தமிழுக்கு நிறைய செய்து வருவதாக கலைஞர் சொல்லிவருகிறார். இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸின் போக்கிற்குத் தம்மை ஒடுக்கிக் கொண்டுவிட்டார் என்பதைத் தவிர தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் தொண்டுகள் எந்த ஆட்சியாளரும் செய்யாதவை என்பதை மறுப்பதற்கில்லை. வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, பெங்களூரில் வள்ளுவர் சிலை திறப்பிற்கான முயற்சி, தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம், செம்மொழி உலகத்தமிழ் மாநாடு, தஞ்சைக் கோவிலின் ஆயிரமாவது விழா, அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று என்றென்றைக்கும் நிலைத்து நிற்கின்ற அணிகலன்கள் தமிழன்னைக்குக் கலைஞரால் அணிவிக்கப்பட்டுள்ளன
ஆனால் –
இது ஒரு பெரிய ‘ஆனால்’-
இவை அனைத்துமே – நூலகம் ஒன்றைத் தவிர – தமிழனது பழம்பெருமைகளைப் பேசும் முயற்சிகளுக்கான அடையாளங்கள்தாமே தவிர இந்த நூற்றாண்டின் - இனிவரப்போகும் நூற்றாண்டுகளுக்கான தமிழை அடையாளப்படுத்தும் , பிரதிநிதித்துவப் படுத்தும் சான்றுகளோ அடையாளங்களோ அல்ல .
கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
தமிழுக்குச் செந்தமிழ்த் தகுதியை அதிகாரபூர்வமாகப் பெறுவதற்கு நூறு ஆண்டுகள் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கன்னடமும் தெலுங்கும் ஒரேயொரு ‘சாதாரணக் கடிதம்’ மூலம் செம்மொழித் தகுதியைப் பெற்றுவிட்ட காட்சியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். காரணம், இந்த நாட்டின் அரசியல்.
அரசியல்தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு மாதிரியான அரசியல்.......தமிழகத்தைப் பொறுத்தவரை வேறு மாதிரியான அரசியல். இந்த அரசியல் மொழி விவகாரங்களிலும் ஊடுருவி கோலோச்சுவதுதான் இங்கே காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
இலக்கியங்கள் எல்லாமே இங்கு இரண்டுவிதமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று – திராவிட இலக்கியம், மற்றொன்று திராவிட வட்டத்துக்குள் வராத இலக்கியம்.
தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி ; அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் , தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் , தமிழ்ச்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சரி , இன்னொரு பெரிய தவறையும் செய்துவருகின்றன.
தமிழை வளர்ப்பதற்கு இவர்கள் எல்லாரும் எடுத்துக்கொண்டிருக்கும் – அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கும் தளம் எது தெரியுமா?
சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக்கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான். இது பற்றிய ஆய்வுகள் , இது பற்றிய நூல்கள், இது பற்றிய கருத்தரங்குகள் , இது பற்றிய கலந்தாய்வுகள் , இது பற்றிய இலக்கியக் கூட்டங்கள் – இவைதாம். திரும்பத் திரும்ப இவை மட்டுமேதாம். இவற்றைக்கூட நமக்குள் பழம்பெருமைப் பேசும் நடவடிக்கைகளைத்தாம் செய்கிறார்களே தவிர இவற்றை மற்ற மொழிகளுக்கோ , உலகுக்கோ , குறைந்த பட்சம் ஆங்கிலம் மூலம் அனைத்துத் தரப்பினர்க்கோ கொண்டு சென்று சேர்க்கும் எவ்விதமான முயற்சிகளும் செய்யப்படுவதாகத் தகவல் இல்லை.
இவை ஒருபுறமிருக்க ,தொல்காப்பியத்தில்ஆரம்பித்துபுறநானூறு,அகநானூறு,சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பதிற்றுப்பத்து, பன்னிருதிருமுறை, நளவெண்பா, முத்தொள்ளாயிரம் ,என்று வருவார்கள். இன்னும் கொஞ்சம் ‘தம்’ பிடித்து பாரதியாரைத் தொடுவார்கள். அங்கேயே ஆணி அடித்தாற்போல் நின்றுவிடுவார்கள் – இலக்கிய வாதிகளில் இவர்கள் ஒருவகை.
இன்னொருவகையினரோ தமிழரின் பெருமை, சங்க இலக்கியம், திருக்குறள் என்று ஆரம்பிப்பார்கள். கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியத்தையும் கண்டுகொள்ளாமல் மிக கவனமாக பாரதியாரையும் தவிர்த்துவிட்டு பாரதிதாசனை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். தமிழுணர்வு பாடிய பாரதிதாசனின் ஒரு பத்துப்பாடல்களை மனப்பாடமாகச் சொல்லிவிட்டு பாரதிதாசனிலிருந்து ஒரேயொரு அங்குலம்கூடக் கீழே இறங்கிவர மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் என்பது பாரதிதாசனுடன் நின்றுவிடுகிறது. பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு இலக்கியம் இல்லை; இல்லவே இல்லை!
இந்த இரண்டாவது கண்ணோட்டம்தான் திராவிட அரசுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் இலக்கிய நிறுவனங்களுக்கும் இருந்துவருகிறது. இருபது இருபத்தோறாம் நூற்றாண்டைப் பற்றியோ தற்காலத்தமிழுலகம் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது-
தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று இவர்களே முடிவு செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.
தமிழ் படித்த மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பாடப்புத்தகங்களை விட்டு வெளியே வந்துதான் தமிழைத் தேடுகிறார்கள். இல்லாவிட்டால், இத்தனை வார, மாத, நாளிதழ்களும் இலட்சக்கணக்கான நூல்களும் தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்ன? இத்தனை நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும் கட்டுரைகளும் தமிழில் இருக்குமா என்ன...?
தமிழை – தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய முயற்சிகளை விட்டுவிட்டு வெறும் பழைய இலக்கியங்களை மட்டுமா எல்லாக் காலத்துக்கும் பரிமாறிக்கொண்டிருப்பது? “சங்க இலக்கியத்தில் என்ன இல்லை?” என்பார்கள்.
உலகம் புதிது; ஒவ்வொரு நாளும் புதிது ; தினசரி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பூவுலகம். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்‘ என்று மனிதர்களைச் சொல்வதும் அதற்காகத்தான். எல்லாமே புதியதாய் வந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழில் மட்டும் வெறும் பழையதுதான் என்று சொல்லிக்கொண்டிருப்பது எந்தளவு புத்திசாலித்தனம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
கன்னடத்திற்காக நடைபெறும் மாநாடுகளிலும் சரி; சாதாரணக் கருத்தரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் சரி, வரிசையாகப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பேரும் படைப்பாளிகள்...! அதுவும் ‘இன்றைய’ படைப்பாளிகள். இன்றைய படைப்பாளிகளையும் முந்தைய படைப்பாளிகளையும் சேர்த்துத்தான் எல்லா மொழிகளும் கொண்டாகின்றன – தமிழைத் தவிர!
மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில், வங்காளத்தில் இந்த நிலைமைதான் இருக்கிறது. தமிழில் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் தரப்படும் மரியாதையில் கால்தூசு அளவுக்குக்கூட ‘இன்றைய’ படைப்பாளிகளுக்குத் தரப்படுவதில்லை.
1)ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்க வேண்டியுள்ளது.
2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்க வேண்டியுள்ளது.
3)ஒரு இலக்கியவாதி புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்க வேண்டியுள்ளது.
தமிழை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தக் காலக் கட்டத்தில் தோன்றிய படைப்பாளிகள்தாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருபதாம் நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு தமிழைப் பள்ளி கல்லூரிகளைத் தாண்டி வீட்டுக்குள்ளே கொண்டுசென்று வாழவைத்தவர்கள் யார்?
கல்கியும் அகிலனும் புதுமைப்பித்தனும் அல்லவா?
செம்மொழி மாநாட்டில் அந்திகீரனார்,பரணர், பெருந்தலைச்சாத்தனார் பெயரில் அரங்கங்கள் அமைத்தபோது, கல்கி, அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயர்களில் அரங்கங்கள் வேண்டாமா ?
செம்மொழி மாநாட்டில் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இடம் என்ன? சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்-73, மொழியியல்- 51, இலக்கணம்- 46, ஒப்பிலக்கியம்-39, ஆவணப்படம்-1, என்ற வரிசையில் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிப் படிக்கப்பட்ட கட்டுரைகள் வெறும் மூன்று . மூன்று மட்டுமே!..விளங்குமா படைப்பிலக்கியம்..?
அண்ணா பற்றி நான்கைந்து கட்டுரைகள்; கலைஞரின் படைப்பிலக்கியம் பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்; கனிமொழி படைப்புக்கள் பற்றி மூன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்; அகிலன் கல்கி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கண்ணதாசன் பற்றியெல்லாம் மருந்துக்குக்கூட ஒரேயொரு கட்டுரைக்கூட இல்லையே...!
இவர்களையெல்லாம் படைப்பிலக்கியவாதிகளாகவே ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது தற்காலப் படைப்பிலக்கியம் பற்றிய சிந்தனேயே அரசுக்கு இல்லையா?
வேறொரு கோணமும் இருக்கிறது. வங்காள மொழிக்கு கலையின் அடையாளமாய் அவர்கள் உலகிற்குக் காட்டுவது சத்யஜித்ரேயை ! கன்னடத்தில் கலையின் அடையாளமாகக்கூட இல்லை, கர்நாடகத்தின் அடையாளமாகவே அவர்கள் காட்டுவது நடிகர் ராஜ்குமாரை ! ஆனால் உலகப்பெரு நடிகர்களுள் ஒருவராக நாம் கொண்டாடவேண்டிய நடிகர் திலகத்தை நாம் நமது கலையின் அடையாளமாகவேனும் சொல்கிறோமா? நேற்று மரித்த நடிகர் விஷ்ணுவர்த்தனுக்கெல்லாம் சிலையும் நினைவு மண்டபமும் அமைத்து உத்தரவிடுகிறது கர்நாடக அரசு. இங்கே என்ன நடக்கிறது? சிவாஜியை ‘ஆருயிர் நண்பர்’ என்று கூட்டங்களில் உருகுவதுடன் நிறுத்திக்கொள்கிறார் கலைஞர்.
‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ என்று புறப்பட்டுத் தென்றலாய் கோடிக்கணக்கான தமிழர்களின் காதுகளுக்குள் நுழைந்து உணர்வாய் உதிரமாய்ப் படிந்து போனவர் கவியரசர் கண்ணதாசன். கண்ணதாசனையும் ‘ஆருயிர் நண்பர்’ லிஸ்டில் சேர்த்துவிட்டு கண்ணதாசனுக்குத் தரவேண்டிய எந்தவித அங்கீகாரத்தையும் கொடுக்காமல்தானே இருக்கிறார் கலைஞர்...!
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆங்கிலமும் விஞ்ஞானமும் படித்த இளைய தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா, அந்த வித்தக எழுத்தாளருக்கு அரசு தந்திருக்கும் அங்கீகாரம் என்ன?
தமிழ் என்றால் தொல்காப்பியத்தில் தொடங்கி திருக்குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்துக்கு வந்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்கள் நிகழ்த்துவதும், இலக்கிய மலர்கள் தயாரிப்பதுவும், கருத்தரங்குகள், கலந்தாய்வுகள் நிகழ்த்துவதும் இந்தக் கோணத்திலேயே இலக்கியச் சேவையை முடித்துக்கொள்வதுவும் முறையான தற்கால இலக்கியத்தைப் பற்றிய புரிதலே இன்றி நடந்துகொள்வதுவும்தான் அரசின் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பணியாகவும் இருந்து வருகிறது.
தற்கால இலக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் தற்கால இலக்கியப் படைப்பாளர்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும் இந்த நூற்றாண்டு படைப்பாளர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் விடுவதும் ஒரு மொழியைப் பாதுகாப்பதாகவோ வளர்ப்பதாகவோ ஆகாது.
இத்தகு மோசமான நிலைமைக்கு சில இலக்கிய நாட்டாண்மைகள் சொல்லும் பதில் என்னவென்றால் மற்ற மொழியினருக்கு பழமையான இலக்கியங்கள் கிடையாது. அதனால் அவர்கள் தற்கால படைப்புக்களைத் தூக்கிவைத்துக்கொண்டு பெருமையடைகிறார்கள். ஆனால் நமக்கு சங்க கால இலக்கியங்கள் இருக்கின்றன. அதனால் நாம் பழம்பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். இது ஒரு கவைக்குதவாத சொத்தையான வாதம். உலகம் இந்த வாதங்களை எல்லாம் ஏற்பதில்லை. உங்கள் மொழியில் இந்த வருடம் என்ன படைப்பிலக்கியம் வந்தது..சென்ற வருடம் எது வந்தது என்றுதான் பார்த்து பரிசு தந்து கொண்டாடுகிறதேயல்லாமல் உங்களிடம் நானூறு வருடங்களுக்கு முந்தைய கவிதை இருக்கிறதா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாவல் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு பரிசு தந்து கொண்டாடுவதில்லை. பழைய இலக்கியங்கள் நம்மிடம் உள்ள பூர்விகச் செல்வங்கள். அவற்றை நாம் கொண்டாடுவோம். அதே சமயம் புதிய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் உயர்த்திப் பிடிக்கவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
தங்களின் மொழிகளில் வரும் தற்கால இலக்கியங்களை வெவ்வேறு மொழிகளுக்குக் கொண்டுசென்று அதன் மூலம் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளையெல்லாம் ஐரிஷ், ஸ்பானிஷ் போன்ற சின்னச்சின்ன மொழிகளெல்லாம் பெற்று அந்த மொழிகளின் படைப்பாக்கங்கள் உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பயணித்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் “எங்கள் மொழியில் எல்லாம் இருக்கிறது. அதனால் எங்கள் இலக்கியம் பாரதிதாசனோடு நின்றுவிடுகிறது. இதற்குமேல் நாங்கள் பயணிப்பதாக இல்லை” என்று அறிவித்துவிடலாமா?
பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் ஆயிரக்கணக்கான சிலைகளும்,மணிமண்டபங்களும், நூலகங்களும், நகர்களும், வரவேற்பு வளையங்களும் உள்ளன. இனிமேலாவது இலக்கிய சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகளுக்கும் கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்ற படைப்பிலக்கியவாதிகளின் பெயர்களைச் சூட்டுங்கள். படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரித்து கௌரவியுங்கள். கர்நாடகத்தில் இதைத்தான் செய்கிறார்கள். தற்கால படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரிக்கிறார்கள். வெறுமனே அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதில்லை. கர்நாடகத்திற்கும் பெங்களூருக்கும் வந்திருப்பவர்கள் நிஜலிங்கப்பா, ஹெக்டே என்ற பெயர்களையும் சிலைகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மாபெரும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும் பண்பு இங்கே இருக்கிறது.
அதனால்தான் கன்னடமொழிக்கு ஏழு ஞானபீடம், வங்காள மொழிக்கு ஐந்து ஞானபீடம், மற்ற மொழிகளுக்கு நான்கு ஞானபீடம் தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு என்ற நிலைமை நீடித்து வருகிறது.
சூப்பர் அரசியல் வாதிகளையும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் வெறும் நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனநிலையிலிருந்து என்றைக்கு நாம் மாறப்போகிறோம் ?
7 comments :
//சூப்பர் அரசியல் வாதிகளையும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் வெறும் நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனநிலையிலிருந்து என்றைக்கு நாம் மாறப்போகிறோம் ? // - Nice
நன்றி கார்த்திக், இந்த மனோபாவம் வரவேண்டுமென்பதுதான் நம்முடைய எண்ணம்.
தமிழும் தமிழனும் தமிழால் வாழ வேண்டும்...
அருமை..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4
ரொம்ப லேட்டாகப் படித்தாலும் மிகச் சிறந்த கட்டுரை.முடிவு இல்லாத முயற்சி தேவைப்படுகிறது. அருமை.
ஒன்றரை ஆண்டுகள் கழித்தும் இது சிந்தனை தூண்டும் கட்டுரை... இதை மிகவும் ரசித்தேன்... நன்றி...
நன்றி மாயன், சில மாற்றங்கள் ஏற்படுமானால் இன்னமும் மகிழலாம்.
புத்தகங்களிலெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்குமுன்பு எழுதப்பட்டவைகளைத்தாமே படிக்கிறோம். அவை எப்போதைக்கும் பொருந்துமாறு இருப்பதுதானே சிறப்பு. அந்தவகையைச் சேர்ந்தது என்பதாக என்னுடைய பதிவையும் சொல்லியிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி.
Post a Comment