நீண்ட நாட்களாகப் பதிவர் வவ்வாலை தமிழ் இணைய வெளியில் எங்கும்
காணோம். அவருடைய தளமான ‘வவ்வால்- தலைகீழ் விவாதங்கள்’ தளம்கூட இந்த வருடம்(2014) ஆகஸ்ட்
பன்னிரெண்டாம் தேதிக்குப் பிறகு எந்தவிதப் புதிய பதிவுகளும் இல்லாமல் வெறிச்சோடியே
இருக்கிறது.
இம்மாதிரியான நீண்ட இடைவெளிகள் அவர் அவ்வப்போது எடுத்துக்கொள்வது
உண்டுதான். ஆனால் பதிவுகள் இல்லாத நாட்களில்கூட அவருடைய காரசாரமான பின்னூட்டங்கள் இல்லாமல்
போகாது.
தெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதமெல்லாம் பார்க்கமாட்டார். பதிவுலகில்
புகழ் பெற்றவர் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? ஆனால் அப்படி இருப்பதாக தங்களுக்குத்
தாங்களாகவே நினைத்துக்கொண்டு சிலர் செய்யும் அலப்பறைகள் வேடிக்கையானவை), புதியவர் என்றெல்லாம்
பார்க்கமாட்டார். நம்முடைய குழுவைச் சேர்ந்தவர்களா, இவர் நமக்குத் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள்
போடுகிறவரா, இவர் நம்மைப் பாராட்டி எழுதுகிறவரா என்பது போன்ற எந்தவித அளவுகோள்களையும்
வைத்துக்கொள்ள மாட்டார். பதிவுகளைப் படிக்கும்போது தனக்கு எழுதவேண்டும் என்று தோன்றுகிறதா
உடனடியாகத் தமது கருத்தைப் பதிவு செய்துவிடுவார்.
அந்தக் கருத்து பெரும்பாலும் இன்னொரு
விவாதத்திற்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது
யதார்த்தம்.
ஆனால் அதுதான் இணைய தளத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விஷயமாக
இருக்கும்.
இப்படிப்பட்டவர் கடந்த நான்கு மாதங்களாக இணைய தளத்தில் எங்கேயும்
காணவில்லை.
நெய்வேலி புத்தகச் சந்தையின்போது நெய்வேலி சென்று அவர் எழுதிய பதிவுதான்
அவருடைய தளத்தில் இன்னமும் காட்சியளிக்கிறது. அதன்பிறகு என்னுடைய தளத்தில் சிவாஜிகணேசன்
பற்றிய என்னுடைய கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சில பின்னூட்டங்கள் எழுதியிருந்தார்.
ஏற்கெனவே சில தளங்களில் அவரது கருத்துக்கள் பற்றி அறிந்திருந்ததனால்
அவர் எம்ஜிஆர் ரசிகர் என்ற விஷயம் லேசுபாசாகத் தெரிந்திருந்தது. ‘சிவாஜி பற்றி எதிர்த்து
எழுதுகிறீர்களா எழுதுங்கள்.
அதென்ன ‘சிவாசி’ என்றெழுதுவது? நீங்கள் அப்படியொன்றும்
தனித்தமிழ் எழுதுகிற ஆசாமி இல்லை. அப்படியிருக்க சிவாஜியை சிவாசி என்றெழுதுவதன் மூலம்
மட்டுமே அவருடைய மதிப்பைக் குறைத்துவிடுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்பதுபோல்
பதில் எழுதினேன்.
மீண்டும் மீண்டும் சிவாசி என்றே எழுதிக்கொண்டிருந்தார்.
அவருக்கான சில பதில்களுக்குப் பிறகு, அந்தக் கட்டுரையை விதண்டாவாதங்களுக்கான
ஒரு
கட்டுரையாக மாற்றிவிட என்னுடைய மனம் ஒப்பதாததால் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை
என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கும் முன்னர் வவ்வாலின் பின்னூட்டத்திற்கு அனானிமஸ் பெயரில்
கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் பதில் எழுதியிருந்தார். வவ்வாலைப் பற்றி ரசக்குறைவான
வார்த்தைகளும் அதில் இருந்தன. அத்தகைய வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களை நான் என் தளத்தில்
வெளியிடுவதில்லை என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பதால் அந்தப் பின்னூட்டத்தை வெளியிடவில்லை.
அந்த நேரத்தில் எனக்கு பதிலளித்து வவ்வால் இன்னொரு பின்னூட்டமும்
எழுதினார். ஏற்கெனவே ஒரு ‘அனானிமஸ்’ வரிசையில் இருக்கிறார். அதனையே வெளியிடவில்லை.
இப்போது வவ்வாலின் பின்னூட்டமும் அந்த அனானிமஸ் சொல்லியுள்ள கருத்துக்களைப் பெருமளவு
ஒட்டியதாகவே இருக்கிறது என்பதனால் இவை இரண்டையும் வெளியிட்டு புதியதொரு வேண்டாத விவாதத்தைத்
தொடரக்கூடாது என்பதனால் வவ்வாலின் பின்னூட்டத்தையும் தவிர்த்துவிட்டேன். பதிவுக்குத்
தொடர்பில்லாத அசிங்கம் பிடித்த பின்னூட்டங்கள் தவிர, இம்மாதிரியான பின்னூட்டங்களைத்
தவிர்ப்பவன் நான் அல்ல. ஆனால் தேவை கருதியே இதனைத் தவிர்த்தேன்.
ஆனால் இதனால் எல்லாம் வவ்வால் போன்றவர்கள் கோபித்துக்கொள்வார்கள்
என்ற சிறுபிள்ளைத்தனமான நினைப்பும் எனக்கில்லை. ஆனால் அந்தப் பின்னூட்டங்களுக்குப்
பிறகு அவரை எங்கேயுமே காணோம் என்பதுதான் வருத்தமாயிருக்கிறது.
அதன்பிறகு மற்றவர்களின் ஏதோ ஒன்றோ இரண்டோ பதிவுகளில் வவ்வாலின்
ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே பார்த்ததாக ஞாபகம். அவைகூட வவ்வாலின் முத்திரை எதுவும்
இல்லாமல் மிகவும் சாதாரணமாகவே இருந்தன.
அதன் பிறகு அவரை சுத்தமாக இணையவெளி எங்கும் காணோம்.
அவருடைய வழக்கமான எதிர்க்கருத்துக்களும், விவாதங்களும் இல்லாமல்
தமிழ் இணையவெளி சற்றே போரடிக்கிறது என்பதும் உண்மைதான். தமிழ் இணையத்தில் சுவாரஸ்யமானவைகளே
இந்தப் ‘பின்னூட்டங்கள்’ என்று சொல்லப்படும் எதிர்க்கருத்துக்கள்தாம்.
இவற்றைப் பின்னூட்டம் என்று சொல்லலாமா, அது சரியான பொருளாகுமா
என்ற கேள்வியை சமீபத்தில் ஒரு பதிவர் எழுப்பியிருந்தார்.
உண்மைதான்.
எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது.
தமிழில் இணையவெளியை ஆரம்பித்து வடிவமைத்தவர்கள் இணையத்திற்கு
என்று எல்லாமே வித்தியாசமாக இருக்கட்டுமே, கட்டுரை என்று சொல்லவேண்டாம், பதிவு என்று
சொல்லலாம். கடிதம் என்றோ கருத்து என்றோ சொல்லவேண்டாம், பின்னூட்டம் என்று சொல்லுவோம்
என்பதாக நினைத்து இந்த வடிவத்தைத் தமிழ் உலகின் முன்பு சமர்ப்பித்திருக்கக்கூடும்.
அந்த முன்னோடிகளுக்கு மதிப்பளித்து நாமும் அதனை அப்படியே தொடர்வோம்
என்ற எண்ணத்தில்தான் நானும் பின்னூட்டம் என்றே குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால்
பின்னூட்டம் என்பது சரியான பொருள் தரவில்லையோ என்ற எண்ணம் சமீப காலமாக மிக அழுத்தமாகவே
மனதில் இருக்கிறது. அதனால் தமிழ்ப்பெரியவர்கள் எல்லாரும் இணைந்து இதனை மாற்றினார்களென்றால்
நாமும் மாறலாம். ஏனெனில் இணையத்தின் தளங்கள் வெவ்வேறானவை.
பலவிதமான எழுத்துக்களும் இணையத்தில் உலா வருகின்றன.
சமூக மற்றும் அரசியல் விவாதங்களில் வினவு தளத்தின் சாதனைகள்
அசாதாரணமானவை.
சவுக்கு தளத்தை எந்த வரிசையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
ஆனால் சவுக்குசங்கரின் திறமையும் துணிச்சலும் சாதாரணமானதல்ல. யாருக்கும் அவ்வளவு எளிதாக
அத்தனைத் துணிச்சல் வருவதற்கில்லை.
தம்முடைய கருத்தில் மிகவே உறுதியாக இருக்கும் இன்னொரு பதிவர்
திரு வே.மதிமாறன்.
நேரடியாக ஆழமான கருத்துக்கள் கொண்ட சிறப்பான பதிவுகளை எழுதும்
பதிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி, மூங்கில்காற்று டி.என்.முரளிதரன், தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார்,
ஸ்ரீராம் என்று அவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளமானது.
தாங்கள் உண்டு தங்களின் பதிவுகள் உண்டு என்று அப்புராணியாய்
பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் நிறைய.
தாங்கள் கொண்ட கருத்துக்களை முன்வைத்து சிறப்பாக வாதம் புரியும்
பதிவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாக காரிகன், இக்பால் செல்வன், சுவனப்பிரியன், சார்வாகன்
ஆகியோரைச் சொல்லலாம்.
தற்சமயம் பதிவுகளை நிறையவே குறைத்துவிட்டபோதிலும் வால்பையன்
போன்றவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இவற்றில் எந்த வகையிலும் சேராமல் மிகப்பெரிய டாக்டராய் பணியாற்றிவந்தபோதிலும்
அந்தச் சுவடு சிறிதுமின்றி ஏகப்பட்ட சேட்டையும் கலகமும் செய்யும் நம்பள்கியும் குறிப்பிடப்படவேண்டியவரே
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, வவ்வால் விஷயத்திற்கு வருவோம்.
வவ்வாலுக்கு இணையத்தில் நிறைய நண்பர்களும் வாசகர்களும் உண்டு.
அதுபோலவே நிறைய எதிரிகளும் உண்டு.
எதிர்க் கருத்துக்களை மற்றவர் மனம் நோகாமல் சொல்லலாம் என்கிற
ஜாதியெல்லாம் இல்லை அவர். பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பதுதான் அவர் பாணி. சண்டைக்கு
வருகிறாயா வா. நீயா நானா ஒரு கை பார்த்துவிடுவோம் என்பதுபோல்தான் விவாதங்களில் இறங்குவார்.
சில சில்லுண்டிகள் போல வெற்று அரட்டை அவரிடம் இல்லை.
ஏடா கூடமாக எழுதுவதற்கும் அவர் தயார். எவ்வளவுக்கு வேண்டுமானாலும்
‘இறங்கி ஆடும்’ பதிவர்கள் தமிழ் இணையத்தில் உண்டு. அவர்களில் இவரும் ஒருவர். விவாதங்களில்
சூடு பறக்கும் என்பதோடு ஆபாச அர்ச்சனைகளுக்கும் இவர்கள் ரெடி.
ஆனால் இந்த இடத்தில்தான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது.
எத்தனை ஆபாச அர்ச்சனைகளுடன் இவர்கள் எழுதியபோதும் அடுத்த பதிவிலேயே
ஒரு ஆழமான சப்ஜெக்டுடன் உலா வந்துவிடுவார்கள். ‘நான் யார் என்பது இந்தப் பதிவில் இருக்கிறது
பார்த்துக்கொள்’ என்று சவால் விடுவதுபோல் இருக்கும் அந்தப் பதிவு. சாதாரண பதிவர்களால்
நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு விவரங்களும் தகவல்களும் கொண்டு தமிழ்ப் பத்திரிகைகளில்கூட
வரமுடியாத அளவுக்கான ஆழமான கட்டுரையாக அந்தப் பதிவு இருக்கும்.
இப்படிப்பட்ட பதிவர்கள் உலாவரும் இடமாகத்தான் தமிழ் இணையவெளி
இருக்கிறது. இந்த வரிசையில் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர்களாக……... வவ்வால், வருண்,
ஜெயதேவ்தாஸ் ஆகியோரைச் சொல்லலாம்.
வவ்வால் இணையத்தில் தமக்கென்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர்.
தமிழ் எழுத்தாளர்களில் ராஜேந்திரகுமார் ‘ஙே’ என்ற எழுத்தை அடிக்கடிப் பயன்படுத்துவார்.
அப்படி வவ்வால் பயன்படுத்துவது ‘அவ்வ்’ என்ற எழுத்துக்கள். சில சமயம் இது ஒரு அடையாளம்
என்பதையும் தாண்டி எரிச்சலைத் தரும் நிலைக்குப் போய்விடுவதும் உண்டு. (அவருடைய
மீள்வருகையில்
இதனை முழுக்கத் தவிர்ப்பார் என்று நம்பலாம்)
இன்னொன்று நடிகை அசின் புகைப்படங்கள். ஒவ்வொரு பதிவிலும் அசினின்
விதவிதமான படங்களைத் தேடியெடுத்துப் போட்டுப் பதிவுகளைத் தொடங்குவார். (அந்தப் படங்களை
அவரைத் தவிர வேறு யாரும் ரசிப்பார்களா என்பது தெரியவில்லை)
இவற்றையெல்லாம் அவரது சேட்டைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும்.
ஏனெனில் அவரது பல பதிவுகள்……. சமீபத்துப் பதிவுகளைச் சொல்லவேண்டுமெனில் ‘கச்சத்தீவு
மறைக்கப்பட்ட உண்மைகள்’, ‘தமிழ்நாட்டில் ஊர்ப்பெயர்கள் வந்தவிதம்’, ‘மலேசிய விமானம்
என்ன ஆனது?’ மற்றும் நடந்துமுடிந்த தேர்தலில் ‘வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் முறைகேடுகள்
நடக்க வாய்ப்பிருந்ததா?’ என்பதுபோன்ற கட்டுரைகள் மிகுந்த உழைப்பையும் எழுதுகிறவருடைய திறமையையும் பறை சாற்றுபவை.
அவருடைய பின்னூட்டப் பெட்டியில் ‘மட்டுறுப்பு’ வைக்கப்பட்டிருக்கிறது.
அவரது இணைய நண்பர்களில் ஒருவரான திரு ராஜநடராஜன் (இவர் தற்சமயம் ‘Nat’ என்ற பெயரில்
எழுதுகிறார்.) ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் 18-ம் தேதிவரைக்குமாக தொடர்ந்து ஒன்பது
கருத்துரைகள் எழுதியிருக்கிறார். இவை அத்தனையும் வவ்வாலின் ‘கிளியரன்ஸிற்குப்’ பிறகே
வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆகவே வவ்வால் ‘ஏதோ’ காரணத்தினாலேயே பதிவுலகில் இயங்காமல் இருக்கிறார்
என்பது புரிகிறது.
சுறுசுறுப்பாக பின்னூட்டங்கள் இடும் ஏலியன் என்பவர் வவ்வாலைத்
தமது குருவாகக் கொண்டாடுபவர். அவராவது வவ்வாலின் கனத்த மவுனம் குறித்து ஏதாவது கருத்துச்
சொல்லியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
எது எப்படியோ பறந்து வாருங்கள் வவ்வால்!
36 comments :
அமுதவன் அவர்களே,
உங்களைப் போன்றே எனக்கும் வவ்வாலின் திடீர் மவுனம் திகைப்பாக இருக்கிறது. நல்ல நண்பர். அதிரடியான கருத்துகளை சொல்வதில் எந்தவித பாசாங்கும் இல்லாமல் வெளிப்படையாக இருப்பவர். எல்லா விஷயங்களிலும் அறிவு உள்ளவர். ஏனிந்த hibernation என்பதுதான் புரியவில்லை. eco -location பிரச்சினையாக இருக்குமா என்றும் யோசித்துவிட்டேன்.
வவ்வால் வந்தால்தான் பதில் கிடைக்கும். விரைவில் வருவார் என்று நம்பும் பல அவரின் பல வலையுக நண்பர்களில் நானும் ஒருவன்.
எதிர்பார்க்காத மனிதாபிமானமிக்க பதிவு. உங்களின் தாராள உள்ளம் பாராட்டிற்குரியது.
வவ்வாலோடு ‘காணாமல் போனவர்கள்’ பட்டியலில் சார்வாகன், கோடங்கி என்ற இருவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் .....
for follow up
for follow up .........
அமுதவன் சார்
நானும் அவர் தளத்திற்குள் சென்று எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன் . புதிதாக எதிலும் அவர் வெளிப்படவில்லை. அவர் பின்னூட்டங்கள் படிக்க ஜாலியாய் இருக்கும் . சுவாரசியமாகவும் இருக்கும் . நீங்கள் சொன்னபடி சில பதிவுகள் அதிக உழைப்பை எடுத்தவையாக இருக்கும் . அவர் எழுத்துச் சேவை இணையத்திற்குத் தேவை .
மேற்கொண்டு சில தளங்களை வெளிப்படுத்தி இருந்தீர்கள் . அதற்குள்ளும் சென்று பார்க்கவுள்ளேன் . வவ்வாலுக்காக ஒரு பதிவு எழுதுகிறீர்கள் என்றால் அவரை நீங்கள் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறீர்கள் என்று தெரிகிறது .
வாருங்கள் காரிகன், தமது வலைத்தளத்தில் மட்டுறுப்பு வசதியை அவர்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். பதிவு எழுதுவதோ, பின்னூட்டங்கள் போடுவதோதாம் காணவில்லை. அவரது நண்பர்கள் யாராவது ஏதாவது தகவல் சொன்னாலும் சரியாயிருக்கும். அல்லது வவ்வாலே கிளம்பி வந்தாரென்றால் தீர்ந்தது பிரச்சினை.
வாருங்கள் தருமி, கோடங்கி தமது தளத்தில் சமீபத்தில் மலாலாவைப் பற்றி எழுதியிருந்ததாக ஞாபகம்.
வருகைக்கு நன்றி சார்லஸ்.
அய்யா வணக்கம்! வவ்வால் பற்றிய தங்களது சிறப்பு பார்வை நல்ல விமர்சனமாகவே இருக்கிறது. நான் வலைப்பதிவில் எழுதத் துவங்கிய புதிதில் எனக்கு ஊக்கம் தந்தவர்களில் அவரும் ஒருவர்.அவர் எப்போதுமே திடீரென்று வருவார். வலையுலகில் அவரது கருத்துரைகளை பரபரப்பாக தருவார். வலையுலகமும் அவரையும், அவரோடு மல்லு கட்டுபவர்களையும் ஆவென பார்க்கும். அப்புறம் திடீரென்று பறந்து விடுவார். அவர் வவ்வால் என்ற பெயரில் மறைந்து இருந்தாலும், தனது உண்மையான பெயரிலும் எழுதுகிறார் என்றே அவரை வலையுலகில் தேடுகிறேன். உங்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க விரைவில் பறந்து வருவார் என்றே நினைக்கிறேன்.
அண்மையில் பேராசிரியர் தருமி அய்யா அவர்களது பதிவொன்றில் நானும்,
// வலைப்பதிவில் COMMENTS என்பதற்கு பின்னூட்டம் என்பது சரியா அல்லது கருத்துரை என்பது சரியா என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை அய்யா//
என்றே கருத்துரை தந்து இருக்கிறேன்.
சிறப்பான பதிவுகள் எழுதுபவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி.
த.ம.1
test
கடந்த ஒரு வாரமாக உங்களை நினைத்துக் கொண்டே இருந்தேன். நான் சுறுசுறுப்பாக இருக்கும் வேளையில் நீங்க நிச்சயம் தூங்கிக்கிட்டு இருப்பீங்க. எப்படி அழைப்பது என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இன்று எதார்த்தமாக உள்ளே வந்தால் இனிய அங்கீகாரம்.
வவ்வால் பிடிவாதங்களை அவர் தரப்பு வாதங்களை பல சமயம் எல்லை மீறிப் போனால் கூட பல விசயங்கள் அவர் மூலம் நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
அமுதவன் சார்! நலமாக இருக்கிறீர்களா? நான் நேரம் கிடைக்கும் போது தமிழ்மணம்,வவ்வால் தளங்களை ஒரு ரவுண்டு வருவதோடு சரி. பதிவுகளில் முழுக்கவனம் செலுத்தும் கால அவகாசம் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வவ்வாலைக் காணோம் என நான் பதிவிட்டிருக்கிறேன். இப்பொழுது உங்கள் தேடலா? இணைய வசதியில்லாத சூழலில் இருப்பதால் பதிவுலகிலிருந்து விலகியிருப்பதாக முன்பு சொன்னார்.திரும்ப வந்தபின் ஆடிய ஆட்டம்தான் அவரை கண்காணிப்பவர்களுக்கு தெரியுமே. பதிவுகளிலும்,பின்னூட்டங்களிலும் பன்முகம் கொண்டவர் என்பதால் கலாய்த்தலுக்குமிடையிலும் அவரது நட்பு தொடர்ந்தது. சிலருக்கு அவரது பாணி பிடிக்காமலும் போயுள்ளது அவரவர் ரசனை,புரிதல் சார்ந்தது. அவரது நெய்வேலி புத்தக இடுகை கடந்த மாதத்திற்குரியது என்று நினைத்தேன். நீங்கள் சொல்லிய பின்புதான் ஆகஸ்ட்டிலிருந்தே வவ்வால் பதிவுலகம் வருவதில்லை என்பது தெரிகிறது.தன்னைச் சுற்றி பெரும் அரணை வேறு கட்டி வைத்திருப்பதால் உங்கள் பதிவைப் பார்த்து அல்லது நெய்வேலி பதிவின் எனது பின்னூட்டங்களுக்கு பதிலடி கொடுக்க வந்தால் மட்டுமே ஆளைப்பிடிப்பது சாத்தியம்.
மேலும் தொழில் சார்ந்தும் ,ஆங்கில தளங்கள் சார்ந்தும் செல்லவேண்டியிருப்பதால் ராஜ நடராஜன் என்ற புரபைல் அப்படியே ஆங்கிலத்துக்கும் சென்று விடுவதால் Nat என்று சுருக்கி விட்டேன்:)
முந்தைய திரைப்பட ரசனை சார்ந்து சிவாஜி,எம்.ஜி.ஆர் இப்பொழுது ரஜனி,கமல் என்ற இரு தளங்களில் நான் சிவாஜி,கமல் ரசனைக்காரன். அவரது விஸ்வரூபம் சார்ந்த எனது பின்னூட்டங்கள் எப்பொழுதும் சாட்சி சொல்லும். சிவாஜியை எந்த தளத்தில் வைப்பது? சொல்வதற்கு வார்த்தை இல்லை.
வவ்வால் யார் சார்ந்த ரசனைக்காரர் என்று தெரியவில்லை.அவரது பார்வை ஒருவர் சொல்வதை தலைகீழா தொங்கிப் பார்ப்பது மட்டுமே. மேலும் பதிவுகளிலும்,பின்னூட்டங்களிலும் வவ்வாலுக்கு மூன்றே கால்தான் என்று அடம்பிடிப்பதால் திருப்பி அடிச்சாலும் எத்தனை அடியும் தாங்கும் அவ்வ்க்கு சொந்தக்காரர்.
அவரது நெய்வேலி புத்தக பதிவில் கிள்ளிவிட்டுட்டு வந்திருக்கிறேன். திரும்ப வருவார் என நம்புவோம்.
தி.தமிழ் இளங்கோ said...
Copy and WIN : http://bit.ly/copy_win
\\அண்மையில் பேராசிரியர் தருமி அய்யா அவர்களது பதிவொன்றில் நானும், // வலைப்பதிவில் COMMENTS என்பதற்கு பின்னூட்டம் என்பது சரியா அல்லது கருத்துரை என்பது சரியா என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை அய்யா// என்றே கருத்துரை தந்து இருக்கிறேன்.\\
தங்களின் வருகைக்கும் இனியகருத்துரைக்கும் நன்றி. நீங்கள் மேற்கூறியதை நானும் படித்திருக்கிறேன். ஆனால் எழுதும்போது நீங்கள் சொன்னதா அல்லது வேறுயாரும் சொன்னதா என்ற சந்தேகம் வந்தது. சரிபார்க்க நேரமில்லை என்பதனாலேயே இதே சந்தேகத்தை இன்னொரு பதிவரும் எழுப்பியிருந்தார் என்று பொதுவாக குறிப்பிட்டேன்.
பார்ப்போம்...வேறு சிலரும் நம்முடைய சிந்தனைக்கு ஒத்து வருகிறார்களா என்று.
ஜோதிஜி திருப்பூர் said...
\\வவ்வால் பிடிவாதங்களை அவர் தரப்பு வாதங்களை பல சமயம் எல்லை மீறிப் போனால் கூட பல விசயங்கள் அவர் மூலம் நான் கற்றுக் கொண்டுள்ளேன்.\\
ஜோதிஜி உங்களிடம் இருக்கும் இந்த யதார்த்தமும், உண்மைத்தன்மையும்தான் உங்களின் பல்வேறு வெற்றிகளுக்கும் காரணம் என்று நினைக்கிறேன்.
பாரபட்சம் இல்லாமல், திறமை வாய்ந்த பல பதிவர்களைப் பாராட்டியிருக்கிறீர்கள். இது தங்களின் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது. மகிழ்ச்சி.
தனிப் பதிவு போட்டு விசாரிக்கும் அளவுக்கு வவ்வால் பல்துறை அறிஞர்தான்; குறிப்பாக, ‘கடவுள்’ குறித்த விவாதங்களில் [ஏலியனும் குறிப்பிடத்தக்கவர்] தன்னிகரற்று விளங்குபவர்.
பதிவு நன்று. ஆனாலும், சிறு உறுத்தல்.....
#.....பதிவுலகில் புகழ் பெற்றவர் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? ஆனால் அப்படி இருப்பதாக தங்களுக்குத் தாங்களாகவே நினைத்துக்கொண்டு சிலர் செய்யும் அலப்பறைகள் வேடிக்கையானவை),...# -இவை, தங்கள் பதிவில் இடம்பெற்ற வரிகள்.
சிலர் அலப்பறை செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
செய்துவிட்டுப் போகட்டுமே[நான்கூட அவர்களில் ஒருவனாக இருக்கலாம்]. அதனால் யாருக்கு என்ன பாதிப்பு? குறிப்பாக உங்களுக்கு?
“அமுதவனா இப்படி எழுதினார்?” என்று உள்மனதில் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
நன்றி அமுதவன்.
Nat said...
\\இப்பொழுது ரஜனி,கமல் என்ற இரு தளங்களில் நான் சிவாஜி,கமல் ரசனைக்காரன். அவரது விஸ்வரூபம் சார்ந்த எனது பின்னூட்டங்கள் எப்பொழுதும் சாட்சி சொல்லும். சிவாஜியை எந்த தளத்தில் வைப்பது? சொல்வதற்கு வார்த்தை இல்லை. வவ்வால் யார் சார்ந்த ரசனைக்காரர் என்று தெரியவில்லை.அவரது பார்வை ஒருவர் சொல்வதை தலைகீழா தொங்கிப் பார்ப்பது மட்டுமே. மேலும் பதிவுகளிலும்,பின்னூட்டங்களிலும் வவ்வாலுக்கு மூன்றே கால்தான் என்று அடம்பிடிப்பதால் திருப்பி அடிச்சாலும் எத்தனை அடியும் தாங்கும் அவ்வ்க்கு சொந்தக்காரர்.\\
வாங்க நடராஜன், பொதுவாகவே அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து அவர்களுக்கு படிப்பதற்கு, வேறு வேலைகளில் ஈடுபடுவதற்கு நேரமில்லை என்று சொன்னாலேயே நான் பெரிதும் சந்தோஷப்படுவது வழக்கம். அந்த அளவில் உழைக்கக்கிடைத்திருக்கும் வாய்ப்பு சம்பந்தப்பட்டவர்களை இன்னும் மேலே மேலே கொண்டுசெல்லும் என்ற எண்ணம்தான் காரணம்.
கமல் நடிப்பின் சில எல்லைகளைத் தொட்டிருக்கிறார் என்ற போதிலும் கமலுக்கு கிடைத்திருக்கும் குருக்களும், இன்ஸ்பிரேஷன்களும் ஏராளம். தவிர ஆயிரக்கணக்கான டிவிடிக்கள், சினிமாக்கள்.
சிவாஜிக்கு அப்படியில்லை. திருவிளையாடல் படத்தில் சிவனாக நடிக்கும்போது புருவத்தைக்கூட அசைக்காமல் உயர்த்தாமல் மொத்தப் படமும் நடித்திருப்பார் என்று சொல்வார்கள். இதுபோன்ற பல பல நுட்பங்களுக்கு சொந்தக்காரர் அவர்.
வவ்வால் பற்றி என்னை விடவும் உங்களுக்குத்தான் நன்கு தெரியும். பார்ப்போம் என்ன செய்கிறார் என்று.
ஏலியன் எங்கே இன்னமும் காணோம்.
'பசி’பரமசிவம் said...
\\ #.....பதிவுலகில் புகழ் பெற்றவர் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? ஆனால் அப்படி இருப்பதாக தங்களுக்குத் தாங்களாகவே நினைத்துக்கொண்டு சிலர் செய்யும் அலப்பறைகள் வேடிக்கையானவை),...# -இவை, தங்கள் பதிவில் இடம்பெற்ற வரிகள். சிலர் அலப்பறை செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். செய்துவிட்டுப் போகட்டுமே[நான்கூட அவர்களில் ஒருவனாக இருக்கலாம்]. அதனால் யாருக்கு என்ன பாதிப்பு? குறிப்பாக உங்களுக்கு?\\
வாங்க பரமசிவம் உங்களுடைய பல பதிவுகளைக் குறிப்பாக குமுதம் மற்றும் பல பத்திரிகைகளைப் பற்றிய பதிவுகளை வாசித்திருக்கிறேன். பொதுவாகவே இணையத்தில் நான் Fiction படிப்பதில்லை. அதனால் நீங்கள் 'கதைகள்' என்று எழுதும்போது நகர்ந்துவிடுவேன். அது ஒருபுறமிருக்க இந்த அலப்பறை விஷயம் நிச்சயமாக உங்களைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்ட வார்த்தையில்லை. அந்த வார்த்தை உங்களைப் புண்படுத்தியிருக்குமேயானால் அதற்காக வருந்துகிறேன். நிற்க,
உண்மையில் சிலபேர் அலப்பறைகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனைச் சொல்வதுகூடத் தவறு என்பது எப்படி சரியானது என்பது விளங்கவில்லை. அதைக்கூட கண்டனம் செய்யவில்லை, கண்டிக்கவில்லை- 'வேடிக்கையாக இருக்கிறது' என்றுதான் சொல்லியிருக்கிறேன். அந்த வார்த்தையைக்கூடச் சொல்லக்கூடாதா என்ன?
வலைச்சரம் போன்று தங்களின் பதிவு
அருமை
வவ்வாலின் தலைமறைவு தங்களை அவரை தேடி ஏங்க வைத்துவிட்டது!! அவரது பின்னூட்டங்களின் போது அவர் பெங்களூர், மகாராஷ்டிரா, சென்னை போன்ற இடங்களில் இருக்கிறார் என்று ஊகித்திருக்கிறேன். சேலம் போன்ற இடங்களைப் பற்றியும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறார். ஆனாலும் அவரது தலைமைச் செயலகம் எது, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், கைபேசியிலேயே இணையம் வந்துவிட்ட இந்த கால கட்டத்திலும் இணையம் இல்லாத சிக்கலில் இருக்கிறார் என்றால் அது எந்த இடமாக இருக்கும் என்பதெல்லாம் புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது.
வவ்வால் சொல்லவந்த கருத்தை, அது சரியோ, தவறோ, எளிய வகையில் எல்லோருக்கும் புரியும்படி தெளிவாகச் சொல்வதில் வல்லவர். இன்னொருபக்கம், அவர் அளவுக்கு ஆழமாக ஒரு விஷயத்தை அலசி பதிவிடுபவர்கள் பத்திரிகளில் கூட நான் பார்த்ததில்லை. உதாரணத்துக்கு மலேசிய கப்பல் காணாமல் போனது, கைபேசி தவர்கள் இயங்கும் விதம், ஓட்டுப் பெட்டிகள் பற்றிய பதிவு என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, இந்தளவுக்கு விகடனில் வேண்டுமானால் யாரவது எழுதியிருக்கலாம், மற்றபடி அசாத்தியமான உழைப்பு என்பதில் சந்தேகமேயில்லை.
கடைசியாக தங்கள் பதிவில் அவரது பின்னூட்டங்களை வெளியிட மறுத்த போது, கொஞ்சம் புலம்பிக் கொண்டிருந்தார். அடுத்த பதிவில் தாஜா பண்ணி உள்ளே ஓடி விடலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்!! தங்களைப் போலவே நானும் அவரைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.............
\\இன்னொன்று நடிகை அசின் புகைப்படங்கள். ஒவ்வொரு பதிவிலும் அசினின் விதவிதமான படங்களைத் தேடியெடுத்துப் போட்டுப் பதிவுகளைத் தொடங்குவார். (அந்தப் படங்களை அவரைத் தவிர வேறு யாரும் ரசிப்பார்களா என்பது தெரியவில்லை)\\ தரையில் விழுந்து புரண்டு சிரிச்சிகிட்டு இருக்கேன்!!
நன்றி அமுதவன் சார்.
உங்களின் initiative ற்கு பாராட்டுக்கள்.
அவரை தொடர்பு கொள்ள அவரது தளத்தை தவிர வேறெதுவும் இல்லாததால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நீங்கள் ஒரு தனி பதிவு எழுதியே அவரை கவுரவித்து விட்டீர்கள். உங்களுக்கு பதில் சொல்லவாவது அவர் நிச்சயம் வந்து தான் ஆக வேண்டும். எதிர்பார்ப்போம்.
நன்றி.
வவ்வால் இல்லாமல் பதிவுலகம் சுவாரசியம் குறைந்து காணப்படுகிறது என்பது உண்மை. வவ்வால் பற்றி நான் கூட எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். முன்பு ஒருமுறை வவ்வால் வருண் ஜெயதேவ் தாஸ் மூவரைப் பற்றியும் எழுதி இருந்தேன்.இவர்களின் விவாதம் அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு செல்வதுண்டு. ஆரம்பத்தில் வவ்வால் Comment moderation வைக்கவில்லை என்று நினைக்கிறேன்..
எந்தக் கருத்தாக இருந்தாலும் அதற்கான எதிர்கருத்துகளை திரட்டி விவாதிப்பதுதான் அவரது பாணி.
சமீபத்தில் கூட எனது பதிவு ஒன்றிக்கு வௌவால் என்ன கருத்துரைத்திருப்பார் என்று சொல்லி இருந்தேன்.
எட்டு ஆண்டுகளாக வலையுலகில் உலா வரும் வவ்வால் 2010 இல் மட்டும் ஒரு பதிவும் எழுதவில்லை . அவ்வப்போது காணாமல் போவதும் மீண்டும் வருவதும் அவருக்கு வழக்கம்தான்.
2015 புத்தகக் கண்காட்சியின் போது பதிவுடன் வருவார் என்று என்று நம்புகிறேன்.
கடுமையாக அவரை கடிந்து கொண்ட பிரபலங்களின் அல்லது கண்டுகொள்ளாதவர்களின் வலைப் பக்கத்திற்கு மீண்டும் செல்வதை தவிர்த்து வந்திருப்பதாக நான் உணர்கிறேன்.
என்னதான் காரசாரமாக விவாதித்தாலும் கொஞ்சம் sensitive டைப் என்றுதான் நினைக்கிறேன்
வவ்வால் இல்லாமல் பதிவுலகம் சுவாரசியம் குறைந்து காணப்படுகிறது என்பது உண்மை. வவ்வால் பற்றி நான் கூட எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். முன்பு ஒருமுறை வவ்வால் வருண் ஜெயதேவ் தாஸ் மூவரைப் பற்றியும் எழுதி இருந்தேன்.இவர்களின் விவாதம் அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு செல்வதுண்டு. ஆரம்பத்தில் வவ்வால் Comment moderation வைக்கவில்லை என்று நினைக்கிறேன்..
எந்தக் கருத்தாக இருந்தாலும் அதற்கான எதிர்கருத்துகளை திரட்டி விவாதிப்பதுதான் அவரது பாணி.
சமீபத்தில் கூட எனது பதிவு ஒன்றிக்கு வௌவால் என்ன கருத்துரைத்திருப்பார் என்று சொல்லி இருந்தேன்.
எட்டு ஆண்டுகளாக வலையுலகில் உலா வரும் வவ்வால் 2010 இல் மட்டும் ஒரு பதிவும் எழுதவில்லை . அவ்வப்போது காணாமல் போவதும் மீண்டும் வருவதும் அவருக்கு வழக்கம்தான்.
என்னதான் காரசாரமாக விவாதித்தாலும் கொஞ்சம் sensitive டைப் என்றுதான் நினைக்கிறேன்
கடுமையாக அவரை கடிந்து கொண்ட பிரபலங்களின் அல்லது கண்டுகொள்ளாதவர்களின் வலைப் பக்கத்திற்கு மீண்டும் செல்வதை தவிர்த்து வந்திருப்பதை அறிய முடிகிறது
2015 புத்தகக் கண்காட்சியின் போது பதிவுடன் வருவார் என்று என்று நம்புகிறேன்.
கரந்தை ஜெயக்குமார் said...
\\வலைச்சரம் போன்று தங்களின் பதிவு அருமை\\
வருகைக்கு நன்றி ஜெயக்குமார்.
Jayadev Das said...
\\ஆனாலும் அவரது தலைமைச் செயலகம் எது, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், கைபேசியிலேயே இணையம் வந்துவிட்ட இந்த கால கட்டத்திலும் இணையம் இல்லாத சிக்கலில் இருக்கிறார் என்றால் அது எந்த இடமாக இருக்கும் என்பதெல்லாம் புரியாத புதிராகவே இன்னமும் இருக்கிறது. \\
எனக்கும் இந்த சந்தேகங்கள் எல்லாம் தோன்றியதால்தான் இந்தப் பதிவு.
\\இன்னொன்று நடிகை அசின் புகைப்படங்கள். ஒவ்வொரு பதிவிலும் அசினின் விதவிதமான படங்களைத் தேடியெடுத்துப் போட்டுப் பதிவுகளைத் தொடங்குவார். (அந்தப் படங்களை அவரைத் தவிர வேறு யாரும் ரசிப்பார்களா என்பது தெரியவில்லை)\\ தரையில் விழுந்து புரண்டு சிரிச்சிகிட்டு இருக்கேன்!!\\
அவர் தமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தைக் காட்டிக்கொள்வதற்குத்தான் அந்தப் படங்களை உபயோகிக்கிறார் என்றபோதிலும் ஒவ்வொரு பதிவிற்கு முன்பும் அந்தப் படங்கள் என்பது கொஞ்சம் மிகையோ என்றே தோன்றிற்று.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\ஆரம்பத்தில் வவ்வால் Comment moderation வைக்கவில்லை என்று நினைக்கிறேன்.. எந்தக் கருத்தாக இருந்தாலும் அதற்கான எதிர்கருத்துகளை திரட்டி விவாதிப்பதுதான் அவரது பாணி. சமீபத்தில் கூட எனது பதிவு ஒன்றிக்கு வௌவால் என்ன கருத்துரைத்திருப்பார் என்று சொல்லி இருந்தேன். எட்டு ஆண்டுகளாக வலையுலகில் உலா வரும் வவ்வால் 2010 இல் மட்டும் ஒரு பதிவும் எழுதவில்லை . அவ்வப்போது காணாமல் போவதும் மீண்டும் வருவதும் அவருக்கு வழக்கம்தான். 2015 புத்தகக் கண்காட்சியின் போது பதிவுடன் வருவார் என்று என்று நம்புகிறேன்.\\
தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி முரளிதரன். இன்னமும் ஒரு மாதம்தானே இருக்கிறது. பொறுமையுடன் காத்திருப்போம்.
Alien said...
\\அவரை தொடர்பு கொள்ள அவரது தளத்தை தவிர வேறெதுவும் இல்லாததால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் ஒரு தனி பதிவு எழுதியே அவரை கவுரவித்து விட்டீர்கள். உங்களுக்கு பதில் சொல்லவாவது அவர் நிச்சயம் வந்து தான் ஆக வேண்டும். எதிர்பார்ப்போம்.\\
ஓ, உங்களுக்கே அதுதான் நிலைமையா? அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர்கள் யாரும் இணையத்தில் இல்லையா? யாராவது வந்து சொன்னால் நன்றாக இருக்கும்.
அமுதவன் சார்:
பிறருக்கு எப்படினு தெரியாது,, ஆனால் எனக்கு சிலவேளைகளில் வேலை அதிகமாகும்போது, பதிவுலகை புறக்கணிக்க வேண்டிய கட்டாயம் வருவதுண்டு. அப்படி நான் புறக்கணித்துவிட்டு ஒரு வாரம் அல்லது ரெண்டு வாரம் சென்று பதிவுலகம் திரும்பும்போது, எனக்கு பதிவெழுதவோ பின்னூட்டமிடவோ அவ்வளவாக ஆவல் வருவதில்லை. அந்நிலையில் பதிவுலகை விட்டு ஒதுங்குவது எளிதுனு தோனும்..
* வால் பையன் ஏதோ ஹோட்டல் ஆரம்பித்தார். அது அவ்வ்ளவு சரியாப் போகவில்லைனார். அதுக்கப்புறம் நெறையா சொந்தப்பிரச்சினைகள் என்பது என் புரிதல்..
நான் பார்த்தவரைக்கும் கொடிகட்டிப் பறந்த பலர் ஒதுங்கி போயியிருக்காங்க..இது பதிவுலகில் சாதாரணமாக நடக்கிறது, நடந்து கொண்டு இருக்கிறது.
* "வெட்டிப்பேச்சு" சித்ரா , எதார்த்தமாகவும், பதிவர்களை ஈர்ப்பதுபோல் காசுவலாக பதிவெழுதுவார். என்ன காரணமோ அவரும் ஒதுங்கிவிட்டார்.
* இகபால் செல்வன் ஒரு புரியாத புதிர். திடீர்னு அவர் தளம் முடக்கப்பட்டதாகச் சொல்லுவார்..இதுபோல் பலமுறை சொல்லியுள்ளார். அப்புரம் இன்னொரு தளம் ஆரம்பிப்பார்.. இப்படியே போகும்..
* சார்வாகன் எங்கே போனார்னு தெரியலை. ஒளியின் வேகத்தைப் பத்தி அவர் தளத்தில் கடைசியா விவாதிச்சதா ஞாபகம்..ரொம்ப நல்ல மனுஷன் அவர். நான் எல்லாம் பேசினாலே திட்டுவது போலிருக்கும். அவருக்கு எவ்வளவு கோபம் வந்தாலும் வரம்பு மீறி திட்டவே தெரியாது. பண்பாளர்..
* உங்க மதிப்புக்குரிய டாக்டர் நம்பள்கி .. இவரு திடீர்னு காணாமல்ப்போனபோது "எங்கே காணோம்?"னு தோணியது. இப்போ திரும்பி வந்து இவர் எழுதுகிற "உயர் தரமான" பதிவுகளைப் பார்த்தால்; எதுக்குத் திரும்பி வந்தாரு? அப்படியே தொலைந்து போயிருக்கலாம் இவர்! னுதான் தோனுது. தமிழ்மணத்தில் இவர் பதிவுகளை வடிகட்ட வேண்டுதல் விடணும்னு தோனுது..அளவுக்குமீறி எதுக்கெடுத்தாலும் டபுள் மீனிங் மண்ணாங்கட்டினு எழுதினால் எரிச்சல்தான் வருது..இவரு டாக்டரா இருந்தா என்ன நர்ஸா இருந்தா நமக்கென்ன என்ன? பதிவில் கொஞ்சமாவது தரம் இருக்கணும்..இல்லைனா மைக் டெச்டிங்னு பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்..
உண்மையைச் சொல்லணும்னா நான் எல்லாம் என்னுடைய பொழுதுபோக்குக்காகத் தான் பதிவுலகில் இருக்கிறேன். தமிழ் வளர்க்கணும், பலரையும் நம் கருத்தைத் திணித்து பெருசா சாதிக்கணும் என்கிற எண்ணம்/பேராசை எல்லாம் கெடையாது. :)
என்னைப் பொறுத்தவரை வவ்வால் இணைய ரவுடி இல்லை. மனதில் பட்டதை நறுக்கென்று சொல்லுவார். நாகரீகமாகவும் சொல்லுவார். அவர் இல்லாதது எனக்கும் இழப்பாகவே உணர்கிறேன் நான்.
வருண் said...
\\நான் பார்த்தவரைக்கும் கொடிகட்டிப் பறந்த பலர் ஒதுங்கி போயியிருக்காங்க..இது பதிவுலகில் சாதாரணமாக நடக்கிறது,\\
வாங்க வருண், நீங்கள் சொல்லியிருக்கும் பெரும்பாலான கருத்துக்களுடன் உடன்படுகிறேன். ஆரம்பத்தில் பதிவுலகில் மிக அதிகமாகப் படபடத்துக்கொண்டிருந்த பலபேரை இன்றைக்குக் காணவில்லைதான். அதுவும் நாள்தவறாமல் பதிவெழுதுவது, ஹிட்ஸுக்காக அலைவது என்றெல்லாம் இருப்பவர்கள் வெகு சீக்கிரமே காணாமல் போய்விடுகிறார்கள். அண்ணா ஒருமுறை சொன்னார்."மிக வேகமாகப் பேசுபவர்கள் எல்லாம் மிக வேகமாக வெளியேறிவிடுவார்கள்" என்று. அதுதான் பதிவுலகிலும் நடந்துகொண்டு இருக்கிறது. இங்கே நான் பதிவில் பேசியிருப்பவர் அந்தப் பட்டியலில் வரமாட்டார் என்று நினைக்கிறேன்.
\\உண்மையைச் சொல்லணும்னா நான் எல்லாம் என்னுடைய பொழுதுபோக்குக்காகத் தான் பதிவுலகில் இருக்கிறேன். தமிழ் வளர்க்கணும், பலரையும் நம் கருத்தைத் திணித்து பெருசா சாதிக்கணும் என்கிற எண்ணம்/பேராசை எல்லாம் கெடையாது. :)\\
ஆனால் தமிழ் இணையமும் அதன் ஒரு பகுதியான பதிவுலகம் என்பதும் இன்னொரு மீடியா. இதனை தவம்போல நினைத்துப் புழங்குபவர்களும் இங்கே செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாலகணேஷ் தங்கள் கருத்திற்கு நன்றி.
சார்வாகன் பற்றி வருண் மிக சரியாகக் கூறியுள்ளார்.நான் அறிந்தவரை மறுப்புக் கருத்துகளுக்கு அவர் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை என்றே நினைக்கிறேன்.
வருண் உங்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் என்னைப் பார்க்க யாரோ வந்துவிட்டதால் சட்டென்று முடித்துவிட்டு எழுந்துபோக நேர்ந்துவிட்டது.
நீங்கள் சொல்லியுள்ள நம்பள்கியின் எழுத்துக்கள் வரம்பு மீறியவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால்தான் பல சமயங்களில் அவர் எழுத்து பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் வெறும் எழுத்துப் பிழை திருத்தம், அல்லது வாக்கியப்பிழைத் திருத்தம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறேன்.
பல வருடங்களுக்கு முன்னால் வெறும் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு எழுதிய கவிதைகளையும், பழங்காலப் பாடல்களையும் தொகுத்திருந்த தொகுப்பு ஒன்று படிக்க நேர்ந்தது. அப்போது அது சரியாகப் புரியவில்லை. அதனால் சிலவற்றைப் படித்துவிட்டு நண்பரிடம் திருப்பிக்கொடுத்துவிட்டேன். நம்பள்கியின் எழுத்துக்களைப் படிக்கும்போது அந்த புத்தகத்தின் நினைவுதான் எனக்கு வருகின்றது.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\சார்வாகன் பற்றி வருண் மிக சரியாகக் கூறியுள்ளார்.நான் அறிந்தவரை மறுப்புக் கருத்துகளுக்கு அவர் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை என்றே நினைக்கிறேன்.\\
நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் முரளிதரன். இணையத்தில் பலர் வாதாடும்போது மிகவும் கட்டுப்பாட்டுடன் வாதாடுவதையும் பார்த்திருக்கிறேன். இன்னொரு விஷயம்-
\\நேரடியாக ஆழமான கருத்துக்கள் கொண்ட சிறப்பான பதிவுகளை எழுதும் பதிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். \\ என்ற பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டுப்போய்விட்டதைப் பிறகே உணர்ந்தேன். இது அப்படிப் பட்டியலிடும் நோக்கம் கொண்ட பதிவு அல்லவே அதனால் பிறகு சேர்த்துக்கொள்ளலாம் என்றிருந்தேன். இப்போது சேர்த்துவிடுகிறேன்.
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2015/01/2.html
நேரம் கிடைத்தால் வந்து பாருங்களேன்.
I miss you a lot Vovs.....
K.N
Post a Comment