இது சிவாஜி படம், எம்ஜிஆர் படம், இது ஸ்ரீதரின் படம் என்பதுபோல் தன்னைப் பற்றியும் பேசப்படவேண்டும் என்றால் வித்தியாசமான
கதைக்களன்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஆரம்பமுதலே இருந்தது.
ஆங்கிலப்படங்கள் மற்றும் உலகமொழிப் படங்களின் தாக்கங்களை அதிகமாகப்
பெற்றவர்தான் கேபி. சர்வதேசத் திரைப்பட விழாக்களைப் பொதுவாக அவர் தவறவிட்டதே இல்லை.
இவருக்கு முன்பிருந்த இயக்குநர்கள் எல்லாம் பாரம்பர்ய நாடகத்துறையையொட்டியே தமது சிந்தனைகளை
அமைத்துக்கொண்டவர்கள். இவர் புதிய நூற்றாண்டின் பிரதிபலிப்பாக உருவானவர். அதனால் வெளிநாட்டுப்
படங்களில் காட்சி அமைப்புகளிலும் கதைகளிலும் தென்படும் புதுமைகளையும் மாறுதல்களையும்
தமிழ்ப்படங்களிலும் கொண்டுவரவேண்டும் என்பதாகவே தமது சிந்தனையை அமைத்துக்கொண்டவர்.
இவருக்குப் பக்கபலமாக இருந்தவர் இவருடைய உதவியாளர் அனந்து. அனந்துவை
ஒரு நடமாடும் திரைத்துறைப் பல்கலைக்கழகம் என்றே அழைப்பார்கள். நடிகர் கமலஹாசனே அனந்துவைப்
பற்றி அப்படித்தான் குறிப்பிடுவார்.
அனந்து தனியாக டைரக்ஷன் செய்து ஒன்றையும் சாதிக்கமுடியவில்லையே
தவிர, பாலச்சந்தருடன் வெளி உலகிற்குத் தெரியாமல் இணைந்து செய்த சாதனைகள் அளப்பறியவை.
அனந்து மறைவுக்குப் பிறகு பாலச்சந்தரால் ‘பழைய பாலச்சந்தர்போல்’
அத்தனை சாதனைகளைச் செய்யமுடியவில்லை என்பதையும் நாம் இங்கே நினைத்துப்பார்க்கவேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளைப்
பரீட்சார்த்தமாகச் செய்துபார்க்கலாம் என்ற பாணியிலேயே அமைந்திருந்தது பாலச்சந்தரின்
பயணம்.
அதற்கேற்ப கதைகளைத் தேர்வு செய்வார் அவர். வழக்கமான தமிழ்த்திரையுலகப்
பாணியிலிருந்து முற்றிலும் விலகியே இருக்கும் அந்தக் கதைகள்.
அதனால்தான் இரண்டு மனைவியர், ஒரு பெண்ணை மூன்றுபேர் காதலிப்பது,
மூன்று பெண்கள் ஒருவனைக் காதலிப்பது என்றெல்லாம் உறவுச் சிக்கல்களோடு பின்னிப்பிணைந்திருக்கும்
அந்தக் கதைகள். படைப்பிலக்கியத்தில் தி.ஜானகிராமன் முற்றிலும் உறவுச்சிக்கல்கள் கொண்ட
கதாபாத்திரங்களைப் படைத்திருப்பார். பாலச்சந்தரையும் அந்த வகைப் படைப்பாளராகத்தான்
நாம் பார்க்கவேண்டியிருக்கும்.
எத்தனை உறவுச்சிக்கல்கள் இருந்தபோதும் பெண்களின் உள் மனத்து
உணர்வுகள், ஆசைகள், ஏக்கங்கள் ஆகியவற்றை பாலச்சந்தர்போல் வெளிப்படுத்திய இயக்குநர்கள்
கிடையாது. அவள்ஒரு தொடர்கதை எம்.எஸ்.பெருமாளின் குறுநாவல். அந்தக் கதையின் நாயகிக்கு
கவிதா என்று பெயரிட்டு சுஜாதாவை நடிக்கவைத்து எத்தனை ஆண்டுகளானாலும் அந்தக் கதாபாத்திரம்
பற்றிப் பேசும்படி படமாக்கியவர் அவர்.
‘அவள் ஒரு தொடர்கதைதான் இன்றைய எல்லா சீரியல்களுக்கும் தாய்’
என்று குறிப்பிடுகிறது விகடன் கட்டுரை ஒன்று.
அவள் ஒரு தொடர்கதை கவிதா, அரங்கேற்றம் லலிதா, அபூர்வராகங்கள்
பைரவி, மரோசரித்ரா ஸ்வப்னா, சிந்துபைரவி சிந்து, மனதில் உறுதி வேண்டும் நந்தினி, புதுப்புது
அர்த்தங்கள் கீதா என்றெல்லாம் அந்தந்தப் படத்தின் நாயகிகளை அந்தக் கதாபாத்திரங்களின்
பெயர்களைக் கொண்டே அறிந்துகொள்கிறோம் என்றால் அந்தப் பாத்திரங்கள் எத்தனை நேர்த்தியாகச்
செதுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது விளங்குகிறது.
இருகோடுகள் ஜெயந்தி கணவனைத் தாண்டி தனக்கு வேறு உலகம் இல்லை;
அவன் தனக்குத்தான், தனக்கு மட்டும்தான் என்று நினைக்கிற ரகம் என்பதை சித்தரித்தவர்
அந்த ஜெயந்தியையே வெவ்வேறு பெயர்களில் தனது பாத்திரங்களாகப் படைத்துக்கொண்டே இருக்கிறார்.
அக்னிசாட்சி சரிதா அதே பாத்திரம்தான்.
சிந்துபைரவியில் சுலக்ஷணா அதே கதாபாத்திரம்தான்.
குறிப்பிட்ட படத்தின் இயக்குநர் என்பதைத்தாண்டி அன்றைய சமூகத்தின்
அறிவுசார் மக்களின் பேசுபொருளாக மாறியிருந்தவர் பாலச்சந்தர்.
நான்கு பேர் ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் அந்த இடத்தில்
கட்டாயம் பாலச்சந்தரைப் பற்றிய பேச்சோ விமரிசனமோ விவாதப்பொருள் ஆகியே தீரும்.
எழுபது எண்பதுகள் எல்லாம் கடிதப்போக்குவரத்து இருந்த காலகட்டங்கள்.
அகிலன் கண்ணன், எம்எஸ்பெருமாள், எழுத்தாளர் இந்துமதி, சுகிசிவம்,
பேராசிரியர் சு. வேங்கடராமன் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைராக இருந்தவர்
இவர். வைணவ இலக்கியம் சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சி நூல்கள் எழுதியிருக்கிறார்) இவர்களோடெல்லாம்
எழுதும் கடிதங்களில் பாலச்சந்தர் பற்றிய விவாதங்கள் அன்றைக்குத் தூள் பறக்கும்.
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்துவிட்டு அதில் நடித்த
ஸ்ரீவித்யாவுக்குக் கடிதமெழுதப்போய் நட்பு ஆரம்பித்தது தனிக்கதை.
நண்பர்கள் மனோபாலா (இவர் இப்போதுதான் காமெடி நடிகர். அப்போதெல்லாம்
அறிவுஜீவிகளில் ஒருவர்) ராபர்ட் ராஜசேகரன், குடிசை ஜெயபாரதி ஆகியோரோடெல்லாம் பெங்களூர்
கப்பன் பூங்காவில் உட்கார்ந்து கடலைக்காய் தின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த பேச்சுக்களில்
முக்கிய இடம் பிடித்தவர் கேபிதான்.
ஒவ்வொரு படத்திலும் படக்கதைகளின் மீது விவாதங்கள் இருந்தாலும்
புதுக்கவிதைகள் போல், மின்னல்கீற்றுக்கள் போல ரசிப்பதற்கென்று நிறைய விஷயங்கள் இருக்கும்.
அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டைட்டிலில் நடிகர்களின் பெயர்களைப் போட்டுவிட்டு ‘மற்றும்
அருவி’ என்று போட்டிருப்பார்.
புதுக்கவிதை ட்ரெண்ட் சுற்றிச்சுழன்று சூறாவளியாய் அடித்த சமயத்தில்
அக்னிசாட்சி கதாநாயகியைப் புதுக்கவிதை எழுதுகிற பெண்ணாக உருவாக்கி வாலியை வைத்துக்கொண்டு
ஏராளமான புதுக்கவிதைகளைப் படம் பூரவாவும் இறைத்திருப்பார்.
கேபியுடனான அறிமுகம் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்துவிட்டு
எழுதின விமரிசனக் கடிதத்திலிருந்து துவங்கிற்று என்று சொல்லலாம்.
கடிதங்களுக்குத் தவறாமல் பதில் எழுதும் நல்ல பழக்கம் ஒரு சில
பெரியவர்களைப் போலவே கேபிக்கும் உண்டு. ஆரம்பத்தில் சம்பிரதாயமான முறையில் பதிலெழுதியவர்,
ஒரு வேளை என்னுடைய கடிதங்கள் அவருக்குப் பிடித்துப்போயினவோ என்னவோ- இரண்டு பக்கங்கள்
மூன்று பக்கங்கள் என்று பதில் எழுதினார்.
நூல்வேலி படத்திற்கா அல்லது அபூர்வராகங்கள் படத்திற்கா என்று
ஞாபகமில்லை. சற்றே கோபத்துடன் ஆறு பக்கங்களுக்கு பதில் எழுதியிருந்தார்.
எந்தவித பந்தாக்களும் இல்லாமல் சில உண்மைகளை அவர் அங்கீகரித்துக்கொள்வது
ஆச்சரியமாக இருக்கும்.
அவரது ஓரிரு படங்களில் மொட்டை மாடிகள் பிரதானமான இடம் வகிக்கும்.
அதைக்குறிப்பிட்டு ஒருமுறை எழுதியிருந்தேன் ‘உங்களுடைய எல்லாப் படங்களிலும் மொட்டை
மாடிகள் வருகின்றன. அவை பிரதானமான இடங்களைப் பிடித்துக்கொள்கின்றன. பாசு சாட்டர்ஜியின்
எல்லாப் படங்களிலும் மழைபெய்து ஓய்ந்த ஈரக்காட்சிகள் வரும். அதுபோல உங்களின் எல்லாப்
படங்களிலும் தவறாமல் மொட்டைமாடிக் காட்சிகள்……. மொட்டை மாடிகளை நீங்கள் காதலிக்கிறீர்கள்
என்று நினைக்கிறேன்’
‘மொட்டை மாடிகளை நான் காதலிக்கிறேன் என்ற செய்தியே எனக்கு வியப்பாக
இருக்கிறது. சந்தோஷமாகவும் இருக்கிறது. நான் மொட்டை மாடிக் காட்சிகளை விரும்பி அமைக்கிறேன்
என்பது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் அவற்றை நான் காதலிக்கிறேன் என்பதுதான் – என்பது,
நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. Thanks’ என்று பதில் எழுதியிருந்தார்.
பிறகு அவரை இரண்டொருமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ஓரளவு அறிமுகமாகியிருந்த நேரத்தில் ஒருமுறை எம்எஸ்பெருமாளின்(இவர்
தூரதர்ஷன் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர். சுகிசிவத்தின் அண்ணன்) மகள் திருமணத்திற்கு
வருகைப் புரிந்திருந்தார் பாலச்சந்தர்.
அவர் வருகையின்போது ஒரு ஓரத்தில் நின்று வணக்கம் சொன்னேன். கைகூப்பிவிட்டு நடந்துகொண்டே இருந்தவரிடம் இயக்குநர் வசந்த் “சார் அமுதவன் வணக்கம் பண்றார் சார்” என்று சொல்ல உடனே நின்று திரும்பியவர் அத்தனைக் கூட்டத்துக்கு மத்தியில் என்னிடம்
திரும்பிவந்து “சாரி…. எனக்கு உங்க முகம் சரியாக நினைவில்லை. அதான் போயிட்டேன். எப்ப வந்தீங்க?” என்று தோள்மீது கைபோட்டபடி சற்றுதூரம் பேசிக்கொண்டே வந்தார்.
அத்தனை உயரத்திலும் அத்தனைப் புகழ் வெளிச்சத்திலுமாக இருந்த ஒருவர் இப்படி இவ்வளவு தணிவாகவும் எளிமையாகவும் நடந்துகொண்டது வியப்பாகவே இருந்தது.
ஏக்துஜே கேலியே படத்திற்கு சாவி பத்திரிகையில் விமர்சனம் எழுதியிருந்தேன்.
“என்னைத் திட்டணும்ன்றதுக்காகவே சாவியும் நீங்களும் சேர்ந்துகொண்டு இரண்டு பக்கங்களுக்கு
சென்டர்ஸ்ப்ரெட்டாகப் போட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே” என்றார்.
சாவியில் தொடர்கதையாக எழுதிய ‘கங்கையெல்லாம் கோலமிட்டு’ நூல்வடிவில்
வந்தபோது பாலச்சந்தரிடம் தந்து “சார் முடிஞ்சா படிச்சுட்டு கருத்துச் சொல்லுங்க” என்று
கேட்டிருந்தேன். அவரிடமிருந்து எந்தவித கடிதமும் வரவில்லை. சரி இதையெல்லாம் எங்கே படித்திருக்கப்போகிறார்
என்ற எண்ணத்தில் பேசாமலிருந்துவிட்டேன்.
அடுத்தமுறை அவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார். “நீங்க உங்க
முன்னுரையில் அந்த பாலாமணியைப் பற்றி எழுதியிருந்தீங்க பாருங்க…………….. ‘இந்த பாலாமணியுடைய
காரெக்டர் இத்தனை முக்கியத்துவம் பெறும் என்று நான் தீர்மானிக்கவில்லை. நாம் எழுதிக்கொண்டே
செல்லும்போது ஏதாவது ஒரு காரெக்டர் மற்ற எல்லாக் காரெக்டர்களையும் முந்திக்கொண்டு வந்து
மற்ற காரெக்டர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தான்அதிக முக்கியத்துவம் பெற்று
நின்றுவிடும். அந்த முக்கியத்துவத்தை படைப்பாளி அல்ல, அந்தக் காரெக்டரே தீர்மானித்துக்கொள்கிறது’
என்று. எனக்கு என்னுடைய படங்களில் இதுதான் பலமுறை நடந்திருக்கிறது. அட, இதை எப்படி
இவர் இத்தனைக் கரெக்டா சொல்லியிருக்கிறார் என்று வியப்பாக இருந்தது’ என்றார்.
உடம்பெல்லாம் ஜிவ்வென்று சூடேறியது போல் இருந்தது.
‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தைக் கன்னடத்தில் தயாரிக்கப்போவதாகவும்
பாலச்சந்தரே இயக்குவதாகவும் செய்தி வந்தது. பாலச்சந்தர் படம் இயக்குவதைப் பார்க்கும்
வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் படப்பிடிப்பு நடைபெற்ற பெங்களூர்
அரண்மனை வளாகத்திற்குச் சென்றிருந்தேன்.
முதல்நாள் படப்பிடிப்பு.
எழுத்தாள நண்பர் பாலகுமாரன் அப்போது பாலச்சந்தரிடம் உதவியாளராகச்
சேர்ந்திருந்தார். உதவியாளர்கள் புடைசூழ பாலச்சந்தர் வந்துகொண்டிருந்தார். அருகில்
வந்ததும் பாலகுமாரன் என்னை அறிமுகப்படுத்த முயன்றதுதான் தாமதம், “இவரைத் தெரியுமே.
என்ன ஒண்ணுன்னா இவர் பெயரைக் கேட்டதும் எனக்கு இவருடைய கையெழுத்துத்தான் நினைவுக்கு
வருமே தவிர, இவர் முகம் நினைவுக்கு வராது. அந்த அளவுக்கு இவர் கையெழுத்து எனக்குப்
பரிச்சயம்” என்று சொல்லி வாத்சல்யத்துடன் தோளில் கைப்போட்டு பேசியபடியே நடந்தார் பாலச்சந்தர்.
அந்தச் சந்திப்பை வேறு வகையிலும் உபயோகித்துக்கொள்ளலாம் என்று
தோன்றிற்று. “சார் உங்களை ஒரு பேட்டி எடுக்கணும்” என்றேன்.
“பேட்டியெல்லாம் எதுக்கு? நாம பேசிக்கிட்டிருப்போமே” என்றார்.
“அப்படிப் பேசுவதையே நான் எழுதிர்றேனே” என்றேன்.
சிரித்துவிட்டு “அப்படியா ஒண்ணு செய்வோம். இன்னைக்குத்தான் முதல்நாள்.
அனேகமாய் திங்கட்கிழமைவரை இங்குதான் ஷூட்டிங். நீங்க ஞாயிற்றுக்கிழமை வந்துருங்க. நாம
இங்கேயே எங்காவது உட்கார்ந்து பேசுவோம்” என்றார்.
அதன்படி அவர் சொல்லியிருந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தபோது
நேரமொதுக்கி படப்பிடிப்பு இடைவெளிகளில் மாலை நான்குமணிவரை விட்டுவிட்டுப் பேசினார்.
அந்தப் பேட்டியை அப்போதைய குங்குமம் இதழுக்கு அனுப்பிவைத்திருந்தேன்.
“பேட்டி நன்றாக இருக்கு. ஆனால் ரொம்பவும் நீளமா இருக்கு. அதற்காக அதனை எடிட் பண்ணப்போவதில்லை.
இரண்டு இதழ்களில் வருகிறமாதிரி போட்டுவிடுகிறேன்” என்று சொன்ன அப்போதைய குங்குமம் இதழின்
ஆசிரியர் பாவை சந்திரன் இரண்டு இதழ்களில் அந்தப் பேட்டியை வெளியிட்டார்.
ஆனால் பாலச்சந்தர் அப்படி ஒரு படம் எடுக்கவில்லை.
பாலச்சந்தரை அடுத்தமுறை பார்க்க நேர்ந்தது நடிகர் சிவகுமாருடன்.
90-களில் குமுதம் இதழ் வாரம் ஒரு பிரமுகரை சிறப்பாசிரியராக ஆக்கி சிறப்பிதழ்கள் வெளியிட்டு
வந்தார்கள். சிவகுமார் ஆசிரியராக இருந்து தயாரித்த குமுதம் இதழுக்காக, அவரது தயாரிப்பில்
உதவுவதற்காக சென்னை சென்றிருந்தேன். சிவாஜிகணேசன், நடிகை பத்மினி, கே.பாலச்சந்தர்,
எழுத்தாளர் சுஜாதா, பத்மா சுப்பிரமணியம், ஓவியர் ஆதிமூலம் என்று சந்திக்கப்போகிறவர்களின்
லிஸ்ட் வைத்திருந்தார் சிவகுமார். (அன்றைக்குக் குமுதம் மீதிருந்த கோபத்தில் பேட்டி
தரமாட்டேனென்று சொல்லிவிட்டார் சிவாஜி) பத்மினி பேட்டி முடிந்ததும் பாலச்சந்தரைத் தொடர்பு
கொண்டார் சிவகுமார்.
காலை எட்டே முக்கால் மணிக்கு வரச்சொன்னார் பாலச்சந்தர்.
சிவகுமார் எப்போதுமே நேரம் தவறாமைக்குப் பேர்போனவர். எதுவொன்றும்
திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி நடந்தாகவேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருப்பவர்.
பாலச்சந்தரும் நேர விஷயத்தில் ரொம்பவும் கறார் என்று சொல்வார்கள்.
இரண்டு கறார் விஐபிக்களின் சந்திப்பு எப்படி இருந்தது என்பதை
அன்றைக்குப் பார்க்கமுடிந்தது.
காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.
கிளம்பிய சிறிது நேரத்தில் வந்துவிட்டதால் வாரன் ரோட்டிலிருக்கும்
பாலச்சந்தரின் வீட்டிற்கு சற்றே தூரத்தில் ஒரு மரத்தடியில் கார் நிறுத்தப்பட்டது.
சிறிதுநேரம் காத்திருந்து சரியாக எட்டு நாற்பத்து மூன்று ஆனதும்
காரைக் கிளப்பச்சொன்னார் சிவகுமார்.
மிகச்சரியாக எட்டு நாற்பத்து நான்கிற்கு கார் கேபியின் காம்பவுண்டின்
அருகில் வர முற்படுவதற்குள் காம்பவுண்ட் கேட் திறக்கப்பட, கேட் அருகில் சிவகுமாரை வரவேற்பதற்கு
நின்றிருக்கிறார் கேபி.
“வாங்க சிவகுமார். நேரத்தை மிகவும் துல்லியமாகக் கடைப்பிடிப்பீங்கன்னு
தெரியும். அதான் சரியாக எட்டு நாற்பத்து இரண்டிற்கு கேட் அருகில் வந்து நின்றுவிட்டேன்”
என்றார் அவர்.
சிவகுமாரும் கேபியும் அன்றைக்குப் பரிமாறிக்கொண்ட பேச்சுக்கள்
அர்த்தமும் கனபரிமானமும் கொண்டவை. ஆனால் அதில் பத்து சதவிகிதம்கூட குமுதத்தில் வரவில்லை
என்றுதான் சொல்லவேண்டும்.
கேபியுடன் பேசுவதற்கென்றே சிவகுமாரின் இயல்புப்படி ஏகப்பட்ட
தயாரிப்புக்களுடன் வந்திருந்தார் அவர். கேபியும் மனம் விட்டும் சீரியஸாகவும் பல விஷயங்களைப்
பேசினார். அதில் ஒரு கேள்வி.
“உங்களுக்குப் பிடிச்ச படங்களில் ஒன்று அக்னிசாட்சி. நீங்கள் ரொம்பவும் இன்வால்வ் ஆகி செய்த படம் அது.
ஸ்கிரிப்ட் எல்லாம் அவ்வளவு பக்காவாக இருக்கும். நீங்கள் எந்த அளவுக்கு இன்வால்வ் ஆனீங்களோ
அதே அளவுக்கு நானும் சரிதாவும் இன்வால்வ் ஆகி நடித்திருப்போம். டப்பிங் பேசுகையிலேயே
எமோஷனல் தாங்காமல் நானும் அழுது சரிதாவும் அழுது….. ஒரு கட்டத்தில் சரிதா மயக்கம்போட்டே
விழும் அளவுக்குப் போய் என்றெல்லாம் உழைத்துச் செய்த படம் அது……………….! அந்தப் படம்
தோல்வியடைஞ்சது எனும்போது உங்க உணர்வு எப்படி இருந்தது?” – இது சிவகுமார்.
“தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனைச்சேன்” என்றார் பாலச்சந்தர் சட்டென்று.
அங்கே திடீரென்று அமைதி விழ சிறிது நேரம் யாருமே பேசவில்லை.
பிறகு அந்த மௌனத்தை பாலச்சந்தரே உடைத்தார். “நெஜமாத்ததான் சொல்றேன். இந்த உணர்வேதான்
ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இருந்தது. அந்த ஐரனியிலிருந்து வெளிவர ரொம்ப நாள் பிடிச்சது
எனக்கு”
“என்னதான் பெரிய வெற்றிகளைப் பெற்றபோதும் நாடகங்கள் மூலம் அடைந்த
வெற்றிகளும் அந்தத் திருப்தியும் தனியானது. மறுபடியும் நாடகங்கள் பக்கம் போகணும்ன்ற
ஆசை ரொம்பவே அதிகமாக இருக்கிறது. திரும்பவும் நாடகங்கள் போடணும்ன்ற எண்ணம் இருக்கு”
தன்னை எந்த நாளும் புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்பதும்,
எந்த நிலையிலும் உழைக்கத் தயாராக இருந்தார் என்பதும்தான் அவரது நீடித்த புகழுக்குக்
காரணம்.
தம் படைப்புக்களில்
அவை வெளிவந்த காலகட்டத்தையும் தாண்டி சிந்தித்தவர் அவர்.
அவரது சில படங்கள் இன்றைக்கு முதன்முதலாகச் சொல்லப்பட்டிருக்குமானால்
அதன் தாக்கங்களும் வெற்றிகளும் நிச்சயமாக வேறு திசையில் பயணித்திருக்கும்.
டிவியின் ஆதிக்கம் உருவானபோது சீரியல்கள் மூலம் அவர் பதித்து
வைத்திருக்கிற முத்திரைகள் நிரந்தரமானவை.
அவரது இறுதி ஊர்வலத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது இரண்டு
விஷயங்கள் மனதைப் பாதித்தன.
முதலாவது, ஒரு இறுதி யாத்திரை ஊர்வலத்தில் எந்தமாதிரியான மனநிலையுடன்
பங்குபெறுகிறோம் என்ற எண்ணமோ, யாருக்காக, எதற்காகக் கூடியிருக்கிறோம் என்ற விவஸ்தையோ
சிறிதளவுகூட இல்லாமல் கலந்துகொண்டிருந்த கூட்டம்……………..
ரஜனியைப் பார்த்ததும் ஓவென்று கத்திக் கூச்சலிட்டு ஆர்ப்பரித்து
முண்டியடித்த கூட்டத்தின் அராஜகம் தமிழ் நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.
‘எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன்
என்ற ரசிக மனப்பான்மை இன்னமும் எவ்வளவு காலத்திற்கு இங்கே இருக்கப்போகிறது என்பதும்
இதிலிருந்தெல்லாம் விடுபடுவது எப்போது?’ என்பதும் தமிழினம் யோசிக்கவேண்டிய விஷயங்கள்.
‘இந்தக் கூட்டம்தான் நம்மை ஆளப்போகிறவர்கள் யார் என்பதையும்
தீர்மானிக்கிறது’ என்பதையும் யோசித்தால்தான் ‘விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழச்சாதியை?’
என்ற பாரதியின் கவலைப் புரிகிறது.
இறுதி ஊர்வலங்களில் அமைதியாக ஒதுங்கி வழிவிட்டு நிற்கும் மரியாதையையும்,
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கையும் - என்றைக்குக் கற்றுக்கொள்ளப் போகிறது தமிழ் இனம்?
எந்த நிகழ்ச்சியானாலும் காமிரா தன்னுடைய பக்கம் திரும்பியதும்
உடனே எழுந்து நின்று இளித்துக்கொண்டே கையாட்டும் அசிங்கத்தையும் எப்போது நிறுத்தப்போகிறது
தமிழ்க்கூட்டம்? (இவனுடைய இளிப்பையும் கையாட்டலையும் எவன் கேட்டான்?)
இரண்டாவது,
கமலஹாசன் இறுதி ஊர்வலத்தில் இல்லாதது.
இதுபற்றிய விவாதங்களுக்குள் போக விரும்பவில்லையெனினும் அந்த
எண்ணம் வருவதையும் வந்ததையும் தவிர்க்கமுடியவில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
ஏனெனில் கமலஹாசன் மீது பாலச்சந்தர் வைத்திருந்த அன்பும் பிரியமும் பாசமும் நேசமும்
நம்பிக்கையும் அத்தகையவை.
நான்கூட அவரிடம் ஒருமுறைக் கேட்டிருக்கிறேன். “சார் இயல்பான
நடிப்பு என்பதைத்தாண்டி சில கிம்மிக்ஸை வைத்து அதன்மூலம் பார்வையாளர்களின் கவனத்தைக்
கவரும் வேலையைத்தானே நீங்கள் கமலை வைத்து இப்போது செய்கிறீர்கள்? கமலை இயல்பான நடிப்பின்
மூலம் அல்லாமல், எப்படியாவது ரசிகனிடம் கொண்டு சேர்த்துவிடுவது என்ற பகீரத முயற்சிகள்
உங்கள் படங்களில் வெளிப்படுகின்றனவே”
“it may be true”- என்றார் பாலச்சந்தர். “He deserves it” என்றவர்
“அவனை இன்னமும் எப்படியெல்லாம் ரசிகர்கள் முன்னால் கொண்டுபோகலாம்ன்னுகூட யோசிக்கிறேன்.
எத்தனைச் செய்தாலும் போதாது அவனுக்கு. அத்தனையும் தாங்குவான் அவன். அவ்வளவு திறமை இருக்கு
அவனுக்கு” என்றார்.
அவரது இந்த மனப்போக்கை நேரடியாகக் காணும் அனுபவம் பெங்களூரில்
நடந்த கன்னடப்படமான ‘பெங்கியல்லி ஹரளித ஹூவு’(நெருப்பிலே பூத்த மலர்) படப்பிடிப்பேலேயே
கிடைத்தது.
அந்தப் படத்தின் ஹீரோவாக நடித்தவருக்கு ஒரு பாடல் காட்சி.
நடனம் ஆடிக்கொண்டே வந்து தரையில் இரு கால்களையும் விரித்து சர்ரென்று
சரிந்து வழுக்கிக்கொண்டே வந்து நிற்கவேண்டும்.
டான்ஸ்மாஸ்டர் ஆடிக்காட்டியதில் சில திருத்தங்கள் சொல்லி நடிகரை
ஓரிருமுறை நடிக்கவைத்து சரிபார்த்துவிட்டு “ரெண்டு மூணுதரம் நல்லா பிராக்டிஸ் பண்ணிக்க.
டேக் போகலாம்” என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து கண்களை மூடி
இளைப்பாற ஆரம்பித்தார் பாலச்சந்தர்.
ஒரு கால்மணிநேரம் கழித்து எழுந்துவந்து “ரெடி போகலாமா?” என்று
படப்பிடிப்பு இடத்திற்கு வந்தவருக்கு சட்டென்று கோபம் வந்துவிட கன்னாபின்னாவென்று ஆங்கிலத்திலும்
தமிழிலுமாகச் சத்தம்போட ஆரம்பித்துவிட்டார். “யார் செய்தது இது? யாருடைய வேலை இது?
ராஸ்கல்ஸ்…………… மொதல்ல தொடைச்சு சுத்தம் பண்ணுங்க இந்த இடத்தை” என்று கத்தினார்.
அந்தக் கதாநாயகனுக்காகச் செய்யப்பட்டிருந்த வேலைதான் அது.
நடனம் ஆடிக்கொண்டே கால்களை விரித்தபடி வந்து நின்றதும் ஆடிவந்த
வேகத்தில் அப்படியே சர்ரென்று ஆறேழு அடிதூரம் சறுக்கிக்கொண்டே வந்து நிற்கவேண்டும்.
இது காட்சி.
விஷயம் என்னவென்றால் நடன மூவ்மெண்ட் எல்லாம் நன்றாகத்தான் வந்தது.
ஆனால் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்ற அந்த சறுக்கல் எத்தனை முயன்றும்
வரவில்லை.
அங்கிருந்த யாரோ ஒருவர் யோசனை சொன்னார். டால்கம் பவுடரை அந்த
இடம்பூரவாவும் கொட்டிவைத்தால் ஈசியாக வழுக்கிக்கொண்டுவந்து நிற்கலாம் என்று.
அதன்படி ஒரு டப்பா டால்கம் பவுடர் கொட்டப்பட்டு நடிகர் ஓரிருமுறை
நடித்துப் பார்த்தார். பிரமாதமாக வந்தது.
பவுடர் கொட்டியிருப்பது காமிராவில் வருமா என்று கேட்டதற்கு
“அதெல்லாம் வராமல் நான் பாத்துக்கறேன்” என்று சொல்லியிருந்தார் ஒளிப்பதிவாளர்.
நடிகரும் சந்தோஷத்துடன் அந்தக் காட்சியில் நடிக்கத் தயாராக இருந்தார்.
இதுதான் பாலச்சந்தரின் கோபத்துக்குக் காரணம்.
அந்த நடிகரை அழைத்தார் பாலச்சந்தர். “இது உன்னுடைய ஒப்புதலோடுதானே
நடந்தது?”
“ஆமாம்சார்” என்றார் அவர்.
“புத்தியிருக்கா உனக்கு? இந்த ஒரு விஷயத்துக்கு உனக்கு இப்படியெல்லாம்
தோண்றதுன்னா எல்லா விஷயத்திலும் இப்படித்தான் எதிர்பார்ப்பே. எல்லாத்தையும் சுலபமா
நோகாம பண்ணிட்டுப் போயிரலாம்னு நினைச்சா என்ன நடிகன் அவன்?
சிவாஜி நாகேஷெல்லாம் எத்தனைக் கஷ்டப்பட்டிருக்காங்க தெரியுமா?
நாகேஷுக்கு இந்தமாதிரி சீனெல்லாம் வெச்சா அவன் இங்கிருந்து சரிஞ்சுபோய்
வாசலுக்கு வெளில விழுவான் தெரியுமா?
எதுக்கு சிவாஜி, நாகேஷெல்லாம்?
இங்கிருந்து குதிக்கணும்னு சொன்னா அடுத்த நிமிஷம் மேலே ஏறி நின்னுக்கிட்டு
“சார் குதிக்கட்டுமா டேக் போலாமா”ன்னு கேட்பான்.
அத்தனை உயரமாச்சே. குதிச்சா கால் உடைஞ்சிருமேன்னெல்லாம் யோசிக்கமாட்டான்.
ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் சொன்னா அதைவிடக் கஷ்டமான மூணு மூவ்மெண்ட்
செய்துகாட்டி ‘எதை வச்சுக்கலாம் சார்?’னு கேட்பான்.
அந்த மாதிரி கலைஞன் அவன். காரணம் அவனுடைய டெடிகேஷன். அதானாலத்தான்
இத்தனை உயரத்துக்கு வளர்ந்திருக்கான்.
அவனையெல்லாம் இன்ஸ்பிரேஷனா வெச்சுக்க. அவன் எப்படியெல்லாம் முயற்சிகள்
எடுக்கறான்றதைக் கேட்டுத் தெரிஞ்சுக்க.
இன்னமும் கால்மணிநேரம் டயம் தர்றேன். அதுக்குள்ள இன்னும் நல்லா
பிராக்டிஸ் பண்ணிட்டு வா.
சொல்லத்தான் நினைக்கிறேனில் அவன் எப்படி டான்ஸ் ஆடியிருக்கானோ
அதை மைண்ட்ல வெச்சுக்கிட்டு இதில் நடி. ஏறக்குறைய அந்தப் பாட்டுமாதிரி வரணும்னுதான்
இதை எடுக்கறேன். தெரியுதா? கோ அண்ட் பிரிபேர்”
கமல் மீது அவர் வைத்திருந்த எண்ணம் இது.
உடம்பிற்கு முடியாமல் இருந்த ஒருவரை சந்திக்க பாலச்சந்தர் எடுத்துக்கொண்ட
முயற்சிகளையும் அறியும் சந்தர்ப்பம் வேறொருமுறை வாய்த்தது.
பிலிமாலயா வல்லபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு
அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
அவரைப் பார்க்கச்சென்றிருந்தபோது பாலச்சந்தரிடமிருந்து போன்
வந்திருந்தது. “வல்லபன் எப்படி இருக்கீங்க? எப்ப டிஸ்சார்ஜ் ஆனீங்க? இப்ப வீடு எங்கே?”
என்று கேட்டார் பாலச்சந்தர்.
“நேற்றைக்கு டிஸ்சார்ஜ் ஆனேன்’ என்றார் வல்லபன்.
“அது தெரியாமல் நான் உங்களைப் பார்க்க ஆஸ்பத்திரி போயிட்டேன்.
நீங்க டிஸ்சார்ஜ் ஆயிட்டீங்கன்னு சொன்னாங்க. சரி வீட்ல இருப்பீங்க பார்த்துட்டுப் போகலாம்னு
உங்க வீட்டுக்குப் போனேன். அங்க போனால் வீட்டைக் காலி பண்ணிட்டுப்போய் ஒரு மாதம் ஆகுதுன்னு
சொல்லிட்டாங்க. இப்ப எங்க இருக்கீங்க?”
“காம்தார் நகர்ல இருக்கேன் சார்”
“அப்படியா நான் பழைய வீட்டுக்குப் போயிட்டேன். நீங்க வீடு மாத்தினது
எனக்குத் தெரியாது. சரி, இப்ப படப்பிடிப்புக்குப் போகணும். நேரமில்லை. புது வீட்டைத்
தேடி இப்ப வரமுடியாது. ஒரு ரெண்டு நாள் கழிச்சு நான் உங்களை நேர்ல வந்து பார்க்கிறேன்”
என்றார் பாலச்சந்தர்.
பாலச்சந்தர் எத்தனை எளிய மனிதராகவும் எத்தனை மனிதாபிமானமுள்ளவராகவும்
இருந்தவர் என்ற எண்ணம் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி உயர்ந்து நிற்கிறது.
20 comments :
அருமையான தகவல்கள் அமுதவன் ஐயா. தங்களின் இந்தக் கட்டுரைகளை சேமித்து வருகிறேன்.
மக்களின் மனதில் குடிகொண்ட இயக்குனரோடு உங்களின் பழக்கங்களின் நினைவுகளை சிறப்பாக பகிர்ந்து கொண்டு அஞ்சலி செய்தவிதம் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிவு பார்க்கிறதுக்குத்தான் நீளமா இருக்கு, ஆனா படிச்சா எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகுது, கடைசில அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சேன்னு தோணுது!!
சிவகுமார் பேட்டியில் குமுதம் வெளியிடாத தகவல்களை நீங்கள் இங்கே பதியலாமே சார்!!
குங்குமத்தில் கே.பி சார் பேட்டி இருந்தால் தற்போது படிக்க அவா.
கமல், ரஜினி, சிவகுமார் இவர்களுடன் கே.பி அவர்கள் என்ற ரீதியில் வரும் பதிவுகளில் தாங்கள் எழுதவேண்டும் என்று விருப்பம்.
நல்ல பதிவுக்கு நன்றி.
கவிப்ரியன் கலிங்கநகர் said...
\\தங்களின் இந்தக் கட்டுரைகளை சேமித்து வருகிறேன்.\\
நன்றி கவிப்பிரியன்.
தளிர்’ சுரேஷ் said... மக்களின் மனதில் குடிகொண்ட \\இயக்குனரோடு உங்களின் பழக்கங்களின் நினைவுகளை சிறப்பாக பகிர்ந்து கொண்டு அஞ்சலி செய்தவிதம் அருமை!\\
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி சுரேஷ்.
Jayadev Das said...
பதிவு பார்க்கிறதுக்குத்தான் நீளமா இருக்கு, ஆனா படிச்சா எக்ஸ்பிரஸ் வேகத்தில் போகுது, கடைசில அதுக்குள்ளே முடிஞ்சிடுச்சேன்னு தோணுது!!
நன்றி ஜெயதேவ்.
\\சிவகுமார் பேட்டியில் குமுதம் வெளியிடாத தகவல்களை நீங்கள் இங்கே பதியலாமே சார்!!\\
அது குமுதத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டி. ஓரளவு முழுமையாக எழுதப்பட்டு அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அவர்களுக்குரிய முறையில் அதனை வெளியிட்டார்கள். அதன்பிறகு முழுமையான பேட்டி இதுதான் என்று வெளியிடுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது என்பது ஒரு பிரச்சினை. இணையம் எல்லாம் பிற்பாடு வரும் என்று அப்போதே தெரிந்திருந்தால் ஒருவேளை சேமித்து வைத்திருக்கலாம். இப்போது அதன் முழுத்தரவு ஒன்றும் கைவசமில்லை.
Jayadev Das said...
\\குங்குமத்தில் கே.பி சார் பேட்டி இருந்தால் தற்போது படிக்க அவா.\\
குங்குமம் பேட்டியின் இணைப்பை இந்தப் பதிவுடன் சேர்த்தே வெளியிடலாம் என்ற எண்ணத்தில் ஃபைல்களில் தேடினேன். கண்ணுக்குப் புலப்படவில்லை. கிடைத்தால் வெளியிடலாம்.
நீங்கள் சொன்ன சாபக்கேடு என்று தீருமோ...?
கமல் பற்றிய இயக்குனரின் எண்ணங்கள் சுவாரஸ்யமானவை...
திண்டுக்கல் தனபாலன் said...
\\நீங்கள் சொன்ன சாபக்கேடு என்று தீருமோ...?\\
உண்மைதான் தனபாலன், எது எதிலோ முன்னணியில் இருப்பதாகப் பீற்றிக்கொள்ளும் நம் இனம் அடிப்படையான பல விஷயங்களில் காட்டுமிராண்டித்தனமாகத்தான் இருக்கிறது.
**அந்தப் படம் தோல்வியடைஞ்சது எனும்போது உங்க உணர்வு எப்படி இருந்தது?” – இது சிவகுமார். “தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனைச்சேன்” என்றார் பாலச்சந்தர் சட்டென்று. அங்கே திடீரென்று அமைதி விழ சிறிது நேரம் யாருமே பேசவில்லை. பிறகு அந்த மௌனத்தை பாலச்சந்தரே உடைத்தார். “நெஜமாத்ததான் சொல்றேன். இந்த உணர்வேதான் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இருந்தது. அந்த ஐரனியிலிருந்து வெளிவர ரொம்ப நாள் பிடிச்சது எனக்கு”***
ஹம்ம்.. பாலசந்தரா இப்படி சொன்ன்னார், சார்!!
கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியவில்லை, இப்படியெல்லாம் சொல்லுவார் என்று.. அதுவும் இவ்வளவு அனுபவசாலி ஒரு படத்தின் வியாபார அல்லது விமர்சகர் விமர்சனத் தோல்வியால் இது போல் விரக்தி அடைந்து பேசுவது. "தற்கொலை" எண்ணமெல்லாம் அவரை அண்டவே முடியாத ஒரு உயரத்தில் உள்ளவர் அவர் என்றுதான் நான் அவரை "எடை போட்டு" வைத்திருந்தேன், சார்.. :)
ரஜினி, கமலை அறிமுகப்படுத்தியவர் என்றே இன்றைய தொலைக்காட்சிகள் பாலசந்தரை அறிமுகபடுத்துகின்றன. அவருடைய சாதனைகளைச் சொல்பவை மிகமிகக் குறைவு.
எழுத்தாளர் பாமரன் பாலசந்தரின் படங்களை விமர்சித்து குமுதத்தில் (?) எழுதிய சில கடித வடிவ கட்டுரைகள் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், தற்போது இணையதளங்களில் சாதனையாளர்களை விமர்சிப்பது சாதாரண விடயங்களில் ஒன்றாகிவிட்டது.
வருண் said...
\\கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியவில்லை, இப்படியெல்லாம் சொல்லுவார் என்று.. அதுவும் இவ்வளவு அனுபவசாலி ஒரு படத்தின் வியாபார அல்லது விமர்சகர் விமர்சனத் தோல்வியால் இது போல் விரக்தி அடைந்து பேசுவது. "தற்கொலை" எண்ணமெல்லாம் அவரை அண்டவே முடியாத ஒரு உயரத்தில் உள்ளவர் அவர் என்றுதான் நான் அவரை "எடை போட்டு" வைத்திருந்தேன்\\
இல்லை வருண், மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் பல கலைஞர்களுடனான பழக்கங்கள் எனக்கு வேறொரு அனுபவத்தைத்தான் தந்திருக்கின்றன. அவர்களுடைய வணிக வசூல்கள் வேறு; அவர்கள் கைக்கொண்டிருக்கும் கலை வேறு என்ற நிலைமைக்கு அவர்கள் வெகுவிரைவாகவே வந்துவிடுகிறார்கள். புகழ் சம்பந்தப்பட்ட விஷயங்களில்தான் அவர்கள் சம்பாதிக்கும் சம்பளம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. கலை என்று வரும்போது அவர்கள் மிகவும் விசுவாசமாகவே நடந்துகொள்கிறார்கள். அதனால்தான் இத்தனைப் படைப்புக்கள் இவ்வளவு ஜீவனுடன் வந்துகொண்டிருக்கின்றன. பாலச்சந்தர் அக்னிசாட்சி பற்றிப் பேசியபோது அவருடைய இன்வால்வ்மெண்ட்தான் அங்கே முன்நின்றது. அவரை ரொம்பவும் மெக்கானிக்கலான ஆளாகவெல்லாம் நாம் கருதவே முடியாது. மிகப்பெரிய கலைஞர்கள் எல்லாம் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவே இருக்கிறார்கள்.
குட்டிபிசாசு said...
\\ரஜினி, கமலை அறிமுகப்படுத்தியவர் என்றே இன்றைய தொலைக்காட்சிகள் பாலசந்தரை அறிமுகபடுத்துகின்றன. அவருடைய சாதனைகளைச் சொல்பவை மிகமிகக் குறைவு.\\
அவர்களுக்குத் தெரிந்ததை அவர்கள் சொல்லுகிறார்கள். மிகவும் 'மெனக்கிட்டு' தகவல்கள் சொல்வதெல்லாம் அரிதாகவே நடக்கிறது.
\\தற்போது இணையதளங்களில் சாதனையாளர்களை விமர்சிப்பது சாதாரண விடயங்களில் ஒன்றாகிவிட்டது.\\
ஆமாம் கு.பி. இணையதளம் என்றாலேயே எத்தனைப் பெரிய சாதனையாளனாக இருந்தாலும் அவனை மிகக்கேவலமாக விமர்சிப்பதுதான் ஃபேஷன் என்றே பலபேர் நினைக்கிறார்கள். 'அவன் என்ன பெரிய கொம்பனா?' என்ற எண்ணம் நிறையப்பேருக்கு வந்திருக்கிறது. அப்படி விமர்சிக்கும் பலருக்கு இணையத்தில் புழங்குவது தவிர வேறு எந்த வேலையும் தெரியாது என்பதும் ஒரு தமாஷான நிதர்சனம்.
வழக்கம்போல மிகவும் சுவாரஸ்யமாகச் சம்பவங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். இறுதி ஊர்வலக் காட்சிகள் கண்டு நானும் மனம் நொந்தேன். என்று தணியும் இந்த கேமரா மோகம்?
அந்தக் காட்சிகளை அவர்கள் ஒளிரபரப்புவதில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். யாரும் அப்படி குதியாட்டம் போடப்போவதில்லை. தங்கள் ஒளிபரப்பிற்கு ஆள் சேர்ப்பதற்கென்று டிவிக்காரர்களும் இந்தக் கண்றாவிக் காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள் என்பதுதான் வினை.
அமுதவன் அவர்களே,
சற்று தாமதம்தான். நான் இந்தப் பதிவை இரண்டு நாட்களுக்கு முன்பு படித்தபோதே ஏறக்குறைய பத்து பனிரெண்டு பின்னூட்டங்கள் வந்திருந்தன. நிதானமாகப் படிக்கவேண்டிய பதிவுகளில் ஒன்று.
கே பி பற்றிய நீண்ட அலசல், இதுவரை அறியாத தகவல்கள் என உங்கள் சினிமா பரிச்சயத்தின் மற்றொரு பரிமாணத்தைப் பார்க்கமுடிகிறது. இத்தனை சினிமா தொடர்பு கொண்டிருந்தாலும் அதைவைத்து வீண் சுய விளம்பரம் செய்துகொள்ளாத உங்களின் தன்னடக்கம் பாராட்டுதற்குரியது.
கே பி என்றொருவர் எழுபதுகளில் இருந்திராவிட்டால் தமிழ் சினிமா 70களின் இறுதியில் அடைந்த மிகையில்லாத மாற்று சினிமா இன்னும் தள்ளிப் போயிருக்கும் என்று தோன்றுகிறது. எழுபதுகளின் வணிக குப்பைகளுக்கு மத்தியில் அவர் மட்டுமே தரமான வித்தியாசமான திரைப் படங்களை தவறாது கொடுத்தபடி இருந்தவர். பாரதிராஜா மகேந்திரன் வந்ததும் நமது சினிமா வேறு வண்ணம் கொண்டது. ஆனால் இரண்டுக்கும் இடையேயான ஒரு பாலம் போல கே பி யின் படங்கள் இருந்தன.
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்றவைகள் போலவே நூல்வேலி என்ற தலைப்பையும் நான் பலமுறை வியந்து எண்ணியவன்.
--------------அவரது இறுதி ஊர்வலத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது இரண்டு விஷயங்கள் மனதைப் பாதித்தன.
ரஜனியைப் பார்த்ததும் ஓவென்று கத்திக் கூச்சலிட்டு ஆர்ப்பரித்து முண்டியடித்த கூட்டத்தின் அராஜகம் தமிழ் நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.
கமலஹாசன் இறுதி ஊர்வலத்தில் இல்லாதது. ---------------
முதலாவது நீங்கள் கூறியபடியே ஒரு வக்கிர தனி மனித ஆராதனை என்ற நமது பிற்போக்குத்தனம்.
இரண்டாவது கர்வம் மண்டிய ஒரு சுயநலவாதியின் அதிர்ச்சியூட்டிய முகம்.
கே பி என்றொருவர் இல்லாவிட்டால் கமல் இத்தனை உயரங்களை எட்டியிருப்பாரா என்பது விவாதிக்கப்படக் கூடியது. எல்லாம் முடிந்தபின் வந்து மகனைப்போல நான் அவரது லட்சியங்களை செய்து முடிப்பேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பேத்தல். கமல் தான் ஒரு கைதேர்ந்த நடிகன் என்பதை அவ்வப்போது திரையைத் தாண்டியும் நிரூபித்தபடியேதான் இருக்கிறார். உத்தம வில்லன்.
கட்டுரை சட்டென முடிந்ததுபோல ஒரு உணர்வு. ஆனால் சில சமயங்களில் அப்படியிருப்பதுதான் அழகு.
வாழ்த்துக்கள்.
சார்
அருமையான பதிவு . பதிவு ஒன்றில் சொன்னதை விட பதிவு இரண்டில் அதிக செய்திகளையும் உணர்வுப்பகிர்வுகளையும் தந்துள்ளீர்கள் . கே.பி ஒரு சமுத்திரம் . அவரைப் பற்றியும் அவர் திரையாக்கங்களைப் பற்றியும் இன்னும் ஓராயிரம் சொல்லிக் கொண்டே போகலாம் . நீங்கள் கொடுத்திருப்பது சிறு துளியே!
காரிகன் said...
\\கே பி என்றொருவர் எழுபதுகளில் இருந்திராவிட்டால் தமிழ் சினிமா 70களின் இறுதியில் அடைந்த மிகையில்லாத மாற்று சினிமா இன்னும் தள்ளிப் போயிருக்கும் என்று தோன்றுகிறது. எழுபதுகளின் வணிக குப்பைகளுக்கு மத்தியில் அவர் மட்டுமே தரமான வித்தியாசமான திரைப் படங்களை தவறாது கொடுத்தபடி இருந்தவர். பாரதிராஜா மகேந்திரன் வந்ததும் நமது சினிமா வேறு வண்ணம் கொண்டது. ஆனால் இரண்டுக்கும் இடையேயான ஒரு பாலம் போல கே பி யின் படங்கள் இருந்தன.\\
ஸ்ரீதருக்குப் பின் தமிழில் புதுவெள்ளம் பாய்ச்சியவராக கேபியைத்தான் சொல்லவேண்டும்.
\\கட்டுரை சட்டென முடிந்ததுபோல ஒரு உணர்வு. ஆனால் சில சமயங்களில் அப்படியிருப்பதுதான் அழகு.\\
உங்கள் பதிவுகளிலும் சரி, பின்னூட்டங்களிலும் சரி உங்களுக்குள் ஒரு கவிஞன் ஒளிந்திருக்கிறான் என்பது இம்மாதிரியான சில பளிச் களில் வெளிப்படுவதை நான் எப்போதும் ரசிப்பேன்.
சார்லஸ் said...
\\கே.பி ஒரு சமுத்திரம் . அவரைப் பற்றியும் அவர் திரையாக்கங்களைப் பற்றியும் இன்னும் ஓராயிரம் சொல்லிக் கொண்டே போகலாம் .\\
நீங்கள் சொன்னது உண்மை சார்லஸ், அவரைப் பற்றி எழுத இன்னமும் நிறைய இருக்கிறது. வசந்த் போன்றவர்கள் என்னைவிட அவரிடம் மிக அணுக்கமாய் 30 வருடங்களுக்கும் மேல் இருந்தார்கள். வசந்த் எதுவும் எழுதுகிறாரா என்று பார்ப்போம்.
மிக மிக நேர்த்தியான படைப்பு. எந்த உயரத்திற்குச் சென்றாலும் எந்த அளவுக்கு தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும் என்பதற்கு கே.பாலச்சந்தர் உதாரணம் என்றே நினைக்கின்றேன்.
Post a Comment