Tuesday, April 12, 2016

வைகோவும் கலைஞரும் ஒரு சம்பவமும்……..


வைகோ கலைஞரைப் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் இன்றைக்கு அரசியல் அரங்கில் மிகப் பெரிதாக விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன. விஷயம் எல்லை மீறிப் போவதற்கு முன்னால் அவர் அதற்கான மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார். ‘என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக இதனைக் கருதுகின்றேன்’ என்பதுபோல் ஒரு அறிவிப்பையும் அவர் செய்திருக்கிறார். ‘கலைஞர் என்னை நன்றாக அறிவார். எனக்குள் சாதி ரீதியிலான உணர்வுகள் எனக்கு இல்லையென்பதை அண்ணன் கலைஞர் நன்றாக அறிவார்’ என்று ஒரு வார்த்தையையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

வைகோ ஒரு தேர்ந்த அரசியல்வாதி. அரசியலில் நிறைய மேடு பள்ளங்களைப் பார்த்தவர். என்னமாதிரியான செய்கைக்கு என்னமாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை அறிந்தவர். ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவனை நாக்கில் நரம்பில்லாமல் தன்னுடைய இச்சைக்கு ஏற்ப வசைபாடிவிட்டுப் போனால் அதற்கு கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பதை அறியாதவரல்ல. ஏதோ ஒரு ஆத்திரத்தில் செய்வது அறியாமல், அல்லது -‘இன்றைக்குத்தான்

கலைஞரை எல்லாத் திசைகளிலும் போட்டு வறுத்தெடுக்கிறார்களே…………..

போகிறவன் வருகிறவன் எல்லாம் அவரை ஒரு ‘சாத்துச் சாத்திவிட்டுப் போவதுதான்’ தினசரி கடமை என்று எண்ணுகிறானே…………….

முளைத்து மூணு இலைகூட இல்லை, இன்னமும் முளைக்காதவன் எல்லாம் இஷ்டத்துக்கு அவரை வசைபாடுகிறானே……………..

யாருமே அதற்கு மறுப்புக்கூடச் சொல்வதில்லையே………

இப்படி இவரை கேவலமாகவும், படு கேவலமாகவும் பேசுவதுதான் இன்றைய தமிழக அரசியலின் பாலபாடம் என்பதாக ஒரு சித்தாந்தத்தைத்தான் இன்றைய ஊடகங்களும் குறிப்பாக இணைய தளமும் கட்டிஎழுப்பி இருக்கின்றனவே…..

ஆகவே நாமளும் அதற்கு உரமேற்றுவதுபோல் ஒன்றைச் சொல்லிவைப்போம். ஒன்றும் ஆகாது. எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்று  தன்னுள் இருந்த அத்தனை ஆத்திரத்தையும் அத்தனை அசிங்கத்தையும் ஒன்று சேர்த்ததுபோல் அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

நண்பர் ஒருவர் சொன்னதைப்போல் “அவர் ஒன்றும் அதனை வாய்தவறிச் சொன்னதாகத் தெரியவில்லை. நீங்கள் அந்த விடியோவைப் பாருங்கள்….. நிறுத்தி நிதானமாக உள்ளுக்குள் அசைபோட்டு அசைபோட்டு அனுபவித்து அனுபவித்து வார்த்தை ஜோடனைகளுடன் இலக்கிய நயம் குன்றிவிடக்கூடாது என்ற அக்கறையுடன்தான் சொல்லியிருக்கிறார் வைகோ” என்றார் அந்த நண்பர்.

வைகோ பேசியது காலையில்……… இந்தச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து மாலையில்தான் எல்லாருக்கும் போய்ச் சேருகிறது.

செய்தி போய்ச் சேர்ந்ததும் திமுக தொண்டன் கொதித்துப் போகிறான்.

எதிர்ப்பு நடத்த வெளியே வருகிறான்.

எதிர்ப்பின் வேகம் என்னவென்பதை ஒரு சிலரால் ஊகிக்க முடிகிறது. 

மதுரையிலும் திருநெல்வேலியிலும் வேறு சில இடங்களிலும் தீ வைக்கப்பட்டதுபோல் செய்தி பரவுகிறது. இணையதளங்களில் திரும்பத் திரும்ப பல்வேறு பதிவுகளில் வைகோவின் ‘அழகிய பேச்சு’ பகிரப்படுகிறது.

இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கி எப்படியெல்லாம் இந்த எதிர்ப்பு எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு வேகமாகப் பரவும் என்பது சாதாரணமாய் அரசியலை கவனிப்பவர்களுக்கே புரிகிறது.

இதன் வீச்சு எப்படியிருக்கும் என்பதையும், இந்த விபரீதம் எங்கேயெல்லாம் கொண்டுசென்று முடியும் என்பதையும், இது எப்படியெல்லாம் விபரீதம் எடுக்கும் என்பதையும்- புரியாதவரல்ல வைகோ.

பல தொலைக் காட்சிகள் இதுபற்றி விவாதிக்க ‘விவாத வீரர்களுக்கு’ அழைப்பு விடுத்து விட்டது என்ற செய்தியெல்லாம் அவரை எட்டுகிறது.

இது தேர்தல் நேரம்.

எந்தக் காற்று எப்படி வீசும் என்பதைக் கணிக்கவே முடியாத சூழலில் இந்த விபரீதத்திற்கு தன்னால் தாக்குப் பிடிக்கமுடியுமா என்று யோசிக்கிறார் அவர். ‘முடியாது’ என்பதை அவரது அனுபவம் உணர்த்துகிறது. நண்பர்களும் சொல்கிறார்கள்.

உணர்ந்ததும் உடனே மன்னிப்புக்கடிதம் என்ற பெயரில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு கடிதத்தை எழுதி வெளியிடுகிறார்.

கவனியுங்கள்.

காலையில் பேசிவிட்டு அடுத்த அரை மணி நேரத்திலோ, ஒரு மணி நேரத்திலோ ‘உணர்ந்து’ அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு எப்படியெல்லாம் எழப்போகிறது என்பதை உணர்ந்தபிறகுதான், எல்லாவிதமான கணக்குகளையும் போட்டுப் பார்த்து அதன் அடிப்படையில்தான் இந்த விபரீதத்தைச் சமாளிப்பது அவ்வளவு எளிதன்று என்பதைப் புரிந்தபிறகுதான்-

அன்றைய மாலையில் வருத்தமே தெரிவிக்கிறார்.

இந்த இடத்தில் வைகோவை விடவும் சும்மாவே அந்தரத்தில் ‘சம்மர்சால்ட் பல்டி’ அடித்த சில மேதாவிகள்தான் முக்கியம்.

‘இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து அரசியலில் நடந்துகொள்ளக்கூடாது’ என்பதை வைகோவுக்கு உணர்த்தவேண்டிய ‘தமிழகத்து அண்ணன்மார்கள்’ உடனடியாக வைகோவைப் ‘புகழ்ந்து’ கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆமாம், கருணாநிதியைக் காயப்படுத்தியதற்குப் பரிசாக வைகோவைப் ‘புகழ’ ஆரம்பித்துவிட்டார்கள்.

‘என்னுடைய ஐம்பத்திரண்டு கால அனுபவத்தில் இப்படி எந்த ஒரு தலைவரும் வருத்தம் தெரிவித்துப் பார்த்ததில்லை நான்’ என்கிறார் ஒரு ‘அண்ணன்’.

‘என்னுடைய ஐம்பதாண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன். நான் அரசியலை அன்றையிலிருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறேன். உடனடியாக மன்னிப்புக் கேட்ட ஒரு தலைவரை நான் பார்த்ததே இல்லை’ என்கிறார் இன்னொரு ‘அண்ணன்’.

‘என்னுடைய நாற்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில்……….’ என்று ஆரம்பித்து வைகோவைப் பாராட்ட துயிலெழுகிறார் மற்றொருவர்.

இவர்களுடைய ‘சமூக அக்கறை’ கண்டு மெய் சிலிர்க்கிறது.

தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் இத்தகைய ‘அற்புதமான அரசியல் நடுநிலை வழிகாட்டிகளை’ எப்படிக் கொண்டாட வேண்டும்  என்பதே புரிபடாமல் திண்டாடித் திணற வேண்டியிருக்கிறது.

கலைஞரை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு மிகமிக தரம்தாழ்ந்து பொதுவெளியில் பேசிக்கொண்டிருந்த சில ‘நடுநிலை மேதாவிகள்’ இந்தச் சந்தர்ப்பத்தையும் வைகோவைப் பாராட்ட கிடைத்த சந்தர்ப்பமாக உருமாற்றும் செப்படி வித்தைகள் எந்த மாநிலமும் காணாத ஒன்று.

இதுஒரு புறமிருக்க வைகோ என்பவர் எப்படிப்பட்ட மனிதர் என்று மனதில் நிலைபெற்றிருக்கும் சித்திரத்தை இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் உணர ஒரு சில அனுபவங்களோ அல்லது ஒரேயொரு அனுபவமோகூட போதுமானதாயிருக்கலாம். 

அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு. மே மாதம். இருபத்தைந்தாம் தேதி.

25 – 5 -1988.

இந்த நாளுக்கு தமிழகத்திலே ஒரு முக்கியத்துவம் உண்டு.

சில பேருடைய வாழ்க்கையிலே மிக அழுத்தமாகப் பதிந்துபோய்விட்ட நாட்களில் ஒன்று இந்த நாள்.

இந்த நாளைத் தமது வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான ஒரு நாளாகக் கருத வேண்டியவர் இளையராஜா.

ஏனெனில் அவருக்கு இசைஞானி பட்டம் மேற்கண்ட நாளில்தான் வழங்கப்பட்டது.

காரைக்குடியில் – கலைஞரால்!

இந்த நாள் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, எனக்கும் மறக்கமுடியாத நாளாகவே அமைந்துவிட்டது.
அதற்குக் காரணமும் இளையராஜாதான்.

இது இளையராஜாவுடனான அனுபவத்தைச் சொல்லும் கட்டுரை அல்ல என்பதனால் அந்த அனுபவத்தை வேறொரு நாளுக்குத் தள்ளிவைத்துவிட்டு இப்போது வைகோவுக்கு வருகிறேன்.

நடிகர் சிவகுமார் அவர்கள் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தபோது அவருக்கான வெளியூர் படப்பிடிப்பு எங்கே இருந்தாலும் ஒரு மூன்று நாட்களுக்கோ நான்கு நாட்களுக்கோ என்னையும் உடன் அழைத்துக்கொள்வார்.

அதேபோல சென்னையைத் தவிர வெளியூர்களில் அவர் கலந்துகொள்ளும் முக்கிய விழாக்கள் எதுவாக இருந்தபோதிலும் தவறாமல் என்னையும் அழைத்துக்கொள்வார். இது இன்றைக்கும் தொடர்கிறது.

அதேபோல எண்பத்தெட்டாம் வருடம் சிவகுமார் அவர்களிடமிருந்து அந்த இண்லாண்ட் லெட்டர் வந்திருந்தது. அப்போதெல்லாம் போன் இல்லை என்பதனால் கடிதப்போக்குவரத்துத்தான்.

‘மே மாதம் இருபத்தைந்தாம் தேதி புதன்கிழமை காரைக்குடியில் கலைஞர் தலைமையில் இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெறுகிறது. நண்பர் பழ கருப்பையா நடத்துகிறார். நானும் கலந்துகொள்கிறேன். நீங்கள் 25ம் தேதி காரைக்குடி வந்துவிட்டு மறுநாள் காலையிலேயே ஊருக்குத் திரும்பிவிடலாம்.அதற்கேற்ப புரோகிராம் அமைத்துக்கொண்டு வாருங்கள்’ – என்று எழுதியிருந்தார்.

எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஞானபீடம் பரிசுபெற்ற அகிலன் அவர்களின் இரண்டாவது மகன் ஜெகன்னாதனின் திருமண நிச்சயதார்த்தம் 24ம் தேதி புதுக்கோட்டையில். நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றுவிட்டு அங்கேயே தங்கி புதுக்கோட்டையிலிருந்து பக்கத்திலிருக்கும் காரைக்குடிக்கு மறுநாள் கிளம்பிப் போனோமென்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பவும் காரைக்குடியிலிருந்து 26ம் தேதி கிளம்பி அன்றைக்கே திருச்சியில் நடைபெறும் அகிலன் மகன் திருமணத்தில் பங்கேற்கலாம்.

விஷயத்தைக் குறிப்பிட்டு சிவகுமார் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். ‘மிக்க மகிழ்ச்சி. வாருங்கள். காரைக்குடியில் இறங்கி பழ கருப்பையா வீட்டிற்கு வந்துவிடுங்கள். அங்கே சந்திப்போம்’ என்று சுருக்கமாக பதில் போட்டிருந்தார்.

முதல் நாள் நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு மறுநாள் 25ம் தேதி காலையில் புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் காரைக்குடி சென்றோம். பஸ் நிலையத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கினோம். 

வெயில் பயங்கரமாகக் கொளுத்திக்கொண்டிருந்தது..

தெரு பூராவும் போஸ்டர்களும் பேனர்களுமாக சாலையே தெரியாத அளவு நிறைக்கப்பட்டிருந்தது. கலைஞரை வரவேற்று, இளையராஜாவை வரவேற்று, அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று அன்றைக்கே போக்குக்காட்டிக்கொண்டிருந்த விஜயகாந்த்தை வரவேற்று என்று ஏகப்பட்ட போஸ்டர்கள். 

பெயருக்கு இரண்டு பேனர்கள் சிவகுமாரை வரவேற்றும் வைக்கப்பட்டிருந்தன.

பழ கருப்பையா காரைக்குடியில் முக்கியமான புள்ளி என்பதனால் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை. பழ கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது ஏகப்பட்ட பிரமுகர்கள் சூழ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் அவர்.

அவரை ஏற்கெனவே எனக்குத் தெரியும். நண்பர் தமிழருவி மணியன் மூலம் பழ கருப்பையா ஏற்கெனவே பழக்கம் என்பதால் அறிமுகம் எதுவும் வேண்டியிருக்கவில்லை. பழ கருப்பையாவைச் சுற்றி ஏகப்பட்ட செட்டியார்கள் கூட்டம்.

எல்லாரும் தமிழகம் அறிந்த மிக முக்கியமான பிரமுகர்கள். தமிழண்ணல், ஆறு.அழகப்பன் தொடங்கி ஏகப்பட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் ஒருபக்கம், ப.சிதம்பரத்தின் அண்ணன் லட்சுமணன் தொடங்கி நான்கைந்து அரசியல் பிரமுகர்கள் மறுபக்கம், எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம் தொடங்கி ஏகப்பட்ட திரையுலகப் பிரபலங்கள் என்று அந்த இடமே அனைத்து ‘புகழ்பெற்ற செட்டியார்களால்’ நிரம்பி வழிந்தது.

“வாங்க வாங்க நீங்க வருவீங்கன்னு சிவகுமார் இப்பத்தான் சொன்னார். அவரும் இளையராஜாவும் பத்து நிமிஷம் முன்புதான் வந்தாங்க. இப்பதான் இதோ இங்க பக்கத்துலதான் தங்கியிருக்காங்க. நீங்க வேணும்னா சிற்றுண்டி சாப்பிட்டுட்டு அவங்க தங்கியிருக்கற இடத்துக்குப் போய்க்கலாம்” என்றார் பழ.கருப்பையா.

அதற்குள் அங்கிருந்த தெரிந்த முகங்களிடம் வணக்கம் தெரிவித்து இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு “இல்லை நாங்க டிபன் சாப்பிட்டுட்டோம். அவங்க தங்கியிருக்கற இடத்துக்குப் போகிறோம்” என்றேன்.

யாரோ ஒரு உறவினரைக் கூப்பிட்டு “சிவகுமாரும் இளையராஜாவும் மாமா வீட்ல இருக்காங்க. அங்க இவங்களைக் கூட்டிட்டு போய் விட்டுரு” என்று சொல்லி அவருடன் எங்களை அனுப்பி வைத்தார்.

அதே தெருவில் ஒரு ஏழெட்டு வீடு தள்ளி இருந்த இன்னுமொரு பிரமாண்டமான செட்டிநாட்டு மாளிகை அது. 

அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளுமே ஒன்று போலவே இருந்தன. அந்த வீடுதான் பழ கருப்பையாவின் மாமனார் வீடாம்.

எல்லா வீடுகளையும் போல அந்த வீடும் காலியாகத்தான் இருந்தது.

அதில்தான் சிவகுமாரும் இளையராஜாவும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். “கலைஞர், விஜயகாந்த் இவங்கெல்லாம் வந்துட்டாங்களா?” என்று உடன் வந்த நண்பரை விசாரித்தேன்.

“கலைஞர் ஐயா மாலைதான் வர்றாங்க. திருச்சியில் ஏதோ பெரிய திருமணம். கலைஞர்தான் நடத்தி வைக்கிறார். அதை முடிச்சுட்டு அங்கிருந்து நேராக இங்கே வர்றார். விஜயகாந்தும் மனோரமாவும் வந்துட்டாங்க. அவங்களை ஓட்டல்ல தங்க வைச்சிருக்கோம். சிவகுமார் சாரும் இளையராஜா சாரும் ஓட்டல் வேணாம் வீடுகள்ளயே தங்கிக்கறோம்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் இங்க அவங்களைத் தங்க வச்சிருக்கு” என்று நடைமுறை செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார் அந்த அன்பர்.

அதற்குள் வீடு வந்துவிட பிரமாண்டமான மாளிகை போலிருந்த அந்த வீட்டிற்குள் போனோம். நடு ஹாலில் அமர்ந்து சிவகுமாரும் இளையராஜாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“வாங்கய்யா வாங்க. நாங்க வந்தே ஒரு பத்து நிமிடம்தான் ஆகுது. அதற்குள் வந்துட்டீங்களே” என்றபடியே வரவேற்றார் சிவகுமார்.

இருவருக்கும் வணக்கம் சொன்னோம்.

சிவகுமார் மட்டும் பதில் வணக்கம் சொன்னார்.

எங்களைக் கூட்டிவந்தவர் எங்களுக்கும் இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டுவிட்டு பவ்வியத்துடன் விடைபெற்றுக் கொண்டார்.

சிவகுமார், இளையராஜா அவர்களுடன் நான் மற்றும் என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு இரண்டு மணிநேரம் பல்வேறு செய்திகளையும் பேசியபடியே இருந்தோம்.

மீண்டும் ஒரு நினைவூட்டல்.

இளையராஜா அவர்களுடனான அனுபவங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுத இருப்பதால் வைகோ அவர்களைப் பற்றிய செய்திக்கு நேராக வந்துவிடுகிறேன்.

எங்களைப் பகல் உணவிற்கு அழைத்துச் செல்வதற்காக பழ கருப்பையா வீட்டிலிருந்து அன்பர் ஒருவர் வந்திருந்தார்.

அவருடன் நாங்கள் நால்வரும் சென்றோம்.

உணவு முடிந்தவுடன் “வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுங்கள். கலைஞர் சரியாக ஐந்து மணிக்கு வருவதாக இப்பத்தான் போனில் தகவல் வந்தது. நீங்க நாலரை மணிக்கு வந்துடுங்க. அப்பத்தான் சரியாக இருக்கும். கலைஞர் வந்ததும் டிபன் சாப்பிட்டுவிட்டு நேராக நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குப் போய்விடலாம். மைதானம் இங்கிருந்து சரியாக ஒரு நிமிடம்தான். அதோ பாருங்க அதான் மைதானம்” என்று கீழ்ப்புறமாக கையைக் காட்டினார் பழ கருப்பையா. அந்தப் பக்கம் பார்த்தபோது இரண்டொரு வீடுகள் தள்ளி தெரு முடிவடைந்து ஒரு பெரிய மைதானத்தின் நுழைவு தெரிந்தது.

“மைதானத்துக்கும் நடந்தே போய்விடலாமா?” என்று கேட்டார் சிவகுமார்.

“இல்லை இல்லை பிரபலங்கள் எல்லாம் நடந்து போகமுடியாது. மக்கள் விடமாட்டாங்க. இந்தப் பிரதான தெரு வழியாக சுற்றிக்கொண்டு காரில் வந்துரலாம். மத்தவங்க எல்லாம் நடந்தே நேராக மைதானம் வந்துவிடலாம். சுத்திக்கிட்டு வரவேண்டிய தேவை இல்லை” என்றார் பழ.கருப்பையா. மீண்டும் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்து நால்வரும் குளித்துத் தயாராக இருந்தோம்.

மறுபடியும் நாலரை மணிவாக்கில் பழ கருப்பையா வீட்டிற்கு எங்களைக் கூட்டிப்போக ஆள் வந்தது.

இப்போது பழ.கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது சிவகுமாரையும் இளையராஜாவையும் எழுந்து வந்து வரவேற்றவர் விஜயகாந்த். பழ கருப்பையாவின் வீடு இப்போது இன்னமும் அதிகப் பிரமுகர்களால் நிரம்பி வழிந்திருந்தது.

மதிய உணவு சமயத்திலேயே மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் உட்பட பலரும் வந்திருந்தனர். வீட்டின் உள்ளேயே பொதுக்கூட்டம் போடலாம் என்ற அளவிற்கு பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது அந்த இல்லம்.

ஒவ்வொருவரின் அறிமுகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்க வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய மக்கள் கூட்டம் பிரமுகர்களின் தரிசனத்திற்காக நிறைந்திருந்தது. வீட்டைச் சுற்றிலும் காவலர்கள் நின்றிருந்தார்கள். அதற்கிடையில் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த எக்கச்சக்க மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக வீட்டின் எல்லா சன்னல்களையும் மூடியிருந்தார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் ‘விஜயகாந்த் வாழ்க’ ‘விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம் எல்லாச் சத்தங்களையும் மீறி கேட்டுக்கொண்டே இருந்தது. கலைஞரின் வருகைக்காக எல்லாரும் காத்திருந்தோம்.

கலைஞரின் கார் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்ற செய்திகள் காவலர்கள் மூலம் அடிக்கடி சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது.

பத்து நிமிடம் சென்றிருக்கும். 

கலைஞர் இன்னமும் ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுவார் என்ற செய்தி சொல்லப்பட திடீரென்று ஒரு பரபரப்பு அங்கே தொற்றிக்கொண்டது. முக்கியமான பிரமுகர்கள் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்.

கலைஞர் உள்ளே வரவும், வந்து அமரவுமான இடங்களும் இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

திடீரென்று “கலைஞர் வாழ்க கலைஞர் வாழ்க” கோஷங்கள் காதைப் பிளக்க கலைஞரின் பரிவாரம் வந்து இறங்கிற்று. 

ஏழெட்டுக் கார்களில் கலைஞரும் அவருடன் வந்திருந்தவர்களும் இறங்கினர்.

கலைஞர், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, தென்னரசு, துரைமுருகன், வை.கோபால்சாமி, கோ.சி.மணி, ரகுமான் கான், செல்வேந்திரன் என்று ஏகப்பட்ட திமுக பிரபலங்கள் கலைஞரைத் தொடர்ந்து திபுதிபுவென்று வந்தனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பேராசிரியர் அன்பழகன் ஒருவரைத் தவிர அன்றைக்கு யார் யார் திமுகவில் முன்னணியில் இருந்தார்களோ, யாரெல்லாம் எம்பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருந்தார்களோ அவர்கள் அத்தனைப் பேரும் வந்திருந்தனர் என்றே சொல்லலாம்.

உள்ளே வந்ததும் அங்கிருந்தவர்கள் அத்தனைப் பேரையும் கலைஞருக்குப் பழ.கருப்பையா அறிமுகம் செய்துவைத்தார். அவர் அறிமுகம் முடிந்ததும் சிவகுமார் சினிமா தொடர்பானவர்களை அறிமுகம் செய்தார்.

அப்படியே உட்காருவது என்று முடிவானது.

நாற்காலிகள் இங்கேயும் அங்கேயுமாகப் போடப்பட எல்லாரும் அவரவர் நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.

கலைஞருடனேயே ஒட்டியபடி இருந்த வைகோ சட்டென்று “எனக்கு நாற்காலியெல்லாம் வேண்டாம்ப்பா. நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்” என்று சத்தமாகச் சொல்லியபடியே கலைஞரின் காலடியில் உட்கார்ந்துவிட்டார்.

“இல்லை இல்லை இதோ சேர் இருக்கு. இப்படி உட்காருங்க” என்று சொல்லி அவருக்கு நாற்காலி போடப்பட-

“எனக்கு வேணாம். வேணும்ங்கறவங்க சேர்ல உட்காருங்க. எனக்குத்  தலைவரின் காலடிதான் சொர்க்கம். நான் சொர்க்கத்தில் உட்கார்ந்துக்கறேன்” என்றபடியே நாற்காலி வேண்டாம் என்பதற்கடையாளமாக இரு கைகளையும் வேண்டாம் என்று அசைத்தார்.

பழ.கருப்பையா வீட்டில் ஏற்பாடுகளையெல்லாம் கவனித்தவர்கள் பதறிவிட்டனர். “இல்லை அண்ணே மேலே உட்காருங்க. இதோ நாற்காலி இதில் உட்காருங்க” என்றபடி யாரோ ஒரு திமுக பிரமுகர் அவருக்கு நாற்காலியை விட்டுக்கொடுத்தார்.

மாட்டேன் என்று மறுத்தார் வை.கோபால்சாமி.

“இல்லை இல்லை ஒருத்தர் மட்டும் அப்படி உட்கார்ந்தா சரிப்படாது. நீங்க மேல உட்காருங்க” என்று பலரும் அவருக்குச் சொன்னார்கள்.

“நாந்தான் சொல்றனே… என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்னு. நான் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன். எதுக்குஎன்னைத் தடுக்கறீங்க?” என்றார் அவர்.

“அப்ப எங்களுக்கெல்லாம் தலைவனின் காலடி சொர்க்கமில்லையா என்ன? நாங்க மேலே நாற்காலியில் உட்காரலை? சும்மா ‘டிராமா’ பண்ணாம எழுந்து மேலே உட்காருங்க” என்று யாரோ ஒரு திமுக பிரமுகர் சொன்னார்.

“நீங்க உட்கார்ந்துட்டீங்க இல்லை? சும்மா விட்டுருங்க. நான் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன்” என்றபடி தம்முடைய பேச்சை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்வதில் அக்கறையாக இருந்தார் வைகோ.

இவை எதையும் ‘கவனிக்காதவர் போன்ற’ பாவனையில் பக்கத்தில் அமர்ந்திருந்த மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கத்திடம் பேசுவதில் சுவாரஸ்யமாய் மூழ்கி இருந்தார் கலைஞர்.


கலைஞருக்கு அடுத்து மூன்றாவதாக உட்கார்ந்திருந்த ஒருவர் திடீரென்று எழுந்தார்.

“யோவ் கோபால்சாமி எந்திருய்யா. என்ன டிராமா பண்றியா? எல்லார் முன்னாடியும் ஷோ காட்றீயா? உனக்கு மட்டும்தான் தலைவரு… எங்களுக்கெல்லாம் தலைவரில்லையா? காலடி, சொர்க்கம்னு வசனமெல்லாம் பேசிக்கிட்டு? எந்திருச்சி மேலே உட்காரப்போறீயா இல்லையா?” என்றார் அதட்டலான குரலில்.

கடுமையானதொரு நிசப்தம் அங்கே சட்டென்று விழுந்தது.

ஒரேயொரு கணம்தான்.

மறுவார்த்தைக்கு இடமில்லாதபடி சட்டென்று எழுந்த வைகோ தமக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலியில் சென்று அமர்ந்தார்

வைகோவுக்கு ஒரு ‘அதட்டல்’ போட்டு அவரைத் தன்னிலைக்குக் கொண்டுவந்தவரும் தமது இடத்தில் அமர்ந்துகொண்டார்.

அந்த மனிதர் முரசொலி மாறன்.

வைகோவின் செய்கை அந்த இடத்தில் நடைபெற்ற ஒரு இயல்பான நிகழ்வாக இல்லாமல் ‘சீன் போடுவது’ என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் தோன்றிற்று. எத்தனைக் கூட்டங்கள் பார்த்தவர், எத்தனைப் பாராளுமன்றங்களைப் பார்த்தவர் எதற்காக எல்லார் முன்னிலையிலும் இத்தனைச் செயற்கையாக நடந்துகொள்கிறார் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருந்தது.

அவருடைய அந்தச் செய்கை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக விடுபட இயலவில்லை. இவர்களெல்லாம் வேடிக்கை மனிதர்களா, அல்லது காரியக்காரர்களா அல்லது போலி மனிதர்களா என்ற எண்ணம் சுற்றிச் சுழன்றபடியே இருந்தது. ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

முரசொலி மாறனின் கடமை அத்தோடு முடியவில்லை.

இளையராஜாவைப் பக்கத்தில் கூப்பிட்டு அமரவைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார் கலைஞர். அவர்களது உரையாடல்களைப் பாதிக்கும்விதமாக வெளியிலிருந்து விடாப்பிடியாக ஒரு கோஷம் ஒலித்தபடியே இருந்தது. அது ‘விஜயகாந்த் வாழ்க, விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம். உள்ளே இருந்தவர்கள் ‘நார்மலாக’ இருக்கமுடியாத அளவுக்கு அடிக்கடி பதம் பார்த்தபடி இருந்தது அந்தக் கோஷம்.  

ஒரு கட்டத்தில் அந்தக் கோஷங்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குப் போக………… இளையராஜாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டு முரசொலி மாறனை ஒரு பார்வைப் பார்த்தார் கலைஞர்.

அவ்வளவுதான்.

கலைஞரின் பார்வை என்ன ‘சொல்கிறது’ என்பதை உணர்ந்துகொண்ட முரசொலி மாறன் உடனடியாக எழுந்தார்.

விஜயகாந்தைப் பார்த்து “விஜயகாந்த் ஒரு நிமிஷம் இப்படி வாங்க” என்று சொல்லித் தனியாகக் கூட்டிப்போனார். அவரது முதுகில் கை வைத்தபடியே அவரிடம் என்னமோ பேசிவிட்டு மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டார்.

அவர் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ தெரியவில்லை. அவருடைய பேச்சில் என்ன மாயம் இருந்ததோ மகத்துவம் இருந்ததோ தெரியவில்லை.

பிரதான கதவைத் திறந்துகொண்டு வெளியில்போன விஜயகாந்த் அங்கிருந்த தமது ரசிகர்களிடம் எதையோ பேசினார். மீண்டும் உள்ளே வந்தார்.

என்ன ஆச்சரியம்……….. 

அத்தனை நேரமும் யாரையும் பேசவிடாமல், கேட்கவிடாமல், சும்மா உட்காரவிடாமல் செய்துகொண்டிருந்த வாழ்க கோஷமும், கூச்சல் குழப்பமும் சட்டென்று முடிவுக்கு வந்திருந்தது. 

அந்த இடத்தில் அந்த அளவு அமைதி குடிகொண்டு விட்டது.

சிறிது நேரம் சென்றது.

கலைஞரும் மற்றவர்களும் ஒவ்வொருவரிடமும் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஐயா ஒரு சின்ன சிற்றுண்டி சாப்பிட்டுரலாமா?” என்று கலைஞரிடம் கேட்டார் பழ.கருப்பையா. கலைஞர் எதிரில் இடம் சரிசெய்யப்பட்டு ஒரு குட்டி டேபிள் போடப்பட்டது.“அப்படியே பரிமார்றதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க உட்கார்ந்தபடியே சாப்பிடலாம்” என்றார்.

நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டார் கலைஞர்.

“எல்லாரோடவும் வரிசையில உட்கார்ந்துக்கறேன். அப்படியே எல்லாரும் ஒரே சமயத்துல சாப்பிட்டுரலாமே” என்றார்.

உடனடியாக பாய்களும் ஜமக்காளங்களும் விரிக்கப்பட்டு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுவதற்கு வரிசையாக மாணவர்கள் உட்காரவைக்கப்படுவார்களே அப்படி எல்லாரும் சுவரை ஒட்டி ஒரு வரிசை, எதிர்த்தாற்போல ஒரு வரிசை என்று நெடுகிலும் உட்கார்ந்துகொள்ள பணியாரம், அப்பம், போண்டா, பஜ்ஜி என்று பரிமாறப்பட்டது.

எல்லாருடனும் ஒன்றாய் தரையில் அமர்ந்து சாப்பிட்ட கலைஞர் ஏதோ பெயருக்கு சாப்பிட்டவர்போல எழுந்துகொண்டார். “நான் எழுந்துட்டேன்னு எல்லாரும் எழுந்துராதீங்க. உங்களுக்கெல்லாம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் சாப்பிட்டு எழுந்திருங்க” என்று சொல்லியபடியே ஒரு நாற்காலியில் அமர்ந்து தமக்கு வழங்கப்பட்ட காப்பியைப் பருகத் தொடங்கினார்.

இந்தக் காட்சி நிச்சயம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இத்தனை எளிமையாக எல்லோருடனும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு வேறு சில முதலமைச்சர்களும் தலைவர்களும் தயாராக இருப்பார்களா என்ற சிந்தனை நிச்சயம் இந்த இடத்தில் தேவை.

எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் காத்திருந்தவர்போல “நேரமாயிருச்சி. கிளம்பலாமா?” என்றார் கலைஞர்.

அதற்குள்ளாக மைதானத்தில் எத்தனைக் கூட்டம் வந்திருக்கிறது, இங்கே வராத மனோரமா போன்ற ஒரு சில பிரபலங்கள் மேடைக்கு நேரடியாக வந்துவிட்டார்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் காவலர்கள் மூலமாகச் சொல்லப்பட்டன.

முக்கியப் பிரமுகர்களும் மற்றவர்களும் கார்களில் ஏறிக்கொள்ள மற்ற பிரமுகர்களும் பிரபலங்களும் குறுநடை நடந்தபடியே மைதானத்தை அடைந்தோம். 

மைதானத்தில் பயங்கரக் கூட்டம்.

குறைந்தது ஐம்பதாயிரம் பேராவது இருந்தார்கள்.

முன்பு எப்போதோ ஒரு சமயம் அண்ணா கலைஞர் எல்லாரும் வந்திருந்தபோது இப்படியொரு கூட்டம் இங்கே கூடியிருந்தது எனவும், பின்னர் கவிஞர் கண்ணதாசன் காமராஜரைக் கூட்டிவந்து கூட்டம் போட்டபோது இந்த அளவுக்குக் கூடியிருந்தது எனவும் ‘அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் இத்தனைப் பெரிய கூட்டத்தை என் வாழ்நாளில் பார்க்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார் மைதானத்தின் எதிர் சாலையில் டீக்கடை வைத்திருந்த ஒருவர்.

நாங்கள் மைதானத்திற்குச் சென்று சேர்ந்தபிறகு சில நிமிடங்கள் கழித்துத்தான் கலைஞர், இளையராஜா சிவகுமார் விஜயகாந்த் போன்ற பிரபலங்களின் கார்கள் மேடையருகே வந்தன. மக்களின் ஆரவாரங்களுக்கிடையே கலைஞரும் மற்றவர்களும் மேடையேறினார்கள். எல்லாரும் மேடையில் நாற்காலிகளில் அமர வைக்கப்பட கலைஞர் மேடையின் நாற்புறமும் சென்று மக்களுக்குக் கையசைத்தபடி இருந்தார்.

நாங்கள் சிலர் மேடையின் ஒரு ஓரமாக நின்றுகொண்டோம்.

இங்கே மேடையில் யார்யாருக்கு எந்த நாற்காலி என்று பழ.கருப்பையா, முரசொலி மாறன் என்று இன்னும் சிலர் மற்றவர்களை அமர வைத்துக்கொண்டிருக்க “இங்கேயும் டிராமா பண்ணப்போறியா? பேசாமல் உன்னுடைய நாற்காலியில் உட்கார்” என்று முரசொலி மாறன் யாரிடமோ கோபமாகச் சொல்லிக்கொண்டிருந்ததும், ‘என்னுடைய தலைவன் காலடியில் உட்கார்ந்துக்கறேன்னு சொல்றேன். அதுக்கு விடமாட்டேங்கறீங்க’ என்று முரசொலி மாறனுக்கு யாரோ பதில் சொல்லிக்கொண்டிருந்ததும் கேட்டது.

மேடையில் கூட்டம் அதிகமாயிருந்ததால் பிரமுகர்கள் அமரும் இடத்தில் என்ன நடைபெற்றது என்பதும் யார் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.

பின்னர், விழா தொடங்கி நடைபெற்றதும், மனோரமா, தென்னரசு, கலைமணி, ஜி.கே.வெங்கடேஷ், தமிழண்ணல், வை.கோபால்சாமி ஆகியோர் மேடையில் பேசியதும் இவர்களைத் தொடர்ந்து சிவகுமார், விஜயகாந்த், இளையராஜா ஆகியோர் பேசியதும் கலைஞர் பேசும்போது இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தைத் தந்து பேசியதும் எல்லோருக்கும் தெரிந்த, பத்திரிகைகளில் செய்திகளாக வந்த நிகழ்வுகள்……

நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் கிளம்பிப் போனதும் பழ.கருப்பையா வீட்டில் தங்கியிருந்த நாங்கள் மட்டும் மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்று இரவு சிற்றுண்டியை முடித்துக்கொண்டு- நாங்கள் என்றால்- சிவகுமார், இளையராஜா, நான், என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மட்டும் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியதும், நடைபெற்ற கூட்டத்தைப் பற்றியும், பேசியவர்களின் பேச்சுக்கள் பற்றியும் இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட இசைஞானி பட்டம் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வதற்கு இரவு பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.

இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவிலும், அதிலும் குறிப்பாக ‘இசைஞானி’ பட்டம்  வழங்கப்பட்ட நிகழ்விலும் காலையிலிருந்து அவர் கூடவே தங்கியிருந்ததும், இரவு அதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றதும் மறுநாள் காலையில் அவருடனேயே காரில் கிளம்பி பாதிவழியில் இறங்கிக்கொண்டு நான் திருச்சி திரும்பியதும், அவர் மதுரை சென்றதும் இனிமையான நினைவுகள்…..

இளையராஜாவின் நினைவுகள் ஒருபுறமிருக்க, அன்றைய நிகழ்வுகளில் வைகோவின் செயல்பாடுகளும் மறக்க முடியாத பதிவுகளாக மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. 


அதுவும் அவர் கலைஞரைப் பற்றி அவ்வப்போது பேசுகின்ற பேச்சுக்கள் அத்தனையும் உடனடியாக எனக்கு எப்போதுமே காரைக்குடியில் பழ.கருப்பையா வீட்டில் நடைபெற்ற அந்த சம்பவத்தையும், அவர் சொன்ன ‘என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்’ வசனத்தையும் நினைவூட்டி விடுகின்றன.

அதுவும் தற்போது அவர் கலைஞரைப் பற்றிப் பேசிய பேச்சும் இந்த சம்பவத்தை மிக அதிகமாகவே நினைவூட்டிவிட்டன.

அத்தனை செயற்கையாக புகழ்பெற்ற ஒருவரால் நடந்துகொள்ளமுடியுமா என்பதும், போகிற போக்கில் என்னமாதிரியான டயலாக்குகளையும் சர்வ சாதாரணமாக ஒருவரால் அவிழ்த்துவிட முடியுமா என்பதும், எவ்வளவு பேர் இருந்தபோதிலும் அத்தனைப் போலித்தனமாக ஒருவரால் நடந்துகொள்ள முடியுமா என்பதுவும் இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே இருக்கிறது.

அந்தச் செயல்களின் மூலம் அவரது ‘கேரக்டர்’ எத்தகையது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ‘சீன் போட்டே ஜெயிப்பவர்கள்’ என்ற பட்டியல் ஒன்று தயார் செய்யலாம் போலிருக்கிறது.

நேரத்திற்கு ஏற்றாற்போல தங்களைக் காட்ட நினைக்கும் பச்சோந்திகள் மத்தியில் சமயமறிந்து, தலைவனின் குறிப்பறிந்து  செயல்படும் முரசொலி மாறன் போன்றவர்களின் ஆளுமையும் திறமையும்தான் கலைஞர் போன்றவர்களின் வெற்றிக்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.


ஒன்று மட்டும் நிச்சயம்…. கலைஞர் முரசொலி மாறனை இவ்வளவு விரைவாக இழந்தது அவருக்கு மிகப்பெரிய இழப்பு என்பது மட்டும் நிதர்சனம்.

40 comments :

ஜோதிஜி said...

எனக்கு இதில் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் எனக்கு ஏற்கனவே தெரிந்தது தான் (உங்களுக்குப் புரியம் என்று நினைக்கிறேன்) என்றாலும் சில விசயங்கள் மட்டும்.....

இந்த வருடம் நான் கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தேன். ஆனால் விழாவிற்கு வர முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குப் போகாவிட்டால் டின் தான்.

வைகோ போசிய காணொலியை நானும் பார்த்தேன். எனக்கென்னவோ கலைஞர் மீது உள்ள வெறியை விட ஸ்டாலின் மேல் வைகோ கொண்டுள்ள அதீத கோபம் தான் அவரை பல படிகள் தரம் தாழ்ந்து கீழே இறங்க வைத்து விட்டது என்றே நினைத்துக் கொண்டேன்.

அதற்கேற்றாற் போல ஸ்டாலினும் மதிமுக வில் தொடங்கி, தேமுதிக வரை கடைசியில் இன்று தமாக வரைக்கும் டிங்கரிங் வேலை வேறு பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

இந்தப் பதிவில் நான் கவனித்து மற்றொன்று வார்த்தைகள் ரொம்ப நிதானமாக அழகாக வந்துள்ளது. வாழ்த்துகள். பல இடங்களில் நயத்தக்க நாகரிகம் மிளிர்கின்றது.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\இந்தப் பதிவில் நான் கவனித்து மற்றொன்று வார்த்தைகள் ரொம்ப நிதானமாக அழகாக வந்துள்ளது. வாழ்த்துகள். பல இடங்களில் நயத்தக்க நாகரிகம் மிளிர்கின்றது.\\

பாராட்டுக்களுக்கு நன்றி ஜோதிஜி.

Anonymous said...

இந்த கட்டுரையில் எனக்கு பிடித்த ஒரு சிறு பகுதி ஆனால் ஒரு
முக்கியமான பகுதி . அது சிவகுமார் பதில் வணக்கம் சொன்னது .
அந்த இன்னொருவர் வணக்கம் சொல்லாதது அவர் எப்படிபட்டவர் என்பதை
சொல்லிவிட்டது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பேச்சை வைத்து ஒருவர்மீதான பிம்பம் உருவாக்கப் படுகிறது. உங்களைப் போன்று அருகில் இருந்து பார்த்தவர்கள் சொல்லும்போதுதான் உண்மை தெரிகிறது.அரசியல் வாதிகளுக்கு தொழில்முறை நடிகர்களை விட நடிப்பு நன்றாக வருகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அமுதவன் சார்! செயல்படாத திரட்டி தமிழ் இன்ட்லி நிரல் காரணமாக உங்கள் வலைப் பக்கம் திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்கிறது.. கணினி தெரிந்தவர்களின் உதவி கொண்டு தமிழ் இன்ட்லியை நீக்கவும் . உங்கள் பதிவுகளையும் பேக் அப் எடுத்துக் கொள்ளவும்

Anonymous said...

வெளியாகும் ஒரு படத்தை வைத்தே ஊகங்களூம் வாத பிரதிவாதங்களூம் எழுவது சகஜமாகிவிட்ட இன்றைய உலகில் ஒரு சம்பவத்தை வைத்து ஒருவரை மதிப்பீடு செய்வது குற்றம் போல் தோன்றாதுதான். ஆனால் எழுத்தாளார்களால் சாத்தியமனவற்றை கற்பனை செய்துகொள்ளமுடியும்.
வைகோவின் “இருக்கை ” சம்பவம் ஏன் முன்னொரு சம்பத்தின் தொடர்ச்சியாக இருந்திருக்கக்கூடாது?
இன்னொரு நிகழ்வில் வைகோ கதிரையில் உட்கார்ந்திருக்கும்போது யாருக்கு முதன்மை கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டு வைகோவை முரசொலி மாறன் ் எல்லோர் முன்னிலையிலும் அதட்டி எழுப்பி தரையில் உட்கார வைத்துவிடுகிறார். வைகோவுக்கு அது அவமானமாகிவிட்டது. இந்த நிகழ்வில் இம்முறை அவர் எனக்கு கதிரை தேவையில்லை என்று உரக்கச்சொல்லி தரையில் உட்காருவதை ஒரு எதிர்ப்பாக (முரசொலிக்கு)காட்டியிருக்கக்கூடும்.ஒரு உட்பூசலின் வெளிப்பாடு.
”நம்ம தலைவரை விட ஒனக்கு கதிரைதான் முக்கியமாப்போச்சா.”
”ஐயோ நான் அனிச்சையாக உட்கார்ந்திருந்துவிட்டேன்.ஏதோ யோசனை’ ஆளுக்கு ஆள் மீண்டும் இப்படிக்கிண்டலாய்க்கேட்க உணர்ச்சிவசப்பட்ட வைகோ” இனி நான் தலைவர் இருக்கும்போது அவர் காலடியில்தான் உட்கார்வேன்” என்று சபதமிட்டிருக்கக்கூடும்.
வைகோ ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதை விசாரித்துப்பார்த்திருந்திருந்தால் விளக்கம் தெரிந்திருக்கக்கூடும்.
வைகோ பொது இடங்களில் அப்படித்தான் என்றோ அல்லது முந்தைய கதிரைப்பிரச்சினை என்றோ ஒரு பதில் வந்திருக்கக்கூடும்.
இப்படி சீன் போட்டு மடக்கக்கூடிய தலைவரல்ல கலைஞர் என்பது எல்லோருக்கும் தெரியும்போது வைகோவுக்கு தெரியாதா என்ன?

தி.தமிழ் இளங்கோ said...

அரசியலில் வை.கோபால்சாமி அவர்களின் இன்னொரு முகத்திரையை காட்டிய நல்ல விவரமான கட்டுரை. அவருடைய ஆரம்பகால புலி வேஷத்தில் ஏமாந்தவர்கள் இங்கும் உண்டு; இலங்கையிலும் உண்டு.

வை. கோபால்சாமி, கலைஞரின் குடங்கையில் அல்லது காலடியில் இருந்து கொண்டு, 18 வருடம் எம்.பி பதவியை அனுபவித்ததை, தி.மு.க மேடைப்பேச்சாளர் வெற்றிகொண்டான் அவர்கள் தனது மேடைப்பேச்சில் பல சமயம், கிண்டலடித்து பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.

கலைஞரின் இன்றைய அரசியலில், எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தபோதும் , அவர் ஒரு பெரியவர், மூத்த அரசியல்வாதி, என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அண்மையில் வாட்ஸ்அப்பில் (Whatsapp) நான் எழுதிய செய்தி இது.

// வை.கோபால்சாமியின் டெக்னிக்கே ஒவ்வொரு முறையும் பிறாண்டுவது, உடனே மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அதனை துடைத்து விட்டு, சகஜமாக இயங்குவதுதான். மக்கள் நலக் கூட்டணி என்னும் கட்டுச்சோற்றுக்குள் புகுந்த பெருச்சாளி //

Jayadev Das said...

சார் நீங்க ஒரு அன்னப் பறவை மாதிரி, கருணாநிதி கிட்ட கூட பாராட்டத் தக்க நல்ல விஷயங்கள் இருக்குன்னு கண்டு புடிக்கிறீங்களே, அது உங்களால மட்டும் தான் முடியும்.

இன்னைக்கு இவர் நாகரீகமில்லாம பேசிட்டாரு உடனே வருத்தமும் தெரிவிச்சாரு. ஆனால் கருணாநிதி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், காமராஜரை அண்டங் காக்கை என்பதில் ஆரம்பித்து, கலாம் என்றால் கலகம் என்று சொன்னது வரை அவரது அரசியல் நாகரீகம் துளியும் மெச்சும்படி இல்லை, அதற்க்கு ஒரு போதும் துளி வருத்தம் தெரிவித்ததாகவோ, மன்னிப்பு கேட்டதாகவோ சரித்திரமே இல்லை.

கீழ்க் கண்ட கருத்தை முகநூளில் படிக்க நேர்ந்தது, இதையெல்லாம் அவர் சொன்ன கால கட்டத்தில் நீங்களே அவற்றை செய்தித் தாட்களில் வாசித்திருப்பீர்கள். இது தான் நாகரீகமான ஒருவர் நடந்து கொள்ளும் விதமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Nellai Suresh

கருணாநிதி மிகவும் நாகரீகமாக பேசிய வார்த்தைகள்
மூதறிஞர் ராஜாஜியை "குல்லுகபட்டர்' (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை "அண்டங் காக்கா' என்று அர்ச்சித்தார்; கக்கன்ஜியை "கக்கன் என்ன கொக்கா' என்று நஞ்சைக் கக்கினார்... ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை "வழிப்போக்கன்' என்றார்; மூப்பனாரை "காவேரி, தென்பெண்ணைப் பாலாறு... மூப்பனார் மூளையில் கோளாறு' என்றார்; எம்.ஜி.ஆரை "மலையாளி, கூத்தாடி, கோமாளி' என்றார்; நாவலரை "நெடுமரம்' என்றார்; நாஞ்சிலாரை "மந்திரக் கோல் மைனர்' என்றார்; ஆர்.வி.,யை "கைபர் கணவாய் வழி வந்தவரே' என்றார்; ஹிந்து பத்திரிகையை "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு' என்றார்...
துக்ளக் சோவை "சொட்டைத் தலையர், பபூன்' என்றார்; குமுதம் எஸ்.ஏ.பி.,யை "குள்ள நரி' என்றார்; ப.சிதம்பரத்தை "செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி' மற்றும் சமீபத்தில் "ஈ, எறும்பு, கொசு' என்றார்; பேராசிரியரை "வெறும் உதவி விரிவுரையாளர் தான்' என்றார்; அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை "ஈனப்பிறவி' என்றார்; வைகோவை "கள்ளத் தோணி, கலிங்கப்பட்டி களிமண்' என்றார்; பா.ஜ.,வை "தீண்டத்தகாத கட்சி' என்றார்...
வாஜ்பாய், அத்வானியை "விஷ ஜந்துக்கள்' என்றார்; பா.ஜ., தலைவர்களை "பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்' என்றார்; பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜாவை "கூஜா' என்றார்; முதல்வர் ஜெ.,யை "பாப்பாத்தி, பத்ரகாளி, காந்தாரி' என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை "திருடன்' என்று திட்டினார்; இரண்டு கோடி தமிழக வாக்காளர்களை "பருத்தி விதை, தவிடு, புண்ணாக்கு தின்னும் மாக்கள், வாழை மட்டைகள், மடச் சாம்பிராணிகள், புத்திகெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என்றார்.
இப்படி நா கூசாமல் குழாயடிச் சண்டையைப் போல் தனி நபர் அர்ச்சனை செய்து, தமிழக அரசியலை தரங்கெட்டுப் போக வழி அமைத்த கருணாநிதி இன்று புத்தர் போல் "தனி நபர் விமர்சனம் கூடாது' என்று போதிப்பது வேடிக்கையாக உள்ளது.

Peppin said...

ஆஹா அருமையானப் பதிவு! படிக்கப் படிக்க சுவையாக இருந்தது. இந்த நிகழ்வுக் குறித்து
பத்திரிகைகளில் வந்தச் செய்திகள் இப்பொழுதும் ஞாபகம் இருக்கின்றன. வைகோ நடிக்கத் தெரிந்த நல்ல அரசியல்"வியாதி"!

மாறன் அவர்கள் இருந்தவரை "நிதி" க்கள் கட்சியில் தலையிடாமல் இருந்தனர். மேலும் மத்திய அமைச்சர்கள், MP க்கள் அவரின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.

ராஜாவைப் பற்றி ஏதாவது எழுதிவிடுவீர்களோ என்ற அச்சத்தோடே படித்தேன்.
நல்லவேளை, ஒரு இடம் தவிர வேறு எங்கும் இல்லை.

நம்பள்கி said...

[[சிவகுமார் மட்டும் பதில் வணக்கம் சொன்னார்.]]
இதில் உள்குத்து இல்லை; ஒரே [நேர்] குத்து!
ரசித்தேன்! மொழியின் புலமை இது தான். ஆங்கிலத்தில் இது அதிகம் உண்டு; சொல்வதை சொல்லாமல் விட்டால்..அவனவன் அவன் பாட்டுக்கு யோசிப்பன்! இது எழுத்துப் பட்டறையின் முக்கிய அம்சம்--எல்லா மொழிக்கும்!

நம்பள்கி said...

[[[காலையில் பேசிவிட்டு அடுத்த அரை மணி நேரத்திலோ, ஒரு மணி நேரத்திலோ ‘உணர்ந்து’ அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு எப்படியெல்லாம் எழப்போகிறது என்பதை உணர்ந்தபிறகுதான்..]

Excellent analysis & interpreting a situation!

நம்பள்கி said...

[[[இப்படி இவரை கேவலமாகவும், படு கேவலமாகவும் பேசுவதுதான் இன்றைய தமிழக அரசியலின் பாலபாடம் என்பதாக ஒரு சித்தாந்தத்தைத்தான் இன்றைய ஊடகங்களும் குறிப்பாக இணைய தளமும் கட்டிஎழுப்பி இருக்கின்றனவே…..]]]

மு.க. எப்படிப்பட்டவர் என்பது முக்கியமில்லை...நான் அவர் கொள்கை எல்லாவற்றிலும் ஒத்து போகிறேன் என்று அர்த்தமும் இல்லை.

நான் சொல்வது...மு.க. என்று பார்த்தவுடன் கூலிக்கு மாரடிப்பவர்கள் வந்து வாந்தி எடுப்பார்கள். தினமலரில் இது ஆரம்பித்தது..எந்த செய்தி முக பற்றி வந்தாலும்..பல பேரில் பலர் வந்து வந்தி வரிசையாக எடுப்பார்கள்!

அன்றே சொன்னேன்..இவர்கள் காசுக்கு எழுதுபவர்கள் என்று! எவன் கேட்டான்? இன்றைக்கு அந்த பழி திமுகவிற்கு வந்துள்ளது! முக சில விஷயங்களில் வருமுன் காப்போன் இல்லை!




நம்பள்கி said...

[[[வைகோவின் செய்கை அந்த இடத்தில் நடைபெற்ற ஒரு இயல்பான நிகழ்வாக இல்லாமல் ‘சீன் போடுவது’ என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் தோன்றிற்று. எத்தனைக் கூட்டங்கள் பார்த்தவர், எத்தனைப் பாராளுமன்றங்களைப் பார்த்தவர் எதற்காக எல்லார் முன்னிலையிலும் இத்தனைச் செயற்கையாக நடந்துகொள்கிறார் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருந்தது.]]]

இந்த செய்தி இன்று தான் அறிவேன்; அப்ப பன்னீர் செல்வம் 'கொல்லையில்' காலையில், உக்காருவது மாதிரி கார் டயர் முன்னால் பம்மிக்கொண்டு உக்காருவதற்கு முன்னோடி வைகோ தானா!

அனால், எவனும் அந்த சமயத்தில் எதையும் கும்பிட மாட்டார்களே; இவர் டயரை தொட்டு கும்பிடுகிறாரே!

நம்பள்கி said...

நான் என் [டெல்லி[ நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டது. உண்மையான போட்டியாக வைகோ நினைத்தது முரசொலி மாறனை! வைகோ செய்த மாபெரும் தவறு அவருடன் தான் போட்டி என்று நினைத்தது; இவர்கள் இருவரும் தான் டெல்லியில் permanent representatives.

முக விற்கு வைகோவை மிகவும் பிடிக்கும்--அவர் தமிழுக்காக! அதை தவறாக புரிந்து கொண்டு, தனக்கு அதிக முக்கியம் கிடைக்கும் என்று நினைத்த வைக்கோ ஒரு முட்டாள். மாறன் அறிவாளி, புத்தி சாலி. எப்படி மாறனை விட்டு...வைகோவிடம் முக? என் நண்பர்கள் சொல்வார்கள் வைகோ அரசியலில் வளரனும் என்று!

சரி அப்போ வைகோ?
வைகோ ஒரு நல்ல பம்பரம்; ஆனால், தொதுர் பம்பரம். பம்பரம் நன்றாக விளையாடினவர்களுக்கு தெரியும் தொதுர் பம்பரம் என்றால் என்ன என்று!

நல்ல பம்பரம் சுத்திக்கொண்டே இருக்கும்; தொதுர் பம்பரம் (ஆணி வளைந்து இருந்தால்) வேகமா சுத்தும்; தொதுரும் (அதாவது துள்ளும்); ஆனால், பட்டென்று விழுந்து வேகமா சுத்தி கீழே விடும். அல்ப ஆயுசு! அரசியலில் வைகோ அப்படிதானே!

இது மந்தைவெளி மயிலாப்பூர் பாஷை!

பின்குறிப்பு:
வைகோ கட்சியின் சின்னம் பம்பரமா அல்ல தொதுர் பம்பரமா?

Peppin said...

Jeyadas,

MM Abdulla in FB has answer for you:

நன்றி அண்ணன்.
நேற்றில் இருந்து கலைஞர் காமராஜரை "அன்னடங் காக்கான்னாரு, சாதியை சொல்லித் திட்டினாரு, வயசானவனுக்கு எதுக்கு பதவி ஆசைன்னு கேட்டாரு " என்பது துவங்கி இன்னும் எத்தனையோ கதைகள் சுற்றுகின்றன. நேற்றில் இருந்து மட்டுமல்ல...நீண்ட நாட்களாகவே இது போன்ற கதைகள் உண்டு.
அப்போது கேட்ட அதே கேள்வியை இப்போதும் கேட்கிறேன். கடந்த 70 வருடங்களாக அவர் முதல் நாள் மேடைகளில் பேசுவது அடுத்த நாள் பத்திரிக்கைகளில் முழுமையாக வார்த்தை மாறாமல் பிரசுரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் பேசுவது சட்டமன்றக் குறிப்பாகவும் அன்று மாலையே மாலைப் பத்திரிக்கைகளிலும் வந்து விடுகிறது. காலையில் அவர் குடுக்கும் பேட்டி மாலை பத்திரிக்கைகளிலும் மதியம் அல்லது மாலை அவர் குடுக்கும் பேட்டிகள் அடுத்த நாள் காலை பத்திரிக்கைகளிலும் வந்து விடுகிறது. அவரது எழுத்துகள் அத்தனையும் வரி மாறாமல் புத்தகங்களாக்கப்பட்டு விட்டது. ஆக அவரது எழுத்தும் பேச்சும் ஆவணங்களாக்கப்பட்டு விட்டன.
இப்படி சொல்லுற ஒரே ஒரு யோக்கியனாவது கலைஞர் காமராஜரை இன்ன நாள் இன்ன மேடையில அல்லது இந்தப் பேட்டியில இப்படிச் சொல்லி இருக்காருன்னு பத்திரிக்கை ஆதாரம் காட்டுங்கய்யான்னு நானும் வருசக் கணக்கா கேட்டுகிட்டே இருக்கேன். ஏம்ப்பா நாட்டுல ஒரே ஒரு யோக்கியன் கூடவா இல்லை????????????

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

சில நண்பர்கள் அன்று கருணாநிதி பேசாததா என்று குறிப்பிட்டார்கள். அன்று மேடையில் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் இரு பக்கமும் என்னென்ன பேசினார்கள் என்பதை இன்று வசதியாக மறந்து விட்டார்கள். பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வேண்டுமென்றே ‘நாயக்கர்’ என்றே குறிப்பிட்டார்கள். அறிஞர் அண்ணாவைப் பற்றி காஞ்சிபுரத்தில் மிகவும் தரக் குறைவாக சுவரில் எழுதி வைத்தார்கள்; அண்ணாவோ அந்த சுவர் அருகே ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை இருளிலும் அனைவரும் படிக்குமாறு கட்டி வைத்தார். மேடைப் பேச்சாளர்கள் பலரும் கருணாநிதியைப் பற்றி பேசும் போதெல்லாம் அவரது ஜாதியைக் குறித்தே பேசுவார்கள். எம்ஜிஆரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் வயதானவர் என்ற அடைமொழிதான். எனவே அன்றைய அரசியல் என்பது வேறு.

இன்று யாரும் யாரையும் அப்படி பேச விரும்பாத சூழ்நிலையில், வை.கோபால்சாமி தேவையே இல்லாமல் இப்படி பேசியது சரியா என்பதுதான் கேள்வி.


Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\பேச்சை வைத்து ஒருவர்மீதான பிம்பம் உருவாக்கப் படுகிறது. உங்களைப் போன்று அருகில் இருந்து பார்த்தவர்கள் சொல்லும்போதுதான் உண்மை தெரிகிறது.அரசியல் வாதிகளுக்கு தொழில்முறை நடிகர்களை விட நடிப்பு நன்றாக வருகிறது.\\

இதனை வெறுமனே நடிப்பு என்று சொல்லிக் கடந்துவிடுவதற்கில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார். "பாருங்க...சிலருக்கு பணம் அதிகம் வந்து சேர்ந்துருச்சின்னா அது அவங்க கேரக்டரையே மாற்றியமைத்துவிடும். மொத்தமாக மாறிடுவாங்க. அது ஆரம்பத்தில் சில லட்சங்களாக இருந்தது. இப்பல்லாம் கோடிகளுக்கு வந்துருச்சி. கோடிகள்ள பணம் சேர்ந்துட்டா 'எதுக்கு அவனையெல்லாம் மதிச்சுக்கிட்டு?' என்ற எண்ணம் மனதில் அழுத்தமாக வந்துரும். அப்படி அந்த எண்ணம் வந்துட்டா சிலபேரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் சுத்தமாக மாறிப்போயிரும். இன்றைய கோடிகள் - அதுவும் நூற்றுக்கணக்கான கோடிகள்- பெற்றவனை, வளர்த்தவனை, ஆளாக்கி விட்டவனையே மதிக்காமல் தூக்கியெறியத் தூண்டும். சிலபேருடைய நடவடிக்கைகளை நான் இப்படித்தான் பார்க்கிறேன்" என்றார். அவர் கூற்றை ஆழமாக சிந்திக்கவேண்டும்போல் இருக்கிறது.
வருகைக்கு நன்றி முரளிதரன்.

Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\அமுதவன் சார்! செயல்படாத திரட்டி தமிழ் இன்ட்லி நிரல் காரணமாக உங்கள் வலைப் பக்கம் திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்கிறது.. கணினி தெரிந்தவர்களின் உதவி கொண்டு தமிழ் இன்ட்லியை நீக்கவும் . உங்கள் பதிவுகளையும் பேக் அப் எடுத்துக் கொள்ளவும்\\
நன்றி முரளிதரன், உங்கள் கோரிக்கையை அப்படியே திரு ஜெயதேவ்தாஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துவிடுகிறேன். அவர்தான் நேரம் கிடைக்கும்போது செய்து தருவார்.

ஜோதிஜி said...

பின்னூட்டங்கள் ஒன்னும் காரஞ்சாரமாக இல்லையே? இது போன்ற சமயங்களில் தான் வவ்வால் நினைவுக்கு வருகின்றார். எல்லோருமே உங்கள் மேல் உள்ள மரியாதையின் காரணமாக பம்மிக் கொண்டு எழுதுவது போல தெரிகின்றதே?

சமீபகாலமாக கவனித்த ஒன்று. உங்கள் பார்வைக்காக. சென்ற பதிவில் இது குறித்தும் உங்களிடம் கேட்டு இருந்தேன்.

கடந்த ஒரு வார காலமாக கலைஞர் டிவி, கலைஞர் செய்திகள் தொடங்கி கலைஞர் குழுமத்தில் உள்ள அத்தனை சேனல்களிடம் திமுக குறித்து, செயல்பாடுகள், அறிக்கைகள், சாதனைகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்றது. அதுவும் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றது. நிர்வாகம் எப்படி சம்மதம் தெரிவித்தது என்றே எனக்கு ஆச்சரியம்.

ஆனால் ஜெயா டிவியில் பல மாதங்களுக்கு முன்னே சொல்லப்போனால் தினந்தோறும் எப்போதும் ............. சாதனை என்று ஒலி ஒளி பரப்பிக் கொண்டேயிருப்பார்கள்.

ஜெயிக்கனும் என்றால் காசை பார்க்கக்கூடாது.
ஜெயிக்கனும் ஆனால் காசு செலவளிக்கக்கூடாது.

இரண்டும் வெவ்வேறு பாதை????

Amudhavan said...

Anonymous said...
\\வைகோவின் “இருக்கை ” சம்பவம் ஏன் முன்னொரு சம்பத்தின் தொடர்ச்சியாக இருந்திருக்கக்கூடாது?\\
அது எந்த சம்பவத்தின் தொடர்ச்சி என்பது அவருக்கும் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அங்கே நேரில் பார்த்தவர்களுக்கு நாராசமாக , அற்பத்தனமானதாகத்தான் தோன்றிற்று என்பதுதான் முக்கியம்.

\\இப்படி சீன் போட்டு மடக்கக்கூடிய தலைவரல்ல கலைஞர் என்பது எல்லோருக்கும் தெரியும்போது வைகோவுக்கு தெரியாதா என்ன?\\
சீன் போட்டு மடக்கக்கூடிய தலைவரல்ல என்பது உங்களுக்கும் எனக்கும் தோன்றுவது இயல்பு. சில ஆத்திர புத்தியுடையவர்களுக்கு சமயங்களில் தோன்றுவதில்லை என்பதுதான் யதார்த்தம். இன்னொன்று 'சீன் போடுபவர்களுக்கு' வெறும் குறிப்பிட்ட ஆள் மட்டும்தான் இலக்கு என்றா நினைக்கிறீர்கள்? அவர்களுடைய 'இலக்கு' இன்னும் என்னென்னவோ இருக்கிறது.

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\அரசியலில் வை.கோபால்சாமி அவர்களின் இன்னொரு முகத்திரையை காட்டிய நல்ல விவரமான கட்டுரை. அவருடைய ஆரம்பகால புலி வேஷத்தில் ஏமாந்தவர்கள் இங்கும் உண்டு; இலங்கையிலும் உண்டு.\\

அருமையான படப்பிடிப்பு.

// வை.கோபால்சாமியின் டெக்னிக்கே ஒவ்வொரு முறையும் பிறாண்டுவது, உடனே மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அதனை துடைத்து விட்டு, சகஜமாக இயங்குவதுதான். மக்கள் நலக் கூட்டணி என்னும் கட்டுச்சோற்றுக்குள் புகுந்த பெருச்சாளி //
வைகோவை மிகச் சரியாகத்தான் எடைபோட்டு வைத்திருக்கிறீர்கள்.

Amudhavan said...

Jayadev Das said...

\\நீங்க ஒரு அன்னப் பறவை மாதிரி, கருணாநிதி கிட்ட கூட பாராட்டத் தக்க நல்ல விஷயங்கள் இருக்குன்னு கண்டு புடிக்கிறீங்களே, அது உங்களால மட்டும் தான் முடியும்.\\
வாங்க தாஸ், கலைஞரைப் பற்றிய வியப்படையும்படியான விஷயங்களைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் என்றுமே இருந்ததில்லை. அவரிடம் இருக்கும் பாராட்டத்தக்க விஷயங்கள் எனக்கு மட்டுமே தெரிகின்றன என்பது நீங்கள் மிகச்சிறு வட்டத்திற்குள்தான் வளைய வருகிறீர்கள் என்பதை விளக்குகிறது. அவரைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமே நூற்றுக்கணக்கில் வந்துள்ளன அவரைப் பற்றிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பதெல்லாம் நீங்களும் சரி, உங்களின் இணைய நண்பர்களும் சரி அறியாத தகவல்கள் என்றே தோன்றுகிறது.
அவரைப் பற்றிய எதிர்வினைகள் ஆரம்பிக்கப்பட்டது இலங்கை விவகாரத்திற்குப் பிறகுதான். அதன்பிறகு அதனை சாக்காக வைத்து அவரைத் தூற்றி எழுதும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு இலங்கையைப் பற்றியோ ஈழத்தமிழர்களைப் பற்றியோ ஒரு துளியும் அக்கறை இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு?ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று எழுதும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முகநூல் நண்பர்களுக்கு ஈழப்பிரச்சினையில் கருணாநிதி அடிபடுவதைச் சாக்காக வைத்து மேற்கொண்டும் தாக்கி மரண அடி கொடுத்து எழவிடாமல் செய்துவிடுவது என்பதுதான் இலக்கே தவிர- ஈழத்துக்கு ஆதரவு என்பது இலக்கு அல்ல- என்பது தெரியுமா உங்களுக்கு?
ஆகவே அந்த சதிகாரச் சிக்கலில் விழுந்துவிடாமல்தான் இருந்தவாறுதான் நான் கருணாநிதியைப் பார்க்கிறேன். அவர் மீதான குறைகள் எனக்கும் உண்டு. ஆனால் அது ஜெயலலிதாவா கலைஞரா என்று வரும்போது கொண்டுவந்து கொட்டக்கூடிய குறைகள் அல்ல, அல்லவே அல்ல.
கக்கன், காமராஜர், வ.உ.சி என்றெல்லாம் கலைஞரை எதிர்க்கும்போது பெயர் சொல்லும் மகானுபாவர்கள் யாரும் இதுவரை கக்கன் படிப்பகம்,காமராஜர் பொதுநலச் சேவை மய்யம், வ.உ.சி தொண்டு நிறுவனம் என்று அமைத்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் என்றா நினைக்கிறீர்கள்? பொதுவெளியில் இப்படியெல்லாம் பீலா விட்டுவிட்டு அவர்கள் ஆதரிப்பதென்னவோ ஜெயலலிதாவைத்தான்.இந்த இடத்தில்தான் நான் மாறுபடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


Amudhavan said...

Jayadev Das said...

\\கீழ்க் கண்ட கருத்தை முகநூளில் படிக்க நேர்ந்தது, இதையெல்லாம் அவர் சொன்ன கால கட்டத்தில் நீங்களே அவற்றை செய்தித் தாட்களில் வாசித்திருப்பீர்கள். இது தான் நாகரீகமான ஒருவர் நடந்து கொள்ளும் விதமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\\

நிறையப்பேர் இப்படியானதொரு கருத்தை அவ்வப்போது முகநூல்களிலும் பதிவுகளிலும் பரப்பியபடிதான் இருக்கிறார்கள். இதிலும் வேடிக்கைப் பாருங்கள்...... அவர் அப்படிச் சொன்னாரோ இல்லையோ அது வேறு விஷயம். (அப்படியே சொல்லியிருந்தாலும் அவர் ஒருமுறைதான் சொல்லியிருப்பார்) ஆனால் அவர் இப்படியெல்லாம் சொன்னார் என்று நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முகநூல் பதிவுகள் வந்துவிட்டன. ஆக அவர் சொன்னதையோ அல்லது சொல்லாததையோ 'சொன்னதாக' மட்டுமே நூற்றுக்கணக்கில் பதிவுகள்............ எப்படி?
எதற்காக இப்படி பதிவிடுகிறார்கள் என்று நான் சிக்மண்ட் ஃபிராய்ட் தத்துவத்துக்கெல்லாம் போகவிரும்பவில்லை.
இது ஒருபுறமிருக்க மேலே நண்பர் பெப்பின் சொல்லியிருப்பதுபோல் கலைஞரின் பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாமே பதிவுகளாக வந்துவிடுகின்றன. அவற்றிலிருந்து எங்கே அவர் அப்படிப் பேசினார், என்ன பேசினார் என்பதைப் பதிவுகளாக எடுத்துப் போடவேண்டியதுதானே? பொத்தாம் பொதுவாக அவர் இப்படியெல்லாம் பேசினார் என்று சொல்லிவிட்டாலேயே அதை நம்புவதற்கு ஒரு பெரிய கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.
அவருடைய அரசியல் வாழ்க்கை என்பது நீண்ட நெடிய எழுபது அல்லது எழுபத்தெட்டு ஆண்டுகள். இத்தனை ஆண்டுகளில் நாள் தவறாமல் பேசியும் எழுதியும் வருபவர் அவர். இந்த நீண்ட நெடிய நாட்களில் எங்கோ என்னமோ அவரையும் மீறிய சில வார்த்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து விழுந்திருக்கலாம். அதை ம் என்றாலேயே எடுத்து சாங்கோபாங்கமாகப் போடுகிறவர்கள் இதுவரை சென்னாரெட்டியை ஜெ என்ன சொன்னார், நெடுஞ்செழியனை என்ன சொன்னார் என்பதுபற்றியெல்லாம் தினசரி நாலைந்துமுறை எடுத்துப் போட்டிருக்கிறார்களா? அல்லது டிவியில் நெறியாளர்கள் என்று வரும் வெறியாளர்கள் ஒரு முறையாவது சொல்லியிருக்கிறார்களா?
நீங்கள் பகிர்ந்திருக்கும் முகநூல் பதிவில் இருக்கும் பல சொற்றொடர்கள் முரசொலி இதழில் கட்டுரைகளில் வந்திருந்தவை. ஒரு அரசியல் இதழில் எம்மாதிரியான 'மொழியில்' கட்டுரைகள் எழுதப்படும் என்பதைக்கூட புரிந்துகொள்ளமுடியாத ஒரு 'அறிஞர் பெருமகன்தான்' நீங்கள் தந்திருக்கும் அந்தப் பட்டியலைத் தொகுத்துத் தந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.உதாரணமாக இந்துப் பத்திரிகையை 'மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு' என்றவர் அண்ணா. இதனை ரசிக்கலாமே தவிர இதில் ஆபாசம் எங்கிருந்து வந்தது? முரசொலியில் அந்தக் காலத்திலெல்லாம் அடியார் என்ற பெயரில் ஒருவர் எழுதுவார்.(பிறகு எம்ஜிஆரிடம் அவர் போய்ச்சேர்ந்தார் என்பது வேறு கதை) அவர் தினசரி கட்டுரைகள் எழுதுவார். அவற்றில் சர்வசாதாரணமாக இம்மாதிரி வார்த்தைகள் வரும்.அவற்றையெல்லாம் தொகுத்து எல்லாவற்றையும் கருணாநிதிதான் சொன்னார் என்றால் எப்படி? இன்னமும் நம்ம பக்கத்துவீட்டு ராமாக்காவையும், லட்சுமியையும் கருணாநிதி இப்படியெல்லாம் திட்டினார் என்று மனம் பிறழ்ந்து சொல்லாமல் இருப்பதுதான் பாக்கி.

Amudhavan said...

Jayadev Das said...

அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன். நீங்களும் உங்கள் முகநூல் நண்பர்களும் ஒரு மாதத்திற்கு நமது எம்ஜிஆர் பத்திரிகையைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். அப்போதுதான் இன்றைய அரசியல் மொழி என்னவென்பது புரியும். அப்படியில்லாவிட்டால் அமைச்சர் வளர்மதி பேசும் அதிமுக பொதுக்கூட்டங்களுக்குப் போய்வாருங்கள். நயத்தக்க நாகரிகம் எதுவென்று சொல்லாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

பரபரப்பான நிகழ்வுகளை நன்றாக தொகுத்து எழுதி, ஏதோ நானே அவற்றைக் கண்டதைப் போல உணர வைத்தீர்கள்.

கருணாநிதியும் மற்றவர்களை "நாகரீகமாக" வசை பாடுவதில் சளைத்தவரல்ல. இருந்தாலும் முதிர்ந்த அரசியல்வாதி ஒருவரை, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சாராக இருந்த ஒருவரை மிக கொச்சையாக விமர்சிப்பது கண்டனத்திற்குரியது. வைகோ நிதானத்தை நிதானமாகவே இழந்துவிட்டார். இது ஒன்றும் slip of the tongue விமர்சனம் கிடையாது.

இரா பற்றி சொல்லவந்ததையும் இதே போல நீண்ட தெளிவான கதை சொல்லும் பாணியில் எழுதுங்கள். படிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் என்ன சொல்லியிருப்பார் அல்லது செய்திருப்பார் என்று கொஞ்சம் கற்பனை செய்ய முடிகிறது. அது உண்மையா இல்லையா என்று பார்ப்போம்.

KATAKAN said...

காமாலை கண்ணனின் விமர்சனம் மஞ்சளாகத்தான் இருக்கும்

Amudhavan said...

Peppin said...
\\ஆஹா அருமையானப் பதிவு! படிக்கப் படிக்க சுவையாக இருந்தது. இந்த நிகழ்வுக் குறித்து பத்திரிகைகளில் வந்தச் செய்திகள் இப்பொழுதும் ஞாபகம் இருக்கின்றன. வைகோ நடிக்கத் தெரிந்த நல்ல அரசியல்"வியாதி"!\\

தங்கள் வருகைக்கு நன்றி பெப்பின்.
\\ராஜாவைப் பற்றி ஏதாவது எழுதிவிடுவீர்களோ என்ற அச்சத்தோடே படித்தேன். நல்லவேளை, ஒரு இடம் தவிர வேறு எங்கும் இல்லை.\\
பாருங்கள் எழுதும்போது எத்தனை பேலன்ஸ் செய்து எழுத வேண்டியிருக்கிறது..........

Amudhavan said...

நம்பள்கி said...

\\[[சிவகுமார் மட்டும் பதில் வணக்கம் சொன்னார்.]] இதில் உள்குத்து இல்லை; ஒரே [நேர்] குத்து! ரசித்தேன்! மொழியின் புலமை இது தான். ஆங்கிலத்தில் இது அதிகம் உண்டு; சொல்வதை சொல்லாமல் விட்டால்..அவனவன் அவன் பாட்டுக்கு யோசிப்பன்! இது எழுத்துப் பட்டறையின் முக்கிய அம்சம்--எல்லா மொழிக்கும்!\\

நன்றி நம்பள்கி.

\\[[[காலையில் பேசிவிட்டு அடுத்த அரை மணி நேரத்திலோ, ஒரு மணி நேரத்திலோ ‘உணர்ந்து’ அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு எப்படியெல்லாம் எழப்போகிறது என்பதை உணர்ந்தபிறகுதான்..] Excellent analysis & interpreting a situation!\\

மீண்டும் தங்களுக்கு நன்றி.

\\இந்த செய்தி இன்று தான் அறிவேன்; அப்ப பன்னீர் செல்வம் 'கொல்லையில்' காலையில், உக்காருவது மாதிரி கார் டயர் முன்னால் பம்மிக்கொண்டு உக்காருவதற்கு முன்னோடி வைகோ தானா!\\

அட, இந்தக் கோணமும் நன்றாக இருக்கிறதே. இந்தக் கோணத்தில் நான் கவனம் செலுத்தவில்லையே.



\\மு.க. எப்படிப்பட்டவர் என்பது முக்கியமில்லை...நான் அவர் கொள்கை எல்லாவற்றிலும் ஒத்து போகிறேன் என்று அர்த்தமும் இல்லை. நான் சொல்வது...மு.க. என்று பார்த்தவுடன் கூலிக்கு மாரடிப்பவர்கள் வந்து வாந்தி எடுப்பார்கள். தினமலரில் இது ஆரம்பித்தது..எந்த செய்தி முக பற்றி வந்தாலும்..பல பேரில் பலர் வந்து வந்தி வரிசையாக எடுப்பார்கள்! அன்றே சொன்னேன்..இவர்கள் காசுக்கு எழுதுபவர்கள் என்று! எவன் கேட்டான்? இன்றைக்கு அந்த பழி திமுகவிற்கு வந்துள்ளது! முக சில விஷயங்களில் வருமுன் காப்போன் இல்லை!\\

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

\\நான் என் [டெல்லி[ நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டது. உண்மையான போட்டியாக வைகோ நினைத்தது முரசொலி மாறனை! வைகோ செய்த மாபெரும் தவறு அவருடன் தான் போட்டி என்று நினைத்தது; இவர்கள் இருவரும் தான் டெல்லியில் permanent representatives.\\

உங்களின் ஊகம் சரிதான். வைகோவின் தவறு அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. சிறிது காலம் நாஞ்சில் மனோகரனும் டெல்லியில் தொடர்பாளராக இருந்து தமக்கு இட்ட பணிகளை சரிவர செய்துவந்தார் என்று கேள்வி. வைகோவை கலைஞருக்கு மிகவும் பிடிக்கும் என்று நீங்கள் சொன்னது மிக மிக சரியான தகவல். கலைஞரிடம் இருக்கும் ஒரு பெரிய பலவீனம், அவருக்கு யாரையாவது ஒருமுறை பிடித்துவிட்டால் அவர்கள் அவர் கண்ணுக்கு எதிராகவே எத்தனைப் பெரிய துரோகமோ தவறோ இழைத்தாலும், அதனை யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார், அவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்பது...... இதனைக் கலைஞரை மிக நன்றாக அறிந்த ஒருவரே சொல்லியிருக்கிறார்.
\\நல்ல பம்பரம் சுத்திக்கொண்டே இருக்கும்; தொதுர் பம்பரம் (ஆணி வளைந்து இருந்தால்) வேகமா சுத்தும்; தொதுரும் (அதாவது துள்ளும்); ஆனால், பட்டென்று விழுந்து வேகமா சுத்தி கீழே விடும். அல்ப ஆயுசு! அரசியலில் வைகோ அப்படிதானே!\\

இந்தத் தொதுர் பம்பரம் ஒப்பீடு இருக்கிறதே, சூப்பர்! மிகவும் ரசித்தேன். நம்பள்கியின் முத்திரை அழுத்தமாக விழுந்திருக்கும் இடம் இது.

உங்களுக்கு ஒரே வீச்சில் நன்றி சொல்லாமல் இப்படித் துண்டு துண்டாக எடுத்துப்போட்டு நன்றி சொல்வதில் வேறொரு உள்நோக்கமும் இருக்கிறது. இங்கு 'எதிர்த்து' எழுதும் பலருக்கு உங்கள் பதில்களிலேயே விளக்கமும் பதிலும் இருக்கிறது என்பதற்காகத்தான் இந்த அணுகுமுறை.பல்வேறு பணிகளுக்கிடையில் இத்தனைப் பொறுமையாகவும் சிரத்தையாகவும் எழுதியதற்கு மீண்டும் என்னுடைய நன்றி.

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...

\\சில நண்பர்கள் அன்று கருணாநிதி பேசாததா என்று குறிப்பிட்டார்கள். அன்று மேடையில் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் இரு பக்கமும் என்னென்ன பேசினார்கள் என்பதை இன்று வசதியாக மறந்து விட்டார்கள். பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வேண்டுமென்றே ‘நாயக்கர்’ என்றே குறிப்பிட்டார்கள். அறிஞர் அண்ணாவைப் பற்றி காஞ்சிபுரத்தில் மிகவும் தரக் குறைவாக சுவரில் எழுதி வைத்தார்கள்; அண்ணாவோ அந்த சுவர் அருகே ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டை இருளிலும் அனைவரும் படிக்குமாறு கட்டி வைத்தார். மேடைப் பேச்சாளர்கள் பலரும் கருணாநிதியைப் பற்றி பேசும் போதெல்லாம் அவரது ஜாதியைக் குறித்தே பேசுவார்கள். எம்ஜிஆரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் வயதானவர் என்ற அடைமொழிதான். எனவே அன்றைய அரசியல் என்பது வேறு.\\

வாங்க இளங்கோ சார், சரியாகச் சொன்னீர்கள். இன்றைய அரசியல் விவாதம் என்பதே கருணாநிதி அன்றைக்கு என்ன தவறு செய்தார், இன்றைக்கு என்ன தவறு செய்கிறார், நாளைக்கு என்ன தவறு செய்வார் என்பதைப் பேசுவது மட்டும்தான். இவர் பயணிக்கும் அதே அரசியல் தடத்தில் 'இவரை விடவும் லாபம் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்' என்ன செய்தாலும் 'அதனைக் கண்டுகொள்வதில்லை' என்பதுதான் தமிழன் பண்பாடு. இந்தப் பாணியை நன்றாகவே விதைத்து வளர்த்தும் வருகிறார்கள் சில ஊடகவியலாளர்களும் 'நடுநிலை நபும்சகர்'களும்.அதனால்தான் யார் என்ன தவறுகள் செய்தாலும் 'கருணாநிதி செய்யாததா?' என்று ஒற்றை வார்த்தையில் அந்தத் தவறுகளை நியாயப்படுத்திவிட்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள். கருணாநிதி 72 ஆண்டுகால வரலாற்றில் செய்த அத்தனைத் தவறுகளையும் இவர்கள் பத்தே ஆண்டுகளில் செய்யலாமாம், அதை 'பாதுகாத்துக்கொண்டு' இருப்பார்களாமாம். ஆனால் கருணாநிதியின் உழைப்பு, திறைமை, ஆளுமை பற்றியெல்லாம் இவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்களாமாம். போங்கடா போங்கடா போக்கத்த பசங்களா என்ற பாடல் வரிகள்தான் பல சமயங்களில் ஞாபகம் வருகிறது.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\ஜெயிக்கனும் என்றால் காசை பார்க்கக்கூடாது. ஜெயிக்கனும் ஆனால் காசு செலவளிக்கக்கூடாது. இரண்டும் வெவ்வேறு பாதை????\\

ஆமாம் ஜோதிஜி உண்மைதான். திமுக தன்னை இன்னமும் மாற்றிக்கொள்ளாத ஏரியாக்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் இது மிகவும் முக்கியமான ஒன்று.

நம்பள்கி said...

மந்திரக்கோல் மைனர் எம்ஜீயார் கட்சிக்கு போன பிறகு மறுபடியும், திமுக வந்த பிறகு, டெல்லி செல்லவில்லை; அதற்கு அப்புறம் மாறனுக்கு உதவியா டெல்லி வேலைகளை பார்பதற்கு வைகோ எம்.பி

Amudhavan said...

காரிகன் said...
\\பரபரப்பான நிகழ்வுகளை நன்றாக தொகுத்து எழுதி, ஏதோ நானே அவற்றைக் கண்டதைப் போல உணர வைத்தீர்கள்.\\

நன்றி காரிகன்.


\\இரா பற்றி சொல்லவந்ததையும் இதே போல நீண்ட தெளிவான கதை சொல்லும் பாணியில் எழுதுங்கள். படிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் என்ன சொல்லியிருப்பார் அல்லது செய்திருப்பார் என்று கொஞ்சம் கற்பனை செய்ய முடிகிறது. அது உண்மையா இல்லையா என்று பார்ப்போம்.\\

உங்கள் கற்பனையில் இருப்பது என்னவென்பது தெரியவில்லை. ஆனால் இ.ராவைப் பற்றிய அன்றைய நாள் நிகழ்வுகள் என்னால் மறக்க முடியாததாகத்தான் உள்ளது. பார்ப்போம். இப்போது வைகோவைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பம் வந்ததுபோல் இ.ராவைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தையும் இ.ராவே ஏற்படுத்தித் தந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.அப்போது விரிவாகச் சொல்லலாம்.

Arul Jeeva said...

அமுதவன் அவர்களே

மிகவும்சுவாரஸ்யமான,தற்கால சூழலுக்குத் தேவையான அநேக செய்திகளைப் பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
நான் அறிந்திராத செய்திகளை உள்ளடக்கியதாலும் மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் குறித்த பதிவாயிருப்பதாலும் மீண்டும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது .
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் என்பார்களே அதுபோலத் தான் இன்று வை கோ வும். வளர்த்துவிட்டவரை விஷம் தடவிய கொம்பால் வதைத்துவிடலாமென்று பகல் கனவு காண்கிறார். அரசியலில் இணைவதும் ,பிரிவதும் சகஜமாயிருக்கலாம் . அதற்காக வார்த்தை நாகரிகம் தவறுதல் முறையல்லவே.ஒரு காலத்தில் கலைஞரின் காலடியே சொர்க்கமென்றவர் எதனால் இவ்வாறு தரம்தாழ்ந்தார் என்று விளங்கவில்லை .எதையோ சொல்லி பின் மன்னிப்பு என்ற பெயரில் நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலைச் சொல்வதாக நாடகமாடுகிறார்.இதையும் நியாயப்படுத்துவதற்கு இங்கும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

சார்லஸ் said...

" வேறு ' தொழில் ' இருக்கிறது. உலகத்தில் மிகவும் பழமையான 'தொழில் ' . சந்திரகுமார் அதைச் செய்யலாம் " என்று பேசிய வை கோ ஒரு நிறுத்தம் கொடுத்து , "கருணாநிதியும் செய்யலாம் " என்று சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.

சந்திரக்குமாரை அவ்வாறு பேசியதே தவறு எனும் பட்சத்தில் பழுத்த அரசியல் அனுபவம் பெற்ற ஒரு மாபெரும் தலைவரையும் அவதூறாக பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

உலகத்திலேயே பழமையான தொழில் என்பது அசிங்கமான 'அந்தத்' தொழிலைத்தான் குறிக்கும். அதைக் குறிப்பிட வந்தவர் , தான் தவறுதலாக சொன்னதை சட்டென உணர்ந்து , " நான் தப்பா சொல்லலை . நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலைத்தான் சொன்னேன் " என்று சமாளித்தது இன்னும் அருவருப்பாக இருந்தது.

தப்பாக சொல்லவில்லை என்று விளக்கம் கொடுத்த அந்த கணமே அவர் தப்பாகத்தான் சொல்ல வந்திருக்கிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது. வளர்த்த கடா இந்த முறையும் மார்பில் பாய்ந்திருக்கிறது. பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டுதானே அவரை இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என நினைக்கும்போது அவர் மேல் உள்ள மரியாதை காற்றில் பறந்து விட்டது.

உங்கள் பதிவில் சொல்லப்பட்ட காரைக்குடி சம்பவம் சுவையானதாகவும் வை கோவின் முகம் காட்டும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் பேசப் போகிறாரோ !?

Amudhavan said...

Arul Jeeva said...
\\வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் என்பார்களே அதுபோலத் தான் இன்று வை கோ வும். வளர்த்துவிட்டவரை விஷம் தடவிய கொம்பால் வதைத்துவிடலாமென்று பகல் கனவு காண்கிறார். அரசியலில் இணைவதும் ,பிரிவதும் சகஜமாயிருக்கலாம் . அதற்காக வார்த்தை நாகரிகம் தவறுதல் முறையல்லவே.ஒரு காலத்தில் கலைஞரின் காலடியே சொர்க்கமென்றவர் எதனால் இவ்வாறு தரம்தாழ்ந்தார் என்று விளங்கவில்லை .எதையோ சொல்லி பின் மன்னிப்பு என்ற பெயரில் நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலைச் சொல்வதாக நாடகமாடுகிறார்.இதையும் நியாயப்படுத்துவதற்கு இங்கும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.\\

வாங்க அருள் ஜீவா, உங்கள் கருத்து அழகானதாகவம் ஏற்புடையதாகவும் இருக்கிறது. அன்று இருந்ததை விடவும் இன்றைக்கு அவர் பல மடங்கு செல்வந்தராக ஒருவேளை இருக்கலாம். பணம் ஒரு ஆளை முழுக்கவே மாற்றும் சக்தி வாய்ந்தது என்கிறார்கள். ஒரு வேளை அவரிடம் சேர்ந்திருக்கும் பணம் அவரை மாற்றியிருக்கலாம். தங்கள் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

சார்லஸ் said... "
\\வேறு ' தொழில் ' இருக்கிறது. உலகத்தில் மிகவும் பழமையான 'தொழில் ' . சந்திரகுமார் அதைச் செய்யலாம் " என்று பேசிய வை கோ ஒரு நிறுத்தம் கொடுத்து , "கருணாநிதியும் செய்யலாம் " என்று சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது.\\
\\உலகத்திலேயே பழமையான தொழில் என்பது அசிங்கமான 'அந்தத்' தொழிலைத்தான் குறிக்கும். அதைக் குறிப்பிட வந்தவர் , தான் தவறுதலாக சொன்னதை சட்டென உணர்ந்து , " நான் தப்பா சொல்லலை . நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலைத்தான் சொன்னேன் " என்று சமாளித்தது இன்னும் அருவருப்பாக இருந்தது. தப்பாக சொல்லவில்லை என்று விளக்கம் கொடுத்த அந்த கணமே அவர் தப்பாகத்தான் சொல்ல வந்திருக்கிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது. வளர்த்த கடா இந்த முறையும் மார்பில் பாய்ந்திருக்கிறது. பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டுதானே அவரை இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என நினைக்கும்போது அவர் மேல் உள்ள மரியாதை காற்றில் பறந்து விட்டது. உங்கள் பதிவில் சொல்லப்பட்ட காரைக்குடி சம்பவம் சுவையானதாகவும் வை கோவின் முகம் காட்டும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் பேசப் போகிறாரோ !?\\
வாங்க சார்லஸ் வைகோ பேட்டி கொடுத்த விதத்தை மிகச் சரியாகவே கவனித்திருக்கிறீர்கள், விவரித்திருக்கிறீர்கள். வைகோவிடம் நெருங்கிப் பழகியவர்கள், அவரைப் பக்கத்திலிருந்து நீண்டநாள் பார்த்தவர்கள் சிலர் சொல்லும் தகவல்கள் வெளியில் தெரியும் வைகோவை விடவும் வேறொரு பிம்பத்தையே நமக்குத் தெரிவிக்கிறது. பார்ப்போம், நீங்கள் சொல்லியிருப்பதுபோல் தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்னவெல்லாம் பேசப்போகிறாரோ?
தங்கள் வருகைக்கு நன்றி.

Umashankar said...

Is it not true.

Amudhavan said...

Umasankar Moorthy said...

\\Is it not true.\\

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரிந்தால் சரி.

Post a Comment