Tuesday, December 7, 2010

ரெய்கியைத் தெரியுமா ?


ஆன்மிகத்தின் பெயரால் அகில உலகிலும் புகழ்பெற்றிருந்த ஒரு சாமியார் பெண் விவகாரத்தால் மிகப்பெரிய அளவில் பெயர் கெட்டுப்போனதையும் அவரை நம்பியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளானதையும் சமீபத்திய நிகழ்வுகளாகப் பார்த்தோம். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் மிகக் குறுகிய காலத்தில் அவருக்கு ஏற்பட்ட புகழும் செல்வாக்கும் இத்தனை லட்சம் பக்தர்களும், இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல இடங்களிலும் ஏற்படுத்தப்பட்ட ஆசிரமங்களும் குவிந்த கோடிக்கணக்கான பணமும் அதனையும் தாண்டி பக்தர்கள் என்ற பெயரில் அவரிடம் வந்து விழுந்த அப்பாவிப் பொதுமக்களும்தாம்................

இத்தனை பக்தர்கள் கூட்டம் இவ்வளவு குறுகிய கால அளவில் மற்ற எந்தவொரு ஆன்மிக குருவுக்கும் ஏற்பட்டதில்லையே இவருக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது என்பதற்கு அந்த பக்தர்களில் பலரது பதிலே விடையாகக் கிடைக்கிறது. “நீங்கள் எப்படி இவருக்கு பக்தரானீர்கள்?” என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட எல்லாருமே ஒரே மாதிரியான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “உடம்புக்கு வியாதி வந்ததுன்னு அவரிடம் போனோம். கையை வைச்சார். உடனே குணமானது. எங்களுக்கு ஒரே ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. எப்படி ஒரு மனிதரால் இப்படிச்செய்ய முடியும். இவர் நிச்சயம் கடவுளின் அவதாரமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தோம். தொடர்ந்து அவரிடம் போக ஆரம்பித்து அவருடைய பக்தர்களாகவே ஆகிவிட்டோம்.”

ஆக.....முக்கால்வாசிப்பேரின் வாக்குமூலம் இதுவாகவே இருக்கிறது. உடம்புக்குப் பிரச்சினை என்று போயிருக்கிறார்கள். பிரச்சினைக்குரிய இடத்தில் அவர் கையை வைத்திருக்கிறார். குணம் கிடைத்திருக்கிறது. உடனடியாக அவர் கடவுளின் அவதாரம் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்.தலைவலி என்று ஒருவர் வருகிறார். அவர் தலைமீது மற்றவர் சிறிதுநேரம் கையை வைக்கிறார். உடனடியாகத் தலைவலி குணமாகிறது. தலைவலியுடன் வந்தவருக்கு கையை வைத்தவர் மீது ஒரு ஆச்சரியமும் அதிசயமும் உண்டாகுமா இல்லையா?

சம்பந்தப்பட்ட அந்த சாமியாரின் விவகாரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதே இந்த நோய் தீர்க்கும் அதிசய சிகிச்சை முறைதான். இதெல்லாம் உண்மையா இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா...? இல்லை ஏதாவது செப்படி வித்தையா என்பது நியாயமான கேள்வி.
அந்தச் சாமியாரை நாம் மறந்துவிடுவோம். கையை வைப்பதன் மூலம் நோய்கள் குணமாகுமா அப்படியொரு சிகிச்சை முறை இருக்கிறதா என்பது நாம் விவாதிக்கப்போகிற விஷயம்.

உலகம் தோன்றியது முதல் இன்றுவரை மனிதன் பல்வேறு விதங்களில் போராடிக்கொண்டே இருக்கிறான். சுகமான, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக அவனது போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது அவ்வளவு சிரமமான காரியமும் இல்லை. பார்க்கப்போனால் அது மிகவும் எளிதான செயல்தான். சில நல்ல பழக்கவழக்கங்கள், சில ஒழுங்கு நியதிகள், சுகாதாரம், நல்வழிச்சிந்தனைகள், சரியான உணவுமுறை, கட்டுக்கோப்பான நெறிகள் என்று கடைப்பிடித்தாலே போதும். ஆரோக்கியமான வாழ்வு கைவசமாகிவிடும். இது பொதுவானது.
அதே நேரத்தில் சுற்றுச்சூழல்களாலும், இயற்கைப் பாதிப்புகளாலும், பரம்பரைத் தொடர்களாலும் ஆரோக்கியம் கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவற்றால் ஏற்படக்கூடிய ஆரோக்கியக் குறைவின் சதவீதம் மிகவும் குறைவுதான்.
நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய கையில்தான் உள்ளது. நம்முடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைமுறைதான ஆரோக்கியக் குறைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஆரோக்கியக்குறைவு வரக்கூடாது என்பதற்காகவும் , அப்படி வந்துவிட்டால் அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காகவும் பல்வேறு மருத்துவமுறைகளையும் .பல்வேறு சிகிச்சை முறைகளையும் மனித இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது.
வீட்டுவைத்தியம், நாட்டுவைத்தியம், பாட்டி வைத்தியம் முதல் இன்றைய நவீன ‘அலோபதி’ என்று சொல்லக்கூடிய ஆங்கில மருத்துவமும் , பரம்பரை வைத்தியம் என்று சொல்லப்படும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி. ஹோமியோபதி போன்றவையும் மனித குலத்துக்கு நல்லதே செய்திருக்கின்றன; செய்தும் வருகின்றன.....இந்த மருத்துவ முறைகள் எல்லாம் மருந்து, மாத்திரைகளின் உதவியோடு செயல்படக்கூடிய மருத்துவ முறைகள்.
மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே நோய்களை குணமாக்கும் எத்தனையோ சிகிச்சை முறைகள் அன்றுமுதல் இன்றுவரை உலகின் பல திசைகளிலும் மிக வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ரெய்கி, பிராண சிகிச்சை(pranic healing) அக்குபங்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, மலர் மருத்துவம், உளவியல் சிகிச்சை, ஹிப்னாடிசம், பிரமிட் சிகிச்சை, கிரிஸ்டல் சிகிச்சை, சுஜோக் என்றழைக்கப்படும் தானிய சிகிச்சை(seed therapy) போன்ற மருந்து மாத்திரைகள் இல்லாமல் செய்யப்படும் மருத்துவ முறைகளும் மனித குலத்துக்கு மிகமிக நல்லதை மட்டுமே செய்துவருகின்றன.
இவற்றில் எந்த மருத்துவமுறை சிறந்தது என்பதும், எது மிக உறுதியாக நல்ல முறையில் பயனளிக்கும் என்பதும் எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் நம்பிக்கைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி மாறுபடலாம்......ஆகவே குறிப்பிட்ட இந்த மருத்துவமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்பது எந்த வகையிலும் பலன் தராது.

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமான வாழ்க்கையைத் ‘தேடி அலையும்’ மேலை நாட்டினர் அறிவியல் முன்னேற்றத்தால் பல நவீன மருத்துவக்கருவிகளையும் மருந்து மாத்திரைகளையும் கொண்டுள்ள அலோபதி மருத்துவ முறையை விட்டு ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் யோகாசனம், தியானம், இயற்கை மருத்துவம் போன்றவற்றை நாடி நம்நாட்டுக்குப் படை எடுத்து வருகின்றனர்.
மேலைநாடுகளில் மட்டுமின்றி கீழை நாடுகளில் கூட குறிப்பிட்ட மருத்துவமுறை என்றில்லாமல் Holistic treatment என்ற பெயரில் செய்யப்படும் கூட்டுமருத்துவ சிகிச்சைகளும் இன்று பிரபலமடைந்து வருகின்றன.

அலோபதி மருந்துகள் அந்தந்த நேரத்துக்குப் பலன் தருகின்றன என்பதுடன் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்ற வாதத்தை அலோபதி மருத்துவம் இன்றுவரை மறுத்ததே இல்லை. அதே சமயம் , நாளுக்குநாள் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வளர்ந்துவரும் அலோபதி மருத்துவத்தின் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அவசரக்கால சிகிச்சை தேவைப்படும் போதும், திடீர் இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களின்போதும் , மகப்பேறு சமயங்களிலும், மாரடைப்பு போன்ற அசாதாரண நிலைகளிலும், விபத்துக்களின் போதும் மேலும் சில நவீன ரக அறுவை சிகிச்சைகளின் போதும் அலோபதி மருத்துவம் பிரமிப்பைத் தருவதை மறுப்பதற்கில்லை.

ஆனால் எல்லா மருத்துவ முறைகளுக்கும் ஒரு limitation (எல்லைக்கோடு) இருப்பதுபோலவே அலோபதி மருத்துவத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. பல நோய்களையும் பிரச்சினைகளையும் குணமாக்குவது போலவே பல நோய்களையும் பிரச்சினைகளையும் குணமாக்க முடியாமலும் இருக்கிறது. அலோபதி மருத்துவத்தில் குணமாகாமல் இருக்கும் பல நோய்கள் ஹோமியோபதியில் குணமாகிவிடுகின்றன. பல நோய்கள் சித்தமருத்துவத்தில் குணமாகிவிடுகின்றன. பல நோய்கள் ஆயுர்வேதத்தில் குணமாகிவிடுகின்றன. இன்னமும் பல நோய்கள் அக்குபங்சர், அல்லது அக்குபிரஷர் சிகிச்சையில் குணமாகிவிடுகின்றன. இதுபோலவே ரெய்கியிலும் பல நோய்கள் மிக நல்ல முறையில் பரிபூரணமாகவே குணமாகிவிடுகின்றன.

ரெய்கியில் குணமாவது இருக்கட்டும் ரெய்கி என்பது என்ன.. ரெய்கியால் குணப்படுத்த முடியுமா என்பது கேள்வி.

பிரபஞ்சம் எங்கும் COSMIC ENERGY நிறைந்திருக்கிறது. இதனைத் தமிழில் உயிர்சக்தி என்றழைக்கலாம். அல்லது ஜீவ சக்தி என்றும் அழைக்கலாம். அந்தக் காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து அதனை அடுத்தவர் உடலில் செலுத்துவதே ரெய்கி கலை.
நமது உடல் மொத்தம் ஏழு சக்கரங்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்கிறது. தியானம் பயின்றவர்களுக்கு இந்தத் தகவல் தெரியும். சக்கரங்கள் என்றால் என்னவோ ஏதோவென்றெல்லாம் கலவரப்பட வேண்டாம். சக்தி மையங்களைத்தான் சக்கரம் என்றழைக்கிறார்கள். இந்தச் சக்கரங்கள் சரிவர இயங்குவதற்கு அவற்றில் சரியான அளவு உயிர்சக்தி இருக்கவேண்டும். பல்பு எரிய இத்தனை வால்ட் மின்சாரம் தேவை; மோட்டார் ஓட இத்தனை வால்ட் மின்சாரம் தேவை என்பதுபோல.....! அந்த சக்தி மையங்களில் பல்வேறு காரணங்களால் சக்தி குறைபாடு ஏற்படும்பொழுது அந்த மையத்துக்கு உட்பட்ட அங்கங்களில் பாதிப்பு நேர்கிறது என்பதுதான் ரெய்கியின் தத்துவம்.

காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து குறிப்பிட்ட அந்தச் சக்கரத்தை வலுவூட்டுவதன்மூலம் இழந்த சக்தியை அந்தச் சக்கரம் பெற்றுவிடுகிறது. சக்தி சமன் செய்யப்பட்டவுடன் பிரச்சினை தீர்ந்து உடல் பழைய நிலைமைக்கு வந்துவிடுகிறது. அதாவது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் நோய் தீர்ந்துவிடுகிறது.

இது எப்படி சாத்தியம்? பிரபஞ்சம் எங்கும் இருக்கும் ஜீவசக்தியை எப்படிக் கிரகிப்பது.... அதனை எப்படி அடுத்தவர் உடலில் செலுத்துவது....? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதுதானே? எல்லாவற்றிற்கும் வழிமுறைகள் இருப்பதுபோலவே இதற்கும் வழிமுறைகள் உள்ளன. தீட்சையும் சில வகை தியானங்களும் இதற்கான பாதையை அமைத்துத் தருகின்றன. தியானத்தைத் தொடர்ந்து சில பயிற்சிகளை மேற்கொண்டால் ரெய்கி வழங்குவதற்கான ஆற்றலைப் பெறமுடியும். அப்படி ஆற்றல் வரப்பெற்றவர்கள் பிறருக்கு ரெய்கி வழங்க முடியும்.

ரெய்கி வியாதிகளை குணப்படுத்துவது என்பதெல்லாம் உடான்ஸ், மக்களை ஏமாற்றுவது என்பதுபோல் சிலர் சொல்லலாம். ரெய்கி வியாதியை குணப்படுத்தும் என்பதற்கு விஞ்ஞானபூர்வ ஆதாரம் ஏதேனும் உண்டா என்றெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்படலாம். மருத்துவ விஞ்ஞானிகள் முன்வந்தால் விஞ்ஞான பூர்வ ஆதாரங்களை நிச்சயம் கொண்டுவர முடியும். எதுஎதையோ படம்பிடித்து நிரூபிக்க விஞ்ஞானபூர்வ கருவிகள் வந்துவிட்டன. ரெய்கி செய்யப்படும்பொழுது மனித உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? ஆனால் விஞ்ஞான மருத்துவம் ஏதேதோ போலிக்காரணங்களைச் சொல்லி மறுத்துவிடுகிறது. தியானம் செய்யும்பொழுது மனித உடலில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்கின்றனவோ அதைப்போன்று அபரிமிதமான மாறுதல்கள் ரெய்கி செய்யும்போதும் நிகழ்கின்றன.

என்னென்னவோ சொல்லி மக்களை மடையர்களாக்கி அவர்களை ஏமாற்றி ஒரு மௌடீக நிலைக்கு அவர்களைக்கொண்டு வந்துவிடுவதால் ஏதோ ஒரு உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தோன்றுகிறது. அது ரெய்கியால் ஏற்பட்டது என்று சொல்லமுடியாது என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது உண்மையல்ல; ஏனெனில் ஒன்றுமே பேசாமல் எதையும் உணர்த்தாமல் ஒரு சின்னக்குழந்தைக்கு வந்திருக்கும் உடல் பிரச்னைகளையும் ரெய்கியால் சரிசெய்துவிட முடியும். இன்னமும் சொல்லப்போனால் பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கு ரெய்கி செய்யும்பொழுது அது மிக விரைவாகச் செயல்பட்டு விரைவான குணம் கிடைக்கிறது.

எல்லாம் சரிதான், பிரபஞ்ச சக்தி அந்த சக்தி இந்த சக்தி என்றெல்லாம் சொல்லுவதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்கிறீர்களா? மனிதர்களின் சாகசங்களை கின்னஸ் வழியாகப்பார்க்கிறோம். சராசரி மனிதனால் செய்யமுடியாத, ஏன் யோசித்தே பார்க்க முடியாத பல்வேறு சாகசங்களைப் பல்வேறு பயிற்சிகளின் மூலம் பெற்ற அவர்கள் நம்மால் நினைத்தே பார்த்திராத அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள். அது வெறும் உடற்பயிற்சியாலும் சில வகை உத்திகளாலும் சாத்தியமாகிறது. உடலால் செய்யப்பட்ட பயிற்சிகளுக்கே அத்தனை அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்னும்போது மனதால் எண்ணத்தால் ஞானத்தால் செய்யப்படும் பயிற்சிகள் எத்தனை வலுவானதாக இருக்கமுடியும் என்பதையும் அதன் வலிமை எத்தகையதாய் இருக்கும் என்பதையும் கற்பனை செய்து பார்த்தீர்கள் என்றால் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப முடிகிறது; சாட்டிலைட் மூலம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது. நியூசிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சை இங்கிருந்தே தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது; அமெரிக்காவில் இருக்கும் உறவினரிடம் இங்கிருந்தே அளவளாவ முடிகிறது. செல்போன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிமும் நினைத்த நேரத்தில் பேச முடிகிறது. ஒரு இடத்தில் இருந்தபடியே நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தைக்கூட இலக்கு வைத்து குண்டெறிந்து தாக்க முடிகிறது. எங்கெங்கும் வியாபித்திருக்கும் காஸ்மிக் எனர்ஜியைக் கிரகிக்க முடியாதா என்ன.....! அப்படிக் கிரகித்துத்தான் வியாதிகளை குணமாக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘பராலிஸிஸ் ஸ்ட்ரோக்’ எனப்படும் பாரிச வாதத்தினால் தாக்கப்பட்டவர்கள் உடனடியாக அலோபதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதம் அளவுக்கு அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அல்லது எண்பதாயிரம் அளவுக்கு மருத்துவச்செலவு செய்து ‘சரியாகிவிட்டதாக’ டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் நோயாளிகளைப் பார்த்திருப்போம். வாய் இன்னமும் கோணியபடி, ஒரு கை மார்போடு மடங்கிக்கொண்டிருக்க , விரல்களெல்லாம் இறுக்கமாக மடிந்து கிடக்க, காலும் இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்க.. எழ முடியாமலும் நடக்க முடியாமலும் பேச முடியாமலும் இன்னமும் முக்கால்வாசி நோயாளியாகவே அவர் ‘சிகிச்சை முடிந்து’ திரும்பியிருப்பதை நாம் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும்......ஆக, பக்க வாதத்தால் தாக்கப்பட்ட நோயாளியின் ‘உயிரைக்காக்கின்ற’ ஒரு விஷயத்தை மட்டுமே அலோபதி செய்து அனுப்பிவைத்திருப்பதை உணரலாம். அதைத் தொடர்ந்து எத்தனைத்தான் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் எவ்வளவு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டாலும் அந்த நிலையைத்தாண்டி பெரிதான முன்னேற்றம் எதுவும் கிடைத்துவிடுவதில்லை.

ஆனால் இதே நோயாளிக்கு ஆயுர்வேத மருந்தும், தொடர்ச்சியான மசாஜூம் நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துவிடும். அக்குபங்சரில் அல்லது அக்குபிரஷரில் சில புள்ளிகளைத் தூண்டிவிடுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர் மிக வேகமாக குணமடைவதைப்பார்க்க முடியும். இவை எல்லாவற்றையும் விட ரெய்கி சிகிச்சையின் மூலம் மிகமிக வேகமான முன்னேற்றத்தை இந்த நோயாளிகள் அடைந்ததை என்னால் வலியுறுத்திச்சொல்ல முடியும்.
ஆறு மாதங்கள் அல்லது ஆறு வருடங்கள் வரைக்கும் கையையும் காலையும் அசைக்க முடியாமல் மடங்கிய நிலையிலேயே வைத்திருந்தவர்களுக்கு ஒரு வார ரெய்கி சிகிச்சையிலேயே மிக நல்ல பலன்கள் கிடைத்திருகின்றன. ’இழுத்துப்பிடித்திருந்த அந்தப் பிடிப்பு’ ஒரு வாரத்திலேயே ‘விட்டுவிடும்’ அதிசயம் ரெய்கியில் சாத்தியமாகிறது.

மன உளைச்சல், மனப்பிறழ்வு , மன இறுக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ரெய்கி சிகிச்சையினால் பிரமாதமான பலன்களைக் காண்கின்றன. மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளில் ரெய்கிக்கு ஒரு பிராதானமான இடம் உண்டு. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று இதனை ஒரு மாற்றுமருத்துவக் கலை என்ற அளவில் சொல்லாமல் இதற்கு ஆன்மிக வண்ணம் பூசி அதன் மூலம் தங்களைக் கடவுள் அவதாரம் என்பதுபோல் சிலர் பிழைப்பு நடத்துவதால் இதன் மீது நம்பிக்கை வராமற்போவது ஒரு வகை; எதுவாக இருந்தாலும் விஞ்ஞான ஆதாரம் இல்லாமல் நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள் இன்னொரு வகை. எல்லாவற்றுக்குமே விஞ்ஞான ஆதாரம் கொடுத்துக்கொண்டிருக்கத் தேவை இல்லை. இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது. கேட்டு உடல் உருகிப்போனேன் என்று நான் சொல்லும்போது அதற்கு விஞ்ஞான ஆதாரம் கொடுக்கத் தேவை இல்லை. எங்க அம்மா என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்று சொல்வதற்கு எதற்காக விஞ்ஞான ஆதாரம்?
விஞ்ஞான மருத்துவம் அலோபதியைத் தவிர வேறு எந்த மருத்துவ முறையையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறதா இல்லையா என்பது பற்றிய கவலை வேண்டாம். உடல் பிரச்சினை தீர்ந்ததா இல்லையா என்பதை மட்டும் பார்த்தாலேயே போதும்.

ரெய்கியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை. எந்த வயதினரும் செய்து கொள்ளலாம். என்னுடைய அனுபவத்திலேயே இஸ்ரோவில் பணியாற்றும் தொழில் நுட்ப நிபுணர்கள், அலோபதி மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மென்பொருள் நிபுணர்கள் என்று பல துறையினருக்கும் ரெய்கி சிகிச்சை அளித்துள்ளேன். தொண்ணூற்றைந்து சதம் முழு அளவில் குணம் கிடைத்திருக்கிறது என்பதுவே ரெய்கியின் நம்பகத்தன்மையைச் சொல்லப்போதுமானதாக இருக்கிறது.

மாற்று மருத்துவ முறைகளில் ரெய்கியை Mother treatment என்றழைக்கிறார்கள். பெயருக்கேற்றது போலவே கனிவும் அரவணைப்பும் கொண்ட சிகிச்சை முறை இது.

23 comments :

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

இந்தளவு பெரிய பதிவா... ஆனால் விசயத்திற்கு குறைலே இல்லிங்க...

Amudhavan said...

என்ன ம.தி.சுதா உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது.வருகைக்கு நன்றி. பதிவுலகின் மிக வேகமான பதிவர் என்ற பட்டத்தை தாராளமாக உங்களுக்குத் தரலாம்.தொடர்ந்து சுழலுங்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

உபயோகமான பதிவு..

Amudhavan said...

ஒரு முழு நூலில் சொல்லவேண்டிய விஷயங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கித்தான் இங்கே சொல்லியுள்ளேன் சுதா. சில விவரங்களைச் சொல்வதற்கு நீளம் தேவைப்படுகிறது.

thendral said...

ஒரு நல்ல பதிவு..

Amudhavan said...

நன்றி தென்றல், பயன்பட்டால் இன்னமும் மகிழ்ச்சி அடைவேன்.

Matangi Mawley said...
This comment has been removed by the author.
Matangi Mawley said...

ரெய்கி பற்றி என்ன விதமான கேள்விகள் மனதினில் எழுகின்றனவோ, அத்தனைக் கேள்விகளையும் தாங்களே கேட்டுக் கொண்டு பதிலும் மிகவும் அழகாக எழுதிவிட்டீர்கள்.
எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்.
அப்பா, அம்மா- இருவருமே ரெய்கி பயின்றவர்கள். ரெய்கியின் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள், நானும் ரெய்கி பயின்று பயன் பெற வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள். நான் கேட்டு ரசிக்கும் ரஹ்மான் பாடல்களை அப்பாவையும் கேட்க வைத்து என் ரசனைக்கு அவரை பரிச்சயம் செய்ய வேண்டும் என்ற என் முயற்சிகள் போலத் தான் அவர்களது இந்த ஆசையும்.
universal life force energy , cosmic energy என்றெல்லாம் ரெய்கி சம்பந்த பட்ட விஷயங்களை பற்றி படிக்கையில், Matrix சினிமா போலத் தான் தோன்றுகிறது. ரெய்கி practice இல் ஈடுபட்டிருப்பவர்களின் 'அனுபவங்களை' கேட்கும் பொது- அவர்கள் சொல்வதையெல்லாம் graphics காட்சிகளாகத் தான் பார்க்கத் தோன்றுகிறது. ரெய்கி என்பதன் ஆற்றலை 'magic ' என்று பார்க்கத் தோன்றுகிறதே தவிர- 'practically possible ' என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. exam நாட்களில் எனக்கு ரெய்கி கொடுப்பார்கள். pass ஆக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மன பக்குவத்தில் இருக்கும் தருணங்களில் எதையுமே ஒப்புக்கொள்ளத் தான் தோன்றும்! ஒரு சில சமயங்களில்- 'இந்த color dress போட்டிருக்கிறாயா' என்று என் அப்பா- phone இல் கேட்பார். அத்தனை தூரத்தில் இருக்கும் அவருக்கு எப்படி இது சரியாகத் தெரிகிறது, என்று எனக்கும் ஆச்சர்யமாகத் தான் இருக்கும்!
ஆனாலும்- நீங்கள் சொல்லுவது போல, விஞானம் முன் வந்து ரெய்கி யின் தாக்கங்களையும், அது ஏற்படுத்தும் மாறுதல்களையும், பார்க்க முடியுமே ஆனால்- முழுமையாக மனம் ஒப்புக் கொள்ளுமோ என்னவோ!
paula haron போன்றவர்களின் ஆங்கிலப் படைப்புகளிலிருந்து ஒரு சில குறிப்புகள் படித்துக் காட்டியிருக்கிறார், அப்பா. எழுதிய விஷயம் விட- எழுதிய விதத்தை மிகவும் ரசித்திருக்கிறேன். அந்த விஷயங்களை- இவ்வளவு அழகாக தமிழில் எழுதியிருப்பதைப் படிப்பது, இதுவே முதல் முறை!

Amudhavan said...

உங்கள் கருத்துக்கள் உண்மைதான் மாதங்கி. சில விஷயங்களைச் சொல்லில் அல்லது எழுத்தில் புரியவைத்துவிட முடியாது. நீங்கள் மிகவும் ரசிக்கும் ரஹ்மானின் பாடல்கள் போன்றதுதான். அனுவித்தால்தான் சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.ஆரம்பத்தில் ரெய்கியைக் கேள்விப்பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கும் நம்பத்தான் முடியவில்லை. என்னுடைய மகளுக்கு ரெய்கி சிகிச்சைக் கொடுக்கப்பட்டு அவள் சட்டென்று குணமாகி எழுந்து ஓட ஆரம்பித்ததும்தான் எனக்கே நம்பிக்கை வந்தது.அதன்பிறகு ரெய்கி கற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தபிற்பாடுதான் அதன் மகத்துவம் புரிந்தது.எத்தனையோ வியாதிகள் என்ன சிகிச்சை மேற்கொண்டபோதும் போகாதவை எல்லாம் ரெய்கியின்மூலம் போவதைப்பார்த்து நான் மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களும் ஆச்சரியமடைந்துதான் போகிறார்கள். ஆனாலும் நான் யார் மீதும் ரெய்கியையோ ரெய்கியின் கருத்துக்களையோ திணிப்பதில்லை. விருப்பமுள்ளவர்களும் நம்பிக்கையுள்ளவர்களும் பயன்பெறலாம். விருப்பமில்லாதவர்களும் நம்பிக்கையில்லாதவர்களும் ஆயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கலாம். இதுதான் என்கருத்து. பல்வேறு விஷயங்களிலும் ஈடுபாடு கொண்டு செயல்படும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

சபா. பாண்டியன் said...

Hi Sir

I am pandian from pudukkottai i want your phone no my mail id saba_pandian@yahoo.com

நிலாமகள் said...

வணக்கம் ஐயா. தங்கள் 'அற்புத ரெய்கி' என்ற கிழக்குப் பதிப்பக (நலம்) வெளியீட்டு நூலை நூலகத்திலிருந்து எடுத்து வாசித்ததிலிருந்தே தங்களைத் தொடர்பு கொள்ள அவாவுடனிருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன் திருச்சியிலிருந்து வந்த ரெய்கி கிராண்ட் மாஸ்டரிடம் நெய்வேலியில் எனது கணவர் ரெய்கி பயின்றார். தியானமும் பாதுகாப்பு வட்டமும் இன்னும் கைக்கொள்வதுண்டு. நானும் முறையாக ரெய்கி பயில தங்கள் ஆலோசனைகளைக் கூறவும் . ரெய்கி தேவதையின் துணை எங்களை சிறப்பாக வழி நடத்துகிறது.

Amudhavan said...

வாருங்கள் நிலாமகள்.தங்களின் வருகைக்கு நன்றி. தங்கள் ஆர்வத்திற்கு எனது பாராட்டுக்கள். நல்ல முறையான ரெய்கி மாஸ்டரிடம் நீங்களும் ரெய்கி தீட்சை எடுத்துப் பயனடையலாம்.நான் பெங்களூரில்தான் ரெய்கி வகுப்பு எடுக்கிறேன். அதுவும் அடிக்கடி எடுப்பதில்லை. தங்கள் தொலைபேசி எண் தெரியப்படுத்தினீர்களென்றால் நான் வகுப்பு எடுக்கும் சமயம் தெரிவிக்கிறேன். விருப்பம் இருந்தால் வந்து கலந்துகொள்ளலாம்.

ஜோதிஜி said...

எனக்காக ஒரு உதவி

இது குறித்து இன்னும் சில பதிவுகள் எழுத வேண்டும். உங்களிடம் வந்தவர்கள் பெற்ற அனுபவங்கள் அது சார்ந்த நிகழ்வுகளையும் கூச்சப்படாமல் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றேன்.

மாதங்கி சொன்னதற்குப் பிறகு நான் எழுத ஒன்றுமே இல்லை. இன்று தான் இப்படி ஒரு வார்த்தை, சிகிச்சை பற்றி தெரிவதால் எனக்கு என்ன எழுதுவதன்றே தெரியவில்லை. எப்போதும் போல என் தேடல் நீங்கள் அடுத்து எழுதப் போகும் பதிவில் இருந்து தொடங்கும் என்றே நினைக்கின்றேன்.

செய்வீர்களா?

Raja said...

ஐயா,
நான் பெங்களூரில் வசிக்கிறேன். எனது குழந்தை (1 வருடம் 2 மாதங்கள்) எதுவுமே சாப்பிடாமல் அனைத்தயும் துப்பி விடுகிறாள் அல்லது வாயில் எதையுமே வைக்க விடுவதில்லை. இதனால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.தங்களின் ஆலோசனை இவ்விஷயத்தில் கிடைத்தல் மிக உதவியாக இருக்கும்.உங்களை நேரில் சந்திக்கவும் அவாளை உள்ளேன்.
நன்றி
ராஜா

Raja said...
This comment has been removed by the author.
Amudhavan said...

ஜோதிஜி, சகலத்தையும் தேடிப்பார்த்துப் படிப்பவர் என்ற நீங்களே இன்னமும் ரெய்கி பற்றித் தெரியாமல் இருக்கிறீர்கள் என்பது ஆச்சரியம்தான். உலகில் இம்மாதிரி ஆச்சரியங்களுக்கும் குறைவில்லை. அதனால்தான் உலகம் இன்னமும் சுவாரஸ்யமுள்ளதாக இருக்கிறது.

தவிர, நான் ரெய்கி பற்றி 'அற்புதரெய்கி' என்றொரு நூல் எழுதியிருக்கிறேன். கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டார்கள். இப்போது ஸ்டாக் தீர்ந்துபோயிருக்கும். நண்பர்களிடமோ நூலகங்களிலோ கிடைக்கக்கூடும். என்னிட்ம் ஒரேயொரு பிரதி மட்டுமே இருப்பதனால் அதனைத்தங்களுக்கு அனுப்பிவைப்பதற்கும் வழியில்லை. ஏனெனில் அந்த நூலை நான் தற்சமயம் rewrite செய்துகொண்டிருக்கிறேன். இன்னமும் சில புதிய கட்டுரைகளையும் அதில் சேர்க்க எண்ணம். அதனால் தாங்கள் கேட்டபடியான பதிவுகளைத் தற்சமயம் இணையத்தில் எழுதுவதற்கில்லை.

ரெய்கி பற்றிய புதிய நூல் முடியும் தறுவாயிலிருக்கிறது. விரைவிலேயே வெளிவந்துவிடும். தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் செய்திகள் அதில் இருக்கும் என்று நம்புகிறேன்.
தங்களின் தீவிரமான தேடலுக்கு எனது பாராட்டுக்கள்.

Amudhavan said...

\\Raja said...

ஐயா,
நான் பெங்களூரில் வசிக்கிறேன். எனது குழந்தை (1 வருடம் 2 மாதங்கள்) எதுவுமே சாப்பிடாமல் அனைத்தயும் துப்பி விடுகிறாள் அல்லது வாயில் எதையுமே வைக்க விடுவதில்லை. இதனால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.தங்களின் ஆலோசனை இவ்விஷயத்தில் கிடைத்தல் மிக உதவியாக இருக்கும்.உங்களை நேரில் சந்திக்கவும் அவாளை உள்ளேன்.
நன்றி
ராஜா\\

ராஜா உங்களுடைய தொலைபேசி எண்ணை இந்தப் பகுதியிலேயே தெரியப்படுத்துங்கள். நான் தொடர்பு கொள்ளுகிறேன். நேரில் சந்திக்கலாம். தங்கள் குழந்தையின் பிரச்சினைகளுக்கு ரெய்கியின் மூலம் தீர்வு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

ஜோதிஜி said...

பல சமயம் உங்கள் எழுத்து நடையில் தெரியும் ஒரு ஒழுங்கு குறித்து ரொம்பவே ஆச்சரியப்பட்டதுண்டு. அது போன்று எனக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். எழுத்துப்பிழைகள் கூட பார்த்தது இல்லை. ஆச்சரியப்பட்டுள்ளேன்.

வாழ்க்கையில் நான் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலை தான் எனக்கு கற்றுத் தருகின்றது. நான் படித்தது கல்லூரி வரைக்கும் தான் மிக மிக அதிகம். தற்போது கடந்த நாலைந்து ஆண்டுகளாகத்தான் எழுதுவதால் படிக்கின்றேன். இல்லாவிட்டால் இங்குள்ள சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை.

குறிப்பாக இந்த வருடம் தான் என் எல்லையை கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றேன். அதுவும் கூடிய சீக்கிரம் விடைபெற்று ஒரு மாறுதல் உருவாகி விடும் என்றே நினைக்கின்றேன்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\குறிப்பாக இந்த வருடம் தான் என் எல்லையை கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றேன். அதுவும் கூடிய சீக்கிரம் விடைபெற்று ஒரு மாறுதல் உருவாகி விடும் என்றே நினைக்கின்றேன்.\\

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!

Anonymous said...

Dear amudhavan, i am also interested in our traditional herbal treatments and alternative therapy systems. We loosed Mani things because of the artificial chemicals, it is our duty to restore our forget en treasure of arts like varma , sidha , and reiky etc, and give it to our next generation. kindly mention your phone or email id, i want to know more things about this reiky systems. thanks regard JMR

Amudhavan said...

வாருங்கள் ஜேஎம்ஆர், நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணையும் பெயரையும் இந்தப் பகுதியிலேயே குறிப்பிட்டு எழுதுங்கள். அவை வெளியிடப்படமாட்டாது. நான் உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

Uthaya said...

Would like to talk to you regarding reiki treatment for paralysis. My mobile no is 9944477400 & mail id is uthaya7@gmail.com.

---
Uthayachandran

Post a Comment