Sunday, February 5, 2017

சசிகலாவும் எதிர்கால அரசியலும்சசிகலாவைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு பல நண்பர்களைக் கோபப்படவும் குழப்பமடையவும் வைத்திருக்கிறது. ஒரு விஷயம் தெளிவு படுத்தி விடுகிறேன். தமிழகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற வேண்டும், யார் பதவிக்கு வர வேண்டும் என்று கேட்டால் என்னுடைய பதில் வேறு மாதிரியானது. ஆனால் இன்றைய ‘சிஸ்டத்தில்’ இன்னமும் நான்கரை ஆண்டுக்காலம் இதே கட்சிதான் ஆட்சி செய்யப்போகிறது. இங்கே என்ன மாதிரியான தலைமை வேண்டும், யாருடைய தலைமை வேண்டும் என்பதையும், தற்போதைய அரசியல் சூழல் என்ன என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது என்னுடைய எண்ணம் என்ன என்பதையும்தான் நான் இப்போது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய இந்த நிலைமைக்குக் காரணம் வெறும் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும், ஊடகங்களும் , பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று பரவிய இணையமும், எந்தவித அரசியல் புரிதல்களும் இல்லாமல் அதனைக் கைப்பற்றி அதில் கருத்துக்கள் பதிந்து பரப்பிய ‘அறிவாளிகளும்’ அதற்கேற்ப ‘அரசியல் முடிவுகள்’ எடுத்துச் செயல்பட்ட பொதுமக்களும்தாம் முழுக்க முழுக்கக் காரணம். இவர்கள் மட்டும் கலைஞருக்கு எதிராக இப்படியொரு முடிவை எடுத்திருக்கவில்லையென்றால் தமிழகத்தில் பல பேராபத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பல அரசியல் பெரும்பள்ளங்கள் விழாமல் போயிருக்கும்.

ஆனால் கலைஞருக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு என்பது ஜெயலலிதாவுக்கு ஆதரவு என்பதையும் தாண்டி அவரை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அவருக்கு ‘அடி பணிந்து சேவகம் செய்து கிடப்பது’ என்ற அரிய வகை அடிமைத்தனத்தை ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என்று ஆரம்பித்து ஒரு மாநிலம்  நடைபெற வேண்டுமென்றால் எத்தனை இயக்கம் (move) நடைபெறவேண்டுமோ அத்தனை இயக்கங்களிலும் செலுத்தி கைகட்டி வாய்பொத்தி அழகு பார்த்துக்கொண்டிருந்ததுதான் இத்தனை பேராபத்துகளுக்கும், மாநிலத்தின் அவமானங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

இன்றைய அரசியல் உலகில் 100 சதம் சரியானவர்களை எதிர்பார்ப்பது விவேகம் அல்ல.

இது காமராஜர் காலமும் அல்ல.

ஒருவரை எப்படி சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வருவது என்பதற்கு திருக்குறள் அருமையான வழியைக் காட்டுகிறது. குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகை நாடி மிக்கதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வா என்கிறது குறள்.

அதன்படி பார்த்தால் கலைஞரை தமிழகம் கைவிட்டிருக்க வேண்டிய தேவை கிடையாது.

நாடு, இனம், மொழி, தமிழ், பண்பாடு, கலாச்சாரம் போன்ற எல்லாவற்றிலும் ஈடுபாடும் உணர்வுகளும் கொண்டவர்களுமே தமிழகத்தை வழிநடத்திச் செல்ல தகுதி வாய்ந்தவர்கள். இவற்றில் எதிலுமே எந்தவிதமான ஈர்ப்பும் ஈடுபாடும் அக்கறையும் இல்லாத ஜெயலலிதா போன்ற ஒரு சுயமோகியை இத்தனை ஆண்டுக்காலம் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அவருடைய ஆடம்பரங்களுக்கு மட்டுமே சாமரம் வீசிக்கொண்டிருக்க வேண்டிய தேவையும் தமிழக மக்களுக்குக் கிடையாது.

குறைந்த பட்சம், மனிதர்களை மனிதர்களாகப் பாவிக்கும் இயற்கையான இயல்பான குணம்கூட அவரிடம் இருந்ததில்லை.

அதனால்தான் எதிர்க்கட்சிகளைக்கூட அவர் கால்தூசுக்கும் மதித்ததில்லை.

நான் பக்கத்து மாதிலத்தில் வசிக்கிறவன். இங்கே இந்த மாநிலத்தில் நடைபெறும் அரசியலையும் பார்த்துவருகிறேன். இங்குள்ள முதல்வர் மற்றவர்களை எப்படி நடத்துகின்றார் என்பதைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வரையும் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

யாரையும் பக்கத்தில்கூட நெருங்க விடாமல் ஆண்டாண்டுக் காலமும் ஒரு மாநில முதல்வர் இருக்கமுடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயலலிதா இருந்திருக்கிறார்.

பத்திரிகையாளர்களையே சந்திக்காமல் ஒரு முதல்வரால் ஐந்தாண்டுக் காலம் தள்ள முடிகிறது என்பது ஆச்சரியம் மட்டுமல்ல அவலமாக இருக்கிறது. ஜெயலலிதா செய்திருக்கிறார்.

‘பொதுமக்களைப் பக்கத்திலேயே சேர்க்காமல் அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் மனுக்களைக்கூட வாங்காமல் எப்படி ஒரு மாநில முதல்வர் செயல்படுகிறார்?’ என்று இங்குள்ள நண்பர்கள் கேட்கும் கேள்விக் கணைகளுக்கு என்னிடம் பதில் இல்லை. (இங்குள்ள முதல்வர்கள் எல்லாம் அவர்கள் யாராயிருந்தாலும் சரி; வாரத்திற்கு ஒரு நாளாவது மக்களைச் சந்திக்கிறார்கள்)

‘தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரஸ்ஸைக்கூட சந்திக்கிறதில்லையாமே? அப்புறம் எப்படிச் செயல்படுகிறார்?’ என்று கேட்கிறார்கள்.

பதில் இல்லை.

‘எதிர்க்கட்சித் தலைவர்களை எந்தப் பிரச்சினைக்கும் அழைத்துப் பேசுவதில்லையாமே…… டெல்லிக்குப் போகும்போதுகூட எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரையும் அழைத்துப் போவதில்லையாமே என்ன மாதிரியான அரசாட்சி அது?’ என்று கேட்கிறார்கள்.

யாரும் இதுவரை பதில் சொன்னதில்லை.

பதில் சொல்லாதது மட்டுமல்ல, பல ‘அறிவாளிகள்’ இதுதான் சரி என்பதுபோல பதில் சொல்லவும் பழகிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் அசிங்கத்திலும் அசிங்கம்.

கலைஞர் தவறு செய்யவில்லை என்று சொல்லவரவில்லை.
அவருடைய தவறுகள் என்பது இலங்கை விவகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

இலங்கை விவகாரத்தை எடுத்துக்கொண்டால் இங்கிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவனும் புனிதன் கிடையாது.

உணர்வு கொண்ட மக்கள் மட்டுமே நல்ல எண்ணத்துடனும் சிந்தனையுடனும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தனர்.

மற்றபடி விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த எல்லா அரசியல் தலைவர்களுக்குப் பின்னாலும் ஒரு மூட்டை அழுக்கு இருக்கிறது.

ஆனால் கலைஞர் மட்டுமே குற்றவாளி ஆக்கப்பட்டார்.

எல்லாப் பழியையும் அவர் ஒருவர் மீது மட்டுமே போட்டுவிட்டு அத்தனைப் பெரிய மனிதர்களும் ‘தமிழர்களுக்கு ஆதரவாக’ இருப்பவர்களாக வலம் வந்தார்கள்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் அந்த சமயத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தவர் அவர் என்பதுதான்.

அவரும் அந்தச் சமயத்தில் பல்வேறு அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து போகாமல் ஆட்சியை உதறிவிட்டு வெளியில் வந்திருந்தாரானால் அவர் மீது எந்தவிதமான களங்கமும் இல்லாமல் போயிருக்கும்.

புகழும் கொடிகட்டிப் பறந்திருக்கும்.

இலங்கையிலிருந்து திரும்பி வந்த ‘அமைதிப் படையை’ தமிழனைக் கொன்றுவிட்டு வருகின்ற ராணுவத்தை வரவேற்க நான் போகமாட்டேன்- என்று அறிவித்துப் புறக்கணித்த கலைஞரின் வீரம்-

தமிழ்ச் செல்வன் மறைவுக்கு இரங்கற்பா பாடிய கலைஞரின் உணர்வுகள்-

பிரபாகரனின் அம்மாவை சிகிச்சைக்கு அனுமதிக்காததன் செய்கையில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

(இந்த இடத்தில் பாலசிங்கத்தை சிகிச்சைக்கு அனுமதிக்க மாட்டேன் என்று சொன்ன ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை எல்லாம் எவனும் கேள்விகேட்டது கிடையாது. தவிர எல்டிடிஈ தன்னைக் கொன்றுவிடும் அபாயம் இருக்கிறது என்ற பொய்யைச் சொல்லித்தான் கடைசிவரை இசட் பிரிவு பாதுகாப்பை ஜெயலலிதா தேவையே இல்லாமல் தன்னுடைய படோடப அரசியலுக்குப் பயன்படுத்தி வந்தார் என்பதையும் மறந்துவிடுவதற்கில்லை. )

இதற்கெல்லாம் காரணம், தமிழன் கலைஞரிடம் ‘நல்ல’ விஷயங்களை எதிர்பார்த்தான். மற்றவர்களிடம் ‘நல்ல’ விஷயங்களை எதிர்பார்க்கவில்லை என்பதுதான்.

தமிழ் ஈழம் விஷயத்தில் வெறும் கலைஞரை மட்டுமே குற்றம் சொல்லிப் பிரயோசனமில்லை.

கலைஞரை முற்று முழுதாகப் ‘புறக்கணித்த’ ஈழ வீரர்களுக்கும், தலைவர்களுக்கும் இதில் பங்குண்டு.

எம்ஜிஆர் உதவினார் என்ற ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறக்கூடிய கலைஞரை-

ஐந்து தடவை முதல்வராகப் பதவி வகித்த ஒருவரை-

முற்று முழுதாகப் ‘புறக்கணிப்பது’ ஒரு போராட்டத் தலைவனின் சரியான செயல்திட்டமாக இருக்கமுடியாது.

‘நாங்கள் போராட்டக் களத்தில் நிற்பவர்கள்; தமிழக ஆட்சியாளர்கள் மூலம் வருகின்ற உதவிகளை ஏற்றுக்கொண்டு எங்கள் லட்சியம் நிறைவேறுவதற்கான வழிவகைகளைத்தான் நாங்கள் பார்ப்போம். அதிமுக திமுக என்பதை நீங்கள் தமிழ் நாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்குக் கட்சி பேதங்கள் கிடையாது. எங்களுக்கு இருவரும் ஒன்றுதான். இருவரிடமுமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை நாங்கள் ஒன்றுபோலவே பார்ப்போம்’- என்ற நிலைப்பாட்டினை ஈழத்தலைவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு இங்கிருக்கும் குட்டிக் கட்சிகள்போல அரசியல் நிலைப்பாடுகளை அவர்கள் மேற்கொண்டிருக்கக் கூடாது.

வழக்கமான அரசியல் அணுகுமுறைகளைத் தாண்டி என்றென்றும் நிரந்தரமாக நின்று நிலைக்கப்போகும் நினைவுச் சின்னங்களை எழுப்பும் சிந்தனைகளும் கலைஞருக்கு மட்டுமே உரியவை.

வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலை, அண்ணா நூலகம், பூம்புகார்…….. இப்படிப்பட்ட  நினைவகங்களும் சரி, இந்த நினைவகங்கள் எழுப்ப நினைத்த கலைஞரின் சிந்தனைகளும் சரி எந்தக் கொம்பனாலும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாத அளவுக்குத் தமிழோடும் தமிழக வாழ்வோடும் பின்னிப் பிணைந்துபோய்விட்ட தமிழகத்தின் அழியாச் சொத்துக்கள்.

இந்த எண்ணங்களெல்லாம் கலைஞரை எப்போதுமே எதிர்த்துக்கொண்டிருக்கும் ‘அறிவியலாளர்களுக்குத்’ தெரியுமா என்பதே சந்தேகம்தான்.

கலைஞர் வாழ்க்கையில் அவரது அரசியல் பயணத்தில் ஈழப்பிரச்சினை, காமராஜர், சிவாஜிகணேசன், கவிஞர் கண்ணதாசன் என்று அவர் தவறிழைத்த விவகாரங்கள் சில உண்டு.

ஆனால் அவையெல்லாம் வெறும் ஏழு சதவிகிதங்களுக்குள் அடங்கிவிடும்.

மீதி தொண்ணூற்று மூன்று சதவிகிதம் அவர் மேன்மையானவர், ஒப்பிலாதவர், ஈடு இணை இல்லாதவர், மாபெரும் திறமையாளர் என்ற வரிசைக்குள்தாம் வரும்.

ஆனால் அவருக்குப் போட்டியாளர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து ஆதரித்தவர்களைப் பார்த்தால் இந்த சதவீதக் கணக்கு அப்படியே மாறுபடும்.

இங்கே தொண்ணூற்று மூன்று – ஏழு.

அந்தப் பக்கம் பார்த்தோமானால் ஏழு – தொண்ணூற்று மூன்று என்றுதான் வரும்.

ஆனாலும் மக்கள் அந்தக் ‘கலைஞர் எதிர்ப்பாளர்களைத்தான்’ ஆதரித்தார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

இன்றைய அரசியல் நிலைமையை எடுத்துக்கொண்டோமானால் இன்றைக்கு இருப்பது அதிமுக ஆட்சி.

என்னைப் பொறுத்தவரை தேர்தலுக்குச் சில நாட்களே இருந்த பொழுதில் வெளிவந்த கலைஞரின் ஒரு கருத்து மொத்தத் தேர்தல் முடிவையும் மாற்றி அமைக்கப் போதுமானதாகவே இருந்தது.

‘தேர்தலில் வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர். எனக்கு இயற்கையாகவே ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலொழிய ஸ்டாலின் தலைமைக்கு வருவது என்பது முடியாது’ என்ற தொனியில் அவரிடமிருந்து வெளிவந்த ஒரு அறிக்கையோ அல்லது பேச்சோ ஏற்படுத்திய தாக்கம்தான் தேர்தல் முடிவுகள்.

கலைஞரிடமிருந்து ‘ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அமைய மக்களே வாக்களித்திடுங்கள்’ என்ற ஒரேயொரு வார்த்தை மட்டும் வந்திருக்குமானால் தேர்தல் தலைவிதி மட்டுமல்ல, தமிழகத்தின் தலைவிதியே மாறியிருக்கும் என்பது என்னுடைய கருத்து.

அவர் உடல்நலம் குன்றியிருக்கும் இந்தச் சூழலில் இதுபற்றி இதற்குமேல் பேசவும் விரும்பவில்லை.

ஆக, எப்படியோ அதிமுக திரும்பவும் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட்டது.

செப்டம்பர் மாதத்தில் உடல்நலம் குன்றிய ஜெயலலிதாவும் மரணமடைந்து போய்விட்டார்.

அதிமுகவின் அசாதாரண காலங்களில் எல்லாம் தொடர்ந்து முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர் செல்வம் இந்த தடவையும் முதல்வராகப் பணியேற்றுக்கொண்டுவிட்டார்.

ஆக, நெருக்கடியான காலத்தில் சிறிது நாட்களுக்குப் பன்னீர் செல்வம் முதல் அமைச்சர்… நிலைமை கொஞ்சம் சரியானபிறகு அவரிடமிருந்து அந்தப் பணி மாற்றிக்கொள்ளப்படும் என்பதுதான் அதிமுகவின் வழக்கமாக இருந்து வருகிறது.

இது தெரியாமல் சில குயுக்திகள் “அம்மாவாலேயே அம்மா காலத்திலேயே அடையாளம் காணப்பட்டவர் பன்னீர் செல்வம். அதனால் அவர்தான் தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும்” என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்.

முதலில் இவர்களுக்கு ‘அடையாளம் காட்டப்பட்ட’ என்ற பதத்திற்கு அர்த்தம் தெரிகிறதா என்பது தெரியவில்லை.

அஇஅதிமுக தேர்தலில் அபரிமிதமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்ற செய்தி வந்ததும் ‘அப்படியா மக்களே உங்களுக்கு நன்றி. நீங்கள் அமோகமாய் ஆதரித்து எங்களை வெற்றி பெறச் செய்திருப்பதால் சிறந்த ஆட்சியைக் கொடுக்கும் பொருட்டு நான் பன்னீர் செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கிறேன்’- என்று ஜெயலலிதா அறிவித்து பன்னீர் செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்து தான் எப்போதும்போல் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்திருந்தாரானால் ‘அடையாளம் காட்டப்பட்ட’ என்பது சரியானதாக இருந்திருக்கும்.

நடந்து முடிந்த தேர்தலில் ‘அதிமுகவைத் தேர்ந்தெடுங்கள்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பன்னீர் செல்வம் தலைமையில் சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்குவோம்’ என்று அறிவித்து தேர்தலைச் சந்தித்து அதன்படி அதிமுக வென்றதும் பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முதல்வராக்கியிருந்தால் ‘அடையாளம் காட்டப்பட்ட’ என்பது சரியாயிருந்திருக்கும்.

அப்படியெல்லாம் இல்லை.

ஒருமுறை டான்சி வழக்கில் கோர்ட் தீர்ப்பால் பதவியிலிருந்து இறங்குகிறார் ஜெயலலிதா. முதல்வர் நாற்காலி காலியாகிறது. தன்மீதுள்ள சட்ட விலங்குகளை அகற்றுவதற்கு அவருக்கு சில வாரங்கள் தேவை. அந்த சமயத்தில் யாரிடம் பதவியை விட்டுவைத்தால் (ஏனெனில் அந்தப் பதவியின் ‘பவர்’ அவருக்குத் தெரியும். உட்கார்ந்த பிறகு இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்து அவருக்கே எதிராய்த் திரும்பிவிட்டால் என்ன செய்வது?) நமக்குப் பாதகமாக இல்லாமல் நாம் விரும்பும்போது ‘இறக்கிவிட்டு’ நாம் அந்த இடத்தில் உட்காரலாம் என்ற கணக்கில் பன்னீர் செல்வத்தை உட்கார வைக்கிறார்.

இரண்டாவது முறை – மேலும் அதிக சிக்கலான நேரம்.

குன்ஹா என்ற ஜட்ஜ் ‘சிறைவாசமும் நூறு கோடி அபராதமும்’ என்ற கடுமைக் காட்டி சிறையில் தள்ளுகிறார். 

மீண்டும் அதே நிலைமை. இந்த முறையும் வாய்ப்பு பன்னீருக்கே தரப்படுகிறது.

இதில் ‘அடையாளம் காட்டுவது’ என்பது எங்கே இருக்கிறது?

‘தான் சொல்வதைக் கேட்கக்  கூடிய ஆள்’ என்று ஒருவரை மற்றவர் கருதுவதுதான் ‘அடையாளம் காட்டுவதா?’

ஒரு மாநிலத்தை ‘ஆள்பவருக்கு’ சரியான ‘இலக்கணம்’ என்பது இதுதானா?

என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை.

இந்த இடத்தில்தான் சசிகலா வருகிறார்.

சசிகலாவைப் பற்றி வெளியுலகம் அறிந்தது மிகவும் சொற்பமே. போயஸ் தோட்டத்திற்குப் போய் வந்தவர்களுக்குத்தான் அவருடைய ‘பவர்’ பற்றித் தெரியுமே தவிர வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு அவர் ஒரு புரியாத புதிர் மட்டுமே.

அதனால்தான் அவரவர்களுக்குத் தெரிந்ததை அவரவரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

உதவியாளர் என்கிறார்கள்; வேலைக்காரி என்கிறார்கள்; ஆயா என்கிறார்கள்…

அவரவர்களுக்கு என்னென்ன தெரியுமோ அப்படித் தெரிந்ததெல்லாம் சொல்லி எவ்வளவு கொச்சைப் படுத்தமுடியுமோ அவ்வளவு கொச்சைப் படுத்தி மகிழ்கிறார்கள்.

பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா அடையாளம் காட்டியதாகச் சொல்பவர்கள், என் ‘உடன்பிறவா சகோதரி’ என்றும் ‘தாயைப் போன்றவர் என்றும்’ சசிகலாவைச் சொல்லிவந்ததை சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர்.

ஜெயலலிதாவை இத்தனை வருடங்களும் தாங்கிப் பிடித்திருந்ததும் தூக்கிப் பிடித்திருந்ததும் சசிகலாதான் என்பதை எப்படி மறக்கிறார்கள் என்பதே புரியவில்லை.

ஜெயலலிதாவின் திறமைகளுக்கு அச்சாரமாக இவர்கள்  சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அவர் ஒரு இரும்புப் பெண்மணி என்பதும், அவர் பிரமாதமாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதும்தான்.

மிக வலுவான இரும்புக் கோட்டைக்குள்ளே ஜெயலலிதாவை யாருமே அணுக முடியாத படி உட்கார்த்தி வைத்திருந்தார்களே தவிர இரும்புப் பெண்மணி என்பதற்கேற்ப செய்திகளில் நிலைத்து நிற்குமாறு எந்த ஒரு அனுபவப் பகிர்வையும் ஜெயலலிதாவைப் பற்றி இதுவரை யாருமே சொன்னதில்லை.

திரைப்படங்களில் பிரமாதமாக நடனம் ஆடுபவர் கமலஹாசன் என்ற பேச்சு எல்லா திசைகளிலும் அடிபட்டது ஒரு காலத்தில். ஆனால் பிரபு தேவாவின் புயலான வருகைக்குப் பின்னர் யாருமே கமலஹாசனின் நடனம் குறித்துப் பேசியதில்லை. அந்த வார்த்தை அதுவாகவே மக்கி மறைந்துவிட்டது.
.
அதுபோலவே, ஜெயலலிதா அழகாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பது உண்மைதான். தொண்ணூறு ஆரம்பங்களில் இந்த வார்த்தைக்கு ஒரு வசீகரம் இருந்ததும் உண்மைதான். போகப்போக நம்முடைய வீட்டுக் குழந்தைகளே கான்வென்ட் சென்றுவந்து ஆங்கிலம் பேச ஆரம்பித்ததும் இந்த வசீகரமும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக ஆரம்பித்தது.

பின்னர், ‘பொதுவாழ்க்கைக்கு வந்த பெண்மணிகளில் அழகாக ஆங்கிலம் பேசுகிறவர்’ என்று சொல்லிப் பார்த்தார்கள். இந்த வார்த்தையிலும் உண்மை இருந்ததுதான்- ஜெயந்தி நடராஜனின் ஆங்கிலப் பேச்சைக் கேட்கும்வரை. உச்சரிப்பிலும் பேச்சின் தொனியிலும் அத்தனை அழகு இருந்தது ஜெயந்தி நடராஜனின் ஆங்கிலத்தில்.

போயஸ் கார்டனில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து ஜெயலலிதாவையும் சரி, ஜெயலலிதா வீட்டையும் சரி  இத்தனைக் காலமும் நிர்வகித்து வந்தவர் சசிகலாதான். மற்றவர்கள் எண்ணுவதுபோல் அவர் வேலைக்காரரோ உதவியாளரோ கிடையாது.

ஒரு சசிகலா மூன்று ஜெயலலிதாக்களுக்கு சமம் என்று சொன்னார் ஒருவர்.


அது உண்மைதானா என்பதை இன்றைய நிஜமான அரசியல் களத்தில் பார்ப்போம்.

17 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

மூன்றுக்கு சமம்... இதை விட கேவலம் எதுவும் இல்லை... மன்னிக்கவும்... மகா கேவலம்...

V Mawley said...மறைந்த முதல்வர் ஜெயலலிதா -அவர்களின் குவாதிசயம், மற்றும் செயல்பாடுகள் பற்றி மிகவும் தகுந்த மொழிநடையைப் பயன் படுத்தி , தங்களுக்கே உரிய சொல் ஆளுமையுடன் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ..இதைவிட தெளிவாக எடுத்துக் கூறுவது இயலாது ..

ஜெயலலிதா -அவர்கள் 'ஊழல் -லஞ்சம்' இவைகளின் மொத்தத் திருவுருமே ...மட்டும்மல்ல இவைகளின் ஊற்றுக்கண் ...இது எல்லோருக்கும் நன்கு தெரிந்தது தான் ..ஆனாலும் இதை வெளிப்படையாக கூறும் மனத்திண்மை யாரிடமும் இல்லாதது , கவனிக்க முடிகிறது ...intellectual integrity .நம் சமூகத்தில் அந்த அளவுக்கு தாழ்ந்து போய்விட்டது ...

ஒரு சசிகலா மூன்று ஜெயலலிதாவுக்குச் சமம் என்று யாரோ சொன்னதோ ,தஙகளே கூறுகிறீர்களோ ..எதுவாக இருந்தாலும் , இந்த புரிதல் உண்மையென்றால் , அரசியலிலும் ,அதிகார மையத்திலும் ..சசிகலா தவிர்க்கப் படவேண்டியவர் என்பதிற்கு வேறு காரணங்கள் வேண்டாம் ..

தங்களுடைய நீண்ட பதிவிற்கு இன்னும் நிறைய பதில் எழுத ஆவல் மிகுந்தாலும் , என்னுடைய இயலாமை காரணமாக மேற்சொன்ன ஒரு கருத்தோடு என் பின்னூட்டத்தை முடிக்கிறேன் ..

மாலி

சார்லஸ் said...

அப்படியானால் இன்னும் மூன்று மடங்கு ஊழலும் லஞ்சமும் அடாவடியும் பதுக்கலும் ரௌடித்தனமும் அலட்சியமும் அட்டகாசமும் அம்மா வாழ்த்து புராணமும் கூழைக் கும்பிடுகளும் வழி மறைக்கும் பேனர்களும் காலில் விழும் கலாச்சாரமும் கை நழுவிப் போகும் திட்டங்களும் சட்டசபை கூத்துக்களும் சாராய சாம்ராஜ்யமும் அதிகரிக்கப் போகிறது என்பதை சூசகமாக நீங்கள் சொல்லி விட்டீர்கள். கிரேட்!

Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...
\\மூன்றுக்கு சமம்... இதை விட கேவலம் எதுவும் இல்லை... மன்னிக்கவும்... மகா கேவலம்...\\

தனபாலன்,தங்கள் வருகையே மகிழ்ச்சியாக இருக்கிறது. வருக வருக.

Amudhavan said...

V Mawley said...


\\மறைந்த முதல்வர் ஜெயலலிதா -அவர்களின் குவாதிசயம், மற்றும் செயல்பாடுகள் பற்றி மிகவும் தகுந்த மொழிநடையைப் பயன் படுத்தி , தங்களுக்கே உரிய சொல் ஆளுமையுடன் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ..இதைவிட தெளிவாக எடுத்துக் கூறுவது இயலாது ..

ஜெயலலிதா -அவர்கள் 'ஊழல் -லஞ்சம்' இவைகளின் மொத்தத் திருவுருமே ...மட்டும்மல்ல இவைகளின் ஊற்றுக்கண் ...இது எல்லோருக்கும் நன்கு தெரிந்தது தான் ..ஆனாலும் இதை வெளிப்படையாக கூறும் மனத்திண்மை யாரிடமும் இல்லாதது , கவனிக்க முடிகிறது ...intellectual integrity .நம் சமூகத்தில் அந்த அளவுக்கு தாழ்ந்து போய்விட்டது ...

ஒரு சசிகலா மூன்று ஜெயலலிதாவுக்குச் சமம் என்று யாரோ சொன்னதோ ,தஙகளே கூறுகிறீர்களோ ..எதுவாக இருந்தாலும் , இந்த புரிதல் உண்மையென்றால் , அரசியலிலும் ,அதிகார மையத்திலும் ..சசிகலா தவிர்க்கப் படவேண்டியவர் என்பதிற்கு வேறு காரணங்கள் வேண்டாம் ..\\

மாலி அவர்களே, தங்களின் அலசல் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருக்கிறது. நன்றி.

Amudhavan said...

சார்லஸ் said...
\\அப்படியானால் இன்னும் மூன்று மடங்கு ஊழலும் லஞ்சமும் அடாவடியும் பதுக்கலும் ரௌடித்தனமும் அலட்சியமும் அட்டகாசமும் அம்மா வாழ்த்து புராணமும் கூழைக் கும்பிடுகளும் வழி மறைக்கும் பேனர்களும் காலில் விழும் கலாச்சாரமும் கை நழுவிப் போகும் திட்டங்களும் சட்டசபை கூத்துக்களும் சாராய சாம்ராஜ்யமும் அதிகரிக்கப் போகிறது என்பதை சூசகமாக நீங்கள் சொல்லி விட்டீர்கள். கிரேட்!\\

என்னுடைய பதிவை விடவும் உங்களின் சிறிய அளவிலான கமெண்ட் அதிகமாக பயமுறுத்துகிறதே சார்லஸ்...

Amudhavan said...

இந்தப் பதிவைத் தன்னுடைய முகநூல் பதிவில் வெளியிட்டிருக்கும் திரு ஜோதிஜி அவர்களுக்கு நன்றி.

காரிகன் said...

அமுதவன் சார்,

என்ன எழுதினாலும் கொஞ்சம் முரண்படத்தான் வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். நீங்கள் என்னவென்றால் சசி அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று மாய்ந்து மாய்ந்து இரண்டு பதிவுகள் போடுகிறீர்கள். அதிலும் யாரோ ஒருவர் சொன்னார் என்று ஒரு சசிகலா மூன்று ஜெயலலிதாவுக்கு சமம் என்று எழுதுவது இத்தனை அபத்தமாக --- மன்னிக்கவும்---- அமுதவன் கூட எழுதுவாரா என்றுதான் யோசிக்க வைக்கிறது.

வருண் said...

****திண்டுக்கல் தனபாலன் said... மூன்றுக்கு சமம்... இதை விட கேவலம் எதுவும் இல்லை... மன்னிக்கவும்... மகா கேவலம்...****

என்ன இப்படி சொல்லீட்டீங்க? தமிழர்களை பார்ப்ப்னர்களும், வெள்ளைக்காரகளும் ஆளுவதுதான் சரி என்கிற நம் மனப்போக்குத்தான் மிகவும் கேவலமானது. ஆனால் வெள்ளை என்றால் அழகு, கருப்பென்றால் அழ்கின்மை, பார்ப்பனரென்றால் உயர்வு, திராவிடரென்றால் கேவலம் என்கிற "மூட எண்ணம்" நம் மனதில் ஊறிவிட்டதால் இப்படி எல்லாம் தோன்றுகிறதோ??

நம்முடைய சிறப்புத் தன்மையே நம்மவரை கேவலமாக நினைப்பதுதான், இல்லையா? :)Amudhavan said...

காரிகன் said...
\\என்ன எழுதினாலும் கொஞ்சம் முரண்படத்தான் வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். \\

காரிகன் அவர்களே, மக்கள் என்ன மனோபாவத்தில் இருக்கிறார்களோ அதற்கேற்பத்தான் நாமும் இருக்கவேண்டும் என்ற மனநிலை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. 'போற்றுவபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்' என்ற கவியரசரின் கருத்தில்தான் எனக்கு உடன்பாடு. மக்களில் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம்பேர் ஜெயலலிதா- சசிகலா விவகாரத்தில் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று நம்புகிறார்களோ அந்த அசட்டு காரணத்தை நான் நம்புவதில்லை. சரி, சசிகலா வேண்டாம், வேறு யோக்கியமானவர்கள் யார் என்று சொல்லுங்கள் உடன்படுவோம்.

Amudhavan said...

வருண் said...
\\என்ன இப்படி சொல்லீட்டீங்க? தமிழர்களை பார்ப்ப்னர்களும், வெள்ளைக்காரகளும் ஆளுவதுதான் சரி என்கிற நம் மனப்போக்குத்தான் மிகவும் கேவலமானது. ஆனால் வெள்ளை என்றால் அழகு, கருப்பென்றால் அழ்கின்மை, பார்ப்பனரென்றால் உயர்வு, திராவிடரென்றால் கேவலம் என்கிற "மூட எண்ணம்" நம் மனதில் ஊறிவிட்டதால் இப்படி எல்லாம் தோன்றுகிறதோ??

நம்முடைய சிறப்புத் தன்மையே நம்மவரை கேவலமாக நினைப்பதுதான், இல்லையா? :)\\

நீங்கள் சிலவற்றை ரொம்பவும் பளிச்சென்று சொல்லிவிடுகிறீர்கள் வருண். உண்மைதான். கமல் இரண்டோரு நாட்களாக யாருக்குமே புரிபடாத ட்வீட்கள் போட்டுக்கொண்டிருக்கிறாரே பார்க்கவில்லையா?

Anonymous said...

ஜெ வின் அவல அரசியல் கண்டும் இங்குள்ள அனைத்து பெரியவர்களும் அதை சகித்து கொண்டு இருந்தார்களே அது தான் மிகபெரிய கொடுமை. பார்ப்பனீயம் ஜெ வை புகழ்ந்தது. ஜெ போல ஒரு அசிங்க ஆட்சி வேறு எங்கேனும் நடந்திருந்தால் எந்த பார்ப்பனாவது பொருத்து இருந்திருப்பானா? இவ்வளவு கேடு நிறைந்த ஆட்சி நடத்தி சென்றதை இன்றும் பலர் சொல்ல இயலாத அளவிற்கு உள்ளது. நிச்சயம் பல அவலங்கள் வெளி வரும். அதன் பின்னாவது பார்ப்பான் கண் மூடித்தனமாக ஆதரிக்காமல் இருப்பதில் யார் நல்லவர் என்று பார்த்து ஆதரிப்பது நல்லது. நாடு கேடு அடைந்தால் , பாதிக்க படுவது பார்ப்பானும் தான்.

Amudhavan said...

Anonymous said...
\\ஜெ வின் அவல அரசியல் கண்டும் இங்குள்ள அனைத்து பெரியவர்களும் அதை சகித்து கொண்டு இருந்தார்களே அது தான் மிகபெரிய கொடுமை. பார்ப்பனீயம் ஜெ வை புகழ்ந்தது. ஜெ போல ஒரு அசிங்க ஆட்சி வேறு எங்கேனும் நடந்திருந்தால் எந்த பார்ப்பனாவது பொருத்து இருந்திருப்பானா? இவ்வளவு கேடு நிறைந்த ஆட்சி நடத்தி சென்றதை இன்றும் பலர் சொல்ல இயலாத அளவிற்கு உள்ளது.\\

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஜெயலலிதாவின் ஆட்சியில் நல்லது ஒரு சில இருந்தாலும் அதற்கு ஜெவைப் புகழ்பவர்கள் கெட்டது அனைத்திற்கும் சசிகலாவைக் கை நீட்டுவதைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன். இப்போதுகூட திமுகவைச் சார்ந்த பல நண்பர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் ஜெ காலத்தில் அவரால் நடத்தப்பட்ட சில அக்கிரமங்களுக்கு மிக சாமர்த்தியமாக ஜெவை விலக்கிவிட்டு சசிகலாவை மட்டும் குற்றம் சொல்லி எழுதுகிறார்கள். இது எங்கே போய் முடியும் என்பதுதான் தெரியவில்லை. உதாரணமாக சசிகலா புஷ்பாவை வீட்டிற்கு அழைத்துத் தாக்கிய மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள். ஜெயலலிதாதான் தன்னை அறைந்தார் என்று சசிகலா புஷ்பாவே நாடாளுமன்றத்தில் கதறக் கதறப் பேசியது எத்தனை பரபரப்புக்குள்ளானது...............! அதனையே இவர்கள் மாற்றப் பார்க்கிறார்கள். எதற்கு என்பதுதான் தெரியவில்லை.

Arul Jeeva said...

அமுதவன் அவர்களே
தங்களது இப்பதிவு தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.குறித்த தமிழக மக்களின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.தமிழ்நாட்டில் நிலவும் எத்தகைய நிகழ்வுக்கும் தி.மு.க.வே பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறது.ராஜீவ் காந்தி படுகொலையிலிருந்து தற்போது பன்னீர் செல்வம் அவர்களின் திடீர் மனமாற்றம் வரை தி.மு.க.வே காரணமாக சித்தரிக்கப்படுகிறது.எதைச் சொன்னால் மக்களை வீழ்த்தலாம் என்பதை கணித்துவைத்திருக்கும் கயவர்களின் சூழ்ச்சியல்லவா இது. ஆட்சியாளர்களின் அவலங்களால் சொந்த மண்ணிலேயே அடிமையாகாமல் இருக்க தமிழக மக்கள் இனியாவது விழித்தெழட்டும்!

Amudhavan said...

Arul Jeeva said...

\\தங்களது இப்பதிவு தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.குறித்த தமிழக மக்களின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.தமிழ்நாட்டில் நிலவும் எத்தகைய நிகழ்வுக்கும் தி.மு.க.வே பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறது.ராஜீவ் காந்தி படுகொலையிலிருந்து தற்போது பன்னீர் செல்வம் அவர்களின் திடீர் மனமாற்றம் வரை தி.மு.க.வே காரணமாக சித்தரிக்கப்படுகிறது.எதைச் சொன்னால் மக்களை வீழ்த்தலாம் என்பதை கணித்துவைத்திருக்கும் கயவர்களின் சூழ்ச்சியல்லவா இது. ஆட்சியாளர்களின் அவலங்களால் சொந்த மண்ணிலேயே அடிமையாகாமல் இருக்க தமிழக மக்கள் இனியாவது விழித்தெழட்டும்!\\

அருள் ஜீவா தங்களின் சமூக நிலை பற்றிய படப்பிடிப்பு கச்சிதம். சரியான கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.நன்றி.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

சசி பெரிய நிர்வாகத் திறமை கொண்டவர். ஜெயலலிதாவையே ஆட்டிவைத்தவர், அவர் ஆளுமையை உருவாக்கியவர் என்றெல்லாம் எழுதினீர்கள். இப்போது உங்கள் கணிப்பு இப்படி ஆகிவிட்டதே? தமிழ்நாட்டில் யாரும் இந்த தீர்ப்பைக் குறித்து வருத்தத்தப்படவில்லை. கொஞ்சம் சென்னை வந்துவிட்டு போகவும்.

Amudhavan said...

காரிகன் said...
\\சசி பெரிய நிர்வாகத் திறமை கொண்டவர். ஜெயலலிதாவையே ஆட்டிவைத்தவர், அவர் ஆளுமையை உருவாக்கியவர் என்றெல்லாம் எழுதினீர்கள். இப்போது உங்கள் கணிப்பு இப்படி ஆகிவிட்டதே? தமிழ்நாட்டில் யாரும் இந்த தீர்ப்பைக் குறித்து வருத்தத்தப்படவில்லை. கொஞ்சம் சென்னை வந்துவிட்டு போகவும்.\\

என்னுடைய கருத்திற்கும் தீர்ப்பிற்கும் என்ன தொடர்பு? சசிகலாவுக்கு எதிராக மொத்தத் தமிழகமும் இருக்கிறது என்பதை அறிவேன். சசிகலா, ஜெயலலிதா இடையேயான உறவுகள் பற்றியும் அதிலுள்ள அரசியல் பற்றியும் நிறைய கருத்து பேதங்கள் இணையத்திலேயே எழுதப்பட்டு வருகின்றனவே. கொஞ்சம் 'வினவு' பக்கமும் போய்ப்பாருங்கள்.'இது சசிகலாவுக்கு மட்டும் எதிரான தீர்ப்பு அல்ல; ஜெயலலிதாவுக்கும் எதிரான, மொத்தத்தில் அதிமுகவுக்கு எதிரான தீர்ப்பு இது. இதற்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறான் எனில் அவனுக்குப் பெயர்தான் அதிமுக காரன்' என்று இதனைப் பற்றி விமர்சித்திருக்கிறார் துரைமுருகன்.

Post a Comment