Thursday, December 22, 2016

என்னுடைய பார்வையில் சசிகலா
ஜெயலலிதாவுக்கு அந்தப் பெயர் உண்டு. 

யாராலும் அணுக முடியாதவர், யாராலும் வெல்ல முடியாதவர், யாராலும் ஏமாற்ற முடியாதவர்….. என்றெல்லாம் அவருக்குப் புகழ் மொழிகள் உண்டு. ஆனால்,
- இதற்கெல்லாம் பின்னணியில் வேறொரு பெண்மணி இருந்தார்.
எல்லா விஷயங்களிலும் மொத்தப் பெருமையும் ஜெயலலிதாவுக்குப் போகும். அதே அளவுக்குக் கோபமும், எரிச்சலையும், பொறாமையையும், விமரிசனத்தையும் இன்னொருவர் மீது கொட்டித் தீர்ப்பார்கள்.
தவறுகள் அத்தனைக்கும் காரணம் இந்தப் பெண்மணிதான் என்று இவரை நோக்கிக்  கைநீட்டுவார்கள்.
அவர் மிரண்டதில்லை.
அலட்டிக் கொண்டதில்லை.
அசைந்து கொடுத்ததில்லை.
பரபரத்துப்போய் எதிர்வினையாற்றியதில்லை.
எதிர்த்து அறிக்கை விட்டதில்லை.
எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு ‘எப்போதும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று இருந்துவிடுவார்.

அவர்தான் சசிகலா!

இன்றைய அரசியலில் சசிகலாவுக்கு இருக்கின்ற ‘ரோல்’ என்ன? அவரைச் சுற்றிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகள் என்ன? அவரை வைத்து நகர்த்தப்படுகின்ற அரசியல் காய்கள் என்ன? அவரை வைத்து நடைபெறுகின்ற சதுரங்கம் என்ன? என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க- அதற்குள் போக விரும்பாமல் நான் அன்றிலிருந்து அறிந்த சசிகலாவை, அவரைப்பற்றி என்னுடைய எண்ணத்தில் இருக்கும் பிம்பத்தைச் சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

நான் இந்தப் பதிவில் அவரைப் பற்றிய பாசிட்டிவ்வான சில எண்ணங்களைத்தான் சொல்லப்போகிறேன். பிடிக்காதவர்கள் இங்கேயே விலகிக்கொள்ளலாம். அரசியல் கண்ணாடி அணிந்துகொண்டுதான் சசிகலாவைப் பார்ப்பேன் என்று விரதம் பூண்டவர்கள் சட்டென்று கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு வேறு வேலைப் பார்க்கப்போகலாம்.
சசிகலாவைப் பற்றிய வேறொரு கோணமும் இருக்கும்போலிருக்கிறதே என்று நினைப்பவர்கள் மட்டும் மேலே தொடரலாம்.

சசிகலா முதன்முதலாகச் சென்னைக்கு வந்ததைப் பற்றி மறைந்த குமுதம் பால்யூ சொல்லக் கேட்டிருக்கிறேன். திடீரென்று திருமணமான ஒரு சில தினங்களில் புது மனைவியைக் கையோடு கூட்டிக்கொண்டு சென்னை வந்து நின்றிருக்கிறார் புது மாப்பிள்ளை நடராஜன். சென்னையில் எங்கு போவது என்று தெரியாத நிலையில் பால்யூ தெரிந்த நண்பர் என்பதால் அவருடைய வீட்டிற்கு வந்து நின்றிருக்கிறார்.
புது மணமக்களைப் பார்த்த பால்யூவுக்கு ஒரே திகைப்பு. 
அவர்களை எங்கே தங்கவைப்பது? 

ஏனெனில் பால்யூ வீடு சிறியது. தவிர அவருக்கே ஏகப்பட்ட பிள்ளைகள். அதனால் இவர்களைத் தங்க வைக்க போதிய இடவசதி வீட்டில் இல்லை. வேறொரு வீடு பார்த்துத்தான் இவர்களைக் குடி அமர்த்த வேண்டும்.

எனவே, சசிகலாவை வீட்டில் விட்டுவிட்டு பால்யூவும், நடராஜனும் வீடு தேடக் கிளம்பியிருக்கிறார்கள். சென்னையில் புதிய வீடு அத்தனை சீக்கிரத்தில் கிடைத்துவிடுமா என்ன? எங்கு சுற்றித் திரிந்தும் ஒன்றும் அகப்படவில்லை.

பால்யூவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

“சரி வாருங்கள்” என்று அவர் நடராஜனைக் கூட்டிக்கொண்டு வந்து நின்ற இடம் விக்கிரமன் அலுவலகம்.

பிரபல சரித்திரக் கதாசிரியரான விக்கிரமன் அப்போது அமுதசுரபியின் ஆசிரியர். அவரிடம் வந்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவர் சொன்னாராம். “சென்னையில் புது வீடு கிடைப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை. இரண்டொரு நாட்கள் ஆகும். ஏன் ஒரு வாரமோ பத்து நாட்களோகூட ஆகலாம். அதுவரை அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென்றால் இதோ இந்த அலுவலகத்தில் ஏராளமான இடம் இருக்கிறது. அவர்கள் ஒரு பகுதியில் தங்கிக் கொள்ளலாம். நான் இந்தப் பகுதியில் இருந்து செயல்பட்டுக் கொள்கிறேன். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளட்டும். வீடு கிடைத்தபிறகு சாவகாசமாய் அவர்கள் காலி பண்ணிக்கொள்ளலாம்” என்று கூறி நடராஜனும் சசிகலாவும் தங்குவதற்கு அந்த அலுவலத்திலேயே வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விக்கிரமன்.

சில நாட்கள் ஆனதும் வீடு ஒன்று அமைந்துவிட நடராஜன் சசி தம்பதியினர் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு தனிக்குடித்தனம் போயிருக்கின்றனர். 

விக்கிரமனும், பால்யூவும் செய்த இந்த உதவிகளை நடராஜனும் சரி, சசிகலாவும் சரி என்றைக்கும் மறக்கவே இல்லை.

அவ்வப்போது அவர்களைப் பார்த்துவர பால்யூ சசிகலாவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சசிகலாவின் விருந்தோம்பல் பண்பு எப்படி இருந்தது என்பதை வியந்து சொல்வார் பால்யூ. “சசி அத்தனை நன்றாகப் பார்த்துக்கொள்ளும். அத்தனை அன்பாகப் பேசும். அவ்வளவு அன்பாக காபி போட்டு சிற்றுண்டி சாப்பிடவைத்து அனுப்பிவைக்கும்” என்று சொல்வார். கூடவே இன்னொன்றையும் சொல்வார். “இப்போது சசிகலா பற்றி என்னென்னவோ கேள்விப் படுகிறேன். அமைச்சர்களிடமும் , அரசு உயர் அதிகாரிகளிடமும் எப்படியெல்லாம் பேசுகிறது என்னவெல்லாம் உத்தரவு போடுகிறது என்பதையெல்லாம் கேள்விப் படுகிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டிற்குப் போனால் நேரில் கூட வந்து நின்று பேசாது. காபி கொடுத்துவிட்டு எதிரில் உட்காராமல் அறையின் கர்ட்டனில் பாதி தன்னை மறைத்து நின்றுகொண்டுதான் ‘வீட்ல அம்மால்லாம் எப்படிப்பா இருக்காங்க?’ என்று பேசும்” என்று வியந்திருக்கிறார்.

சரி, இப்போது விக்கிரமனிடம் வருவோம்.

சசிகலாவின் வாழ்க்கை ஒரு பெரிய மாறுதலுக்கு உட்பட்டு சசிகலா போயஸ் கார்டன் வந்த பிறகு, நடராஜன் தனியாக அச்சுக்கூடமெல்லாம் வாங்கிப்போட்டு  பத்திரிகை அதிபராக அவதாரம் எடுக்கிறார்.
அவர் ஆரம்பித்த பத்திரிகையின் பெயர் ‘புதிய பார்வை’. புதிய பார்வை பத்திரிகை ஆரம்பித்த அதே கையோடு கூடவே இன்னொரு பத்திரிகையையும் ஆரம்பிக்கிறார்

அந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழரசி.’

தமிழரசிக்கு ஆசிரியராக ஒருவரை நியமிக்கிறார் நடராஜன். அவர் - விக்கிரமன்.

விக்கிரமனை நடராஜன் சந்தித்து தமிழரசிக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது விக்கிரமன் மறுத்திருக்கிறார். “அமுதசுரபி பத்திரிகையை நான் ஆசிரியராக இருந்து நடத்திக்கொண்டிருக்கிறேன். இதனை விட்டு நான் வரமாட்டேன்” என்று அவர் சொன்னபோது “உங்களை யார் அதனை விட்டுவிட்டு வரச்சொன்னது? அதிலும் நீங்களே ஆசிரியராக இருங்கள். இந்தப் பத்திரிகையையும் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார் நடராஜன்.

காரணம் தமிழரசிக்கு ‘ஆசிரியர்’ என்று ஒருவர் கிடைக்கமாட்டார் என்பதற்காக அல்ல; தனது நிலை உயர்ந்தவுடன் நன்றி மறவாமல் விக்கிரமன் செய்த உதவிக்குக் கைமாறாக அவருக்குத் தாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்காக உருவாக்கியதுதான் ‘தமிழரசிக்கு ஆசிரியர் பதவி’ என்பது.

பத்திரிகை துவங்கிய முதல் நாளில் விக்கிரமன் கையில் ஒரு கார்ச் சாவியைத் தருகிறார் நடராஜன்.

விக்கிரமனுக்கு செலுத்தும் அன்புக் காணிக்கை அது.

நடராஜன் துவங்கிய தமிழரசி பத்திரிகைக்குப் பெயர் வைத்த காரணத்தைச் சொல்வார்கள். அது எந்த அளவு உண்மை என்பது தெரியாது. “என்ன இது தமிழரசி என்று பெயர் வைத்திருக்கிறீர்களே……..யார் அந்த தமிழரசி?”- என்று கேட்டார்களாம்.

“வேறு யார்? உண்மையான ‘தமிழரசி’ சசிகலா தானே? அவருக்காகத்தான் அந்தப் பெயரை வைத்திருக்கிறேன்” என்றாராம் நடராஜன்.

இவையெல்லாம் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்கள். 

ஆக, என்னைப் பொறுத்தவரை அந்தக் காலத்திலிருந்தே சசிகலாவை ஒரு பாசிட்டிவ் கண்ணோட்டத்திலேயே பார்த்து வருகிறேன். அரசியலைப் பொறுத்தவரை காமராஜர் அண்ணா காலத்துக்குப் பிறகு கலைஞரின் காலம் ஆரம்பித்தபோது ஒன்று தோன்றியது. ‘கலைஞரை அரசியலில் வெற்றி கொள்வது என்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல’ என்பது.

எம்ஜிஆர் என்ற மக்கள் செல்வாக்கு கருணாநிதியைத் தோற்கடித்தது.
அதிக பட்ச செல்வாக்கு என்பது எத்தனை திறமைசாலியாயிருந்தாலும் தோற்கடித்துவிடும் என்ற பாடம் கிடைத்தது. சரி ‘எம்ஜிஆர் புயல்’ ஒருமுறை அடித்து ஓய்ந்துவிட்டது. இனி திறமைக்குத் தோல்வியில்லை’ என்றே தோன்றிற்று.

கருணாநிதியை வெல்வது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. காரணம், கருணாநிதி என்பவர் ஏதோ காரணத்திற்காக உச்சிக்குச் சென்று அமர்ந்திருக்கும் அரசியல் ‘நட்சத்திரம்’ அல்ல; இலக்கியம், பல்வேறு அசாத்தியமான திறமைகள், தமிழ் உணர்வு, பட்டறிவு, பகுத்தறிவு என்றெல்லாம் உறுதியாகி இறுகிப்போய் கெட்டிப்பட்டதொரு ‘இரும்புக் கோட்டை’ அது.

போகிற போக்கில் மக்கள் செல்வாக்கு, அவ்வப்போது அரசியலில் அடிக்கிற பரபரப்பு என்ற புயலில் எம்மாதிரியான கோட்டையையும் எளிதில் தாண்டி வந்துவிடலாம். வந்துவிட முடியும்.

ஆனால் ‘நிற்பதற்கும்’ அங்கேயே நின்று ‘நிலைப்பதற்கும்’ ஒரு திறம் வேண்டும். அந்தத் திறம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. எப்படி இருந்தது, யாரால் இருந்தது என்பதுதான் இங்குள்ள முக்கியமான கேள்வி.

அப்படி நின்று நிலைப்பதற்கு உங்களைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள ஒரு கரம் வேண்டும். என்ன புயல் அடித்தாலும் விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளும் சக்தித் திறம் வேண்டும்.

அரசியலில் அவ்வப்போது சதுரங்கம் ஆடவேண்டியிருக்கும்.
தோளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அரசியல் சதுரங்கத்தில் குயுக்தியாய்க் காய் நகர்த்த ஒரு ‘சூப்பர் நுட்பம்’ வேண்டும்.

ஜெவின் தோளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “அக்கா இந்தக் காயை நகர்த்து, அந்தக் காயை அங்கே கொண்டு போ” என்று அக்காவை ‘இயக்குவதற்கு’ ஒரு தேர்ந்த மதிநுட்பம் வேண்டும்.

அந்த மதிநுட்பம்தான் சசிகலா.

அதாவது ‘ஆனானப்பட்ட’ கருணாநிதியையே ஜெயலலிதா ஆட்டிவைத்தார் என்று எடுத்துக்கொண்டால் –

அப்படிப்பட்ட ஜெயலலிதாவையே ஆட்டிவைத்தவர் சசிகலா!
எல்லாவைற்றையும் விடுங்கள்.

ஜெயலலிதா அட்மிட் ஆன செப்டம்பர் 22ம் தேதியிலிருந்து அவர் மறைந்துபோன தினம்வரை எடுத்துக்கொள்வோம்.

இந்தத் தேதிகளில் நிச்சயம் ஜெவின் பங்கென்று எதுவும் கிடையாது, எதுவுமே கிடையாது.

அவர் படுத்த படுக்கையாகி விட்டார்.

இப்போது எல்லாமே சசிகலாதான்.

இது ஒரு நவீன யுகம்.

எவருக்கும் தெரியாமல் இங்கு எதுவுமே நடப்பதற்கு சாத்தியமே இல்லை.
ஸ்டிங் ஆபரேஷன் என்று சொல்லி என்னென்னமோ நடக்கிறது. 

இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று சொல்லி என்னென்னவோ ஜாலம் நடத்துகிறார்கள். காற்றுப் புக முடியாத இடத்திலும் புகுந்து புகைப்படம் எடுத்து வந்து விடுகிறார்கள்.

காமிராவை பொட்டு மாதிரி நெற்றியில் வைத்துக்கொண்டு போய் படமெடுக்கிறார்கள். பேனாவில், சட்டை பட்டன்களில்  இத்தனூண்டு காமிராவை ஒட்டிக்கொண்டுபோய் நடப்பவற்றைச் சுருட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அத்தனைத் தொழில் நுட்பம். அத்தனை நவீனம்.

எழுபத்தைந்து நாட்களுக்கும் மேலாகிப் போயும் அப்படியெல்லாம் எந்த ‘பாச்சாவும்’ இந்தம்மாவிடம் பலிக்கவில்லை. ஒரேயொரு ஒற்றை போட்டோ வெளிவராமல் இருப்பதற்கு யாராலும் காபந்து செய்ய முடியுமா?

ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற விவரமோ, அவரைப் பற்றிய படமோ, அவர் பற்றிய சின்னஞ்சிறு செய்தியையோகூட யாராலும் வெளிக்கொண்டுவர முடியவில்லை.

என்ன மாதிரியான ஆளுமை இது?

வந்தது கவர்னராக இருக்கட்டும், மத்திய அமைச்சராக இருக்கட்டும், ராகுல் காந்தியாகவே இருக்கட்டும். யாராயிருந்தாலும் ‘உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே’தான்.

‘இந்தம்மா’ ‘உத்தரவைத் தாண்டி’ இரண்டாம் தளத்திற்குமேல் யாராலும் செல்லமுடியவில்லை.

எவராலும் எங்கும் எப்படியும் எதுவும் செய்ய முடியவில்லை.
அந்தம்மாவின் குரல் எப்படியிருக்கும் என்பதுகூட வெளி உலகிற்குத் தெரியாது.

தன்னை விளம்பர வெளிச்சத்திலிருந்து தள்ளி வைத்துக்கொண்டிருந்து எப்போது வெளிக்காட்ட வேண்டும் என்பதற்கு இவரிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கக்கூடும்.

தான் எப்போது வெளியே வரவேண்டும் என்பதை இவர் தீர்மானித்து வைத்திருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தனிப்பட்ட தைரியமும் ஆளுமைத் திறனும் வேண்டும்.
இந்த இரண்டும் சசிகலாவிடம் இருக்கிறது.

தன்னுடைய நேரம் எதுவென்று அவருக்குத் தெரிந்திருக்கலாம். அந்த நேரம் இதுவாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்த அவர் இப்போது வெளிச்சத்திற்கு வந்தாலும் வரலாம்.


வாருங்கள் சசி.

14 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான உண்மை ஒரு நாள் தெரியத்தான் போகிறது... பார்ப்போம்...

R.S.KRISHNAMURTHY said...

ஒரு நல்ல மனித அலசல்! இன்று சசியைப் பற்றி இரண்டு விதமாகவும் பேசிக்கொண்டிருப்பவர்களில் எத்தனைபேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் என்று தெரிவதில்லை. “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்” என்று யாராரோ கூவிக்கொண்டிருக்கிறார்கள். பொறுமையுடன் ஆளுங்கட்சி என்ன செய்யப் போகிறது - அதன் பிறகே வோட்டளித்த நாம் பேசமுடியும் என்கிற அடிப்படை தத்துவம் கூட இன்று இல்லை என்பதுதான் நிதர்சனம்!!

ஜோதிஜி said...

நான் மனதில் நினைத்த பல விசயங்களை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. மோடிக்கு சரியான லேடியாக இருப்பார் என்றே தோன்றுகின்றது. காலம் என்ன ஆச்சரியங்களை வைத்துள்ளதோ?

Anonymous said...

உண்மை! இதே சமயம் "சசி" ஜெயலலிதா சொந்தமாக இருந்திருந்தால், இந்நேரம் ஊடகங்கள் சசிக்கு முதல் அமைச்சர் பதவி வாங்கி கொடுத்திருப்பார்கள். புரிஞ்சா சரி!

Anonymous said...

பலான பலான வீடியோ, பணம் இருந்தா எதையும் சாதிக்கலாம்!

Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...
\\உண்மையான உண்மை ஒரு நாள் தெரியத்தான் போகிறது... பார்ப்போம்...\\
ஆமாம் தனபாலன், உண்மை ஒருநாள் வெளியாகும். அதற்காகக் காத்திருப்போம்.

Amudhavan said...

R.S.KRISHNAMURTHY said...
\\ஒரு நல்ல மனித அலசல்!\\

நன்றி ஆர்எஸ்கே.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\நான் மனதில் நினைத்த பல விசயங்களை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. மோடிக்கு சரியான லேடியாக இருப்பார் என்றே தோன்றுகின்றது. காலம் என்ன ஆச்சரியங்களை வைத்துள்ளதோ?\\

காலம் பல கடுமையான சோதனைகளையும்,ஆச்சரியங்களையும் வைத்திருக்கிறது என்பது நிஜம்தான். ஆச்சரியங்களை மட்டும் வரவேற்போம்.

Amudhavan said...

Anonymous said...
\\உண்மை! இதே சமயம் "சசி" ஜெயலலிதா சொந்தமாக இருந்திருந்தால், இந்நேரம் ஊடகங்கள் சசிக்கு முதல் அமைச்சர் பதவி வாங்கி கொடுத்திருப்பார்கள். புரிஞ்சா சரி!\\
ஆமாம் அனானி, நீங்கள் சொல்வது சரி. புரிகிறது..

Amudhavan said...

Anonymous said...
\\பலான பலான வீடியோ, பணம் இருந்தா எதையும் சாதிக்கலாம்!\\

இவை இரண்டும் உங்களுக்கு மட்டும் கிடைக்காதா என்ன? பெரிதாக எதையாவது சாதியுங்கள் அனானி.

Anonymous said...

//இவை இரண்டும் உங்களுக்கு மட்டும் கிடைக்காதா என்ன? பெரிதாக எதையாவது சாதியுங்கள் அனானி.//

ஆமாம். இதற்கு தனித்திறமைதான் வேண்டும். எங்களிடம் இல்லை.

Anonymous said...

கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்....

Amudhavan said...

Anonymous said... கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்....

நன்றி அனானி.

V Mawley said...விலை கொடுத்து வாங்க முடியாத மனிதர்களே கிடையாது என்று அறிந்தவர் ஜெ அவர்கள் . .இந்த nack -ஐ அருகில் இருந்து , கவனித்தவர் சசி அவர்கள் ....இரண்டும் - இரண்டும் நான்கு ..அவ்வளவு தான் ..

மாலி

Post a Comment