Wednesday, February 3, 2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் மோடியின் மவுனமும்........






பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் என்றவுடன் தமிழக பாஜக மிக மிக சுறுசுறுப்படைந்தது. அதிலும் அவர்களுக்கு மிகவும் ராசியான மாவட்டமாக கோயம்புத்தூரைக் கருதுவதால் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. “நாங்கள் இந்தக் கூட்டத்திலிருந்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் ஒரு பாஜக பிரமுகர். மோடியின் தமிழ்நாட்டு வரைகையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது. மிகப் பரபரப்பான தேர்தல் சம்பவங்கள் அங்கு அரங்கேறும் என்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. பாஜக எம்மாதிரியான கூட்டணியுடன் களமிறங்கும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் உலவ விடப்பட்டன.

பாஜக ஒரு மெகா கூட்டணி அமைப்பது முடிவாகிவிட்டது. தனித்துக் களமிறங்குவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் கட்சிகளெல்லாம் பாஜகவின் மடிப்புக்குள் வந்துவிட்டன. பாமகவும், தேமுதிகவும், பாஜக தலைமையில் அணி சேர்ந்துவிட்டன. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வேகமாகப் பரப்பப்பட்டது.

பாமக தேமுதிக இரண்டு கட்சிகளும் இணைவதற்கு ஒப்புக்கொண்டு விட்டன. விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒரு செய்தியும் 131 சீட்டுக்கள் விஜயகாந்த்துக்கும், எழுபதோ எழுபத்தொன்றோ சீட்டுகள் பாமகவுக்கும் என்று ஒரு செய்தி அங்கலட்சணங்களோடு பத்திரிகைகளுக்குத் தரப்பட்டது. இந்தச் செய்தி யாரை சந்தோஷப்படுத்தியதோ இல்லையோ பாமகவை மிகவும் கோபப்படுத்தியது என்றே சொல்லவேண்டும். நாங்கள் யார் கீழேயும் இருக்கப்போவதில்லை. முதல்வர் வேட்பாளர் நான்தான். எங்களை ஒப்புக்கொண்டு, எங்கள் திட்டத்தை ஒப்புக்கொண்டு இங்கு வருபவர்கள் தாராளமாக பாமக அணியில் இணையலாம் என்று அன்புமணி கோபமாக ஒரு அறிக்கைக் கொடுத்தார்.

தேர்தல் முடிவு வருகிற வரைக்கும் டெல்லியின் கேஜ்ரிவால் நினைப்பில்தான் அன்புமணி இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இப்படியொரு செய்தியைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.

இதற்கடுத்து ரஜினியை மய்யமாக வைத்து இன்னொரு செய்தியை உலவ விட்டார்கள்.

இல்லை இல்லை முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்தான். இதற்காகவே ரஜினிக்கு பத்மவிபூஷண் வழங்கப்பட்டது. ரஜினியிடம் பேசி முடிவு செய்துவிட்டார்கள். ரஜினியும் ஒப்புக்கொண்டு விட்டார். விஜயகாந்தும் இந்த முடிவுக்குத் தலையாட்டிவிட்டார். என்பதாக இன்னொரு செய்தியும் ரகசியமாகப் பரப்பப்பட்டது.

கோவை வரும் பிரதமரை ரஜினி சந்திக்கப்போகிறார் என்றொரு செய்தியும், இல்லை இல்லை விஜயகாந்த் சந்திக்கிறார் என்றொரு செய்தியும் இறக்கைக் கட்டின.

இம்மாதிரியான செய்திகளுக்கான முனைப்புகள் எடுக்கப்பட்டனவோ என்னவோ தெரியவில்லை. முதல்நாளே விட்டால் போதும் என்று மலேசியாவுக்கு ஓட்டம் பிடித்தார் ரஜினி.(அதுவும் பாஸ்போர்ட்டைக்கூட எடுத்துக்கொள்ள மறந்து புறப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்)
விஜயகாந்த் பற்றிய தகவலே ஒன்றும் தெரியவில்லை. வழக்கம்போல் தன்னுடைய முடிவில் தேவுடு காக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவே குழம்பிய குட்டையில் அல்ல; நன்றாக இருக்கும் குட்டையைக் குழப்பி விட்டுவிட்டு அதில் மீன் பிடிக்கும் வேலையை வழக்கமாகச் செய்யும் சுப்பிரமணியன் சாமி இன்னொரு திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறார். 

‘பாஜக கூட்டணியில் திமுக இணைகிறது. கூடவே தேமுதிகவும் இணைகிறது. ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்றொரு தகவலை டுவிட்டரில் பரவ விட்டிருக்கிறார் சு.சாமி.

‘தமிழ்நாட்டிலே நம்ம ஆட்கள் நமக்கு எல்லாமே பிரமாதமாக செய்துவைப்பார்கள். போய் நின்று எல்லாவற்றுக்கும் தலைமை வகித்து போஸ் கொடுத்துவிட்டு டெல்லிக்குத் திரும்பிச் செல்லலாம் என்ற கனவுடன் வந்த மோடிதான் பாவம், எதுவுமே நடக்காமலிருக்க வெறும் ‘ஆல்இண்டியா நியூஸைப் பேசிவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார்.

இதில் ஏமாந்துபோனவர்கள்தாம் யார் என்று தெரியவில்லை. 




14 comments :

ஜோதிஜி said...

இது என்ன துணுக்குச் செய்தி மாதிரி இருக்கே? காரம் சாரம் ஒன்றுமே இல்லையே?

தி.தமிழ் இளங்கோ said...

தேர்தல் கால வதந்திகளை யார் கிளப்பி விட்டு இருப்பார்கள், என்பதற்கு வாசகர்களே யூகம் செய்து கொள்ளட்டும் என்று முடித்து விட்டீர்கள் போலிருக்கிறது.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\இது என்ன துணுக்குச் செய்தி மாதிரி இருக்கே? காரம் சாரம் ஒன்றுமே இல்லையே?\\

வேண்டுமென்றேதான் காரமும் சாரமுமாக எழுதவில்லை. தற்போதைய நிலை என்ன என்பதை மட்டும் தகவல் வடிவில் சொல்லும் பதிவுதானே இது!

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\தேர்தல் கால வதந்திகளை யார் கிளப்பி விட்டு இருப்பார்கள், என்பதற்கு வாசகர்களே யூகம் செய்து கொள்ளட்டும் என்று முடித்து விட்டீர்கள் போலிருக்கிறது.\\

வதந்திகள் போலச் செய்திகளும், செய்திகள் போல வதந்திகளும் வரத்தொடங்கியிருக்கின்றன. இரண்டையும் உற்பத்தி செய்து அனுப்பும் கூடாரங்கள் ஒன்றாகவேதான் இருக்கின்றன என்பதுமட்டும்தான் நமக்கான செய்தி.

ஜோதிஜி said...

மார்க்கெட்டிங் என்று சொல்லப்படுகின்ற சந்தைப்படுத்துதல் என்கிற ரீதியில் ஒரே பொருள் என்றால் கூட ஒவ்வொரு மாநிலத்தில் அது விற்பனையாகும் போது அந்த மாநில கலாச்சாரம் சார்ந்து விளம்பரங்களில் வார்த்தைகளை கோர்த்து விளம்பரம் வாயிலாக மக்களை யோசிக்க அல்லது அவர்களின் ஆசையைத் தூண்டுவார்கள். ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக மட்டும் காலம் காலமாக தமிழ்நாட்டில் இங்கு மக்கள் விரும்பும் விசயங்களை முன்னிலைப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களின் நிலைப்பாட்டினைத் தான் தங்கள் முயற்சிகளின் வாயிலாக முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். இதுவே இங்குள்ள பாதி மக்களுக்கு எரிச்சலை உருவாக்கின்றது. மீதிப் பேர்களுக்கு வெறுப்பைத் தருகின்றது. இரண்டு கட்சிகளிலும் தலைவர்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். தொண்டர்கள் என்பவர்கள் மருந்துக்கு கூட இல்லை. மாநில கட்சிகளின் லட்சியம் என்பது லட்சங்கள் சம்பாரிப்பது. தேசிய கட்சிகளின் லட்சியம் என்பது கோடிகள். இது தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். இதன் காரணமாக தேசிய கட்சியில் உள்ள அத்தனை தலைகளும் பவர் புரோக்கராக மாறி அவர்கள் வேலைகளை மட்டும் கவனிக்கின்றனர். தேர்தல் வரும் போது மாநில கட்சிகளை மிரட்டி, கெஞ்சி, உதார்விட்டு எப்படியே சீட்டுகளை பெற்று விடுகின்றனர்.

Jayadev Das said...

இவர் அதிமுக மசியாதான்னு ஏங்கிகிட்டு இருக்கார்னு நினைக்கிறேன்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக மட்டும் காலம் காலமாக தமிழ்நாட்டில் இங்கு மக்கள் விரும்பும் விசயங்களை முன்னிலைப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களின் நிலைப்பாட்டினைத் தான் தங்கள் முயற்சிகளின் வாயிலாக முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். இதுவே இங்குள்ள பாதி மக்களுக்கு எரிச்சலை உருவாக்கின்றது. மீதிப் பேர்களுக்கு வெறுப்பைத் தருகின்றது. இரண்டு கட்சிகளிலும் தலைவர்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். தொண்டர்கள் என்பவர்கள் மருந்துக்கு கூட இல்லை. மாநில கட்சிகளின் லட்சியம் என்பது லட்சங்கள் சம்பாரிப்பது. தேசிய கட்சிகளின் லட்சியம் என்பது கோடிகள். இது தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். இதன் காரணமாக தேசிய கட்சியில் உள்ள அத்தனை தலைகளும் பவர் புரோக்கராக மாறி அவர்கள் வேலைகளை மட்டும் கவனிக்கின்றனர். தேர்தல் வரும் போது மாநில கட்சிகளை மிரட்டி, கெஞ்சி, உதார்விட்டு எப்படியே சீட்டுகளை பெற்று விடுகின்றனர்.\\

வேடிக்கை என்னவென்றால் அந்த இரண்டு தேசியக் கட்சிகளின் நோக்கங்களும் மற்ற எல்லா மாநிலங்களிலும் நிறைவேறிவிடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான் அவர்களின் நோக்கங்கள் செல்லுபடியாவதில்லை. 'அந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாது' என்று எல்லாருக்கும் உளுவா காட்டிவிட்டு அதை விட மோசமான பருப்பை வேகவைத்துத் தின்று கொண்டிருப்பதுதான் தமிழனின் சாதனை.

Amudhavan said...

Jayadev Das said...

\\இவர் அதிமுக மசியாதான்னு ஏங்கிகிட்டு இருக்கார்னு நினைக்கிறேன்.\\

அதிமுக மட்டுமில்லை. கூடவே பாமக, தேமுதிக,மதிமுக எல்லாரும் வரவேண்டும் என்ற உயர்ந்த பேராசை மட்டும்தான் அவர்களுக்கு.

ஜோதிஜி said...

'அந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாது' என்று எல்லாருக்கும் உளுவா காட்டிவிட்டு அதை விட மோசமான பருப்பை வேகவைத்துத் தின்று கொண்டிருப்பதுதான் தமிழனின் சாதனை

நீங்க சொன்ன தமிழன் உருவாக்கிய சாதனைப் பாதை இது தானே? முகநூல் நண்பர் நரேன் எழுதியுள்ள கழக கணக்கீடு தங்களின் பார்வைக்காக.

தமிழகத் தேர்தல் 2016 - 2 (வாக்கு வங்கி அரசியல்)
=============================================
1996லிருந்து 2016 வரையிலான இப்போதைய வாக்கு வங்கி செல்வாக்கு நிலவரம்
1996 திமுக ஆட்சி
திமுக: 42.07% (போட்டியிட்டது 182; வென்றது 173)
அதிமுக: 21.47% (போட்டியிட்டது 168; வென்றது 4)
திராவிட அரசியல் இயக்க வாக்கு வங்கி: 63.54%
+++++
2001 அதிமுக ஆட்சி

அதிமுக: 31.44% (போட்டியிட்டது 141; வென்றது 132)
திமுக: 30.92% (போட்டியிட்டது 183; வென்றது 31)
திராவிட அரசியல் இயக்க வாக்கு வங்கி: 62.36%
+++++

2006 திமுக ஆட்சி

திமுக: 26.46% (போட்டியிட்டது 132; வென்றது 96)

அதிமுக: 32.64% (போட்டியிட்டது 188; வென்றது 61)

திராவிட அரசியல் இயக்க வாக்கு வங்கி: 59.1%
+++++

2011 அதிமுக ஆட்சி

அதிமுக: 38.40% (போட்டியிட்டது 165; வென்றது 150)

திமுக: 22.39% (போட்டியிட்டது 124; வென்றது 23)

திராவிட அரசியல் இயக்க வாக்கு வங்கி: 60.79%
+++++

இருபது ஆண்டுகள். இரண்டே கட்சிகள். நான்கு ஆட்சி மாற்றங்கள். ஆனாலும் சராசரியாக 60% வாக்கு வங்கி திமுக/அதிமுகவிடத்தில் தான் இருக்கிறது. அதாவது ஏறக்குறைய மூன்று வாக்காளர்கள் தமிழ்நாட்டில் வாக்களித்தால் அவர்களில் இருவர் திமுக/அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். இது ஒரு அசாதாரணமான voters consolidation. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலாவது இவ்வளவு அழுத்தம் திருத்தமாக, சார்புகளோடு வாக்காளர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்

(கம்யுனிஸ்டுகள் ஆண்ட வரை மே. வங்கத்தில் இது சாத்தியப்பட்டிருக்கலாம்)

அதிமுக 140 இடங்களுக்கு குறைவாக 20 ஆண்டுகளில் போட்டியிடவே இல்லை. திமுக கடந்த பத்தாண்டுகளில் கூட்டணிக் கணக்குகளுக்காக இறங்கி வந்து 130, 120ல் தான் போட்டியிட்டிருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்த மற்ற கட்சிகளின் வாக்கு விழுக்காடு, கூட்டணிப் பலத்தால் ஏறி இருக்கலாம். அது நிரந்தரமானதல்ல. இந்த வாக்கு வங்கியில் ஒட்டினை ஒட்டைப் போட்டாலேயொழிய “மாற்று” சாத்தியமில்லை. இந்த முறை இருக்கின்ற ஆரவாரத்தினைப் பார்க்கும்போது 60% இல்லாமல் கொஞ்சம் குறையலாம்.

ஆனால் கண்டிப்பாக அதிகமாக அடிபடாது. இளைஞர்களின் எண்ணிக்கை, குறிப்பாக பெண்கள் எந்தப் பக்கம் சாயப் போகிறார்கள் என்பது தான் இந்த தேர்தலின் முக்கிய swing factorரேயொழிய மாற்றமெல்லாம் பெரியதாக இருக்காது என்று கணக்குகள் சொல்கிறது.

ஜோதிஜி said...

ஒரு அரசியல் கட்டுரை என்பது எப்படி எழுதப்பட வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேனோ? அப்படி மற்றொரு கட்டுரை நரேன் எழுதியுள்ளார். இதில் உள்ள அடிப்படை விசயங்கள் (மட்டும்) எனக்கு ஏற்புடையதாக உள்ளது. இங்கு சேமிப்பதற்காக மற்றும் உங்கள் பார்வைக்காக.


தமிழக தேர்தல் 2016 - 1
======================
பாமகவின் டாக்டர். அன்புமணி ராமதாஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார். திமுக/அதிமுக-வில் அந்த சிக்கல்கள் கிடையாது.

முதல்வர் வேட்பாளர் பற்றிப் பேசத் தேவையில்லை என்று சொல்கின்ற ம.ந.கூவில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் முக்கியஸ்தர் ‘தலித் முதல்வர்’ என முன்வைக்கிறார். விஜயகாந்திற்கு உள்ளூர ‘தமிழக முதல்வராக’ வேண்டுமென்கிற ஆவல் இருக்கிறது.

சீமான் 2021-க்கான ‘முதல்வர் வேட்பாளராக’ இப்போதே இயக்கத்தை தயார் செய்கிறார். உண்மையில் தமிழகத்தில் முதல்வராக தேவை என்ன ?

தமிழகத்தின் முதல்வராக முக்கியமான தேவை 117 தொகுதிகள் உங்கள் கட்சியோ, கூட்டணியோ வெற்றிப் பெற்று நீங்கள் ச.ம.உ-வாகி மற்ற ச.ம.உ க்கள் உங்களை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தால், கவர்னர் உரையோடு பதவியேற்கலாம்.

அதற்கு முதலில் 117 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த 117 தொகுதிகள் ஒரு கட்சிக்கோ, முதல்வர் வேட்பாளருக்கோ எங்கிருந்து கிடைக்கும் என்பது தான் இன்றைய டேட்டா.

தமிழகத்தின் 234 தொகுதிகளை மாவட்ட ரீதியில் மூன்றாக பிரிக்கலாம்.

10 தொகுதிகள் & மேலும் இருக்கும் மாவட்டங்கள்
5 -9 தொகுதிகள் இருக்கும் மாவட்டங்கள்
2 - 4 தொகுதிகள் இருக்கும் மாவட்டங்கள்
முதல் வரிசையில் - 10 மாவட்டங்கள் (மொத்தம் 112 தொகுதிகள்; 47.86%)
சென்னை 16
வேலூர் 13
காஞ்சிபுரம் 11
சேலம் 11
விழுப்புரம் 11
கோயமுத்தூர் 10
மதுரை 10
திருவள்ளூர் 10
திருச்சிராப்பள்ளி 10
திருநெல்வேலி 10
இரண்டாம் வரிசையில் - 13 மாவட்டங்கள் (மொத்தம் 90 தொகுதிகள்; 38.46%)
கடலூர் 9
ஈரோடு 8
தஞ்சாவூர் 8
திருவண்ணாமலை 8
திருப்பூர் 8
விருது நகர் 7
திண்டுக்கல் 6
கன்னியாகுமரி 6
கிருஷ்ணகிரி 6
நாகப்பட்டினம் 6
நாமக்கல் 6
புதுக்கோட்டை 6
தூத்துக்குடி 6
மூன்றாவது வரிசையில் - 9 மாவட்டங்கள் (மொத்தம் 32 தொகுதிகள்; 13.68%)
தர்மபுரி 5
கரூர் 4
இராமநாதபுரம் 4
சிவகங்கை 4
தேனி 4
திருவாரூர் 4
நீலகிரி 3
அரியலூர் 2
பெரமளூர் 2

திமுக/அதிமுக தவிர்த்து (இந்த இரு கட்சியினருக்கும் வாக்கு வங்கி பரவலாக தமிழகம் முழுக்க, கன்னியாகுமரி நீங்கலாக இருக்கிறது) யாருக்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறது ?

பாமக: முதல் வரிசையில் விழுப்புரத்தில் செல்வாக்கு இருக்கிறது. வட தமிழகமான வேலூர், காஞ்சி, திருவள்ளூரில் ஒரளவுக்கு மற்றபடி பெரும் தொகுதிகள் நிறைந்திருக்கும் சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் கிடையாது. ஆக சற்றேறக்குறைய சரிபாதி தொகுதிகள் இருக்கக்கூடிய 10 மாவட்டங்களில் மூன்றில் தான் தேறும்.

இரண்டாம் வரிசையில் கடலூர் செல்வாக்கு அதிகம். மூன்றாவதில் தர்மபுரியில் அதிகம். ஆக சிரம திசை தான்.
ம.ந.கூ, தேமுதிக, பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர் என வாக்கினை சிதறடிக்க முடியுமேத் தவிர ஒருங்கிணைத்து வெற்றிப் பெறுதல் என்பது இப்போதைக்கு சிரமம். மாவட்டத்துக்காரர்களே ஒரு அணியாக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாய மாட்டார்கள் என்பது தான் பலவீனம். ‘ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே’ என்கிற மனநிலையில் இருக்கும் வாக்காளர்கள் தான் பலம்.

குறிப்பாக முதல் வரிசையில் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகம். வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுக தலை நிமிரும் சாத்தியங்கள் அதிகம்.

இரண்டாம் வரிசையில் திமுகவும், அதிமுகவும் கிட்டத்திட்ட சமநிலையில் இருக்கலாம். திமுகவிற்கு ஒரு edge இருக்கிறது.

மூன்றாவது வரிசை, இப்போதைய சூழலில் அதிமுக பலம் பொருந்திய ஏரியா. இது இப்போதைய சூழல். கூட்டணிக் கணக்குகள், சாதீய ஒருங்கிணைப்பு, anti-incumbency என கூடாரங்கள் மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
ஏன் திரும்ப திரும்ப திமுக/அதிமுக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்கின்றன என்கிற புரிதலுக்கு இந்த விரிவான கணக்கு உதவும். மாவட்டரீதியான கள அமைப்பினையும், தொண்டர் படையையும், வாக்கு வங்கி ஒருங்கிணைப்பையும் பெறாமல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் எந்த கட்சியும் காண்பது பகல் கனவே. இந்த கட்டமைப்பு இல்லாமல் ‘நாளைய தமிழக முதல்வர்’ என தம்பட்டம் அடிப்பது வீண் செயல். திராவிட அரசியல் இயக்கங்களுக்கான இந்த அடிப்படையை அசைக்காமல் மாற்றமெல்லாம் சாத்தியமில்லை.

Amudhavan said...

ஜோதிஜி கொஞ்சம் உள்ளே புகுந்து பார்த்து, விலாவாரியாக ஆராய்ந்து....... என்றெல்லாம் தலையை உடைத்துக்கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய நண்பர் பலராமன் என்று ஒருவர் இருந்தார். தீவிரமான திமுக. கர்நாடக திமுக முன்னோடிகளில் ஒருவர். மதியழகனுக்கு மிகவும் வேண்டியவர். இப்படியான தகவல்கள் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருப்பார். நானே அரசியல் கட்டுரை எழுதும்போது விவரங்களுக்கும், சரிபார்த்தலுக்கும் அவரை நாடுவேன். மேலேயுள்ள லிஸ்டையும் தகவலையும் பார்த்தபோது அவர் நினைவு வந்தது.
நீங்கள் சொல்ல வருவது உண்மைதான். திமுக அதிமுக தவிர்த்து மாற்று என்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை.
இந்தத் தமிழனை திமுக உருவாக்க நினைத்தது என்னமோ(ஓரளவு) நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அங்கேயிருந்து தட்டிப்பறித்து இந்திரா காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் மற்றவர்களும் எம்ஜிஆர் தலைமையிலும், தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலும் 'உருவாக்கினார்கள்' பாருங்கள் அந்தத் 'தமிழர்கள்'தான் நிறைய நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

இதில் வெற்றி பெற்றவர்களாக மாற்று அணியினரைத்தான் சொல்லவேண்டும்.
இந்த 'யுக்தி' புரியாமல் இன்னமும் அல்லாடிக்கொண்டும் சிலுப்பிக்கொண்டும் திரியும் இளைய மற்றும் இணைய தலைமுறையும் இதில் அடக்கம்.
இவர்களெல்லாம் சேர்ந்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

மோடியோ மேடியோ இறுதிச் சுற்றுதான் ஞாபகம் வருகிறது.

Amudhavan said...

காரிகன் நீங்க சினிமாவைச் சொல்றீங்களா? நான் இறுதிச்சுற்று இன்னமும் பார்க்கவில்லை.

சார்லஸ் said...

சார்

அதிமுக , திமுக இரண்டும் தனித்து நின்றால் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெரும் . கூட்டணிக் கட்சிகளால்தான் வாக்கு வங்கியின் பலம் கூடுகிறது என்பது பல வருடங்களாக நாம் பார்த்து வரும் உண்மை. அதனால்தான் விஜயகாந்துக்கு தற்போது மவுசு கூடியிருக்கிறது. தற்போதைக்கு விஜயகாந்துதான் ஹீரோ . அதிமுகவைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு அவரை அழைக்கின்றன . நீங்கள் சொல்வது போல் ஐந்தாண்டுக்கு ஒரு முறை கட்சி மாறி கூட்டணி சேரும் கட்சிகளால்தான் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது .

Post a Comment