Thursday, February 17, 2011

கலைஞரும் ஜெயகாந்தனும்எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கிப் பேசிய விழாவில் நன்றி தெரிவித்துப்பேசிய ஜெயகாந்தன் கலைஞரின் ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று புகழப்போக, இந்தப் பேச்சு நிறைய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஜெயகாந்தன் எப்படி இம்மாதிரிப் பேசலாம். அதே நிகழ்ச்சியில் வைரமுத்து என்னென்னவோ பேசினார். அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் ஜெயகாந்தன் இப்படிப்பேசலாமா? என்கிற ரீதியில் நிறைய கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

ஜெயகாந்தன் பேசியது சரியா தவறா என்கிற வாதத்திற்குள் இங்கே நுழைய விரும்பவில்லை. ஆனால் ஜெயகாந்தன் பேசிய பேச்சிற்கு பதிலளித்து கலைஞர் பேசியிருக்கிறாரே அதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தனை வருட காலத்தில் கலைஞருக்கு வராத சிந்தனை இது. இதோ கலைஞரின் பேச்சைப் பார்ப்போம்.

“பாரதி விருதைப் பெற்ற அன்புக்குரிய நண்பரும் புரட்சி எழுத்தாளருமான அன்புக்குரிய ஜெயகாந்தன் பேசும்போது, ‘இது ஒரு பொற்காலம்’ என்று குறிப்பிட்டார். பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ-என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ அதுதான் பொற்காலம்.

இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் ‘நீ அப்படித்தான் சொல்லிக்கொள்வாய். ஏனென்றால் ஆட்சிப்பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை’ என்று நீங்கள் எண்ணக்கூடும். அல்லது சொல்லக்கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன், எதையும் விமர்சிக்கக் கூடியவர்-நாணயமாக விமர்சிக்கக் கூடியவர். நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர். அச்சத்திற்கு ஆட்படாமல் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

அப்படிப்பட்டவர் இந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று சொன்னதை, தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னாலான பதக்கத்தைவிட, அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களைவிட, சிறந்த பரிசாக எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக்கொள்கிறேன். நல்லவர்களுடைய வாழ்த்து, ஜெயகாந்தனைப் போன்ற வல்லுநர்களுடைய வாழ்த்து, இந்த ஆட்சிக்கு, எங்களுக்கு என்றென்றும் தேவை.ஒரு காலத்தில் எங்களைப்போன்றவர்கள் எழுதத் தொடங்கி, அவை எல்லாம் எங்கள் இயக்கத்தோழர்களால் படிக்கப்பெற்றபோது ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல; எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்.

எங்களுடைய எழுத்தை அன்றைய தினம் பாராட்டாதவர், இன்றைக்குப் பாராட்டுகிறார் என்றால் நாங்கள் அப்படிப்பட்ட பாராட்டைப் பெறுவதற்கு குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்கின்ற அளவிற்கு, அவர் எங்களைத் தாக்கி மறுத்து எழுதிய போதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.

ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது. உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால் நான் கொடுத்து வைத்தவன். நான் என்னையே பாராட்டிக்கொள்ளக்கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்கவேண்டுமென்று கருதுகின்ற சிலபேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்துப் பயன்படுமேயானால் இது பொற்காலமாகவும் இருக்கவேண்டாம்; கற்காலமாகவும் இருக்கவேண்டாம். தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்தனுடைய தமிழ்ப்பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பேசியிருக்கிறார் கலைஞர்.

ஜெயகாந்தனுக்குக் கொடுக்கப்பட்ட விருதைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதல்வரின் இந்தப்பேச்சு இருக்கிறது. ஏனெனில் தமிழில் படைப்பிலக்கியவாதிகளை அரசு மதிக்கும் வழக்கம் பல வருடங்களாகவே தமிழகத்தில் இல்லை. நான் பல இடங்களிலும், இந்த வலைப்பூவில் பல பதிவுகளிலும் குறிப்பிட்டுவருவதைப்போல், தற்கால இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அரசு கண்டுகொள்வதே இல்லை. தமிழ் மொழி என்றாலேயே இவர்களுக்கு சங்க இலக்கியம் மட்டும்தான்.

இலக்கியவாதிகள் என்றால் திருக்குறளில் ஆரம்பித்து சங்க இலக்கியம் வந்து பாரதிதாசனோடு நின்றுவிடுபவர்கள் மட்டும்தாம். இலக்கியக்கூட்டங்களில்கூட இவ்வளவு மட்டும்தாம் பேசுவார்கள். இதுவே போதும் என்கிற ஒரு மனோபாவம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த எல்லா உலகத்தமிழ் மாநாட்டிலும் இதுதான் நடந்தது. செம்மொழி மாநாட்டிலும் இதே கதைதான். இருபதாம் நூற்றாண்டு படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது மிகச்சிறிய மூலை. பொருட்காட்சிகளில் ஒரேயொரு அப்பளக்கடை போட்டுக்கொடுத்த மாதிரி!

தமிழில் படைப்பிலக்கியம் என்றால் திருக்குறளில் இல்லாததா? சிலப்பதிகாரத்தில் இல்லாததா? அகநானூறு சொல்லாத காதலா? புறநானூற்றில் இல்லாத வீரமா? நற்றிணையில் இல்லையா, குறுந்தொகையில் இல்லையா என்று கேட்டு பாரதிதாசன் பாடிய இரண்டு பாடல்களைச் சொல்லி முடித்துவிடுவார்கள்.

தமிழைத் தாண்டிய இலக்கிய உலகின் அங்கீகாரங்களுக்கு இது போதுமானதல்ல என்பது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்றே தெரியவில்லை.

ஞானபீடம் முதலான இலக்கிய அங்கீகாரங்கள் தற்கால படைப்புக்களுக்குத்தான் கொடுக்கப்படுமேயல்லாமல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் இலக்கியம் இருந்தது என்று சொல்லி அங்கேயே தீபாராதனைக் காட்டிக்கொண்டு இருந்தால் அந்த மொழிக்குக் கிடைக்காது. பழமையைப் போற்றவேண்டும், பாதுகாக்க வேண்டும், பெருமை கொள்ளவேண்டும். அதே நேரத்தில் புதுமையை உயர்த்திப் பிடிக்கவும் செய்ய வேண்டும். தமிழக அரசும், அரசு நிறுவனங்களும் இதனைச் செய்யவே இல்லை.

ஒரு மொழி என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கியம் படைத்ததோடு நின்றுவிடக்கூடாது. காலந்தோறும் அந்த மொழியில் படைப்பிலக்கியம் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். நாள்தோறும் அந்த மொழி தனக்கான பதிவுகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அப்படித்தான் தமிழும் நாள்தோறும் தனது இலக்கியங்களைத் தனது படைப்பிலக்கியக் குழந்தைகள் மூலம் அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த படைப்பிலக்கியவாதிகளை உலகிற்கு அடையாளம் காட்டுவதுதான் ஒரு அரசின் கடமை. அந்தக் கடமையைத் தமிழர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதற்கு பதில்கூற கடமைப்பட்டவர்கள் நாம்.

மலையாளத்திலும் வங்கத்திலும் கன்னடத்திலும் படைப்பிலக்கியவாதிகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் மரியாதைகளும் என்ன? அவர்களை ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் முன்னிலைப் படுத்துவதும் சிறப்பிப்பதும், அவர்கள் பெயர்களை நகரங்களுக்கும் கட்டடங்களுக்கும் சாலைகளுக்கும் சூட்டுவதும் எத்தனை?
எத்தனை எழுத்தாளர்களின், கவிஞர்களின் பெயர்களில் நகர்களும் சாலைகளும் இருக்கின்றன தெரியுமா கர்நாடகத்தில்?

ஒருமுறை தகழியுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “நான் பலமுறை சென்னை வரும்போது அகிலன் வீட்டில் தங்குவேன். அப்போதெல்லாம் அவரும் நானும் கடற்கரையில் வாக்கிங் போவோம். வீட்டிலிருந்து கிளம்பி திரும்ப வருகிறவரைக்கும் ஒரு இரண்டுபேர் அல்லது மூன்று பேர் மட்டும்தான் அகிலனைப் பார்த்து விஷ் பண்ணுவாங்க. கேரளத்துல எல்லாம் இம்மாதிரி நாங்கள் ஃப்ரீயா போய்வர முடியாது. அகிலனுக்கே இந்தக் கதி என்றால் மற்ற எழுத்தாளர்களுக்கு எப்படி? இங்கேயெல்லாம் வெறும் சினிமாக்காரனுக்கும் அரசியல்காரனுக்கும் மட்டும்தான் மதிப்பு. இதுக்கு உங்க அரசியலும் பெருமளவு காரணம்”
உண்மைதான். கர்நாடகத்தில் சிதானந்த மூர்த்திக்கு டாக்டர் பட்டம் வழங்கி அரசு சார்பிலே கொண்டாடுகிறார்கள். யு.ஆர்.அனந்தமூர்த்தியைத் தேடி மாநில முதல்வர் வீட்டிற்கே ஓடுகிறார். பல முக்கிய அரசு விழாக்களைக்கூட எழுத்தாளர்கள்தாம் தலைமைத் தாங்கி நடத்துகிறார்கள். எப்படியெல்லாம் சிறப்பிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடி சிறப்பிக்கிறது அரசு.

யோசித்துப் பாருங்கள் புதுமைப் பித்தனுக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் என்ன? பி.எஸ்.ராமையா எப்படியெல்லாம் போற்றப்பட்டிருக்கிறார்? கு.ப.ராவையும், கு.அழகிரிசாமியையும் இந்த அரசு எப்படி நினைவுகூர்கிறது?கல்கியையும் தி.ஜானகிராமனையும் சாண்டில்யனையும் எப்படிச் சிறப்பித்திருக்கிறார்கள்? அகிலனுடைய பெயரை எதற்குச் சூட்டியிருக்கிறார்கள்?நா.பாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?....அதிகம் போனால் இவர்களின் நூற்றாண்டு விழாக்கள் வந்தால் அவர்கள் குடும்பத்திற்கு சில லட்சங்கள் வழங்கி இவர்களின் நூல்கள் தேசியமயமாக்கிவிட்டதாக அறிவிப்பார்கள். அத்தோடு முடிந்தது இவர்களின் கதை.

இந்த நிலைமை தொடர்வதால்தான் இத்தனை ஆண்டுகளில் தமிழுக்கு இரண்டே இரண்டு ஞானபீடம்.

இத்தனூண்டு மொழிகளெல்லாம்கூட நோபல் பரிசு பெற்றுவருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான தமிழ்மொழி குறிப்பிட்ட எல்லையைக்கூட தாண்டமாட்டேனென்கிறது. காரணம்- தூக்கிப்பிடித்து உயர்த்த வேண்டியவர்கள் கண்டுகொள்வதேயில்லை. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதற்கு இங்கே திராவிடச் சிந்தனைகளும் திராவிட எழுத்துக்களின் தாக்கங்களும் ஏற்பட்டதே காரணம்.

இந்தத் திராவிடச் சிந்தனை நிரம்பியவர்கள் எல்லாம் மற்ற எழுத்துக்களை எழுத்துக்களாகவோ அதை எழுதும் எழுத்தாளர்களை படைப்பிலக்கியவாதிகளாகவோ ஏற்றுக்கொள்ளவே இல்லை. திராவிடச் சிந்தனையைப் பரப்பிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் எழுத்தின் வீர்யத்தை எல்லாம் கட்சியின் கொள்கையை ஒட்டியே பரப்பிக்கொண்டிருந்தார்களே தவிர, வாழ்க்கைக்கும் அதற்குமான தொலைவு மிக அதிகமாகவே இருந்தது. அதனால்தான் உலக இலக்கியங்களை ஒட்டி சமூகத்தையும் நிதர்சன வாழ்க்கையையும் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் திராவிட எழுத்தாளர்களை ஒப்புக்கொள்ளாமலும் அங்கீகரிக்காமலும் இருந்தார்கள். திராவிட எழுத்தாளர்கள், மற்ற எழுத்தாளர்களை ஒப்புக்கொண்டால் தங்களின் இருப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்பதற்காக இவர்களைத் திட்டமிட்டு அங்கீகரிக்காமலேயே இருந்தார்கள்.
அறுபத்தேழில் ஆரம்பித்த திராவிடக் கழகங்களின் ஆட்சி தமிழை இல்லந்தோறும் கொண்டுசென்று வளர்த்துக்கொண்டிருந்த எந்தவொரு தமிழ்ப் படைப்பாளியையும் அங்கீகரிக்கவே இல்லை. இவர்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்ததெல்லாம் வார, மாத, இதழ்கள்தானே தவிர, அரசோ அரசின் நிறுவனங்களோ அல்ல.

அதனால்தான் மற்ற மொழிகளிலெல்லாம் ஓரிரு நூல்கள் எழுதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் கூட பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையெல்லாம் மாநில அரசுகள் மத்திய அரசிடம் சிபாரிசு செய்து வாங்கித்தந்து அழகு பார்த்திருக்கும்போது இதுவரைக்கும் ஒரு தமிழ் எழுத்தாளருக்குக்கூட இப்படிப்பட்ட விருதுகளையெல்லாம் வாங்கித்தரும் முயற்சிகளை இந்தத் திராவிட அரசுகள் செய்யவே இல்லை என்பது எத்தனைக் கொடுமை என்பதை எண்ணப்பார்க்க வேண்டியுள்ளது. இதுபற்றிய குறைந்த பட்ச சிந்தனைக்கூட சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கும் சரி, அவர்களை மதிக்கும் வாசகவட்டத்திற்கும் சரி, வரவே இல்லை என்பது இன்னொரு வியப்பான விஷயம்.

கல்கி, அகிலன், ஜெயகாந்தன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களை மட்டுமல்லாது இவர்களை விடவும் பல மடங்கு பிரபலமான கவிஞர் கண்ணதாசனைக்கூட இவர்கள் இதே பட்டியலில் அடைத்து புறக்கணித்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களுக்குக்கூட இந்த விருதுகள் இல்லையென்றால் வேறு யாருக்காக? என்ற கேள்வி இத்தனை நாட்களும் ஊடகங்களால்கூட எழுப்பப்படவில்லை என்பது எத்தனை சோகமான விஷயம்?
எழுத்தாளர்கள் மட்டுமல்ல கௌரவிக்கப்பட வேண்டிய எந்தவொரு கலைஞரும் இந்த திராவிட அரசுகளால் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதற்கு மிக எளிய உதாரணம் மகாகலைஞன் சிவாஜி கணேசன். உலகின் மிகச்சிறந்த கலைஞனாகக் கொண்டாடப்படவேண்டிய சிவாஜி கணேசனுக்குக் கடற்கரையில் ஒரேயொரு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது.

கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ராஜ்குமாரை இந்த மாநிலம் எப்படிக் கொண்டாடுகின்றது என்பதை யார் வேண்டுமானாலும் கர்நாடகம் வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பெங்களூரில் மட்டுமல்ல கர்நாடகம் பூராவிலுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் பெயரில் நகர்கள்; சாலைகள், பல்வேறு இடங்களில் நினைவுச்சின்னங்கள், விருதுகள்...அவர் படங்கள் இல்லாத தெருக்கள்கூட கிடையாது என்கிற அளவுக்கு அவரைக் கொண்டாடுகிறது கர்நாடகம்.

ஆனால் திட்டம் போட்டே இங்கே சிவாஜி புறக்கணிக்கப்பட்டார். ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் தமது திறமையால் மட்டும்தான் நின்றாரே தவிர அவரை உயர்த்திப்பிடிக்க அரசு எதையுமே செய்யவில்லை. அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்படுத்தப்பட்டு அந்தப் போட்டியில் சிவாஜி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு எம்ஜிஆர் முன்னிலைப் படுத்தப்பட்டார். இது வெறும் வணிகப்போட்டி மட்டுமல்ல.இதையும் தாண்டிய அரசியல் வன்மம் அதில் இருந்தது. அரசியலைப் புறந்தள்ளி ஒரு கலைஞனாக சிவாஜி கொண்டாடப்பட்டிருந்தால் இன்றைய அரசியல் சீர்கேடே தமிழகத்திற்கு வந்திருக்காது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார்.

சிவாஜி எந்தளவு எம்ஜிஆரை வைத்துப் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஒரு படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகராக மத்திய அரசினால் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அப்போது அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடனடியாக டெல்லி அனுப்பப்பட்டு சிவாஜி பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரிக்ஷாக்காரன் என்ற படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி. இதனை நெடுஞ்செழியனே சொல்லப்போக “அப்படியானால் அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம்” என்று ‘ஒன்றும் தெரியாத’ எம்ஜிஆர் அந்தப் பட்டத்தைத் துறந்த கூத்தெல்லாம் நடந்தது.
சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் அரசு என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெரியாதவரா கலைஞர்? ஆனாலும் அவர்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களை அவர் இன்னமும் மறக்கவில்லை என்பதைத்தான் அவரது மவுனம் காட்டுகிறது. இந்த இரண்டு பேரைப்பற்றிப் பேச வரும்போதெல்லாம் “என் ஆருயிர் நண்பர் சிவாஜி” என்றும் “என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன்” என்றும் சொல்லி அவர்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு தமது கடமை முடிந்தது என்று கலைஞர் கடந்து செல்லக்கூடாது.
தம்மைப் பற்றி மிக மோசமாக, மிகக் கேவலமாகப் பேசிய எத்தனையோ பேரை மன்னித்து மீண்டும் தமது பக்கத்தில் சேர்த்துக்கொண்டு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று எத்தனையோ பேரை உதாரணங்களாகச் சொல்லலாம். சிவாஜி விஷயத்திலும் கண்ணதாசன் விஷயத்திலும் கலைஞர் தமது கோபத்தை உதறித்தள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் பின்னர் வரும் அரசுகள் நிச்சயம் காலத்தால் அழியாத இந்த மகா கலைஞர்களைக் கொண்டாடும்பொழுது எத்தனையோ செய்த கலைஞர் ஏன் இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் எழுப்பப்படும்.

கலைஞரால் ‘என் ஆருயிர் நண்பர்’ என்று புகழப்பட்ட கவியரசருக்கு கலைஞர் ஆட்சியிலிருந்தபோது ஒன்றும் செய்யவில்லை.எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரைத் தேடிச்சென்று அரசவைக்கவிஞராக நியமித்தார். இத்தனைக்கும் அன்றைக்கு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் நல்ல நட்பு இல்லை. நீண்ட காலமாக திரைப்படங்களில் கூட கண்ணதாசனைத் தவிர்த்து வாலியையும் புலமைப்பித்தனையும்தாம் பாடல்கள் எழுதவைத்திருந்தார். ஆனாலும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் சந்தர்ப்பங்களை எம்ஜிஆர் என்றைக்கும் எந்த விஷயத்திலும் கோட்டை விடுவதில்லை. கண்ணதாசனை அரசவைக்கவிஞராக ஆக்கியதில் மட்டுமல்ல, ஈழ விவகாரத்தில் எத்தனையோ குழுக்கள் இருக்க பிரபாகரனைத் தேர்ந்தெடுத்து ஆதரித்ததிலும் எம்ஜிஆர் பாராட்டப்படவேண்டிய முடிவுகளையே மேற்கொண்டார். இதற்குக் காரணம் மக்களின் மதிப்பீடு என்னவோ அதனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அவர் செயல்பட்டார் என்பதுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜெயகாந்தனைப்பற்றிய கலைஞரின் பேச்சு அவர் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன். படைப்பிலக்கியவாதிகளையும் மாபெரும் கலைஞர்களையும் மற்ற மாநில அரசுகள் போல் உயர்த்திப்பிடியுங்கள். அவர்களுக்கு வேண்டிய அங்கீகாரங்களை மாநில அரசு வழங்குவதோடு மத்திய அரசிலிருந்து வரவேண்டிய சிறப்புக்களையும் வாங்கித்தருபவர்களாக இருங்கள். இலக்கியத்திலும் கலைத்துறையிலும் கட்சி அரசியல் வேண்டாம்.

இனிமேல் படிப்பகங்களுக்கும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களுக்கும் தற்காலப்படைப்பாளர்களின் பெயர்களைச் சூட்டுங்கள். கல்கி,அகிலன், ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,கண்ணதாசன்,சுரதா,புதுமைப்பித்தன் என்றெல்லாம் பெயர்களைச் சூட்டுங்கள்.

சுஜாதாவின் பெயரை நீங்கள் ஏதாவதொரு இலக்கிய நிறுவனத்துக்குச் சூட்டினால் உங்களை இளைஞர் சமூகம் எப்படிக் கொண்டாடும் தெரியுமா!

ஜெயகாந்தனைப்பற்றி நீங்கள் பேசியிருக்கும் பேச்சுக்கள் சாதாரணமானவை அல்ல. படைப்பிலக்கியம் மீது நீங்கள் கொண்டிருந்த பார்வை அடியோடு மாறியிருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.

அரசு முறையில் இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்

17 comments :

ம.தி.சுதா said...

இருவரம் இலக்கிய ரீதியாக நண்பர்களாக இருப்பதே எழுத்துலகிற்கு சிறந்தது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

பொன் மாலை பொழுது said...

//இனிமேல் படிப்பகங்களுக்கும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களுக்கும் தற்காலப்படைப்பாளர்களின் பெயர்களைச் சூட்டுங்கள். கல்கி,அகிலன், ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,கண்ணதாசன்,சுரதா,புதுமைப்பித்தன் என்றெல்லாம் பெயர்களைச் சூட்டுங்கள்.

சுஜாதாவின் பெயரை நீங்கள் ஏதாவதொரு இலக்கிய நிறுவனத்துக்குச் சூட்டினால் உங்களை இளைஞர் சமூகம் எப்படிக் கொண்டாடும் தெரியுமா!//

அருமையான யோசனை. ஆனால் யாரும் ( கருணா/ ஜெயா) இதை செயல் படுத்த மாட்டார்கள். தொட்டதெற்கெல்லாம் அண்ணா, கலைஞர், அம்மா,ஆத்தா, தாத்தா, என்றுதான் பெயர்சூட்டுவார்கள்.

Mathiseelan said...

நல்ல கட்டுரை. ஆனால் நீங்கள் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வாங்கித்தரவேண்டும் என்று கலைஞருக்கு ஐடியா கொடுப்பதுதான் விபரீதமாக இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் அவர் உடனடியாகத் தமது கைத்தடியான வைரமுத்துவுக்கு வாங்கித்தந்து விடுவார்.

Amudhavan said...

ஆமாம் சுதா, முதல்வருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் நல்லதொரு தொடர்பு இருக்கவேண்டும். கர்நாடகத்திலும் மற்ற மாநிலங்களிலும் அப்படித்தான் இருக்கிறது.
உங்களின் திலோத்தமி பதிவை அன்றைக்கே உங்கள் வலைப்பூவில் படித்துவிட்டேன்.
நன்றாக இருந்தது.

Amudhavan said...

வருகைக்கு நன்றி மாணிக்கம்.இனிமேலாவது இம்மாதிரியான மாறுதல்கள் ஏற்படவேண்டி ஒரு பொதுக்கருத்தை நாம்தான் உருவாக்கவேண்டும்.

Amudhavan said...

நன்றி மதிசீலன். உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்.அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இம்மாதிரியான அரசியலைத்தானே நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.

Unknown said...

\\இலக்கியவாதிகள் என்றால் திருக்குறளில் ஆரம்பித்து சங்க இலக்கியம் வந்து பாரதிதாசனோடு நின்றுவிடுபவர்கள் மட்டும்தாம். இலக்கியக்கூட்டங்களில்கூட இவ்வளவு மட்டும்தாம் பேசுவார்கள். இதுவே போதும் என்கிற ஒரு மனோபாவம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.//
சரியாகச்சொன்னீர்கள். எனக்கும் விவரம் தெரிந்ததிலிருந்து நானும் நிறைய இலக்கியக்கூட்டங்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் இதையேதான் செய்கிறார்கள். பாரதிதாசனோடு நின்றுவிடுகிறார்கள். அவரைத்தாண்டி கீழே வருவதேயில்லை.இந்தச் சிந்தனையே எனக்கு இதுநாள்வரையிலும் வந்ததில்லை.இந்தக் கருத்தை முதன்முதலாக நீங்கள்தான் பொதுவில் வைத்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

Unknown said...

ஐயா தங்கள் இலக்கிய சமூக அரசியல் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. தங்கள் தளத்திற்கு என் வலைப்பதிவில் இணைப்பு வழங்கியிருக்கிறேன்...

Amudhavan said...

இந்த விழிப்பு தமிழ் ஆர்வலர்களுக்கு வரவேண்டும் அகில், அப்போதுதான் இலக்கியத்தளத்தில் நிறைய மாறுதல்கள் நடைபெறும். தங்களின் வருக்கைக்கும் கவனிப்பிற்கும் நன்றி.

Amudhavan said...

தங்கள் தளத்தில் இணைப்பு வழங்கியிருப்பதற்கும் தங்கள் பாராட்டிற்கும் நன்றி கவிஞரே.

Sivakumar said...

சிவாஜி பற்றிய செய்திகளை வெளியிட்டதற்கு நன்றி. அவர் மட்டுமா..மகாகவி பாரதி, நாகேஷ், விளையாட்டு நட்சத்திரங்கள் என பலரும்தான் வடக்கால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே தேசத்திற்குள் இப்படி பல கேவலமான பாகுபாடுகள். அருமையான பதிவு. தங்கள் இ-மெயில் முகவரி தர இயலுமா?

Amudhavan said...

வருக சிவகுமார்,தங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் பெயர் கொண்ட நடிகர் சிவகுமாருக்குக்கூட இன்னமும் எவ்விதச் சிறப்பும் செய்யாமல் இருக்கிறார்கள். என்னுடைய இ-மெயில் முகவரி இது;
amudhavan6@gmail.com

R.S.KRISHNAMURTHY said...

இதைப்பற்றி நாமே எவ்வளவோ பேசியிருக்கிறோம், விவாதித்துமிருக்கிறோம். சிவாஜிக்கு மட்டுமென்றில்லை, தமிழ்த்திரையின் பல ரத்தினங்களைத் எந்தத் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை என்பது அவலத்தின் உச்சம். எஸ்.வி.சுப்பையா (பாரதியாகக் கப்பலோட்டிய தமிழனில்), பாலையா, எஸ்.வி.ரங்காராவ் போன்றவர்கள் (எண்ணற்ற படங்களில்), சிவாஜியாலேயே (தனிப்பட்ட முறையில்) சிறப்புச் செய்யப்பட்டவர்கள். எண்ணிப்பார்க்கும் போது, கப்பலோட்டிய தமிழனில் சிவாஜி, ஜெமினியைப் பார்த்துச் சொல்லுவார்: ’அடே மாடசாமி, இந்தச் சரித்திர ஆசிரியர்கள் உன்னை மறந்துவிடலாம், ஆனால் சத்தியம் உன்னை மறவாது, போடா’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
“நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனைகள் செய்வாரடி - கிளியே,
வாய்ச்சொல்லில் வீரரடி”!!!!!!!!

Ramki said...

சிவாஜி ஒரு தலை சிறந்த நடிகராக இருந்தாலும் அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசு அங்கீகாரங்கள் கடைசி வரை எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.அதுவும் எம் ஜி ஆர் ரிக்ஷாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கபட்ட செய்தியை அந்த நாளில் கேட்டபோது எங்கள் வீட்டில் யாவரும் அதிர்ச்சியில் உறைந்தோம்.எங்கள் வீட்டில் அன்றுலிருந்து இன்றுவரை அனைவரும் சிவாஜி ரசிகர்கள்.அதற்காக சிவாஜி நடித்த குப்பை படங்களுக்கு வக்காலத்து வாங்கமாட்டோம்.அந்த வருடம் சிவாஜிக்கு தேசிய விருது கிடக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.ஆனால் அது எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்டது எங்களுக்கு இடி விழுந்தாற்போல் இருந்தது.எனக்கு தெரிந்து துக்ளக் தவிர வேறு எந்த பத்திரிகையும் சிவாஜிக்கு வக்காலத்து வாங்கவில்லை. தவிர அந்த காலக் கட்டத்தில் அதுவரை தேசிய விருதுகள் தமிழுக்கு கிடைக்கவில்லை என்றாலும் நல்ல படங்களுக்கும் நல்ல நடிகர்களுக்கும்தான் வழங்கப்பட்டன.எம் ஜி ஆர் நல்ல மனிதர் ஆனால் நல்ல நடிகர் அல்ல.அதுவும் ரிக்ஷாக்காரனுக்கு விருது வழங்கப்பட்டது மகா கேவலம்.சிவாஜி இவ்வாறு வெவ்வேறு காலக் கட்டங்களில் வஞ்சிக்கப்பட்டார்.

Amudhavan said...

வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தாக்கங்களுக்கு ஆட்பட்டதாலேயே தமிழர்களின் உணர்வுகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன-அல்லது அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதுநாள் வரையிலும் சரியான திசையில் தமிழ்ச்சமுதாயம் நடைபோடவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. மற்ற மாநிலத்தவர்கள் குறைந்தபட்சம் கலை, கலாச்சாரம் இலக்கியம் போன்ற விஷயங்களில் ஒரு போதும் இம்மாதிரியான குறைபாடுகளுக்கும் சீரழிவுகளுக்கும் ஆளாவதில்லை. இங்கே ஒவ்வொரு அசைவும் கட்சி அரசியல் சார்ந்தும் மிச்சம்மீதி சாதி சார்ந்தும்தான் எடுக்கப்படுகிறது.கண்ணதாசனுக்குக்கூட பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய தகுதிக்கு மிகச்சாதாரணமான ஒரு பாடலுக்குத்தான் சிறந்த பாடலுக்கான விருது கொடுத்தார்கள். எல்லாவற்றையுமே அரசியல்தான் தீர்மானிக்கிறது என்பதிலும் மக்களிடம் சரியான புரிதலும் உணர்வும் இல்லையென்பதும்தான் இங்குள்ள பிரச்சினை. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கடகா.

தறுதலை said...

ஹர ஹர சங்கர என்று பொங்கி எழுந்த ஜெயகாந்தன், வாழை இலை வஸ்துவை வாயில் குதப்பியபடி, தமிழை வைத்து நக்கிப் பிழைக்கும் நாய்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது வேடிக்கை. சமூக அக்கறை என்றால் என்ன விலை என்று கேட்கும் சுய நலக் கும்பல்.

சிவாஜி கணேசனுக்கு விருது கொடுக்காதது அந்த விருதுகளுக்குத்தான் கேவலம். சிவாஜி பெயரில் விருது ஆரம்பிக்கப்பட்டு அதை திரைத்துறையின் உயரிய விருதாக கொண்டாடினால் மட்டுமே இந்த களங்கம் நீங்கும். அதெல்லாம் இந்தியாவில் நடக்காது. நடக்கவும் விடமாட்டார்கள்.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2012)

Amudhavan said...

ஆமாம் தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.

Post a Comment