Thursday, May 9, 2013

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் – பிஜேபி தோற்றது ஏன்?

                                                                            

 கர்நாடகத் தேர்தல் முடிவுகள் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. ‘மோடி பிரச்சாரத்துக்கு வந்தும் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லையே’ என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கருத்துச்சொல்ல ‘ராகுல் வந்தும் வெற்றிபெற்றிருக்கிறார்களே என்பதுதான் என்னுடைய ஆச்சரியம்’ என்று இல.கணேசன் பளீரென்று திருப்பியடித்ததை ரசிக்கமுடிந்தது.
                                                   
தென்னிந்தியாவின் முக்கியமான ஒரு மாநிலத்தை பாரதிய ஜனதா  பிடித்திருந்தது அதனையும் இப்போது இழந்துவிட்டதே என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. பாரதிய ஜனதா இரண்டாவது இடத்திற்குக்கூட வரவில்லை. மூன்றாவது இடமா இரண்டாவது இடமா என்று தீர்மானிக்கமுடியாமல் ஐக்கிய ஜனதா தளத்துடனான சமமான இடத்தைப் பிடித்திருக்கிறது. உண்மையில் இதற்கும் கீழே இருக்கவேண்டியதுதான் 

கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவின் நிலைமை. கட்சிப் பாகுபாடுகளின்படி அரசியல் சிந்தனை ஓட்டம் பரவியிருக்கும் யதார்த்த நிலைமை இதுதான். அப்படியானால் போனமுறை பாரதிய ஜனதா எப்படி ஆட்சியைப் பிடித்தது?

இதுதான் அலசி ஆராயப்படவேண்டிய கேள்வி.

இப்போது அல்ல; எப்போதுமே கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவுக்கான இடம் முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள்தான். போன தேர்தலிலும் இப்படித்தான் வந்திருக்கும். கர்நாடகத்தில் வலிமையுள்ள கட்சிகள் என்றால் ஜனதா தளமும் காங்கிரஸூம்தாம். அதுவும் ஜனதா தளத்திற்கான அடித்தளம் இந்திரா காந்தியின் ஆட்சியில் அவசரநிலை காலத்தில் போடப்பட்டது. இந்திரா காந்தியின் அவசரநிலைக்காலக் கொடுமைகளை மக்கள் உணர்ந்தார்கள். அதனால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். பெங்களூர் நகரின் பொதுத்துறை நிறுவனங்களின் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் எமர்ஜென்சி கால கெடுபிடிகளில் வாட்டிவதைக்கப்பட்டதை அனுபவபூர்வமாய் உணர்ந்தார்கள். பெங்களூர் ஜெயிலில் அடைத்துவைக்கப்பட்ட தேசத்தலைவர்களின் துயரங்கள் சிறையைத் தாண்டி அவ்வப்போது கசிந்துகொண்டிருந்தன.

தமிழ்நாட்டில் எமர்ஜென்சியைக் காப்பாற்றிக்கொண்டிருந்த அயோக்கிய ஊடகங்களும் எம்ஜிஆரைப் போன்று ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்த மக்களின் அமோக ஆதரவு பெற்ற அடிவருடித் தலைவர்களும் இங்கு இருக்கவில்லை. தேசம் பூராவும் நடைபெற்ற அட்டூழியங்கள்  உடனுக்குடன் மக்களிடம் பரப்பப்பட்டன. இந்திரா காந்திக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்ற கோபம் மக்களிடம் இருந்தது. அதனால் எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் இங்கே தோற்கடிக்கப்பட்டது. ஹெக்டே போன்ற மக்கள் தலைவர்கள் ஜனதா கட்சியின் மூலம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக உலா வந்தார்கள். ஜனதா கட்சிக்கான அடித்தளம் மிக ஆழமாகவே போடப்பட்டது.

அதுவரை உதிரிக்கட்சிகளாக இருந்த பிரஜா சோஷலிஸ்ட், ஜனசங்கம் இன்னும் நிறையக் கட்சிகள் சேர்ந்து உருவான ஜனதா கட்சி மக்களிடம் மிக அதிகமான செல்வாக்கைப் பெற்றது. இளைஞர்களிடம் மிகப்பெரும் சக்தியாகவே வளர்ந்தது. ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, ஜே.எச்.பட்டேல், தேவே கௌடா போன்ற தலைவர்கள் மக்களிடம் புகழ்பெற்றவர்களாக வலம்வந்துகொண்டிருந்தனர். முதல்வராக வந்த ஹெக்டே கர்நாடகத்தையும் தாண்டி அகில இந்திய அளவில் புகழ் பெற ஆரம்பித்தார். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவும் அவருடைய புகழை அதிகரிக்கவே செய்தது.

இந்த நிலையில் கட்சிக்குள்ளேயே குழு மனப்பான்மையை ஆரம்பித்தார் தேவே கௌடா. அடுத்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றதும் அடுத்த முதல்வர் என்பது மக்கள் கண்ணோட்டத்தில் ஹெக்டே என்றிருக்க, தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜாதி அரசியலைத் தொடங்கினார் தேவேகௌடா. ஹெக்டே சுயமரியாதைப் பார்க்கிறவர் என்பதால் அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றுவது இந்தக் கூட்டத்திற்கு சுலபமானதாக இருந்தது. முதல்வர் தேர்வுக்காக ஹெக்டே வந்தபோது செருப்பால் அடிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளில் ஜனதா பிளவுபடுவது தவிர்க்கமுடியாமல் போயிற்று. ஹெக்டே காலத்திலேயே இரண்டாகப் பிளவுபட்ட ஜனதா அவருடைய மறைவுக்குப்பிறகு முழுக்க முழுக்க தேவேகௌடாவின் கைகளுக்கு முழுவதுமாகப் போய்விட்டது.

ஜனதா கட்சியிலிருந்து தனியே பிரிந்த ஜனசங்கம் பாரதிய ஜனதா என்ற பெயரில் தனியாக எடியூரப்பா தலைமையில் அதுபாட்டுக்கு ஒரு ஓரமாகச் செயல்பட்டுவந்தது. இதற்கிடையில் ஹெக்டேவை ஒழித்துக்கட்டிவிட்டு முதல்வராகப் பதவி வகித்த தேவேகௌடாவுக்கு அதிர்ஷ்ட தேவதை இரு கரங்களை அல்ல, இருநூறு கரங்களை விரித்துவந்து அவரை அப்படியே அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பிரதமர் பதவியில் உட்காரவைத்தது. பிரதமர் பதவியில் உட்கார்ந்துவிட்ட போதிலும் அவர் கர்நாடக முதலமைச்சர் வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் என்றே பத்திரிகைகள் கார்ட்டூன் போட்டன. ஒரு மேயர் கூட கலந்துகொள்ள மறுக்கும் சாதாரண திறப்பு விழாக்களில் இந்தியாவின் பிரதமராக இருந்த தேவேகௌடா கலந்துகொண்டு திறந்துவைத்துக்கொண்டிருந்தார். “சார் எங்க தெருவுல குழாய் கனெக்ஷன் கொடுத்துட்டாங்க. திறப்பு விழாவுக்கு எப்ப வர்றீங்க”” என்ற கார்ட்டூன் ரொம்பவும் பிரபலம்.
தமிழகத்தில் ராமதாசைப் போலவே கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை முழுக்க முழுக்க சாதிக்கட்சியாகத்தான் நடத்துகிறார் தேவேகௌடா. தவிர இந்த மாநிலத்தில் எப்போதுமே அரசியலில் ஜாதிதான் பிரதானம். ஆனால் அது நீறுபூத்த நெருப்பாய்த்தான் இருக்கும். தேவேகௌடா குடும்பம் ஒக்கலிகா என்றால் இன்னொரு பெரிய எண்ணிக்கையில் உள்ள ஜாதி லிங்காயத்துகள். அதனைச் சேர்ந்தவர் எடியூரப்பா. அன்றையிலிருந்து பார்த்தோமானால் நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல், ஜே.எச்.பட்டேல் என்று லிங்காயத்துகளும், ஒக்கலிகரும்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள். இரண்டே இரண்டுமுறைதான் இந்தக் கணக்கு மாறியது. ஒருமுறை சஞ்சய் காந்தியின் புண்ணியத்தால் குண்டுராவ் என்ற பிராமணர் ஆட்சிக்கு வந்தார். அடுத்தமுறை மக்கள் எழுச்சி மற்றும் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஹெக்டே என்ற பிராமணர் முதல்வராக வந்தார். பங்காரப்பா போன்ற குருபர்கள் ஆட்சிக்கு வந்ததும் நடந்திருக்கிறது.(இந்தமுறை சித்தராமையா முதல்வராக வருவாரா பார்க்கவேண்டும். இவரும் குருபர்தான், மல்லிகார்ஜூன கார்கே பெயரும் அடிபடுகிறது. இவர் தற்சமயம் டெல்லி மந்திரியாக இருக்கிறார். தலித் என்பதனால் இவர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, சித்தராமையா தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர். தனித்தன்மையுடன் இயங்கக் கூடியவர் என்பதனால் தங்களுக்கு ஒரு தலையாட்டி பொம்மையாக இருக்கமாட்டார் இவர் என்றும் டெல்லி தலைமை கருதக்கூடும்.)

அடுத்துவந்த தேர்தல் ஹெக்டே இல்லாமல் ஜனதா தளக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபின்னர் வந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளத்திற்குத் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தது. அப்போதுதான் தேவேகௌடா அந்தக் காரியம் செய்தார். வலியப்போய் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கண்டார். அதற்கு முன்பு பாரதிய ஜனதாவில் கட்சிமாறி புகழ் முன்னாள் முதல்வர் பங்காரப்பா போய்ச் சேர்ந்திருந்ததால் பாரதிய ஜனதாவின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்திருந்தது. ‘நீயும் நானும் சேர்ந்து ஆட்சி அமைப்போம். இருபது மாதங்கள் நான் ஆட்சி செய்கிறேன். அதற்கடுத்த இருபது மாதங்கள் நீ ஆட்சி செய்’ என்கிறமாதிரியான ஒப்பந்தம் பிஜேபிக்கும் ஜனதா தளத்திற்கும் இடையில் போடப்பட்டது.

தன்னுடைய மகனான எச்.டி.குமாரசாமியை முதல்வராக்கினார் தேவேகௌடா. எச்.டி. குமாரசாமியின் பதவிக்காலம் முடிந்ததும் முறைப்படி பாரதிய ஜனதாவுக்கு,  அதன் தலைவராக இருந்த எடியூரப்பாவுக்கு பதவியை விட்டுக்கொடுத்திருக்கத்தானே வேண்டும்? விட்டுத்தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணினார் குமாரசாமி. (விட்டுத்தந்து விடலாம் என்று குமாரசாமி சொல்லியபோதும் அவரை அப்படிச் செய்யவேண்டாம் என்றவர் தேவேகௌடாதான் என்றும் சொல்கிறார்கள்)

மக்கள் எச்.டி.குமாரசாமியின் மீது கோபம் கொண்டது இப்போதுதான். உண்மையில் குமாரசாமியின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது.  எத்தனை சிறப்புகள் இருந்தபோதும் சொன்ன சொல் தவறுவது நேர்மையோ நியாயமோ அல்ல என்றுதான் மக்கள் நினைத்தார்கள்.

இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டவர் எடியூரப்பா. தனக்கு ஒப்பந்தப்படி விட்டுத்தந்திருக்கவேண்டிய ஆட்சியை விட்டுக்கொடுக்கவில்லை இது குமாரசாமியும் ஜனதாதளம் கட்சியும் தனக்குச் செய்த துரோகம் என்பதாக அவர் சூறாவளிப் பிரச்சாரம் செய்தது மக்களிடம் மிக நன்றாகவே எடுபட்டது. பாரதிய ஜனதாவுக்கு ஜனதா தளம் விட்டுத்தந்திருக்கவேண்டும் என்பதையும் தாண்டி, எடியூரப்பாவுக்கு குமாரசாமி விட்டுத்தந்திருக்கவேண்டும் என்பதாகவே மக்களிடம் அனுதாப அலை உருவானது. 

அந்த அனுதாப அலையை வைத்துக்கொண்டு தேர்தலை பாரதிய ஜனதாவின் கோணத்தில் இல்லாமல் வேறொரு புதிய கோணத்தில் சந்திக்க முடிவு எடுத்தார் எடியூரப்பா. இதற்கு அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அத்தனைப் பணமும் சுரங்கத் தொழில் புரிந்துவந்த ரெட்டி சகோதரர்கள் மூலம் களமிறக்கப்பட்டது.

கோடிகள் கரை புரண்டு ஓடின.

இந்தக் கோடிகளைத் தாண்டி தேவைப்பட்ட இன்னும் பல கோடிகள் குஜராத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் மாதிரி மாநிலமாகவும் இருக்கும் குஜராத்திலிருந்து எப்படி அத்தனைக் கோடிகள் கரைபுரள முடியும்?

அந்த முதலமைச்சர்தான் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மைக்குப் பேர்போனவர் ஆயிற்றே! அங்கிருந்து எப்படி கோடிகள் வரமுடியும்?

தெரியவில்லை. ஆனால் வந்ததாகச் சொன்னார்கள்.

இந்தப் பணத்தில் என்ன நடந்தது தெரியுமா? கர்நாடகம் பூராவும் அங்கங்கே உள்ளூரில் இருந்த ஜனதா தளத்தைச் சேர்ந்த அத்தனைக் “குட்டித்தலைவர்களும்” தொண்டர்களும் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

இவர்கள் மூலம் பாரதிய ஜனதாவுக்கு எல்லா ஊர்களிலும் தொண்டர்களும் குட்டித்தலைவர்களும் புதிதாகக் கிடைத்தார்கள். முக்கியமாக குடிசைப் பகுதிகளிலும் சேரிகளிலும் ஜனதா தளம் என்ற போர்டு ‘பாரதிய ஜனதா’ என்று மாற்றப்பட்டது. நெற்கதிர் சுமந்த பெண் மாற்றப்பட்டு தாமரைப்பூப்போட்ட கொடி ஏற்றப்பட்டது.

எதற்கென்றே தெரியாமல் காவி நிறம் தாழ்த்தப்பட்டவர்களின் பிற்படுத்தப்பட்டவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்தது.

பாரதிய ஜனதா கட்சி படித்தவர்களுக்கானது. பிராமணர்களுக்கானது. அறிவு சார்ந்தவர்கள்தான் அந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பார்கள். அந்தக் கட்சி இன்டலக்சுவல்களின் கட்சி. என்றிருந்த நிலைமை அடியோடு மாறிற்று.

படித்த தொண்டர்கள், கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்கள்தாம் பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடி பிடிப்பார்கள் அவர்கள்தாம் கட்சிக்குத் தேர்தல் வேலைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை தலைகீழாக மாறிப்போய் பாரதிய ஜனதாவுக்குத் தேர்தல் வேலைப்பார்த்தால் பிரியாணி, சாராயம், கையில் சுளையாக இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் என்று பணம் இறைக்கப்பட்டது.

ஜனதா தளத்திலிருந்து புதிதாக வந்த ஐம்பது சதவிகித தொண்டர்களின் துணையுடன் தேர்தலைச் சந்தித்த பாரதிய ஜனதா-

முட்டி மோதி ஆட்சியைப் பிடித்துவிட்டது!


ஓட்டளித்தவர்கள் அத்தனைப்பேரும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், வாழ்க்கையின் கடைநிலையைச் சேர்ந்தவர்கள்………………….. இவர்களுடைய ஓட்டுக்கள் மூலம்தான் பதவிக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் எடியூரப்பா ஒருவர்தான். மற்ற எல்லாத் தலைவர்களுமே பிஜேபி தன்னுடைய கொள்கையைக் கர்நாடகத்தில் வேரூன்றித்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்றே குருட்டுத்தனமாக நினைத்தனர்.

எடியூரப்பா பாரதிய ஜனதாவின் காவி நிறத்தைக் கூடுமானவரை ஒதுக்கிவைத்துத்தான் ஆட்சி புரிந்தார்.

ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. மந்திரிசபை அமைப்பதிலிருந்து ஆட்சியின் தினசரி நடவடிக்கைகள் உட்பட தாங்கள் நினைத்தபடிதான் நடக்கவேண்டும் என்று ரெட்டி பிரதர்ஸ் நினைத்தனர்.

இதனை உடைக்கவேண்டும் , ரெட்டி சகோதரர்களிடமிருந்து ரிமோட் கண்ட்ரோலைப் பிடுங்கிவிட வேண்டும் என்று நினைத்தார் எடியூரப்பா.

அடுத்தது, கர்நாடக பாரதிய ஜனதா என்றாலேயே என்னதான் முதல்வர் எடியூரப்பா என்றாலும் பிராமணரான அனந்தகுமார்தான் இங்கே எல்லாம். அவர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்வதைத்தான் டெல்லி கேட்கிறது. அவர் நினைத்தபடிதான் சின்னச்சின்ன அசைவும் நடக்கிறது.  இதிலிருந்து வெளிவர வேண்டும். அனந்தகுமாரின் மேலாதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்றும் முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்தார் எடியூரப்பா.

பிரச்சினை இங்கிருந்துதான் ஆரம்பித்தது.

பாரதிய ஜனதா தலைமைக்கும் எடியூரப்பாவுக்குமான நிழல் யுத்தங்கள் ஆரம்பமாயின. இவர் அவர்களை மாட்டிவிட, அவர்கள் இவரை மாட்டிவிட என்று அசிங்கமான அரசியல் நிகழ்வுகள் நாளும் நடைபெற ஆரம்பித்தன.

ஒவ்வொருவரும் ஊழல் புரிந்துதான் அரசியல் நடத்துகிறார்கள் என்பதால் இரண்டு பேருக்குமே ஒருவரை ஒருவர் மாட்டிவிட சுலபமான ஆதாரங்கள் கிடைத்தன.

ரெட்டி சகோதரர்கள் மீது ஊழல் வழக்குகள் பாய எடியூரப்பாவின் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. ஈஸ்வரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். மற்ற மந்திரிகள் சட்டமன்றம் நடைபெறும்போதே ப்ளூபிலிம் பார்ப்பது, நர்ஸ் ஒருவருடன் அனிருத் ஆண்ட்ரியா வகையில் முத்தமிட்ட காட்சி லீக் ஆனது என்பதுபோல் பாரதிய ஜனதாவின் புகழைச் செம்மையாக வளர்த்தனர்.

இந்த லட்சணத்தில்தான் பிஜேபி ஆட்சி ஓடிக்கொண்டிருந்தது.

எடியூரப்பாவை விலக்கிவிட்டால் அவர் சும்மா அடங்கிவிடுவார் என்று பிஜேபி மேலிடம் தப்புக்கணக்குப் போட்டது.

எடியூரப்பாவைத் தவிர மக்களிடம் செல்லுபடியாகின்ற தலைவர்கள் பிஜேபியிடம் கிடையாது.
அனந்தகுமார் சாதி ரீதியாக மேலிடத்தின் செல்வாக்குப் பெற்றவர்.

ஈஸ்வரப்பா என்ற தலைவர் ஒருவர் இருக்கிறார். கர்நாடக பிஜேபியில் நேற்றுவரைக்கும் மாநிலத்தலைவராக இருந்தவர் இவர்தான். காடுவெட்டி குரு பேட்டி தந்தால் எப்படியிருக்குமோ அதைவிட மோசமான மொழிநடை இவருடையது. இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுத் தோல்வி அடைந்திருக்கிறார் ஈஸ்வரப்பா. கர்நாடக மக்களில் பெரும்பான்மையோர் மகிழ்ந்தும் சிலாகித்தும் கொண்டாடும் தோல்வி இவருடையதுதான்.

அடுத்த ஒன்றரை வருடத்தில் இரண்டு முதல்வர்கள் வந்தார்கள். உண்மையில் சதானந்த கௌடாவும் ஜெகதீஷ் ஷெட்டரும் பரிதாபத்துக்குரிய ஆத்மாக்கள்தாம். ஓ.பன்னீர்செல்வம் போன்று இவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது முதல்வராகக் கொஞ்ச நாட்கள் இருந்தார்கள், அதிர்ஷ்டம் முடிந்தது வீட்டுக்குப் போய்விட்டார்கள். அவ்வளவுதான்.

இந்த அரசியல் சூழலில் மறுபடியும் ஒரு தேர்தல் வந்தால் முடிவு எப்படி இருக்கும் என்பதை சுலபமாகவே ஊகிக்கமுடியும்.

இந்த நிலையில் எடியூரப்பா புதுக்கட்சி ஆரம்பித்து ஜனதா தளத்திலிருந்து வந்து பிஜேபியில் சேர்ந்திருந்த அத்தனைப் பேரையும் மறுபடியும் தம்முடன் அழைத்துவந்துவிட்டார். ஆக பிஜேபி, தான்இருந்த தன்னுடைய பழைய இடத்திற்கு மீண்டும் போய்விட்டது.

இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட தாக்கங்களால் பிஜேபி இன்னமும் அதிகமாகத் தன்னுடைய வேர்களைப் பரப்பியிருக்கவேண்டும். இன்னமும் பத்து சீட்டுக்களாவது அதிகம் பெற்றிருக்கவேண்டும். அது நடைபெறவில்லை.

பல மாவட்டங்களில் பிஜேபியின் கணக்குக்கு ஒரு சீட்டுக்கூட இல்லை. வெறும் சைபர்தான். குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நான்கு ஐந்து என்று வந்திருப்பதால் நாற்பது இடங்கள். அதிலும் பெங்களூர் நகரில் பன்னிரெண்டு இடங்கள் பிஜேபிக்குக்

கிடைத்திருக்கிறது. காரணம் தமிழர்களின் ஓட்டு.

தமிழர்கள் காங்கிரஸூக்குப் போடாமல் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டி எடுத்த முடிவு. வள்ளுவர் சிலைதிறப்பு போன்ற விவகாரங்களும் பிஜேபிக்கு சாதகமாய் எடுக்கப்பட்டன. வள்ளுவர் சிலை திறந்தது எடியூரப்பாதானே. அவருக்குத்தானே போயிருக்கவேண்டும் தமிழர்கள் ஓட்டு? என்ற கேள்வி வரலாம். பெங்களூரில் இருந்த கணிசமான தமிழ்க் கவுன்சிலர்களின் கட்டுக்கோப்பான செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி இது. நிறைய தமிழ்க் கவுன்சிலர்கள் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்கள். இதுதான் இப்போதைய தேர்தல் முடிவின் கதை.

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் கர்நாடக அரசியலில் மறுபடியும் மாற்றங்கள் வரலாம். எடியூரப்பாவை டெல்லி மேலிடம் மறுபடி ‘தாய்க்கட்சிக்கு’ வரச்சொல்லி அழைப்பு விடுக்கலாம். எடியூரப்பாவும் மூட்டை முடிச்சுக்களுடன் கேஜேபியை மூடிவிட்டு பிஜேபியுடன் போய்ச்சேரலாம்.


அப்படிப்போய்ச் சேர்ந்தாலும் மறுபடியும் சட்டமன்றத் தேர்தல் வரும்போது பாரதிய ஜனதாவுக்கு ஐம்பது இடங்கள் கிடைக்கலாம். குமாரசாமி பரந்த கண்ணோட்டத்துடன் சாமர்த்திய அரசியல் நடத்தினாரென்றால் ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கலாம்.

6 comments :

vijayan said...

இன்றைய தேதியில் குமாரசாமி அளவிற்கு மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி யிலோ கிடையாது.ஆனால் இந்த தேர்தலில் மீடியாக்கள் ஜனதா தளத்தை ஒரு வழி ஆக்கிவிட்டன.

Amudhavan said...

நீங்கள் சொல்வதென்னவோ உண்மைதான் விஜயன்.

Anonymous said...

ஏதாச்சும் அடிச்சு உடாதீங்க
உங்களுக்கு பிஜேபி பிடிக்காது
பிராமணர்களை பிடிககதுன்னு வெளிபடையாக சொல்ல வேண்டியது தானே

பெங்களூர் தெற்க்கு, ஜெயநகர், பொம்மனகல்லி , பவனகுடி. இதெல்லாம் பிஜேபி ஜெயித்த தொகுதிகள். இங்கு எத்தனை தமிழ் கவின்சிலர்கள் இருக்கிறார்கள்?

காங்கிரஸ் ஜெயித்த பிடிஎம், சிவாஜி நகர், காந்திநகர் தொகுதிகள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி.

ஏதாச்சும் எழுதனும்னு எழுதகூடாது

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்! இந்திராவின் சிக்மகளூர் காலம் தொட்டே நீங்கள் கர்நாடக அரசியலை பிரித்து மேயும் வல்லமையுள்ளவர் என்பதை இந்த பதிவு மீண்டுமொரு முறை உணர்த்துகிறது.நேற்று புதிய தலைமுறை நேர்பட கலந்துரையாடலை விட சிறப்பாக பல விசயங்களை பதிவு தொட்டுச் செல்கிறது.

என்னைப்பொறுத்த வரையில் பிஜேபியின் தோல்விக்கு இரண்டே காரணங்கள் ஊழல் மற்றும் எடியூரப்பா மட்டுமே.பிஜேபி தென்னிந்தியாவில் கால் ஊன்றும் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விட்டார்கள்.அகில இந்திய அளவிலும் கூட ஜனதா ஆட்சி,பிஜேபி ஆட்சியின் குறைகளே காங்கிரஸை இன்னும் மாற்று சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

பெங்களூர் வாழ் தமிழர்களால்தான் ஒரு சில இடங்களையாவது பிஜேபி பிடிக்க முடிந்தது என்கிறீர்கள்.ஆனால் தமிழர்கள் அதிகம் வாழும் கோலார் பகுதிகளிலும் கூட பிஜேபி தோல்வியடைந்துள்ளது என்பதோடு போட்டியிட்ட தமிழர்களும் தோல்வியடைந்துள்ளதுக்கு காரணம் என்ன?

பெங்களூர் வாழ் இணையதாரர்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

Amudhavan said...

வாங்க அனானிமஸ், சும்மா எதையோ அடிச்சுவிடவில்லை. பிஜேபி தோற்றதற்கான காரணத்தை தத்துவார்த்த ரீதியாகவே எல்லோரும் அலசிக்கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் என்ன நடந்தது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையிலும், கண்கூடாகச் சிலவற்றைப் பார்க்கமுடிந்தது என்ற முறையிலும்தான் ஜனதா தளத்தின் குட்டித்தலைவர்கள் 'வாங்கப்பட்ட' விவகாரம்தான் வெற்றிக்கும், தற்போதைய தோல்விக்கும் காரணம் என்பதைக் கணித்து எழுதப்பட்ட பதிவு இது. ஏனெனில் என்னுடைய நண்பர்கள் சிலர் ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள், 'நல்ல விலைக்கு' வாங்கப்பட்டார்கள். அந்த அனுபவமும் அவர்கள் கொடுத்த பல தகவல்களும்கூட இந்தப் பதிவை எழுதக் காரணமாயின.
இதில் பிராமணர்களைப் பிடிக்காது என்பதும் பிஜேபியை பிடிக்காது என்பதும்தாம் காரணம் என்று நீங்கள் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய இந்திய அரசியலில் எந்த ஒரு கட்சியையுமே முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. என்னைப்பொறுத்தவரை காங்கிரஸூக்கு என்ன இடமோ அதே இடம்தான் பிஜேபிக்கும்.
தவிர, பிராமணர்களை எனக்குப் பிடிக்காது என்பதை எதைவைத்துச் சொல்கிறீர்களோ புரியவில்லை. நீங்கள் யார் என்பதும் தெரியவில்லை.
நான் முன்பே ஒருமுறை இணையத்திலேயே சொல்லியிருக்கிறேன், எனக்கு பிராமண நண்பர்கள்தாம் அதிகம் என்பதை. என்னை வளர்த்து ஆதரித்த மிக முக்கியமான எழுத்தாளர்கள் சாவியும், சுஜாதாவும், நாபாவும்....மூவருமே பிராமணர்கள்தாம். தவிர எனக்குப் பிடித்த தி.ஜானகிராமன், ஸ்ரீவேணுகோபாலன்,ராகி.ரங்கராஜன், அகஸ்தியன் இன்னும் நிறைய நிறைய எழுத்தாளர்கள் பிராமணர்களே. இப்போதைய பாலகுமாரனும், மாலனும்கூட என்னுடைய மிக நல்ல நண்பர்களே. இத்தனை இருந்தும் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு நீங்கள் அரசியல்ரீதியான காரணங்களைத் தேடி அடுக்காதீர்கள். மேலே உள்ள பதிவில் பிஜேபியை விமர்சன வளையத்துக்குள் கொண்டுவந்ததும் அனந்தகுமாரை விமர்சித்ததுவும் மட்டுமே உங்களுடைய 'முத்திரையைக்' குத்துவதற்குப் போதுமானது என்றால் ஹெக்டே பற்றி நல்லவிதமாகத்தானே சொல்லியிருக்கிறேன். அவர் பிராமணர் இல்லையா?
தேவேகௌடாவையும், ஈஸ்வரப்பாவையும் லேசாக குற்றம் சாட்டியிருக்கிறேனே-அவர்கள் பிராமணர்கள் அல்லவே.
ஆக, உங்களுக்கு அவ்வளவுதான் புரிந்தது என்பதற்காக மனம்போன போக்கில் கமெண்ட் போடாதீர்கள். தனிப்பட்ட தொகுதிகளில் பிஜேபி வெல்ல தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. 'ஐடியாலஜிக்காக' எங்கேயும் பிஜேபி ஜெயிக்கவில்லை. அதேபோல ராகுல் பிரவேசத்துக்காகவும் காங்கிரஸ் எங்கும் ஜெயிக்கவில்லை.

Amudhavan said...

வாங்க நடராஜன், உங்களைப் பதிவில் சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டன. உங்களைக் காணோம் என்றெல்லாம் வவ்வால் பின்னூட்டங்களில் பலர் தேடிக்கொண்டிருந்த தமாஷூம் நடந்துகொண்டிருந்தது.
தமிழர்களின் ஓட்டுக்கள் முன்புபோல் காங்கிரஸை மட்டுமே ஆதரித்துப் போடப்படவில்லை. பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டன. எல்லாம் காசு செய்த மாயம்தான்.
தவிர இந்த இரண்டு தேர்தல்களில் பணம் புழங்கியதைப்போல் கர்நாடகத்தில் என்றைக்கும் பணப்புழக்கம் இருந்ததில்லை. மேல்தட்டு வர்க்கம், மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைத் தாண்டி மற்ற அனைவருக்கும் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் பணம் இறைக்கப்பட்டது.
தேர்தல் அன்றைக்கு எங்கள் வீட்டில் வேலைசெய்யும் பெண்மணி 'இரவு தூங்குவதற்காக அப்போதுதான் படுத்தோம். கதவு தட்டப்பட்டது. எழுந்துபோய்த் திறந்தால் எங்கள் வீட்டில் இரண்டு ஓட்டு. இரண்டு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார்கள்' என்றார்.
"பரவாயில்லையே. உனக்கு அதிர்ஷ்டம்தான்" என்றார் என் துணைவியார்.
"என்னம்மா அதிர்ஷ்டம்? பக்கத்து ஏரியாவில் இருக்கும் என் மாமியார் எங்க ஓட்டுக்களையெல்லாம் கணக்குக் காட்டி பத்தாயிரம் ரூபாய் வாங்கியிருக்கார்" என்றார் அந்தப் பெண்.
ஒரு குடும்பத்திற்குப் பத்தாயிரம் ரூபாய்... இந்தியா எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.......... !
தமிழர்களை ஒருங்கிணைக்க நல்லதொரு தலைமை இங்கே கிடையாது. ஈழப்பிரச்சினை ஒன்றிற்கு மட்டும் இங்கே உணர்வுபூர்வமாக ஒன்றுகூடுவார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் தீர்மானிப்பது பணம்தான்.
எப்படியோ 'நம்மவர்கள்' பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு போகவேண்டியதுதான்.

Post a Comment