Saturday, January 10, 2015

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரின் தாக்கங்கள் - பகுதி 1

பாலச்சந்தரும் பாடல்களும் 

தமிழ்த்திரையுலகின் ஆரம்ப காலப்  படங்களில் தியாகராஜபாகவதர் மற்றும் பியூசின்னப்பாவின் பாடல்கள் நிரம்பிய காலம் மாறி சிவாஜி மற்றும் கலைஞரின் தாக்கத்துடன் பராசக்தி வந்தபிறகுதான் தமிழ்ப்படங்கள் வேறொரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தன. இந்தப் பாதையில் பயணித்த படங்களை அழகு படுத்தி இன்றைய பாதைக்குக் கொண்டுவருவதற்கான அஸ்திவாரம் போட்ட பலரில் பீம்சிங், மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்குக் கணிசமான பங்கு உண்டு. 

பாலச்சந்தரின் வருகை என்பது சிவாஜி எம்ஜிஆர் படங்களைத் தாண்டி கவனிக்கப்படவேண்டும் என்பதில் மட்டுமின்றி ஸ்ரீதரைத் தாண்டியும் நாம் கவனிக்கப்படவேண்டும் என்ற சவாலும் அன்றைக்கு அவருக்கு இருந்தது.

ஏனெனில் சிவாஜி எம்ஜிஆரைத் தாண்டி கவனிக்கப்பட்டவர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனத்தின் ‘படகுப் படம்’ தோன்றியதுமே தியேட்டரில் கைத்தட்டல் எழுந்த காலம் அது. இவற்றையெல்லாம் தாண்டித்தான் பாலச்சந்தர் நின்றார் என்பதுதான் அவரது பெருமை. 

பாலச்சந்தரின் நேரடித் திரை அனுபவங்கள் நீர்க்குமிழி படத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கும் முன்பே தெய்வத்தாய் படத்திலிருந்தே அவரது திரைப்பிரவேசம் ஆரம்பமாகிவிட்டது. எம்ஜிஆரின் தெய்வத்தாய் படம்தான் பாலச்சந்தரின் முதல் திரையுலகப் பிரவேசம்.

தெய்வத்தாய் படத்தில் எம்ஜிஆர் பாலச்சந்தரை அறிமுகப்படுத்தினாரா என்று பார்த்தால் பெருமை ஆர்.எம்.வீரப்பன் பக்கம் போகிறது. ஆர்எம்வியின் முதல் தயாரிப்பு தெய்வத்தாய் படம். சத்யா மூவிஸ் ஆரம்பித்து ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரை வைத்துப் படமெடுத்தபோது திரைக்கதை இயக்கம் பி.மாதவன் என்றும், வசனம் பாலச்சந்தர் என்றும் ஆர்எம்வி எடுத்த முடிவுகளில் எம்ஜிஆர் தலையிடவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனை கேபியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வந்த ஆர்எம்வியே சன் தொலைக்காட்சிக்கு அளித்த நேரலையில் “பாலச்சந்தரை தெய்வத்தாய் மூலம் நான்தான் திரையுலகிற்குக் கூட்டி வந்தேன்” என்று சொன்னார். அத்தோடு அவர் இன்னொன்றையும் சொன்னார்.  “அது என்னுடைய முதல் படம் என்பதால் இயக்குநராக பி.மாதவன் மற்றும் அன்றைக்கு மிகப்பிரபலமாக இருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களையும் முதன்முதலாக எம்ஜிஆர் படத்திற்கு நான்தான் அழைத்துவந்தேன்” என்றார்.

பி.மாதவன், பாலச்சந்தர் என்பதோடு ஆர்எம்வி நிறுத்திக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. எதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தியையும் எம்ஜிஆர் படத்துக்கு நான்தான் முதன்முதலாகக் கூட்டிவந்தேன் என்று சொன்னார் என்பது விளங்கவில்லை. ஏனெனில் 1955-ல் குலேபகாவலி, 1957-ல் மகாதேவி, 1960-ல் மன்னாதி மன்னன், 1962-ல் பாசம், 1963-ல் ஆனந்தஜோதி, பணத்தோட்டம், பெரிய இடத்துப் பெண், 1964-ல் என் கடமை என்று பல எம்ஜிஆர் படங்களுக்கு இசையமைத்து ஏராளமான புகழ்பெற்ற பாடல்களை ஏற்கெனவே எம்ஜிஆருக்குத் தந்தபிறகுதான் தெய்வத்தாய்க்கு வருகிறார்கள். இது இப்படியிருக்க ஆர்எம்வி எதற்காக அப்படிச் சொன்னார் என்பது விளங்கவில்லை.

அதுபோகட்டும், தெய்வத்தாய் படத்தில்தான் கேபி முதன்முதலாக திரையுலகில் நுழைகிறார். 

இந்தப் படத்திற்கும் வசனம் மட்டும்தான் பாலச்சந்தர். மூலக்கதை நானாபாய் பட். இந்தப் படம் பாலச்சந்தருக்கு மட்டுமல்ல பி. மாதவனுக்கும் முதல் படம். பி. மாதவன் அதுவரை ஸ்ரீதரிடம் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு வெளியே வந்து முதன்முதலாகத் தனியே டைரக்ட் செய்ய ஆரம்பிக்கிறார். அன்னக்கிளி மூலம் புகழ்பெற்ற இயக்குநர்களான தேவராஜ் மோகன் இருவரும்  ஸ்ரீதரிடம் பணியாற்றிவிட்டு மாதவனுடன் கூடவே வெளியேறியவர்கள். இருவரும் பி.மாதவனின் உதவியாளர்களாக தெய்வத்தாயில் பணியாற்றுகிறார்கள்.

தெய்வத்தாய் படத்து அனுபவங்களை தேவராஜ் (மோகன்) மிகுந்த சுவாரஸ்யத்துடன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். இவற்றில் பல செய்திகள் எம்ஜிஆரின் அசுரத்தனமான பிராபல்ய ஆளுமையால் வெளியே சொல்லமுடியாதவை.  

சிலவற்றை லேசாகப் பகிர்ந்துகொள்ளலாம். 

அவற்றில் ஒன்று தெய்வத்தாய்க்கு பாலச்சந்தர் எழுதிய வசனங்கள். பாலச்சந்தர் பேச்சிலும் சரி எழுத்துக்களிலும் சரி நிறைய ஆங்கில வார்த்தைகள் கலந்திருக்கும். சாதாரணமாகவே ஆங்கிலம் கலந்துதான் பேசுவார், எழுதுவார். அதுவும் தெய்வத்தாய் அவருக்கு ஆரம்பகாலப் படம். அவர் எழுதிய வசனங்களில் பெருமளவு ஆங்கிலம் கலந்திருக்குமாம். மாதவன் பார்த்து ஓகே பண்ணிவிடுவார். 

வசனப் படிகள் எம்ஜிஆரிடம் போகும். வசனங்களைப் பார்க்கும் எம்ஜிஆர் முகம் சிவந்துவிடுமாம். “என்னய்யா வசனம் இது? நாம என்ன ஆங்கிலப்படமா எடுக்கிறோம்? எதுக்காக இத்தனை ஆங்கில வசனங்கள்? எல்லாத்தையும் மாத்தச்சொல்லு. தமிழ்ல எழுதித் தரச்சொல்லு”
சில வார்த்தைகள் தமிழ்ப்படுத்தப்படும். சில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தினால் சரியாக வராது. 

“சின்னச்சின்ன வார்த்தைகள்தானே? அப்படியே இருக்கட்டுமே. இயல்பாத்தானே இருக்கு” என்பாராம் பாலச்சந்தர்.

“அவருக்கு இயல்பா இருக்குய்யா. பேசறதுக்கு எனக்குத்தானே கஷ்டமா இருக்கு? போ போ போய் மாத்திக்கிட்டு வா. இல்லாட்டி நீ உக்காந்து மாத்தி எழுது” பேப்பரைக் கொண்டுபோய்க் காட்டும் தேவராஜிடம் கறாராக வரும் எம்ஜிஆரின் உத்தரவு.

ஒருவழியாக அன்றைய படப்பிடிப்பு முடியும்.

மீண்டும் அடுத்த நாள் படப்பிடிப்பு. அன்றைய வசனத்துக்கான பேப்பர். வசனப்படிவத்தைப் பார்த்ததும் எம்ஜிஆரின் கோபம். “என்ன நினைச்சுக்கிட்டிருக்காருய்யா அவரு? யாருய்யா அவரை வசனம் எழுத கூட்டிட்டு வந்தது? இதெல்லாம் சிவாஜிக்கு எழுத வேண்டிய வசனங்கள். அவர்தான் அழகாப் பேசிக் கைத்தட்டல் வாங்குவாரு. எனக்கெதுக்கு இதெல்லாம்? தேவராஜ் திரும்ப இன்னொரு தரம் இதுபோல வசனங்களைக் கொண்டுவந்தியோ தொலைச்சுப்பிடுவேன் உன்னை. எல்லாத்தையும் அடிச்சுட்டு தமிழ்ல எழுதிக்கொண்டா”

எம்ஜிஆரின் அருகில் வராமல் சற்றே தூரத்தில் நின்றிருக்கும் பாலச்சந்தரிடம் வசனங்களை மாற்றச்சொன்னால் “என்ன சார் அவருக்குப் புரியவே மாட்டேங்குது. போலீஸ் ஆபீசர் கேரக்டர்தானே அவருடையது?  சிஐடி ஆபீசருங்க எல்லாம் எப்படிப் பேசுவாங்க? இப்படிப் பேசினாத்தானே இயல்பா இருக்கும்? ரொம்ப நேச்சுரல் வசனங்கள் சார் இது” என்பாராம்.

மறுநாள் எம்ஜிஆரின் கார் படப்பிடிப்புக்கு வரும்போது “வர்றாரு, சின்னவர் வந்துட்டாரு. வந்ததும் அவர் கண்ணு முன்னாடி நீங்க நிக்காதீங்க. காலையில் பார்த்தா டென்ஷன் ஆயிருவாரு. அந்தப் பக்கமாப் போயிட்டு அப்புறம் வாங்க” என்று பாலச்சந்தரிடம் சொல்லி அனுப்பி அவர் மரத்துக்குப் பின்னால் நின்றுகொண்ட சம்பவங்கள் எல்லாம் உண்டு” என்று நிறையச் சொல்வார் தேவராஜ்.

பிற்பாடு சற்றே பழக ஆரம்பித்தபின் ஒருநாள் இதுபற்றி பாலச்சந்தரிடமே கேட்டேன். 

சிரித்துக்கொண்டவர் “யார் சொன்னது உங்களுக்கு?” என்றார்.

“தேவராஜ் (மோகன்)” என்றேன்.

“ஆரம்பத்துல அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். எனக்கு சரியா நினைவில்லை. அதுக்குப் பின்னாடி எம்ஜிஆர் என்னிடம் ரொம்பவும் அன்பாகவும் மரியாதையாகவும்தான் பழகறார். 
முந்தாநாள்கூட ஒரு நிகழ்ச்சியில சந்திச்சோம். எம்மேல ரொம்பவும் அன்பு செலுத்தறவர்தான் அவர்” என்றார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த நாட்கள் அவை. அதற்குமேல் நான் இதுபற்றி பாலச்சந்தரிடம் எதுவும் பேசவில்லை.

தெய்வத்தாய் படத்தை இப்போது பார்க்கும்போதும் சில காட்சி அமைப்புகளில் பாலச்சந்தரின் டச் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ‘பருவம் போன பாதையிலே என் பார்வையை ஓடவிட்டேன்’ பாடல் காட்சி. 
எம்ஜிஆர் சரோஜாதேவியின் வீட்டிற்கு வந்து தனக்குக் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு மிச்சத்தை வைத்துவிட்டுப் போய்விடுவார். அதற்குப்பின் அங்கே வரும் சரோஜாதேவிக்கு அந்தக் கண்ணாடி டம்ளரின் மிச்சமிருக்கும் குளிர்பானத்திற்குள் எம்ஜிஆரின் உருவம் இருப்பதுபோல் தோன்றும்.

அந்த பிம்பத்துடன் காதல் மொழி பேசுவார்.

வம்புக்கிழுப்பார்.

‘குளிருதா இரு உன்னை கவனிச்சுக்கறேன்’ என்ற பாணியில் “ஐஸ் பிடிக்காதா?” என்று கேட்டுக் கையில் இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து டம்ளருக்குள் போடுவார். ஐஸ் கட்டியின் குளிர் தாங்காமல் உடல் சிலிர்த்து நடுங்கிக்கொண்டு எழுவார் எம்ஜிஆர். “ஐயோ பாவம் குளிருதா?” என்று கேட்டு போட்ட ஐஸ் கட்டியை எடுத்துவிடுவார். இனிமையான பின்னணி இசையுடன் பாடல் ஆரம்பிக்கும்.

கண்ணாடி கிளாஸூக்குள் குட்டியூண்டு எம்ஜிஆர்.

வெளியில் சரோஜாதேவி.

பாடலின் நடுவே அப்படியே நடுங்கிக்கொண்டே எழும் எம்ஜிஆர் சட்டென்று எழும்பி கண்ணாடி டம்ளரின் விளிம்பில் பேலன்ஸ் செய்து நிற்பார். சரோஜாதேவி மெல்லிய அபிநயத்துடன் அறைக்குள் பாடிக்கொண்டே இருக்க  கண்ணாடி டம்ளரின் விளிம்பில் வட்டமாக நடப்பார் 
எம்ஜிஆர்.  இனிமையோ இனிமையாக பாடல் தவழும்.

வெகுஜன ரசனையில் அவ்வளவாகப் போற்றப்படாத பாடல் இது. ஆனால் அந்தப் படத்தின் சிறந்த பாடல் இதுதான். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ பாடலும், ‘ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன்’ பாடலும், ‘இந்தப் புன்னகை என்னவிலை’ பாடலும் மற்ற பாடல்களும் மிகவும் புகழ்பெற்ற பாடல்கள். அவற்றைவிட இனிமையும் மிகுந்த அழகியல் உணர்வும் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் பாடல் இது. இந்தப் பாடலில் மெலடியைப் போட்டுப் பின்னியெடுத்திருப்பார்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். சுசீலாவின் குரலும், உச்சரிப்பில் கொடுக்கும் அழகுகளும் மயக்கும். 

படமாக்கப்பட்ட விதமும் அத்தனை பாந்தமாக வசீகரமாக இருக்கும்.

இந்தப் பாடல் நிச்சயம் பாலச்சந்தரின் கற்பனையில் எழுந்த காட்சிதான் என்று நம்ப 
இடமிருக்கிறது.


அதே நாட்களில் வந்த இன்னொரு படம்தான் சர்வர் சுந்தரம். நாகேஷின் அத்தனைத் திறமைகளையும் வெளிக்கொண்டுவந்து கொட்டிய படம் இது. இப்போது பார்த்தாலும் அத்தனைப் புதிதாக இருக்கும். டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு என்று இருந்தாலும் பாலச்சந்தர் படம் பார்ப்பதுபோன்ற நினைப்பே படம் முழுவதும் இருக்கும். ஏனெனில் காட்சிக்குக் காட்சி பாலச்சந்தர் சம்பந்தப்பட்ட படம் இது.

ஏற்கெனவே நாகேஷுக்காக பாலச்சந்தரால் எழுதப்பட்டு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டு பிறகு படமாக வந்த படைப்பு. பாடல்களும் பிற நடிகர்களும் மட்டும்தான் பிற்சேர்க்கை. இந்தப் படத்திலும் இரண்டு பாடல்களை பாலச்சந்தரின் கைவண்ணம் என்று சொல்லலாம். முதலாவது, ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல். ஒரு கதாநாயகராக நாகேஷ் நடிப்பது போலவும் அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதுபோலவும் பாடல் ரிகார்டிங் நடைபெறுவதுபோலவும் காட்சிகளெல்லாம் வரும் அந்தப் படத்தில். டிஎம்எஸ், எல்ஆர் ஈஸ்வரி ஆகியோர் பாடுவதும் எம்எஸ்வி இசைக்குழுவினரைக் கண்டக்ட் செய்வதுபோலவும் (யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி ராமமூர்த்தியும் அந்தக்கூட்டத்தில் இருப்பார்) காட்சி அமைந்திருக்கும். படப்பிடிப்பு எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்பதை இந்தப் படத்தில் காட்டுகிறார்கள் என்ற தகவல் அந்தக் காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

அதே படத்தில் ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா’ என்ற பி.சுசீலாவின் இன்னுமொரு வைரம் உண்டு.

கே.ஆர். விஜயா ஒரு கிளியொன்றை வைத்துக்கொண்டு பாடும் பாடலாக காட்சி அமைந்திருக்கும். விஜயா பாடும்போது கூடவே கிளியும் பாடுவதாக அல்லது பேசுவதாக பாடல் அமைக்கப்பட்டிருக்கும். சதன் என்ற பலகுரல் மன்னன் ஒருவர் அப்போது எம்எஸ்வி குழுவில் இருந்தார். கிளிக்கான குரலை சதன் கொடுத்துவர பாடல் நெஞ்சமெல்லாம் இனிக்கும்..
துளித்துளியாய் இனிமை சொட்டும் ஏராளமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களில் இதுவும் ஒன்று. பி.சுசீலாவின் பெயர் சொல்லும் பல பாடல்களில் இந்தப் பாடலுக்குச் சிறப்பான இடம் ஒன்று உண்டு.

என்ன சோகம் என்றால் எம்எஸ்விக்குப் பிறகு இம்மாதிரியான சோதனை முயற்சிகளுக்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விட்டது. இசை என்பதே வெறும் வாத்தியங்களின் இரைச்சல் கூடவே டெக்னாலஜியின் கைவண்ணம் என்ற அளவில் மாறிப்போய்விட்டது.

அதுவே இளைஞர்களின் ட்ரெண்ட் என்றும் ஆகிவிட்டது.

இந்தப் பாடலும் எதற்காக இங்கே குறிப்பிடப்படுகிறது என்று பார்த்தோமானால் பிற்பாடு தம்முடைய படங்களில் பாடல்களைப் படமாக்க கேபி மேற்கொண்ட முயற்சிகள்……. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலையாவது வித்தியாசமாகச் செய்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டவர் போலவே தமது ஒவ்வொரு படத்திலும் முயன்றிருப்பார் அவர்.

மேஜர் சந்திரகாந்த் படத்திலேயே இதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டார் பாலச்சந்தர். வி.குமாரின் இசையில் உருவான அந்தப் படத்தில் (பாலச்சந்தரின் நாடகங்களுக்கு இசையமைத்துவந்த வி.குமார்தான் பிற்பாடு பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது ஒருபுறமிருக்க பாலச்சந்தரை முதன்முதலாக இயக்குநராக அறிமுகப்படுத்திய ஏ.கே. வேலனிடம் வி.குமார்தான் பாலச்சந்தரையே அறிமுகப்படுத்தினார் என்று சிவகுமாரின் தகவல் கூறுகிறது)வந்த ‘ஒருநாள் யாரோ என்ன பாடல் சொல்லித்தந்தாரோ’- என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடல்.

எம்எஸ்வியின் பாணியிலேயே அந்தப் பாடலின் மெட்டு அமைந்திருக்கும். அதனால் அந்தப் பாடல் எம்எஸ்வி இசையமைத்தது என்றே இன்னமும் பலபேர் நினைத்திருப்பார்கள். அந்தப் பாடல் அமைந்திருக்கும் விதத்தைப் பார்த்தோமானால் படு சுவாரஸ்யமாக இருக்கும். அண்டாவுக்குள் பாத்திரங்களைத் தூக்கிப் போடுவது, டம்ளர்களைத் தாம்பாளத்தில் கவிழ்த்து அடுக்கிவைப்பது, கிண்ணங்களைத் தூக்கி எறிவது, ஸ்பூன்களைத் தட்டில் கொட்டுவது, டர்ர்ர் என்று துணியைக் கிழிப்பது, ஸ்பூன்களைக் கீழே பரப்பிவிட்டு ஒவ்வொரு ஸ்பூனாகத் தட்டுவதன் மூலம் ஒவ்வொரு டம்ளரிலும் ஒவ்வொன்றாக அவற்றை விழவைப்பது என்று அதகளம் பண்ணியிருப்பார் நாகேஷ்.

அத்தனை செய்கைகளுக்கும் ஒவ்வொரு இசைத்துணுக்கும் சத்தமும் எழும்பிக்கொண்டே வந்து ஒரு அழகிய, மிக அழகிய பாடலாக வடிவம் பெறும் காட்சி அமைப்பு அது.

ஊஞ்சல் ஒன்றில் நின்றபடி ஜெயலலிதா பாடலைப் பாடிக்கொண்டிருக்க ஊஞ்சலை ஆட்டியபடியே பின்னணி இசையையும் கொடுத்துக்கொண்டு ஜெயலலிதாவின் வாயசைப்புக்குத் தகுந்தாற்போல் மைக்கை ஊஞ்சலின் ஆட்டத்திற்கு ஏற்ப நடந்தும் ஓடியும் நீட்டித்தும் குறுக்கியும் பிடித்துக்கொண்டு……………அட்டகாசமான சேஷ்டைகளுடன் அடித்துத் துவைத்திருப்பார் நாகேஷ் . 

நாகேஷைப் போன்ற கலைஞர்கள் எல்லாம் இதற்குமேல் தோன்றுவார்களா என்பது சந்தேகமே.

பாலச்சந்தர் விஸ்வநாதனுடன் இணைவதற்கு முன்பு வி.குமார் மூலம்தான் நிறையப் புதுமைகளையும் இனிமைகளையும் இசைத்துறைக்குச் சேர்த்தார்.அதன் பின்னர் எம்எஸ்வி உதவியுடன் பாலச்சந்தரின் விசேஷ பாடல் அமைப்பு எல்லாப் படங்களிலுமே தொடர்ந்தது.

பாமா விஜயம் ஒரு நகைச்சுவைப் படம்.

ஸ்ரீதரின் காதலிக்கநேரமில்லை படத்திற்கு அடுத்து தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படமாக பாமா விஜயத்தைச் சொல்லலாம். அந்தப் படத்திலும் நடிகையின்(நடிகையாக ராஜஸ்ரீ நடித்திருப்பார்) வீட்டிற்குள் நுழையும் நாகேஷ் அங்குள்ள ஹாலில் நடிகையின் விதவிதமான படங்கள் மாட்டப்பட்டிருக்க……. அந்தப் படங்களிலுள்ள ராஜஸ்ரீயுடன் சேர்ந்து ஆடிப்பாடுவதாக நாகேஷ் கற்பனை செய்து பார்க்கிறமாதிரியான ஒரு காட்சி அமைத்திருப்பார்.

ஒவ்வொரு சரணத்திற்கும் அந்தப் படத்தின் சட்டத்திலிருந்து ராஜஸ்ரீ இறங்கிவந்து நாகேஷூடன் ஜோடி சேர்ந்து ஆடிவிட்டு மறுபடியும் அந்தச் சட்டத்துக்குள்ளேயே போய்விடுவதாக காட்சி.

அந்தப் பாடலைத் தவிர ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பாடல். கவியரசரின் எளிமையான யதார்த்தமான நடைமுறைத் தத்துவங்கள் நகைச்சுவையுடன் பாடல் பூராவிலும் இறைந்துகிடக்க விஸ்வநாதனின் இசை சாம்ராஜ்யமும் டிஎம்எஸ்ஸின் குரல் சாம்ராஜ்யமும் கொடிகட்டிப் பறக்கும் பாடல் அது. ஆமாம், படத்தில் பாடலைப் பாடுபவர்கள் டி.எஸ்.பாலையா, மேஜர் சுந்தரராஜன், முத்துராமன், நாகேஷ் ஆகியோர். இந்த நான்கு பேர்களுக்கும் டிஎம்எஸ் ஒருவரையே பின்னணி பாடவைத்திருப்பார் எம்எஸ்வி.
இத்தகைய அனாயாசமான துணிச்சலும் திறமையும் எம்எஸ்வி ஒருவருக்கே உரியது. 

எம்எஸ்வியைத் தமது படங்களில் பல்வேறு புதுமைகளைச் செய்ய வைத்திருப்பார்.
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்’, ‘வசந்தகால நதிகளிலே’, ‘கம்பன் ஏமாந்தான்’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’ என்ற இனிமைகளைத் தொடர்ந்து பட்டினப்பிரவேசத்தில் ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ பாடலை ஒரு ஒற்றை வயலினை மட்டுமே பிரதானமாக்கி அமைத்திருப்பார் விஸ்வநாதன்.

அந்தப் படத்தில் ஒற்றை வயலின் என்றால் ‘அவர்கள்’ படத்தில் ஒற்றைப் புல்லாங்குழல். ‘இப்படி ஓர் தாலாட்டு பாடவா’ பாடலின் பின்பகுதியில் ரவிக்குமார் வாசிப்பதுபோல் ஒரு ஒற்றைப் புல்லாங்குழல் வரும். மீராவையும் கண்ணனையும் இணைத்து கண்ணதாசன் வரிகளைப் பின்னியிருக்க ஒற்றைப் புல்லாங்குழலில் மொத்தப் பாடலின் இனிமையையும் குழைத்துவந்து செவி வழியே உள்ளே அனுப்பி நெஞ்சை நெகிழ வைப்பார் எம்எஸ்வி.

எம்எஸ்வியும் கேபியும் பாடல்களில் செய்திருக்கும் புதுமைகளும் புரட்சிகளும் சாதாரணமானவை அல்ல.

‘முத்துக்குளிக்க வாரீகளா’ ஆகட்டும், ‘நினைத்தால் சிரிப்புவரும்’ ஆகட்டும், ‘இருமனம் கொண்ட திருமணவாழ்வில்’ ஆகட்டும் வித்தியாசங்களைத் தந்த கேபியும் எம்எஸ்வியும் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ பாடலில் செய்த புதுமை எந்த இசையமைப்பாளரையும் வியக்கச்செய்யும் தன்மை வாய்ந்தது.

கமலஹாசனை ஒரு பலகுரல் மன்னனாகவும் தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பதாகவும் அந்தத் திருமணவிழாவில் கலந்துகொண்டு பலகுரல்களில் ஒரு இசைக்கச்சேரி செய்வதாகவும் காட்சி அமைத்திருப்பார் கேபி. பல இயற்கை சத்தங்களுடன் பல மிருகங்களின் சத்தங்கள் என்றெல்லாம் கலந்துகட்டி தூள் கிளப்பியிருப்பார் எம்எஸ்வி.
அடுத்து, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ஸ்ரீதேவி ஸ்வரம் சொல்ல அதற்கேற்ப பாடல் வரிகளைக் கமலஹாசன் சொல்லுவதுபோல காட்சி.

‘தந்தன தத்தன தந்தன தத்தன தான தையன தந்தானா’ என்பது முதல் ஸ்வரம்.
‘சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்தபார்க்க நேரமில்லடி ராஜாத்தி’ என்பார் கமல்.

இது இப்படியே தொடரும்.

அதற்கு அடுத்து விசில், லாலல்லா, ம்ஹூஹூம் நாநாந நாநா, தாரன்ன தாரன்ன தானா என்றெல்லாம் ஸ்ரீதேவி சத்தங்கள் எழுப்ப கமல் அதற்கெல்லாம் வார்த்தைகள் தொடுத்து பாடலாகத் தருவது தமிழுக்கு ரொம்பவும் புதுசு.

இதனைக் கண்ணதாசனையும், எம்எஸ்வியையும் வைத்துக்கொண்டு அருமையாகச் செய்திருப்பார் பாலச்சந்தர்.

எம்எஸ்வி பாலசுப்ரமணியத்தையும், எஸ்.ஜானகியையும் வைத்து கலந்துகட்ட படத்தில் ஸ்ரீதேவியும் கமலஹாசனும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

அத்தனையையும் சேர்த்து கலவையாக்கித் தமிழில் மிகப்புதுமையாய் அந்தக் காட்சியை அமைத்திருப்பார் பாலச்சந்தர். “கவிஞரும் இசையமைப்பாளரும் டைரக்டரும் ஒன்றாகக் கைகோர்க்கும் இடமென்றால் அது இதுதான்” என்று இந்தப் பாடல்காட்சியைப் புகழ்ந்து எழுதியிருந்தது குமுதம்.

அதன்பிறகு இளையராஜா காலம் வந்தபோது புன்னகை மன்னன் படத்திற்கும் சிந்துபைரவி படத்திற்கும் இளையராஜாவை வைத்து அருமையான பாடல்களை இசைக்கச் செய்திருப்பார் அவர். புன்னகை மன்னன் பாடல்களும் சிந்துபைரவி பாடல்களும் அதிகம் பேசப்பட்ட பாடல்கள். உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் படங்களுக்கும் இ.ரா தான் இசை. இதற்கடுத்து ஏ.ஆர்.ரகுமான் ஆதிக்கம் உருவானபோது (ஏ.ஆர்.ரகுமானைத் திரைத்துறைக்குக் கூட்டிவந்ததில் பாலச்சந்தரின் பங்கும் உண்டு) டூயட் படத்தில் ரகுமானின் சாதனைகள் குறிப்பிடத்தகுந்தவை. ‘பார்த்தாலே பரவசமும்’ ரகுமான்தான். ஆனால் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி ரகுமான் அதில் எதுவும் செய்யவில்லை. எம்.பி.ஸ்ரீனிவாசனின் உதவியாளராக இருந்த வி.எஸ்.நரசிம்மனையும் இசையமைப்பாளராகத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் கேபிதான்.


பாடல்களில் இப்படி வித்தியாசங்கள் காட்டிய கேபி கதைகளில் காட்டிய வித்தியாசங்கள் பிரதானமானவை. (தொடரும்)

28 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வில் சொல்லப்பட்ட சில பாடல்கள் என்றும் ரசிக்கத்தக்கவை...

ஜோதிஜி said...

தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தால் ஒரு புத்தகத்திற்கான விசயங்கள் உள்ளது போல உள்ளது. இது போன்ற கட்டுரைகளைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.
இனிய வாழ்த்துகள்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,

நேற்றே படித்துவிட்டேன். பகுதி 1 என்றதும் இன்னும் பல பகுதிகள் வரும் என்று தோன்றுகிறது. மிகச் சிறப்பாக பல தகவல்கள் கொண்டதாக இருக்கிறது. ஒரு சுவாரஸ்யமான வாசிப்புக்கு ஏற்ற கட்டுரை. வாழ்த்துக்கள்.

பாலச்சந்தர் குறித்து அவருடைய சாதியை முன்னிறுத்தி சில அதிரடிக் கட்டுரைகள் இணையத்தில் படிக்க நேர்ந்தது. அவர் படங்கள் பேசிய பெண்ணியம் மற்றும் அரசியல் குறித்து பல வினோத கோணங்களில் எழுதப் பட்ட அவ்வகைக் கட்டுரைகள் எரிச்சல் ஏற்படுத்தியதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சமீபத்தில் என் சகோதரனுடன் பாலச்சந்தர் மறைவு குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ,"பாலச்சந்தர் வி குமாரை அறிமுகம் செய்தது இருக்கட்டும். பாலச்சந்தரை ஒரு இயக்குனராக பரிந்துரை செய்ததே வி குமார்தான் " என்று சொன்னான். பொதுவாக அவன் கூறும் பல விஷயங்கள் மிகைஇல்லாத உண்மைகள்.

------------(பாலச்சந்தரின் நாடகங்களுக்கு இசையமைத்துவந்த வி.குமார்தான் பிற்பாடு பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது ஒருபுறமிருக்க பாலச்சந்தரை முதன்முதலாக இயக்குநராக அறிமுகப்படுத்திய ஏ.கே. வேலனிடம் வி.குமார்தான் பாலச்சந்தரையே அறிமுகப்படுத்தினார் என்று சிவகுமாரின் தகவல் கூறுகிறது)---------------

நீங்கள் எழுதிய இந்தக் கருத்தைப் படித்ததும் அடடா என்றிருந்தது. இது பலருக்குத் தெரிந்திராத உண்மை. இதை எழுதியதற்கு பாராட்டுக்கள். இந்தப் பதிவு வெறுமென பாலச்சந்தர் என்ற இயக்குனரைப் பற்றி மட்டும் விவாதிக்காமல் அவர் படங்களின் பாடல்கள் குறித்தும் பேசுகிறது. அது படிக்க சுவையாக இருக்கிறது. பாலச்சந்தர் தனது படங்களில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதைத் தாண்டி பொதுவாக அபத்தமான பாடல் காட்சிகளைத் திணிக்க மாட்டார். பாடல்களும் வெகு கீழ்த்தரமாக இல்லாமல் நல்லிசையாக தரமாகவே இருக்கும்.

எம் பி ஸ்ரீனிவாசனின் உதவியாளர் வி எஸ் நரசிம்மன் போன்ற தகவகள் இன்றைக்கு உங்களைப் போன்றவர்கள் வெளிப்படுத்தினால்தான் உண்டு. எண்ணிக்கையைக் கொண்டு ஒரு இசை அமைப்பாளரை தீர்மானிக்கும் இன்றைய சூழலில் தமிழில் பத்துப் படங்களுக்கு மட்டுமே இசை பங்களிப்பு செய்த எம் பி ஸ்ரீனிவாசனை மறக்காமல் இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர். அதற்கு நன்றி.

கடந்துபோன நிகழ்வுகளை ஏளனம் செய்யாமல் இருக்கும் ஒரு தலைமுறை வரவேண்டும் என்ற ஆசையை தகர்க்கும் ஆசாமிகள் இருக்கும் இணையத்தில் உங்களது இந்தக் கட்டுரை கண்டிப்பாக வரவேற்க்கப்படவேண்டிய ஒன்று.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இயக்குநருக்காக மக்கள் படங்கள் பார்க்க தொடங்கியது ஸ்ரீதர் பாலச்சந்தர் வருகைக்குப் பின்தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனை நிருபணம் செய்துள்ளது இக் கட்டுரை . தன வித்தியாசமான பாணியால் நெடுங்காலம் கோலோச்சிய பாலச்சந்தரின் படங்கள் பற்றி ஒரு திறனாய்வே நடத்தி விட்டீர்கள்
.அரிய தகவல்கள் அறிய தொடர்வேன்

Umesh Srinivasan said...

கே.பி யின் படங்களின் நெடுநாள் ரசிகன் என்ற முறையில் இசையைத் தொடர்பு படுத்தி புதியதொரு பரிமாணத்துக்குள் என்னை இழுத்துச் சென்றமைக்கு நன்றி சார்.

எம்.ஞானசேகரன் said...

கட்டுரை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் நுணுக்கமாக பாடல்களை ஆராய்ந்து பகிர்ந்துள்ளீர்கள்! அனைத்து பாடல்களும் இன்றும் ரசிக்கும் வண்ணம் இருப்பவை! அருமையான பகிர்வு! நன்றி!

Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...
\\பகிர்வில் சொல்லப்பட்ட சில பாடல்கள் என்றும் ரசிக்கத்தக்கவை...\\


ரசிக்கத்தக்கவை மட்டுமல்ல தனபாலன் அவை உள்ளடக்கத்திலும் கட்டமைப்பிலும்கூடப் புதுமை கொண்டவை. தங்களின் வருகைக்கு நன்றி.


Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தால் ஒரு புத்தகத்திற்கான விசயங்கள் உள்ளது போல உள்ளது.\\
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜோதிஜி.

Amudhavan said...

காரிகன் said...
\\பகுதி 1 என்றதும் இன்னும் பல பகுதிகள் வரும் என்று தோன்றுகிறது. \\
இல்லை, இன்னமும் ஒரு பகுதிதான். எழுதி முடித்தபோது கொஞ்சம் நீண்டுவிட்டதால் இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன்.
\\பாலச்சந்தர் குறித்து அவருடைய சாதியை முன்னிறுத்தி சில அதிரடிக் கட்டுரைகள் இணையத்தில் படிக்க நேர்ந்தது.\\
இணையத்தில் பாலச்சந்தருக்கு என்றில்லை வேறு சிலருக்கும் சாதியக்கண்ணோட்டத்தில்தான் எதிர்ப்பையோ ஆதரவையோ வழங்கும் போக்கு இருக்கிறது. படிப்பும், அறிவும் பெருகப் பெருக தமிழ் சமூகம் அடைந்துவரும் 'முன்னேற்றம்'
இது.
\\பாலச்சந்தர் தனது படங்களில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதைத் தாண்டி பொதுவாக அபத்தமான பாடல் காட்சிகளைத் திணிக்க மாட்டார். பாடல்களும் வெகு கீழ்த்தரமாக இல்லாமல் நல்லிசையாக தரமாகவே இருககும். \\
நீங்கள் சொல்லியிருக்கும் இந்தக் கருத்து மிக முக்கியம். ஏனெனில் ஒரு படத்தில் பாடல்கள்தாமே அந்தப் படத்தைப் பார்க்காதவரையும் சென்று சேரும் விஷயம்......
\\எண்ணிக்கையைக் கொண்டு ஒரு இசை அமைப்பாளரை தீர்மானிக்கும் இன்றைய சூழலில் தமிழில் பத்துப் படங்களுக்கு மட்டுமே இசை பங்களிப்பு செய்த எம் பி ஸ்ரீனிவாசனை மறக்காமல் இருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர். அதற்கு நன்றி\\
அவருடைய 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' என்ற ஒரேயொரு பாடலை மட்டுமே கேட்டுவிட்டு அவர்மீது மரியாதை கொண்டவன் நான்..என்னுடைய நண்பர் அகிலன் கண்ணனுக்கு அவரிடம் நல்ல நட்பு. அவர் மூலம் எம்பிஎஸ்ஸின் தொடர்பு ஏற்பட்டது மட்டுமின்றி அவருடன் அவர் மறையும்வரையிலும் கடிதத் தொடர்பும் இருந்தது. ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவையும் எம்பிஎஸ் வீட்டிற்குக் கூட்டிச் சென்றிருக்கிறோம்.
\\கடந்துபோன நிகழ்வுகளை ஏளனம் செய்யாமல் இருக்கும் ஒரு தலைமுறை வரவேண்டும் என்ற ஆசையை தகர்க்கும் ஆசாமிகள் இருக்கும் இணையத்தில்\\
இத்தகைய ஆசாமிகளைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்றபோதிலும் சில பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதால் அந்தப் பொய்களை உண்மையென்றே பலர் கருதிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுவருவதையும் இல்லையென்று சொல்வதற்கில்லை. ஒருவரைப் பற்றி அதைத்தான் இணையத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

\\தன வித்தியாசமான பாணியால் நெடுங்காலம் கோலோச்சிய பாலச்சந்தரின் படங்கள் பற்றி ஒரு திறனாய்வே நடத்தி விட்டீர்கள் \\

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளி.

Amudhavan said...

Umesh Srinivasan said...
\\கே.பி யின் படங்களின் நெடுநாள் ரசிகன் என்ற முறையில் இசையைத் தொடர்பு படுத்தி புதியதொரு பரிமாணத்துக்குள் என்னை இழுத்துச் சென்றமைக்கு நன்றி சார்.\\

நன்றி உமேஷ். அடுத்த பதிவு பொதுவாக அவரைப்பற்றியும் அவருடைய கதைக்களன் பற்றியதாகவும் இருக்கும்.

Amudhavan said...

கவிப்ரியன் கலிங்கநகர் said...
\\கட்டுரை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.\\

வருகைக்கு நன்றி கவிப்பிரியன்.

Amudhavan said...

‘தளிர்’ சுரேஷ் said...
\\மிகவும் நுணுக்கமாக பாடல்களை ஆராய்ந்து பகிர்ந்துள்ளீர்கள்! அனைத்து பாடல்களும் இன்றும் ரசிக்கும் வண்ணம் இருப்பவை! \\

என்றென்றும் பேசப்படும் வகையில் ஒன்றைச் செய்துமுடிப்பவன்தானே சாதனையாளன். அந்தவகை முன்னோடிகளின் வழிவந்தவர்தானே கேபி.... தங்களின் கருத்திற்கு நன்றி சுரேஷ்.

வருண் said...

அமுதவன் சார்!

நீங்க கொடுக்கிற இண்ஃபர்மேஷன் எல்லாம் பொதுவா "ஃபர்ஸ்ட் பேர்சன்" அல்லது "சக்கண்ட்பேர்சன்" சொல்ற அனுபவமாக இருக்கும்..:-)

பாலச்சந்தரால் பெரிய நட்சத்திரங்களை (சிவாஜி, எம் ஜி ஆர்) அனுசரித்து படம் எடுக்கமுடியவில்லை என்பதே அவருடைய "ஒரிஜினாலிட்டி"யை படம் பிடித்துக் காட்டுகிறதுனு நினைக்கிறேன்.

சார்லஸ் said...

அமுதவன் சார்

அருமையான பதிவு . அமரர் பாலச்சந்தரின் பல திரைப்படங்களை நான் மிகவும் விரும்பி பார்த்திருக்கிறேன் . நடுத்தர குடும்பத்து சாதாரண பிரஜைகளின் கலாச்சாரம் , பண்பாடு , உணர்ச்சிகள் , வாழ்வியல் நடைமுறைகளை அக்குவேறு ஆணிவேராக பிரித்துக் கொடுத்திருப்பார். நம்மையே அவர் படங்களில் நாம் பார்க்கலாம் . பெண்ணியம் அதிகம் பேசிய அவருடைய திரைப்படங்கள் பார்த்து பெண்களைப் பற்றிய நேரிய எண்ணங்கள் வளர்த்துக் கொண்டவன் நான்.

அவர் மறைந்த தினத்தன்று கே டிவி யில் அவரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்த அணைத்து நடிகர்கள் கலைஞர்கள் எல்லோரையும் அமைதியாக எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் . எம். எஸ் . விஸ்வநாதன் அவர்கள் சற்று தள்ளாடியபடி அவர் அருகே வந்து கண்ணாடிப் பேழைக்குள் அவரின் முகம் பார்த்து கலங்கியதை பார்த்த மாத்திரத்தில் சட்டென என் கண்களும் கலங்கியது . பல திரைக் காவியங்களைத் தந்த பிதாமகனுக்கு இசைக் காவியம் தந்த அந்தத் தலை மகனின் அஞ்சலி மனதில் சோகத்தை வரவழைத்தது . இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் வித்தியாசமானவை . மறக்க முடியாதவை . ' மறக்க முடியவில்லை ' என்றொரு பாடலும் பாலச்சந்தரின் படத்தில் உண்டு . நீங்கள் சொன்னது போல புதுமையான பின்னணியில் கொடுக்கப்பட்ட பாடல்கள் அதிகம் . தன் கடைசி படம் வரை அந்த வித்தியாசத்தை கொடுத்தபடிதான் இருந்தார்.


புதுமையிலும் ஒரு நெருடலான காட்சி அமைப்பு கொண்ட பாடல் ஒன்று உண்டு, 'புன்னகை' என்ற படத்தில் தன்னை பலாத்காரம் செய்ய வரும் வில்லனைப் பார்த்து கதாநாயகி ' ஆணையிட்டேன் நெருங்காதே' என்று பாடுவதாக காட்சி அமைத்திருப்பார். அந்த சமயம் அதை பத்திரிக்கைகள் கேலி பேசின.


Amudhavan said...

வருண் said...
\\பாலச்சந்தரால் பெரிய நட்சத்திரங்களை (சிவாஜி, எம் ஜி ஆர்) அனுசரித்து படம் எடுக்கமுடியவில்லை என்பதே அவருடைய "ஒரிஜினாலிட்டி"யை படம் பிடித்துக் காட்டுகிறதுனு நினைக்கிறேன்.\\
ஆமாம் வருண், தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்துக்கொண்டு இவர்களுக்கு இணையான படங்களை நம்மாலும் படைத்து அளிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு ஆரம்பநாட்களிலிருந்தே இருந்திருக்கிறது.

Amudhavan said...

சார்லஸ் said...

\\புதுமையிலும் ஒரு நெருடலான காட்சி அமைப்பு கொண்ட பாடல் ஒன்று உண்டு, 'புன்னகை' என்ற படத்தில் தன்னை பலாத்காரம் செய்ய வரும் வில்லனைப் பார்த்து கதாநாயகி ' ஆணையிட்டேன் நெருங்காதே' என்று பாடுவதாக காட்சி அமைத்திருப்பார். அந்த சமயம் அதை பத்திரிக்கைகள் கேலி பேசின. \\

உண்மைதான் சார்ல்ஸ், 'ஆணையிட்டேன் நெருங்காதே' பாடலைப் பற்றிய எதிர்மறைக் கருத்துக்களை அந்நாளில் வந்திருக்கின்றன என்பதும், 'நான் என்ன நினைத்தேனோ அதனை அந்தப் பாடல்காட்சி மூலம் என்னால் கொண்டுவரமுடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்' என்று எங்கோ பாலச்சந்தர் சொல்லியிருப்பதும் நினைவுக்கு வருகிறது.

Jayadev Das said...

\\ நம்மையே அவர் படங்களில் நாம் பார்க்கலாம்.\\ இதை நானும் கேபி படங்களைப் பார்க்கும் போது பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

கேபி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் நாகேஷ் தான் என்று பல மேடைகளில் கமலஹாசன் சொல்லும் போது வியந்திருக்கிறேன்.

இளையராஜா கேபிபடங்களுக்கு ஸ்பெஷலாக பணியாற்றியிருப்பார். பாடறியேன் படிப்பறியேன் பாடல் மிகவும் பேசப் பட்டது.

தந்து இரங்கல் செய்தியில் சிவகுமார், தனது நூறு படங்கள் கடந்த பின்னர் பாலசந்தர் இயக்கத்தில் வந்த மூன்று படங்கள் இயக்குனரின் தலை சிறந்த படங்களாக கருதப் பட்டதாக சிலாகித்திருக்கிறார். தங்களைப் போலவே அவரும் பல அறிய தகவல்களைத் தந்திருந்தார்.

பதிவோடு பின்னூட்டங்களும் பிரமாதம்.
தங்களின் அடுத்த கட்டுரையை ஆவலோடு எதிர் பார்த்திருக்கறேன்.

Amudhavan said...

பாலச்சந்தரின் நான்கு படங்களுக்கு மட்டுமே இ.ரா இசையமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவற்றில் புன்னகை மன்னன் மற்றும் சிந்துபைரவி ஆகிய படங்களின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கும். மற்ற படங்களின் பாடல்கள் எல்லாம் சுமார் ரகம்தான். பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் படத்திலிருந்தே அவரது படங்களின் பாடல்கள் சிறப்பான இடத்தையே வகிக்கும். 'புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் கிருஷ்ணனுக்காக' , அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா முதலிய பாடல்கள் எல்லாமே வி.குமாரை வைத்தே எகிடு தகிடு ஹிட்டடிக்க வைத்தவர் அவர்.

காரிகன் said...

பாலச்சந்தர் படங்களில் பாடல்கள் என்றாலே வி குமார் தான் முதலில் நினைவுக்கு வருவார். பின் எம் எஸ் விஸ்வநாதன் படைத்த பாடல்கள் அணிவகுக்கும். கே பி- இளையராஜா கூட்டணி பெரிய அளவில் வெற்றிபெற்றதாக இளையராஜாவின் ரசிகர்கள் மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது உண்மையில்லை. சிந்து பைரவியை விட அபூர்வ ராகங்கள் பாடல்கள் இனிமையானவை. புன்னகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடல் ஒன்றே உருக்குலையாத இசையுடன் கேட்க அலாதியாக இருக்கும். மற்றதெல்லாம் கம்ப்யூட்டர் இசை என்று சொல்லப்பட்ட வெற்று ஓசைகள்.(ரஹ்மான் பங்கு இதில் இருப்பதாக இப்போது பேச்சு எழுகிறது. எனவே இந்தப் பழியை ராஜா ரசிகர்கள் சுலபமாக அவர் மீது சுமத்திவிடலாம்.) வரவு எட்டணா செலவு பத்தணா, நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், காதோடுதான் நான் பாடுவேன், தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம் ஆனந்த ராகம், கம்பன் ஏமாந்தான், வான் நிலா, எங்கேயும் எப்போதும், யாதும் ஊரே பாடல்களை விட்டுவிட்டு பாடறியேன் படிப்பறியேன், தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி போன்ற "அபாரமான" இசை "அற்புதங்களை" நினைவுக்கு கொண்டுவர உண்மையில் பெரிய திறமைதான் வேண்டும்.

Amudhavan said...

தி.கவில் எல்லாவற்றுக்கும் ஒரு வார்த்தைச் சொல்லுவார்கள். அதாவது 'எது ஒன்றையும் 'பெரியார் கண்ணாடி' அணிந்துதான் பார்க்கவேண்டும். அப்போதுதான் உண்மைப் புலப்படும்' என்பார்கள். அதுபோல இளையராஜா ரசிகர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எதுவொன்றையும் 'இளையராஜா கண்ணாடி அணிந்துதான் பார்க்கவேண்டும்' என்ற வரையறைக்குள் வந்துவிட்டு மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது. அதை மற்ற எல்லாரிடமும் எதிர்பார்ப்பதும் அவர்களுக்கு ஒரு மனோவியாதிபோல ஆகிவிட்டிருக்கிறது. நம்ம ஜெயதேவ் தாஸ் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் பொதுவாக அவருக்குத் தெரிந்த கருத்தைச் சொல்லவந்தார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்தக் கருத்து இந்த விஷயங்களையெல்லாம் வெளிக்கொண்டுவர காரணமாக இருந்துவிட்டது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தி.தமிழ் இளங்கோ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Amudhavan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்ற இணைய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,

விசு என்றொரு நண்பர் இப்போது இணையத்தில் அதிகம் பதிவுகள் எழுதிக்கொண்டு வருகிறார். நான் உங்களை அவருக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன்.

http://vishcornelius.blogspot.com/2015/01/blog-post_16.html

இது என்னைப் பற்றியது என்பதற்காக அல்ல. ஒரு நல்ல பதிவரை நீங்கள் விட்டுவிடக்கூடாது என்பதற்காக. ஏற்கனவே இவரை நீங்கள் அறிந்திருந்தால் நலமே.

ஷைலஜா said...

அருமையான பதிவு அமுதவன்.. பெயரைப்போலவே உங்கள் எழுத்தும் தமிழ்போல அமுதமாக இருக்கிறது.. எத்தனை எத்தனை தகவல்கள்! அந்த அரியமனிதரை நினைக்கும்போதும் நினைக்கும்போதும் நெகிழ்வாக இருக்கிறது. ஒருமுறை நானும் சந்தித்திருக்கிறேன் அவரது இல்லத்தில். மின் பிம்பங்கள் தொடர் ஒன்றில் (ரமணி VS ரமணி) சில பகுதிகள் எழுதித்தருவதற்காக. எளிமையும் இனிமையுமாய் அவரும் அவர் மனைவியும் பேசியதை மறக்கவே முடியாது. அப்போது அவரிடம் சொன்னேன் உங்கள் இயக்கத்தில் பெண்களுக்கான ஒரு கவன ஈர்ப்பு இருக்கிறது அது எனக்குப்பிடித்திருக்கிறது என்று. உடனே பெருமையாக ஏதும் சொல்வாரென எதிர்பார்த்தால் சின்னப்புன்னகையுடன் தலை மட்டும் அசைத்தார்!

Amudhavan said...

காரிகன் said... அமுதவன் அவர்களே, விசு என்றொரு நண்பர் இப்போது இணையத்தில் அதிகம் பதிவுகள் எழுதிக்கொண்டு வருகிறார். நான் உங்களை அவருக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன்

நல்ல நகைச்சுவையுடன் பதிவுகள் எழுதுகிறார். சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். நகைச்சுவை இவருக்கு நன்றாக வருகிறது. முன்பொருமுறை உங்களுடைய பதிவின் பின்னூட்டத்தில் இவரைப் பார்த்துவிட்டு அவரது பதிவு படித்து அங்கே ஒரு பின்னூட்டமும் செய்திருக்கிறேன்.

Amudhavan said...

ஷைலஜா said...
\\அருமையான பதிவு அமுதவன்.. பெயரைப்போலவே உங்கள் எழுத்தும் தமிழ்போல அமுதமாக இருக்கிறது.. எத்தனை எத்தனை தகவல்கள்! அந்த அரியமனிதரை நினைக்கும்போதும் நினைக்கும்போதும் நெகிழ்வாக இருக்கிறது. \\

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகையும் தங்களின் அழகிய கருத்தும் மகிழ்வளித்தன. நன்றி.

Post a Comment