Sunday, September 15, 2013

சோவும் இசையமைப்பாளர் எம்எஸ்வியும்




சோவைப் பொறுத்தவரை அவருடைய அரசியல், மொழி, இலக்கியம், இனம், சமூக நலன், இட ஒதுக்கீடு சார்ந்த கருத்துக்களில் நமக்கு உடன்பாடு இல்லையே தவிர வேறு பல்வேறு விஷயங்கள் சார்ந்த கருத்துக்களில் உடன்பாடு உண்டு. பொதுவாக சினிமாவைப் பற்றிய அவரது பல்வேறு கருத்துக்கள் ஒப்புக்கொள்ளுகிற மாதிரிதான் இருக்கும்.

அவரது பழகும் சுபாவம் ஒரு ஆச்சரியம். அவருடைய கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் நேர் விரோதமான கொள்கை கொண்டவர்களுடனும் அதுபற்றிய எந்தவித விரோதமும் பாராட்டாமல் அவர் பாட்டுக்குக் கலகலப்பாகப் பழகுவார். எவ்வளவு தீவிரமான கருத்தோட்டம் கொண்டவர்களுடனும் ‘தன்னுடைய கருத்துக்கு ஒத்துவராதவராயிற்றே இவர், இவரிடம் எப்படிப் பேசுவது?’ என்பது போன்ற சங்கோஜங்கள் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த விஷயம் வேண்டுமானாலும் அவரிடம் பேச முடியும். தமக்குப் பிடிக்கவில்லையென்றால் தமது கருத்தை முகத்திலடித்தமாதிரி சொல்லிவிடுவார். நாம் மறுத்துப் பேசினால் அவரும் விவாதிப்பாரே தவிர அதற்காக நம்மீது விரோதம் பாராட்ட மாட்டார். இத்தகைய சுபாவம் கொண்டவராக இருப்பதனால்தான் அவரால் பொதுவாழ்க்கையில் ஐம்பது வருடங்கள் தாண்டியபிறகும் இன்னமும் நிலைத்து நிற்க முடிகிறது. ‘பார்மகளே பார்’ படம் வந்ததிலிருந்து இதுவரைக்கும் புகழுடன் இருக்க முடிகிறது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்தபோதிலும் இன்னமும் அரசியல் பத்திரிகையான துக்ளக்கைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்க முடிகிறது.

தலைவர் காமராஜர் போன்றவர்கள் எல்லாம் ஒரு மனிதரை அருகில் சேர்க்கிறார்கள் என்றால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. ஒரே பார்வையிலேயே ஒரு மனிதரை எடைபோட்டுவிடும் வல்லமை காமராஜருக்கு உண்டு. காமராஜருடன் மிக நெருங்கிய நட்பைப் பேணியவர் சோ. இதே கருத்தை மொரார்ஜி விஷயத்திலும் சொல்லலாம்.

திரையுலகில் சிவாஜியுடனும் எம்ஜிஆருடனும் ஒரே சமயத்தில் சோவால் பழக முடிந்தது. இருவருடனும் சேர்ந்து படங்களில் நடிக்க முடிந்தது. இருவருக்கும் எதிரான கருத்துக்களை அவர்களிடமே பேசிக்கொண்டு, அவர்கள் சார்ந்த கட்சிகளை அவர்களிடமே கிண்டல் செய்துகொண்டெல்லாம் இருந்தவர் சோ. இருவரும் இவரது பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிரித்துவிட்டு விட்டுவிடுவார்கள். எம்ஜிஆர் மட்டும்தான் கட்சி தொடங்கிய சமயத்தில் இவர் கருத்துக்களுக்காக இவர் மீது கோபம் கொண்டவர். ஆனாலும் அது அரசியல் சார்ந்த ஒன்றே தவிர தனிப்பட்ட முறையில் எப்போதும் போல அதே நட்புடன்தான் எம்ஜிஆருடனும் பழகி வந்திருக்கிறார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மிகமிக முரட்டுத்தனமான வாதங்களை வைக்கக்கூடியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரிடமும் நெருங்கிய நட்புடன் இருப்பவர் சோ. ஜெயகாந்தனைத் தமது பத்திரிகையில் தொடர்ந்து எழுதச்செய்தவர். சுஜாதா உச்சத்தில் இருந்தபோது “சுஜாதா எழுத்துக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை சோவிடம் கேட்டேன்.

“ஒண்ணு சொல்லட்டுமா? இப்போ எல்லாப் பத்திரிகைகளிலும் பிரபலமா எழுதிட்டிருக்கவர் சுஜாதா. அவர் எப்படி எழுதுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவருடைய சில எழுத்துக்களைப் படிச்சிருக்கேனே தவிர தொடர்ந்து படிப்பதில்லை. இவர்னு இல்லை. எந்த எழுத்தாளருடைய எழுத்தையுமே முழுமையாகப் படிப்பதில்லை. இதை ஒரு குறைன்னு நினைச்சா நினைச்சுக்கங்க. அதான் என்னுடைய சுபாவம். இப்பவும் எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் கல்கிதான். படிக்கணும்னு தோணுச்சின்னா என்னுடைய டேஸ்ட்டே வேற. நான் பாட்டுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசங்க பக்கம் போயிருவேன். நவீன எழுத்துக்கள் என்னைக் கவர்வதில்லை. ஜெயகாந்தன் பூராவும் படிச்சிருக்கேன். அகிலன் நாபா எல்லாம்கூடப் படிச்சிருக்கேன். பாரதி, கண்ணதாசன் படிச்சிருக்கேன். கண்ணதாசனை ரொம்பவும் பிடிக்கும். உரைநடைன்னு பார்த்தால் கல்கிதான். இப்பவும் தோணுச்சின்னா பொன்னியின் செல்வன் வேணும்னா படிக்க ஆரம்பிச்சிருவேன்” என்றார்.

சோவின் தீவிரமான அரசியல் கருத்துக்களில் பலருக்கு உடன்பாடில்லை. அதற்காக நிறையப் பேருடைய எதிர்ப்பைச் சேர்த்து வைத்திருப்பவர்தான் சோ. கலைஞருக்கு சோ எந்த அளவு அரசியல் எதிரி என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவ்வளவு மோசமாக கலைஞரை விமர்சித்து எழுதுபவர். ஜெயலலிதாவின் அதி தீவிர விசுவாசி. சென்னையில் நடந்த ஒரு பெரிய திருமணத்திற்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர் வந்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சோ சட்டென்று எழுந்தார். மடமடவென்று கலைஞரிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். அவருடைய காதில் ஏதோ கிசுகிசுத்தார். மறுகணம் கலைஞர் குலுங்கிச் சிரித்தபடி பதிலுக்கு அவரும் ஏதோ இவரிடம் சொல்லிவிட்டுச் சிரிக்க…… நிறைய காமிராக்கள் இந்தப் படங்களை உள்வாங்கிக்கொண்டன. மொத்த விருந்தினர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். எவ்வளவு தீவிரமான அரசியல் எதிர்ப்பு கொண்டிருந்தபோதும் தனிப்பட்ட முறையில் எப்படிப் பழகுவது என்ற கலை சோவுக்கு அத்துப்படி.

எந்த நாளிலும் எந்த நேரத்திலும் நகைச்சுவையுடனேயே பேசும் திறமை எல்லாருக்கும் வந்துவிடாது. சோவின் கேள்வி பதில்களில் இரண்டு பதில்களை மறக்க முடியாது. ஒரு முறை துக்ளக் கேள்விபதிலில் ஒரு வாசகர் ‘மழை ஏன் சோவென்று பெய்கிறது?’ என்று கேட்டிருந்தார். அவரது பெயர் காட்டான் புதூர் மாணிக்கமோ என்னவோ. ‘பின்னே என்ன காட்டான்புதூர் மாணிக்கம் என்றா பெய்யும்?’ என்று பதிலளித்திருந்தார் சோ.

இன்னொரு சமயம் ஒரு வாசகர் ‘இந்திரா காந்திக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?’ என்று கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது ரொம்பவும் சிரமம். வேறு யாராயிருந்தாலும் இந்தக் கேள்வியையே தவிர்த்திருப்பார்கள். தூக்கிக் குப்பையில் போட்டிருப்பார்கள். சோ பதில் சொல்லியிருந்தார். ‘நடந்து முடிந்த தேர்தலில் நான் அலகாபாத்தில் போட்டியிட்டிருந்தால் நானும் தோற்றிருப்பேன் என்பதைத் தவிர அவருக்கும் எனக்கும் வேறெந்த 
ஒற்றுமையும் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்’

சினிமா பற்றிய, நாடகங்கள் பற்றிய, நண்பர்கள் பற்றிய, தனி மனிதர்கள் பற்றிய சோவின் கருத்துக்களில் பாசாங்குகள் இருக்காது. நேர்மையுடன் தமது மனதிற்குப் பட்டதைத் துணிச்சலுடன் சொல்லிவிடுவது அவர் வழக்கம். கல்வி கேள்விகளில் சிறந்த அவருடைய அரசியல் சார்பான கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாமே தவிர அவருக்கு அந்த விஷயங்கள் தெரியாது என்றெல்லாம் யாராலும் சொல்லமுடியாது. தவிர, இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். இசை பற்றிய ஞானம் அவருக்கு நிறைய உண்டு.

தற்போது குமுதம் வார இதழில் தாம் பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதி வருகிறார் சோ. இந்தத் தொடரிலும் அவ்வளவுதான். எவ்வித பாசாங்குகளும் அற்று தம்முடைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார் அவர். சமீபத்தில் இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல சுவாரஸ்யமான தகவல்களுடனும் திரை இசையைப் பற்றிய, எம்எஸ்வியைப் பற்றிய  தமது கருத்துக்களுடனும்……………….!. அதில் சில கருத்துக்களும் தகவல்களும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களாகவும் உள்ளன. அவர் சொல்கிறார்; 

(இதில் சோ சொன்னவையெல்லாம் வண்ணத்தில் உள்ளன)

“கவிஞர் கண்ணதாசனைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவருக்கு குழந்தை மனது என்றிருப்பேன். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு குழந்தையேதான்.


அவரைப் பொறுத்தவரை இசைதான் அவருக்கு எல்லாம். இசையைத் தவிர மற்றவற்றைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்வதிலும் விருப்பம் காட்டமாட்டார்.
அவருக்குக் குருநாதர் இசையமைப்பாளர் எஸ்எம் சுப்பையா நாயுடு. அவருக்காக எம்எஸ்வி ஒரு விழா எடுத்தார். அந்த விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை அழைத்திருந்தார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த விழாவில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல நடிகர்கள் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வதாக தகவல் தெரிய வந்ததும் விஸ்வநாதனிடம் கேட்டேன். “நான் திமுகவைக் கடுமையா விமர்சனம் பண்ணிண்டிருக்கேன். திமுகவை விமர்சிக்கிறதை எம்ஜிஆர் கொஞ்சம்கூட விரும்ப மாட்டார்(அப்போது அவர் திமுகவில் இருந்த சமயம்). நான் அவரோட சினிமாவில் நடிச்சாலும் இந்த மேடையில் நான் தொகுத்து வழங்கறப்போ என்ன பேசுவேனோன்னு அவர் நினைக்கலாம். சில பிரச்னைகள் வரலாம். அதனால் நீங்க என்னைத் தொகுத்து வழங்கச் சொல்லாமல் வேறு யாரையாவது பண்ணச் சொல்லுங்க. நான் வேண்டாம். உங்களுக்கும் இது நல்லதில்லை”.

விஸ்வநாதன் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.                             

“அதெல்லாம் பத்தி எனக்கென்ன? நான் ஒரு விழா எடுக்கறேன். எனக்கு சோ ஃபிரண்ட். எனக்கு அவர் வேணும். கலந்துக்கணும். இதனாலே எல்லாம் எம்ஜிஆருக்குக் கோபம் வராது. நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டு என்னிடம் “நீங்க அங்கே அரசியல் பேசுவீங்களா?” என்று கேட்டார்.

“நான் எந்த இடத்தில் எதைப் பேசறதுன்னு எனக்குத் தெரியாதா? நான் அரசியல் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.

“சரி அது போதும்” என்று சொல்லிவிட்டு விழாவுக்கான அழைப்பிதழைக் கொண்டுவந்து காண்பித்தார்.

எம்ஜிஆரின் பெயர் முதலில் போடப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் இருந்தது.

“எம்ஜிஆரிடம் இதைக் காண்பிச்சுட்டீங்களா?”

“இல்லை இனிமேல்தான் காண்பிச்சுட்டு சொல்லப்போறேன்” சொல்லிவிட்டு எம்ஜிஆரைச் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார்.  அழைப்பிதழை வாங்கியதும் அதிலுள்ள பெயர்களை எல்லாம் பார்த்திருக்கிறார் எம்ஜிஆர்.

“இந்த இன்விடேஷன்ல இருக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டீங்களா?”
“சொல்லிட்டேன்”

“சோ கிட்டே சொல்லிட்டீங்களா?”

“சொல்லிட்டேன்”

“என்ன காரியம் பண்ணியிருக்கீங்க நீங்க? சோ திமுகவை எதிர்க்கிறவர். அவர் ஏதாவது திமுகவைப் பத்திப் பேசினா எனக்குத் தர்மசங்கடமாப் போகும். என் கிட்டே நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா?”

“இதில் பிரச்னை இருக்கும்னு தோணலை” – தயக்கத்துடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார் எம்எஸ்வி. “உங்க படங்களில்கூட சோ நடிக்கிறாரே?”

“அது வேற. இது வேற”

“நான் வேணும்னா சோ கிட்டே போய் ‘எம்ஜிஆர் வேணாம்ங்கிறார். அதனால் நீங்க வேணாம்னு சொல்லிடுறேன்”

“இன்னும் இதைக் கெடுக்கறதுக்கு என்ன வழியுண்டோ அதைக் கண்டுபிடிக்க உன்னால்தான் முடியும்” என்று எம்எஸ்வியைக் கண்டித்தாலும் சொன்னபடி விழாவுக்கு வந்து விட்டார் எம்ஜிஆர்.
சிவாஜியும் வந்துவிட்டார்.  மேடை நிறைந்துவிட்டது.  முன்னால் நல்ல கூட்டம். விழா நிகழ்ச்சிகளைத் தொகுக்க வந்த நான் முதலில் மைக்கைப் பிடித்தேன். போனதும் உரத்த குரலில் “வாத்தியார்” என்று சொல்ல, கூட்டத்தில் ஒரே கைத்தட்டல்.

“இது வாத்தியாருக்கான விழா. இங்கே ஒரு வாத்தியார் வந்திருக்கார். அது மட்டுமில்லை. விஸ்வநாதன் தன்னுடைய வாத்தியார் சுப்பையா நாயுடுவுக்காக நடத்துற விழா இது” என்று வாத்தியார் என்கிற சொல்லை வைத்து ரொம்பவும் விளையாடினேன். எதிரில் இருந்த கூட்டத்திற்கும் திருப்தி. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த எம்ஜிஆருக்கும் பரம திருப்தி.

அடுத்த நாள் சிவாஜியுடன் ஷூட்டிங். நான் போனதுமே “சரியான அயோக்கியன்டா நீ. வாத்தியார்ங்கற ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு எப்படியெல்லாம் சமாளிச்சே” என்று கிண்டல் பண்ணினார் அவர்.
********************          *********************      ********************
எம்எஸ்வி, கண்ணதாசன், வாலி, டிஎம்எஸ் என்று இவர்களுடைய ஒருங்கிணைப்பில்  உருவான பாடல்களை  தமிழ் சினிமாவின் பொக்கிஷம்  என்றுதான் சொல்லவேண்டும்  இவர்கள் இணைந்து இயங்கிய காலம் சினிமாவின் பொற்காலம்
சில சமயம் இசையமைக்க எம்எஸ்வி உட்கார்ந்துவிட்டால் குறிப்பிட்ட டியூனுக்குத்தான் பாட்டெழுத வேண்டும் என்று கண்ணதாசனிடம் உரிமையுடன் சொல்லிவிடுவார். சில சமயம் கண்ணதாசனைப் பாடல் எழுதச் சொல்லிவிட்டு அதற்கு ட்யூன் போடுவார். இரண்டையும் அவரால் பண்ணமுடியும். அவருடைய கையில் அந்த அளவுக்கு வித்தை இருந்தது.

இசையமைக்கும்போது ரிகர்சலில் பத்து வயலின்களை இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்கள். அதை உன்னிப்பாக கவனித்து ஏழாவது வயலின்காரர் வாசித்ததில் உள்ள தவறை மிகச் சரியாக சுட்டிக்காட்டுவார். அவ்வளவு விரிந்த துல்லியமான ஞானம் உள்ளவர் எம்எஸ்வி. அவரை மாதிரி ஒரு இசையமைப்பாளர் அதற்குப் பிறகு வந்த மாதிரி எனக்குத் தெரியவில்லை……………அதாவது என்னுடைய ரசனையின்படி.” என்கிறார் சோ.

 (இப்படிப்பட்ட தகவல்கள் இரட்டையர் காலத்தில் மிக அதிகமாகவே சொல்லப்பட்டன. பத்து, பதினைந்து, இருபது, நூறு வயலின்கள்…………. என்றாலும் அத்தனை வயலின்களும் இசைக்கப்படும்பொழுது அது ஒரே வயலினிலிருந்து வந்த இசைபோல இருக்கவேண்டும் அத்தனைத் துல்லியமாக அந்த நோட் வாசிக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் டி.கே ராமமூர்த்தி என்றும் சொல்வார்கள்).

மேலும் தொடர்கிறார் சோ. “அவர் சம்பந்தப்பட்ட பாடல் கம்போசிங் நடக்கும்போது பலமுறை போயிருக்கிறேன். இசையமைக்கும்போது எம்எஸ்வி அந்தப் பாடலை எப்படிப் பாட வேண்டும் என்று பாடிக்காட்டுவார் பாருங்கள். அவருடைய குரல் கேட்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த அளவுக்குப் பாடக்கூடியவர் ஏன் படத்தில் பாட மறுக்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கும். டிஎம்எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு முன்னால் இவர் பாடிக்காட்டுவதைப் பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அவருடைய குரலை அந்த அளவுக்கு ரசித்ததால் அதை சரிவரப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஆதங்கம் எனக்கு இருந்தது. அதற்கு ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது.”

இந்த இடத்தில் சோ, முகம்மது பின் துக்ளக் படத்தில் எம்எஸ்வி பாடி மிகப் பெரிய ஹிட்டான அல்லா அல்லா பாடல் உருவான கதையைச் சொல்லவருகிறார். பொதுவாகவே எம்எஸ்வி, படங்களில் தமக்குப் பாட வாய்ப்பு இருக்கும் இடத்திலும் மற்றவர்களைப் பாடவைத்து அழகு பார்க்கும் சுபாவம் கொண்டவர். அவரே பாடியிருக்கிறார் என்றால் அதற்கு நிச்சயம் இயக்குநர் அல்லது முக்கியமான வேறொருவரின் பிடிவாதம்தான் காரணமாக இருந்திருக்கவேண்டும். பாசமலர் படத்தில் டைட்டில் சாங்காக வரும் ‘அன்புமலர் ஆசைமலர் இந்த மலர்களிலே…’ என்ற பாடல் அந்த நாட்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல். அந்தப் படத்துக் கதையின் தொனி அந்தப் பாடலைக் கேட்டமாத்திரத்திலேயே மனதில் புகுந்து ஏதோ ஒருவிதமான உணர்வை எழுப்பிவிடும் மாயத்தை அந்தப் பாடல் செய்துவிடும். அதற்குப்பின் ‘இக்கரைக்கு அக்கரைப் பச்ச’ பாடல் கண்ணதாசன் வற்புறுத்தியதால் அவரே பாடினார் என்று சொல்வார்கள். பாடல் பாடுவதற்குத்தான் அதிகமாக முன்வரமாட்டாரே தவிர ஹம்மிங்குகளை விரும்பிச் செய்வார் என்று சொல்லப்படுவதுண்டு. பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் வரும் ஹம்மிங்குகள் ஓஹோ, ஆஹா, ம்ம்ம் என்பவையும் இன்னமும் பல பாடல்களில் வரும் ஹம்மிங்குகளையும் அவரே செய்துவிடுவார். குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும் ‘நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு’ பாடலில் வரும் ஹம்மிங் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. அது காதல் பாடல்தான் என்றாலும் அந்த டியூனும் சுசீலாவின் குரலும் எம்எஸ்வியின் ஹம்மிங்கும் சேர்ந்து ஒரு கொண்டாட்டமான குதூகலமான மறக்கமுடியாத பாடலாக அந்தப் பாடலைச் செய்துவிடும்.

இப்போது ‘அல்லா அல்லா’ பாடலை எம்எஸ்வியையே பாடவைத்த சம்பவத்தைச் சொல்கிறார் சோ. 

“நான் இயக்கிய ‘முகம்மது பின் துக்ளக்’ படத்தில் வாலி எழுதிய பாடல் அல்லா அல்லா. இந்தப் பாடலை விஸ்வநாதன்தான் பாடவேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் அவரோ “இந்தப் பாட்டு நல்லா வரும். இதை நான் பாட வேண்டாம். முகமது ரஃபி தமிழில் இதைப் பாடட்டும்” என்று ரஃபியைத் தானே கூப்பிட்டு வருவதாகவும் சொன்னார்.

எனக்கு என்னவோ இது உடன்பாடாக இல்லை.

“நீங்கதான் சார் பாடணும். மற்றவங்களைப் பாட வைக்க வேணாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவரோ “அதெல்லாம் முடியாது. உங்க பிடிவாதத்துக்காக எல்லாம் என்னால் ஒத்துக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் படத் தயாரிப்பாளரான நாராயண அய்யரோ தவித்துக் கொண்டிருந்தார். விவாதம் நீண்டு கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் நாராயண அய்யர் சொன்னார் “திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்திருவோம்”

முகமது ரஃபி, டிஎம்எஸ், எம்எஸ்வி- இந்த மூன்று பேரின் பெயர்களையும் திருவுளச்சீட்டில் எழுதிப் போடுவதாக முடிவெடுத்தோம். விஸ்வநாதனையே அதில் ஒரு சீட்டை எடுக்கச் சொன்னேன். 

அவரும் எடுத்தார். “என் பெயரே வந்திருக்கு” என்று ஏமாற்றமாய் முகத்தை வைத்திருந்தார் எம்எஸ்வி.

“சார் கடவுளுக்கு அதான் இஷ்டம். நீங்கதான் பாடணும்னு முடிவாயிருச்சு” என்று நான் சொன்னேன்.

“சரி என்ன செய்யறது? சீட்டே வந்துருச்சி. நானே பாடிடறேன்” என்றதும் நான் புகுந்தேன்.

“சார் பாடுறதுன்னு முடிவெடுத்துட்டீங்க. இனி அதிலிருந்து மாற மாட்டீங்களே?”

“அதெப்படி மாத்துவேன்? ஒத்துண்டுட்டேன்”

“நிச்சயமாக மாற மாட்டீங்கள்லே?”

“நிச்சயமா மாற மாட்டேன்” என்று எம்எஸ்வி சொன்னதும் கையில் இருந்த மற்ற திருவுளச் சீட்டுகளை அவரிடம் கொடுத்தேன். பிரித்துப் பார்த்தார். அவற்றிலும் எம்எஸ்வி பெயர்தான் எழுதப்பட்டிருந்தது.

“இதென்ன மோசடி வேலை” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் எம்எஸ்வி.

“நீங்க உறுதியா முடிவை மாத்த மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க” என்றதும் பிறகு அந்தப் பாடலை அவரே பாடினார். அதை அவர் பாடிய விதம், அவருடைய குரல் வளம், பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து அந்தப் பாடலை உயர்த்திவிட்டது” – என்று இந்த சம்பவத்தை விவரித்திருக்கும் சோ அதே படத்தின் இன்னொரு தகவலையும் தருகிறார்.

‘முகமது பின் துக்ளக் படத்தில் இசையமைத்த எம்எஸ்வியைக் கூப்பிட்டு “திமுகவுக்கு எதிரான படம் இது. இந்தப் படத்தில் நீ எப்படி மியூசிக் போடலாம்?” என்று கேட்டிருக்கிறார் எம்ஜிஆர்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மியூசிக் போடக் கூப்பிட்டாங்க. ஒத்துண்டேன்”

“இப்போ நீ போய் முடியாதுன்னு சொல்லிடு”

“இசையமைக்கிற வேலைகள் பாதி முடிஞ்சிருச்சி. நான் இப்போ போய் முடியாதுன்னு சொன்னா நல்லாயிருக்காது”

“அதெல்லாம் இல்லை……………..நீ முடியாதுன்னுதான் சொல்லணும்”



“நீங்க சொல்ற மாதிரி நான் போய்ச் சொன்னா அது தெய்வக்குத்தம் மாதிரி ஆயிடும். நான் செய்ற தொழிலுக்குத் துரோகம் பண்ண மாட்டேன். நீங்க வேணும்னா சோவைப் பத்தி ஒரு படம் எடுங்க. அதுக்கு நான் வந்து மியூசிக் பண்றேன்”

எம்எஸ்வி சொல்லிமுடித்ததும் எம்ஜிஆருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அந்தப் படத்தில் கடைசிவரை இருந்து அசராமல், எந்த மிரட்டலுக்கும் பணியாமல் தான் எடுத்துக்கொண்ட வேலையைச் சரிவர செய்துகொடுத்தார் எம்எஸ்வி.” – இப்படிச் சொல்லும் சோ, முடிவாக எம்எஸ்வியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

‘தோல்வியை எப்படியாவது தாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்வது கஷ்டம். தலைக்கனம் ஏறாமல், கர்வம் புகுந்து விடாமல், அகம்பாவம் படிந்துவிடாமல், வெற்றியைச் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எத்தனையோ வெற்றிகளைச் சந்தித்தும் தன்னைப் பற்றி மிகையாக நினைக்காமல், தொழில் சிரத்தையோடு இப்போதும் இருப்பவர் விஸ்வநாதன். அவருடைய வெற்றிகள் அவரிடம் வெற்றி காண முடியவில்லை என்று சொல்லலாம்……………….தான் செய்கிற தொழில்மீது வைத்திருக்கிற பக்தி, ஈடுபாடு என்று எத்தனையோ வார்த்தைகளில் அதை விளக்கலாம். ஆனால் இதுதான் எம்எஸ்வியின் இயல்பு.’

35 comments :

வவ்வால் said...

அமுதவன் சார்,

உங்கப்பார்வையும், சோவின் பார்வையும் கலந்து , புதியப்பார்வையாக எம்.எஸ்வி பற்றிய நல்ல தகவல் தொகுப்பை கொடுத்திருக்கிங்க, கூடவே கண்ணதாசன்,எம்ஜிஆர் ,சோ என அனைவரையும் பற்றி கோடிட்டு காட்டியாச்சு, ஒரே கல்லுல பல மாங்காயா :-))

ஆங்காங்கே "பெரிய" எழுத்துல வரும் மேட்டரில் "பஞ்ச்" வச்சுருக்கீங்களே, புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரிதான்!

Jayadev Das said...

எம் எஸ் வி உச்சத்தில் இருந்த போது படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, நமக்கு விவரம் தெரிந்த போது இளையராஜா தான் இருந்தார். எங்க அப்பா இலங்கை வானொலியில் பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பார், பழைய பாடல்கள் அத்தனையும் எம் எஸ் வியுனடையது.

சோ............. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........... இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவருடை செயல்பாடுகளை துணிந்து எதிர்த்து எழுதியவர், இந்திரா காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே போன்றவர்களை பேட்டி கண்டவர். இன்றைக்கு சாராயக் கடைகளை மூடவே முடியாது, அளவுக்கு மீறினா எதுவுமே விஷம், அதனால மக்கள் தான் கட்டுப் பாடா இருக்கணும் என்றெல்லாம் பேசுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

Amudhavan said...

வவ்வால் said...
\\உங்கப்பார்வையும், சோவின் பார்வையும் கலந்து , புதியப்பார்வையாக எம்.எஸ்வி பற்றிய நல்ல தகவல் தொகுப்பை கொடுத்திருக்கிங்க.....\\

\\ஆங்காங்கே "பெரிய" எழுத்துல வரும் மேட்டரில் "பஞ்ச்" வச்சுருக்கீங்களே, புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரிதான்!\\
இப்ப 'வவ்வால் பார்வையும்' சேர்ந்துகிச்சு........
பெரிய எழுத்துல பஞ்ச்சா? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேயே. சோ சொன்ன சில விஷயங்கள் மிஸ் ஆகிடக்கூடாதுன்னு ஒரு சின்ன ஹைலைட். அவ்வளவுதான்.

Amudhavan said...

Jayadev Das said...
\\எம் எஸ் வி உச்சத்தில் இருந்த போது படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, நமக்கு விவரம் தெரிந்த போது இளையராஜா தான் இருந்தார்.\\

வாங்க ஜெயதேவ், என்னுடைய விமர்சனமே இங்கிருந்துதான் துவங்குகிறது. 'நமக்கு விவரம் தெரிந்தபோது இளையராஜாதான் இருந்தார்' என்கிறீர்கள் பாருங்கள். அங்கிருந்துதான் பிரச்சினைகளே ஆரம்பம். காலமும் சம்பவங்களும் கணந்தோறும் மாறிக்கொண்டிருக்க நமக்கு முன்னிருந்தது என்ன, அதற்கும் முன்னிருந்தது என்ன என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டும் பதிவு செய்துகொண்டும் போவதுதான் வரலாறு. பொது ரசனைக்கும் வர்த்தகத்திற்கும் வேண்டுமானால் 'இப்போது என் முன்னால் என்ன இருக்கிறதோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு அதை மட்டும் அனுபவித்துவிட்டு நான் போய்க்கொண்டே இருப்பேன்' என்ற மனோபாவம் சரிப்பட்டு வரலாம். ஒரு துறை சார்ந்த சாதனைகளைக் குறிப்பிடுவதற்கோ, சாதனையாளர்களைக் குறிப்பிடுவதற்கோ இந்த மனோபாவம் ஏற்றது அல்ல. முன்னிருந்தது என்ன, முன்னிருந்த சாதனையாளர்கள் யார், இப்போது வந்திருப்பவர்கள் செய்வது என்ன என்பதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
உங்கள் வாதப்படி பார்த்தாலும் நான் வளர்ந்த காலத்தில் எம்எஸ்விதான் இருந்தார், கண்ணதாசன்தான் இருந்தார் எனும்போது அதற்கும் முன்பிருந்த எஸ்வி வெங்கட்ராமனும், சி.ஆர்.சுப்பராமனும், ஜி.ராமனாதனும் ஏன் பாபநாசம் சிவனும், எம்கேடியும் மருதகாசியும், தஞ்சை ராமய்யா தாஸும், பட்டுக்கோட்டையாரும் என்ன செய்தார்கள், என்ன சாதித்தார்கள் என்பதைத் தேடி அறிந்துகொள்ளும் தேடலும், மதிக்கிற போற்றுகிற மனோபாவமும் இருந்தது. இந்தத் 'தேடல்' இருந்ததால்தான் பொதுவெளியில் இதுபற்றிப் பேசும் தைரியமும் வந்தது.
இந்தத் தேடல் மட்டும் இல்லையென்றால் நாம் மில்டனையும் வொர்ட்ஸ்வொர்த்தையும் பாரதியையும்கூடப் பேச வேண்டியதில்லையே. நம் காலத்தில் இருப்பவர்கள் என்று காசிமேடு மன்னாரை மட்டுமே பேசிவிட்டுப் போய்விடலாம்.
இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது.

உங்கள் காலத்தில் இருந்தவரைப் பற்றி நீங்கள் சொல்லிவிட்டீர்கள். அப்படியானால் இன்றைய இளைஞனின் நிலை என்ன?

உங்கள் ஃபார்முலாப்படி பார்த்தால் 'உங்கள் காலத்து' இசையமைப்பாளரை இவன் நினைத்துக்கூட பார்க்கவேண்டியதில்லையே. வெறும் தேவிஸ்ரீபிரசாத்தையும், ஜிவிபிரகாஷையும் மட்டும் கொண்டாடிவிட்டுப் போய்விடலாம்தானே?

அதை மட்டும் நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். 'உங்கள் காலத்து இசையமைப்பாளரையும்' இவன் கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
.............................லாஜிக் உதைக்கிறதே.

குட்டிபிசாசு said...

ஜெயதேவ்

…// கட்டுப் பாடா இருக்கணும் என்றெல்லாம் பேசுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது //

மூன்றாவது அணி வந்தால் ஜே பிரதமராக வரவேண்டும் என்று மேடையிலே கூறுபவர். இப்படித்தான் சொல்லுவார்.

குட்டிபிசாசு said...

அமுதன் ஐயா,

…சோவின் அரசியல் பார்வை எனக்கு அறவே பிடிப்பதில்லை. அவர் வெளிப்படையாக பேசக்கூடியவர். துக்ளக் படத்தில் எம்.எஸ்.வி பாடிய அனுபவம் பற்றி ஏற்கனவே காபி வித் அனு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். கண்ணதாசனுடைய ரசிகர்.

மதியழகன் said...

“கவிஞர் கண்ணதாசனைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவருக்கு குழந்தை மனது என்றிருப்பேன். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு குழந்தையேதான்." சோ
சொன்னதை ஆமோதிக்கின்றார் அமுதவன்
நல்ல குழந்தைகள்.கண்ணதாசன் அருமையான குழந்தை.ஒன்றுமே அறியாத பச்சைக் குழந்தைகள்.

புளுகுக்கு ஒரு அளவில்லையா ?

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
உங்கள் பதிவுக்குப் பாராட்டுக்கள். தன் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அடையாத ஒரு மகத்தான இசைக் கலைஞன் எம் எஸ் வி. அவரைப் புகழ்பவர்கள் கூட எதோ சம்பிரதாயத்துக்காக இரண்டு வார்த்தைகளோடு முடித்துக்கொண்டுவிட்டு அடுத்தவருக்கு தாவிவிடுவார்கள். அவரைப் பற்றிய பல தகவல்கள் உங்கள் எழுத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வருவது குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஒரு டி வீ நேர்காணலில் தனக்குப் பிடித்த இசைஅமைப்பாளர் பற்றிய கேள்விக்கு ஒய் ஜி மகேந்திரன் சொல்லியது இது:" எம் எஸ் வி இசைதான் எனக்குப் பிடிக்கும். அவருக்கு முன்னாள் இருந்த இசை ரொம்ப கர்நாடக சங்கீதமா இருந்தது.அவருக்கு அப்பறம் வந்த இசை ரொம்ப கிராமத்து இசையாகவும் அல்லது வெஸ்டர்ன் இசையாகவும் இருக்கிறது. எம் எஸ் வி இசையில்தான் எல்லாமே சரியான அளவில் ரசிக்கக்கூடிய விதத்தில் காணக்கிடைத்தது" பொதுவாக ஒருவர் மற்றொருவரைப் பற்றி சொல்வதை வைத்து நான் கருத்துக்கள் கூறுவதில்லை. ஆனால் சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அதில் ஒன்று ஒய் ஜி மகேந்திரனின் கருத்து.

இப்போதுகூட நினைத்தாலே இனிக்கும் படத்தின் மறுவெளியீடு பற்றி பல செய்திகள் வருகின்றன. நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தின் முகவரியாக இருந்ததே அதன் இசையும் பாடல்களும்தான். ஆனால் வரும் செய்திகளில் கே பாலச்சந்தர், கமலஹாசன், ரஜினிகாந்த் என்றே பெயர்கள் அடிபடுகின்றனவே தவிர அந்தப் படத்தின் உயிர்நாடியாக இருக்கும் எம் எஸ் வி அல்லது அவரின் இசையைப் பற்றி யாரும் அவ்வளவாக பேசியதாகத் தெரியவில்லை. வருத்தம் தரும் மனப்போக்கு.

Anonymous said...

உண்மையில் அமுதவன் சாதாரணமாகத்தான் இந்த பதிவை போட்டிருக்கின்றார்.
ஆனால் ஜெயதேவ் தாஸ் அதை குழப்பி ஒரு புது விவாதத்தை தொடக்கி ரணகளமாக்க நினைக்கின்றார் போலும்

இசைபிரியன் said...

தமிழ் சினிமாவின் இசை ஜாம்வான்கள் பற்றி திரு. கங்கை அமரன்

www.youtube.com/watch?v=ngImvM-OAx0

MSV யின் புகழ் பாடி இருப்பதை கேளுங்கள்

Anonymous said...

கடைக்காரர் : என்ன வேணும்

வடிவேலு : எண்னை வேணும்


கடைக்காரர் : என்னதான்யா வேணும்

வடிவேலு : எண்னதான் வேணும்

கடைக்காரர் : நான் கடக்காரன நீ கடக்காரனா?

வடிவேலு : நீதான்

கடைக்காரர் : அப்ப சொல்லு என்ன வேணும்

வடிவேலு : எண்னை வேணும்

.............................................................................!!!!!!!!

Amudhavan said...

குட்டிபிசாசு said...
\\…சோவின் அரசியல் பார்வை எனக்கு அறவே பிடிப்பதில்லை. அவர் வெளிப்படையாக பேசக்கூடியவர். துக்ளக் படத்தில் எம்.எஸ்.வி பாடிய அனுபவம் பற்றி ஏற்கனவே காபி வித் அனு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். கண்ணதாசனுடைய ரசிகர். \\
வாங்க குட்டிப்பிசாசு. சோவின் அரசியல் பார்வை பற்றி உங்கள் கருத்துதான் என்னுடைய கருத்தும் என்பதையும் நான் சொல்லியிருக்கிறேன். அவரது சினிமா பற்றிய கருத்துக்கள் எல்லாமே பெரும்பாலும் நடுநிலைமையுடன்தான் இருக்கும்.

Amudhavan said...


மதியழகன் said..
\\நல்ல குழந்தைகள்.கண்ணதாசன் அருமையான குழந்தை.ஒன்றுமே அறியாத பச்சைக் குழந்தைகள்.

புளுகுக்கு ஒரு அளவில்லையா ?\\

இனி ஒருவருக்குக் குழந்தை மனது என்று சொல்வதற்குக்கூட உங்களிடம் சரிபார்த்து அனுமதி வாங்கிக்கொண்டுதான் சொல்லவேண்டுமா? என்ன அழிச்சாட்டியம் இது மதியழகன்!

Amudhavan said...

காரிகன் said...
\\தன் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அடையாத ஒரு மகத்தான இசைக் கலைஞன் எம் எஸ் வி. அவரைப் புகழ்பவர்கள் கூட எதோ சம்பிரதாயத்துக்காக இரண்டு வார்த்தைகளோடு முடித்துக்கொண்டுவிட்டு அடுத்தவருக்கு தாவிவிடுவார்கள்.\\

திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் திறமைக்கேற்ற மரியாதை அவருக்கு நிச்சயமாகக் கிடைத்திருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கைதொழும் இடத்தில்தான் அவர் எப்போதுமே இருக்கிறார்.
நீங்கள் சொல்வது உண்மைதான். இவரைப் பற்றிப் பேச வருபவர்கள் சம்பிரதாயத்துக்கு இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு அவசரமாக நகர்ந்துவிடுவது வாய்ப்பு கருதித்தான். திரைப்படத்துறை என்பதே வாய்ப்பு பிளஸ் வருமானம் என்ற அச்சு வண்டியில்தானே சுழன்று வருகிறது. அதனால் பாடுவதற்கு, எழுதுவதற்கு அல்லது இசைத்துறையில் வேறு வாய்ப்புகள் பெறுவதற்கு சிலர் பெயரை உச்சரிக்க வேண்டியிருக்கிறது.
அவர் கோலோச்சிக்கொண்டிருக்கவில்லை என்றாலும் அவருடைய மகனின் ஆதரவு நிறையப்பேருக்குத் தேவையாயிருக்கிறது.

இதே இடத்தில் விஸ்வநாதனின் மகன் இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாகவும் இருந்திருக்ககூடும்.

இந்த விஷயங்களில் ஒய்.ஜி.மகேந்திரனும் சோவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மனதில் இருப்பதைப் பேசுபவர்கள்.

நினைத்தாலே இனிக்கும் மட்டுமல்ல வேறு பழைய படங்களைப் பற்றி வரும்போதும் இதையேதான் செய்கிறார்கள். 'பரப்புரைகளுக்கான' மீடியா 'இத்தகையவர்கள்' கையில் இருப்பது உண்மைதான்.

Amudhavan said...

Anonymous said...
\\உண்மையில் அமுதவன் சாதாரணமாகத்தான் இந்த பதிவை போட்டிருக்கின்றார்.\\

நன்றி.

Amudhavan said...

இசைபிரியன் said...

\\தமிழ் சினிமாவின் இசை ஜாம்வான்கள் பற்றி திரு. கங்கை அமரன்

www.youtube.com/watch?v=ngImvM-OAx0

MSV யின் புகழ் பாடி இருப்பதை கேளுங்கள்\\

வருகைக்கு நன்றி இசைப்பிரியன்.

Amudhavan said...


Anonymous said...
\\கடைக்காரர் : என்ன வேணும்

வடிவேலு : எண்னை வேணும்\\

\\கடைக்காரர் : அப்ப சொல்லு என்ன வேணும்

வடிவேலு : எண்னை வேணும்\\

அனானிமஸ், வடிவேலு உதாரணமெல்லாம் காட்டி உண்மையில் மிகமிகப் பெரிய தத்துவத்தைச் சொல்லவந்து வெற்றிபெற்று விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

//சோ சொன்ன சில விஷயங்கள் மிஸ் ஆகிடக்கூடாதுன்னு ஒரு சின்ன ஹைலைட். அவ்வளவுதான்.//
ஹி...ஹி நம்ம பிலாக் பேரு கூட வவ்வால் பார்வை தானே!

நீங்க போட்டது சின்ன ஹைலைட்டா, அது பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்னு கேட்கும் ராசா ரசிக சிகாமணிகளுக்கான "பெரிய "பெட்ரோமாக்ஸ் லைட்" :-))

# //'தேடல்' இருந்ததால்தான் பொதுவெளியில் இதுபற்றிப் பேசும் தைரியமும் வந்தது.//

கண்டிப்பாக தேடி அறியும் ஆர்வம் இல்லாமல் எழுத்து துறையில் உங்களைப்போல சாதிக்க முடியாது, தேடி அறிந்து கொள்வதில் ஒரு தனி இன்பம் இருப்பதை நானும் உணர்ந்துள்ளேன், ஆனால் சமீபகாலமாக மக்கள் வாழைப்பழ சோம்பேறிகளாக விட்டார்கள் ,(ஹி...ஹி நானும் ஒரு சோம்பேறித்தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமா தவணையில் தேடிக்கிட்டே இருப்பேன்)எதற்கும் பெரிதாக முயற்சிக்காமல் ,எது தன்னை தேடி வருகிறதோ அதுவே போதும் என திருப்தி பட்டுக்கொள்வதாக படுகிறது.
பல திரையரங்க வளாகங்களில் வழக்கமாக இதனை காணலாம், அவர்கள் ஒரு படம் பார்க்கலாம் என முடிவுடன் வந்திருப்பார்கள்,ஆனால் அந்த சமயத்தில் அப்படத்திற்கான காட்சி இருக்காது, சரி தியேட்டர் வரை வந்தாச்சு ஏதோ ஒரு படம் பார்ப்போம்னு டிக்கெட் கிடைக்கிற படத்திற்கு போயிடுவாங்க, ஆனால் அவங்க பார்க்க விருப்பப்பட்ட திரைப்படம் கொஞ்சம் அருகில் இன்னொரு தியெட்டரில் ஓடிக்கிட்டு இருக்கும்,அது வரைக்கும் போக கூட முயற்சிப்பதில்லை.

படம் தானே என்ன பார்த்தால் என்ன ,அதுக்கு ஏன் முக்கியத்துவம் என சொல்லலாம், ஆனால் தமிழர்கள் சினிமாவுக்கு அடிமையானவர்கள் ஆனால் அவர்கள் அடிமையான ஒன்றிலும் மேம்போக்காக தான் இருக்கிறார்கள் என சொல்வதற்காக சொன்னேன்.

இதே கதை தான் திரையிசை ரசிப்பதிலும் ,எது அடிக்கடி காதில் விழுதோ அதான் நல்ல இசைனு அப்படியே உட்கார்ந்துப்பாங்க ,கொஞ்சம் முன்ன ,பின்ன என்ன இருக்குனு தேடிப்பார்க்க ஆர்வமில்லை.

எனக்கு நினைவு தெரிஞ்சு காசு செலவு செய்து கேசட் எல்லாம் வாங்கி கேட்க ஆரம்பிச்சது ஏ.ஆர் ரெஹ்மான் காலத்தில் தான் ஆனால் அப்படியே ராசா, எம்.எஸ்வி, ராமநாதன் என முன்னாடி போய் தியாகராஜர் பாகவதர் பாடல்களையும் கேட்டிருக்கேன், இப்போ வருகிற கொலை வெறி ,ஊதாக்கலர் ரிப்பனும் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் :-))

எனவே ஓரளவு ஒப்பீடு செய்ய முடிகிறது, ஆனால் நம்ம ராசா ரசிகசிகாமணிகள் ராசாவை மட்டுமே கேட்டுவிட்டு அங்கேயே பாய்ப்போட்டு படுக்கிறாங்க,, சரி கேட்டதாவது உண்மையில உள்வாங்கி கேட்டார்களா என்றால் அதுவும் இருக்காது, காதுல பாட்டு விழும் அவ்வளவு தான் ,உள்ள இறங்கியே இருக்காது :-))

நம்ம மக்களுக்கு சுயமாக ரசனைகளை தெரிவு செய்யத்தெரிவதில்லை, பொது புத்தியில் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்வார்கள், ஆனந்த விகடனில் 60 மார்க் போட்டாச்சுனா அது நல்லப்படமாத்தான் இருக்கும்னு முடிவுக்கு வருவாங்க, அந்தப்படம் மார்க் பொட்ட விமர்சனக்குழுவுக்கு நல்லதா தெரியலாம்,நமக்கு நல்லதா தெரிய படத்தில என்ன இருக்குனு சிந்திக்க மாட்டாங்க, ஓடுற படத்தில இருக்க பாட்டா நல்ல பாட்டு என முடிவுக்கு வந்துடுவாங்க, ராசா நாலு பாட்ட நல்லா போட்டாச்சா அவரே இசை சன்னிதானம், வைரமுத்து எழுதினாலே கவித என்பார்கள் :-))

தேட மட்டும் இல்லை படிக்கவும் விருப்பம் இருப்பதில்லை, நூல்கள் வாசிப்பதை விடுங்கள், எளிதில் இணையத்தில் கிடைக்கிற பதிவுகளில் கூட ஒரு பதிவையாவது முழுசாப்பாடிப்பாங்களானு எனக்கு பலர் மேல டவுட் இருக்கு, எல்லாப்பதிவுலயும் போய் நல்ல பகிர்வு,அருமைனு ஒரே நாளில் நூறு கமெண்ட் போடுறாங்க, இப்படி செய்வதால் என்ன சாதிக்கப்போறாங்க, நிறுத்தி நிதானமா கொஞ்சம் படிச்சாலும் என்ன சொல்லி இருக்காங்கனு உள்வாங்கிக்கொள்ள வேண்டாமா? ஆனால் எதாவது ஒரு வரியை மட்டும் கவனத்தில் வச்சுக்கிட்டு ,மொத்த காண்டெக்ஸ்டையும் கவனிக்காமல் கண்மூடித்தனமாக கருத்தை கக்குவார்கள் :-))
-------------

வவ்வால் said...

பாகவதரே,

காம லீலை கிருஸ்ண பக்தராக இருந்துக்கிட்டு ,எம்.எஸ்வி தெரியாம இருக்கிரே, கிருஸ்ண கானம் என ஒரு ஆல்பம் போட்டு இருக்கார் பாடல்கள் ,கண்ணதாசன். அதுல தான் இந்த புகழ்ப்பெற்ற பாட்டு இருக்கு. டி.எம்.எஸ் & எஸ்.பி.பினு ரெண்டு வெர்ஷன் இருக்கு போல.

ஆயர்ப்பாடியில் மாளிகையில்
தாய் மடியில் கன்றினை போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலங்கள் காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகிறான் ஆராரோ!

இந்தப்பாட்டை கேட்டால் நீர் இஸ்கான் பாட்டெல்லாம் கேட்கவே மாட்டீர் :-))

குட்டிபிசாசு said...

அமுதவன் ஐயா,
பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லை. அதனால் முதல் கருத்தில் சொல்லவில்லை. என்றாலும்இப்போது சொல்லி வைக்கிறேன். எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்திருப்பார் போல. திமுகவின் மீதான விமர்சனத்திற்கு மிகவும் எதிர்ப்பாக இருந்திருக்கிறார். ஒரு நல்ல விசுவாசியை கட்சியைவிட்டு அனுப்பிய புண்ணியம் கருணாநிதியையே சாரும்.

Amudhavan said...

வவ்வால் said...

\\எதற்கும் பெரிதாக முயற்சிக்காமல் ,எது தன்னை தேடி வருகிறதோ அதுவே போதும் என திருப்தி பட்டுக்கொள்வதாக படுகிறது.\\

\\எது அடிக்கடி காதில் விழுதோ அதான் நல்ல இசைனு அப்படியே உட்கார்ந்துப்பாங்க ,கொஞ்சம் முன்ன ,பின்ன என்ன இருக்குனு தேடிப்பார்க்க ஆர்வமில்லை.\\

\\ஆனால் நம்ம ராசா ரசிகசிகாமணிகள் ராசாவை மட்டுமே கேட்டுவிட்டு அங்கேயே பாய்ப்போட்டு படுக்கிறாங்க\\

\\நம்ம மக்களுக்கு சுயமாக ரசனைகளை தெரிவு செய்யத்தெரிவதில்லை, பொது புத்தியில் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்வார்கள்\\

\\தேட மட்டும் இல்லை படிக்கவும் விருப்பம் இருப்பதில்லை, நூல்கள் வாசிப்பதை விடுங்கள், எளிதில் இணையத்தில் கிடைக்கிற பதிவுகளில் கூட ஒரு பதிவையாவது முழுசாப்பாடிப்பாங்களானு எனக்கு பலர் மேல டவுட் இருக்கு\\

இணையத்தில் பலர் வவ்வாலைக் கண்டு பயப்படுவார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. சரியான கருத்துக்களை - சரியான முறையில் சொன்னாலேயே பொதுவாக இந்தவகை பயம் வந்துவிடும். உள்ளே சரியான சரக்கு இல்லாமல் சும்மாவே வெளி வேஷத்தில் ஆய் ஊய் என்று தாதா வேடம் போடுபவர்கள் பயப்படுவது தவிர்க்க முடியாததுதான்.
ஒரு சீரியஸான பதிவில் சொல்ல வேண்டிய பல கருத்துக்களை ஒரு சாதாரண பின்னூட்டத்தில் சர்வசாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

\\ஏதாவது ஒரு வரியை மட்டும் கவனத்தில் வச்சுக்கிட்டுமொத்த காண்டெக்ஸ்டையும் கவனிக்காமல் கண்மூடித்தனமாக கருத்தை கக்குவார்கள் :-))\\
இந்த விஷயத்தை நான் பலமுறை யோசித்ததுண்டு. நாம் இத்தனை விரிவாக எழுதியிருக்கிறோமே, இவர்கள் இதையெல்லாம் படிக்காமல் இது பற்றியே கேள்வி வேறு கேட்டிருக்கிறார்களே என்று.......... இவங்களையும் தாங்கிக்கிட்டுத்தான் சமாளிச்சாக வேண்டியிருக்கு போலும்.
-------------

Amudhavan said...

வவ்வால் said...
\\எம்.எஸ்வி தெரியாம இருக்கிரே, கிருஸ்ண கானம் என ஒரு ஆல்பம் போட்டு இருக்கார் பாடல்கள் ,கண்ணதாசன். அதுல தான் இந்த புகழ்ப்பெற்ற பாட்டு இருக்கு.

ஆயர்ப்பாடியில் மாளிகையில்
தாய் மடியில் கன்றினை போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!\\

எனக்கு எஸ்பி பாலசுப்பிரமணியத்தைப் பிடிக்கும்.(எத்தனையாவது இடத்தில் என்பது வேறு விஷயம்). அவர் பாடிய பல பாடல்கள் பிடிக்கும். ஆனாலும் 'ஆகச்சிறந்த' பாடலும், என்னைப் பொறுத்தவரை அவர் பாடியதில் நம்பர் ஒன் பாடலும் இதுதான். நினைவூட்டியமைக்கு நன்றி.

Amudhavan said...

குட்டிபிசாசு said...

\\அமுதவன் ஐயா,
பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லை. அதனால் முதல் கருத்தில் சொல்லவில்லை. என்றாலும்இப்போது சொல்லி வைக்கிறேன். எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்திருப்பார் போல. திமுகவின் மீதான விமர்சனத்திற்கு மிகவும் எதிர்ப்பாக இருந்திருக்கிறார். ஒரு நல்ல விசுவாசியை கட்சியைவிட்டு அனுப்பிய புண்ணியம் கருணாநிதியையே சாரும்.\\

திரு குட்டிப்பிசாசு அவர்களே (உங்களை இப்படி அழைக்கலாமா?) இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து சம்பந்தமாய் சில தகவல்களைச் சொல்லி இந்தப் பதிவின் நோக்கத்தையும் பின்னூட்டங்களின் போக்கையும் மாற்றுவதாக எண்ணமில்லை. இணையத்தில் ஒரு சிலருக்கான பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மாற்றாக கருத்துச் சொல்ல வேண்டுமென்றாலும் நிறைய முயற்சிகள் தேவைப்படுகிறது. அதற்கென நிறைய எதிர்ப்புகளையும் சமாளிக்கவேண்டியிருக்கிறது.

இதில் எம்ஜிஆரும் ஒருவர்.

எம்ஜிஆர் என்ற பிம்பத்திற்கு இணையத்திலும் 'இன்றைய பத்திரிகை' உலகிலும் இருக்கும் கருத்துக்களின் அடிப்படையில்தான் உங்கள் பின்னூட்டம் அமைந்திருக்கிறது. எம்ஜிஆர் 'வெளியேற்றப்பட்ட' அல்லது 'புதிய கட்சி ஆரம்பித்த' தகவல்களெல்லாம் ஒரு சார்பானவையாகத்தான் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இதில் நமக்குக் கிடைக்காத பல தகவல்கள் இருப்பதாகவே தோன்றுகிறது.

திமுகவே அதையெல்லாம் வெளிப்படுத்த தயாரில்லாதபோது நாமாக சொல்வதெல்லாம் எடுபடுமா என்ன?

திமுக எம்ஜிஆரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தபோது எம்ஜிஆரும் திமுகவுக்கு விசுவாசமாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவரது சுபாவம் என்பது அவரைச் சுற்றி அவருக்குப் பிடிக்காத எது நடந்தாலும் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதும் அப்படிச் செய்பவர்களை அவர் சகித்துக்கொள்ள மாட்டார் என்பதும்தான். திமுக என்பதில்லாமல் எம்ஜிஆரை விமர்சித்தார்கள் என்பதற்காக 'மட்டுமே' ஒழித்துக்கட்டப்பட்டவர்கள் லிஸ்டும் நிறைய உண்டு.
இதுபற்றியெல்லாம் வேறொரு சமயம் வேண்டுமானால் பேசலாம்.

வேட்டைக்காரன் said...

மு.பி.துக்ளக் பாடல் அருமையான பாடல்.

//திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கலாம். //

சிலகாலம் முன்னால் இலவசக்கொத்தனார் போன்ற விசிறிகள் MSV-க்கு பத்ம விருது கிடைக்க வேண்டி ஆன்லைன் பெட்டிசன் துவங்கியிருந்தார்கள்.

என்ன, மாண்புமிகு அம்மாவே முயற்சி செய்தும் கிட்டவில்லை.


மற்றபடி அருமையான களம் அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள் அமுதவன் ஐயா.

கச்சேரி தொடரட்டும்!

'ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ ஓ ஓ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ'

வவ்வால் said...

அமுதவன் சார்,

//இணையத்தில் பலர் வவ்வாலைக் கண்டு பயப்படுவார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. //

அய்யய்யோ அதெல்லாம் வெறும் புரளி, ஒரு கோஷ்டி ரொம்ப நாளாவே இப்படி பரப்பிவிட்டுக்கிட்டு இருக்கு, அதெல்லாம் நம்பிடாதிங்க, என்னப்பார்த்தா பச்சப்புள்ள கூடப்பயப்படாது அவ்வ்!

//சரக்கு இல்லாமல் சும்மாவே வெளி வேஷத்தில் ஆய் ஊய் என்று தாதா வேடம் போடுபவர்கள் பயப்படுவது தவிர்க்க முடியாததுதான். //

இந்தமாரி ஆட்கள் தான் இணையத்தில் ரொம்ப அதிகம், குருப்பா ஒன்னுக்கூடிட்டா அவங்க சொன்னதே சட்டம்னு திரியிறாங்க, எல்லாம் கட்டப்பஞ்சாயத்து கோஷ்டிகள் :-))

//ஒரு சீரியஸான பதிவில் சொல்ல வேண்டிய பல கருத்துக்களை ஒரு சாதாரண பின்னூட்டத்தில் சர்வசாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

நாம எப்பொழுதும் சொல்ல நினைப்பதை ஒழிப்பதேயில்லை, அப்படியே சொல்லப்போய் பலரிடமும் "துஷ்டன்" பட்டம் தான் கிடைக்குது, நீங்க வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறீர்கள், அது உங்க பக்குவத்தினை காட்டுது,நன்றி!

//இந்த விஷயத்தை நான் பலமுறை யோசித்ததுண்டு. நாம் இத்தனை விரிவாக எழுதியிருக்கிறோமே, இவர்கள் இதையெல்லாம் படிக்காமல் இது பற்றியே கேள்வி வேறு கேட்டிருக்கிறார்களே என்று.......... இவங்களையும் தாங்கிக்கிட்டுத்தான் சமாளிச்சாக வேண்டியிருக்கு போலும்.//

ஹி..ஹி உங்களுக்கு இதுல நிறைய அனுபவம் இருக்கும்,ஆனால் நானும் இவர்களை போன்றவர்களிடம் சிக்கிட்டு என்ன சொல்லுறது தெரியாம முழிச்சி இருக்கேன் அவ்வ்!

#//எனக்கு எஸ்பி பாலசுப்பிரமணியத்தைப் பிடிக்கும்.(எத்தனையாவது இடத்தில் என்பது வேறு விஷயம்).//

உங்க தர வரிசை ரொம்ப சிக்கலாக இருக்கும் போல :-))

// 'ஆகச்சிறந்த' பாடலும், என்னைப் பொறுத்தவரை அவர் பாடியதில் நம்பர் ஒன் பாடலும் இதுதான். நினைவூட்டியமைக்கு நன்றி.//

ஓ அப்படியா, நான் நல்லா பாடி இருக்கார்னு நினைச்சுப்பேன், இப்போ தான் தெரியுது இப்பாடல் தான் அவரின் ஆக சிறந்த பாடல்னு, நம்ம இசை அவதானிப்பு அவ்ளோ தான் அவ்வ்!

சாதாரணமாக உச்சரிக்கும் சொல்லிலும் ஒரு "ஹ" சவுண்டு வர்ராப்போல பாடுவார், அதுவே அவரோட "ஸ்டைல்" ஆகிப்போச்சு என்பது என்னோட சிறிய அவதானிப்பு!
---------------

Amudhavan said...


வேட்டைக்காரன் said...
\\சிலகாலம் முன்னால் இலவசக்கொத்தனார் போன்ற விசிறிகள் MSV-க்கு பத்ம விருது கிடைக்க வேண்டி ஆன்லைன் பெட்டிசன் துவங்கியிருந்தார்கள்.

என்ன, மாண்புமிகு அம்மாவே முயற்சி செய்தும் கிட்டவில்லை.\\
திரு வேட்டைக்காரன் அவர்களே, நீங்கள் இங்கே எம்எஸ்வியை வியக்கிறீர்களா அல்லது நக்கல் பண்ணுகிறீர்களா என்றே புரியவில்லை. ஏனெனில் சிவசம்போ பாடலைத் தொட்டுக்காட்டியிருக்கிற விதம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. எம்எஸ்விக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று சரியாகத்தான் சொன்னார் காரிகன். இந்தப் பட்டியலில் எம்எஸ்வியைப் போன்ற பல மேதைகள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதைக் கொண்டாடும் பலபேர் ஏ.ஆர்.ரகுமானுக்குக் கிடைத்த பெரிய பெரிய அங்கீகாரங்களையும் ஜீரணிக்கமுடியாமல் மலச்சிக்கலில் சிரம்பபட்டுக்கொண்டு இருப்பதையும் பார்க்கிறோம்.கஷ்டம்தான்.

Amudhavan said...

வவ்வால் said...

\\இந்தமாரி ஆட்கள் தான் இணையத்தில் ரொம்ப அதிகம், குருப்பா ஒன்னுக்கூடிட்டா அவங்க சொன்னதே சட்டம்னு திரியிறாங்க, எல்லாம் கட்டப்பஞ்சாயத்து கோஷ்டிகள் :-))\\

அப்படி அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் சில சரியான தகவல்களையும் சரியான கேள்விகளையும் வைத்துப்பாருங்களேன். கப்சிப்பென்று ஆகிவிடுகிறார்கள். சிம்பனி சம்பந்தமாய் நாம் வைத்த விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் பிறகு இப்போது சிம்பனி பற்றி யாராவது பேசுகிறார்களா? அது பற்றி யாரும் பேசாமல் உலக இசை கலக இசை என்று பேச ஆரம்பித்துவிட்டதை கவனித்தீர்களா?

Jayadev Das said...

\\சிம்பனி சம்பந்தமாய் நாம் வைத்த விளக்கங்களுக்கும் \\ இந்தப் பதிவின் லிங்கு வேண்டும் சார்............

Jayadev Das said...

\\அதை மட்டும் நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். 'உங்கள் காலத்து இசையமைப்பாளரையும்' இவன் கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
.............................லாஜிக் உதைக்கிறதே.\\பல ஜாம்பவான்கள் முன்னாள் இருந்திருந்தாலும், என் மனதுக்கு சிலரை பிடிக்கிறது, ஏன் என்று என்னால் விளக்க இயலவில்லை. தமிழ் நகைச்சுவை நடிகர்களில் கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ் என பல ஈடு இணையற்றவர்கள் இருந்தாலும், என் மனதைத் தொட்டவர் கவுண்டமணி மாத்திரமே. அதற்க்கு முன்னர் இருந்தவர்கள் படங்களைப் பார்ப்பேன் ஆனால் மனம் கவுண்டமணியிடம் லயிக்கும் அளவுக்கு மற்றவர்கள் மீது லயிக்க மறுக்கிறது. அதே மாதிரி இளையராஜா ரஹ்மான் பாடல்கள் மனதில் ஏற்ப்படுத்திய தாக்கத்தின் அளவுக்கு மற்ற முன்னைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஏற்ப்படுத்த வில்லை. பாடல்களை கேட்பேன், சாதாரணமாக எடுத்துக் கொள்வேன், அவ்வளவுதான். ரசித்து மகிழ்ந்தது இளையராஜா ரஹ்மான் பாடல்களை மட்டுமே. இதற்க்கு காரணம் என்னவென்று சொல்லத் தெரியாது! ஹா..........ஹா............ஹா..............

Jayadev Das said...

@ குட்டிபிசாசு


\\மூன்றாவது அணி வந்தால் ஜே பிரதமராக வரவேண்டும் என்று மேடையிலே கூறுபவர். இப்படித்தான் சொல்லுவார்.\\ நான் சொல்ல வந்ததும் இதையேதான்............!! வளர்ப்பு மகன் திருமணத்தை நேரில் பார்த்த பின்னும் இப்படியெல்லாம் யோசனை இவருக்கு எப்படி வருகிறதென்பது மில்லியன் டாலர் கேள்வி!!

Jayadev Das said...

\\ காம லீலை கிருஸ்ண பக்தராக இருந்துக்கிட்டு ,எம்.எஸ்வி தெரியாம இருக்கிரே, \\ அவரைத் தெரியாது என்று சொல்லமாட்டேன், இளையராஜா, ரஹ்மான் அளவுக்கு அதற்க்கு முன் இருந்த இசையமைப்பாளர்கள் என் மனத்தைக் கவரவில்லை என்று தான் சொல்கிறேன், அதற்காக அவர்கள் இவர்களை விட திறமை குறைந்தவர்கள் என்று அர்த்தமல்ல, என்னுடைய டேஸ்ட் அப்படி அவ்வளவுதான்..........

வவ்வால், இறை நம்பிக்கையாலர்களுகேன்று கிண்டல் செய்ய நிறைய விஷயங்கள் உமக்கு கிடைக்கிறது, ஆனால் பதிலுக்கு உம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. விளக்கெண்ணையை உடம்பில் பூசியவரைப் பிடிக்க முடியாதது போல உம்மையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்னு வேண்டுமானால் சொல்லலாம், நாங்க பேன்ட் சட்டை என்று போட்டிருக்கோம், அதோட கலர் சரியில்லை, பேஷன் சரியில்லை என்று நீர் சொல்கிறீர், அதற்குத் தீர்வு அம்மணமாய் திரிவது தான் என்பது உம்மோட நிலைப்பாடு. என்னத்த சொல்ல!! அவ் வ் வ் வ் வ் வ் வ் வ்...........

Jayadev Das said...

\\
ஆயர்ப்பாடியில் மாளிகையில்
தாய் மடியில் கன்றினை போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலங்கள் காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகிறான் ஆராரோ!

இந்தப்பாட்டை கேட்டால் நீர் இஸ்கான் பாட்டெல்லாம் கேட்கவே மாட்டீர் :-))

\\
எந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் தகுதியை தீர்மானிப்பதற்கு அளவுகோல் இருப்பது போல ஆன்மீக வாதிக்கும் இருக்கிறது. அது உம்மைப் போன்ற மேதாவிகளுக்கும் தெரியாது என்பது தான் துரதிர்ஷ்டம். நாட்டில் ரஞ்சிதானத்தாக்கள் புழுத்துப் போனதர்க்குக் காரணம் இந்த மாதிரி மக்கு சிந்தனைதான்.

Jayadev Das said...

\\எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்திருப்பார் போல. \\ அது மூக்குபொடி புகழ் அண்ணாதுரை இருந்தவரைக்கும்.

\\திமுகவின் மீதான விமர்சனத்திற்கு மிகவும் எதிர்ப்பாக இருந்திருக்கிறார். ஒரு நல்ல விசுவாசியை கட்சியைவிட்டு அனுப்பிய புண்ணியம் கருணாநிதியையே சாரும்.\\

விஜயகாந்துக்கு அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பிக்க ஆசை. பா.மா.க காரன்கிட்ட வேணுமின்னே தகராறு பண்ணி, [அதுக்கு இழிச்சவாத் தனமா அவங்களும் ஒத்துழைசாங்க என்பது தான் வேடிக்கை!!] அதே வச்சே கட்சியை ஆரமிச்சார்!! அதே மாதிரி நம்ம புரட்சித் தலைவனும் தனிக் கட்சி ஆரம்பிக்கிரதுக்காகவே கணக்கு கேட்டாரோ என்னவோ, யாருக்குத் தெரியும்!!

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
திரு ஆர் வி என்பவரின் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். (ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்). சாரதா என்பவரின் வலைப்பூவின் சுட்டியும் கீழே இருக்கிறது.

http://awardakodukkaranga.wordpress.com/2010/10/01/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E2%80%9325/#comments

http://awardakodukkaranga.wordpress.com/patangkalin-pattiyal/



http://awardakodukkaranga.wordpress.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Balie said...

அண்ணே, உங்கள் எழுத்துக்களை நான் விரும்பி படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்! அருமை . நன்றி .

Post a Comment