ஒரு நல்ல வாசகனிடம் “இன்றைய பிரபல தமிழ் எழுத்தாளர்கள் யார் யார்?” என்ற கேள்வியை முன்வைத்தோமானால் உடனடியாக அவன் தயங்காமல் சொல்லும் பெயர்கள் மூன்று. 1) சாரு நிவேதிதா 2) ஜெயமோகன் 3) எஸ்.ராமகிருஷ்ணன்.
“சரி சாருவின் எந்தெந்த நூல்கள் பிடிக்கும்? ஜெயமோகனின் படைப்புக்களில் பிடித்தது எது? எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்களில் சிறப்பானது எது?” என்ற கேள்வியைக் கேட்டோமானால் அவனிடம் பதில் இருக்காது.
“இவர்களுடையதை எல்லாம் நான் படித்திருக்கிறேன் என்றா சொன்னேன்? தமிழில் பிரபலமான எழுத்தாளர்கள் யார்? என்று கேட்டீர்கள். அந்தக் கேள்விக்கான பதிலைத்தானே சொன்னேன்” என்பார்கள்.
சாரு நிவேதிதாவையோ ஜெயமோகனையோ எஸ்.ராமகிருஷ்ணனையோ படிக்காமலேயே,அவர்களுடைய படைப்புக்கள் பற்றிய பரிச்சயம் இல்லாமலேயே அவர்களைத் தமிழின் முன்னணி எழுத்தாளர்களாக ஒரு வாசகன் சொல்லும் நிலைமை இருப்பதை இந்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகத்தான் சொல்லவேண்டும்.
சுஜாதாவுக்கும் முன்பிருந்த காலகட்டத்தில் இருந்ததைப்போல அகிலனைப் படித்தவர்கள், கல்கியைப்படித்தவர்கள், நாபாவைப்படித்தவர்கள், சாண்டில்யனைப் படித்தவர்கள்,ஜெயகாந்தனைப் படித்தவர்கள், ராகி ரங்கராஜனைப் படித்தவர்கள்,சாவியைப் படித்தவர்கள், மணியனைப் படித்தவர்கள் எல்லாம் மாதக்கணக்கிலும் வாரக்கணக்கிலும் படிப்பதோடு நில்லாமல் பத்திரிகைகளில் வருகின்ற அவர்களுடைய தொடர்களைத் தனியே பைண்ட் செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மீண்டும் மீண்டும் படிப்பவர்களாகவும் தனியே அவர்களுடைய நூல்கள் வரும்போது அதனை வாங்கிச் சேகரித்து வைப்பவர்களாகவும் இருந்தனர்.
கதைப் படிப்பது என்பது ஒரு ரசனை சார்ந்த படிப்பனுபவமாக மட்டுமின்றி சில கதைகளின் நாயகர்களைத் தமது வாழ்க்கையின் வழிகாட்டிகளாகவும் பலர் கொண்டிருந்தனர். கல்கியின் கதை மாந்தர்களின் பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியிருப்பவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர். அகிலனுடைய கதை மாந்தர்களின் பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளவர்கள் எத்தனையோ பேர். நாபாவின் குறிஞ்சிமலர் நாவலின் கதைமாந்தர்களான அரவிந்தன், பூரணி பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியவர்கள் கணக்கிலடங்காதவர்கள். இந்த வரிசையில் டாக்டர் மு.வரதராசனுக்கும் கணிசமான வாசகர்கள் உண்டு.
சுஜாதாவுக்கு வாசகர்களாக இருந்தவர்கள்கூட அவருடைய அத்தனை எழுத்துக்களையும் தேடித்தேடி வாசித்தவர்களாகவே இருந்தனர். ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் மாறிப்போய் விட்டது. இப்போதைய பிரபல பத்திரிகைகள் எதுவும் தொடர்கதைகளையோ சிறுகதைகளையோ முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிப்பது இல்லை. அந்தக் காலத்தில் குமுதத்தில் ஐந்து சிறுகதைகளும் ஐந்து தொடர்கதைகளும் வரும். அதில் நிச்சயமாக ஒன்று சரித்திரத் தொடர்கதை. விகடனும் மூன்று நான்கு தொடர்கதைகளையும் மூன்று நான்கு சிறுகதைகளையும் வெளியிடும். கல்கி தினமணிகதிர் எல்லாமே இந்த வரிசையில்தான் வந்துகொண்டிருந்தன. தொலைக்காட்சி வந்து அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டது. மக்களின் ரசனையும் மாறிப்போக படிக்கிற மோகம் ‘பார்க்கிற மோகமாக’ திரிந்துபோனது. பிரபல வாரப்பத்திரிகைகளெல்லாம் சினிமாப்பத்திரிகைகளாக மாறிப்போயின. விளைவு, சினிமாவுக்கென்றே வந்துகொண்டிருந்த பொம்மை, பேசும்படம், பிலிமாலயா எல்லாமே மூடுவிழா நடத்தின.
வாழ்க்கை அனுபவங்களை கலை நேர்த்தியுடன் கலந்து நாவலாகவும் சிறுகதைகளாகவும் படைத்துக்கொண்டிருந்த பாரம்பர்ய எழுத்தாளர்கள் எல்லாரும் நடப்பது என்னவென்றே புரியாமல் திகைத்துப்போய் நின்றுவிட, சாலையைத் திறந்துவிட்டவுடன் ஓடிவரும் சிறுவர்களைப்போல சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ‘ஓ’ வென்ற கூச்சலுடன் ஓடிவர ஆரம்பித்தார்கள். சிறுபத்திரிகைகளும் இதுதான் நம்ம நேரம் என்று டவலை வீசி நாற்காலியில் இடத்தைப் பிடித்துக்கொண்டன. அவசர அவசரமாகத் தங்களின் கச்சேரியையும் ஆரம்பித்துவிட்டன. இதில் ரொம்பவும் முந்திக்கொண்டது காலச்சுவடு மாத இதழ்.
இவர்களைப் பொறுத்தவரை தற்காலத்தமிழ் இலக்கியம் என்பது பாரதியில் ஆரம்பிக்கிறது. பாரதிக்குப் பிறகு தமிழில் எழுதிய ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்கு யாருமே எழுதவில்லை. அதற்குப்பின் தமிழ் எழுத்தாளராக அவதாரம் எடுத்த ஒரேயொருவர் சுந்தர ராமசாமி. பாரதி-புதுமைப்பித்தன்-சுந்தர ராமசாமி என்று தமிழ் வளர்ந்த விதம் பற்றியெல்லாம் அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக இருந்தபோதே அழைத்து பெரிய கருத்தரங்கமெல்லாம் நடத்தித் தீர்த்துவிட்டார்கள். ஒப்புக்காக சில எழுத்தாளர்கள் பெயர்களைச் சொல்வார்களே தவிர, காலச்சுவடு இதழைப்பொறுத்தவரை சுந்தர ராமசாமிதான் தமிழின் ஒரே ஆகப்பெரும் எழுத்தாளர். அவரைப்போற்றும்-ஆராதிக்கும் வேறு சில எழுத்தாளர்கள் மட்டுமே தமிழில் இருக்கும் மற்ற ‘எழுத்தாளர்கள்.’
காலச்சுவட்டிலிருந்து வெளியேறி வந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடத்தும் உயிர்மை வேறு ஒரு எழுத்தாளர் குழுவைத் தன்வசம் வைத்துள்ளது. அவர்களும் குழு மனப்பான்மையுடனேயே செயல்படவேண்டியுள்ளது. இந்த இரண்டு பத்திரிகைகளிலும் எழுதும் ஒரு சிலர் மட்டுமே இன்றைய பிரபல எழுத்தாளர்களாக வலம்வரும் வித்தையைச் செய்துவருகிறார்கள். ஊடகங்களும் வேறுவழியில்லாமல் இவர்களை மட்டுமே மிகப்பெரும் எழுத்தாளர்களாக முன்நிறுத்தும் காரியத்தைச் செய்துவருகின்றன. இவர்களில் சாருவுக்கும் ஜெயமோகனுக்கும் இணையத்தில் அதிகம் உழலுகின்ற அதிகம் புழங்குகின்ற கணிப்பொறி இளைஞர்களின் தேவை என்னவென்பது தெரிந்திருக்கிறது. அவர்களுடைய ரசனை என்னவென்பது தெரிந்திருக்கிறது. என்ன சொல்லி அவர்களை இழுக்கமுடியும் என்பது தெரிந்திருக்கிறது. அதைத் தமிழில் வழங்கவந்த இலக்கிய வள்ளல்களாகத் தங்களைக் காட்டும் கலை தெரிந்திருக்கிறது. ஆகவே, வெற்றிகரமாகத் தங்கள் வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் வரும் எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசிப்பவன் என்ற முறையில் எனக்கு சுந்தர ராமசாமியை மிகவும் பிடிக்கும். ஆனால் காலச்சுவட்டின் அரசியல் பிடிக்காது. ஜெயமோகன் எழுதிய நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. ஒரேயொரு கதை ‘ஊமைச்செந்நாய்’ மட்டும் படித்திருக்கிறேன். உண்மையில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை அது. என்னுடைய நண்பர் அகிலன் கண்ணன் தாகம் என்றொரு பிரசுரம் ஆரம்பித்தபோது அவரது தந்தையார் அகிலன் அவர்களின் பெயரால் ஒரு நாவல் போட்டி நடத்தினார். அதில் வெற்றி பெற்ற நாவல் என்று ஒரு நாவலைத் தந்தார். வெற்றி பெற்றவர் ஜெயமோகன். எழுதிய நாவல் ‘ரப்பர்.’
ரப்பரைக்கூட சில பக்கங்கள் படித்து வைத்துவிட்டேன். பின்னர் ஏதோ ஒரு இணைய தளத்தில் நையாண்டியாகச் சில புனைவுகளை ஜெயமோகன் எழுதினார். படித்ததில் அப்படியொன்றும் பிடிபடவில்லை. விட்டுவிட்டேன். அவர் எழுதிய வேறுசில கட்டுரைகளைப் படித்தபோது ஒரு படைப்பாளிக்குரிய எழுத்துத்திறமை வேண்டுமானால் அவருக்கு இருக்கலாம் ஆனால் அவரது சிந்தனைகளில் தார்மீக நெறிமுறைகள் இல்லை என்ற முடிவுக்குத்தான் வர நேர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துப் போராடும் அருந்ததிராய் இவரது கண்ணோட்டத்தில் ‘அடிப்படையான வரலாற்று உணர்வோ, சமநிலையோ இல்லாத அருந்ததிராய் போன்ற குருவி மண்டை’ என்று விளிக்கப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டு மொத்த தமிழ் நிலமே ரத்தச்சேறாக மாற்றப்பட்டது பற்றி இவர் திருவாய் மலர்ந்தருளுகிறார் இப்படி; ‘ நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதே போன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்து கொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் எனப்பேசுவதில்லை. அந்தப் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுத வெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டி வளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒரு சாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கு அறியப்படுகிறார்கள்.’ என்று தமது மேதாவிலாசத்தைக் காட்டுகிறார். அதாவது, இவர் கூற்றுப்படி நம் தெருவில் ஒரு அப்பாவியை நான்கு காடையர்கள் சேர்ந்து அடிக்கிறார்கள் என்றால்கூட நாம் துடிக்கக் கூடாது. கூப்பாடு போடக்கூடாது. காவல்துறையை அணுகக் கூடாது. வடநாட்டில் இப்படியெல்லாம் நடப்பதில்லையா என்ன என்று இருந்துவிட வேண்டும்.
ஒரு அப்பாவிப் பெண்ணை நான்கைந்து ரௌடிகள் சேர்ந்துகொண்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள் அது நமது கவனத்துக்கு வருகிறது என்றால்கூட நாம் பதட்டப்படக்கூடாது. இப்படியெல்லாம் மெக்ஸிகோவில் நடக்கவில்லையா என்று கேட்டுக்கொண்டு சும்மா இருந்துவிட வேண்டும். அவ்வளவு ஏன் இதே சித்தாந்தப்படி நம்முடைய தெருவில் சாக்கடை உடைத்துக்கொண்டு ஓடிற்றென்றால்கூட செயல்படக்கூடாது. கூவத்தில் ஓடாத சாக்கடையா என்று கேட்டுவிட்டுச் சும்மா இருந்துவிடவேண்டும். -இப்படியொரு மனநெறியைப் பரப்புகிறவர் எப்படி படைப்புக்கலை இலக்கியத்தில் நல்ல சிந்தனைகளை வித்தூன்றுவார் என்ற கணிப்பில் இவரது எழுத்துக்களைப் படிக்கத்தோன்றவில்லை.
இவர்களிலிருந்து விலகி நிற்கும் ஒரு எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணனை மட்டுமே குறிப்பிட வேண்டும்.
அடுத்தது சாருநிவேதிதா.!
ஒரு விஷயத்தை இப்போதே சொல்லிவிட வேண்டும். இவர் என்ன எழுதுகிறார் என்பது ஒருபக்கம் இருந்தபோதிலும் இவரது எழுத்து நடை சுவாரஸ்யமானது. பொதுவாகவே சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எல்லாரும் போரடிக்கும் நடைக்குச் சொந்தக்காரர்கள். வேண்டுமென்றேதான் அப்படி எழுதுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயாரில்லை. ஒரு வித்தியாசம் வேண்டுமென்று யாரோ ஒருவர் இப்படி எழுத ஆரம்பிக்க இவர்களுக்கெல்லாம் அதுவே தொற்றிக்கொண்டுவிட்டது. எழுதுவதிலேயே மிகவும் சிரமமான காரியம் இலகுவாக எழுதுவதுதான். இலகுவான எழுத்து நடை நிறையப் பேருக்கு வருவதில்லை. அவர்களில் சாரு நிவேதிதா முற்றிலும் வேறுபட்டவர். இலகுவாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் எழுத வருகிறது அவருக்கு. அந்த நடையை வைத்துக்கொண்டு என்ன எழுதுகிறார் என்று பார்த்தோமானால் வேதனையும் கோபமும்தான் மிஞ்சுகிறது.
தற்புகழ்ச்சி என்பது தலைக்குமேல் போய்விட்ட ஒரு பிறவியாகத்தான் தம்மைக் காட்டிக்கொள்கிறார் சாருநிவேதிதா. அவரே எழுதியிருப்பதைப் பார்த்தோமானால் நோபல் பரிசெல்லாம் இவருக்கு மிகவும் சாதாரணம் என்ற மனநிலைக்கு அவர் இந்நேரம் வந்திருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. காலம் காலமாகப் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் கலாச்சாரம் பண்பாடு மண்ணாங்கட்டி ஆப்பச்சட்டி எல்லாவற்றையும் எல்லாத் தளைகளையும் உடைத்துக்காட்டுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அவர் செய்யும் அலப்பறைகளும்,அழிச்சாட்டியங்களும் தாங்க முடியாததாக இருக்கிறது. மனித உடம்பில் மூன்று நான்கு அங்கங்கள் தவிர வேறு எந்த அங்கங்களுமே அவருடைய சிந்தனைத்தளத்திலேயே இல்லை என்பது பரிதாபத்துக்குரிய விஷயமாகவே படுகிறது.
இவர் எழுதிய தேகம் நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் இவரது நாவலை சரோஜாதேவி புத்தகம் போல இருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். அதற்காக இவர் மிஷ்கினைத் தம்முடைய நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டாராம். நீக்கியவர் சும்மா இருக்கவேண்டியதுதானே, மிஷ்கினுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார். தமிழில் கடித இலக்கியம் என்ற வகை ஒன்று இருக்கிறது. ரசிகமணி டிகேசியின் கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. வ.உ.சியின் கடிதங்கள் புகழ்பெற்றவை. கி.ரா வின் கடிதங்கள் புகழ்பெற்றவை. அரசியலில் எடுத்துக்கொண்டாலும் அண்ணாவின் கடிதங்கள், கலைஞரின் கடிதங்கள், கண்ணதாசனின் கடிதங்கள் ஆகியவை புகழ்பெற்றவை. அகில இந்திய அளவிலும் நேரு தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களும் மிகவும் புகழ்பெற்றவை.
இப்போது தமிழர்கள் செய்த பூர்வ ஜென்ம பலனாகக் கிடைத்திருப்பவை சாரு நிவேதிதா மிஷ்கினுக்கு எழுதிய கடிதங்கள். நாகரிக எல்லைகள் என்பவையெல்லாவற்றையும் தாண்டி அருவெறுப்பு ஆபாசம் மஞ்சள் எழுத்துக்கள் இவற்றின் உச்சம் நீளம் அகலம் ஆழம் எல்லாவற்றையும் கடந்த குப்பையைத் தமிழில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார் சாருநிவேதிதா. அத்தனைக் கடிதங்களையும் படித்தவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் இருந்தாலேயே பெரிய விஷயம்.
இதுபற்றி இணையத்தில் நிறையப்பேர் கொதித்துப்போய் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில பேர் ‘சாரு ஒரு காமெடி பீஸ்’ என்றெழுதுகிறார்கள். எனக்கென்னமோ இதனை அப்படியே விட்டுவிடுவதுதான் சரியானதாகப்படுகிறது. ஏனெனில் இது ஒன்றும் நிஜமான சண்டையாகத் தெரியவில்லை. இருவருமே பேசி வைத்துக்கொண்டு செய்யும் நிழல் சண்டைபோல்தான் தெரிகிறது. மிஷ்கினும் சாருவும் சேர்ந்துகொண்டு எல்லாரையும் முட்டாள்காளாக்க விரித்த வலை என்றுதான் படுகிறது. மாட்டிக்கொள்ளாதவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே.
இந்த உண்மை தெரியவரும்போது இந்த இருவரையுமே தமிழர்கள் எப்படிப் புறக்கணிக்கப் போகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
37 comments :
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் இதென்னமோ இருவரும் பேசிவைத்துக்கொண்டு ஆடும் நாடகமாகத்தான் தெரிகிறது. ஜெயமோகனை நீங்கள் இன்னமும் நன்றாக அலசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
சாவி பத்திரிக்கை மூலமாக
உங்களை அறிந்தவன் நான்.
சுந்தரராமசாமி
ஜெயமோகன்
காலச்சுவடு
உயிர்மை
இவர்களை
மிக எளிமையாக
தராசில்
நிறுத்தக் கூடாது
என்பதே
என்
அபிப்ராயம்.
வருகைக்கு நன்றி மதிசீலன்.ஜெயமோகன் பற்றிய அலசலில் நுழையவில்லையே.அவரைப் பற்றிய என்னுடைய மேலோட்டமான பார்வையைப் பற்றித்தானே சொல்லியிருக்கிறேன்.
தங்களின் வருகைக்கு நன்றி சந்தானகிருஷ்ணன், தமிழின் தற்கால இலக்கியமென்பதே இவர்களிடம் மட்டும்தான் உள்ளது என்கிற பிம்பத்தை ஏற்படுத்த முயலும் போக்கு பற்றித்தான் என்னுடைய கவலை எல்லாம்.
ஜெயமோகன் ,சாரு பற்றிய உங்கள் கருத்துக்கள் மிகசரியான்வை.சுவையான எழுத்துத்திறன் உள்ளவர் சாரு.ஆனால் அவர் எழுதுவது மஞ்சள் கதைகள்.இந்தக்
கவலை அனேகருக்கு உண்டு.
ஜெய மோகன் பற்றி கூறத்தேவை இல்லை.அவர் எழுதுவது காவி நிறம்.அவர் எழுத்தைப்படிக்க மிகவும் பொறுமையும்,காலமும் தேவை.இதுவரை அவர் எழுத்தை முழுமையாகப்படிக்க முடிந்ததில்லை.விஷ்ணுபுரம் மிகக்கொடுமையான அனுபவம்.
really nice sir. It is time to make them realise what they are doing with their writing skill
தங்களின் கருத்திற்கு நன்றி சுரன்,இன்று பிரபலமாக இருக்கும் பலருக்குப் பிரச்சினையே அவர்களின் எழுத்து நடைதான். இது ரொம்பவும் அழகான நடை என்று நினைத்துக்கொண்டு அவர்கள் பாட்டுக்கு எழுதித்தள்ளுவார்கள். எத்தனைக்காலம்தான் வாசகர்களும் தாக்குப்பிடித்துப் படித்துக்கொண்டிருப்பது? மூச்சுமுட்டியவுடன் அவர்கள் பாட்டுக்கு இவர்களை விட்டுவிட்டு அடுத்ததைப் படிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷாமா
ஒருபக்கம் இருந்தபோதிலும் இவரது எழுத்து நடை சுவாரஸ்யமானது.//
உண்மையே
\\சாரு நிவேதிதாவையோ ஜெயமோகனையோ எஸ்.ராமகிருஷ்ணனையோ படிக்காமலேயே,அவர்களுடைய படைப்புக்கள் பற்றிய பரிச்சயம் இல்லாமலேயே அவர்களைத் தமிழின் முன்னணி எழுத்தாளர்களாக ஒரு வாசகன் சொல்லும் நிலைமை இருப்பதை இந்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகத்தான் சொல்லவேண்டும்.\\
மிகச் சரி.
வாருங்கள் சதீஷ்குமார், எப்போதுமே சுறுசுறுப்புடன் இருக்கும் உங்கள் இயல்பு எனக்குப் பிடிக்கிறது.
இந்த அதிர்ஷ்டம் தமிழுக்கு ஆதாயமா என்பதைத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது கோபி.தங்களின் வருகைக்கு நன்றி
//ஏனெனில் இது ஒன்றும் நிஜமான சண்டையாகத் தெரியவில்லை. இருவருமே பேசி வைத்துக்கொண்டு செய்யும் நிழல் சண்டைபோல்தான் தெரிகிறது. மிஷ்கினும் சாருவும் சேர்ந்துகொண்டு எல்லாரையும் முட்டாள்காளாக்க விரித்த வலை என்றுதான் படுகிறது. மாட்டிக்கொள்ளாதவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே.
இந்த உண்மை தெரியவரும்போது இந்த இருவரையுமே தமிழர்கள் எப்படிப் புறக்கணிக்கப் போகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்//
தவறான ஒரு அஸம்ப்ஷனை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்ட ஒரு நல்ல பதிவு.
கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்
>>> தகவலுக்கு நன்றி அமுதவன் அவர்களே!ஆத்தாடி, பெரியவங்க சண்ட! சிவா, நீ வேடிக்க மட்டும் பாரு.. வெடிக்க பாக்காத..
சிறப்பான அலசல்.
ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் தமிழின் சிறந்த எழுத்தாளர்களாக அறியப்படுவதற்கு அவர்களது இணையதள பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம்.
பரபரப்பான, போட்டி மிகுந்த சூழ்நிலையில், அதுவும் இணையம் என்ற சமன்படுத்தும் சக்தி வந்த பிறகு, எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதற்கு தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வெகுவாக முனைகிறார்கள். அந்த முயற்சியில் அவர்களது படைப்புக்களின் மீதான வாசகர் கவனம் பின்செல்கிறது. இந்த சூழ்நிலையில்தான் சாரு நிவேதிதா போன்றவர்கள் தங்கள் தகுதியைவிட மேலான ஒரு இடத்தை அடைந்து விடுவதில் தாற்காலிகமான வெற்றியைப் பெறுகிறார்கள்.
இந்தக் குறை இருப்பினும், இதை முன்னிட்டு இந்தப் படைப்பாளர்களைப் புறந்தள்ள முடியாது. அப்படிச் செய்தால் நஷ்டம் வாசகர்களுக்கும், பொதுவான சமூகத்திற்கும்தான். மாறாக, நீங்கள் செய்வதைப் போன்று இவர்களைக் குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். என் வலைப்பூவில் இதற்கான சில ஆரம்ப முயற்சிகளை அவ்வப்போது நீங்கள் காணலாம்.
அருமையான கட்டுரை சார். உங்கள் எழுத்து நடை அபாரம்.
//சாரு நிவேதிதாவையோ ஜெயமோகனையோ எஸ்.ராமகிருஷ்ணனையோ படிக்காமலேயே,அவர்களுடைய படைப்புகள் பற்றிய பரிச்சயம் இல்லாமலேயே அவர்களைத் தமிழின் முன்னணி எழுத்தாளர்களாக ஒரு வாசகன் சொல்லும் நிலைமை இருப்பதை இந்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகத்தான் சொல்லவேண்டும்// என்பதோடு அது தமிழ் வாசகச் சூழலுக்கு ஒரு மாயை என்பதையும் சேர்த்துக்கொள்கிறேன்
சாரு நிவேதிதா , ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன்-
இவர்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதும் ஒரு காரணம்!
//இதுபற்றி இணையத்தில் நிறையப்பேர் கொதித்துப்போய் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில பேர் ‘சாரு ஒரு காமெடி பீஸ்’ என்றெழுதுகிறார்கள். எனக்கென்னமோ இதனை அப்படியே விட்டுவிடுவதுதான் சரியானதாகப்படுகிறது. ஏனெனில் இது ஒன்றும் நிஜமான சண்டையாகத் தெரியவில்லை. இருவருமே பேசி வைத்துக்கொண்டு செய்யும் நிழல் சண்டைபோல்தான் தெரிகிறது. மிஷ்கினும் சாருவும் சேர்ந்துகொண்டு எல்லாரையும் முட்டாள்காளாக்க விரித்த வலை என்றுதான் படுகிறது. மாட்டிக்கொள்ளாதவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே//
மிகச் சரியான கணிப்பு!
தவறான கணிப்பு என்றா கருதுகிறீர்கள் கிங் விஸ்வா, எனக்கென்னமோ இது நாடகம் என்றேதான் இன்னமும் படுகிறது.
சிவகுமார், சமயங்களில் வெடியுங்களேன்.
நன்றி ஏவிஎஸ், தங்களின் வலைப்பூ படிக்கிறேன்.
நன்றி உலகநாதன்,என்னுடைய எழுத்துநடை நிறையப் பேருக்குப் பிடிக்கும்.சாவி அவர்களும் வலம்புரி ஜான் அவர்களும் அவ்வப்போது பாராட்டுவார்கள். சுஜாதா மிகவும் ரசித்து சாவியிடம் என்னைக் கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தினார். என்னுடைய முதல் நாவலுக்கு முன்னுரை எழுதியவரும் சுஜாதாதான்.
வாருங்கள் இப்னு ஹம்துன் உங்கள் முகப்பில் இருக்கும் குழந்தை மிகவும் அழகு. தங்கள் கருத்துக்கு நன்றி.
நன்றி யோகன், இன்னமும் என்னென்ன வேடிக்கை இருக்கிறது பார்க்கலாம்.
கொஞ்ச காலம் முன்பு வரை நானும் எல்லோரின் கதைகளையும் தேடி தேடி படித்தேன். பாலகுமாரன், சுஜாதா, ஜெயகாந்தன், ஜானகிராமன், கோவி, கல்கி என்று பட்டியல் நீளும். ஆனால் இப்போதெல்லாம் மனதோடு நெருங்கி வாசிக்கற மாதிரியான எழுத்துகள் மிகவும் குறைந்துவிட்டது தேடி பிடிக்கவேண்டும். அதற்கெங்கே நேரம். புத்தக கண்காட்சியில் நண்பர்கள் சிபாரிசு செய்கிற ஒரு சில புத்தகங்களோடு முடிந்துவிடுகிறது தேடல். அதில் கூட பலவற்றை முழுவதுமாக படித்து முடிக்க முடிவதில்லை. காரணம் ரசனைகள் வேறுவேறாக இருப்பது தான். சாரு, ஜெயமோகன் படைப்புகள் ஒரு சில ரசிக்கத்தக்கவை என்றாலும், எப்போது முடிப்போம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. சரக்கு இல்லை என்றாலும் அவர்களுக்கான மேதாவிலாசங்கள் குறைவதில்லை. முன்பக்க பில்டப் களுக்காகவே சிலசமயம் இவற்றை தவிர்த்து விடுகிறேன்.
காலத்திற்கேற்ற மாறுதல் எல்லாத்துறைகளிலுமே இயல்புதான். படைப்பாக்கங்கள் மட்டுமல்ல வாசிப்பனுபவமும் மாற்றமடைவதைத் தவறென்று
சொல்வதற்கில்லை. ஆனால் அவை இயல்பாகவும் இயற்கையாகவும் நடைபெறுகிறதா என்பதுதான் கேள்வி. தங்களின் கருத்துக்கள் எனக்கும் முழு சம்மதம்தான் ஜீவன்.
நண்பரே,
\\Amudhavan said...
தவறான கணிப்பு என்றா கருதுகிறீர்கள் கிங் விஸ்வா, எனக்கென்னமோ இது நாடகம் என்றேதான் இன்னமும் படுகிறது//
சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவரை நான் நன்கு அறிவேன். ஆகையால் கூறுகிறேன் இது அரங்கேற்றப்பட்ட நாடகம் அல்ல. இரண்டாமவர் செய்கைகள் அப்படி இருந்தாலும் இது நாடகம் அல்ல.
sariyaana alasal..... puthiya eluthhaalarkalai ukkappaduththinaale thannale ivarkal valikku vanthu viduvaarkal...... pakirvukku vaalththukkal
//சிவகுமார், சமயங்களில் வெடியுங்களேன்//
>>> >>> என் கடைகளில் கிடைக்கும் பட்டாசுகளை காண madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com
எப்புடி வெடிச்சி இருக்கேன்னு நீங்க சொன்னா நல்லா இருக்கும்.
>>> அமுதவன் அவர்களே, தங்கள் வலைப்பூவில் நாங்கள் கருத்து இட்ட பிறகு வரும் word verification சற்று லொள்ளு செய்கிறது. முடிந்தால் அகற்றவும். நன்றி!
உங்கள் எழுத்துக்களைப் படிக்க ஆவலாக உள்ளேன். நீங்களும் நிறைய எழுதுங்கள் சரவணன்.
தங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டுச் சொல்கிறேன் சிவகுமார்.
ஒரு கடிதத்தோடு முடிக்காமல் எதற்காக இருபத்தேழு கடிதங்கள்? என்பதுதான் சந்தேகம் விஸ்வா, சரி அந்த இருபத்தேழாவது கடிதம் கடித இலக்கியத்தைச் சார்ந்ததுதானா?
உங்களது இந்த கட்டுரையின் முதல் மூன்று para என்னைக் கேள்வி கேட்டு நான் பதில் அளித்தது போல இருந்தது.
எனக்குத் தமிழ் பள்ளியில் பயிலும் பயிலும் வாய்ப்பு கிட்டியதில்லை. வீட்டில் சொல்லிக்கொடுத்தது போக- பழைய படங்கள் பார்த்து கற்றுக் கொண்டது தான். வீட்டில் உள்ளவர்களின் சிபாரிசினால், சமீபத்தில் நானாகவே படித்த தமிழ் புத்தகம், 'ஜே.ஜே...' . அதன் பிறகு- 'குறிஞ்சி மலர்'. ஓரிரண்டு ஜெயகாந்தன் சிறு கதைகள். இதைத் தாண்டாத என் தமிழ் இலக்கியம் படிக்கும் பயணத்தை, புதிய எழுத்தாளர்கள் கொண்டு துவங்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பல பேர் கூறிய பெயர்கள்- சாரு நிவேதித மற்றும் ஜெயமோகன் தான்.
தங்களது இந்த கட்டுரை படித்த பிற்பாடு, நான் reverse gear போட்டு ஜெயகாந்தனிலிருந்து பின்னே செல்வது தான் உசிதம் போலிருக்கிறது, என்ற ஒரு எண்ணம் வந்து விட்டது.
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, தங்களது பதிவு...
நன்றி!
வாருங்கள் மாதங்கி, தமிழ் இலக்கியம் படிக்க ஆரம்பிக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள். தற்போது ஒவ்வொரு துறையிலும் யார்யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களிலிருந்து ஆரம்பிப்பது என்பதுதான் பெருவாரியாக நடப்பது. நுனிப்புல் மேயும் கலாச்சாரம் என்பது இப்படி ஆரம்பிப்பதுதான். இப்படி ஆரம்பிப்பவர்கள்தாம் இசை என்றால் இளையராஜா மட்டுமே என்று கருத்துச்சொல்லவும் ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களிலிருந்து விலகி, சாதனைபுரிந்தவர்களைத் தொடர்ந்து தற்போது சாதனை புரிகிறவர்கள்வரை வருவதுதான் நல்ல ரசனைக்கான அறிகுறி. அகிலன் கல்கி புதுமைப்பித்தன் தி.ஜானகிராமன் என்றெல்லாம் படித்தபிறகு இன்றைய எழுத்தாளர்களுக்கு வாருங்கள்.
எளிய தமிழில் நீரோட்டமான நடையில் எழுதப்பட்ட நல்ல கட்டுரை..
சாநி அடிப்படையில் அருவருக்கத்தக்க நடையில் எழுதினால் கவனிக்கப்படுவோம் என்ற சித்தாந்தத்தை கடைப்பிடித்து எழுதுபவர்.துவக்கத்தில் திராவிடக் கட்சிகள் எப்படி பெரும்பான்மை சமூகத்திற்கு அதிர்வு தரத்தக்க கலகக் குரல்களை எழுப்பி மக்களின் கவனம் பெற்றார்களோ அதே கலக உத்திதான் அவரது டூல்..இடையில் ஏன் தனக்கு இன்னும் நோபல் தரப்படவில்லை என்றும் அங்கலாய்ப்பார்;அதுவும் அவரது எழுத்து நடையின் இடையில் அகப்படும் பகடிக்கான விதயம்தான் என்றுதான் அவரை வாசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள் என்பதை அவர் அறியாததுதான் சோகம்....
ஜெ பற்றிய உங்கள் மதிப்பீடு முழுக்கவும் சரியா என்பதில் எனக்குக் குழப்பம் இருக்கிறது..சில சமயம் அசத்துகிறார்,சில சமயம் அவலமாக இருக்கிறது..
ஈழ்த்தின் கொலைகள் பற்றிய அவரது கருத்து,உலோகம் நாவல் போன்றவற்றில் அவரது உணர்வுப் பிறழ்வு கண்டிக்கத்தக்கது என்பதே எனது பார்வையும்..ஆனாலும் காடு,ஊமைச் செந்நாய் போன்ற சில படைப்புகள் அசத்துபவை என்பதையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது..
எஸ்ரா வின் யாமம் மிகவும் பிடித்துப் படித்தது..கதாவிலாசம் அவ்வளவு சுவரசியமாக இல்லையெனினும் இவை இரண்டின் தாக்கத்திலும் பயங்கரமாகக் கிளப்பிவிடப் பட்ட விளம்பரத்தினாலும் உபபாண்டவம் படித்தேன்...40 பக்கம் கூட படிக்க முடியவில்லை!
நான் நினைப்பது என்னவென்றால்..எழுத்தாளர்கள் பிரபலம் அடையும் வரை எழுதுபவைதான் படிக்கத்தகுந்தவை என்பது எனது புரிதல் :))
விதிவிலக்கான எழுத்தாளர்கள் மிகச் சிலரே..சுஜாதா,கல்கி,புதுமைப்பித்தன்,லாசரா போன்ற மிகச் சிலர்.
பாலகுமாரனும் இந்தப் பட்டியலில் சேர்க்கத்தகுந்தவர்,அவரது குரு வேடத்தைக் கலைத்தால்!
அழகாக எழுதப்பட்ட நல்ல பத்தி..நன்றி.
வேர்ட் வெரிபிகஷனை தயவு செய்து நீக்கவும்.
எழுத்துலகை தூரத்தில் நின்று எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு சில பிம்பங்களை உடைத்துவிட்டீர்கள், சில கேள்விகளுக்கு விடை கிடைத்தது, கொஞ்சம் தன்னம்பிக்கையும் கிடைத்தது... நன்றி அமுதன் ஐயா...
Post a Comment