரமாக்கும் தகுதி இங்கே யாருக்கு இருக்கின்றது??
90 சதவிகித எதிர்மறை எண்ணங்களைக் கொண்டவர்களும், அதனையே வளர்க்க விரும்புவர்களுக்கு மத்தியில் கலாம் போன்றவர்கள் காலத்தை வென்றவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பிறகு சமூகத்திற்குத் தேவைப்பட்ட ஒருவர் காலத்தோடு கலந்து விட்டார்.
Superbly written. comments of Charu or kind of Manushiya puthiran... should be ignored....
கலாம் அவர்களுடன் நடிகர் விவேக் உரையாடல்
https://www.youtube.com/watch?v=exOcf_pSs9c
நடிகர் சிவகுமார் கலாம் குறித்து
https://www.youtube.com/watch?v=Doq3gzPSqUU
கலாம் அவர்களுடன் சிவக்குமார் (பகுதி 4)
https://www.youtube.com/watch?v=0RJqoFpypmM
கலாம் அவர்களுடன் சிவக்குமார் (பகுதி 3)
https://www.youtube.com/watch?v=A4QGSGVepqw
ஒரு வரியில் கருத்து சொல்லமுடியாது. ஒரு இடுகையே போடும் அளவுக்குக்கு விவாதங்கள் உள்ளது. என் இடுகை பிறகு வரும்.
வணக்கம் அமுதவன் சார்...
உங்களின் தளத்தினை என் கணினியிலிருந்து திறக்கும்போதெல்லாம், பக்கம் தொடர்ந்து ஆகி, வலைப்பூவினுள் நுழைய முடிவதில்லை... இப்படி இன்னும் சில தளங்களும் உள்ளன. இதற்கான தொழில்நுட்ப காரணம் புரியவில்லை....
( இந்த தகவலை வேறொரு கணினியின் மூலம் பதிகிறேன் )
தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html
நன்றி
சாமானியன்
அன்பின் வருண் ,
சாரு போன்ற அல்ப பிறவிகளுக்கு செருப்பால் அடித்திருக்கின்றீர்கள் ... இன்று மனுஷ்ய போத்திரன் ( எழுத்து பிழை அல்ல ) பல்டி அடித்திருக்கின்றார் .
வருண் இந்த அல்ப பிறவிகளுக்கு நீங்கள் தனியாக ஒரு பதிவு போட்டால் என்ன ?
.
அமுதவன் சார் மென்மையாகத்தான் கண்டிப்பார் . ஆனால் அந்த எருமை தோல் மனிதர்களுக்கு சுனைக்காது
Anonymous said...
\\People are people.We cannot to much about them.We need ignore them and move.\\
வாருங்கள் நண்பரே, தங்கள் கருத்திற்கு நன்றி.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\எடிசன் காலத்தோடு தனிப்பட்ட விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளின் காலம் முடிந்து விட்டது. இன்று ஆய்வுக் கூடங்கள் அனைத்தும் கூட்டு முயற்சியில்தான் இயங்குகின்றன. தனிப்பட்ட ஒருவர் கண்டுபிடிப்பின் பெருமையை அடைய முடியாது. எடிசன் போன்றவர்கள் கூட தன்னுடன் பணிபுரிந்தவர்களோடு சேர்ந்து கண்டுபிடித்தவற்றைக் கூட தனக்கே காப்புரிமை பெற்றுக் கொண்டார். அரசு விஞஞானக் கூடங்களில் பணியாற்றுபவர்களின் சாதனைகளும் கண்டுபிடிப்புகளின் பெருமை தனிப்பட்ட ஒருவர் உரிமை கொண்டாட முடியாது இதை அறியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். இந்த ஊடகங்கள் எந்த அடிப்படையில் அடிக்கடி அவரிடம் கருத்து கேட்கின்றன என்பது தெரியவில்லை\\
ஆமாம் முரளிதரன் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சுஜாதா வாக்களிக்கும் மின் எந்திரத்தைக் கண்டுபிடித்து அதனை தேர்தல் ஆணையமும் அரசும் ஒப்புக்கொண்டு அங்கீரித்து அது தொடர்பான அரசு ஆணை வெளியிட்ட அன்றைக்கு பெங்களூரிலுள்ள தினச்சுடர் பத்திரிகை மிகப்பெரிய தலைப்புச் செய்தியாக அதனைப் பிரசுரித்திருந்தது. 'தமிழ் எழுத்தாளர் சுஜாதா கண்டுபிடித்த வாக்குப்பதிவு எந்திரம் நாடு பூராவுக்கும் அமலுக்கு வருகிறது; மத்திய அரசு அறிவிப்பு' என்று ... சுஜாதாவின் மிகப்பெரிய புகைப்படத்துடன் அதனைப் பிரசுரித்திருந்தார்கள். தினச்சுடர் ஆசிரியர் திரு பி.எஸ்.மணி என்னைத் தொடர்பு கொண்டு "சுஜாதா பற்றி இன்றைய சுடரில் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறோம். தயவு செய்து அவருக்குத் தெரியப்படுத்திவிடுங்கள். அவருடைய அபிப்பிராயத்தையும் கேட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். நான் சுஜாதாவைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். "ஆமாம் ஃபாக்டரியில் இரண்டு மூன்றுபேர் கொண்டுவந்து அந்தப் பத்திரிகையைக் காட்டினார்கள். அது என்னுடைய தனிப்பட்ட கண்டுபிடிப்பு இல்லை. கூட்டுக் கண்டுபிடிப்புத்தான். நிறையப் பேருடைய உழைப்பு அதில் இருக்கிறது. எந்தக் கண்டுபிடிப்புமே தனிப்பட்ட முறையில் இருக்காது. கூட்டாகச் சேர்ந்துதான் உழைக்கிறோம். any how அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்" என்றார். இதுதான் உங்கள் பதிலைப் படித்ததும் என்னுடைய நினைவில் வந்தது.
தி.தமிழ் இளங்கோ said...
\\அறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரது இறுதி ஊர்வலங்களுக்குப் பிறகு, அதிக மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம், டாக்டர் அப்துல் கலாம் அவர்களது இறுதி ஊர்வலமாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.\\
வாருங்கள் இளங்கோ, இறுதி ஊர்வலங்களை வைத்து அரசியல் பேசுவது சரியல்ல என்றபோதிலும் சில ஊர்வலங்கள் பற்றி மனதுக்குத் தோன்றுவதைச் சொல்லுவது சரியென்றே படுகிறது. கலாமுக்கு இந்தியா பூராவுக்கும் பரவலாக அஞ்சலி செய்யப்பட்டதையும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதையும் நிச்சயம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ராமேஸ்வரத்தில் மட்டும் கூடிய கூட்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் சென்னையில் வேறு சிலரின் இறுதி ஊர்வலங்களுக்கும் மிகப்பெரிய அளவில் கூட்டம் சேர்ந்ததையும் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. சிவாஜி கணேசனுக்கும், காமராஜருக்கும்கூட மிகப்பெரிய கூட்டம் சேர்ந்தது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய நினைக்கிறேன். இருவருக்குமே தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி பெங்களூர், தங்கவயல் போன்ற இடங்களிலிருந்தும் பஸ்களிலும் ரயில்களிலும் இடம்கொள்ளாத அளவு மக்கள் பயணப்பட்டதை நான் அறிவேன்.
Jayadev Das said...
\\அவர் ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெறச் செய்திருக்கிறார். ஆனால் ஒரு ஜனாதிபதியாக எந்த சமூக/அரசியல் மாற்றத்தையும் அவரால் இந்த நாட்டுக்குச் செய்ய இயலவில்லை\\
வாங்க ஜெயதேவ், உங்க கருத்துக்கான பதில்கள் என்னுடைய பதிவிலும், திருவாளர்கள் ராஜநடராஜன், ஜோதிஜி ஆகியோரின் பின்னூட்டங்களிலும் பரவலாக இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
ராஜ நடராஜன் said...
\\பொக்ரான் கால சூழலையும்,அமெரிக்கா இந்தியா மீதான ஒவ்வாமை காலங்களையெல்லாம் இந்தியர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.அரசு சலுகைகள் இருந்தும் கூட இராணுவ மெஸ்ஸில் கௌரவம் பார்க்காமல் உறங்கிய மனிதர் கலாம். India 2020 - A vision for the new millennium பார்வையும் சிந்தனையும்,கல்லூரி,பள்ளிகள் என இளைய தலைமுறைகளின் கலந்துரையாடல்,கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே,யாவரும் கேளிர் என ஈரோப்பியன் யூனியன் உரை எனவும் முக்கியமாக நீங்கள் குறிப்பிடும் தனிமனித ஒழுக்கத்தையும்,எளிமையையும் கடைபிடித்தவர் கலாம்\\
வருக ராஜநடராஜன், நீண்ட நாட்களுக்குப் பிறகான உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. கலாம் மட்டுமின்றி தமிழகம் பற்றிய உங்கள் மதிப்பீடு மிகவும் சரியே.
வருண் said...
\\எவனோ ஒரு தமிழ்நாட்டு எம் பி, இவரக் கால் பண்ணி ஒரு திருக்குறள் சொல்லுங்கனு கேட்டானாம். இந்தாளுக்கே நாலு திருக்குறள் ஒழுங்கா சொல்லத் தெரியாது. இந்த இணையதள உலகில் இந்தாளைக் கால் பண்ணி ஒருத்தன் திருக்குறள் சொல்லச் சொன்னான்னா அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாதுனுதான் தோனுது. :\\
இந்த ஆசாமியின் பொய்களுக்கு அளவில்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறது. எனக்கும் சில முன்னாள் எம்பிக்களைத் தெரியும். அவர்களுடைய ஆள் அம்பு படை பலம் எல்லாம் தெரியும். அப்படியே கலாமைச்
சந்திக்கும்போது ஒரு குறள் சொல்லச் சொன்னார் என்றால் திருக்குறள் என்ன இந்த நாட்டில் சாரு நிவேதிதாவுக்கு மட்டுமே தெரிந்த மறைபொருள் இலக்கியமா என்ன? அல்லது சாரு நிவேதிதா திருக்குறளில் துறைபோகிய அறிஞர் பெருமகனா என்ன? ஐம்பது ரூபாய்க்கொடுத்து ஒரு திருக்குறள் புத்தகத்தை வாங்கிவைத்துக்கொண்டு அதிலிருந்து ஒரு திருக்குறளைச் சொல்லமாட்டார்களா? ஒரு போன் அடித்தால் இரண்டாயிரம் திருக்குறள் புத்தகங்களை வாங்கிவந்து தர ஒவ்வொரு எம்பிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். இந்த ஆசாமிக்குச் சொல்கிற பொய்களை ஒழுங்காகச் சொல்லக்கூட சுரணை அற்றுப்போயிருக்கிறது. இந்த லட்சணத்தில் டிரான்ஸ்கிரெஸ்ஸிவ் எல்லாம் கலாமைக் குற்றம் சொல்கிறது. எல்லாம் காலத்தின் கோலம்தான்.
திண்டுக்கல் தனபாலன் said...........
\\எவ்விசயத்திலும் அரைகுறைகளை தவிர்த்தல் நமக்கு நலம்.\\
உண்மைதான் தனபாலன். ஆனால் சில விஷயங்களில் அப்படிப் பேசாமல் இருந்துவிட்டால் 'தடியெடுத்தவன்'...... கதைக்கு வந்துவிடுகிறார்கள்.அவர்களுடைய ஆட்டத்திற்கும் அழிச்சாட்டியத்திற்கும் எல்லையே இல்லாமல் போய்விடுகிறது. சில கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லிவைப்பது ஒரு சிலரையாவது வாயடைக்கச் செய்கிறது.
Senthil, Pondy said...
\\Superbly written. comments of Charu or kind of Manushiya puthiran... should be ignored....\\
வாங்க செந்தில், திரு திண்டுக்கல் தனபாலனுக்குச் சொன்ன பதில்தான் உங்கள் கருத்திற்கும் பொருந்தும்.
நம்பள்கி said...
\\ஒரு வரியில் கருத்து சொல்லமுடியாது. ஒரு இடுகையே போடும் அளவுக்குக்கு விவாதங்கள் உள்ளது. என் இடுகை பிறகு வரும்.\\
உங்கள் பாணி அட்டகாசமான இடுகைக்காக காத்திருக்கிறேன் நம்பள்கி.
saamaaniyan saam said..........
\\உங்களின் தளத்தினை என் கணினியிலிருந்து திறக்கும்போதெல்லாம், பக்கம் தொடர்ந்து ஆகி, வலைப்பூவினுள் நுழைய முடிவதில்லை... இப்படி இன்னும் சில தளங்களும் உள்ளன. இதற்கான தொழில்நுட்ப காரணம் புரியவில்லை.... ( இந்த தகவலை வேறொரு கணினியின் மூலம் பதிகிறேன் ) தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்\\
வலைச்சரத்தில் என்னுடைய தளத்தை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு முதலில் நன்றி சாம். மற்றபடி என்னுடைய தளம் பற்றிய தொழில் நுட்பக்கோளாறு சம்பந்தமாக திரு திண்டுக்கல் தனபாலன் போன்ற தொழில் நுட்ப வல்லுநர்கள் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜோதிஜி திருப்பூர் said...........
வாருங்கள் ஜோதிஜி உங்களின் மிக நீண்ட அடுக்கடுக்கான பின்னூட்டங்கள் ஒரு முழு பதிவுக்கான தரமும் தகவல்களும் கொண்டவை. அவற்றை அப்படியே இரண்டு மூன்று தரம் படித்தாலேயே போதும் மொத்த சாரமும் அதில் இருக்கின்றன என்று மட்டும் கூறி அமைகிறேன் நன்றி.
அமுதவன் ஸார்,
கலாம் இறப்புக்கு இந்தியாவே மனது உடைந்து அழுதது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு. பலவிதமான மக்களை இந்த அளவுக்கு பாதித்த ஒருவர் நீண்ட நாட்களுக்குப் பின் நம் கலாமாக இருந்திருக்கிறார். ராதாகிருஷ்ணன், நேரு, அண்ணா, காமராஜ், எம் ஜி ஆர், போன்ற தலைவர்களுக்குப் பிறகு தமிழ் நாட்டில் இத்தனை துயரம் கொண்டு வீதியெங்கும் துக்க அஞ்சலி செலுத்தும் நபராக கலாம் இனி வேறு யாருக்கும் கிடைக்காத பெருமையை கொண்டிருக்கிறார்.
சாரு கூறிய கருத்துக்களை படித்தேன். அது அவருடைய பார்வை. அதற்கு ஜெயமோகன் எழுதிய எதிர்வினையையும் கண்டேன். இருவருமே ஒரே படகில் சவாரி செய்யும் துரதிஷ்ட வசத்தால் தமிழின் தற்போதைய பெரிய எழுத்தாளர்களாக தங்களையே நிறுவிக்கொள்ளும் நார்சிசிஸ்ட்டுக்கள். எனக்கோ இருவருமே ஒரு பொருட்டே அல்ல.
கலாம் ஒரு சரியான அரசியல்வாதியாக இல்லாமல் இருக்கலாம். அடிப்படையில் அவர் நீங்கள் சொல்வதுபோல ஒரு அரசியல் வாதியே அல்ல. அவர் ஒரு விஞ்ஞானி. சில சமரசங்கள் அவருக்கு முன்னே இருந்த நிர்பந்தங்கள். அதையும் வைத்துக்கொண்டு அவர் இளைஞர்களின் மனதில் ஒரு புரட்சி விதையை விதைக்க முடிந்தது என்றால் அது அவரின் தனிப்பட்ட சாதனை என்றே அர்த்தம் கொள்ளவேண்டும்.
மனுஷ்ய புத்திரன் ஒரு மூர்க்கத்தனமான அரசியல் பார்வை கொண்ட முதிர்ச்சியில்லாத கோமாளி. தி மு க வில் அவர் தன்னை இணைத்துக் கொண்டதும் அவருடைய முட்டாள்தனம் சாடிலைட் மூலம் பலருக்கு ஒரு வேடிக்கையாக ஒளிபரப்படுகிறது. அது அவருக்கு தெரியவில்லை பாவம். இங்கே மூன்கில்காற்று முரளிதரன் சொன்னதுபோல இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே ஒரு கண்டுபிடிப்பின் பெருமை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு செல்லும் பழைய நடைமுறை காலாவதியாகிவிட்டது. இனி எந்த கண்டுபிடிப்பும் ஒரு கூட்டு முயற்சியின் விளைவே. இதை வைத்துகொண்டு கலாம் என்னத்தைக் கண்டுபிடித்தார் என்று கேட்பதெல்லாம் ஒரு பள்ளிக்கூட சிறுவனின் கேள்வியே. மனுஷ்ய புத்திரன் இன்னும் வளரவேண்டும்.
நல்ல பதிவு. எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள். ஒரு மரணம் நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவை இணைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரே நாட்டின் மக்கள் என்ற எண்ணத்தை கொடுத்திருக்கிறது. ராமேஸ்வரம் என்ற வட இந்தியர்களுக்குத் தெரியாத ஒரு இலக்கை நோக்கி அவர்களின் பார்வையை திருப்பி இருக்கிறது. கலாம் ஒரு சகாப்தம். அதில் சந்தேகமே இல்லை. அவர் மிகையாக புகழப்பட்டாலும் இன்றைய யுகத்தில் இது ஒரு தேவையான சாத்தியம்.
blogspot.in என்று இருந்தால் தான் Refresh ஆகும்... தங்களின் தளத்தில் (blogspot.com) பிரச்சனை இல்லை...
அன்புள்ள அமுதவன் அய்யா மற்றும் சகோதரர் சாமானியன் சாம் இருவருக்கும் வணக்கம். எனக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டு ப்ளாக்கர் நண்பன் சொன்னபடி செய்து தீர்வு கண்டேன். இது சம்பந்தமான எனது பதிவு இது.
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html
துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம்
கலாமை விமர்சிக்கலாமா என்ற கேள்விக்குப் பதில் விமர்சிக்கலாம் என்பதே பதில். அவர் ஒரு தனிநபர் அன்று. பொது வாழ்க்கையில் மக்களுக்கு நன்கறியப்பட்டவர். அப்படிப்பட்டவர் மரணிக்கும்போது அவர் விட்டுச்சென்ற கொள்கைகள், கருத்துக்களின் குறை, நிறைகள் அலசப்படும். அதை நாம் விமர்சனம் என்கிறோம். உங்கள் விமர்சிக்கலாமா என்ற கேள்வியில் அவரைப்பற்றி குறைசொல்லக்கூடாதென்பதே தெளிவு. ஏனென்றால், குறை சொன்னவர்களெல்லாம் தாக்கப்படுகிறார்கள். பின்னூட்டத்தில் வருண் போன்றோர் காட்டுத்தனமாக தனிநபர் தாக்குதலை சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரிம் மேல் நடாத்துகிறார்.
ஜனநாயக நாட்டில் ஒரு பொது மனிதரைப்பற்றி குறையும் நிறையும் பேசப்பட வேண்டும். நிறைமட்டும்தான் பேசப்படவேண்டும் என்ற நேர்முக, அல்லது மறைமுக மிரட்டல் விட்டால், பையன் ஓநாய் வருகிறது என்று கூப்பிட்ட போது ஒருவரும் வராமலிருந்த கதைதான் பொதுவாழ்க்கையாகும். அல்லது அரசன் அம்மணாக இல்லை என்று ஊர்மக்கள் சொன்ன கதையே நடக்கும். மிரட்டல் உருட்டல்களுக்குப் பயந்து எல்லாரும் வாயை மூடிக்கொள்வார்கள்.
மாற்றுக்கருத்துக்கள் கண்டிப்பாகத் தேவை. சாரு, மனுஷ்ய புத்திரன் போன்றோர் கண்டிப்பாக எழுதவேண்டும். அப்படி அவர்கள் எழுத தைரியம் வந்தது நம் ஜனநாயகத்தாலே என்ற பெருமை நமக்கு. இன்றைய இந்தியாவில் மாற்றுக்கருத்துக்களை வைப்போர் தாக்கப்படுகிறார்கள்; சிறையிலடைக்கப்படுகிறார்கள் பேஸ்புக்கில் எழுதிய இளம்பெண்கள் இருவர் சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்கள் தாக்கரே இறந்தபோது கடையடைப்பு அவசியமா என்று கேட்டார்களாம்! கேரளாவில் ஒரு மாணவர் மோடியை விமர்சித்ததற்காக சிறைக்குச்சென்றார். நம் நாடு ஒடுக்குமுறை கொண்ட நாடு என்ற பெயர் பரவுகிறது ஒபாமா வந்து சென்ற பின் அதிகமாக.
உங்கள் பதிவும் பின்னூட்டங்களும் அப்பாதையில் இழுத்துச்செல்கின்றன என்பது என் அச்சம்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கலாம் சொன்னதை எதிர்த்துப்பேச நாம் விஞ்ஞானியல்ல. அதேசமயம், அப்படிச் சொன்னவர் அம்மக்களின் துயரத்தை மனதில் கொண்டு, இங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றலாமே என்றும் சொல்லியிருந்தால், கலாமை விரும்பலாம். சொல்லவில்லை. எப்படி அம்மக்களும் அவர் ஆதரவாளர்களும் கலாமின் மறைவை துக்கமாக்குவார்கள்? அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், அவர்களைத்தாக்குப் பதிவும் பின்னூட்டங்களும் போட்டால்?
எந்தவொரு தனிநபருக்கும் - அது காந்தியோ, நேருவோ எம்ஜியாரோ, அண்ணாத்துரையோ, சிவாஜி கணேசனோ - இவ்வளவு தூரம் உணர்ச்சிகரமாக அஞ்சலி செய்யக் கூடுவது அல்லது பேசுவது தமிழ்நாட்டில்தான் நடக்கும். காரணம் மக்களின் கலாச்சாரக்குணமது. சினிமா நடிகருக்குச் சிலை எங்குமே இந்தியாவில் வைக்கப்படவில்லை. ஆந்திரா, தமிழ்நாட்டில் மட்டும்தான்.
இது தவிர்க்கப்படவேண்டும். ஓரளவுக்கு மேல் போனால நல்லதன்று. மரியாதை வேறு. உணர்ச்சிவசப்படுதல் வேறு; மொட்டை போட்டாராம் ஒருவர்; இன்னொருவர் தற்கொலை செய்தாராம் (இன்றைய தினகரன் செய்தி)
///// கையில் எழுதுகோலோ அல்லது அதற்கு இணையான இணையமோ கிடைக்கிறதா நான் எதுவேண்டுமானாலும் எழுதுவேன், எப்படி வேண்டுமானாலும் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பேன், என்னை யார் கேட்கமுடியும்?’ என்ற மனவோட்டமும் சிந்தனைத் திமிரும் கொண்ட காலகட்டம் இது. ///
மாற்றுக்கருத்துக்களைப் பிடித்தால் அது திமிரில்லை. பிடிக்கவில்லையென்றால் சிந்தனைத்திமிர். A good standard of judgement !
இன்றைய காலகட்டத்தில் மாற்றுக்கருத்துகொண்டோரே கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள்.
உங்களுக்குப்பிடிக்கிறதோ இல்லையோ, கையில் எழுதுகோலோ அல்லது அதற்கு இணையான இணையமோ கிடைத்தால் நீங்கள் எப்படி எதுவேண்டுமானால் பேசுகிறீர்களோ, அல்லது உரிமையாக எடுக்கிறீர்களோ, அதே உரிமையை மற்றவர்கள் எடுத்தால் ஏன் தவறு? எனக்குப் புரியவில்லை.
சொல்லுங்கண்ணாச்சி சொல்லுங்க !
அருமையான. பதிவு .பணத்தால் ,பதவியால் படைபலத்தால் மனிதர்களை தன் வசப்படுத்த நினைக்கும் தலைவர்களின் மத்தியில் எளிமையான தோற்றத்துடன் அன்பாலும் அறிவாலும் அகிலத்தையே அனைத்துக் கொண்ட அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு அவருக்கான சிறந்த அஞ்சலியாகவே புலப்படுகிறது .அவர் குறித்த மாற்றுக் கருத்துக்களை பெரிதாக எண்ணவேண்டியதில்லை .இரு துருவங்கள் என்பது இயற்கையின் நியதிதானே .ஆதரிக்க சிலர் எனில் மறுப்பதற்கு பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் .தெரியாமலா அன்றே ஒரு கவிஞன் பாடினான் (வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் .வையகம் இதுதானடா ) தோன்றிற் புகழோடு தோன்றுக .என்ற வள்ளுவன் வாக்கினை மெய்ப்பிக்க பிறந்த மாமேதையின் புகழை யாருடைய வசைச்சொற்கள் தடுத்துவிடமுடியும் .
///இளைஞர்கள், இளைஞர்கள். மாணவர்கள், மாணவர்கள். கவலை தோய்ந்த முகத்துடன், நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் சென்று கொண்டே இருக்கிறார்கள்.
ஆரவாரம் ஏதுமில்லை. வறட்டுக் கூச்சலில்லை. டாஸ்மாக் வாசனை இல்லவே இல்லை. ஆனாலும் மக்கள், வாகனங்களிலும், பேருந்துகளிலும் வந்து இறங்கிய வண்ணம் இருக்கின்றனர்.////
இது நான் நேரில் கண்ட காட்சி ஐயா
அப்துல் கலாம் அவர்களை யாரும் விஞ்ஞானியாக ம்ட்டுமே
பார்க்கவில்லை, ஜனாதிபதியாக மட்டுமே பார்க்கவில்லை, அவரது பேச்சால், செயலால் , தங்களில் ஒருவராகத்தான் பார்த்தார்கள், அவரது மறைவு மக்களைப் பொறுத்தவரை, தங்களின் இல்லஉறுப்பினரின் மறைவு. அதனால்தான் யாரும் அழைக்காமல் நான்கு இலட்சம் பேர் கூடினார்கள், அந்த மகா ஆத்மாவிற்கு இறுதி வணக்கம் செலுத்த,
மக்களின் நலன் காக்கவே அவதாரம் எடுத்த அரசியல் வாதிகள் இலங்கை மக்களையும், குஜராத் படுகொலைகளையும் தடுத்து நிறுத்தாதபோது, இவர் மட்டும் குரல் கொடுக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறார்கள்.
இவர்கள் புறந்தள்ள வேண்டியவர்கள்
தம +1
பாட்டெழுதி பெயர் வாங்குபவர் இருக்கிறார்கள் . அதில் குறை சொல்லியே பெயர் வாங்குவோரும் இருக்கிறார்கள் என்று நாகேஷ் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக சொல்லுவார். டாக்டர் அப்துல் கலாம் விசயத்திலும் அது நடக்கிறது. எதிர்மறை விமர்சனக் கண்ணோட்டங்கள் உலகத்தில் எல்லா மகான்களின் மீதும் செலுத்தப்பட்டிருக்கின்றன அல்லது திணிக்கப்பட்டிருக்கின்றன . ஆனாலும் அவர்கள் எல்லோரும் மகாத்மாக்களாகத்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். காந்தி அதற்கு சரியான எடுத்துக்காட்டு . கலாம் அவர்களும் மக்களின் மனதில் மாமனிதராகவே போற்றப்படுகிறார். அதனால் எதிர் விமர்சனங்களை நாம் எடுத்துக் காட்டாமல் இருப்பதே நலம். அப்படியே அது முளைத்தாலும் கால வெள்ளம் அதையெல்லாம் அடித்துச் சென்று குப்பைகளோடு குவித்து விடும். நல்லவைகள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்.
காரிகன் said...
\\அடிப்படையில் அவர் நீங்கள் சொல்வதுபோல ஒரு அரசியல் வாதியே அல்ல. அவர் ஒரு விஞ்ஞானி. சில சமரசங்கள் அவருக்கு முன்னே இருந்த நிர்பந்தங்கள். அதையும் வைத்துக்கொண்டு அவர் இளைஞர்களின் மனதில் ஒரு புரட்சி விதையை விதைக்க முடிந்தது என்றால் அது அவரின் தனிப்பட்ட சாதனை என்றே அர்த்தம் கொள்ளவேண்டும்.\\
\\ஒரு மரணம் நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவை இணைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரே நாட்டின் மக்கள் என்ற எண்ணத்தை கொடுத்திருக்கிறது. ராமேஸ்வரம் என்ற வட இந்தியர்களுக்குத் தெரியாத ஒரு இலக்கை நோக்கி அவர்களின் பார்வையை திருப்பி இருக்கிறது. கலாம் ஒரு சகாப்தம். அதில் சந்தேகமே இல்லை. அவர் மிகையாக புகழப்பட்டாலும் இன்றைய யுகத்தில் இது ஒரு தேவையான சாத்தியம்.\\
வாருங்கள் காரிகன் , இங்குள்ள தங்களின் கருத்துக்கள் சிலருக்கு கலாமின் அருமையைப் புரியவைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி.
காரிகன் said...
\\அடிப்படையில் அவர் நீங்கள் சொல்வதுபோல ஒரு அரசியல் வாதியே அல்ல. அவர் ஒரு விஞ்ஞானி. சில சமரசங்கள் அவருக்கு முன்னே இருந்த நிர்பந்தங்கள். அதையும் வைத்துக்கொண்டு அவர் இளைஞர்களின் மனதில் ஒரு புரட்சி விதையை விதைக்க முடிந்தது என்றால் அது அவரின் தனிப்பட்ட சாதனை என்றே அர்த்தம் கொள்ளவேண்டும்.\\
\\ஒரு மரணம் நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியாவை இணைத்திருக்கிறது. நாமெல்லாம் ஒரே நாட்டின் மக்கள் என்ற எண்ணத்தை கொடுத்திருக்கிறது. ராமேஸ்வரம் என்ற வட இந்தியர்களுக்குத் தெரியாத ஒரு இலக்கை நோக்கி அவர்களின் பார்வையை திருப்பி இருக்கிறது. கலாம் ஒரு சகாப்தம். அதில் சந்தேகமே இல்லை. அவர் மிகையாக புகழப்பட்டாலும் இன்றைய யுகத்தில் இது ஒரு தேவையான சாத்தியம்.\\
வாருங்கள் காரிகன் , இங்குள்ள தங்களின் கருத்துக்கள் சிலருக்கு கலாமின் அருமையைப் புரியவைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி.
Bala Sundara Vinayagam said...
\\கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று கலாம் சொன்னதை எதிர்த்துப்பேச நாம் விஞ்ஞானியல்ல. அதேசமயம், அப்படிச் சொன்னவர் அம்மக்களின் துயரத்தை மனதில் கொண்டு, இங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றலாமே என்றும் சொல்லியிருந்தால், கலாமை விரும்பலாம்.\\
பாலசுந்தர விநாயகம், தங்களுக்கு வரவு. எல்லாரையும் ஒரே குடுவைக்குள் போட்டுக் குலுக்கி கொட்டிவிட முடியாது. எல்லாவற்றையுமே அரசியல் காரணங்களின் அடிப்படையிலேயே பார்க்கவும் கூடாது என்பதுதான் கலாம் மரணத்தின் மூலம் மக்களின் உணர்ச்சிகள் வெளிப்படுத்தியிருக்கும் பாடம்.
நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் காரணங்களுக்காகவெல்லாம் சாருநிவேதிதா தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. அவரது காரணங்களே வேறு. அவரது எதிர்ப்புகளைப் பற்றி இந்த நேரத்தில் விவாதிக்கவேண்டாம் என்றே நினைக்கிறேன்.
\\சினிமா நடிகருக்குச் சிலை எங்குமே இந்தியாவில்
வைக்கப்படவில்லை. ஆந்திரா, தமிழ்நாட்டில் மட்டும்தான். \\
நான் சிலைகள் வைப்பதை ஆதரிக்கிறேனா இல்லையா என்பது வேறு விஷயம். உங்களின் தகவலுக்காகச் சொல்கிறேன். நீங்கள் ஒருமுறை கர்நாடகாவுக்கோ பெங்களூருக்கோ வந்து பாருங்கள். சாலைக்கு சாலை மூலைக்கு மூலை ராஜ்குமார் சிலைகளையும், சங்கர்நாக் சிலைகளையும் காணலாம். ராஜ்குமாராவது குறைந்தபட்சம் பிரபல நடிகராகவாவது இருந்தார். சங்கர்நாக் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக ஒரு படத்தில் நடித்தது மட்டும்தான் அவர் புரிந்த ஒரே செயல். அதற்காக கர்நாடகாவில் ஓடும் தொண்ணூற்றைந்து சதவிகித ஆட்டோக்களில் அவர் படம் வரையப்பட்டிருக்கும். கர்நாடகத்தின் அத்தனை ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் அவருக்கு மார்பளவு சிலையாவது வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை தாராளமாகக் காணலாம். இதுஒருபுறமிருக்க.. தமிழன், அதுவும் இணையத் தமிழனுக்கு சிவாஜி என்பவர் வெறும் திட்டித்தீர்க்க மட்டுமே பிறப்பெடுத்த ஒரு ஜென்மம். இங்கே கர்நாடகத்தில், பெங்களூரில் எவனும் ராஜ்குமாரைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டு உயிருடன் வீட்டிற்குத் திரும்பிவிட முடியாது என்கிற நிலை இருப்பதைக் கர்நாடகத்தைப் பற்றித் தெரிந்தவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
Arul Jeeva said...
\\தோன்றிற் புகழோடு தோன்றுக .என்ற வள்ளுவன் வாக்கினை மெய்ப்பிக்க பிறந்த மாமேதையின் புகழை யாருடைய வசைச்சொற்கள் தடுத்துவிடமுடியும் .\\
தங்களின் வருகைக்கும் நல்ல கருத்துக்களுக்கும் நன்றி அருள்ஜீவா.
கரந்தை ஜெயக்குமார் said...
\\அப்துல் கலாம் அவர்களை யாரும் விஞ்ஞானியாக ம்ட்டுமே பார்க்கவில்லை, ஜனாதிபதியாக மட்டுமே பார்க்கவில்லை, அவரது பேச்சால், செயலால் , தங்களில் ஒருவராகத்தான் பார்த்தார்கள், அவரது மறைவு மக்களைப் பொறுத்தவரை, தங்களின் இல்லஉறுப்பினரின் மறைவு. \\
சரியான சந்தர்ப்பத்தில் சரியான கருத்தை சரியான முறையில் சொல்லியிருக்கிறீர்கள் ஜெயக்குமார்.
சார்லஸ் said...
\\அதனால் எதிர் விமர்சனங்களை நாம் எடுத்துக் காட்டாமல் இருப்பதே நலம். அப்படியே அது முளைத்தாலும் கால வெள்ளம் அதையெல்லாம் அடித்துச் சென்று குப்பைகளோடு குவித்து விடும். நல்லவைகள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்.\\
சார்லஸ் உங்களுடைய கருத்து நீங்கள் பிற்பாடு சொல்லவரும் எந்தக் கருத்திற்கு அநுசரணையாக இருக்கப்போகிறது என்பதையெல்லாம் பார்க்காமல் நீங்கள் இதனைக் கலாமுக்காக இந்நேரத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள் என்று மட்டுமே எடுத்துக்கொள்கிறேன்.
Nice post. Very true.
Post a Comment