Tuesday, August 17, 2010

பத்திரிகையாளர் ஞாநியின் விலகலும் அதுபற்றிய பரபரப்புக்களும்.........


ஞாநி குமுதத்திலிருந்து கழற்றிவிடப்பட்டோ, அல்லது அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு அவராகவே வேறு பத்திரிகைக்குப் போய்விட்டதைப் பற்றியோ வலைத்தளங்களில் பெரிய அளவில் பரபரப்பான பகிர்வுகள் வந்துகொண்டிருக்கின்றன.உண்மையில் அவ்வளவு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் இருந்தனவா என்பதே கேள்விக்குரியது.
ஞாநி பிரபலமாக இருந்ததற்குக் காரணம் அந்தப் பத்திரிகைகள்தாமே தவிர அவரது எழுத்துக்கள் அல்ல. ஆங்கிலத்தில் குல்தீப் நய்யார், எம்.ஜே.அக்பர் போன்ற எழுத்தாளர்கள் அளவுக்குத் தமிழில் பிரபலமான அரசியல் விமர்சகர்கள் இல்லை. சோலை, சின்னக்குத்தூசி, ஜென்ராம் போன்றவர்களைத்தான் பிரபலமானவர்களாகச் சொல்ல முடியும். இவர்களைவிடப் பிரபலமான ஒருவராகச் சோவைச் சொல்லலாம். ஆனால் சோவுடைய கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் அல்ல. அவருடைய அபரிமிதமான நகைச்சுவை உணர்வினாலும் அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பதனாலும் அவரது எழுத்துக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரை நிறையப்பேர் படிப்பார்களே தவிர அவரது கருத்துக்களை யாரும் சீரியஸாகக் கருதுவதில்லை.
சின்னக்குத்தூசி சளைக்காத புள்ளிவிவரங்களுக்குச் சொந்தக்காரர். தாம் எடுத்துக்கொண்ட கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி வாதங்களை அடுக்குவதில் கைதேர்ந்தவர். ஆனால் அவர் குறிப்பிட்ட இயக்கத்துக்கு மட்டுமே வார்க்கப்பட்டுவிட்ட எழுத்தாளர்.
சுதாங்கன் இந்த வரிசையில் நன்றாக வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் வேறுபக்கம் போய்விட்டார்.
அந்தக்காலத்தில் டி.ஆர்.ஆர் என்றொரு எழுத்தாளர் இருந்தார். மக்கள் குரலில் எழுதுவார்.மகா போரடிக்கும் விதத்தில் அரசியல் கட்டுரைகள் எழுதியவர் அவராகத்தான் இருக்கும்.
சோலை, ஜென்ராம் போன்றவர்களின் ஆழ்ந்த விவரங்களுக்கும் இயல்பான மொழிநடைக்கும் இணையானதல்ல ஞாநியின் எழுத்துக்கள். ஒரு மொழிபெயர்ப்பைப் படிப்பது போன்ற சோர்வைத் தோற்றுவிக்கும் எழுத்து நடை இவருடையது. இருந்தும் ஏன் பிரபலாமானார் என்றால் அவருக்கு இடம் தந்த பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.
குமுதத்திலும் விகடனிலும் பிரபலமானவர்கள் எழுதினால்தான் பரபரப்படையும் என்பதில்லை. கோனநாயக்கன்பட்டி குரங்குசாமி என்று யாரோ ஒருவர் எழுதினாலும் உடனடியாகப் பிரபலமாகிவிடும். வெகுஜன ஊடகத்தன்மை அத்தகையது. ரஜினி படத்துப் பாடல்கள் பிரபலாக 'செய்யுள்பேரரசுவோ', 'பெரும்பேரரசு'வோ பாடல்கள் எழுதவேண்டுமென்பதில்லை. 'டிக்கி டுக்கி டோக்கா டிம்மா டும்மா மோக்கா' என்று யாரோ ஒரு புறம்போக்கு கிறுக்கி அதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துத் தள்ளிவிட்டால் மறுநாளே இதற்கு இணையான குத்துப்பாட்டு இதுவரை வந்ததில்லை என்று பதினெட்டு உலகமும் கொண்டாடத் துவங்கிவிடும். ஊடக வளர்ச்சி அப்படி.
அப்படியொரு ஊடக வளர்ச்சியின் அபத்தமான தாக்கம்தான் இந்த அங்கலாய்ப்புகள் என்று தோன்றுகிறது.
ஞாநிக்கு ஏதோ மிகப்பெரிய வாசகர்வட்டம் இருப்பதாகவும் இவர் தலையைச் சுற்றி அறிவு வட்டம் ஒளிவீசிக் கொண்டிருப்பதாகவும் இவரும் இவரது நண்பர்கள் வட்டமும் நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தாம் எழுத்துலகின் ஏகபோக சக்கரவர்த்தி என்பது போலவும் இவர் நினைப்பதுபோல்தான் பிரதமரிலிருந்து மாநில முதல்வர்வரை நடந்து கொள்ள வேண்டும் என்பதுபோலவும் நினைத்துக்கொண்டு எழுதும் மனமயக்கம் இவருக்கு எப்போதுமே இருக்கிறது.
எல்லாவற்றையும் விமர்சிப்பதும் குறைகாண்பதும் வேறு; எல்லாவற்றிலும் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று சட்டாம்பிள்ளைத்தனமாகக் கட்டளை இடுவதென்பது வேறு. இரண்டாவதைத்தான் இவர் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தார். அதில் சின்னப்பிள்ளைகள் கணக்காய் சொப்பு விளையாட்டு வேறு.' இந்த வாரம் இவருக்குக் குட்டு; இந்த வாரம் இவருக்குப் பூச்செண்டு' என்று வாராவாரம் இவர் உளறிக்கொட்டிக்கொண்டிருந்தது கிறுக்குத்தனங்களின் உச்சம். "இவர் இதனை இப்படிச் செய்தாரென்றால் இவருக்கு அடுத்த வாரம் பூச்செண்டு கொடுக்கத் தயங்கமாட்டேன்" என்ற பூச்சாண்டி அறிவிப்புக்கள் வேறு;
சமூகத் தளத்தின் எல்லாக் கூடாரங்களிலும் எப்படியாவது நுழைந்துவிடுவது...... அவர்கள் விரும்புகிறமாதிரியே கொஞ்ச நாட்களுக்குப் பேசிச் செயல்படுவது, அல்லது எழுதிக்கொண்டிருப்பது....சில நாட்களுக்குள்ளாகவே இவரது சுயரூபம் கலையத்துவங்கியதும் அந்த முகாமிலிருந்து இவராகவே வெளியேறிவிடுவது, அல்லது அவர்கள் வெளியேற்றுவது.........அப்படி வெளியே வந்ததும் இவர் தன்னுடைய தனித்தன்மைப் பற்றிப் பேசுவது - என்ற இந்தக் கதை அவ்வப்போது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சங்கிலியின் ஒரு தொடர்தான் இப்போதும் நடந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
விகடனில் எதையெதையோ எழுதிக்கொண்டிருந்து அப்படியும் தாம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போனவுடன் , பதிவுலகில் சிலர் செய்வது மாதிரி (பதிவுலக நண்பர்களுக்காவது ஒரு நேர்மை இருக்கிறது.18+ என்று போட்டுவிட்டுத்தான் அவர்கள் ஜோக்குகளும் பிறவும் எழுதுவார்கள்)இவர் விகடன் பக்கங்களில் கொக்கோக புத்தகங்களை விடவும் கேவலமாக எழுத ஆரம்பிக்க , விகடனின் பாரம்பரிய வாசகர்களின் அதிர்ச்சி அலைகள் விகடன் இவரது எழுத்துக்களுக்குக் கடிவாளங்கள் போடுவதற்குக் காரணமாக அமைந்தது.
பரபரப்பாய் இருக்கிற எதையும் அல்லது பரபரப்பாய் இருக்கிற யாரையும் பயன்படுத்திக்கொள்வது வெகுஜனப் பத்திரிகைகளின் இயல்பு. ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பதை விடவும் எதிர்த்து எழுதுகிற எழுத்துக்களுக்கு மவுசு அதிகம். ஆனால், இங்கேயும் சூட்சுமமான ஒரு இறுதிக்கோடு உண்டு. ஆட்சியாளர்களைச் சீண்டலாம். அவர்களின் கவனம் கவர்ந்து அவர்களிடமிருந்து ரியாக்ஷன் வருவதுமாதிரி சீண்டலாம். மறுப்பு அறிக்கை வருகிற அளவுக்குச் சீண்டலாம். அத்துடன் நிற்க வேண்டும்.
அவர்களுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் வாங்கிக் கட்டிக்கொள்ளக் கூடாது. இந்த சூட்சுமம் தெரிந்து இயங்குகிற நிறைய விமர்சகர்கள் இருக்கிறார்கள். இந்த சூட்சுமங்களெல்லாம் ஞாநிக்குத் தெரியாது என்பதில்லை. அவரது கணக்குகளும் சூட்சுமங்களும் வேறு; இந்தக் கூடாரத்தில் இரை கிடைக்காவிட்டால் அடுத்த கூடாரம் என்பதுதான் அவர் கணக்கு.
இவர் கிடந்து என்னத்தையோ எழுதி வைக்க, ஆட்சியாளர்களின் கோபம் பத்திரிகைகளின் மீது திரும்ப நிர்வாகம் இவரைக் கழற்றி விட்டுவிடும். எப்போதும் இதுதான் நடக்கும் . இப்போதும் இதுதான் நடந்திருக்கிறது.
சுயமரியாதைக் கருத்துக்களுடன் பெரியார் கூடாரத்துக்குள் ஊடுருவி , அங்கிருந்து கழகக் கூடாரத்திற்கு வந்து , பிறகு அங்கிருந்தும் வெளியேறி கழக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, தமிழ் இன எதிர்ப்பு, ஈழ எதிர்ப்பு, பிரபாகரன் எதிர்ப்பு என்பதாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஞாநி.இதற்கு 'அச்சமறியா சமூக நீதிக் காவலர்' என்ற முகமூடி வேறு.
தமிழில் ஞானி என்ற பெயரில் கோவையில் அறிஞர் ஞானி இருக்கிறார். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் தமிழ்ச்சமூகத்துக்கானவை. அவரது ஆழ்ந்த அறிவும் அழகான சொல்லோட்டமும் படித்துக்கொண்டே இருக்கலாம், கேட்டுக்கொண்டே இருக்கலாம் வகையைச் சார்ந்தவை.
ஆனால் ஞாநியின் சிந்தனையும் கண்ணோட்டமும் பொதுவான விஷயங்களில்கூட பல சமயங்களில் நாகரிக நெறிகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.
ஒரு சமயம் ஒரு பிரபல எழுத்தாளரைக் குமுதம் இணையதளத்துக்காக பேட்டி காண்கிறார் ஞாநி. அந்த எழுத்தாளர் இரு மணம் புரிந்தவர். “நீங்கள் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இரண்டாவது திருமணம் புரிந்துகொண்டது போலவே இப்போது உங்கள் இரண்டு மனைவியரில் ஒருவர் யாராவது உங்களை வைத்துக்கொண்டே இன்னொரு கணவரைத் தேடிக்கொள்ள முன்வந்தால் அதற்கு ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டு அவரை அதிர வைக்கிறார்.அந்த எழுத்தாளரும் எவ்வளவோ நாகரிகமாக பதில் சொல்லி அடுத்த கேள்விக்குள் நுழையப் பார்த்தால் இவர் பிடிவாதமாக அந்தக்கேள்வியையே மடக்கி மடக்கிக் கேட்டு நாகரிக எல்லைகளைக் கடக்கப்பார்க்கிறார். ஆண் பெண் சமத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமாம் இது. தவறு செய்த ஆண் இனத்தின் முகத்தில் அறைந்ததுபோல் கேள்வி கேட்டு நிலைகுலைய வைத்தார் ஞாநி என்று நேயர்கள் புரிந்துகொள்ள வேண்டுமாம்.
நியாயம் பேசுகிறேன் என்று கிளம்பிவிட்டு கலைஞரை எதிர்க்காவிட்டால் எப்படி? ஞாநியும் எதிர்ப்பார்.எம்.ஜி.ஆரின் ஆதரவாளராகவோ, ஜெயலலிதாவின் ஆதரவாளராகவோ இருந்துகொண்டு கலைஞரை விமர்சிப்பவர்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நடுநிலை முகமூடி மாட்டிக்கொண்டு கலைஞரை எதிர்க்கிறேன் என்று கிளம்புகிறவர்கள் தங்களின் சட்டைக்கு உள்ளே நாற்றமெடுத்த அழுக்கு பனியன் போட்டிருப்பதை மறைக்கமுடியாது. ஞாநியும் அழுக்குபனியன்காரர்தான்.
இவர்கள் எல்லாருமே ஒரேமாதிரியான தந்திரவாதங்களையே எப்போதும் முன்வைப்பார்கள். கருணாநிதி தவறு செய்தாரா- கன்னாபின்னாவென்று குடும்ப உறுப்பினர்களிலிருந்து எல்லாரையும் இழுத்துப்போட்டுத் தாக்குவது-
அதே போன்ற தவறை எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ செய்திருக்கிறார்களா அதனை அப்படியே போட்டுக்கவிழ்த்து 'இந்தக் கழகங்களே இப்படித்தான்' என்று ஆரம்பித்து மறுபடியும் கருணாநிதியையே இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டியது..இந்த மாய்மாலத் தந்திரத்தை இன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த அழுக்குபனியன்காரர்கள் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.
இந்த விஷயத்தில் நெஞ்சுறுதியும் நேர்மைத்திறமும் கொண்டவராக தமிழருவி மணியன் ஒருவரைத்தான் சொல்ல வேண்டும். அவர் மட்டும்தான் கருணாநிதி செய்த தவறுகளைப் பெயர் சொல்லி விமர்சிப்பார். அதே போல ஜெயலலிதாவின் தவறுகளையும் பெயர் சொல்லியே விமர்சிப்பார்.
கலைஞரை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ஞாநி அவருடைய முதிர்ந்த வயதுக்குரிய மரியாதையைக்கூட தராமல் அவரது உடல் நலிவைக் குறிப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருந்தது ஆபாசத்தின் அநாரிக அடையாளம் என்றே சொல்லவேண்டும்.தமிழக முதல்வரை எப்படியெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்யும் ஞாநியை முதல்வர் எந்த அளவு பாதித்திருக்கிறார் என்பதற்கான நிகழ்வு ஒன்றை நண்பர் சொன்னது வேடிக்கையாக இருந்தது.
ஒருசமயம் ஞாநியின் மனைவியை நண்பரிடம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய மகளின் பெயரைச்சொல்லி 'எனது மகளின் தாயார் இவர்" என்று அறிமுகப்படுத்தினாராம். " என்னுடைய மகள் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்" என்பது கலைஞரின் புகழ்பெற்ற சர்க்காரியா பதில்களில் ஒன்று .
ஞாநி தமது கடையைக் கல்கியில் திறக்கப்போகிறாராம். கல்கிக்கு என்ன தொந்தரவு கொண்டுவருகிறார் பார்ப்போம்.

14 comments :

Unknown said...

நன்றாக எழுதியிருக்கின்றீன்கள் !!!
ஞானியின் இயற்பெயர் தெரிந்தால் (?) பதில் தரவும்...

Unknown said...

அவரது பெயர் சங்கரன் என்று நினைக்கிறேன்.

'பசி'பரமசிவம் said...

நடு நிலை விமர்சகர் போலவும்,சமுதாய நலனில் பெரி
தும் அக்கறை கொண்டவர் போலவும் நாடகமாடும்
ஞாநியின் சுய ரூபத்தைத் தெளிவான நடையில் படம்
பிடித்துள்ளார் அமுதவன்.பாராட்டுகள்.

பரமசிவம்,
kadavulinkadavul.blogspot.com

Mathiseelan said...

நீங்கள் குறிப்பிடும் அந்த எழுத்தாளர் பாலகுமாரன். அவரை ஞாநி பேட்டியெடுத்த அந்தக் காணொளியை நானும் பார்த்தேன். அவளுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே என்பதுமாதிரி ஒரு பதிலைச் சொல்லும்வரை விடாமல் ஒரே புள்ளியில் நின்றுகொண்டு பாலகுமாரனை ஞாநி துளைத்தெடுத்தது மிகவும் அருவெறுப்பூட்டுவதாகவே இருந்தது. அதனை மிகச்சரியாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்

கல்வெட்டு said...

//ஒருசமயம் ஞாநியின் மனைவியை நண்பரிடம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய மகளின் பெயரைச்சொல்லி 'எனது மகளின் தாயார் இவர்" என்று அறிமுகப்படுத்தினாராம். " என்னுடைய மகள் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்" என்பது கலைஞரின் புகழ்பெற்ற சர்க்காரியா பதில்களில் ஒன்று .//

ம்ம்... அவர் விவகாரத்துப் பெற்றவர் என்று நினைக்கிறேன் (தவறு என்றால் ஞாநி உட்பட அனைவரும் என்னை மன்னியுங்கள்). அப்படி இருந்து விவகாரத்திற்குப் பின்னர்... முன்னாள் மனைவி அல்லது மகளின் தாயார் என்று இப்படியாகத்தான் அறிமுகம் செய்ய முடியும். இதில் தவறு இல்லை. விவகாரத்திற்கு முன் என்றால் , ஒரு வேளை கலைஞரைக் கிண்டல் செய்ய இப்படிச் சொன்னாரா? அப்படியாயின் அது தவறு.

இதையும் கலைஞரின் பதிலையும் நீங்கள் ஒப்பிடுவது சரியல்ல.
அது போலவே பலகுமாரனின் விசயமும். பெண்களின் நலன், பெண்ணியம் அருள் , பக்தி, பட்டை , தாடி, விசிறிசாமி என்று இருப்பவரிடம் நேரடியாகக் கேள்வி கேட்பதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன். எனது கருத்து மட்டுமே.


***

மற்றபடி ஞாநி உட்பட மாலன் அல்லது எந்த அரசியல் விமர்சகர்களிடமும் எனக்கு ஈர்ப்போ ஆதரவோ இல்லை. வாரம் வாரம் எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கொண்டு அரசியல் விமர்சனம் செய்ய இயலாது.

சோ ... ம்ம் அவர் அரசியல் பேசினால் பார்க்கலாம்.

***

guna said...

நன்றாக எழுதியிருக்கின்றீன்கள் !!!

Thobey srinivasan said...

I hold no brief for Gnani or his writings. இவர் விகடன் பக்கங்களில் கொக்கோக புத்தகங்களை விடவும் கேவலமாக எழுத ஆரம்பிக்க , விகடனின் பாரம்பரிய வாசகர்களின் அதிர்ச்சி அலைகள் விகடன் இவரது எழுத்துக்களுக்குக் கடிவாளங்கள் போடுவதற்குக் காரணமாக அமைந்தது.- I think there is no truth in this accusation. He has been very responsible as a writer without any temptation to titillate. Amudhavan's comments smack of rancor.

உண்மைத்தமிழன் said...

[[[ஒருசமயம் ஞாநியின் மனைவியை நண்பரிடம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய மகளின் பெயரைச் சொல்லி 'எனது மகளின் தாயார் இவர்" என்று அறிமுகப்படுத்தினாராம்.]]]

ஞாநிக்கு மகள் இல்லை.. மகன்தான்..!

மனைவியாக இல்லை.. முன்னாள் மனைவியாக ஆன பின்புதான்.. "எனது முன்னாள் மனைவி இவர்" என்றுதான் எங்களிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

அவர் அப்படி அறிமுகப்படுத்தியதில் உங்களுக்கென்ன பாதிப்பு..?

Amudhavan said...

நன்றி ஆகாயமனிதன்.
திரு பரமசிவம் அவர்களுக்கு நன்றி.
நன்றி மதிசீலன்.
ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் கல்வெட்டு.
நன்றி குணா.
ஞாநி மீதான உங்கள் மதிப்பீட்டிற்கு நான் குறுக்கே வருவதாக இல்லை சீனிவாசன்.
வருகைக்கு நன்றி உண்மைத்தமிழன்

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

நீங்கள் திமுக உறுப்பினராக இந்தப் பதிவை எழுதியது போல் இருக்கிறது...

ஞாநியின் பல கேள்விகள் நியாயமானவை;எனக்கு நினைவில் இருக்கும் வரை அவர் ஜெயலலிதாவையும் இப்படித்தான் விமர்சித்தார்..

Unknown said...

திரு அமுதவன்,உங்கள் கருத்துகளோடு 100%ஒத்து போகிறேன்.இவர் விகடன் குழுமம் வெளியிட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் நின்று போன ;ஜூனியர் போஸ்ட்; என்ற பத்திரிகையில் மார்க்ஸிய வேக்ஷமும் போட்டிருக்கிறார்.இவரை பற்றிய பலதரப்பட்ட என் மன வினாக்களுக்கு விடை தந்துவிட்டது உங்கள் பதிவு.

felix kamalraj, said...

ஞாநியை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மைத்தன்மை இல்லை. சோலை சின்னக்குத்தூசி போல முரசொலியில் எழுதாமல் நக்கீரன், ரிப்போர்ட்டரில் எழுதினாலும் அவரது கருத்துக்கள் பக்கா திமுக சார்புடையவை என்பது உங்களுக்கு தெரியாதா? பிறகு, எழுத்துநடை எப்படியிருந்தால்தான் என்ன? ஜென்ராமின் எழுத்துநடை கொஞ்சம் கூட ஆர்வம் ஏற்படுத்தாத ரகம். ஞாநி இவர்கள் இருவரையும் விட எவ்வளவோ மேல். பத்திரிகையாளனுக்கே உரிய மாற்று சிந்தனை அவரிடம் எப்போதுமே உண்டு. மும்பை குண்டுவெடிப்பில் ஆங்கில சேனல்கள் தாஜ் ஹோட்டலையே காட்டி அதன் உரிமையாளருக்காகவே அழுததை, ரயில் நிலையத்தில் இறந்த ஏராளமான எளியவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கோணத்தில் சாடித்தள்ளியவர். இந்த கோணத்தில் தமிழகத்தின் வேறெந்த விமர்சகர்களாவது சிந்தித்தார்களா? மேலும், என்னதான் மூத்த விமர்சகர்களாக இருந்தாலும் தங்கள் கடைசி காலத்தில் அவர்கள் ஏதேனும் ஒரு கழகத்தின் நிழலில் இளைப்பாற சென்று விடுகின்றனர். ஆனால், ஞாநி இன்றுவரை எரிதழலாகவே இருக்கிறார். எந்த ஒரு விடயத்திலும் அவரது கருத்து பொதுவாக ஏற்கக்கூடியதாகவும் தெள்ளியதாகவுமே இருக்கும். ஓ பக்கங்களின் புகழை நீங்கள் குறைத்தே எழுதி உள்ளீர்கள். என்னை பொறுத்தவரை தமிழ் விமர்சகர்களில் ஓரளவுக்கு நல்ல விமர்சகராக ஞானியே இருக்கிறார். அவரது எழுத்து நடையும் தீ கனல்வதாகவே இதுவரை இருக்கிறது. தயவு செய்து அவரை பலவீனப்படுத்த வேண்டாம்...

felix kamalraj, said...

ஞாநியை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மைத்தன்மை இல்லை. சோலை...., சின்னக்குத்தூசி போல முரசொலியில் எழுதாமல் நக்கீரன், ரிப்போர்ட்டரில் எழுதினாலும் அவரது கருத்துக்கள் பக்கா திமுக சார்புடையவை என்பது உங்களுக்கு தெரியாதா? பிறகு, எழுத்துநடை எப்படியிருந்தால்தான் என்ன? ஜென்ராமின் எழுத்துநடை கொஞ்சம் கூட ஆர்வம் ஏற்படுத்தாத ரகம். ஞாநி இவர்கள் இருவரையும் விட எவ்வளவோ மேல். பத்திரிகையாளனுக்கே உரிய மாற்று சிந்தனை அவரிடம் எப்போதுமே உண்டு. மும்பை குண்டுவெடிப்பில் ஆங்கில சேனல்கள் தாஜ் ஹோட்டலையே காட்டி அதன் உரிமையாளருக்காகவே அழுததை, ரயில் நிலையத்தில் இறந்த ஏராளமான எளியவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கோணத்தில் சாடித்தள்ளியவர். இந்த கோணத்தில் தமிழகத்தின் வேறெந்த விமர்சகர்களாவது சிந்தித்தார்களா? மேலும், என்னதான் மூத்த விமர்சகர்களாக இருந்தாலும் தங்கள் கடைசி காலத்தில் அவர்கள் ஏதேனும் ஒரு கழகத்தின் நிழலில் இளைப்பாற சென்று விடுகின்றனர். ஆனால், ஞாநி இன்றுவரை எரிதழலாகவே இருக்கிறார். எந்த ஒரு விடயத்திலும் அவரது கருத்து பொதுவாக ஏற்கக்கூடியதாகவும் தெள்ளியதாகவுமே இருக்கும். ஓ பக்கங்களின் புகழை நீங்கள் குறைத்தே எழுதி உள்ளீர்கள். என்னை பொறுத்தவரை தமிழ் விமர்சகர்களில் ஓரளவுக்கு நல்ல விமர்சகராக ஞானியே இருக்கிறார். அவரது எழுத்து நடையும் தீ கனல்வதாகவே இதுவரை இருக்கிறது. தயவு செய்து அவரை பலவீனப்படுத்த வேண்டாம்...

Amudhavan said...

ஃபெலிக்ஸ் கமல்ராஜ், உங்களுடைய அத்தனைக் கேள்விகளுக்கான விடைகளும் என்னுடைய பதிவிலேயே இருக்கின்றன. வேண்டுமானால் உங்கள் கருத்துரையை ஒருமுறைப் படித்துவிட்டு என்னுடைய பதிவை மறுபடியும் படித்துப்பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி மும்பை குண்டுவெடிப்பின்போதான தாஜ் ஹோட்டல் விவகாரத்தில் ஞாநியின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருந்தன. நன்றி.

Post a Comment